Jeyamohan's Blog
October 22, 2025
கட்டிடக்கலையும் பண்பாடும்
தமிழகத்தில் முழுக்க தொன்மையான ஆலயங்கள் உள்ளன. அந்த அளவுக்கு இல்லை என்றாலும் இந்தியாவெங்கும் ஆலயங்களைப் பார்க்கலாம். இந்த ஆலயங்கள் வழியாக நாம் அறிந்துகொள்வது என்ன? இறை அருகாமையை என்பது நாம் உடனடியாகச் சொல்லும் பதில். இறைபக்தி இல்லாத ஒருவருக்கு? மொத்த இந்தியப் பண்பாட்டையும், இந்திய வரலாற்றையும் அறியலாம் என்பதே கூடுதலான பதில்
அனலும் புனலும்
விவேகானந்தர் இந்தியாவில் நவீன இலக்கியம், நவீன சிந்தனை, நவீனக்கல்வி முறை, நவீன ஓவியம், நவீன இசை ஆகிய அனைத்தைப் பற்றியும் தொடக்ககாலச் சிந்தனைகளில் முன்வைத்திருக்கிறார். அவை இந்திய இளைய தலைமுறையினரிடம் பெரும் திருப்புமுனைகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இந்த ஒவ்வொரு தளத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்த அறிஞர்களும் கலைஞர்களும் அவருடைய சொற்களில் இருந்து உருவாகி வந்திருக்கிறார்கள்.
இந்திய ஓவியம் என்னும் கருத்துருவின் தொடக்கப்புள்ளியும், ஓவியத்தில் வங்கப்பள்ளியை உருவாக்கியவருமான அவனீந்திரநாத் தாகூர் விவேகானந்தரின் சொற்களில் இருந்து தன் தொடக்கத்தைப் பெற்றவர். விவேகானந்தரால் ஊக்கம் பெற்றே டாக்டர் பல்பு நாராயணகுருவை முன்வைத்து கேரள மறுமலர்ச்சி இயக்கத்தை தொடங்கினார், அவ்வியக்கத்தின் சிருஷ்டியே கேரள நவீன இலக்கியத்தின் தொடக்கமாக அமைந்த குமாரன் ஆசான். பாரதி, தனக்கு ஞானத்தை அளித்தவர் விவேகானந்தரின் தர்மபுத்திரியாகிய நிவேதிதை என்கிறார். அழகியல் ஒருமை கொண்ட தமிழின் முதல் நாவலை எழுதிய பி.ஆர்.ராஜம் ஐயர் விவேகானந்தரின் நேரடி மாணவர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகமுடியும்.
விவேகானந்தருக்கு இந்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் அமெரிக்காவில் இருந்தும், அவருடைய ஜெர்மானிய நண்பர்களிடமிருந்தும் கிடைத்திருக்கலாம். குறிப்பாக ஜெர்மனியிலிருந்துதான் அன்று பண்பாட்டுத் தேசியம், மற்றும் மொழிவழித் தேசியம் எனும் கருத்து உருவாகி வந்துகொண்டிருந்தது. பண்பாடுதான் தேசம் என்னும் கருத்தை அவர் ஜெர்மனியில் இருந்து பெற்றார் என்று கொள்ள முடியும். இந்திய தேசியம் எனும் கருத்தை இங்கு விவேகானந்தர்தான் வலுவாக முன்வைத்தார். அவருடைய மாணவி நிவேதிதா இந்திய தேசிய இயக்கத்தை ஒரு தீவிரமான உணர்வுநிலையாகவே முன்னெடுத்தவர்.
இது சுவாரசியமான ஒரு முரண். ஜெர்மனியில் உருவான பண்பாடுதான் தேசியம் என்னும் அடிப்படைக் கருத்து அங்கு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து ஹிட்லர் போன்ற ஒரு அழிவு சக்தியை உருவாக்கியது. ஆனால் அதுவே இங்கு விவேகானந்தர் வழியாக இந்தியத் தேசியத்தை உருவாக்கி, காந்தியைத் திரட்டி எடுத்தது. இந்திய தேசிய இயக்கத்திலேயே எப்போதும் ஒரு மதவாத அம்சம், அதாவது ஃபாஸிசமாக வளரக்கூடிய ஒரு புற்றுநோய் செல் இருந்துகொண்டேதான் இருந்தது. அதற்குக் காரணம் அந்த ஜெர்மானிய வேர்தான். ஆனால் நல்லூழாக, உலகளாவ உருவான நவீன ஜனநாயகம் என்னும் கருத்தின் முதன்மை விளைகனியாகிய காந்தியால் அந்த ஃபாஸிச அம்சம் கட்டுப்படுத்தப்பட்டது. அவரை அது கொல்லவும் செய்தது.
இன்றும் இந்தியாவில் இந்த முரணியக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. காந்தி விவேகானந்தர் பற்றி பெருமிதமாக ஏதும் எழுதியதில்லை. சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தவர் அந்த தேசியவாதத் தீவிரப்போக்கு தனக்கு உவப்பானது அல்ல என தன் வாழ்க்கைச்சரித்திரத்தில் பதிவுசெய்துள்ளார். ஆனால் இந்துமகாசபைக்கு அணுக்கமானவரான அம்பேத்கர், காந்தியை எதிர்ப்பு நோக்குடன் அணுகியவர், விவேகானந்தரை மாபெரும் இந்திய முன்னோடியாகவே கண்டார். நவீன இந்தியா உருவாக்கிய மாபெரும் ஆளுமை விவேகானந்தர்தான், காந்தி அல்ல என்று அவர் தன்னிடம் சொன்னதாக எம்.ஓ.மத்தாய் அவருடைய நூலில் குறிப்பிடுகிறார்.
இந்துத்துவ அரசியல் விவேகானந்தரை தங்கள் அடையாளமாக முன்னெடுத்தது. அதையொட்டி இந்துத்துவ அரசியலை எதிர்ப்பவர்கள் விவேகானந்தரை உதிரி மேற்கோள்களைக் கொண்டு திரித்து அவரை ஓர் இந்துத்துவராக ஆக்கி இந்துத்துவர்களுக்குக் கையளிக்கும் பணியையும் செய்து வருகின்றனர். தமிழில் நாம் அத்தகைய எழுத்துக்களை நிறையவே காண்கிறோம். குறிப்பாக ஒட்டுமொத்த இந்து எதிர்ப்பை அன்றி சிந்தனை என எதையுமே கொண்டிராத தமிழ் திராவிட இயக்கவாதிகளிடமிருந்து.
ஆனால் கே.தாமோதரன் முதல் இ.எம்.எஸ் வரையிலான மார்க்ஸியர்கள் விவேகானந்தரை பண்பாட்டை தேசியத்தின் அடிப்படையாக வைத்த முன்னோடிச் சிந்தனையாளர் மட்டுமே என்றும், அவர் மதத்தை அரசியலாக்குவதற்கு ஆதரவானவர் அல்ல என்றும் விரிவாக விளக்கினர். விவேகானந்தர் இந்தியாவின் ‘சூத்திர எழுச்சிக்காக’ அறைகூவியவர். இந்திய நிலத்தில் உழைக்கும் தரப்பின் அதிகாரத்துக்காக எழுந்த முதற்குரல், ஆகவே அவர் மார்க்ஸியத்துக்கு முன்னோடி என இ.எம்.எஸ் மதிப்பிடுகிறார். விவேகானந்தரின் நீட்சியாகவே நாராயணகுருவை அணுகுகிறார். அவர்களை இந்துத்துவர் எடுத்துக்கொள்வதை எதிர்க்கும் கேரள மார்க்ஸியக் கட்சி விவேகானந்தரின் பிறந்தநாளையே கொண்டாடுகிறது.
அவ்வாறாக இன்று இருவகையான விவேகானந்தர்கள் அரசியலில் உள்ளனர். மேற்கோள்களை தொகுப்பதன் வழியாக கட்டமைக்கப்படும் இந்துத்துவ விவேகானந்தரை விட, அவருடைய எழுத்துக்களில் இளமைக்குரிய கட்டின்மையுடன் வெளிப்படும் சீர்திருத்தவாதியும் மார்க்சியர்களுக்கு அணுக்கமானவருமாகிய விவேகானந்தரே மெய்யானவர் என்பதே என் எண்ணம். குரு நித்யா அதை முன்வைத்திருக்கிறார்.
விவேகானந்தரில் தீவிரமாக வெளிப்படும் ஆசார எதிர்ப்புவாதம், சமூகநீதிக்கான ஆவேசமான அறைகூவல், மதச்சக்திகளால் முன்வைக்கப்பட்ட உலகியல் மறுப்புக்கு எதிரான கடும் கண்டனம் ஆகியவைதான் நவீன இந்தியாவின் தொடக்கப்புள்ளிகள். அவை அவருடைய அத்வைதம் சார்ந்த உயிர்ச்சமத்துவ நோக்கில் இருந்து முளைத்து ஐரோப்பிய நவீனச் சிந்தனைகளுடன் உரையாடி முழுமை பெற்ற பார்வைகள். பஞ்சத்துக்கு எதிராக விவேகானந்தர் பேசிய சொற்களில் இருந்து, அதில் பெருகும் கருணையின் சீற்றத்தில் இருந்து மட்டுமே அவருடைய ஆன்மிகத்தைச் சென்றடைய முடியும்.
மதத்தைக்கொண்டு மக்களைப் பிரித்து, அவர்களுக்கு அடையாளமிட்டு தொகுத்து, அரசியல்செய்யும் இன்றைய அரசியலுக்கு எதிராக மட்டுமே விவேகானந்தரை முன்வைக்கமுடியும். பஞ்சத்தால் செத்துக்கொண்டிருந்த எளிய மக்கள் மேல் அந்த ஞானி விட்ட கண்ணீர், ’முதலில் பசித்தவனுக்குச் சோறுபோடு, அதிலுள்ளது உன் மோட்சம்’ என்னும் அவருடைய அருட்சொல் வழியாக நாம் காந்தியைச் சென்றடைய முடியும். இரு எல்லைகளும் வளைந்து சென்று தொடும் இடம் அந்த அறம் திகழ் உச்சமே.
ஆயிரம் ஆண்டுக்காலமாக நனைந்து, குளிர்ந்திருந்த இந்த தேசத்தைப் பற்றவைக்க விண்ணில் இருந்து விழுந்த அனல் விவேகானந்தர். இளமையின் கட்டற்ற விசை அவர். விடுதலைக்குரல் எழத்தொடங்கியதும் காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட பலநூறு பிரிவினைகள் இங்கே எரியத்தொடங்கியதும் அந்தத் தழல்கள்மேல் விழுந்த மழை காந்தி. இரண்டும் விண்ணிலிருந்து வருவனதான்.
பி.சி.சேகர்
மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பங்காற்றிய முக்கிய அறிவியலாளர். மலேசியாவில் இயற்கை ரப்பர் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ரப்பர், செம்பனைத் தொழிற்துறைகளை நவீனப்படுத்தினார். மலேசியாவின் குறிப்பிடத்தக்க அறிவியலாளராகவும், கல்வியாளராகவும், நவீன ரப்பர் தொழிற்துறையின் தந்தையாகவும் பி. சி. சேகர் அறியப்படுகிறார்.
பி.சி.சேகர் – தமிழ் விக்கி
காடு, ரவி பிரதாப்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
காடு நாவலில் என் மனதுக்கு நெருக்கமாக பட்டதை எழுத்தில் சொல்ல முயற்சித்து இணையத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கிறேன்.
பதினான்கு நாட்களாக தினம் ஒரு மணி நேரம் என வனவாசம் முடிந்து வந்திருக்கிறேன்.
உள்நுழையும் வழி, வெளியேறும் வழி எனப் பலகை போட்டுக் காட்ட இது கட்டடம் அல்ல. இது காடு, ஜெயமோகனின் காடு. இக்காட்டில் நான் ஒரு வழியில் உள்நுழைந்து, ஒரு வழியில் வெளியே வந்திருக்கிறேன். இவ்வழியில் எனக்குக் கிடைத்த அனுபவ சுள்ளிகளைப் பொறுக்கி, கயிறு கட்டி,தலையில் சுமந்து வந்துள்ளேன்.
இழந்த வசந்தத்தைப் பற்றிய குறிஞ்சி நில நாவல் இது. கூடல் இங்கே ஒரு கேளிக்கை.
கிரிதரன் என்ற சகல சபலங்களுக்கும் ஆட்பட்ட sexual povertyயில் இருந்த ஒரு சாதாரண ஆணை ஆட்கொண்ட முதற் காதல் வாசத்தை நினைவு கூறுதலின் வழியே இந்நாவல் தொடங்குகிறது.
கருஞ்சிலைகளை முன்னெப்போதும் இல்லாத கூடுதல் ரசனையோடு நின்று நிதானமாக பார்ப்பதற்குக் காரணம் இந்நாவலில் வரும் பெண் நீலி.
காட்டு வழியில், கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நேர்த்தியான சாலைகள் எப்படிப் போட்டிருப்பார்கள்‘ என்று இருந்த ஆச்சர்யத்திற்கான பதிலாக நிற்கிறது மனிதனின் பேராசை. இவையனைத்தும் காட்டை உரிமை கொண்டாடி வேட்டையாடும் முதன்மை நோக்கத்தோடு அமைக்கப்பட்டவை.
Benefits of honey, Benefits of milk, Benefits of fruits என்று இணையத்தில் தேடி அறிந்து நம் தேவைக்கேற்ப கணக்கிட்டு நுகர்கிறோம்.
அதே வேளையில் Benefits of humans என்று மற்ற பூமி ஜீவராசிகள் யோசித்துப் பார்த்தால் நாம் உச்ச வேட்டையாளனாக (apex predator) மட்டுமே அடையாளப்படுவோம்.
நம் மனம் இலகுவாக, புத்துணர்ச்சி பெற நினைக்கும் போதெல்லாம் போக நினைக்கும்,போய் வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும் இடங்களாக குறைந்தபட்சம் வீட்டு மொட்டை மாடி, பூங்கா, நீர் நிலைகள்; அதிகபட்சம் கடற்கரை, மலைப் பிரதேசமாக உள்ளது. இவற்றுக்குண்டான ஒரு பொது ஒற்றுமை நம் தலைக்கு மேல் வானம் என்பதுதான்,
மேல் கூரையற்ற இடம்.
மனிதன் ஒரு “சமூக விலங்கு“. பணம், நகை, நிலம், வீடு, கார் என சமூக அந்தஸ்துகளை மேம்படுத்தி வாழும் சமூகத்தோடு, வாழும் சமூகத்தோடா?!… இல்லை, இருக்கும் சமூகத்தோடு ஒன்றி நிலைநிற்கப் போராடுகிறோம். ஆனால் கூட ஒட்டி இருக்கும் ‘விலங்கு‘க்கு பட்டினி போடுகிறோம். அதற்கு இயற்கையே சரணாலயம். குறைந்தபட்ச தொடர்போடாவது இயற்கையுடன் அதனை உலாவ விட்டு மீட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
மரத்தின் உயரமும், கிளை இலைகளின் நெருக்கமும்தான் நிழலின் பரப்பளவை தீர்மானிக்கிறது. காற்றசைத்து கிளை விலகும்போது முகத்தில் வெயில் படுவது போல காமம் படுதல் என்பது இயல்பு. வெயில் எப்பொழுதும் நம் மேல் விழுந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் கிளைகளை வெட்ட நினைப்பது நம் மனங்களின் சபலம்.
விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் போது எழும் பிழையான உள்ளீடுகளைச் சுட்டிக் காட்டி அருகில் திருத்த வார்த்தைகளை பரிந்துரைக்கும் தானியங்கு அமைப்பு போல, காமத்தைப் பற்றிய அரை குறைப் புரிதலை சுட்டுதலோடு நில்லாமல் அதன் அறிவார்ந்த விசாலத்திற்கு பரிந்துரைத்துள்ளது இக்குறிஞ்சி நிலம்.
முந்திரிப் பழத்திலிருந்து கொட்டையைப் பிரித்து, பால் இளக நெருப்பில் வறுத்து, உலர்த்தி, ஓடு பிரித்து, கடைசியாக மெல்லிய தோல் உரித்து காதலெனும் முந்திரிப் பருப்பைப் பக்குவமாகப் பிரித்துத் தொகுத்தளித்திருக்கிறார்
நம் கைகளில் ஜெ.
காடு – ஜெயமோகன்
My thoughts on the novel-writing workshop- Promodhini
A few of my friends who couldn’t attend your novel-writing workshop in Walnut Creek, California, on October 12, 2025, asked me to share my thoughts. I wrote this for them and thought I’d share it with you too.
My thoughts on the novel-writing workshop- Promodhiniஅதாவது ஒரு கட்சி நிலைபாடு எடுத்து, அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டரை விட கீழ்நிலையில் பேசிக்கொண்டிருக்க வேண்டும். தங்களுடைய கருத்தை அப்படியே திருப்பிச் சொல்லாத அனைவரையும் எதிரி என்று முத்திரை குத்தி இழிவு செய்ய வேண்டும். இதுதான் இந்த கும்பலின் அரசியல்.
விஜய்,கரூர்- கடிதம்உளக்குவிப்பு- தியானம்- நவீனப் பயிற்சி
தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி
இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய சிக்கல் செயலுக்கு உள்ளத்தைக் குவிக்கமுடியாமைதான். எந்த செயலையும் தீவிரமாகச் செய்ய முடியாத நிலை. கவனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும் நிலை.தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் அவர்களுக்கானவை
தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.
உங்களுக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லையா? எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறதா? ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறதா ?மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறதா ? எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறதா?
மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.
இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.
இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.
அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு. எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது
நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.comஅறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்
ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
இசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன் ஜெயக்குமாரின் இசை வகுப்புகள் மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல் இசை, வகுப்புகள்- கடிதம் இசைநாட்கள் மரபிசைப் பயிற்சி- கடிதம் வரவிருக்கும் நிகழ்வுகள்
ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்
ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.
இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?
இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?
உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?
இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.
ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.
சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.
அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
திரைப்பட ரசனை – உருவாக்கப் பயிற்சி
சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம் செய்து அளிக்காது. உண்மையில் நிறைய படங்களைப் பார்ப்பது அந்தக் கலைக்கு எதிரான ஒரு செயலாகவே ஆகிவிடும். மனம்போன போக்கில் சினிமா பார்ப்பவர் தேவையற்ற படங்களை ஏராளமாகப் பார்த்து ரசனையை இழப்பதும் சாத்தியமே
எந்தக் கலையையும்போலவே சினிமாவையும் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். சினிமக்கலையின் பெரும்படைப்புகள் என்ன, வரலாறு என்ன என்பது ஒரு வகை கல்வி. சினிமாவின் ஷாட், காட்சி, நடிப்பு படத்தொகுப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தொழில்நுட்ப அறிதல் என்பது இன்னொரு வகை அறிதல். அந்த அறிதலை முறையான ஆசிரியரிடமிருந்து முறையாகக் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல தொடக்கம். நல்ல சினிமாவை பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல நல்ல சினிமாக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கும் அவசியமான கல்வி அது.
இன்று, நாம் குறைந்த செலவில் நல்ல குறும்படங்களை உருவாக்கமுடியும். முழுநீளப்படங்களையே உருவாக்கமுடியும். சொல்லப்போனால் சிற்றிதழ் இலக்கிய இயக்கம் போலவே செலவே அற்ற சிறுசினிமா இயக்கத்தையே உருவாக்க முடியும். நமக்குத்தேவை முறையான பயிற்சி. இன்று வரும் குறும்படங்களின் சிக்கலே அவற்றில் முறையான திரைக்கலைப் பயிற்சி இன்மையின் விளைவான தேர்ச்சியின்மை தெரிகிறது என்பதுதான்.
இன்று திரைப்படக்கலை என்பது திரைப்படங்களுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. எல்லா காட்சிக்கலைகளும் திரைப்படத்தின் அழகியலும் தொழில்நுட்பமும் கொண்டவையே. ஒரு நல்ல யூடியூப் வீடியோ தயாரிப்பதற்கே அந்தக் கலைப்பயிற்சி அவசியமானது.
பல நண்பர்கள் கோரியத்ற்கிணங்க தமிழின் கலைப்பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான திரு ஹரிஹரன் அவர்கள் வகுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஏழாவது மனிதன் முதலிய படங்களின் இயக்குநர். நீண்டகாலம் திரைக்கலைப் பயிற்றுநர் ஆக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.
நாள் நவம்பர் 21 22 மற்றும் 23
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி
ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.
இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.
ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.நாள் நவம்பர் 28 29 மற்றும் 30
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
October 21, 2025
அந்தக்குழந்தையின் பொம்மை
அமெரிக்காவில் இந்த பயணம் பெரும்பாலும் என் Stories Of The True நூலின் விற்பனையை உத்தேசித்தவை. இந்நூல் அமெரிக்காவின் இளைய தலைமுறைக் குழந்தைகளிடம் சென்றடையவேண்டும் என்பதிலும்,அது ஒரு தொடக்கமாக அமையவேண்டும் என்பதிலும் குறிப்பாக இருக்கிறேன். அடுத்தபடிதான் அது உலக இலக்கிய வாசகர்களிடம் சென்று சேர்வதென்பது. அதுவும் மெல்ல நிகழும். ஆகவே இம்முறை சுற்றுப்பயணங்களில் இடங்களைப் பார்க்கும் திட்டங்கள் இல்லை. ஆனால் எல்லா ஊரிலும் நிகழ்ச்சிகளின் இடைவெளியான நாட்களில் இதுவரை பார்க்காத இடங்களுக்குச் சென்றுகொண்டேதான் இருந்தோம்.
லாஸ் ஆஞ்சல்ஸில் நண்பர் ஶ்ரீராம் இல்லத்தில் தங்கியிருந்தோம். அங்கிருந்து விமானத்தில் சியாட்டில் நகருக்கு அக்டோபர் 16 அன்று வந்துசேர்ந்தோம். அக்டோபர் 18 அன்று எங்கள் சந்திப்பு நிகழ்வு. 17 அன்று நாங்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு மாலையில் உரையாடலுக்காக இருபது நண்பர்கள் வந்திருந்தனர். இரவு பத்து மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். அன்றுகாலைதான் எனக்கு அழகிய நினைவாக தங்கிவிட்ட ஓர் இடத்திற்குச் சென்றோம். வாஷிங்டன் மாநிலத்தின் நான்கு பெரிய பனிக்குகைகளில் ஒன்று. சியாட்டில் நகரிலிருந்து இரண்டு மணிநேர கார்ப்பயணத்தில் இருந்தது அது.
நானும் அருண்மொழியும் நண்பர் ஶ்ரீனி, சங்கர் பிரதாப், மதன் ஆகியோருடன் இரண்டு கார்களிலாக காலை ஆறுமணிக்கே கிளம்பிச் சென்றோம். செல்லும் வழியிலேயே ஸ்டார்பக்ஸ் கடையில் காபி குடித்து காலையுணவுக்குச் சீஸ்பர்கரும் வாங்கிக்கொண்டு சாப்பிட்டபடியே சென்றோம். கார் பனிக்குகைக்கு அருகே வரைச் செல்லும். அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது பனிக்குகை. இன்னும் மூன்று பனிக்குகைகள் இங்குள்ளன. அவை சற்றுத்தள்ளி இருப்பவை.
பனிக்குகை வரைக்கும் நடந்துசெல்ல மரத்தாலான பாதை அமைத்திருந்தார்கள். பாதை சீராக இருந்தமையால் இயல்பாகப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் செல்லமுடிந்தது. சுற்றிலும் இயற்கையான பைன்மரக்காடு. பைன் மரங்கள் அண்மைக்காற்றில் அப்படியே பிடுங்கப்பட்ட புல்பத்தை போல அடிப்பக்கத்தைக் காட்டியபடி பிரம்மாண்டமான நாகங்கள் போன்ற உடல்களுடன் விழுந்துகிடந்தன. சியாட்டிலில் குளிர் தொடங்கிவிட்டது. பத்து பாகை குளிர். ஆனால் நடந்தமையால் குளிர் தெரியவில்லை.
எப்போதுமே ஈரமாக இருக்கும் காட்டுக்கே உரிய பூஞ்சைகளும் ஒட்டுத்தாவரங்களும் செறிந்த அடிமரங்கள். கூம்பிலைச்செடிகள் கொண்ட தரை. ஆனால் இத்தகைய மழைக்காடுகளுக்கு இந்தியாவில் உள்ள பிரிக்கமுடியாத பின்னணி இசை- சீவிடுகளின் ரீங்காரம்- இங்கே இல்லை. ஆகவே காடு அமைதியாகவே இருப்பதுபோலத் தோன்றியது. அது அளித்த ஒருவகையான அமைதியின்மையும் இருந்தது.
உண்மையில் அமெரிக்கக் காடுகளில் ஆபத்தானவை என ஏதுமில்லை. இப்பகுதியில் நச்சுப் பாம்புகள் இல்லை. எரிச்சல் அளிக்கும் செடிகள் இல்லை. தாக்கும் விலங்குகள் எவையுமே இல்லை. இந்தியக் காடு நம் புலன்களை எச்சரிக்கையுடன் நிற்கச் செய்கிறது. ஒவ்வொரு கணத்தையும் அழுத்தம்கொண்டதாக ஆக்கிவிடுகிறது. அமெரிக்கக் காட்டில் அபாயமேதும் இல்லை என்பதனாலேயே அவற்றின் அழுத்தம் குறைந்துவிடுகிறது. தமிழின் தட்டையான விமர்சகன் சொல்வதுபோல ‘தட்டையான படைப்பு’. ஆழ்பிரதி என ஏதும் அற்றது என தோன்றிவிடுகிறது.
ஆனால் அது ஒரு மாயைதான். எந்த உயிர்ப்பரப்பும் முடிவற்ற அடுக்குகள் கொண்டதுதான். இந்தக் காட்டில் சற்றுநேரம் நின்றிருந்தால் இங்கே பெருகிச்செறிந்திருக்கும் உயிரின் முடிவின்மையைக் காணமுடியும். இங்கே ஓடைகளில் அணைகட்டும் பீவர் என்னும் கீரிவகை உண்டு. பலவகையான பறவைகள் உண்டு. பூச்சிகள் எங்கும் போல இங்கும் முடிவில்லாத வகைபேதங்களும் விசித்திரங்களும் கொண்ட முற்றிலும் வேறொரு உலகத்தை உருவாக்கியிருக்கும்.
செல்லும் வழியில் ஒரு காணொளியைப் பதிவுசெய்தேன். சிறுவர்களும் பெண்களுமாக பயணிகள் குகை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் வேலைநாளாதலால் பெரிய கூட்டம் இல்லை. அமெரிக்க வழக்கப்படி ஒவ்வொருவரும் ‘மானிங்’ என்றோ ‘நைஸ் டே’ என்றோ சொல்லி வாழ்த்திக்கொண்டு சென்றார்கள்.
பனிக்குகையைப் பார்ப்பதற்கு முன்னரே செங்குத்தான மலையைப் பார்த்துவிட்டேன். அத்தகைய செங்குத்தான மலை பனிநிலங்களில் மட்டுமே உள்ளது. அதிலும் தொன்மையான பனிநிலங்களில். இந்தியாவில் மலைச்சரிவுகள்தான் உள்ளன. இவை வாளால் வெட்டி அமைத்ததுபோல அத்தனை செங்குத்தானவை. ஏற்கனவே யோசிமிட்டி தேசியப் பூங்காவில் இத்தகைய மலைகளைப் பார்த்திருக்கிறேன். தொன்மையான பனியூழிக்காலத்தில் பூமியை மூடியிருந்த மாபெரும் பனிப்பாளங்களின் அதீத எடையால் அடியிலிருந்த பாறைகள் விரிசலிட்டு உடைந்து உருவானவை இந்த மலைகள்.
மலைக்குமேல் உறைந்த பனி உருகிய நூற்றுக்கணக்கான சிறிய ஆறுகள் விழுந்துகொண்டிருந்தன. வெள்ளிமரங்கள் போல. அல்லது மேலே நின்றிருக்கும் மாபெரும் வெள்ளி மரம் ஒன்றின் வேர்கள் போல. அவற்றில் ஒரு அருவி மிக உச்சியில் இருந்து வெண்பட்டு மேலாடை போல சரிந்திறங்கி விழும் இடத்தில் உறைந்து உருவானது இந்த பனிக்குகை. பனிப்பாளத்தை துளைத்து உருகாத நீர் வெளியே வரும் வழிதான் அது.
பனிப்பாளங்கள் கண்கூசும் கண்ணாடிப் பளபளப்புடன் செறிந்திருந்தன. அவற்றின் நடுவே நீரின் ஓசை. உள்ளே பனிப்பாளம் உடைந்து விழும் உறுமலோசை கேட்டது. அப்பகுதி முழுக்க பனியால் உடைத்து சல்லிசல்லியாக்கப்பட்ட கற்கள் பரவிய சமவெளிநிலம். அது ஏதோ அயல்கிரகத்தின் நிலப்பரப்பு என தோன்றச் செய்தது. தொலைவில் முகிலின் சாளரங்கள் வழியாக வந்த ஒளியால் ஆங்காங்கே பசுமை மிளிர்ந்த மலைகள் புன்னகைப்பதுபோல தோன்றின.
அருண்மொழி எப்போதுமே பயணங்களில் சிறுமி போல ஆகிவிடுவதுண்டு. உற்சாகம் , பாட்டு, சிலசமயங்களில் நடனம். அந்த பனிப்பாளங்களுக்குள் அவளை உள்ளே செருகி வைத்து படம் எடுத்தேன். இமையமலையில் ஏறிச்சென்று பனியைப் பார்க்கவேண்டும் என்பது அவளுடைய எப்போதைக்குமான கனவு. அதை நிறைவேற்றிக்கொண்டவள் போல பொங்கிக்கொண்டே இருந்தாள். மலைகளின்மேல் சட்டென்று ஒளி பரவியபோது ஒரு பரவசக்கூச்சல்.
நாங்கள் மட்டுமே அங்கே இருந்தோம். அத்தகைய ஓர் இடத்தின் அப்படி ஒரு தனிமை அமையும் என நான் எண்ணியிருக்கவே இல்லை. அது அத்தனை புனிதமான இடம் என தோன்றியது. இயற்கை ஒரு குழந்தைபோல தனக்குத்தானே ஏதோ செய்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அங்கே உள்ளம் அடைந்த நிறைவை, குதூகலத்தை அண்மையில் வேறெங்கும் உணர்ந்ததில்லை.
அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம்
அன்பு ஜெ
இந்த வருடம் உங்கள் வருகை பல காரணங்களால் உற்சாகம் மிகுந்ததாக இருந்தது, உங்களுடனான குழு மற்றும் தனி உரையாடல்களின் ஏற்பட்ட மனெவெழுச்சி ஒரு வாரம் ஆகியும் இன்னமும் அப்படியே இருக்கு.விமான நிலையத்தில் நட்பாய் தலையசைத்து தொடங்கிய உரையாடலிலிருந்த உங்களின் உற்சாகம் ஒட்டுவாரொட்டி போல எங்களிடம் ஒட்டி கொண்டது.அருணா அக்கா மற்றும் உங்கள் உடனான பயணம், உரையாடல்கள் ஒரு வருடம் அசை போடப் போதும். VLC Bay Area Chapter முதல் வருட கொண்டாட்டக் கூடலில் அசோகமித்திரன் பற்றிய உரையாடலில் உங்கள் இருப்பும் கொடுத்த அறிவுறுத்தலும் தொடர்ச்சியாக வரும் நண்பர்களை புத்துணர்ச்சி கொள்ள வைத்தது.
இந்த பயணத்தின் உச்சமாக நான் கருதுவது பார்ன்ஸ் & நோபில் சான் மாட்டியோவில் நடந்த புத்தக வாசிப்பு உரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்வு. நண்பர் பாலாஜியின் எற்பாட்டில் கடைசி நேரத்தில் ஒருஙகமைத்திருந்தாலும் சனிக்கிழமை காலை எத்தனை பேர் வருவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது , ஆனால் பல புதிய நண்பர்கள் வருகையும் அவர்களின் உற்சாகமும் புதிய உத்வேகத்தை கொடுத்தது. நாங்கள் உத்தேசிசத்தை விட அதிகமாகவே புத்தகம் விற்றது , கடையின் முன் பகுதியில் நமக்கு இடம் கொடுத்திருந்தார்கள் , கடைக்கு வந்தவர்கள், கூடி இருந்த நண்பர்களையும் அவர்களின் ஆர்வத்தையும் நின்று பார்த்து கொண்டு தான் போனார்கள். எல்லா எழுத்தாளர்களுக்கும் (அமெரிக்க) ஒன்றும் இவ்வளவு கூட்டம் கூடுவதில்லை , நான் சொல்வதில் ஒன்றும் மிகையில்லை.நாம் தனிக்கூடத்தில் கூடும் கூட்டத்தை விட ஒரு அமெரிக்க புத்தகக் கடையில் கூட்டிய இந்த கூட்டத்திற்கு பயன் மதிப்பு அதிகம் என்றே எண்ணுகிறேன்
நம் நண்பர் பிரசாத் , சாரதா இணையரின் மகள் அஞ்சலி உங்களின் புத்தகத்திலிருந்து “one world” கதையின் ஒரு பகுதியை வாசித்து, பலகாலம் இங்கு வாழும் ஆவணமில்லா குடியேறிகள் தாங்களாகவே வெளியேற வேண்டும் என்ற கதையாடல்கள் மிகுந்து வரும் சூழலில் கேரி டேவிஸின் லட்சிய வாதத்திற்குள்ள முக்கியத்துவத்தை குறித்து கேட்ட கேள்வி இன்றைய சூழலில் பொருத்தமானது.உங்களின் பதிலில் குறிப்பிட்ட அறிவார்ந்த ஐரோப்பா/அமெரிக்காவின் பக்கத்தை சுட்டிக்காட்டி நம்பிக்கையூட்டியது அஞ்சலி மற்றும் அவர் போன்ற இளம் வாசகர்களுக்கு இன்றைய சுற்றிலும் இருக்கும் எதிர்மறை சூழலில் உத்வேகம் கொடுத்திருக்கும் . அதை தொடர்ந்த வாசகர் கேள்விகளுக்கு பதில் அளித்து புத்தகங்களில் கையெழுத்திட்டு ஒவ்வொருவரிடம் சிறிது பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டது அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாது, சிலரின் தனிப்பேச்சில் உற்சாகம் கொப்பளித்ததை கவனிக்க முடிந்தது.சிலர் இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இளைய வாசகர்கள் சிலர் உங்களிடம் உரையாடியது, அவர்கள் Stories of True படித்துவிட்டு வந்திருந்தது உண்மையிலேயே மனதுக்கு நிறைவளித்தது. அடுத்த புத்தகம் ஆங்கிலத்தில் வரும் போது வளைகுடாப் பகுதியில் சில புத்தகக் கடைகளிலாவது வாசக ஆசிரிய சந்திப்பை நடத்த முடியும் அதற்கான நண்பர் குழாம் இங்கு இருக்கும்.
நாவல் எழுத பயிற்சி என்று விசு சொன்ன போது நானெல்லாம் உங்கள் கூட ஒரு எட்டு மணி நேரம் இருக்கலாம் என்று தான் வந்தேன் ,ஆனால் நம்மளும் ஒன்று எழுதி போடலாம்ன்னு தோண வைத்து விட்டீர்கள். கண்டிப்பாக நண்பர் குழாமில் இருந்து பல நாவல்கள் நிச்சயம் வரும். அமெரிக்காவில் பல காலம் இருக்கும் எங்களை விட அமெரிக்காவை புறவயமாகவும் அகவயமாகவும் நீங்கள் அதிகமாய் பார்த்திருப்பீர்கள் , தொடர்ந்து பயணதிலுக்கும் உங்களுக்கும், அக்காவிற்கும் இந்த பயணமும் இனிமையாக இருக்கட்டும், மீண்டும் பூன் முகாமில் சந்திக்க நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
அன்புடன்
பத்மநாபன்
கரு. ஆறுமுகத்தமிழன்
எழுத்தாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சைவ அறிஞர், பேராசிரியர். சைவ இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். இலக்கியம், மெய்யியல், அரசியல், சைவம் சார்ந்து உரை நிகழ்த்தும் பேச்சாளர்.
கரு. ஆறுமுகத்தமிழன் – தமிழ் விக்கி
October 20, 2025
நூலறிமுக நிகழ்வு, ராலே
ராலே நகரில் Stories of the True நூலறிமுக நிகழ்வு. அமெரிக்க நகர்களில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் நூலறிமுக நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அதே பார்ன்ஸ் ஆண்ட் நோபிள் புத்தகக்கடையில் நிகழ்வு. அக்டொபர் 24.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 839 followers

