தேசிய நூலகத்தினுள்
கொல்கத்தாவின் தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். பிரிட்டிஷ் காலத்தில் இம்பீரியல் நூலகமாகச் செயல்பட்டது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிகளின் நாளிதழ்கள்,வார இதழ்கள், புத்தகங்கள் இங்கே சேமித்து வைக்கபடுகின்றன.


தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நாம் புத்தக விநியோகம் செய்யும் போது அதன் ஒரு பிரதியை இங்கே அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயம். அலிப்பூரில் உள்ள தேசிய நூலக வளாகம் மிகப்பெரியது. முப்பது ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு காலத்தில் இது கவர்னரின் மாளிகையாகச் செயல்பட்டிருக்கிறது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த பெரிய பெரிய கட்டிடங்கள். நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனை நடைபெறுகிறது.
பிரம்மாண்டமான நூலகக் கட்டிடம். அதன் முகப்பில் தாகூரின் சிலை. அவரது குடும்பம் பொதுநூலகத்துறை உருவாகப் பெரிதும் உதவியிருக்கிறது.

இது அரிய நூல்களுக்கான ஆவணக்காப்பகமாகவும், நூலகர்களுக்குப் பயிற்சி தரும் இடமாகவும், ஆய்வாளர்களுக்கான ஆய்வு மையமாகவும், அரசு வெளியீடுகள் அறிக்கைகளுக்கான காப்பகமாகவும் செயல்படுகிறது. இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

சர்வதேச அளவிலான ஏழாயிரம் கல்விசார்ந்த இதழ்கள், ஆய்வறிக்கைகள் இங்கே அனுப்பி வைக்கபடுகின்றன. அரிய நூல்களை மின்வடிவத்திற்கு மாற்றிப் பொதுப்பகிர்வு செய்து வருகிறார்கள். பிரம்மாண்டமான வாசிப்பு அறை, மொழி வாரியாகத் தனித்தனிப் பிரிவுகள், ஆய்வாளர்களுக்கான தனிப்பகுதி, போட்டிதேர்வு எழுதுகிறவர்கள் அதிகம் வந்து படிக்கிறார்கள்.

நூலகத்தின் நான்கு கட்டிடங்களிலும் குளிரூட்டப்பட்ட தனித்தனி வாசிப்பு அறைகள் உள்ளன. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்த விரும்பும் வாசகர் அதற்கென உள்ள தற்காலிக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். தேசிய நூலகத்தில் குழந்தைகளுக்கெனத் தனிப் பிரிவு உள்ளது.
தேசிய நூலகத்தின் தமிழ்ப்பிரிவை காணச் சென்றிருந்தேன். 1963 ஆம் ஆண்டுத் தமிழ்ப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவில் வையாபுரி பிள்ளை சேமிப்பில் இருந்த நூல்கள் யாவும் பாதுகாக்கபட்டுவருகின்றன. இங்கே 1723 ஆண்டு அச்சிடப்பட்ட தமிழ் பைபிள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் பிரிவினுள் ஆயிரக்கணக்கான தமிழ்நூல்கள் கட்டுக்கட்டாகக் கட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பகுத்து அட்டவணை செய்வதற்குப் போதுமான பணியாளர்கள் இல்லை என்றார்கள்.
தமிழ்ப்பிரிவின் நிர்வாகியாக இருப்பவர் விடுமுறையில் இருப்பதால் ஒரேயொரு பணியாளர் மட்டுமே இருந்தார். தமிழ்நூல்களைப் பிரித்து வகைப்படுத்தி அட்டவணைப்படுத்தும் பணிக்கு நிறையப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். தமிழகத்தில் நூலகக்கல்வி பயிலுகிற மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்து இன்டென்ஷிப் முறையில் இந்தப் பணிக்கு அனுப்பி வைக்கலாம்.
தேசிய நூலகம் நிறையக் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துகிறது. அரிய நூல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது. அதன் இணையதளம் வழியாக மின்நூல்களை பார்வையிட முடியும். வெளிமாநில உறுப்பினர்களுக்கு அஞ்சல் வழியாகவும் நூல்களை கடன்தருகிறார்கள்.
••

கொல்கத்தாவின் காலேஜ் ரோடு புத்த கடைகளால் நிரம்பியது. சாலையின் இருபுறமும் வரிசை வரிசையாகப் புத்தகக் கடைகள். அதுவும் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் அதிகம் உள்ளன. நடைபாதையிலும் பழைய புத்தகங்களைக் குவித்துப் போட்டிருக்கிறார்கள். அறுபது விழுக்காடு புத்தகக் கடைகள் பாடப்புத்தகங்கள் மற்றும் போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுநூல்கள் விற்கும் கடைகளே. சுற்றிலும் கல்லூரிகள் இருப்பதால் நிறைய மாணவர்களைக் காண முடிந்தது.
வங்காள இலக்கியம் சார்ந்த பழைய புத்தகங்கள் விற்பவர்களே அதிகமிருக்கிறார்கள். பழைய புத்தகம் என்றாலும் அதன் விலையை அதிகமாகவே கேட்கிறார்கள். எந்தக் கடையில் ஒரு புத்தகத்தைக் கேட்டாலும் உடனே அவர் தொலைபேசியில் அழைத்து மற்றகடைகளில் விசாரித்து அதைப் பெற்றுத் தந்துவிடுகிறார்.

இந்தச் சாலையில் தான் கொல்கத்தாவின் புகழ்பெற்ற இந்தியன் காபி ஹவுஸ் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான கஃபே ஆகும், இங்கே எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடுகிறார்கள். மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறார்கள்.
மதியம் பனிரெண்டு மணிக்கு தான் இந்தக் காபி ஹவுஸ் திறக்கபடுகிறது. அதற்கு முன்னதாகவே வெளியே ஆட்கள் காத்திருக்கிறார்கள். சென்னையின் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் போலவே இருந்தது.


காபி ஹவுஸ் உள்ளே புகழ்பெற்ற எழுத்தாளர்களின் உருவப்படங்களை வரைந்திருக்கிறார்கள். கையில் புத்தகங்களும் வந்து சேர்ந்த இளைஞர் பட்டாளம் எங்கள் அருகில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து அமர்ந்து முழுத்திரைக்கதையினையும் எழுதிவிடுவார்கள் என்றார்கள். கொல்கத்தாவின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது இங்கு வழங்கப்பட்ட காபி நன்றாகவே இருந்தது. இங்கேயே புத்தக வெளியீடுகள் நடப்பது உண்டு. மாலை நேரம் வந்திருந்தால் இந்த இடம் புகைமண்டலமாக இருந்திருக்கும். அவ்வளவு சிகரெட் பிடிப்பார்கள் என்றார் உடன்வந்த ரவி.


தமிழகத்தோடு ஒப்பிடும் போது வங்கமொழி நூல்களின் அச்சாக்கம் சிறப்பாக இல்லை. விலையும் அதிகமாக உள்ளது. தமிழ்பதிப்புத் துறை அச்சாக்கத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. குறிப்பாகப் புத்தக உருவாக்கத்திலுள்ள நேர்த்தியும் அழகும் சர்வதேச தளத்தில் உள்ளது. இதனைப் பிற மாநிலங்களில் வெளியிடப்படும் நூல்களைக் காணும் போது நன்றாக உணர முடிகிறது.

ஆங்கில இலக்கியம் சார்ந்த நூல்களை மட்டுமே விற்கும் பழைய புத்தகக் கடை ஒன்றினைக் கண்டேன். அதனை நடத்துகிறவர் ஆங்கிலப் பேராசிரியர் போல அத்தனை நூல்களையும் பட்டியிலிட்டு விவரித்தார். தமிழ்நாட்டினை விடவும் வங்கத்தில் சிறார்களுக்கு நிறையப் புத்தகங்கள் அழகிய வண்ணத்தில் வெளியிடப்படுகின்றன. நேரடியாக வங்கமொழியில் வெளியான காமிகஸ் புத்தகங்களைக் கூடக் காண முடிந்தது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பழைய புத்தகச் சந்தை இதுவென்றார்கள். நடக்க நடக்க முடிவற்று கடைகள் வந்து கொண்டேயிருப்பது அதனை உணரச் செய்தது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
