புத்தகத்தின் காலடித்தடம்
அமெரிக்காவின் வேரும் நீரும்
மதுராவும் இலக்கியமும்.
அந்தக்குழந்தையின் பொம்மை
இந்த அமெரிக்கப் பயணத்தின் முதன்மை நோக்கம் Stories of the True நூலின் ‘விளம்பரம்’தான். அமெரிக்கப் பதிப்புலகில் இது எழுத்தாளர் பதிப்பாளருக்குச் செய்யவேண்டிய கடமையாகவும் உள்ளது. அத்துடன் எனக்கும் இங்கே உள்ள இலக்கிய வாசகர்களை, குறிப்பாக அடுத்த தலைமுறை தமிழ்வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்னும் நோக்கம் உள்ளது. இதுவரையிலான அமெரிக்கப் பயணங்களில் இளையதலைமுறையினருடன் எந்த உரையாடலுமே நிகழவில்லை. ஆனால் இந்நூலுக்குப் பின் தொடர்ச்சியான ஓர் உரையாடல் நிகழ்கிறது.
சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் வந்திறந்திங்கியபோது இருந்த சிறு தயக்கமும் தொடர்ச்சியான நான்கு நிகழ்வுகளுக்குப் பின் விலகி, புத்தகநிகழ்வுகளில் சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். என் ஆங்கில உரையாடல்திறன் இப்போதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே என் எண்ணம். ஆனால் என் தமிழ் உரையாடல்திறன் பற்றியும் ஆழமான ஐயம் உண்டு.
லாஸ் ஆஞ்சல்ஸ் நகரில் இருந்து 16 ஆம் தேதி கிளம்பி சியாட்டில். அங்கே ஒரு விடுதியில் தங்கினோம். நண்பர்கள் சங்கர் பிரதாப், மதன், ஶ்ரீனி ஆகியோர் வரவேற்றனர். நண்பர் சுஜாதாவை அவருடைய மகள் திருமணம் காரணமாக சந்திக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் வருவதற்கு முன்னரே விடுதியில் உணவு எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
சியாட்டில் அருகே இருக்கும் பனிக்குகையைப் பார்க்கச் சென்றிருந்தோம். (அந்தக் குழந்தையின் பொம்மை) இன்னொருநாள் அருகே Snoqualmie Falls அருவியையும், பழங்காலத்தில் மரம்வெட்டி ஏற்றுமதி செய்யும்பொருட்டு உருவாக்கப்பட்ட தொன்மையான ரயில்நிலையத்தையும் பார்த்தோம்.(Northwest Railway Museum). நண்பர் மகேந்திரராஜன் வான்கூவரிலிருந்து வந்திருந்தார். (தமிழ்விக்கி இணையதளத்தின் முதற்கட்ட அமைப்பாளர் அவர்தான்)
18 ஆம் தேதி சியாட்டில் நகரில் Third Place Books என்னும் புத்தக்கடையில் நூலறிமுக நிகழ்வு. இந்த நிகழ்வுகளின் முதன்மைநோக்கம் அந்த விற்பனையகத்தின் மின்னஞ்சல்களுக்குச் செய்தி செல்வதும், அங்கே சுவரொட்டி சிலநாட்கள் இருப்பதும்தான். குறைவாகவே பங்கேற்பாளர்கள் வருவார்கள். அதிலும் வேலைநாட்களில் அதிகம் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் தமிழ்நண்பர்கள் உட்பட பலர் வந்தமையால் நிகழ்வுக்கு சிற்றரங்கு நிறையுமளவுக்குக் கூட்டம் இருந்தது.
விற்பனையக மேலாளர் என்னை அறிமுகம் செய்து பேசினார். இளம் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஜோஷிதா என்னை அறிமுகம் செய்து பேட்டியெடுத்தார். மதன் என் நூல் பற்றிப் பேசினார். ஜோஷிதா மற்றும் வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொன்னேன். அங்கே இருந்த மொத்த நூல்களும் விற்றுப்போயின. பலர் கையெழுத்திட்ட பிரதிகள் வாங்க மேலும் விரும்பியமையால் விற்பனையகத்தின் முத்திரையுடன் அளிக்கப்பட்ட ஒட்டுத்தாளின் கையெழுத்திட்டேன். அவர்களின் விலாசத்திற்கு நூல்கள் அனுப்பப்படும் என்றார்கள்.
அன்று இரவில் எங்கள் தங்குமிடத்திற்கு இருபதுபேர் வந்தனர். இரவு பதினொரு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் உரையாடல்களில் பொதுவாக தெளிவாகவே அரசியலை, இலக்கிய வம்புகளை தவிர்த்துவிடுவோம். முழுக்கமுழுக்க தமிழிலக்கியம், மெய்யியல் பற்றித்தான். பேசிப்பேசி என் கருத்துக்களை இப்போது கூரிய சொற்றொடர்களில் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். அத்துடன் வாசகர்களின் உளநிலை பற்றிய தயக்கங்களும் இப்போதில்லை. என் கருத்துக்களுடன் ஒத்துச்செல்லாவிட்டாலும் கருத்துக்களின் முரணியக்கம் பற்றிய அறிமுகமுடையவர்களே என்னுடன் நீடித்து பயணம் செய்ய முடியும் என அறிந்திருக்கிறேன்.
19 ஆம் தேதி சியாட்டிலில் இருந்து விமானத்தில் ஆஸ்டின் வந்தோம். அமெரிக்கா விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் (Vishnupuram Literary Circle USA) ஒருங்கிணைப்பாளர் நண்பர் ஆஸ்டின் சௌந்தர் இல்லத்தில் தங்கினேன். அங்கு ஒரு சிறு வாசகர் சந்திப்பு. அங்கே எங்களைச் சந்திப்பதற்காக திருவாளர் துடுவ் (அசல்பெயர் துருவ்) தன் பெற்றோர் சங்கீதா, வெங்கட் ஆகியோருடன் வந்திருந்தார்
டாலஸ் நகரில் விஷ்ணுப்ரியா – கிருஷ்ணகுமார் இல்லத்தில் தங்கினோம். பிரியா கிருஷ் என்ற பேரில் பாடிவரும் விஷ்ணுப்ரியா விஷ்ணுபுரம் அமைப்பின் நிகழ்வுகளில் பாடுபவர். இப்போது சில திரைப்படங்களுக்கும் பாடி வருகிறார். அவர் மகன் அவ்யக்த் துருவின் அதே வயது. அதே கொப்பளிப்பு.
டாலஸ் நகரில் உள்ள Barnes & Noble புத்தகக் கடையில் அக்டோபர் 22, 2025 மாலை நடந்த சந்திப்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்ற நூலறிமுக நிகழ்வுகளிலேயே அதிகமானவர்கள் பங்கேற்றது என்று தோன்றுகிறது. புத்தக்கடை நிகழ்வுகளுக்கு அமெரிக்காவில் மிகப்புகழ்பெற்ற ஆசிரியர்களுக்குக்கூட ஐம்பது பேர் வருவது அரிது. அறுபதுபேருக்குமேல் வந்திருந்த நிகழ்வு அந்த இடத்தை முழுக்க நிரப்புவதாக அமைந்தது.
இந்நிகழ்விற்கு வந்த இந்திய வம்சாவளியல்லாத சில அமெரிக்க வாசகர்களைச் சந்தித்தேன். இருவர் லத்தீனமேரிக்காவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் அவர்கள் லத்தீனமேரிக்க நாவல்களை தொடர்ந்து வாசிப்பவர்களாகவும், பொதுவான இலக்கிய ஆர்வமுடையவராகவும் இருந்தனர். ஒருவர் இந்தியாவுக்கு மூன்றுமுறை வந்திருந்தார். கேரளத்திற்கு மட்டும். கேரளத்திற்கு எதற்காக என்றேன். கண்களை சிமிட்டி “தாவரம்” என்றார்.
இந்த விழாவிலும் முக்கியமான அம்சம் என்பது அமெரிக்க இளம் வாசகர்களின் பேச்சுக்கள்தான். அமெரிக்காவில் வளர்ந்தவர்களுக்கு இந்நூல் எந்தவகையில் பொருள்படுகிறது என்பது எனக்கு ஆர்வமூட்டும் விஷயம். அவர்கள்தான் இனிமேலும் இந்தியாவிலிருந்து இங்கே வரவிருக்கும் படைப்புகளுக்கான எதிர்கால வாசகர்கள். அவர்களிடமிருந்தே அமெரிக்க வாசகர்களுக்கு இந்நூல்கள் சென்றடைய முடியும் – அப்படித்தான் துருக்கிய, கொரிய நூல்கள் வாசகர்களைச் சென்றடைந்தன. (அவற்றுக்கு அந்த அரசுகளின் பொருளியல் ஆதரவும் இருந்தது என்பதும் முக்கியமான அம்சம்தான்).
டாலஸ் விழாவில் மூன்று உரைகள். ஜனனி, மீனாட்சி இருவரும் மிகச்சிறுவயதினர். அவர்களும் இந்நூலின் சிறுகதைகளை வாசித்து, உள்வாங்கி, விவாதித்துள்ளனர் என்பது ஆச்சரியமானதுதான். இத்தகைய இலக்கியநூல்களை வாசிக்கவும், அவற்றின் குறியீடுகளையும் கருத்தில்கொண்டு உள்வாங்கவும் அமெரிக்காவிலுள்ள கல்விமுறை அவர்களைப் பயிற்றுவிக்கிறது. கூடவே தங்கள் வாசிப்பை பள்ளிவகுப்புகளில் சொல்வதற்கான பயிற்சியும் அவர்களுக்கு உள்ளது.
சித்தார்த் உயர்நிலைப்பள்ளி மாணவர். கதைகளிலுள்ள பண்பாட்டுச் சிக்கல்களை நுணுக்கமாக கவனித்து பேசினார். பேச்சுக்குப்பின்னர் நிகழ்ந்த கேள்விபதில்களிலும் சரி, நிகழ்ச்சி முடிவுக்குப் பின் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடலிலும் சரி பல கூரிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு எதிர்காலத்தில் நூல்கள் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. எழுத்தின் வழிமுறைகள் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார். அது மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்று தோன்றியது. இந்திய – தமிழ்ச் சமூகத்தில் இருந்து எழுத்தாளர்கள் உருவாகி வந்தாகவேண்டும் என்பதே என் பேச்சின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருந்தது.
என் உரையை இந்திய-அமெரிக்க இளம்எழுத்தாளர் ஆர்.எஸ்.சஹா ஒருங்கிணைத்தார். அவருடைய கேள்விகளுக்குப் பின் நான் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அறம் கதைகள் எழுதப்பட்ட மனநிலை, எழுத்து என்னும் செயல்பாட்டின் நுணுக்கங்கள் முதல் கருத்தியலுக்கும் இலட்சியவாதத்திற்கும் இடையிலான முரண்பாடு வரை பலவகையான கேள்விகள்.
டாலஸிலிருந்து விமானத்தில் ஒருநாள் முழுக்கப் பயணம் செய்து ராலே. ராலே ராஜன் என்ற பேரில் இசையமைத்துவரும் ராஜன் சோமசுந்தரம் சங்கப்பாடல்கள், கம்பராமாயணம் உள்ளிட்ட வெவ்வேறு இசைக்கோலங்களை அமைத்தவர். வெண்முரசு இசைக்கோலம் அவர் அமைத்ததே. ஃபோர் சீசன்ஸ் என்னும் மலையாளப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்னொரு தமிழ்ப்படத்தின் இசைக்கோப்பு முடிந்துள்ளது.
இருபதாண்டுக் காலமாகவே ராஜன் என் அணுக்க நண்பர். 2019ல் நான் ஒரு ரவுடியால் தாக்கப்பட்டபோது ராஜன் என்னை அழைத்து ஒரு மாறுதலுக்காக உடனே அமெரிக்கா வரும்படி அழைத்தார். அமெரிக்காவின் இலையுதிர்காலம் அது. வைட் மௌண்டைன் வழியாக அன்று சென்ற பயணம் என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நினைவுகளில் ஒன்று.
ராலேயில் ஒரு நூலறிமுக நிகழ்வு. ஃப்ளை லைஃப் புக்ஸ் என்னும் புத்தக்கடையின் நிகழ்விலும் இளம் வாசகர்கள் பேசினார்கள். நூலகக்கடையின் அலெக்ஸி என்னை அறிமுகம் செய்தார். இளம் வாசகி வர்ஷா என் படைப்பு பற்றிப் பேசினாள். (வர்ஷாவின் முதல் கதை வெளியாகியுள்ளது)
என் கதைகள் பற்றிய உரைகளில் தியான்தீபின் உரை வேறுபட்டது. அவர் பள்ளியிறுதி மாணவர். பேச்சுப்பயிற்சி கொண்டவர். ஆகவே உரையை அமெரிக்காவுக்கே உரிய நாடகீயமான உச்சரிப்பு, கையசைவுகளுடன் உணர்ச்சிகரமாக நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்குப் பின் பேசியபோதும் அவருக்கு அக்கதைகள் அவருக்கு அளித்த தீவிர உணர்ச்சிநிலைகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையின் முக்கியமான அனுபவங்கள் என நினைக்கிறேன். ஆகவே இவற்றைப் பற்றிய என் உளப்பதிவுகளை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஏனென்றால் இன்னும் நூல்கள் வெளிவரவுள்ளன. இன்னும் அதிக நிகழ்வுகள் வரக்கூடும். ஆனால் இது இந்தியாவுக்கு வெளியே என் முதல்நூல். கிட்டத்தட்ட 1990ல் ரப்பர் வெளியானபோது இருந்த அதே மனநிலைதான்.
இது என் நூல் சென்ற காலடித்தடத்தின் மீது நான் நடந்துசெல்வது என்று தோன்றியது. ஒரு வனவிலங்குபோல அது இயல்பாகத் தன் பாதையைத் தெரிவுசெய்து சென்றுகொண்டிருக்கிறது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

