மதுராவும் இலக்கியமும்.
அன்புள்ள ஜெ,
இந்தக் கடிதம் மதுராவுக்காக. உங்களின் அமெரிக்காவின் வேரும் நீரும் பதிவு வந்ததிலிருந்து அவள் மகிழ்ச்சி பன்மடங்காகி இருக்கிறது. அவள் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய ஒற்றை வரியை, ஊரிலிருக்கும் தாத்தா பாட்டியிலிருந்து இங்கு அவள் வகுப்பு ஆசிரியை வரை அனைவரிடமும் சொல்லி பீற்றிக் கொண்டிருக்கிறாள். கட்டுரையின் அந்த ஒரு பத்தியை மட்டும் தமிழில் தட்டுத் தடுமாறி அவளே வாசித்தும் விடுகிறாள்.
நீங்களும் அருண்மொழி அக்காவும் சான் பிரான்சிஸ்கோவுக்கு வந்த அந்த ஒரு வாரமும் அவளுக்கு பள்ளியில் இலையுதிர்கால விடுமுறை. வழக்கமாக எங்காவது வெளியூர் பயணத்துக்குச் செல்வோம். ஆனால் இம்முறை அடுத்தடுத்து நம் குழு நிகழ்வுகள் இருந்ததாலும், மாத இறுதியில் பூன் முகாமுக்காக விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாலும் எங்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் கொஞ்சம் அழுகையும் என்மேல் வருத்தமுமாக இருந்தாள். உங்களை வரவேற்க நான் விமானநிலையத்திற்குச் செல்வதாகச் சொன்னவுடன் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விட்டாள். உங்களை மீண்டும் நேரில் சந்தித்ததிலும், அருண்மொழி அக்கா போனவருடம் அவளை சந்தித்ததை நினைவில் வைத்துச் சொன்னதிலும் மிகவும் பெருமை அவளுக்கு.
அதைவிட பெரிய மகிழ்ச்சி நீங்கள் Stories of the True நூலின் FSG பதிப்பை அப்போதுதான் நேரில் பார்க்கிறேன் என்று சொல்லி, அவள் பெயரை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தது தான். அதுதான் அவள் வாங்கும் முதல் ஆசிரியர் கையழுத்து. அன்று வீட்டிற்குத் திரும்புகையில் மதுராவிடம், ஒருவேளை Stories of the True நூலில் அமெரிக்காவிலேயே நீதான் முதலில் கையெழுத்துப் பெற்றிருக்கிறாய் என்று விளையாட்டாகச் சொல்லி விட்டேன். இந்த ஊரில் வரும் ஸ்ட்ராபெர்ரி நிலவைப் போல அவள் முகம் வெட்கத்தில் சிவந்து, மகிழ்ச்சியில் பிரகாசமாகிவிட்டது.
“பள்ளி திறந்தபின் என் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் போய்வந்த இடங்களைப் பற்றி பெருமையாக வகுப்பில் சொல்வார்கள், நான் என்ன சொல்வது” என்று அன்றுவரை என்னிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தாள். உங்களை நேரில் பார்த்து நூலில் கையெழுத்துப் பெற்றது அவள் மனநிலையையே மாற்றி விட்டது. விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்த முதல் நாள் அவள் வகுப்பாசிரியையும் நண்பர்களும் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, இவள் இந்தியாவின் சிறந்த எழுத்தாளரை நேரில் சென்று வரவேற்றதையும் அவரிடம் கையெழுத்துப் பெற்றதையும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறாள். உங்கள் மூலமாக அவள் அந்தஸ்து வகுப்பில் ஏற்கனவே உயர்ந்திருந்த நிலையில், உங்களின் இந்தப் பதிவிற்குப் பிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று காற்றில் மிதந்து கொண்டிருக்கிறாள்.
நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல, இது மதுராவிற்கும் நிச்சயம் ஒரு அழகிய தொடக்கமாக இருக்கும். உங்கள் ஆசிக்கும் அன்பிற்கும் நன்றி ஜெ.
சாரதி
அன்புள்ள சாரதி,
மதுராவுக்கு என் வாழ்த்துக்கள்.
அமெரிக்காவில் நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம் இளவயதினரிடையே இலக்கியம் மற்றும் இலக்கியவாதி பற்றி இருக்கும் பெருமதிப்பு. அதை இங்குள்ள பள்ளிகள் உருவாக்குகின்றன. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கூட ‘author’ ஆகவேண்டும் என்று சொல்வதைக் காண்கிறேன். இங்குள்ள பள்ளிக்கல்வியும் ஆசிரியர்களும் அந்த மதிப்பை உருவாக்குகிறார்கள்.
மதுரா சொன்னதுபோல இந்தியாவிலுள்ள பள்ளிக்குச் சென்று ஒரு குழந்தை ஒரு நூலாசிரியரைச் சந்தித்தேன் என்று சொன்னால் என்ன ஆகும்? முதலில் நூல் என்றால் என்ன, அதை எழுதுபவர் என்றால் யார் என்று அந்த ஆசிரியருக்கு அக்குழந்தை விளக்கவேண்டியிருக்கும். விளக்கினால் உடனடியாக ‘பள்ளிப்பாடம் படிக்காமல் என்ன வேறு புத்தகம் படிப்பது?’ என அடிவிழும்.
சிறுவயதில் பள்ளிக்கு நூல்களை எடுத்துச்சென்று அஜிதன் நிறைய அடி வாங்கியிருக்கிறான். உச்சகட்டமாக ஓர் ஆசிரியர் என்னிடமே பள்ளிப்புத்தகம் அல்லாத எல்லா புத்தகமும் பாலியல் சார்ந்ததுதான், பையன் கெட்டுவிடுவான் என அறிவுரை சொன்ன நிகழ்வும் உண்டு.
அமெரிக்கப் பள்ளிகள் வாசிப்பு பற்றி உருவாக்கும் மதிப்பு மிக முக்கியமான ஒன்று. மிகமிகத் தொடக்கநிலையிலேயே அவர்கள் சுயமாக நூல்களை வாசிக்கவும், மதிப்பிட்டுப் பேசவும் பயிற்சி அளிக்கிறார்கள். நான் கலந்துகொண்ட எல்லா நிகழ்வுகளிலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளையோர் என் நூல் பற்றிப் பேசினார்கள். எல்லா பேச்சுகளுமே கச்சிதமானவை, செறிவானவை. அவற்றை பின்னர் வலையேற்றம் செய்யலாமென்னும் எண்ணம் உள்ளது.
அத்தகைய பார்வை இலக்கியம், வாசிப்பு, அறிவியக்கம் பற்றி இந்தியாவில் மாணவர்களிடையே அறவே இல்லை. மிக உயர்தரப் பள்ளிகளில்கூட இல்லை. நம் கல்விமுறை அதற்கு எதிரானது என்பதே காரணம். அந்தவகையான ஆர்வத்தை உருவாக்க கல்விநிலையங்கள் சார்ந்து நாங்கள் என் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் கல்விச்சேவைகள் வழியாக ஓர் இணையான கல்விப்பயிற்சியை முறையை முன்னெடுக்கிறோம். அவை எல்லாமே மிகப்பெரிய வெற்றியை காட்டுகின்றன. ஓரிரு ஆண்டுகளிலேயே அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மிகச்சிறந்த வாசகர்களாக மட்டுமல்ல எழுத்தாளர்களாகவும் ஆகியுள்ளனர். அவர்களின் நூல்களும் வெளிவரவுள்ளன.
ஆச்சரியமாக ஒன்று உண்டு. அமெரிக்காவிலுள்ள இந்தியப் பெற்றோரிலேயே கணிசமானவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் இந்த வாசிப்பார்வத்தை, இலக்கியம் மீதும் அறிவியக்கம் மீதும் அவர்களிடம் இங்குள்ள கல்விமுறை உருவாக்கியிருக்கும் பெருமதிப்பை புரிந்துகொள்வதில்லை. காரணம் அவர்கள் இந்தியக் கல்விமுறையில் உருவாகி வந்தவர்கள். வாசிப்புப் பழக்கம் அறவே இருப்பதில்லை. அறிவியக்கத் தொடர்பே இருப்பதில்லை. பிழைப்புக்கல்வி பெற்று பிழைப்பையே வாழ்வெனக் கொண்ட எளியவர்கள் அவர்கள்.
அவர்களின் அணுகுமுறை இரண்டு வகையானது. ஒருசாரார், அவர்கள் அமெரிக்காவில் தங்கள் குழந்தைகள் நிறைய வாசிப்பதைக் கண்டு அஞ்சி அதை தடுக்கவும், அவர்களை பள்ளிப்பாடம் மட்டுமே முக்கியம் என்று நம்பவைக்கவும் முயல்பவர்கள். இன்னொரு சாரார், தங்கள் குழந்தைகள் நிறையப்படிப்பார்கள் என்று சொல்வார்கள், ஆனால் என்ன படிக்கிறார்கள் என்று தெரியாமலிருப்பார்கள். இரண்டுமே பிழையானவை. வாசித்து வளரும் குழந்தைகளிடம் அதன் பெற்றோர் தொடர்ச்சியாக உரையாடவேண்டும். அதற்கு அவர்களும் வாசிக்கவேண்டும்.
குழந்தைகள் தங்கள் வாசிப்பை பெற்றோரிடம் பேச, விவாதிக்க விரும்புவார்கள். ஏனென்றால் அது பற்றி அவர்கள் ஒரு கிளர்ச்சியுடன் இருப்பார்கள். அவர்களை பேசவிடுவது, அவர்கள் பேசுவதை புரிந்துகொள்வதுபோலவே அவர்களிடம் பெற்றோர் தாங்கள் வாசித்த நூல்களைப் பற்றிச் சொல்வதும் முக்கியமானது. எத்தனை தீவிரமான நூல் என்றாலும் அதைப் பற்றிக் குழந்தையிடம் பேசலாம். தீவிரமாகவே பேசலாம். அதில் ஒரு பகுதியே குழந்தைக்கு புரியும், ஆனால் எஞ்சிய பகுதி பற்றிய ஆர்வத்தை குழந்தை அடையும்.
அந்த விவாதம் ஓர் அறிவார்ந்த சூழலை குடும்பத்தில் உருவாக்கும். குழந்தைகளின் அகவுலகுடன் பெற்றோருக்கு ஒரு தொடர்பை உருவாக்கும். அதை இங்குள்ள கல்விமுறை வலியுறுத்துகிறது. நம்மவர் பெரும்பாலும் ஏதும் வாசிப்பதில்லை என்பது நம் குழந்தைகளையும் இங்குள்ள கல்விமுறையில் பின்தங்கியவர்களாக ஆக்கிவிடக்கூடும்.
மதுராவின் உற்சாகம் அத்தனை நிறைவை உருவாக்கியது. என் அமெரிக்கப் பயணத்தின் இப்போதைய மனநிலையின் தொடக்கப்புள்ளி அவள். அதன்பின் இன்றுவரை என் நிகழ்வுகளுக்கு என் நூலை வாசித்துவிட்டு வரும் ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தையும் அளிக்கும் நம்பிக்கையும் நிறைவுமே இப்பயணத்தின் பரிசுகள்.
மதுராவுக்கு என் அன்பு முத்தங்கள்.
ஜெ
அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம் அமெரிக்காவின் வேரும் நீரும் ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

