கி.ரா.முழுமை,கதிர், விஷ்ணுபுரம்

கி.ராஜநாராயணன், தமிழ் விக்கி

மீரா கவிஞர் தமிழ் விக்கி

சென்னை புத்தகக் கண்காட்சி விஷ்ணுபுரம் அரங்குக்கு அகரம் கதிர் வந்திருந்தார். முதலில் அடையாளம் தெரியவில்லை. அவர் என்னை மெல்ல அணைத்துக்கொண்டு “கதிர்” என்றபோதுதான் புரிந்தது. என்னைப்போலவே அவருக்கும் வயதாகிவிட்டது. நான் 1997ல் விஷ்ணுபுரம் நாவலின் முதற்பதிப்பை அவர் தன் அகரம் பதிப்பகம் வழியாக வெளியிட்ட அந்த நாட்களில் இருந்த அந்த முகத்தை நினைவில் வைத்திருந்தேன். அவரை அதன்பின்பு அவ்வப்போது சந்தித்திருந்தாலும் அண்மையில் நீண்ட இடைவெளி உருவாகிவிட்டது.

கதிருக்கு விஷ்ணுபுரம் நாவலின் வெள்ளிவிழா பதிப்பை அளித்தேன். முறையாக விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தால் அவருக்குத்தான் முதல் பிரதி அளிக்கப்பட்டிருக்கவேண்டும். கதிர் அன்று அந்நாவலை துணிந்து வெளியிட்டார். அன்று ஓர் இளம் எழுத்தாளனின் 800 பக்க நாவல் வெளிவருவது அரிதினும் அரிது. 150 பிரதிகள் முன்விலையில் விற்றது ஒரு நம்பிக்கையை அளித்தது. பொள்ளாச்சி நா. மகாலிங்கம், எம்.கோபாலகிருஷ்ணன், ஞானி ஆகியோர் முன்விலைத்திட்டத்திற்கு உதவினர்.

விஷ்ணுபுரம் முதற்பதிப்பு 1997 டிசம்பர் (அகரம் வெளியீடு)

முதல் பதிப்பில் விஷ்ணுபுரம் நாவலில் 100 பக்கங்கள் குறைக்கப்பட்டன. காரணம் அதிலுள்ள தத்துவப்பகுதிகள் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் அற்றவை, ஆகவே நாவல் வாசிக்கப்படாதோ என்னும் சந்தேகம் எனக்கிருந்தது. அடுத்த பதிப்பில் அவை சேர்க்கப்பட்டன. இப்போது 25 ஆண்டு நிறைவு பதிப்பில் மேலும் சில மாற்றங்கள்.நான் புத்தகங்கள் வாசிப்பதில் சில இடர்பாடுகளை சந்திக்கிறேன். எழுத்துரு சிறிதாக இருந்தால் வாசிக்க முடிவதில்லை. அதைவிட, வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளி சிறிதாக இருந்தாலும் வாசிக்க சோர்வு வருகிறது. ஆகவே சர்வதேச அளவுகோல்களின்படி இந்த பதிப்பு அச்சிடப்பட்டுள்ளது. எனவே மேலும் சில பக்கங்கள் கூடி இப்போது ஏறத்தாள ஆயிரம் பக்க நூலாக உள்ளது. 

விஷ்ணுபுரம் 2023 வெள்ளிவிழா பதிப்பு, விஷ்ணுபுரம் பதிப்பகம்

கதிர் இந்த ஆண்டு மிக மிக முக்கியமான ஒரு பதிப்பு முயற்சியை நிகழ்த்தியிருக்கிறார். கி.ராஜநாராயணனின் எல்லா படைப்புகளையும்ன் 9 நூல்களால் ஆன  சீரான தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார். அதற்கான முன்விலைத்திட்ட அறிவிப்பு இந்த தளத்தில் முன்னரே வெளியாகியது. அழகான கெட்டி அட்டை செம்பதிப்பு ஒரே அழகிய பெட்டியில் என் வீடு தேடி வந்தது. (கி.ரா.படைப்புகள் 9 தொகுதிகள்)

கி.ரா இருந்தபோது திட்டமிடப்பட்டது இது. அவர் அதை பார்க்க இல்லாமலாகிவிட்டது. கி.ராவுக்கு ஞானபீடம் பெறுவதற்கான சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு முதல்தேவை என்பது இதைப்போன்ற செம்பதிப்புகள். கூடுதலாக பல்கலைக் கழகக் கருத்தரங்குகள், ஆய்வடங்கல்கள்தேவையாகும். ஆங்கிலத்தில் கட்டுரைகள் வெளிவரவேண்டும். கி.ராவுக்கு அந்த முயற்சிகளில் தமிழகத்தில் இருந்து அனேகமாக எந்த உதவியும் கிடைக்காமலாகிவிட்டது. தமிழுக்கு ஒரு ஞானபீடம் இல்லாமலாகிவிட்டது

இந்த அரசு கி.ராவுக்கு அரசுமரியாதையுடன் அடக்கம் நிகழ ஆணையிட்டது. இப்போது புத்தகக் கண்காட்சி மேடையும் கி.ரா. பெயரில்தான். பாராட்டத்தக்க முன்னெடுப்பு இது.  

கி.ரா. மீது பெரும் பிரியம் கொண்டவர் கதிர். கி.ரா கதிரின் தந்தை அன்னம் மீராவுடன் அணுக்கமாக இருந்தார். தந்தை மைந்தன் உறவு போன்ற ஒரு தொடர்பு அது. நைனா என்றுதான் மீரா கி.ராவை குறிப்பிடுவார். கி.ராவின் எல்லா இலக்கிய அடையாளமும் மீரா உருவாக்கியது. மீரா முன்னெடுப்பில் நிகழ்ந்த கி.ரா 60 விழாவும் அதையொட்டி வெளியிடப்பட்ட ராஜநாராயணீயம் என்னும் நூலும்தான் கி.ராவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவை.

கதிர் தன் பாட்டனுக்கு எடுத்திருக்கும் அற்புதமான நினைவகம் இந்த தொகுதி. இத்தகைய தொகுதியின் முதற்பயன் இது ஒருவகை ஆய்வடங்கல் என்பதே. கி.ராவின் பரிணாமத்தை புரிந்துகொள்ள இது உதவியானது. அனைத்து ஆய்வுகளுக்கும் மூலப்பொருளாக அமைவது.  தனிவாசகர்கள் இதை குறைவாகவே வாங்குவார்கள். தேர்ந்த வாசகர்களின் நூலகத்திற்கு உரியது. ஆனால் எல்லா நல்ல நூலகத்திலும் இருந்தாகவேண்டிய நூல்வரிசை. நூலகங்கள் மற்றும் கல்விநிறுவனங்களுக்கு நிதிக்கொடை அளிக்க விரும்புபவர்கள் இந்த தொகுதிகளை வாங்கிக் கொடுக்கலாம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2023 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.