Jeyamohan's Blog, page 16

September 17, 2025

ஒழுகினசேரி சோழராஜா கோவில்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறிய மாதிரி வடிவமென ஆலயம் அமைந்துள்ளது. பிரகதீஸ்வரர் கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன.

ஒழுகினசேரி சோழராஜா கோவில் ஒழுகினசேரி சோழராஜா கோவில் ஒழுகினசேரி சோழராஜா கோவில் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2025 11:33

ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்

அன்புள்ள ஜெ

எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை முக்கியமானது என்று நீங்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறீர்கள். அண்மையில்கூட எழுதியிருந்தீர்கள். (எழுத்தாளர்களின் வாழ்க்கை.) அவ்வகையில் ரமேஷ் பிரேதன் அவர்களின் தனிவாழ்க்கையைப் பற்றி இங்கே பேசுவது பிழையில்லை என நினைக்கிறேன். இதை ரமேஷ் பிரேதன் அவர்களே தன் முகநூலிலே மிக விளக்கமாக எழுதியிருக்கிறார். மிகமிகக் கடுமையாகக்கூட எழுதியுள்ளார்.

ரமேஷ் பிரேதன் அவர்கள் பிரேம் என்னும் எழுத்தாளருடன் ஓரினப்பாலுறவில் இருந்தார். அதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு தங்களை ஒரு மாற்றுக் குடும்பம் என்று கூறினர். வழக்கமான குடும்ப அமைப்புகள் எல்லாம் வன்முறையாக ஆகிவிட்டன என்றும், அங்கே துரோகமும், கசப்புகளும் மட்டுமே உள்ளன என்றும் சொன்னார்கள். இன்று தேவையாக உள்ளது தங்களுடையது போன்ற மாற்றுக்குடும்பம்தான் என்று வாதிட்டார்கள். அன்றைக்கு பல இளைஞர்களுக்கு இதனால் இவர்கள்மேல் ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது.

இந்த ஜோடியுடன் மாலதி மைத்ரி சென்று சேர்ந்து வாழ்ந்தார். ரமேஷ்தான் மாலதியின் பெயரிலும் ரமேஷ் பிரேம் பெயரிலும் வெளிவந்த படைப்புகளை உண்மையில் எழுதியவர் என்று ரமேஷ் இன்று சொல்கிறார். மாலதியின் குழந்தைக்குத் தந்தையாக ரமேஷ் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்றார். அப்போது ரமேஷ்தான் ஒரே சம்பாதிக்கும் நபர். அவருடைய பிரெஞ்சு இன்ஸ்டியூட் சம்பளத்தில் அவர்கள் வாழ்ந்தனர். அதன்பின் பிரேமுக்கு டெல்லியில் பேராசிரியர் வேலை கிடைத்தது. (அதற்கு உதவியவர்கள் வெங்கட் சாமிநாதன், செ.ரவீந்திரன் முதல் பலர். அவர்களை இப்போது அவர் குறிப்பிடுவதே இல்லை)

வேலைகிடைத்ததும் ரமேஷை பிரேமும் மாலதியும் கைவிட்டார்கள். குழந்தையுடன் டெல்லி சென்றனர். ரமேஷ் அனாதையாக புதுச்சேரியில் அலைந்தார். நண்பர்கள் உதவிசெய்தனர். மிகுந்த எடைகொண்டவர். கடுமையான ரத்த அழுத்தமும் உண்டு. ஆகவே வேலை செய்யமுடியாத நிலை. ஒரு தோப்பிலே காவல்காரராக இருந்தார். அதன்பின் பாரதி நினைவு இல்ல திண்ணையில் கொஞ்சநாள் இருந்தார். அப்போதுதான் நீங்கள் அவரை தற்செயலாகச் சந்திக்கிறீர்கள். அவர் இன்று இருக்கும் வீடு முதலியவை நீங்கள் அவருக்கு உருவாக்கி அளித்தவை. மணி ரத்னமும் உதவினார். பத்தாண்டுகளாக ரமேஷ் நீங்கள் மற்றும் பிற நண்பர்களின் உதவியுடன் வாழ்கிறார்.

இப்போது ரமேஷ் இந்த ‘வன்முறையும் துரோகமும் இல்லாத’ மாற்றுக்குடும்பம் பற்றி என்ன சொல்கிறார்? இன்றைக்கு அவருக்கு உதவி செய்பவர்கள் எல்லாருமே வழக்கமான குடும்பம் உள்ளவர்கள்தானே?

எஸ்.செல்வகுமார், புதுடெல்லி

அன்புள்ள செல்வகுமார்,

ரமேஷின் தனிவாழ்க்கை அவரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அது எப்போதும் அவர் படைப்புகளை வாசிப்பதற்கான பின்புலமாக இருக்கும். ஆனால் அவை அவருடைய புனைவுநூல்களுக்கான, அவருடைய கருத்துக்களுக்கான பின்புலமாக மட்டுமே விவாதிக்கப்படவேண்டும். தனி வம்புகளாக அல்ல. அவருடைய வாசகன் அவரை உருவாக்கிய உணர்வுநிலைகள் என்ன என்று அறிவதற்காக மட்டுமே அவற்றை கவனிப்பான். அவற்றிலுள்ள பிற மனிதர்கள் அவனுக்கு கதைமாந்தர் மட்டுமே.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2025 11:32

வடகிழக்கின் முன்னேற்றத்தின் பொறுப்பு

For a long time I considered myself an atheist and ridiculed yoga. A few years ago I got severe back pain. I was a frequent bike traveler, and some bulge emerged on my backbone.

Yoga for modern man

ஒரு விமானநிலையமும் ஒரு ஆறுவழிச்சாலையும் எந்தவகையான பொருளியல் மலர்ச்சியை உருவாக்கியுள்ளன என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் அதை கொண்டுவந்தது யார், யார் அதை எதிர்த்தார்கள் என்று சொல்ல உங்கள் நாக்கு வளையவில்லை. 

வடகிழக்கின் முன்னேற்றத்தின் பொறுப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2025 11:30

September 16, 2025

தடாகத்தின் விழியன்னங்கள்.

சில பாடல்கள் சில மாதங்களுடன், சில மனநிலைகளுடன் இணைந்துவிடுகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பாடலை நான் ஓர் ஆடி மாதத்தில் மழைக்குளிர் கலந்த காற்று வீசும் மதியநேரத்தில் கேட்டேன். மீண்டும் இப்போது அதே மனநிலையை அதே சூழலை ஏசுதாசின் அந்தக் குரல் உருவாக்குகிறது. அத்துடன் ஓ.என்.வி குறுப்புக்கே உரிய அழகான மிகைக்கற்பனை.

நான் இன்று அந்த ’நீ’ அல்லது ’உன்’னை ஒரு பெண்ணாக எண்ணிக்கொள்ளவில்லை. சௌந்தர்ரிய லஹரி சூடி நின்றிருக்கும் இயற்கையாக கற்பனைசெய்துகொள்கிறேன். கற்பனாவாதம் ஒரு வயதில் நம்மை ஆட்கொள்கிறது. மண்ணில் கால்தொடாத உலகங்களில் வாழ்கிறோம். பின்னர் மெல்ல மெல்ல யதார்த்தங்களுக்குள் நுழைகிறோம். வெற்றுக்கற்பனைகள் என கற்பனாவாதத்தை இகழவும் விலகவும் தொடங்குகிறோம்.

கற்பனாவாதத்தை விட்டு விலகுவது முதிர்ச்சியின் ஓர் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அது உண்மை அல்ல. கற்பனாவாதத்தை விட்டு விலகுவதென்பது நடைமுறைத் தர்க்கபுத்தி வலுவடைவதன் அடையாளம் மட்டுமே.அதன் நன்மைகள் பல உண்டு. ஆனால் இழப்புகளும் அதற்கிணையானவை. கற்பனாவாதம் மட்டுமே மொழியை அதன் உச்சங்கள் நோக்கி கொண்டு செல்கிறது. யதார்த்தவாதம் என்றுமே மொழியின் நடைமுறைத்தன்மையை மீறுவதில்லை. மொழி அதற்கு சிறகு அல்ல, ஒரு பயன்படுபொருள் மட்டுமே. ஆகவே மொழியில் ஓர் இயந்திரக்கச்சிதத்தை மட்டுமே யதார்த்தவாதம் அடைகிறது. அந்தக் கச்சிதமே மொழியின் சிறந்த நிலை என நம்புபவர்கள் மொழியை அறிவதே இல்லை.

கச்சிதமான நடையே நல்ல நடை என நம்புவதுபோல இலக்கியத்தில் நுணுக்கமான வீழ்ச்சி பிறிதொன்றில்லை. ஏனென்றால் அப்படி கச்சிதம் என ஒன்றில்லை. கச்சிதம் என நாம் எண்ணுவது கொடுப்பவனும் பெறுபவனும் சந்திக்கும் அந்த தொடர்புறுத்தல்புள்ளியைச் சார்ந்தது. ஆனால் அது மிக எளிதில் மாறிவிடும். நேற்று மிகக்கச்சிதமானவை என்று சொல்லப்பட்ட கு.ப.ராஜகோபாலன் எனக்கு மிக வளவளவென்று எழுதுபவராக இன்று தோன்றுகிறார். காலம்கடந்து நின்றிருக்கும் கச்சிதம் என ஒன்றில்லை.

ஆனால் கற்பனாவாதம் அடையும் மொழியின் உச்சம் என்பது தொடர்புறுத்தலின் விளைவு அல்ல. மொழியை மொழிகடந்த ஒன்றைநோக்கிக் கொண்டுசெல்லும்போது உருவாகும் நுண்மையும் ஒளியும்தான் அது. மொழி முற்றிலும் புதிய சொல்லிணைவுகளை அடையலாம். இசைத்தன்மையை அடையலாம். படிமத்தன்மையை அடையலாம். படிமங்களுக்குள் படிமம் என விரியலாம். புரிந்துகொள்ளமுடியாத மயக்கநிலையை எய்தலாம். அது காலத்தால் பழையதாவதில்லை. ஏனென்றால் அது சென்று தொடும் அந்த ஆழம், அதை நனவிலி என்று சொல்லலாம், கூட்டுநனவிலி என்று சொல்லலாம், என்றுமுள்ள ஒன்று. மானுடரின் கூட்டான அகம் அது.

ஆகவே செவ்வியல் கற்பனாவாதத்தை ஒரு போதும் முழுக்கக் கைவிடாது. யதார்த்தவாதச் செவ்வியல் படைப்புகளான டால்ஸ்டாயின் நாவல்களிலும் தாமஸ் மன்னின் நாவல்களிலும் கூட மகத்தான கற்பனாவாதத்தருணங்கள் உண்டு. இப்படிச் சொல்லலாம். செவ்வியல் அதன் அடித்தளத்தை  யதார்த்தவாதத்தில் கட்டியிருக்கும். அதன் உச்சங்கள் கற்பனாவாதத்தை நோக்கி நீண்டிருக்கும்.

நமக்கு வயதாகும்போது, மொத்தவாழ்க்கையும் ஒற்றைச்சித்திரமாகக் கண்ணில் தெரியத்தொடங்கும்போது, யதார்த்தவாதம் சலிப்பூட்டுகிறது. நவீனத்துவப்படைப்புகளிலுள்ள இருண்மையும் கசப்பும் ஒவ்வாமையை உருவாக்குகின்றன. பின்நவீனத்துவ வடிவ விளையாட்டுக்கள் அர்த்தமிழக்கின்றன. இனிய அழகிய கற்பனாவாதம் ஒரு மதியத்தூக்கத்தின் கனவுபோல ஒளிமிக்க இடங்களுக்கு கொண்டுசெல்கிறது.

சரோவரம் பூசூடி
என் சகி நின்னே போலே
ஓமல் சகி நின்னே போலே.

சலஜ்ஜம் ஆரே திரயுந்நு
ஈ சாரஸ நயனங்கள்
சாரஸ நயனங்கள்.

கைதப்பூவின் அதரம் நுகரும்
காற்றின் எந்தோரு லஹரி
மணமுள்ள சம்பக மலரின்றே

கவிளில் தழுகும் காற்றினு லஹரி
நின்முகசௌரஃப லஹரியில் முழுகும்
தென்னலாயெங்கில் !

ஞானொரு தென்னலாயெங்கில்!

காற்றின் கைகளில் ஊஞ்ஞாலாலிடும்
காடினு எந்தொரு லஹரி
ஸுர பகருந்நொரு சுரபீ மாஸம் புணரும்
காடினு லஹரி

நின் பத சும்பன முத்ரகள்
அணியும் மண் தரியாயெங்கில்!
ஞானொரு மண் தரியாயெங்கில் !

ஓ.என்.வி.குறுப்பு

தடாகம் மலர்சூடியது
படம் முகூர்த்தங்கள்.
கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு
இசை எம்.கே.அர்ஜுனன்
பாடகர் ஏசுதாஸ்

தடாகம் பூ சூடிக்கொண்டது
என் தோழி உன்னைப்போல!
அருமைத்தோழி உன்னைப் போல!

நாணத்துடன் யாரைத் தேடுகின்றன
உன் விழி அன்னங்கள்?

தாழம்பூவின் அதரத்தை சுவைக்கும்
காற்றுக்கு என்ன ஒரு மிதப்பு!
மணமுள்ள செண்பக மலரின்
கன்னம் தடவும் காற்றுக்கு என்ன ஒரு போதை!
உன் முக நறுமணப் போதையில் மூழ்கும்
தென்றலாக மாட்டேனா?

நானொரு தென்றலாக மாட்டேனா?

காற்றின் கைகளில் ஊஞ்சலாடும்
காட்டுக்கு என்னவொரு மயக்கம்
மோகமூட்டும் ஆடிமாதம் தழுவும்
காட்டுக்கு மயக்கம்
உன் காலடி முத்தங்களை அணியும்
மணல்துகள் ஆகமாட்டேனா?

நானொரு மணல்துகள் ஆகமாட்டேனா?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:35

க.அப்புலிங்கம்

க. அப்புலிங்கம், மரபுக் கவிஞர். அதே சமயம் புதுக்கவிதையையும் ஆதரித்தார். வசன கவிதைக்கு ஆதரவாக இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். இலக்கணத்துக்கு ஏற்பக் கவிதைகள் படைப்பதில் தன் ஆற்றலை ஈடுபடுத்தி வெற்றி கண்டவராக அறியப்படுகிறார்.

க.அப்புலிங்கம் க.அப்புலிங்கம் க.அப்புலிங்கம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:32

ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள்

எங்கள் மூத்தவர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியை தருகின்றது. என்னால் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க முடியவில்லை. நேற்று நள்ளிரவு வரையில் நண்பர்களுடன் கைபேசியில் உரையாடி தன்னிறைவடைந்தேன்.

இலக்கியத்திற்கான அத்தனை விருதுகளுக்கும் தகுதியானவர் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்கள் என்பதை இலக்கியம் அறிந்த எவரொருவரும் மறுக்கப்போவதில்லை. அவருடைய படைப்புகள் எல்லையற்று உலகெங்கும் சென்றிருக்க வேண்டும்!. அதுவும் நிகழும் என்ற நம்பிக்கையையும் விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு செய்தி தந்திருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகின்மேல் இருந்த குறை ஒன்று சரிசெய்யப்பட்டுள்ளது. என்போன்ற பலருடைய நீண்ட கால ஆதங்கம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் சாத்தியமாக்கிய விஷ்ணுபுரம் அமைப்பில் அங்கம் வகிக்கும் நண்பர்கள் அனைவரின் கைகளையும் பேரன்புடன் பற்றிக்கொள்கிறேன். நன்றி!.

வாசு முருகவேல்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ரமேஷ் அவர்களின் இலக்கியப் பங்களிப்பு ஐயத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று. உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ச்சியாக இலக்கியப்படைப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார். புகழ் , அங்கீகாரம் அனைத்துக்கும் அப்பால் ஆக்ரோஷமாக தன்னை வெளிப்படுத்துவதொன்றையே செய்துகொண்டிருக்கும் கலைஞர் அவர்.

ஆனால் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனம்கசந்து சில கடும் கண்டனங்களை தனிவாழ்க்கை சார்ந்து எழுதியபோது அதை ஒரு வம்பாக ஆக்கி கொண்டாடியவர்களில் பத்தில் ஒருவர் கூட அவருக்கு இப்படி ஒரு விருது அளிக்கப்பட்டபோது ஒரு வாழ்த்து தெரிவிக்கவில்லை. எழுத்தாளர்களிலேயே அந்த வாழ்த்தைத் தெரிவித்தவர்கள் மிகச்சிலர்தான். ஒரு விருதுக்கு சக படைப்பாளிகள் மரியாதை நிமித்தம் வாழ்த்துவதுகூட நம் சூழலில் அருகிவிட்டிருக்கிறது. இது என்ன நாகரீகம் என தெரியவில்லை. இன்றைய சமூக ஊடகச்சூழல் அனைவரையும் வம்பு மட்டுமே பேசுபவர்களாக ஆக்கிவைத்துள்ளது.

ரமேஷ் இந்தச்சூழலிலும் எழுதும் படைப்புகளில் அவருடைய இலக்கியப்பார்வை, அவர் எடுக்கும் வடிவங்கள்மேல் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நா.பத்மநாபன்

 

உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.

RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:32

அவள்- அஜிதன் சிறுகதை

அவர்கள் அவள் உடலை நிர்வாணமாக்கி பாதி அழுகிய நிலையில் சவுக்கு மரத்தோப்பில் விட்டுச்சென்றிருந்தனர். முகமும் உடலின் மேல் பகுதியும் எல்லாம் அடையாளம் தெரியாதபடி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது. வாயில் திணிக்கப்பட்ட உள்ளாடை வெளிறிய பற்களின் இடையே பாதி கருகிய நிலையில் கிட்டிக்கப்பட்டிருந்தது.

அவள்- அஜிதன் சிறுகதை. மயிர் இதழ்
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:31

A socio-spiritual way

Relieving depression and other similar mental health issues is not easy; it is a contemporary challenge. We have been suffering from this problem for a long time, and we don’t know that the cause is a mental problem.

A socio-spiritual way

 

 

இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை என்னும் தலைப்பை வாசித்ததும் நான் நீங்கள் ஏதோ கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சொல்லப்போகிறீர்கள் என்றும், இளைய தலைமுறை அதை பூமர் கருத்து என்று சொல்லப்போகிறது என்றும் நினைத்துக்கொண்டேன்.

இளையதலைமுறையின் சிக்கல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:30

September 15, 2025

பாவண்ணனுக்கு சூர்ய விருது- வாழ்த்துக்கள்

எழுத்தாளர் சிவசங்கரி உருவாக்கியிருக்கும் ‘சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை’ மூலம் அளிக்கும் சூரிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. ரு மூன்று லட்சம் தொகையும் பாராட்டு இதழும் அடங்கிய விருது.

பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்

பாவண்ணன் தமிழ்விக்கி

வாழ்த்த writerpaavannan2015@gmail.com , 9449567476

 

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 22:52

புதுவை வெண்முரசு வாசகர்கூடுகை

புதுவையில் நடைபெற்று வரும் வெண்முரசு மாதாந்திர கூடுகையின் 86வது அமர்வு

2025 செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை,

“ஶ்ரீநாராயணபரம்”, முதல் மாடி, #27, வெள்ளாழர் வீதி, புதுவை-605001

என்ற முகவரியில் நடைபெறுகிறது.

வெண்முரசு பெருநாவல்நிரையின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நண்பர் செந்தூர் உரையாற்றுவார்.

நிகழ்விடம் : கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

பேசு பகுதி: வெண்முரசு நூல் – 9. “வெய்யோன்”

பகுதி 9 மயனீர் மாளிகை – 64 – 69 அத்தியாயம். (1 – 6 )

நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

வெண்முரசு வாசகர்வட்டம் புதுவை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 18:49

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.