Jeyamohan's Blog, page 639
January 24, 2023
தமிழ்விக்கியின் உலகம்
வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி.
தமிழ் விக்கி முக்கிய பணி. பெரிய பணி. பெரும் உழைப்பை கேட்கும் பணி என சொல்லியுள்ளீர்கள். அது எத்தனை உண்மை என்பதை வாசிக்கும் போது உணர்கிறேன்.
தமிழ் விக்கி துவங்கப்பட்ட போது அதன் மீது ஈர்ப்பு இல்லை. அது துவங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதனை வாசிக்க வில்லை. இந்த விலக்கத்திற்கு காரணம் பள்ளிகளில் படித்த வாழ்க்கை வரலாறுகளே. ஒருவர் பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு, பெற்றோர் பெயர் என்ற போக்குடன் ஒருவித சலிப்பை அத்தகைய வரலாறுகள் ஏற்படுத்தி விட்டன. அது போலவே தமிழ் விக்கியும் இருக்குமென மனம் முடிவெடுத்து விட்டது போலும்.
சில நாட்கள் வாசிப்பிற்குப்பின் விக்கியை, விக்கிப்பீடியா வுடன் ஒப்பிடுதல் இயல்பாக ஒருபுறம் நடக்க துவங்கி விட்டது. விக்கியில் பதியப்படும் புகைப்படங்கள் அருமை ரகம். ஒரு ஆளுமையின் அதிகம் புழக்கத்தில் இல்லாத படங்களைப் பார்ப்பது புது சுவை. அச்சுவையை ஒவ்வொரு பதிவிலும் விக்கித் தருகிறது.
தி. ஜா பனியன் துண்டோடு உள்ள படம். சுஜாதா பற்றிய பதிவில் நிறைய படங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பதிவில் அண்ணா அமர்ந்திருக்க மேலே மாலையுடன் இருந்த அண்ணாவின் படம் வழைமையான பழக்கத்திற்கு ஒரு மின் அதிர்ச்சி.
விக்கியில் என்னை அதிகம் கவர்ந்தது உசாத் துணை பகுதி. அந்த நீல வண்ண இணைப்புகளைக் கண்டாலே ஒரு குஷி. முக்கியமான விமர்சனங்களை, பார்வைகளை, பேட்டிகளை, இணையதளங்களை இப்பகுதித் தருகிறது.
தமிழ் விக்கி வாசிக்கத் துவங்கியப் பின்பு விரைவாக அதிகமான தகவல்களை அறிந்து கொண்டதாக உணர்கிறேன். முன்பே தெரிந்து கொண்டதிலும் புதிய தகவல்களை அறிய முடிகிறது. உதாரணம் காண்டேகரை முன் மாதிரியாகக் கொண்டு அகிலன் எழுதினார், போன்றவை. (அகிலன் தமிழ் விக்கி)
மற்றொன்று, ஒரு பதிவிற்கு முன்னதாக தாங்கள் தரும் துவக்கப் பத்தி. இது அந்த பதிவிற்குள் ஈர்க்கும் விதமாக உள்ளது. காட்டாக, பல எழுத்தாளர்களை உருவாக்கிய, இலக்கிய மையமாக விளங்கிய வ. ரா அவர்கள் இன்று பாரதியார் வரலாற்றை எழுதியவர் என்று மட்டுமே அறியப் படுகிறார். இத்தகைய ஈர்ப்பு உத்திகள் மிக அவசியம். புதிய வாசகர்கள் உள்ளே வர, குறிப்பாக இளைஞர்களை வாசிப்பின் பக்கம் கொண்டு வர. (வரா தமிழ் விக்கி)
சுருக்கமாக அழகும் கவர்ச்சியும் அடர்த்தியும் கொண்ட அத்தியாவசியமான இலக்கியப் பணி என தமிழ் விக்கியைக் கூறலாம்.
மாணவர்களுக்கும், உயர்கல்வி நிறவனங்களுக்கும் தமிழ் விக்கி சரியான முறையில் சென்று சேருமாயின் அது பெரிய மாற்றத்தை கொண்டு வரும். மாணாக்கர் சலிப்பில்லாமல் விளையாட்டாக நிறைய கற்றுக் கொள்ள தமிழ் விக்கி நல்லதொரு வாய்ப்பு.
ஒரு இணைப்பிற்குள் சென்று விட்டால் இணைப்பிலிருந்து இணைப்பிற்கென நம்மை அழைத்துச் செல்ல விக்கியின் உள்ளே நீல வண்ண வார்த்தைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் தேர்ந்த அபுனைவை வாசித்த அனுபவத்தையும் புனைவு ஒன்றை கடந்து வந்த அனுபவத்தையும் தருகிறது தமிழ் விக்கி
கருப்பங்கிளார் ராமசாமி புலவர் எங்கள் ஊர்க்காரர். அவரை கூடுதல் தகவல்களோடு நெருக்கமாக்கி விட்டது விக்கி. தமிழ் விக்கி வாசகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டிய அட்சயப் பாத்திரம். நன்றி
முத்தரசு, வேதாரண்யம்
***
அன்புள்ள முத்தரசு,
நண்பர்களிடம் நான் கோருவது ஒன்றுண்டு படிக்கவில்லை என்றாலும் தமிழ் விக்கி பதிவுகளுக்கு ஒரு கிளிக் ஆவது அளியுங்கள், நீங்கள் அளிக்கத்தக்க குறைந்தபட்ச பங்களிப்பு அதுதான். ஏனென்றால் எந்த கலைக்களஞ்சியமும் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுவதன் வழியாகவே வாழ்கிறது. ஆனால் அதைக்கூட மூளைச்சோம்பல் கொண்ட பலர் செய்வதில்லை. எச்செயலையும் தகுதியான சிலரை நம்பியே செய்வது என் வழக்கம் என்பதனால் சோர்வுமில்லை.
தமிழ் விக்கி போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தை ஏன் வாசிக்கவேண்டும்? முதல் விஷயம் நாம் பல செய்திகளை அரைகுறையாகவே அறிந்திருப்போம். வேறு நூல்களின் போக்கில் ஒரு குறிப்பாக, உரையாடல்களில் ஒரு வரியாக. அந்தச் செய்திகளை முழுமையாக அறிவதென்பது சரியாக உள்ளிணைப்பு கொடுக்கப்பட்ட ஒரு கலைக்களஞ்சியம் வழியாகவே இயல்வது. தமிழ் விக்கியில் டி.கெ.சிதம்பரநாத முதலியார் என்னும் பதிவை படிக்கும் ஒருவர் அதில் உள்ள இணைப்புகள் வழியாக சென்ற நூற்றாண்டில் திருநெல்வேலியை மையமாக்கி உருவான ஓர் அறிவியக்கத்தையே வாசிக்க முடியும். அ.சீனிவாசராகவன், எஸ்.வையாபுரிப்பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கல்கி, மீ.ப.சோமு , மு.அருணாசலம் என அந்த வலை விரிந்தபடியே செல்லும்.
அதேபோல எத்தனையோ புள்ளிகள் உள்ளன. வட்டுக்கோட்டை குருமடம் ஓர் உதாரணம். சூளை சோமசுந்தர நாயகர் இன்னொரு உதாரணம். பாண்டித்துரைத் தேவர் இன்னொரு உதாரணம். அந்த வாசிப்பு எந்த நூல்வாசிப்பை விடவும் கூர்மையானது. வெறும் தரவுகளாக அவை இந்த கலைக்களஞ்சியத்தில் அளிக்கப்படவில்லை என்பதை வாசகர் காணலாம். துல்லியமான நடையில் இனிய வாசிப்பனுபவமாகவே அமைந்துள்ளன
இன்னொருவகையிலும் வாசிக்கலாம். தேடல் பகுதியில் ஓர் ஆளுமையை தேடி அவரைப்பற்றிய குறிப்புகள் வரும் எல்லா பதிவுகளையும் படிக்கலம. உ.வே.சாமிநாதையர் பற்றிய பதிவுகளை அவ்வாறு வாசிப்பவர் அடையும் வாழ்க்கைச்சித்திரமும் வரலாற்றுச் சித்திரமும் விரிவானவை. அவ்வாறு வாசிக்கும் ஒரு தலைமுறையை நம்பியே தமிழ்விக்கி உருவாகிக்கொண்டிருக்கிறது
இன்று தமிழ் விக்கியின் பங்களிப்பு என்ன என்பது தெளிவாகவே புலப்படத் தொடங்கிவிட்டிருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் முன்பு போல இன்றி சற்று மேம்பட்டுள்ளன. தமிழ் விக்கி மறக்கப்பட்டுவிட்ட படைப்பாளிகளை மீண்டும் பேசுபொருளாக்குகிறது. உதாரணமாக கிருபா சத்தியநாதன் எழுதிய கமலா ‘கமலம்’ என்ற தலைப்பில் மலர் புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது. ம.பெ.சீனிவாசனின் ஆழ்வார்களும் தமிழ் மரபும் என்னும் நூல் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பேரன் ‘ஆண்டாள்’ சொக்கலிங்கம் தமிழ் விக்கி பதிவின் வழியாக தன் தாத்தாவின் முழுமையான பங்களிப்பை அறிந்துகொண்டதாகவும், அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கவிருப்பதாகவும் சொன்னார். இன்னும் பல நிகழும்.
ஜெ
***
குகநாதீஸ்வரர்
[image error]கன்யாகுமரி செல்பவர்கள் பெரும்பாலும் செல்லாத ஓர் இடம் கன்யாகுமரி குகநாதீஸ்வரர் ஆலயம். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்று. சோழர் காலத்த்துக்கு முந்தியது. தலபுராணத்தில் இது குகன் தன் தந்தையை வழிபட்ட இடம் எனப்படுகிறது. ஆனால் ஆலயத்தின் பழைய கல்வெட்டுகளில் பொந்தீஸ்வரர் என்றே உள்ளது. குகையிலுறையும் ஈஸ்வரன் என்ற பொருளில்.
இந்த ஆலயம் சைவத்தின் வெளிவட்டத்தைச் சேர்ந்த அகப்புறச்சமய மரபுகளில் ஒன்றைச் சார்ந்ததாக இருக்கலாம். சிவனை குகையில் உறைபவன் என்று வழிபடுவது அவர்களின் வழக்கம். கர்நாடக வசனப் பாடல்களில் சிவன் குகையிலுறைபவன் என்றே சொல்லப்படுகிறான். பின்னர் ஆலயம் மைய சைவமரபால் ஏற்கப்பட்டபோது முருகன் வழிபட்ட இடம் என கதை மாறுதலடைந்திருக்கலாம்.
குமரிமாவட்டத்தில் இவ்வாறு சோழர்காலத்தைய, அல்லது அதற்கு முந்தைய சிவன் ஆலயங்கள் பல பின்னர் விரிவாக்கம் செய்யப்படாமல், சிற்றாலயங்களாகவே உள்ளன. அவற்றை தொகுத்து ஆராயமுடிந்தால் இங்கிருந்த சைவ வழிபாட்டுமுறை பற்றிய ஒரு சித்திரம் அமையலாம்
குகநாதீஸ்வரர் ஆலயம்
குகநாதீஸ்வரர் ஆலயம் – தமிழ் விக்கி
செகோவ் கதை
செக்கோவின் கதை எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கதைகளின் மாதிரியில் எழுதப்பட்ட பல்லாயிரம் கதைகள் வந்துவிட்டன. இன்னமும் அக்கதைகள் பல அதே உயிர்ப்புடன் உள்ளன. நாடகக்காரி ஓர் உதாரணம்
மொழியாக்கக் கதைகளுக்கான இந்த தளத்திலுள்ள பிறகதைகள் எவையும் இந்த வாசிப்பின்பம் அளிக்கவில்லை. அவை மொழியாக்கத்திற்குரிய செயற்கையான நடையுடன் உள்ளன. புதுமைப்பித்தனின் மொழியாக்கம் அவருடைய மொழிநடையும் ஊடுருவி இயல்பாக உள்ளது.
விஷ்ணுபுரம் பதிப்பகம், கனவுகள் – கடிதம்
விஷ்ணுபுரம் பதிப்பகம் சிறந்த ஒரு முயற்சி. வரும் ஆண்டுகளில் அது பிற எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டு ஓர் அறிவியக்கமாகவே முன்னகருமென நினைக்கிறேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு இருக்கும் மிகச்சிறந்த பலம் உங்களுடைய இணையதளம்தான். தமிழில் இன்று முதன்மையான இலக்கிய இதழ் என்றால் அது ஜெயமோகன். இன் இணையப்பக்கமே. மிக அதிகமானவர்கள் வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள். எந்த நூலாயினும் இதில் வெளிவந்தால்தான் கவனம் பெறுகிறது. அதோடு உங்களுக்கு அண்மையில் உருவாகியிருக்கும் திரைப்படப்புகழும் பெருமளவுக்கு இதற்கு உதவுகிறது. அந்தப்புகழின் ஒரு பகுதியைத்தான் இந்த இணையப்பக்கம் வழியாக சக எழுத்தாளர்களுக்கு வழங்குகிறீர்கள் என நினைக்கிறேன். அது தொடரவேண்டும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம் நூல்களை வெளியிடுமென்றால் அது ஜெயமோகனின் பரிந்துரைகள் என்றே வாசகர்களால் கொள்ளப்படும். ஆகவே அதற்கான கவனம் இருந்தாகவேண்டும். புத்தகங்கள் வெறுமே வணிக நோக்கத்துடனோ தாட்சண்யத்துக்காகவோ வெளியிடப்படக்கூடாது. அந்த நூல்களுக்கான விமர்சனம், வாசிப்பு எல்லாமே இந்த இணையதளத்திலும் நிகழவேண்டும். அது மிகச்சிறந்த ஓர் அறிவியக்கமாக இதை ஆக்கும். இளம் படைப்பாளிகளின் ஒரு வரிசையை உருவாக்கும். வாழ்த்துக்கள்
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள பாஸ்கர்
எங்கள் வழிமுறை என்பது கனவுகளுடன் இருப்பது. ஆனால் மிகச்சிறிய அளவில் செய்து பார்ப்பது. இவ்வாண்டு பொதுக்கல்வி சார்ந்தும், கல்லூரிகளில் இலக்கிய அறிமுகம் சார்ந்தும்கூட பல பணிகளை முன்னெடுப்பதாக உள்ளோம்
ஜெ
நீல பத்மநாபன், யதார்த்தம் – கடிதம்
அன்புள்ள ஜெ
நீல பத்மநாபன் பற்றிய விக்கி பக்கம் படித்தேன். மிக மிக விரிவான பதிவுகள். பழைய புகைப்படங்களின் ஆவணமதிப்பு இத்தகைய பதிவுகள் வழியாகவே தெரிகிறது. தலைமுறைகள் எழுதும்போது நீப எப்படி இருந்திருப்பார் என்பதை பார்ப்பது ஓர் அற்புதமான அனுபவம்.
நீல பத்மநாபனின் எழுத்து எல்லாருக்கும் உரியது அல்ல. கதைகளை படிக்கும் சுவாரசியத்துக்காக அதை படிக்கமுடியாது. கதையோட்டம் பலவீனமானது. நிகழ்ச்சிகளே இருக்கும். நீப நிகழ்ச்சிகளை புனைவதில்லை. யதார்த்தம் மட்டுமே இருக்கும்.
இளமையில் நான் நிறைய பரபரப்பு நாவல்களை வாசித்திருக்கிறேன். சாகசங்கள், கொலைகள், காதல், குடும்பச்சண்டைகள். அப்புறம் நவீன இலக்கியம். நவீன இலக்கியத்தை நான் சமகாலத்தில் இருந்து வாசித்தேன். கொடிய சித்திரங்கள், நெகெட்டிவான சித்திரங்கள். அதெல்லாம் இலக்கியம் என்று நம்பினேன். கடுமையான துக்கம் என்றால்தான் இலக்கியம் என்றே நினைத்தேன்.
எல்லா நவீன இலக்கியங்களும் என்னை வெறுமையிலேயே கொண்டுசென்று சேர்த்தன.’வாழ்வின் அபத்தம்’ என்றுதான் நூல்களின் பின்னட்டையில் இருக்கும். அதையெல்லாம் பார்த்தாலே எனக்கு அன்று ஆர்வமாக இருக்கும். ஆனால் 2008 வாக்கில் எனக்கு ஒரு மனச்சோர்வு நோய் வந்தது. பல காரணங்கள். முக்கியமாக வியாபாரம், குடும்பம்.
அப்போது அந்த வாழ்வின் அபத்தம் என்ற சொல்லை பார்த்தாலே தீயாய் எரியும். அந்நாட்களில் எம்விவியின் காதுகள் வாசித்து எனக்கே கொஞ்சம் ஸ்கிசோப்ரினியா வந்தது போல உணந்தேன். 2011 ல் உங்கள் தளம் வழியாக அறிமுகமானவர் நீல பத்மநாபன். அவரை வாசித்தது என்பது ஒரு மகத்தான அனுபவம்,
என் மனநிலைக்கு மிக உகந்த எழுத்தாக இருந்தது. நேரடியான எதார்த்தம். எதையும் மிகையாக்கவில்லை. நாடகமாக ஆக்கவில்லை. எல்லாமே அப்படியே வாழ்க்கையில் கண்முன் நடைபெறுவதுபோல. துக்கம்,சலிப்பு எல்லாம் உண்டு. ஆனால் வெறுமை இல்லை. நான் வாசித்த முதல் நாவல் உறவுகள். அதை வாசித்து முடித்தபோது வாழ்க்கைமேல் நம்பிக்கையும் பிடிப்பும் உருவாந்து. பொய்யான எதையும் அவர் சொல்லவில்லை. எல்லா எதிர்விஷயங்களையும் சொல்கிறார். ஆனால் உறவுகளின் அர்த்தமென்ன என்று காட்டிவிட்டார்.
அதன்பின் நீப எழுதிய நாவல்களை வாசித்தேன். நீப எனக்கு தமிழில் ஆதர்ச எழுத்தாளர். எழுத்தாளர்களிடம் பொய் சொல்லாதீங்க பாஸ் என்று சொல்லும் வாசகர்களுக்கான எழுத்து அது. நன்றி அவரை அறிமுகம் செய்தமைக்கு.
ஆர்.மாணிக்கவாசகம்
January 23, 2023
டெல்லியில் மொழியாக்கக் கருத்தரங்கு
டெல்லியில் சார்பில் நடைபெறும் மொழியாக்கங்கள் பற்றிய தேசியக் கருத்தரங்கில் ஜனவரி 24 ஆம் தேதி நானும் பிரியம்வதாவும் பேசுகிறோம். என் Stories of the True நூலின் மொழியாக்கச் சவால்கள் பற்றிய அரங்கு எங்களுடையது
இரா. முருகன் – நூலாசிரியரை ஏன் சந்திக்கவேண்டும்?
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். க.நா.சு உரையாடல் அரங்கு வரிசையில் மூன்றாவது நிகழ்வாக எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுடனான உரையாடல் சனிக்கிழமை அமெரிக்க காலை இனிதே நடந்து நிறைவேறியது. ஸுமில் 45 வாசகர்கள், யூட்யூபில் 15 வாசகர்கள் என 60 பேர் கலந்துகொண்டனர். அந்த யூட்யூபில் ஒளிந்துகொண்டு ரசித்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களும் என்று பின்னர் தெரிந்துகொண்டேன். நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னர் பேசியபொழுது , இரா. முருகன் அவர்கள் அ. முத்துலிங்கம் அவர்கள் வந்து கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு கலைஞன் நினைத்தால் இன்னொரு கலைஞனுக்குத் தூது செல்ல குருவி ஒன்று இருக்குமென நினைக்கிறேன்.
நண்பர் வெங்கட் ப்ரஸாத்தின் புதல்வி வைஷ்ணவி ‘கண்டநாள் முதலாய்’ பாடி நிகழ்வை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார். எப்பொழுதும் குறும்பாக ஒரு புன்னகையுடன் பேசும் எழுத்தாளர் காளிப்ரஸாத், ராமோஜெயம் நாவலை முன்வைத்துப் பேசும்பொழுது கதைநாயகனுக்கும் , கண்டநாள் முதலாய் பாடலுக்கும் உள்ளப் பொறுத்தத்தை வைத்துப் பேச கூட்டம் ஈர்ப்புடன் கேட்டது. அவர் இந்த ஒரு நாவலை முன்வைத்துப் பேசினாலும், இரா. முருகனின் எழுத்துக்களுக்கு ஒரு ஒட்டுமொத்தப் பார்வையை புதுவாசகனுக்கு கொடுப்பதாக இருந்தது. இந்த உரையை நிகழ்த்தும் ஒரு நாள் முன்னர், காளிப்ரஸாத் ஒரு லௌகீக கணினி வல்லுனராக இந்தக் கணினி ஓடாவிட்டால் இன்னொரு கணினியை கொண்டுவரும் பணியில் (Disaster Recovery) காலை மூன்று மணிவரை விழித்திருந்தார் என்பதை நான் அறிவேன். இலக்கியம் ஒவ்வொரு அங்குலமாக முன்னகர்வது இப்படிப்பட்ட வாசகர்களின் அர்ப்பணிப்பில்தான். அடுத்து உரையாற்றியது விசு. செருப்பைக் கழற்றிவிட்டு கணினிகள் இருக்கும் அறைக்குள் நுழைந்து தன்னைப்போல கணினி கற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கையை முதன் முதலில் வாசகர்களுக்கு கொண்டு வந்தவர் என்று ‘மூன்று விரல்’ நாவல் பற்றி மிகச் சுருக்கமான கச்சிதமான உரையைக் கொடுத்தார். காளிப்ரஸாத் எடுத்துக்கொண்ட நாவலிலும் மூன்று பெண்கள் பின்னால் கதாநாயகன், விசு எடுத்துக்கொண்ட கதையிலும் மூன்று பெண்கள், கதாநாயகன் என வர, டெக்னிகல் சிக்கல் வரும் சமயம், நண்பர்கள் அவர்களைக் கலாய்த்தார்கள்.
மனிதனின் அடிப்படைத் தேவை , இச்சைகளில் ஒன்றான உணவு இரா. முருகன் நாவல்களில், நன்றாகப் பேசப்பட்டிருப்பதால், மூன்று நான்கு நண்பர்கள் அதையே கேள்வி கேட்கத் துடியாக துடித்தார்கள். சங்கர் ப்ரதாப், மிளகு நாவலில் அவர் சொல்லும் பண்டங்களை முன்வைத்து கேள்வி கேட்க, இரா. முருகனின் பதில் அனைவரையும் திருப்தி தருவதாக இருந்தது. வாசகர் ஜெயஸ்ரீ, இரா. முருகன் எழுத்துக்களில் எழுபத்தைந்து சதத்திற்கு மேல் வாசித்தவர். சில நாவல்களை பலமுறை வாசித்திருக்கிறார். அவர், எழுத்தாளரிடம், மாய எதார்த்த நாவல்களை எழுத உங்களுக்கு முன்னோடி யார் என்று கேட்டார். கேப்ரியல் கார்சியா மட்டுமல்ல, நம்ம மஹாபாரதமே மாய யதார்த்ததிற்கு வழிகாட்டி என்று உதாரணங்களுடன் விளக்கினார். கவிதைகள், சிறுகதை, குறு நாவல், நாவல்கள், நாடகங்கள், என எழுதும் நீங்கள், வடிவத்தை தேர்ந்தெடுக்கும் காரணிகள் என்ன என்று விசு தனது கேள்வியை முன்வைத்தார். இரா. முருகன், இயல்பாக அதுவே நடந்தேறும் என தன்னடக்கத்துடன் பதில் சொன்னார்.
இவ்வளவு நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியில், ஒரு நண்பர், ஒரே ஒரு நாவலை மட்டும் வாசித்துவிட்டு, நாவலில் கருத்து, எடுத்துச்செல்ல ஒன்று வேண்டும் என்று உபதேசம் செய்தார். உரையாடலை மட்டுறுத்தும் வல்லுனர்கள் கொஞ்சம் சங்கடத்தில் இருக்க, இரா. முருகன், ஆமாம், எடுத்துச் செல்ல ஒன்று இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன் என்று பொறுமையாக பதில் சொன்னார்.
இரா.முருகனின் எழுத்துக்களைப் போல அவரது பதில்களிலும் நகைச்சுவை பகடி கலந்திருந்தது. அந்தக் காலத்தில் இலக்கிய விவாத மேடைகள் எப்படி இருந்தது என்ற ராஜன் சோமசுந்தரத்தின் கேள்விக்கு, ம.வே. சிவக்குமார், இலக்கிய விவாத மேடைகளுக்குச் சென்றால், செருப்புகள் காணாமல் போய்விடும் என்று சொல்வார் என்றார். நகைச்சுவையும், பகடியும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு, சொந்த ஊரான சிவகங்கையிலுருந்துதான், அதுவும் புண்படாமல் சொல்லும் நகைச்சுவை என்று குறிப்பிட்டார்.
இரா. முருகனின் கிட்டத்தட்ட மொத்தப் படைப்புகள் கிண்டிலில் கிடைக்கிறது. ‘மிளகு’ நாவலில் சில அத்தியாயங்கள் மட்டும் ‘சொல்வனம்’ இணைய இதழில் கிடைக்கிறது. அதில் பாதி அல்லது முக்கால் கிணறு தாண்டிய வாசகர்கள் மிச்சம் இருக்கும் அத்தியாயங்களுக்காக காத்திருக்கிறார்கள். ‘சொல்வனம்’ இதழ் இதை ஒரு விமர்சனமாக எடுத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் அத்தியாயங்களை பிரசுரம் செய்யலாம். முழுக்க முடித்தபிறகு விமர்சனங்கள் குவியும் என நினைக்கிறேன்.
நிகழ்வு முடிந்த கையோடு , நன்றி சொல்ல அழைத்த, வாசிக்கும் பழக்கமுடைய குழந்தைகள் உடைய அமெரிக்கப் பெற்றோர்களுக்கு, ‘Ghosts of Arasur’ ஆங்கிலத்தில் உள்ளது என்று சொன்னேன்.
ஒரு காரியத்தை தொடர்வதில் முதல் மூன்று முக்கியம். அதைக் கடந்துவிட்டோம். மார்ச் மாதத்தில் இன்னொரு ஆளுமையுடன் பேசுவதற்கு , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களும் வாசகர்களும் தயாராகிக்கொண்டுள்ளார்கள்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்.
அன்புள்ள ஆஸ்டின் சௌந்தர்
இணைய வசதி இல்லாத மலையில் இருந்தமையால் நிகழ்வில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. நிகழ்வு மிகச்சிறப்பாக அமைந்திருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். ஓர் எழுத்தாளருடனான இந்தவகையான கலந்துரையாடல்கள் ஏன் தேவை என இன்னும்கூட நம் வாசகர்கள் பலர் புரிந்துகொள்ளவில்லை. எழுத்து போதாதா, எதற்காக ஆசிரியருடனான உரையாடல் என சிலர் கேட்பதுண்டு. இன்னும் சிலர் ‘author is dead. ஆசிரியர் முக்கியமல்ல, படைப்பே முக்கியம் என்று வெள்ளைக்காரனே சொல்லிவிட்டான்’ என்று சொல்வதையும் கேட்கிறேன்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆசிரியரை வாசகர்கள் சந்திப்பது. ஆசிரியரே தன் நூலை வாசகர்களுக்கு வாசித்துக் காட்டுவது மிகப்பெரிய இயக்கமாக நிகழ்கிறது. உண்மையில் அது பெருந்தொழிலாகவே நடைபெறுகிறது. ஒவ்வொரு பல்கலையிலும் நாள்தோறும் இத்தகைய உரையாடல்கள் நிகழ்கின்றன. குடியிருப்புகளில், மனமகிழ் மன்றங்களில், நூலகங்களில் சந்திப்புகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, உலகம் முழுக்க இருந்து அயல் எழுத்தாளர்களும் வந்து அச்சந்திப்புகளில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். நானே இரு உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறேன்
இந்த உரையாடல்கள் ஏன் நிகழ்கின்றன? முதல் காரணம், எந்நிலையிலும் வாசிப்பு என்பது அதை எழுதிய எழுத்தாளருடனான மானசீகமான உரையாடல்தான். அதை வாசகனால் தவிர்க்கவே முடியாது. நமக்கு எவரென்றே தெரியாத எழுத்தாளன் என்றால் நாம் ஒருவரை உருவகம் செய்துகொள்கிறோம். கம்பனுக்கும் இளங்கோவுக்கும் வள்ளுவருக்கும்கூட நம் அகத்தில் முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்நிலையில் வாழும் எழுத்தாளன் என்பவன் என்பவனுடன் உரையாடும் வாய்ப்பை ஏன் தவிர்க்கவேண்டும்? அது நமக்கு மேலதிகமான வாசிப்பை அளிக்குமென்றால் அது எவ்வளவுபெரிய கொடை!
எழுத்தாளனின் முகம் படைப்பை மிக அணுக்கமாக ஆக்குகிறது. அவன் குரலும் ஆளுமையும் அவனுடைய மொழிநடையுடன் மிக விரைவாக நாம் இணக்கம் கொள்ள வைக்கின்றன. நல்ல வாசகர்களுக்குத் தெரியும், ஓர் எழுத்தாளனின் தனிநடைக்குள் நுழைந்து அதை நம் அகமொழியுடன் இணைப்பதுதான் வாசிப்பின் முதற்பெரும் சவால் என. மிகமிக ‘சாதாரணமான ‘ ‘அன்றாடத்தன்மை கொண்ட’ ‘தரப்படுத்தப்பட்ட’ மொழியில் எழுதும் எழுத்தாளரிடம் நமக்கு இச்சிக்கல் இல்லை. ஆனால் தனிநடை கொண்ட எழுத்தாளரின் உலகுக்குள் நுழைவதற்கு நமக்கு ஒரு தடை உள்ளது. அதை விலக்கி அவரை அணுகச்செய்வது அவருடைய ஆளுமை நமக்கு அறிமுகம் ஆவதுதான். எழுத்தாளனின் புகைப்படங்கள், பேட்டிகள், தனிவாழ்க்கைச் செய்திகள் எல்லாமே அதற்கு உதவியானவை. சுஜாதாவை நாம் அவருடைய பேட்டிகள், குறிப்புகள் வழியாக எத்தனை அணுக்கமாக அறிந்தோம் என எண்ணிப்பாருங்கள். சுஜாதாவின் தனி நடை அவருடைய முகத்துடன் இணைந்து, அவருடைய குரலாகவே நம்முள் பதிவாகியிருக்கிறது.
இரா.முருகன் தமிழில் ஒரு தனி நடை கொண்ட எழுத்தாளர். நையாண்டியும், புனைவு விளையாட்டும், தன்னைத்தானே மறுத்துச்செல்லும் கதைப்பார்வையும் கொண்டவர். அவருடைய உலகுக்குள் நுழைய அவருடனான ஓர் உரையாடல் மிகமிக உதவியான ஒன்று. ஓர் உரையாடலுக்குப் பின் அவருடைய மொழிநடை நமக்கு மிக அணுக்கமாகிவிட்டிருப்பதை, அவருடைய பகடிகள் நமக்கு உடனே பிடிகிடைப்பதைக் காணலாம். க.நா.சு. உரையாடல் அரங்கு அவ்வகையில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்னும் பலர் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். யூ.டியூபில் உரையாடல் உள்ளது. அது நல்லதுதான், ஆனால் நேரில் பார்த்து உரையாடும் வாய்ப்பை இணையம் வழங்கும்போது அதை தவறவிடுவது சரியானது அல்ல.
இரா முருகனை முன்னர் வாசித்தவர்களுக்கு மட்டும் அல்ல, இனிமேல் வாசிக்கவிருப்பவர்களுக்கும் இந்தவகையான உரையாடல்கள் மிக உதவியானவை. இவற்றில் கிடைக்கும் ஒரு சிறு ஆர்வம் கொக்கி போல அவருடைய உலகுக்குள் நம்மை கொண்டுசெல்லக்கூடும். சட்டென்று நம் உலகுக்குச் சமானமான இன்னொரு புனைவுலகு நம்மை நோக்கி வந்துவிடக்கூடும்.
இரா முருகன் இன்று தமிழில் எழுதும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நம் வரலாற்றுணர்வை கலைத்து விளையாடும் அவருடைய புனைவுலகு மிகக்கூரிய வாசிப்புக்குரியது.
ஜெ
இந்திரா சௌந்தரராஜன்
இந்திரா சௌந்தரராஜன் தமிழ் வணிக இலக்கிய மரபின் கடைசி நட்சத்திரம். ஆனால் அச்சு ஊடகம் வழியாக அவர் புகழ்பெறவில்லை, தொலைக்காட்சி தொடர்கள் வழியாக வாசிப்புக்கு வாசகர்களை கொண்டு வந்தார். பொதுவாக தமிழில் அதிகமாக எழுதப்படாத ஓர் உலகை – சித்தர்கள் மற்றும் மறைஞானத்தின் களத்தை- இலக்கியத்தில் கொண்டுவந்தார். இன்று ஆன்மிக உரைகள் ஆற்றுபவராக மாறியிருக்கிறார்.
இந்திரா சௌந்தர்ராஜன்
இந்திரா சௌந்தர்ராஜன் – தமிழ் விக்கி
காவியங்கள், தமிழ் விக்கி, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
தமிழ் விக்கியில் ரகுவம்சம் பற்றிய கட்டுரை அருமையானதாக இருந்தது. ஒரு முழுமையான அறிமுகம். காவியத்தின் அமைப்பு, மரபு, அழகு எல்லாமே வெளிப்பட்ட கட்டுரை. இத்தகைய கட்டுரை கல்வித்துறைக்குக் கூட மிகவும் உதவியானவை. மற்ற காவியங்கள் பற்றியும் இப்படிப்பட்ட விரிவான கட்டுரைகள் தேவை.
கி. நிலா
*
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கியின் கட்டுரைகளை வாசிக்கிறேன். கட்டுரைகளில் இருக்கும் தகவல்செறிவும், கூடவே கட்டுரைகள் அமைந்திருக்கும் கச்சிதமான அமைப்பும் மிகமிக ஆச்சரியமூட்டுபவை. ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை எப்படி இருக்கவேண்டும் என்பதே இப்போதுதான் தெரிகிறது.
அருண்குமார்
கலேவலா தமிழ் விக்கி உதயணன் தமிழ் விக்கி உலகுடையபெருமாள் கதைநீ தொட்டால்…
நான் ஐந்தாம்கிளாஸ் படிக்கும்போது வந்தபடம். இப்பாடல் அப்போதே புகழ்பெற்றது. ஏராளமான கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் கல்யாணவீடுகளில் ஒலித்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ‘உங்கள்’ கே.எஸ்.ராஜாவுக்கு பிரியமானது. இந்தப்படத்தை அதன்பின் இரண்டாம் வெளியீட்டில் 1979 ல்தான் பார்த்தேன். நான் அப்போது கல்லூரி சென்றுவிட்டிருந்தேன்.
இப்போது பார்க்கையில் இந்தப்பாட்டை எடுத்திருக்கும் விதம் ஆச்சரியமூட்டுகிறது. மிகமிக எளிமையாக, எந்த நடன அசைவுமில்லாமல், ஒரே இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் வலைத்தொட்டிலில் இருந்து எழவே இல்லை. அந்த இடத்தில் சாத்தியமான எல்லா காமிராக்கோணங்களும் வைக்கப்பட்டுள்ளன. நடிப்பு மிகமிக மிதமாக, செயற்கை முகபாவனைகளே இல்லாமலிருக்கிறது. எம்.ஜி.ஆர் கே.ஆர்.விஜயா இருவரின் சிரிப்பும் அழகாக உள்ளன. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தமான காட்சியமைப்புக்கும் இக்காட்சியின் அழகியலுக்கும் சம்பந்தமே இல்லை.
இந்த ஆச்சரியத்தை சினிமாவில் மிகமூத்த ஒருவரிடம் கேட்டேன். தேவர் படங்களில் முன்பு எம்.ஏ.திருமுகம் இயக்குநர். (பின்னர் தியாகராஜன்) அவர் தேவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாப்பிள்ளை என்றுதான் படப்பிடிப்பு அரங்கிலேயே சொல்வார்கள். அடிப்படையில் அவர் ஒரு நல்ல எடிட்டர். வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு வகையில் எடுக்கப்பட்ட காட்சிகளை அவர்தான் ஒரே ஓட்டமான, சுருக்கமான காட்சிகளாக வெட்டிஒட்டுவார். தேவர்படங்களே எடிட்டிங்கில் உருவானவை. (எஸ்.பி.முத்துராமனும் அடிப்படையில் எடிட்டர்தான்)
அன்று எம்.ஜி.ஆர் பல காட்சிகளை இயக்குவார். உதவி இயக்குநர்கள் இயக்குவார்கள். சண்டைக்காட்சிகளை சண்டைநிபுணர்களும், பாடல்காட்சிகளை நடன இயக்குநர்களும் இயக்குவது இன்றும்கூட சாதாரணம். இந்தக் காட்சி நடன இயக்குநர் தங்கப்பனால் அமைக்கப்பட்டிருக்கலாம். அவருக்கு சினிமா சார்ந்த நுண்ணுணர்வு மிகுதி. எம்.ஜி.ஆருடன் அவருக்கு நல்ல நெருக்கமும் உண்டு.
தங்கப்பனின் உதவியாளராக கமல் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர்களுக்கிடையே இருந்த அணுக்கமே தங்கப்பன் மாஸ்டர் வழியாகத்தான்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

