Jeyamohan's Blog, page 635
February 1, 2023
புரூய்க்ஸ்மா , குறள்- கடிதம்
அன்புள்ள ஜெ
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
கண்களில் மிக மெல்லிய நீர்ப்படலத்துடன் அண்ணன் வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் எனும் தம்பியை நினைக்கும் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மாவில் இருந்தே அவருடனான க.நா.சு கலந்துரையாடலை தொகுத்து கொள்ள விழைகிறேன்.
தமிழை கற்றதன் மூலம் நீங்கள் அடைந்த மாற்றம் என்ன? என்ன பெற்று கொண்டீர்கள் ? என்ற சுசித்ரா அக்காவின் கேள்விக்கு இரு விடைகளை கூறினார். முதலாவது, தமிழ் தான் தனக்குள் இருந்த கவிதை வாசகனை, கவிஞனை அறிய செய்தது. இரண்டு, விருந்தோம்பல், அன்பு, பாசம் போன்ற விழுமியங்களையும் குடும்பம் என்ற அமைப்பின் சாரத்தையும் உணர செய்தது இவ்விரு பதில்களும் இப்படி கடிதத்தில் எழுதுகையில் தனித்தனியாக ஒலிக்கின்றன. ஆனால் அவருடனான உரையாடலில் வைத்து நோக்கினால் ஒன்றையொன்று நிரப்பி முழுமையை கொணர்கிறது. கவிஞன் எப்போதும் மொழியில் வெளிப்படும் உணர்வு நிலைகளுடனும் வாழ்க்கை நோக்குடனும் அப்பண்பாட்டின் சாரம்சமான ஆன்மிக உணர்வுடனும் தொடர்பில் இருக்கிறான். தனக்கு அந்நியமான பண்பாடொன்றை அணுகி அதன் சாரத்தை வந்தடைவதற்கு வெறுமே மொழி பயிற்சி அல்ல, மொழியின் மீதும் அதன் மக்கள் மீதும் பெருங்காதல் வேண்டும். எல்லா தாழ்களையும் விடுவிப்பது அதவே. தாமஸ் அவர்கள் தன் தமிழக குடும்பத்தை பற்றியும் கவிதையை மொழியாக்கம் செய்யும் நுட்பம் குறித்தும் பேசுவதை இவ்வண்ணம் இணைத்து கொள்கிறேன்.
கவிதையின் மொழியாக்கம் குறித்தும் பிற மொழியாக்கம் குறித்தும் அவர் சொன்னவை யுவன் சந்திரசேகர் சார் கூறுவனவற்றை ஒருபக்கம் நினைவில் எழச் செய்தன. வெறுமே வார்த்தைக்கு வார்த்தை அல்ல, கவிதையென்பது சொல்லிணைவுகளின் வழியே குறிப்பிட்ட உணர்வுநிலைகளை, இசையை, சந்தத்தை, பண்பாட்டையும் அதன் விவேகத்தையும் வெளி கொணர்வது. எக்கவிதையையும் முழுமையாக ஒரு மொழியில் இருந்து மற்றொன்றிற்கு நூறு சதவீதம் கொண்டு செல்ல இயலாது. பிறிதொரு மொழியில் கவிதை நிகழ்த்துவதை உள்வாங்குவதன் வழியாக அம்மொழி சொற்களுக்கு இணையான சொல்லை கையாள்வதனூடாக மூலத்தில் நிகழ்ந்ததை நம் பண்பாட்டிற்கு கொண்டு வருதலே மொழியாக்கத்தில் நாம் சாத்தியமாக்கும் உச்சநிலை. கவிதை குறித்த இவ்வரையறையினை கலந்துரையாடல் நெடுக சொல்லியும் குறிப்புணர்த்திய படியேயும் இருந்தார்.
இதற்கு இணையாகவே மொழி காதில் ஒலிப்பதற்கான தேவையையும் வலியுறுத்தினார். நவீன வாசிப்பிற்கு வருகையில் நாம் மறந்துவிட கூடிய விஷயம், மொழி காதில் ஒலித்து நம்மில் கிளர்த்தும் உணர்வுநிலைகள். அடிப்படையில் மொழி செவிக்குரியது. கற்றலின் கேட்டல் நன்று என்பது உணர்த்துவது அதை தானே. கலந்துரையாடலின் தொடக்கத்தில் முதன்முதலில் தான் பேச மட்டுமே கற்று கொண்டதையும் பின்னரே எழுத்து மொழிக்கு மாறியதையும் கூறிய பின், திருக்குறளை, சிலம்பை வாசிக்கையில் அதன் சந்தம் கிளர்த்தும் உணர்வுகளின் வழி அடைந்த திறப்பையும் பரவசத்தையும் பகிர்ந்தது பின் வந்த உரையாடலின் பொழுது அழுத்தமாகியது.
தாமஸ் திருக்குறளை எல்லா வகையிலும் கவிதையாக மட்டுமே அணுகுகிறார். திருக்குறளை நீதி நூலாக, அற நூலாக, கவிதை நூலாக அல்லது இவையெல்லாம் சேர்ந்த முழுமையாகவா என்ற கேள்விக்கு முழுமையில் என்று பதிலளித்திருந்தார். ஆனால் கவிதையென்பதே முழுமையை நோக்கிய ஒரு தாவல் தானே என்பது உரையாடலின் வழி சொல்லப்படாமல் கடத்தப்பட்டது. குறிப்பாக தெய்வம் தொழாள் என்ற குறளுக்கு கொடுத்த விளக்கம். அக்குறளின் நேர் கருத்தான புற சட்டகம் இன்று காலாவதியாகி விட்டாலும் கவிதையென அணுகி அர்ப்பணிப்பின் மகத்துவத்தை சென்றடைந்த விதம். அந்த சொற்களை பெரும் உள எழுச்சி ஒன்றுடனேயே கேட்டேன். மொழிகளை கடந்து வந்து நிற்கும் பெரும் கவிதை வாசகர் ஒருவரை காணும் நிறைவு.
அறம் போன்ற சொற்களுக்கு அவர் இடத்திற்கேற்றவாறு பொருளமைந்த சொற்களை கையாண்டதையும் தவம் போன்ற குறிப்பிட்ட சொற்களுக்கு இணையான சொல்லில்லை என்கையில் அவ்வண்ணமே பயன்படுத்திய விதமும் மொழியாக்கம் செய்பவர்களுக்கு கற்றலுக்கு உரியவை. இதனூடாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதியை வாங்கியதும் சொற்களை அவற்றின் வேர் சொல் வரை சென்று அறிவது எழுத்தாளர்களுக்கு எத்தனை முக்கியமானவை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை.
இவ்வுரையாடல் மீண்டும் ஒரு சிறந்த ஆசிரியரிடம் பயிலும் தனிக்கல்வி எத்தனை வீரியமிக்கது என்பதை காட்டியது. அவரது ஆசிரியர் கே.வி ராமகோடி போன்ற சிறந்த தமிழாசிரியர்களின் பங்களிப்பை தாமஸின் வழியாக உணர செய்தது. உரையின் முடிவில் ராஜகோபாலன் சார் சொன்னது போல ஒரு தமிழ் வாசகனாக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மிக மகிழ்வான அமர்வுகளில் ஒன்று.
உரையாடலின் தொடக்கமாக அமைந்த சஹா அவர்களின் சிற்றுரையை குறித்தும் சொல்ல வேண்டும். சஹாவின் பின்னர் தாமஸ் கலந்துரையாடலில் பகிர்ந்து கொண்ட கவிதை மொழியாக்கம் குறித்த விஷயங்களுக்கான சிறப்பான அடித்தளமாக அமைந்தது. தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்து அமெரிக்க ஆங்கில பண்பாட்டில் வளர்ந்த ஒருவர், தன்னுடைய வேர் பண்பாடான தமிழ் எவ்வண்ணம் தன்னில் தாக்கம் செலுத்துகிறது. அதன் சொற்களின் சந்தம் மட்டுமே தன்னில் உருவாக்கும் உணர்வுகளையும் அதை தாமஸின் மொழியாக்கத்திலும் உணர முடிகிறது என்றார். அதே போல தமிழர்களான பெற்றோர் எவ்வண்ணம் திருக்குறளின் சிந்திக்கிறார்களோ, அதை தனக்கும் ஆங்கில வாசக உலகத்திற்கும் சாத்தியப்படுத்தியதையும் சுட்டினார். அதே போல காலத்துக்கு ஒவ்வாத கருத்தமைந்த குறள்கள் என்று தாமஸ் எதையும் விலக்காததையும் முழுமையாக பண்டைய இலக்கிய செல்வமொன்றை கொணர்ந்திருக்கிறார். முடிவுகளை வாசகனுக்கே விட்டுவிட்டு மொழியாக்குநராக மட்டுமே தன்னை நிறுத்தியுள்ள விதத்தை கூறி சிறப்பான தொடக்கவுரையாக அமைந்தது, சஹாவினுடையது.
அடுத்து பேசிய ஜெகதீஷ் குமாரின் உரை, ஒரு தமிழக வாசகருக்கு ஔவையின் பாடல்கள் ஆங்கிலத்தில் எந்த உணர்வுகளை ஏற்படுத்துகிறது. ஔவையின் அங்கதமும் பயின்று வந்திருக்கும் சிறப்பையும் கூறி நிறைவுற்றது.
முடிவில், தாமஸ் அவர்கள் மனதிற்கு மிக நெருக்கமாகி விட்டார். அவரை வேறு ஒருவர் என்றே நினைக்க முடியவில்லை. நம் பண்பாட்டை அறிந்த நம்மில் ஒருவராகவே நினைக்கிறது மனம். பல வகையிலும் அறிதல் மிக்க கலந்துரையாடலாக அமைந்தது. ஒருங்கமைத்த அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் கலந்துரையாடலை சிறப்புற வழி நடத்திய ராஜகோபாலன் சார் அவர்களுக்கும் நன்றிகள். இனி அவரது நூல்களை வாங்கி வாசிக்க வேண்டும்.
அன்புடன்
சக்திவேல்
January 31, 2023
ஆகாய ஊஞ்சல்
ஓர் ஊசல் மெய்யியல் நூல்களில் ஆடிக்கொண்டே இருக்கிறது. கண்முன்காட்சியில் இருந்து காணாப்பெருநுண்மை வரை. பின் அதிலிருந்து இங்கெலாமென நிறைந்திருப்பது வரை. சொல்லிச் சொல்லி தீராத பெருந்திகைப்பாகவே அது அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த பெருந்திகைப்பை ஐன்ஸ்டீன் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.
ஆறாம் திருமுறை தேவாரத்தில், திருநாவுக்கரசர் பாடிய வரிகளில் நின்று அந்த ஊசலை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்து தொடங்கி எங்குவரை செல்கிறது என்று பார்த்தேன்.
மண்ணாகி விண்ணாகி மலையும் ஆகி
வயிரமுமாய் மாணிக்கம் தானே ஆகிக்
கண்ணாகி, கண்ணுக்கோர் மணியும் ஆகி
கலையாகி,கலைஞானம் தானேயாகிப்
பெண்ணாகி, பெண்ணுக்கோர் ஆணுமாகிப்
பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டமாகி
எண்ணாகி, எண்ணுக்கோர் எழுத்தும் ஆகி
எழுஞ்சுடராம் எம்மடிகள் நின்றவாறே.
இங்கு சூழ்ந்துள்ள நிலமாகி, அதன்மேல் கவிந்த வானம் ஆகி, அவையிரண்டையும் இணைக்கும் மலையும் ஆகி நின்றுள்ளது ஒன்று. அது பெருந்தோற்றம். அடுத்த தாவல் நுண்தளம் நோக்கி. வைரமும் மாணிக்கமும் ஆகி நின்றுள்ளது அது . மெய்யியல் மரபில் வைரம் மாணிக்கம் ஆகிய கற்களுக்கு ஒரு தனித்தன்மை உருவகிக்கப்படுவதுண்டு. இங்குள்ள பருப்பொருட்களும் ஒளியும் வேறுவேறாக நிலைகொள்பவை. ஆனால் வைரமும் மாணிக்கமும் பருப்பொருளும் ஒளியும் ஒன்றே என ஆனவை. ஆகவே அவை நுண்நிலையில் திகழ்பவை.
காட்சியைச் சொன்னதுமே கண்ணுக்குச் செல்கிறது கவிதை. கண்ணாகியதும், கண்ணின் மணி என ஆகியதும், அக்கண்களால் அறியப்படும் அழகுப்பெருவெளியாகிவிடுகிறது அது. கலை என ஆன பின் கலைஞானம் என்னும் நுண்பொருளாகிறது. அவை ஒன்றையொன்று நிரப்பும் இரண்டு பெருவெளிகள். இங்குள்ள பிரபஞ்சத்தின் அழகுப்பெருந்தோற்றமும் அதை அறியும் ஞானத்தின் முடிவிலியும். அவையிரண்டும் ஆகி நின்றிருப்பது சக்தி. அப்பெண் ஆகி நின்றிருக்கும் அதற்கு ஆணாகவும் ஆகின்றது ஒன்று. அவையனைத்தும் ஆகியபின் அவை ஊழியில் அழிந்து எஞ்சும் அண்டமாகிறது.
அவ்வாறு அறியவொண்ணாமை வரைச் சென்றபின் அதே விசையில் ஊஞ்சல் திரும்பி வருகிறது. அறியமுடியாமையும் ஓர் அறிவேதான். அந்த அறிதலாகி நின்றிருக்கும் எண்ணமும், அவ்வெண்ணத்தின் எழுத்தும் ஆகியிருக்கும் ஒன்று. அது எழுஞ்சுடர். பேரொளி. அரியும் நான்முகனும் அறியாத அந்த நுண்ணொளி அக்கணமே அறியத்தக்க தலைவன் என ஆகி நின்று தன் காலடிகளை கவிஞனுக்குக் காட்டுகிறது. ‘பணிகசிவம்’ என்கிறது.
மீண்டும் மீண்டும் வாசித்து பின் வெறுமே நூல்பக்கத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அறிவென அறிதரும் இங்குள்ள அனைத்திலும் இருந்து அறியமுடியாமை வரை. அங்கிருந்து தன்னை அறியத்தந்து நின்றிருக்கும் அடிகள் வரை. வானூஞ்சலாடிய பேரரங்கு நாவுக்கரசரின் உள்ளம்.
தமிழ்வேள் உமாமகேஸ்வரனார்
தமிழ்வேள் என அழைக்கப்பட்ட உமாமகேஸ்வரனார் தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல்லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக்காக முன்னோடியான அமைப்புக்களை உருவாக்கியவர். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந்தவர். வழக்குரைஞர், தஞ்சைக்கு பல பொதுப்பணிகள் ஆற்றியவர்.
உமாமகேஸ்வரனார்
உமாமகேஸ்வரனார் – தமிழ் விக்கி
மேடையுரைப் பயிற்சி, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
மேடையுரை பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சமகால காண்பியல் கலைகளுக்காக கொச்சியில் நடக்கும் உலக அளவிலான(Kochi Muzurris Biennale) கண்காட்சி, அங்கிருந்து டெல்லி சென்று நவீன கலை கூடம்(Modern art gallery) மற்றும் லலித் கலா அகாடமியின் கண்காட்சிகள் பார்த்து விட்டு இப்போது சென்னைக்கு வந்துவிட்டேன். நந்தலால் போஸின் ஓவியங்களை பார்த்த போது தமிழ்நாட்டு ஓவியரான கே. சீனிவாசலுவிடம் பெங்காள் ஓவியர்களின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்று நேரடியாக உணர முடிந்தது. இப்போது தமிழ்விக்கியில் கே. சீனிவாசலு பற்றி எழுதிக் கொண்டிருப்பதால் சரியான நேரத்தில் சென்ற பயணம் என்று தோன்றியது.
உங்கள் அருகாமையில் ஓரிரு நாள் இருக்கலாம் எறு மட்டுமே மேடையுரை பயிற்சியில் கலந்து கொண்டேன். மற்றபடி எனக்கு மேடை பேச்சாளர் ஆகும் எண்ணம் எதுவும் இருக்கவில்லை. அதுவே முதல் நாள் சொதப்பலுக்கும் காரணம். உங்களிடம் 2 மார்க் வாங்கி சீண்டப்பட்டதால் தான் அடுத்த நாள் நன்றாக தயாரித்து முழு மதிப்பெண் பெற்றேன். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர்களும் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக வெளிப்பட்டார்கள். இதன் பலனாக ஒரு முக்கிய தலைப்பை கூட சுவாரிஸ்யமாக மற்றவர்களிடம் ஏழு நிமிடத்தில் சொல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்தது. ஒரு பத்து நிமிட பேருந்து பயணத்தில் கூட பக்கத்தில் அமர்பவரிடம் நாம் பேசும் விஷயத்தை சிறப்பாக பகிர முடியும். மேடையுரை நிகழ்த்தி பயிற்சி எடுப்பது எப்போதும் சாத்தியமில்லை. ஆனால் சாதாரண உரையாடலையும் இந்த பயிற்சியை மனதில் வைத்து பேச முயற்சிக்கலாம். அதன் மூலம் இந்த பயிற்சியில் கற்ற பாடங்களை தக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன். மேடையுரை பயிற்சியை ஒருங்கிணைத்த உங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி!
ஜெயராம்
உருமாறுபவர்கள். நோயல் நடேசன்
காஃப்காவின் உருமாற்றம் வெவ்வேறு தலைமுறைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் படிக்கப்படுகிறது. நோயல் நடேசனின் வாசிப்பு
பெங்களூர் உரை, அ.முத்துலிங்கம் கடிதம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
வணக்கம்.
இரண்டு சம்பவங்களை சொல்லலாம் என நினைக்கிறேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோவில் நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகிய டேவிட் செடாரிஸ் பேசுவதாக அறிவிப்பு. கட்டணம் 10 டொலர். மாலை நடந்த கூட்டத்துக்கு நானும் சென்றேன். அரங்கம் நிறைந்து வழிந்த அதிசயத்தை கண்டேன். 2000 பேர் இருக்கலாம். எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பக்கங்களை வாசித்தார். பின்னர் தான் எழுதப் போகும் புத்தகத்தில் இருந்து சில பக்கங்கள். அவ்வளவுதான், பேசவே இல்லை, ஒரு மணி நேரத்தில் கூட்டம் முடிந்தது.
பின்னர் வாசகர்கள் வரிசையாக நின்று புத்தகங்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டார்கள். எழுத்தாளர் நின்றபடியே நடு நிசி தாண்டி அத்தனை வாசகர்களின் புத்தகங்களிலும் கையொப்பம் இட்டார் என்று அடுத்தநாள் காலை அறிந்தேன். எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. இதே மாதிரி ஒரு நிகழ்வு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு எப்போவாவது கிட்டுமா என யோசித்தேன். அப்படி நடக்காது என்றே தோன்றியது. அதை அப்போதே எழுத்தில் பதிவு செய்திருந்தேன்.
அடுத்த சம்பவம். இதேமாதிரி ஒரு நிகழ்வு. இயல் விருது பெற கனடா வந்திருந்த எழுத்தாளர் ஒருவரை அழைத்துக்கொண்டு நாங்கள் நால்வர் அந்த நிகழ்வுக்கு சென்றோம். எங்களுக்கு கட்டுபடியாகாத தொகையை கட்டணமாகக் கட்டியிருந்தோம். வாகன நெரிசலில் இரண்டு நிமிடம் தாமதமாகச் சென்றுவிட்டோம். எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் காரியம் ஆகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம்.
உங்களுடைய பெங்களூர் கட்டண உரை முக்கியமானது. காலை ஆறரை மணிக்கே அரங்கம் ஏறக்குறைய நிறைந்துவிட்டது என்று அறிகிறேன். உரை கேட்க வந்திருந்த அத்தனை பேருமே தமிழிலும், தத்துவத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். ஆழமான உரை என்பதால் கூர்ந்த கவனம் முக்கியம். நேரம் பிந்தி வந்த எழுபேர் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தமிழில் இப்படியொரு நிகழ்வு நடக்க முடியாது என்றே இதுவரை நினைத்திருந்தேன். அது நடந்துவிட்டது. காசு கொடுத்து புத்தகம் வாங்குவதுபோல ஆராய்ந்து வழங்கும் கட்டண உரைகளை கலையாத கவனத்துடன் கேட்பதுதான் முறை. இலவசமாகவே அனைத்தும் கிடைத்து மக்கள் பழகிவிட்டார்கள்.
இது ஒரு சரித்திர நிகழ்வு. இதை நடத்திக்காட்டிய உங்களுக்கு நன்றி. என் வாழ்நாளில் இப்படியொன்று நடக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது. இன்னும் பல உரைகள் இதுமாதிரி நிகழும் என நம்புகிறேன். வாழ்த்துகள்
அன்புடன்
அ.முத்துலிங்கம்
—சந்தித்தல், கடிதம்
பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
ஜனவரி 17ஆம் தேதி புத்தகக் கண்காட்சியில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. நீங்கள் கையெழுத்திட்ட புத்தகங்கள் கிடைக்கப் பெற்றது எனக்கும் என் அம்மாவிற்கும் மிகப்பெரிய சந்தோஷம். நன்றி
சில நிமிடங்கள் சில வார்த்தைகள் மட்டுமே சாத்தியம் என்பதால் பதட்டத்திலேயே அதில் பாதி போய்விட்டது. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் எனக் கோரிய உடன் நீங்கள் என்னை ஆரத் தழுவிக்கொண்டது என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக இருக்கும்.
இது என்னுடைய இரண்டாவது கடிதம். புனைவுக் களியாட்டின் பொழுது முதலில் எழுதினேன். மீண்டும் எழுத, மீண்டும் சந்திக்க, உங்களுடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
நன்றி
மதன் ஜெகநாதன்
***
அன்புள்ள மதன்,
மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். மீண்டும் மீண்டும் சந்திப்பதன் வழியாகவே ஒரு தொடர்பு உருவாகிறது.
என்னைப்பற்றி ஒரு பிம்பம் உண்டு, நான் மனிதர்களை நினைவில் வைத்துள்ளேன் என. அது உண்மை அல்ல, நான் கருத்துக்களையே நினைவில் வைத்திருக்கிறேன். ஒருவர் தன்னை ஒரு கருத்தாக, ஓர் ஆளுமையாக வெளிப்படுத்திக் கொண்டால் அதுவே என் நினைவில் நீடிக்கிறது.
ஆகவே ஒவ்வொருவரும் அவ்வண்ணம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறேன். அது மட்டுமே நான் செய்வது.
ஜெ
January 30, 2023
இலக்கியத் தோட்ட விருதுகள்
கனடா இலக்கியத் தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாம்ராஜ் (கட்டுரை) சுகிர்தராணி (கவிதை) வேல்முருகன் இளங்கோ (புனைவு) வ.ந.கிரிதரன் (இலக்கியப்பங்களிப்பு) சிவசங்கரி (ஆய்வு) ஆகியோர் விருதுபெற்றிருக்கிறார்கள். விருதுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாண்டுக்கான கனடா இயல் விருது ஏற்கனவே பாவண்ணன், முருகபூபதி இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முறையான ஆலயங்கள் இன்று சாத்தியமா?
ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தங்கள் எழுதிய ‘ஆலயம் எவருடையது?’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். என் மனதில் எழுந்த ஆலயம் சம்பந்தமான பல்வேறு கேள்விகளுக்கு தாங்கள் அளித்த விடை பொருத்தமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் நான் ஆலயத்தைப் பற்றி புரிந்து வைத்த ஒரு சில கூறுகளுக்கும் வலு சேர்த்தது இப்புத்தகம்.
இதைப் படித்து முடித்த பிறகு என் மனதில் இரண்டு ஐயங்கள் தோன்றின. ஒன்று தற்போதைய தமிழக அறநிலையத்துறையின் செயல்பாடுகள் தாங்கள் குறிப்பிடும்படி இருக்கிறதா?
இரண்டாவது, சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் (தாங்கள் பார்வையிட்டவையில்), இந்த ஆலயம் தான் ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்ட ஆலயம் என்று உங்களுக்கு தோன்றியது உண்டா?
ரஞ்சித் சின்னுசாமி
அன்புள்ள ரஞ்சித்
ஆலயம் எவருடையது என்னும் நூல் ஆலயங்கள் பற்றி இங்கே என்னிடம் கேட்கப்பட்டு, நான் சொன்ன விடைகளின் தொகுதி. இத்தகைய நூல்களுக்கு நூல் அமைப்பு ஒருமையுடன் இருக்காதென்றாலும் ஒருவகையான சமகாலத்தன்மை இருந்துகொண்டிருக்கும்.
ஆகமமுறையில் முழுமையாக நீடிக்கும் இந்துக் கோயில்கள் எவையுமே இன்றில்லை என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் அலுவலகக் துணைக்கட்டிடங்கள், குட்டி கான்கிரீட் கோயில்கள், பிராகராங்கள், கோபுரங்களுக்கு முன் ‘போர்ட்டிகோ’க்கள் போன்ற பல அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆலயங்களின் ஒட்டுமொத்த சிற்ப அமைப்புகள் பலவகை கம்பிக்கட்டுமானங்களால் சிதறடிக்கப்பட்டுள்ளன.
இந்துக்களுக்கு ஓர் அரிய பழக்கம் உள்ளது. நானறிந்தவரை தனி இல்லங்களுக்கு வாஸ்து பார்ப்பது மரபில் வழக்கமில்லை. பார்க்கவும் முடியாது. பெரும்பாலும் எல்லா கோயில் நகரங்களிலும் ஆலயத்தைச் சுற்றி அமைந்த தெருக்களில் வீடுகள் எல்லா திசைகளை நோக்கியும் அமைந்துள்ளன. கிழக்குநோக்கி வீடு கட்டவேண்டும், வடக்கு நோக்கி வாசல் இருக்கக்கூடாது என்ற விதிகளெல்லாம் செல்லுபடியாவதில்லை. பழைய இல்லங்கள் வாஸ்துபடி அமைந்தவை அல்ல.
ஆனால் மரபான நோக்கில் நகரங்கள் வாஸ்துபடி அமையவேண்டும். கோட்டைகள், அரண்மனைகளுக்கு வாஸ்து தேவை. முக்கியமாக ஆலயம் ஒரு கட்டிடம் அல்ல. அது வாஸ்துசாஸ்திரத்தின்படி க்ஷேத்ரபுருஷன், அதாவது ஆலயமானுடன். ஒரு மானுட உடல் போல தன்னியல்பான முழுமை கொண்டது அது. அதில் ஒரு புதுக்கட்டிடத்தைச் சேர்ப்பதென்பது முதுகு சொறிய வசதி என்று நம் முதுகில் ஒரு சின்னக்கையை அறுவைசிகிழ்ச்சை செய்து பொருத்துவதுபோல.
தமிழ்மக்களுக்கு இன்று நகரம் எந்த முறையுமில்லாமல் கண்டபடி அமைவதில் கவலை இல்லை. எல்லா நகரங்களும் கட்டிடங்களெனும் குப்பைகள் குவிந்த இடமாகவே உள்ளன. எந்த ஒழுங்குமில்லை. ஆலயங்களை அவற்றின் அத்தனை அமைப்புகளையும் சிதறடித்து மாற்றிக்கட்டுவதை நம்மவர் வரவேற்கிறார்கள்.
இன்று தமிழகத்தில் பழைய வாஸ்து முறைப்படி ஆலயங்கள் எதுவும் கட்டப்படுவதில்லை. நான் எவற்றையும் பார்த்ததில்லை. ஓரளவுக்கு ஆலயங்களுக்குரிய ‘டிசைன்’ கான்கிரீட்டில் சில இடங்களில் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அதற்கு எந்த முறையான தத்துவ அடிப்படையும், சிற்ப நெறியும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. அதற்கான அறிஞர்கள், சிற்பிகள், உபாசகர்கள் இன்றில்லை.
ஓர் ஆலயம் வாஸ்துமுறைப்படி புதியதாக அமையவேண்டுமென்றால் அதற்கு ஐந்து படிநிலைகள் தேவை. தரிசனம், தத்துவம், அழகியல், சிற்பம், வழிபாடு ஆகிய நிலைகள் என சொல்லலாம். (கலைச்சொல் தவிர்த்து தமிழில் சொல்கிறேன்)
ஆலயம் என்பது முதலில் ஒரு தரிசனமாக நிகழ்கிறது என்பார்கள். தரிசனம் என்பதை நேரடியாக ‘பார்ப்பது’ என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். ஓர் இறையுணர்தல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஞானிகள், யோகிகள், உபாசகர்களே பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட இயல்பில், ஓர் இறையிருப்பை உணர்கிறார்கள்.அங்கே தன்போக்கில் ஒரு தெய்வத்தை நிறுவுகிறார்கள்.
பலசமயம் வேடர், இடையர் போன்ற எளியமக்களுக்கும் அந்த இறையறிதல் நிகழ்ந்து ஆலயங்கள் உருவாகியுள்ளன. பல ஆலயங்கள் மிக எளியவடிவில் ஒரு மரத்தடியில் தூக்கி வைக்கப்பட்ட வெறும் கற்களாகவே எழுந்துள்ளன. பின்னர் அவை வளர்ந்து பேராலயங்கள்கூட ஆகியுள்ளன. ஓர் ஆலயம் ‘எப்படியோ’ உருவாகி வந்துவிடுகிறது என்பதே பெரும்பாலும் நிகழ்கிறது.
அவ்வண்ணம் நிகழ்ந்த ஓர் ஆலயமே பின்னர் தத்துவார்த்தமாக முறைப்படுத்தப்பட்டு ஆலயவடிவை அடைகிறது. அந்த இறையெழுகை நிகழாவிட்டாலும்கூட தத்துவார்த்தமாக உருவகம் செய்து ஆலயத்தை உருவாக்கலாம். ஆலயம் என நாம் எண்ணும் அமைப்பின் வெளிப்படையான முதல் தொடக்கம் தத்துவமே. அதில் தாந்த்ரீக மரபின் செல்வாக்கு எப்போதுமுண்டு. கேரளத்தில் அதைச்செய்பவர் தந்த்ரி என்றே அழைக்கப்படுகிறார்.
அந்த ஆலயத்தின் தத்துவம் என்ன என்பதை தத்துவஞானியே வரையறை செய்கிறார். அந்த தெய்வம் சுத்தசத்வ குணம் கொண்டதா (உதாரணம் விஷ்ணு) ரஜோகுணம் கொண்டதா (உதாரணம் முருகன், ராமன்) தமோகுணம் கொண்டதா (உதாரணம் காளி) என அவர் வகுக்க வேண்டும். ஒரே தெய்வத்துக்கே இம்மூன்று நிலைகளுமுண்டு. விஷ்ணுவே பள்ளிகொண்டபெருமாளாக சத்வரூபமாகவும், வீரராகவப்பெருமாளாக ரஜோ குணத்திலும், அகோர நரசிம்மராக தமோகுணத்திலும் வெளிப்படலாம். எல்லாமே இறைவடிவே.
ஒவ்வொரு தெய்வத்திக்கும் அதற்கான நிறுவுகை முறைமைகள் உண்டு. அவை இன்று நூல்களாகவே எழுதப்பட்டுமுள்ளன.சம்ஸ்கிருத நூல்கள் பல மலையாளத்திலும் கிடைக்கின்றன. அங்கு எழுவது எந்த தெய்வமோ அதற்கேற்ப அந்த ஆலயத்தின் இயல்புகள் அனைத்தும் உருவாகின்றன. சிற்பமுறை, வழிபாட்டு முறை எல்லாமே அதனடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும். உதாரணமாக ஒரு சத்வ குணமுள்ள தெய்வமிருக்கும் ஆலயத்தில் தமோ குணமுள்ள தெய்வம் இருக்கலாகாது, இருந்தால் அதற்கான தனி அமைப்புகளும் வழிபாடுகளும் தேவை.
அதன்பின் அந்த தலத்திற்கான தலபுராணம் உருவாக்கப்படவேண்டும். அதை கவிஞர்கள் செய்யவேண்டும். அங்குள்ள தொல்கதைகளின் அடிப்படையில் அதை உருவாக்கவேண்டும். அந்த தலத்தின் வரலாறு அங்குள்ள மலை, ஆறு மற்றும் இயற்கைவெளிப்பாடுகள் ஆகியவற்றுடன் இணைந்ததாகவே இருக்கும். அங்குள்ள தொல்குடிமக்களின் வரலாறும் அதனுடன் இணைந்திருக்கும். தலபுராணப்படித்தான் ஆலயமரம், துணைத்தெய்வங்கள் ஆகியவை உருவாகின்றன. அவையே அந்த ஆலயத்தில் சிற்பங்களாக அமையவேண்டும்.
மூன்றாவதாகவே சிற்பி வருகிறார். தத்துவவாதியும் கவிஞனும் தியானம் வழியாகவும் கற்பனை வழியாகவும் உருவாக்கி நுண்வடிவில் நிறுவிவிட்ட ஆலயத்தை அவர் கல், மண் , மரம் ஆகியவற்றால் உருவாக்கவேண்டும். அந்த ஆலயத்தின் வடிவம், துணைச்சன்னிதிகள், சிற்பங்கள் எல்லாமே அந்த நுண்வடிவை ஒட்டியே உருவாகவேண்டும்.
அதன்பின் அந்த ஆலயம் உபாசனை மூலம் தெய்வநிலையாக நிலைநிறுத்தப்பட வேண்டும். வேள்வி என்பது உபாசனையின் ஒரு பகுதி. தொடக்கம் என்று சொல்லலாம். பிற பூசனைகள் எல்லாமே உபாசனையில் வருவன. உபாசனை என்பது ஆலயத்தின் பூசகர்களாலும், அங்குள்ள துறவிகளாலும், பக்தர்களாலும் செய்யப்படுவது. தத்துவம் உருவாக்கிய நெறிகளின்படி உபாசனை அமையவேண்டும். அதன் வழியாகவே கட்டிடம் என்பது ஆலயமாக ஆகிறது. இதுவே முறையான ஆலய நிறுவுதல்.
இவ்வண்ணம் இன்று ஆலயங்கள் நிறுவப்படுகின்றனவா என நீங்களே பார்க்கலாம். நானறிந்து அவ்வாறு எந்த புதிய ஆலயமும் உருவாக்கப்பட்டதில்லை. அவ்வாறு நிறுவியே ஆகவேண்டும் என்பதுமில்லை. எவ்வகையில் வழிபடப்பட்டாலும் அங்கே பக்தி நிகழுமென்றால் அது ஆலயமே ஆகும். பெரும்பாலான நாட்டார் ஆலயங்கள் ஆகமமுறைப்படி அமையாதவைதான். அங்கே இறைநிகழ்வு இல்லை என நம்மால் சொல்லமுடியுமா என்ன?
சிற்பமுறையிலேயே பல புதிய வினாக்கள் உள்ளன. உதாரணமாக மரபான ஆலயங்கள் செங்கல் (இஷ்டிகை) கல் (ஸிலா) மரம் (தாரு) ஆகியவற்றில் அமையலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்க சிற்ப இலக்கணம் வேறுபடும். கான்கிரீட்டில் கட்டப்படும் ஆலயத்தை கல் என கொள்வதா செங்கல் எனக் கொள்வதா? அதை செங்கல் என்றே கொள்ளவேண்டுமென எனக்குப் படுகிறது. ஆனால் பெரும்பாலும் கான்கிரீட் ஆலயங்கள் கல் ஆலயங்களின் வடிவை நகல்செய்தே கட்டப்பட்டுள்ளன. இப்போது கல், மரம் இரண்டிலும் எவரும் ஆலயம் அமைப்பதில்லை.
இன்று நம்மால் ஆகம முறைப்படி ஓர் ஆலயத்தை அமைப்பது மிகக்கடினம். சிற்பவியல் இன்றுமுள்ளது. ஆனால் தாந்த்ரீகமுறை மிகமிக பலவீனமாகி விட்டிருக்கிறது. அதில் நான் காணும் குரல்கள் 90 சதவீதம் போலியானவை, இணையம் வழியாக தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் பலர் பணம் ஏமாற்றும் அறிவிலிகள். ஆலயம் அமைப்பதில் இன்று கவிஞர்களை எவருமே உள்ளே கொண்டு செல்வதில்லை. உபாசனை உண்மையாக நிகழவேண்டும் என கவனம் எடுத்துக் கொள்வதில்லை. பூசகரை ஓர் ஊழியராக மட்டுமே பார்க்கின்றனர்.
நாம் புதிய ஆலயங்களை அமைக்கவேண்டுமா, பழைய ஆலயங்கள் ஏராளமாக உள்ளனவே என கேட்கலாம். ஒன்று, பழைய ஆலயங்களில் திரளும் பெருங்கூட்டம் தவிர்க்கப்படவேண்டும். அப்படி பெருங்கூட்டம் கூடுவதனால்தான் ஆலயங்களின் நெறிகளும் வாஸ்துமுறையும் சீரழிகின்றன. ஆகவே புதிய ஆலயங்கள்தேவை.
அத்துடன் இன்று காலம் மாறிவிட்டிருக்கிறது. இன்றைய வாழ்க்கைக்குரிய தெய்வ வெளிப்பாடுகள் உருவாகி வரவேண்டும். சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் போர்த்தன்மை கொண்ட தெய்வ உருவகங்கள் உருவாயின. பேரரசுகள் நிலைகொண்டபோது கல்யாணசுந்தரர் போன்ற மங்கலத் தெய்வங்கள் ஓங்கின. இன்று கல்வியை, சகவாழ்வை நமக்கு அருளும் தெய்வங்கள் எழவேண்டியிருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தில் கலைமகளுக்கு மட்டுமேயான ஆலயங்கள் இல்லை. நாராயணகுரு கேரளத்தில் வற்கலையில் சாரதாதேவி (கலைமகளின் ஒருவடிவம்) ஆலயத்தை நிறுவினார். அத்தகைய ஆலயங்கள் ஊருக்கு ஒன்று உருவாகவேண்டும்.
அதற்கு ஓர் ஆலயம் எப்படி அமையவேண்டும் என்னும் வழிமுறை நமக்கு தெரிந்திருந்து, அதற்கென நாம் மெய்யாகவே முயன்றால் நல்லது.
ஜெ
கர்ணன்
கர்ணன் நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக் கொண்ட எழுத்தாளர். எழுத்து இதழில் எழுதியிருக்கிறார். மதுரையில் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். தையல்கலைஞராக பணியாற்றினார். அவருடைய கதைகளை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவற்றைப் பற்றி பாராட்டாக என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை என்னும் குற்றவுணர்ச்சி எனக்குண்டு. ஆனால் அவரைப்போன்றவர்கள் ஓர் அறிவியக்கத்தின் ஒட்டுமொத்தத்தில் பங்களிப்பாற்றியவர்கள்
கர்ணன் (எழுத்தாளர்)
கர்ணன் (எழுத்தாளர்) – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

