ரமேஷ் பிரேதன் விருது- பாவண்ணன்
அழகியமணவாளன்
அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதுக்குரியவர்களாக ஐந்து இளம்படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயராக அறிவிக்கத் தொடங்கியதும் நாளை வரும் பெயர் யாருடையதாக இருக்கும் என எதிர்பார்ப்புடன் அடுத்த அறிவிப்புக்காகக் காத்திருந்து பார்த்தேன்.
இளம்படைப்பாளிகள் மீது கவனம் குவியச் செய்யும் செயல்கள் அனைத்துமே நம் தமிழ்ச்சூழலில் முக்கியமானவை. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவந்த இலக்கியச்சிந்தனை அமைப்பின் செயல்பாடுகளை நாம் அனைவருமே அறிந்திருப்போம். அந்த அமைப்பின் ஐம்பதாண்டு கால இலக்கியச்செயல்பாடுகள் தமிழிலக்கியச்சூழலில் மிகமுக்கியமானவை. ப.லட்சுமணனும் ஆர். அனந்தகிருஷ்ண பாரதியும் அதன் பின்னணியில் இருந்தவர்கள்.
சஜு1970 முதல் மாதாந்திர இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளைப் பரிசீலனை செய்து சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளை வேறொரு நடுவர் வழியாக அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்து கெளரவித்து வந்தார்கள். அவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களை இப்போது பட்டியலிட்டுப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலானோர் அந்தந்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் அல்லது எழுதி சற்றே கவனத்துக்கு வந்த எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பதைப் பார்க்கலாம். பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, சோ.தருமன் என இன்று ஆளுமைகளாக விளங்கும் பலரும் அந்தப் படைப்பாளிகள் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் அவ்விருதுகள் கிடைத்திருக்கின்றன. இலக்கியச்சிந்தனை மட்டுமே அக்காலத்தில் அச்செயலைச் செய்துவந்தது. இலக்கியச்சிந்தனையைத் தொடர்ந்து இலக்கியவீதி ஒருசில ஆண்டுகள் அதே பணியைத் தொடர்ந்து செய்துவந்தது.
செல்வக்குமார்இரண்டாயிரத்துக்குப் பிறகு, பல நகரங்களில் பல இலக்கிய அமைப்புகள் தோன்றி போட்டிகள் நடத்தி இளம்படைப்பாளிகளை அடையாளம் கண்டு முன்னிறுத்தத் தொடங்கின. இச்சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விஷ்ணுபுரம் அமைப்பு தொடர்ச்சியாக அளித்துவரும் விருதுகள், அவ்விருதை ஒட்டி குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் மீது குவியும் கூடுதலான கவனத்தாலும் பல்வேறு வாசிப்புகளாலும் உரையாடல்களாலும் பிற விருதுகளைவிட முக்கியத்துவம் கொண்டதாக நிலைகொண்டுவிட்டன.
அசோக் ராம்ராஜ்எதிர்பாராத விதமாக இந்த ஆண்டுக்குரிய விருதாளராக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் மறைவின் காரணமாக அவருடைய பெயராலேயே ஐந்து இளம்படைப்பாளிகள் கண்டடையப்பட்டு விருதுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதை நல்லதொரு தொடக்கமாகவே நான் உணர்கிறேன். நற்செயல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நிமித்தமும் காரணமும் தாமாகவே அமைந்துவிடுகின்றன.
விருதுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேவிலிங்கம், சஜூ, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் சாம்ராஜ், அழகிய மணவாளன் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை, கவிதை, நாவல், ஆய்வு, மொழிபெயர்ப்பு என அனைத்துத் தளங்கள் சார்ந்தும் அவர்கள் கண்டடையப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விருதுகளும் வாசகவனமும், இந்த இளம்படைப்பாளிகள் இன்னும் செயலூக்கம் கொள்ள உதவும் என்று நம்புகிறேன். விருது பெறும் இளம்படைப்பாளிகள் ஐவருக்கும் மீண்டும் என் வாழ்த்துகள். அவர்களைக் கண்டடைந்த விஷ்ணுபுரம் அமைப்பினருக்கும் என் வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

