காடு, ரவி பிரதாப்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
காடு நாவலில் என் மனதுக்கு நெருக்கமாக பட்டதை எழுத்தில் சொல்ல முயற்சித்து இணையத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கிறேன்.
பதினான்கு நாட்களாக தினம் ஒரு மணி நேரம் என வனவாசம் முடிந்து வந்திருக்கிறேன்.
உள்நுழையும் வழி, வெளியேறும் வழி எனப் பலகை போட்டுக் காட்ட இது கட்டடம் அல்ல. இது காடு, ஜெயமோகனின் காடு. இக்காட்டில் நான் ஒரு வழியில் உள்நுழைந்து, ஒரு வழியில் வெளியே வந்திருக்கிறேன். இவ்வழியில் எனக்குக் கிடைத்த அனுபவ சுள்ளிகளைப் பொறுக்கி, கயிறு கட்டி,தலையில் சுமந்து வந்துள்ளேன்.
இழந்த வசந்தத்தைப் பற்றிய குறிஞ்சி நில நாவல் இது. கூடல் இங்கே ஒரு கேளிக்கை.
கிரிதரன் என்ற சகல சபலங்களுக்கும் ஆட்பட்ட sexual povertyயில் இருந்த ஒரு சாதாரண ஆணை ஆட்கொண்ட முதற் காதல் வாசத்தை நினைவு கூறுதலின் வழியே இந்நாவல் தொடங்குகிறது.
கருஞ்சிலைகளை முன்னெப்போதும் இல்லாத கூடுதல் ரசனையோடு நின்று நிதானமாக பார்ப்பதற்குக் காரணம் இந்நாவலில் வரும் பெண் நீலி.
காட்டு வழியில், கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நேர்த்தியான சாலைகள் எப்படிப் போட்டிருப்பார்கள்‘ என்று இருந்த ஆச்சர்யத்திற்கான பதிலாக நிற்கிறது மனிதனின் பேராசை. இவையனைத்தும் காட்டை உரிமை கொண்டாடி வேட்டையாடும் முதன்மை நோக்கத்தோடு அமைக்கப்பட்டவை.
Benefits of honey, Benefits of milk, Benefits of fruits என்று இணையத்தில் தேடி அறிந்து நம் தேவைக்கேற்ப கணக்கிட்டு நுகர்கிறோம்.
அதே வேளையில் Benefits of humans என்று மற்ற பூமி ஜீவராசிகள் யோசித்துப் பார்த்தால் நாம் உச்ச வேட்டையாளனாக (apex predator) மட்டுமே அடையாளப்படுவோம்.
நம் மனம் இலகுவாக, புத்துணர்ச்சி பெற நினைக்கும் போதெல்லாம் போக நினைக்கும்,போய் வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும் இடங்களாக குறைந்தபட்சம் வீட்டு மொட்டை மாடி, பூங்கா, நீர் நிலைகள்; அதிகபட்சம் கடற்கரை, மலைப் பிரதேசமாக உள்ளது. இவற்றுக்குண்டான ஒரு பொது ஒற்றுமை நம் தலைக்கு மேல் வானம் என்பதுதான்,
மேல் கூரையற்ற இடம்.
மனிதன் ஒரு “சமூக விலங்கு“. பணம், நகை, நிலம், வீடு, கார் என சமூக அந்தஸ்துகளை மேம்படுத்தி வாழும் சமூகத்தோடு, வாழும் சமூகத்தோடா?!… இல்லை, இருக்கும் சமூகத்தோடு ஒன்றி நிலைநிற்கப் போராடுகிறோம். ஆனால் கூட ஒட்டி இருக்கும் ‘விலங்கு‘க்கு பட்டினி போடுகிறோம். அதற்கு இயற்கையே சரணாலயம். குறைந்தபட்ச தொடர்போடாவது இயற்கையுடன் அதனை உலாவ விட்டு மீட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
மரத்தின் உயரமும், கிளை இலைகளின் நெருக்கமும்தான் நிழலின் பரப்பளவை தீர்மானிக்கிறது. காற்றசைத்து கிளை விலகும்போது முகத்தில் வெயில் படுவது போல காமம் படுதல் என்பது இயல்பு. வெயில் எப்பொழுதும் நம் மேல் விழுந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் கிளைகளை வெட்ட நினைப்பது நம் மனங்களின் சபலம்.
விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் போது எழும் பிழையான உள்ளீடுகளைச் சுட்டிக் காட்டி அருகில் திருத்த வார்த்தைகளை பரிந்துரைக்கும் தானியங்கு அமைப்பு போல, காமத்தைப் பற்றிய அரை குறைப் புரிதலை சுட்டுதலோடு நில்லாமல் அதன் அறிவார்ந்த விசாலத்திற்கு பரிந்துரைத்துள்ளது இக்குறிஞ்சி நிலம்.
முந்திரிப் பழத்திலிருந்து கொட்டையைப் பிரித்து, பால் இளக நெருப்பில் வறுத்து, உலர்த்தி, ஓடு பிரித்து, கடைசியாக மெல்லிய தோல் உரித்து காதலெனும் முந்திரிப் பருப்பைப் பக்குவமாகப் பிரித்துத் தொகுத்தளித்திருக்கிறார்
நம் கைகளில் ஜெ.
காடு – ஜெயமோகன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

