பே ஏரியா நிகழ்ச்சிகள் பற்றி
அன்புள்ள ஜெயமோகன்,
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நீங்கள் அமெரிக்கா வருவது பழக்கமாகி விட்டது. வாசகர் சந்திப்புகளில் மட்டும் உங்களை சந்தித்துக் கொண்டிருந்தேன். இம்முறை சாரதா /பிரசாத் வீட்டில் நடந்த சந்திப்பு, பார்ன்ஸ் அண்ட் நோபில் சந்திப்பு, நாவல் பயிற்சி வகுப்பு என்று பல நிகழ்வுகளில் உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. சென்ற வருடம் உங்கள் வாசகர் சந்திப்பிற்கு பிறகு நண்பர்கள் தொடங்கிய புத்தக வாசிப்பு குழு இன்னும் அதே உற்சாகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் நான் சக வாசகர்களை சந்திப்பது மிக கொண்டாட்டமான நிகழ்வாக அமைகிறது. அதற்காகவும் உங்களுக்கு நன்றி. அதனை இன்னும் சிறப்புடன் நடத்த நீங்கள் அளித்த அறிவரைகளை செயல்படுத்த முயல்கிறோம்.
உலகில் தற்போதுள்ள தலை சிறந்த எழுத்தாளர்களில் நீங்கள் ஒருவர் என்று தயக்கமின்றி கூற முடியும். உங்களை போன்ற ஒருவருடன் அணுக்கமாக இருந்து, நாவல்கள் எழுதுதல் பற்றி ஒரு நாள் அருகில் இருந்து கற்க முடியும் என்பது அற்புதமான விஷயம். இப்பயிற்சி வகுப்பில் பங்கு பெற விசு அழைத்தபோது எப்படியேனும் பங்கு பெற்றிட வேண்டும் என்று எண்ணினேன். முடிந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.
நாவல் ஏன் எழுத வேண்டும் என்று தொடங்கிய வகுப்பு, நாவல் எழுதுவதில் உள்ள craft, நாவல் தொழில்நுட்பம் போன்றவற்றை தொட்டு சென்றது. வகுப்பு முழுதும் வேறு பல நாவல்களை எடுத்துக்காட்டியது உங்கள் வகுப்பை மேலும் புரிந்து கொள்ள உதவியது. 1000 பக்கம் எழுதி பாருங்கள் என்று நீங்கள் கூறியது மிகவும் சிந்திக்க வைத்தது. உங்களுடைய தொடர் பயணங்களுக்கு நடுவில் நீங்கள் இவ்வகுப்பை எடுத்ததற்கு மிக்க நன்றி. பண்டோராவின் பெட்டியை திறந்து விட்டீர்கள். பல புது நாவலாசிரியர்கள் இவ்வகுப்பு மூலம் உருவாகி வருவார்கள் என்று உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கிறேன். மேலும் பூன் முகாமில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்.
அன்புடன்,
பரத்.
பி.கு. எங்கள் குழுமத்தில் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா நண்பர்கள் இணைய விரும்பினால், vishnupurambayarea@gmail.com முகவரிக்கு ஈமெயில் அனுப்பி குழுமத்தில் இணையலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

