Jeyamohan's Blog, page 638
January 26, 2023
சமணர் கழுவேற்றம்
சமணர் கழுவேற்றம் என்பது தமிழகத்தில் ஒரு சரித்திர நிகழ்வு அல்ல, ஓர் அரசியல் உருவகம். மத அரசியலால் உருவாக்கப்பட்டு மதமறுப்பு அரசியலால் நிலைநாட்டப்பட்ட ஒன்று. எந்த ஆதாரமும் இல்லாமல் நீடிக்கும் சில அரசியல் -வரலாற்று கருத்துக்கள் உண்டு. அதிலொன்று
சமணர் கழுவேற்றம்
சமணர் கழுவேற்றம் – தமிழ் விக்கி
வ.த.சுப்ரமணிய பிள்ளை, திருப்புகழ் – கடிதம்
அன்புள்ள ஜெ
நான் சைவனாக இருந்தாலும்கூட அறிஞர் வ.த.சுப்ரமணிய பிள்ளை பற்றியும் அவர் மகன் செங்கல்வராய பிள்ளை பற்றியும் தமிழ் விக்கி வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். அதுவும் ஒருவர் எனக்கு லிங்க் அனுப்பித்தான் உள்ளே போனேன். அற்புதமான செய்திகள். திருப்புகழுக்காகவே வாழ்ந்த குடும்பம். திருப்புகழ் உள்ளவரை புகழ்நிலைக்கும் பரம்பரை அது.
தமிழ் விக்கியில் உள்ள செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன. அதைவிட ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருக்கமுடியும் என்ற விஷயம் அற்புதமான நூலைப்படித்த அனுபவத்தை அளிக்கிறது. சைவ அறிஞர்களின் பெரிய வரிசை ஒன்றே உள்ளே உள்ளது. பெரும்பணி.
இப்படி வாசிப்பவற்றை அன்பர்கள் உடனடியாக வாட்ஸ்அப் மெயிலில் பரப்பவேண்டும். அப்போதுதான் ஏராளமானவர்கள் படிப்பார்கள். செய்திகள் போய்ச்சேரும்.
ஜி.எஸ்.முருகையா
*
அன்புள்ள ஜெ,
தமிழ் விக்கியில் வீரசைவ மடங்கள், திருக்கைலாய பரம்பரை, சைவ அறிஞர்கள் ஆகிய செய்திகள் மிக விரிவாக உள்ளன. அவை பதிவேறிக்கொண்டே இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய தொகுப்பாக இருக்கும் என நினைக்கிறேன். மிகப்பெரிய பணி. சைவப்பெரும்பணி. என் வாழ்த்துக்கள்.
ஸ்ரீதர்
கோவை சொல்முகம் கூடுகை 24
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 24வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின் எட்டாவது படைப்பான “காண்டீபம்” நாவலின் முதல் இரண்டு பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
1. கனவுத்திரை
2. அலையுலகு
இரண்டாவது அமர்வில், ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி அவர்களின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ – 1 (புத்தகம் 6 வரை உள்ள பாகங்கள்) நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 29-01-23, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map :
https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு : பூபதி துரைசாமி – 98652 57233 நரேன் – 73390 55954
போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?-கருணாகரன்
இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா?
போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன? – கருணாகரன்
மைத்ரி,அஜிதன் – கடிதம்
பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்
மைத்ரி நாவல் விற்றுத்தீர்ந்துவிட்டது என்று காலி ரேக்கை செந்தில்குமார் சுட்டிக்காட்டிய காணொளி மகிழ்ச்சி அளித்தது. அவ்வாறு உடனடியாக விற்றுத்தீரும் படைப்பு கிடையாது. அது ஒரு காதல்கதையாக தொடங்குகிறது. ஆனால் ஒரு அத்தியாயம் கடந்ததுமே அதன் பேசுபொருள் காதல் அல்ல என்று தெரிந்துவிடுகிறது. அந்தப்பெண் ஒரு காதலி கிடையாது. அவள்மேல் கதைநாயகனுக்கு மோஹமோ அல்லது பெரிய காமமோ வருவதில்லை. அவள் அந்த மலையில் பூத்த ஒரு பூ போலத்தான். அந்த மலைக்குள் அதன் ஆழத்துக்குள் அவள் அவனை அழைத்துச் செல்கிறாள். அந்தப் பயணம்தான் அந்த நாவல்.
அந்தப்பயணம் நுணுக்கமான செய்திகளால் ஆனது. ஆனால் அது ஒரு டிராவலாக் கிடையாது. அப்படி தோன்றும். ஆனால் ஓர் அத்தியாயம் கடந்ததுமே அது ஒரு அகப்பயணம் என்றும் ஆன்மிகப்பயணம் என்றும் தெரிந்துவிடும். அதன்பின் இரண்டு மெட்டஃபர்களின் உறவாகவே அந்தக் கதை நமக்கு தோன்றுகிறது. அந்த மெட்டஃரபர்கள் இணைந்து ஒரு விஷன் உருவாகிறது. அந்த நாவலை சோஷியாலஜி பார்வையிலோ அல்லது அரசியல் பார்வையிலோ படிக்க முடியாது. ஒரு காதல்கதையாகவோ அல்லது வழக்கமான வாசிப்பிலோ அதை வாசிப்பவர்களுக்கு அது பிடிகிடைக்காது. அதற்கு இவ்வளவு வாசகர்கள் வந்திருப்பது ஆச்சர்யமே.
அஜிதன் ஒரு இண்டர்வியூவில் சொல்வதுபோல அவருடைய பிரச்னை என்பது அவர் உங்கள் மகன் என்பதே. வாழ்த்துக்களும் உண்டு வசைகளும் உண்டு. உதாரணமாக, அவருக்கு ஒரு விருது கொடுக்க முடியாது. அது நீங்கள் சொல்லி கொடுக்கப்பட்டது என நினைப்பார்கள் என்று அமைப்பாளர்கள் தயங்குவார்கள். பல நூல்களைப்பற்றி எழுதப்பட்ட எந்த பத்ரிகைக் குறிப்புகளிலும் மைத்ரி பற்றி ஒன்றுமே கிடையாது. யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அந்த அமைதி அல்லது புறக்கணிப்பு இருக்கும். பொறாமைகளும் வசைகளும்கூட வரலாம். அதைக்கடந்தே எழுதவேண்டும்.
ஆனால் அஜிதன் மிகுந்த பாஸிட்டிவ் மனநிலையில் அதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார். எல்லாம் தெரிகிறது. ஆனால் நட்புணர்வுடன் சிரித்தபடி இருக்கிறார். அந்த மனநிலைக்குப் பின்னாலிருப்பது தன்னைப்பற்றிய நம்பிக்கை. வாழ்த்துக்கள்.
எம். ஶ்ரீதர் ராமானுஜம்
மைத்ரி நாவல் வாங்க மைத்ரி மின்னூல் வாங்கJanuary 25, 2023
நான்களின் நடுவே…
அன்புள்ள ஜெ
நான்கள் கட்டுரையை வாசித்தேன். (http://www.jeyamohan.in/11693#.WAoKTY996M8). உங்களருடைய மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறேன்.
பல அறிவு ஜீவிகளும் அவர்கள் நம்பும் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதற்காக அறத்தை பலி இடுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகளின் தோல்வியை உணர்ந்த பின்பும் அவற்றை பொது வெளியில் பாதுகாக்கின்றனர். ஒரு வகையில் சொல்லப்போனால் நம்பிக்கை இழந்த பிறகு தான் அக்கொள்கைகளை பற்றிய அவர்களது கூப்பாடு அதிகமாகிறது. புதிய படைப்பாளிகளுக்கும் இந்த சிக்கல் இருப்பதாக தோன்றுகிறது. நண்பர் ஒருவர் Gothic ரக புதினம் ஒன்றினை எழுதிக்கொண்டு இருந்தார். தப்பி தவறி அதனை குறித்து ஒரு இலக்கியவாதியிடம் கூறி விட்டார் .தொலைந்தது கதை. Gothic வடிவம் பழையது என்றும் அது அரசியல் சரிநிலைகள் அற்றது என்றும் கூறி மண்ணை அள்ளி போட்டு விட்டார்.
இது போலவே புதிதாக வந்திருக்கும் பெண் எழுத்தாளர்களின் நாவல்களும் பெண்ணிய நாவல்களாக மாற்றப்படுவதாக கேள்வி பட்டிருக்கிறேன். பல சிந்தனையாளர்களும் நாடகம் முடிந்த பிறகும் வேடத்தை கலைக்க முடியாத, சபிக்க பட்ட நடிகர்கள் தான் என்று தோன்றுகிறது. ஒரு வகையில் விக்ரமாதியன் கொடுத்து வைத்தவர். எந்த சபையிலும் எதனையும் பேசலாம். எவருக்கும் பயப்பட வேண்டாம். நம் சொற்களை திரித்து விடுவார்களோ, போராட்டம் வருமோ ,வழக்கு வருமோ என சிந்திக்க வேண்டாம். அவர் இந்த நிலையை எப்படி அடைந்தாரோ தெரியாது, ஆனால் அது தான் உண்மையான கருத்து சுதந்திரம் என தோன்றுகிறது.
வேறொரு விஷயமும் இருக்கிறது. பொதுவாக உங்கள் முன்னாள் வாசகர்களும், எதிர்ப்பாளர்களும் (அவர்கள் பெரும்பாலும் முன்னாள் வாசகர்கள் தானோ ?!!!) உங்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஜெயமோகன் அன்று அப்படி பேசினார் /எழுதினர்.இன்று அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பது தான் அது.(எனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்லை. எனக்கு ஏற்புடையதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வேன்!!!). இந்த குற்றச்சாட்டிற்கும் இந்த கட்டுரை பதிலளிப்பதாக எண்ணுகிறேன்
நன்றி
அனீஷ் க்ருஷ்ணந்
அன்புள்ள அனீஷ் கிருஷ்ணன்,
எழுத்தாளன் சீராக வெளிப்படவேண்டுமென்பதில்லை. நுணுக்கமாகப் பார்த்தால் அவனுக்கும் அவன் புனைவுக்கும் இடையே பெரிய முரண்பாடுகள் இருக்கும். அவை அவனுக்கும் அவன் இலட்சியங்களுக்கும் இடையேயான மோதலாக இருக்கக்கூடும். அவன் நம்பிக்கைகளுக்கும் அவனறிந்த யதார்த்ததிற்கும் இடையேயான வேறுபாடாக இருக்கக்கூடும். அந்த மோதலை தன்னுள் உணர்வதனால்தான் அவன் எழுதுகிறான். அதுவே அவன் கொந்தளிப்பும் தத்தளிப்பும்.
அவனுடைய படைப்புகளுக்கு இடையேகூட முரண்பாடுகள் இருக்கும். ஒரு படைப்புக்குள்ளேயே கூட முரண்பாடுகள் இருக்கும். அதையே பலகுரல்தன்மை என இலக்கியவிமர்சனத்தில் குறிப்பிடுகிறார்கள். பேரிலக்கியவாதிகளின் படைப்புகள் அனைத்துமே அப்படிப்பட்டவையே. தல்ஸ்தோய் காமத்தை ஒறுக்கிறாரா கொண்டாடுகிறாரா என்று மட்டும் பார்த்தால்போதும், இது புரியும்.
ஒருபோதும் நான் ஒன்றாக இருந்ததில்லை. நான் செய்ய நினைப்பதெல்லாம் புனைவுக்குள் புனைவொருமையைக் கொண்டுவருவது மட்டுமே. அதாவது வடிவரீதியாக மட்டும். அதற்குள் உள்ள பார்வையில் மாற்றமில்லா ஒருமையை நான் இலக்காக்குவதில்லை. அது ஒருவகை வாக்குமூலமாக, கட்டற்றதாக, இருந்தால்மட்டும் போதும் என்பதே என் எண்ணம்.
எழுத்தாளன் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் தத்துவஞானியும் அல்ல. ஆகவே அவன் ஒற்றைப்படையாக இருக்கவேண்டியதில்லை. அவனுடைய குழப்பங்களும் தடுமாற்றங்களும் நிலைமாற்றங்களும் அவன் எவற்றை பிரதிநிதித்துவம் செய்கிறானோ அவற்றுக்குரியவை. அவற்றை ஆராய புனைவில் உள்ள அந்த ‘விரிசல்களை’ ஆராயவேண்டும் என்பதுதான் நவீன இலக்கிய விமர்சனம் என்பது
என் எழுத்துக்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில்தான் உள்ளன. பெரும்பாலான கட்டுரைகளுக்குக் கீழே பழைய கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருக்கும் . அவற்றில் என் மாறுபாடும் வளர்ச்சியும் பதிவாகியிருக்கும். அவை பலசமயம் எனக்கே ஆச்சரியமானவைதான்.
நானறிந்த உண்மையை, என்னுள் எழும் உணர்வுகளை அவ்வப்போது அப்படியே தடையின்றி வெளிப்படுத்தவேண்டுமென்பதே என் இலக்கு. யோசித்துப் பேசக்கூடாதென்பதை ஒரு நெறியாகவே இதுவரை கொண்டிருக்கிறேன். உண்மையில் நான் எழுதவந்ததே அந்த கொள்கையை [சு.ராவுடன் முரண்பட்டு] அறிவித்தபடித்தான். இதுவரை வந்துவிட்டேன், இன்னும் கொஞ்சநாள்தானே?
இதுவரையில் என் மீது எழுந்துள்ள எல்லா விமர்சனங்களும் நான் முன்வைக்கும் தன்னிச்சையான எதிர்வினைகள் சார்ந்து எழுபவை மட்டுமே. அவையும் இயல்பென்றே கொள்கிறேன். எழுத்தாளனின் பணி எழுத்தினூடாக சமகாலச் சிந்தனையில் ஓர் அலையை உருவாக்குவதே. ஒரு rupture என்று அதைச் சொல்வேன். ஆனால் அது என்னை உடைத்துவிடலாகாதென்றும் எண்ணுகிறேன்.
முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அயோக்கியன் என்றெல்லாம் ஒருவனை வசைபாடும் மனநிலை எளிமையான கட்சியரசியலில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுவது. நாளுக்கொரு நிறம்மாறும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ளும் முறை அது. ஆனால் அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டவர்களுக்குக் கருத்துப்பரிணாமம் மோசடியாகத் தெரிவது ஆச்சரியமானது, ஆனால் அப்படித்தானே அது நிகழமுடியும்?
என் கருத்துக்களை நானே கூர்ந்து கவனித்துவருகிறேன். இக்கருத்துக்களை முன்வைத்து நான் அடைவதற்கொன்றுமில்லை. எனவே இவற்றில் சமரசங்களுக்கு இடமில்லை. அவை நானறிந்த வாழ்க்கைநோக்கை முன்வைப்பவை. என் ஆசிரிய மரபிலிருந்து கொண்டவை. அவற்றில் வளர்ச்சி இருக்கலாம், குழப்பங்களும் இருக்கலாம். திரிபு அல்லது பொய்மை இருக்காது. அவற்றிலிருப்பது நான் கொண்ட தரிசனமே.
*
அரசியல்சரிகளுக்கு ஆட்படும் எழுத்தாளர்கள், வெளியே இருந்து கொள்கைகளை கோட்பாடுகளை பெற்றுக்கொள்ளும் படைப்பாளிகள், படைப்பாளிகள் அல்ல. அவர்கள் என்றும் இருந்துகொண்டுதான் இருந்தார்கள். நல்ல எழுத்தாளன் தன் ஆழ்மனதுக்கு மட்டுமே தன்னை ஒப்படைத்துக்கொண்டவன்.
படைப்பில் படைப்புக்குள் இருப்பதை வாசிக்கத்தெரியாத வாசகர்கள்தான் பெரும்பான்மையினர். அவர்கள் அது என்ன ‘சொல்கிறது’ என்று மட்டுமே பார்க்கிறார்கள். அப்படிச் சொல்லப்படுவது தன் அரசியல், சாதி, மத நம்பிக்கைகளுக்கு உகந்ததா என்று அளவிட்டு நிலைபாடுகள் எடுக்கிறார்கள். இன்னொரு மாபெரும் பெரும்பான்மையினர் வாசிப்பதே இல்லை. அவர்களுக்கு எழுத்தாளனைப் பற்றிய பிம்பமே போதும், வெறுக்கவும், வசைபாடவும். உண்மையில் அது இலக்கியம் மீது, அறிவுச்செயல்பாடு மீது கொண்டுள்ள அச்சம்தான்.
படைப்பை வாழ்க்கையைக்கொண்டு வாசிப்பவர்களே அதன் நிகர்வாழ்க்கைச் சித்திரத்தில் இருந்து தனக்கான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்பவர்கள். அவர்களுக்காகவே புனைகதைகள் எழுதப்படுகின்றன. எழுத்தாளன் அவர்களை மட்டும் கருத்தில்கொண்டால்போதும் என்பதே என் எண்ணம். எப்போதுமே நான் கூறிவருவது அதையே, தவறு சரி நோக்கி எழுதவேண்டியதில்லை. ‘தோன்றியதை’ எழுதினால்போதும். அது ஒருபெரிய சிலுவைதான் , ஆனால் எழுத்தாளனின் பணி அதுவே.
*
வாசகர்கள் என வருபவர்கள் வெவ்வேறு வகையினர். அவர்கள் அவர்களுடைய சொந்தத் தேவைகள், எதிர்பார்ப்புகளுடன் , கேள்விகளுடன்தான் வருகிறார்கள். அவர்கள் வாசிக்கும் சிலவற்றிலிருந்து என்னைப்பற்றி, என் எழுத்தைப்பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதை நானும் பேணவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
வாசிப்பு என்பது வாசகனின் கூர்மையையும் தேவையையும் ஒட்டியே அமைகிறது. ஆகவே வாச்கன் என்னும் பொதுவான அடையாளம் என ஏதுமில்லை. அவரவருக்கு ஏற்றபடியே பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெற்றுக்கொண்டவை அவர்களையேதான் காட்டுகின்றன.
முன்பு நித்யானந்தா பற்றி நான் எதிர்மறையாக எழுதியபோது ஒரு கூட்டம் வாசகர்கள் புண்பட்டு பிரிந்துசென்றார்கள். அவர்களில் பலர் நாளொரு உபதேசமும், வசையும் அனுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை சிலநாட்களுக்கு முன் சந்தித்தேன். ‘எனக்கு நீங்க பெரிய ஏமாற்றமா ஆயிட்டீங்க” என்றார். ‘ நான் உங்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கலையே’ என்றேன். “எப்டி நீங்க நித்யானந்தா பத்தி எழுதலாம், எழுத நீங்க யார்?’” என்று கொதித்தார். “அதுக்கு முன்னாடி நீங்க பாராட்டின பல கருத்துக்களைச் சொன்ன அதே ஆள்தான்”
இதேபோல பெருமாள்முருகன் விவகாரத்தில் கவுண்டர்கள் கொஞ்சம்பேர் எதிரிகளானார்கள்.இவ்வாறு வரும் வாசகர்களின் குறுகிய வாசிப்புக்கு ஏற்ப நான் என்னை குறுக்கிக் கொள்ள முடியுமா என்ன? என் வழி சொல்லின் போக்கால் ஆனது. அதில் எவரும் உடன்வரவில்லை என்றாலும் எனக்கு ஒன்றுமில்லை. ஒரு வாசகரை, ஒரே ஒரு நண்பரைக்கூட நான் வேண்டுமென்றே தக்கவைக்க முயலமாட்டேன் என்பது நான் எழுதவந்தகாலம் முதல் கொண்டிருக்கும் கொள்கை. வாசகர்களுக்குத்தான் நான் முக்கியம், எனக்கு வாசகர்கள் முக்கியமே அல்ல. இன்று இருந்து நாளை மறையும் வாசகர்களுக்காக இலக்கியம் எழுதப்படுவதில்லை. என்றுமிருக்கும் ஒரு பெருக்கு அது.
இப்படி தங்கள் குறுகலால் ‘எதிரி’ ஆகிறவர்களுக்கு ஒரு சுயகசப்பு இருக்கிறது. நேற்று என்னை அவர்கள் பாராட்டியதும் ரசித்ததும் அவர்களுக்கு எரிச்சல் அளிக்கிறது. ஆகவே அந்தப்பழியையும் என்மேல் சுமத்துகிறார்கள். நான் அயோக்கியன் , முரண்படுகிறேன் என நிறுவப் பாடுபடுகிறார்கள். அவர்களே நம்பும் அளவுக்கு பேசிவிட்டால் நிறைவடைந்து அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார்கள். இது முப்பதாண்டுக்காலமாக , இரண்டு தலைமுறையாக, நடந்துவரும் தொடர்நிகழ்வு. என்னிடம் நிகழ்வதை உடன்வந்து தானும் அடைபவர்களே உண்மையில் வாசகர்கள் என நான் கொள்கிறேன்.
எனக்கு எதிரிகள் என்று தங்களைச் சிலர் உருவகித்துக்கொள்ளலாம். அது அவர்களுக்கு ஓர் அடையாளத்தை, அவர்களின் குரலுக்கு ஒரு முக்கியத்துவத்தை அளிக்கும், அவ்வளவுதான். புனைவெழுத்தாளனாகிய எனக்கு எதிரிகளாக இருக்கும் தகுதி கொண்ட எவரும் இன்றில்லை. உண்மையில் உள்ளூர இதை உணராத ‘எதிரி’களும் இல்லை. முப்பதாண்டுக்காலத்தில் இப்படி சுயமாக நியமித்துக்கொண்ட எந்த ‘எதிரி’யையும் ஒரு பொருட்டாக மதித்து ஒரு சொல்கூட நான் சொன்னதில்லை. இன்னும் ஒரு பத்தாண்டுக்காலம் அவ்வாறுதான். அதன்பின் என் எழுத்துமட்டும்தான் இங்கிருக்கும்
ஜெ
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Oct 31, 2016
குமாரதேவர்
குமாரதேவர் மைசூர் அரசகுடியைச் சேர்ந்தவர் , வீரசைவ மரபைச் சேர்ந்து துறவியாகி ஞானியாகி சமாதியானார். அவருடைய மடம் விருத்தாசலத்தில் உள்ளது. தமிழகத்தில் இருபெரும் சைவக் குருமரபுகள் ஒன்று திருக்கயிலாய பரம்பரை, இன்னொன்று வீரசைவம். வீரசைவ மரபின் முதன்மைக்குருக்களில் ஒருவர் குமாரதேவர்
குமாரதேவர்
குமாரதேவர் – தமிழ் விக்கி
குருகு புதிய இணையதளம்
குருகு இணையதளம்
வணக்கம் ஜெ.நண்பர்கள் தாமரைக்கண்ணன்களுடன் இணைந்து கலை வரலாறு தத்துவத்திற்கான ஒரு தளம் ஆரம்பிக்கலாம் என்று இரு மாதங்களாக பேசி வடிவமைத்து நாளை வெளியிடலாம் என்று நினைத்துள்ளோம். உங்களிடம் தனியாக இருக்கும் சமயம் அதற்கான அனுமதியும் ஆலோசனையும் கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்கான சமயம் அமையாமலே இருந்து வந்தது. நாங்களும் நம் வட்ட நண்பரகளிடம் ஆலோசனைகள் கேட்டு வடிவமைத்துள்ளோம்.இந்த தளத்தை வலைப்பூவின் சுதந்திரத்துடனும் பத்திரிகையின் நெறியுடனும் அமைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியுள்ளோம். எந்த விதமான எதிர்மனநிலையுடனும் இத்தளத்தை நடத்தக்கூடாது என்று நினைக்கிறோம். செயலை மட்டுமே முன் வைக்கவேண்டும் என்பது நோக்கம். அதனால் ஓர் எடையற்ற பெயரை வைக்கலாம் என்று ஆலோசித்து குருகு என்று வைத்துள்ளோம். என்றும் தந்தை என தங்கள் ஆசியும் வழிகாட்டலும் உடன் இருந்து எங்களை வழிநடத்தும்
அனங்கன்
புத்தகக் கண்காட்சி – கடிதம்
இனிய ஜெயம்
புத்தகச் சந்தை குறித்த உங்கள் பதிவில் கடலூரில் அரசு முன்னெடுப்பில் புத்தக சந்தை நடந்தது போல குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எந்த நகரத்திலும் புத்தக சந்தை நடைபெறவில்லை. நான் உங்களுக்கு அனுப்பிய புகைப்படம் புதுவையில் அந்த அரசு சிறிய அளவில் நடத்தும் புத்தக சந்தையில் எடுக்கப்பட்டது.
புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. இன்னும் அடுத்த முப்பது வருடத்துக்கு தமிழக பெருமிதம் என்று சொல்லிக்கொள்ளும் வகைக்கு எந்த பண்பாட்டு நிகழ்வையும் புதுவை அரசு நிகழ்த்தாது. கடமைக்கு ஒரு சிறிய மண்டபத்தில் அந்த அரசு எடுக்கும் வருடாந்திரா விழா அது. சுற்றி உள்ள எல்லா ஊரிலும் உள்ள பொது ஜனம் பிற கேளிக்கைகள் பள்ளி கல்வி கடந்து புத்தக வாசிப்பு என்ற ஒன்று உண்டு என்பதை தெரிந்து கொள்ள இப்போதைக்கு இங்கே உள்ள ஒரே இடம் இது.
தொடர்ந்து நடைபெற்று வந்த நெய்வேலி புத்தக விழாவும் நின்று மூன்று வருடம் ஆகிறது. இந்த பகுதியில் புத்தக விழாக்கள் நடத்த முதல் சிக்கல் இங்கே பொது வாசகர் என எவருமே இல்லை என்பதே. எவர் எப்படி முயன்றாலும் விழாவுக்கு வரும் பதிப்பாளர்கள் நஷ்ட கணக்குடன்தான் திரும்ப நேரிடும்.
எங்கே சிக்கலோ அங்குதான் அதை தீர்க்கும் வழிமுறைகளும் நடைபெற வேண்டும். புத்தக விற்பனையாளர்கள் லாபம் அடைகிரார்களோ இல்லையோ, நஷ்டம் அடையா வண்ணம் ஏதும் வழி வகை சேய்ய முடிந்தால் இந்த பகுதிகளில் புத்தக விழாக்களை தொடர்ந்து நடத்த முடியும்
அந்த வழி வகைகளை அரசு போன்ற பெரு முதலீடு அளிக்க முடிந்தவர்கள்ளால் மட்டுமே செய்ய முடியும். இந்த அரசு வரும் ஆண்டுகள் முதல் கடலூர் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு நகரை கவனத்தில் கொள்ளலாம். என் பரிந்துரை சிதம்பரம். மயிலாடுதுறையில் இந்த ஆண்டு புத்தக சந்தையை நடத்தி இருக்கிரார்கள் அதை அடுத்த வருடம் அங்கே முடிந்ததும் சிதம்பரத்துக்கும் நீட்டிக்கும் வழி வகையை யோசிக்கலாம்.
இங்கே புத்தக வாசிப்பு குறித்த போதம் குறைவாக மற்றொரு முக்கிய காரணம், இங்குள்ள போன தலைமுறை வாசிப்பு சூழல் பெரிதும் பாரதிதாசனாலும் பின்னர் திராவிட தமிழ் அலையாலும் உருவானது. அதிலிருந்து வாசிப்பின் மீது காதல் கொண்ட அடுத்த தலைமுறை எழ வாய்ப்பே இல்லாமல் ஆகிப்போனது.
இனிதான் இங்கு பொது மற்றும் இலக்கிய வாசிப்பு சார்ந்த அரிச்சுவடியையே துவங்க வேண்டும். (கடலூரில் புதுவையில் நாங்கள் செய்வது எல்லாம் அதை நோக்கிய முதல் எட்டி வைப்பு மட்டுமே.) அதற்கு நெல்லையில் சென்னையில் நடந்தது போல அரசு ஆதரவுடன் சிறிய சிறிய நூல் வெளியீட்டு விழாக்கள் அப்போது அந்த நூல்கள் சார்ந்த பேச்சுக்கள் இவை போன்றவை தொடர்ந்து நிகழ வேண்டும். அதன் தொடர்ச்சி வழியாகவே இந்த பகுதி புத்தக விழாக்களில் புத்தக விற்பனையை உயர்த்த முடியும். நோய் உள்ள இடத்தில்தான் வைத்தியம் தேவை. இங்கேதான் தொடர்ந்து அடுத்த பத்து வருடங்களுக்கு புத்தகம் குறித்த விழாக்களும் பேச்சுகளும் சந்தைகளும் தேவை. இது அரசு உதவி வழியாக மட்டுமே நிகழ முடியும். இந்த அரசு இந்த சொல்லையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன்.
கடலூர் சீனு
அஞ்சலி: பி.வி.டோஷி
சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்த கட்டிடக்கலைப் பேராசன் பி.வி.டோஷி அவர்கள் நேற்று (24/1/23)காலமானார். ‘பி. வி. டோஷி’ என அழைக்கப்படும் ‘பால்கிருஷ்ணா விதால்தாஸ் தோஷி ’ தலைசிறந்த கட்டிடக்கலை அறிஞர். இவர் இந்தியக் கட்டிடக்கலையின் முக்கியமான ஆசானாகவும் மேதையாகவும் உலகளவில் கருதப்படுகிறவர். மேலும், இந்தியாவில் கட்டிடக்கலை சார்ந்த சொற்பொழிவுகளின் பரிணாம வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவை. உலகக்கட்டிடக்கலை மேதைகளான ‘லே கார்புசியர்’ மற்றும் ‘லூயிஸ் கான்’ ஆகியோரிடமிருந்து நேரடியாகக் கற்றடைந்துள்ளார். இந்தியாவில் நவீனத்துவ மற்றும் Brutalist Architecture என்னும் கட்டிடக்கலைப்பாணியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
கட்டிடக்கலைக்காகத் தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து, அக்கலையின்தனித்துயர்ந்த அடையாளமாக விளங்குகிற கட்டிடக் கலைஞர்களை கெளரவிப்பதற்காக, ‘பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு‘ (The Pritzker ArchitecturePrize) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கட்டிடக்கலைமூலம் மனிதகுலத்திற்கும் கட்டப்பட்ட இயற்கைச் சூழலுக்கும் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க நற்பங்களிப்புகளை உருவாக்கியுள்ளவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதால், இது உலகின் முதன்மையான கட்டிடக்கலை பரிசுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் இது ‘கட்டிடக்கலைக்கான நோபல் பரிசு’ எனக் கருதப்படுகிறது. டோஷி , இந்த விருதைவென்ற முதல் இந்தியர் ஆவார்.
பஞ்சாபின் புதியமாநிலத் தலைநகரான சண்டிகரின் வடிவமைப்பு பி.வி. தோஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது (சண்டிகர் இப்போது பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுமாநிலத் தலைநகராகசெயல்படுகிறது). இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான அரசு அலுவலகங்களுக்கான வாழிடங்களை வடிவமைக்கும் பணியை அரசு இவரிடத்தில் ஒப்படைத்தது. மிகச்சிறந்த, அடிப்படை மற்றும் குறைந்தவிலையில் கட்டமைப்பு வாழிடங்களைஉருவாக்குவதில் தோஷி அவர்கள் தொடர்ந்து ஆர்வங்காட்ட இவ்வாய்ப்பு வழிவகுத்தது.
1960களில் தோஷி அகமதாபாத்தில் ஒரு கட்டிடக்கலை கற்றல்பள்ளியை (TheSchool of Architecture – Ahmedabad) தானுருவாக்கிய மாற்றுப் பாடத்திட்டத்துடன் திறந்தார். 1972 முதல் அந்த கல்விமையம் ‘சுற்றுச்சூழல்திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையம்’ (Centre for Environmental Planningand Technology – CEPT) என அறியப்படுகிறது. லூயிஸ் கான் இதில் ஆரம்பகால ஆசிரிய உறுப்பினராகப் பணியாற்றினார். ஏழு தசாப்தங்களாகநீடித்த கட்டிடக்கலையை தனது வாழ்க்கையாகக்கொண்டு, சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்ககட்டிடக் கலைஞர்களில் ஒருவராக இருந்தவர் பி.வி.தோஷி. இவர் சர்வதேச மரபுக்கொள்கைகளை உள்ளூர் மரபுகளுடன் இணைத்து இயற்கைச்சூழலுக்கு உகந்தவாறு உயரழகுக்கட்டிடங்களை வடிவமைத்தார்.
இவர் ஆகஸ்ட் 26,1927ல் புனேவில் பிறந்தார். 11 வயதாக இருக்கும்போது, அவர் ஒரு தீவிபத்தில் பலத்த காயமடைந்தார், வலதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய நடையில் சிறுதளர்வு நிரந்தரமாகிப்போனது. மும்பையில் உள்ள Sir J. J.School of Artல் 1947 – 1950க்கு இடைப்பட்ட கல்வியாண்டுகளில் பயின்றார். குறைந்தசெலவில் உலகத்தரத்திலான வாழ்விடங்களை உருவாக்கியமைக்காக, இவர் உலகக் கட்டிடக்கலை ஆளுமைகள் அனைவராலும் போற்றிப்புகழப்படுகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நினைவுச்சின்னங்கள், அத்துடன் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கட்டிடக் கலைஞர்களின் பணியால் இவர் ஈர்க்கப்பட்டார்.
2020ம் ஆண்டின் பத்மபூஷண் விருது பி.வி.டோசிக்கும் அளிக்கப்பட்டது. 1976லிலேயே இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுவிட்டது. 2007 ல் Global Award for Sustainable Architecture விருது, பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம், Aga Khan Award for Architecture உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை தன்னுடைய துறைசார் அர்ப்பணிப்புக்காகப் பெற்றுள்ளார் இவர். மும்பையில் உள்ள Indian Instituteof Architectsலும் இவர் கெளரவப் பதவிகளில் பொறுப்புவகித்தார்.
பெருந்தொற்றுக் காலத்தில் குக்கூ நண்பர்கள் முன்னெடுத்த இணையவழி உரையாடல் வரிசையில், கட்டிடக்கலை பேரறிஞரான பி.வி.டோஷியும், கட்டிடக்கலை வல்லுநர் நீல் கண்ட் சாயாவும் பகிர்ந்துகொண்டவைஅனைத்தும் மிக முக்கிய ஆவணம் என்றே கருதத்தக்கவை.காணொளி
பி.வி. தோஷி அவர்கள் உலகின் தலைசிறந்த மூத்த கட்டிடக்கலை ஆசானாக உலகம் முழுக்கத் தன்னுடைய கலைசார் பங்களிப்பை நல்கியுள்ளார். “கட்டிடங்கள் என்பவை ஒருபோதும் உயிரினத்திலிருந்து வேறுபட்டவை அல்ல, அவைகளும் உயிரினங்களுக்குச் சமமானவை… நீங்கள் வடிவமைக்கும்போது, அவை மரங்களையும் பறவைகளையும் போல சுவாசிக்க வேண்டும், பேச வேண்டும்,பாட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்…நீங்கள் உங்கள் சுயத்தில் நின்று யோசிக்கையில்அனைத்தும் சாத்தியமாகும்…” என்றுரைத்த மூதறிஞரின் வாழ்வனுபவச் சொற்கள்,ஒரு வைத்திய ஆசான் தன் சீடர்களுக்குவிட்டுச்செல்லும் சிகிச்சைக்குறிப்புகளைப் போல சமகால இளையோர்களுக்குஅதிமுக்கியமானவை.
கட்டிடக்கலை மூதறிஞர் பி.வி.டோஷிக்கு நம் அஞ்சலிகள்!
~
குக்கூகாட்டுப்பள்ளி,
புளியானூர்கிராமம்,
ஜவ்வாதுமலை அடிவாரம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


