சாந்திநிகேதனின் மணியோசை

கொல்கத்தாவிலிருந்து மூன்றரை மணி நேர தூரத்திலுள்ளது சாந்திநிகேதன். இந்தியாவின் தனித்துவமிக்கக் கல்வி வளாகத்தைத் தாகூர் உருவாக்கியிருக்கிறார். கலைகளும் இசையும் இலக்கியமும் அனைத்து மொழிகளும் அறிவியலும் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்கபடும் சர்வதேசக் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது சாந்தி நிகேதன். இன்று அதன் பெயர் விஸ்வபாரதி பல்கலைகழகம்.

இயற்கையான சூழல். மரத்தடி வகுப்பறைகள். சிறந்த ஆசிரியர்கள். பெரிய கலைக்கூடங்கள். மரபும் நவீனமும் இணைந்த கல்விமுறை, இங்கே வடகிழக்கிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து கல்வி பயிலுகிறார்கள். சீன. ஜப்பானிய, கொரிய மாணவர்களும் கூட இங்கே வந்து பயிலுகிறார்கள். சாந்தி நிகேதனில் நடைபெறும் மேளா மிகவும் புகழ்பெற்றது.

கொல்கத்தாவிலிருந்து காரில் அதிகாலையில் புறப்பட்டேன். கொல்கத்தாவை விட்டு வெளியேறி போல்பூர் செல்லும் பர்த்வான் நெடுஞ்சாலையைப் பிடிப்பதற்கே ஒரு மணி நேரமாகிவிட்டது. புறவழிச்சாலைகள் யாவும் ஒன்று போலவேயிருக்கின்றன. சாலையோரம் மண்வீடுகளைக் காண முடிந்தது. சில இடங்களில் பனங்கூட்டங்கள் தொலைவில் தென்பட்டன.

நமது நெடுஞ்சாலையோர வாழ்க்கை போலச் சாலையோர விற்பனையாளர்களைக் காண முடியவில்லை. பெட்ரோல் நிலையங்களும் கூட அரிதாகவே தென்பட்டன. கார் டிரைவர் கூகுள்மேப் உதவியோடு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போலவே அந்த மேப் தவறான பாதையைக் காட்டவே வழிமாறி வேறு பாதையில் பயணிக்கத் துவங்கிவிட்டோம்.

காரோட்டி ஒரு இடத்தில் காரை நிறுத்தி மெக்கானிக் ஷாப் ஒன்றில் பர்த்வான் செல்லும் வழியை விசாரித்தார். நாங்கள் வந்த பாதையிலே திரும்பி போய்ப் பாலத்தின் அடியில் சென்று வலதுபுறம் போக வேண்டும் என்று மெக்கானிக். ஆலோசனை சொன்னார் அதன்படி காரைத் திருப்பினோம். பர்த்வான் பகுதியில் முந்திய நாள் மழைபெய்திருக்கிறது. ஆகவே காற்றில் ஈரமிருந்தது. வானில் நிறைய மேகக்கூட்டங்களைக் காண முடிந்தது.

தமிழகத்தின் நாற்கரசாலையைப் போல அதிக வாகன நெருக்கடியில்லை. ஆனால் சீரற்ற சாலைகள். குறுகலான பாலத்தின் அடியினைக் கடந்து செல்ல வேண்டிய தேவை. பெயர்பலகைகள் இல்லாத சாலைத்திருப்பங்கள் எனக் குழப்பமாக இருந்தது.

இரவில் திரும்பி வரும் போது உண்மையான நெருக்கடியைக் கண்டோம். வரிசை வரிசையாக லாரிகள். கார்கள் அதுவும் ஒவ்வொரு சிக்னலிலும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நீண்ட வரிசை. காலை பார்த்த அந்தச் சாலை தானா என வியப்பாக இருந்தது.

சாந்தி நிகேதனைப் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது. அங்கே பணியாற்றிய ஒவியர்கள். இசைக்கலைஞர்கள். கல்வியாளர்கள் தங்கள் நினைவுகளை எழுதியிருக்கிறார்கள். தாகூரும் தனது நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார். சாந்திநிகேதனும் ஸ்ரீநிகேதனும் தாகூரின் இரண்டு சிறகுகள் எனலாம்.

மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. இன்றும் அது கிராமப்பகுதியே. தாகூர் குடும்பம் பிரம்மசமாஜத்தைச் சார்ந்தது. ஆகவே தாகூரின் தந்தை தேவந்திரநாத் இயற்கையோடு இணைந்த ஆசிரமம் ஒன்றை உருவாக்க விரும்பினார். அதற்காக அவர் வாங்கிய இடமே சாந்தி நிகேதன்.

ஏழு ஏக்கர் நிலத்தில் தேபேந்திரநாத் தாகூர் தியானத்திற்காக ஒரு சிறிய ஓய்வறையைக் கட்டினார், மேலும் 1888 ஆம் ஆண்டில் பிரம்மவித்யாலயா மற்றும் சிறிய நூலகத்தை உருவாக்கினார். 1925 முதல் இந்தப் பள்ளி பாத-பவனா என்று அறியப்பட்டது.

பூபந்தங்கா என்ற கிராமம் தான் சாந்திநிகேதனாக உருமாறியது. பூபந்தங்கா என்பது வழிப்பறிக் கொள்ளைக்காரனின் பெயர். அவன் மனம்மாறி சரண் அடைந்த காரணத்தால் அந்தப் பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.

சாந்திநிகேதனின் தெற்கு எல்லை நெல் வயல்களின் பரந்த சமவெளியில் இணைகிறது. ஒரு பக்கம் காடு. சுற்றிலும் விவசாயப் பண்ணைகள். சாந்தி நிகேதனுள் நிறைய மரங்கள் காணப்படுகின்றன. கரடுமுரடாக இருந்த இந்தப் பகுதியினைத் திருத்தி வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட வளமான மண்ணால் அழகான தோட்டங்களை உருவாக்கிறார்கள்.

சிற்பி ராம்கிங்கர் பைஸ் உருவாக்கிய அழகிய சிற்பங்கள் இயற்கையோடு இணைந்து காணப்படுகின்றன. பேரழகான இச்சிற்பங்களை இயற்கையின் அங்கமாகவே பார்வையாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாகச் சந்தால் குடும்பம் ஒன்றின் சிற்பம் மிகவும் அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.

சாந்திநிகேதனில் மழைக்காலத்தின் முதல் நாளில் இன்றும் வெறுங்காலுடன், குடை இல்லாமல், மாணவர்கள் வருகை தந்து மழையைக் கொண்டாடுகிறார்கள்.

சாந்தி நிகேதன் ஆரம்பத்தில் சிறிய பள்ளியாக விளங்கியது. நோபல் பரிசு பெற்ற பின்பு தாகூர் இதனை இந்தியாவின் உயரிய கல்வி மையமாக உருவாக்க முனைந்தார். ஆகவே மொழிகளுக்கான மையம், கலைப்பள்ளி, இசைப்பள்ளி. எனப் பல்வேறு துறைகளை உருவாக்கி அதற்காக நந்தலால் போஸ் போன்ற புகழ்பெற்ற ஒவியக்கலைஞர்கள். இசைக்கலைஞர்கள், சிற்பிகள், மொழியியல் அறிஞர்களை வரவழைத்துப் பாடம் கற்றுதரச் செய்தார். கேரளாவிலிருந்து கதகளிகலைஞரை வரவழைத்து அக்கலையைக் கற்பிக்கச் செய்திருக்கிறார்.

சாந்திநிகேதனுள் தாகூரின் பூர்வீக வீடு. பருவ காலத்திற்கு ஏற்ப அவர் தங்குகின்ற வேறு வேறு வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடுகள். அவரது ரோஜா தோட்டம், தியான மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கலாபவன் என்ற பெரிய ஓவியக்கூடம் மற்றும் அச்சுக்கூடம், நூலகம் அமைந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வீடும் சாந்திநிகேதனுள் இருக்கிறது.

தேபேந்திரநாத் தாகூர் மற்றும் தாகூர் தியானம் செய்த சாத்திம் மரங்களின் கீழ் உள்ள இடம் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. விஸ்வபாரதியின் எல்லா முக்கிய நிகழ்வுகளும் இங்கே தான் துவங்குகின்றன. இந்தப் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஏழு இலைகள் கொண்ட சாத்திம் மரத்தின் கிளையே பட்டமாக அளிக்கபடுகிறது

பழைய கட்டிடங்கள் எதையும் மாற்றாமல் அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். சாந்திநிகேதனை ஒருவர் முழுமையாகப் பார்ப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். அத்தனை சிறப்புப் பகுதிகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்த கல்வி வழங்குதல் இதன் தனிச்சிறப்பாகும் இதற்காகத் திறந்தவெளி வகுப்பறைகள் காணப்படுகின்றன. மரத்தடியில் அமைக்கபட்ட அந்த வகுப்பறைகளைக் காணுவது மகிழ்ச்சி அளித்தது. எனது சிறுவயதில் அப்படி ஒரு வேப்பமரத்தடி வகுப்பில் படித்திருக்கிறேன்.

ஸ்ரீநிகேதன் என்பது கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படும் பகுதியாகும். அங்கே இயற்கை வேளாண்பொருட்கள். கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறிப்பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தாகூரின் ஐந்து வீடுகள் கூட்டாக உத்தராயண வளாகம் என்று அழைக்கப்படுகிறது, உபாசனா கர் என அழைக்கப்படும் பிரார்த்தனை மண்டபம் பெல்ஜிய கண்ணாடிகளால் உருவாக்கபட்டது. இது சாந்திநிகேதனின் மிகவும் அழகிய இடங்களில் ஒன்றாகும்

தாகூரின் பூர்வீக இல்லம் இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே அவருக்கு அளிக்கபட்ட பரிசுப்பொருட்கள் யாவும் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன. தாகூர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஜப்பானியக்கலைப்பொருட்கள். சீனக்கலைப்பொருட்கள் கண்ணாடி அலமாரி முழுவதும் காணப்படுகின்றன. இன்னொரு அலமாரியில் லியோ டால்ஸ்டாயின் டெத்மாஸ் காணப்படுகிறது.

இது 1910 ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாய் இறந்தவுடன் அவரது முகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டர் வார்ப்பாகும். ரஷ்ய சிற்பி செர்ஜ் மெர்குரோஃப் என்பவரால் இந்த முகமூடி உருவாக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டுச் சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் போது ரவீந்திரநாத் தாகூருக்கு இதனைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். தாகூர் டால்ஸ்டாயை (1828-1910) ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும், அவர் டால்ஸ்டாயின் புத்தகங்களை வாசித்திருக்கிறார். தாகூர் பதிமூன்று நாட்கள் சோவியத் ஒன்றியத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்திய இலக்கியவாதிகளில் அதிக நாடுகளுக்குப் பயணம் செய்தவர் தாகூராகத் தான் இருக்கக் கூடும். நாம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைக் கொண்டாடுவது போல அர்ஜென்டினாவில் தாகூரைக் கொண்டாடுகிறார்கள்.

தாகூரின் ஆடைகள், அவரது கைத்தடி, பேனா, படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள், அவர் பயன்படுத்திய காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தாகூர் மிகவும் அழகான ஆடைகளை அணியக்கூடியவர். அவரது பயணத்தின் போது முப்பது பெட்டிகளில் உடைகள் கொண்டு செல்வார்களாம். அது போல அவர் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்ளக்கூடியவர். அந்த மருந்துப்புட்டிகள் அங்கே காணப்படுகின்றன. தாகூரின் விதவிதமான மூக்குக் கண்ணாடிகள் காணப்படுகின்றன.

தாகூர் பயன்படுத்திய WBA 8689 எண் உள்ள செடான் கார் ஒன்று வெளியே காட்சிக்கு வைக்கபட்டிருக்கிறது. இந்தக் காரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜெகதீஷ் சந்திர போஸ் போன்ற ஆளுமைகள் ஏறியிருக்கிறார்கள். 1938 ஆம் ஆண்டில் தாகூர் இரண்டு செடான் கார்கள் வாங்கியிருக்கிறார். ஒன்று கொல்கத்தாவிலும் மற்றொன்று சாந்தி நிகேதனிலும் பயன்படுத்தபட்டிருக்கிறது. அன்று ஒரு செடான் காரின் விலை £400.

தாகூர் எழுதிய கடிதங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவரது கையெழுத்து அச்சிடப்பட்டது போலிருக்கிறது. தாகூருக்கு வழங்கப்பட்ட நோபல்பரிசு சில ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. அதைக் காவல்துறை உதவியோடு மீட்டார்கள். ஆகவே அவரது நோபல்பரிசு விருதின் நகல்வடிவத்தை வைத்திருக்கிறார்கள். அவரது கீதாஞ்சலி நூலின் முதற்பதிப்பை அங்கே காணலாம். தாகூர் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்த கவிஞர் யேட்ஸ் மற்றும் கீதாஞ்சலி பற்றி எழுதிய கவிஞர் எஸ்ரா பவுண்ட் ஒவியங்களையும் இங்கே காண முடிகிறது.

விஸ்வபாரதி பல்கலைகழகத்தின் தமிழ்துறை தலைவராக இருப்பவர் முனைவர் செந்தில் பிரகாஷ். எனது நீண்டகால வாசகர். அவர் எனது வருகையை அறிந்து கொண்டு வரவேற்றுச் சாந்திநிகேதனைச் சுற்றிக்காட்டியதோடு சிறந்த மதிய உணவினையும் ஏற்பாடு செய்திருந்தார். எனது சிறுகதைகள். கட்டுரைகளை அவரது வகுப்பறையில் அறிமுகம் செய்துள்ளதாகவும் இடக்கை நாவலின் சில பகுதிகளை வங்கமொழியில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்துள்ளதாகவும் செந்தில் தெரிவித்தது மகிழ்ச்சி அளித்தது. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்.

இந்தப் பயணத்தில் எங்களுடன் பிலிம் டிவிசன் ரவி உடன் வந்திருந்தார். நீண்டகாலம் கொல்கத்தாவில் வசிப்பவர். சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். அவர் சாந்திநிகேதனின் பவுஷ்மேளாவைக் கண்டிருக்கிறார். புகழ்பெற்ற அந்தத் திருவிழா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

பேராசிரியர் செந்திலுடன் வளாகத்திலுள்ள பசுமையான தோட்டங்கள், புகழ்பெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பார்வையிட்டேன். சாந்திநிகேதனின் முதல் மாணவர்களில் ஒருவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட சந்தோஷாலயா, இளம் மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்படுகிறது

வெண்கல மணி மற்றும் ஸ்தூபி போன்ற வடிவமைப்பைக் கொண்ட கண்டதாலாவைக் காட்டினார். அங்குள்ள மணி ஒலிப்பதன் வழியாகவே இன்றும் வகுப்பு முடிவதை அறிவிக்கிறார்கள் என்றார்.

சாந்திநிகேதனிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கோபாய் ஆற்றின் கரையில் அமர் குடிர் அமைந்துள்ளது. இது ஒரு கூட்டுறவு சங்கம். இங்கே கலைப்பொருட்கள், உடைகள் மலிவு விலையில் விற்பனை செய்கிறார்கள்.

இந்த வளாகத்தில் பவுல் எனப்படும் கிராமிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியைப் பார்த்தேன். மெய்மறக்கச் செய்யும் இசை.

சாந்திநிகேதனிலிருந்து கொல்கத்தா திரும்பி வரும் பயணத்திலும் வழிமாறிவிட்டோம். சின்னஞ்சிறிய கிராமச்சாலைகளில் கார் சென்றது. கிராமவாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை. வங்கநாவல்களில் படித்திருந்த கிராமத்தின் சாயலில் தானிருக்கிறது. தலைவர்களின் சிலைகள் மற்றும் சினிமா விளம்பரங்களை எங்கேயும் காண முடியவில்லை. சிற்றூர் ஒன்றின் தேநீர் கடையில் மண்கலயத்தில் தேநீர் அருந்தினோம். கத்திரிக்காயில் பஜ்ஜி போடுகிறார்கள். அதையும் ருசித்தேன்.

கொல்கத்தா நெடுஞ்சாலையைக் கண்டுபிடித்துச் சேர்வதற்கு நிறைய நேரமானது. அந்தச் சாலையில் கடுமையான வாகன நெருக்கடி. சிக்னலில் நின்றால் இன்னும் நேரம் அதிகமாகிவிடும் என ஏதேதோ குறுக்குவழிகளில் காரை செலுத்தினார்.

கொல்கத்தாவின் டான்குனி டோல் பிளாசா நெருங்கியதும் மாநகரின் ஒளிரும் விளக்குகள் கண்ணில் பட்டன, அப்போது போது தான் களைப்பை உணரத் துவங்கினேன். அன்றைய கனவில் நிறைய அன்னங்கள் நீந்தும் ஏரியைக் கண்டேன். ஒன்று இரண்டில்லை. நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீரில் நீந்துகின்றன. காலை கண்விழித்தபோது அந்தக் கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.. சாந்திநிகேதனில் எனது மனம் லயத்துப் போயிருந்தது. அதன் வெளிப்பாடு தான் இந்தக் கனவு போலும் என நினைத்துக் கொண்டேன்.

தாகூரின் சொந்த வாழ்க்கை துயரத்தின் இழைகளால் பின்னப்பட்டது. அவரது அம்மா சாரதா தேவி புகைப்படத்தை அருங்காட்சியத்தில் பார்த்தேன். அவர் பதினைந்து குழந்தைகளின் தாய். ஆகவே பிள்ளைகளைச் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தாகூரின் 14 வது வயதில் அம்மா இறந்து போய்விட்டார். சிறுவயது முதலே தாயின் அன்பிற்காகத் தாகூர் ஏங்கியிருக்கிறார்.

தாகூரின் மனைவியும் இளவயதில் இறந்து போய்விட்டார். மிருணாளினி தேவி பத்து வயதாக இருந்தபோது ரவீந்திரநாத்தை மணந்தார். அப்போது தாகூரின் வயது 22. அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மிருணாளினி தேவி தனது 29வயதில் இறந்து போனார்.

காதம்பரி

சகோதரர் ஜோதிரிந்திரநாத் தாகூரின் மனைவி காதம்பரி தேவி. அவருக்கும் தாகூருக்கும் இடையில் ரகசியக் காதல் இருந்தது என்கிறார்கள். காதம்பரி 1884 இல் தற்கொலை செய்து கொண்டார். அது தாகூரின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காதம்பரியின் நினைவாக நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

தாகூரின் மகள் மதுரிலதா. இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பதினைந்து வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்கபட்டது. காசநோயின் காரணமாகத் தனது 32வது வயதில் அவள் இறந்து போனாள். இப்படித் துயரத்தின் சுழிக்காற்றில் சிக்குண்டவராகவே தாகூர் வாழ்ந்திருக்கிறார்.

தாகூரின் Stray Birds மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு. அந்தக் கவிதைகளில் அவரது அகம் முழுவதும் வெளிப்படுகிறது. துக்கத்தின் அணையா சுடரை அக்கவிதைகளில் காணமுடிகிறது.

தாகூர் நாடகப்பயிற்சி மேற்கொள்ளும் அறையினுள் நின்றிருந்தேன். அந்த நாடகக் காட்சிகள் உலகிலிருந்து மறைந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. ஆனாலும் தாகூரின் புகழ் மறையவில்லை. தாகூரின் இசையும் இலக்கியமும் கலைகளும் இன்று வங்கத்தின் பண்பாட்டு அடையாளமாக மாறியிருக்கின்றன. தலைமுறைகள் தாண்டியும் தாகூரின் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவரை வணங்குகிறார்கள். அதனைச் சாந்திநிகேதனில் கண்கூடாகவே காண முடிகிறது.

.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 02:39
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.