பியர் கிரிபாரியின் கதைகள்

ஒரு உருளைக்கிழங்கின் காதல் கதை என்றொரு சிறார்கதையைப் பிரெஞ்சு எழுத்தாளர் பியர் கிரிபாரி (Pierre Gripari) எழுதியிருக்கிறார். அக்கதையில் ஒரு சிறுவன் தனது வீட்டின் சமையலறையிலிருந்து ஒரு உருளைக்கிழங்கைத் திருடி, அதன் முகத்தைக் கத்தியால் செதுக்குகிறான். இதனால் உருளைக்கிழங்கிற்குக் கேட்கவும் பேசவும் பார்க்கவும் திறன் ஏற்படுகிறது.

பேசத் தெரிந்த அந்த உருளைக்கிழங்கு தான் வெறும் உருளைக்கிழங்காக நடத்தப்படுவதை விரும்பவில்லை. தனக்கெனத் தனியே வாழ்க்கை இருப்பதாக நம்புகிறது. சிறுவனின் வீட்டைவிட்டு வெளியேறி உடைந்து கிடந்த கிதார் ஒன்றை வழியில் சந்திக்கிறது. கிதாரும் உருளைக்கிழங்கும் நண்பர்களாகிறார்கள்.

அவர்களை நாடோடி ஒருவன் அடையாளம் கண்டு சர்க்கஸிற்கு விற்றுவிடுகிறான். அங்கே இரண்டும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்துகின்றன. உருளைக்கிழங்கும் கிடாரும் சர்க்கஸின் நட்சத்திரங்களாகின்றன ஒரு நாள் பணக்கார சுல்தான் அழகி உருளைக்கிழங்கினை அடைய ஆசைப்படுகிறார். விலைக்கு வாங்குகிறார். இதனால் கிதார் வேதனையடைகிறது. உருளைக்கிழங்கின் வாழ்க்கை என்னவானது என்பதைக் கதையின் முடிவு விவரிக்கிறது. உருளைக்கிழங்கின் கேள்விகள் வழியாக அழகு பற்றிய நமது பார்வையை கிரிபாரி மாற்றுகிறார்.

கிரேக்க தந்தைக்கும் பிரெஞ்சு தாயிற்கும் மகனான 1925 ஜனவரி 7, இல் பியர் கிரிபாரி பாரிஸில் பிறந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக டிசம்பர் 23, 1990 இல் மரணமடைந்தார். இளம் வயதில் பெற்றோரின் விவாகரத்தைத் தொடர்ந்து அவரது அன்னையால் வளர்க்கப்பட்டார்.

சார்த்தரின் வழிகாட்டுதலின் கீழ் சோர்போன் பல்கலைகழகத்தில் கிரிபாரி தத்துவம் பயின்றார். பின்பு சில ஆண்டுகள் அங்கே பேராசிரியராகத் தத்துவத்தைக் கற்பித்தார். 1950கள் மற்றும் 1960களில் நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதினார். ஆனால் அது பெரிய வெற்றியை அடையவில்லை. 1970 களின் பிற்பகுதியில் அவரது சிறார் நூல்கள் புகழ்பெறத் துவங்கின. இவர் வசித்த ப்ரோகா (Rue Broca). வீதியினைக் கதைக்களமாகக் கொண்டு நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இன்று அந்த வீதியில் அவரது கதையில் வரும் கதாபாத்திரங்களை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அவரது வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கிறது.

பியர் கிரிபாரியின் கதைகளில் வெளிப்படும் பகடி நிகரற்றது. தேவதைக்கதைகளைத் தலைகீழாக மாற்றி நவீன சூழலில் நடப்பது போல எழுதுகிறார். அவர் வசித்த ப்ரோகா வீதி பல்வேறு கலாச்சார மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த பகுதி என்பதால் அவரது கதைகளிலும் பல்லினப் பண்பாடு வெளிப்படுகிறது- வாரம் ஒரு நாள் அந்த வீதியில் உள்ள சிறார்களை வரவழைத்து ஒரு கதை சொல்லி புதிய கதைகளைச் சொல்வதாக எழுதியிருக்கிறார். அந்த கதை சொல்லி வேறு யாருமில்லை. கிரிபாரி தான்.

அவரது எழுத்தில் சாத்தானும். சூனியக்காரியும், அரக்கனும். பூதங்களும் புதிய உருவம் கொள்கிறார்கள். சமகால நிகழ்வுகளால் அலைக்கழிக்கபடுகிறார்கள். கடவுளும் வீட்டுப்பாடம் எழுதுகிறார். அரக்கன் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். வியப்பூட்டும் அவரது கற்பனையால் கதையை வளர்த்து எடுத்துச் செல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக கதையில் வரும் உரையாடல்கள். சிறார்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதப்பட்டிருந்த போதும் அதன் ஆழ்ந்த பொருளும் தத்துவார்த்த வெளிப்பாடும் சிறப்பாக உள்ளன.

இவரது Good Little Devil சற்றே நீண்ட கதை. இதில் நரகத்தில் வசிக்கும் அழகான குட்டிசாத்தான் ஒன்று தான் ஏன் கொம்புடன், கெட்டவனாகக் கருதப்படுகிறோம் என்று கவலைப்படுகிறது. பள்ளிக்கூடம் சென்று ஒழுங்காகப் படிக்கிறது. மற்ற குட்டிசாத்தான்களைப் போல மோசமாகப் பேசுவதோ, சண்டையிடுவதோ கிடையாது. ஆசிரியர் சொன்ன வீட்டுப்பாடங்களைச் சரியாகச் செய்து முடிக்கிறது.

தன்னுடைய பிள்ளை இப்படிக் கெட்டுப்போகிறதே என அதன் அப்பா அம்மா சாத்தான்கள் கவலைப்படுகிறார்கள். நல்ல சாத்தான் என்று பெயர் வாங்க மாட்டான் என்று அப்பா வருந்துகிறார். ஏன் வகுப்பில் எந்தத் துஷ்டத்தனமும் செய்வதில்லை என அம்மா கடிந்து கொள்கிறாள்.

அந்தக் குட்டிசாத்தானை எங்கே அனுப்பினாலும் பண்பாக நடந்து கொள்கிறது. அடுத்தவர் மீது அன்பு செலுத்துகிறது. அதனிடம் துளி கூடத் தீமையைக் காண முடியவில்லை. பாரிஸ் பெருநகரத்திற்கு அந்தக் குட்டிச்சாத்தான் வருகை தருகிறது. அதன் நெருக்கடிகளுக்குள் அன்பை யாசிக்கிறது. போப்பினைச் சந்திக்க ரோம் நகரம் செல்கிறது

இப்படியாகத் தனது நீண்ட பயணத்தின் முடிவில் சொர்க்கத்தின் கதவைத் தட்டுகிறது. சொர்க்கத்தின் காவலாளியால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்தக் குட்டிசாத்தான் எந்தப் பாவமும் செய்யவில்லை. நன்மையை மட்டுமே செய்து வருகிறது என்ற காரணத்தால் அதைக் கடவுளைக் காணுவதற்கு அனுமதி அளிக்கிறான். கடவுளும் அதற்குப் பரிட்சை வைக்கிறார். அதுவும் கணிதப்பரிட்சை. பியர் கிரிபாரியின் இக்கதை அவரது காலகட்ட அரசியலை. சமய அதிகாரத்தைக் கேலி செய்கிறது. கடவுளும் குட்டிச்சாத்தானும் பேசிக் கொள்ளும் இடம் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

சிவப்புச் சாக்ஸ் அணிந்த அரக்கன் கதையில் எப்போதும் பிரகாசமான சிவப்புச் சாக்ஸ் அணிந்திருந்த ஒரு அரக்கன் நிலத்தடியில் வசிக்கிறான். பிரம்மச்சாரியாக வாழும் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டிப் பெண் தேடுகிறான். இதற்காக ஒரு நாள் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வருகிறான்.

தனது வீட்டில் வேக வைத்த முட்டைகளைச் சாப்பிட தயாரான மிரியேல் என்ற இளம் பெண்ணின் முன்பாகத் தோன்றுகிறான். அவள் பயந்துவிடுகிறாள். பார்த்த மாத்திரம் அவளைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அரக்கன் சொல்கிறான். அவள் சம்மதிக்கவில்லை. ஆகவே பாதிரியை சந்தித்துத் தனது விருப்பத்தைச் சொல்கிறான்.

அவர் உனது உருவம் மிகப் பெரியது. ஆகவே தேவாலயத்திற்குள் நுழைய முடியாது. உன்னுடைய உருவம் சுருங்க வேண்டும், அதன்பிறகு தான் கல்யாணம் செய்ய முடியும் என்கிறார்.

அதற்காக அரக்கன் ஒரு சீன மந்திரவாதியை தேடி பயணம் செய்கிறான் அந்த மந்திரவாதியோ ரோமிற்குப் போய்ப் போப்பை பார்க்கும்படி ஆலோசனை சொல்கிறான்.

முடிவில் அரக்கன் ஒரு மனிதனைப் போல உருவத்தில் சிறியவனாகிறான். இப்போது அவனிடமிருந்த அதிசய சக்திகள் யாவும் மறைந்துவிடுகின்றன. ஊர் திரும்ப ரயிலில் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவனிடமோ பணமில்லை. கண்ணீர் விடுகிறான். அரக்கனின் திருமணம் என்னவாகிறது எனக் கதை விரிகிறது. இதில் வரும் அரக்கன் அழுக்கான தனது காலணியை அணிந்து கொண்டே அலைகிறான். காதலின் பொருட்டு அல்லாடுகிறான்.

அவரது வேறு ஒரு கதையில் ஒரு இளவரசன் கடற்கன்னியைக் காதலிக்கிறான். . இன்னொரு கதையில் மொழிபெயர்ப்பாளரான எலியின் உதவியுடன் மாயமீன்களைத் தேடுகிறார்கள். மற்றொரு கதையில் தனது சாவிற்குப் பிறகும் பேயாக வந்து தங்க நாணயங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் ஒரு பணக்காரன். இப்படியாக விசித்திரங்கள் நிரம்பிய பியர் கிரிபாரியின் ப்ரோகா தெருக் கதைகள் மறக்கமுடியாதவை. வாசிக்கும் நமது வயதையும் மறையச் செய்யக்கூடியவை.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2025 02:50
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.