ஏழாம் உலகம் ஆங்கிலத்தில்

சுசித்ரா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக ஏழாம் உலகம் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. கீழை ஆசிய நாடுகள் முழுக்க இந்நாவலை ஜக்கர்நாட் வெளியிடும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேறு பதிப்பகம் வெளியிடும். ஏழாம் உலகம் நாவலின் வட்டாரவழக்கு, கவித்துவமான குறிப்புகள், சொல்விளையாட்டுகள் எல்லாமே அற்புதமாக சுசித்ராவால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.  2023 தொடக்கத்தில் நாவல் வெளியிடப்படும்.

அறம் கதைகள் Stories Of The True என்ற பேரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்து ஆறுமாதகாலத்திற்குள் அந்நூலின் இரண்டாம் பதிப்பு விற்றுக்கொண்டிருக்கிறது. அந்நூலின் வெற்றியே தொடர்ச்சியாக இந்நூல் வெளிவர வழிவகுத்தது. மேலும் நாவல்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்றையசூழலில் இந்திய அளவில் ஓர் எழுத்து வாசிக்கப்படவேண்டும் என்றால் அது ஆங்கிலத்தில் வந்தாகவேண்டும். நான் அவ்வாறு என் படைப்புகளை மொழியாக்கம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது என் வேலை அல்ல என்ற எண்ணமே எனக்கிருந்தது. மிகுந்த தீவிரம்கொண்ட இரு பெண்கள் , பிரியம்வதாவும் சுசித்ராவும், என் நூல்களை உலகளாவிய வாசகர்களுக்குக் கொண்டுசெல்ல மிகுந்த தீவிரத்துடன் உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

ஏழாம் உலகம் அடித்தள மக்களின் கதை அல்ல, அதற்கும் அடித்தளத்திலுள்ள மனிதர்களின் கதை. ஆனால் அது இரக்கமோ அறச்சீற்றமோ கொண்டு அவர்களை முன்வைக்கவில்லை. ஏனென்றால் நானும் அவர்களில் ஒருவனாகவே வாழ்ந்தவன். ஆகவே அவர்களில் ஒருவனாக என்னை உணர்ந்து இந்நாவலை எழுதினேன். இந்நாவலை எழுதும் போது நான் அடைந்தது உவகை என்று இன்று படுகிறது. ஒரு கடந்தகால ஏக்கம். பழைய முகங்களை எல்லாம் மீட்டுருவாக்கம் செய்தேன். அவர்களில் பலர் இன்று வாழ்ந்திருக்க வழியில்லை. பெரும்பாலானவர்கள் நோயாளிகள். ஆனால் இந்நூலின் மொழியில் வாழ்கிறார்கள். என்றும் இனி இருந்துகொண்டிருப்பார்கள்.

எளிய மனிதர்கள். அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். இருந்தமைக்கு தடையமில்லாமல் செல்பவர்கள். ஆனால் எனக்கு அவர்கள் அன்னமிட்டார்கள். எவரிடமும் எதையும் கேட்கத்தெரியாத அரைமனநோயாளியான எனக்கு அவர்கள் அளித்த உணவு குருதியென என்னுள் உள்ளது. இந்நூல் வழியாக ஒரு பெரிய கடனை திருப்பியளித்திருக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2023 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.