Jeyamohan's Blog, page 644
January 16, 2023
மயில்வண்ணம்
மயிலின் தோகை என்ன வண்ணம் என்று கேட்டால் எவராலும் பதில் சொல்ல முடியாது. அது எல்லா வண்ணங்களாலும் ஆனது. பச்சை,நீலம், ஊதா மட்டுமல்ல சிவப்பும் மஞ்சளும்கூட தோன்றும். நோக்க நோக்க மாறும். அந்த வண்ணங்களின் தோற்றுவாய் என்ன? மயில்தான். மயிலின் தோற்றுவாய் அதன் முட்டை. முட்டைக்குள் இருக்கும் அந்த மெல்லிய புரோட்டீன் பசை. அந்த பசைக்குள் உறையும் அதன் உயிரணு. அதன் மரபணுக்கூறு. அந்த பசையில், அந்த மரபணுக்கூறில், நுண்வடிவில் உள்ளன அத்தனை வண்ணங்களும்.
ஒரே கணத்தில் முட்டையின் நீரில் கருவென அமைந்த அத்தனை வண்ணங்களும் தோகையென விரிந்தால் என்ன ஆகும்? அவ்வனுபவத்தை அளிக்கும் ஒரு கவிதை
வேற்றுமைப்பட்ட வன்னம் வெவ்வேறு விபாகமாகி
தோற்றுதல் அடைவொடுக்கி சுயம்பிரகாசமாகி
சாற்றிடு மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போல
ஆற்றவே உடையதாகி பைசந்தி அமைந்திருக்கும்
(சிவஞான சித்தியார். சுபக்கம்)
மொழியின் பலநிலைகளை தொல்நூல்கள் வகுக்கின்றன. வைகரி, மத்திமை, பஸ்யந்தி, பரா என அவை விரிகின்றன. வைகரி என்பது வெளிமொழி. நாம் நாவால் உச்சரித்து பிறர் செவிகளால் கேட்கும் மொழி அது. Parole என மேலை மொழியியல் என்று சொல்வதற்கு இணையானது. மேலை மொழியியல் Langue எனச் சொல்லும் அகமொழியை பல பிரிவுகளாக இந்திய தத்துவநூல்கள் பகுக்கின்றன. அதில் ஒன்று பஸ்யந்தி என்னும் ஆழ்மொழி.
வைகரிக்கு அப்பாலுள்ளது மத்திமை என்னும் நடுமொழி. அதற்கப்பாலுள்ளது பஸ்யந்தி என்னும் நுண்மொழி. அதற்குமப்பாலுள்ளது பரா என்னும் ஆழ்மொழி. பரா உயிர்க்குலங்கள் அனைத்தின் நுண்மொழிகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. பஸ்யந்தி நம்மை அறியாமல் நம்முள் உறையும் மொழி. மத்திமை நாமறிந்து நம்முள் உறையும் மொழி. வைகரி நாம் பேசும் மொழி
பஸ்யந்தியை விவரிக்கையில் சிவஞானசித்தியார் இவ்வாறு சொல்கிறது.மயிலின் வண்ணங்கள் எல்லாம் அதன் முட்டையில் இருக்கும் நீரில் நுண்வடிவில் இருப்பதுபோல பிற்பாடு பல்வேறு பிரிவுகளாகவும் பொருள் வேற்றுமைகளுடனும் தோன்றுவதை தன்னுள் தானே ஒடுக்கிக்கொண்டு பஸ்யந்தி (பைசந்தி) அமைந்துள்ளது. ஆனால் தன்னைத்தானே வெளிப்படுத்தும் சுயம்பிரகாசத்தன்மை கொண்டது அது. செயல்வடிவாக எழும் ஆற்றலும் கொண்டது.
ழாக் தெரிதா சில உவமைகள் வழியாகவே தன் மொழிக்கொள்கையை முன்வைக்கிறார். அதிலொன்று பழங்காலத்து பாப்பிரஸ் சுவடியில் எழுதியவற்றின்மேல் வெண்மை தேய்த்து மேலும் மேலும் எழுதும் முறையை மொழியின்மேல் அர்த்தங்கள் மேலும் மேலும் ஏற்றப்ப்படுவதற்கு உதாரணமாக அவர் சொல்வது. அதாவது மொழிக்கு அடியிலுள்ள மொழிகள். நூலுக்கு அடியிலுள்ள நூல்கள். மொழியைப் பற்றிய சிவஞானசித்தியாரின் இந்த உவமை தெரிதாவோ, பார்த்தோ சொல்லும் எந்த உவமையைவிடவும் மகத்தானது என எனக்குத் தோன்றியது.
சைவம் சமயங்களை அணுக்கத்தின் அடிப்படையில் பிரித்துக்கொள்கிறது. உலோகாயதம் (உலகியல்வாதம்), மாத்யமிகம், யோகாசாரம், சௌத்ராந்திகம், வைபாஷிகம் (பௌத்தப்பிரிவுகள்) ,ஆருகதம் (சமணம்) ஆகியவை சைவத்திற்கு மிக அயலான புறப்புறச்சமயங்கள். தார்க்கிகர் (நியாயம், வைசேஷிகம்) , மீமாம்சகர்(பூர்வமீமாம்சம்), ஏகான்மவாதிகள் (வேதாந்திகள், சாங்கியர், யோகமதத்தவர், பஞ்சராத்ரிகர் (வைணவர்) ஆகியோர் புறச்சமயத்தவர்.
பாசுபதம், காபாலம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாதம் ஆகியவை சைவத்திற்கு அணுக்கமான அகப்புறச்சமயங்கள். அவை சைவங்கள், ஆனால் சைவத்தின் உள்வட்டத்திற்குள் அமைவன அல்ல. பாஷாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கிராந்தவாதம், ஈசுவர அவிகாரவாதம், சிந்தாந்தவாதம் ஆகியவை சைவ அகச்சமயங்கள். அவையே சைவத்தின் மையப்போக்குகள். அவற்றில் தலையாயது சித்தாந்த சைவம். சைவப்பிரிவுகளுக்குள் மிக அண்மைக்காலத்தையதும், ஆகவே அறுதியானதும் அதுவே என சொல்லப்படுகிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மெய்கண்டார் சைவ ஆகமநூல்களில் முதன்மையானதான ரௌரவ ஆகமத்தின் முதல் துணைப்பகுதியை தழுவி உருவாக்கிய சிவஞானபோதம் என்னும் நூலே சைவசித்தாந்தத்தின் அடிப்படை. அந்நூலை ஒட்டி உருவான பலநூல்கள் சைவசித்தாந்தத்தின் அடிப்படைகளை விரிவாக்கம் செய்கின்றன. இவை ஒரு மையத்தரிசனத்தை தர்க்கபூர்வமாக விரித்தெடுப்பவை.
சைவ சித்தாந்தம் என்பது ஆறு தரிசனங்கள், மூன்று தத்துவங்கள் மற்றும் அவற்றின் வேதாந்த விரிவுகளான அத்வைதம் , விசிஷ்டாத்வைதம், துவைதம், சுத்தாத்வைதம், துவைதாத்வைதம் உள்ளிட்ட தத்துவப்பிரிவுகள் அனைத்துக்கும் காலத்தால் பிந்தியது என்பதனால் அவற்றுடன் எல்லாம் முழுமையான விவாதமொன்றை நிகழ்த்தவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அது ஒரு நல்வாய்ப்பாகவும் சைவசித்தாந்தத்திற்கு அமைந்தது. சைவசித்தாந்தம் மிகவிரிவான தர்க்கமுறையை ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தொடரும் நூல்கள் வழியாகவும், அந்நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் வழியாகவும் உருவாக்கிக் கொண்டது.
சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய ஒரு தத்துவசிந்தனை மரபு. தமிழகத்தில் தோன்றிய பிற தத்துவ மரபுகள் அத்வைதம் , விசிஷ்டாத்வைதம் சைவசித்தாந்தம் ஆகியவை. சங்கரர் (அத்வைதம்) பழைய சேரநாட்டில் காலடியில் பிறந்தவர். ராமானுஜர் (விசிஷ்டாத்வைதம்) பழைய பல்லவநாடான ஶ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். பிற தத்துவஞானியரில்கூட வல்லபர் ( சுத்தாத்வைதம்) நிம்பார்க்கர் (துவைதாத்வைதம்) ஆகியவர்கள் காஞ்சியில் கல்விகற்றவர்கள். பௌத்த சமையப்பிரிவுகளில் யோகாசார மரபின் விக்ஞானவாதக் கொள்கை கொண்ட திக்நாகர், தர்மகீர்த்தி, தர்மபாலர் ஆகியோர் காஞ்சியை ஒட்டிய ஊர்களில் பிறந்தவர்களே. ஆனால் பிற கொள்கைகள் இங்கு பிறந்து இந்தியாவெங்கும் கிளைவிரித்தன. அதன் பிற்கால ஆசிரியர்களில் பலர் தமிழர்களுமல்ல. சைவசித்தாந்தத்தின் விரிவு முழுமையாகவே தமிழகத்தில் நிகழ்ந்தது. அவ்வகையில் முழுமையான தமிழ்த்தத்துவ சிந்தனை என்பது சித்தாந்த சைவமே ஆகும்.
சைவமரபுக்கு வேர்நிலம் காஷ்மீர், காஷ்மீர சைவமே தொன்மையானது. அதன் பல விரிவாக்கங்கள் இந்தியாவெங்கும் படர்ந்து சைவத்தின் எல்லா குறியீடுகளையும் ஏற்கனவே உருவாக்கிவிட்டன. ஒரு வழிபாடாக சைவம் சங்ககாலத்திற்கு முன்னரே தமிழகம் வந்து வேரூன்றிவிட்டது. சிலப்பதிகாரத்தில் பெருமதமாக நிலைகொண்டு சோழர்காலத்தில் தன் முழுவளர்ச்சியை எட்டியும் விட்டது. சித்தாந்த சைவம் அந்த தொன்மையான குறியீட்டுக்களம், பெருமத அடித்தளம் ஆகியவற்றின்மேல் எழுந்த ஒன்றே.
அதுவும் சைவசித்தாந்தத்தின் பெரிய நல்வாய்ப்புகளில் ஒன்று. பிற தத்துவப்பிரிவுகள் தத்துவம் மூலம் அவற்றின் மையத்தரிசனத்தை கவித்துவமாக விரித்தெடுத்து, குறியீடுகளாக ஆக்கி, ஆசார அனுஷ்டானங்களாக நிறுவி, அன்றாடவழியாக ஆக்கவேண்டியிருக்கிறது. சைவசித்தாந்தத்திற்கு அவையெல்லாம் முன்னரே அமைந்துவிட்டிருந்தன.
சைவசித்தாந்த நூல வரிசையின் பதினான்கு மூலநூல்களில் சிவஞானபோதத்திற்கு அடுத்த இடம் கொண்டது சிவஞானசித்தியார். அருள்நந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. சைவ ஞானாசிரியர் மரபு சைவச் சந்தான மரபு எனப்படுகிறது (சந்தானம், வாரிசு). அதில் அகச்சந்தானங்கள் நந்திதேவரில் தொடங்கி பரஞ்சோதி முனிவர் வரையிலானவர்களால் ஆனது. அவர்கள் கைலாயத்தில் உறைபவர்கள். மெய்கண்டாரில் தொடங்கி நீள்வது புறச்சந்தான மரபு. அது இன்றுவரை நீளும் திருக்கைலாயபரம்பரை மடாதிபதிகளால் ஆனது. புறச்சந்தான மரபில் மெய்கண்டசிவாச்சாரியாரின் நேர்மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். பொயு 13 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் அருணந்தி சிவாச்சாரியார் தோன்றினார் எனப்படுகிறது.
சிவஞானசித்தியாரை புரிந்துகொள்ள உதவும்பொருட்டு அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பேருரைகளில் ஒன்று அருணை வடிவேலு முதலியார் 1899ல் எழுதிய சிவஞான சித்தியார் சுபக்கம், தெளிவுரை. இது மாதவசிவஞான யோகியார் சிவஞான சித்தியார் நூலுக்கு எழுதிய சுபக்கம் என்னும் தெளிவுரையின் விளக்கவுரை. மெய்கண்டாரின் சிவஞானபோதத்தின் விளக்கம் சிவஞானசித்தியார். அதன் விளக்கம் சிவஞானசித்தியார் சுபக்கம். அதன் விளக்கமே இந்நூல்.
அருணை வடிவேலு முதலியார் புகழ்பெற்ற சைவப்பேரறிஞராகக் கருதப்பட்டவர். இந்நூலை அருணை வடிவேலு முதலியாரின் மகன் அருணை பாலறாவாயன் முன்னுரையுடன் அருண் சீனிவாசன் (கவின் பதிப்பகம் கோவை) வெளியிட்டுள்ளார்.
இந்நூலை ஒருவர் ‘வாசிக்க’ முடியாது. சைவப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிலருடன் அமர்ந்து கூட்டாகப் பயில்வதே முறை. சிவஞானபோதம் உள்ளிட்ட மற்றநூல்களையும் கருத்தில்கொள்ளவேண்டும். சைவசித்தாந்த அறிமுகநூல்களை பயில்வதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் இந்நூலை நூலகத்தில் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து கைபோன போக்கில் பிரித்து அதில் ஒரு பாடலை மட்டும் படித்து அதையொட்டிய உரையை பயின்று உள்வாங்கிக்கொள்ள முயலலாம். அது ஒரு வகையான தெளிவை அளிப்பதைக் காணலாம். அன்று முழுக்க சிந்தையில் தொடரும் ஓர் இனிமையாக அது நீடிக்கும். அழகிய கவித்துவம் ஒன்று இனிய தென்றல் என நம்மைச் சுற்றி வீசிக்கொண்டிருக்கும். இன்று என்னை மயில்முட்டையின் தோகை அவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது.
——————————————————————————————————
தொடர்புக்கு அ. அருண்சீனிவாசன்
73958 666 99 / 94864 22641…
வங்கி விபரம் :
KAVIN PUBLICATIONS , UNION BANK OF INDIA, CHINNA VEDAMPATTI Branch ,
( IFSC : UBIN0827363 ) Current Account : 273611100001361..
UPI ID : Kavin2021@uboi…
phonepe & Gpay 73958 666 99
உமா சந்திரன்
முள்ளும் மலரும் என்னும் படத்தை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்தப்படம் இன்று ஒரு செவ்வியல் தகுதியோடு நினைவுகூரப்படுகிறது. அடிப்பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை, செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ஆகிய பாடல்கள் செவிகளில் நீடிப்பவை. அந்தப் படத்தின் கதையை எழுதியவர் உமா சந்திரன். பூர்ணம் ராமச்சந்திரன் என்பது இயற்பெயர். தமிழில் புகழ்பெற்ற வேறு இருவர் இவருடைய சகோதரர்கள்.
உமாசந்திரன்
உமாசந்திரன் – தமிழ் விக்கி
குமரித்துறைவி, கடிதம்
அன்புள்ள ஜெ,
இந்த வருட புத்தகக கண்காட்சியில்தான் குமரித்துறைவி புத்தகத்தை வாங்கினேன். குறுநாவல் என்பதால் பொங்கலன்று படிக்கத் தொடங்கி அன்றே முடிக்க முடிந்தது. மிகச் சிறப்பான நாவல். இக்கதையை முன்பே ஒரு முறை உங்கள் வலைதளத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் பாதியில் நின்று விட்டது. அப்போது கதையுடன் பெரிதாக ஒன்ற முடியவில்லை. ஆனால் அப்போதே ஏதோ ஒன்று பாதித்தது. இப்போது படிக்கும் போது முதல் பக்கத்திலேயே மனது தானே உதயன் போல கதைக்குள் சென்றுவிட்டது. உதயன் மன்னரிடம், ‘மகாராணி கங்கம்மா மீனாட்சியை மதுரைக்கு அனுப்பும்படி ஓலை அனுப்பியுள்ளார்‘ என்பதில் தொடங்கிய கண்ணீர், இறுதிப்பக்கம் வரை நிற்கவே இல்லை. நான்கு பக்கம் படிப்பதும், கண்ணீர் வந்து எழுத்தை மறைப்பதும் மீண்டும் சமனிலைக்கு வந்து படிப்பதுமாகத்தான் முழு புத்தகமும் முடிந்தது. நான் வாசித்த உங்களின் முதல் நூல் ‘அறம்‘. அதில் ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு இடத்தில் கண்ணீர் கொட்டிவிடும். அது வலியை உணர்வதால் வந்த கண்ணீர். புரிந்துகொள்ள கூடியது. அதன்பின் கொற்றவை, காடு போன்ற பெரு நாவல்களை வாசித்தேன். அவற்றில் மூழ்கும் அளவிற்கு இன்னும் எனக்கு இலக்கிய ஞானம் போதவில்லை. ஆனால் ‘குமரித்துறைவி‘ முற்றிலும் புது அனுபவம். ஒரு நூல் முழுக்க கண்ணீருடனே படிக்க முடியுமா என்ன?. இன்னும் பிரமிப்பாகவே உள்ளது. பின் உங்கள் வலைதளத்தில் குமரித்துறைவி பற்றிய கடிதங்களை படித்தபோதுதான் தெரிந்தது, ஏறத்தாழ அனைவருமே இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என.
கடவுளரிடம் நாம் வாழ்வியல் சிக்கல்களினால் நிறைய முறை கண்ணீர் விட்டு கதறியிருபோம். ஆனால் கடவுளை உணரும் போது முதல் முறை கண்ணீர் வந்தது இந்த வருடத்தின் முதல் நாள் நீங்கள் எழுதிய ‘நீலமென்பவன்‘ கட்டுரையை படித்தபோது. அப்போதே எனக்கு பேரதிர்ச்சிதான், எப்படி கண்ணீர் என்று. கண்ணன் பல வருடங்களாக உளம் கவர்ந்தவன். ஏதோ ஒரு மென்மையான தருணம் கண்ணீர் கொட்டி விட்டது என்று விட்டுவிட்டேன். ஆனால் மீனாள் நான் முற்றிலும் அறிந்திராதவள். எது எப்படியோ, குமரித்துறைவியின் பின் மீனம்மையை தரிசிக்க உளம் ஏங்குகிறது.
கதையின் பல இடங்களில், நாமே அந்த திருமணத்தை ஒருங்கிணைப்பது போல, உதயனுக்கு இருந்த பதற்றம், பொறுப்பு, நிறைவின்மை எல்லாம் நமக்குள்ளும் ஒட்டிக்கொள்கிறது.
“அவள் இருந்ததையே வேணாடு அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் இங்கில்லாதது இனி ஒவ்வொரு நாளும் இந்த மண் உணரும்“. – நெகிழ வைத்த வரிகள்.
“அலங்காரம் செய்யும்போது பூசகர்களின் முகம் பிறிதொன்றாக மாறிவிடுகிறது. அதில் பக்தி இருப்பதில்லை. பணிவு தென்படுவதில்லை. தெய்வம் குழந்தையாக மாற, அவர்கள் அன்னையாகி விடுகிறார்கள். மீனாட்சியின் கன்னத்தை இறுகப் பிடித்தபடி நெற்றிப்பொட்டை சரிசெய்யும் சிவாச்சாரியார் அவள் அசைந்தால் ஓர் அடி போடுவார் என்று தோன்றியது.” – புன்னகைக்க வைத்தவை. இந்த வரிகளை படிக்கும்போது அருண்மொழி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.
“ஓதுவார் மிக மெதுவாக திருப்பள்ளியெழுச்சி பாடினார். இவ்வளவு மெதுவாகவா விஷ்ணுவை எழுப்புவார்கள்? இப்படி எழுப்பினால் அவர் எழுவதை விட ‘போங்க” என்று சிணுங்கிக்கொண்டே புரண்டு படுக்கத்தான் வாய்ப்பு அதிகம்“
கதையின் இறுதி மிக அற்புதம். குறும்பையும் செய்துவிட்டு பக்தனையும் காப்பாற்றுகிறாள். ஆகச் சிறந்த படைப்பு.
– கலைவாணி
தன்னறம் விருது விழா
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்னறம் இலக்கிய விருது நிகழ்வு 08.01.2023 அன்று இனிதுற நிகழ்ந்து முடிந்தது. அந்நிகழ்வின் முழுமையான காணொளி வடிவம் இது. அகநிறைவும், நம்பிக்கையும் கொண்டு நல்நிகழ்கையாக இவ்விருதளிப்பு நிகழ்ந்துமுடிந்ததில், எல்லாம்வல்ல இறைப்பேராற்றலின் துணையமைவும் ஓர் பெருங்காரணம் என்றே நெஞ்சுணர்கிறோம். முன்னழைத்துச் செல்லும் அந்த அரூபக்கரத்தின் பற்றுதல்தான் இக்கணம்வரை எங்களை திசைப்படுத்தி வழிநடத்திச் செல்கிறதென்பதை நாங்கள் பூரணமாக நம்புகிறோம். ஏற்கும் எல்லா கனவுக்கும் அதுவே செயல்நீர் வார்க்கிறது. மேலும், எண்ணற்ற மூத்த ஆசிரியர்களின் துணையிருப்பும் இந்நிகழ்வுக்கான தன்வழியை மலரச்செய்தன.
உங்கள் முன்னிருப்பில் இவ்விருதளிப்பு நிகழ்வு நிகழ்ந்தேறியதை எக்காலத்துக்கும் நிறைவளிக்கும் ஓர் நல்லசைவாக அகம்கொள்கிறோம். நம் முன்னாசன்களை பணிந்து வணங்கும் மரபுத்தொடர்ச்சியை நீங்கள் மீளமீள எங்களுக்குக் கற்பிக்கிறீர்கள். அவ்வகையில் எழுத்தாளர் சு.வேணுகோபால் பற்றிய உங்கள் உரை மகிழ்வையும் பெருநிறைவையும் தந்தது. மேலும், அருண்மொழி அக்கா, அஜிதன், சைதன்யா என உங்கள் குடும்பத்தினரின் உடனமைவும் முகமகிழ்வும் என்றும் உள்ளத்தில் நிலைப்பது.
மேலும், எழுத்தாளர்கள் பாவண்ணன், கோகுல் பிரசாத் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளும், அதற்கு சு.வேணுகோபால் அவர்கள் ஆற்றிய அற்புதமான ஏற்புரையும் இந்நிகழ்வுக்கு உயிர்ப்பளித்தன. சு.வேணுகோபால் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் மற்றும் விரிவான நேர்காணல் அடங்கிய முந்நூறு பக்க புத்தகமும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக சில இளம் வாசக மனங்களுக்கு விலையில்லா பிரதிகளாக அளிக்கப்பட்டன.
முகமறிந்த மற்றும் பார்த்தறிந்திடாத எத்தனையோ நல்லுள்ளங்களின் பங்களிப்பினால் சிறுகச்சிறுகச் சேர்த்துத் திரட்டப்பட்ட விருதுத்தொகை ஒரு லட்ச ரூபாயும், தொண்ணூறு வயதுகடந்த முதிய பனைக்கலைஞர் பின்னித்தந்த பனையோலை மாலையும், மலைக்கிராம வேளான் மக்கள் தந்தனுப்பிய அழிவின் விளிம்பிலிருக்கும் நாட்டுக்காய்கறி விதைப்பையும், தன்னறம் இலக்கிய விருதுச்சட்டகமும் எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்குப் பணிந்தளிக்கப்பட்டது. நம் காலத்தின் மிக முக்கியமான அசாத்தியப் படைப்பாளுமையை மனமேந்திக் கொண்டாடக் கிடைத்த நல்வாய்ப்பென இந்நிகழ்வு அகத்தில் நிறைந்திருக்கிறது.
“கலையில் தொலைந்து போதல் நம் விழைவின் இயக்கவிசையில் இருந்து நம்மை ஆற்றுப்படுத்தும். சக உயிர்களிடம் நாம் காட்டும் அன்பு, நம்மில் சமநிலையைப் பேணி, கொஞ்ச காலத்திற்கேனும் நம் விழைவுகொள்ளும் வீரியத்தைக் கட்டுப்படுத்திவைக்கும்” எனச் சொல்லும் ஷோப்பனோவரின் வார்த்தைகள் இக்கணம் நினைவெழுகிறது. மனிதமன ஊடாட்டங்களையும், அதன் வற்றாத வைராக்கியத்தையும், வேளாண் வாழ்வியல் எனும் தொல்நீட்சியையும் தனது கதைகளம் வழியாகக் கலையாக்கும் ஓர் உன்னத மனிதரைப் போற்றக் கிடைத்த வாய்ப்பாக இந்நிகழ்வினை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.
இந்நிகழ்வுக்கு வந்திருந்த தமிழிலக்கிய எழுத்தாளர்கள், படைப்பாளுமைகள், பதிப்பாளர்கள், செயல்பாட்டாளர்கள், மூத்த ஆசிரியர்கள், பத்திரிக்கை நண்பர்கள் என அனைத்து மனிதர்களுக்கும் எங்கள் தீராநன்றிகள் சென்றடைக! தோழமைகள் பாரதிகோபால், செந்தில் ஜெகந்நாதன், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, மனோ, மோகன் தனிஷ்க், ராஜேஷ் ஆகியோரின் உடனிற்றலுக்கும் உறுதுணைக்கும் அன்பின் நன்றிகள்!
எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்கும் தன்னறம் நிகழ்வுகளுக்கு நீங்களும், விஷ்ணுபுரம் நண்பர்களும் அளிக்கும் ஆசிகளும் அன்பும் எக்காலத்தும் நிலைத்திருக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு நகர்வையும் நின்று நிதானித்து கவனித்து அறிவுரையும் அரவணைப்பும் வழங்கும் அவர்களின் அன்புக்கு எங்கள் அகநன்றிகள்!
முழுமையுடன் இந்நிகழ்வு நிகழ்ந்துமுடிய உடனின்று உழைத்த அத்தனை இருதயங்களுக்கும் எங்கள் பணிந்த நன்றிகள். தன்வீட்டு நிகழ்வுபோல ஒவ்வொரு சிற்றசைவையும் பார்த்துப் பார்த்துச் சீர்படுத்திய எல்லா மனங்களையும் வணங்கிக் கைதொழுகிறோம். செயலில் இன்னும் உண்மை கொண்டு எங்கோ துயரில் தவித்திருக்கும் ஓர் எளிய ஜீவனின் மீட்சியை மனதில் நினைத்து முன்னகர்வது மட்டுந்தான் ஒவ்வொரு நிகழ்வின் வழியாகவும் நாங்கள் ஏற்கிற உளச்சத்தியம். ஏற்கும் செயலின் உண்மைதான்
எல்லாம்வல்ல தெய்வம்!
பணிவுடன்,
தன்னறம்
January 15, 2023
இயற்கை, மனிதன், கனவு- டெர்சு உசாலா
இயற்கையைக் கண்டடைதல்’ என்று ஒரு தனி நிகழ்வு உண்டு. நாம் எண்ணுவதுபோல அது இயல்பான ஒன்று அல்ல. அதற்கு முதலில் இயற்கையுடன் தொடர்பின்றி அகலவேண்டியிருக்கிறது. அதன் வழியாக ஒருவகை பழக்கமிழப்பு நிகழ்கிறது. அதன்பின் குழந்தைக்குரிய புதிய விழிகளுடன் நாம் இயற்கையைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இயற்கை புத்தம்புதியதாக நம் முன் தோன்றுகிறது. இயற்கை பிறந்து எழுகிறது
இயற்கையில் இருந்து நாம் விலகுவது நம் சிந்தனையால். அச்சிந்தனைகள் தங்களுக்குரிய வெளிப்பாட்டை இயற்கையில் கண்டடையும்போது இயற்கை படிமங்களாக பெருக ஆரம்பிக்கிறது. அதன்பின் நாம் காண்பது ‘அர்த்தம் ஏற்றப்பட்ட இயற்கையை’ . நம்முள் பெருகியிருக்கும் எல்லையின்மையை தன் உள்ளுறையாகக் கொண்ட இயற்கையை.
அந்த இயற்கையின் முடிவின்மை ஒன்று உண்டு. அது நம் முடிவின்மையை தான் பிரதிபலிக்கத் தொடங்கும்போது ஒரு பெருவெளி உருவாகிறது. கலைடாஸ்கோப் போல கணந்தோறும் உருவாகும் முடிவிலா உலகம் அது.
இலக்கியத்தில் இயற்கை இவ்வண்ணமே நிகழ்கிறது. சங்கப்பாடல்களைப் பாடியவர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களின் பெயர்களே சுட்டுவதுபோல அவர்களில் பலர் ‘கிழார்’கள். பலர் பாணர்கள். அவர்களுக்கு இயற்கையிடமிருந்த தொலைவே அக்கவித்துவத்தை உருவாக்கியது.
கபிலனும் காளிதாசனும் உருவாக்கிய அந்த இயற்கைத்தரிசனம் இலக்கியத்தில் என்றும் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் அது அடுத்தகட்டத்தை எட்டியது. மதங்களிலும் தத்துவங்களிலும் நம்பிக்கையிழந்த ஒரு தரப்பு ‘நேரடியாக’ இயற்கையை நோக்கிச் சென்றது. இயற்கைவாதிகள் (Naturalists) என அழைக்கப்படும் அந்த அறிவுத்தரப்பின் முதன்மை ஆளுமைகள் கவிஞர்களும் ஓவியர்களும். அவர்கள் இயற்கையை வெறும் படிமவெளியாகக் காணவில்லை. அதை பிரபஞ்ச ரகசியங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பரப்பாக உணர்ந்தனர்.
உலகம் முழுக்க பத்தொன்பதாம்நூற்றாண்டுச் சிந்தனையில் இயற்கைவாதம் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அதன் விளைவாக இயற்கையை முற்றிலும் புதியதாக கண்டடையும் படைப்புகள் உருவாயின. இம்முறை பழங்காலப் படைப்புகளில் இல்லாத ஒரு கூறு இணைந்துகொண்டது. அறிவியல்.
அறிவியல் பதினெட்டாம் நூற்றாண்டில் நாம் இன்றுகாணும் பேருருவை அடையலாயிற்று. புறவயமான அணுகுமுறை, தொகுப்பு –பகுப்பு என்னும் ஆய்வுமுறை ஆகியவை உருவாகி வலுப்பெற்றன. அவை இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்தியபோது பழைய கற்பனாவாதக் கவிதைகளின் உலகம் உரைநடையில் விரிவாக்கம் பெற்றது. அவற்றில் கற்பனாவாத மனநிலை உள்ளுறையாக இருந்தது, ஆனால் பேசும்முறை புறவயமான அறிவியல்தன்மை கொண்டதாக அமைந்தது.
அத்தகைய உரைநடை ஆக்கங்கள் உலகமெங்கும் உருவாகி மிகுந்த வீச்சுடன் இயற்கையின் பெருஞ்சித்திரத்தை உரைநடையில் உருவாக்கத் தொடங்கின. அவற்றில் தொடக்ககால எழுத்துக்களுக்கு இரண்டு கதைவடிவங்கள் இருந்தன. ஒன்று, வேட்டை. உலகமெங்கும் அறியப்பட்ட நூல்களான ஹெர்மன் மெல்விலின் மோபிடிக், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் ஆகியவை உதாரணம். இன்னொரு வகை வடிவம் பயணம். ஒருவன் ஏதோ ஒரு காரணத்தால் புதிய நிலமொன்றுக்குச் செல்கிறான். அங்கே புதிய ஒரு வாழ்க்கையைக் கண்டடைகிறான். அண்மையில் புகழ்பெற்ற ஓநாய் குலச் சின்னம் அத்தகைய நாவல்.
இந்தியமொழிகளில் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவில் வனவாசி (ஆரண்யக்) அத்தகைய பயணநூல்களுக்கு மிகச்சிறந்த உதாரணம். அதில் விரிந்து வரும் இயற்கைச் சித்திரம் இன்றுவரை இந்திய இலக்கியத்தை ஆட்கொள்ளும் ஒன்றாக உள்ளது. பங்கர்வாடி உட்பட பல நாவல்கள் அந்நிரையில் வருவன.
அத்தகைய பயணத்தன்மைகொண்ட இயற்கை விவரணையை முன்வைக்கும் நாவல்களில் ஒன்று விளாதிமிர் கே. ஆர்சென்யேவ் (Vladimir Klavdiyevich Arsenyev) எழுதி அவைநாயகன் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் டெர்சு உஸாலா.
ஆர்சென்யேவ் பழைய ஜார் ஆட்சிக்காலத்தில் ராணுவ அதிகாரிக்கான பயிற்சி எடுத்துக்கொண்டவர். ருஷ்ய நிலப்பகுதிகளை நேரில் கண்டு ஆவணப்படுத்துவது, எல்லைகளை வகுப்பது ஆகிய பணிகளை அரசின்பொருட்டு மேற்கொண்டார். ருஷ்ய நிலங்களினூடே என்னும் தலைப்பில் அவருடைய பயணக்குறிப்புகள் நூல்களாக வெளிவந்தன.
ரஷ்யப்புரட்சியின்போது ஆர்சென்யேவ் கிழக்கு குடியரசின் இனச்சிறுபான்மையினருக்கான அதிகாரியாக பணியாற்றினார். 1922ல் கிழக்குக் குடியரசு தோற்கடிக்கப்பட்டு சோவியத் ருஷ்யாவுடன் இணைக்கப்பட்டபோது நாட்டை விட்டு வெளியேற மறுத்து விளாடிவஸ்டாக்கிலேயே வாழ்ந்தார்.1930ல் மறைந்தார். அவர் மறைந்த பின் அவருடைய மனைவி மார்கரிட்டா கைது செய்யப்பட்டார். ருஷ்ய கம்யூனிசத்திற்கு எதிராகச் சதிசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பத்தே பத்து நிமிடம் நீண்ட நீதிமன்ற விசாரணைக்குப்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய மகளும் பின்னர் கொல்லப்பட்டார்.
இந்நாவல் உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்று திரைவடிவங்கள் வெளியாகியுள்ளன. இந்நாவலின் ஒரு திரைவடிவம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழில் அவைநாயகனின் மொழியாக்கம் சரளமான வாசிப்பனுபவத்தை அளிப்பதாக உள்ளது.
இது ஒரு நாவல் என முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. நாவலின் அமைப்பு இதற்கு உள்ளது. இது பழைய சோவியத் ருஷ்யாவின் வடகிழக்கு நிலத்தை அளந்து அடையாளப்படுத்த பயணமான ஓர் அதிகாரியின் பயணக்குறிப்புகளாக இந்நூல் அமைந்துள்ளது. விளாடிவாஸ்டாக் முதல் ஜப்பான் கடலின் மேற்புறத்தில் பயணம் செய்து கபரோவ்ஸ்க் என்னுமிடத்தில் முடியும் பயணம் இது. 1902 ,1906, 1097 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த தனிப் பயணங்கள் இவை.
இதில் அங்கே குடியேறியிருக்கும் சீனர்கள், கொரியர்கள், மற்றும் தொல்குடிகளின் கிராமங்கள் வழியாக செல்கிறார்கள். ஆறுகளையும், சதுப்புகளையும், புல்வெளிகளையும், குன்றுகளையும் கடந்து செல்கிறார்கள். பலசமயம் ஆறுகள் வழியாக படகுகளில் செல்கிறார்கள் .அந்தப் பயணத்தின் புறவயமான சித்திரங்கள் வழியாகச் செல்லும் நீண்ட விவரணையே இந்நூல்.
[image error] டெர்சு உசாலாவுடன்இந்நூலின் ஆசிரியரே கதைசொல்லி. அவர் தன் பயணத்தில் சந்திக்கும் டெர்சு உஸாலா என்னும் ‘கோல்டு’ பழங்குடி மனிதனே கதைநாயகன். கதைசொல்லி இயற்கையை அறியவும், வெல்லவும் விழைவுகொண்டவர். டெர்சு உஸாலா இயற்கையின் ஒரு பகுதியாகவே வாழும் மனிதன். வியப்பும் மெல்லமெல்ல உருவாகும் வழிபாட்டுணர்வுமாக கதைசொல்லி டெர்சு உஸாலாவை அறிவதுதான் இந்நாவலின் கதையோட்டம் என்பது. அது இயற்கையின் நுட்பங்களை அறிவதாகவும், இயற்கையின் வெல்லமுடியாத பிரம்மாண்டத்தை உணர்வதாகவும் நாவலில் வெளிப்படுகிறது.
டெர்சு உஸாலா ஒரு வேட்டையன். வேட்டைவிலங்கு என்றே அவரைச் சொல்லிவிட முடியும். வேட்டையாடும் விலங்குகளுக்குள்ள கூர்ந்த புலன்கள் அவருக்கு உள்ளன. விலங்குகளின் காலடிகளைக்கொண்டு அவற்றின் எடையைக்கூட அவரால் சொல்லிவிட முடியும். வான்குறிகள் பறவைகளின் இயல்புகளைக்கொண்டு புயலை கணிக்கிறான். உணவுக்காக விலங்குகளைக் கொன்று சுமந்து செல்கிறான். முக்கியமாக, கடுங்குளிரிலும் திறந்தவெளியிலேயே தூங்குகிறான்
ஆனால் அவன் மனிதனும்கூட. நகரத்தினர் ஓர் இடத்தில் குடிலமைத்து தங்கியபின் விளையாட்டாக அந்த குடில்களை எரித்துவிட்டுச் செல்கிறார்கள், ஆனால் டெர்சு அதைச்செய்வதில்லை. அந்தக்குடிலில் தீப்பெட்டி, கொஞ்சம் அரிசி, உப்பு ஆகியவற்றை கட்டித்தொங்கவிட்டுச் செல்கிறான், அங்கே வரப்போகிறவர்களுக்காக. மனிதர்கள்மேல் ஆழ்ந்த நம்பிக்கையுடனும், நட்புடனும் இருக்கிறான்
அற்புதமான சைபீரிய நிகழ்வுகள் இந்நூலை தீவிரமான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. சைபீரியாவின் மாபெரும் பறவைப்பெருக்கின் சித்திரம், பனிப்புயலுக்கு முன் அவை அப்படியே மறைந்து விடுவதும், அவர்கள் பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும்போது புற்களை முறுக்கி கூடாரம் அமைத்து உள்ளே ஒடுங்கிக்கொண்டு உயிர்பிழைப்பதும் நுணுக்கமாக சொல்லப்பட்டுள்ளன. டெர்சுவுக்கு நீர் நெருப்பு எல்லாமே உயிருள்ள ஆளுமைகள்தான். குறும்பும், கனிவும், சீற்றமும் கொண்டவை. அவற்றுடன் அவர் கொள்ளும் உறவு ஒருவகை உறவாடல்தான்
இப்போது வாசிக்கையில் கதைசொல்லியும் அவருடைய அணியும் இயற்கையை ஊடுருவுவதும், வெறுமே ஆர்வத்திற்காகவே உயிர்களைக் கொல்வதும் ஓர் இயற்கையியல் வாசகனுக்கு சிறு ஒவ்வாமையை அளிக்கலாம். ஆனால் இந்நாவல் இன்றைய இயற்கையியல் பார்வைகள் உருவாகாத காலத்தில் உருவான நூல் இது.
நுண்விவரணைகள் வழியாக உருவாகும் நிலச்சித்திரம் இந்நாவலின் பேசுபொருள். ஆனால் அதனுள் நுணுக்கமான ஒரு கற்பனாவாதம் உள்ளது. இயற்கையின் ‘கருணை’ அல்லது ‘நலம்பயக்கும் தன்மையை’ இந்நாவல் தொடர்ச்சியாக முன்வைக்கிறது. இயற்கையை ஒட்டி வாழும் வாழ்க்கையை இலட்சியப்படுத்துகிறது. டெர்சு உசாலா இறுதியில் காப்டனால் நகரத்துக்கு கொண்டுவரப்படுகிறார். நீரும் விறகும் விலைக்கு விற்கப்படும் ஒரு வாழ்க்கையில், சிறு அறைகளுக்குள் மனிதர்கள் குளிர்கால வாத்துக்கள் பொந்துகளில் புகுந்து ஒண்டியிருப்பதுபோல அமைந்திருக்கும் சிறுமையில் அவர் திகைப்படைகிறார். மிக எளிதாக நோயுற்று மறையும் டெர்ஸு உஸாலாவின் கல்லறைகூட நகர்மயமாக்கத்தில் காணாமலாகிறது. வானில் செல்லும் பறவைகள் போல தடமில்லாது மறைகிறார்.
இந்நாவலுக்கு முன்னுதாரணமாக டால்ஸ்டாயின் கொஸாக்குகள் போன்ற நாவல்கள் ருஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளன. இந்நாவலின் வழிநூல்கள் இன்று வரை வெளிவந்துகொண்டிருக்கின்றன. பலமுறை திரைப்படமாகவும் வெளிவந்த இந்நாவல் இன்றும் வாசிப்பிற்கு கிளர்ச்சியூட்டும் அனுபவத்தை அளிப்பதாக, படிமங்களாக நம்முள் வளர்வதாகவே உள்ளது.
டெர்சு உஸாலா விளாதிமிர் கே . ஆர்சென்யேவ்
மு.மு.இஸ்மாயில்
கம்பராமாயணத்தின் அழகில் ஈடுபட்ட இஸ்லாமிய அறிஞர்களில் முதன்மையாக சுட்டப்படுபவர் செய்குத்தம்பிப் பாவலர். இன்னொருவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல். அவருடைய கம்பராமாயண உரைகள் மிக முக்கியமானவை. கம்பராமாயணத்தின் பிழைநீக்கப்பட்ட முழுப்பதிப்பையும் வெளிக்கொண்டுவந்தார்
மு.மு. இஸ்மாயில் – தமிழ் விக்கி
எழுதுக, கடிதம்
அன்புள்ள ஜெ,
எழுதுக என்னும் புத்தகம் வாசித்த எனது அனுபவத்தை தங்களிடம் பகிரும் பொருட்டு அனுப்பும் மின்னஞ்சல்
ஒரு மனிதன் தான் அவதானித்ததை இந்த உலகுக்கு எழுத்து மூலம் கடத்திக்கொண்டிருக்கும் பணியை செய்யும் பொழுது, இந்த எழுத்துக்களின் ஊடே உள்ள ரகசியங்களை தன்னுள் அடக்கி வைப்பதுண்டு. காரணம் நிலைகொள்ளாமை என்னும் அந்த அச்சம், எழுதுவதில் இருக்கும் அந்த வித்தையை மற்றவர்களும் அறிந்தால் மற்றவர்களும் அவர்களுக்கு ஈடாக வரும் பொருட்டு தான் இத்தனை நாள் மற்றவர்களை விட ஒரு படி மேல் என்ற அந்த மிதப்பு நிலைக்காது. ஆனால் அடுத்த தலைமுறையினர் அவர்களில் உள்ள வாசர்களையும் எழுத்தாளர்களையும் கண்டடைவது தமிழ் இலக்கிய சூழலுக்கு இன்றியமையாதது என்ற ஒரு அறிதல் ஜெயமோகன் அவர்களை வாசகரிடம் உரையாடல் ஊடாக வாசித்தல் மற்றும் எழுதுதல் குறித்த தெளிவான தீர்க்கமான கருத்துக்களை பகிரச் செய்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அளித்த பதில்கள் ஒரு வாசகரையும் எழுத்தாளரையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
எனக்கு சற்றும் ஒவ்வாத கதை உலகத்தில், நான் கேட்டிராத மொழிநடையில் உள்ள செவ்வியல் இலக்கிய படைப்புகளான ஒரு புளிய மரத்தின் கதை, கொற்றவை, புயலிலே ஒரு தோணி என்ற புத்தகங்கள் பாதியிலியே கிடப்பதை நினைவு கூர்கிறேன். என்னை போன்ற வாசகர்களுக்கும் இந்த எழுதுக என்ற புத்தகத்தில் ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். விடுபட்ட இந்த புத்தகங்களின் வாசிப்பை தொடரலாம் என்ற எண்ணம் மலர்கிறது.
எது இலக்கியம்?, உலகியல் வாழ்வில் காலூன்றி நிற்பதன் அவசியம், தொடர்புத்திறனின் இன்றைய போக்கு என அனைத்து பதில்களும் அசாத்தியமான முறையில் பகுப்பாய்வுத் தன்மையோடு ஆழச் சென்று உதாரணங்களோடு விளக்கியிருப்பதனால் இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தின் அறிவுக்கனம் புத்தகத்தின் ஸ்தூல கனத்தை விட அதிகமாக உள்ளது. இதைச் சுமையாக இல்லாமல் மிக இலகுவாக நம்மில் செலுத்திருப்பதே இந்த படைப்பின் வெற்றி
லோகி – சில நினைவுகளும் சில மதிப்பீடுகளும் என்ற இவரின் புத்தகத்திலும் இந்த பகுப்பாய்வுத் தன்மையை நான் உணர்ந்தித்திருக்கிறேன் . உதாரணத்திற்கு மலையாள திரைக்கதைகளில் இரண்டு விதமான கதைகள் இருப்பதை நிறுவியிருப்பார் , எம் டி வாசுதேவன் நாயர் அவர்களின் கதைகளில் சிக்கல்களை தன் புத்திசாலித்தனத்தால் அவிழ்த்து மீண்டு வரும் கதாநாயகன் மற்றும் லோகி போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் உள்ள மீள முடியாத சிக்கல்களில் அகப்பட்டு வாழவைத் தொலைக்கும் கதாநாயகன் . இப்படி பல தருணங்களில் என்னை அசர வைத்த படைப்பு லோகி என்ற அந்த புத்தகம் . அந்த படைப்புக்கு சற்றும் குறையாத படைப்பாக இந்த எழுதுக என்னும் இந்த கடித இலக்கியத்தை பார்க்கிறேன்.
கடைசியில் வரும் தீவிரவாதம் பற்றியான கட்டுரை இளைஞர்களை நல்வழிப்படுத்தவதற்காகவே தன் முனைப்போடு தர்க்க அடிப்படையில் உளமாற சொல்லிருப்பது கச்சிதம்.
ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என்ற ஜெயமோகனின் கூற்றிற்கேற்ப இந்த படைப்பிலும் இதை காணமுடிகிறது.
இதில் வியப்பு என்ன என்றால் இந்த அறிய மெய்மையை சுழல்நிலையில் நிலை கொள்ளச் செய்து அந்த அரிய மெய்மையையின் தேவையை வலியுறுத்தி அதன் ஊடாக அரிய மெய்ம்மையே இன்னொரு அடுக்காக மருவுருவம் பெற்றிருப்பது தான்.
இவை அனைத்தையும் எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த குறைவான பக்கங்கள் கொண்ட ஒரு அறிவு களஞ்சியத்தை எல்லோரும் பருக வேண்டும். எழுதுக என்னும் நூலை ஜெயமோகன் அவர்களின் 60ஆம் அகவையை முன்னிட்டு விலையில்லா பிரசுரமாக பெற்ற 500 இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதனால் இதனை எனது பாக்கியமாகவே கருதுகிறேன். தன்னலம் இல்லாமல் இந்த அறிய செயல்பாட்டை செய்த தன்னறம் நூல்வெளிக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகள்.
அன்புடன்
அன்பு
ஜெயமோகன் நூல்கள் வாசிப்பின் வழிகள் வாங்க
வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க
வணிக இலக்கியம் வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க
புறப்பாடு, ஒரு கடிதம்
மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு,
வணக்கம். எமது மகள் அங்கவை யாழிசை அவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்து, சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். எமது இல்லத்திலேயே செம்பச்சை நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறோம். விடுமுறை நாட்களில் நிறையப் புத்தகங்களை அவர் படிப்பதுண்டு. படிக்கின்ற புத்தகங்களைக் குறித்தும் வாசிப்பு அனுபவத்தைக் குறித்தும் எழுதித்தரச் சொல்வது எமது வழக்கம். அண்மையில், தங்களது புறப்பாடு நூலைப் படித்து முடித்த கையோடு, அதன் வாசிப்பு அனுபவத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டார். அதைத் தங்கள் பார்வைக்கு அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியும் அன்பும். நன்றி.
மகராசன்
ஜெயமோகனின் புறப்பாடு: பயணங்களும் படிப்பினைகளும்.
அ.ம.அங்கவை யாழிசை
நான் பதினோராம் வகுப்பு பயின்ற காலத்தில், தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்த ‘யானை டாக்டர்’ எனும் கதையைப் படித்தபோதுதான் ‘ஜெயமோகன்’ எனும் எழுத்தாளர் பெயர் அறிமுகமானது. ஜெயமோகன் எழுதிய கதைகளையும் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசை அப்போது இருந்தது. இதைக் குறித்து எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயமோகன் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும் இருப்பதாகக் கூறினார். இரண்டொரு நாளிலேயே எங்களது ‘செம்பச்சை’ நூலகத்திற்கு ஜெயமோகன் நூல்கள் பலவற்றை வாங்கிவிட்டார் அப்பா.
எந்தப் புத்தகத்தையும் மாதக்கணக்கில் சிறுகச் சிறுகப் படிக்கும் என் அம்மாவை, ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்த முதல் புத்தகம் ஜெயமோகனின் ‘எழுதுக’ எனும் புத்தகம்தான். அவரின் எழுதுக எனும் நூல் அவருக்கு மிக முக்கியமான நூல் என்பார். அந்தப் புத்தகத்தை அவர் படித்து முடித்த கையோடு, ஜெயமோகன் எழுதிய ‘புறப்பாடு’ எனும் நூலையும் படிக்கத் தொடங்கினார். எந்நேரமும் அந்தப் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தார். புறப்பாட்டைப் படித்து முடித்த பிறகு ஜெயமோகனின் மிகத் தீவிர ரசிகையாக ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெயமோகனின் பேச்சுகளைக் காணொளி வாயிலாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருப்பார்.
புறப்பாடு புத்தகத்தைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அந்த நூலைப் பற்றி விரிவாக ஏதும் கூற மறுத்து விட்டார். “அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள். மனுஷன் போய்க்கிட்டே இருப்பாரு… போய்க்கிட்டே இருந்திருக்காரு…” என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டார். அப்போதிருந்தே ஜெயமோகனும் புறப்பாடும் எனக்கு நன்றாகவே அறிமுகம்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான காத்திருப்புக்கு இடையில் கிடைத்த விடுமுறை நாட்களில் நிறைய நூல்களை வாசித்திட வேண்டும் என, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நூல்களைச் சொல்லியிருந்தார் அப்பா.
போன மாதம் கிட்டத்தட்ட இதே நாளில்தான் புறப்பாடு வாசிக்கத் தொடங்கினேன். என் அப்பாதான் ‘இதை உன் அடுத்த இலக்காக வை. பெரும்பாலும் வரலாற்று நாவல்களையே வாசித்து உலவிய உனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும்’ என்றார்.
புறப்பாடு படிக்க ஆரம்பித்தேன். அதில் என் வாசிப்புப் பயணமும் ஆரம்பமானது. நூலின் கால்வாசிப் பக்கங்களை வாசித்த பின்பு நிறுத்திவிட்டேன். இதுவரை வாசித்தவற்றை நினைத்துப் பார்த்தேன். எவ்வளவு முயன்றாலும் அவரது சித்திரத்தை இந்தப் பயணத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் படிக்கத் தொடங்கினேன். நூலில் வருகின்ற இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தவையா? புனைந்தவையா? இது நிகழ்ந்திருக்காது, நிகழ்ந்திருந்தாலும் இவருக்கு அல்ல என மீண்டும் மீண்டும் எனக்குள் பலவாறாகத் தோன்றியது.
அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். இல்லையெனில், ஓடி விடுவார். ஏதாவது ஒரு விடுதியில் தங்குவார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்புவார். நண்பனின் இறப்பு நிகழும். மறுபடியும் ஓடிவிடுவார். கங்கை, காசி, ஹரித்துவார், மும்பை எனப் பல இடங்களுக்குச் செல்வார். அதற்கு முன் பூனேயில் மண் சுமக்கும் வேலை, பிறகு சென்னையில் அச்சகத்தில் வேலை, அடுத்து வீடு திரும்புவார். சில காலம் கழித்து மறுபடியும் ஓடிவிடுவார். இப்படி எங்காவது ஓடிவிடுவார்; ஓடிக்கொண்டே இருப்பார். அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது என்ன எண்ணினார்? வெளியேறிய பின்பு வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று என்னவில்லையா? என, எனக்குத் தோன்றும்.
இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வீட்டை ஒரு விடுதியாகவே பாவித்தது போல் தோன்றியது. வருவார், தங்குவார், செல்வார். அவரது வீட்டில் அங்கு வாழவேயில்லை என்ற எண்ணம் தோன்றும். இப்படியெல்லாம் ஓடுவதும் வருவதும் போவதும் சாத்தியம்தானா? ஒரு வாலிபரால் அப்படி அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆனாலும், அவர் அலைந்தார்; பறந்தார். எங்கும் நிலையில்லாத ஆற்று நீர் போல அலைந்து திரிந்து கடலில் கலந்திருப்பாரா? என்று தோன்றும். இல்லை, அவர் இன்னும் அலைந்து கொண்டிருப்பார் காற்றைப் போல.
முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அப்படியே விவரிக்கிறார். அவரது ஞாபகத் திறன் வியக்க வைக்கிறது. அவர் சம்பவங்களை விவரிப்பதால் இப்படிக் கூறவில்லை. சம்பவங்களின் பின்னணியை விவரிப்பதன் நுணுக்கத்தை வாசிப்பில் உணர்ந்ததால் கூறுகிறேன். மிகச்சிறிய தகவலையும்கூடத் துல்லியமாக விவரிப்பது ஒரு கலைதான். அப்படிப்பட்டவர்களை நான் எப்போதும் ரசிப்பதுண்டு.
அவர் பல வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். சிமெண்ட் வேலை, மணல் அள்ளுதல், பிழை திருத்தம், புத்தகம் படைத்தல் எனப் பல வேலைகள் செய்திருக்கிறார். ஆனாலும், புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை.
இந்தப் புத்தகத்தை முக்கால்வாசியளவு வாசித்து முடித்திருந்தபோது, எனக்குக் கவலையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. நான் எனது புத்தக வாசிப்புப் பயணத்தை மிகத் தாமதமாக ஆரம்பித்து விட்டதாக ஒரு தவிப்பு தோன்றியது. இன்னும் முன்னரே வாசிப்புப் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. என்மேல் நானே கோபப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அப்போதுதான் அவரைப்போல நானும் சுற்ற வாய்ப்புகள் கிட்டும் என எண்ணி இருக்கலாம்.
இந்தப் புத்தகத்தில் வரும் அவருடைய மொழிநடையைப் பற்றி நான் பேசியே ஆக வேண்டும். எப்படி அப்படி எழுதினார்? எளிமையான சொற்கள்தான். ஆனாலும், இந்தப் புத்தகம் இன்னும் மெருகேற்றிய வாக்கியத்தால் ஆகியிருக்கிறது. என்றாலும், எல்லோராலும் இதை வாசிக்க முடியாது என்றே தோன்றியது. நான் அதைப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் இன்னும் பக்குவப்படவில்லையோ என எனக்குப் பட்டது. எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.
இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில், என் அப்பா தினமும் கேட்பார் “புறப்பாடு எப்படிப் போகுது?” என்று. எனது ஒரே பதில், வழக்கமான பதில் “போய்க்கிட்டே இருக்குப்பா”. ஆம், போய்க்கொண்டே, நீண்டு கொண்டே, விரிந்து கொண்டே சென்றது முடிவில்லாதது போல. எனக்கு ஒரு கட்டத்தில் அழுகை வந்துவிட்டது. எனக்கும்தான் அலைந்து திரிய ஆசை. ஆனால், முடியவில்லை. ஒரு கணம் அப்படியே கிளம்பினால் என்ன? என்று தோன்றும். அந்த எண்ணம் மறுகணம் செத்துப் போகும்.
இவர் குறிப்பிடும் ஒப்புமைகள் பிரமிப்பில் ஆழ்த்தும். அவரது ஒப்புமைப்படுத்தும் திறன் மகத்தானது. ஆங்கிலத்தில் அதை அனாலஜி என்கிறார்கள். எதையெதையோ எதனுடனும் ஒப்பிடுவார். அவ்விரண்டையும் வைத்து நான் கற்பனைகூட செய்திருக்க மாட்டேன். ஆனால், படித்த பிறகு சரிதானே என்று தோன்றும். அந்த ஒப்புமையைக் கண்டு நானே சிரிப்பேன். நனைந்த சாலைகளைச் சாக்கடைகள் என்பார். இரவில் சாலைச் சந்திப்புகளைப் பிரம்மாண்டமான ஒரு தோல் செருப்பின் வார் போல இருக்கிறது என்பார். ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதை, அது மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது என்பார். ரயிலில் பயணம் செய்யும் பொழுது போடுகின்ற பாடல்கள் பயணிப்பவர்களின் பல உணர்வுகள் கொண்டாட்டங்கள் நிறைந்தது என்று கூறிவிட்டு, அதை ஓட்டல் தட்டுகள் என்பார். யார் யாரோ வந்து எதையெதையோ வைத்துத் தின்ற தட்டு என்று கூறுவார். இப்படி, சிறு பொருளையாவது ஒப்பிட்டுத்தான் எந்தவொரு காட்சியையும் நகர்த்துவார்.
சரம் சரமாகப் பேராசிரியர் பொழிந்து கொண்டிருந்த வகுப்பில் மதிய நேர மயக்கம். ஆங்கிலமும் தமிழும் எப்போதுமே சோற்றுக்கு மேலேதான் என்பார். இந்த வரியைத் தாமதமாகவே நான் புரிந்து கொண்டேன். உணவிற்குப்பின் பாடம் நடத்தப்படுகிறது என்று பிறகு புரிந்தது. புத்தகம் முழுவதிலும் சாமர்த்தியமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு பொருளையும் விவரிக்கும் அவரது கலை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
என் அப்பா இந்தப் புத்தகத்தை என்னிடம் தரும்போதே ‘படித்து முடித்தபின் அதைப்பற்றி எழுத வேண்டும்’ என்று கூறிவிட்டார். அதற்காகப் படிக்கும்போதே குறிப்பு எடுக்கவும் சொன்னார். ஆனால், எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எப்படி எழுதுவது? அவர் இங்கு இருந்து அங்கு சென்றார். பிறகு அங்கிருந்து வேறு எங்கோ சென்றார். அங்கு இல்லாமல் எங்கெங்கோ சென்றார் என்பதையா எழுதுவது? சட்டென்று நான் ஒரு உதவாக்காரியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த விசாலமான பயணத்தையும், படைப்பாளரின் அந்த அறிவையும் எழுத்தாக்க என் அறிவு போதாது என்ற இயலாமையின் வெளிப்பாடு அது.
உலாவுதல் ஒரு உன்னதமான தியானத்தைக் கொடுப்பது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஞானத்திற்கு ஈடு இல்லை. ஜெயமோகனின் புறப்பாட்டை எண்ணிப் பார்க்கையில், அவர் பயணத்தை எழுத்தாக்கவில்லை. இதை எழுதுவதற்காகத்தான் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும்.
உலாவுதலில் கிடைக்கும் நிம்மதி வேறெதிலும் எனக்குக் கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் என்னவோ, நான் ஒரு சிறு தூரமேனும் உலாவுவேன். புதிதாய் ஒன்றைப் பார்ப்பேன். அதன் நினைப்பே கிளர்ச்சியூட்டும். இந்த எதிர்பார்ப்போடு புறப்பாடு என்னை மிகக் கவனமாக அந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றது. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பயணம். ஆனாலும், நான் காணாத பலவற்றை அந்தப் பயணத்தில் கண்டேன்; உணர்ந்தேன்.
ஒரு கட்டத்தில், யார் இந்த மனிதர்? சாமானியர்தானா எல்லாவற்றையும் செய்கிறார் என்று பட்டது. இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில்கூட, ஒரு பொருளின் மீதுகூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக் கொண்டார் போலும்.
புறப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, “அவர் பிழைப்பிற்காக ஓடினாரா? இலக்கியத்திற்காக ஓடினாரா? என்றே தெரியாது” என அம்மா கூறினார். ஆம், இந்தப் பயணம் அவருக்கு ஒரு படிப்பினை. இந்தப் படிப்பினைகள்தான் படைப்பாளிக்கும் படைப்பிற்கும் அடிப்படையாக இருந்திருக்கலாம். பயணம் எல்லோருக்கும் படிப்பினைதானே.
ஜெயமோகனின் புறப்பாடு புத்தகமானது, இந்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் பிம்பமாக – பிரதிபலிப்பாகவே இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு சேர்ந்து நானும் அந்த வாழ்வில் பங்கெடுத்தது போல உணர்கிறேன்.
சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும் போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன. சேரியில் அவர் தங்கி இருந்த பொழுது விவரிக்கும் பகுதிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சேரியில் இரவில் கொசுக்கள் அளவுக்கு அதிகமாக மொய்க்கும். சேரியில் குழந்தைகள் பிறந்து சிறிது காலத்தில் இறந்து விடுவார்கள். அவற்றைக் கூறுகையில், அக்குழந்தை பிறப்பதற்கு ஒரே அர்த்தம்தான். கொசுக்களுக்குச் சில லிட்டர் ரத்தத்தை உற்பத்தி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான் என்பார். மழைக் காலங்களில் சாக்கடைகளை அடித்தளமாகக் கொண்ட குடிசைகள், சாக்கடைகள் பெருகி ஓடும்போது கட்டைகளில் பிணங்கள் முட்டி நின்ற சம்பவங்களையும் பதிவு செய்திருப்பார். இந்த வாழ்வெல்லாம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வு.
அதேபோல, மும்பையில் அவர் தங்கிய இடங்கள் பற்றிய விவரிப்பும் என்னை வெகுவாகப் பாதித்தது. அங்கெல்லாம் அப்படியான மனிதர்கள் வாழ முடியுமா? வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு, “இந்த நாடு முழுக்க அவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஒரு போர்வையாக அவர்களை மறைத்து ஒளித்து வைத்திருக்கிறார்கள்” என்று பட்டது. அந்தவகையில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பக்கங்களையும் புறப்பாடு எனக்குக் காண்பித்திருக்கிறது.
காசியில் காளி வேசம் போடும் பெண்ணைப்பற்றிப் படிக்கையில் என் மூளை மரத்துவிட்டதுபோல இருந்தது. பெண் என்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் எந்த வழியிலும் சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் காளி வேடப் பெண்ணின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.
ஜெயமோகன் ஓர் ஆணாக இருந்ததால் கிளம்பிவிட்டார்; ஓடிவிட்டார். பெண்ணாகிய நான் ஓட நினைத்தால், ஊர் சுற்ற நினைத்தால், உலாவ நினைத்தால் என்னாவது? என்னவெல்லாம் நடக்கும்? என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சமூகம் என்ன மாதிரியான படிப்பினைகள் தந்திருக்கும்? பெண்களை இந்தச் சமூகம் நடத்துவதும், பெண்களுக்கு இந்தச் சமூக மனிதர்களும் ஆண்களும் தருகின்ற மோசமான படிப்பினைகளை நினைக்கும்போதும் எனக்குப் பீதியூட்டுகிறது; பயமாய் இருக்கிறது. அதனாலேயே நான் ஓடிப் போகவும் ஊர் சுற்றவும் நினைத்த எண்ணம் செத்துப் போனது. ஆண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறு; பெண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறுதானே.
ஆனாலும், புறப்பாடு புத்தகமானது அதன் பயணங்களில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணரும் நல்லதோர் பயணமாக, இயல்பான பயணமாக, பரபரப்பான பயணமாக இருந்தது. பயண அனுபவங்களை வாசிப்பின் மூலமாகப் பெறுவதற்கு, புறப்பாடு தந்த ஜெயமோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அ.ம.அங்கவை யாழிசை
15.12.2022
முதற்கனல் – விமர்சனம்
சிறந்த ஒரு அனுபவத்தை தந்த ஒரு வாசிப்பு இந்த புத்தகம். அதுவும் கதைக்கான அரங்கம் அமைக்க பட்டிருக்கும் விதம் அற்புதம். இது ஒரு கதையாடல் என்று நம்மை மறக்க செய்யும் ஒரு அனுபவம் இந்த முதற்கனல். ஜெயமோகனின் மொழி ஆளுமையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். பல வார்த்தைகள் புரிவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இருந்தாலும் அந்த எழுத்து நடை மற்றும் கற்பனை அவ்வளவு அழகாக சொல்ல பட்டிருக்கிறது
வெண்முரசு 01 – முதற்கனல் – ஜெயமோகன் – புத்தக விமர்சனம்January 14, 2023
சிறிது இலக்கியம் சிறிது சினிமா- ஏ.கே.லோகிததாஸுடன் ஒரு பேட்டி-2
லோகிததாஸ்(ஏ.கே.லோகிததாஸ் பேட்டி தொடர்ச்சி)
ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்க வேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக் கூடாது. அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை. உண்மையை, யதார்த்தத்தை முன் வைப்பது மட்டுமே அவரது படைப்பியக்கத்தின் நோக்கம்.
லோகிததாஸ்: உண்மையும் யதார்த்தமும் பலவிதமானவை. முடிவே இல்லாதவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தேர்வு செய்து ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அதன் நோக்கம்தான் அங்கே முக்கியம். உயர்ந்த கலையை உருவாக்க முடியாதவர்களின் சமாதானம் அல்லது சப்பைக்கட்டுதான் இது.
ஜெயமோகன்: நீங்கள் கூறுவதுபோல் ஒரு நோக்கம் இருக்கும்போது கலைக்கு ஒருமை உருவாகிறது. ஆனால் ஒருமையை மறுக்கக்கூடிய சிதைவை முன்வைக்கக்கூடிய கலைப்படைப்புகள் உள்ளன.
லோகிததாஸ்: அத்தகைய படைப்புகளை நான் ஏற்கவில்லை. இலக்கியத்தில் நேர்ந்த சிறு வட்டத்தில் அவை அதிர்வுகளை உருவாக்கலாம். சினிமா போன்ற பெரிய கலை வடிவில் அவை வெறும் சலசலப்பாக மட்டுமே முடியும். கலைஞனின் நோக்கமும் கலைப்படைப்பின் விளைவும் மிகமிக முக்கியமானவை.
ஜெயமோகன்: கலை வளர்வதில்லை. கூறுபொருள்தான் மாறுகிறது என்று ஒரு இடத்தில் டி.எஸ்.எலியட் கூறுகிறார்.
லோகிததாஸ்: உண்மைதான். கிரேக்க , சம்ஸ்கிருத நாடகங்களையும் இன்றைய நல்ல சினிமாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெரியும்.
ஜெயமோகன்: ஆனாலும் கலைஞர்களில் இருவகை உண்டு. சமன்குலைக்கும் கலைஞர்கள் சல்வேடார் டாலி போல , விளாடிமிர் நபக்கோவ் போல. சமன் உருவாக்கும் கலிஞர்கள் தல்ஸ்தோய் போல .
லோகிததாஸ்: சமன் குலைப்பதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நோக்கியே செய்ய முடியும் .டால்ஸ்டாய் இன்றும் உயிர்வாழ்கிறார். மேலான கலை உருவாக்குவதே சமன்தான். ஒரு நல்ல கச்சேரி கேட்டு வெளியே வந்தால் மனம் சட்டென்று கோபப்பட முடியாது. சட்டென்று பொறாமை வராது. மனம் சாந்தியடைகிறது. இது முன்பே கூறப்பட்ட விஷயம்தான். ரசங்கள் ஒன்பது. பிற அத்தனை ரசங்களும் சரியாக இணைந்தால் உருவாகும் ரசம் கடைசி ரசமான சாந்தம்தான். எல்லா ரசங்களும் அலையடிக்கும். மகாபாரதம் சாந்த ரசத்தை உருவாக்கும் இதிகாசம்.
ஜெயமோகன்: உங்கள் எழுத்தில் மகாபாரதம் உருவாக்கிய பாதிப்பு என்ன?
லோகிததாஸ்: இரு இதிகாசங்களும்தான் என் கற்பனைக்கு அடிப்படை. மகாபாரதத்தில் ஒரு துளி போதும் எனக்கு ஒரு கதையை உருவாக்க முடியும். மகாபாரதம் கடல் ஆகவே எனக்கு கதைகளுக்கும் பஞ்சமே இல்லை. முன்பு என் கதைகளுக்கு என்ன மூலம் என்ற சர்ச்சை வந்தது. ஒரு கதாப்பிரசங்கக்காரர் அவரது கதையை நான் திருடிவிட்டதாகச் சொல்லி நீதிமன்றம் போனார். நான் நீதிமன்ற மேடையில் நின்று அக்கதையின் மகாபாரத மூலவடிவைச் சொன்னேன். நீதிபதி ஒவ்வொரு கதையாகக் கேட்டார். ஒவ்வொரு கதையாக விளக்கினேன். நீதிமன்றம் முழுக்க ஒரே கூட்டம். அன்றைக்கு. வாழ்க்கை நமக்கு சில அனுபவங்களை அளிக்கிறது. அவ்வனுபவங்கள் அளிக்கும் கேள்விகளை நாம் இதிகாசங்களின் அமைப்பில் அமைத்துக்கொண்டு முன்னகரும்போது அது படைப்பாக ஆகிறது.
ஜெயமோகன்: சரி ஒரு நேரடியானக் கேள்வி. நடிகர்களுக்க்காக நீங்கள் கதை எழுதியதுண்டா?
லோகிததாஸ்: இதை இப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டும். நடிகர்களின் இமேஜை உருவாக்க, நிலைநிறுத்த நான் கதையையும், கதாப்பாத்திரங்களையும் உருவாக்கியதுண்டா? இல்லை. ஒருபோதும் இல்லை. அதேசமயம் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் மனத்தில் தெரிவது,ஒருவரை உத்தேசித்து எழுதுவது மிகவும் வசதியானது. ஒன்று படமாக்கும்போது பிரச்சினை இருக்காது. இரண்டாவதாக ஒரு மனித உடல், ஒரு முகம் நம் முன் தெரிகிறது. அது மிகவும் திட்டவட்டமானது.
ஜெயமோகன்: ஒரு கதாபாத்திரம் மம்மூட்டி என்றால் அது மாறுமா?
லோகிததாஸ்: வளரும். திட்டவட்டமாக மாறும். அது கம்பீர குரலும் அழகிய முகமும் கொண்டிருக்கும். உயர்சாதித் தோற்றம் இருக்கும். அதில் கோழைத்தனம் இருக்காது. உலகில் உள்ள சிறந்த திரைக்கதைகள் பலவும் முன்கூட்டியே நடிகர்களை உத்தேசித்தவை. சிலர் எப்போதும் ஒரே நடிகர்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
ஜெயமோகன்: நீங்கள் ஒரு திரைக்கதையாசிரியர். வெற்றிகரமானவர். எப்போது, ஏன் இயக்குநராக வேண்டுமென்று தோன்றியது?
லோகிததாஸ்: இயக்குநர் ஒரு படத்தின் தலைவர். ஒருங்கிணைப்பாளர். திரைக்கதையாளன் உருவாக்கும் சட்டகத்தை நிரப்புபவர். அந்த இடம் அனைவராலும் விரும்பப்படுவதாகவே இருக்கும். என் திரைக்கதைகளை என் விருப்பப்படி படமாக்க விரும்பினேன்.
ஜெயமோகன்: நீங்கள் அடிப்படையில் ஒரு திரைக்கதை ஆசிரியரானதால் உங்களால் தொழில்நுட்ப ரீதியாக இயக்குநராக ஏதேனும் சிரமம் இருந்ததா?
லோகிததாஸ்: இயக்குநர் வேலை என்பது அந்த அளவுக்கு தொழில்நுட்ப வேலை அல்ல. அது அதிகமும் நிர்வாக ஒருங்கிணைப்பு சார்ந்த வேலை. பலரிடமிருந்து வேலைகளைப் பெற்றுக் கொள்வது. அதற்கும் மேலாக உள்ள மூன்று விஷயங்கள் நடிப்பை வெளிக்கொணர்வது,காட்சிக் கோணங்களை அமைப்பது, காட்சிகளை வெட்டித் தொகுக்கும் பிரக்ஞையுடன் இருப்பது. இது மூன்றும் திரைக்கதையாசிரியனிடமும் இருந்தாக வேண்டும். நல்ல திரைக்கதையாசிரியன் உள்ளூர நல்ல நடிகனாக , நல்ல காட்சியமைப்பாளராக இருப்பான். கதையை வெட்டித்தொகுப்பது எந்த எழுத்தாளனிடமும் இயல்பாக இருக்கும் பிரக்ஞைதான்.
ஜெயமோகன்: திரைக்கதையை வசனத்துடன் முழுமையாக எழுதிவிடுவீர்களா?
லோகிததாஸ்: ஆமாம் அதுதான் சிறந்த முறை.
ஜெயமோகன்: வசனத்துடன் சேர்த்து எழுதக்கூடாது என்கிறார்களே. அப்படி எழுதினால் காட்சியமைப்புக்கு இடமில்லாமல் போய்விடும் என்கிறார்களே.
லோகிததாஸ்: அது சரியல்ல.. சினிமாவில் வசனமும் காட்சியும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஆகவே அதை உருவாக்கும்போதே முழுமையாக எழுதிவிடுவதே நல்லது. அப்போதுதான் சரளமான ஓட்டம் இருக்கும். சிலர் ஒரு கதையோட்டத்தை மட்டும் எழுதிவிட்டு அவ்வப்போது வசனத்தை எழுதுகிறார்கள். அப்போது வசனம் இயல்பாக திரைக்கதையின் ஒரு பகுதியாக இருக்காது. திரைக்கதை ஒரு இலக்கியப் படைப்பு. இலக்கியமாகவே அது எழுதப்பட வேண்டும்.
ஜெயமோகன்: இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் பலவகையான கதை சொல்லும் முறைகள் உள்ளன. யதார்த்தவாதம், மிகுபுனைவு, ஆவணப்பதிவு என்றெல்லாம் நான் எல்லாவற்றையும் மாறி மாறிப் பயன்படுத்துகிறேன். ஆனால் சினிமாவில் இன்றும் ஒரே கூறுமுறைதான். யதார்த்தவாத அணுகுமுறை. சமீபத்தில் ஈரானியப் படங்களைப் பார்க்கும்போது ‘’பை சைக்கிள் தீவ்ஸின்’’ அதே அழகியல்தான் இன்றும் உள்ளது. வெவ்வேறு கூறுமுறைகள் என் இன்னும் சினிமாவில் பிரபலமாகவில்லை.
லோகிததாஸ்: சினிமாவிலும் ஃபாண்டசி, ஆவண முறை போன்றவை உள்ளன. அவை யதார்த்தவாத கூறுமுறையின் ஒரு பகுதியாகவே உள்ளன. ஏன் என்று யோசித்தால் கிடைக்கும் விடைதான். சினிமா வெகுஜனக்கலை. இங்குள்ள ஒரு சிறிய மாறுதல் கூட மொத்த சமூகத்தில் ஏற்படும் ஒரு உளவியல் மாற்றத்தின் விளைவுதான். சினிமா தன் விருப்பப்படி மாற முடியாது. கூடவே மக்களும் மாறவேண்டும். ஒரு தரப்பு இன்னொன்றை பாதித்து இருவரும் சேர்ந்து மாறவேண்டும். இன்று மக்கள் யதார்த்த வாழ்வை சினிமாவில் காண விரும்புகிறார்கள். சொல்லப்போனால் யதார்த்த உணர்வு வலிமை பெற்றே வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த ஃபாண்டசி அம்சங்கள் கூட இன்று சினிமாவில் இல்லை.ஏஎன் வெகுஜன எழுத்திலும் யதார்த்தவாதம்தானே உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வைப்போன்ற ஒன்றை திரையில் காணும்போதுதான் அதனுடன் ஐக்கியமாகிறார்கள்.
லோகி,நான், இணை இயக்குநர் மோகன் பையன்னூர், இன்றைய இயக்குநரும் லோகிக்கு பிரியமான உதவியாளருமான மீரா கதிரவன்ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் கேரளத்தில் இடதுசாரி தீவிரவாதம் தோன்றி வீழ்ந்த காலகட்டம். ஏராளமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதன் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீங்கள் அதனால் பாதிப்பு அடையவில்லையா?
லோகிததாஸ்: கட்சி அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. உண்மையான அரசியலில் ஆர்வம் உண்டு. அது கருத்துகளின் அதிகாரத்தின் அரசியல். அப்படிப்பட்ட அரசியலை ஒரு படத்தில் எழுத திட்டம் உள்ளது. பொதுவாக என் கவனம் எப்படியோ சமூகத்திடம் மோதி அன்னியமாகும் தனிமனிதர்களின் அவலத்திலேயே உள்ளது. இது என் இயல்பு சார்ந்ததாக இருக்கலாம்.
ஜெயமோகன்: நீங்கள் ஏன் ஒரு அரசியல் படம் எடுக்கவில்லை. சொல்லப்போனால் உங்கள் படத்தில் அரசியலே இல்லை.
லோகிததாஸ்: நான் எழுதவிருப்பது அதைப் பற்றித்தான். அந்த காலகட்டம் என்னிலும் அழுத்தமான சுவடுகளை விட்டுச்சென்றுள்ளது. அவற்றை என் கோணத்தில் பரிசீலிக்க விரும்புகிறேன்.
ஜெயமோகன்: கமர்சியல் படங்களைப் பார்ப்பீர்களா?
லோகிததாஸ்: எல்லா நல்ல படங்களையும் பார்ப்பேன். திரைப்படம் என்னுடைய ஊடகம் .அதன்மீது எனக்கு மோகம் உண்டு. கலைப்படம், கமர்ஷியல் படம் என்ற பிரிவினையே இல்லை. அது ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. கமர்ஷியல் நோக்குடன் எடுக்கப்படும் படங்களில் பத்துக்கு ஒன்பது படங்கள் தோல்விகள்தான். அப்படியானால் எப்படி அவற்றை கமர்ஷியல் படங்கள் என்கிறீர்கள்? கலைப்படங்களுக்கு கமர்ஷியல் நோக்கங்களே இல்லையா என்ன? இருவகையிலும் சில மாடல்களையும் ஃபார்முலாக்களையும் வைத்திருக்கிறார்கள். அதையே பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கிறார்கள். கமர்ஷியல் படமென்றால் பாட்டு,சண்டை ,கதாநாயகனின் வீரதீர பிரதாபங்கள் . கலைப்படமென்றால் இருட்டு மந்தத்தன்மை.
ஜெயமோகன்: பள்ளிக்கூடத்தில் சினிமாவைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று கூறப்படுகிறதே?
லோகிததாஸ்: கற்றுக்கொடுக்கலாம். ஆனால் முதலில் பள்ளிக்கூடத்தில் கற்பனையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை ஒன்றுதான். கற்பனை. இங்கே நம் கல்வியின் பிரச்சினை சினிமாக் கல்வி இல்லாமையோ, இசைக் கல்வி இல்லாமையோ அல்ல. கற்பனை இல்லாமைதான். சில சமயம் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறோம். கற்பனை இல்லாதபோது கலைகளை ரசிப்பதற்கான இயல்பே இல்லாமல் போய் விடுகிறது. சினிமாவுக்கு மட்டுமா ரசனை தேவை? இசைக்கு, ஓவியத்திற்கு? நம் கல்வி அமைப்புகளில் கற்றுத் தேறியவர்கள் எத்தனைபேருக்கு அத்தகைய ரசனை உள்ளது? ரசனை உள்ளவர்கள் சுயமாக அதனை அடைந்தார்கள். தங்கள் உழைப்பால் அதை வளர்த்துக் கொண்டார்கள் . இலக்கிய வாசகர்களும் சினிமா ரசிகர்களும் எல்லாம் அப்படித்தான். நமது கல்விமுறையில் கற்பனை இல்லாமலிருப்பதனால் அது உலர்ந்து, வறண்டு காணப்படுகிறது. அதில் கருணைக்கும் கனிவுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. இதுதான் இன்று உள்ள முக்கியமான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.
கலையை ரசிப்பதற்கான பயிற்சி என்பது உண்மையில் என்ன? சின்ன குறிப்புகளை கற்பனையால் பெருக்கி ஒரு முழுமையான அனுபவத்தை அடைவதுதானே? ராமன் வந்தான் என்று படிக்கும்போது தசரதன் மகனை கண்ணில் காண்பதற்கான மனநிலை. அதுதான் எல்லாக் கலைகளுக்கும் பொது இல்லையா?
ஜெயமோகன்: மலையாள சினிமாவில் உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?
லோகிததாஸ்: பரதன். அவருடைய இலக்கிய ஞானம் முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இசையிலும் ஓவியத்திலும் ஆர்வமும் பயிற்சியும் உடையவர் அவர். இந்த மூன்று கலைகளையும் தன் சினிமாவில் அவர் இணைத்தார். அவரது படச்சட்டகங்கள் மிகவும் அழகானவை. திரைக்கதையை உள்வாங்குவதில் அவர் மிகவும் நுட்பமானவர்.
ஜெயமோகன்: பிடித்த திரைக்கதையாசிரியர்?
லோகிததாஸ்: பத்மராஜன். இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்ற பிறகு சினிமாவுக்கு வந்தார் அவர். மிக இயல்பான வசனங்களிலும் நுட்பமான யதார்த்த சித்தரிப்பும், வலிமையான கதாபாத்திரங்களும் அவரால் உருவாக்கப்பட்டன. பத்மராஜனின் வசனங்கள் ஒருபோதும் பத்மராஜனுடையதாக இருக்காது. அது அந்தக் கதாபாத்திரம் கூறுவதாகவே இருக்கும். ஒருமுறை என் படத்தைப் பார்த்த பிறகு பத்மராஜன் என்னுடைய கதாபாத்திரங்கள் சொந்த ஆன்மாவால் உரையாடுவதாக கூறினார். நானும் “ பஞ்ச” வசனங்கள் எழுதுவதில்லை. வசனங்களை வைத்து விளையாட மாட்டேன். மிக இயல்பாக கதாபாத்திரங்களை உரையாட விடுவேன். பத்மராஜனின் கதைக்கருக்கள் விசித்திரமானவை. “ஓர் இடத்தில ஒரு பயில்வான் “ போல. ஒரு ஊருக்கு வரும் பயில்வானின் பிரச்சனைகள். அதை மிக நம்பகமாகவும், சுவாரசியமாகவும் கூறியிருந்தார். மலையாளத்தில் எனக்குப் பிடித்த படம் அது.
ஜெயமோகன்: ‘பெருவழியம்பலம்’, ‘கள்ளன் பவித்ரன் ‘எல்லாம் அதே மாதிரியான படங்கள். அவை ஒரு சிறு பையனின் பார்வையால் அள்ளப்பட்ட சித்திரங்கள் போல உள்ளன.
லோகிததாஸ்: பத்மாரஜனின் பலமே அதுதான்.
ஜெயமோகன்: சரி பிடித்த நடிகர்?
லோகிததாஸ்: என்னுடைய பல நல்ல கதாபாத்திரங்களை மோகன்லாலும் மம்மூட்டியும் செய்திருக்கிறார்கள் . மிகமிக வலுவாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தியத் திரையின் சிறந்த நடிகர்கள். ஆனால் ஒரு ரசிகனாக மலையாளத்தில் எனக்குப் பிடித்த நடிகர்கள் கோபியும் நெடுமுடிவேணுவும்தான்.
ஜெயமோகன்: திலகன்?
லோகிததாஸ்: மிக நுட்பமான நடிகர். எனது பல கதாபத்திரங்களுக்கு உயிர் கொடுத்து கொண்டு வந்தவர். ஜாதகம் படத்தைப் பாருங்கள். அதில் அந்த நாயர். அடிக்கடி தலையை வருடுவார். தலைக்குள் ஒரு எரிமலை புகைவது படத்தின் கடைசியில்தான் வரும். திலகனின் கண்கள் மாறும் விதம் நடிகர்கள் பார்த்துப் படிக்க வேண்டிய விஷயம். ஆனால் திலகனுக்கு பல வரையறைகளும் உண்டு. உடல் குரல் என. நெடுமுடியும் கோபியும் அப்படியல்ல. அவர்கள் எங்கும் போக முடியும். எப்படியும் மாறமுடியும். ‘வீண்டும் சில வீட்டு காரியங்கள்” படத்தில் நெடுமுடிவேணு தோன்றும்போது பின்பக்கம் தெரியும் பாருங்கள். அவர் ஓர் அற்பர் அயோக்கியர் என்று அந்த பின்பக்கமே சொல்லிவிடும்.
ஜெயமோகன்: லோஹி மிகமிக உணர்சிகரமான மனிதர். அப்படிப்பட்டவர்கள் குரூரமானவர்களாகவும் சில சமயம் வெளிப்படுவார்கள்..
லோகிததாஸ்: குரூரமாக நான் நடந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை. சிறுவயதில் நான் குரூரமாக நடத்தப்பட்டதனால் அப்படி இருக்கலாம். இல்லை என் பயம் காரணமாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக என் கலை என்னை சுத்திகரிப்பதனால் அது நிகழ்ந்திருக்கலாம்.
ஜெயமோகன்: உங்களுக்கு நரம்புப் பிரச்சினைகள் உண்டா? கலைஞர்களுக்கு அது இருக்கும்.. குரல்கள் கேட்பது, கண்களில் ஒளி தெரிவது, உடல் நடுங்குவது.
லோகிததாஸ்: ரொம்ப உண்டு..ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மனநோயாளியாகவும் இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறேன்.
ஜெயமோகன்: எப்படிப்பட்ட பிரச்சினை?
லோகிததாஸ்: உணர்ச்சிகள் என் கட்டுக்குள் நிற்காது .நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பேன். உருக்கமான இடங்களைப் படித்தால் கதறிக் கதறி அழுவேன். சிறிய விஷயத்தில் கூட என்னைக் கட்டுப்படுத்த முடியாது. தூக்கத்தில் பயங்கரமாக அழுவேன். என் அழுகையைக் கேட்டு நானே திடுக்கிட்டு விழித்துக் கொள்வேன்.
ஜெயமோகன்: ‘துளை விழுத்த மூங்கில்தான் பாடும்’ என்று வயலாரின் வரி ஒன்று உள்ளது.
லோகிததாஸ்: இருக்கலாம் ஆனால் துளை விழுவது என்பது மிகவும் வலி தருவது .
ஜெயமோகன்: மலையாள இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்?
லோகிததாஸ்: பஷீர், மாதவிக் குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர்
ஜெயமோகன்: மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள் ,வள்ளுநாடு
லோகிததாஸ்: ஆமாம் கேரளத்தின் கலாச்சார மையம் அல்லவா அது.
( நீலவல்லி அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஐவிட் வெளியீடாக ’திரை’’ இதழில் 2005- ம் ஆண்டு வெளியான நேர்காணல்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

