Jeyamohan's Blog, page 4

November 26, 2025

திலகரின் சிறைக்கடிதங்கள்- அரவிந்தன் கண்ணையன்

திலகர்

எத்தனை வரலாறுகள் தான் எழுத்தாளர்களுக்காக காத்திருக்கின்றன என்கிற உணர்வே எனக்கு பல நேரங்களில் எழும். சிறைக் கடிதங்கள் என்றாலே நேரு தன் மகளுக்கு எழுதியவை மிகப் பிரசித்தம் ஆனால் பலரின் கடிதங்கள் பேசப்படுவதில்லை. இந்த சிறைக் கடிதங்கள் மட்டுமல்ல அரவிந்தர் தன் மனைவிக்கு தன்னுடைய வாழ்வின் பாதை குறித்து எழுதிய கடிதம் போம்றவற்றையும் சேர்த்து ஆராய்ந்தால் அக்கால மனிதர்களின் இன்னொரு அதிகம் பேசப்படாத பக்கம் தெரிவதோடு நமக்கு அவர்களை பற்றிய இன்னொரு கோணத்தையும் அக்காலம் பற்றிய இன்னொரு புரிதலையும் வழங்கும். காந்தி, நேரு, திலகர், சாவர்க்கர், வ.வே.சு.ஐயர், பாரதி, அம்பேத்கர் ஆகியோர் மிக மிக ஆர்வத்தோடு நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் வரலாறுகளையும் வாசித்திருக்கின்றனர். மிக எளிதாக 1900-1950 வரை இந்தியாவின் தலைவர்கள், எல்லா தரப்பிலும், ஒரு அதீத அறிவு வேட்கையோடு செயல்பட்டார்கள் எனலாம். இதற்கு பெரும் விதிவிலக்கு பெரியார், ஓரளவு வாசிப்புடையவர் அண்ணாதுரை ஆனால் அவரும் முந்தையவர்களின் பட்டியலில் சேர்க்க தகுந்தவரல்லர்.

திலகரின் கடித தொகுப்பு சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. சில கடிதங்களை வாசித்தப் பின் இப்பதிவு எழுத தோன்றியது.  1908-il திலகரின் பத்திரிக்கை ‘கேசரி’யில் அவர் வெளியிட்ட இரண்டு கட்டுரைகளுக்காக 6 வருட தண்டனை விதிக்கப்பட்டது, அதுவும் பர்மாவிலிருக்கும் சிறையில் இருக்க உத்தரவு. திலகரின் இரண்டு கடிதங்களிலிருந்து மூன்று விஷயங்களை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.

முதலாவது, திலகர் தன் வழக்கு பற்றி எழுதியவை. இங்கிலாந்தில் இருக்கும் நண்பருக்கு (G.S. Khaparde) மே 29 1909 பர்மா சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் தன் வழக்கை எப்படி மேற்கொண்டு நடத்திச் செல்வதென்று எழுதுகிறார். “சம உரிமை” அடிப்படையில் வழக்கின் தீர்ப்பை கேள்வி கேட்கலாம் என்கிறார். ஐரோப்பியர் தங்கள் வழக்குகளில் ஜூரியில் “சக” வெள்ளைக்காரர்களே இருக்க கோர முடியும், இந்தியர்களுக்கு ஜூரியில் இந்தியர்கள் இருக்க வேண்டுமென்று தேச விரோத வழக்குகளில் கோர முடியாது ஆகவே திலகரின் வழக்கில் வெள்ளைக்காரர்களே ஜூரியில் இருந்தது சட்டப்படியே எனினும் அது சம உரிமை மீறல் என்று வாதிடலாம் என்கிறார். மேலும் ஒரு கட்டுரை வெளியிட்டதற்காக இத்தனை கடும் தண்டனை மனித உரிமை மீறல் இக்குற்றத்துக்காக இன்று இங்கிலாந்தில் கூட இத்தகைய தண்டனை வழங்கபட்டிருக்காது. 

தொடர்ந்து எழுதும் திலகர் மேற்சொன்ன முயற்சிகளில் ஏதேனும் வெற்றி கிடைத்து அரசு நிபந்தனைகள் விதித்தால் எத்தகைய நிபந்தனைகளை ஏற்கலாம் என்றும் சொல்கிறார். சிறையிலிருந்து விடுதலை கிடைத்தால் முழு சுதந்திரத்தோடு செயல்பட உரிமை வேண்டும், ஏனென்றால் அன்றைய ஆயுட் கால நிலவரப்படி இன்னும் 10-12 வருடங்களே தன் ஆயுள் இருக்கலாம் என்றும் அதில் செயல்படாமல் இருந்தால் “நடை பிணமாக” வாழ்வதற்கு சமம் என்கிறார். “நான் என் 15-ஆவது வயதில் பெற்றோரை இழந்தவன் அதிகபட்சம் என் மகன்களின் கல்விக்காக நான் விடுதலை அடைய நினைக்கலாம் ஆனால் இப்படி நடை பிணமாக இருப்பதற்கு பதில் அவர்கள் கல்வியை உங்களை போன்றவர்களை நம்பி விட்டு விட்டு சிறையிலேயே இருக்கலாம்”. “I do not wish for release AT ANY COST”. (Emphasis in original)

அக்கடிதத்தின் பின் குறிப்பில் தனக்கு வேண்டிய புத்தகங்களை பட்டியலிடுகிறார். சிறையில் புத்தகங்களுக்கு தடையில்லை என்கிறார். “Purchase for 4 vols. Of Comte’s Positive Polity, (not philosophy) translated into English by Dr. Bridges and other and published by Messrs. Longman and Co. In 1875-78? Only the first volume is reprinted as a cheap edition and I have got it here with me. But I want ALL the four vols.” 

ஜூலை 3, 1909 D.V. Vidwan, என்பவருக்கு எழுதிய கடிதம் இன்னும் சுவாரசியம். மகன்களுக்கு நல்ல கள்வி அளிக்கப்பட வேண்டுமென்று எழுதுகிறார். “What is more important is to cultivate a habit of studying and THOUROUGHNESS in what is taught to them” (emphasis in original). தன் மகள், மதுவுக்கு, 10-ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் சொல்லித் தர வசதி செய்ய வேண்டுமென்கிறர். 

இக்கடிதத்தில் தான் உடல் நிலைப் பற்றி திலகர் விவரிக்கிறார். தனக்கு 4 உபாதைகள் இருப்பதாக பட்டியலிடுகிறார். 1) விரை வீக்கம் (Hydrocele), 2) வாயுத் தொல்லையும் வயிற்றுப் போக்கும், 3) பல் தசைகளில் உபாதை (Gum affection), )நீரிழிவு நோய் ஆகியன திலகருக்கு இருந்தன. சிறையிலிருந்த ஒரு வருட காலத்தில் விரை வீக்கம் மோசமாகவில்லை என்கிறார். சிறை மருத்துவர் முதலில் சரியான உணவுப் பரிந்துரை கொடுக்காதது உடல் நிலையை பாதித்தது என்கிறார் பிறகு அவருக்கு பால், நெய், கோதுமை, அரிசி அளிக்கப்பட்டதாம். ஒரு வருடத்தில் உடல் நிலை மோசமடையாததற்கு அரசு தன்னை பராமரித்ததற்கு நன்றி என்கிறார். இதையெல்லாம் தன் மனைவிக்கு மொழிபெயர்க்க சொல்கிறார். மேலும் தன் மனைவியின் உடல் நிலை பரிசோதனை, சிறு நீர் பரிசோதனை உட்பட, ரிப்போர்ட் எடுத்து வரச் சொல்கிறார். தொடர்ந்து சில நூல்களை வாங்கி வரச் சொல்கிறார்.

ஒரு நூல் பட்டியலையே திலகர் அளிக்கிறார். மாதிரிக்கு சிலவற்றை இங்கு தருகிறேன்.

Chamber’s 20th century etimological English dictionary

Spencer’s Sociology

Milton’s Areopagitica

Machiavelli’s Prince

Haeckel’s Monism

Lock on Civil Govt.

Darwinism and Politics

Rousseau’s Social Contract

Hume’s Essays

Tukaram’s Gatha

Bible used by Pandita Ramabhai (மதம் மாறி கிறிஸ்தவரான பண்டித ரமாபாயை திலகர் எதிர்த்தார்)

கடைசியாக ஒரு செய்தி, திலகரின் மகன் அம்பேத்கரோடு இணைந்து செயல்பட்டார் (இச்செய்தியை நான் முதலில் அறிந்தது பேராசிரியர் ஜெ. பாலசுப்ரமணியமின் ‘ தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்” நூலின் வாயிலாக)

இக்கடிதங்களில் வழியே நாம் அறிவது அற்புதமான மனிதர்களைப் பற்றி. அவர்களின் அரசியல் பற்றி நம் கருத்துகள் வேறாக இருப்பினும் அவர்களின் தியாகங்கள், மனச்சாய்வுகள், உளச் சிக்கல்கள், குடும்ப கவலைகள், அறிவுத் தேடல்களும் அவற்றால் தங்களை அவர்கள் செதுக்கிக் கொண்டதும் நான் அறிய முடிகிறது.

Reference: Selected Documents pf Lokamanya Bal Gangadhar Tilak (1880-1920) Volume 2. Edited by Dr. Ravindra Kumar. 

அரவிந்தன் கண்ணையன் முகநூல் பக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2025 10:31

பட்டம் , கடிதம்.

மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா – 2 மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா.

அன்பு நண்பர் ஜெ, 

வணக்கம். 

தொடர்ச்சிியான பயணங்கள், தொடர்ந்த செயற்பாடுகள், தொடரும் எழுத்து மற்றும் உரைகள் என நீங்கள் ஊக்கமாக இயங்கிக் கொண்டேயிருப்பதையிட்டு நிறைவும் மகிழ்ச்சியும். நம் தலைமுறையில் நானறிந்து இத்தனை ஊக்கமுடன் இயங்குவோர் குறைவு. தங்களுடைய தொழில்துறையில் அப்படி இயங்குவோர்  உண்டு. அவர்களுடைய உலகம் வரையறைப்பட்டது என உணர்கிறேன். அது அவர்களுக்குப் பேருலாகமாக இருக்கலாம். அப்படி அவர்களால் உணரப்படலாம். ஆனால், நீங்கள் அதற்கப்பால் பன்முகத்தன்மையில் இயங்கும் – முன்னகரும் ஆளுமை. என் நண்பர்களிடத்திலும் நான் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வுகளிலும் உங்களுடைய இந்தப் பன்முக இயக்கத்தையும் அதில் நீங்கள் அடைந்தும் மீறியும் செல்லும் நிலைகளையும் சொல்லியும் பேசியும் வருகிறேன். எழுதியும் உள்ளேன். 

இப்போது தட்சசிலா பல்கலைக்கழகத்தினால்  ‘மதிப்புறு முனைவர்‘ பட்டம் உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. முழுத்தகுதியும் சிறப்பும் கொண்டவர் நீங்கள். உங்களுடைய உரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல, நவீனத் தமிழ் இலக்கிய மரபுக்கு கிடைத்திருக்கும் ஒரு ஆரம்பமாகவும் அடையாளமாகவும் இந்த மதிப்புறு பட்டம் அமைந்துள்ளது என்பது உண்மையே. இதை ஆழ்ந்து கவனிக்கும்போது, நீங்கள் எப்படி இந்தப் பட்டத்தை ஏற்பதற்கு எப்படி ஆழமாக யோசித்தீர்களோ, அந்தளவுக்கு பல்கலைக்கழகத்தினரும் இதைக்குறித்து ஆழ்ந்து சிந்தித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். உங்களுடைய எழுத்துகளின் வாசகரான திரு தனசேகரன், தக்ஷசிலா பல்கலையின் தாளாளர் என்ற  அடிப்படையில்  இதற்கு முன்யோசனைகளை வைத்திருந்தாலும்  பல்கலைக்கழகம் ஒரு உயர் கல்வித்துறை நிறுவனம் என்ற வகையில் ஆழமாகவே சிந்தித்திருக்கும். இன்னும் சற்று அழுத்திச் சொல்வதாக இருந்தால், அடிப்படையில் தனசேகரன் உங்கள் வாசகர் என்பதால், தவறுகளோ, மதிப்பிறக்கமோ உங்களுக்கும் தங்கள்  பல்கலைக்கழகத்துக்கும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் உங்கள் கவனம் கொண்டிருப்பார் – கொண்டிருப்பார்கள் என எண்ணுகிறேன். இதை அவர்கள் அந்த நிகழ்வில் இணைத்துக் கொண்ட ஏனைய ஆளுமைகளான லெய்மா போவே (Leymah Gbowee), பி.டி உஷா ஆகியோரின் தெரிவிலிருந்தும் புரிந்து கொள்ள முடியும். 

எண்ணங்கள் சிறப்பான செயலூக்கமாக அமைவதன் அடையாளம் இது. நிறைந்த மகிழ்ச்சி. நிறைந்த அன்பு. பெரும் பெருமை. 

குறிப்பு – தந்தையார் பாகுலேயன்பிள்ளையைப் பற்றிச் சிறிய புன்னகை உணர்வோடு நீங்கள் குறிப்பிட்டது நெகிழ்வை உண்டாக்கியது. அதில் இருந்த மெல்லிய நகைச்சுவைக்கு அப்பால் திரண்டிருந்த உணர்வு பெரிது. அது வேறான ஒன்று. இந்தக் கணத்தில் கொண்ட அந்த எண்ணங்கள்… என் தந்தையாரை நினைவில் எழுப்புகின்றன. அவர்களுடைய கனவுகளுக்கு மறுதிசையில் சென்றவர்கள் நாங்கள் என்பதாலா அல்லது அவர் உங்களை இந்த உயரத்தில் பார்த்து உவகை பெறுவார் என்ற நிறைவினாலா?

எங்கள் குடும்பத்தின் அன்பும் மகிழ்ச்சியும். 

அருண்மொழியையும் குழந்தைகளையும் (இன்னும் நமக்கு அவர்கள் குழந்தைகள்தான்) அப்போடு கேட்டதாகச் சொல்லுங்கள். 

நிறைந்த அன்புடன், 

கருணாகரன்

அன்புள்ள கருணாகரன்,

இன்று காலை தற்செயலாக உங்களை எண்ணிக்கொண்டேன், தமிழ்விக்கி பதிவுகளை திருத்தும்போது. உங்கள் கடிதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

என் செயல்பாடுகளுக்கான அடிப்படை ஊக்கம் என்பது அதை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன், என் வெற்றியும் நிறைவும் அதிலுள்ளது என்பதுதான். ஏற்புகள் என்பவை மேலும் செயல்படுவதற்கான துணைச்சக்திகள். இந்தப் பட்டமும் அவ்வாறே.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2025 10:31

That awe of nature – philosophy class experience

After attending your four day philosophy class at Boone, NC, so many ordinary moments suddenly began to make sense in new ways. Several images kept coming to mind – the Yosemite waterfall, a squirrel we saw there, scenes from War and Peace. Among them, the two experiences from Yosemite became especially clear after your class, and I wanted to share those with you.

That awe of nature – philosophy class experience

 

 

உங்கள் காணொளியில் சொன்னது உண்மை. இன்றைக்குள்ள இளைஞர்கள் தாங்கள் இன்னவகையானவர்கள் என அவர்களே ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அவர்களே அதைச் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.

 

நீ யார்? கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2025 10:30

November 25, 2025

நவவேதாந்தம் என்னும் இயக்கம்

நவீன இந்தியாவை உருவாக்கிய கருத்தியல்சக்தி என்ன என்று கேட்டால் பலர் மேலைக்கல்வி உட்பட எதையெல்லாமோ சொல்வார்கள். நவவேதாந்தத்தை விட்டுவிடுவார்கள். இந்தியா என்னும் நவீன தேசத்தை முதன்முதலில் உருவகித்தது நவவேதாந்தமே. இந்தியாவின் கல்வி, சமூகசீர்திருத்தம், பண்பாட்டு இயக்கங்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் அதைப்போலப் பங்களிப்பாற்றிய இன்னொரு இயக்கம் இல்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2025 10:36

மூளையைத் தின்னும் இன்னொரு அமீபா!

அன்புள்ள ஜெ அவர்களுக்கு.. 

மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சுவீடனில் எங்கள் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை இன் போது நீங்கள் கனிவுடன் விசாரித்தது அறிந்து நெகிழ்ந்தோம்…நேற்று அந்த வழக்குகளின் முடிவு வந்து இருக்கிறது, அனைத்து வழக்குகளிலும் முகாந்திரம் இல்லாமல் இருப்பதால் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. தொழில் முனைவோர் இது போன்ற பொய் வழக்குகளில் இருந்து பாதிக்க படாமல் இருக்க அரசியல் சாசன திருத்தம் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது இதில் முக்கியமானது. காரணம் இது போன்ற பொய் வழக்குகளை இந்த நாட்டு கோர்ட் பார்த்தது இல்லையாம். 

(ஒரு தமிழ் பையன் வேலை கேட்டார், விசா கேட்டார், கொடுக்க முடியாத நிலையில் இருந்தது சொன்னதும் நான் எனத் தொழிலில் மனித உரிமை மீறல் செய்வதாக எனது ஊழியர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தி வருவதாக புகார் அளித்துவிட்டு போய் விட்டார்). 

மற்றபடி உங்கள் உடல் நலனை பார்த்து கொள்ளுங்கள். வாரம் ஒரு முறையாவது உங்களை பற்றி அர்ச்சனா பேசாமல் இருக்க மாட்டார்..

அருண்மொழி அக்காவை விசாரித்ததாக சொல்லவும்

நன்றி..

செந்தமல் ரவி

அன்புள்ள செந்தழல் ரவி,

நன்றி

நேற்றுகூட உங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். திருப்பூர் வட்டாரத்தில் இப்போது இத்தகைய நிகழ்வுகள் அன்றாடச் செய்தியாகவே உள்ளன. இங்கே எளிய கூலித்தகராறுகளுக்குக்கூட போக்ஸோ உட்பட எல்லா சட்டங்களையும் பயன்படுத்தி மிரட்ட ஆரம்பித்துள்ளனர். ஒரு நண்பர் அத்தகைய தன் அனுபவத்தைச் சொல்ல, நான் உங்கள் அனுபவத்தைச் சொன்னேன்.

முதலில் உங்களைப் பற்றிய செய்தியைக் கேட்டபோதே அது முழுமையாகவே பொய்வழக்கு என்றும், ஆனால் ஸ்வீடனின் நீதிமுறையால் விரைவில் நல்ல தீர்ப்பு வந்துவிடும் என்றும் அறிந்திருந்தேன். இந்தியா என்றால் மேலும் பத்தாண்டு இழுத்து உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி வீணாகியிருக்கும்.

இன்று, ஒரு சிறுகுழுவாகச் சேர்ந்துகொண்டால் தொழிலளிப்போரை தொழில்செய்வோர் சட்டபூர்வமாகச் சிக்கல்களில் மாட்டிவிடுவது மிக எளிது. அல்லது ஒரு தனிநபர் துணிந்தால்கூட அதைச் செய்யமுடியும். ஆகவே ஏதேனும் வகையில் சட்டம் கனிவுடன் பார்க்கும் எவரையும் எவ்வகையிலும் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், அது நீண்டகால அளவில் தொழில்சிக்கல்களில் நிறுவனத்துக்கு எதிராகப் போகும் என்றும் இன்று இந்தியாவிலுள்ள தொழில் முனைவோர் எண்ண ஆரம்பித்துள்ளனர். நடைமுறையில் இது சட்டமும் சமூகமும் கனிவுடன் பார்க்கும் மக்களுக்கு அநீதியிழைப்பதாக ஆகிக்கொண்டிருக்கிறது. முதிராவயதினர் அல்லது தனிப்பெண்களின் உரிமை, நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால் அதையே சட்டபூர்வமிரட்டலுக்கு பயன்படுத்திக்கொண்டால், அந்த அச்சம் காரணமாக அவர்களுக்கு வேலையளிக்க தயங்குவார்கள். அதுவே முதிரா வயதினருக்கு அல்லது பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை பறிப்பதாக அது ஆகிவிடுகிறது.

இது ஒரு முக்கியமான பிரச்சினை. மனிதாபிமான அடிப்படையில் அரசும் சமூகமும் அளிக்கும் சலுகைகளை ஒருவர் தனிப்பட்ட சண்டைகளுக்கு முறைகேடாக பயன்படுத்திக் கொள்வார் என்றால் அவரை அந்த சட்டத்தை அவமதிப்பவர், அந்த அறவுணர்வுகளை சிறுமைப்படுத்துபவர் என்று எடுத்துக்கொண்டு மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அது நிகழ்வதில்லை. அண்மையில் ஒரு கேரள நீதித்துறைச் செயல்பாட்டாளர் பேசிய உரையில் கேரளத்தில் அண்மையில் எத்தனை போக்ஸோ வழக்குகள் பொய்யாக புனையப்பட்டு எளியவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று சொன்னார்.

உதாரணமாக, தன் காதலனிடமிருந்து கர்ப்பமடைந்த சிறுமி ஒரு 75 வயதான முதியவர் அதற்குக் காரணம் என குற்றம்சாட்ட அவர் பன்னிரண்டு மாதக்காலம் சிறையில் இருந்தார். விசாரணையில் அது பொய்க்குற்றச்சாட்டு என தெளிவடைய அப்பெண் தன் காதலன் கட்டாயப்படுத்தியமையால் அப்படிச் சொன்னதாகச் சொன்னார். முதியவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறுமி தண்டிக்கப்படவில்லை. ஆனால் அவர் உடலளவில், மனதளவில் தளர்துபோனார்.(75-year-old acquitted in Pocso case after 285 days in jail as witness retracts statement)

இந்த வகையான எந்த ஒரு அறம் சார்ந்த நடைமுறைச்சிக்கல் சமூகத்தில் எழுந்து வரும்போதும் அதை வெறும் முகநூல் விவாதமாக மாற்றிவிடும் ஒரு மனநிலை இன்று உருவாகி உள்ளது என்பது அடுத்த பிரச்சினை. சமூக வலைத்தளங்களில் அதைப் பற்றி பரபரப்பாகச் சர்ச்சை செய்கிறார்கள். எவராவது மாட்டினால் வசைபாடி, காழ்ப்பைக்கொட்டி அவரை மனதளவில் கொல்கிறார்கள். அப்படியே விட்டுவிட்டு அடுத்ததற்குச் சென்றுவிடுகிறார்கள். ஓர் உண்மையான சிக்கல் சமூகத்தில் எழுந்து வருமென்றால் அதை புரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் அதில் வசைபாடுவதற்கான தருணங்களை மட்டுமே கண்டடைகிறார்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக விவாதங்களில் இருப்பவர்கள் மிகப்பெரும்பாலும் தனிமைப்பட்டுப்போய் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையானவர்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் நடுவயது கடந்தவர்கள், சமூகத்தொடர்பு அற்று சிறு வட்டங்களுக்குள் வாழ்பவர்கள். அவர்களுக்கு பலவகையான உளச்சோர்வுகள் உள்ளன. அரசியல் நிலைபாடுகள், மதம் சாதி போன்ற சார்புநிலைகளை எடுத்துக்கொண்டு காழ்ப்பையும் கசப்பையும் வளர்த்துக்கொண்டு அதில் திளைப்பவர்கள். அவர்கள் இத்தகைய அடிப்படை விஷயங்களை எந்த நடைமுறைநோக்கும், அறவுணர்வும் இன்றி பேசித்தள்ளி அப்படியே விட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்வார்கள். விளைவாக எந்த விஷயத்திலும் தெளிவு உருவாகவே முடியாத நிலை அமைந்துள்ளது இன்று.

இன்று இளைஞர்கள் சமூக வலைத்தள அரசியல் சமூக விவாதங்களுக்கு  வருவதே இல்லை. அவர்களின் உலகம் instagram சார்ந்துள்ளது. ஏதேனும் உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், களத்தில் பணியாற்றுபவர்கள்  முகநூல்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பதில்லை, அவர்களுக்கு பொழுதிருக்காது. பெரும்பாலும் வெட்டியாக இருப்பவர்களின் உலகம் முகநூல். ஆனால் அவர்கள் முக்கியமான ஒரு கருத்துருவாக்கச் சக்தியாக திரண்டிருக்கிறார்கள். இவ்வாறு முன்முடிவுகளும் கசப்பும் மட்டுமே கொண்ட பெரும் திரளொன்று நம் சிந்தனையை வடிவமைக்கும் சக்தியாக திரண்டு இருப்பது இதற்கு முன்பு உலக வரலாற்றில் எங்கும் நிகழ்ந்தது இல்லை என்று தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் நடந்தது இதுதான். உங்கள் மேல் ஒருவர் நீங்கள் உழைப்புச்சுரண்டல் செய்வதாக, குடியேற்றச் சட்டமீறல் செய்வதாக குற்றம் சாட்டினார். அவர் எவர் என்று எவருக்குமே தெரியாது. அவர் அங்கே சட்டபூர்வமான குடியேறியோ, சட்டபூர்வமான உரிமை கொண்டவரோ அல்ல .ஆனாலும் அந்த அரசு அவர் எளியவர் என்பதனால் மனிதாபிமான அடிப்படையில் அவருடைய குற்றச்சாட்டை பதிவு செய்து உங்களை விசாரித்தது. உங்கள் விடுதியை சோதனை செய்தது .ஆனால் அதன் அடிப்படையில் எந்த செய்தியும் அரசாங்கத்தரப்பில் இருந்து வெளிப்படவில்லை. விசாரணை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைப்பற்றி உள்ளூரில் ஒரு பரபரப்பு ‘டாப்லோய்ட்’ இதழ் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாசிக்க தகுந்த ஒரு செய்தியை வெளியிட்டது. இவ்வளவுதான் நடைபெற்றது.

ஆனால் அந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு அங்கு வாழும் தமிழர்களில் ஒரு சாரார் ‘எனக்கெல்லாம் அப்பவே தெரியும்’ என்னும் வகையில் உங்களுக்கு எதிரான அவதூறுகளை இணையத்தில் பதிவிட்டார்கள். அதை அமெரிக்காவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் தமிழர்கள் பரப்பினர். குறிப்பாக இந்துத்துவ பின்னணி கொண்டவர்கள்- காரணம் நீங்கள் வெளிப்படையான திமுக ஆதரவாளர். உங்களை கொடும் குற்றவாளியாகவே சித்தரித்து, மேலும் மேலும் புதிய அவதூறுகளைச் சேர்த்து, அதை ஒட்டுமொத்தமாகவே திமுகவின் அனைவருமே செய்யும் குற்றம் என்று சித்தரித்தனர். 

இப்போது இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. உங்கள் மேல் பொய்க்குற்றம் சாட்டியவர்தான் குற்றவாளி என நீதிமன்றம் சொல்கிறது. ஆனால் அந்தக் கசப்பையும் காழ்பையும் இணையத்தில் பரப்பியவர்களும் இணைக்குற்றவாளிகள் அல்லவா? அவர்களை எந்த வகையிலும் இன்று தண்டிப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி இயக்கமே ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு ஒருவருடைய கௌரவத்தை பொதுவெளியில் முற்றிலும் சிதைத்து விட்டுச் செல்வது ஏதோ வகையான கொள்கைச் செயல்பாடு என்று அனுப்பப்படுகிறது. இதை உங்களுக்குச் செய்தவர்கள் இந்துத்துவ வெறியர்கள் நீங்கள் சார்ந்துள்ள திமுகவினரும் இதையேதான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. திமுகவினர்  ஸ்ரீதர் வேம்பு போன்றவர்களைப் பற்றி என்னென்ன தமிழகத்தில் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் இதன் அடுத்த முகம் தெரியும்.

நான் ஏற்கனவே சொன்னது போல உளச்சோர்வு கொண்ட, தனிமைப்பட்டுவிட்ட, மனச்சிக்கல கொண்ட நடுவயது தாண்டியவர்களின் உலகமாகிய முகநூல் மிகப்பெரிய அளவில் இந்த எதிர்மறை மனநிலையை உருவாக்கி, நம் சமூகத்தின் பொருளியல் உட்பட்ட தளங்களில் அடுத்தகட்ட முன்னகர்வுக்கே மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இதில் செயல்படும் அவதூறாளர்களில் சிலரையாவது அரசு மிகக் கடுமையாக தண்டித்து இவ்வாறு செயல்படுவதன் எதிர்வினை என்ன என்று அவர்களுக்குக் காட்டவேண்டும். இதை கருத்துச்சுதந்திரம் என அணுகவேண்டியதில்லை- இது அழிவுச்செயல்பாடு. இதை ஒரு சமூகம் அனுமதிக்கலாகாது.

அறுதியாக தமிழர்களாகிய நாம் யோசிக்க வேண்டிய ஒன்று உள்ளது. குஜராத்திகள் உலகம் முழுக்க தொழில்செய்கிறார்கள். எங்கேனும் சககுஜராத்திகள் தங்களில் ஒருவரை வெறும் காழ்ப்பால் ஒழிக்க முயன்றதாக கேள்விப்பட்டிருக்கிறோமா? உண்மையான தவறுகளைக்கூட அவர்கள் வெளிப்படுத்துவதில்லை என்றுதான் நமக்கு தெரியும். சரி, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட அயல்நிலங்களில் வணிகம் செய்யும் மலையாளிகள் சென்ற ஐம்பதாண்டுகளில் ஒருமுறையாவது இத்தகைய செயலைச் செய்துள்ளனரா? நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்?

தமிழர்கள் எங்கும் வணிகத்தில் காலூன்றவில்லை. இப்போதுதான் தொடங்கியுள்ளோம். நாம் பிறருடன் கடும் போட்டியை சந்தித்தே முன்னகரவேண்டியுள்ளது. அந்தத் தொடக்கத்திற்கு எவ்வளவு பெரிய தடை இந்த மனநிலை. இது நம் மூளையைத் தின்னும் அமீபா. ஒரு சமூகமாகவே நம்மை, நம் வாரிசுகளின் வாழ்க்கையை அழிக்கும் ஆற்றல்கொண்டது. அதைப்பற்றி நாம் இனியேனும் உணரவேண்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2025 10:35

அரு. மருததுரை

அரு. மருததுரை தமிழ்நாட்டின் முசிறிக்கு அருகில் உள்ள சிற்றூரில் ஏப்ரல் 2, 1951-ல் பிறந்தார். தமிழில் முதுகலை, முனைவர், முது முனைவர் பட்டங்களைப் பெற்றார். ‘தணிகைப் புராணம் ஓர் ஆய்வு’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1982-ல் முனைவர் பட்டம் பெற்றார். ‘மூவர் தேவாரத்தில் சிவபெருமான்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து 1987-ல் முது முனைவர் பட்டமும் பெற்றார்.

அரு. மருததுரை அரு. மருததுரை அரு. மருததுரை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2025 10:33

புதுவை வெண்முரசு கூடுகை 88

அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.

புதுவை வெண்முரசுக் கூடுகையின் 88 வது அமர்வு 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் நண்பர் பாரதி செந்தூர் உரையாற்றுவார்.

நிகழ்விடம் : கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

பேசு பகுதி: வெண்முரசு நூல் – 9. “வெய்யோன்” நிறைவு பகுதி 10 “நிழல் கவ்வும் ஒளி” – 77 – 79 அத்தியாயம். (1 – 3 )

நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2025 10:31

துளிர்க்கும் தளிர்கள் –அருணா

அஸ்தினபுரியில் இளம் கௌரவர்களும் பாண்டவர்களும் உடலும் உள்ளமும் இணைந்து அரண்மனை முற்றத்தில் கூவிச்சிரித்து ஓடிப்பிடித்து விழுந்தும் எழுந்தும் ஏறியும் குதித்தும் விளையாடுகிறார்கள். அதைக் கண்டு பேருவகை கொள்ளுகிறார் பேரரசர் திருதிராஷ்டிரர். 

அம்மனிதர் தம் வாழ்வில் அடைந்த இறுதிப் பேரின்பம் அதுவன்றி வேறேதுவாக இருக்க முடியும்.

தருமன் அகம் நோக்கிச் செல்பவனாகவும், சொற்களில் வாழ்பனாகவும் இருக்கிறான்.

பீமன் புறம் நோக்கிச் செல்பவனாகவும், உடலை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான்.

அர்ச்சுனன் அகமும் புறமும் நோக்குபவனாக கூரியவனாக இருக்கிறான்.

நகுலன் அழகன். சகாதேவனோ அறிஞனின் இயல்புடன் இருக்கிறான்.

பாண்டுவின் மறைவுக்குப் பின் இளம் பாண்டவர்களுடன் சதருசிங்கத்தில் இருந்து கிளம்பும் குந்தி,  எடுத்து வைத்த முதல் அடியிலேயே  உள்ளத்தால் அஸ்தினபுரியே சென்றடைந்து விடுகிறாள். தானறிந்த உலகில் தானறியா ஆடலை தன் நெஞ்சுக்குள் தன் மைந்தர்களைக் கொண்டு பலவாறு நிகழ்த்திக் கொள்கிறாள். பயணத்தின் ஒவ்வொரு கணத்திலும் மணிமுடி சூடிய சக்ரவர்த்தினியாகவே இருக்கிறாள்.

கௌரவர்களோ ஒற்றை உளம், ஒற்றை அறிவு கொண்டவர்களாக காந்தார இளவரசன் சகுனியின் கண்காணிப்பில் வளர்கிறார்கள்.

சகுனி ஒருதிசையில் காய்களை நகர்த்த, யாதவநாட்டு அரசி மறுமுனையில் களமாட, இருவர் காய்களையும் நோக்கி சமன் செய்து ஆடிக்கொண்டிருக்கிறார் பேரமைச்சர் விதுரர்.

நிலைகொள்ளாத யானையாக, அலையடிக்கும் கடலாக இருக்கும் துரியோதனன்,  தன் அகத்தை முழுதும் நிறைப்பவனாக பீமனை உணர்கிறான்.

நிலைபெற்ற பாறையாகவும் அசைவற்ற வானமாகவும் இருக்கும் பீமன் துரியோதனனை மட்டுமே தனக்கு மிகவும் இணையானவனாகவும் அணுக்கமானவனாகவும் உணருகிறான்.

இருவரும் ஒருவரை ஒருவர் தவம்செய்கிறார்கள். அந்தத் தவம் மூலம் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்கிறார்கள். ஒருவர் பிறிதொருவராக ஆகிறார்கள். அவர்களில் வாழும் தெய்வங்களின் ஆடல் இது.

அவர்களை நிகராக்கிக்கொண்டே சென்று முற்றிலும் சமன் நிகழ்ந்த கணத்தில் தங்கள் ஆட்டத்தை விலக்கிக் கொள்ளுகின்றன அத்தெய்வங்கள்.

அவர்களின் பிறிதொன்றிலாத ஆன்மாவின் தனித்தன்மையால் ஓர் அணுவிடை அவர்கள் நிகர் இழக்கும் வேளையை எதிர் நோக்கி அவை காத்து நிற்கின்றன.

அந்த வேளையும் வாய்த்து விடுகிறது. குருகுலத்து இளையோரனைவருக்கும் படைக்கலம் தொட்டுக்கொடுக்கும்  நிகழ்வில் துரியோதனுக்கும் பீமனுக்கும் களப்போர் நிகழ்கையில் பீமனின் கதைபட்டு துரியோதனனின் வலக்கை விரல் நசுங்கி ஒரு துளி குருதி செம்மணி தெறித்து பெருந்துயரத்தின் விஷத்துளியாக பேரழிவின் விதை என மண்ணில் விழுகிறது. 

கானுலா செல்லும் வேளையில் ஒரு கரடி துரியோதனனை எதிர்பாராது தாக்க, அருகிருந்த  பீமன் கரடியை பதிலுக்கு தாக்கி தமயனின் இன்னுயிரை காக்கிறான்.

பீமன் தன்னை காப்பாற்றியதை அவமானமாக எண்ணும் துரியோதனன் பீமன் மேல் பெருவஞ்சம் கொண்டு அருகே நின்ற வீரனின் வேலைப்பிடுங்கி அவனை வெறி கொண்டு தாக்குகிறான்.

ஆனால் பீமனின் அகமோ துரியோதனனின் காலடிகளிலேயே என்றும் விழுந்து கிடக்க விரும்புகிறது.

பந்த ஒளி மின்னும் கண்களுடன் அப்படியே அமர்ந்திருக்கிறான் துரியோதனன்.

அவனது வெறி கொண்ட மூர்க்கம் ஒரு புறம் இருக்க, அவனுள் நிறைந்துள்ள பேரன்பும் பெருந்தன்மையும் அவனை சற்று நிலை குலைய வைக்கிறது.

காலகம் என்னும் அடர்வனத்தில் தனியனாய் அலைந்து திரியும் துரியோதனன் ஸ்தூனகர்ணனின் ஆலயத்தின்  முன் இருக்கும் சுனை நீரில் தன் பிம்பத்தை பார்க்கும் வேளையில் தன்னுள் இருக்கும் பெண்தன்மையை கண்டு கொள்கிறான்.

அதுவே தன் நிலை குலைவுக்குக் காரணம் என்பதை அறிந்து நீரில் தோன்றிய அப்படிமத்தை ஓங்கி ஓங்கி அறைந்து  அழிக்கின்றான். 

சமநிலைக்கு மீண்ட உடலுடனும் இறுக்கம் நிறைந்த மனதுடனும் அரண்மனைக்கு திரும்புகிறான்.

காட்டிலிருந்து திரும்பிவந்த துரியோதனனின் முதல் பார்வையிலேயே அவன்  தன்னை முற்றிலும் விலக்கிவிட்டதை உணர்கிறான் பீமன். ஒற்றை மனம் கொண்ட கௌரவர்கள் அனைவருமே பீமனை வெறுத்து விலகிச்செல்கிறார்கள்.

இறுக்கமும் வெறுப்பும் வளர்ந்து கொண்டே செல்கிறது. கங்கைக்கரைக் காட்டுக்குள் வனப்பயிற்சிக்கு செல்லும் வேளையில் துச்சாதனன் பீமனை தங்களோடு உணவருந்த அழைத்து விஷம் கலந்த மதுவை குடிக்கக் கொடுக்கிறான். விஷமேறி மயங்கி விழுந்த அவனை காட்டுக்கொடிகளால் கட்டி கங்கை நீரில் பிடித்துத் தள்ளி விடுகிறான்.

நீரில் மூழ்கிய பீமன் நாகங்கள் வாழும் பாதாள உலகிற்கு செல்கிறான்.  குரோதவஸை என்னும் கரு நிற பெருநாகத்தின் கொடிய விஷத்தை உட்கொண்டு ஆயிரம் யானைகளுக்கு நிகரான புயவல்லமை கொண்டவனாக மண்ணுலகம் திரும்புகிறான்.

பொன்னிறமான நாகங்களுமான ஜயன் மகாஐயன் பீமனோடும் 

கரிய நாகங்களான கேதுவும் ராகுவும் துரியோதனனோடும் 

ஒளியும் இருளுமென  நிரந்தரமாக குடிகொண்டு விடுகிறார்கள்.

“தயை என்னும் தெய்வம் குருவையும் சிரத்தை என்னும் தெய்வம் சீடனையும் ஆள்கிறது. அவர்கள் இணையும் தருணத்தில் வித்யை என்னும் தெய்வம் ஒளியுடன் எழுகிறது”. ஆம் அர்ஜுனனின் குருவாக துரோணர் அமைந்த தருணம் இது. அவரிடம் வில் வித்தையை அல்ல,  வில் வேதத்தை கற்றுக் கொள்கிறான் அர்ஜுனன்.

சூரிய தேவனின் மைந்தன் கர்ணன் அங்க நாட்டில் தேரோட்டி அதிரதன் ராதை தம்பதியரிடம்  வளர்ந்து வருகிறான். சூரியன் என்றால் என்றும் அளிப்பவன். மைந்தனும் அவ்வாறே இருக்கிறான்.

முத்திரை மோதிரத்துடன் அஸ்தினபுரி  வரும் கர்ணனை தன் மைந்தன் என அறியும் குந்திதேவி கிருபரின் படைக்கலச்சாலையில் அவனுக்கு படைக்கலம் பயிற்றுவிக்க ஆணையிடுகிறாள்.

அவன் அங்கு பயில்வதை பீமன் தடுக்க துரோணர் அவனை மாணாக்கனாக ஏற்றுக் கொள்கிறார்.

அங்கு அர்ஜுனனும் கர்ணனும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். காலம்தோறும் ஆடிப்பாவைகளை எதிரெதிரே நிறுத்தி ஆடுகிறது படைப்புக்களம். அவர்கள் ஒருவிசையின் இரு முகங்கள்.

ஒருவன் கரியவைரம். இன்னொருவன் கருமுத்து. இருவர் வீரமும் முற்றிலும் நிகரானது. 

குருகுல இளவரசர்கள் குருகுலத்தில் தங்கி பயின்ற படைக்கள பயிற்சியின்  நிறைவு நாள்.

துரோணர் யாரும் வெல்லமுடியாத வில்லாளி என அர்ஜுனனை அறிவிக்கிறார். அர்ஜுனனின் வில் வித்தையைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர்.  அங்கு வரும் கர்ணன் தன்னுடன் விற்போருக்கு வருமாறு அர்ஜுனனை அழைக்கிறான்.

அவன் குலத்தைச் சொல்லி பாண்டவர்கள் அவனை அவமதிக்கும் வேளையில் துரியோதனன் கர்ணனை அங்க நாட்டின் அரசனாக ஆக்கி அவனுக்கு க்ஷத்ரிய தகுதியை அளிக்கிறான்.

அங்க நாட்டின் அரசனாக அறிவிக்கப்பட்டவன் சூதனின் மைந்தனாக தன்னை முன்வைத்து அவன் பாததூளியை தலையிலணிய சற்றும் தயங்காத அந்த பொற்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விடுகிறார்கள்.

பொற்சிம்மாசனத்தை அழகாக்கும் இத்தனை பேரழகு கொண்ட இன்னொரு மன்னன் இனி மண்ணில் பிறக்கப் போவதில்லை என்று அங்கு கூடியிருந்தோர் அனைவரும் திகைத்து நின்ற தருணம் அது.

ஆனால் ஒவ்வொரு தனிமனிதரின் முடிவுகளின் வழியாகவும் காலம் தன் முடிவை நிறைவேற்றிக் கொள்கிறது.

ஆம். முன்னமேயே சதருசங்கத்தில் இருந்து அஸ்தினபுரி செல்லும் வழியில் காற்றாற்று நீரில் தோன்றும் பெரு நாகமான கார்கோடகன் குந்தியிடம் கர்ணனின் நீர் பிம்பத்தைக்  காட்டுகிறான். 

கர்ணனை அஸ்தினபுரியின் அரசனாக்குவதே அனைத்து மைந்தர்களுக்கும் நல்லது என்று அவன் அறிவுறுத்தியத்தை மீறி

என்றும் எல்லோரையும் அணைத்து கொள்ளக்கூடிய, அனைவரின் கண்ணீரையும் துடைக்கக் கூடிய, அன்னமளிப்பதற்கென்றே  கைகளை கொண்ட,  அடைவதற்காக அல்ல அளிப்பதற்காகவே போரிடக் கூடிய, சினத்தால் அல்ல பெருங்கருணையால் மட்டுமே படைக்கலம் ஏந்த கூடிய, யாருக்கும் நிகரற்ற வீரனான  தன் மைந்தன் கர்ணனின் நீர்  பிம்பத்தை  வெட்டி சூரிய மைந்தன் அஸ்தினபுரியின் அரசனாகும் வாய்ப்பை தடுத்து விடுகிறாள் குந்தி.

பரத்வாஜருக்கு குகர் குலத்து பெண்ணில் பிறந்த மைந்தன் துரோணன். அவனை பிராமணன் என அவன் தந்தையாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசிக்க மறுக்கிறார். 

அக்னிவேசரின் குருகுலத்தில் வில் வித்தை கற்கும் துரோணன் அக்னீவேசரின் சிறந்த மாணவனாகவும் அவர் குருகுலத்தில் உள்ள அனைத்து க்ஷத்திரிய மாணவருக்கும் ஆசிரியராகவும் இருந்தாலும் அவன் குலம் காரணமாக அவன் சத்ரியனுக்குரிய அந்தஸ்தையும் பெற முடியவில்லை. 

அவன்  தந்தை தன் மாணாக்கர்களுக்கு உபதேசிக்கும் காயத்ரி மந்திரத்தை அவர் உதட்டசைவிலிருந்து கற்றுக் கொள்ளும் துரோணன் தன்னுள் வாழும் அந்த காயத்ரியை  உதற முடியாமல்

பரசுராமர் தன்னை மைந்தனாக ஏற்றுக்கொண்டாரென்றால் பிருகுகுலத்து பிராமணனாக ஆகி விட முடியும் என்று ஆவல் கொண்டு

அதற்காக பரசுராமரின் நடத்தும் வேள்விக்கு சென்று,  சற்று தாமதமானதால் வேள்வி முடிந்து விட பிருகு குல பிராமணனாகும் வாய்ப்பை  இழந்து விடுகிறான்.

பின் கௌதமபிராமணனாக ஆக விழைந்து கௌதம குலத்துதித்த தனுர்வேத ஞானியான சரத்வானை

சந்திக்கிறான்.

“ஊழுடன் உன் ஆன்மா ஆடும் இணைநடனமே உன் வாழ்க்கை.

அகத்துக்குள் நுழையும் உன் கண்ணீரே ஒளிகொண்டு ஞானமாகும்” என்று கூறும் சரத்வான்  தன் மகள் கிருபியை அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்.

கிருபியுடன் கூடிய எளிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல மூழ்கி தன் அடையாளங்கள் அனைத்தையும் இழந்திருக்கும் ஓர் வேளையில்  தன் நண்பன் யக்ஞசேனனால் மறுபடியும் குல இழிவு செய்யப்படுகிறான் துரோணன். அப்போதும் அவன் உதடுகளில் காயத்ரி துடித்துக்கொண்டிருக்கிறது.

ஆசுரநாட்டு கருடகுலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மைந்தன் ஏகலவ்யன். மலைக் குடி மகனான சிறு வயதிலேயே சிறந்த வில்லாளியாக விளங்குகிறான். அவ்விற் கலையை  முழுமையாக பயில விரும்பி துரோணரின் குருகுலத்திற்கு வருகிறான். 

மலை வேடனுக்கு வில்வேதம் தேவை இல்லை என்று கூறி துரோணர் அவனை ஏற்க மறுக்கிறார்.

பின் கங்கை நீரில் பிம்பமாக தோன்றி தன் கனவின் மூலம் அவனுக்கு வில் வேதம் கற்றுத் தருகிறார். அதற்கு குரு காணிக்கையாக அவனது வலது கையின் கட்டை விரலை கேட்டுப் பெறுகிறார்.

அதனை அறியும் ஏகலவ்யனின் அன்னை “புத்திரசோகத்தில் நீர் உயிர்துறப்பீர். ஷத்ரிய வீரருக்குரிய இறப்பை அடையும் நல்லூழும் உமக்கிருக்காது.” என்று தீச்சொல்லிடுகிறாள்.

ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகனின் அஸ்தினபுரி நோக்கிய பயணத்தில் அவன் காணும் நிலங்களையும் அதன் தொன்மங்களையும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையையும் விரிவாக சித்தரிக்கும் இந்நாவல் அப்பயணத்தில் இளநாகன் கேட்டறியும் சூதர் பாடல்களாக  துளிர்க்கும் இந்த இளம் மைந்தர்களின் கதையை ஒலிக்கிறது.

இம்மண்ணின்  நிகழ்வுகள் அனைத்தும் தெய்வங்கள் இந்த எளிய மானுடர்களுடன் ஆடும் விளையாட்டா? அல்லது அவர்கள் தங்கள் எல்லைகளை தாங்களே கண்டு அறிந்து கொள்ளும் தருணங்களா? என்று கேள்வியை எழுப்பி

“இப்பிரபஞ்ச பெருவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, முதலும் முடிவுமற்ற ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன.

மாபெரும் பிரபஞ்ச வலை நடுவே அந்த ஒற்றைப் பெரு விடை விழி திறந்து விஷக்கொடுக்குடன் அமர்ந்திருக்கிறது.”  

என்பதாகச் சொல்லி நாவல் நிறைவு கொள்கிறது.

நன்றியுடன்,

அருணா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2025 10:31

பறவைகள் வழியாக மீட்பு

எங்கள் மகனுக்கு ஒன்பது வயது, நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, அட்டைப்பெட்டிகளைப் பிரித்து வெட்டி ஏதாவது செய்வது அவன் பொழுதுபோக்கு. கடந்த ஒரு வருடமாக அவன் அதிகமாக பேசியது   வகுப்பில் உள்ள தோழர்கள் பலர் வீடியோ கேம் விளையாடுவதைப் பற்றியும் play station வைத்திருப்பதைப் பற்றியும் தான். நாமும் வீடியோ கேம் play station எல்லாம் வாங்க வேண்டும் என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான். 

இந்த தசரா விடுமுறையில் உனக்கு ஒரு surprise என்று சொல்லி அவனை  பறவை பார்த்தல் வகுப்புக்கு அழைத்து வந்தேன். 

பறவைகள் வழியாக மீட்பு

I am, nevertheless, inherently confused about my capacity to understand weighty and intricate subjects. I avoided your classes because I fear I won’t understand them. Would you be able to conduct these classes online for people like me?

 

Hesitations to learn philosophy
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2025 10:30

November 24, 2025

நல்லுரைகளா?

முழுமையறிவு காணொளிகள் வரிசை

இன்று வாழ்க்கை வழிகாட்டுதல்கள் பல தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தொழில்துறை சார்ந்த வாழ்க்கை வழிகாட்டுதல்கள் பெரும் கட்டணம் பெற்றுக்கொண்டு கற்பிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் அகவாழ்க்கை சார்ந்த ஆலோசனைகளை உளவியல் நிபுணர்கள் வழங்கி வருகிறார்கள். வாழ்க்கை ஆலோசகர்கள் இந்த அளவுக்கு வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு காலகட்டம் என்றும் இருந்ததில்லை.

அதற்கு காரணம் என்ன? இன்று மரபார்ந்த விழுமியங்களும், பார்வைகளும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. நவீன வாழ்க்கையின் தேவைகளும் அழுத்தங்களும் முற்றிலும் வேறுபட்டவை. அவற்றை எதிர்கொள்ள நவீன வாழ்க்கையில் இருந்தே உருவாக்கிக் கொண்ட வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் கற்பிக்க வேண்டிய தேவை உள்ளது .ஆகவே அந்த ஆலோசனைகள் பெரும்பாலும் பயனுள்ளவை என நான் நினைக்கிறேன்.

ஒருவரின் தொழிலை அலுவலகப் பணியை திறம்பட செய்வது எப்படி என்பதில் அத்தொழில் சார்ந்த ஒரு நிபுணரின் வழிகாட்டுதல் மிகுந்த பயனளிப்பதுதான். பெரும்பாலான உறவுச் சிக்கல்கள் சில பொதுவான உளவியல் அடிப்படையில், சமூகவியல் அடிப்படையில் நிகழ்வன. தொடர்ச்சியாக அச்சிக்கல்களைக் கொண்டவர்களை சந்திக்கும் ஒரு நிபுணரால் ஒவ்வொரு தனிநபருக்கும் அவர் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினையை சுட்டிக் காட்ட முடியும். சில நடைமுறை தீர்வுகளையும் அளிக்க முடியும்.

அவற்றில் ஒன்றாக இச்சொற்கள கூறப்படவில்லை. இவை ஓர் எழுத்தாளர் தன் வாசகர்களிடம் உரையாடும் சொற்கள் மட்டுமே. ஓர் எழுத்தாளனாக நான் உரிய ஆசிரியர்களை அடைந்தவன், இலக்கியம் மெய்யியல் இரண்டிலும். அவர்களிடம் கற்றவற்றையே இங்கே சொல்கிறேன். என் வாழ்வனுபவங்கள், என் எழுத்தினூடாக நான் அடைந்த அக அனுபவங்கள் ஆகியவற்றை முன்வைக்கிறேன். வழக்கமான உலகியல் சார்ந்த வாழ்க்கை வழிகாட்டிகளின் சொற்களுக்கு அப்பால் செல்லும் தேடல்கொண்ட சிறுபான்மையினரான வாசகர்களுக்காக மட்டுமே சொல்லப்படுகின்றன.

இந்த உரைகள் அனைத்துமே அந்தந்த  வாழ்க்கைச்சிக்கல்களைஅவ்வப்போது திறனுடன் எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றியவை அல்ல .இவை அடிப்படையான ஒரு தத்துவ தரிசனத்தை அன்றாட வாழ்க்கையுடன் இணைக்கும் நோக்கம் கொண்டவை .வெளிப்படையாகவே வேதாந்தம், குறிப்பாக அத்வைதம், இன்னும் குறிப்பாக நாராயண குருவின் அத்வைத மரபு, வாழ்க்கையின் வெவ்வேறு களங்களில் என்ன சொல்லும் என்பதையே இங்கு இக்காணொளிகள் வழியாக முன்வைக்கிறேன். அது வரலாறு சார்ந்து, அரசியல் சார்ந்து, இலக்கியம் சார்ந்து, வெவ்வேறு கலைகள் சார்ந்து, மதக் கொள்கைகளை சார்ந்து என் காணொளிகளில் வெளிப்படுகிறது. அதைப்போலவே அன்றாட வாழ்க்கை சார்ந்தது வாழ்க்கையின் இயல்பான சிக்கல்கள் சார்ந்தும் வெளிப்படுகிறது.

இவை வாழ்க்கை ஆலோசனைகள் அல்ல, தத்துவ அறிமுகங்கள்தான். இன்றைய சமூகவியல் ஆலோசகர்கள் அல்லது உளவியல் ஆலோசர்கள் அல்லது தொழில்துறை ஆலோசகர்கள் சொல்லும் அறிவுரைகளுக்கும் இதற்குமான வித்தியாசம் என்பது இதிலுள்ள அடிப்படையான தத்துவநோக்குதான். இவற்றின் ஊடாக திரண்டு வருவது அத்வைதமே. செயலூக்கம் கொண்ட அத்வைதம், அன்றாட அத்வைதம், நவீன அத்வைதம் என நான் அதைச் சொல்வேன். அந்த தத்துவப் பார்வையை சென்று அடைவதற்கான தொடக்கப் புள்ளிகளாகவும் இந்த வாழ்க்கை சார்ந்த ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஆலோசனைகளை ஒருவர் தொடக்கமாக எடுத்துக் கொள்வார் என்றால், அவர் அதை மேலும் விரித்து எடுத்து நுணுக்கமாக்கி அத்வைதத்தின் வாழ்க்கைத் தரிசனத்தை நோக்கி வந்து அடைய முடியும் என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு வந்தடைந்த பலரை எனக்கு தெரியும். அவர்கள் அவ்வாறு வந்தடைவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கான பயிற்சி முறைகளையும் அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான் இந்த அறிவுரைகள் வெவ்வேறு களங்களில் தொடர்ச்சியாக சொல்லப்படுகின்றன.

இந்த அறிவுரைகள் அல்லது ஆலோசனைகள் இவற்றை கேட்பவர்களுக்கு முற்றிலும் தெரியாததாக இருக்க வாய்ப்பில்லை.வாழ்க்கை சார்ந்த எந்த ஒரு உண்மையையும் ஏற்கனவே சற்று தெரிந்ததாகவே இருக்கும். அவ்வாறு இருந்தால்தான் அது வாழ்க்கை உண்மை. வாழ்க்கையில் உள்ள அடிப்படையான ஓர் உண்மையை எவர் அறியாமலேயே இருந்துவிட முடியும்? அந்த உண்மையை தர்க்கபூர்வமாக விளக்குவதும், உதாரணங்களுடன் நிறுவுவதும் மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது.

உண்மையில் ஒருவர அவர் ஏற்கனவே அறிந்த ஒன்றை, அதேசமயம் முழுக்க நம்பாத அல்லது ஏற்காத ஒன்றை இந்த விளக்கத்தின் ஊடாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு செல்கிறார். இவை ஒரு பார்வையை இன்னொன்றுடன் இணைத்து ஒரு பெரிய வலையை உருவாக்குகின்றன. தனிக்காணொளிகள் சிறியவை. ஆனால் ஒட்டுமொத்தமாக இவை மிகப்பெரிய உரையாடல்கள்.இந்த காணொளிகளில் எவையுமே புதிய எதையும்மே சொல்வதில்லை. ஆகவே இவை சிந்தனை என்ற அளவில் பெரிய மதிப்புடையவை அல்ல, சிந்தனைக்கு செல்லும் ஒரு வழி சுட்டி பலகைகள் மட்டுமே. அந்த ஒட்டுமொத்தப்பார்வையாக வெளிப்படுவது இந்திய மெய்யியல் மரபு உருவாக்கிய முதன்மைத் தரிசனத்தின் நவீனச் செயல்வடிவம்.

இந்த ஆலோசனைகள் அனைத்துமே ஒரே புள்ளியைச் சென்றடைவதனால் திரும்பத் திரும்ப சொல்வது போல தோன்றும் கூடும் .அது உண்மைதான் .எந்த ஓர் அடிப்படை வாழ்க்கைசார்ந்த ஆலோசனையும், அது ஒரு சிந்தனை அடிப்படையாகக் கொண்டது என்றால் ,அதன் மையமாக அமைந்திருப்பது ஒற்றைப் பார்வையே. அந்தப் பார்வையைத்தான் வெவ்வேறு வகையில் ஒரு சிந்தனையாளர் விரிவாக்கி சொல்கிறார். காந்தி சொன்னது ஒன்றையே. நாராயணகுருவும் சொன்னது ஒன்றையே.அந்த ஒன்றை மட்டுமே பல்லாயிரம் பாதைகள் உண்டாக இந்த காணொளிகள் சென்றடைகின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2025 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.