விஷ்ணுபுரம் பதிப்பகம், கனவுகள் – கடிதம்
விஷ்ணுபுரம் பதிப்பகம் சிறந்த ஒரு முயற்சி. வரும் ஆண்டுகளில் அது பிற எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டு ஓர் அறிவியக்கமாகவே முன்னகருமென நினைக்கிறேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு இருக்கும் மிகச்சிறந்த பலம் உங்களுடைய இணையதளம்தான். தமிழில் இன்று முதன்மையான இலக்கிய இதழ் என்றால் அது ஜெயமோகன். இன் இணையப்பக்கமே. மிக அதிகமானவர்கள் வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள். எந்த நூலாயினும் இதில் வெளிவந்தால்தான் கவனம் பெறுகிறது. அதோடு உங்களுக்கு அண்மையில் உருவாகியிருக்கும் திரைப்படப்புகழும் பெருமளவுக்கு இதற்கு உதவுகிறது. அந்தப்புகழின் ஒரு பகுதியைத்தான் இந்த இணையப்பக்கம் வழியாக சக எழுத்தாளர்களுக்கு வழங்குகிறீர்கள் என நினைக்கிறேன். அது தொடரவேண்டும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம் நூல்களை வெளியிடுமென்றால் அது ஜெயமோகனின் பரிந்துரைகள் என்றே வாசகர்களால் கொள்ளப்படும். ஆகவே அதற்கான கவனம் இருந்தாகவேண்டும். புத்தகங்கள் வெறுமே வணிக நோக்கத்துடனோ தாட்சண்யத்துக்காகவோ வெளியிடப்படக்கூடாது. அந்த நூல்களுக்கான விமர்சனம், வாசிப்பு எல்லாமே இந்த இணையதளத்திலும் நிகழவேண்டும். அது மிகச்சிறந்த ஓர் அறிவியக்கமாக இதை ஆக்கும். இளம் படைப்பாளிகளின் ஒரு வரிசையை உருவாக்கும். வாழ்த்துக்கள்
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள பாஸ்கர்
எங்கள் வழிமுறை என்பது கனவுகளுடன் இருப்பது. ஆனால் மிகச்சிறிய அளவில் செய்து பார்ப்பது. இவ்வாண்டு பொதுக்கல்வி சார்ந்தும், கல்லூரிகளில் இலக்கிய அறிமுகம் சார்ந்தும்கூட பல பணிகளை முன்னெடுப்பதாக உள்ளோம்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

