Jeyamohan's Blog, page 640
January 23, 2023
வெண்முரசின் அருகே
ஜெயமோகன்அன்புள்ள ஆசிரியருக்கு,
வாழ்வில் இருள் கூர் கொண்டிருந்த ஒரு தருணத்தில் வென்முரசை வந்து அடைந்தேன். இன்று இங்கு நின்று பார்க்கையில் எவ்வளவு அழகு நிரம்பியிருக்கிறது என் வாழ்வில்! வாசிப்பின் நிறைவை, செய்வதன் ஊக்கத்தை, கற்றுக்கொள்ளும் மகிழ்வை மீண்டும் அடைந்து இருக்கிறேன். என்னதான் நினைத்து கொண்டாலும், எவ்வளவுதான் உறுதி கொண்டாலும் எண்ணம் போல வாசிக்க முடிவதில்லை என்று இன்றுதான் யோசித்து கொண்டிருந்தேன். அப்போதுதான் சரியாய் உங்கள் வாசிப்பு சவால் கட்டுரையை வாசித்தேன். என்றும் என் கேள்விக்கான விடையை உங்கள் தளத்தில் தான் அடைகிறேன்.
எத்தனையோ முறை உங்களுக்கு கடிதம் எழுத தொடங்கி விட்டுவிடுவேன், மீண்டும் மீண்டும் வேறொரு உடை பூண்டு வரும் நன்றி நீர்த்து போய்விடுகிறது என்கிற அச்சம். ஆனால், இன்று அதற்கும் சொல்லி வைத்தது போல, இரு வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு தாளில் கைப்பட எழுதிய பழைய கடிதம் கிடைத்தது, தொலைத்து விட்டேன் என்று நினைத்தது. வழியில் நிறுத்தி, கை தொட்டு, இதழ் விரித்து செய் என்கிறது தெய்வம், அதை மறுப்பது தவறு இல்லையா? அதுதான் உடனே எழுதி விட்டேன். உங்களுக்கு நூறோடு நூற்றியொன்றாய் போனாலும், என் நன்றி அப்படியே நிற்கட்டும், இன்னொரு புன்னகையாக.
கடந்தவைக்கு நன்றிகளும்,
புத்தாண்டுக்கு வாழ்த்துக்களும்,
அன்புடன்,
மதுமிதா.
அன்புள்ள ஆசிரியருக்கு,
எனது மகனும் நானும் இந்த புத்தாண்டிலிருந்து தினமும் காலை எழுந்து ஒரு மணி நேரம் வாசிப்பது என்று முடிவு செய்தோம். என் வாழ்வில் இத்தனை இனித்த காலை பொழுதுகள் உண்டா என்று வியக்கிறேன். இத்தனைக்கும் இப்போது இந்த மாதம் கடுங்குளிர். முன்பெல்லாம் 7 மணிக்கு கூட விழிப்பது அத்தனை கொடுமையை இருக்கும். ஆனால் இப்போது இவ்வளவு மகிழ்ச்சியுடன் எழுந்து, அதுவும் கிருஷ்ணா எவ்வளவு உற்சாகத்தோடு எழுகிறான்! போலாமா மா, படிக்கலாமா, என்று கை பற்றி இழுத்து செல்கிறான். இத்தனைக்கும் இதற்கு முன்பும் நாங்கள் அருகமர்ந்து ஒன்றாய் வாசித்தது உண்டு. ஆனால், காலை முதல் வேலையாய் ஓடி சென்று, வாசித்து, நாளின் தொடக்கமாக கொண்டதில்லை. காலங்கார்த்தால முதல்ல ஸ்கூலுக்கு படிக்கணும், அதை விட்டுட்டு என்ன புக்கு வேண்டிகிடக்கு, என்ன பழக்கம் என சின்ன வயசில் வாங்கிய திட்டு கொஞ்சம் நிறையவே பதிந்து நூல் வாசிப்பது என்பது பொழுதுபோக்கு, உன்னத கடமை இல்லை என்ற மடத்தனமான மனத்தடையை உடைக்க என் 9 வயது மகன் போதி மரமாக வேண்டியுள்ளது எனக்கு. கடகடவென எழுந்து, மிக ஆர்வமாய் படிக்கிறோம், இருவருமே. நிறைய வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க இதோ 4 நூல்கள் முடித்துவிட்டேன் இந்த 22 நாட்களுக்குள். என்னளவில், இதை அப்படியே தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே இப்போதைய முதல் குறிக்கோள். இந்த நான்கு நூல்களில் மாமலர் மறுவாசிப்பு (முதல் முறை அப்படியே தளத்தில் தொடர்ந்து வாசித்தது, ஆக இதுவே முதல் தொடர் வாசிப்பு) கூடியது எனக்கு ஆழ்ந்த மனநிறைவை கொடுத்தது. 2021 வருடம் ஊருக்கு வந்த போது ஆசை ஆசையாய் செம்பதிப்பு வாங்கிக்கொண்டு வந்தது (இந்த தலகானி எல்லாம் எதுக்கு தூக்கற என்ற திட்டுகளோடு), இதோ இப்போதுதான் வாசிக்க முடிந்தது!
அன்புடன்,
மதுமிதா.
அன்புள்ள மதுமிதா,
இருவருக்கு இடையே நல்லுறவு உருவாக மிகச்சிறந்த வழி இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரு செயலைச் செய்வதே. எவராயினும், எதுவாயினும். அறிவுச்செயல்பாடு அதில் முதன்மையானது. sublime அம்சம் கொண்ட செயல்பாடு இன்னும் மேலானது. உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் இடையேயான உறவின் இனிமையை நான் புரிந்துகொள்கிறேன்.
வாழ்க்கையின் சிக்கல்கள் பெரும்பாலும் அகன்றால் சிறிதாகிவிடுபவை. பெரும்பாலானவை காலத்தால் அகன்று நாம் கடந்து செல்பவை. செவ்விலக்கிய வாசிப்பு கருத்துரீதியாக, உணர்வுரீதியாக அகல்வை அளித்து சமநிலையை கொடுக்கிறது. பண்டைய மரபில் புராணங்களை வாசிப்பதன் பயன்களில் ஒன்றாகச் சொல்லப்படுவது ‘விரக்தம்’. பற்றின்மை
ஜெ
January 22, 2023
சென்னை புத்தகக் கண்காட்சி
இந்த சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பலவகையிலும் எனக்கு முக்கியமானது. என் நூல்களுக்கான தனி புத்தகக்கடை இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இருந்தது. முன்பு என் நூல்களுக்காக புத்தகக் கடைகளில் தேடி கண்டடைய முடியாமல் தடுமாறியதாக என் வாசகர்கள் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்குப் பின்னரும் எழுதுவதுண்டு. அவர்களுக்கு நான் பொதுவான ஒரு பதிலை எதிர்வினையாக அனுப்புவேன். புத்தகக் கண்காட்சியில் நுழைந்தாலே ‘உங்க புக்ஸ் எங்க சார் கிடைக்கும்?’ என்ற கேள்வி வந்து சூழ்ந்துகொள்ளும்.
என் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களில் முதன்மையான பதிப்பகம் தமிழினி, அங்கே என்னுடைய ஒரு படமோ என் நூல்கள் கிடைக்கும் என்னும் அறிவிப்போ இருப்பதில்லை. தமிழினி அவர்களுக்கு மட்டுமான எழுத்தாளர்களை முன்னிறுத்த விரும்பியது. ஒரு தனித்தன்மை கொண்ட ஓர் அறிவியக்கமாகச் செயல்பட எண்ணி அவர்கள் அவ்வாறு செய்வதில் பிழையும் இல்லை. கிழக்கு உட்பட புத்தகக் கடைகள் மிகப்பெரியவை, பல ஆசிரியர்களை வெளியிடுபவை. அங்கே என் நூல்களுக்கான ஒரு தனி பகுதியோ விளம்பரமோ வைப்பது நாகரீகம் அல்ல. சென்ற ஆண்டுகளில் என்னுடைய நூல்களுக்கான ஓர் அறிவிப்பு மிக அரிதாகவே புத்தகச் சந்தையில் கண்களுக்குப் படும். பெரும்பாலும் வம்சி பதிப்பகத்தில் அறம் தொகுதிக்கு ஓர் அறிவிப்பு தென்படும்.
சென்ற இருபதாண்டுகளாகவே நான் மிகவும் விற்கப்படும் நூல்களின் ஆசிரியனாகவே இருக்கிறேன். இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எல்லா புத்தகச் சந்தையிலும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அந்த விற்பனைத் தொகை பெரியது. என்னை புத்தகக் கண்காட்சியில் பார்க்கவே முடிவதில்லை என்னும் மனக்குறை என் நண்பர்களுக்கு இருந்தாலும் நான் அதை பொருட்படுத்தியதில்லை. வேண்டியவர்கள் தேடி வரட்டும் என்றே நினைத்தேன். என் நூல்களை முன்வைக்க சென்ற ஆண்டுகளில் நான் எதையும் செய்வதில்லை. நான் ஒருங்கிணைக்கும் எல்லா நிகழ்வுகளும் நவீனத் தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக முன்வைக்கவே.
என் நண்பர் செல்வேந்திரனும் அவர் துணைவி திருக்குறளரசியும் எனக்காக மட்டும் ஒரு கடையை கோவை புத்தகக் கண்காட்சியில் 2017ல் நடத்தினர். பிறபதிப்பகங்களில் இருந்து பெற்ற நூல்களை அங்கே விற்றனர். பத்துசதவீதம் மட்டுமே அதில் லாபம் வரும், செலவுகளை கழித்தால் நஷ்டம் வரக்கூடும் என எண்ணியே அதற்கு முயன்றார்கள்.ஆனால் அந்த கடை லாபமாகவே இருந்தது.
அந்த கடைதான் தனி பதிப்பகம் தேவை என்னும் எண்ணத்தை உருவாக்கியது. என் வாசகர்கள் எல்லா நூல்களையும் ஒரே இடத்தில் வாங்க விரும்பினர். ஒரு நூலை வாங்கியவர்கள் அடுத்தடுத்த நூல்களை எங்களிடமே கேட்டனர். ஒரே ஒரு நூலை தேடிவந்த வாசகர்கள் கூட ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்க வந்து மேலும் மேலும் நூல்களைக் கண்டு அவற்றை வாங்கினர். ஒரு நூலுக்கு மட்டும் பில் போடும் வாடிக்கையாளர் மிகமிகச் சிலராகவே இருந்தனர்.
ஆயினும் நான் ஒரு பதிப்பகம் தொடங்கத் தயங்கினேன், வணிகம் என் இயல்பல்ல. எனக்கு பொழுதுமில்லை. என் நண்பர்கள் அதற்கு முன்வந்தபோது அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டேன். விஷ்ணுபுரம் பதிப்பகம் அஜிதன், சைதன்யா இருவரும் நண்பர்களுடன் பங்குதாரர்களாக அமைந்து நடத்து நிறுவனம். தொடங்கிய நாள் முதல் மிக வெற்றிகரமான செயல்பாடாகவே இருந்து வருகிறது. பதிப்பகத்தையே இலக்கிய கூட்டங்கள் , உரையாடல்களுக்கான களமாகவும் மாற்றிக்கொண்டு ஓர் இயக்கமாக முன்செல்கிறது அது.
இவ்வாண்டு விஷ்ணுபுரம் நாவலின் 25 ஆவது பதிப்பு வெளிவந்துள்ளது. பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. அறம் சிறுகதைகளின் கெட்டி அட்டைச் செம்பதிப்பும் வெளிவந்துள்ளது. என் புனைவுக்களியாட்டுச் சிறுகதைகள் 13 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இன்னும் பல நூல்கள் வெளிவரவுள்ளன. விரைவில் எல்லா நூல்களுமே கிடைக்கும்.
நவீன் மற்றும் விக்னேஷ்இந்த புத்தகக் கண்காட்சியிலும் விற்பனையில் உச்சம் அறம் தொகுதிதான். பதிப்பாளரின் கணிப்புகள் பொய்யாகி, முழுப் புத்தகக் கண்காட்சிக்காகவும் கொண்டுவந்த எல்லா பிரதிகளும் முதல் நாளே விற்றுப்போயின. அதன்பின் ஒவ்வொரு நாளும் அச்சகத்தில் இருந்து கொண்டு வந்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கெட்டி அட்டை என்பதனால் ஒட்டுமொத்தமாக அச்சிட்டு குவிக்கவும் முடியாது, கையால் அட்டை தைக்கவேண்டும். ஆகவே பலநாட்கள் காலையில் அறம் கிடைக்கவில்லை. பெரும்பாலான நாட்களில் மாலை ஏழு மணிக்குமேல்தான் அறம் கிடைத்தது.
அடுத்தபடியாக அஜிதனின் மைத்ரி. அதன் இரண்டாம் பதிப்பு இந்த புத்தகக் கண்காட்சியில் விற்று தீர்ந்தது. இணையாகவே குமரித்துறைவி. விஷ்ணுபுரம் விலை அதிகமான நூலாக இருந்தாலும் நூற்றுக்கும் மேல் பிரதிகள் விற்றது.பதிப்பாளரின் பார்வையில் மிக மனநிறைவான ஒரு புத்தகக் கண்காட்சி இது.
இந்த கண்காட்சியில் நான் கண்டடைந்தவை சில. நான் என் தளத்தில் பரிந்துரைக்கும் எல்லா நூல்களையும் விஷ்ணுபுரம் கடையில் எதிர்பார்த்தனர். ஆகவே கடைசிநாட்களில் அவற்றையும் வாங்கி வைத்து விற்றோம். எதிர்கால புத்தகக் கண்காட்சியில் இதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என தோன்றுகிறது. ஒரு பதிப்பகம் ஓர் அறிவியக்கமாகவே நிகழவேண்டும், அதற்கு இன்னும் பலதரப்பட்ட தலைப்புகளில் பலவகையான நூல்கள் தேவை.
இந்த புத்தகக் கண்காட்சியில் நான் நான்குநாட்கள் மாலையில் வாசகர்களைச் சந்தித்தேன். உணர்ச்சிமிக்க சந்திப்புகள் பெரும்பாலானவை. பலரிடம் என் எழுத்துக்கள் என்னவகையான செல்வாக்கைச் செலுத்தியுள்ளன என அறியமுடிந்தது ஓர் அரிய அனுபவம். புத்தகக் கண்காட்சி ஆசிரியனுக்கு அளிக்கும் இன்பமே இதுதான். நேரடியான வாசக உரையாடல். முகங்கள் திரண்டு பல்லாயிரம் முகங்கள் கொண்ட ஒரு விராடரூபமாக கண்முன் நின்றிருக்கும் தரிசனம் அது.
கல்லாப்பெட்டிச் சிங்காரங்கள்புத்தகக் கண்காட்சியில் உதவியாளர்களாக வந்து பணிபுரிந்த நவீன், விக்னேஷ் இருவரும் மிகுந்த கவனத்துடன் அரங்கை கையாண்டனர். நல்ல வாசகர்களும்கூட. முழுப்பொறுப்பையும் ஏற்று பதிப்பகத்தை நடத்தியவர் மீனாம்பிகை, உடன் ‘குவிஸ்’ செந்தில். எல்லா நாட்களிலும் அரங்கு நண்பர்கள் கூடும் ஒரு மையமாக, உரையாடலும் சிரிப்பும் கொண்டாட்டமுமாகச் சென்றது .நான் சென்றநாட்களில் அன்பு, தங்கவேல் டாக்டர், சிறில் அலெக்ஸ், ராஜகோபாலன், செந்தில், அனங்கன், காளிபிரசாத், சண்முகம் என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். உரையாடலும் சிரிப்புமாகவே அரங்கு அமைந்திருந்தது.
சென்னை நண்பர்களைப் பொறுத்தவரை புத்தகக் கண்காட்சி என்பது பதினைந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருங்கொண்டாட்டம். சென்ற கால்நூற்றாண்டாக அவ்வாறே அது நீடிக்கிறது.
பல வியப்புகள். பன்னிரண்டு வயதுக்குக் குறைவான வாசகர்களில் பலர் முதற்கனல், மழைப்பாடல் வாசித்திருப்பது திகைக்க வைப்பதாக இருந்தது. என் புதிய வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பவா செல்லத்துரை சொன்ன கதைகளின் வழியாக என்னை அறிமுகம் செய்துகொண்டு மேலே வாசிக்க ஆரம்பித்தவர்கள். பவா செல்லத்துரை உருவாக்கும் இலக்கிய அறிமுகம் எத்தனை வலுவானது என்று கண்டேன். பாரதி பாஸ்கர், பாத்திமா பாபு, கிராமத்தான் ஆகியோரின் யூடியூப் காணொளிகளும் என்னை பலருக்கு அறிமுகம் செய்து வாசகர்களாக ஆக்கியிருந்தன என்பதை கண்டேன். இத்தனை செல்வாக்கு இவற்றுக்கு உண்டு என எண்ணியிருக்கவே இல்லை.
மைத்ரி, இந்த புத்தகக் கடையில் விற்று முடிந்த பிரதி.இந்தப் புத்தகக் கண்காட்சியில் பிற பதிப்பகங்கள் பலர் கூட்டம், விற்பனை குறைவு என்று சொல்லியிருந்தனர்.கடைகளின் எண்ணிக்கை கூடும்போது கூட்டம் பகிரப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம். கடலூர், திருப்பத்தூர் போன்ற சிறுநகரங்களில்கூட தொடர்ச்சியாக புத்தகக் கண்காட்சி நடைபெறுவது இன்னொரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக கூட்டமும் நூல்விற்பனையும் மிகுதி என்றே நினைக்கிறேன்.
அதற்கு இன்றைய அரசின் இரண்டு ஆண்டுக்கால நடவடிக்கைகள் மிக முக்கியமான காரணம். தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் இலக்கிய விழாக்கள் இலக்கியம்- வாசிப்பு சார்ந்த ஓர் ஆர்வத்தை உருவாக்கியிருப்பது கண்கூடாகவே தெரிகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பொறுத்தவரை சென்னை அண்ணாநூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒரு புதிய வாசகர் அலையை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். மிகவும் பாராட்டுக்குரிய ஒரு செயல்பாடு அது. அதேபோல இப்போது நடைபெற்ற சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் மிகவும் வரவேற்கத்தக்கது. உலக இலக்கிய வரைபடத்தில் தமிழ் என ஒரு மொழி உண்டு என்பதையே இப்படித்தான் பதிவுசெய்யவேண்டியிருக்கிறது. இது ஒரு தொடக்கமே.
அரங்கசாமி ஐயங்கார்
தமிழக இதழாளர்களில் ஒருவர் அரங்கசாமி ஐயங்கார். தி இந்து இதழின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் .1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.அந்த மாநாட்டில் காந்தியின் அரசியல் செயலாளராகவும் அரசியல்சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். மாகாண சுயாட்சி கொள்கைக்கு ஆதரவு அளித்தார். வகுப்புவாரி பிரதிநித்துவத்தை எதிர்த்து, மக்கள் தொகை அடிப்படையிலான சட்டச்சபை உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கீட்டை ஆதரித்தார்.
அரங்கசாமி ஐயங்கார்
அரங்கசாமி ஐயங்கார் – தமிழ் விக்கி
கவிதைகள், ஜனவரி 2023 இதழ்
புதுவை வெண்முரசுக்கூடுகை 56
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 56 வது கூடுகை 27 -01-2023 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது . பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமதி லாவண்யா இளங்கோ உரையாடுவார் .
நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
https://venmurasu.in/indraneelam/
பேசு பகுதிகள்: வெண்முரசு நூல் ஏழு – இந்நிரநீலம்
பகுதி. 1. மலைமுடித்தனிமை (1 முதல் 6 வரை)
பகுதி. 2. மழைத்துளிகள் (1 முதல் 5 வரை)
கோவை அ.முத்துலிங்கம் விருதுவிழா உரைகள்
கோவையில் சென்ற ஜனவரி 19 அன்று கோவை விஜயா வாசகர்வட்டம் முன்னெடுக்கும் அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது Stories Of The True நூலின் மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா ராம்குமாருக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு எழுத்தாளர் கீதா ராமசாமி, வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி கலந்துகொண்டார்கள். அவர்களின் உரைகளின் காணொளிப் பதிவுகள்.
அ முத்துலிங்கம் விருதுவிழா. பகுதி ஒன்று அனிதா அக்னிஹோத்ரி, கீதா ராமசாமி உரைகள்
அ முத்துலிங்கம் விருதுவிழா பகுதி இரண்டு. தினமணி வைத்தியநாதன் உரை, பிரியம்வதா ஏற்புரை
இந்திய ஓவியக்கலை அறிமுகம்
கிழக்கு டுடே இணையதளத்தில் அரவக்கோன் எழுதும் இந்திய ஓவியர்கள் பற்றிய தொடர் ஆர்வமூட்டுவது. உலக அளவில் அறியப்பட்ட ஓவியர்களை தெரிந்து வைத்திருப்பவர்கள்கூட இந்திய ஓவியர்களைப் பற்றிய அறிமுகம் கொண்டிருப்பதில்லை. இந்திய ஓவிய மரபு இந்திய இலக்கியத்துடன் இணைத்து புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.
January 21, 2023
யோகப்பயிற்சி முகாம்
குருஜி சௌந்தர் நடத்தும் யோக வகுப்புகள் மீண்டும் நடத்தப்படவேண்டும் என பலர் கோரினர். ஆகவே வரும் பிப்ரவரி 10, 11, 12 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் இரண்டாவது முகாமை நடத்த எண்ணியிருக்கிறோம்.
இது கடுமையான பயிற்சிகள் கொண்டது அல்ல, ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் எல்லை, பயிற்சி எல்லையை அடிப்படையாகக் கொண்டே பயிற்சிகள் வகுக்கப்படும்.
இவை ஒருங்கிணைந்த யோக வகுப்புகள். தத்துவம், பயிற்சி ஆகிய இரண்டும் இணைந்தவை. யோக அறிமுகமே முதன்மையாக நிகழும்.
ஆர்வமுள்ளவர்கள் பெயர், வயது, தொலைபேசி எண் ஆகிய தகவல்களுடன் jeyamohan.writerpoet@gmail.com என்னும் விலாசத்திற்கு எழுதலாம்.
சென்ற பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்களுக்கான வகுப்பு இது.
ஏழாம் உலகம் ஆங்கிலத்தில்
சுசித்ரா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக ஏழாம் உலகம் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. கீழை ஆசிய நாடுகள் முழுக்க இந்நாவலை ஜக்கர்நாட் வெளியிடும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேறு பதிப்பகம் வெளியிடும். ஏழாம் உலகம் நாவலின் வட்டாரவழக்கு, கவித்துவமான குறிப்புகள், சொல்விளையாட்டுகள் எல்லாமே அற்புதமாக சுசித்ராவால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 2023 தொடக்கத்தில் நாவல் வெளியிடப்படும்.
அறம் கதைகள் Stories Of The True என்ற பேரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்து ஆறுமாதகாலத்திற்குள் அந்நூலின் இரண்டாம் பதிப்பு விற்றுக்கொண்டிருக்கிறது. அந்நூலின் வெற்றியே தொடர்ச்சியாக இந்நூல் வெளிவர வழிவகுத்தது. மேலும் நாவல்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்றையசூழலில் இந்திய அளவில் ஓர் எழுத்து வாசிக்கப்படவேண்டும் என்றால் அது ஆங்கிலத்தில் வந்தாகவேண்டும். நான் அவ்வாறு என் படைப்புகளை மொழியாக்கம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது என் வேலை அல்ல என்ற எண்ணமே எனக்கிருந்தது. மிகுந்த தீவிரம்கொண்ட இரு பெண்கள் , பிரியம்வதாவும் சுசித்ராவும், என் நூல்களை உலகளாவிய வாசகர்களுக்குக் கொண்டுசெல்ல மிகுந்த தீவிரத்துடன் உள்ளனர். அவர்களுக்கு நன்றி.
ஏழாம் உலகம் அடித்தள மக்களின் கதை அல்ல, அதற்கும் அடித்தளத்திலுள்ள மனிதர்களின் கதை. ஆனால் அது இரக்கமோ அறச்சீற்றமோ கொண்டு அவர்களை முன்வைக்கவில்லை. ஏனென்றால் நானும் அவர்களில் ஒருவனாகவே வாழ்ந்தவன். ஆகவே அவர்களில் ஒருவனாக என்னை உணர்ந்து இந்நாவலை எழுதினேன். இந்நாவலை எழுதும் போது நான் அடைந்தது உவகை என்று இன்று படுகிறது. ஒரு கடந்தகால ஏக்கம். பழைய முகங்களை எல்லாம் மீட்டுருவாக்கம் செய்தேன். அவர்களில் பலர் இன்று வாழ்ந்திருக்க வழியில்லை. பெரும்பாலானவர்கள் நோயாளிகள். ஆனால் இந்நூலின் மொழியில் வாழ்கிறார்கள். என்றும் இனி இருந்துகொண்டிருப்பார்கள்.
எளிய மனிதர்கள். அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். இருந்தமைக்கு தடையமில்லாமல் செல்பவர்கள். ஆனால் எனக்கு அவர்கள் அன்னமிட்டார்கள். எவரிடமும் எதையும் கேட்கத்தெரியாத அரைமனநோயாளியான எனக்கு அவர்கள் அளித்த உணவு குருதியென என்னுள் உள்ளது. இந்நூல் வழியாக ஒரு பெரிய கடனை திருப்பியளித்திருக்கிறேன்
கிருஷ்ணன் நம்பி
கிருஷ்ணன்நம்பி தமிழின் சிறந்த சிறுகதைகளில் சிலவற்றை எழுதியிருக்கிறார். தமிழின் முதல் மாயயதார்த்தக் கதை (ஆனால் மாய யதார்த்தம் லத்தீனமேரிக்காவில் தோன்றுவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது) எனச் சொல்லத்தக்க தங்க ஒரு என்னும் சிறுகதையின் ஆசிரியர்.
1996 வாக்கில் ஓர் அம்மையார் கிருஷ்ணன் நம்பி படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்வதாகச் சொன்னார். குறிப்பாக என்ன காரணம் என நான் கேட்டேன். “மொத்தமே இருநூறு பேஜ்தான் சார் கிருஷ்ணன்நம்பியோட படைப்புலகம். நமக்கு பிள்ளையளை வைச்சுக்கிட்டு படிக்க நேரமில்லை” என்றார். அவர் இன்று பேராசிரியராக ஆகியிருப்பார் என நினைக்கிறேன்
கிருஷ்ணன் நம்பி
கிருஷ்ணன் நம்பி – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


