அலைதல், கண்டடைதல்- கடிதம்
மனித வாழ்வில் கிடைக்கபெறும் பெரும்பான்மையான அனுபவமும் பயணத்தின் பூர்வமாக வருபவை தான்.
இடப் பெயர்தல் என்பது நம் அகமும் சேர்ந்து வேறு ஓருலுலகை உருவாக்கி விடுவது தான். அதில் எண்ணற்ற மனித உணர்வுகள் நம்மிள் தொடுகின்றன. ஒரு இதயத்தின் பூர்வமாக நாம் மனிதர்களை உணரும் போது அங்கு நாம் பார்ப்பது வெறும் மனித உடல்களை மட்டுமல்ல.
வலிகள் நிறைந்த சிலரையும், துயரத்தின் விளிம்பில் சிலரையும், மகிழ்ச்சியின் உச்சத்தில் சிலரையும் நாம் பார்க்கின்றோம்.
இது போன்ற தருணத்தில் மனித உணர்வை மேலும் அந்தரங்கமான ஒரு உணர்வாக உணர வேண்டுமெனில் அது பயணத்தின் போது ஏற்ப்படுவையே. உண்மையில் நாம் பார்க்காத ஒரு உலகை நமக்கு பயணத்தால் மட்டுமே எளிதாக கற்பிக்க முடியும். நான் பயணிக்கும் சின்ன சின்ன பயணத்திலேயே ஏராளமான மனித உணர்வுகள் மொத்தமாக ஒன்று சேர்ந்து மோதிக் கொள்வதைக் நானே உணர்ந்துள்ளேன். நான் இந்த இலக்கு என்று இலக்கை நிர்ணயம் செய்யும் ஒரு பயணியாக தான் நான் இதுவரை என்னை கற்பனை செய்துக் கொண்டேன்.
ஆனால், ஜெயமோகன் எழுதிய புறப்பாடு படித்த பின் நான் உணர்ந்த உணர்வும், மேலும் நான் போகும் என் பயணமும் என் கண் முன் விரிந்து சென்றது. உண்மையில் இதனை நான் நாவல் என்றே எண்ணிக் கொண்டேன். பொதுவாக ஒரு நாவல் மட்டுமே எண்ண ஓட்டத்தின் வழியாக நம்மை அதனுள் இழுத்துக் கொண்டு நம்மை ஒரு பெரும் பிரபஞ்சத்துக்குள் நம்மையும் நம் அகத்தையும் கொண்டு செல்லும், ஆனால் ஒரு கட்டுரை என எடுத்துக் கொண்டால் எவ்வளவு உன்னத படைப்பானாலும் சில இடத்தில் சலிப்பான ஒரு உணர்வை நமக்கு இடும்.
அது பொதுவாக கட்டுரையில் என்னளவில் நான் உணர்ந்துள்ளேன்.புறப்பாட்டில் என் அனுபவத்தின் ஊடாக ஒரு தரிசன உணர்வை நான் பெற்றேன்.
பொதுவாக நான் ஜெயமோகனை என் ஆதர்ச எழுத்தாளராக எண்ணுபவன். அவர் படைப்பில் ஏதோ ஒரு விதமான அக உணர்வை எனக்கு அவர் ஏற்ப்படுத்தியது உண்டு. அவரின் எந்த ஒரு படைப்பும் இதில் ஏதுமல்ல என்று சொல்வதற்கில்லாத ஒரு எழுத்தை தான் ஜெயமோகன் தன் வாழ்நாளெல்லாம் எழுதி குமித்தியிருக்கிறார்.
அவருடைய எந்த ஒரு படைப்பை படித்தாலும் ஒரு படி மேலே உயரும் ஆற்றலை தன் எழுத்தில் காண்பித்துள்ளர். ஒரு விஷ்ணுபுரம் படித்து நாம் பார்க்கும் ஒரு ஜெ, அறம் படித்த பின் ஒரு படி மேலே உள்ளார்.
காட்டை படித்து பின் அவரை இன்னும் இன்னும் படைப்பின் ஊடாக தரிசிகவே எண்ணுனேன் அந்த உயரத்தில் இருந்ததாலும், ஏழாம் உலகை படித்த பின் ஒரு படி மேலே உயருவார்.
இப்படியான ஜெயமோகன் புறப்பாட்டில் உயர்வானார் என்றால் அதில் ஒன்றும் வியப்பு இல்லை தான். ஆனால் ஒரு பயண கட்டுரையை கூட மனித ஆத்மாவுடன் தொட்டு எழுதுவார் என்றால் அதில் நாம் காணும் ஜெயமோகன் என்பது என்னவென்று வார்த்தையால் சொல்ல இயலாத ஒருவர் தான். உண்மையில் அது வாசிப்பு தரும் பரவசம்.
மற்ற அனைத்து கிளாஸிக்கல் படைப்பை தாண்டி ஒரு புறப்பாட்டின் வழியே நம்மை உணர செய்தியிருக்கிறார் என்றால் அது தான் ஜெயமோகனின் எழுத்து.
புறப்பாட்டில் வரும் எண்ணற்ற பயணத்தின் வழியே ஜெயமோகனோடு நாமும் பயனிப்போம். அவர் பார்த்த வெவ்வேறு வகையான மனிதர்களை நாமும் பார்ப்போம். அவர் வாங்கிய அடியை நமக்கும் உணர செய்வார். இது தானே ஒரு படைப்பாளானின் பணி. அதனை தான் தரிசன பூர்வமாக நமக்கு கடத்த வேண்டும்.
அனுபவத்தின் வழியே நாம் கானும் மனிதர்கள் வெவ்வேறு வகையினர். இரவில் திரியும் மனிதர்களுடன் பயணிப்பது அது வேறு மாதிரியன ஒரு அந்தரங்கமாக நம்மை உணர செய்யும்.
விடுதி மாணவர் பற்றி ஜெ எழுதியிருப்பார். ஒரு விடுதியில் பயிலும் ஒரு மாணவன் என்ற முறையில் அந்த உணர்வை என்னாலும் அரிய இயலும். அவர் ஒரு புறம் வெறும் பயணத்தை பற்றி கூறும் அதே வழியில் மனித மனதை பற்றி கூறிக் கொண்டு வருவார். ஒரு கட்டத்தில் புறப்பாடு என்பது மனித உணர்வின் தொகுப்பாக ஆகிறது. அந்த தருணத்திலே அந்த படைப்பை இன்னும் அதிகமாக நமக்குள் அது உரையாட துவங்குகிறது.
பயணங்கள் தொடர்ந்து ஏதாவது நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும். அதில் மனிதர்களை நாம் வெவ்வேறு வகையான நிலையில் அறியலாம். புறப்பாடு இதனை தான் செய்கிறது. புறப்பாட்டின் வெற்றி என நான் கருதுவது நம் மனதுக்குள் ஒரு பயணத்தை ஜெயமோகன் நிகழ்த்தி காட்டுகிறார். உண்மையில் பயணங்கள் தரும் வலி, துன்பம் என எல்லா வகைகளையும் நம் முன் காட்டி பின் அதனுள் மறைந்தியிருக்கும் இன்பத்தினை நமக்கு நாமலே உணர செய்யும் படி விட்டு விடுகிறார்.
பயணங்கள் என்பது எப்போது முடிகின்றன, அது மரணத்தில் நிகழ்பவையா என்ற ஒரு கேள்விகள் எனக்கு எழுவதுண்டு. நம் வாழ்வு முடியும் வரை இந்த பயணம் என்பது முடிவுறா ஒன்றாகே அது இருக்கும். அதிலிருந்து நாம் பெறுவது ஏராளம்.
இப்புத்தகத்தை முடித்து விட்டு வெளியேறிய போது ஒரு பறவை பறப்பதை கண்டேன். அந்த பறவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துக் கொண்டியிருந்து. அது உயர உயர அந்த ஆகாயமே அந்த பறவையின் வடிவில் உருமாறி, அந்த பறவையை ஓர் பேரரழகாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் அப்பறவையாக நான் இருந்தால் என ஒரு எண்ணம் வந்தவுடன் இரு கைகளை நீட்டி பறப்பது போல் ஒரு பிரக்ஞையை உணர்ந்தேன்.
நான் இவ்வுலகை பறந்து பார்க்க ஒரு கணம் ஆசைப்பட்டேன். அந்த நேரத்தில் இன்னொன்று தோன்றியது. இந்த புறப்பாடு தான் என்னை பறவை ஆக்கியதோ ……
அப்துல் வஹாப் .
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

