Jeyamohan's Blog, page 21
October 23, 2025
தெலுங்கில் என் ஐந்தாவது நூல்
தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்படும் என்னுடைய ஐந்தாவது நூல். நெம்மிநீலம் (அறம் கதைகள்) அதோலோகா (ஏழாம் உலகம்) மாயாமோகம் (மாயப்பொன்) , தெள்ளெ எனிகு (வெள்ளை யானை) ஆகிய நூல்களுக்குப் பிறகு மாடன் மோட்சம் மற்றும் கதைகள். மாடன் மோட்சம் உட்பட பல்வேறு கதைகள் கொண்ட தொகுப்பு இது.
மொழியாக்கம் பாஸ்கர் அவினேனி.
வெளியீட்டு நிகழ்வு. சாயா இலக்கிய விழா 2025
இடம் Dr B.R. Ambedkar Open University, Jubilee Hills
CHAAYA LITERATURE FESTIVAL – 2025
Hyderabad Book Trust
பேசுபவர்கள்: பாஸ்கர் அவினேனி
ஆதித்ய அண்ணா வஜ்ஜாலா (தெலுங்கு கூட்டமைப்பு நிறுவனர்)
மதுராவும் இலக்கியமும்.
அன்புள்ள ஜெ,
இந்தக் கடிதம் மதுராவுக்காக. உங்களின் அமெரிக்காவின் வேரும் நீரும் பதிவு வந்ததிலிருந்து அவள் மகிழ்ச்சி பன்மடங்காகி இருக்கிறது. அவள் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய ஒற்றை வரியை, ஊரிலிருக்கும் தாத்தா பாட்டியிலிருந்து இங்கு அவள் வகுப்பு ஆசிரியை வரை அனைவரிடமும் சொல்லி பீற்றிக் கொண்டிருக்கிறாள். கட்டுரையின் அந்த ஒரு பத்தியை மட்டும் தமிழில் தட்டுத் தடுமாறி அவளே வாசித்தும் விடுகிறாள்.
நீங்களும் அருண்மொழி அக்காவும் சான் பிரான்சிஸ்கோவுக்கு வந்த அந்த ஒரு வாரமும் அவளுக்கு பள்ளியில் இலையுதிர்கால விடுமுறை. வழக்கமாக எங்காவது வெளியூர் பயணத்துக்குச் செல்வோம். ஆனால் இம்முறை அடுத்தடுத்து நம் குழு நிகழ்வுகள் இருந்ததாலும், மாத இறுதியில் பூன் முகாமுக்காக விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாலும் எங்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் கொஞ்சம் அழுகையும் என்மேல் வருத்தமுமாக இருந்தாள். உங்களை வரவேற்க நான் விமானநிலையத்திற்குச் செல்வதாகச் சொன்னவுடன் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விட்டாள். உங்களை மீண்டும் நேரில் சந்தித்ததிலும், அருண்மொழி அக்கா போனவருடம் அவளை சந்தித்ததை நினைவில் வைத்துச் சொன்னதிலும் மிகவும் பெருமை அவளுக்கு.
அதைவிட பெரிய மகிழ்ச்சி நீங்கள் Stories of the True நூலின் FSG பதிப்பை அப்போதுதான் நேரில் பார்க்கிறேன் என்று சொல்லி, அவள் பெயரை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தது தான். அதுதான் அவள் வாங்கும் முதல் ஆசிரியர் கையழுத்து. அன்று வீட்டிற்குத் திரும்புகையில் மதுராவிடம், ஒருவேளை Stories of the True நூலில் அமெரிக்காவிலேயே நீதான் முதலில் கையெழுத்துப் பெற்றிருக்கிறாய் என்று விளையாட்டாகச் சொல்லி விட்டேன். இந்த ஊரில் வரும் ஸ்ட்ராபெர்ரி நிலவைப் போல அவள் முகம் வெட்கத்தில் சிவந்து, மகிழ்ச்சியில் பிரகாசமாகிவிட்டது.
“பள்ளி திறந்தபின் என் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் போய்வந்த இடங்களைப் பற்றி பெருமையாக வகுப்பில் சொல்வார்கள், நான் என்ன சொல்வது” என்று அன்றுவரை என்னிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தாள். உங்களை நேரில் பார்த்து நூலில் கையெழுத்துப் பெற்றது அவள் மனநிலையையே மாற்றி விட்டது. விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்த முதல் நாள் அவள் வகுப்பாசிரியையும் நண்பர்களும் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, இவள் இந்தியாவின் சிறந்த எழுத்தாளரை நேரில் சென்று வரவேற்றதையும் அவரிடம் கையெழுத்துப் பெற்றதையும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறாள். உங்கள் மூலமாக அவள் அந்தஸ்து வகுப்பில் ஏற்கனவே உயர்ந்திருந்த நிலையில், உங்களின் இந்தப் பதிவிற்குப் பிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று காற்றில் மிதந்து கொண்டிருக்கிறாள்.
நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல, இது மதுராவிற்கும் நிச்சயம் ஒரு அழகிய தொடக்கமாக இருக்கும். உங்கள் ஆசிக்கும் அன்பிற்கும் நன்றி ஜெ.
சாரதி
அன்புள்ள சாரதி,
மதுராவுக்கு என் வாழ்த்துக்கள்.
அமெரிக்காவில் நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம் இளவயதினரிடையே இலக்கியம் மற்றும் இலக்கியவாதி பற்றி இருக்கும் பெருமதிப்பு. அதை இங்குள்ள பள்ளிகள் உருவாக்குகின்றன. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கூட ‘author’ ஆகவேண்டும் என்று சொல்வதைக் காண்கிறேன். இங்குள்ள பள்ளிக்கல்வியும் ஆசிரியர்களும் அந்த மதிப்பை உருவாக்குகிறார்கள்.
மதுரா சொன்னதுபோல இந்தியாவிலுள்ள பள்ளிக்குச் சென்று ஒரு குழந்தை ஒரு நூலாசிரியரைச் சந்தித்தேன் என்று சொன்னால் என்ன ஆகும்? முதலில் நூல் என்றால் என்ன, அதை எழுதுபவர் என்றால் யார் என்று அந்த ஆசிரியருக்கு அக்குழந்தை விளக்கவேண்டியிருக்கும். விளக்கினால் உடனடியாக ‘பள்ளிப்பாடம் படிக்காமல் என்ன வேறு புத்தகம் படிப்பது?’ என அடிவிழும்.
சிறுவயதில் பள்ளிக்கு நூல்களை எடுத்துச்சென்று அஜிதன் நிறைய அடி வாங்கியிருக்கிறான். உச்சகட்டமாக ஓர் ஆசிரியர் என்னிடமே பள்ளிப்புத்தகம் அல்லாத எல்லா புத்தகமும் பாலியல் சார்ந்ததுதான், பையன் கெட்டுவிடுவான் என அறிவுரை சொன்ன நிகழ்வும் உண்டு.
அமெரிக்கப் பள்ளிகள் வாசிப்பு பற்றி உருவாக்கும் மதிப்பு மிக முக்கியமான ஒன்று. மிகமிகத் தொடக்கநிலையிலேயே அவர்கள் சுயமாக நூல்களை வாசிக்கவும், மதிப்பிட்டுப் பேசவும் பயிற்சி அளிக்கிறார்கள். நான் கலந்துகொண்ட எல்லா நிகழ்வுகளிலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளையோர் என் நூல் பற்றிப் பேசினார்கள். எல்லா பேச்சுகளுமே கச்சிதமானவை, செறிவானவை. அவற்றை பின்னர் வலையேற்றம் செய்யலாமென்னும் எண்ணம் உள்ளது.
அத்தகைய பார்வை இலக்கியம், வாசிப்பு, அறிவியக்கம் பற்றி இந்தியாவில் மாணவர்களிடையே அறவே இல்லை. மிக உயர்தரப் பள்ளிகளில்கூட இல்லை. நம் கல்விமுறை அதற்கு எதிரானது என்பதே காரணம். அந்தவகையான ஆர்வத்தை உருவாக்க கல்விநிலையங்கள் சார்ந்து நாங்கள் என் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் கல்விச்சேவைகள் வழியாக ஓர் இணையான கல்விப்பயிற்சியை முறையை முன்னெடுக்கிறோம். அவை எல்லாமே மிகப்பெரிய வெற்றியை காட்டுகின்றன. ஓரிரு ஆண்டுகளிலேயே அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மிகச்சிறந்த வாசகர்களாக மட்டுமல்ல எழுத்தாளர்களாகவும் ஆகியுள்ளனர். அவர்களின் நூல்களும் வெளிவரவுள்ளன.
ஆச்சரியமாக ஒன்று உண்டு. அமெரிக்காவிலுள்ள இந்தியப் பெற்றோரிலேயே கணிசமானவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் இந்த வாசிப்பார்வத்தை, இலக்கியம் மீதும் அறிவியக்கம் மீதும் அவர்களிடம் இங்குள்ள கல்விமுறை உருவாக்கியிருக்கும் பெருமதிப்பை புரிந்துகொள்வதில்லை. காரணம் அவர்கள் இந்தியக் கல்விமுறையில் உருவாகி வந்தவர்கள். வாசிப்புப் பழக்கம் அறவே இருப்பதில்லை. அறிவியக்கத் தொடர்பே இருப்பதில்லை. பிழைப்புக்கல்வி பெற்று பிழைப்பையே வாழ்வெனக் கொண்ட எளியவர்கள் அவர்கள்.
அவர்களின் அணுகுமுறை இரண்டு வகையானது. ஒருசாரார், அவர்கள் அமெரிக்காவில் தங்கள் குழந்தைகள் நிறைய வாசிப்பதைக் கண்டு அஞ்சி அதை தடுக்கவும், அவர்களை பள்ளிப்பாடம் மட்டுமே முக்கியம் என்று நம்பவைக்கவும் முயல்பவர்கள். இன்னொரு சாரார், தங்கள் குழந்தைகள் நிறையப்படிப்பார்கள் என்று சொல்வார்கள், ஆனால் என்ன படிக்கிறார்கள் என்று தெரியாமலிருப்பார்கள். இரண்டுமே பிழையானவை. வாசித்து வளரும் குழந்தைகளிடம் அதன் பெற்றோர் தொடர்ச்சியாக உரையாடவேண்டும். அதற்கு அவர்களும் வாசிக்கவேண்டும்.
குழந்தைகள் தங்கள் வாசிப்பை பெற்றோரிடம் பேச, விவாதிக்க விரும்புவார்கள். ஏனென்றால் அது பற்றி அவர்கள் ஒரு கிளர்ச்சியுடன் இருப்பார்கள். அவர்களை பேசவிடுவது, அவர்கள் பேசுவதை புரிந்துகொள்வதுபோலவே அவர்களிடம் பெற்றோர் தாங்கள் வாசித்த நூல்களைப் பற்றிச் சொல்வதும் முக்கியமானது. எத்தனை தீவிரமான நூல் என்றாலும் அதைப் பற்றிக் குழந்தையிடம் பேசலாம். தீவிரமாகவே பேசலாம். அதில் ஒரு பகுதியே குழந்தைக்கு புரியும், ஆனால் எஞ்சிய பகுதி பற்றிய ஆர்வத்தை குழந்தை அடையும்.
அந்த விவாதம் ஓர் அறிவார்ந்த சூழலை குடும்பத்தில் உருவாக்கும். குழந்தைகளின் அகவுலகுடன் பெற்றோருக்கு ஒரு தொடர்பை உருவாக்கும். அதை இங்குள்ள கல்விமுறை வலியுறுத்துகிறது. நம்மவர் பெரும்பாலும் ஏதும் வாசிப்பதில்லை என்பது நம் குழந்தைகளையும் இங்குள்ள கல்விமுறையில் பின்தங்கியவர்களாக ஆக்கிவிடக்கூடும்.
மதுராவின் உற்சாகம் அத்தனை நிறைவை உருவாக்கியது. என் அமெரிக்கப் பயணத்தின் இப்போதைய மனநிலையின் தொடக்கப்புள்ளி அவள். அதன்பின் இன்றுவரை என் நிகழ்வுகளுக்கு என் நூலை வாசித்துவிட்டு வரும் ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தையும் அளிக்கும் நம்பிக்கையும் நிறைவுமே இப்பயணத்தின் பரிசுகள்.
மதுராவுக்கு என் அன்பு முத்தங்கள்.
ஜெ
அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம் அமெரிக்காவின் வேரும் நீரும் ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…கவிஞர் மீனவன்
கவிஞர் மீனவன் நினைவாக ‘கவிஞர் மீனவன் கல்வி அறக்கட்டளை’ என்ற அமைப்பு மீனவனின் குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு, மாணவர்களிடையே கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிசளித்து கவிதை வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் ஊக்கமளித்து வருகிறது.
கவிஞர் மீனவன் – தமிழ் விக்கி
ரமேஷ் பிரேதன் விருது- பாவண்ணன்
அழகியமணவாளன்
அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதுக்குரியவர்களாக ஐந்து இளம்படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயராக அறிவிக்கத் தொடங்கியதும் நாளை வரும் பெயர் யாருடையதாக இருக்கும் என எதிர்பார்ப்புடன் அடுத்த அறிவிப்புக்காகக் காத்திருந்து பார்த்தேன்.
இளம்படைப்பாளிகள் மீது கவனம் குவியச் செய்யும் செயல்கள் அனைத்துமே நம் தமிழ்ச்சூழலில் முக்கியமானவை. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவந்த இலக்கியச்சிந்தனை அமைப்பின் செயல்பாடுகளை நாம் அனைவருமே அறிந்திருப்போம். அந்த அமைப்பின் ஐம்பதாண்டு கால இலக்கியச்செயல்பாடுகள் தமிழிலக்கியச்சூழலில் மிகமுக்கியமானவை. ப.லட்சுமணனும் ஆர். அனந்தகிருஷ்ண பாரதியும் அதன் பின்னணியில் இருந்தவர்கள்.
சஜு1970 முதல் மாதாந்திர இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளைப் பரிசீலனை செய்து சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளை வேறொரு நடுவர் வழியாக அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்து கெளரவித்து வந்தார்கள். அவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களை இப்போது பட்டியலிட்டுப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலானோர் அந்தந்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் அல்லது எழுதி சற்றே கவனத்துக்கு வந்த எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பதைப் பார்க்கலாம். பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, சோ.தருமன் என இன்று ஆளுமைகளாக விளங்கும் பலரும் அந்தப் படைப்பாளிகள் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் அவ்விருதுகள் கிடைத்திருக்கின்றன. இலக்கியச்சிந்தனை மட்டுமே அக்காலத்தில் அச்செயலைச் செய்துவந்தது. இலக்கியச்சிந்தனையைத் தொடர்ந்து இலக்கியவீதி ஒருசில ஆண்டுகள் அதே பணியைத் தொடர்ந்து செய்துவந்தது.
செல்வக்குமார்இரண்டாயிரத்துக்குப் பிறகு, பல நகரங்களில் பல இலக்கிய அமைப்புகள் தோன்றி போட்டிகள் நடத்தி இளம்படைப்பாளிகளை அடையாளம் கண்டு முன்னிறுத்தத் தொடங்கின. இச்சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விஷ்ணுபுரம் அமைப்பு தொடர்ச்சியாக அளித்துவரும் விருதுகள், அவ்விருதை ஒட்டி குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் மீது குவியும் கூடுதலான கவனத்தாலும் பல்வேறு வாசிப்புகளாலும் உரையாடல்களாலும் பிற விருதுகளைவிட முக்கியத்துவம் கொண்டதாக நிலைகொண்டுவிட்டன.
அசோக் ராம்ராஜ்எதிர்பாராத விதமாக இந்த ஆண்டுக்குரிய விருதாளராக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் மறைவின் காரணமாக அவருடைய பெயராலேயே ஐந்து இளம்படைப்பாளிகள் கண்டடையப்பட்டு விருதுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதை நல்லதொரு தொடக்கமாகவே நான் உணர்கிறேன். நற்செயல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நிமித்தமும் காரணமும் தாமாகவே அமைந்துவிடுகின்றன.
விருதுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேவிலிங்கம், சஜூ, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் சாம்ராஜ், அழகிய மணவாளன் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை, கவிதை, நாவல், ஆய்வு, மொழிபெயர்ப்பு என அனைத்துத் தளங்கள் சார்ந்தும் அவர்கள் கண்டடையப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விருதுகளும் வாசகவனமும், இந்த இளம்படைப்பாளிகள் இன்னும் செயலூக்கம் கொள்ள உதவும் என்று நம்புகிறேன். விருது பெறும் இளம்படைப்பாளிகள் ஐவருக்கும் மீண்டும் என் வாழ்த்துகள். அவர்களைக் கண்டடைந்த விஷ்ணுபுரம் அமைப்பினருக்கும் என் வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்
அலைதல், கண்டடைதல்- கடிதம்
மனித வாழ்வில் கிடைக்கபெறும் பெரும்பான்மையான அனுபவமும் பயணத்தின் பூர்வமாக வருபவை தான்.
இடப் பெயர்தல் என்பது நம் அகமும் சேர்ந்து வேறு ஓருலுலகை உருவாக்கி விடுவது தான். அதில் எண்ணற்ற மனித உணர்வுகள் நம்மிள் தொடுகின்றன. ஒரு இதயத்தின் பூர்வமாக நாம் மனிதர்களை உணரும் போது அங்கு நாம் பார்ப்பது வெறும் மனித உடல்களை மட்டுமல்ல.
வலிகள் நிறைந்த சிலரையும், துயரத்தின் விளிம்பில் சிலரையும், மகிழ்ச்சியின் உச்சத்தில் சிலரையும் நாம் பார்க்கின்றோம்.
இது போன்ற தருணத்தில் மனித உணர்வை மேலும் அந்தரங்கமான ஒரு உணர்வாக உணர வேண்டுமெனில் அது பயணத்தின் போது ஏற்ப்படுவையே. உண்மையில் நாம் பார்க்காத ஒரு உலகை நமக்கு பயணத்தால் மட்டுமே எளிதாக கற்பிக்க முடியும். நான் பயணிக்கும் சின்ன சின்ன பயணத்திலேயே ஏராளமான மனித உணர்வுகள் மொத்தமாக ஒன்று சேர்ந்து மோதிக் கொள்வதைக் நானே உணர்ந்துள்ளேன். நான் இந்த இலக்கு என்று இலக்கை நிர்ணயம் செய்யும் ஒரு பயணியாக தான் நான் இதுவரை என்னை கற்பனை செய்துக் கொண்டேன்.
ஆனால், ஜெயமோகன் எழுதிய புறப்பாடு படித்த பின் நான் உணர்ந்த உணர்வும், மேலும் நான் போகும் என் பயணமும் என் கண் முன் விரிந்து சென்றது. உண்மையில் இதனை நான் நாவல் என்றே எண்ணிக் கொண்டேன். பொதுவாக ஒரு நாவல் மட்டுமே எண்ண ஓட்டத்தின் வழியாக நம்மை அதனுள் இழுத்துக் கொண்டு நம்மை ஒரு பெரும் பிரபஞ்சத்துக்குள் நம்மையும் நம் அகத்தையும் கொண்டு செல்லும், ஆனால் ஒரு கட்டுரை என எடுத்துக் கொண்டால் எவ்வளவு உன்னத படைப்பானாலும் சில இடத்தில் சலிப்பான ஒரு உணர்வை நமக்கு இடும்.
அது பொதுவாக கட்டுரையில் என்னளவில் நான் உணர்ந்துள்ளேன்.புறப்பாட்டில் என் அனுபவத்தின் ஊடாக ஒரு தரிசன உணர்வை நான் பெற்றேன்.
பொதுவாக நான் ஜெயமோகனை என் ஆதர்ச எழுத்தாளராக எண்ணுபவன். அவர் படைப்பில் ஏதோ ஒரு விதமான அக உணர்வை எனக்கு அவர் ஏற்ப்படுத்தியது உண்டு. அவரின் எந்த ஒரு படைப்பும் இதில் ஏதுமல்ல என்று சொல்வதற்கில்லாத ஒரு எழுத்தை தான் ஜெயமோகன் தன் வாழ்நாளெல்லாம் எழுதி குமித்தியிருக்கிறார்.
அவருடைய எந்த ஒரு படைப்பை படித்தாலும் ஒரு படி மேலே உயரும் ஆற்றலை தன் எழுத்தில் காண்பித்துள்ளர். ஒரு விஷ்ணுபுரம் படித்து நாம் பார்க்கும் ஒரு ஜெ, அறம் படித்த பின் ஒரு படி மேலே உள்ளார்.
காட்டை படித்து பின் அவரை இன்னும் இன்னும் படைப்பின் ஊடாக தரிசிகவே எண்ணுனேன் அந்த உயரத்தில் இருந்ததாலும், ஏழாம் உலகை படித்த பின் ஒரு படி மேலே உயருவார்.
இப்படியான ஜெயமோகன் புறப்பாட்டில் உயர்வானார் என்றால் அதில் ஒன்றும் வியப்பு இல்லை தான். ஆனால் ஒரு பயண கட்டுரையை கூட மனித ஆத்மாவுடன் தொட்டு எழுதுவார் என்றால் அதில் நாம் காணும் ஜெயமோகன் என்பது என்னவென்று வார்த்தையால் சொல்ல இயலாத ஒருவர் தான். உண்மையில் அது வாசிப்பு தரும் பரவசம்.
மற்ற அனைத்து கிளாஸிக்கல் படைப்பை தாண்டி ஒரு புறப்பாட்டின் வழியே நம்மை உணர செய்தியிருக்கிறார் என்றால் அது தான் ஜெயமோகனின் எழுத்து.
புறப்பாட்டில் வரும் எண்ணற்ற பயணத்தின் வழியே ஜெயமோகனோடு நாமும் பயனிப்போம். அவர் பார்த்த வெவ்வேறு வகையான மனிதர்களை நாமும் பார்ப்போம். அவர் வாங்கிய அடியை நமக்கும் உணர செய்வார். இது தானே ஒரு படைப்பாளானின் பணி. அதனை தான் தரிசன பூர்வமாக நமக்கு கடத்த வேண்டும்.
அனுபவத்தின் வழியே நாம் கானும் மனிதர்கள் வெவ்வேறு வகையினர். இரவில் திரியும் மனிதர்களுடன் பயணிப்பது அது வேறு மாதிரியன ஒரு அந்தரங்கமாக நம்மை உணர செய்யும்.
விடுதி மாணவர் பற்றி ஜெ எழுதியிருப்பார். ஒரு விடுதியில் பயிலும் ஒரு மாணவன் என்ற முறையில் அந்த உணர்வை என்னாலும் அரிய இயலும். அவர் ஒரு புறம் வெறும் பயணத்தை பற்றி கூறும் அதே வழியில் மனித மனதை பற்றி கூறிக் கொண்டு வருவார். ஒரு கட்டத்தில் புறப்பாடு என்பது மனித உணர்வின் தொகுப்பாக ஆகிறது. அந்த தருணத்திலே அந்த படைப்பை இன்னும் அதிகமாக நமக்குள் அது உரையாட துவங்குகிறது.
பயணங்கள் தொடர்ந்து ஏதாவது நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும். அதில் மனிதர்களை நாம் வெவ்வேறு வகையான நிலையில் அறியலாம். புறப்பாடு இதனை தான் செய்கிறது. புறப்பாட்டின் வெற்றி என நான் கருதுவது நம் மனதுக்குள் ஒரு பயணத்தை ஜெயமோகன் நிகழ்த்தி காட்டுகிறார். உண்மையில் பயணங்கள் தரும் வலி, துன்பம் என எல்லா வகைகளையும் நம் முன் காட்டி பின் அதனுள் மறைந்தியிருக்கும் இன்பத்தினை நமக்கு நாமலே உணர செய்யும் படி விட்டு விடுகிறார்.
பயணங்கள் என்பது எப்போது முடிகின்றன, அது மரணத்தில் நிகழ்பவையா என்ற ஒரு கேள்விகள் எனக்கு எழுவதுண்டு. நம் வாழ்வு முடியும் வரை இந்த பயணம் என்பது முடிவுறா ஒன்றாகே அது இருக்கும். அதிலிருந்து நாம் பெறுவது ஏராளம்.
இப்புத்தகத்தை முடித்து விட்டு வெளியேறிய போது ஒரு பறவை பறப்பதை கண்டேன். அந்த பறவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துக் கொண்டியிருந்து. அது உயர உயர அந்த ஆகாயமே அந்த பறவையின் வடிவில் உருமாறி, அந்த பறவையை ஓர் பேரரழகாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் அப்பறவையாக நான் இருந்தால் என ஒரு எண்ணம் வந்தவுடன் இரு கைகளை நீட்டி பறப்பது போல் ஒரு பிரக்ஞையை உணர்ந்தேன்.
நான் இவ்வுலகை பறந்து பார்க்க ஒரு கணம் ஆசைப்பட்டேன். அந்த நேரத்தில் இன்னொன்று தோன்றியது. இந்த புறப்பாடு தான் என்னை பறவை ஆக்கியதோ ……
அப்துல் வஹாப் .
October 22, 2025
கட்டிடக்கலையும் பண்பாடும்
தமிழகத்தில் முழுக்க தொன்மையான ஆலயங்கள் உள்ளன. அந்த அளவுக்கு இல்லை என்றாலும் இந்தியாவெங்கும் ஆலயங்களைப் பார்க்கலாம். இந்த ஆலயங்கள் வழியாக நாம் அறிந்துகொள்வது என்ன? இறை அருகாமையை என்பது நாம் உடனடியாகச் சொல்லும் பதில். இறைபக்தி இல்லாத ஒருவருக்கு? மொத்த இந்தியப் பண்பாட்டையும், இந்திய வரலாற்றையும் அறியலாம் என்பதே கூடுதலான பதில்
அனலும் புனலும்
விவேகானந்தர் இந்தியாவில் நவீன இலக்கியம், நவீன சிந்தனை, நவீனக்கல்வி முறை, நவீன ஓவியம், நவீன இசை ஆகிய அனைத்தைப் பற்றியும் தொடக்ககாலச் சிந்தனைகளில் முன்வைத்திருக்கிறார். அவை இந்திய இளைய தலைமுறையினரிடம் பெரும் திருப்புமுனைகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இந்த ஒவ்வொரு தளத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்த அறிஞர்களும் கலைஞர்களும் அவருடைய சொற்களில் இருந்து உருவாகி வந்திருக்கிறார்கள்.
இந்திய ஓவியம் என்னும் கருத்துருவின் தொடக்கப்புள்ளியும், ஓவியத்தில் வங்கப்பள்ளியை உருவாக்கியவருமான அவனீந்திரநாத் தாகூர் விவேகானந்தரின் சொற்களில் இருந்து தன் தொடக்கத்தைப் பெற்றவர். விவேகானந்தரால் ஊக்கம் பெற்றே டாக்டர் பல்பு நாராயணகுருவை முன்வைத்து கேரள மறுமலர்ச்சி இயக்கத்தை தொடங்கினார், அவ்வியக்கத்தின் சிருஷ்டியே கேரள நவீன இலக்கியத்தின் தொடக்கமாக அமைந்த குமாரன் ஆசான். பாரதி, தனக்கு ஞானத்தை அளித்தவர் விவேகானந்தரின் தர்மபுத்திரியாகிய நிவேதிதை என்கிறார். அழகியல் ஒருமை கொண்ட தமிழின் முதல் நாவலை எழுதிய பி.ஆர்.ராஜம் ஐயர் விவேகானந்தரின் நேரடி மாணவர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகமுடியும்.
விவேகானந்தருக்கு இந்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் அமெரிக்காவில் இருந்தும், அவருடைய ஜெர்மானிய நண்பர்களிடமிருந்தும் கிடைத்திருக்கலாம். குறிப்பாக ஜெர்மனியிலிருந்துதான் அன்று பண்பாட்டுத் தேசியம், மற்றும் மொழிவழித் தேசியம் எனும் கருத்து உருவாகி வந்துகொண்டிருந்தது. பண்பாடுதான் தேசம் என்னும் கருத்தை அவர் ஜெர்மனியில் இருந்து பெற்றார் என்று கொள்ள முடியும். இந்திய தேசியம் எனும் கருத்தை இங்கு விவேகானந்தர்தான் வலுவாக முன்வைத்தார். அவருடைய மாணவி நிவேதிதா இந்திய தேசிய இயக்கத்தை ஒரு தீவிரமான உணர்வுநிலையாகவே முன்னெடுத்தவர்.
இது சுவாரசியமான ஒரு முரண். ஜெர்மனியில் உருவான பண்பாடுதான் தேசியம் என்னும் அடிப்படைக் கருத்து அங்கு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து ஹிட்லர் போன்ற ஒரு அழிவு சக்தியை உருவாக்கியது. ஆனால் அதுவே இங்கு விவேகானந்தர் வழியாக இந்தியத் தேசியத்தை உருவாக்கி, காந்தியைத் திரட்டி எடுத்தது. இந்திய தேசிய இயக்கத்திலேயே எப்போதும் ஒரு மதவாத அம்சம், அதாவது ஃபாஸிசமாக வளரக்கூடிய ஒரு புற்றுநோய் செல் இருந்துகொண்டேதான் இருந்தது. அதற்குக் காரணம் அந்த ஜெர்மானிய வேர்தான். ஆனால் நல்லூழாக, உலகளாவ உருவான நவீன ஜனநாயகம் என்னும் கருத்தின் முதன்மை விளைகனியாகிய காந்தியால் அந்த ஃபாஸிச அம்சம் கட்டுப்படுத்தப்பட்டது. அவரை அது கொல்லவும் செய்தது.
இன்றும் இந்தியாவில் இந்த முரணியக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. காந்தி விவேகானந்தர் பற்றி பெருமிதமாக ஏதும் எழுதியதில்லை. சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தவர் அந்த தேசியவாதத் தீவிரப்போக்கு தனக்கு உவப்பானது அல்ல என தன் வாழ்க்கைச்சரித்திரத்தில் பதிவுசெய்துள்ளார். ஆனால் இந்துமகாசபைக்கு அணுக்கமானவரான அம்பேத்கர், காந்தியை எதிர்ப்பு நோக்குடன் அணுகியவர், விவேகானந்தரை மாபெரும் இந்திய முன்னோடியாகவே கண்டார். நவீன இந்தியா உருவாக்கிய மாபெரும் ஆளுமை விவேகானந்தர்தான், காந்தி அல்ல என்று அவர் தன்னிடம் சொன்னதாக எம்.ஓ.மத்தாய் அவருடைய நூலில் குறிப்பிடுகிறார்.
இந்துத்துவ அரசியல் விவேகானந்தரை தங்கள் அடையாளமாக முன்னெடுத்தது. அதையொட்டி இந்துத்துவ அரசியலை எதிர்ப்பவர்கள் விவேகானந்தரை உதிரி மேற்கோள்களைக் கொண்டு திரித்து அவரை ஓர் இந்துத்துவராக ஆக்கி இந்துத்துவர்களுக்குக் கையளிக்கும் பணியையும் செய்து வருகின்றனர். தமிழில் நாம் அத்தகைய எழுத்துக்களை நிறையவே காண்கிறோம். குறிப்பாக ஒட்டுமொத்த இந்து எதிர்ப்பை அன்றி சிந்தனை என எதையுமே கொண்டிராத தமிழ் திராவிட இயக்கவாதிகளிடமிருந்து.
ஆனால் கே.தாமோதரன் முதல் இ.எம்.எஸ் வரையிலான மார்க்ஸியர்கள் விவேகானந்தரை பண்பாட்டை தேசியத்தின் அடிப்படையாக வைத்த முன்னோடிச் சிந்தனையாளர் மட்டுமே என்றும், அவர் மதத்தை அரசியலாக்குவதற்கு ஆதரவானவர் அல்ல என்றும் விரிவாக விளக்கினர். விவேகானந்தர் இந்தியாவின் ‘சூத்திர எழுச்சிக்காக’ அறைகூவியவர். இந்திய நிலத்தில் உழைக்கும் தரப்பின் அதிகாரத்துக்காக எழுந்த முதற்குரல், ஆகவே அவர் மார்க்ஸியத்துக்கு முன்னோடி என இ.எம்.எஸ் மதிப்பிடுகிறார். விவேகானந்தரின் நீட்சியாகவே நாராயணகுருவை அணுகுகிறார். அவர்களை இந்துத்துவர் எடுத்துக்கொள்வதை எதிர்க்கும் கேரள மார்க்ஸியக் கட்சி விவேகானந்தரின் பிறந்தநாளையே கொண்டாடுகிறது.
அவ்வாறாக இன்று இருவகையான விவேகானந்தர்கள் அரசியலில் உள்ளனர். மேற்கோள்களை தொகுப்பதன் வழியாக கட்டமைக்கப்படும் இந்துத்துவ விவேகானந்தரை விட, அவருடைய எழுத்துக்களில் இளமைக்குரிய கட்டின்மையுடன் வெளிப்படும் சீர்திருத்தவாதியும் மார்க்சியர்களுக்கு அணுக்கமானவருமாகிய விவேகானந்தரே மெய்யானவர் என்பதே என் எண்ணம். குரு நித்யா அதை முன்வைத்திருக்கிறார்.
விவேகானந்தரில் தீவிரமாக வெளிப்படும் ஆசார எதிர்ப்புவாதம், சமூகநீதிக்கான ஆவேசமான அறைகூவல், மதச்சக்திகளால் முன்வைக்கப்பட்ட உலகியல் மறுப்புக்கு எதிரான கடும் கண்டனம் ஆகியவைதான் நவீன இந்தியாவின் தொடக்கப்புள்ளிகள். அவை அவருடைய அத்வைதம் சார்ந்த உயிர்ச்சமத்துவ நோக்கில் இருந்து முளைத்து ஐரோப்பிய நவீனச் சிந்தனைகளுடன் உரையாடி முழுமை பெற்ற பார்வைகள். பஞ்சத்துக்கு எதிராக விவேகானந்தர் பேசிய சொற்களில் இருந்து, அதில் பெருகும் கருணையின் சீற்றத்தில் இருந்து மட்டுமே அவருடைய ஆன்மிகத்தைச் சென்றடைய முடியும்.
மதத்தைக்கொண்டு மக்களைப் பிரித்து, அவர்களுக்கு அடையாளமிட்டு தொகுத்து, அரசியல்செய்யும் இன்றைய அரசியலுக்கு எதிராக மட்டுமே விவேகானந்தரை முன்வைக்கமுடியும். பஞ்சத்தால் செத்துக்கொண்டிருந்த எளிய மக்கள் மேல் அந்த ஞானி விட்ட கண்ணீர், ’முதலில் பசித்தவனுக்குச் சோறுபோடு, அதிலுள்ளது உன் மோட்சம்’ என்னும் அவருடைய அருட்சொல் வழியாக நாம் காந்தியைச் சென்றடைய முடியும். இரு எல்லைகளும் வளைந்து சென்று தொடும் இடம் அந்த அறம் திகழ் உச்சமே.
ஆயிரம் ஆண்டுக்காலமாக நனைந்து, குளிர்ந்திருந்த இந்த தேசத்தைப் பற்றவைக்க விண்ணில் இருந்து விழுந்த அனல் விவேகானந்தர். இளமையின் கட்டற்ற விசை அவர். விடுதலைக்குரல் எழத்தொடங்கியதும் காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட பலநூறு பிரிவினைகள் இங்கே எரியத்தொடங்கியதும் அந்தத் தழல்கள்மேல் விழுந்த மழை காந்தி. இரண்டும் விண்ணிலிருந்து வருவனதான்.
பி.சி.சேகர்
மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பங்காற்றிய முக்கிய அறிவியலாளர். மலேசியாவில் இயற்கை ரப்பர் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ரப்பர், செம்பனைத் தொழிற்துறைகளை நவீனப்படுத்தினார். மலேசியாவின் குறிப்பிடத்தக்க அறிவியலாளராகவும், கல்வியாளராகவும், நவீன ரப்பர் தொழிற்துறையின் தந்தையாகவும் பி. சி. சேகர் அறியப்படுகிறார்.
பி.சி.சேகர் – தமிழ் விக்கி
காடு, ரவி பிரதாப்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
காடு நாவலில் என் மனதுக்கு நெருக்கமாக பட்டதை எழுத்தில் சொல்ல முயற்சித்து இணையத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கிறேன்.
பதினான்கு நாட்களாக தினம் ஒரு மணி நேரம் என வனவாசம் முடிந்து வந்திருக்கிறேன்.
உள்நுழையும் வழி, வெளியேறும் வழி எனப் பலகை போட்டுக் காட்ட இது கட்டடம் அல்ல. இது காடு, ஜெயமோகனின் காடு. இக்காட்டில் நான் ஒரு வழியில் உள்நுழைந்து, ஒரு வழியில் வெளியே வந்திருக்கிறேன். இவ்வழியில் எனக்குக் கிடைத்த அனுபவ சுள்ளிகளைப் பொறுக்கி, கயிறு கட்டி,தலையில் சுமந்து வந்துள்ளேன்.
இழந்த வசந்தத்தைப் பற்றிய குறிஞ்சி நில நாவல் இது. கூடல் இங்கே ஒரு கேளிக்கை.
கிரிதரன் என்ற சகல சபலங்களுக்கும் ஆட்பட்ட sexual povertyயில் இருந்த ஒரு சாதாரண ஆணை ஆட்கொண்ட முதற் காதல் வாசத்தை நினைவு கூறுதலின் வழியே இந்நாவல் தொடங்குகிறது.
கருஞ்சிலைகளை முன்னெப்போதும் இல்லாத கூடுதல் ரசனையோடு நின்று நிதானமாக பார்ப்பதற்குக் காரணம் இந்நாவலில் வரும் பெண் நீலி.
காட்டு வழியில், கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நேர்த்தியான சாலைகள் எப்படிப் போட்டிருப்பார்கள்‘ என்று இருந்த ஆச்சர்யத்திற்கான பதிலாக நிற்கிறது மனிதனின் பேராசை. இவையனைத்தும் காட்டை உரிமை கொண்டாடி வேட்டையாடும் முதன்மை நோக்கத்தோடு அமைக்கப்பட்டவை.
Benefits of honey, Benefits of milk, Benefits of fruits என்று இணையத்தில் தேடி அறிந்து நம் தேவைக்கேற்ப கணக்கிட்டு நுகர்கிறோம்.
அதே வேளையில் Benefits of humans என்று மற்ற பூமி ஜீவராசிகள் யோசித்துப் பார்த்தால் நாம் உச்ச வேட்டையாளனாக (apex predator) மட்டுமே அடையாளப்படுவோம்.
நம் மனம் இலகுவாக, புத்துணர்ச்சி பெற நினைக்கும் போதெல்லாம் போக நினைக்கும்,போய் வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும் இடங்களாக குறைந்தபட்சம் வீட்டு மொட்டை மாடி, பூங்கா, நீர் நிலைகள்; அதிகபட்சம் கடற்கரை, மலைப் பிரதேசமாக உள்ளது. இவற்றுக்குண்டான ஒரு பொது ஒற்றுமை நம் தலைக்கு மேல் வானம் என்பதுதான்,
மேல் கூரையற்ற இடம்.
மனிதன் ஒரு “சமூக விலங்கு“. பணம், நகை, நிலம், வீடு, கார் என சமூக அந்தஸ்துகளை மேம்படுத்தி வாழும் சமூகத்தோடு, வாழும் சமூகத்தோடா?!… இல்லை, இருக்கும் சமூகத்தோடு ஒன்றி நிலைநிற்கப் போராடுகிறோம். ஆனால் கூட ஒட்டி இருக்கும் ‘விலங்கு‘க்கு பட்டினி போடுகிறோம். அதற்கு இயற்கையே சரணாலயம். குறைந்தபட்ச தொடர்போடாவது இயற்கையுடன் அதனை உலாவ விட்டு மீட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
மரத்தின் உயரமும், கிளை இலைகளின் நெருக்கமும்தான் நிழலின் பரப்பளவை தீர்மானிக்கிறது. காற்றசைத்து கிளை விலகும்போது முகத்தில் வெயில் படுவது போல காமம் படுதல் என்பது இயல்பு. வெயில் எப்பொழுதும் நம் மேல் விழுந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் கிளைகளை வெட்ட நினைப்பது நம் மனங்களின் சபலம்.
விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் போது எழும் பிழையான உள்ளீடுகளைச் சுட்டிக் காட்டி அருகில் திருத்த வார்த்தைகளை பரிந்துரைக்கும் தானியங்கு அமைப்பு போல, காமத்தைப் பற்றிய அரை குறைப் புரிதலை சுட்டுதலோடு நில்லாமல் அதன் அறிவார்ந்த விசாலத்திற்கு பரிந்துரைத்துள்ளது இக்குறிஞ்சி நிலம்.
முந்திரிப் பழத்திலிருந்து கொட்டையைப் பிரித்து, பால் இளக நெருப்பில் வறுத்து, உலர்த்தி, ஓடு பிரித்து, கடைசியாக மெல்லிய தோல் உரித்து காதலெனும் முந்திரிப் பருப்பைப் பக்குவமாகப் பிரித்துத் தொகுத்தளித்திருக்கிறார்
நம் கைகளில் ஜெ.
காடு – ஜெயமோகன்
My thoughts on the novel-writing workshop- Promodhini
A few of my friends who couldn’t attend your novel-writing workshop in Walnut Creek, California, on October 12, 2025, asked me to share my thoughts. I wrote this for them and thought I’d share it with you too.
My thoughts on the novel-writing workshop- Promodhiniஅதாவது ஒரு கட்சி நிலைபாடு எடுத்து, அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டரை விட கீழ்நிலையில் பேசிக்கொண்டிருக்க வேண்டும். தங்களுடைய கருத்தை அப்படியே திருப்பிச் சொல்லாத அனைவரையும் எதிரி என்று முத்திரை குத்தி இழிவு செய்ய வேண்டும். இதுதான் இந்த கும்பலின் அரசியல்.
விஜய்,கரூர்- கடிதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

