Jeyamohan's Blog, page 18
September 13, 2025
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
பொழுதுபோக்கு நூல்களை உயர் இலக்கியம் என்று நினைத்த ஒரு காலகட்டம் 1990 வரை தமிழ்ச்சூழலில் இருந்தது. அன்று இலக்கியம் என்பதை முன்வைக்கும்பொருட்டு இலக்கிய முன்னோடிகள் பொழுதுபோக்கு எழுத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். ஆனால் இன்று வாசிப்பு என்பதே அருகிவருகிறது. பிற கேளிக்கைகள் வாசிப்பை அழிக்கின்றன. ஒரு பயிற்சியாக நாம் வாசிப்பை நிகழ்த்திக்கொண்டே இருந்தாகவேண்டியுள்ளது. இன்றைக்கு பொழுதுபோக்கு எழுத்து அப்பயிற்சியை நிகழ்த்துவதற்கு அவசியமான ஒன்றாக உள்ளது.
எழுத்தாளர்களின் வாழ்க்கை.
சுரா நினைவின் நதியில் நூலை வாசித்தேன். எனக்கு அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் ஒரு சிறு வாட்ஸப் குரூப்பில் அந்நூலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஒருவர் எழுத்தாளர்களின் வாழ்க்கையைப் பற்றி ஏன் எழுதவேண்டும் என்றார். உங்களுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையேயான உறவும், நட்பும் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள். அவற்றை வாசகர் ஏன் வாசிக்கவேண்டும்? இலக்கியவாதிகளின் படைப்புகளை வாசிக்கலாம், ஏன் அவர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும்? ஏன் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எழுதவேண்டும்? அப்படி பல கேள்விகளைக் கேட்டார். அதற்கு பல பதில்கள் வந்தன.
நான் சொன்னது இதுதான். சுரா நினைவின் நதியில் புத்தகம் படிக்க மிகச்சுவாரசியமாக உள்ளது. சுந்தர ராமசாமி என்று ஒருவர் உண்மையில் வாழவில்லை, இது கற்பனை என்று எடுத்துக்கொண்டால்கூட இது ஒரு நல்ல நாவலாக வாசிக்கலாம். இதில் பல நுணுக்கமான வாழ்க்கைச் சித்திரங்களும், உணர்ச்சிகரமான தருணங்களும் உள்ளன. விவாதங்களில் ஆழமான கருத்துக்கள் உள்ளன. ஆகவே இந்நூல் முக்கியமானது. உங்கள் கருத்து என்ன?
ஜே.ஆர்.ராஜசேகர்.
சு.ரா. நினைவின் நதியில் வாங்கஅன்புள்ள ராஜசேகர்,
உலகம் முழுக்க எழுத்தாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுச்சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. உலகப்புகழ்பெற்ற பல வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. டாக்டர் ஜான்ஸனைப் பற்றி பாஸ்வெல் எழுதிய வாழ்க்கைவரலாறு ஒரு முன்னோடியான படைப்பு என்று அறிந்திருப்பீர்கள். மேலைநாட்டின் எல்லா கலை, இலக்கிய மேதைகளைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. Ludwig Wittgenstein: The Duty of Genius ஒரு பெரிய நாவலைவிட என்னை கவர்ந்த படைப்பு. அலக்ஸாண்டர் ஹம்போல்ட் பற்றிய The Invention of Nature நான் கடைசியாக வாசித்த ஆக்கம்.
தமிழில் உ.வே.சாமிநாதையர் தன் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்றுநூல்தான் தலைசிறந்தது. அதற்கிணையான இன்னொரு வாழ்க்கைவரலாறு அதன்பின்னரும் எழுதப்படவில்லை. இங்கே வாழ்க்கைவரலாறுகள் எழுதுவது கடினம். காரணம் நமக்கிருக்கும் நீத்தார் வழிபாட்டு மனநிலை. அகவே புகழ்மொழிகளையே எழுதவேண்டியிருக்கும். அந்தப் புகழ்மொழிகளும் ஒரே வகையானவையாகவே இருக்கும். ஆகவே நாம் வாழ்க்கை வரலாறுகளையே எழுதவில்லை.
தமிழில் பாரதிக்குக் கூட ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு இன்னமும் இல்லை. வ.ரா, செல்லம்மாள் பாரதி, கனலிங்கம், யதுகிரி அம்மாள் போன்றவர்களின் நினைவுக்குறிப்புகளே உள்ளன. புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன் எழுதியது ஒரு நினைவுக்குறிப்பு மட்டுமே. ஒரு நல்ல வரலாறு இனிமேல்தான் எழுதப்படவேண்டும். பிரமிள், அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி பொருட்படுத்தும்படியான நினைவுப்பதிவுகள்கூட ஒன்றிரண்டுதான். புகழ்மொழிகள் மட்டுமே இருந்தன என்றாலும் கல்கி பற்றி சுந்தா எழுதிய வாழ்க்கை வரலாறு குறிப்பிடத்தக்க ஒன்றுதான். அப்படி ஒரு வாழ்க்கை வரலாறு எந்த நவீன இலக்கியவாதிக்கும் அமையவில்லை.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை ஏன் எழுதவேண்டும்? ஒன்று, அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு காலகட்டத்தின் சிந்தனைச்சூழலின் சித்தரிப்புதான். ஒரு காலகட்டத்தின் சிந்தனைச் சூழலின் மையமாகத் திகழும் ஒரு பெரும்படைப்பாளியின் வாழ்க்கையை எழுதுவது அக்காலகட்டச் சிந்தனையையே எழுதுவதுதான். சிந்தனைகளை மட்டும் அட்டவணையிட்டு தொகுத்து எழுதிவிடமுடியும்தான். ஆனால் அது கல்வித்துறை பணி, ஆய்வாளரின் உலகம். அடுத்தகட்டச் சிந்தனையாளனுக்கு அவை உதவாது. அவனுக்குச் சிந்தனைகள் முளைத்தெழும் சூழல், அதிலுள்ள தயக்கங்கள், சிக்கல்கள், இடறல்கள் தேவை. உணர்வுநிலைகள் தேவை. விவாதக்களம் தேவை. அவை உருவான உள்ளங்களின் சித்திரம் தேவை. அவற்றை அளிப்பவை வாழ்க்கைவரலாறுகள். இன்னும் ஒருபடி மேலாக நாவல்கள்.
நான் ஜெர்மானியச் சிந்தனைச்சூழல் உருவாகி வந்த வரலாற்றை தகவல்களாக பல நூல்களில் இப்போது நான் ஹம்போல்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். ஜெர்மானிய இயற்கைவாதம் உருவாகி வந்த சூழலை அறிந்தேன். ஆனால் தாமஸ் மன்னின் மேஜிக் மௌண்டைன் நாவலில் ஜனநாயகவாதச் சிந்தனைகள் உருவாகி வந்த சூழலில் நான் சென்று வாழ்ந்தேன். அந்த வேறுபாடு முக்கியமானது. ஒருவேளை கதைபடிக்கும் சாமானியர்களுக்கு அது உதவாமலிருக்கலாம். ஆனால் தீவிரவாசகர்கள், சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு மிகமிக அவசியம்
சுந்தர ராமசாமி பற்றிய என் நூல் அந்தக் காலகட்டத்தின் எண்ண ஓட்டத்தை அவருடைய தனிப்பட்ட சிந்தனைகள் வழியாகச் சித்தரிக்கிறது. மார்க்ஸியம், இருத்தலியல், ஜே. கிருஷ்ணமூர்த்தி, காந்தி என அவருடைய பயணம் அக்காலகட்டத்து அறிவியக்கத்தின் திசைவழியும்கூட. நான் கோவை ஞானி பற்றி எழுதிய ஞானி என்னும் நூலிலும் சரி, அந்த ஆளுமை அக்கால அறிவியக்கத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. இந்த தேவைக்காகவே முதன்மையாக எழுத்தாளர்களின் வாழ்க்கை எழுதப்படுகிறது.
இலக்கியவாசகனுக்கு இலக்கியம் என்பது ‘கதை’ அல்ல. ‘கருத்து’ அல்ல. அது அவனுக்கு வாழ்க்கைதான். வாழ்க்கைக்கு நிகரான இன்னொரு வாழ்க்கை. வாழ்க்கையை விடச் செறிவான வாழ்க்கை. அவ்வாழ்க்கையை நிகழ்த்துபவன் எழுத்தாளன். அவன் அகமே அவ்வாழ்க்கை நிகழும் களம். ஆகவே அந்த எழுத்தாளனைப் பற்றி அறிய எழுத்தாளன் ஆர்வம் கொள்கிறான். நல்ல எழுத்தாளனின் எழுத்து அவனுடைய கற்பனையில் இருந்து உருவாவது, ஒருபோதும் அவன் வாழ்க்கையின் நேரடிப் பிரதிபலிப்பு அல்ல. சொல்லப்போனால் தன் எழுத்தை தன் வாழ்க்கையின் நேரடிப்பதிவாக அல்லாமலாக்குவதே புனைவு என்பதன் முதன்மைச் சவால்.
தன்னை திட்டமிட்டு தன் புனைவிலிருந்து அகற்றிக்கொள்கிறான் எழுத்தாளன். புனைவின் சிக்கலான பின்னல்களுக்குள் தன்னை அவன் மறைத்துக்கொள்கிறான். ஆனாலும் அவனேதான் அப்புனைவில் திகழ்பவன். ஒரு புனைவிலுள்ள எல்லா கதைமாந்தரும் அப்புனைவெழுத்தாளனின் ஆளுமைக்கூறு கொண்டவர்களே. ஜானகிராமனின் பெண்கள் அனைவரிலும் ஜானகிராமனே வெளிப்படுவதை வாசகன் உணரமுடியும்.
ஆகவே எழுத்தாளனின் வாழ்க்கை வாசகனுக்கு முக்கியமாகிறது. கதை படிக்க அல்ல. கருத்தை தெரிவிக்க அல்ல. புனைவெனும் வாழ்க்கையின் ஆழத்தை அறிய. அதன் மெய்மையை உணர. நல்ல இலக்கியவாசகன் அப்புனைவெழுத்தாளனுடன் மானசீகமான உரையாடலில் இருந்துகொண்டே இருக்கிறான். நான் டால்ஸ்டாயுடன் இக்கணம் வரை உரையாடிக்கொண்டே இருக்கிறேன். ஆகவே அவருடைய எல்லா வாழ்க்கை வரலாறுகளையும் தேடித்தேடிப் படிக்கிறேன். எனக்கு அவர் சென்றநூற்றாண்டு ஆளுமை அல்ல. வெறும் கதை எழுதியவர் அல்ல. என்னுடன் வாழ்பவர். இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர்.
எழுத்தாளர்களின் வாழ்க்கை அதன்பொருட்டே எழுதப்படுகிறது. நினைவுகள் பதிவுசெய்யப்படுகின்றன. அந்நினைவுகள் எந்த அளவுக்கு நுணுக்கமாகின்றனவோ அந்த அளவுக்குச் சிறிய தகவல்கள் கொண்டவையாக இருக்கும். அந்த எழுத்தாளனின் அகத்தையும் புறத்தையும் அவன் சூழலையும் வாசகன் நேரில் சென்று வாழ்ந்து அறிவதுபோலக் காட்டக்கூடியவையாக இருக்கும். வாழ்க்கை வரலாறுகள் அந்த நினைவுப்பதிவுகளை ஒட்டியே விரித்தெழுதப்படுகின்றன.
ஜெ
சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை ஓர் ஒளிர்விண்மீன் சு.ரா – கடிதம் நினைவுகளால் அள்ளப்படுவது
இவான் கார்த்திக்
இவான் கார்த்திக்கின் முதல் படைப்பான கடுவா சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நாவல் பவதுக்கம் 2022-ல் வெளியானது.
மெய்ஞானமும் இன்றைய ஞானமும்
என் வாழ்க்கையின் மொத்தப்பார்வையையும் மாற்றியமைத்தது நீங்கள் ஆற்றிய கீதை உரை. அதை இப்போது நூலாகவும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னை மீட்டமைத்த புத்தகம் அது.
என் வாழ்க்கையில் பல சிக்கல்கள். தொழில்வீழ்ச்சி. அதையொட்டி குடும்பச்சிக்கல்கள். மனம் சோர்ந்து எதிலும் பிடிமானமில்லாமல் இருந்தேன். எனக்கு மரபான மதம், பக்தி எதுவுமே ஒத்து வரவில்லை. அவையெல்லாமே வெறும் சடங்குகளாகப் பட்டன. என் தர்க்கபுத்தியை அவை சீரமைக்கவில்லை. என் வாழ்க்கைக்கான பொறுப்பை ஏதோ ஒரு கண்காணா சக்தியிடம் ஒப்படைத்துவிட்டுச் சும்மா இருப்பதும் சரியாகப்படவில்லை.
அப்போதுதான் கீதையுரையைக் கேட்க நேர்ந்தது. எங்கே என் கடமை இருக்கிறது, அதன் எல்லை என்ன, எங்கே நான் பிரபஞ்ச சக்தியிடம் என்னை அளிப்பது என்ற கோடு அந்த உரையிலேதான் தெளிவடைந்தது. என்னை நம்பவேண்டும், ஆனால் என்னை மட்டுமே நம்பி அகங்காரம் கொள்ளவும் கூடாது. நீங்கள் ஓரிடத்திலே சொல்வதுபோல வாளை இறுகப்பிடிக்கவேண்டும், அது கையை விட்டு நழுவிவிடக்கூடாது, ஆனால் மிக இறுக்கமாகவும் பிடிக்கக்கூடாது, அடி கையிலேயே விழும்.
அந்த ஞானம் என்னை மீட்டது. என் வேலையை முழுவேகத்துடன் செய்ய ஆரம்பித்தேன். அதிலே சலிப்பு இல்லாமல், சோர்வு இல்லாமல், செய்யவேண்டியதைச் செய்தேயாகவேண்டும் என்னும் பிடிவாதத்துடன் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சரியாகிவிட்டது. இன்றைக்கு மீண்டு வந்துவிட்டேன். ஆனால் இன்று எல்லாம் என் சாதனை என்ற திமிர் இல்லாமல் இருக்கிறேன்.
இங்கே வாழ்வதற்கு நமக்கு லௌகீகம் தேவை. உலகவெற்றி தேவை. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. அதற்கப்பால் நாம் யார் என்பதும் நமக்கு முக்கியம். இங்குள்ள மிகப்பெரிய ஒரு பிரவாஹத்திலே நாம் எங்கே உள்ளோம் என்ற ஒரு புரிதலும் முக்கியம்.
நீங்கள் நாவலாசிரியர். நிறைய எழுதுகிறீர்கள். ஆனால் இந்த ஆன்மிக நூல்கள் நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய கொடை. இதை எத்தனைபேர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று உண்மையில் தெரியவில்லை. பலர் இவற்றைப் படிப்பதே இல்லை. நீங்கள் எழுத்தாளர் என்ற நிலையில் நின்று இவற்றை எழுதுவதனால் உங்களை எழுத்தாளராக மட்டுமே பார்க்கிறார்கள். இவற்றை நீங்கள் ஒரு காவியை கட்டிக்கொண்டு, தாடி வளர்த்துக்கொண்டு சொல்லியிருந்தால் மாபெரும் மெய்ஞானமாகக் கொண்டாடியிருப்பார்கள்.
நம் ஆன்மிக குருக்கள் எல்லாம் மகத்தானவர்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் பல எல்லைகள் உள்ளன. அவர்களால் நம் அன்றாடவாழ்க்கையை அமைத்துள்ள அறிவியல் மற்றும் சிந்தனைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்வது வேறொரு உலகிலுள்ளது. நீங்கள் அறிவியலும் நவீனச்சிந்தனையும் கற்ற ஒருவனின் தர்க்கத்துக்கு உகந்த் முறையின் நம்முடைய தொன்மையான மெய்ஞானத்தைச் சொல்கிறீர்கள்.
உங்களுக்கு என் வணக்கம்.
ஆர். ராமநாதன்
அன்புள்ள ராமநாதன்,
உண்மையில் தாடி– காவி எல்லாம் உண்டு. எனக்கல்ல, என் ஆசிரியருக்கு. நான் அவர் குரல்.
ஜெ
ரவி மோகனின் பிரோ கோட். ஒரு கடிதம்
ரவி மோகன் நடிக்கும் ஒரு படத்தின் டீசர் காணொளியை அண்மையில் பார்த்தேன். என் வாழ்க்கையின் சித்திரம் போலவே இருந்தது. திருமணம் என நான் ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கிக்கொண்டேன். நான் ஒரு மனிதன். 29 வயது வரை சுதந்திரமாக வாழ்ந்தவன். எனக்கான சிந்தனை, உணர்வு எல்லாம் உண்டு என்றே என்னுடைய மனைவியால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ரவி மோகனின் பிரோ கோட். ஒரு கடிதம்The speech on the Vairamuthu debate is intriguing and inspiring. We are baiting a person if we find him against our faith. However, we do not perceive anything negative when a person shares our faith, even if they trivialize our books and philosophy.
September 12, 2025
எங்கே அந்த ஓநாய்?

அன்புள்ள ஜெ,
அண்மையில் லோகா -சந்திரா 1, சினிமாவை ஒட்டி உங்களுடைய நீலி- யட்சி கதைகளைப் பற்றி நண்பர்களிடையே ஓர் ஆர்வம் உருவாகியது. ஆகவே பல கதைகளைப் பற்றி பேசினோம். எத்தனை ஆற்றல் கொண்ட கதைகள் என்னும் எண்ணம் உருவாகியது. குறிப்பாக ஓநாயின் மூக்கு. ஒரு அற்புதமான சினிமாவாக ஆகியிருக்கும், இன்னொரு நாட்டில் என்றால். இங்கே நாம் சினிமாவைப் பற்றிப் பேசுவோம், சினிமா எடுக்க மாட்டோம். இங்கே சினிமா நடிகர்களின் கைகளில் உள்ளது. அவர்கள் அவர்களுக்காக குக் செய்யப்படும் கதைகளை மட்டும்தான் ஓகே சொல்வார்கள். சினிமா உலகில் எட்டாண்டுகளில் நான் கற்றுக்கொண்ட உண்மை இது.
நான் அந்த ஓநாயின் மூக்கு கதையை மீண்டும் வாசித்தேன். அதில் தொடக்கத்தில் ஔசேப்பச்சன் ஒரு உண்மையான சமகால கேஸ் சொல்லி, அதை ஒட்டி ஒரு நினைவைச் சொல்கிறார். கேரளத்தில் கரமனை பகுதியிலுள்ள கூடத்தில் என்ற மிகப்பெரிய குடும்பத்தில் அத்தனைபேரும் வரிசையாக கொல்லப்பட்ட வழக்கு அது. முழு சொத்தும் ரவீந்திரன் நாயர் என்ற காரியஸ்தன் பெயருக்கு மோசடியாக மாற்றி எழுதப்பட்டுள்ளது. கடைசியாக ஜயகிருஷ்ணன் என்பவர் சாவில் சந்தேகம் எழுந்தபோதுதான் சொத்துக்களை ரவீந்திரன் நாயர் விற்றிருப்பது தெரியவந்தது. பெரிய பரபரப்பை 2019ல் உருவாக்கிய வழக்கு இது.
ஓநாயின் மூக்கு கதையில் ஔசேப்பச்சன் இப்படிச் சொல்கிறார். “இப்போது விசாரணை எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா?… விசாரணை நிலையில். ஆனால் விசாரணை பல ஆண்டுகள் இழுக்கும். அதன்பிறகு எவருக்கும் நினைவிருக்காது. அப்படியே போகும். எந்த நிலையிலும் ரவீந்திரன் நாயர் தண்டிக்கப்படமாட்டார். ஆனால் முக்கால்வாசிச் சொத்துக்கள் அவரிடமிருந்து கைமாறப்படும், அவ்வளவுதான் வேறுபாடு”.
உண்மையிலேயே அப்படியே அந்த வழக்கு தேங்கிவிட்டது. சாட்சிகள் தடம் மாறிக்கொண்டிருந்தனர். வழக்கை போலீஸ் அப்படியே மூடிவிடவே முயல்கிறது. சொத்துக்களின் மதிப்பு 200 கோடிக்குமேல் என்கிறார்கள். அதெல்லாம் உரியமுறையில் கைமாற்றம் செய்யப்பட்டிருக்கும். ஒரு போலீஸ் அதிகாரி அந்த நிலத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸே கட்டியிருப்பதாக ஔசேப்பச்சன் சொல்கிறார்.
இதேதான் பலிக்கல் கதையைப் பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. அந்த பழி உண்மையில் உண்டா? ஒரு பரிதவிப்புதான் ஏற்பட்டது. எப்போதும் சரித்திரம் இப்படித்தான் செல்கிறது. உண்மையில் ஓநாயின் மூக்கு தொடர்ந்து வருகிறதா என்ன?
இரா.வேல்முருகன்
அன்புள்ள வேல்முருகன்,
இலக்கியம் அன்றாடயதார்த்தத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால் அதன் பேசுபொருள் அன்றாடம் அல்ல. அன்றாடம் கடந்த ஓர் அர்த்தம் உண்டா என்று அது தேடிச்செல்கிறது. நாம் இங்கே வாழும் வாழ்க்கை என்பது ஒன்றோடொன்று தொடர்பற்ற நிகழ்வுகளாலான ஒரு பெரும் பெருக்கு. அதில் உயிர்கள் ஒன்றையொன்று வென்றும் கொன்றும் தாங்கள் வாழவும், தங்கள் வாரிசுவரிசை பெருகவும் போட்டியிடுகின்றன. இதற்கப்பால் இங்கே உள்ள வாழ்வுக்கு ஏதேனும் பொருள் உண்டா? இந்த கண்கூடான பரப்புக்கு அடியில் இந்நிகழ்வுகள் ஏதேனும் வகையில் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளனவா? இந்த உதிரிப்புள்ளிகளுக்கு அர்த்தமளிக்கும் ஒரு அடித்தள நெசவுப்பரப்பு உண்டா?
இலக்கியத்தின் தேடல் எப்போதும் அதுதான். அப்படிச் ஓர் இணைப்புவலை இருந்தது என்றால் அது நம் எளிய அறிவுக்கு முழுமையாக அறியக்கூடுவதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி பல இணைப்புவலைகள் உண்டு என்றும், அவற்றின் ஒத்திசைவில் பெருந்திட்டங்கள் வெளிப்படுகின்றன என்றும் அறிவியல் காட்டியிருக்கிறது. இங்குள்ள உயிர்களெல்லாமே உயிர்களின ஒத்திசைவு என்னும் பெருந்திட்டத்திற்குள்தான் உள்ளன. டி.என்.ஏ என்னும் மாபெரும் திட்டம் உயிர்வலைக்கு அடியிலுள்ள அறியாப் பெருந்திட்டம். பிரபஞ்சத்தின் கால-வெளி இணைவு ஒரு பெருந்திட்டம். நுண்துகள்களின் மின்னேற்பும் விலக்கமும் உருவாக்கும் இன்னொரு மாபெரும் திட்டம். அதைப்போல இங்கே நிகழும் மானுடத்தின் செயல்கள் மற்றும் விளைவுகளாலான ஒரு நுண்ணிய பெருந்திட்டம் உண்டா? இங்குள்ள மானுடத்துயர்களுக்கான காரணம் என ஏதேனும் உண்டா?
மெய்யியல் அதைக் கண்டடைந்து முன்வைக்கிறது. அது கிருஷ்ணனோ , வர்த்தமானரோ, புத்தரோ, ஏசுவோ, நபியோ வள்ளுவரோ ஏதோ ஒருவகையில் அதைச் சொல்லியிருக்கிறார்கள். ஊழ் என்றோ, இறைநெறி என்றோ ஏதோ ஒரு சொல் அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் அதை நுணுக்கமான அக அறிதல்களாக உணர்கிறது. அந்த அறிதல்புள்ளிகளை தன் கற்பனை வழியாகக் கோலமாக பின்னி விரித்துக் காட்டுகிறது. திரும்பத் திரும்ப உலக இலக்கியங்கள் அனைத்தும் காட்டுவது ‘வாழ்க்கை ‘அர்த்தமற்றதற்செயல்களின் பெருக்கு அல்ல’ என்பதைத்தான். அதற்கொரு காரண-காரிய தொடர்பு உண்டு என்பதைத்தான். அது புனைவு என நான் நினைக்கவில்லை, அது மெய்மையின் புள்ளிகளைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு நெசவு என்றே நினைக்கிறேன்.
ஆகவே ஓநாய் உண்டு, அது கொஞ்சம் பொறுமையானது. சட்டென்று வந்துவிடாது. ஆனால் அது விடவே விடாது.
ஜெ
குமரித்துறைவி வாங்க வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க வாசிப்பின் வழிகள் வாங்க ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க மைத்ரி நாவல் வாங்க ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க கதாநாயகி ஆன்லைனில் வாங்க ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க அனல் காற்று ஆன்லைனில் வாங்க வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க ஞானி ஆன்லைனில் வாங்க நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க விசும்பு ஆன்லைனில் வாங்க வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க

சுசித்ரா
தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். சுசித்ராவின் ‘ஒளி’ சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.
நூல்கள்
ஒளி (2020, யாவரும் பதிப்பகம்) – சிறுகதைத்தொகுப்புThe Abyss (2023, Juggernaut Books) – எழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கம்சுசித்ரா
தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். சுசித்ராவின் ‘ஒளி’ சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.
நூல்கள்
ஒளி (2020, யாவரும் பதிப்பகம்) – சிறுகதைத்தொகுப்புThe Abyss (2023, Juggernaut Books) – எழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கம்அறம், ஒரு சிறுவனின் மதிப்பீடு
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் எழுத்துக்களைப் பல வருடங்களாக வாசித்து வருகிறேன். உங்கள் படைப்புகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில், எனது மகனுக்கு உங்கள் ‘அறம்‘ சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Stories of the True’ புத்தகத்தைப் பரிசளித்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்ததால், அவனுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. அவனுக்குத் தமிழ்ப் படைப்புலகத்தின் அழகையும் ஆழத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
இந்தப் புத்தகத்தை வாசித்து அவன் மிகுந்த உற்சாகமும், உத்வேகமும் அடைந்தான். உங்கள் கதைகளைப் பற்றி என்னிடம் பல நேரம் மனம் திறந்து பேசினான். இந்தப் புத்தகத்தைப் பற்றிய தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு விமர்சனமாக எழுதி, தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளான். அந்த விமர்சனத்தை இந்த இணைப்பில் காணலாம்:
https://iwashereyousee.blogspot.com/2025/09/book-review-stories-of-true-by-jeyamohan.htmlஇத்தகைய அற்புதமான படைப்பை உலகிற்கு அளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி, இப்படிக்கு,
ஶ்ரீராம், துபாய்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers