சுவை புதிது
எரிக் பெஸ்னார்ட் இயக்கிய Delicious ஒரு சமையற்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கிறது. பாரீஸின் முதல் உணவகமாகக் கருதப்படும் Delicious உருவான விதம் பற்றியதாகக் கதை அமைந்துள்ளது. வரலாற்றுப்பூர்வமாக இது முதல் உணவகமில்லை. திரைக்கான கற்பனையில் உருவாக்கபட்டிருக்கிறது.

பிரான்சின் உயர்தட்டுவாழ்க்கையில் விருந்து மிகவும் முக்கியமானது. அதிகப்படியான உணவு என்பது அதிகாரத்தின் அடையாளமாகவும் அந்தஸ்தை வெளிப்படுத்த கூடியதாகவும் பிரபுக்கள் கருதினார்கள். அப்படிப்பட்ட ஒரு விருந்து தயாரிக்கபடுவதில் தான் படம் துவங்குகிறது.
வெள்ளிப்பாத்திரங்கள். கரண்டிகள், உணவுமேஜையில் செய்யப்படும் அலங்காரம், உணவு தயாரிக்கபடும் போது ஏற்படும் மணம், விருந்து பரிமாறப்படும் விதம் என உண்மையான விருந்துக்கூடத்திற்குள் நாமிருப்பது போன்ற நெருக்கத்தைப் படம் ஏற்படுத்துகிறது.
சமையல்காரர் பியர் மான்செரோன் திறமையானவர். ஆனால் தற்பெருமை மிக்கச் சாம்ஃபோர்ட் பிரபுவிடம் பணிபுரிகிறர். ஒரு நாள் பிரபு தனது விருந்தினர்களுக்காக ஆடம்பரமான இரவு உணவைத் தயாரிக்கும்படி உத்தரவிடுகிறார்.

மான்செரோனும் அவரது சமையற் குழுவும் நாற்பது விதமான உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள். அதில் புதிய ருசியாக உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் ட்ரஃபிள்ஸுடன் கலக்கப்பட்ட பேஸ்ட்ரியை உருவாக்குகிறார். அதற்கு தி டெலிசியஸ் என்று பெயரிடுகிறார். புதிய உணவின் ருசியை அவர்கள் ஏற்றுக் கொண்ட போதும் பொய்யாகப் பாராட்டுகிறார்கள். உருளைக்கிழங்கு பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவு என்கிறார் ஒரு விருந்தினர். அதைப் பியர் ஏற்கவில்லை.
விருந்தினர்களின் முன்பாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இச்செயல் விருந்தினர்களைக் கோபம் கொள்ள வைக்கிறது. பியர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சாம்ஃபோர்ட் உத்தரவிடுகிறார். பியர் மறுக்கவே, அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

தனது தந்தை நடத்திய பழைய விடுதிக்கு திரும்பும் பியர் அதனைச் சரிசெய்து புதிய பயண விடுதியாக மாற்றுகிறார். பயணிகளின் தேவைகளை இலவசமாகச் செய்து கொடுக்கிறார்.
பியரின் மகன் உருவாகிவரும் சமூக மாற்றங்களை கவனிக்கிறான். பிரபுகளுக்கு எதிரான மனநிலை உருவாகி வருவதை அறிந்து கொள்கிறான்.
ஒரு நாள் அங்கே வரும் இளம்பெண் லூயிஸ் பியரிடம் உதவியாளராகப் பணியாற்ற ஆசைப்படுகிறாள். பியர் அதை ஏற்கவில்லை.. அவள் யார், எதற்காக அங்கே வந்து சேர்ந்தாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விவரிக்கபடுகிறது.
ஆரம்பத்தில் அவளை ஏற்க மனமில்லாத பியர் கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் புரிந்து கொள்கிறார். அவர்கள் இணைந்து புதியதொரு உணவகத்தை நடத்த திட்டமிடுகிறார்கள். அதை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதே படத்தின் பிற்பகுதி.

உணவகம் முதன்முதலில் எப்படி ஆரம்பிக்கபட்டது. உணவிற்கான கட்டணம் மற்றும் உணவுப்பட்டியலை எழுதிப்போடும் முறை எவ்வாறு அறிமுகமானது என்பதையும் இப்படத்தில் நேரடியாக காணுகிறோம்
உணவு தயாரிப்பதும் ஒரு கலையே. சமையற்கலையினையும் சமையற்கலைஞர்களையும் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இப்படம் முதல் உணவகத்தின் கதையை விவரிப்பதோடு பிரெஞ்சுப் புரட்சியால் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும் கவனப்படுத்துகிறது. ஜீன்-மேரி ட்ரூஜோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
இன்று உலகமே கொண்டாடும் உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் சாப்பிட உகந்த ஒன்றாகக் கருதப்படவில்லை என்ற உண்மையைப் படம் சுட்டிக் காட்டுகிறது. சமையற்கலையின் வழியாகப் பிரெஞ்சு சமூகத்தின் கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

