இரா. முருகன் – நூலாசிரியரை ஏன் சந்திக்கவேண்டும்?

இரா முருகன் – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். க.நா.சு உரையாடல் அரங்கு வரிசையில் மூன்றாவது நிகழ்வாக எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுடனான உரையாடல் சனிக்கிழமை அமெரிக்க காலை இனிதே நடந்து நிறைவேறியது. ஸுமில் 45 வாசகர்கள், யூட்யூபில் 15 வாசகர்கள் என 60 பேர் கலந்துகொண்டனர். அந்த யூட்யூபில் ஒளிந்துகொண்டு ரசித்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களும் என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.  நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னர் பேசியபொழுது , இரா. முருகன் அவர்கள் அ. முத்துலிங்கம் அவர்கள் வந்து கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு கலைஞன் நினைத்தால் இன்னொரு கலைஞனுக்குத் தூது செல்ல குருவி ஒன்று இருக்குமென நினைக்கிறேன்.

நண்பர் வெங்கட் ப்ரஸாத்தின் புதல்வி வைஷ்ணவி ‘கண்டநாள் முதலாய்’ பாடி நிகழ்வை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார். எப்பொழுதும் குறும்பாக ஒரு புன்னகையுடன் பேசும் எழுத்தாளர் காளிப்ரஸாத், ராமோஜெயம் நாவலை முன்வைத்துப் பேசும்பொழுது கதைநாயகனுக்கும் , கண்டநாள் முதலாய் பாடலுக்கும் உள்ளப் பொறுத்தத்தை வைத்துப் பேச கூட்டம் ஈர்ப்புடன் கேட்டது. அவர் இந்த ஒரு நாவலை முன்வைத்துப் பேசினாலும், இரா. முருகனின் எழுத்துக்களுக்கு ஒரு ஒட்டுமொத்தப் பார்வையை புதுவாசகனுக்கு கொடுப்பதாக இருந்தது. இந்த உரையை நிகழ்த்தும் ஒரு நாள் முன்னர், காளிப்ரஸாத் ஒரு லௌகீக கணினி வல்லுனராக இந்தக் கணினி ஓடாவிட்டால் இன்னொரு கணினியை கொண்டுவரும் பணியில் (Disaster Recovery) காலை மூன்று மணிவரை விழித்திருந்தார் என்பதை நான் அறிவேன். இலக்கியம் ஒவ்வொரு அங்குலமாக முன்னகர்வது இப்படிப்பட்ட வாசகர்களின் அர்ப்பணிப்பில்தான். அடுத்து உரையாற்றியது விசு. செருப்பைக் கழற்றிவிட்டு கணினிகள் இருக்கும் அறைக்குள் நுழைந்து தன்னைப்போல கணினி கற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கையை முதன் முதலில் வாசகர்களுக்கு கொண்டு வந்தவர் என்று ‘மூன்று விரல்’ நாவல் பற்றி மிகச் சுருக்கமான கச்சிதமான உரையைக் கொடுத்தார். காளிப்ரஸாத் எடுத்துக்கொண்ட நாவலிலும் மூன்று பெண்கள் பின்னால் கதாநாயகன், விசு எடுத்துக்கொண்ட கதையிலும் மூன்று பெண்கள், கதாநாயகன் என வர, டெக்னிகல் சிக்கல் வரும் சமயம், நண்பர்கள் அவர்களைக் கலாய்த்தார்கள்.

மனிதனின் அடிப்படைத் தேவை , இச்சைகளில் ஒன்றான உணவு இரா. முருகன் நாவல்களில், நன்றாகப் பேசப்பட்டிருப்பதால், மூன்று  நான்கு  நண்பர்கள் அதையே கேள்வி கேட்கத் துடியாக துடித்தார்கள். சங்கர் ப்ரதாப், மிளகு நாவலில் அவர் சொல்லும் பண்டங்களை முன்வைத்து கேள்வி கேட்க, இரா. முருகனின் பதில் அனைவரையும் திருப்தி தருவதாக இருந்தது. வாசகர் ஜெயஸ்ரீ, இரா. முருகன் எழுத்துக்களில் எழுபத்தைந்து சதத்திற்கு மேல் வாசித்தவர். சில நாவல்களை பலமுறை வாசித்திருக்கிறார். அவர், எழுத்தாளரிடம், மாய எதார்த்த நாவல்களை எழுத உங்களுக்கு முன்னோடி யார் என்று கேட்டார். கேப்ரியல் கார்சியா மட்டுமல்ல, நம்ம மஹாபாரதமே மாய யதார்த்ததிற்கு வழிகாட்டி என்று உதாரணங்களுடன் விளக்கினார். கவிதைகள், சிறுகதை, குறு நாவல், நாவல்கள்,  நாடகங்கள், என எழுதும் நீங்கள், வடிவத்தை தேர்ந்தெடுக்கும் காரணிகள் என்ன என்று விசு  தனது கேள்வியை முன்வைத்தார். இரா. முருகன், இயல்பாக அதுவே நடந்தேறும் என தன்னடக்கத்துடன் பதில் சொன்னார்.

இவ்வளவு நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியில், ஒரு நண்பர், ஒரே ஒரு நாவலை மட்டும் வாசித்துவிட்டு, நாவலில் கருத்து, எடுத்துச்செல்ல ஒன்று வேண்டும் என்று உபதேசம் செய்தார். உரையாடலை மட்டுறுத்தும் வல்லுனர்கள் கொஞ்சம் சங்கடத்தில் இருக்க, இரா. முருகன், ஆமாம், எடுத்துச் செல்ல ஒன்று இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன் என்று பொறுமையாக பதில் சொன்னார்.

இரா.முருகனின் எழுத்துக்களைப் போல அவரது பதில்களிலும் நகைச்சுவை பகடி கலந்திருந்தது.  அந்தக் காலத்தில் இலக்கிய விவாத மேடைகள் எப்படி இருந்தது என்ற ராஜன் சோமசுந்தரத்தின் கேள்விக்கு, ம.வே. சிவக்குமார், இலக்கிய விவாத மேடைகளுக்குச் சென்றால், செருப்புகள் காணாமல் போய்விடும் என்று சொல்வார் என்றார்.  நகைச்சுவையும், பகடியும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு, சொந்த ஊரான சிவகங்கையிலுருந்துதான், அதுவும் புண்படாமல் சொல்லும் நகைச்சுவை என்று குறிப்பிட்டார்.

இரா. முருகனின் கிட்டத்தட்ட மொத்தப் படைப்புகள் கிண்டிலில் கிடைக்கிறது. ‘மிளகு’ நாவலில் சில அத்தியாயங்கள் மட்டும் ‘சொல்வனம்’ இணைய இதழில் கிடைக்கிறது. அதில் பாதி அல்லது முக்கால் கிணறு தாண்டிய வாசகர்கள் மிச்சம் இருக்கும் அத்தியாயங்களுக்காக காத்திருக்கிறார்கள். ‘சொல்வனம்’ இதழ் இதை ஒரு விமர்சனமாக எடுத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் அத்தியாயங்களை பிரசுரம் செய்யலாம். முழுக்க முடித்தபிறகு விமர்சனங்கள் குவியும் என நினைக்கிறேன்.

நிகழ்வு முடிந்த கையோடு , நன்றி சொல்ல அழைத்த, வாசிக்கும் பழக்கமுடைய குழந்தைகள் உடைய அமெரிக்கப் பெற்றோர்களுக்கு, ‘Ghosts of Arasur’ ஆங்கிலத்தில் உள்ளது என்று சொன்னேன்.

ஒரு காரியத்தை தொடர்வதில் முதல் மூன்று முக்கியம். அதைக் கடந்துவிட்டோம். மார்ச் மாதத்தில் இன்னொரு ஆளுமையுடன் பேசுவதற்கு , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களும் வாசகர்களும் தயாராகிக்கொண்டுள்ளார்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்.

அன்புள்ள ஆஸ்டின் சௌந்தர்

இணைய வசதி இல்லாத மலையில் இருந்தமையால் நிகழ்வில் நான் கலந்துகொள்ள முடியவில்லை.  நிகழ்வு மிகச்சிறப்பாக அமைந்திருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். ஓர் எழுத்தாளருடனான இந்தவகையான கலந்துரையாடல்கள் ஏன் தேவை என இன்னும்கூட நம் வாசகர்கள் பலர் புரிந்துகொள்ளவில்லை.  எழுத்து போதாதா, எதற்காக ஆசிரியருடனான உரையாடல் என சிலர் கேட்பதுண்டு. இன்னும் சிலர் ‘author is  dead. ஆசிரியர் முக்கியமல்ல, படைப்பே முக்கியம் என்று வெள்ளைக்காரனே சொல்லிவிட்டான்’ என்று சொல்வதையும் கேட்கிறேன். 

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆசிரியரை வாசகர்கள் சந்திப்பது. ஆசிரியரே தன் நூலை வாசகர்களுக்கு வாசித்துக் காட்டுவது மிகப்பெரிய இயக்கமாக நிகழ்கிறது. உண்மையில் அது பெருந்தொழிலாகவே நடைபெறுகிறது. ஒவ்வொரு பல்கலையிலும் நாள்தோறும் இத்தகைய உரையாடல்கள் நிகழ்கின்றன. குடியிருப்புகளில், மனமகிழ் மன்றங்களில், நூலகங்களில் சந்திப்புகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, உலகம் முழுக்க இருந்து அயல் எழுத்தாளர்களும் வந்து அச்சந்திப்புகளில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். நானே இரு உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறேன்

இந்த உரையாடல்கள் ஏன் நிகழ்கின்றன? முதல் காரணம்,  எந்நிலையிலும் வாசிப்பு என்பது அதை எழுதிய எழுத்தாளருடனான மானசீகமான உரையாடல்தான். அதை வாசகனால் தவிர்க்கவே முடியாது. நமக்கு எவரென்றே தெரியாத எழுத்தாளன் என்றால் நாம் ஒருவரை உருவகம் செய்துகொள்கிறோம். கம்பனுக்கும் இளங்கோவுக்கும் வள்ளுவருக்கும்கூட நம் அகத்தில் முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்நிலையில்  வாழும் எழுத்தாளன் என்பவன் என்பவனுடன் உரையாடும் வாய்ப்பை ஏன் தவிர்க்கவேண்டும்? அது நமக்கு மேலதிகமான வாசிப்பை அளிக்குமென்றால் அது எவ்வளவுபெரிய கொடை! 

எழுத்தாளனின் முகம் படைப்பை மிக அணுக்கமாக ஆக்குகிறது. அவன் குரலும் ஆளுமையும் அவனுடைய மொழிநடையுடன் மிக விரைவாக நாம் இணக்கம் கொள்ள வைக்கின்றன. நல்ல வாசகர்களுக்குத் தெரியும், ஓர் எழுத்தாளனின் தனிநடைக்குள் நுழைந்து அதை நம் அகமொழியுடன் இணைப்பதுதான் வாசிப்பின் முதற்பெரும் சவால் என. மிகமிக ‘சாதாரணமான ‘  ‘அன்றாடத்தன்மை கொண்ட’ ‘தரப்படுத்தப்பட்ட’ மொழியில் எழுதும் எழுத்தாளரிடம் நமக்கு இச்சிக்கல் இல்லை. ஆனால் தனிநடை கொண்ட எழுத்தாளரின் உலகுக்குள் நுழைவதற்கு நமக்கு ஒரு தடை உள்ளது. அதை விலக்கி அவரை அணுகச்செய்வது அவருடைய ஆளுமை நமக்கு அறிமுகம் ஆவதுதான். எழுத்தாளனின் புகைப்படங்கள், பேட்டிகள், தனிவாழ்க்கைச் செய்திகள் எல்லாமே அதற்கு உதவியானவை. சுஜாதாவை நாம் அவருடைய பேட்டிகள், குறிப்புகள் வழியாக எத்தனை அணுக்கமாக அறிந்தோம் என எண்ணிப்பாருங்கள். சுஜாதாவின் தனி நடை அவருடைய முகத்துடன் இணைந்து, அவருடைய குரலாகவே நம்முள் பதிவாகியிருக்கிறது. 

இரா.முருகன் தமிழில் ஒரு தனி நடை கொண்ட எழுத்தாளர். நையாண்டியும், புனைவு விளையாட்டும், தன்னைத்தானே மறுத்துச்செல்லும் கதைப்பார்வையும் கொண்டவர். அவருடைய உலகுக்குள் நுழைய அவருடனான ஓர் உரையாடல் மிகமிக உதவியான ஒன்று. ஓர் உரையாடலுக்குப் பின் அவருடைய மொழிநடை நமக்கு மிக அணுக்கமாகிவிட்டிருப்பதை, அவருடைய பகடிகள் நமக்கு உடனே பிடிகிடைப்பதைக் காணலாம். க.நா.சு. உரையாடல் அரங்கு அவ்வகையில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்னும் பலர் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். யூ.டியூபில் உரையாடல் உள்ளது. அது நல்லதுதான், ஆனால் நேரில் பார்த்து உரையாடும் வாய்ப்பை இணையம் வழங்கும்போது அதை தவறவிடுவது சரியானது அல்ல.

இரா முருகனை முன்னர் வாசித்தவர்களுக்கு மட்டும் அல்ல, இனிமேல் வாசிக்கவிருப்பவர்களுக்கும் இந்தவகையான உரையாடல்கள் மிக உதவியானவை. இவற்றில் கிடைக்கும் ஒரு சிறு ஆர்வம் கொக்கி போல அவருடைய உலகுக்குள் நம்மை கொண்டுசெல்லக்கூடும். சட்டென்று நம் உலகுக்குச் சமானமான இன்னொரு புனைவுலகு நம்மை நோக்கி வந்துவிடக்கூடும்.

இரா முருகன் இன்று தமிழில் எழுதும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நம் வரலாற்றுணர்வை கலைத்து விளையாடும் அவருடைய புனைவுலகு மிகக்கூரிய வாசிப்புக்குரியது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2023 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.