Jeyamohan's Blog, page 19
October 29, 2025
அமெரிக்காவின் சிறுவர்களிடம்
தெற்கு கலிபோர்னியா பல்கலை கழகத்தில் பல்கலை மாணவர்களைச் சந்தித்தபின் தெற்கு கரோலினாவில் நிகழவிருந்த பள்ளிச்சந்திப்பைப் பற்றிய ஆர்வம் கூடிவிட்டது. கல்லூரியில் நிகழ்வில் பங்கெடுத்த மாணவர்கள் அனைவருமே இலக்கிய ஆர்வமும் வாசிப்பும் கொண்டவர்கள். அது கல்லூரி நிகழ்வு அல்ல, கல்லூரிமாணவர்கள் கல்லூரியில் தாங்களாகவே நிகழ்த்திக்கொள்ளும் கலாச்சார நிகழ்வு. அதில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெவ்வேறு ஆசிய, ஆப்ரிக்க, தென்னமேரிக்க நாடுகளைச் சேர்ர்தவர்கள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள் பாதிக்குமேல்.
அங்கே சந்தித்த மாணவர்களின் உணர்ச்சிகரமான ஏற்பும், உரையாடலும் ஒரு அகக்குழப்பத்தையே என்னில் உருவாக்கியுள்ளது. மெய்யாகவே நான் அவர்களை புரிந்துகொள்ளவில்லையா? அவர்களிடமிருந்து மிக அப்பால் என் பிம்பங்களுடன் நின்றிருக்கிறேனா?
தெற்குகரோலினாவில் Colleton County High School அரங்கில் நான் சந்திக்கவிருந்தது பள்ளி மாணவர்களை. அவர்களுக்கு இங்குள்ள கல்விமுறையால் இலக்கியம், வாசிப்பு எல்லாம் அறிமுகமாகியிருக்கும். ஆனால் தீவிர இலக்கியம், உலக இலக்கியம், இலக்கியத்தின் இலட்சியம் மற்றும் செயல்முறை ஆகியவை அறிமுகமாயிருக்கும் என்று சொல்லமுடியாது. என் உச்சரிப்பு அவர்களுக்கு புரியுமா என்பதும் பெரிய கேள்விதான். ஆகவே கொஞ்சம் பதற்றமும் இருந்தது.
ஆனால் எனக்கு எப்போதுமே இந்திய கல்விநிலையங்கள்மேல் தவிர்க்கவே முடியாத அவநம்பிக்கை இருப்பதுபோலவே அமெரிக்கக் கல்விநிலையங்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் உண்டு. ஆசிரியர்களால் உருவாக்கப்படும் கட்டுப்பாடு அங்கே இல்லை. ஆனால் இயல்பாகவே அயலவர் மேல் உருவாகும் கவனிப்பும், தற்கட்டுப்பாடும் உண்டு.
ராலேயில் நாகர்கோயில் பி.டி.பிள்ளை கல்யாண மண்டப உரிமையாளர் பி.டி.பிள்ளையின் மகள் ரெமிதா சதீஷின் இல்லத்தில் ஒரு விருந்து. ரெமிதா என் கதைகளை மொழியாக்கம் செய்து ஜக்கர்நாட் பதிப்பகம் சார்பில் வெளிவரவுள்ளது. அங்கே மலையாளப்பாடல்களை நண்பர்கள் பாடினார்கள். நண்பர் ராஜன் சோமசுந்தரத்தின் காரில் ஆறுமணிநேரம் பயணம் செய்து தெற்கு கரோலினா வந்தோம். வால்டர் பரோவில் நண்பர் ஜெகதீஷ்குமார்- அனு இல்லத்தில் தங்கினேன். ஜெகதீஷ்குமார்தான் என் சிறுகதைகளை ஆங்கிலத்தில் A Fine Thread and other stories: Short stories என்ற பேரில் மொழியாக்கம் செய்தவர்.
பள்ளி எல்லா அமெரிக்கப் பள்ளிகளையும்போல கிட்டத்தட்ட விமானநிலையங்களுக்குரிய பாதுகாப்புடன் இருந்தது. நன்கு சோதனையிட்டே உள்ளே அனுப்பினார்கள். பள்ளி மிக உயர்தரமான கட்டமைப்பு கொண்டது. வகுப்பறைகள், உள்விளையாட்டுக் கூடங்கள், சிறிய மற்றும் பெரிய நிகழ்ச்சிக்கூடங்கள். பெரிய கூடத்திலேயே சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களை மட்டுமே சந்திப்புக்கு அழைத்திருந்தனர். ஆனால் ஏறத்தாழ இருநூறு மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆங்கில ஆசிரியை டாக்டர் டக்கர் என்னை பேட்டி எடுத்தார். என் கதையுலகம், ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள என் Stories of the True நூல் ஆகியவை பற்றிய கேள்விகள். என் உச்சரிப்பு புரிகிறதா என உறுதிசெய்தபின் பேசினேன்.முதலில் என் வேடிக்கையான பதில்களுக்கு ஓர் ஆரவாரமான வரவேற்பு இருந்தது. ஆனால் தொடர்ந்து நான் இலக்கியம் என்னும் ஆழ்ந்த செயல்பாடு அளிக்கும் விடுதலை பற்றிப் பேசியபோது ஆழ்ந்த கவனம் இருப்பதை உணர முடிந்தது.
அக்கருத்துக்கள் இன்று அமெரிக்காவுக்கு மிகப்புதியவை. அமெரிக்காவில் எழுத்து- வாசிப்பு இரண்டுமே ஒருவகையான வணிகம் – அறிவுச்செயல்பாடு என்ற அளவிலேயே உள்ளன. அதில் ஓர் இலட்சியவாதம் உள்ளது, அது ஒரு தொண்டு என்பது அவர்கள் அறியாத செய்தியாக இருக்கலாம். எழுதுவது என்பது மொழியினூடாக நிகழும் ஒரு கனவு என்று சொன்னேன். ஒருவர் இன்றைய தரப்படுத்தலுக்கு எதிராக தன் சொந்த அகத்தை தன் மரபிலிருந்து, தன்னைச்சூழ்ந்துள்ள வாழ்வில் இருந்து திரட்டிக்கொள்ளவேண்டியதைப் பற்றிச் சொன்னேன்.
நான் தமிழில் தொடர்ச்சியாகப் பேசிவரும் கருத்துக்கள்தான். அவற்றைப் பேசப்பேச வழக்கமான உணர்ச்சிகரத்துக்கு ஆளானேன். இயல்பான சொற்றொடர்கள் அமைந்தன. ஆனால் பேச்சுக்குப் பின் மாணவர்கள் திரண்டு வந்து என்னைச் சந்தித்து உணர்ச்சிகரமாகப் பேசியபோது அவர்களிடம் அது ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியிருப்பதை உணரமுடிந்தது. அது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. குறிப்பாக நான்கு மாணவர்கள் தேடிவந்து மிகுந்த கொந்தளிப்புடனும் ஈர்ப்புடனும் இலக்கியம் பற்றிப் பேசினர். அவர்களிடம் விரிவாகப் பேச நேரமில்லை. ஆனால் அவர்கள் விடுவதாகவுமில்லை. தொடர்ச்சியாக பேசிக்கொண்டும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் இருந்தனர். அவர்களை இந்தியாவுக்கு, வெள்ளிமலைக்கு வரும்படி அழைத்தேன்.
இலக்கியச்செயல்பாட்டின் அகநிகழ்வுகள், அதனூடாக ஒருவர் தனக்கென ஓர் சுயத்தை உருவாக்கிக்கொள்வது, ஓர் இலட்சியவாத வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வது ஆகியவையே இளைஞர்களின் கேள்விகளாக இருந்தன. உண்மையில் அமெரிக்க இளைஞர்களிடமிருந்து வரும் இந்த எதிர்வினை என் மதிப்பீடுகளுக்கு மாறானது. அமெரிக்க இளையதலைமுறை நடைமுறைநோக்கு, நுகர்வு, கேளிக்கை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது என்பதே என் உளப்பதிவு. அவர்களுக்கு அறிவுத்தகுதி அதிகம், ஆகவே ஓர் அலட்சியமும் இருக்கும் என்பது என் எண்ணம். அவ்வாறன்றி அவர்கள் புதிய கருத்துக்களுக்குத் திறந்திருப்பதும், அவர்களிடமிருந்த இலட்சியத்தாகமும் நானறியாத இன்னொரு அமெரிக்காவைச் சந்தித்த திகைப்பை அளித்தன.
பிலிப்பைன்ஸ் பின்னணி கொண்ட ஜூரிஸ் Juris Kian Ramirez என்னும் இளைஞர் “Writing as a form of pleasure is the blissfull thing to have in this world.” This locked in my mind upon listening to one of his responses on student’s questions. Lots of learnings shared and at the same time lots of curiosities answered. என்று முகநூலில் எழுதியிருந்தார். இவர்களை சிறுவர்கள் என்றே சொல்லவேண்டும், இன்னமும் உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள்தான். ஆனால் தீவிர இலக்கிய வாசகர்களுக்குரிய தேடல் கொண்டிருந்தார்கள்.
பொதுவாக மாணவர்களில் இருநூறு பேரில் ஐந்துபேர் இலக்கியத்திற்குரியவர்கள் என்பது என் கணிப்பு. ஏனென்றால் இலக்கியம் என்பது உலகியலில் எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கது அல்ல. அதை உணர ஒரு அகநகர்வு தேவையாகிறது. ஆனால் இந்தப் பள்ளிநிகழ்வுக்குப் பின், அடுத்த வகுப்புக்கான நேரம் பிந்தியிருந்தபோதிலும்கூட, மேடையை ஒட்டிய இடுங்கிய இடத்தில் காத்திருந்து என்னை சந்தித்த அத்தனை இளைஞர்களிடம் நான் கண்டது இலக்கியத்தின் எதிர்காலத்தைத்தான். இலக்கியமென்னும் இலட்சியவாதச் செயல்பாடு ஒருபோதும் காலாவதியாகாது என்னும் உணர்வை அடைந்தேன்.
இது எனக்கு ஒரு குழப்பத்தை அளித்தது. கல்லூரி மாணவர்களைச் சந்திப்பதில் இந்தியாவில் எனக்கு இருக்கும் தயக்கம் பிழையானதா? உண்மையில் இந்தியாவிலும் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இலக்கியம் பற்றிய மெய்யான ஆர்வமிருக்க வாய்ப்பு உண்டா? இந்தியச் சூழலில் மாணவர்கள் அறிவுச்செயல்பாடு பற்றிய அறிமுகமே இல்லாதவர்கள். ஓர் எழுத்தாளர் அவர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டால் அவர்கள் அவனைப் பற்றிய எந்த மதிப்பும் வெளிப்படுவதில்லை. அவர்களுக்குள் எங்கோ சிலர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்காக பொழுதை வீணடிக்கலாமா? என் எப்போதைய குழப்பம் இது.
இந்த பள்ளிமேடையில் நான் பேசிய ஒரு சொல்கூட பொதுவான பார்வையாளர்களுக்குப் புரிவது அல்ல. ஒவ்வொரு அரைநூற்றாண்டிலும் சர்வதேச அளவில் மையப்பேசுபொருள் மாறிவிட்டிருப்பதைச் சொன்னேன். முந்தைய அரைநூற்றாண்டில் அந்த பேசுபொருள் விடுதலை என்பதுதான். அதற்குமுன் சமத்துவம். ஆனால் இன்று தனித்தன்மை, சுயம் என்பதே. பின்நவீனத்துவம் சுயம் என்பதை மறுத்து அது ஒரு கட்டுமானமே என்றது. அது விழுமியங்களை ‘கட்டுடைத்தது’. விளைவாக எஞ்சியது வெறும் சொற்கள், சொற்களை ஆராயும் ஒரு கருவி- அவ்வளவுதான். அதற்கு எதிரான ஒரு பயணமே இன்றைய அவசியம் என்று சொன்னேன்.
அதேபோல மொழியாக்கம் பற்றிய கேள்விக்கு நாம் சாம்ஸ்கியை மேற்கோள் காட்டி ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு எதையும் மொழியாக்கம் செய்யமுடியும் என்றும், எப்படியும் இலக்கியம் கற்பனை வழியாகவே பொருள்கொள்ளப்படுகிறது என்றும், எந்தப் படைப்பையும் நம் கற்பனையால் சென்றடையமுடியும் என்றும் சொன்னேன். அக்கருத்துக்களை இங்கே ஒரு நல்ல கல்லூரியில்கூடச் சொல்லமுடியாது.
நிகழ்வுக்குப் பிந்தைய உரையாடலில் ஆசிரியை ஒருவரும் தன் புனைவெழுத்து முயற்சி பற்றிப் பேசினார். அவரிடம் எப்படி எழுத்தை ஒருவர் அடிப்படையில் தனக்க்கு மட்டுமான ஒரு அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே வைத்திருப்பது என, எந்த வாசிப்பும் கிடைக்காத நிலையிலேயே அது ஓர் அகவிடுதலைக் கருவியாக அமைய முடியும் என பேசினேன்.
அமெரிக்கப் பள்ளியின் ‘மூட்’ என்பதே விந்தையானது. ஜெகதீஷ்குமார் பேச வந்தபோது “மிஸ்டர் கூமா!” என ஒரே ஆரவாரம். ஆனால் அது நட்பான வரவேற்பு. அவர் அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர். அதே வரவேற்புதான் எனக்கும். ஆனால் உரையின்போது மிக ஆழ்ந்த கவனமான முகங்களையே கண்டேன். அமர்வதில் ‘மரியாதை’ எல்லாம் இல்லை. ஆனால் இந்தியப் பள்ளிகளில் நான் வழக்கமாகச் சந்திக்கும் வெற்று விழிகள் ஒன்றுகூட இல்லை.
அமெரிக்கா வந்து தொடர்ச்சியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பயணத்தின் பேருவகை என்பது இந்த இளைஞர்களைச் சந்திப்பதுதான். இவர்களை மட்டுமே கொண்டு ஒரு நிகழ்வை இங்கே உருவாக்கவேண்டும் என்னும் பெருங்கனவை உருவாக்கிக்கொண்டேன்.
மு.குலசேகரனின் தங்கநகைப்பாதை
அன்புள்ள ஜெ,
மு.குலசேகரனின் தங்கநகைப்பாதை என்னும் நாவலை வாசித்தேன். எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது விட்டல்ராவின் போக்கிடம் என்னும் நாவல். அணைக்கட்டு கட்டப்படும்போது ஓர் ஊர் அழிவதைப் பற்றியது போக்கிடம். (இதே கருதான் வைரமுத்து எழுதிய கரிசல்காட்டு இதிகாசம். ஆனால் மிகையுணர்ச்சிகளால் நாவலாக ஆகாமல்போய்விட்ட படைப்பு அது). மு.குலசேகரன் தங்கநாற்கரச் சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதன் மானுட அவலம் பற்றி தன் நாவலை எழுதியிருக்கிறார்.
யதார்த்தமான படைப்பு. இத்தகைய படைப்புகளில் அவலம், துயரம், கீழ்மை எல்லாமே யதார்த்தத்தின் ‘மீட்டர் பிடித்து’ எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்நாவல் அந்த யதார்த்தத்துடன் மிகையான பல கற்பனை நிகழ்வுகளையும் சொல்கிறது. ஆனால் அவையெல்லாம் அந்நிகழ்வுகளை நம்பும் கிராமவாசிகளின் வழியாகச் சொல்லப்பட்டிருப்பதனால் அவையும் யதார்த்தமே ஆகின்றன.
அந்தவகையில் சீரான ஓட்டத்துடன் எழுதப்பட்ட இந்நாவல் ஒரு பெரிய சமகால நிகழ்வை பல்வேறு மனிதர்களின் வழியாகச் சொல்கிறது. பொன்னம்மா அவள் மகனாகிய ஆசிரியர் சுந்தரம் ஆகியோரின் கதை இது. பொன்னம்மாவின் ஆசைக்காக மொத்த உழைப்பையும் சேமித்து விவசாயநிலம் வாங்குகிறார்கள். அது முதலீடு மட்டும் அல்ல, அது ஒருவகையில் மண்ணில் வேரூன்றுவதுதான். ஆனால் சாலை ஒரு வெள்ளப்பெருக்குபோல அதை அள்ளிக்கொண்டு சென்றுவிடுகிறது.
இந்நாவலின் சிறப்பு என்பது யதார்த்தமான ஏராளமான கதாபாத்திரங்கள். பேச்சிக்கிழவி ஒரு குறிசொல்லிபோல வரவிருக்கும் காலத்தைப் பற்றிய அச்சத்துடன் சுந்தரத்தின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறாள். ஒரு சாலை சாலையோரமிருக்கும் ஒரு பாத்திரக்கடையின் பாத்திரங்களில் எல்லாம் விதவிதமாகத் தெரிவதுபோல ஒரே சமூகநிகழ்வு நாகேந்திரன், சுமதி, விஜயா என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு வகையாக நிகழ்வதை நுணுக்கமாகவும் சில இடங்களில் உணர்ச்சிமோதல்கள் வழியாகவும் அவ்வப்போது அதீத நிகழ்வுகள் வழியாகவும் குலசேகரன் சொல்லிச் செல்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு அத்தியாயத்தின் மையமாக ஆகிறது. நாமே ஒரு கிராமத்தில் மெய்யாக வாழ்ந்து அத்தனைபேரையும் சந்தித்து அவர்களிடம் கதைகேட்டு வந்ததுபோன்ற உணர்வை இந்நாவல் உருவாக்குகிறது.
இந்நாவல் மண்ணின் மேல் மனிதனுக்கு இருக்கும் ஆசையைச் சொல்கிறதா என்றால் என் பார்வையில் இல்லை என்றே சொல்வேன். அது ஆசை அல்ல பற்றுதான். விவசாயிக்கு மண் ஓர் உறவு. ஆனால் சாலையை அமைப்பவர்களுக்கு அது ஒரு பொருள். இதுதான் வேறுபாடு. ஆகவே விவசாயி நிலத்தை இழக்கிறான் என்பது ஒரு பொருளாதார நிகழ்வு அல்ல. அதற்கும் அப்பால் அது ஒரு ஆன்மிகமான அழிவுதான்.
இந்நாவலை வாசித்தபோது தோன்றியது ஒன்றுண்டு. என் வாசிப்பு இது. இத்தனை பக்கங்கள் ஓடுவதற்கு இந்த கதைக்கரு போதாது. இதில் ஒரு சாலையின் அழிவு மட்டுமே உள்ளது. அச்சாலை இன்றைய நவீன இந்தியாவின் அடையாளமாக விரிவுபெறவில்லை. அந்தச் சாலைக்கும் கிராமத்துக்குமான உறவு அறமோதலாகவோ தத்துவமோதலாகவோ ஆகவில்லை. ஒரு தரிசனமாக ஏதும் விரிவடையவில்லை. ஆகவே வாசிக்கும்போது சுவாரசியமாக இருந்தாலும்கூட வாசித்து முடிக்கும்போது சுந்தரம் போன்ற சில மையக்கதாபாத்திரங்கள் மட்டுமே மனதிலே எஞ்சுகிறார்கள்.
ஆனால் சமகாலத்தை மிக விரிவாகவும் உட்சிக்கலுடனும் சித்தரித்த முக்கியமான நாவல் என்று இப்படைப்பைச் சொல்லமுடியும்.
எம்.பாஸ்கர்
விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
மழையும் துளிரும்- சாரதி
அன்புள்ள ஜெ,
செப்டம்பர் மாதத்தின் ஒரு மாலைப்பொழுதில் எனக்கும் என் வீட்டிற்குமிடையே இருந்த டயப்லோ மலைத்தொடரை அல்டமாண்ட் கணவாய் வழியே கடப்பதற்கான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அந்த வறண்டு போன மலைத்தொடரின் காய்ந்த புற்களைப் பார்த்துக்கொண்டு காரில் அமர்ந்திருந்தேன். மழையே இல்லாத நீண்ட கோடையின் அந்த இறுதி நாட்களில் காட்டுத்தீக்கு மிஞ்சிய மலைச்சரிவின் புற்கள் எல்லாம் வெயிலில் வாடி வெளிறிப்போயிருந்தன. எங்கள் ஊரைச் சுற்றிலுமிருந்த பாதாம் மரத்தோட்டங்களுக்கு இடையிடையே அந்தக் கரிசல் நிலங்களில் வைக்கோலுக்காக வளர்க்கப்பட்ட புற்கள் ஏற்கனவே அறுக்கப்பட்டு கனசதுரங்களாகக் கட்டப்பட்ட பின், அந்த நிலங்கள் எல்லாம் வெறுமையாய்க் கிடந்தன. ஒரு கனசதுரத்தின் கொள்ளளவுக்கான வாய்ப்பாடு என்ன என்று மிகத்தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் விசு திடீரென்று தொலைபேசியில் அழைத்து, “ஜெ நம் கலிபோர்னியா வளைகுடா பகுதிக்கு வரும்போது அவரைக் கொண்டு ஒரு நாவல் பயிற்சி வகுப்பை நடத்தலாமா?” என்று கேட்டார்.
விசுவின் தீவிரமும் உற்சாகமும் உடனடியாக அடுத்தவருக்கும் பற்றிக்கொள்வது. நானும் அதே உற்சாகத்துடன் “நல்ல யோசனை விசு. கடந்த ஒரு வருடமாக நாம் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகள் எல்லாம் வாசித்து விவாதித்திருக்கிறோம். அடுத்து நாவலை சரியாக வாசிப்பதற்கு ஒரு பயிற்சி வகுப்பு, அதுவும் ஜெவே நடத்துவாரென்றால் நிச்சயம் நாம் எல்லாருமே கலந்து கொள்ளலாம்” என்றேன். “இல்லல்ல… நாவல் வாசிக்கிறதுகில்ல, நாவல் எழுதுவதற்கான பயிற்சி” என்று சொன்னபோது என் உற்சாகமெல்லாம் வடிந்து தயக்கமும் பயமும் சூழ்ந்துகொண்டது. “எனக்கு இன்னும் கடிதமும், கட்டுரையுமே சரியா எழுத வரலை. போன தடவ சொல்வனத்துல வந்த என் கட்டுரையப் படிச்சுட்டு, அடுத்த தடவையாவது உருப்படியா ஏதாவது எழுதுங்கனு பிரசாத் திட்டிட்டார். அதுக்குள்ள நாவலா? நாம வேணும்னா சிறுகதை பயிற்சி முகாம்னு வச்சுக்கலாமா? நாவல் அடுத்த வருஷம்…” என்றேன்.
விசு விடுவதாயில்லை. “இல்ல, இன்னும் ஒரு வருஷத்தை நாம வீணடிக்கக் கூடாது. இதுவே ரொம்ப தாமதம். நாம நிச்சயம் இதை நடத்தலாம். எனக்கு உங்க மேலயும், நம்ம நண்பர்கள் மேலயும் நம்பிக்கை இருக்கு” என்று எப்போதும் போல தன் முடிவில் மிகுந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருந்தார். அவர் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் கால்வாசி என் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்திருந்தால் கூட வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்குமென்ற கற்பனையை ஓரக்கட்டிவிட்டு, “சரி விசு, நானும் கலந்து கொள்கிறேன். ஜெவிடம் திட்டு வாங்காமல் எங்களைக் காப்பற்றுவது உங்கள் பொறுப்பு” என்று கூறி சம்மதித்து விட்டேன்.
பயிற்சி வகுப்புக்கு உங்கள் அனுமதி கிடைத்த ஓரிரு நாட்களுக்குள்ளேயே நிகழ்வுக்கான தேதி, இடம், நிதி என எல்லாமே சட்டென ஒருங்கிவிட்டன. சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலிருந்து மட்டுமல்லாமல் மேலே சியாட்டில் மற்றும் போர்ட்லாந்திலிருந்து கீழே லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் டியாகோ வரை, மேற்கு கடற்கரையின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் நண்பர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். நிகழ்வுக்கான பணிகளுக்கு உதவி கோரி அனுப்பப்பட்ட பட்டியல் சில மணிநேரங்களில் நண்பர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. பூங்கொத்தை வாங்கிவரும் பணிமட்டுமே எனக்கு மிச்சமிருந்தது.
இதற்கிடையே வளைகுடா பகுதியின் வாசகர் வட்டத்தின் முதலாமாண்டு நிறைவை ஒட்டி உங்கள் முன்னிலையில் ஒரு கூட்டமும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, கலிபோர்னியா வளைகுடா பகுதி நண்பர்களின் இந்த வாசிப்பு வட்டம் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது. நண்பர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு எழுத்தாளர் என எடுத்துக்கொண்டு அவரது கதைகளை வாசித்து, அதையொட்டிய எண்ணங்களையும் வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறோம். மாதமொரு முறை நேரில் சந்தித்து இலக்கிய வாசிப்பிலும் விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறோம். வாசிப்பு வட்டத்தின் முதலாமாண்டு நிறைவையொட்டி இம்முறை அசோகமித்திரனின் கதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தோம். இந்த நிகழ்வு உங்கள் அமெரிக்கா பயணத்திட்டத்தோடு இணைந்து கொண்டது எங்கள் நல்லூழ். சாரதா மற்றும் பிரசாத் முன்னெடுப்பில் உங்கள் முன்னிலையில் இந்த முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி நடக்குமென உறுதி செய்யப்பட்டது. நண்பர்கள் சத்யா மற்றும் பாலாஜியுடன் இணைந்து நானும் அசோகமித்திரனின் ஒரு கதையைப் பற்றிப் பேசுவதற்கு ஒத்துக்கொண்டிருந்தேன்.
அக்டோபர் 8 புதனன்று உங்கள் வருகை, வெள்ளிக்கிழமை மாலை எழுத்தாளர் அருண்மொழி நங்கை மற்றும் உங்கள் முன்பு பேச வேண்டிய 7 நிமிட உரை, சனிக்கிழமை சான் மாட்டியோவிலும், சாக்ரோமெண்டோவிலும் உங்கள் நூலறிமுக நிகழ்வு, இறுதியாக ஞாயிறு அன்று முழுநாள் நாவல் பயிற்சி வகுப்பு என அடுத்தடுத்து நிகழ்ச்சி நிரல் உறுதியாகியது. மற்ற யாவற்றையும் விட நாவல் பயிற்சி வகுப்புதான் அதிகமான பதட்டம் தந்தது. இந்த பிரமோதினி வீட்டில் இன்னும் கொஞ்சம் கண்டிப்போடு இருந்து விசுவை கட்டி வைக்கக்கூடாதா என்று தோன்றியது. பின்னர் நண்பர்களிடம் எல்லாம் பேசி அவர்களுக்கும் வகுப்பு குறித்த அதே குழப்பமும் பயமும் தான் எனத் தெரிந்துகொண்ட பிறகு தான் கொஞ்சம் நிம்மதி. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
புதன்கிழமை மதியமாக நீங்கள் வருவதாக இருந்ததால் உங்களையும் அருண்மொழி அக்காவையும் நேரில் வரவேற்க, சான் பிரான்சிஸ்கோவிலிருக்கும் என் அலுவலகத்தில் இருந்து நேரடியாக விமான நிலையத்துக்கு வருவதாகத் திட்டம். என் மகள் மதுராவிற்கு அந்த வாரம் முழுக்க இலையுதிர்கால விடுமுறையாதலால் உங்களை வரவேற்க தானும் வருவேன் எனச்சொல்லி Stories of the True நூலை எடுத்து பையில் கட்டிக்கொண்டு கூடவே வந்துவிட்டாள். விமான நிலையத்திற்கு வந்துசேரும்வரை இருந்த படபடப்பெல்லாம் உங்களை மீண்டும் நேரில் கண்டவுடன் கரைந்து மனம் அமைதியானது. அங்கிருந்து ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டபடி, அல்ல அதற்கும் மேலாகவே மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. எதிர்பார்க்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே உங்கள் விமானம் வந்து சேர்ந்ததால், நண்பர்கள் வந்து சேரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. சோற்றுக்கணக்கின் ஆங்கில வடிவை நானும் மதுராவும் சேர்ந்து வாசித்ததிலிருந்து கெத்தேல் சாகிப்பை மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு. எல்லோருக்கும் முன்பாக வந்து உங்களையும் அருண்மொழி அக்காவையும் வரவேற்றதிலும், சோற்றுக்கணக்கு கதையை ஒரு எளிய ஓவியமாக வரைந்து உங்களுக்கு அளித்து, புத்தகத்தில் முதல் கையெழுத்தை உங்களிடமிருந்து பெற்றதிலும் ஏகப்பெருமை அம்மணிக்கு.
அக்டோபர் 10 அன்று அசோகமித்திரனின் கதைகளைப் பற்றிய உரைநிகழ்வு சாரதா பிரசாத் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. வளைகுடா பகுதி நண்பர்கள் அனைவரும் வந்திருந்து விவாதத்திலும் கலந்து கொண்டனர். உங்கள் முன் உரையாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்ததும், கதை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டதும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மறுநாள் சான் மெட்டியோவில் காலையிலும் சேக்ரமெண்டோவில் மதியத்திலும் நூலறிமுக நிகழ்வும் இனிதே நடந்தேறியது. இரு நிகழ்விலும் இரண்டாம் தலைமுறையினர் Stories of the True நூலைப் படித்து அந்தக் கதைகளைப் பற்றி சிறப்பாக உரையாற்றினர்.
இரு நாட்களும் உங்களோடு தொடர்ந்து இருந்ததன் நற்பலனாக ஞாயிறு அன்று நாவல் பயிற்சி வகுப்பில் உற்சாகமாகக் கலந்து கொள்ளமுடிந்தது. நாவலுக்கான எண்ணம் எதுவும் மனதில் தற்போதைக்கு இல்லாவிட்டாலும் கூட உங்களிடமிருந்து நேரடியாக அடையும் கல்வி எத்தனை முக்கியம் என்பதை முழுதாக மனம் உணர்ந்திருந்தது. நாம் ஏன் நாவல் எழுத வேண்டும், நாவல் ஏன் எழுதப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, நாவலின் கரு, கதைக்கட்டு, நடை, கதாப்பாத்திரங்களின் வளர்ச்சி என்பதையெல்லாம் விளக்கி, நாவலின் தரிசனமாவது எது எனத் தெளிவுபடுத்தினீர்கள். ஒரு நல்ல நாவலின் முதல் அத்தியாயம் சிறந்த சிறுகதையாக அமைவதை நீங்கள் சுட்டிக்காட்டியபோது, நினைவில் நிற்கும் பல நல்ல நாவல்களோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது.
“எந்தப் பயிற்சியும் ஆளுமைப் பயிற்சியே என்று ஒரு சொல்லை நித்ய சைதன்ய யதி சொல்வதுண்டு. ஒரு மேடையுரைப் பயிற்சி, ஒரு தியானப் பயிற்சி மட்டும் அல்ல; ஒரு சிறு கைத்தொழில்பயிற்சி கூட நம்மை அறியாமலேயே நம் ஆளுமையை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயிற்சி உண்மையான ஆசிரியர்களால் அளிக்கப்படவேண்டும். அதை நாம் நம்மை அளித்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.” என்று நீங்கள் ஒரு வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த நாவல் பயிற்சி வகுப்பு ஆகச்சிறந்த ஆசிரியரால் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நண்பர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறோம் என்றும், அந்த கல்விக்காக உண்மையாகவே நாங்கள் முயல்கிறோம் என்றும் நிச்சயம் நம்புகிறேன்.
முழுநாள் வகுப்புக்குப் பின்னரும் கூட அத்தனை எளிதில் விடைபெற்றுச் சென்றுவிட யாரும் தயாராக இல்லை. அதன் பின்னரும் உங்களோடு உரையாடியும், நண்பர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். மனதிலுள்ள கேள்வியைச் சரியாகச் சொல்ல முடியாமல் உளறிவிடுவது எனக்கு வழக்கம்தான் என்றாலும், உங்கள் முன்னர் அது இரட்டிப்பாகிவிடுகிறது. கடிதம் எழுதும்போது இருக்கும் தைரியம் நேரில் வருவதில்லை. அன்றும் சித்தார்த்தா நாவலைப் பற்றி எதையோ உளறி, ஒழுங்காகப் படி என்று உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன். கூடவே இருந்த பத்மநாபாவும் உங்களோடு சேர்ந்து கொண்டார். படித்த எல்லாவற்றையும் சரியாக ஞாபகம் வைத்து இப்படித்தான் அடிக்கடி மடக்கிவிடுவார். என் கணக்குப்படி என் வயதளவு அவர் வாசிப்பனுபவம். அவர் கணக்குப்படியோ அவர் வயதளவு.
வாசிப்பனுபவக் கடிதம் என்ற நிலையிலிருந்து ஒரு நல்ல இலக்கியக் கட்டுரை அல்லது நூல் மதிப்புரை எழுத என்ன செய்யவேண்டும் என்ற என் கேள்விக்கு, “கதைச் சுருக்கம் எழுதக் கூடாது, திரைப்பட நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை எழுதி கட்டுரையை மலினப்படுத்திவிடக் கூடாது (Don’t Trivialize). மாறாக உங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு அந்த நூல் எப்படி தொடர்பு கொள்ளுகிறது என்று எழுதலாம். நூலாசிரியரை உங்கள் தரத்திற்கு இழுக்கக் கூடாது. நீங்கள் தான் அந்தத் தளத்திற்கு உயரவேண்டும்” என்ற உங்களின் பதில் தெளிவான விளக்கத்தைக் கொடுத்தது. இறுதியாக நண்பர் பன்சியும் அவரது மனைவியும் அத்தனை பேருக்கும் அளித்த கல்யாண விருந்தோடு அந்த நாள் இனிதே நிறைவுற்றது.
வளைகுடா பகுதி நிகழ்ச்சிகள் முடிந்து நீங்கள் சென்றபின்னர் அந்த நாட்களை நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருவது நண்பர்களோடு கூடி இருந்து மகிழ்வாகச் சிரித்துக் கொண்டேயிருந்ததும், அந்த மகிழ்வுடனே உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்ததும் தான். எங்கள் வாசகர் வட்டம் அடுத்து என்ன செய்யவேண்டுமென உங்களிடம் கேட்டபோது, எப்போதும் மகிழ்ச்சியோடு கூடுங்கள், ஒன்றாக சேர்ந்திருந்து விவாதியுங்கள் என்று வேதம் கூறுவதையும், புதிய நண்பர்களுக்கான வாசலைத் திறந்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டீர்கள். நிச்சயம் அதுவே எங்கள் முதல் இலக்காக இருக்கும். சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் நடக்கும் எங்கள் வாசகர் வட்டத்தில் கலந்து கொள்ள் விரும்பும் நண்பர்கள் vishnupurambayarea@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளலாம்.
ஜெ, நீங்கள் இங்கிருந்து சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு பருவத்தின் முதல் மழை வலுத்துப் பெய்தது. பல மாதங்களாக வெயிலில் காய்ந்து வெறுமையாகக் கிடந்த கரிசல் நிலங்களில் எல்லாம் இப்போது சின்னஞ்சிறு புற்கள் பசுமையாகத் துளிர்த்து நிற்கின்றன. வெளிறிய மஞ்சள் நிற மலைச்சரிவுகள் புத்திளம்பச்சை சூடி அடுத்த பருவத்திற்குத் தயாராகி நிற்கின்றன. உங்களிடம் பெற்றுக்கொண்ட கல்வி அந்த மழையென எங்களுள் நிறைக. பசும்புல்லெனத் துளிர்த்து எழுக.
நன்றி!
சாரதி
கஸலின் கனிவு- அருள் இனியன்
இந்த வகுப்பு எனக்கு கிடைத்த அனுபவங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதுகிறேன்.இந்தியப் பண்பாட்டை இந்திய இலக்கியத்தை முழுதும் புரிந்து கொள்ள, உருது இலக்கியத்தையும் தெரிந்து கொள்வதின் அவசியத்தை உணர்த்தி, அதை இவ்வாறான அரிய அனுபவமாக அளித்தமைக்கு தங்களுக்கும் முழுமையறிவு குழுவிற்கும் மனமார்ந்த நன்றி.
கஸலும் கனிவும்- அருள் இனியன்
This cultural and social isolation leads Muslims to associate with known atheists and Hindu detractors. Such associations are risky because they strengthen the anti-Muslim propaganda that claims Muslims are anti-Hindu, further isolating them.
“In the age of fascism.”October 28, 2025
தற்குறிகள் யார்?
தற்குறி என்ற சொல் திடீரென்று அரசியலில் ஒரு கலைச்சொல் போல ஆகிவிட்டிருக்கிறது. தற்குறி என்ற சொல்லுக்கு என்ன பொருள்? தற்குறிகள் உண்மையில் யார்? அமெரிக்காவில் இருந்து ஒரு சிறிய திடீர் உரை.
புத்தகத்தின் காலடித்தடம்
அமெரிக்காவின் வேரும் நீரும்
மதுராவும் இலக்கியமும்.
அந்தக்குழந்தையின் பொம்மை
இந்த அமெரிக்கப் பயணத்தின் முதன்மை நோக்கம் Stories of the True நூலின் ‘விளம்பரம்’தான். அமெரிக்கப் பதிப்புலகில் இது எழுத்தாளர் பதிப்பாளருக்குச் செய்யவேண்டிய கடமையாகவும் உள்ளது. அத்துடன் எனக்கும் இங்கே உள்ள இலக்கிய வாசகர்களை, குறிப்பாக அடுத்த தலைமுறை தமிழ்வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்னும் நோக்கம் உள்ளது. இதுவரையிலான அமெரிக்கப் பயணங்களில் இளையதலைமுறையினருடன் எந்த உரையாடலுமே நிகழவில்லை. ஆனால் இந்நூலுக்குப் பின் தொடர்ச்சியான ஓர் உரையாடல் நிகழ்கிறது.
சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் வந்திறந்திங்கியபோது இருந்த சிறு தயக்கமும் தொடர்ச்சியான நான்கு நிகழ்வுகளுக்குப் பின் விலகி, புத்தகநிகழ்வுகளில் சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். என் ஆங்கில உரையாடல்திறன் இப்போதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே என் எண்ணம். ஆனால் என் தமிழ் உரையாடல்திறன் பற்றியும் ஆழமான ஐயம் உண்டு.
லாஸ் ஆஞ்சல்ஸ் நகரில் இருந்து 16 ஆம் தேதி கிளம்பி சியாட்டில். அங்கே ஒரு விடுதியில் தங்கினோம். நண்பர்கள் சங்கர் பிரதாப், மதன், ஶ்ரீனி ஆகியோர் வரவேற்றனர். நண்பர் சுஜாதாவை அவருடைய மகள் திருமணம் காரணமாக சந்திக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் வருவதற்கு முன்னரே விடுதியில் உணவு எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
சியாட்டில் அருகே இருக்கும் பனிக்குகையைப் பார்க்கச் சென்றிருந்தோம். (அந்தக் குழந்தையின் பொம்மை) இன்னொருநாள் அருகே Snoqualmie Falls அருவியையும், பழங்காலத்தில் மரம்வெட்டி ஏற்றுமதி செய்யும்பொருட்டு உருவாக்கப்பட்ட தொன்மையான ரயில்நிலையத்தையும் பார்த்தோம்.(Northwest Railway Museum). நண்பர் மகேந்திரராஜன் வான்கூவரிலிருந்து வந்திருந்தார். (தமிழ்விக்கி இணையதளத்தின் முதற்கட்ட அமைப்பாளர் அவர்தான்)
18 ஆம் தேதி சியாட்டில் நகரில் Third Place Books என்னும் புத்தக்கடையில் நூலறிமுக நிகழ்வு. இந்த நிகழ்வுகளின் முதன்மைநோக்கம் அந்த விற்பனையகத்தின் மின்னஞ்சல்களுக்குச் செய்தி செல்வதும், அங்கே சுவரொட்டி சிலநாட்கள் இருப்பதும்தான். குறைவாகவே பங்கேற்பாளர்கள் வருவார்கள். அதிலும் வேலைநாட்களில் அதிகம் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் தமிழ்நண்பர்கள் உட்பட பலர் வந்தமையால் நிகழ்வுக்கு சிற்றரங்கு நிறையுமளவுக்குக் கூட்டம் இருந்தது.
விற்பனையக மேலாளர் என்னை அறிமுகம் செய்து பேசினார். இளம் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஜோஷிதா என்னை அறிமுகம் செய்து பேட்டியெடுத்தார். மதன் என் நூல் பற்றிப் பேசினார். ஜோஷிதா மற்றும் வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொன்னேன். அங்கே இருந்த மொத்த நூல்களும் விற்றுப்போயின. பலர் கையெழுத்திட்ட பிரதிகள் வாங்க மேலும் விரும்பியமையால் விற்பனையகத்தின் முத்திரையுடன் அளிக்கப்பட்ட ஒட்டுத்தாளின் கையெழுத்திட்டேன். அவர்களின் விலாசத்திற்கு நூல்கள் அனுப்பப்படும் என்றார்கள்.
அன்று இரவில் எங்கள் தங்குமிடத்திற்கு இருபதுபேர் வந்தனர். இரவு பதினொரு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் உரையாடல்களில் பொதுவாக தெளிவாகவே அரசியலை, இலக்கிய வம்புகளை தவிர்த்துவிடுவோம். முழுக்கமுழுக்க தமிழிலக்கியம், மெய்யியல் பற்றித்தான். பேசிப்பேசி என் கருத்துக்களை இப்போது கூரிய சொற்றொடர்களில் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். அத்துடன் வாசகர்களின் உளநிலை பற்றிய தயக்கங்களும் இப்போதில்லை. என் கருத்துக்களுடன் ஒத்துச்செல்லாவிட்டாலும் கருத்துக்களின் முரணியக்கம் பற்றிய அறிமுகமுடையவர்களே என்னுடன் நீடித்து பயணம் செய்ய முடியும் என அறிந்திருக்கிறேன்.
19 ஆம் தேதி சியாட்டிலில் இருந்து விமானத்தில் ஆஸ்டின் வந்தோம். அமெரிக்கா விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் (Vishnupuram Literary Circle USA) ஒருங்கிணைப்பாளர் நண்பர் ஆஸ்டின் சௌந்தர் இல்லத்தில் தங்கினேன். அங்கு ஒரு சிறு வாசகர் சந்திப்பு. அங்கே எங்களைச் சந்திப்பதற்காக திருவாளர் துடுவ் (அசல்பெயர் துருவ்) தன் பெற்றோர் சங்கீதா, வெங்கட் ஆகியோருடன் வந்திருந்தார்
டாலஸ் நகரில் விஷ்ணுப்ரியா – கிருஷ்ணகுமார் இல்லத்தில் தங்கினோம். பிரியா கிருஷ் என்ற பேரில் பாடிவரும் விஷ்ணுப்ரியா விஷ்ணுபுரம் அமைப்பின் நிகழ்வுகளில் பாடுபவர். இப்போது சில திரைப்படங்களுக்கும் பாடி வருகிறார். அவர் மகன் அவ்யக்த் துருவின் அதே வயது. அதே கொப்பளிப்பு.
டாலஸ் நகரில் உள்ள Barnes & Noble புத்தகக் கடையில் அக்டோபர் 22, 2025 மாலை நடந்த சந்திப்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்ற நூலறிமுக நிகழ்வுகளிலேயே அதிகமானவர்கள் பங்கேற்றது என்று தோன்றுகிறது. புத்தக்கடை நிகழ்வுகளுக்கு அமெரிக்காவில் மிகப்புகழ்பெற்ற ஆசிரியர்களுக்குக்கூட ஐம்பது பேர் வருவது அரிது. அறுபதுபேருக்குமேல் வந்திருந்த நிகழ்வு அந்த இடத்தை முழுக்க நிரப்புவதாக அமைந்தது.
இந்நிகழ்விற்கு வந்த இந்திய வம்சாவளியல்லாத சில அமெரிக்க வாசகர்களைச் சந்தித்தேன். இருவர் லத்தீனமேரிக்காவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் அவர்கள் லத்தீனமேரிக்க நாவல்களை தொடர்ந்து வாசிப்பவர்களாகவும், பொதுவான இலக்கிய ஆர்வமுடையவராகவும் இருந்தனர். ஒருவர் இந்தியாவுக்கு மூன்றுமுறை வந்திருந்தார். கேரளத்திற்கு மட்டும். கேரளத்திற்கு எதற்காக என்றேன். கண்களை சிமிட்டி “தாவரம்” என்றார்.
இந்த விழாவிலும் முக்கியமான அம்சம் என்பது அமெரிக்க இளம் வாசகர்களின் பேச்சுக்கள்தான். அமெரிக்காவில் வளர்ந்தவர்களுக்கு இந்நூல் எந்தவகையில் பொருள்படுகிறது என்பது எனக்கு ஆர்வமூட்டும் விஷயம். அவர்கள்தான் இனிமேலும் இந்தியாவிலிருந்து இங்கே வரவிருக்கும் படைப்புகளுக்கான எதிர்கால வாசகர்கள். அவர்களிடமிருந்தே அமெரிக்க வாசகர்களுக்கு இந்நூல்கள் சென்றடைய முடியும் – அப்படித்தான் துருக்கிய, கொரிய நூல்கள் வாசகர்களைச் சென்றடைந்தன. (அவற்றுக்கு அந்த அரசுகளின் பொருளியல் ஆதரவும் இருந்தது என்பதும் முக்கியமான அம்சம்தான்).
டாலஸ் விழாவில் மூன்று உரைகள். ஜனனி, மீனாட்சி இருவரும் மிகச்சிறுவயதினர். அவர்களும் இந்நூலின் சிறுகதைகளை வாசித்து, உள்வாங்கி, விவாதித்துள்ளனர் என்பது ஆச்சரியமானதுதான். இத்தகைய இலக்கியநூல்களை வாசிக்கவும், அவற்றின் குறியீடுகளையும் கருத்தில்கொண்டு உள்வாங்கவும் அமெரிக்காவிலுள்ள கல்விமுறை அவர்களைப் பயிற்றுவிக்கிறது. கூடவே தங்கள் வாசிப்பை பள்ளிவகுப்புகளில் சொல்வதற்கான பயிற்சியும் அவர்களுக்கு உள்ளது.
சித்தார்த் உயர்நிலைப்பள்ளி மாணவர். கதைகளிலுள்ள பண்பாட்டுச் சிக்கல்களை நுணுக்கமாக கவனித்து பேசினார். பேச்சுக்குப்பின்னர் நிகழ்ந்த கேள்விபதில்களிலும் சரி, நிகழ்ச்சி முடிவுக்குப் பின் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடலிலும் சரி பல கூரிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு எதிர்காலத்தில் நூல்கள் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. எழுத்தின் வழிமுறைகள் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார். அது மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்று தோன்றியது. இந்திய – தமிழ்ச் சமூகத்தில் இருந்து எழுத்தாளர்கள் உருவாகி வந்தாகவேண்டும் என்பதே என் பேச்சின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருந்தது.
என் உரையை இந்திய-அமெரிக்க இளம்எழுத்தாளர் ஆர்.எஸ்.சஹா ஒருங்கிணைத்தார். அவருடைய கேள்விகளுக்குப் பின் நான் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அறம் கதைகள் எழுதப்பட்ட மனநிலை, எழுத்து என்னும் செயல்பாட்டின் நுணுக்கங்கள் முதல் கருத்தியலுக்கும் இலட்சியவாதத்திற்கும் இடையிலான முரண்பாடு வரை பலவகையான கேள்விகள்.
டாலஸிலிருந்து விமானத்தில் ஒருநாள் முழுக்கப் பயணம் செய்து ராலே. ராலே ராஜன் என்ற பேரில் இசையமைத்துவரும் ராஜன் சோமசுந்தரம் சங்கப்பாடல்கள், கம்பராமாயணம் உள்ளிட்ட வெவ்வேறு இசைக்கோலங்களை அமைத்தவர். வெண்முரசு இசைக்கோலம் அவர் அமைத்ததே. ஃபோர் சீசன்ஸ் என்னும் மலையாளப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்னொரு தமிழ்ப்படத்தின் இசைக்கோப்பு முடிந்துள்ளது.
இருபதாண்டுக் காலமாகவே ராஜன் என் அணுக்க நண்பர். 2019ல் நான் ஒரு ரவுடியால் தாக்கப்பட்டபோது ராஜன் என்னை அழைத்து ஒரு மாறுதலுக்காக உடனே அமெரிக்கா வரும்படி அழைத்தார். அமெரிக்காவின் இலையுதிர்காலம் அது. வைட் மௌண்டைன் வழியாக அன்று சென்ற பயணம் என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நினைவுகளில் ஒன்று.
ராலேயில் ஒரு நூலறிமுக நிகழ்வு. ஃப்ளை லைஃப் புக்ஸ் என்னும் புத்தக்கடையின் நிகழ்விலும் இளம் வாசகர்கள் பேசினார்கள். நூலகக்கடையின் அலெக்ஸி என்னை அறிமுகம் செய்தார். இளம் வாசகி வர்ஷா என் படைப்பு பற்றிப் பேசினாள். (வர்ஷாவின் முதல் கதை வெளியாகியுள்ளது)
என் கதைகள் பற்றிய உரைகளில் தியான்தீபின் உரை வேறுபட்டது. அவர் பள்ளியிறுதி மாணவர். பேச்சுப்பயிற்சி கொண்டவர். ஆகவே உரையை அமெரிக்காவுக்கே உரிய நாடகீயமான உச்சரிப்பு, கையசைவுகளுடன் உணர்ச்சிகரமாக நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்குப் பின் பேசியபோதும் அவருக்கு அக்கதைகள் அவருக்கு அளித்த தீவிர உணர்ச்சிநிலைகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையின் முக்கியமான அனுபவங்கள் என நினைக்கிறேன். ஆகவே இவற்றைப் பற்றிய என் உளப்பதிவுகளை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஏனென்றால் இன்னும் நூல்கள் வெளிவரவுள்ளன. இன்னும் அதிக நிகழ்வுகள் வரக்கூடும். ஆனால் இது இந்தியாவுக்கு வெளியே என் முதல்நூல். கிட்டத்தட்ட 1990ல் ரப்பர் வெளியானபோது இருந்த அதே மனநிலைதான்.
இது என் நூல் சென்ற காலடித்தடத்தின் மீது நான் நடந்துசெல்வது என்று தோன்றியது. ஒரு வனவிலங்குபோல அது இயல்பாகத் தன் பாதையைத் தெரிவுசெய்து சென்றுகொண்டிருக்கிறது.
தில்லானா மோகனாம்பாள்
கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) எழுதிய நாவல். இசைவேளாளர் வாழ்க்கையின் பின்புலத்தில் மோகனாம்பாள் என்னும் நடனமங்கைக்கும் சிக்கல் சண்முகசுந்தரம் என்னும் நாதஸ்வர வித்வானுக்கும் இடையிலான காதலை விவரிக்கிறது. 1957 முதல் ஆனந்த விகடனில் வெளிவந்த புகழ்பெற்ற தொடர்கதை. 1970-ல் நூலாக வெளிவந்தது. 1968-ல் திரைப்படமாகவும் வெளிவந்தது.
தில்லானா மோகனாம்பாள் – தமிழ் விக்கி
ஙப் போல் வளை – அனுபவங்கள்
ங போல் வளை. கடிதம்
அனலோனை வாழ்த்தும் வேதச்சொல்லை உரைத்தபடி மென்விறகை முதல் அடுப்பில் அடுக்கிவிட்டு சிக்கிமுக்கியை உரசி எரியெழச் செய்தான். எரி தயங்கியபடி கொழுந்தெழுந்து நின்றாட அதை நோக்கியபின் வலவன் ஒரு சிறிய பாளையை எடுத்து அப்பால் நாட்டினான். தீக்கொழுந்து காற்று இல்லாத அறைக்குள் என அசைவிலாது நின்று சுடர்கொண்டது. அடுத்த அடுப்பை அவன் பற்றவைத்தபோது வலவன் அத்தழலாட்டத்தை நோக்கி பிறிதொரு இடத்தில் ஒரு தட்டியை நிறுத்தினான், அந்தக் கணக்கு என்ன என்று அறிய சம்பவன் கூர்ந்து நோக்கினான். எவ்வகையிலும் அதை புரிந்துகொள்ள முடியவில்லை.
அனைத்து அடுப்புகளும் எரியத் தொடங்கியபோது அடுப்புக்கு ஒன்று என காற்றுத்தடுப்புகள் நின்றிருக்க தழல்கள் காற்றால் தொடப்படாமல் எரிந்தன. அவர்களின் ஆடைகளையும் குழல்களையும் கலைத்து அளைந்து சென்ற கானகக் காற்று அத்தழல்களை அறியவேயில்லை என்று தோன்றியது.
வெண்முரசு, நீர்க்கோலம் (49).
சம்பவன் முதல் முறை சமைக்கப் போகிறான். அதுவும் அரச குடிகளுக்கு. சிறு தவறென்றால் தலை போகும் அபாயம் உண்டு. அவர்கள் இருப்பதோ கரவுக்காடு. புதிதாக கூரை மட்டுமே என்று அமைக்கப்பட்ட அடுமனை. காற்று, அடுப்புத்தழலை வெம்மைகொள்ளச் செய்யாதே, சுற்று சுவர் எழுப்ப காலமும் இல்லை என சம்புவன் கலங்கி நிற்கையில், வலவன் (பீமன்) பாளையை வைத்து தழல்களை, கானகக் காற்று அறியாமல் எறியச்செய்தான்.
ஆம், வலவன் போலவே, என்னுள்ளும் சுடரை நின்றாட வைத்திருக்கும் குருஜி சௌந்தர் அவர்களின் ஒரு பாளை தான் ‘ஙப் போல் வளை – ஒரு யோகப்புத்தகம்.
மரபார்ந்த யோக மாணவனான எனக்கு, பஞ்ச கோஷங்கள், பஞ்ச பிராணன், நாடிகள், த்ரயக் தனாவ் எனப்படும் மூன்றடுக்குப் பதற்றங்கள், வாழ்வின் ஆறு நிலைகள், தமோகுணத்தின் ஐந்து நிலைகள், யோகத்தின் எட்டு அங்கங்கள், சங்கல்பம், சித்தாகாசம், முக்குணங்கள், என முதல் இருபது அத்தியாயங்களை படித்ததும், ஒருவருட யோக கல்வியின் பாடத்திட்டம் நிறைவடைந்தது போல இருந்தது.
BKS ஐயங்கார் அவர்கள் எழுதிய ‘நலம் தரும் யோகம் ( Lights on Yoga , Lights on Pranayama)’ தான் ‘ஙப் போல் வளை‘ எழுத உந்து சக்தியாக இருந்ததாக குருஜி பதிவிட்டுள்ளார். அந்த பதிவிலே “யோகமரபு சொல்லும் ஆசனங்களும் , பிராணாயாமங்களும் மட்டுமே இதில் (நலம் தரும் யோகம்) பேசப்படுகிறது, தாரணை , தியானம் போன்றவை பற்றிய மேலோட்டமான பார்வையை முன்வைக்கிறார். அதுசார்ந்த பெரும்பாலும் பயிற்சிகளை இந்த நூலில் கொடுக்கவில்லை என்பது அதன் முக்கியத்துவம் கருதி மிகக்கவனமாக கையாளப்பட்டிருக்கிறது.
இந்நூலில் பதினோரு வகையான அசைவுகளை கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசனங்களை குறிப்பிடுகிறார். இவை அனைத்துமே நிச்சயமாக ஒரு தேர்ந்த யோக ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளவேண்டியவை, ஏனெனில் யோகத்தின் பக்கவிளைவுகளை நாம் பெரிதாக பேசுவதில்லை, அதன் பலன்களை மட்டுமே விதந்தோதி பெருமையை சொல்லி கேள்விப்படுகிறோம், தவறான யோகப்பயிற்சிகளால் உடலளவில் பாதிப்படைந்து அறுவைசிகிச்சை வரை தங்களை கொண்டு சென்றவர்கள் பதிமூன்று சதவிகிதம் பேர் உலகம் முழுவதுமே அவதிக்குள்ளாகின்றனர். என்பதையும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டிய நேரமிது.” என்று கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, ‘ஙப் போல் வளையில்‘, ஆசனங்கள், பிராணாயாமங்கள், தாரணை, தியானம், யோகம்–தாந்திரீகம்–ஆயுர்வேதம் இணைவு ஆகியவற்றுடன் யோகத்தின் பக்கவிளைவுகளை குறித்தும் எழுதியுள்ளார்.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் நிலப்பகுதியில் பிடிக்கப்பட்ட போது, தன்னிடம் இருந்த நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை மென்று விழுங்கி அழிக்க முயற்சி செய்ததாக செய்தி படித்திருப்போம். மிக் – 21 விமானத்தில் பறந்தாலும், நான்காக மடித்து பாக்கெட்டில் வைக்கும் அளவு ஒரு வரைபடத்திற்கான தேவை இருக்கிறது.
தகவல்களால் நிரம்பியிருக்கும் இன்றய உலகில், யோகா குறித்து, பொது அறிதலுக்கான அப்படையான ஒரு வரைபடமாகவும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். மரபார்ந்த குருகுலத்தில் பதினெட்டு ஆண்டுகள் பயின்று, இந்த நூற்றாண்டுக்கான, தேவையை அறிந்து, முழு நேர யோக ஆசிரியராக பயிற்சி வழங்கி வரும் குருஜியின் அனுபவ அறிவு நம்பகமானது.
இதில், நமக்கான யோக பள்ளியை தேர்ந்துடுப்பது எப்படி, அளவான பயிற்சியின் அவசியம், காலத்திற்கு ஏற்ற கருவி, சர்வலோக நிவாரணி எனும் மாயை, அமானுஷ்ய கருத்துக்களை கையாள்வது, தங்கள் இனம்/நாடுதான் தொடர்புபடுத்துவது, ஆதாரமற்ற தகவல்களால் காலத்தால் பின்னோக்கி செல்வது, என பல தகவல்களையும் எழுதியுள்ளார்.
மனித வாழ்வை, ஐந்து கோஷங்களாக வகைப்படுத்தி, அவற்றை ஒருங்கிணைத்து அடையப்பெறும் விடுதலை நிலை குறித்தும், அதன் வழி, உடல், உயிராற்றல், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கிடைக்கும் தீர்வும், விடுதலையும் குறித்த யோக தத்துவங்களை விளக்கி. அதன் தொடக்கமாக, ஒவ்வொருவரும், தனக்கான நாற்பது நிமிட பயிற்சி திட்டம் தயாரிப்பது குறித்த விளக்கத்தை நான் மிகவும் முக்கியமாக கருதுகிறேன்.
அது, “Start a little, do a little” ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி தடைகளை தாண்டி தொடர் சாதகனாக இருக்க கூறிய அறிவுரை. காந்தியின் நிரூபிக்கபட்ட வழி.
சென்ற மாத வகுப்பில், திறந்த வானின் கீழ், சிறிய கூடாரத்தில், நிம்மதியாக உறங்கி எழுந்ததும், யானைப்பதத்தின் ஒலியாய் நானறியாமல் இருந்த பயிற்சியின் பலனை அறிந்து கொண்டேன். குருஜியிடம் சென்று சொன்னேன், “யோகா எனக்கு வேலை செய்கிறது”.
இரண்டாண்டுகளுக்கு முன்பு, வீட்டிலிருந்து கிளம்பி பயம், பதட்டத்துடன், நித்யவனம் யோக முகாம் வந்ததையே, ஒரு சாதனையாக கடிதம் எழுதிய நான், ஆழ்ந்து உறங்கியிருக்கிறேன், முற்றிலும் புதிய இடத்தில்.
உடல், உயிராற்றல், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய தீர்வும், விடுதலையும் குருஜியின் வழிகாட்டலின் படி யோகம் கொடுத்துருக்கிறது. இந்த படத்திட்டத்தையும், அதன் பயிற்சி புத்தகம் போல இருக்கும், ஙப் போல் வளையையும் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
ஆம்! நல்லாசிரியரின் துணை கொண்டு, இனி யோகம் பயில்வோம்.
சக்தி
புதுவை வெண்முரசு கூடுகை 87
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல் நிறையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
புதுவை வெண்முரசுக் கூடுகையின் 87 வது அமர்வு 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் நண்பர் இரா.விஜயன் உரையாற்றுவார்.
நிகழ்விடம் :
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி:
வெண்முரசு நூல் – 9.
“வெய்யோன்”
பகுதி 9 மயனீர் மாளிகை – 70 – 76
அத்தியாயம். (7 – 13 )
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers



