மைத்ரி,அஜிதன் – கடிதம்
பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்
மைத்ரி நாவல் விற்றுத்தீர்ந்துவிட்டது என்று காலி ரேக்கை செந்தில்குமார் சுட்டிக்காட்டிய காணொளி மகிழ்ச்சி அளித்தது. அவ்வாறு உடனடியாக விற்றுத்தீரும் படைப்பு கிடையாது. அது ஒரு காதல்கதையாக தொடங்குகிறது. ஆனால் ஒரு அத்தியாயம் கடந்ததுமே அதன் பேசுபொருள் காதல் அல்ல என்று தெரிந்துவிடுகிறது. அந்தப்பெண் ஒரு காதலி கிடையாது. அவள்மேல் கதைநாயகனுக்கு மோஹமோ அல்லது பெரிய காமமோ வருவதில்லை. அவள் அந்த மலையில் பூத்த ஒரு பூ போலத்தான். அந்த மலைக்குள் அதன் ஆழத்துக்குள் அவள் அவனை அழைத்துச் செல்கிறாள். அந்தப் பயணம்தான் அந்த நாவல்.
அந்தப்பயணம் நுணுக்கமான செய்திகளால் ஆனது. ஆனால் அது ஒரு டிராவலாக் கிடையாது. அப்படி தோன்றும். ஆனால் ஓர் அத்தியாயம் கடந்ததுமே அது ஒரு அகப்பயணம் என்றும் ஆன்மிகப்பயணம் என்றும் தெரிந்துவிடும். அதன்பின் இரண்டு மெட்டஃபர்களின் உறவாகவே அந்தக் கதை நமக்கு தோன்றுகிறது. அந்த மெட்டஃரபர்கள் இணைந்து ஒரு விஷன் உருவாகிறது. அந்த நாவலை சோஷியாலஜி பார்வையிலோ அல்லது அரசியல் பார்வையிலோ படிக்க முடியாது. ஒரு காதல்கதையாகவோ அல்லது வழக்கமான வாசிப்பிலோ அதை வாசிப்பவர்களுக்கு அது பிடிகிடைக்காது. அதற்கு இவ்வளவு வாசகர்கள் வந்திருப்பது ஆச்சர்யமே.
அஜிதன் ஒரு இண்டர்வியூவில் சொல்வதுபோல அவருடைய பிரச்னை என்பது அவர் உங்கள் மகன் என்பதே. வாழ்த்துக்களும் உண்டு வசைகளும் உண்டு. உதாரணமாக, அவருக்கு ஒரு விருது கொடுக்க முடியாது. அது நீங்கள் சொல்லி கொடுக்கப்பட்டது என நினைப்பார்கள் என்று அமைப்பாளர்கள் தயங்குவார்கள். பல நூல்களைப்பற்றி எழுதப்பட்ட எந்த பத்ரிகைக் குறிப்புகளிலும் மைத்ரி பற்றி ஒன்றுமே கிடையாது. யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அந்த அமைதி அல்லது புறக்கணிப்பு இருக்கும். பொறாமைகளும் வசைகளும்கூட வரலாம். அதைக்கடந்தே எழுதவேண்டும்.
ஆனால் அஜிதன் மிகுந்த பாஸிட்டிவ் மனநிலையில் அதையெல்லாம் எடுத்துக்கொள்கிறார். எல்லாம் தெரிகிறது. ஆனால் நட்புணர்வுடன் சிரித்தபடி இருக்கிறார். அந்த மனநிலைக்குப் பின்னாலிருப்பது தன்னைப்பற்றிய நம்பிக்கை. வாழ்த்துக்கள்.
எம். ஶ்ரீதர் ராமானுஜம்
மைத்ரி நாவல் வாங்க மைத்ரி மின்னூல் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

