அலிப்பூர் சிறை அருங்காட்சியகம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் சிறைவைக்கபட்டிருந்த கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன்.

15.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சிறைச்சாலை. செங்கல்-சிவப்பு சுவர்களால் ஆன கட்டிடங்கள். பதினெட்டு அடி உயர சுற்றுச்சுவர், வளாகத்தினுள் நிறைய மரங்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள். வரலாற்றின் சாட்சியமாக உள்ள தூக்குமேடை, சுதந்திரப் போராட்டகால நாளிதழ் செய்திகள், ஒவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

நேரு. நேதாஜி, பி.சி. ராய், சி.ஆர். தாஸ், கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட அறைகளைப் பார்வையிட்டேன். சிறையினுள் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலச் சிலை வடித்திருக்கிறார்கள். உறுதியான கற்சுவர்கள். இரும்புக்கதவுகள். அதன் துருப்பிடித்த தாழ்ப்பாள். கறைபடிந்த தரை யாவிலும் காலம் உறைந்திருக்கிறது.

சரித்திரப் புத்தகங்களில் படித்திருந்த அலிப்பூர் சதிவழக்கும் அரவிந்தரும் நினைவில் வந்தபடி இருந்தார்கள். இந்தச் சிறைச்சாலையின் வரலாறு கண்ணீரால் எழுதப்பட வேண்டியது.

ஜனவரி 1930 முதல் செப்டம்பர் 1930 வரை இங்கே நேதாஜி சிறை வைக்கபட்டிருந்திருக்கிறார். அது போலவே பிப்ரவரி 17 முதல் மே 7, 1934 வரை நேரு சிறையில் அடைக்கபட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக இந்திராகாந்தி வந்து அமரும் மரத்தடியில் இந்திரா காந்தியின் சிலையினையும் அமைத்திருக்கிறார்கள்.

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின்னால் சிறைச்சாலைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். அதற்கு முன்பாகச் சிறிய சிறைச்சாலைகள் இருந்த போதும் அது கம்பெனியின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆகவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதன்முதலில் டாக்கா சிறைச்சாலை (1790) உருவாக்கபட்டது. அதைத் தொடர்ந்து மிட்னாபூர் சிறைச்சாலை (1792 ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உருவாக்கபட்டதே அலிப்பூர் பிரசிடென்சி சிறைச்சாலை. அது 1864 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

இப்போதுள்ள அலிப்பூர் சிறைச்சாலை 1906 இல் கட்டப்பட்டது. இதில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கைதிகளுக்காகப் பிரிக்கப்பட்ட தனித்தனிப் பகுதிகள், உயர்ந்த காவல்கோபுரம், தூக்குமேடை, மருத்துவமனை, தனிமைச்சிறைக்கூடம் அமைக்கபட்டிருக்கிறது. அந்தக் காலச் சிறைதண்டனைகள் மிகவும் கொடூரமானவை. அதுவும் அரசியல் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் பயங்கரமானவை. அதை அடையாளப்படுத்துவது போலத் தண்டனைக் காட்சி ஒன்றை சிலையாகச் செய்திருக்கிறார்கள்.

மரணத் தண்டனை கைதிகளுக்காக மூன்று தண்டனை அறைகள் காணப்படுகின்றன. ஒரு கைதி தூக்கிலிடப்படுவதை மற்றவர்கள் காணும் வகையில் அறைகளை அமைத்திருக்கிறார்கள்.

தூக்கிலிடப்பட்ட அரசியல் கைதிகளின் நினைவாக அவர்கள் புகைப்படத்துடன் கூடிய தனிக்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. தூக்கு மேடைக்கு அருகில் ஒரு பிரேத பரிசோதனை அறை உள்ளது. தேசவிடுதலைக்காகத் தூக்கிலிடப்பட்டவர்களின் சராசரி வயது இருபது முதல் முப்பதுக்குள். மரணதண்டனை விதிக்கபட்ட கைதிகளில் ஒருவர் நான்கு மாதங்களுக்குள் 110 கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

குதிராம் போஸ்

இந்தச் சிறையில் தான் புரட்சியாளர் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது வயது 18. இந்த நினைவகத்தினுள் நாள் முழுவதும் வந்தேமாதரம் பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அதைக் கேட்கும் போது மிகுந்த உணர்வெழுச்சி ஏற்படுகிறது.

சித்தரஞ்சன் தாஸ் 1921 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால், கைது செய்யப்பட்டு இதே சிறையின் 8வது அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் புத்தகம் படிப்பதற்குப் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் சிறையின் வெளியே படிப்பதற்கான மேடை அமைக்கபட்டது. சித்தரஞ்சன் தாஸ் அதில் குனிந்து படிப்பது போன்ற சிலை வைக்கபட்டிருக்கிறது

நஸ்ருல் இஸ்லாம்

சிறைக்கைதிகளுக்கான மருத்துவமனை, அச்சுக்கூடம், நெசவுக்கூடம், பயிற்சிக்கூடங்கள் தனியே காணப்படுகின்றன. கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட சிறையினுள் அவர் எழுதிய கவிதைநூல்கள் யாவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக உருவாக்கபட்ட அருங்காட்சியகம் என்பதால் தூய்மையாக, சிறப்பான பராமரிப்பில் வைத்திருக்கிறார்கள்.

காமராஜர் தனது 27 வயதில் உப்புசத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டு இதே அலிப்பூர் சிறையில் அடைக்கபட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுச் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். அதைப் பற்றிய குறிப்புகளோ, அவர் இருந்த சிறை பற்றிய குறிப்போ அருங்காட்சியத்தில் காணப்படவில்லை.

இந்தச் சிறையில் ஒளிஒலிக்காட்சி ஒன்றும் நடைபெறுகிறது. அது மாலை நேரம் நடைபெறுவதால் நான் காணவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2025 09:34
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.