குமரித்துறைவி, கடிதம்

குமரித்துறைவி வாங்க

அன்புள்ள ஜெ,

இந்த வருட புத்தகக கண்காட்சியில்தான் குமரித்துறைவி புத்தகத்தை வாங்கினேன். குறுநாவல் என்பதால் பொங்கலன்று படிக்கத் தொடங்கி அன்றே முடிக்க முடிந்தது. மிகச் சிறப்பான நாவல். இக்கதையை முன்பே ஒரு முறை உங்கள் வலைதளத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் பாதியில் நின்று விட்டது. அப்போது கதையுடன் பெரிதாக ஒன்ற முடியவில்லை. ஆனால் அப்போதே ஏதோ ஒன்று பாதித்தது. இப்போது படிக்கும் போது முதல் பக்கத்திலேயே மனது தானே உதயன் போல கதைக்குள் சென்றுவிட்டது. உதயன் மன்னரிடம், ‘மகாராணி கங்கம்மா மீனாட்சியை மதுரைக்கு அனுப்பும்படி ஓலை அனுப்பியுள்ளார்‘ என்பதில் தொடங்கிய கண்ணீர், இறுதிப்பக்கம் வரை நிற்கவே இல்லை. நான்கு பக்கம் படிப்பதும், கண்ணீர் வந்து எழுத்தை மறைப்பதும் மீண்டும் சமனிலைக்கு வந்து படிப்பதுமாகத்தான் முழு புத்தகமும் முடிந்தது. நான் வாசித்த உங்களின் முதல் நூல் ‘அறம்‘. அதில் ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு இடத்தில் கண்ணீர் கொட்டிவிடும். அது வலியை உணர்வதால் வந்த கண்ணீர். புரிந்துகொள்ள கூடியது. அதன்பின் கொற்றவை, காடு போன்ற பெரு நாவல்களை வாசித்தேன். அவற்றில் மூழ்கும் அளவிற்கு இன்னும் எனக்கு இலக்கிய ஞானம் போதவில்லை. ஆனால் ‘குமரித்துறைவி‘ முற்றிலும் புது அனுபவம். ஒரு நூல் முழுக்க கண்ணீருடனே படிக்க முடியுமா என்ன?. இன்னும் பிரமிப்பாகவே உள்ளது. பின் உங்கள் வலைதளத்தில் குமரித்துறைவி பற்றிய கடிதங்களை படித்தபோதுதான் தெரிந்தது, ஏறத்தாழ அனைவருமே இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என.

கடவுளரிடம் நாம் வாழ்வியல் சிக்கல்களினால் நிறைய முறை கண்ணீர் விட்டு கதறியிருபோம். ஆனால் கடவுளை உணரும் போது முதல் முறை கண்ணீர் வந்தது இந்த வருடத்தின் முதல் நாள் நீங்கள் எழுதிய ‘நீலமென்பவன்‘ கட்டுரையை படித்தபோது. அப்போதே எனக்கு பேரதிர்ச்சிதான், எப்படி கண்ணீர் என்று. கண்ணன் பல வருடங்களாக உளம் கவர்ந்தவன். ஏதோ ஒரு மென்மையான தருணம் கண்ணீர் கொட்டி விட்டது என்று விட்டுவிட்டேன். ஆனால் மீனாள் நான் முற்றிலும் அறிந்திராதவள். எது எப்படியோ, குமரித்துறைவியின் பின் மீனம்மையை தரிசிக்க உளம் ஏங்குகிறது.

கதையின் பல இடங்களில், நாமே அந்த திருமணத்தை ஒருங்கிணைப்பது போல, உதயனுக்கு இருந்த பதற்றம், பொறுப்பு, நிறைவின்மை எல்லாம் நமக்குள்ளும் ஒட்டிக்கொள்கிறது.

“அவள் இருந்ததையே வேணாடு அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் இங்கில்லாதது இனி ஒவ்வொரு நாளும் இந்த மண் உணரும்“. – நெகிழ வைத்த வரிகள்.

“அலங்காரம் செய்யும்போது பூசகர்களின் முகம் பிறிதொன்றாக மாறிவிடுகிறது. அதில் பக்தி இருப்பதில்லை. பணிவு தென்படுவதில்லை. தெய்வம் குழந்தையாக மாற, அவர்கள் அன்னையாகி விடுகிறார்கள். மீனாட்சியின் கன்னத்தை இறுகப் பிடித்தபடி நெற்றிப்பொட்டை சரிசெய்யும் சிவாச்சாரியார் அவள் அசைந்தால் ஓர் அடி போடுவார் என்று தோன்றியது.” – புன்னகைக்க வைத்தவை. இந்த வரிகளை படிக்கும்போது அருண்மொழி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.

“ஓதுவார் மிக மெதுவாக திருப்பள்ளியெழுச்சி பாடினார். இவ்வளவு மெதுவாகவா விஷ்ணுவை எழுப்புவார்கள்? இப்படி எழுப்பினால் அவர் எழுவதை விட ‘போங்க” என்று சிணுங்கிக்கொண்டே புரண்டு படுக்கத்தான் வாய்ப்பு அதிகம்“

கதையின் இறுதி மிக அற்புதம். குறும்பையும் செய்துவிட்டு பக்தனையும் காப்பாற்றுகிறாள். ஆகச் சிறந்த படைப்பு.

– கலைவாணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2023 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.