Jeyamohan's Blog, page 11

September 23, 2025

ஆலயக்கலை அனுபவப்பதிவுகள்…

The discussion about idealists around us is an intriguing piece. I often wonder about these common people who discuss idealism and lament its absence today. However, they never respect or support the idealists who are living among us. 

Why are Kakkan and Kamaraj important topics of discussion?

 

ஆலயக்கலை பயிற்சி முகாம் ஆகஸ்ட் 29, 30, 31 தேதிகளில் வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்கள் ஈரோடு, வெள்ளிமலை, குருநித்யா அரங்கில்  நடைபெற்றது. இசைக்கலைஞரும் ஆய்வாளருமான  சு. ஜெயக்குமார் ஆசிரியராக இருந்து பயிற்சி அளித்தார்.பயிற்சியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆலயக்கலை, அனுபவப்பதிவுகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2025 11:30

September 22, 2025

இயந்திர மொழியாக்கம், இனிவரும் சவால்கள்..

இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி.-2 இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி. எதிர்விமர்சனங்கள் பற்றி…

அன்புள்ள ஜெ

நீங்கள் பெயர் சுட்ட விரும்பவில்லை என்பதனால் நானும் பெயர் சுட்ட விரும்பவில்லை. அந்த ‘புகழ்பெற்ற’ மொழியாக்கம் என்பது டிப்ஸீக் என்னும் செயலியால் செய்யப்பட்டு ஆங்காங்கே பட்டி டிங்கரிங் செய்யப்பட்டது. நான் இதே AI துறையில்தான் இருக்கிறேன், முப்பது வருடங்களாக. இந்த வேலையைத்தான் பல ஆண்டுகளாக செய்துவருகிறேன். இங்கே நண்பர்களுடன் எப்படி டீப்ஸீக் இதைச் செய்தது என்றே செய்து பார்த்துவிட்டோம். ஓர் ஆங்கிலப்பேராசிரியர் என்று அல்ல, உயர்நிலைப்பள்ளி ஆங்கிலம் படித்த ஒருவர்கூட செய்யாத அபத்தமான, நம்பவேமுடியாத சொல் மொழிபெயர்ப்புகளும்; அடிப்படைத் தமிழறிந்தவர்கள் எவரும் எழுதாத அபத்தச் சொற்றொடர்களும் கொண்ட மொழியாக்கம் அது.

அந்த மொழியாக்கத்தை ‘விரும்பி சரளமாக’ வாசித்தேன் என நீங்கள் அறிந்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் வேடிக்கையாக உள்ளது. (இவர்கள் என்னதான் வாசிக்கிறார்கள்!)

(பிகு. பத்மாலட்சுமி உங்கள் நூலை பாராட்டியிருக்கும் சூழலில் இந்த ருஷ்தி விமர்சனம் தனி அழுத்தம்பெறுகிறது)

என்.சத்யநாராயணன்

எம்.டி.முத்துக்குமாரசாமி மொழியாக்கம். ரோஜாவின் பெயர்

அன்புள்ள ஜெ,

மொழியாக்கம் பற்றி ஒரு குறிப்பை எழுதியிருந்தீர்கள். அது இப்போது பெரிய விவாதமாக ஆகியுள்ளது. எம்.டி.முத்துக்குமாரசாமியின் ரோஜாவின் பெயர் நூலின் மொழியாக்கம் பற்றித்தான் சொல்லியிருக்கிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அதை நீங்கள் தெளிவாகவே சொல்லியிருக்கலாம். அந்நாவலின் ஆங்கில மொழிநடை அப்படியொன்றும் கடினமானது அல்ல. அதன் உட்குறிப்புகள் கிறிஸ்தவ இறையியலை கொஞ்சம் வாசிப்பவர்களுக்கு புரிந்துகொள்ளக் கூடியவைதான். நீங்களே அந்நாவலைப் பற்றி 20 ஆண்டுகளில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதிலுள்ள நூலகத்தை உதாரணமாகக் கூட சில இடங்களில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அண்மையில்கூட ஓர் உரையில் அதை கேட்டேன்.

எம்.டி.எம் செய்துள்ளது ஏ.ஐ. மொழியாக்கம். டீப்சீக் செயலி 80 விழுக்காடு. 20 சதவீதம் குரோக். அதை கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்த எவரும் பத்து பக்கம் இணையத்தில் போட்டாலே கண்டுபிடித்துவிடலாம்.  ஆனால் அந்த ஏ.ஐ செய்த மொழிக்குளறுபடியை படித்துப்பார்த்து புரிந்துகொள்ளக்கூட இந்தப் பேராசிரியருக்கு அடிப்படை ஆங்கிலம் தெரியவில்லை. இன்னொரு முறை படித்துத் திருத்தியிருந்தாலே பெரும்பகுதி பிழைகளை சரிசெய்திருக்கலாம். இவர் மொழியே தெரியாமல் பெரும்பாலும் அகராதியைத்தான் பார்த்திருக்கிறார். ஆங்கில மொழியில் உள்ள சொல்வழக்கு என்ன என்பது தெரியவில்லை. அவரது அடிப்படை ஆங்கில அறிவு மிக மட்டம். ஆங்கிலஞானம் வழக்கமான இணையப் பாவலாதான்.

இவரைப்பற்றி நீங்கள் திட்டமிட்ட அமைதியை மேற்கொள்கிறீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இசை பற்றி நிறைய கட்டுரைகளை இணையத்தில் எழுதினார். எல்லா கட்டுரைகளும் பழைய சுருதி இசை இதழில் வேறு நிபுணர்கள் எழுதியவற்றை அப்பட்டமாக நகல்செய்தவை. அதை லலிதா ராம் என்னும் ஆய்வாளர் இணையத்திலேயே பக்கம் பக்கமாக எடுத்துப்போட்டு தொடர் கட்டுரைகள் எழுதினார். முதலில் இவர் அதை பிராமணச் சதி என்றார். பிறகு அது பின்நவீனத்துவ எழுத்துமுறை உனக்கெல்லாம் புரியாது என்றார். அதன்பிறகு அப்படியே காணாமலானார். பிறகு ஒரு வருடம் கழித்து திரும்பி வந்தார். லலிதாராம் எழுதிய கட்டுரைகள் அப்படியே இணையத்தில் உள்ளன. நீங்களோ உங்கள் நண்பர்களோ வாயே திறக்கவில்லை. இதை வேறு ஒருவர் செய்திருந்தால் கிழித்திருப்பீர்கள்.

இதேபோல ஒரு ஏ.ஐ மொழியாக்கம் முஜிபுர் ரஹ்மான் என்ற பேராசிரியர் செய்த கர்ஸியா மார்க்யூஸின் காலரா காலத்துக் காதல். அவரும் பிறர் எழுதிய ஏராளமான கட்டுரைகளை திருடி தன் பெயரில் போட்டுக்கொண்டார். கேட்டால் அது பின்நவீனத்துவம் என்றார். இவர்கள் இந்த இலக்கியத் திருட்டை இனி ஏ.ஐ உதவியுடன் மாற்றியமைத்து வெளியிட முடியும். ஏ.ஐ இதை அடையாளம் தெரியாமல் மாற்றித் தந்துவிடும். நடையே மாறியிருக்கும். அதை ஏ.ஐ நிபுணர் கண்டுபிடிக்கலாம். ஏ.ஐ. செயலியும் கண்டுபிடிக்கலாம். சாமானியர் கண்டுபிடிக்கமுடியாது.

இவர்களுக்கு வெட்கம் கூச்சம் எதுவுமே கிடையாது. இவர்கள் எழுதும் கட்டுரைகள் திருட்டு. மொழியாக்கத்தில் மோசடி. இந்தியாவில் இதையெல்லாம் செய்தே பெரிய பெரிய இடங்களுக்கு போக முடியும். உருப்படியாக படிப்பவனும் எழுதுபவனும் எல்லாரும் இங்கே முட்டாள்கள். இதுதான் சூழல். இவர்களுக்கு பலர் ஆதரவு. இன்னார் எதிர்த்தால் நான் ஆதரிப்பேன் என்பது மட்டும்தான் இங்கே ஃபார்முலா. வெட்கக்கேடு.

ஆர்.ராமகிருஷ்ணன்

எம்.டி.முத்துக்குமாரசாமி மொழியாக்கம். ரோஜாவின் பெயர்

அன்புள்ள சத்யா, ராமகிருஷ்ணன்,

செயற்கை நுண்ணறிவு மொழியாக்கம் பற்றி 2020 முதல் எங்கள் நண்பர்கள் அணியில் பல முயற்சிகள், பலவகையான விவாதங்கள் நிகழ்ந்துவருகின்றன. பலர் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் வேலை செய்பவர்கள், அதை உருவாக்கியதில் பங்கு கொண்டவர்கள். கனடா நண்பர் மகேந்திரன் 2022ல் வெண்முரசை செயற்கை நுண்ணறிவால் மொழியாக்கம் செய்தார். ஒரு 70 சதம் சரியாகவே இருந்தது. வெள்ளையானை மொழியாக்கம் இன்னும் துல்லியமாக இருந்தது. மகேந்திரன் தூரனின் கலைக்களஞ்சியத்தை செயற்கை நுண்ணறிவால் மொழியாக்கம் செய்தது 99 சதவீதம் சரியாக இருந்தது.

ஆனாலும் எங்களுக்கு (எனக்குத்தான்) தயக்கம். அந்த சிறிய பிழைகள் மிகப்பெரிய கலாச்சாரப் பிழைகளுக்கான தொடக்கமாக ஆகிவிடுமா? அந்த சின்னஞ்சிறு வேறுபாட்டைத்தான் நாம் இன்னும் கூர்ந்து கவனிக்கவேண்டுமா? கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் ஏ.ஐயை நம்பக்கூடாது என்றே நான் நிலைபாடு கொண்டிருக்கிறேன். ஆகவே நான் இன்னமும்கூட தமிழ்விக்கியில் தானியங்கி மொழியாக்கச் செயலியை அமைக்க ஒப்புக்கொள்ளவில்லை. எங்களுக்குள் இந்த விவாதம் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

இச்சூழலில்தான் இந்த மொழியாக்கங்களின் பிரச்சினை. நான் மொழியாக்கம் ‘துல்லியமாக’ இருக்கவேண்டும் என நினைக்கவில்லை. தமிழிலிருந்து ஆங்கிலம் செல்லும் மொழியாக்கங்களிலும் துல்லியம் குறைவுதான். ஒரு புளியமரத்தின் கதை மொழியாக்கத்தில் அம்மன் கொடை என்பது Amman’s umbrella என மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அண்மையில் சா.கந்தசாமியின் ‘சாயாவனம்’ நாவல் சாயாத வனம் என பொருள்கொள்ளப்பட்டு Wilderness Untamed என மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. சாயா என்றால் நிழல். சாயாவனம் என்றால் நிழல்காடு. அது கோயிலின் நிழல்காடு. ஓர் ஊரின் பெயரும்கூட. அத்துடன் அந்நாவல் அழிந்த வனத்தைப் பற்றியது. 

மொழியாக்கம் படிக்கும்படி இருந்தாலே அது நல்லதுதான். நமக்கு நிறைய மொழியாக்கங்கள் வேண்டும். அவை வாசிக்கப்படவேண்டும். கலாச்சார நுண்குறிப்புகள் விடுபடலாம். உண்மையில் அவற்றில் பலவற்றை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. நம் படைப்புகள் ஆங்கிலத்திற்குச் செல்லும்போது ‘ஏன் இத்தனை கலாச்சார உட்குறிப்புகள்? எல்லா வரியிலும் ஏன் குறியீடுகள்?’ என்று அவர்கள் நம்மிடம் கேட்பதைக் காண்கிறேன். பலவற்றை களைந்தே மொழியாக்கம் செய்கிறோம். (நம் நாவலில் மஞ்சள் என்பது மங்கலம், மணவாழ்க்கை என எவ்வளவோ விஷயங்களின் குறியீடாக வரும். அதை அமெரிக்கர்களுக்கு எப்படி கொண்டுசெல்வது?)

அதேபோல மொழிவிளையாட்டுக்கள், மொழிநுணுக்கங்களையும் முழுக்க மொழிபெயர்ப்பால் கொண்டுசெல்ல முடியாது. நேரடி மொழியாக்கம் பிழையாகவும் ஆகும். ‘ஈரல்குலையே நடுங்கியது ‘என்பதை எப்படி மொழியாக்கம் செய்வது என்று ஒருவர் அண்மையில் என்னிடம் கேட்டார். Liver எப்படி உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது என்றார். இதையெல்லாம் ஒரு மொழிநுண்ணுணர்வால்தான் மொழியாக்கம் செய்யவேண்டும்.

ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய மொழிநடை உண்டு. உதாரணமாக, ஆங்கிலத்தில் சரளமாக இப்படிப் பேசவோ எழுதவோ முடியும்.

While I am writing this in response to recent discussions about translation, specifically the unbelievably flawed translation of Umberto Eco’s much-celebrated postmodern classic, Name of the Rose, by M.D. Muthukumarasami, who claims expertise in English and works as an English teacher, I intend not to engage in trivial debates on Facebook created by ill-equipped writers, but rather to address the serious issue of automatic translation of literary texts.

ஆங்கிலம் சாதாரணமாகத் தெரிந்த ஒருவர்கூட இதை இயல்பாகப் படித்துக்கொண்டே போகமுடியும். ஆனால் இதை இப்படி நேரடியாக மொழியாக்கம் செய்து பாருங்கள். ‘புதிர்வட்டச்சுழல்மொழி’ வந்துவிடும். 

நான் இதை எழுதும்போது, மொழிபெயர்ப்பு பற்றிய சமீபத்திய விவாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, குறிப்பாக நம்பமுடியாதபடி பிழையாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள ஊம்பர்ட்டோ எக்கோவின் மிகக்கொண்டாடப்பட்ட போஸ்ட்மாடர்ன் செவ்விலக்கியமான ரோஜாவின் பெயரின் எம். டி.முத்துக்குமாரசாமி மொழியாக்கம், தன்னை இவர் ஆங்கிலத்தில் நிபுணர் என்று சொல்லிக்கொள்கிறார், ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார், நான் இப்போது முகநூலில் கருவிகள் அற்றவர்கள் நிகழ்த்தும் சில்லறை விவாதங்களுக்குள் செல்லவிரும்பவில்லை; மாறாக இலக்கியப்படைப்புகள் தானியங்கி மொழியாக்கம் செய்யபடுவதிலுள்ள தீவிரமான பிரச்சினை பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

நம் மொழியாக்க ‘நிபுணர்கள்’ இப்படிச் செய்வார்கள். உள்ளூர் சிறு, குறு, நலிந்த எழுத்தாளர்கள் இந்த நடையை நகல் செய்வார்கள். புதிர்மொழி இலக்கியம் பிறந்துவிடும்.

இதுதான் இந்த வரியின் தெளிவான மொழியாக்கம்.

’நான் இதை எழுதும்போது மொழிபெயர்ப்பு பற்றிய சமீபத்திய விவாதங்கள், குறிப்பாக நம்பமுடியாத அளவு பிழையாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள ஊம்பர்ட்டோ ஈகோவின் மிகப்புகழ்பெற்ற பின்நவீனத்துவச் செவ்வியக்கியமான ரோஜாவின் பெயர் நாவலின் மொழியாக்கம் பற்றியவை, குறித்துப் பேசவிரும்பவில்லை. இதன் மொழிபெயர்ப்பாளர்  எம்.டி.முத்துக்குமாரசாமி ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுபவர், ஆங்கில நிபுணர் என்று சொல்லிக்கொள்கிறார். இப்போது பயிற்சியற்றவர்கள் முகநூலில் நடத்தும் அற்பவிவாதங்களுக்குள்ளும் செல்லவிரும்பவில்லை. மாறாக இலக்கியப்படைப்புகள் தானியங்கி மொழியாக்கம் செய்யபடுவதிலுள்ள தீவிரமான பிரச்சினை பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.’

மொழியாக்கத்தில் நாம் இழப்பவை இயல்பான கலாச்சார இடைவெளியின் விளைவுகள். கார்னெட்டின் தல்ஸ்தோய் மொழியாக்கமே பல இழப்புகள் கொண்டது, ஆனால் அதன் வழியாகவே தல்ஸ்தோய் ஐரோப்பாவை வென்றார். பின்னர்தான் சரியான, பிழையற்ற மொழியாக்கங்கள் வந்தன. ஆகவே மொழிபெயர்ப்பில் விடுபட்டதைப் பற்றி நான் பேசுவதே இல்லை. வாசிக்க முடிகிறதா என்பது பற்றி மட்டுமே நான் கவனம் கொள்கிறேன். வாசகனாகிய என் மொழிநுண்ணுணர்வைச் சீண்டி என்னை அந்த மொழியாக்கம் அவமதிக்கக்கூடாது, அவ்வளவுதான். (இல்லை, மொழியுணர்வே இல்லாத மழுமட்டைகளுக்காக செய்யப்பட்ட சிறப்பு மொழியாக்கம் என்றால் அதை அட்டையிலேயே சொல்லிவிடுங்கள்.)

*

இதை தனிப்பட்ட நபர்கள் சார்ந்த சிக்கலாக ஆக்கவேண்டாம் என்றுதான் நினைத்தேன். நான் எழுதியது எம்.டி.முத்துக்குமாரசாமி, முஜிபுர் ரஹ்மான் இருவரைப் பற்றியும்தான். இருவரின் இலக்கியத் திருட்டு பற்றியும் தெரியும். எம்.டி.எம் பற்றி எனக்கு மதிப்பு இருந்தது. அவரை ஆதரித்து எழுதியுமிருக்கிறேன். ஆனால் இரண்டு ஆண்டுக்கு முன் ஒரு நண்பர் அவருடைய பெரும்பாலான கட்டுரைகள் திருட்டு அல்லது தழுவல் என்று காட்டியது என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஆழமான அவமான உணர்வே இப்போது எஞ்சியுள்ளது.

இந்த விவாதம் நல்லதுதான். மென்பொருள் தானியங்கி மொழியாக்கம் பற்றி தமிழ்ப்பதிப்புத் துறையில் இந்த விவாதம் வழியாக ஒரு விழிப்பு உண்டாகவேண்டும். எதிர்காலத்தில் இந்தவகையான மென்பொருள் மொழியாக்கங்கள் வந்து குவியப்போகின்றன. இவற்றுக்கு கலாச்சாரத்தளத்தில் என்ன இடம்? இவற்றை இலக்கியத்தில் எந்த அளவில் அனுமதிப்பது? இதெல்லாம் நாம் பேசியாகவேண்டும். உண்மையில் இப்போது பேசியாகவேண்டிய சிக்கல் என்பதே இதுதான்.

இந்த விவாதம் மனிதர்கள் பற்றியது அல்ல. ஒரு புத்தகம் எப்படி குப்பையாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, அதையும் எப்படி சிலர் ரசிக்கிறார்கள் அல்லது அப்படி பாவலா செய்கிறார்கள் என்பதைப் பற்றியதுகூட அல்ல. நம் முன் உள்ள பிரச்சினை உண்மையில் மிகப்பெரியது.

இந்த ஏ.ஐ மொழியாக்கம் நம்மை எல்லாப்பக்கத்தில் இருந்தும் சூழ்ந்துகொள்ளப்போகிறது. இப்போது நம்மை அது நகலெடுக்கிறது. இனி அதை நாம் நகலெடுப்போம். நம்முடைய பொதுமொழி ஏ.ஐ மொழிநடைக்கு மாறும். செய்திகள், வணிகமொழி எல்லாமே மாறும். கூடவே நம் மனமொழியும் மாறும்.

ஏன் மாறினாலென்ன என்று கேட்கலாம். இந்த இயந்திரமொழி உலகம் முழுக்க ஒரே வகையான இலக்கணக் கட்டமைப்பும், ஒலியமைப்பும் கொண்டது. இயந்திரம் என்றாலே அது சராசரிப்படுத்துதலைத்தான் செய்யும். அதுதான் தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு நல்லது.

ஒரு ஏ.ஐ மொழிநடை இன்னொரு மொழிக்கு ஏ.ஐயால் மிக எளிதாக மொழியாக்கம் செய்யப்படலாம். அதுதான் வருங்கால உலகுக்கு வசதி. உலகம் முழுக்க ஒரே மொழி, வேறுவேறு சொற்கள் – இதுதான் எதிர்காலம். ஆகவே நம் அன்றாட மொழி ஏ.ஐ மொழிக்கு மாறுவதை எவராலும் தடைசெய்ய முடியாது.

நமக்கு முன் இருக்கும் ஒரே தற்பாதுகாப்பு என்பது இலக்கியம்தான். ஏஐக்கு ஒரே சவாலும் இலக்கியம்தான். அதில்தான் நாம் நமக்கான மொழித்தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ளவும், தக்கவைக்கவும் முடியும். ஆனால் இவர்கள் இலக்கியத்திற்குள்ளும் ஏ.ஐ மொழியை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். அது பெரிய அழிவு.

நம் சோட்டா இலக்கியவாதிகளுக்கு செறிவாக எழுதத்தெரியாது, அதற்கான அறிவுத்தளமோ வாசிப்போ இல்லை. ஆகவே மொழியை சிடுக்காக்க எப்போதுமே முயல்வார்கள். அது போலியான ஒரு செறிவை அளிக்கிறது. ஆகவேதான் திறனற்ற மொழியாக்கத்தில் உள்ள மொழிச்சிக்கல்களை நகலெடுத்து தங்கள் நடையை உருவாக்குகிறார்கள். இப்போதுகூட இந்த முதிராமனக் கும்பலுக்கு இந்த ஏ.ஐ மொழிநடை பிடித்திருப்பதைப் பாருங்கள். ஒன்றுமே புரிந்திருக்காது. ஆனால் இதையும் நகலெடுக்க ஆரம்பிப்பார்கள். இதுதான் இலக்கியத்திற்கு வரவிருக்கும் அபாயம்.

இதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனிப்பட்ட எழுத்தாளர், தனி ஒரு  நூலின் மொழியாக்கம் பற்றி இனி நான் பேசுவதாக இல்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 11:35

ஆனந்த நடராஜன்

பேராசிரியர் அ. ஆனந்த நடராஜன் எழுத்தாளர், ஆய்வாளர், இலக்கிய, ஆன்மிக, சமயச் சொற்பொழிவாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் இயங்கினார். அ. ஆனந்த நடராஜனின் ஆய்வான ‘தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி’ குறிப்பிடத்தகுந்ததொரு ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. அ. ஆனந்த நடராஜன் ஆய்வாளராகவும், சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.

ஆனந்த நடராஜன் ஆனந்த நடராஜன் ஆனந்த நடராஜன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 11:32

ஆனந்த் நடராஜன்

பேராசிரியர் அ. ஆனந்த நடராஜன் எழுத்தாளர், ஆய்வாளர், இலக்கிய, ஆன்மிக, சமயச் சொற்பொழிவாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் இயங்கினார். அ. ஆனந்த நடராஜனின் ஆய்வான ‘தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி’ குறிப்பிடத்தகுந்ததொரு ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. அ. ஆனந்த நடராஜன் ஆய்வாளராகவும், சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.

ஆனந்த் நடராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 11:32

ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம்

ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்

அன்புள்ள ஜெ

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதை அறிந்த பிறகுதான் அவரைப்பற்றி தேடிப் படித்துப் பார்த்தேன். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவருடைய குடும்பம் பற்றிய கருத்துக்கள் எல்லாம் அறிந்தேன். அவர் தன்பால் புணர்ச்சி பழக்கம் கொண்டிருந்தார் என்று அவரே எழுதியுள்ளார். அவர் அதை அறிவித்துள்ளார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

(இஸ்லாமிய வழக்கப்படி அது மிகப்பெரிய பாவம். ப்ரேம் இப்போது மனம்திரும்பி அந்தப் பாவத்தை ஏக இறைவன் முன் அறிக்கையிட்டு மன்னிப்பு கோரி இஸ்லாமியராக ஆகியுள்ளார். அந்த வாழ்க்கையை அவர் நிராகரித்துப் பேசிவருகிறார். இஸ்லாமிய நெறிகளின்படி வாழ்கிறார்)

எஸ். ஷாகுல் ஹமீது

அன்புள்ள ஷாகுல்,

நான் தனிப்பட்ட வாழ்க்கைச்செய்திகளை தேடித்தேடி பின்தொடர்வதில்லை. நீங்கள் பிரேம் பற்றிச் சொன்னவை எனக்குப் புதியவை, ஆனால் எனக்கு அதில் அக்கறையில்லை.

நான் எனக்கான ஒழுக்கம், அறம் சார்ந்த புரிதல்கள் கொண்டவன். ஆனால் திரும்பத் திரும்ப நான் சொல்வது ஒன்றுண்டு. இன்னொருவரை ஒருபோதும் நான் ஒழுக்கம் சார்ந்து மதிப்பிடுவதில்லை, தீர்ப்பு சொல்வதில்லை. அவர்களின் அறிவுப்பங்களிப்பும் அகமுன்னேற்றமும் மட்டுமே என் அளவுகோல். இதை பலமுறை எழுதியுள்ளேன். தாங்கள் பரந்தமனம் கொண்டவர்கள், முற்போக்கானவர்கள் என நம்பும் பலரும் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்ததும் தராசும் வாளுமாக இன்னொருவரை தண்டிக்க வருவதை கோணங்கி பற்றிய விவாதத்தின்போதுகூட கண்டேன். அப்போதும் என் நிலைபாடு ஒன்றே.

ரமேஷ் – பிரேம் இருவரும் எனக்கு அறிமுகமானது 1989 ல். 1997 முதல் அவர்கள் என் குடும்ப நண்பர்கள். பத்மநாபபுரத்திலும் பார்வதிபுரத்திலும் என் வீட்டுக்கு வந்து பலநாட்கள் அவர்கள் தங்கியதுண்டு. எப்போதும் ரமேஷை நான் முக்கியமான படைப்பாளுமையாகவே எண்ணி வந்துள்ளேன். அவருடைய தனிவாழ்க்கை, அதைச்சார்ந்த கொள்கைகளை நான் விவாதித்ததில்லை. அவை அவர் படைப்புகளில் எப்படி கலையாக ஆகின்றன என்பது மட்டுமே எனக்கு முக்கியம். அந்த உருமாற்றத்தின் மாயத்தை மட்டுமே கவனிக்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 11:32

வன்முறை, குரூரம், கலை- கடிதம்

அவள், கடிதங்கள் ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் அவள் அன்புள்ள அஜிதன்,உங்களின் இக்கதை எனக்குள் ஒரு ஆழ்ந்த அமைதியின்மையை ஏற்படுத்தியது. எத்தனையோ முறை கேட்ட செய்திதான். கேட்ட தகவல்கள். பெட்ரோல், உடைந்த மதுபாட்டில், உள்ளாடை திணிப்பு என எல்லாம். ஆனால் இக்கதையின் மையம் அந்த பெண்ணின் சொல்லப்படாத குரலில் உள்ளது. ”அவள்” கடைசிவரை புரிந்துகொள்ளப்படாத ’அவளா’கவே நீடிக்கிறாள். அவளை முன்னிறுத்தியே அல்லது மாற்றி நிறுத்தியே சமூகம் தன்னை தொகுத்துக்கொள்கிறது. அவள் நல்லவளும் அல்ல, தீயவளும் அல்ல, சூழலால் உருவாக்கப்பட்டவளும் அல்ல, தானாக உருவானவளும் அல்ல. கதை அவளை கருணையில்லாமல், விலக்கமில்லாமல் முன்வைக்கிறது.அதுவும் அந்த வன்முறையாளனின் பார்வையில் வரும் பகுதியின் சித்தரிப்புகள் தமிழின் எந்த டிரான்ஸ்கிரெஸ்ஸிவ் இலக்கியத்திலும் இதுவரை நெருங்கிடாதது. அந்த குற்றவாளியால் அவளின் பௌதீக இருப்புக்கு முன் கூசாமல் இருக்க முடியவில்லை, தூமை நீர் அதன் குறியீடாக வருகிறது. நகரத்தின் பொய்களுக்கு பின்னால் கூவம் உண்மையின் தூய்மையுடன் ஒழுகிக்கொண்டிருக்கிறது. வன்முறை சுழல் தொடங்கும் இடம் அதுதான், பொய்மை உன்மையை சந்திக்கும் இடம். சில குற்றங்கள் நம்மை அறச்சீற்றம் அடைய செய்கின்றன, சில குற்றங்கள் நம்மை வாழ்கையின் சாராம்சத்தை குறித்தே கேள்வி எழுப்ப செய்கின்றன.நன்றிவி. துரைவேல்

அன்புள்ள ஜெயமோகன்,

திரு ஶ்ரீனிவாஸ்‘அவள்’ கதையைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். அவள், கடிதங்கள்   அவர் சுட்டிக்காட்டுவதுபோல இந்தவகையான கலை என்பது முதன்மையாக ஓவியத்தில், அதன்பிறகு இலக்கியத்தில் வந்துகொண்டே இருக்கிறது. சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லலாம் (படத்தில் இருப்பது வியன்னா அருங்காட்சியகத்திலுள்ள மாபெரும் மலம் சிற்பம்). ஆனால் இந்தவகை கலை முதலில் நம்முடைய மரத்துப்போன பிரக்ஞையை சீண்டி நிலைகுலையச் செய்கிறது. (இந்தவகையான எழுத்தை தமிழில் தொடங்கி வைத்தவர் ரமேஷ் பிரேதன். அவருக்கு விருது அளிக்கப்பட்ட சூழலில் இக்கதையும் வெளிவருகிறது)

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ட்ல்யூஸ்–கத்தாரி இருவரும் சுட்டிக்காட்டிய ஒன்று இது, மிக அதிகமாக கிடைப்பதனாலேயே எதுவுமே கிடைக்கவில்லை என்ற நிலைதான் பின்நவீனத்துவச் சூழல். அதைச் சொல்லி வாசித்தபோது நமக்கு வெறும் கொள்கையாக இருந்தது. இன்றைய சமூக ஊடகக் காலகட்டத்திலே அது அன்றாட உண்மையாக ஆகிவிட்டது. இன்றைக்கு எதுவுமே செய்தி இல்லை. காஸாவில் குழந்தைகள் சாகிறார்கள். ஸ்டார்பக்ஸில் மரவள்ளிக்கிழங்கு உருண்டைபோட்ட ஒரு பானம் கிடைக்கிறது. இரண்டுமே நமக்குச் சமம்தான். இந்த மரத்ததன்மையைத்தான் கலை ஓங்கி அறைகிறது. செவிடனிடம் பேசும்போது கூச்சலிடுவதை தவிர்க்கமுடியாது என்று ஒரு கலைஞர் இதைப்பற்றிச் சொன்னார்.

உண்மையில் ஶ்ரீனிவாஸுக்கோ எனக்கோ இதெல்லாம் ஒவ்வாமையை உருவாக்கலாம். ஆனால் இந்தவகைக் கலை வந்துகொண்டே இருக்கிறது. பாரீஸின் நவீன ஓவியக்காட்சியகத்தில் பாதிப்பங்கு இதே வகைதான். ஆனால் இந்த கதையின் அப்பட்டத்தன்மைக்கு அடியில் பாம்பு சுருண்டுகிடப்பதுபோல வேறுதளங்கள் உள்ளன. அந்த அப்பட்டத்தன்மை ஓர் அழைப்புதான். ஓர் ஓவியர் சொன்னதுபோல ராட்டில் ஸ்நேக் வாலை ஆட்டி சலங்கை ஒலி எழுப்புவது. அருகே போனால் ஒரே போடுதான். அஜிதனின் ஒரு இந்திய ஆன்மிக அனுபவமும் இந்தவகை கதை. இந்தக்கதையும் அதேவகையில் இன்னும் தீவிரமும் நுட்பமுமான கதை. (இவை வெளிவந்த இணைய இதழின் பெயரை பார்த்தேன். மயிர். அதுவும் இதே வகைதான் என நினைக்கிறேன்). இந்திய ஆன்மிக அனுபவத்தில் அந்த அருவருப்பின் உச்சத்தில் இந்திய மதக்குறியீடுகள் தொனிக்கவைக்கப்பட்டுள்ளன.

அவள் கதையில்கூட பல விடுபட்டுவிடும் இடங்கள். இந்த வாழ்க்கைக்குச் சாட்சியாக கூவம் .கூவம் அழகாக, ஆழமான அமைதி கொண்டதாக உள்ளது. ஒரு அன்னைபோல. ஒரு எதிர்மறைத் தெய்வம். கூவம் கரை வாழ்க்கையின் வன்முறையில் ஒருவரை ஒருவர் தூமை என்று அழைக்கிறார்கள். அது வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே உள்ளது. இந்தவகை வன்முறையை எழுதும் கதைகளில் அந்த பெண்’அப்பாவிப்பெண்’ அல்லது  ‘சாமானியப்பெண்’ ஆக காட்டப்படுவாள். இங்கே அவளும் தீமையை நோக்கி ஈர்ப்படைந்து செல்கிறாள். அவளுக்கும் அவள் அம்மாவுக்குமான உறவு இருவரும் மாறிமாறிச் செலுத்தும் வன்முறை. எனக்கு அவளும் அவளை கொடூரமாகக் கொன்றவர்களும் சேர்ந்து ஒரு கொலைத்தாண்டவத்தை ஆடியதுபோல தோன்றியது. ஒரு  டாகுமெண்டரியில் மான் நேராக புலி நோக்கிச் செல்கிறது. அதைப்போல. ஒரு பைத்தியக்காரத்தனம். தன்னைத்தானே அழித்துக்கொள்ளுதல். அதற்கான சமூகக்காரணங்களை ஆங்காங்கே தொனிக்கவைத்துச் செல்கிறது கதை.

அவள் ஒரு புதியகதை. இந்தவகையான கதை மனிதாபிமானம் கொண்டதாக இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்ப்போம். நீதியுணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும், கவித்துவமான ஆன்மிகமான ஏதோ ஒரு முடிப்பு இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைப்போம். ஆனால் இது அப்படியே துண்டுபோட்டு தெருவிலே வீசப்பட்ட சடலம்போல கிடக்கும் கதை. ஶ்ரீனிவாஸ் சொல்வதுபோல இது கதார்ஸிஸ் அளிக்கும் நோக்கம் கொண்டது அல்ல. ஒரு rupture மட்டும்தான் இந்தவகையான கலை உத்தேசிக்கிறது. நம்முடைய மனதிலே ஒரு பொத்தல் போடுவதுபோல. பீபத்ஸரஸம் மட்டுமே கொண்ட கதைகள். இந்த காலகட்டத்தின் கலை இது. நமக்கு குமட்டலோ ஒவ்வாமையோ வந்தால் என்ன? இது இந்தக்காலம்.

எம்.பாஸ்கர்

டியர் அஜி,

“அவள்” சிறுகதை, இதுவரையிலான உன் படைப்பின் உச்சம் என சொல்லலாம். வழக்கமான காலையாக நிச்சயமாக இன்று இல்லை. இன்னும் மனமும் உடலும் பதற்றத்துடனே இருக்கிறது. ஆரம்பத்திலேயே கதை முடிவு சொல்லப்பட்டுவிட்டது.  ஆனால் “the transformation of that girl” அதை மிகச்சரியாக கொண்டுவந்த விதம் THE BEST OF YOU.

மனிதர்களோடு கூவமும் கடலும் வழியாக கதை சொல்வது அருமை.

இதே மாதிரியான நிகழ்வுகளை கேட்டும் செய்திகளில் படித்தும் கொண்டிருக்கும் காலகட்டம் இது. ஆனால் அதுவல்ல விஷயம். நமக்கு தெரிந்த சிலர் ” அவள்” போல இருந்து பின் ” அவள்” போல மாறுகின்றனர். ஏன் எப்படி அந்த மாற்றம் நிகழ்கிறது என்பதுதான் கதையினூடாக உணரப்படுகிறது. அவள் மனம் இருமையடையத்தொடங்கும் போது கருமையான கூவம் வருகிறது. நம் இருளின் உருவகமாகவும். அங்கிருந்து கடந்து கடலின் வெளிச்சத்தில் விடுதலையாகிறாள். மீறலின் உருவேயான அவள் அதன் எல்லைவரை விளையாடி பார்க்கிறாள். மீறலை விரும்பும் ஆனால் மீறமுடியாதவர்கள் வேடிக்கைப்பார்க்கிறார்கள், வதந்தி பரப்புகிறார்கள். அது இன்னும் அவளை தூண்டுகிறது, மேலும் மீறலுக்காக. ஒரு கட்டத்தில் தன்னிரக்கத்தில் தாயை கேட்கிறாள் ” ஏன்டி பெத்த?”. அவளால் இனி திரும்ப இயலாது, பாய்ண்ட் ஆஃப் நோ ரிட்டர்ன் நிலைக்கு செல்லும்போது அவனை அழைக்கிறாள்.

அவளுள் இருக்கும் புயலும் மழையும் வெளியேயும். அதிகாலையை கனமாக்கி, நிலைகொண்டுவிட்ட சிறந்த படைப்பாளிக்கு வாழ்த்துகள்.

அன்புடன்
தங்கபாண்டியன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 11:31

மஞ்சும்மல் பாய்ஸுக்கு கற்பிக்கவேண்டியது…

நிலைமைகளை சுட்டிக்காட்டிப்பேசும் எழுத்தாளர்களே இங்கே குறைவு. பேசினால் இந்த பகல்வேஷக்கும்பலுடன் மோதவேண்டியுள்ளது. இருந்தாலும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.இன்று நாம் நம் குழந்தைகள் இயற்கையுடன் கொண்டுள்ள உறவு என்ன என்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறோமா? மஞ்ஞும்மல் பாய்ஸ் போலத்தானே நம் குழந்தைகளும் இருக்கிறார்கள். நாம் என்னதான் செய்கிறோம்?

மஞ்சும்மல் பாய்ஸுக்கு கற்பிக்கவேண்டியது…

Recently the speeches you used to give are filled with social issues, and you are expressing your anguish and worries about the intensivities of our society. They are powerful. But I am expecting the previous videos; you talked about various issues of Vedanta.

Speeches on Vedanta

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 11:30

September 21, 2025

நமது செயல்களின் மதிப்பு என்ன?

இலக்கியவாசகர்கள் அடிக்கடி என்னிடம் சொல்வது ஒன்றுண்டு, ‘புக்கு படிக்கிறவனை யாருமே மதிக்கிறதில்லை சார்”. உண்மையில் இதிலுள்ள பிரச்சினை என்ன? எவரிடமிருந்து என்ன மதிப்பை நாம் எதிர்பார்க்கிறோம்? நம் செயல்களுக்கு மதிப்பெண் போடவேண்டியவர் யார்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:36

நமது செயல்களின் மதிப்பு என்ன?

இலக்கியவாசகர்கள் அடிக்கடி என்னிடம் சொல்வது ஒன்றுண்டு, ‘புக்கு படிக்கிறவனை யாருமே மதிக்கிறதில்லை சார்”. உண்மையில் இதிலுள்ள பிரச்சினை என்ன? எவரிடமிருந்து என்ன மதிப்பை நாம் எதிர்பார்க்கிறோம்? நம் செயல்களுக்கு மதிப்பெண் போடவேண்டியவர் யார்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:36

வேதாந்தம் என்னும் மழை

வேதாந்தம் பிரம்ம தத்துவத்தினூடாக இந்த பெருநிலத்திலிருந்த பல்லாயிரம் தெய்வவழிபாடுகளை ஒன்றாகக் கோர்த்தது. பிறிதொரு கட்டுரையில் ஒரு பொற்பட்டு நூல் என்று வேதாந்தத்தை நான் வரையறுக்கிறேன். அவ்வாறு கோர்ப்பதனூடாக ஒவ்வொரு தரிசனத்திற்கும் ,தத்துவ மரபிற்கும், வழிபாட்டு மரபுகளுக்கும் இருந்த முரண்பாடுகளை அது களைந்தது. மோதல்களை அறிவார்ந்த தளத்திற்கு எடுத்துச்சென்று வழிபாட்டுத்தளத்தில் ஒருமையை உருவாக்கியது. அந்த மாபெரும் ஒருமைப்பணியினூடாக உருவாகி வந்ததே இந்துமதம். பிறிதொரு விரிந்த நோக்கில் இந்தியப் பண்பாடு என்றும் நாம் சொல்வது இந்த மாபெரும் கட்டமைப்பையே. அது அடிப்படையில் வேதாந்தத்தின் கொடை.

இந்து மதத்தின் உள்முரண்பாடுகள் அல்லது உள்விவாதங்கள் உருவாக்கும் நுட்பமான தத்துவ மாறுபாடுகளை வேதாந்தம் எனும் ஒற்றைத் தரிசனத்தை முன்வைப்பதனூடாக நான் மறுதலித்து விடுகிறேன் என்ற ஒரு குற்றச்சாட்டு ஒவ்வொரு முறை வேதாந்தத்தைப் பற்றி நான் சொல்லும்போதும் உருவாகி வருவதுண்டு. தனிப்பட்ட முறையில் எந்தவகையான ஒற்றைப் படைத்தன்மைக்கும் நான் எதிரானவனாகவே இருந்து வருகிறேன். ஆகவே வேதாந்தத்தை ஒருபோதும் ஒற்றைமையமாக முன்வைக்க மாட்டேன். வேதாந்தத்தை முழுமையாக மறுக்கும் சாங்கிய, யோக, நியாய, வைசேஷிக மரபுகளை இணையான முக்கியத்துவத்துடன் முன்வைக்கிறேன்.

ஒற்றைப்படைத்தன்மை என்பது படைப்பூக்கத்திற்கும் ,மானுட ஞானத்தின் தன்னியல்பான விரிவிற்கும் எதிரானது என்பது என்னுடைய கருத்து. மானுட ஞானம் என்பது ஒரு மரம் கிளைவிட்டு பிரிவது போல, இலைகளாக செழிப்பது போல வளரும் தன்மை கொண்டது. அதை ஒற்றைக் கல்தூணாக மாற்றும் எச்செயல்பாட்டுக்கும் எதிரானவனாகவே இருந்து வருகிறேன். ஆகவே நான் ஒருபோதும் அனைத்தும் வேதாந்தமே என்று சென்று முடிக்க விரும்புவதில்லை. ஒவ்வொன்றையும் இணைப்பதில் வேதாந்தத்திற்கு இருக்கும் பெரும் பங்களிப்பை மட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன். வேதாந்தம் உருவாக்கும் ஒத்திசைவையே முன்வைக்க விரும்புகிறேன். 

வேதாந்தம் அனைத்தையும் மறுத்து தன்னை நிறுத்தும் ஒரு தரிசனம் அல்ல என்பதுதான் என் பார்வையின் அடிப்படை. அனைத்தையும் மழுங்கடித்து, தனித்தன்மைகளை மறைத்து, அது அந்த இணைப்பை நிகழ்த்துவது இல்லை. மாறாக ஒவ்வொரு தனித்தன்மையையும் அடையாளம் கண்டுகொண்டு அதை வளர்த்தெடுக்கவே அது முயல்கிறது. விளைவாக வேதாந்தம் ஒவ்வொரு வழிபாட்டு முறைக்குள்ளும் தன்னுடைய ஒரு புதிய வடிவை சாத்தியமாக்கிக் கொள்கிறது. வைணவம் எனும் வழிபாட்டு முறைக்குள் வேதாந்தம் ஊடுருவியதன் விளைவே விசிஷ்டாத்வைதம். அதேபோல சைவம் எனும் தொன்மையான வழிபாட்டு முறைக்குள் வேதாந்தத்தின் ஊருடுவலே சைவ சித்தாந்தம். 

அங்கு சைவத்தின் எந்த தனித்தன்மையையும் வேதாந்தம் அழிக்கவில்லை. மாறாக சிவன் எனும் உருவத்திற்கு மேலும் பேருருவம் கொண்ட பிரபஞ்ச வடிவம் ஒன்றை அளிக்கிறது அது.  அருவமான சிவம் என்ற ஒன்றை சிவன் எனும் வழிபாட்டுத் தெய்வத்திலிருந்து உருவாக்கி அளிக்கிறது. பசு, பதி, பாசம் எனும் மும்மையை அது உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது. அதனூடாக வேதாந்தத்தைச் சார்ந்து நிலை நிற்கவேண்டிய தேவை கூட இல்லாத தனித்த ஒரு முழுமையான சிந்தனைமுறையாக சைவ சித்தாந்தம் உருத்தெளிந்து வருவதற்கும் வேதாந்தமே வழிவகுக்கிறது.

உலக மெய்ஞானத்தில் பௌத்தமும் வேதாந்தமும் மட்டுமே இவ்வாறு தொட்டவை அனைத்தையும் வளர்க்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பார்த்தால் தரிசனத்திற்கு இரண்டு முகங்கள் உண்டு. நெருப்பின் முகம், நீரின் முகம். தொட்ட அனைத்தையும் எரித்தழித்து தான் மட்டுமே நிற்பது தீயின் குணம். தொட்ட அனைத்துக்குமே உயிரூட்டி வளர்த்து அனைத்திற்குள்ளும் ரசமாகி நிற்பது நீரின் குணம். எரித்தழித்து நின்றிருக்கும் தரிசனங்கள் பல உண்டு. மார்க்ஸியமேகூட அவ்வாறான ஒன்றுதான். மாறாக, வேதாந்தமும் யோகாசார பௌத்தமும் நீரின் தன்மை கொண்டவை. அவற்றை விருஷ்டி (மழை) என்று நான் சொல்வேன். விருத்தி என்பதன் இன்னொரு வடிவம் விருஷ்டி. வளர்ப்பவள், வாழச்செய்பவள், அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்யும் அருள்.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.