Jeyamohan's Blog, page 9
September 26, 2025
ஆலயக்கலை அனைவருக்கும்…
எனக்கு பதினைந்து வயதாக இருக்கும்போது கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சென்றிருந்தேன். எனது சகோதரி அங்கிருந்த ஒரு ஓவியத்தை கையால் மறைத்தபோது யானை காட்சியளித்தது. கையை எடுத்துவிட்டு அதே ஓவியத்தின் கீழ்பகுதியில் மறைத்தபோது குதிரை காட்சியாகியது.
Rationality is actually a scientific view. It is based on objective evidence and the logic that presents it. If clear evidence and logic are absent, then it cannot be considered science. Whether those pieces of evidence support our side or favor the opposition, they have the same value.
Periyar, Rationalism—A LetterSeptember 25, 2025
உருது இலக்கியத்தை ஏன் அறிந்துகொள்ளவேண்டும்?
உருது இலக்கிய வகுப்புகளை நாங்கள் நடத்துவதை ஒட்டி வந்த கேள்வி என்பது “என்ன வக்பு போர்டு நடத்தவேண்டிய வகுப்புகளை நீங்கள் நடத்துறீங்களா?” அந்தக் கேள்விக்கு, அதற்குப்பின் உள்ள மனநிலைக்கான பதில் இந்தக் காணொளி
கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்
தக்ஷசிலா பல்கலைக்கழகம் திண்டிவனம் அர்கே ஓங்கூர் என்னும் இடத்திலுள்ளது. ஓங்கூர்சாமியை சிலர் நினைவுகூரலாம். ஜெயகாந்தனின் புகழ்பெற்ற விழுதுகள் நாவல் இங்கே நிகழ்ந்தது. அதன் நாயகனாகிய ஓங்கூர் சாமிதான் தமிழிலக்கியம் உருவாக்கிய முதன்மைக் கதாபாத்திரம் என்பது என் எண்ணம். அங்கே ஓங்கூர்சாமியை சந்தித்து உடனிருந்ததை ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். தனக்கு கஞ்சாப்பழக்கம் அந்த ‘மட’த்தில் இருந்தே வந்தது என்றும்.
2019ல் நிறுவப்பட்ட தனியார் பல்கலைக் கழகம் தக்ஷசிலா. நீண்டகாலமாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நிகழ்ந்துவந்த மருத்துவம், பொறியியல், மற்றும் கலைக்கல்லூரிகளின் இணைப்பாக இந்தப் பல்கலை உருவாகியுள்ளது. ஐந்து துறைகளில் 13 கல்விகள் கொண்டது. 55 பட்டப்படிப்புகளும் , வெவ்வேறு முதுநிலைபடிப்புகளும் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் மானுடஅறிவியல் துறைகளில் இதன்கீழ் உள்ளன.
தக்ஷசிலா பல்கலையின் தாளாளர் திரு தனசேகரன் மகாலிங்கம் முப்பதாண்டுகளாகவே என் வாசகர், என் எழுத்துக்களில் இருந்து செயல்படுவதற்கான ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர் என்று குறிப்பிடுபவர். அவருடைய பொறுப்பில் இப்பல்கலை உருவானதுமே அதன் முதல் கௌரவ முனைவர் பட்டத்தை (Honorary Doctorate Degree )எனக்கு அளிக்கவேண்டும் என்று விரும்பி தெரிவித்தார். ஒரு தரமான கல்விநிலையத்தின் ஏற்பு என்பது ஒரு கௌரவம் என நான் ஏற்றுக்கொண்டேன்.
25 செப்டெம்பர் 2025 அன்று பல்கலையின் பதிவாளர் பேராசிரியர் முனைவர். எஸ்.செந்தில் அவர்கள் சென்னையில் அக்கார்ட் விடுதியில் என்னைச் சந்தித்து துணைவேந்தர் பேராசிரியர் விவேக் இந்தர் கோச்சார் அவர்களின் முறையான அறிவிப்பை அளித்து எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்றுக்கொண்டார். வரும் 19 நவம்பர் 2025 அன்று பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழவிருக்கிறது.
அருண்மொழியிடம் ‘இனிமேல் உனக்கான எல்லா சிகிச்சையையும் நானே செய்வதாக இருக்கிறேன்’ என்று சொன்னேன். நண்பர்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேன்.
அரசு சார்ந்த எந்த விருதையும் பரிசையும் ஏற்பதில்லை என்னும் முடிவில் இருந்தேன். பத்மஶ்ரீ விருதை நான் மறுத்தபோது என் அண்ணா வருத்தப்பட்டார். ‘நீ படிப்பை முறைப்படி முடிக்கவில்லை. அது அப்பாவை எந்த அளவுக்கு வருத்தப்படவைத்தது என்று எனக்குத் தெரியும். அப்பா இன்று இல்லை. ஆனால் நீ அந்த விருதைப் பெற்றிருந்தால் அப்பா எங்கோ இருந்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
அதன்பின் சிங்கப்பூர் நான்யாங் பல்கலையில் வருகைதரு பேராசிரியராக இருக்கையில் என் அறைக்கு வெளியே எனக்கான பெயர்ப்பலகை ‘ஜெயமோகன் பாகுலேயன் பிள்ளை’ என்று இருப்பதைக் கண்டபோது மறைந்த பாகுலேயன் பிள்ளை கொஞ்சமாவது நிறைவடைந்து, கல்லூரிப்படிப்பை விட்டு ஓடிய என்னை மன்னித்திருப்பாரா என்று எண்ணிக்கொண்டேன். இப்போது உறுதியாக மன்னித்துவிடுவார், வழக்கம்போல என்னை பார்க்காமல் வேறெங்கோ பார்த்து கொஞ்சம் புன்னகை புரியவும்கூடும் என நினைத்துக்கொள்கிறேன்.
கோவை சொல்முகம் கூடுகை-70
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 70வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 51
நூல் – மாமலர்
அத்தியாயம் 29 முதல் 47 வரை
அமர்வு 2:
நாவல் – ‘சோர்பா என்ற கிரேக்கன்‘
– நீகாஸ் கசந்த்சாகீஸ்
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 28-செப்டம்பர்-25,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
ச.கணபதிராமன்
பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், நாடக நடிகர். நாட்டார் நுண்வரலாறுகள், கோயில் தலவரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்.

விஷ்ணுபுரம் விருது, கடிதம்.
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதுக்கான அளவீடுகள் பற்றி சொல்லமுடியுமா? அவருடைய உடல்நிலையை கருத்தில்கொண்டுதான் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. (அவர் உடல்நிலை மோசமாக இருப்பதனால் என்று) அதனால்தான் இதைக் கேட்கிறேன்.
ரவி அமிர்தன்
அன்புள்ள ரவி,
விஷ்ணுபுரம் விருதுகளிலுள்ள வரிசை, எவருக்கு விருது அளிக்கப்படும் என்பது, இலக்கியவாசகர்கள் எவரும் சொல்லிவிடக்கூடியதுதான். ஏனென்றால் இங்கே இலக்கியம் சிறியது. உண்மையில் ஏதேனும் பங்களிப்பாற்றியவர்கள் மிகக்குறைவு. அவர்களின் பெயர்களை எந்த ஒரு வாசகனும் பட்டியலிட்டு வரிசைப்படுத்திவிட முடியும். ஆகவேதான் எங்கள் விருதுகள் எல்லாமே கேள்விக்கு அப்பாற்பட்டவையாக ஏற்கப்படுகின்றன.
இந்த விருதுக்கான அளவுகோல் என்பது ஒரு நபர், அல்லது குழுவுக்குரியது அல்ல. இப்பட்டியல் பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இலக்கியவாசகர்களிடையே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. அதை தமிழிலுள்ள இலக்கிய அழகியல் மதிப்பீட்டு மரபு எனலாம். வயதுவரிசையை மட்டுமே நாங்கள் கருத்தில்கொள்கிறோம்.
இதில் சில பெயர்கள் விடுபடும், சிலபெயர்கள் முந்தி வரும். காரணங்களும் வெளிப்படையானவை. தவிர்க்கப்படுபவர்களுக்கு முக்கியமான பிறவிருதுகள் (குறிப்பாக இயல், சாகித்ய அக்காதமி) கிடைத்திருக்கும். அதைப்போன்ற ஏற்புகள் அமைந்திருக்கும்.
மிக அரிதாக உடல்நிலையையும் கருத்தில்கொள்வதுண்டு. ரமேஷ் எங்கள் தொடர்பில்தான் இருந்தார். முன்பு அவர் உடல்நிலை மிக நலிந்திருந்தது. இப்போது சற்று மேம்பட்டிருக்கிறார். கோவைக்கு வரமுடியும். ஆகவே இந்த ஆண்டு அவருக்கு அளிக்கப்பட்டது.
விருது பெரும்பாலும் ஜூன் ,ஜூலை வாக்கிலேயே முடிவாகிவிடும். அப்போதே விருது பெறுபவரிடம் தகவலைத் தெரிவித்தும் விடுவோம். ஜூனில் ரமேஷிடம் அவருக்கான விருது தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர் உடல்நிலைக்கான சிறப்புச் சிகிழ்ச்சைக்கும் சென்றுவரத் தொடங்கினார். வழக்கம்போல தூரன் விருது விழா முடிந்து, அதற்கான வாசகர்கடிதங்களும் வெளியாகி முடிந்தபின் அறிவிக்கப்பட்டது.
ஜெ
Seeman, Tamil- A letter
Today, the Tamil nationalism advocated by Seeman has evolved into a significant political force. A large group of youth has also emerged who are actively participating in it. The truth is that we have not yet understood what Seeman’s real place in politics is.
Seeman, Tamil- A letterஅது மேட்ரிக்ஸ் படம் போல ஒரு மிகப்பெரிய அறிவு. அதில் ஒரு துளியாக நாம் நம்மை இணைத்துக்கொள்கிறோம். நாம் என்ன செய்யவேண்டும், எவருடன் உரையாடவேண்டும் என்று அதுதான் தீர்மானிக்கிறது.
சமூகவலைத்தளங்களின் நஞ்சு
September 24, 2025
சென்னையில் ஓர் உரை
25 செப்டெம்பர் 2025 அன்று காலை 10 மணிக்கு சென்னை வாணி மகால் (தி.நகர்) அரங்கில் பொன்னி இதழை நடத்திய அரு.பெரியண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. பொன்னி இதழ் தொகுப்புகளும் வெளியாகின்றன. நான் விழாவில் கலந்துகொள்கிறேன்.
என் மொழிகளும் மொழித்திறனும்
ஏறத்தாழ ஒரே வார்ப்பிலமைந்தவை போல நாலைந்து கடிதங்கள். எல்லாமே ‘ஆங்கிலம் பற்றி உனக்கு பேச என்ன தகுதி?’ ‘உனக்கு மட்டும் ஆங்கிலம் தெரியுமா?’ ‘அவரு யாரு தெரியுமா?’ பாணி வசைகள். புன்னகையுடன் கடந்துசெல்லவேண்டியவைதான். ஆனால் நம் பொதுமனநிலை சார்ந்த சில விஷயங்களை அதையொட்டிச் சொல்லமுடியும் என்பதனால் இந்தக் குறிப்பு.
நான் என் மொழித்திறன் பற்றி எப்போதுமே எந்த பெருமையையும் முன்வைப்பதில்லை. முதன்மையாகப் பன்மொழிப்புலமை பற்றி. ஐம்பது அறுபது ஆண்டுகளாக மொழியிலேயே வாழ்ந்தும்கூட எனக்கு மொழிப்புலமை சார்ந்த சந்தேகம் எப்போதும் உண்டு. எல்லா படைப்பிலக்கியவாதிகளுக்கும் தன் மொழி பற்றியும் பொதுவாக மொழி என்பது பற்றியும் ஒரு சந்தேகம் அரித்துக்கொண்டேதான் இருக்கும் என நினைக்கிறேன். நான் நினைப்பதை, உணர்வதை, கனவுகாண்பதை தன் மொழி வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகம். மொழியை சரியாகப் பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம்.
மொழி எப்போதும் சிந்தனையுடன் இணைந்தே உள்ளது. கனவைக்கூட சிந்தனையாக மாற்றித்தான் அது வெளிப்படுத்துகிறது. மொழியிலுள்ள இந்தச் சிந்தனையம்சத்தை உதறத்தான் இலக்கியவாதி மொழிநடையில் எதையெதையோ முயன்றுகொண்டிருக்கிறான். மனமும் கனவும் ‘அப்படியே’ மொழியில் வந்துவிடாதா என்று ஏங்குகிறான். அதன்பொருட்டு மொழியை உடைக்கவும் திருகவும் முயல்கிறான். மொழியை விரித்துக்கொண்டே இருக்கிறான்.ஆனால் அந்த முயற்சியே சிந்தனை சார்ந்ததுதான். இது ஒரு முரணியக்கம்.
மொழிக்கு ஒர் ‘சராசரிப் பொதுத்தன்மை’ உள்ளது. அது இருந்தால்தான் மொழியால் தொடர்புறுத்த முடியும். இலக்கணம் என்பதும், சொற்களின் குறைந்தபட்சப் பொருள் என்பதும் அதுதான். ஆனால் அதை நம்பி தனக்கான ஒரு புனைவை எழுத்தாளன் எழுத முடியாது. பிழையற்ற, தெளிவான பொதுமொழி அல்லது சராசரி மொழி கொண்டவர்கள் சராசரிப்படைப்பாளிகள். நல்ல படைப்பாளிக்கு எனஓர் அகமொழி உண்டு. அது அவனுக்குள் ஓடிக்கொண்டே இருப்பது. அதன் வண்ணங்களையே அவன் எழுதமுடியும். அதற்காக சராசரிப் பொதுத்தன்மையை உடைத்துச்சென்றுதான் ஆகவேண்டும். ஆகவே இலக்கணமீறல் இல்லாமல் படைப்புமொழி சாத்தியமே இல்லை. இதை எதுவரைச் செய்வது? முழுச்சராசரி மொழி பெரிய இரும்புச்சட்டகம். முழு அகமொழிக்கு எந்தப் பொருளுமில்லை. இரண்டுக்கும் நடுவே எந்தப்புள்ளியில் நடை அமையவேண்டும்?இது இன்னொரு முரணியக்கம்.
இந்த முரணியக்கங்கள் கொண்ட படைப்பாளியின் உள்ளம் மொழிகளைக் கற்று, ‘மொழித்தேர்ச்சி’ அடையமுடியாது. மொழியினூடாக வேறெங்கோ செல்பவன் அவன். ஆகவே மொழியில் அவனால் நின்றிருக்க முடியாது. வைக்கம் முகமது பஷீருக்கோ புதுமைப்பித்தனுக்கோ இருந்த சிக்கல் இதுதான். எனக்கும்தான்.
என் மனமொழி தமிழ். என்னால் தமிழில் மட்டுமே சிந்திக்கமுடிகிறது, எழுதமுடிகிறது. என் மனமொழியை நான் தீட்டிக்கொண்டே இருக்கிறேன், அளைந்துகொண்டே இருக்கிறேன். அதன்பொருட்டே தினமும் எழுதுகிறேன். ஆகவேதான் என்னால் அகத்தூண்டல் அடைந்ததும் சட்டென்று எழுத முடிகிறது. மொழி இயல்பாக உடன் வருகிறது. சொல்லப்போனால் மொழிதான் முதலில் வரும். அந்த மொழியிலிருந்தே கற்பனைகளும் சிந்தனைகளும் வருகின்றன. ஒரு சொற்றொடர்போதும், ஆயிரம்பக்க நாவலை எழுத ஆரம்பித்துவிடலாம்.
ஆகவே என் தாய்மொழி மலையாளமே எனக்கு அன்னியம்தான். அதில் நிறைய எழுதியிருக்கிறேன். தமிழ் அளவுக்கோ, அதைவிடவோ புகழுடன் இருக்கிறேன். எனக்கான தனி மலையாள மொழிநடை உண்டு. மலையாளத்தின் தனித்த இலக்கிய நடைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் என்னையும் விமர்சகர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த மொழிக்கு நான் என் தமிழாலான அகமொழியைக் கொண்டுசெல்லவேண்டும். பெரும்பாலும் ஒரு தற்செயலாகவே அது நிகழ்கிறது. நிகழ்ந்தபின் நான் எந்த மொழியில் எழுதுகிறேன் என தெரிவதுமில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் எழுதும்போதும் பேசும்போதும் நான் திணறுகிறேன். என் அண்ணாவிடம் பேசவே நாவில் மலையாளம் வரவில்லை. குடும்ப விழாக்களில் அதிகம் பேசாமல் இருந்துவிடுவேன்.
50 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் வாசிக்கிறேன். என்னளவு வாசித்த சிலரையே சந்தித்திருக்கிறேன். மிகப்பழைய மொழிநடை கொண்ட பதினேழாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்துக்களை வாசித்த இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் சந்தித்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை. என் நூல்களிலேயே என் விரிவான வாசிப்பை இன்னொரு நல்ல வாசகர் எளிதாகக் கண்டுகொள்ளலாம். மிகச்சம்பிரதாயமான சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட வேதாந்த நூல்களை வாசிக்கிறேன். ஐரோப்பிய – கிறிஸ்தவ மெய்யியல் சார்ந்தும் வாசிக்கிறேன். அவை என் அறிவுக்காக அல்ல, என் ஆன்மிகப்பயணத்துக்காக. (தமிழிலக்கியவாதிகளில் அவற்றை எவரும் வாசிப்பதாக நான் அறிந்ததில்லை).
முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே பல ஆங்கில இதழ்களில் எழுதியிருக்கிறேன். இண்டியன் எக்ஸ்பிரசில் தொடர் எழுதியிருக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் நடை உருவாகவில்லை- என் மனதின் அடியிலிருப்பது தமிழ்தான். நான் இண்டியன் எக்ஸ்பிரசில் எழுதும் காலத்தில் அசோகமித்திரன் சொன்னார், ஆங்கிலத்தில் மனம் புழங்க தொடங்கினால் தமிழில் என் அசல் நடை இல்லாமலாகிவிடும் என்று. அன்று முதல் ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். ஆங்கிலம் பேசுவதை அறவே தவிர்த்தேன். என் நாவிலிருந்தே ஆங்கிலத்தை அகற்றினேன். இன்றைக்குப் பேசவேண்டியிருக்கிறது. ஆனால் கடினம்தான். தமிழில் இருந்து ஆங்கிலம் எழவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மொழி சிக்கலாகிறது. தமிழின் சொற்றொடரமைப்பை யோசித்து ஆங்கிலமாக ஆக்கவேண்டியிருக்கிறது. எங்காவது தடுக்கிவிட்டால், அதை நானே உணர்ந்துவிட்டால் அவ்வளவுதான்.
இன்னொரு சிக்கலும் உண்டு. என் மனமொழி நாவில் எழும்போது எனக்கே அது அன்னியமாக உள்ளது. ஆகவே தமிழிலும் தங்குதடையில்லாமல் பேசமுடியாது. பேசும்போது சட்டென்று பிழையாக சொல்லோ சொற்றொடரோ வந்து நா தயங்கிவிடுகிறது. இன்றைக்கும் ‘சொல்வல்லார்’ சிலரைக் கண்டால் கொஞ்சம் பொறாமைதான்.
இறுதியாக ஒன்று, நான் குமரிமாவட்டத்தவன். என் வட்டாரமொழி என்னுள் உண்டு. அதற்கான சொற்கள், சொலவடைகள். அவை என் செந்நடையிலும் வந்துகொண்டிருக்கும். மேடைப்பேச்சிலும் அந்த ‘நெடி’ இருக்கும். அதைக் களையவேண்டும் என்றும், சொற்களை நான் சராசரித்தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தவேண்டும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது என் அடையாளம், என் தனிமொழி, என் மனம். அதை நான் மாற்றப்போவதில்லை. இன்று அஜிதன் எழுதுவதில் அப்படி பல குமரிமாவட்ட சொல்லாட்சிகள் இயல்பாக இருப்பதைக் காண்கிறேன். அது உன் அடையாளம், எங்கே எழுதினாலும் என்றுதான் அவனிடம் சொல்வேன்.
தமிழுடன் முழுமையாக இருத்தல் என் பலம் என நான் நினைக்கிறேன். ஆனால் இதை அடுத்த தலைமுறைக்குச் சொல்லமுடியவில்லை. சொல்லியிருக்கிறேன், ஆனால் அவர்களுக்கு இந்த உலகமயச் சூழலில் அது ஒத்துவருமா என்று தெரியவில்லை. அஜிதன் அவன் நாவலை (அல் கிஸா) அவனே ஆங்கிலமொழியாக்கம் செய்து, அந்த மொழியாக்கம் அபாரமாக உள்ளது என்று சொல்லப்பட்ட போது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால் எல்லாமே வேறொன்றாகிவிட்ட காலம். நான் ஒன்றும் சொல்லமுடியாது.
என்னால் ஆங்கிலத்துக்குள் செல்லமுடியவில்லை, செல்லக்கூடாதென்ற எச்சரிக்கையையும் விடமுடியவில்லை. குறிப்பாக ஆங்கில உச்சரிப்புக்கு முயலவே கூடாது என என் இலக்கிய முகவரே சொல்கிறார், அது ஆங்கிலத்தேய்வழக்குகளுக்குக் கொண்டுசெல்லும், என் மூலமொழியை சிதைக்கும் என்றார். ஆங்கில உச்சரிப்புடன் ஓர் இந்தியர் பேசுவது பலசமயம் கேலிக்குரியதாகவும் ஆகிவிடும் என்றார். (ஒரு வெள்ளையர் கொங்கு வழக்கில் பேசுவதுபோல)
ஆனால் இதோ இந்தக் காலையில் எழுந்து ஆங்கிலத்தில் ஒரு அரசியல்கட்டுரையும், மலையாளத்தில் ஓர் இலக்கியக் கட்டுரையும் எழுதிவிட்டு அமர்ந்திருக்கிறேன். அடுத்தவாரம் ஒரு கன்னட இலக்கிய விழாவுக்குச் செல்லவிருக்கிறேன். பெரும்பாலும் கன்னடம் தெரியும். கொஞ்சம் முயன்றால் பேசிவிடலாம். ஆனால் பேசவேண்டுமா என்ற தயக்கம் ஆட்கொண்டிருக்கிறது. பலமொழி தெரிவதென்பது இலக்கியவாதியின் தகுதி அல்ல என்ற எண்ணத்தை உதறவே முடியவில்லை.மொழியில் அல்ல, அதற்கு அப்பால்தான் என்னுடைய உலகம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்லமாட்டேன்.
கரடிகுளம் ஜெயபாரதிப் பிரியா
துணுக்கு எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர். 15000-த்திற்கும் மேற்பட்ட துணுக்குக்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய ஒரு பக்கக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார்.

Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
