Jeyamohan's Blog, page 17

November 2, 2025

விவாதங்களை எவரிடம் செய்யலாம்?

இன்றைக்கு சமூகவலைத்தளங்கள் அளித்துள்ள வசதி விவாதக்களம்தான். நாம் நம் கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கலாம். ஆனால் எவரும், எவருடனும், எப்படியும் ,எதைப்பற்றியும் விவாதிக்கலாம் என்பதைப்போல அபாயம் வேறில்லை. அது மிகப்பெரிய பொறி. இந்த பொறி 2000த்தில் இணையம் பரவலானபோது chat room என்னும் வசதி உருவானபோதே தொடங்கிவிட்டது. அன்றே அதன் அபாயத்தை உணர்ந்து விலகியமையால்தான் என்னால் நான் எண்ணியவற்றை ஈடேற்ற முடிந்தது. விவாதிக்கலாமா? விவாதிக்கலாம். ஆனால் எவருடன், எப்போது, எதைப்பற்றி?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2025 10:36

அஜித் சொல்லும் ‘சாமானியனின் காழ்ப்பு’

சாமானியனின் காழ்ப்பு வசைபட வாழ்தல் “நானும் ஒரு ஆளுதான்!”

அஜித்தின் இந்த பேட்டியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் உறுதியாக முதிர்ச்சியான, நிதானமான பேட்டியாகவே இருக்கும் என நான் அறிவேன். இந்த சிறிய செய்தித்துண்டை இணையத்தில் இருந்து ஒரு நண்பர் வாட்ஸப் செய்தியாக வைத்திருந்தார். அதைப் பார்த்தேன்.

நான் நீண்டகாலமாகச் சொல்லிவரும் ஓர் உளவியல் இது. இதை பல புகழ்பெற்ற நடிகர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதை அறியாத எந்த நடிகரும் இல்லை. ஆனால்  எந்த  நடிகரும் அதை இப்படி வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் அஜித் சொல்லியிருக்கிறார், அவரை அறிந்த சினிமாக்காரர்களுக்கு அவர் சொன்னதில் ஆச்சரியமும் வரப்போவதில்லை.

பொதுவாக நடிகர்கள் ரசிகர்களிடமிருந்து விலகி எச்சரிக்கையாகவே இருப்பார்கள். ஆனால் ரசிகர் பற்றி பேசினால்  முற்றிலும் வேறொரு உணர்ச்சிப்பிரவாகமே வெளிப்படும். அதுதான் சினிமாத் தொழிலுக்கும் தேவை. நானே  படங்களுக்காக எழுதுபவன் என்றவகையில் ஒரு ஹீரோ அப்படித்தான் சொல்லவேண்டும் என்றே ஆலோசனை சொல்வேன், ஏனென்றால் ரசிகர்கள் விரும்புவது அதுவே.  அப்படி ஒரு நடிகர் ‘என் ரசிகச்செல்லங்களே’ என்று நெக்குருகினால்தான் சாமானியர் மகிழ்வார்கள். அதுதான் நடிகரின் புகழுக்கு நல்லது. தமிழ்சினிமாவில் சினிமாவை ஓடவைக்கும் ஒரே சக்தி நடிகரின் புகழ்தான். ஒரு நடிகர் இப்படி உண்மையைச் சொன்னால் அவர் கொஞ்சம் ரசிகர்களைத்தான் இழப்பார்.

தமிழகத்தின் உண்மையான பெரும்புகழாளர்கள், அதாவது Celebrityகள் நடிகர்கள் மட்டும்தான். வேறு எவரும் அல்ல. சினிமா சாராத அரசியல்வாதி எவரும் பெரும்புகழாளர் அல்ல. அரசியல்வாதிகள் மேல் அச்சமும், அவர்களின் அதிகாரம் காரணமான மதிப்பும் உள்ளது. சினிமாவிலுள்ள இயக்குநர் போன்ற பிறர் புகழ் கொண்டவர்கள், அவ்வளவுதான், பெரும்புகழாளர்களோ வழிபடப்படுபவர்களோ அல்ல. இசை, இலக்கியம், ஓவியம் என பிற துறைகளில் சினிமா சாராத எவருமே தமிழில் எவருமே புகழ்பெற்றவர்கள்கூட அல்ல. எழுத்தாளனாக நான் எந்தப்புகழுமற்றவன். சினிமாக்காரனாக என்னை கொஞ்சபேர் அறிந்துள்ளனர். தமிழகத்தில் கல்லூரிகளின் விழாக்களிலேகூட என்னை பொன்னியின் செல்வன் வசனகர்த்தா என்றே அறிமுகம் செய்வார்கள். அது புகழ் அல்ல.

ஆனால் நடிகர்களுக்கு உள்ள அந்தப் பெரும்புகழ் எப்படிப்பட்டது? அது வெறும் வழிபாடு மட்டும்தானா? இங்கே வழிபாட்டுணர்வு உள்ளது. அதில் ஐயமே இல்லை. ஏனென்றால் இங்கே ஒரு சாமானியனிடம் வந்துசேரும் சாமானியன் அல்லாத ஒரே ஆளுமை நடிகர்தான். சாமானியர் சினிமா அன்றி எதையுமே கவனிப்பதில்லை. எல்லா ஊடகங்களிலும் சினிமா மட்டுமே பேசுபொருள். சினிமா என்பது நடிகர்களைச் சார்ந்தது. இன்றைய அகலத்திரையில் ஒரு ‘குளோஸப்’ காட்சி ஓர் அசல் முகத்தை இருநூறு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிறது. அத்தனை அணுக்கமாக நாம் நேர்வாழ்க்கையில் எந்த முகத்தையும் பார்ப்பதில்லை. அந்த நடிகரின் கண்கள் அளவுக்கு நாம் அறிந்த இன்னொரு கண்கள் இருக்காது. நம் மனைவியின், கணவரின் கண்கள்கூட. அந்தக் குரல் நம்மைச்சூழ்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழ்ச்சாமானியருக்கு இசை, இலக்கியம், அரசியல் எல்லாமே சினிமா வழியாகத்தான். இன்னொரு ஊடகமே இங்கே இல்லை. ஆகவே அவர் அறியும் அனைத்துக்கும் முகம் என்பது நடிகருடையதுதான். ஒரு சாமானியர் எப்போதும் பெரிய விஷயங்களுக்காக தேடிக்கொண்டிருக்கிறார். அசாதாரணமானவற்றுக்காக, அசாமானியமானவற்றுக்காக தவிப்புடன் இருக்கிறார். ஏன்? நாமனைவரும் அறிந்ததே. நம் அந்தரங்கப் பகற்கனவில் நாம் சாமானியர் அல்ல. நம் பகற்கனவுகள் எல்லாமே நுகர்வின்பம், ஆணவநிறைவின் இன்பம் ஆகிய இரண்டாலும் ஆனவை இல்லையா? ஆகவே நம் பகற்கனவில் நாம் அதிமானுடர்கள். எதையும் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லையற்ற இன்ப நுகர்வு கொண்டவர்கள்.

அந்தப் பகற்கனவுகளை நாம் எப்படி உருவாக்கிக் கொள்வது? அதற்கு நமக்கு மெய்யான ‘ஹீரோக்கள்’ தேவையாகிறார்கள். அந்த ஹீரோக்களை பார்த்து அதேபோன்ற பகற்கனவுகளை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். உண்மையில் சினிமா என்பதே அதுதான். சினிமாக் கதாநாயகனுடான் சாமானியர் தன்னை இணைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் சாகசங்களை கற்பனையில் தாங்களும் செய்கிறார்கள். அவர்கள் அடையும் இன்பங்களை தாங்களும் அடைந்து திளைக்கிறார்கள். அவர்களின் வெற்றிகளில் தாங்களும் குதூகலிக்கிறார்கள். உலகமெங்கும் ஹீரோக்கள்தான் சினிமாவின் மையங்கள். அது ஜேம்ஸ்பாண்டாக இருந்தாலும் சரி, பேட்மேன் ஆக இருந்தாலும் சரி.

இளமையில் ‘ஹீரோக்கள்’ அனைவருக்கும் உண்டுதான். எனக்கு மிக இளமையிலேயே எழுத்தாளர்கள்தான் ஹீரோக்கள். விவேகானந்தர்தான் உன்னத மானுட உருவம். அதை நோக்கியே நான் நகர்ந்தேன். இன்றைய தமிழ் சாமானிய இளைஞருக்கு வேறெந்த பேராளுமையும் அறிமுகமாவதே இல்லை. நான் கல்லூரி மாணவர்களைச் சந்திக்கையில் அவர்களுக்கு ஒரேயொரு அறிவார்ந்த ஆளுமையைக்கூட தெரிந்திருக்கவில்லை என்பதையே காண்கிறேன். ஆகவே வேறுவழியே இல்லை, நடிகர்களே பேராளுமைகள் அவர்களுக்கு. வழிபட்டே வளர்கிறார்கள்.

ஆனால் அது வழிபாட்டுநோக்கு மட்டும் அல்ல. அதில் இன்னொன்றும் உள்ளது. அதைத்தான் அஜித் சொல்கிறார். அது ‘சாமானியனின் காழ்ப்பு’. Comman man’s grudge. சாமானியனுக்கு தான் சாமானியன் என தெரியும். தன்னால் அந்த எல்லையை கடக்கமுடியாதென்றும் தெரியும். ஆகவே எந்த அளவுக்கு வழிபாட்டுணர்வு உள்ளதோ அதற்கு நிகராகவே மறுபக்கம் அதே பெரும்புகழாளர்கள் மேல் காழ்ப்பும் உள்ளது. அவர்களை வசைபாடவும் வெறுக்கவும் அவன் விரும்புகிறான். நடிகர்கள் அதைச் சந்திக்கிறார்கள்.

கமல் அல்லது ரஜினி, அஜித் அல்லது விஜய் கொண்டாடப்படுவதாக நாம் நினைக்கிறோம். எண்ணிப்பாருங்கள், அதே அளவுக்கு அவர்கள் வசைபாடவும் படுகிறார்கள். தமிழகத்திலேயே அதிகவசைகளை பெறுபவர்களும் அவர்கள்தான். ஒருவரின் ரசிகனாக இருப்பதே இன்னொருவரை வசைபாட வழியமைக்கிறது. சாமானியனின் காழ்ப்புக்கு அது ஒரு ஆழமான வடிகால். இங்கே அதைநம்பியே மாபெரும் யூடியூப் தொழில்செய்பவர்கள் உண்டு. ஒரு பெரிய நடிகரின் படம் வந்தால் வசைபாடவேண்டும், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த நடிகரின் ரசிகர்கள் வந்து பார்த்து வசைபாடுவார்கள். விளைவாக ‘ஹிட்’ எகிறும், காசு வரும்.

அதைப்போன்ற ஒன்றே அந்த நடிகரைப் பார்த்ததும் அவரையே தாக்குவது. அப்படி தாக்குபவரும் ரசிகர்தான். தாக்கியபின் அவர் ஓர் அசாதாரணமான நிறைவுடன் ஓடிச்சென்று நண்பர்களிடம் சொல்வார். “பிளேடாலே ஒரே கிழி….நம்ம கோடு அவன் கையிலே இருக்கும்….” மற்றவர்கள் அவர் மேல் பொறாமைதான் கொள்வார்கள். தாஜ்மகாலில் கல்லால் கீறி பெயர் எழுதுபவன் அடையும் கிளர்ச்சிபோன்றது அது.

எம்.ஜி.ஆர் தன் கைகளுக்கு சட்டைக்குள் பாதுகாப்புச்சட்டை அணிந்திருப்பார் என்பார்கள். அவருடைய பாதுகாவலன் வராத ஒரு நாளில் அவர் திரையில் இன்றுமுள்ள ஒருவரிடம் தனக்குப் பாதுகாப்பாக பின்னால் வரும்படிச் சொன்னார் என்று அவர் என்னிடம் சொன்னார். எம்.ஜி.ஆர் வெளிவந்ததும் ‘தலைவா!” என்று ஆர்ப்பரித்தபடி கூட்டம் பாய்ந்தது. எம்ஜிஆர் தனக்கு பின்னால் வந்தவரை அப்படியே அள்ளி அவரையே கவசமாக்கியபடி காருக்குள் புகுந்துவிட்டார். அதற்குள் கன்னத்தில் ரத்தக் கீறல். உள்ளே சென்றதும் பார்த்தால் எம்.ஜி.ஆரின் மேல்கை முழுக்க ரத்தக்கீறல். “நகக்காயமா?” என்று இவர் கேட்டார். “இல்லை, பிளேடு ஆணி எல்லாம் கொண்டு வந்திருப்பாங்க” என்றபின் எம்.ஜி.ஆர் காரிலேயே தயாராக வைத்திருந்த மருந்தை போட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வைச் சொன்னவரிடமிருந்தே சாமானியனின் காழ்ப்பு என்னும் சொல்லை தெரிந்துகொண்டேன். அது எனக்கு திகைப்பை அப்போது அளித்தது. ஆனால் அதன்பின் அதை மீண்டும் மீண்டும் காண்கிறேன். இந்த சாமானியனின் காழ்ப்பு என்பது இன்று சமூகவலைத்தள உலகம் வந்தபின் என்னைப்போன்ற மிகச்சிறிய அறிமுகவட்டம் கொண்டவனுக்கும் அனுபவமாகிறது. எனக்கெல்லாம் கூட்டம் நேரடியாக வராது. ஆனால் சாமானியர் இணையத்தில் ஒரு திரளாக ஆகமுடியும். அப்படி ஆகும்போது அவர்களின் காழ்ப்பு ஒருபக்கம் நடிகர்கள்போன்ற மெய்யான பெரும்புகழாளர்களுக்கு எதிராகச் செல்கிறது. அதன் ஒரு பகுதி என்னைப் போன்றவர்களை நோக்கியும் வருகிறது.

சாமானியர் தாங்கள் ஒருபோதும் அஜித் அல்லது விஜய் ஆகிவிடமுடியாது என அறிவார்கள். ஆகவே அஜித் அல்லது விஜய் மேல் அவர்களுக்கு காழ்ப்புதான் உருவாகிறது. ஆனால் சாமானியர்களில் சிலர் தாங்களும் எளிதாக எழுத்தாளன் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்களில் சிலர் எதையாவது எழுதியிருப்பார்கள். முகநூலில் எழுதுவதனாலேயே எழுத்தாளர் என நினைப்பவர்கள் உண்டு. அவர்கள் தாங்கள் செய்யக்கூடிய ஒன்றை செய்தே ஒருவன் எதையோ அடைந்துவிட்டான் என எண்ணுகிறார்கள். அவர்கள் கொள்வது காழ்ப்பு அல்ல எரிச்சல். அது மென்மையானது, ஆனால் விடாது எரிந்துகொண்டே இருப்பது. அது கொஞ்சம் பரவலாக அறியப்பட்ட அனைவருக்குமே கிடைக்கும்.

உண்மையில் சமூக ஊடக உலகம் இயங்குவதே அதற்காகத்தான். ஏதேனும் ஒரு காரணம் சொல்லி எப்போதும் ஒருவர் கடும் வசைபாடலுக்கு இங்கே ஆளாகிறார். அத்தனை சாமானியர்களும் ‘வாரந்தோறும் வசை’ என வாழ்கிறார்கள். ‘சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டோம்ல’ என பெருமிதமடைகிறார்கள். எத்தனை வெற்று வாழ்க்கை!

பாவம் அஜித், அவரை நேரடியாகவே கிழித்துவிட்டார்கள், அவ்வளவுதான்.

 

எரிதல் எரிதல் ஒரு கடிதம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2025 10:35

வி.அமலன் ஸ்டேன்லி

கவிஞர், புனைவெழுத்தாளர், அகவிழிப்பு தியான ஆசிரியர், நச்சுயியல் ஆய்வாளர். விலங்கு நல ஆர்வலர். தியானம் மற்றும் ஆன்மீகம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியுள்ளார். பௌத்த விபாசனா வகுப்புகளை நடத்தி வருகிறார்.

வி.அமலன் ஸ்டேன்லி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2025 10:32

கலிஃபோர்னியாவிலே…

 

இலக்கியம் என்பது மறைபிரதி (subtext) வழியாகத் தொடர்புறுத்துவது. சொல்லப்படாததே முக்கியமானது.” – ஜெ

 

2024 தத்துவ வகுப்பிற்கு பிறகு கடந்த ஒரு வருடமாக Bay area வில் நடக்கும் மாதாந்திர இலக்கிய கூட்டத்தில் பங்கேற்று வருகிறேன். ஒவ்வொரு மாதமும் இலக்கிய ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விவாதங்களிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். இந்த குழுவில் சேருவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட எழுத்து பாணியில் ஈர்க்கப்பட்டவுடன் அந்த எழுத்தாளரை மட்டுமே படிக்கும் வாசகியாக இருந்தேன். – அது சுஜாதா அல்லது ஜெயமோகன் – மற்றவர்களின் படைப்புகளை படிக்கும் எண்ணமே இருந்ததில்லை.

எனக்கு வாசிப்பது என்பது நேரத்தைப் பொறுத்தவரை ஒரு விலையுயர்ந்த பொழுதுபோக்கு -ஆனால் அது “விலையுயர்ந்ததா” அல்லது “மதிப்புமிக்கதா” என்பது நாம் கண்டு அடைவதை பொறுத்தது. ஆகவே நிறைய எழுத்தாளர்களை படிப்பதால் என்ன பயன் என்ற எண்ணம் இருந்தது. இந்த குழுவின் ஒருவராக இருந்து லா.சா.ரா, கு.பா.ரா, மௌனி , புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி , தி.ஜா, சு.ரா & கி.ரா போன்ற எழுத்தாளர்களை படித்தது பலவிதங்களில் என் வாசிப்பை மேம்படுத்தியதோடு எத்தனை கண்ணோட்டங்களின் பன்முகத்தன்மையை இவ்வளவு காலம் தவறவிட்டேன் என உணரவைத்தது.

ஒரு சிறந்த உதாரணம் ப.சிங்காரம் அவர்கள் எழுதிய  புயலிலே ஒரு தோனி. இது ஒரு கிளாசிக் என்றாலும், முதல் சில பக்கங்களை கடக்க மிகவும்  சிரமப்பட்டேன். எங்கள் குழு நண்பர்களுடன்  விவாதங்களுக்குப் பிறகுதான் நான் அதை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஓரளவு புரிந்து கொண்டபின் பாண்டியனின் சாகச பயணங்கள், அதன் சரித்திர பின்ணணி , Classics மேல் அவனுக்கு இருந்த எள்ளல் கலந்த விமர்சனம்,  போர் மற்றும் வீரத்தின் அனர்த்தம்,  போர் முடிந்த பின் அந்த வீரனின்  மனநிலை என பல கோணங்களை ரசிக்க முடிந்தது.  மேலும், மற்ற எழுத்தாளர்களைப் படித்தத்தில்   ஜெ வின் படைப்புகளில்   இன்னும் ஆழமான வாசிப்பும்  உருவாகி  உள்ளது. புரிந்து கொண்டபின் இந்த படைப்பில் இருக்கும் Key Takeaway என்ன என்று இன்னும் தெளிவாக பார்க்க  முடிகிறது. எங்கள் அடுத்த விவாதத்தை எப்போதும் எதிர்நோக்குகிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது என்று என்னால் நம்ப முடியவில்லை!  

இம்முறை ஜெ  மற்றும் அருண்மொழி அவர்களின்  வருடாந்திர அமெரிக்கப் பயணத்தை  கூடுதல் ஆவலோடு எதிர் நோக்கி இருந்தேன். காரணம்  இந்த முறை என் வாசிப்பு கடந்த வருடத்தை விட பக்குவப்பட்டு  இருந்தது.  மற்றும் ஜெவின்  நெடு நாள் வாசகராகிய என் அன்னையும் உடனிருந்தார்.    நானும் என் அன்னையும்,  லிவர்மோரில் சாரதாவின் இல்லத்தில் நடந்த நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொண்டோம். நாங்கள் உள்ளே   நுழையும் போது, பயணக்  களைப்பின்றி   மிகுந்த உற்சாகத்துடன் கல்வி முறைகள்  குறித்து விளக்கிக் கொண்டு இருந்தார். 

பின்னர் அசோகமித்திரனின் கதைகளை மற்ற குழு நண்பர்களோடு  விவாதித்தோம்!  நாங்கள் விவாதித்த மூன்று கதைகளின்  முடிவிலும் ஜெ இறுதியாக தன் கருத்தை தெரிவித்தார். அசோகமித்திரனின் மெல்லிய நகைச்சுவை மற்றும் அவரோடு  உரையாடியதையும்  பகிர்ந்து கொண்டார்!  கதைகள் குறித்த அவர்  கருத்து முற்றிலும் புதியதாக நாங்கள் சிந்திக்காத  கோணத்தில் இருந்தது. விவாதத்தின் முடிவில் காந்தி கதையின் நாயகனின் மனம் முழுக்க பரவி இருந்த சுய கசப்பு அவன் காண்பது அனைத்திலும் வெளிப்படுவதும் ,  ஐநூறு கோப்பை தட்டுகள் கதையின் சையத் மாமாவின் கையாலாகாத்தனம், தன் ஆற்றாமை மேல் அவருக்கு இருந்த அளவுகடந்த  கோபம்,  நகல் நாயகி பார்வதியிடம்  வெளிப்பட்ட மிக சாதாரண தன்மை பின்னர்  அவளுக்கு ஏற்படும் மின்னல் கீற்று போன்ற  மெல்லிய   மனமாற்றம்  ஆகியவற்றை மேலும் அன்னியோன்னியமாக  உணரமுடிந்தது . சாதாரண  மனிதனின் நிலைமை , அவன் அல்லாடும் அன்றாட வாழ்க்கை குறித்த ஒரு தரிசனம்  என அவர்கள் செயலின் பின்னே இருக்கும் காரணங்கள் விளங்கியதால்  முக்கிய கதாபாத்திரங்களின் மேல் இறுதியாக கருணையே மேலோங்கியது. இது முழுமையான வாசிப்பா  என்று தெரியாது ஆனால் அனுபவித்து அறிந்தது. 

“இலக்கியம் என்பது நாம் வாசித்து அடையும் வாழ்க்கை, வாழ்க்கையை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்படியே இலக்கியத்தையும் புரிந்துகொள்வோம்” – ஜெ.  இலக்கியத்தை புரிந்து கொள்ள பழகும் போது நம் வாழ்க்கையை இன்னும் ஆழமாக ரசிக்க  முடிகிறது என்பது நான் புரிந்து கொண்டது . நண்பர்களுடன்  ஆழ்ந்த விவாதம் மற்றும் ஆசிரியரின் துணையாலே இது சாத்தியமானது. இறுதியில் முத்தாய்ப்பாக, ஏழு நிமிடத்தில் எப்படி சுவாரசியமாக  உரையாற்றுவது என்பது குறித்தும் மற்றும் ஒரு வருடமாகி இருந்த எங்கள் Bay area குழுவை  எப்படி முன்நகர்த்துவது என்பது பற்றியும் சிறப்பான  உரை நிகழ்த்தினார்.  தீரா மலைப்புடனே பார்த்துகொண்டு இருந்தேன்.

மறுநாள் காலை Book Signing Event சான் மடீயோவில் . நல்ல வரவேற்பு. சிறிய கேள்வி பதில் sessionக்கு பிறகு கிட்டதட்ட 50 பிரதிகளுக்கு கையெழுத்திட்டு அனைவரோடும் சிரித்தமுகத்தோடு சிறிய உரையாடல் நிகழ்த்தி புகைப்படம் எடுத்தபின்னர் Sacramento கிளம்பினார். சலிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். “செயல்களின் ஊடாக விடுதலை அடைதல்” என்பதை நேரில் காண்பது உற்சாகமாக இருந்தது.

24 மணி நேர விமான பயணம், காலையில்  சான் ஃப்ரான்சிஸ்கோவை சுற்றிப் பார்த்து , மாலையில் எங்களுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு , பின்னர் உரையாற்றி ,  எங்கள்  எல்லா  கேள்விகளுக்கும்  சற்றும் சலைக்காமல்  சட்டென்று தெளிவான   சமயோசிதத்துடன்   உரையாடும்  ஆசிரியரை அருகிலிருந்து  பார்க்க முடிந்தது ஒரு நிறைவான இனிய  மாலை. சாரதா, பிரசாத்துக்கு மனமார்ந்த நன்றி.

நன்றியுடன் 

–சுதா 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2025 10:31

பன்னிருகால் புரவி!

அன்புள்ள ஜெயமோகன்,

நலமே விழைகிறேன். டாலஸ் நண்பர்களின் இந்த வார சந்திப்பில் உங்களின் “ஈராறு கால்கொண்டெழும் புரவி” குறுநாவல் குறித்து விவாதித்தோம். அதற்கான என் வாசிப்பை தொகுத்து எழுதிக்கொண்டதை இங்கே பகிர்கிறேன்.

இந்த நாவலை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மனநிலைகளில் படித்திருக்கிறேன். அதில் நிறைந்திருக்கும் சித்தர் பாடல்கள் குறித்த அறிமுகமில்லாமையாலும் நாவல் நிகழும் தளம் மற்றும் கதாபாத்திரங்களின் மனவோட்டம் குறித்த சரியான புரிதல் இல்லாமையாலும் நாவல் சற்று அந்நியப்பட்டே நின்றது. ஆனால், வேறு சில எழுத்தாளர்களின் இதுபோன்ற படைப்புகள் கூட்டுவாசிப்பின் மூலம் திறந்து கொள்வதைக் கண்டும், தொடர்ச்சியாக சில வாரங்கள் வாசித்த நவீனத்துவ / யதார்த்த காலகட்ட சிறுகதைகள் நம்மில் சிலரிடம் தோற்றுவித்த ஒரு “போதாமை” உணர்வைக் களையவுமே இந்த குறுநாவலை பரிந்துரைத்தேன்.  

இம்முறை வாசித்தது சொல்புதிது வெளியிட்ட புத்தக வடிவில். அதன் முன்னுரையில், சித்தர்ஞானம் மற்றும் பாடல்கள் பகடிகளாக திருப்பப்பட்டுள்ளதையும், அது எல்லோருக்குமானதல்ல எனினும் அனைவருக்கும்  ரசிப்பதற்கான ஒரு வெளி இருக்கிறது என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வெளியை உத்தேசித்தே எனது இந்த வாசிப்பு அமைந்திருக்கிறது. 

மேலும், இந்தமுறை டாலஸ் நகர SOTT வெளியீடு தொடர்பான சந்திப்பில் “ஒரு கதை எழுத கதாபாத்திரங்களா, கருவா எது உங்களுக்கு முதலில் தோன்றும்?” என்ற சஹாவின் கேள்விக்கு “பொதுவாக, முதல் வரி. அதிலேயே அக்கதையின் திட்டமும், மொழியும், வடிவும் அமைந்துவிடும்” என்று பதில் சொன்னார் ஜெ. 

அந்நிகழ்வில் அவரிடம் கையெழுத்து பெற “எழுதுக” என்ற அவர் நூலை என் மனைவி எடுத்து வந்திருந்தார். அதை மறுநாள் புத்தக அடுக்கில் வைக்கும்முன் வெறுமே புரட்டிப் பார்த்த போது “கல்வியழித்தல் ” என்ற கடிதம் கண்ணில் பட்டது. அக்கடிதத்தில் ஜெ கூறுவது :   

“அறிந்த ஒன்றைக் கொண்டு புதியவற்றை அறிதல் எனும் முறை நடைமுறையில் உள்ளது. மூன்று அறிதல் முறைகள் பிரத்யட்சம், அனுமானம், சுருதி மற்றும் கூடுதலாக உவமை. ஆனால், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் இவ்வியல்பே பெரும் தடையாக அமையும் என்று சொல்லப்படுகிறது. பழைய அறிதல் நீட்சியாகவே எல்லாவற்றையும் ஆக்கிவிடும். ஆகவே, கல்வியும் கல்வியழித்தலும் இணைந்தே மேலே செல்ல முடியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் உவமை முள்ளை முள்ளால் எடுத்து இரண்டையும் வீசிவிட்டு நடத்தல்.

நாம் ஒன்றை அறியும்போது அக்கணத்தில் நாம் அறிவது அறியாமையையே. அந்த வெற்றிடத்தை நாம் உணரும்போது மட்டுமே புதிய அறிதல் சாத்தியமாகிறது. அந்த கல்வியழிதலுக்கு நாம் தயாராகவில்லை என்றால்தான் நம் அறிதல் தரைதட்டி நிற்கிறது. அதுவே மூடத்தனத்தின் உச்ச நிலை என்பது. பெரும்கல்வியாளர்கள் பெருமூடர்களாக ஆகும் தருணம் அதுதான்.”

இந்த மூன்று விஷயங்களையும் தொடர்புபடுத்தியே இந்நூலை நான் விளங்கிக்கொள்கிறேன். ஏனெனில், அப்படி ஒரு ஆள் தான் எம். சாஸ்தான்குட்டி பிள்ளை எம் ஏ, பி எட் .

எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்கு வெளியே ஒரு புறம்போக்கு நிலத்தை வாங்கி குடியேறும் அந்த முன்னாள் தமிழாசிரியர் அப்போது நீரோட்டம் அறியும் நிபுணர். எனினும், திருக்குறள் மேற்கோளுடன் தான் அப்போதும் பேசுகிறார். “கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்…“ அவருடன் பொதி சுமந்து வரும் கூலி வேலை செய்யும் ஞானமுத்தனுக்கு நீரோட்டம் குறித்து அவரளிக்கும் சொல் மூலம் திரைகள் விலக,  அவன் அறிதலே அவனாக அறிதலை அறிய அவனில்லாத ஒருமையில் “எல்லாமே ஒன்றுதான்” என்னும் பெரும் திறப்பை அடைகிறான்.

கதை காலத்தில் பின்னால் சென்று, சாஸ்தான் குட்டி பிள்ளையின் முன்னாள் வாழ்க்கையை காட்டுகிறது. புலவருக்குப் படிக்கும் போது சச்சிதானந்தம் பிள்ளையிடம் சைவ சித்தாந்தமும் சித்த மருத்துவமும் கற்கிறார். தீவிரமாக அதில் ஈடுபடும் அவர், தந்தையின் சொல் தட்டமுடியாமல் நாகம்மையை மணக்கிறார். கனமான பஞ்சபாஷாண தாலத்தை  தூக்கியதன் வியப்பில் தொடங்கிய அவர் ரசக்கட்டு கல்வி, துறவுத் திட்டம் எல்லாம் நாகம்மையால் “விளக்கை அணையுங்கோ”  என்று எளிதாக முடித்து வைக்கப்படுகிறது. அதன்பின் அவரின் தீவிரம் அவளில் மாறுகிறது. ஆனால், இதிலும் ஏற்கனவே கற்ற கல்வி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. மனைவிக்கும் அவருக்குமிடையே தமிழும் சித்தர்களும் அருணகிரியும் வந்துகொண்டேயிருக்கிறார்கள். மனைவியும் அதை விடுமாறு சொல்லிக்கொண்டேயிருக்கிறாள். ஆனாலும், அவர் அதை விட்டு விலகவேயில்லை.  இரண்டு வருடங்களுக்குப்பின் பிள்ளைப்பேற்றில் மனைவியும் குழந்தையும் இறந்தபிறகு கூட;  அதை சாராயமும் கஞ்சாவும் கூட ஒன்றும் செய்யமுடிவதில்லை. அவரின் சித்தாந்தமும் தமிழ் பாடல்களும் இருக்கும் சித்தம் தனியாகவே நிற்கிறது. சொற்கள் அலையடிக்கும் உள்ளதில் அவள் நினைவு வருவதில்லை. ஆனால், வந்ததும் எல்லாமே நின்றுவிடுகிறது. 

அவர் பணிபுரியும் பள்ளியில் கிணறுவெட்ட நீர்நோட்டம் பார்க்க வரும் சாமித்தோப்பு அய்யாவு நாடாரிடம் அவர் சொல்வதற்கு சாஸ்திரம் என்ன? கணக்கு என்ன? என்ற கேள்வி கேட்டு பிணங்கி வெகு அருகே ஆனால் வேறு இடத்தில் தோண்டச்  சொல்கிறார்.  எதுவும் அவர் மண்டையில் ஏறுவதில்லை – தோண்ட வரும் ஒட்டன் சொல்லும் கணக்கு (கல்லு குளுந்து காணுகில்ல) வெடிவைக்க வருபவன் சொல்லும் சாஸ்திரம்  (கந்தக நெடியில்லா, குளுமையில்லயே) உட்பட. அறிவும் அதன் மூலம் நிறையும் ஆணவமும் அடிபடும்போது திறந்து கொள்ளும் மனதோடு சென்று நாடாரிடமே பணிந்து தன் ஆதாரப்பிழை என்னவென்று கேட்பவரிடம் மீண்டும் சொல்லப்படுகிறது “சொல்லிலே சுகம் கண்டுபிட்டீரு”.  “படிப்பு நல்லதாகும். ஆனால், பாம்பு மாதிரி ஒரே திக்கில் போகணும். நண்டு மாதிரி நாலுதிக்கும் போகப்பிடாது” என்பவரிடம் நீர்நோட்டம் காணும் கலையை கற்கிறார். அடுத்த தீவிரம் தொடங்குகிறது.  

இதிலும் முன்னும் பின்னும் அலைந்து வித்தை கைகூடாமல் தவிக்கிறார். கம்பை செரித்துகொண்டால் தான் அறியமுடியும் என்னும் நாடாரிடம் கோவித்துக்கொண்டு விலகி பின் அவரிடமே சென்று அழுகிறார். “இழுக்காதிய பிள்ளே,  இழுத்தால் வராது. வானத்தைப் பார்த்தால் பூமியை அறியலாம்” என்கிறார் நாடார். அத்தகைய ஒரு கணத்தில் வித்தை கைவரப்பட்டு அதன் பின் நிற்க இடமில்லாமல் எட்டு நாட்கள் எல்லா இடத்திலும் நீரையும், விலங்குகள் பறவைகளில் பேசும் மொழி எல்லாம் புரிய குச்சியுடன் அலைந்து நாடாரிடமே மீள்கிறார். “செயிச்சாச்சுல்ல, தூக்கிப்போட்டுட்டு சோலி மயிரப்பாரும்” என்கிறார் நாடார். இதிலும் பிள்ளைக்கு இரண்டாவது மணி இவ்வாறாக அடிக்கப்படுகிறது. அதை மறுத்து,  தீவிரம் தாளாமையால் இதிலிருந்து அறுத்துவிடச் சொல்பவரிடம், இனி பின்னால் செல்லமுடியாது என்று கூறும் நாடார், மண்ணைப் பார்க்க வேப்பங்கம்பு இருக்கே, விண்ணைப்பார்க்க என்ன வைத்திருக்கிறீர் என்று முன்னே செல்ல வழிகாட்டுகிறார். அறிந்தவன் அமைய வேண்டும் என்கிறார். அவ்விரவில் அமைந்த நாடாரைக் கண்டும், பிள்ளை மேலும் மேலும் அலைகிறார்.   திருமந்திரத்திற்கு நிலத்தடி நீர் சார்ந்து ஒரு உரை எழுதுகிறார். விரிந்து பரவிக்கொண்டேயிருக்கிறது அவ்வுரை –  நண்டு மீதும் நாலு திக்கும் அலைகிறது. 

ஒன்பது வருடங்கள் இப்படிக்கழிய ஒருநாள் சடைமுடிச்சாமியை மலையில் சந்திக்கிறார். உப்பு இருக்கிறதா எனக்கேட்பவரிடம் உப்பு கொண்டு நடப்பதில்லை என்கிறார். உப்பில்லா பண்டம் குப்பையில் என்பவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். தன் வியர்வையில் இருந்த உப்பை உணர்ந்து திரும்பிச் செல்கிறார். அங்கு சாமி இல்லை. அந்த இடத்தை தான் குச்சியை கொண்டு அறிய முற்பட்டு ஆழத்தில் வீழ்ந்து சொற்களை இழந்து நான் என்ற சொல்லில் எஞ்சும் போது சாமி வருகிறார். “வீட்டுக்கு போமய்யா” என்பகிறார்.  மூன்றாவது மணி. ஆனால், பிள்ளை மாட்டேன் என மறுக்கிறார். சரி அப்படியெனில் வேறெங்கும் தாவாமல் அந்த ஓரிடத்திலேயே அமர்க  என்று கூறிவிட்டு அவர் நீங்கிச்செல்கிறார், “பல மரம் கண்ட தச்சன்” என்ற நக்கலுடன். பிள்ளை சடைமுடிச்சாமி அளித்த மாம்பழத்தின் கொட்டையை அங்கேயே நல்ல நீரோட்டமுள்ள இடம் பார்த்து விதைத்து விட்டு, அங்கேயமர்ந்து முதிர்ந்து ஒடுங்குகிறார். 

மீண்டும் ஆண்டுகள் செல்கின்றன – குகைக்குள் வாழ்ந்து, மக்களால் குகைச்சித்தர் என்று வணங்கப்படுகிறார். ஆனால், அவர் தேடியது கிடைக்கவில்லை. அந்த மாவிதை செடியாகி மரமாகி கிளைவிரிந்து தொலைவிலிருந்து பார்ப்பவருக்கு தெரியுமளவிற்கு நிற்கிறது, ஆனால், பூக்கவில்லை. ஒருநாள் கனவுக்குள் கனவு காண்கிறார். அதில் அவர் மனைவி நாகம்மை வருகிறாள். விரித்த பனம்பாய் மறுபக்கம் சுருங்க அவரை உதவிக்கழைக்கும் பட்டப்பகலில் அவரோ காமம் கொள்கிறார். தன் அன்னையின் குரல் கேட்டு மீண்டும் சென்று படிக்கத் தொடங்குகிறார் விழித்துக்கொண்டு அதிர்ந்து தான் வேறாகி ஒரு தான் அழுவதையும் மற்றொரு தான் அதை பார்ப்பதையும் உணர்ந்து மலைவிட்டு இறங்குகிறார். சேருமிடம் ஞானமுத்தனின் வீடு. காண்பது அவரின் இளம் மருமகள் ஜென்சியை. 

வயதான ஞானமுத்தன் நான்கு மகள்களை காட்டிக்கொடுத்து, மகனுக்கு நல்ல பெண்ணை மணம் செய்வித்து, வீடு, வாகனம், வயல், தன் தனிமைக்கு ஒரு குடில் என  வசதியாக வாழ்கிறார். அவரைக்கண்டதும் “மாமரம் பூத்ததா” என இயல்பாகக் கேட்கிறார். இல்லை என்பரிடம் “அப்ப, அடி ஊற்று ஓடினா மட்டும் போறாது” என்கிறார். ஞானமுத்தனிடம் தான் தோண்டும் கிணற்றில் ஏன் தண்ணீரில்லை கேட்கிறார் பிள்ளை. “அகங்காராத்தை கொண்டு தோண்டினால் எப்படி தண்ணீர் வரும்?” என்பவரிடம் வழிகாட்டுமாறு கெஞ்சுகிறார் பிள்ளை. அவ்வப்போதைய தன் சிறிய பாய்ச்சல்களில் மனம் தேங்கிப்போய்விட்டால் இப்படித்தான், ஓடும் நீர்தான் கங்கை என்கிறார் ஞானமுத்தன். குழப்பத்தோடு உறங்கி விழித்தெழுந்து இருந்தும் இல்லாமல் வான் நோக்கி  அமர்ந்திருக்கும் அவனைப் பார்க்கிறார் பிள்ளை.

அதன் பின், ஞானமுத்தனின் குடிசையில் தங்கி பிள்ளை தான் சொல் அனைத்தையும் – கற்ற சாத்திரங்களையும் உற்ற தத்துவங்களையும் ஒழிகிறார். அவர் அங்கு நட்டு வளர்த்த செடிகள் தளிர்க்கின்றன, சில மலர்கின்றன. அப்படி ஒருநாள் தன் அந்தியை உணர்கிறார். மயங்கிக்கிடக்கும் அவருக்கு நீரளிக்கும் போது அழுத்தும் ஜென்சியின் மார்பை உணர்ந்து தன் உயிரை உணர்கிறார். 

“சந்தான லட்சுமியாக இருப்ப” என்று தான் வாழ்த்திய அவளில் தன் அன்னையை, மனைவியை, தன் வாழா வாழ்வை அதன் கணங்களை காண்கிறார். நாகம்மையை, அவர் மகனை, அவன் தரும் இன்பத்தை பின் அவனால் அடையும் துன்பத்தை உணர்கிறார். அவர் மகனும் அவரைப்போல எழுதி வைத்ததைப் படித்துவிட்டு எளகியாடுவதை, தன் பேத்தியை, அவள் கையால் தான் இறுதி நீரை கொண்டு நிறைந்து உயிர் துறப்பதை எல்லாம் உணர்கிறார். கூப்பிய தாமரை இதழ் விரிக்கிறது. கிட்டத்தட்ட மறுபிறப்பு & முழுவாழ்க்கை – அன்னையின் முலையில் தொடங்கி பேத்திவிட்ட நீரில் நிறைவு. நிறைகிறார். 

ஞானமுத்தன் அவர் சாம்பலை அந்த மாமரத்தில் குழியெடுத்து அடக்கும் போது முப்பது வருடங்களுக்குமுன் பசுமையின் நீர்மை சொன்ன சொல்லை நினைத்துக்கொள்கிறார் – “எல்லாம் ஒன்றே”,

நிறைந்த மனதுடன் மறைந்தவரின் சாம்பல் கொண்டு காய்த்துப்  பொங்குகிறது மாமரம்.

இந்நூலின் பல சித்தர் பாடல்கள் பகடிகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு ஒருசில பாடல்களை அதன் உண்மை அர்த்தத்தில் எவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்த போது  பகடி வெடித்துச்சிரிக்க வைத்தது. “சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம்பலம் தேடி உட்கார்ந்து விட்டீர்” என்னும் ஞானமுத்தன். பெண்போகம் / மயக்கம்  குறித்த வரிகள், etc.  அதுவும் ரெஜினா டீச்சரின் “அணுவைத் துளைச்சு ஏழ்கடலைப் புகட்டி குருகத் தரிச்சு குமட்டின குத்துன ஆளுல்லா”. விடிகாலை வேலையில் விளக்கைப் போட்டுக்கொண்டு பால்கனியில் செடிகளுக்கு நடுவே அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். சிரித்த சிரிப்பில், அப்போது நடைக்கு வந்த நாயும் அது இழுத்து வந்த அம்மையாரும் அதிர்ந்து போயினர்.

வாசித்தவற்றோடு இணைத்துக்கொள்ளும் ஒரு வழக்கத்தில், ஒரு கோணத்தில் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலில் வரும் கோவிந்தனை பிள்ளை நினைவுபடுத்துகிறார். ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதில்  ஒரு அமைப்பில் நீண்ட காலம் அமர்ந்து பெரிய முன்னேற்றமில்லாத வாழ்க்கை என்றளவில். 

ஜெ,, இந்நூலை விவாதிப்பது குறித்து டாலஸ் நண்பர்களுக்குள் இருவேறு கருத்துகள் இருந்தன. பல்வேறு விதமான வாசிப்பு வரலாமே, முயன்று பார்ப்போம் என்றுதான் தொடர்ந்தோம். அது பயனளித்தது என்றே எண்ணுகிறேன்.

ஈராறு கால் கொண்டெழும் புரவி என்பதை நான் “மனம்” என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் அதை “காலம்” என்ற பொருளில் திருமூலர் பயன்படுத்துகிறார் என்று நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதாக நண்பர் சரவணன் கூறினார். அதுவும்  சரியாக பொருந்தி வருகிறது. 

என்னளவில், கற்றவற்றை சுமந்து கொண்டேயிருப்பதால் சென்றடையாமல் தேங்கி நிற்கும் உணர்வு  அளிக்கும் அச்சம், அடைந்தவர்கள் கூறும் அமைந்து வாழ்தல் போன்றவைகள் குறித்து மேலும் யோசிக்கத்தூண்டியது இந்நூல். குறிப்பாக, ஆரம்பத்திலேயே நாடார் கூறுகிறார் “தேடாதேரு. தேடிக் கிட்டுத ஒண்ணுமே தேடுகதுக்குண்டானது இல்லை. தேடிவாறதே செல்வம்.” 

ஆனால், தேடும் வரை எல்லாவழிகளிலும் முயல்வது, முழுமையாக முயன்று கொண்டேயிருப்பது, எல்லைகளை விஸ்தரிப்பது,   அடையவில்லையெனினும் இறுதியில் ஒரு நிறைவு உண்டு என்றும் ஒரு வாசிப்புக்கோணம் நண்பர்களிடம் இருந்து வந்தது.    

ஒருவேளை ஞானமுத்தன் உணர்ந்தது போல, “எல்லாம் ஒன்றே” ஆக இருக்கலாம்.

அற்புதமான அனுபவத்திற்கு நன்றி ஜெ.

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி 

டாலஸ் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2025 10:31

கஸல் இனிமை

 

I read your short book, Hindu Gnanam. Although I had previously read excerpts, experiencing it as a complete book was profound. The articles are brief, not only concise but also logical, yet simple in style.

Religion and wisdom

இந்த வகுப்பிற்கு வந்த பின் உருது பற்றி ஆசிரியர் ஃபயஸ் காதிரி சொன்ன தகவல்கள் என் பார்வையை விரிய வைத்தன. உருது இந்தியாவில் தோன்றிய மொழி, மற்றும் அது இஸ்லாமியர்கள் மொழி அல்ல, உருது மொழி அராபிய, பாரசீக மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இருந்து உருவாகியது போன்ற அடிப்படை தகவல்கள் ஆச்சரியமாக, கண்ணை திறப்பதாக இருந்தன.

கஸல் இனிமை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2025 10:30

November 1, 2025

தமிழ்த்தேசியம், மூடநம்பிக்கைகள், உண்மைகள்.

 

அன்புள்ள ஜெ

தமிழின் பெருமையை உணர்ந்துள்ளோமா என்னும் சிறிய உரையில் நீங்கள் தமிழகத்தின் மெய்யான சாதனைகளை சுருக்கமாகப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். அதை நான் என் தமிழ்த்தேசிய நண்பர்கள் சிலருக்கு அனுப்பினேன். எவருக்குமே அது தெரிந்திருக்கவில்லை. ஆனால் இதெல்லாம் தெரிந்ததுதானே என்ற பாவனையில் சிலர் பதில் சொன்னார்கள். சிலர் தமிழ் பத்துலட்சம் ஆண்டு தொன்மையானது, உலகமொழிகளிலேயே தமிழ்தான் அன்னையாக உள்ளது, தமிழன் தொல்குடி, இதையெல்லாம் மறைக்கிறார் ஜெயமோகன், ஏனென்றால் அவர் ஒரு மலையாளி என்றெல்லாம் கூச்சலிடத் தொடங்கினார்கள். வெறுப்பாக இருந்தது.

இந்த சிறுமை தமிழனின் மனநிலையிலேயே உள்ளது. தன் உண்மையான சாதனையை அவன் ஏன் தெரிந்துகொள்ள மறுக்கிறான் என்றால் அவனுக்கு அது உண்மையில் பெரிதாக தெரியவில்லை. அவனுக்குக் கற்பனைக்கதைகள்தான் தேவையாகின்றன என்பதனால்தான். இந்த மூடர்களுக்கு எத்தனை தூரம் உண்மைகளை சொன்னாலும் புரிவதில்லை.

ரா. மகிழ் தேவேந்திரன்

அன்புள்ள மகிழ்,

உங்கள் கடிதம், உங்கள் அகவையை வைத்துப்பார்த்தால் உங்கள் நடையிலிருக்கும் தெளிவு, மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா காலகட்டத்திலும் அறிவார்ந்து செயல்படுபவர்களும் உணர்ச்சிகளின் அடிமைகளும் என இரண்டு தரப்பினர் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். நாம் சரியான தரப்பில் இருப்பதே முக்கியமானது. என் குரல் இந்த சிறுபான்மையினரை நோக்கியே ஒலிக்கிறது. நீங்களே பார்க்கலாம், அப்பட்டமான அசட்டுத்தனங்களை தன்னம்பிக்கையுடன் பேசுபவர்களின் காணொளிகள் லட்சக்கணக்கில் சென்றடைகின்றன. இந்தக் காணொளிகள் ஐந்தாயிரம் பேர் பார்த்தால் அது அதிகம்.

(கட்சிவெறி, மொழிவெறி, இனவெறி கொண்டவர்கள் திரளாகச் செயல்படுகிறார்கள். ஆகவே அவர்கள் தாங்கள் பார்ப்பதை பகிர்ந்து பரப்புகிறார்கள். என் காணொளிகளைப் பார்ப்பவர்கள் இவற்றை பரவலாகக் கொண்டுசேர்ப்பதில்லை. தெரிந்தவர்களுக்குக் கூட பகிர்வதுமில்லை. இத்தகைய கருத்துக்கள் ஒரு சிறிய அளவிலேனும் இயக்கமாக ஆகவேண்டும் என்றால் பகிரப்படவேண்டும். காணொளிகள் அதிகமாகப் பார்க்கப்படவும் வேண்டும்)

தமிழ்ப்பெருமித அரசியலுக்கு ஒரு வரலாற்றுப்பின்னணி உண்டு. இந்தியப்பெருமித அரசியல் ஒன்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. அதற்கான எதிர்வினையாகவே இது உருவானது. காலனியாதிக்கவாதிகள் தாங்கள் வெல்லும் நாடுகளில் உயர்பண்பாடு இருந்ததில்லை என நம்பி, அதை வரலாறாக எழுதியும் வைத்தனர். (ஆப்ரிக்காவில் உயர்பண்பாடு இருந்ததில்லை, வரலாறு இல்லை என இன்றும் சொல்கிறார்கள். ஆனால் ஐரோப்பாவின் அருங்காட்சியகங்களில் ஆப்ரிக்காவைச் சேர்ந்த தொல்கலைப்பொருட்களே 90 விழுக்காடு என்று ஒரு கூற்று உண்டு)

காலனியாதிக்க வரலாற்றுக்கு எதிராக தேசியவரலாறு எழுதப்பட்டபோது இந்தியாவின் தொன்மை, பெருமை ஆகியவை முன்வைக்கப்பட்டன. அவை உடனடியாக தேசிய இயக்கத்தால் மிகைப்படுத்தவும்பட்டன. நம் தேசியநாயகர்களான கட்டப்பொம்மன், வேலுத்தம்பி தளவாய், உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, திப்பு சுல்தான், ஜான்ஸி லட்சுமிபாய் என எல்லா வரலாறுகளும் மிகையாக்கப்பட்டவை, பேசிப்பேசித் தொன்மங்களாக ஆக்கப்பட்டவை.

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இந்துப் பண்பாட்டின் நூல்கள் அச்சேறி அறிஞர்கள் நடுவே அவற்றுக்கான இடம் உருவாகியது. இந்திய தேசிய இயக்கத்தால் அவற்றின் காலம், உள்ளடக்கம் ஆகியவை மிகையாக்கப்பட்டன. இன்றும் வட இந்தியாவில் இந்தியப்பண்பாடே உலகிலேயே தொன்மையானது என்றும், ராமாயணம், மகாபாரதம் ஆகியவையே உலகின் தொன்மையான நூல்கள் என்றும், அவையே உலகின் மிகமுக்கியமான இரண்டே இரண்டு நூல்கள் என்றும் படித்தவர்களும் ஆய்வாளர்களும்கூட நம்புவதைக் கண்டுள்ளேன். அதற்கு எந்தவகையான தொல்லியல் ஆதாரமும் இல்லை, எகிப்தும் சீனாவும் நம்மைவிட மிகத்தொன்மையான உயர்பண்பாடு கொண்டவை,ஆப்ரிக்காவின் எதியோப்பியப் பண்பாடு (அபிசீனியா) நம்மைவிட தொன்மையானது என்று சொல்லி நான் அரங்கிலிருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.

இந்த ஒற்றைப்படையான, மிகையான தேசியவாத நம்பிக்கைக்கு எதிராக உருவானதே தமிழ்த்தொன்மை பற்றிய நம்பிக்கை. அதுவும் இந்தியத் தேசியவாத நம்பிக்கையைப்போலவே, அதே வழியில் மிகைப்படுத்தல் மற்றும் தொன்மம் ஆக்குதல் வழியாகக் கட்டமைக்கப்பட்டது. தமிழ்நூல்கள் அச்சேறி, உலக இலக்கியப் பாரம்பரியத்தில் அவற்றின் இடம் அறிஞர்களால் ஏற்கப்பட்டது. கூடவே அவற்றின் காலம், உள்ளடக்கம் ஆகியவை தமிழ்த்தேசிய நம்பிக்கையாளர்களால் மிகைப்படுத்தப்பட்டு, தொன்மங்களாகப் பாமரர் நடுவே பரப்பப்பட்டன. அவை ஓர் அரசியல் தரப்பாக இங்கே வேரூன்றின.

இந்த மிகைநம்பிக்கைகளை எல்லாம் இங்குள்ள முக்கியமான தமிழறிஞர்கள்தான் உருவாக்கினர். அப்பட்டமான மூடநம்பிக்கைகளை கட்டமைத்தனர். உதாரனமாக லெமூரியா என்னும் தொன்மம். அது மூடநம்பிக்கையாளர்களான தியசபிக்கல் சொசைட்டி (பிரம்மஞான சங்கம்) அமைப்பினர் கூறிய கருத்து. அவர்கள் தங்கள் ஞானதிருஷ்டியால் அவற்றைக் கண்டார்கள் என்கிறார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொண்டு குமரிக்கண்டமும் லெமூரியாவும் ஒன்றே என்றும், தமிழர்கள் டைனோசர் காலகட்டத்திலேயே வாழ்ந்தனர் என்றும், இன்னும் பின்னால் சென்று பலகோடி ஆண்டுகளுக்கு முன் கண்டங்கள் பிரிவதற்கு முன்னரே தமிழர்கள் இருந்தனர் என்றும் அறிவியல் சாயலே இல்லாத அசட்டுத்தனங்களைச் சொல்லி இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த மூடநம்பிக்கையாளர்கள் தங்களை பகுத்தறிவாளர் என்றும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

(விரிவாக அறிய ஆர்வமுள்ளவர்கள் அறிவியலாளர் சு.கி. ஜெயகரன் எழுதிய குமரிநில நீட்சி என்னும் நூலை பார்க்கலாம். சுமதி ராமசாமி இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்)

அன்று தொடங்கி நாம் இன்று வரை ஏதேனும் வரலாற்றுச் செய்தி கிடைத்தால் அதை உடனடியாக மிகையாக்கி, திரித்து, தற்பெருமை பேசி நம்மை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்கிறோம். இந்திய அளவில் இன்று இந்துத்துவர் அதைச் செய்கிறார்கள். தமிழ்ச்சூழலில் தமிழ்த்தேசியர் செய்கிறார்கள். அறிவியலை எள்ளளவும் மதிப்பதில்லை. நாம் நம்மைப்பற்றிச் சொல்வனவற்றை மறுக்கும் எந்தத் தரப்பும் நம் எதிரித்தரப்பு என நாம் சொல்லிக்கொள்கிறோம். நான் சுட்டிக்காட்டுவது இந்த மடமையையே.

நம்முடைய உண்மையான பெருமைகள் பல உண்டு. நம் சாதனைகள் உண்டு. அவற்றை அறிந்திருக்கவேண்டும். பிறரிடம் அவற்றைச் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும். அறியாமையின் காரணமாகவே நாம் போலிப்பெருமிதங்களை நாடுகிறோம். அன்னியர்களிடம் அவற்றைச் சொல்லி கேலிக்குரியவர்களாக ஆகிறோம். நான் தொகுத்துரைத்திருப்பது நம் பெருமிதங்களை.

ஆனால் நீங்கள் சொல்வதுபோல வெறிகொண்ட தமிழ்த்தேசியர் அவற்றை கவனிப்பதில்லை. அந்தக் காணொளிகளையே பார்க்க மறுப்பார்கள். தங்கள் மூடநம்பிக்கைகளையே முன்வைப்பார்கள். அமெரிக்கா சென்று, அங்குள்ள அறிவியல்சூழலில் வாழ்பவர்களே இந்த அறிவின்மையில் திளைக்கிறார்கள் என்னும்போது இங்குள்ள எளியோர் பற்றி என்ன சொல்ல?

சிலராவது கவனிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும், ஒரு பொதுவிவாதத்தில் ஒரு குரலாவது அறிவியல்நோக்குடன், உலகளாவிய பார்வையுடன் வெளிப்படவேண்டும் என்பதற்காகவே இக்காணொளிகள் வெளியாகின்றன.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2025 11:35

சிறில் அலெக்ஸ்

சிறில் அலெக்ஸ்

தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். கிறிஸ்தவ இறையியலை அறிமுகம் செய்யும் வகுப்புகள் நடத்திவருகிறார்.

சிறில் அலெக்ஸ் சிறில் அலெக்ஸ் சிறில் அலெக்ஸ் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2025 11:33

குணா கந்தசாமியின் டாங்கோ

அன்புள்ள ஜெ,

1996 ல் திரைப்பட விழா ஒன்றில் நான் Last Tango in Paris என்னும் பழைய படத்தைப் பார்த்தேன். அக்காலத்தில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்த கதைக்கருதான். ஏதோ ஒரு காரணத்தால் தனிமைப்பட்டுப்போன ஒருவன் ஒரு புதிய ஊருக்கு வருகிறான். அங்கே சில கதாபாத்திரங்களைச் சந்திக்கிறான். பெரும்பாலும் பெண், காதல், காமம். அந்த உறவுகளின் வழியாக தனிமையை உதற முயல்கிறான். குணா கந்தசாமியின் டாங்கோ நாவலை கையிலெடுத்தபோது அந்த சினிமா ஞாபகம் வந்தது. ஆச்சரியமாக இந்நாவலின் கதையையும் என்னால் அந்த திரைப்படத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க முடிந்தது.

இந்நாவலின் கதை தென்னமேரிக்க நாடான உருகுவேயில் நாட்டில் வெள்ளி ஆறு என அழைக்கப்படும் நதிக்கரையில் உள்ள தலைநகரில் இந்தக் கதை நிகழ்கிறது. கதைநாயகன் ஆனந்த் தமிழன், அங்கே பணிநிமித்தம் சென்றவன். ஆசிரியர் உருகுவே நாட்டில் பணிநிமித்தம் வாழ்ந்திருக்கிறார் என்று தமிழ்விக்கி சொல்கிறது. ஆகவே மெய்யாந அனுபவத்தின் பின்புலத்தில் இந்த நகரத்தின் காட்சிகள் சொல்லப்படுகின்றன. வெள்ளி ஆறும் கடலும் இந்நாவலில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.

இந்நாவல் அந்த புத்தம்புதிய ஊரில் ஆனந்த் அடையும் தனிமையைச் சொல்கிறது.அந்தத் தனிமை அந்த புதிய நிலத்தில் உள்ள பண்பாடுடன் பொருந்திக்கொள்ள முடியாத காரணத்தால் உருவானதாக இருக்கலாம். அல்லது அங்கே அவன் குடும்பம் ஏதுமின்றி இருப்பதனால் உருவாவதாக இருக்கலாம். அவனுக்கு பிறப்பால் அமையாத குடும்பம் பற்றிய குறிப்பு வருகிறது. அவன் வழக்கமான ஒரு குடும்ப உறவையும் அதன் பாதுகாப்பையும்தான் தேடிக்கொண்டிருக்கிறான் என்றும் தோன்றுகிறது. ஒரு இயல்பான குடும்ப உறவை உருவாக்கிக்கொண்டால் தீர்ந்துவிடும் பிரச்சினைதான் அது என்றும் சொல்லலாம்.

ஆனந்த் அந்த கடற்கரையில் தன்னந்தனிமையை உணரும்போது ஆரம்பிக்கும் நாவலில் அந்தக் கடல் கூடுதலாக அந்த தனிமைக்கு ஒரு பெரிய காரணம் உள்ளதோ என்று நம்மை எண்ணச் செய்கிறது. ஆனந்துக்கும் சந்தியாவுக்கும், தென்னமேரிக்க பாலியல்தொழிலாளியான அமெந்தேவுக்கும் உள்ள உறவும் தனிமையின் சித்திரம்தான். ஆனந்த் தன் தனிமையை போக்கிக்கொள்ள அவர்களை நாடுகிறான். அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களுக்கு தனிமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தனிமை அவர்களின் பாதுகாப்பு வளையம். சந்தியாவின் பாதுகாப்பு வளையம் அவனை வெளியே தள்ளுகிறது. அமெந்தேயின் வளையத்தை உணர்ந்து அவனே விலகிக்கொள்கிறான்.

வெவ்வேறு மனிதர்களிடம் ஆனந்த் தொடர்ச்சியாக ஓர் உணர்வுபூர்வத் தொடர்பை உருவாக்க முயன்று, அது கைகூடாமல் விலகும் சித்திரம் இந்நாவல் என்று சொல்லலாம். ஆனந்த் தேடுவது ஒரு உறுதியான உறவமைப்பைத்தான் என்பதற்கான ஆதாரமாக எனக்குப் படுவது மத்தியாஸ் போன்ற ஒருவர் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதற்கு ஒன்று கிடைத்ததும் அலைதல் அடங்கிவிடுவது. வெவ்வேறு கதாபாத்திரங்களுடன் ஆனந்த் கொள்ளும் இயல்பான உரையாடல்கள் வழியாக இந்த தனிமையும் தவிப்பும் மிகையில்லாமல் சொல்லப்படுகின்றன.

இந்நாவலில் எல்லா கதாபாத்திரங்களும் வாழ்க்கை அளவுக்கே அமைக்கப்பட்டவர்கள். மிகையில்லாமல் கதாபாத்திரங்கள் அமையவேண்டும் என்று ஆசிரியர் கொண்டுள்ள கவனத்தால் கதாபாத்திரங்கள் சுருக்கமாகவும், விசித்திரங்கள் இல்லாமலும் இருக்கிறார்கள். ஒரே விதிவிலக்கு ஞாபகமறதிநோய்க்கு ஆளான முதியவர். அவரிடமிருந்து ஆனந்த் பெற்றுக்கொள்ளும் ஞானம் என்ன என்பதை நாவலில் இருந்து ‘நேற்றும் நாளையும் இல்லாத இன்று’ என்று புரிந்துகொள்ளலாம்.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் பக்கத்துவீட்டு மாமியின் உரையாடல் வழியாக நாவலின் தரிசனம் வெளிப்படுவதுபோன்ற ஒரு இடம் அது. இந்நாவலின் தொடக்கத்தில் நேற்றுநாளை என்ற காலமாக இருக்கும் கடல் இறுதியில் அக்கணமாக ஆகிவிட்டது என்று நான் வாசித்தேன். என் வாசிப்பாக இருக்கலாம். அது எனக்குப் பிடித்திருந்தது.

நம்பகத்தன்மையே இந்நாவலின் பலம் என்று தோன்றுகிறது. வாசிக்கையில் எந்த இடமும் உறுத்தவில்லை. எந்தக் காட்சியும் மிகை என்றோ செயற்கை என்றோ தோன்றவில்லை. மொழியும் இயல்பான ஒழுக்குடன் உள்ளது. ஓரிரு மணிநேரத்தில் வாசித்து முடிக்கத்தக்க ஒரு நாவல் இது. குணா கந்தசாமி ஒரு சிறந்த படைப்புக்கலைஞர் என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.

இந்நாவலின் பிரச்சினை என்ன என்று எனக்கே கேட்டுக்கொண்டேன். நான் இதை என் வாசிப்பின் சிக்கலாகவும் சொல்வேன். ஒரு கதாபாத்திரம் ஒரு மனிதன் என்பதற்கு மேலே சென்று ஒரு அடையாளமோ படிமமோ ஆகும்போதுதான் நாம் அதை நமக்குள் விரிவாக்குகிறோம். அதேபோல ஒரு நிகழ்வு நம் நினைவில் நீடிக்க வேண்டும். அதற்கு அந்த கதாபாத்திரமும் கதைநிகழ்வும் கொஞ்சம் அரிதாகவும், புதிதாகவும் இருக்கவேண்டும். அந்த அரிதான அம்சம்தான் இந்நாவலில் விடுபடுகிறது. முப்பதாண்டுகளாக வாசித்துக்கொண்டும், சினிமா பார்த்துக்கொண்டும் இருக்கும் எனக்கு இந்த தனிமை ஒரு பழைய பேசுபொருளாகப் படுகிறது.

லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ் சினிமாவைச் சொல்லிவிடவேண்டும். டாங்கோ என்பது இணைநடனம். இந்நாவலைப் பொறுத்தவரை இணைநடனம் இணையில்லாமல் நடப்பதன் வெறுமையைச் சொல்கிறது என்று சொல்லலாம். ஆனால் அந்தச் சினிமாவில் சட்டென்று ஒரு புதிய உச்சம் நிகழ்கிறது. அது எதிர்பாராதது, ஆனால் நம்பகமாகவும் இருந்தது. அந்த உச்சம் அதுவரைக்கும் நமக்கு தெரிந்த அந்த அகவுலகை புரட்டி அதற்கு அப்பால் ஓர் உலகைக் காட்டுகிறது. ஒரு நாவலில் நாம் எதிர்பார்க்கவேண்டியது அந்த தருணத்தையும் தான் என்பது என் எண்ணம்.

எம்.பாஸ்கர்

அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள்- கடிதம் தேவி லிங்கம் எழுதிய நெருப்பு ஓடு- கடிதம் விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள் விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்

[image error]

விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி

விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த் விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 9 – யாழன் ஆதி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2025 11:31

October 31, 2025

அத்வைதவேதாந்தத்திற்கு இன்றைய நடைமுறைப்பயன் என்ன?

அனலும் புனலும் இந்திய இலக்கியத்தில் வேதாந்தம்

வேதாந்தம் பற்றி அல்லது அத்வைதம் பற்றி பரவலாகக் கேட்கப்படும் கேள்வி அதன் இன்றைய பயன்பாடு என்ன என்பதுதான். பெரும்பாலானவர்கள் அது ஒரு தொன்மையான நம்பிக்கை அல்லது கொள்கை என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அதற்கு நடைமுறைப் பொருத்தம் என்று எதுவுமில்லை என்றும், ஆகவே இளமையில் அதை எந்த வகையிலும் அறிந்துகொள்ளவோ அதன் அடிப்படையில் வாழ்க்கையை புரிந்துகொள்ளவோ தேவையில்லை என்றும் நினைக்கிறார்கள். அது பழமையான ஒரு நம்பிக்கை என்பதனால் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருக்கும் முதியவர்களுக்கு ஆறுதலையும் உறுதிப்பாட்டையும் அளிக்கிறது என்றும், அது அவர்களுக்கே உரியது என்றும் நம்புகிறார்கள்.  

இந்தக் கூற்றில் பல பகுதிகள் உள்ளன. ஒன்று, அத்வைதம் உண்மையில் ஒரு நம்பிக்கையா? அது தொன்மையானது மட்டும்தானா? இவ்விரண்டு கேள்விகளுக்கும் பதிலளித்தாலொழிய மூன்றாவது கேள்விக்கு விடை தேட முடியாது. வேதாந்தம் தமிழ் விக்கி, அத்வைதம் தமிழ் விக்கி.

அத்வைதம் என்பது ஒரு நம்பிக்கை அல்ல. அத்வைதி அத்வைதத்தை ‘நம்பி’ ஏற்றுக்கொள்பவன் அல்ல. ஏனெனில் அத்வைதம் அல்லது வேதாந்தம் புறவயமான, திட்டவட்டமான  தர்க்கக் கட்டமைப்பு கொண்டது. நம்பிக்கையின் வழியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதாவது தர்க்கமனம் கொண்டவர்கள், ஆகவே அறிவார்ந்த பயணம் கொண்டவர்கள் மட்டும்தான் வேதாந்தத்தை நோக்கி வருகிறார்கள். அவர்களால் எளிதாக ஒரு மத நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது. அந்த நம்பிக்கை மீது அவர்கள் முடிவில்லாத தர்க்கபூர்வமான கேள்விகளைக் கேட்பார்கள். அக்கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தாலொழிய அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

அத்வைத வேதாந்தம் ஒரு நம்பிக்கை அல்ல என்பது மட்டுமல்ல, அது எல்லாவகையான நம்பிக்கைகளுக்கும் எதிரானதும் கூட. ஆகவே அது மதநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானதுதான். அது இந்து மதத்தில் உருவான ஒன்றென்பதனால் மட்டும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று சொல்லிவிடமுடியாது. உண்மையில் அத்வைதம் இந்து மதத்திற்கு ஆதரவான ஒன்று கூட அல்ல. இந்துமதம் என்று பிறவகையில் குறிப்பிடப்படும் எல்லாவகையான நம்பிக்கைகளையும் கடந்த ஒன்றாகவே அத்வைதம் தன் தூய நிலையில் உள்ளது. ஆகவே அதை ஒரு நம்பிக்கை அல்லது ஒரு மதச்சார்பு என்று கொள்வது முற்றிலும் பிழையான ஒன்று. அத்வைதம் அல்லது வேதாந்தத்தைப் பற்றிய முழுமையான அறியாமையில் இருந்து வரும் எண்ணம் அது. கடந்த ஆயிரமாண்டுகளில் அத்வைதத்தை இந்துமதம் இழுத்துக்கொண்டுவிட்டது. அத்வைதமடங்கள் இந்து வழிபாட்டுமுறைகளின் தலைமையகங்களாக உள்ளன. ஆகவே இந்த எண்ணம் உருவாவது எளிதானது. ஆனால் கற்பவர் இந்த பிழைபுரிதலைக் கடந்தாகவேண்டும்.

இரண்டாவதாக கேட்கவேண்டிய கேள்வி, அத்வைதம் பழைமையானதா? அது காலாவதியானதா? அத்வைதம் சங்கரரால் பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அது வேதாந்தம் என்ற பெயரில் சுட்டப்பட்டது. வேதாந்தம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாக இந்திய நிலத்தில் உள்ளது. திட்டவட்டமாக அதை வகுத்துரைக்கும் நூல் பிரம்ம சூத்திரம். அதற்கு இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தொன்மை இருக்கலாம். அதற்கும் முன்னால் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகள் அது ஒரு விவாதப்பொருளாக இருந்திருக்கலாம் என்று வெவ்வேறு நூல்கள் நமக்கு காட்டுகின்றன.

இக்குறிப்பிட்ட சிந்தனை மரபு ‘வேதத்தின் முடிவு’ ‘வேதத்தின் இறுதிச்சொல்’ என்ற அர்த்தத்திலேயே வேதாந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே வேதங்களின் தொன்மை அதற்குண்டு என்றுதான் பொருள். வேதங்கள் ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகள் தொன்மையானவை என்று கொள்ளப்பட்டால் வேதாந்தமும் அந்த அளவுக்கு தொன்மையானதே.

அத்தனை தொன்மையான ஒரு தரிசனம் எப்படி சமகாலத்திற்கு பொருத்தமானதாக அமையும் என்ற கேள்விக்கான பதில் ஒன்றே. எல்லா மெய்யான தத்துவ தரிசனங்களும் மிகத் தொன்மையானவையாகவே இருக்கும். ஒரு தத்துவ தரிசனம் முற்றிலும் புத்தம்புதிதாக உருவாக முடியாது. தத்துவம் என்பது மலைகளைப்போல. மலைகள் மனிதன் உருவாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துகொண்டிருக்கின்றன; அதேசமயம் இப்போதும் நம் கண்முன்னால் ஒரு சமகால யதார்த்தமாக நின்றுகொண்டிருக்கின்றன. அவை கடந்த காலத்தை சேர்ந்தவை அல்ல, காலமின்மை கொண்டவை. அதே போலத்தான் தத்துவங்களும் காலம் கடந்த தன்மை கொண்டவைதான்.

தத்துவத்துக்கான விளக்கம் அல்லது தர்க்க முறைகள் காலத்துக்கேற்ப மாறுகின்றன. தத்துவ தரிசனம் என்பது பெரும்பாலும் மனித சிந்தனை தோன்றிய காலத்திலேயே உருவாகி, மனிதனுடன் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒன்றாகவே இருக்கும். இது எல்லா தத்துவ அடிப்படைத் தத்துவ தரிசனத்துக்கும் பொருந்தும். அத்வைதமும் வேதாந்தமும் அத்தகைய ஒன்றே. அத்வைதம் வேதாந்தத்தின் தர்க்கமுழுமை கொண்ட அடுத்த கட்ட பரிணாமமாக சங்கரர் உருவாக்கியது.

வேதாந்தம் வேதங்களில் தோன்றியது; உபநிஷத்துகளில் வளர்ந்தது; பிரம்ம சூத்திரத்தில் வரையறுக்கப்பட்டது; கீதையில் கவித்துவமாக விளக்கப்பட்டது; சங்கரரால் அத்வைதமாக தர்க்கப்படுத்தப்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக அறிஞர்களால் அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்ப மறுவிளக்கம் அளிக்கப்பட்டுக்கொண்டே இன்று வரை நீடிப்பது

அத்வைதம் நவீன இந்தியாவில் புத்தம் புதிய சிந்தனையாக நம் மரபிலிருந்து மறுவுருக்கொண்டு ழுந்து வந்தது, அதை நவவேதாந்தம் என்று நாம் சொல்கிறோம். (நவவேதாந்தம், தமிழ் விக்கி ) நவவேதாந்தத்தின் ஞானிகள் என ஒரு பெரும் பட்டியலையே நம்மால் கூறமுடியும். அவர்களில் ஒளிமிக்க முகம் ராமகிருஷ்ண பரமஹம்சர், அவருடைய மாணவரும் அத்வைதத்தை சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்றவருமாகிய விவேகானந்தர் அதன் மகுடம் என்று சொல்லலாம். நாராயணகுரு அத்வைதியே. அவருடைய மாணவர் நடராஜகுரு, அவருடைய மாணவர் நித்ய சைதன்ய யதி ஆகியோர் அத்வைதத்தை நவீன அறிவியலுக்கும் நவீன தத்துவத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் பொருந்துவதாக வளர்த்து எடுத்தனர்.

அத்வைதம் எந்த அளவுக்கு தொன்மையானதோ அந்த அளவுக்கு சமகாலத் தன்மை கொண்டதுமாகும். அத்வைதத்துக்கு எல்லாக் காலத்திலும் அந்தக் காலகட்டத்தின் மகத்தான சிந்தனையாளர்களின் விளக்கமும் விரிவாக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது ஆகவே அது ஒரு சென்றகாலச் சிந்தனை என்பது அபத்தமானது. சிந்தனையின் பரிணாமத்தை அறியாத ஒரு கூற்று அது .

அத்வைதம் இன்று எப்படி ஒருவருக்கு உதவும் என்ற கேள்வியைக் கேட்கலாம். இன்று அத்வைதம் புதிய விளக்கங்களுடன் விரிவாக்கங்களுடன் நீடிக்கிறது என்பதே அதன் இன்றைய பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும். இன்று நமக்கெழும் தற்காலிகமான இந்தக் காலகட்டத்திற்கு மட்டுமே உரிய வினாக்களுக்கான விடைகளை அத்வைதம் போன்ற அடிப்படைத் தத்துவ தரிசனங்கள் தருவதில்லை. அத்வைதம் காலாதீதமானது, என்றென்றும் உள்ளது. ஆகவே என்றென்றும் உள்ள காலாதீதமான மானுடப் பிரச்னைகளுக்கான விடைகளைத் தான் அது நேரடியாக வழங்குகிறது. மனிதனின் இருப்பு, பிரபஞ்சத்துக்கும் அவனுக்குமான உறவு, பிரபஞ்சச் செயல்பாட்டின் பொருள்-  என மனிதன் என்றும் சென்று முட்டிக்கொண்டே இருக்கும் முடிவிலாக் கேள்விகளுக்கான விடைகளைத்தான் அத்வைதத்தில் தேடவேண்டும். ஒரு மெய்ஞான தரிசனமாக அத்வைதத்தின் பணி அந்த வினாக்களுக்கான விடைகளுடன் வந்து நிற்பதே ஆகும்.

இன்று ஒருவனுக்கு அவனுடைய  அன்றாட வாழ்க்கையில் எழும் எளிய கேள்விகளுக்கான பதில்களை அத்வைதம் நேரடியாக அளிப்பதில்லை. ஆனால் தத்துவார்த்தமாக ஒருவன் யோசித்தான் என்றால், அன்றாட வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு எளிய கேள்விக்குமான விடை என்பது என்றென்றும் உள்ள தத்துவ விடைகளில் இருந்துதான் பிறக்க முடியும் என அறிவான். இன்று எனக்கு நோய் வருகிறது, நான் குணமடைகிறேன். என் உறவினர் ஒருவர் இறந்துபோகிறார், என்னைத் தெரிந்தவருடைய வணிகம் நொடித்துப்போகிறது. இவை அனைத்தும் அன்றாடம் சார்ந்த சிக்கல்களே. அவற்றுக்கான விடைகளும் அன்றாடம் சார்ந்தவையாகத்தான் இருக்க முடியும். ஆனால் அவ்விடைகளை நோக்கி நாம் செல்லும்போது சந்திக்கும் அடிப்படைக் கேள்வி என்பது இங்கு மானுட வாழ்க்கை எவ்வண்ணம் நிகழ்கிறது, காலத்துடனும் பிரபஞ்ச வெளியுடனும் அதற்கான உறவென்ன என்பதாகவே இருக்கமுடியும்  அக்கேள்விக்கான விடையை அத்வைதம் அளிக்கிறது.

ஓர் அத்வைதி அத்வைதத்தை கற்றுக்கொள்வது என்றென்றைக்குமான மெய்ஞான விடைகளுக்காகவும், அந்த விடைகளிலிருந்து கிளைத்தெழும் அன்றாடக் கேள்விகளுக்கான விடைகளுக்காகவும் தான். அத்வைதம் போன்ற அடிப்படைத் தரிசனம் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திற்கும் செல்லும் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க முடியும். ஓர் இலக்கியப் படைப்பின் அழகு என்பது என்ன என்ற கேள்விக்கான விடையை அத்வைதத்தில் தேட முடியும். ஒரு மனிதன் பிறந்து மடிவதன் பொருளென்ன என்ற கேள்விக்கான விடையையும் அது அளிக்கும் .ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமான உறவின் அடிப்படை என்னவாக இருக்கமுடியும் என்ற கேள்விக்கும் அத்வைதத்தில் இருந்து விடை காணமுடியும். அதிலிருந்து கிளைக்கும் விடையை நமக்கும் நம் மனைவிக்குமான உறவின் பொருளென்ன, நமக்கும் நம் குழந்தைகளுக்குமான உறவு எப்படி அமையவேண்டும், நமக்கும் நம்முடைய பணியாற்றும் அலுவலகத்துக்குமான ஊடாட்டம் எப்படி அமையவேண்டும் என்று அனைத்து தளங்களிலும் விரிவாக்கிக்கொள்ளவும் முடியும். அதாவது அன்றாடவாழ்வுக்கான நேரடி விடைகள் அத்வைதத்தில் இல்லை, ஆனால் அத்வைதம் அவ்விடைகளை நாமே அறிவதற்கான பார்வையை நமக்கு அளிக்கும்.

எது என்றென்றைக்கும் உள்ள விடைகளை அளிக்கிறதோ அது மட்டுமே அன்றன்றைக்குமான விடைகளையும் அளிக்க முடியும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.