Jeyamohan's Blog, page 641
January 21, 2023
தி.சா.ராஜூ,கடிதம்
நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக இருந்த காலக் கட்டத்திலிருந்து – அங்கு பள்ளிக்கூட நூலகத்திற்கு வந்து கொண்டிருந்தது தினமணி நாளிதழ். பொறுப்பாசிரியர் ஐராவதம் மகாதேவன் என்றிருக்கும், நடுப்பக்க கட்டுரைகள் அடிக்கடி தி.சா.ராஜு பெயரில் வந்து கொண்டிருந்தன. அதன் பிறகும் அடுத்து வந்த பத்து ஆண்டுகள் வரை தி.சா.ராஜு எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகளை, சிறுகதைகளை படித்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு ஈராயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இருபது ஆண்டுகள் கிட்டத்தட்ட அவர் எதையுமே எழுதவில்லை, அல்லது பிரசுரமாகவில்லை
சுத்தமாக மறந்து போன பெயராகிப் போன தி.சா.ராஜுவை இன்று தமிழ் விக்கியில் பார்க்கும்போது நினைவுகள் எதுவும் முற்று முழுவதுமாக காணாமல் போய்விடுவதில்லை, தமிழ் விக்கி இதுபோல ஒவ்வொருவரைப் பற்றியும் தேடித் துருவி ஆவணப்படுத்தும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் இன்றைய புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது நம் பெருமிதங்களில் ஒன்று.
கொள்ளு நதீம்
அன்புள்ள ஜெ
தி.சா.ராஜூ இன்று எத்தனைபேரால் படிக்கப்படுவார் என்று தெரியவில்லை. ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது. சில எழுத்துக்கள் காலம் கடந்து நிற்கும். பெரும்பாலும் மறைந்துவிடும். ஆனால் ஓர் எழுத்தாளரின் படைப்புகளில் சிறந்தவை என சில இருக்கும். அவற்றை தேர்வுசெய்து தொகுப்புகளாகக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு தொகுப்புகளைக் கொண்டுவரும் வழக்கம் உலகம் முழுக்க உண்டு. தி.சா.ராஜூ போன்று ஒரு சில நல்ல கதைகள் எழுதி மறக்கப்பட்டவர்களின் படைப்புகள் அப்படி தொகுக்கப்பட்டால் வரலாற்றில் அவர் நீடிப்பார். அப்படிப்பட்ட தொகுதிகளை வெளியிட நம் பதிப்பகங்கள் ஆர்வம் காட்டவேண்டும்
ஜெயராமன்
ஆரோக்ய நிகேதனம்
இசை ஆரம்பிக்கும் போதே, அவ்வொலியில் உள்ள ஸ்வரங்களின் கோர்வையான துடிப்பைக் (ஸ்தாயி) கொண்டு இது இந்த ராகமாகத்தான் இருக்கும் என்கிற இசை ஞானிகளைப் போல, நோயாளிகளுடைய நாடியின் துடிப்பைக் கொண்டு வந்திருக்கும் நோயின் தன்மையையும், வீரியத்தையும் துல்லியமாக கணக்கிடும் நிபுணத்துவத்தை தன் தந்தையின் பயிற்சி வழியாகவும், தன் உள்ளுணர்வின் வழியாகவும் பெறுகிறார் ஜுவன் மஷாய். இதுவே, நிறைய நோயாளிகளின் குடும்பத்தாரை அவருக்கெதிராகவும் ஆக்குகிறது. அவருடைய மனைவி ஆத்தர் பௌ உட்பட.
ஆரோக்கிய நிகேதனம் வாசிப்புமூச்சே நறுமணமானால்- சுசித்ரா
ஒரு விசித்திரமான நிகழ்வு வழியாக நான் அக்கமகாதேவியை கண்டடைந்தேன். ஜெயமோகனின் ‘குமரித்துறைவி’ நாவலை நான் 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படித்துக்கொண்டிருந்தேன். 14-ஆம் நூற்றாண்டில் மதுரையை சுல்தானிய ஆட்சியிலிருந்து மீட்ட நாயக்க சாம்ராஜ்யத்தின் பேரரசியான கங்கம்மா தேவி அந்த நாவலில் ஒரு கதாபாத்திரம். குமரியில் வாசமிருக்கும் மீனாட்சியம்மையை மதுரையின் அப்பனான சுந்தரேசுவரனுக்கு மணம் முடித்து, அம்மையை மதுரைக்கு அழைத்து வர சம்மதித்து அவள் எழுதும் ஒரு மடல் நாவலில் இடம்பெரும். மனதைப் பெருமளவில் நெகிழச்செய்யும் கடிதம் அது. திருமணத் தாக்கலுக்கு சம்மதம் தெரிவித்து அவள் பிள்ளையை பெற்றவளின் இடத்தில் நின்று எழுதியாக வேண்டியது. ஆனால் இங்கே பிள்ளையோ பரமசிவன்.
அந்தக் கடிதத்தில் அவர் தன் பெயரை ‘சிவதாசி‘ என்று கையொப்பமிட்டிருப்பார். அந்த தருணத்தில் உணர்ச்சியினாலோ என்னவோ, ‘சிவதாசி’ என்ற வார்த்தை என்னை பெருமளவில் ஆட்கொண்டது. அந்த வார்த்தையின் பிச்சித்தனம் தான் காரணம். அந்த சொல்லை நான் பின்தொடர்ந்து சென்றேன். வரலாறு வழியாக நம்மிடம் வரும் கங்கம்மா தேவி ‘சிவதாசி‘ என்ற பதத்திற்கு உரியவரா என்று நம்மால் உறுதியாக ஏதும் சொல்ல முடியாது. அது வரலாற்றின் எல்லை. ஆனால் சிவதாசி என்ற வார்த்தை மரபு வழியாக உருவாகி வந்துள்ளதென்றால் அதன் ஊற்று எங்கேயோ இருந்தாக வேண்டும். அப்படித்தான் நான் கங்கம்மா தேவின் பூர்வீக நிலத்தில் அத்து அலைந்த சிவதாசியான அக்கா என்ற அக்கமகாதேவியை கண்டடைந்தேன்.
அக்கமகாதேவி தமிழின் பக்தி மரபில் வந்த காரைக்கால் அம்மையாருக்கு நெருக்கமானவர். 12-ஆம் நூற்றாண்டில் இன்றைய கர்ணாடக மாநிலத்தின் சிவமொக்காவுக்கு அருகே பிறந்தார். இளம் வயதிலேயே தன்னை சிவ பக்தையாக உணர்ந்த அக்கமகாதேவி திருமணத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அலைந்து பயணித்தார். ஆடைகள் இல்லாமல், தன்னுடைய நீண்ட கூந்தலாலேயே உடலை மறைத்தவாரு இவர் பயணித்ததாக அந்த காலகட்டத்து பாடல்கள் இவரை வர்ணிக்கின்றன. வீரைசைவ மரபைச் சேர்ந்த குருமார்களான அல்லம்மபிரபுவையும் பசவரையும் சந்தித்தார். இம்மூவரும் கன்னட மொழியில் ‘வசனம்‘ என்று சொல்லப்படும் ஒரு வடிவில் சிவனை அடைய வேண்டி தங்கள் பரிதவிப்பை பக்திக்கவிதைகளை எழுதினார்கள். அதில் அக்கமகாதேவியின் கவிதைகள் தனித்துவமானவை, புகழ்பெற்றவை. பாவியல்பு தன்மையும் தத்துவார்த்தத் தன்மையும் கொண்ட கவிதைகள் இவை. பித்து நிறைந்தவை.
சிவதாசியான அக்கமகாதேவியை அவருடைய வசனங்களின் ஆங்கில மொழியாக்கம் வழியாக நான் கண்டடைந்து இது தமிழில் வரவில்லையா என்று தேடிக்கொண்டிருந்த நாட்களில் தற்செயலாக ஒரு நாள் கவிஞர், மொழிபெயர்ப்பாளர் பெருந்தேவியிடம் பேச நேரிட்டது. அவர் அப்போது அக்காவின் வசனங்களை தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டிருப்பதாக சொன்னது எனக்கு தற்செயலென்று இப்போது தோன்றவில்லை.
அக்கமகாதேவியின் வசனங்களை பெருந்தேவி ‘மூச்சே நறுமணமானால்‘ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 2022 முற்பகுதியில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னால் தமிழில் இருவர் அக்காவை மொழியாக்கம் செய்திருப்பதாக தன் முன்னுரையில் கூறும் பெருந்தேவி, அவை பக்தி மனநிலையில் செய்யப்பட்ட மொழியாக்கங்கள் என்றும், தானோ கவிதையின் பக்கம் நின்று தன்னுடைய மொழியாக்கங்களை நிகழ்த்தியதாகவும் கூறுகிறார். ‘இறை என்பது மொழியானால் அது கவிதையாகவே இருக்கும் என்று நம்புபவள்‘ என்று தன்னை பற்றிக் கூறும் பெருந்தேவி, இந்த நூலில் நமக்கு வழங்குவது நவீனமான மொழியில், பாவியல்புடைய கவிதைகளை வாசிக்கும் பரவசம்.
‘மூச்சே நறுமணமானால்‘ முதன்மையாக ஒரு கவிதை நூல். தமிழ் பக்தி கவிதைகளையும், அதற்கு முன்னால் வந்த சங்கக் கவிதைகளையும் நினைவு படுத்தும் வகையில் இருப்பவை அக்காவின் வசனங்கள். அந்த மரபின் தொடர்ச்சி துலங்கும் வகையில் அதே சமயம் கவிதையின் சுவை குன்றாமல் அக்காவின் வசனங்களை கவனத்துடனும் மொழிபிரக்ஞையுடனும் மொழியாக்கம் செய்திருக்கிறார் பெருந்தேவி.
மின்னல் மின்னுகையில்
அடங்குகின்றன என் பசியும் தாகமும்
முகில் கிழிந்து பொழிகையில்
நீராடுகிறேன் தீர்த்தத்தில்
மலை என் மீது விழுந்தால்
மலரென்கிறேன் அதை
சென்னமல்லிகார்ச்சுனனே
என் தலை வெட்டுப்பட்டு விழுந்தால்
என் உயிர் உனக்கு அர்ப்பணம்
இந்தக்கவிதையில் மின்னல், மழை, இடி என்று உயிர்ப்புடன் வரும் சித்திரங்கள் ஒரு சங்ககால பாடலின் இயற்கை வர்ணனையாகவும், யோக–பக்தி மரபில் சூட்சமமான ஓர் அனுபவத்தை உணர்த்தும் வரிகளாகவும், ஒரு பெண்ணின் தாபத்தைச் சொல்லும் காதல் கவிதையாகவும் ஒரே சமயம் த்வனிக்கின்றன.
வெவ்வேறு உணர்வு நிலைகளும் கூறு முறைகளும் கொண்ட கவிதைகள் இந்நூலில் இடம்பெருகின்றன. சில வரிகள் சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு கூர்மையானவை. அவள் வழிபடும் ஶ்ரீசைலத்தில் கோயில் கொண்ட சிவனான சென்னமல்லிகார்ஜுனனை இப்படி கடிந்துகொள்கிறாள்:
சந்தை மத்தியில் வீடு கட்டி
கூச்சலுக்கு நாணுகிராய் எப்படி?
கேள் சென்னமல்லிகார்ச்சுனனே
உலகில் பிறந்த பின் புகழ இகழப்பட்டால்
கோபப்படாமல் சமாதானியாக இருக்க வேண்டும்.
சில வரிகள் நவீனக்கவிதை வரிகளைப்போல் ஒலிக்கின்றன.
உன்னை அறியும் நரகமே மோட்சம்
உன்னை அறியாத மோட்சமே நரகம்
மூச்சே நறுமணமானால் யாருக்கு பூ வேண்டும்?
மேலும் சில வரிகளின் துணிவு எந்த நவீனக் கவிதையிலும் இதுவரை நான் காணதவை:
நல்ல பெண்ணாகக் குளிப்பாட்டுவேன்
சாந்தத்தோடு பூசிப்பேன்
ஒத்திசைவோடு உன்னில் கலப்பேன்
சென்னமல்லிகார்ச்சுனனே
உன்னை விட்டகலாமல்
வழிபடச் சாத்தியமானது எனக்கு.
அக்கமகாதேவியின் இந்தக் கவிதைகளை பெருந்தேவி மொழியாக்கம் செய்த விதம் சுவாரஸ்யமானது. நாராயண குரு மரபைச் சேர்ந்த வினைய சைதன்யா என்ற குரு அக்கமகாதேவியை கன்னட மூலத்திலிருந்து மலையாளத்துக்கும் ஆங்கிலத்துக்கும் மொழியாக்கம் செய்தவர். வினைய சைதன்யாவின் ஆங்கில மொழியாக்கம் மிகச்சிறப்பானது. ஒரு நீண்ட முன்னுரையில் வினையா தான் சென்னமல்லிகார்ச்சுனன் என்ற பெயரை ஆங்கிலத்தில் Chennamallikarjuna, jasmine-tender என்று மொழியாக்கம் செய்ததன் பின்னணியை விவரித்திருப்பார். மல்லிகையின் மென்மையும் அர்ஜுணனின் திண்மையும் ஒருங்கே அந்தப்பெயரில் ஒலிக்க வேண்டும் என்று வினையா கருதுகிறார். வினையாவின் ஆங்கில மொழியாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே பெருந்தேவி தமிழில் இக்கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் தமிழில் மல்லிகையும் அர்ஜுணனும் நேரையாகவே பொருள் கொள்கிறது என்றும், சென்ன என்ற பிரியமான விளி தமிழில் ‘சன்ன‘மாக ஒலிக்கிறதென்றும் பெருந்தேவி கூறுகிறார். ஆகவே அக்காவின் மொழியிலேயே ‘சென்னமல்லிகார்ச்சுனன்’ என்று அவள் நாதனை தமிழுக்குக் கொண்டு வருகிறார். ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டாலும், வினைய சைதன்யாவின் உதவி கொண்டு வசனங்களை கன்னட மூலத்தில் வாசிக்கக் கேட்டு, அவற்றின் ஒலி அடிப்படையில் தமிழாக்கம் செய்திருப்பதாக கூறுகிறார்.
இந்த அரிய கவிதைத் தொகுப்பு தமிழுக்கு முக்கியமான வரவு. ஆனால் முற்றிலும் நவீன வரவல்ல. தமிழும் கன்னடமும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும் அதன் மொழிப்பண்பாட்டிலும் கலாச்சார உணர்விலும் எத்தனை அணுக்கமானவை என்று இக்கவிதைகள் மீண்டும் மீண்டும் பறைசாற்றுகின்றன. அலையும் சிவதாசிகளுக்கு நிலமில்லை, மொழியுமில்லை.
January 20, 2023
கி.ரா.முழுமை,கதிர், விஷ்ணுபுரம்
சென்னை புத்தகக் கண்காட்சி விஷ்ணுபுரம் அரங்குக்கு அகரம் கதிர் வந்திருந்தார். முதலில் அடையாளம் தெரியவில்லை. அவர் என்னை மெல்ல அணைத்துக்கொண்டு “கதிர்” என்றபோதுதான் புரிந்தது. என்னைப்போலவே அவருக்கும் வயதாகிவிட்டது. நான் 1997ல் விஷ்ணுபுரம் நாவலின் முதற்பதிப்பை அவர் தன் அகரம் பதிப்பகம் வழியாக வெளியிட்ட அந்த நாட்களில் இருந்த அந்த முகத்தை நினைவில் வைத்திருந்தேன். அவரை அதன்பின்பு அவ்வப்போது சந்தித்திருந்தாலும் அண்மையில் நீண்ட இடைவெளி உருவாகிவிட்டது.
கதிருக்கு விஷ்ணுபுரம் நாவலின் வெள்ளிவிழா பதிப்பை அளித்தேன். முறையாக விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தால் அவருக்குத்தான் முதல் பிரதி அளிக்கப்பட்டிருக்கவேண்டும். கதிர் அன்று அந்நாவலை துணிந்து வெளியிட்டார். அன்று ஓர் இளம் எழுத்தாளனின் 800 பக்க நாவல் வெளிவருவது அரிதினும் அரிது. 150 பிரதிகள் முன்விலையில் விற்றது ஒரு நம்பிக்கையை அளித்தது. பொள்ளாச்சி நா. மகாலிங்கம், எம்.கோபாலகிருஷ்ணன், ஞானி ஆகியோர் முன்விலைத்திட்டத்திற்கு உதவினர்.
விஷ்ணுபுரம் முதற்பதிப்பு 1997 டிசம்பர் (அகரம் வெளியீடு)முதல் பதிப்பில் விஷ்ணுபுரம் நாவலில் 100 பக்கங்கள் குறைக்கப்பட்டன. காரணம் அதிலுள்ள தத்துவப்பகுதிகள் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் அற்றவை, ஆகவே நாவல் வாசிக்கப்படாதோ என்னும் சந்தேகம் எனக்கிருந்தது. அடுத்த பதிப்பில் அவை சேர்க்கப்பட்டன. இப்போது 25 ஆண்டு நிறைவு பதிப்பில் மேலும் சில மாற்றங்கள்.நான் புத்தகங்கள் வாசிப்பதில் சில இடர்பாடுகளை சந்திக்கிறேன். எழுத்துரு சிறிதாக இருந்தால் வாசிக்க முடிவதில்லை. அதைவிட, வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளி சிறிதாக இருந்தாலும் வாசிக்க சோர்வு வருகிறது. ஆகவே சர்வதேச அளவுகோல்களின்படி இந்த பதிப்பு அச்சிடப்பட்டுள்ளது. எனவே மேலும் சில பக்கங்கள் கூடி இப்போது ஏறத்தாள ஆயிரம் பக்க நூலாக உள்ளது.
விஷ்ணுபுரம் 2023 வெள்ளிவிழா பதிப்பு, விஷ்ணுபுரம் பதிப்பகம்கதிர் இந்த ஆண்டு மிக மிக முக்கியமான ஒரு பதிப்பு முயற்சியை நிகழ்த்தியிருக்கிறார். கி.ராஜநாராயணனின் எல்லா படைப்புகளையும்ன் 9 நூல்களால் ஆன சீரான தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார். அதற்கான முன்விலைத்திட்ட அறிவிப்பு இந்த தளத்தில் முன்னரே வெளியாகியது. அழகான கெட்டி அட்டை செம்பதிப்பு ஒரே அழகிய பெட்டியில் என் வீடு தேடி வந்தது. (கி.ரா.படைப்புகள் 9 தொகுதிகள்)
கி.ரா இருந்தபோது திட்டமிடப்பட்டது இது. அவர் அதை பார்க்க இல்லாமலாகிவிட்டது. கி.ராவுக்கு ஞானபீடம் பெறுவதற்கான சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு முதல்தேவை என்பது இதைப்போன்ற செம்பதிப்புகள். கூடுதலாக பல்கலைக் கழகக் கருத்தரங்குகள், ஆய்வடங்கல்கள்தேவையாகும். ஆங்கிலத்தில் கட்டுரைகள் வெளிவரவேண்டும். கி.ராவுக்கு அந்த முயற்சிகளில் தமிழகத்தில் இருந்து அனேகமாக எந்த உதவியும் கிடைக்காமலாகிவிட்டது. தமிழுக்கு ஒரு ஞானபீடம் இல்லாமலாகிவிட்டது
இந்த அரசு கி.ராவுக்கு அரசுமரியாதையுடன் அடக்கம் நிகழ ஆணையிட்டது. இப்போது புத்தகக் கண்காட்சி மேடையும் கி.ரா. பெயரில்தான். பாராட்டத்தக்க முன்னெடுப்பு இது.
கி.ரா. மீது பெரும் பிரியம் கொண்டவர் கதிர். கி.ரா கதிரின் தந்தை அன்னம் மீராவுடன் அணுக்கமாக இருந்தார். தந்தை மைந்தன் உறவு போன்ற ஒரு தொடர்பு அது. நைனா என்றுதான் மீரா கி.ராவை குறிப்பிடுவார். கி.ராவின் எல்லா இலக்கிய அடையாளமும் மீரா உருவாக்கியது. மீரா முன்னெடுப்பில் நிகழ்ந்த கி.ரா 60 விழாவும் அதையொட்டி வெளியிடப்பட்ட ராஜநாராயணீயம் என்னும் நூலும்தான் கி.ராவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவை.
கதிர் தன் பாட்டனுக்கு எடுத்திருக்கும் அற்புதமான நினைவகம் இந்த தொகுதி. இத்தகைய தொகுதியின் முதற்பயன் இது ஒருவகை ஆய்வடங்கல் என்பதே. கி.ராவின் பரிணாமத்தை புரிந்துகொள்ள இது உதவியானது. அனைத்து ஆய்வுகளுக்கும் மூலப்பொருளாக அமைவது. தனிவாசகர்கள் இதை குறைவாகவே வாங்குவார்கள். தேர்ந்த வாசகர்களின் நூலகத்திற்கு உரியது. ஆனால் எல்லா நல்ல நூலகத்திலும் இருந்தாகவேண்டிய நூல்வரிசை. நூலகங்கள் மற்றும் கல்விநிறுவனங்களுக்கு நிதிக்கொடை அளிக்க விரும்புபவர்கள் இந்த தொகுதிகளை வாங்கிக் கொடுக்கலாம்
கா.பெருமாள்
கா.பெருமாள் மலேசியாவில் நாமக்கல்லில் பிறந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். சுபாஷ்சந்திரபோஸின் ராணுவத்தில் பணியாற்றினார்.மலேசியாவின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். சிங்கப்பூரில் குடியேறி சிங்கப்பூரின் முதன்மை இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தார். சிங்கப்பூரின் நாட்டாரியல் மரபுகளைப் பேணுவதிலும் ஈடுபட்டார்.
கா. பெருமாள்
கா. பெருமாள் – தமிழ் விக்கி
கோவை அ.முத்துலிங்கம் விருது விழா- கடிதம்
அன்புள்ள ஜெ வணக்கம்…
அறத்தின் கதை
அறம் வரிசை கதைகள் வெளியான நாட்கள் தொட்டே வாசிப்பவர்களிடம் பெருஞ்சலனத்தை அகத்தூண்டலை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
பெருஞ்செல்வந்தர்களை கலைத்துறையினரை விஞ்ஞான துறையினரை அறிவுத் துறையினரை மிக சாதாரண எளிய மனிதர்களை கள செயல்பாட்டாளர்களை சூழலியலாளர்களை என சமூகத்தின் பல்வேறு தரப்பினரை அடுக்குகளை ஊடுருவி தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருப்பது அறத்தின் வாசகர் பரப்பு.
ஒரு நவீன இலக்கிய நூலுக்கு இத்தனை இலவச பிரதிகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட பெருமை நிச்சயம் வேறு எந்த நூலுக்கும் இருக்காது.உச்சகட்டமாக பாடநூலிலேயே இடம்பெற்றது.இங்கே தமிழகத்தில் மட்டுமல்ல கேரளத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அறம் வரிசை கதைகள் பல லட்சம் பிரதிகள் இலவசமாக கேரளம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது விற்பனையிலும் பல லட்சம் விற்று சாதனை படைத்துள்ளது.
மிகச் சாதாரண டீக்கடைக்காரர் ஒருவர் நடத்தும் இலக்கியக் கூட்டத்தில் உங்களுடன் கேரளாவிற்கு கலந்து கொள்ள சென்றிருந்தோம். டீக்கடை வாயிலிலேயே நடந்தது. நல்ல கூட்டம் வந்திருந்தது மட்டுமல்ல வந்திருந்தவர்களும் நூறு சிம்மாசனங்கள் கதையை குறித்து பெரும் உணர்வெழுச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது நான் இயற்கை அங்காடிகள் நடத்திக் கொண்டிருந்தேன் யானை டாக்டர் கதையை ஜெராக்ஸ் எடுத்து கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளருக்கும் வழங்கி இருக்கிறேன்.
50 செட் 100 செட் என அடிக்கடி ஜெராக்ஸ் எடுப்பதால் ஜெராக்ஸ் கடைக்காரர் ஆர்வமாகி அவரும் கதையைப் படித்தார். முதல் சில முறைக்கு பின் எடுத்த அத்தனை ஜெராக்ஸ்களுக்கும் அடக்க விலை மட்டுமே பெற்றுக் கொண்டார். பின்னாட்களில் அவர் சுற்றுச்சூழல் சார்ந்து செயல்படவும் செய்தார் அதற்கு இந்த கதை உந்துதலாக இருந்தது.
நூறு நாற்காலிகள் படித்துவிட்டு என் தந்தை இரவுகளில் அலறினார்.அறம் நூல் வெளியான பின்பு என் பரிசுகளில் முதலிடம் அறத்திற்குத்தான். கணக்கற்ற நண்பர்களை அறம் பரிசளித்தபின் நெருக்கமானவர்களாகியிருக்கிறார்கள். அறம் பரிசளித்து அதற்கு எதிர்வினையாக மிக அரிய பரிசுகளை பெற்றிருக்கிறேன்.
காதலை வெளிப்படுத்தி திருமணத்தை உறுதி செய்வதற்கு முன் பாவனிக்கு நான் அனுப்பிய பல்வேறு பரிசுகளில் அவர் மிகவும் மகிழ்ந்தது யானை டாக்டர் கதைக்குத்தான். பலரையும் போல மனைவிக்கும் தமிழ் தீவிர இலக்கியம் அறம் வரிசை கதைகளை வாசிப்பதில் இருந்து தான் துவங்கியது.
டாக்டர் கே சாமர்வேல் கேரிடேவிஸ் என மறைந்து போன எத்தனை மகத்தான ஆளுமைகள் எழுந்து வருவதற்கு இக்கதைகள் காரணமாய் அமைந்தன என்பதை எண்ணி வியக்கிறேன்.தென்னிந்திய மொழிகளில் பெற்ற அதே வரவேற்பினை தீவிர அகத்தூண்டலை மற்ற இந்திய மொழி பேசுவர்களுக்கும் உலகெங்கும் வாழும் பல்வேறு நாட்டினருக்கும் stories of the true ஆங்கில மொழிபெயர்ப்பின் வழி ஏற்படுகிறது என்பதுதான் அறம் வரிசை கதைகளின் பிரபஞ்சமளாவிய தண்மையை மகா தர்மத்தை தொட்டமைக்கான சான்று.
மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் மிகச் சிறந்த இலக்கியங்களை படைத்த அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் இக்கதைகளில் இருந்து தான் பெற்றதை சொல்லி விடவே முடியாது என்று பெரும் உணர்வெழுச்சியோடு தழுதழுக்க உங்களிடம் நன்றி தெரிவித்தார்.
இன்றைய விழா மேடையிலேயே எழுத்தாளர் களச்செயல்பாட்டாளர் பதிப்பாளர் கீதா ராமசாமி அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் வாசித்ததிலேயே மிகச் சிறந்த நூல் ஸ்டோரிஸ் ஆஃப் த ட்ரூ தான் என்றார். எதேச்சையாக வாசிக்க கிடைத்து ஒவ்வொரு கதையையும் வாசித்து கடக்க குறைந்தது இரண்டு நாட்கள் ஆனது என்றார்.தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் உலகளாவிய பெரும் விருதுகள் எல்லாம் அறம் தொகுப்பிற்கு உறுதியாக கிடைக்கும் அதற்கு முன்னதாகவே வாழ்த்து கூறுகிறேன் என்றார்.
இத்தனைக்கும் முக்கிய காரணமாய் அமைந்த மிகுந்த அர்ப்பணிப்புடன் அறம் கதைகளை மொழிபெயர்த்த பிரியம்வதா அவர்கள் அ முத்துலிங்கம் அவர்களின் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகளை உயரங்களை தொடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
விழாவினை மிகச் சிறப்பாக ஒருங்கினைத்த விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களுக்கும் மருத்துவர் சசித்ரா தாமோதரன் அவர்களுக்கும் நன்றிகள்.
அறம் கதைகளுக்குப் பிறகு விஷ்ணுபுரம் விருது விழாவினை நெறிப்படுத்தி விரிவாக்கி முன்னுதாரண இலக்கிய விழாவாக மாற்றியிருக்கிறீர்கள். அதற்குப் பின் மாகாவியமான வென்முரசினை நிறைவு செய்திருக்கிறீர்கள்.பெருவெற்றி அடைந்த தமிழ் சினிமாக்களில் பங்களித்திருக்கிறீர்கள்.உலகமே முடங்கி கிடந்த கொரோனா காலத்தில் மகத்தான நாவல்களையும் நூறுக்கும் மேலே அழகிய சிறுகதைகளை படைத்திருக்கிறீர்கள்.தமிழ் விக்கி மற்றும் தத்துவ வகுப்புகள் தொடங்கி அதிலும் பெரு வெற்றி.
இன்றைய விழாவில் நான்காம் ஐந்தாம் வரிசையில் இந்த நிகழ்விற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஒரு ஓரமாக இவற்றில் இருந்து எல்லாம் விடுபட்டு வேறு ஒரு உலகத்தில் அமர்ந்திருத்தத்தையும் கண்டேன்.
எந்தக் குறிப்பையும் பார்க்காமல் இணையத்தில் எதையும் தேடாமல் விழா முடிந்து உங்களை அறையில் விட்டு விட்டு வீடு வந்தவுடன் இதை எழுதி அனுப்புகிறேன்.நான் அதிக முறை வாங்கிய நண்பர்களித்த புத்தகங்கள் சில உண்டு ரமண மகரிஷியின் நான் யார் அருள் தந்தை அவர்களின் உடற்பயிற்சி விளக்கம் பகவத் ஐயாவின் ஞான விடுதலை இந்த வரிசையில் அறம் தொகுப்பே முதலிடம் பெறுகிறது.
இன்றும் வாங்கி உங்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டேன் முதல் முறை உங்களை சந்தித்து முதல் முறை கையெழுத்து வாங்கிய அதே மகிழ்ச்சியுடன்.அறம் மலர்ந்த நாட்களின் அதே நெகிழ்ச்சி என்னுள் இன்றிரவு நிச்சயம் உறங்க முடியாது….
மு.கதிர் முருகன்
கோவை
மொழியாக்க நூல்கள்
அன்புள்ள அய்யா,
மிக அருமையான பட்டியல். குறிப்பாக சரத் சந்திர சட்டர்ஜி எழுதிய நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள் விபரம்.நானும், என் தாயாரும் சரத் சந்திர சட்டர்ஜி எழுத்துக்களின் ஆத்மார்த்த வாசகர்கள்.” அமுல்யன் ” என்ற அவருடைய குறு நாவல் நாங்கள் இருவரும் மீண்டும் மீண்டும் அனுபவித்து படித்து மகிழ்கின்ற பொக்கிஷம்.
குழந்தை தன் சித்தியை அம்மா என்றும்,தன் சித்தப்பாவை சித்தப்பா என்றே அழைப்பதும்,தன் சொந்த தாயை அக்கா என்றும்,தான் தகப்பனை அப்பா என்றே அழைப்பதும்,நம் மரபின் உன்னத காட்சிப் படுத்தல்.எளிய சிறிய குடும்பக் கதைதான்.ஏழை பெரிய மருமகள்,வசதியான , குழந்தை பேறு அற்ற, மூத்தவள் குழந்தையை ,மிக ஆசை ஆசையாக வளர்க்கும்சின்ன மருமகள் என்று சாதாரண மக்களின் கதைதான்.ஆனால்மிக நேர்த்தியான சொல் ஓவியம்.இந்த நூலை படித்த பின்தான் ஏன் சரத் சந்திர சட்டர்ஜி, மறைந்து 85 ஆண்டுகள் சென்ற பின்னும், இன்றும் கொண்டாடப் படுகின்ற அதிசயம் புரிகின்றது.
நான் 1970 – 80 காலத்தில்,திருச்செங்கோடு அரசாங்க நூலகத்தில் படித்த ஒரு அருமையான நூல் நினைவுக்கு வந்தது. சரத் சந்திர சட்டர்ஜி எழுதிய ” பதேர் தாபி ” நமது இந்திய சுதந்திரப் போராளிகள் சிலர் பர்மாவில் வாழ்ந்த கதைப் பின்னணி.தமிழ் மொழி பெயர்ப்பு செய்தவர்அ. கி. ஜெயராமன் என்று நினைவு.தமிழ் புத்தகத்தின் பெயர் ” வழி வேண்டுவோர் அல்லது பாரதி “இந்த புத்தகம் எங்காவது கிடைத்தால், மொழி பெயர்ப்பு என்பது ஒரு அற்புதமான கலை என்பது மக்களுக்கு புரியும்.கடந்த 30 ஆண்டுகளாக இந்த புத்தகத்தை தேடி வருகிறேன்.கிடைக்கவில்லை.அல்லையன்ஸ் பதிப்பகத்துக்கு அவசியம் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை வைத்துள்ளேன்.இன்னும் காரியம் சித்தியாகவில்லை.அதற்கான முகூர்த்தம் வர வேண்டும் அல்லவா !
அன்புடன்.
இரா சி தனசேகர்.
அன்புள்ள தனசேகர்
நாம் நூல்களை கேட்டுக்கொண்டே இருந்தால் அவை எப்படியும் அச்சில் வெளிவந்துவிடுமென நினைக்கிறேன்.
இப்போது சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள பல நூல்கள் தாங்கமுடியாத அச்சுப்பிழைகளுடன் உள்ளன (உதாரணமாக ஆரோக்கிய நிகேதனம்) மெய்ப்பு பார்க்கப்படவே இல்லை, அதற்கு நிதியளித்து நியமிக்கப்பட்டவர் அப்படியே திருப்பிக்கொடுத்து காசை எடுத்துக்கொண்டுவிட்டிருக்கிறார்.
சாகித்ய அக்காதமி வெளியீடுகளில் தீஸ்தா நதிக்கரையில், துருவன் மகன் இரு நாவல்களையும் நல்ல இலக்கியவாசகர் வாங்கி படிக்கவேண்டும் என நினைக்கிறேன்
ஜெ
குமரியின் எழில்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலமா?
குமரித்துறைவி வாசித்துவிட்டு எழுதுகிறேன். இத்தனை ஆண்டுகளில் ஒரு நாவலும் என்னை இத்தனை தூரம் பாதித்ததில்லை. ஒரு பெரிய கனவுபோல் இருந்தது. எத்தனை நுட்பமான விவரணைகள். மொத்தமாகப் பார்த்தால் ஒரு வரலாற்று வர்ணனையும், விவரிப்புகளும்தான். செண்டிமென்ட் எதுமில்லை. டிராமாவே இல்லை. ஆனால் கண்கள் நனைந்துகொண்டே இருந்தன. விம்மலுடன் மட்டுமே படிக்க முடிந்தது. இத்தனை மகிழ்ச்சியும் நிறைவும் வாசிப்பிலே வந்ததே இல்லை. நிஜவாழ்க்கையில் இதேபோல ஒன்று அமையாது.
என்ன காரணம் என்று சிந்தனைசெய்தேன். நான் நாத்திகன். எந்த கோயிலுக்குள்ளும் போவதில்லை. ஆனால் இதெல்லாம் நம் மனசுக்குள் ஏதோ வடிவில் உள்ளது. இதையெல்லாம் நாம் எப்படியோ உணர்ந்துகொண்டிருக்கிறோம். கடவுள் அல்ல, கல்ச்சர்தான் இங்கே மனசை நிறையவைக்கிறது என நினைக்கிறேன்.
ஆ.முத்துக்குமாரசாமி
அன்புள்ள ஜெ
குமரித்துறைவி கதையை வாசித்தேன். ஒரு கல்யாணநிகழ்வில் ஒருவர் தந்தார். கொஞ்சநாள் என் கையிலேயே இருந்தது. என் அம்மாதான் வாசித்துவிட்டு அற்புதமாக இருக்கிறது என்று சொன்னார். அதன்பிறகுதான் நான் வாசித்தேன். கண்ணீருடன் வாசித்தேன். ஒரு மிகச்சிறந்த சினிமாவாக எடுக்கலாம். உலகம் முழுக்க இதுதான் எங்கள் பன்பாடு என்று கொண்டுபோகலாம்.
ஆர்.என்.சேகர்
January 19, 2023
இரா.முருகன் இணையச் சந்திப்பு
வணக்கம் ! க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் எழுத்தாளர் இரா. முருகன் அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். மூன்று விரல், ராமோஜியம் நாவல்கள் குறித்து நண்பர்களின் சிறிய உரைகளும், அதைத் தொடர்ந்து எழுத்தாளருடனான கேள்வி பதில் நேரமும் உண்டு. நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை முன்வைக்கலாம்.
க . நா . சு உரையாடல் அரங்கு
இரா . முருகன் – சந்திப்பு
சனிக்கிழமை, ஜனவரி 21, 2023, இந்தியா இரவு 8:30 மணி IST / அமெரிக்கா காலை 9:00 மணி CST
யூட்யூப் நேரலை : https://www.youtube.com/@vishnupuramusa
Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09
(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)
நிகழ்ச்சி நிரல் :
8:30 PM IST / 9:00 AM CST : வாழ்த்துப்பா
8:35 PM IST / 9:05 AM CST : அறிமுகம் / வரவேற்பு – ஜா. ராஜகோபாலன்
8:40 PM IST / 9:10 AM CST : ராமோஜியம் நாவலை முன்வைத்து – ஆர். காளிப்ரஸாத்
8:50 PM IST / 9:20 AM CST : மூன்று விரல் நாவலை முன்வைத்து – விஸ்வநாதன் மகாலிங்கம்
9:00 PM IST / 9:30 AM CST : கேள்வி பதில் நேரம்
10:00 PM IST / 10:30 AM CST : நன்றியுரை – பழனி ஜோதி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
தொடர்புக்கு vishnupuramusa@gmail.com
அ.முத்துலிங்கம், இசைக்கோவை
அ.முத்துலிங்கத்தின் 86 ஆவது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படும் இசைக்கோவை, கடவுள் தொடங்கிய இடம்.
பாடகர்கள்: ஶ்ரீனிவாஸ், விதுசாய்னி, சின்மயி சிவக்குமார்
இசை ராஜன் சோமசுந்தரம்
பாடல் சாம்ராஜ், ராஜன் சோமசுந்தரம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


