Jeyamohan's Blog, page 12
November 14, 2025
ஈப்போ அரவிந்தன்
மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். இதழாளர்.ஈப்போ அரவிந்தன் வணிக இலக்கியத்தை தன் பாதையாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர். இவர் வெளியிட்ட நாவல், இதழ்கள் அனைத்தும் பொதுவாசிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டவை.
ஈப்போ அரவிந்தன் – தமிழ் விக்கி
திருக்குறள் சமண உரை
சமண வள்ளுவர்அன்புள்ள ஜெ,
தங்களுடைய கழாக்கால் திருக்குறள் கட்டுரையை படித்ததுண்டு.
சமீபத்தில் திருக்குறளை பற்றி தேடிக்கொண்டு இருக்கையில் திருக்குறள் ஜைன உரை (தஞ்சாவூர் சரசுவதி மஹால் வெளியீடு எண் 336 சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர்: கே.எம்.வேங்கடராமையா (முன்னாள் பேராசிரியர்) – 1991) (ஓலைச்சுவடிகளில் இருந்து படி எடுக்கபட்டது) என் பார்வைக்கு பட்டது.
திருக்குறள் ஜைன உரைஅதில் pdf பக்கம் 357 இல் நீங்கள் சொன்னவாறே கழாஅக்கால் குறளுக்கு உள்ளது. நான் வாசித்த சில குறள்களை வைத்து இந்த ஜைன உரையை ஒரு முக்கியமான உரையாகவே கருதுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்
இசையும் குழந்தைகளும்
I heard that you will be honored by Thashasila University with an honorary doctorate. This is truly wonderful news for Tamil readers and writers. However, I haven’t seen any announcements on social media or noticed any congratulations from your fellow writers.
கடந்த வாரம் வெள்ளிமலையில் நடைபெற்ற மரபிசை அறிமுக வகுப்பில் என் மகன் கனிவமுதனோடு கலந்து கொண்டேன். கனி நான்கைந்து ஆண்டுகளாக இசை பயின்று வருகிறான். அவனோடு சேர்ந்து பயணிப்பதால் சற்று இசை குறித்த அறிமுகம் இருந்தபோதும், சற்று விரிவான, தெளிவான அறிமுகம் வேண்டியே அந்த வகுப்பிற்கு வந்தேன்.
இசையும் குழந்தைகளும்
November 13, 2025
ராஜகோபாலன், தெய்வநல்லூர் கதைகள் வெளியீட்டுவிழா
ஜா. ராஜகோபாலன் எழுதிய கதைகளின் தொகுதியாகிய தெய்வநல்லூர் கதைகள் என்னும் நூல் வெளியாகியுள்ளது. ஆகுதி சார்பில் ஒரு வெளியீட்டுவிழா நிகழவுள்ளது.
இடம் கவிக்கோ அரங்கம்.
நாள் 15 நவம்பர் 2025.
ஜா.ராஜகோபாலன் தமிழ்விக்கிசெயற்கைநுண்ணறிவு தெய்வ உருவங்களை வழிபடலாமா?
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
சமீபத்தில் ஹிந்து தமிழ் பத்திரிக்கையில் AI படங்களை ஆன்மீக கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதே போல் மக்களும் வீட்டில் மற்றும் whatsapp போன்றவற்றில் AI தெய்வ படங்களை பயன்படுத்துகிறார்கள். சில படங்களை இணைத்துள்ளேன்.
ஆன்மீக விஷயங்கள் தெரிந்தவர்களுக்கு இது சரியான தெய்வ உருவங்கள் இல்லை என்பது தெரியும். பொது மக்களும் , இளைய தலைமுறையினரும் இவைகள் தான் சரியான தெய்வ உருவங்கள் என்று நம்பி கொண்டிருப்பார்கள்.
இதை பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.
நன்றி.
இப்படிக்கு,
ராஜாராம்,
கோவை.
அன்பிள்ள ராஜாராம்,
இதே கேள்வி முன்பு காலண்டர்கள் வெளியான போது உருவாகியிருக்கிறது. ராஜா ரவிவர்மாதான் முதன்முதலாக தெய்வ உருவங்களை அன்றைய பாணியில் தைலவண்ண ஓவியங்களாக வரைந்தவர். அந்த ஓவியங்களுக்கு அவர் நம் சிற்ப மரபையோ அல்லது ஓவிய மரபையோ முன்னுதாரணமாகக் கொள்ளவில்லை. மாறாக உயிருள்ள மனிதர்களை ‘மாடல்களாக’ கொண்டார். பெரும்பாலும் அரண்மனைப்பெண்டிரே லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களுக்கான மாதிரிகள். (அதிலும் ஒரே பெண் தமயந்தி, பாஞ்சாலி, லட்சுமி, சரஸ்வதி என எல்லா முகங்களாகவும் மாறியிருப்பது தெரியும்).
அத்துடன் உடைகள், தோற்றம் ஆகியவற்றை அவர் அன்று புகழ்பெற்றிருந்த பார்ஸி நாடகத்தில் இருந்து எடுத்துக்கொண்டார். லட்சுமியும் சரஸ்வதியும் நான்கு கைகள் கொண்டிருந்தாலும் நன்கு தைக்கப்பட்ட ஜாக்கெட் போட்டிருந்ததும், புடவை சுற்றியிருந்ததும் அதனால்தான். பின்புலச்சூழல் பெரும்பாலும் பார்சி நாடகங்களின் திரைச்சீலைகளைப் போலவே இருந்தது.
ரவிவர்மா ஆப்டோன் அச்சகம் ஒன்றை மும்பையில் நிறுவி, அந்த ஓவியங்களை காலண்டர்களாக அச்சிட்டு விற்கத் தொடங்கினார். விளைவாக இல்லங்களில் அப்படங்களை வாங்கி வைத்து வழிபடத் தொடங்கினார்கள். இந்தியா முழுக்க அந்த அலை பரவியது. தொடர்ந்து பல அச்சகங்கள் ஓவியர்களை வைத்து தெய்வங்களை வரைந்து அச்சிட்டு விற்க ஆரம்பித்தனர்.தமிழ்நாட்டில் சிவகாசியில் அச்சகங்கள் உருவாயின, நாம் இன்று பூஜையறையில் வைத்திருக்கும் பல ஓவியங்கள் (குறிப்பாக கைகூப்பும் முருகன்) ஓவியர் கொண்டையராஜூ வரைந்தவை.
உண்மையில் இந்தியாவில் வீட்டில் படங்களை வைத்து வழிபடும் பொது மரபே கிடையாது. வீட்டில் தெய்வங்களை வைத்து வழிபடுவது குருவிடமிருந்து தெய்வத்தையும் உபதேசத்தையும் பெற்றுக்கொண்ட சிலருக்கு மட்டுமே உரியதாக, ஒருவகையில் தனிப்பட்ட வழிபாடாகவே இருந்தது. உதாரணமாக, ஶ்ரீவித்யா உபாசனை செய்பவர்கள் அதற்கான இயந்திரங்களை இல்லத்தில் வழிபட்டார்கள். சாலகிராமங்கள் சிலரால் வழிபடப்பட்டன. சிவதீட்சை எடுத்துக்கொண்டவர்கள் சிவலிங்கங்களை வழிபட்டனர். சில இல்லங்களில் குடும்பதெய்வங்கள் இருந்தன. அவற்றுக்கு குறிப்பிட்ட நாட்களில் பூஜை செய்தனர். ஆனால் வீட்டிலேயே பூஜையறை இருப்பதும், படங்களை வைத்து பூஜைகள் செய்வதும் முன்பிருந்ததில்லை.
அந்தப் புதுப்பழக்கம் உருவானதும் மதஆசிரியர்கள் அதை கண்டித்தனர். பின்னர் நெறிப்படுத்த முயன்றனர். அச்சிட்ட ஓவியங்களை வழிபடக்கூடாது என்ற கடுமையான கண்டனம் வந்தது. பின்னர் குறிப்பிட்ட சில இலக்கணங்களுடன் இருந்தால் வழிபடலாம் என்னும் வழிகாட்டுதல் உருவானது. காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி திரும்பத் திரும்ப இதை விளக்கியிருக்கிறார். அவர் கூற்றுப்படி, தெய்வங்களுக்குரிய அடையாளங்கள் கொண்ட படங்களை இயல்பாக வீட்டில் வழிபடலாம்.
அதாவது முருகன் என்றால் வேல், மயில்,சேவல்கொடி அபயக்கரம் இருக்கவேண்டும்.ஆனால் வேலின் நுனி முருகனின் முகத்துக்குக் கீழே இருக்கவேண்டும். அபயக்கரத்துக்கு கீழேதான் ஆயுதம் இருக்கவேண்டும். பள்ளிகொண்ட பெருமாள் என்றால் கண்டிப்பாக தாயார் உடனிருக்கவேண்டும். சிவன் என்றால் சோமாஸ்கந்தராக குடும்பத்துடன் இருக்கலாம். அல்லது பார்வதி, நந்தியுடன் இருக்கலாம். தனியாக சிவன் இருக்கும் யோகசிவனை வீட்டில் வழிபடலாகாது. இப்படி பல நெறிகள். காலப்போக்கில் அவை ஓர் ஒழுங்குக்கு வந்தன.
சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று சந்திரசேகரர் சொல்கிறார். அப்படி வழிபடுவதாக இருந்தால் முறைப்படி அச்சிலை நிறுவப்படவேண்டும். சிலை இருந்தால் அது ஒரு கோயிலாகவே கருதப்படவேண்டும். உறுதியாக இரண்டுவேளை முறையான பூஜையும், நைவேதியமும் செய்யப்பட்டாக வேண்டும். எந்நிலையிலும் இல்லறத்தார் வாழும் இல்லங்களில் சிவலிங்கம் நிறுவப்படக்கூடாது. இப்படிப் பல நெறிகள். (ஆனால் இன்று உணவகங்களில் சிவலிங்கம் நிறுவப்பட்டு பிளாஸ்டிக் மாலைகள் போடப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.)
வழிபாட்டு உருவங்களை ஏன் இப்படி ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்கிறோம்? அவை கலைதானே? இது ஒரு நல்ல கேள்வி. உண்மையில் ஆயிரமாண்டுகளாகவே இந்த வேறுபாடு நம் மரபில் உள்ளது. தூண்களிலுள்ள சிலைகள் கலைவெளிப்பாடுகள். அவை கதைகளைச் சொல்கின்றன. தத்துவங்களை உணர்த்துகின்றன. ஆனால் வழிபாட்டுருவங்கள் அல்ல. அவற்றில் கலைக்குரிய சுதந்திரம் உள்ளது. பார்வதியுடன் பகடையாடி தோற்று குழம்பி அமர்ந்திருக்கும் சிவனையே நாம் எல்லோராவில் காண்கிறோம். காலண்டர் ஓவியங்களையும், இன்றைய செயற்கை நுண்ணறிவு ஓவியங்களையும் அப்படி பழைய தூண்சிலைகலைப்போல, கலைவெளிப்பாடாக எடுத்துக்கொள்ளலாம்.
கலையை எவரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முயன்றால் கலை ஒட்டுமொத்தமாக அழியும். கலையை எவர் கட்டுப்படுத்துவது, எவருக்கு அதிகாரம் என்னும் கேள்வியும் எழுகிறது. ஆகவே ஏ.ஐ. ஓவியங்கள் இயல்பாக உருவாகி பெருகிக்கொண்டே இருப்பது இன்றைய காலகட்டத்தின் போக்கு என்றே கொள்ளவேண்டும். அதற்கு முன்னரே டிஜிட்டல் ஓவியங்களில் தெய்வங்கள் பலவாறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டன. மிக வண்ணமயமான, மிக நாடகீயமான தெய்வச்சித்தரிப்புகள் அவற்றில் உள்ளன.
இவற்றில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஒன்று உண்டு. சில மேலைநாட்டு ஓவியர்கள் இந்திய – இந்து தெய்வங்களை கொடூரமான தோற்றத்தில் வரைந்து புழக்கத்தில் விட்டுள்ளனர். பிள்ளையார் ஒரு கொடிய மனிதவிலங்குக் கலவையான பேய் போன்று எரியும் கண்களுடன் இருப்பதையும், கிருஷ்ணன் கொலைவெறியுடன் சீறிக்கொண்டிருப்பதையும் சில டிஜிட்டல் ஓவியங்களில் காண்கிறோம். (இந்தப்போக்கு இந்து தெய்வங்களுக்கு மட்டுமே . புத்தரோ மகாவீரரோ அப்படிச் சித்தரிக்கப்படுவதே இல்லை) இந்த ஓவியங்களை வரைபவர்களின் உளநிலையில் மதக்காழ்ப்பும் இனவெறியும் உள்ளன. இவை ஒரு திட்டத்துடன் பரப்பப்படுகின்றன.
நம் பண்பாட்டின் அடிப்படை உருவகங்களைச் சிதைக்கும், எதிர்மறையாக ஆக்கும் பொதுப்போக்கு இன்று ஓங்கியுள்ளது. எந்த நவீனத்துவத்தின் அடிப்படையிலும் அவற்றை நாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளலாகாது. நம் குழந்தைகளுக்கு அவற்றை அறிமுகம் செய்யலாகாது. ஏனென்றால் ஒரு பண்பாட்டின் அடிப்படைகளாகத் திகழ்பவை அதன் உருவகங்களே. அவை நம் பண்பாட்டின் ஆழத்தில் தோன்றி, பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து, நம் கூட்டுநனவிலியில் வாழ்பவை. அவற்றில் இருந்தே நாம் நம் நவீனக்கலையையும் நவீனச்சிந்தனைகளையும் உருவாக்கிக் கொள்கிறோம். அவை அழியுமென்றால் நாம் ஆழம் கலங்கியவர்கள் ஆவோம். நம் கலையும் இலக்கியமும் தத்துவமும் வெறும் நகல்களாக ஆகி அழியும். ஆகவே உருவகங்களைச் சிதைக்கும் முயற்சியை நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. எதிர்க்கவேண்டும் என்று சொல்லமாட்டேன். எதிர்ப்பதில் பொருளில்லை. ஆனால் நாம் அவற்றை எவ்வகையிலும் ஏற்கலாகாது.
ஏ.ஐ.ஓவியங்களை பழைய காலண்டர்களின் இன்றைய வடிவங்களாக ஏற்பதில் பிழையில்லை. அவை கலைவெளிப்பாடுகளாக (போலிக்கலையாக இருந்தாலும்) கொள்ளப்படலாம். அவை காலண்டர் ஓவியங்களுக்குச் சொல்லப்பட்ட அதே தெய்வங்களுக்குரிய இலக்கணத்துடன் இருக்கும் என்றால் வழிபடுவதிலும் பிழை இல்லை.
வழிபாட்டு ஓவியங்களுக்கு இந்த நெறிகளைச் சொல்லலாம்.
அவை அந்தந்த தெய்வங்களுக்குரிய அடையாளங்கள் கொண்டிருக்கவேண்டும். பெருமாள் என்றால் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றுடன், பீதாம்பரத்துடன், சீதேவி மற்றும் பூதேவி உடனிருக்க, சேஷனின் நிழலில் தோற்றமளிக்கவேண்டும். சிவன் என்றால் மானும் மழுவும் ஏந்தி, பிறையும் கங்கையும் சூடி திகழவேண்டும்.இலக்கண மாறுபாடு இருக்கலாகாது. உதாரணமாக நீலநிற ஆடை அணிந்த பெருமாள் வழிபடப்படக் கூடாது. நீலம் தமோகுணம். சிவப்பு ஆடை அணிந்த பெருமாளும் வழிபாட்டுக்குரிய வடிவம் அல்ல. அது உக்கிரமான ரஜோ குணம். மஞ்சளாடையே பெருமாளுக்குரியது. அந்த இலக்கணங்கள் பேணப்படவேண்டும். அதுவே எல்லா தெய்வங்களுக்கும்.வழிபாட்டு ஓவியங்களிலுள்ள பாவனை முக்கியமானது. அருள்புரியும் பாவனை இருந்தாகவேண்டும். ஆயுதங்கள் அடக்கமானவையாக இருக்கவேண்டும். உக்கிரமான பாவனைகள், விசைகொண்ட நடனநிலை ஆகியவற்றைக் கொண்ட உருவங்கள் வழிபாட்டுக்குரியவை அல்ல.ஓவியங்களை வழிபட இல்லறத்தாரின் அன்றாட வணக்கமுறைகளே போதும். சிலைகள் மட்டுமே இருவேளை பூஜை, நைவேத்தியம் போன்ற முறையான வழிபாட்டுக்குரியவை.ஜெ
.
சுனில் கிருஷ்ணன்
தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர் மற்றும் நவகாந்தியவாதி. இலக்கியத்திற்காக கேந்த்ரிய சாகித்ய அகாதெமியால் வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருது பெற்றவர்.
சுனில் கிருஷ்ணன்
சுனில் கிருஷ்ணன் – தமிழ் விக்கிசுனீல்கிருஷ்ணன் நூல்கள் வாங்க
காந்தியம்
அன்புள்ள புல்புல்ஆயிரம் காந்திகள்காந்தியைச் சுமப்பவர்கள்நாளைய காந்திபுனைவுகள்
நீலகண்டம்அம்புப்படுக்கைவிஷக்கிணறுகட்டுரை
மரணமின்மை என்னும் மானுடக்கனவு
எழுத்தாளன், அண்மையும் சேய்மையும்- கடிதம்
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நலமா.
15 வருடமாக உங்களை உங்கள் புத்தகங்கள் மற்றும் உங்கள் தளத்தின் வழியாக தொடர்ந்து உள்ளேன். இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட நான் உங்களை நேரில் சந்தித்ததில்லை . அதற்கான அவசியமும் தோன்றவில்லை . ஏனென்றால் நீங்கள் தான் உங்கள் புத்தகம் வழியாக பேசுகிறீர்களே , அதனால் பார்க்க வேண்டும் என்ற பெரிய உந்துதல் வரவில்லை . ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் உங்கள் வாசகர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன . நீங்கள் உங்கள் வாசகர்கள் தோளில் கை போட்டுக் கொள்வது போல், அவர்களோடு சிரித்துப் பேசுவது போல், அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போல் பல புகைப்படங்கள் . அதில் இருக்கும் வாசகர்களின் அனைத்து பல்லும் தெரிவது போலவே அந்தப் படங்கள் அமைந்துள்ளன. அது எனக்கு ஒரு பொறாமை உணர்வை கிளப்பிவிட்டது. மனது ஒரு அசடு உங்களைத் தொடர்வதால் உங்களை நன்கு தெரியும் என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறது . அதான் புகைப்படம் எடுத்தவர்களை எல்லாம் “என்ன தைரியம் உங்களுக்கு , அவரை நன்கு தெரிந்த நானே புகைப்படம் எடுக்கவில்லை உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் ” என்று கூறத் தோன்றியது . வாசகரின் மனம் எழுத்தாளரை தனக்கென்று சொந்தம் கொண்டாடும் பாவனை என்று நினைக்கிறேன் .
அதனால் கடந்த இரண்டு வருடமாக எப்படியாவது உங்களை நேரில் கண்டாக வேண்டும் என்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டேன் . அந்தத் தேடலில் தான் VLC USA குழுவின் அறிமுகம் கிடைத்தது . அதை தொடர்ந்து உங்களை சந்திக்கும் நாளும் நெருங்கியது . உங்களை சந்திக்க போகிறேன் என்று போஸ்டர் அடிக்க முடியாத குறையை Watsapp status ஆக போட்டு தீர்த்துக் கொண்டேன் . உங்களை சந்தித்த நாளில் நான் என் நண்பர்களோடு பேசவில்லை . என் அமைதிக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பின்பு ஒவ்வொருவராக சந்தித்த நாள் எப்படி இருந்தது என்று கேட்கத் தொடங்கினர் . நான் கூறிய பதில் அவர்களுக்கு தமாஷாக இருந்தது. அதனால் உங்களையும் சிரிக்க வைக்கலாம் என்று நான் அவர்களிடம் கூறியதை உங்களுக்கு எழுதுகிறேன் .
Oct 21st ஜெ வை Austin லில் இருந்து Dallas கூட்டி வர மூர்த்தி பாலாஜி மற்றும் நான் Dallas லில் இருந்து கார் எடுத்து செல்வதாக திட்டம் . என்னதான் ஜெ வை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் நாள் நெருங்கியதும் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது . திட்டத்தை உறுதிப்படுத்த முந்திய நாள் இரவு மூவரும் தொலைபேசியில் பேசினோம் . மூர்த்தி ‘வருகிறீர்கள் அல்லவா ?”என்று கேட்டார் .அதற்கு “காரில் இடம் இருக்குல்ல ?”என்று சம்பந்தமில்லாமல் கேட்டேன் . காரில் இடம் இல்லை நீங்கள் வரவேண்டாம் என்று அவர் சொல்லிவிடுவார் என்று நம்பினேன் . அதை காரணம் காட்டி போக வேண்டாம் என்று நினைத்தேன் . ஆனால் மூர்த்தியும் பாலாஜியும் நிறைய இடம் உண்டு என்று விட்டார் . வருவதை உறுதி செய்தேன் . பதட்டம் வெளியே தெரியக்கூடாது என்பதில் கவனம் .
விடியற்காலை 5:30 AM கிளம்புவதாக திட்டம் அதனால் முந்தைய நாள் இரவு நேரத்தே உறங்கச் சென்றேன். பதட்டம் கூடாது பக்குவம் அடைந்த பெண் நீ என்று என்னிடமே ஓர் இரு முறை சொல்லிக் கொண்டேன் . அலாரம் இல்லாமலேயே எழுந்தேன் . “ஆஹா என்ன ஒரு கட்டுக்கோப்பு நமக்கு பதட்டமில்லாமல் நன்றாக தூங்கி சரியாக எழுந்து விட்டோம் ” என்று அருகில் இருந்த போனில் நேரத்தை பார்த்தேன் . அர்த்த ஜாமம் இரண்டரை ஆனது . அடக்கடவுளே இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கே திரும்பி தூங்குவோம் என்று முயற்சி செய்து தோல்வி அடைந்தேன் . மனதில் ஜெ உடன் என்ன பேசலாம் என்று படம் போல் ஓட்டிக் கொண்டிருந்தேன் . இரண்டு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை .
மூர்த்தி , பாலாஜி மற்றும் நான் காரில் புறப்பட தயாரானோம் . மூர்த்தியின் மனைவி உங்கள் கால் எல்லாம் தரையில் இருக்கிறதா ? என்று எங்களை கேலி செய்தார் . ஜெ வின் நினைவிலேயே இருந்ததால் காரில் ஆர்வமாக வெண்முரசை பற்றி பேசிக்கொண்டே வந்தோம் . சிறிது நேரத்தில் ஆபீஸ் வேலைக்காக லேப்டாப்பை திறந்த பாலாஜி தியான நிலைக்குச் சென்று தூங்கிவிட்டார் . இளையராஜா பாட்டுசைக்க, அமைதியாக இந்த நாள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சென்றோம் .
ஜெ தங்கி இருந்த வீட்டை அடைந்து விட்டோம் . காரில் இருந்து இறங்க வேண்டுமா என்ற கேள்வி வந்தது . தைரியத்தை வரவழைத்து இறங்கி மூவரில் கடைசியாக சென்றேன் . மூர்த்தி பின்வாங்கி “நீங்க முன்னாடி போங்க எனக்கு கை கால் எல்லாம் உதறுது” என்றார் . “என்ன விளையாடுறீங்களா? நான் போக மாட்டேன் “என்று சொல்லிக் கொண்டே திரும்பினால் மூர்த்தியை காணவில்லை . மறுபக்கம் வாசல் கதவு திறந்து விட்டது நேராக ஜெ அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் . தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல் ஒரு உணர்வு . இனி தப்ப முடியாது சந்தித்து தான் ஆக வேண்டும் என்று உள்ளே சென்றேன் .
கவிதாவின் வீடு அது, எங்களுக்கு முன் பத்து பதினைந்து பேர் அங்கே இருந்தார்கள் . ஆனால் நாங்கள் வந்ததும் எல்லோரது கண்களும் எங்கள் மேல் . எங்கு ஒழிவது என்று தெரியாமல் அங்கேயே நின்றேன் . பாலாஜியும் மூர்த்தியும் சகஜமாக ஜெ விடம் சென்று கைகுலுக்கி பேசினர் . எல்லோரும் என்னை மறந்து விடுவார்கள் , நாம் அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தேன் . மூர்த்தி என்னை “அறிமுகப்படுத்திக்கிட்டீங்களா? போங்க போங்க” என்று ஜெ பார்க்க கூறிவிட்டார் .
கண்ணை மூடி குளத்தில் குதிப்பது போல் அவரிடம் சென்று கைகுலுக்கினேன் . எழுந்து நின்று புன்னகைத்தார் . அதற்கு பின் நடந்ததெல்லாம் சரியாக நினைவில் இல்லாதது போலவே தோன்றியது . Austin சௌந்தர் அவர்கள் என்னை இலகுவாக்க என்னை பற்றி ஜெ விடம் சொன்னார்.அதற்கு ஜெ வும் தலையசைத்து ஏதோ கூறினார் . நான் அந்த இடத்தில் இல்லாதது போலவே தோன்றியது . இது சரி வராது என்று அந்த இடத்தில் இருந்து விலகினேன். மனதை சமன்படுத்த முயற்சித்தேன் .
“என்ன பிரச்சனை உனக்கு? நீ கனவு கண்டது நடந்து விட்டது பிறகு என்ன ” என்றேன்.
மனம் தடுமாறியது , வெண்முரசு எழுதியவர் இங்கு அமர்ந்திருக்கிறார் . அவருக்கு என்னைப் போலவே கை கால்கள் உள்ளன , கொட்டாவி விடுகிறார், தலையை சொரிகிறார் , தேநீர் அருந்துகிறார் . இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்றது .
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “மனமே உனக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது என்ன எதிர்பார்க்கிறாய் ? அவர் ஆடை ஆபரணங்களுடன் சரஸ்வதி போல் தாமரையில் அமர்ந்து ஒரு கையில் வெண்முரசும் மறு கையால் ஆசீர்வாதமும் செய்வார் என்று நினைத்தாயா?” என்றேன்
குழம்பிப்போன மனதிற்கு ஒன்றும் புரிந்ததாக தெரியவில்லை. அதனால் நீ வாயை மூடு என்று கவிதா கொடுத்த சூடான இட்லிகளை வைத்து அடைத்தேன் . என்னைப் போன்ற வாசகர்கள் தனது அபிமான எழுத்தாளர்களுக்கு மனதில் ஒரு பிம்பம் வரைந்து வைத்து விடுகிறார்கள், அதுவும் ஜெ விஷயத்தில் அவர் ஒரு ஞானப்பெருங்கடலாக மனதில் உள்ளார் . அப்படிப்பட்டவர் சாதாரண மனிதனான என்னைப் போல சாப்பிடவும், கை அலம்புவதையும் ,எனக்கு ஒரு இட்லி போடுங்க, என்று கேட்பதையும் ஒப்புக் கொள்ள மறுக்கிறது .
குழப்பத்துடன் இனி பேசக்கூடாது என்று முடிவெடுத்தேன் . காரில் கடைசி சீட்டில் முந்தியடித்து அமர்ந்து கொண்டேன் . மூர்த்தி காரை ஓட்ட ஜெ முன் சீட்டில் அமர்ந்தார் அருணா அவர்களும் பாலாஜியும் நடு சீட்டில் அமர்ந்தனர் . நான் கடைசி சீட்டில் அமர்ந்து இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டே Dallas க்கு பயணத்தை தொடங்கினோம் . மூர்த்தி கார் ஓட்டுகிறாரா அல்லது வானத்தில் பறக்கிறாரா என்பதை சொல்வது கடினம் . ஜெ அவருடன் அமர அவர் கார் ஓட்டுவதில் அவரது பெருமை முகத்திலே தெரிந்தது . பாலாஜி கடினமான தத்துவ கேள்விகளை கேட்கத் தொடங்கினார் . ஜெ அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் . எதுவும் காதில் விழவில்லை, ஆனால் ஒரு ஞானப்பெருங்கடலின் எல்லைக்குள் இருப்பதே பெருமை என நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன் .
வழியில் உள்ள பிரபலமான இடங்களில் இரு முறை நிறுத்தினோம் . அவரிடம் பேச தைரியம் இல்லை, ஆனால் அருணா அவர்கள் நன்றாக பேசினார், அதனால் அவர் அருகே ஒட்டிக்கொண்டே சுற்றினேன் .
மதியம் சாப்பிடும் நேரம் வந்ததால் ஒரு பீட்சா ரெஸ்டாரண்டுக்கு சென்றோம் . ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்த போது திரும்பிப் பார்த்தால் ஜெ அருகே அமர்ந்து உள்ளார் . சரி இப்போது பீட்சாவை வைத்து வாயை அடைத்துக் கொள்வோம் என்று முடிவு செய்தேன் . சூடான பீட்சா வந்ததும் எனக்கு சிக்கன் பீட்சா தான் வேண்டும் என்று ஆர்வமாக ஜெ ஒன்றை எடுத்து சாப்பிட தொடங்கினார் . திடீரென்று “இதற்கு மேலே காரமா ஏதோ போடுவாங்களே அது இருக்கா?” என்றார். யாரைக் கேட்கிறார் என்று சுற்றும் மற்றும் பார்த்தால், பாலாஜி மூர்த்தி யாரும் அருகில் இல்லை . அய்யய்யோ என்னைத்தான் Chilli Flakes கேட்கிறார் என்று புரிந்தது, டேபிளை பார்த்தால் அங்கு ஒன்றுமில்லை. எனக்கு ஒரு கட்டளை இட்டு இருக்கிறது அதை தலைமேற்கொண்டு செய்ய வேண்டும் என்று எழுந்தேன் .
“இருக்கா பார்க்கிறேன் சார் ?”என்று சொல்லி தேடச் சென்றேன் .
அங்கு தொலைவில் சில டப்பாக்கள் இருந்தது சில்லி ஃப்ளேக்ஸ் இல்லை. ஆனால் வகை வகையான சாஸ் இருந்தது . சில்லி ஃப்ளேக்ஸ் இல்லாத ஒரு பீட்சா ரெஸ்டாரண்ட் அது . ஜெ வை காக்க வைக்க வேண்டாம் என்று மூன்று வகை சாஸ்களை எடுத்து வந்தேன் .
“இதுவும் காரமாக இருக்கும் ட்ரை பண்றீங்களா?” என்றேன் .
“சரி” என்றார் .
ஞானப்பெருங்கடலுக்கு என் காணிக்கையாக அந்த சாசை சமர்ப்பித்தேன்.
ஏனோ இந்த நிகழ்வு என்னை இலகுவாக்கியது . அவருக்கு tissue, மேலும் சாஸ், தேவையில்லை என்றாலும் கேட்டு பரிமாறினேன் . மனம் எதனாலோ அவரும் ஒரு மனிதர் என்ற ஒப்புக்கொண்டது, குழப்பம் அடங்கியது, மனதின் கூச்சல் அமைதியானது .
அதற்குப் பின் தானாக அவரிடம் கேள்விகள் கேட்டேன் அவரும் கண்ணை நோக்கி தெளிவாக விடையளித்தார் . கால்கள் தரையை தொட ஆரம்பித்தன .
நானும் ஜெ உடன் மற்ற வாசகர்களைப் போல எல்லா பல்லையும் காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டேன் .
இரவு வீடு திரும்பியதும் எல்லோரும் என்னிடம் ஆர்வமாக என் அனுபவத்தை பற்றி கேட்டார்கள் . அமைதியாக நல்லா இருந்தது என்றேன் . என் கணவரிடம் பார்த்தீர்களா இப்போ எனக்கு எந்த பதட்டமும் இல்லை என்று கூறி உறங்கச் சென்றேன் .
இரவில் ஒரு அத்தியாயம் வெண்முரசு நாவலில் இருந்து படித்த பின்பு உறங்குவது என் வழக்கம் . எப்போதும் போல் Kindle லை எடுத்து படிக்க ஆரம்பித்தேன் . படிக்க படிக்க ஞானப்பெருங்கடல் ஆடை ஆபரணத்துடன் ஒரு கையில் வெண்முரசும் மறு கையால் ஆசீர்வாதமும் கொடுக்கலானது!
பின்குறிப்பு : ஜெ வை அடுத்த முறை சந்திக்கும் போது சில்லி ஃப்ளாக்சை பையில் வைத்திருக்கலாம் என்று இருக்கிறேன் . அவர் கொடுத்த பணியை சரியாக முடிக்கவில்லை என்ற குறை . ரெஸ்டாரண்டுகளை நம்ப முடியாது திடீரென்று கேட்டால் தேட வேண்டாம் !
புதுமையான அனுபவம்!!
அன்புடன் ,
அன்னபூர்ணா
Dallas
அன்புள்ள அன்னபூர்ணா,
இந்த சிக்கல் கேரளத்தில் எப்போதும் உண்டு. கோமரம் என்றும் வெளிச்சப்பாடு சொல்லப்படும் பூசாரி பகவதியாக மாறி அருள் சொல்பவர். அவரை வழிபடுவார்கள். அதேபோல தெய்யம் கெட்டும் வேலன் என்பவரையும் அவர் குளிகனாகவும் இருளனாகவும் வரும்போது வணங்குவார்கள். ஆனால் அடுத்த நாளேஅவர் டீக்கடையில் பீடிபிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அவர்தான், ஆனால் அவர் அல்ல. அந்த வேறுபாட்டை உருவாக்கிக்கொண்டே ஆகவேண்டும். முதலில் அந்த வேறுபாட்டை அந்த வெளிச்சப்பாடு அல்லது வேலன் உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் அதை திட்டவட்டமாக உருவாக்கிக்கொண்டவன். எழுதாதபோது எளியவன், சாமானியன், ஒரு கோணத்தில் சாமானியனை விட சற்று குறைவானவன்.
ஜெ
பனை எழுக விழா- ஸ்டாலின்
மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
பனைத்திருவிழா ஊழியரகத்தில் நடத்த திட்டமிட்ட நாள் தொட்டு உள்ளுற ஒரு உற்சாகமும் பெரும் பொறுப்பும் இருந்து கொண்டே இருந்தது.
குமரப்பா,நேரு,காமராஜர், ஜூனியர் மாட்டின் லூதர் கிங் எல்லோரும் வந்து நின்ற இடத்தில் நாம் உண்மையும் சத்தியமும் மட்டுமே நம்பி செயலாற்றும் பனை சார்ந்த செயல்பாட்டாளர்களை
கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டோம்.அவர்களுக்கு இயன்ற அங்கீகாரம் அளிக்க விருது வடிவம் தேர்ந்தெடுத்தோம்.
பனையையும் பனை சார்ந்த பொருட்களையும் தொடர்ந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக திட்டமிட்டோம். பனை விதை நாற்றுப்பண்ணை உருவாக்கம் மற்றும் பனை கைவினை பொருட்கள் கண்காட்சி முடிவானது.
மூன்று மாதங்களாக ஆற்றிய அத்தனை உழைப்பும் நவம்பர் 4 அன்று கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
அவர்களின் பிரார்த்தனையும் மண்ணில் சாய்ந்த நெடும்பனை ஜெகந்நாதன் ஆசியுடன் அரங்கேறியது.மூன்று அடுக்கு முறைகளில் மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான பனை விதைகளை புதைத்து விதை நாற்றுப்பண்ணை துவங்கினோம். அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்களின் பைபிள் வசனம் தாங்கிய பிரார்த்தனையுடன் எங்கள் எல்லோர் நெஞ்சில் எல்லாம் வடலியாக நிற்கும் பனை தூதுவன் மித்தரனை சுடும் கண்ணீரோடு எண்ணி கொண்டோம்.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், அரவிந்த் கண் மருத்துவமனை துவக்கிய கரங்களில் ஒன்றான
நாச்சியார் அம்மா, 80 வயதை தொட்ட சர்வோதய ஊழியர்கள் (வினோபா,குமரப்பா அவர்களுடன் களத்தில் நின்றவர்கள்), மீண்டும் பழனிதுரை அய்யா, சி. மகேந்திரன் அய்யா
தமிழகத்தின் எல்லா திசைகளிலும் இருந்து வந்து சேர்ந்த
14 பனை செயல்பாட்டாளர்கள் அவர்களின் முன்னோடியான பனை மீட்பர் காட்சன் சாமுவேல் அவர்கள்.
சிவராஜ் அண்ணா,சத்யா அக்கா, பூமி அண்ணா, யுவராஜ் அண்ணா என தியாக துறவிகள் ஒரு புறம் காந்திகிராம் பல்கலைக்கழக துணை வேந்தர் பஞ்சநாதம், வேளாண்துறை சேர்ந்த முக்கிய அதிகாரிகள்,10,000 பனை விதை சேகரித்து அளித்த நண்பர்கள்.
100க்கும் அதிகமான இளையோர்கள்,பொதுமக்கள்,பனைசார்ந்த ஆர்வலர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடி, அந்த
ஊழியரக வளாகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை குறிப்பாக இளையோர் கரங்கொண்டு
நட்டோம்.
பனை செயல்பாட்டாளர்கள் ஒவ்வொருக்கும் விருது தயாரிக்கும் பணி மற்றும் மேடையலங்காரம் அமைக்கும் பணி
ஆனந்த பெருமாள் அண்ணா எடுத்து கொண்டார்கள். மிகுந்த நேர்த்தியும் பனை போலவே கடின சிரத்தையும் கொண்டு விருது தயாராகி வந்ததை நிகழ்வின் முதல் நாள் இரவில் நடுநிசியில் பார்த்தேன், ஒவ்வொரு விருந்தினரை அழைத்து கண்டு திரும்பி வரும் போது அந்த சிறிய தூக்கணா ங்குருவி கூடு எப்படி தயாராகுமோ அப்படி தயார் ஆனது.
விருது பனை மரத்தின் இலை மற்றும் கடினமான தண்டு கொண்டு மிகு மிகு நேர்த்தியும் மெனக்கெடலும் கொண்டு தயாரானது.கூட்டு உழைப்பின் பலனை இந்த நிகழ்வின் வழியாக இன்னும் தீவிரமாக நம்புகிறோம்.
பனை மீட்பர் அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்கள் பனை குறிப்பிட்ட இனத்துக்கோ, மதத்திற்கும் மட்டும் அல்ல மாநிலம் கடந்து,தேசம் கடந்து, கண்டம் கடந்து இந்த உலகத்திற்கு உரியது பனை என்று வெகு தீர்க்கமாக சொன்னார்கள்.அதற்கான தரவுகளையும் முன்வைத்தார்கள் அவர்களின் முப்பது ஆண்டுகால பனை மரம் சார்ந்த தீவிரமான தேடுதல் வழியே
கண் தெரியாத பனையேறி முருகாண்டி ஐயா இராமநாதபுரத்தில் இருந்து மனைவியுடன் வந்திருந்தார்கள். 8வயதில் தன் தாத்தா போல் தானே பனை மரம் ஏற கற்று கொண்டவர்.அதன் பொருட்டு அவர் பெற்ற விழுப்புண்களை காட்டினார். உச்சந்தலையில் நான்கு முறை பெற்ற குளவிக்கடி பெரும் வலி கொண்டது என தன் இயல்பு மாறாத சிரிப்புடன் சொன்னார்.
இன்றும் பனை மரம் ஏற தவிக்கும் அவர் மனதிற்கு இந்த விருதும் அரவணைப்பும் நல்வழி செய்யும்.100 நாள் வேலை காரணமாக ஊரில் இப்போது அதிகமாக பனை மட்டை வெட்ட கூப்பிட மறுக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். பனை ஓலை பொருட்கள் செய்வது குறைந்து போயிற்று என்றார்.
பால்மா மக்கள் கூட்டமைப்பு சார்ந்த பால்ராஜ் சார், தமிழகத்தில் முதல் முறையாக பனம் பழசாறு(பனம் பழ ஸ்குவாஷ்) என்னும் ஆரோக்கிய பானம் உருவாக்கி இருக்கிறார்கள்.அவர்களுடன் தீவிரமாக மக்களிடம் இந்த பொருட்களை கொண்டு சேர்க்கும் ஜேக்கப் சார் மற்றும் இரு நண்பர்கள் வந்து இருந்தனர்.
மார்த்தாண்டத்தில் பால்மா பனை பொருட்கள் பெயரில் இன்னும் அதிக பனை பொருட்கள் தயாரிப்புடன்,வயது முதிர்ந்த பனையேறிகளுக்கு பென்ஷன் அளிப்பது, பனையில் இருந்து தவறி விழுந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குகிறார்கள், பனையேறி அய்யா அவர்கள் எழுதிய பனையோடு உறவாடு நூல் வெளியிட்டு உள்ளார்கள்.
உசிலம்பட்டி அருகே இருந்து தொடர்ந்து செயல்படும் பனையேற்றம் அமைப்பை சேர்ந்த குருவம்மாள் அக்கா அவர்கள் மிக முக்கியமானவர்கள்.பனை சார்ந்த கைவினை பொருட்கள் தாயரிப்பு மற்றும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதனை வழிநடத்தும் சாமிநாதன் அண்ணா மற்றும் இளவேனில் இன்னும் நிறைய இளம் மனங்கள் தீவிரமா செயல் புரிகிறார்கள்.
பனையேறியான விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் பாண்டியன் அவர்கள் தொடர்ந்து பனை சார்ந்த மக்களின் நல்வாழ்வு அடிப்படை உரிமை, பாதுகாப்பு பல வழிகளில் செயல்படுகிறார்கள்.அவரின் குடும்பத்தினருடன் இணைந்து செயல்புரிகிறார்கள், பனையை பாதுகாக்க தொடர் பயணம் செய்து வருகிறார் பெரும் நண்பர்கள் கூட்டத்துடன்.
அனில் குப்தா சாரின் சோத் யாத்திரையின் வழியே நாங்கள் அறிந்த வெங்கட் சார், பனை மரம் ஏறும் கருவியை மிக நேர்த்தியான முறையில் இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கி உள்ளார்.அவரின் மகன் ஶ்ரீவர்தன் தந்தையுடன் இணைந்து இந்த கருவி தயாரிப்பு மட்டும் அல்லாமல் பனை மரம் ஏறியும் காண்பிக்கிறார்.ராஷ்டிரபதி பவனில் தன் தந்தை ஜனாதிபதி கரங்களால் விருது பெற்றதையும் அதன் சாட்சி புகைப்படம் அங்கு இருப்பதையும் பூரித்து சொன்னார்.
வெங்கட் சார் பனை செயல்பட்டாளர் விருதினை கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்கள் கரங்களினால் பெற்ற பிறகு தமிழகத்தில் முதல் முறையாக எனக்கு இப்படி ஒரு அங்கிகாரம் முதல் முறையாக கிடைத்துள்ளது என்று மனம் திறந்து சொன்னார்.
வாணி அக்கா இரவெல்லாம் தூங்காமல் பனை மர ஓலையில் வித விதமாக அலங்காரங்கள் மாலைகள் செய்து கொண்டே இருந்தார்.அக்காவின் உளத்தீவிரம் மற்றும் தொடர் கற்றல் வழியே கடினமான பனை ஓலை கைவினை பொருட்கள் தயாரித்து அவற்றை பாதுகாத்து ஆவணப்படுத்தும் காட்சன் சாமுவேல் பாதரின் பணியை சிரமேற்கொண்டு செயலாற்றி இருக்கிறார்கள்.
இந்த பனைத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் பனை ஓலை கைவினை பொருட்கள் குடுவை, வித விதமான தொப்பிகள், மாலைகள், பாய், கூடை, அலங்கார பெட்டிகள், கிலுகிலுப்பை முக்கிய சாட்சியாக இடம் பெற்று இருந்தது.
ஆனந்த் பெருமாள் அண்ணா ஒரு புறம் முழு மேடை அலங்காரமும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை ஓலை,மட்டை, பனை விதை இவற்றை கொண்டே தயாரித்து இருந்தார். அத்தனை பனை செயல்பாடுகளுக்கும் அளித்த விருது அவரின் கை படவே உருவானது.
பாட்டியின் கரங்களால் ஆனந்த பெருமாள் அண்ணா விருது பெற்ற போது கிரிஜா அக்காவை நன்றியோடு நினைத்து கொண்டேன், ஒவ்வொரு முறையும் பனை சார்ந்த பொருட்களை தேடி சேகரித்து மீள் உருவாக்கம் செய்து வருகிறார்கள்.பீடி சுற்றும் தொழிலாளர்கள் பலரினை பனை சார்ந்த தேர்ந்த கைவினை கலைஞர்களாக மாற்றி உள்ளது இவர்களின் கவின் கலைக்கூடம்.
அரச்சலூர் பூபதி அண்ணா நண்பர்கள் மற்றும் நன்செய் நண்பர்கள் குழுவுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.இணைந்து பணியாற்றுவது போல் நெருக்கடியான ஒன்று இல்லை என்று சிவராஜ் அண்ணா அடிக்கடி சொல்லுவார்.அப்படி ஒன்றை சாத்தியாமாக்கிய இந்த நண்பர்கள் நாளை நிச்சயம் பெரும் சக்தியாக உருவெடுப்பார்கள்.
பதநீர் சேகரிக்கும் குடுவை இன்று தமிழகத்தில் இதனை தயாரிக்க இருக்கும் ஒற்றை நபர் தங்கப்பன் அய்யா தான், அவர் கற்றுக்கொடுத்து பலர் இதனை தற்போது செய்து வருகிறார்கள். 8 வயதில் தன் தாத்தா தனக்கு முதலில் கற்றுக்கொடுத்த இந்த பின்னலை 66 வயதிலும் அதே குழந்தைமை தன்மை மாறாமல் வந்திருந்த இளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்தார்.மார்த்தாண்டத்தில் அய்யா மற்றும் அவரின் மகன் வந்து இருந்தனர்.
ஒரு கோடி பனை விதைப்பை தமிழகம் எங்கும் முன்னெடுத்து நடத்தி செல்லும் கிரீன் நீடா ராஜவேலு அண்ணா விருது பெற்றது பெரும் நிறைவு.பனம் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மிக ருசியான இனிப்பு பானம் (Lemurian foods)
ஒன்றை ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்து சேர்த்த கலை கதிரவன் அவர்கள் இந்த விருது பெற்று கொண்டார்கள்.இளையோர் எல்லோரையும் கவர்ந்திழுத்தது அவரின் இந்த தயாரிப்பு அதன் வடிவமைப்பு.
லாப்டி மற்றும் குக்கூ உறவுகள் எல்லோரும் இரவு பகலாக பணியாற்றினோம். பூமி அண்ணா, சத்யா அக்கா,காந்தி அண்ணா மற்றும் மார்டின் அண்ணா,இளங்கோ அண்ணா,சண்முகம் அண்ணா,மலர் அக்கா, மேலும் குமரன் அண்ணா நண்பர் பிரசாந்த், வாணி அக்கா நண்பர் செந்தில் கார்த்தி இருவர் உழைப்பு ரொம்ப ரொம்ப பெரியது.
வினோபா சீடர் விவேகானந்தன் அய்யா, காந்தியின் சீடர் குமரப்பா இவர்களின் புகைப்படங்களுக்கு தீபம் ஏற்றி தான் முழு நிகழ்வையும் நடத்தினோம்.சிவராஜ் அண்ணா, பாரதி,மோகன் எல்லாம் ஒரு வாரம் அங்கேயே தங்கி இருந்து எல்லாவற்றையும் இணைந்து பணியாற்ற வைத்தனர்.
பிப்ரவரி 12,ஜெகந்நாதன் அய்யாவின் நினைவு நாளான சர்வோதய தினம் அன்று நாம் உருவாக்கிய பனை விதை நாற்றுப்பண்ணையில் இருந்து ஆயிரம் ஆயிரம் நாற்றுகள் உருவாகி இருக்கும், அய்யாவின் ஆன்மா நிம்மதி கொள்ளும்.
இந்த நிகழ்வில் எனக்கும் பனை செயல்பாட்டாளர் விருது அளித்தது எனக்கு பெரும் ஆச்சர்யம் கலந்த சந்தோசம்,இந்த மூத்த ஆன்மாக்களின் ஆசியுடன் நீங்கள் சிவராஜ் அண்ணா காட்சன் சாமுவேல் பாதர் எல்லோரும் காட்டும் இலட்சியப்பாதையில் பாதையில் நிதர்சனத்தில் காலூன்றி நடக்கிறோம்.
நிகழ்வு எல்லாம் முடிந்த பின் விதை நாற்றுப்பண்ணையில் நீர் ஊற்றி விட்டு வரும் போது அங்கு இருந்த வளர்ந்த பனை மரங்கள் எல்லாவற்றையும் பார்த்தேன்,நிச்சயம் இது குமரப்பா,நேரு,காமராஜர்,கைத்தான்,ஜெகநாதன் அய்யா எல்லாம் விதையிட்டு அல்லது தொட்டு வளர்ந்த மரமாக இருக்கும்,காலையில் பனை விதைகளை நடும் போது அரவிந்த் மருத்துவமனையின் நிறுவனர் அவர்களின் தங்கை நாச்சியார் அம்மா சொன்னாங்க ,இந்த விதை எல்லாம் மரமாவதை நாங்கள் வானத்தில் இருந்து பார்ப்போம் என்று சிரித்து கொண்டே சொன்னார்கள்.
நிகழ்வின் மறுநாள் காலை அறக்கல்வி மாணவர்கள் சத்யா அக்காவுடன் இணைந்து பனை விதை நடவு ஊழியரகத்தில் மேற்கொண்டார்கள்,பனை எழுக என்று மனத்திற்குள் தீர்க்கமாக சொல்லி கொண்டேன்.
புகைப்படங்கள் : மோகன்
என்றும் உண்மையுடன்,
ஸ்டாலின்,குக்கூ காட்டுப்பள்ளி .
The numb and impotent…
You definitely have the tact to brainwash your listeners and convince them that politics is dirty and no young men should be involved in it. You are making them apolitical; that means they are becoming impotent
The numb and impotent…
நம் செயல்களின் மதிப்பு என்ன என்ற காணொளியைக் கண்டேன். அதைக் காண்பது வரை நான் என் மனதிலுள்ள எண்ணங்கள் சரியா என்ற சந்தேகம்தான் கொண்டிருந்தேன். நான் ஆணவமாக யோசிக்கிறேனா என்ற சந்தேகம்தான் என்னை ஆட்டிவைத்தது.
‘எனக்கு எதுக்கு உன் மதிப்பு?”
November 12, 2025
சர்வதேச இலக்கிய வாசலில்
நண்பர் ஶ்ரீராமின் இல்லத்தில் பதிவுசெய்த ஒரு காணொளி. நான் ஏன் என் Stories of the True நூல் அமெரிக்காவில் சரியான முறையில் முன்வைக்கப்படவேண்டும் என விரும்புகிறேன்? ஏனென்றால் சர்வதேச இலக்கியம் என ஒரு சூழல் உண்டு. அதில் கவனம்பெறுவது எளிதல்ல. ஏனென்றால் அது ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஒரு கருத்தியல் சட்டகத்தை சற்று உடைத்து உட்புகுவது
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

