Jeyamohan's Blog, page 25

October 16, 2025

ரிஷிகள் எதையும் உருவாக்கவில்லையா?

அது உண்மை என்றால் நம்முடைய ரிஷிகள் எதையுமே புதிதாக கண்டடையவில்லை என்றுதானே அர்த்தம் ?அவர்கள் உடைய ஞானத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டும்?  சித்தர்களும் முனிவர்களும் அப்படியானால் செய்த பங்களிப்புதான் என்ன?

ரிஷிகள் எதையும் உருவாக்கவில்லையா?

 

I watched your video on the book Nyayakusumanjali, which is a brief yet profound text. In it, I encountered logical arguments for the existence of Brahman (God). As an atheist, I found these arguments surprising.

The logic of God
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2025 11:30

October 15, 2025

வெளியேறும் வழி – 3

வெளியேறும் வழி-2

(தொடர்ச்சி)

அருஞ்செயல்கள் எனும் போது நான் மிகப்பெரும் செயல்களை குறிப்பிடவில்லை. வரலாற்றில் என்றும் நின்றிருக்கும் பெருஞ்செயலை தான் ஒருவராக செய்து முடிக்க வேண்டும் என்ற கனவு இளமையில் எவருக்கும் எழுவதுதான். அத்தகைய பெருஞ்செயலாற்றியவர்கள் எல்லா யுகத்திலும் உள்ளனர் என்பதும் உண்மையே. ஆனால் அது அனைவருக்கும் இயல்வது அல்ல. நம் எல்லைகள் பலவும் நம்மை மீறியவை. நம் உடலின் எல்லைகள், அறிவின் எல்லைகள், நம் சூழலின் எல்லைகள். எல்லா எல்லைகளையும் மீறமுடியும் என்பது இளமைக்குரிய நம்பிக்கை. அவ்வாறல்ல என்பது அனுபவம் அளிக்கும் தெளிவு.

செயலாற்றுவது மட்டுமே நம் கையில் உள்ளது. செயலின் விளைவு என்பது காலத்தில், சூழலில், இன்னும் எத்தனையோ இணைவுகளில் உள்ளது. அதையே ‘விளைவை இயற்றுபவன் நான்’ என்று ஊழின் முகமாக வந்து நின்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். செயலாற்றுவது என்பது நம் பொருட்டே. அதன் விளைவுகள் என்ன ஆகும் என்பதை எண்ணிச்செய்யும் செயல் நமக்கு நிறைவை அளிப்பதில்லை. அதன் விளைவென்ன என்று நாம் அறியக்கூடுவதுமில்லை.

இங்கு நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் ஒன்று ஆகப்போவதில்லை என்ற உணர்வை ஓர் அகவைக்கு பிறகு நாம் இயல்பாகவே வந்தடைகிறோம். பல ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியரான துறவியிடம் வெண்முரசு எழுதும் பெருங்கனவைப் பகிர்ந்தேன். ‘நல்ல காரியம். செய். ஆனால் எழுதாமலிருந்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் உணர்ந்துகொள்’ என்றார். எழுதி முடித்ததும் அதை உணர்ந்தேன்.

ஆகவே பெருஞ்செயலாற்றுக எனும்போது மாபெரும் செயல்களுடன் இருத்தல் என்பதையே குறிப்பிடுகிறேன். பெருங்கனவுகள் மற்றும் பெரும் இலக்குகள் நோக்கிச் செல்லும் செயல்களையே பெருஞ்செயல் என்று சொல்கிறோம். அவற்றில் நமது தனிப் பங்களிப்புண்டு என்றாலும் அவை கூட்டான செயல்களே. அவற்றில் ஒரு துளியே நம்முடையது. நான் ஒரு நாவல் ஆசிரியர். என் நாவல் என் ஆக்கம். ஆனால் அதை எனக்குரியது என்று நான் எண்ணவில்லை. இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியச்செயல்பாடு என்னும் கூட்டியக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னுடைய படைப்பிலக்கியங்களும் இருக்கின்றன. ஆகவே அவை என்னுடையவை அல்ல. இங்கிருக்கும் ஒரு பெரும் செயலின் ஒரு பகுதி மட்டுமே. அப்படியே சேவைகளை, பிற செயல்பாடுகளையும் ஒருவன் கொள்ள முடியும் என்றால் அவன் பெருஞ்செயல் ஆற்றுபவன்தான்.

இங்கு ஒவ்வொரு உயிரும் அத்தகைய பெருஞ்செயலில்தான் இருக்கிறது என்று ஒரு வகையில் சொல்லலாம். இங்கே என்ன நிகழ்கிறது என்று நமக்கு தெரியாது. இங்கு மானுடஉயிர் திரளெனன நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இங்கு உயிர் என்று ஒன்று நிகழ்வதற்கு என்ன காரணம்?  இயற்கை என்று ஒன்று திகழ்வதற்கு என்ன காரணம் ? எதன் நோக்கத்தை இவை நிறைவேற்றுகின்றன? எதையுமே நாம் அறிந்து விட முடியாது. இப்பெருஞ்செயலில் ஒரு பகுதியாகவே நம்மை உணர்கிறோம்.

அதற்கப்பால் நமது அகம் தேடும் ஒரு செயல் உள்ளது. எதைச் செய்தால் நாம் நம்மை நாமே முழுமைப்படுத்திக் கொள்கிறோமோ, எதன் மூலமாக நாம் நம்மை விடுதலை செய்துகொள்கிறோமோ, எதைச் செய்கையில் நாம் முழுமையான இன்பத்தை அடைகிறோமோ அதுவே நம் செயல். அச்செயலைச் செய்யும்போது நாம் நம்முடன் தனித்திருக்கிறோம். அச்செயல் ஒரு தியானம். ஆனால் அதைச் செய்யும்போது நாம் மாபெரும் கூட்டுச்செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த காந்தி ஆற்றியது பெருஞ்செயல். ஆனால் காந்தி ஆற்றிய அப்பெருஞ்செயல் அவருடன் நின்ற பல்லாயிரம் கோடி மக்களால் ஆனது.  அதேபோன்று அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் காந்தி ஆற்றிய பெருஞ்செயலில் ஈடுபட்டவர்களே. இன்று திரும்பிப் பார்க்கையில் அத்தகைய பெரும் லட்சியவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டவர்களாக இருப்பதைக் காண்கிறோம். எத்தனை பணமும் புகழும் ஈட்டினாலும் தன்னலச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் நிறைவற்றவர்களாக, கைவிடப்பட்டவர்களாக உணர்வதையும் காண்கிறோம்.

நான் இன்று இந்த அகவையில் எண்ணிப் பார்க்கையில் எவர் நல்ல நினைவுகளை ஈட்டிக் கொண்டிருக்கிறாரோ அவர்தான் வாழ்ந்தார் என்று சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. நான் என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் படைப்புகளை எழுதிய காலகட்டம், என் நண்பர்களுடன் சேர்ந்து செய்த பயணங்கள், வாசிப்புகள் ஆகியவற்றின் ஊடாக எனக்குரிய செயலைச் செய்து நிறைவடைந்து கொண்டிருந்தேன் என்று உணர்கிறேன். அதுவே எனது வாழ்க்கையின் இலக்கென்றும் தோன்றுகிறது.

கீதை ‘வேள்வி என செய்யப்படாத உணவை உண்ண வேண்டாம்’ என்கிறது. வேள்வி என்றால் என்ன என்பதற்கான கீதையின் வரையறை இது. ‘விளைவை எண்ணி கணக்கிடாமல், தன்னலமின்றி, உலகநலனுக்காக செய்யப்படும் செயல்’. செய்பவன் நிறைவையும் விடுதலையும் அடையும் செயல் எதுவோ அதுவே வேள்வி என்பது. “செயலை வேல்வியாக்குக!” என்பதுதான் கீதை சொல்லும் செய்தி.

ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருப்பது ‘செயல்புரிக’ என்றே. நமக்கான செயல், வேள்வியென ஆகும் பெருஞ்செயல். அது ஒன்றே இங்கே நம்மை விடுதலை அடையச்செய்யும், சேவையோ, கலையோ, இலக்கியமோ எதுவாயினும். இதை நம்பமுடியாதவர்கள் உண்டு. இயல்பிலேயே அவநம்பிக்கைவாதிகளாக ஆகிவிட்டவர்கள் அவர்கள். கசப்பை, எதிர்நிலையை இயல்பென திரட்டிக்கொண்டவர்கள். அது ஓர் உளக்குறைபாடு, அதை அவர்கள் கடக்கமுடியாது. அவர்கள் அவநம்பிக்கையை பரப்புவார்கள், எட்டுத்திசையில் இருந்தும் அதுவே எதிரொலித்து அவர்களிடம் திரும்பி வரும். அவர்கள் மேல் எனக்கு என்றும் அனுதாபம்தான். அவர்களிடம் நான் விவாதிப்பதில்லை. நான் பேசுவது நம்பிக்கை கொஞ்சமேனும் எஞ்சியுள்ளோரிடம் மட்டுமே.

செயலை இரு திசைகளிலும் சென்று அடையலாம். துறந்து வெளியே நோக்கிச் சென்று தன் செயலை கண்டடைந்து அதற்கு தன்னைக் கொடுப்பதே வேள்விப்பெருஞ்செயல். அதை எய்துவோர் சிலர். குறைந்தபட்சம் அந்த வேள்வியின் அவியன்னத்தில் ஒரு சிட்டிகையையாவது பங்கிட்டுக்கொள்வதையே பிறருக்குச் சொல்கிறேன்.

(நிறைவு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2025 11:50

ம.சுசித்ரா

தமிழ், ஆங்கிலத்தில் எழுதிவரும் இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாளர், இசைஞர், தத்துவப்புலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ‘தி இந்து’ (ஆங்கிலம்), ‘புதிய தலைமுறை’ குழுமத்தின் ‘புதுயுகம்’ ஆகிய ஊடகங்களில் பணியாற்றியவர். ‘இந்து தமிழ்’ நாளிதழ் இதழாளர்.

ம.சுசித்ரா ம.சுசித்ரா ம.சுசித்ரா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2025 11:33

புதிய ஒயின்

பழையகால பாடல் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பதினேழின்றே பூங்கரளின் என்னும் மலையாளப்பாடல் எப்படி எழுபதுகளின் அதே மெட்டில், அதே ஒலியமைப்புடன் அமைந்திருந்தது என்பதைப்பற்றி. கப்பா என்னும் மலையாள தொலைக்காட்சியில் மகாஹால் சஹஸ்ரா என்னும் இசைக்குழு அதே பாடலை, அதே மெட்டில் முற்றிலும் நவீன மேலைநாட்டு பின்னணி இசையுடன் பாடியிருப்பதைக் கண்டேன். நன்றாக இருந்தது. (பதினேழின்றே பூங்கரளில் மகால் சாஸ்த்ரா)

நான் ஆச்சரியப்படுவது ஒன்று உண்டு. மலையாளத்தில் நவீன மேலையிசை (பாப் இசை) குழுக்கள் பல உள்ளன. தைக்குடம் பிரிட்ஜ், அஹம் போன்றவை அவற்றில் முக்கியமானவை. அவை மிக வெற்றிகரமானவையும்கூட. அவர்கள் சினிமாப்பாடல்களையும் மறு ஆக்கம் செய்கிறார்கள். அப்படி ஏன் நமக்கு நவீன இசைக்குழுக்களே இல்லை? ஏன் அவற்றுக்கு ரசிகர்களே இல்லை? இங்கே சினிமாப்பாடல்களை அப்படியே பாடும் இசைக்குழுக்கள் இருந்தன, ஆனால் அவையும் இன்று வெற்றிகரமாக இல்லையே.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2025 11:31

ரமேஷ், கடலூர் சீனு

ரமேஷ் – அஞ்சலிகள், கடிதங்கள் எழுத்தாளனின் சாவின் நிறைவு கலைஞனின் உயிர்த்தெழல் ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி

இனிய ஜெயம்

ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி குறிப்பில், அவரை,  செய்த உதவிகளை சொல்லிக்காட்டியும், உடல் ரீதியாகவும் நீங்கள் அவமதித்துவிட்டதாக சொல்லி சக எழுத்தாளர்கள் பொங்கிய நிலை கண்டு உண்மையாகவே மகிழ்ந்தேன். தமிழில் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரால் அவமதிக்கப்பட்டால் சக எழுத்தாளர்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள் எனும் நிலை ஒரு நல்ல விஷயம்தானே.

ஆனால் அந்த பொங்கல்களில் அவர்கள் செத்துப்போனதால் தன்னை அவமதிக்கும் கூற்றுக்களுக்கு எதிராக தன்னால் தற்காத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில் இருக்கும் ரமேஷ்க்கு உடுக்கை இழந்தவன் கை போல் அங்கே இடுக்கண் களைய ஓடிவந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நினைத்து தங்களது மிடில் க்ளாஸ் அம்மாஞ்சிதனத்தைதான் கடைவிரித்திருக்கிறார்கள். ரமேஷ் பிரேதன் அவர்களை, அவரும் தங்களை போல மிடில் கிளாஸ் அம்மாஞ்சி என்று நம்பியதால்தான் “அய்யோ அவருக்கு எப்புடி வலிக்கும்… எவ்ளோ கசக்கும்” என்றெல்லாம் சக எழுத்தாளர்கள் சிணுங்கி வைத்திருக்கிறார்கள். காரணம் இப்போது குலுங்கி குமுறிக்கொண்டு இருக்கும் “எழுத்தாளுமைகள்” யாரும் சமீப காலங்களில் ரமேஷ் உடன் நெருங்கி பழகியதோ, அவரது அடுத்தகட்ட நேர்காணல்கள் ஆக்கங்கள் எதையும் வாசித்து இல்லை என்பதுதான்.

ரமேஷ் அவர்களின் அம்மா இறந்தபோது அவர் கேட்ட தொகையை திரட்டி அவர் வசம் அளிக்க போயிருந்தேன். பேருந்து நிலையம் வந்திருந்தார். அவரை அழைத்து செல்ல ஒரு நண்பர் வருவதாக சொல்ல, அந்த நண்பர் வரும் வரை பேசிக்கொண்டு இருந்தோம். 

அப்போது அவர் எங்கெங்கோ சுற்றி சென்று பேசிய பலவற்றில் இருந்து கீழ் கண்டவற்றை தொகுத்து சொல்கிறேன். 

பாசிசம் இல்லாமல் இங்கே உயிர் வாழ்க்கை இல்லை. பாசிசம் இல்லாவிட்டால் பிறக்கவே முடியாது. (கொட்டின மொத்த விந்தும் பொறக்கணும் அதுதான் ஜனநாயகம் அப்டின்னு இயற்கை விதிச்சிருந்தா என்னாகும்? கிளிஞ்சிறாது… என்றுவிட்டு வெடித்து சிரித்தார்) பிறந்த குழந்தை உடல் முதல் முதிய உடல் வரை அதை நீங்காது உடன் இருப்பது பாசிசம். பொருளாதார சமத்துவம் என்ற கனவை வீழ்த்தியது இந்த பாசிசம்தான். முதலீட்டியம் இந்த பாசிசத்துக்கு சேவை செய்வது. ஆகவே அதுவே வெல்லும். அதில் அறம் என்பதெல்லாம் கிடையாது. அறம் ஒரு சமூக உடன்படிக்கைதானே அன்றி மனித உடலின் இயல்பில் பாசிசம் அன்றி எந்த அறமும் கிடையாது.  இனி இந்த பொருளாதார நிலைதான் ஒரே ஒரு இருப்பு. இதில் ஒரு எழுத்தாளனாக கலைஞனாக உணரும் ஒருவன் பிச்சை எடுத்து வாழ்வது மட்டுமே இந்த நிலைக்கு எதிராக வாழ்வை கொண்டு செல்லும் கலக செயல்பாடாக இருக்க முடியும்.

ரமேஷ் எப்போதுமே எதை சொல்கிறாரோ அதை ஏற்று வரம்புகளை மீறிய வாழ்வை வாழ்ந்தவர் என்பதை எல்லோரும் அறிவோம். பிற்கால ரமேஷ் என்று நாம் காண்பது  மேலே சொன்ன அவரது சொற்களின் படி வாழ முயன்ற ரமேஷ் அவர்களைதான். (நான் சொன்னவற்றை தேடி பார்த்தால் ரமேஷ் அவர்களின் எழுதிலேயே வாசிக்க கிடைக்கும்) அதிலும் அவர் வரம்புகளை மீறிய கலகக்காரனாகவே வாழ்ந்தார். அந்த வாழ்வை அவர் வாழ எத்தனை பேர் துணை நின்றார்கள் என்பது வெளியே தெரிவது எவரது அவமானதுக்குக்கும் உரிய விஷயம் இல்லை. அவர் யாசகனாக இல்லை எழுத்தாளனாக வாழ்ந்தார், பிரேமா கையில் குழந்தையாக வாழ்ந்தார். போகும்போது பேரரசனாக போனார்.  அது ஒரு ஆவணம். அது போக இந்த வகை வாழ்கையில் ரமேஷ் மானம் அவமானம் என்ற மிடில் கிளாஸ் விழுமியங்களுக்கு அப்பால் இருந்தார். (இதன் பொருள் ரமேஷ் மானம் கெட்டவர் என்பதல்ல என்பதையும் இந்த மிடில் கிளாஸ் அம்மாஞ்சிகளுக்கு சேர்த்தே சொல்லிவிட வேண்டும்)

ரமேஷ் நோயுற்ற பிறகு ஒரு சராசரி மனிதன் கண்டால் நம்பவே இயலாத அளவுக்கு உடல் மையம் கொண்டவராக ஆனார். (ஒரு சராசரி மனிதனால் ஒரு மணி நேரம் அவர் அருகே அமர்ந்திருக்க முடியாது. அவர் என்னிடம் அவரது மற்றும் பிற உடல் குறித்து பேசிய எதையும் இங்கே எழுதினால் இந்த மிடில் கிளாஸ் அமாஞ்சிகளால் அதை ஜீரணிக்கவே முடியாது.) அந்த உடலுக்கு ஆண் பெண் என்ற மையம் கிடையாது. சாரம் என்று ஒன்று கிடையாது. ஆன்மா கிடையாது. மொழி சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்டு இந்த உடலுக்கு அளிக்கப்பட்டது… இப்படி இன்னும் இன்னும் நிறைய கண்டடைதல்கள். அவரை இருள் அன்றி எங்கும் கொண்டு சேர்க்காத கண்டடைதல்கள். அவரை உடைத்து முன்னே நகர்த்த எந்த சொல்லை சொல்ல வேண்டுமோ அது அவருக்கு சொல்லப்பட்டது அவர் எழுத்தாளனாக முன்னே சென்றார். இதுவும் சொல்லப்பட வேண்டிய ஆவணம். 

இதையெல்லாம் இந்த மிடில் கிளாஸ் அம்மாஞ்சி எழுத்தாளர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் புரிந்து கொள்வார்கள் என்று விதியை நம்புவோம்:). 

கடலூர் சீனு

ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு  கடிதம்  ரமேஷ் பிரேதன், கடிதங்கள் ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம் ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள் விஷ்ணுபுரம் விருது, கடிதம். ரமேஷ் வாழ்த்துக்கள் ரமேஷ், கடிதங்கள்

ரமேஷ், கடிதங்கள்

ரமேஷ் பிரேதன், கடிதங்கள்

ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்

ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள்

ரமேஷ் பிரேதனுக்கு விருது, வாழ்த்துக்கள்

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்.

ரமேஷ் பிரேதன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2025 11:31

சைவம் அறிந்து நெகிழ்ந்து…

The answer to the question about ritual, faith, and wisdom is precise and satisfying. This is the main question asked by commoners at all levels of life. Generally, we have a fear of knowledge.

The need of the hour…

இந்த முறை சைவ சித்தாந்த வகுப்பில் கலந்து கொண்டேன், ஆசிரியர் முத்தையா அவர்கள் முன்பாகவே எங்களுக்கு ஓர் பதிகம் அனுப்பி அதை வாசித்து விட்டு வர சொல்லி இருந்தார், அந்த பதிகம் எங்கள் பாட திட்டத்தின் சுருக்கிய வடிவம் என்பதை வகுப்பில் உணர்ந்து கொண்டோம்.

சைவம் அறிந்து நெகிழ்ந்து…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2025 11:30

“Stories of the True” நூலறிமுக விழா அழைப்பு – டாலஸ்

அமெரிக்காவின் முன்னணி பதிப்பகமான FSG வெளியிடும்  “Stories of the True”  நூலறிமுக விழா ஒன்று டாலஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் புகழ்பெற்ற Barnes & Noble புத்தகக் கடையில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

நாள்: அக்டோபர் 22 2025, புதன்கிழமை 

நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை 

இடம்: Barnes & Noble, 5301 Beltline Road Suite 118, Dallas, TX 75254

ALTA  போன்ற குறிப்பிடத்தக்க குழுமத்தின் விருதுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்ற,  இந்தியாவில் புகழ்பெற்ற ‘அறம்‘ நூலின் அமெரிக்க ஆங்கிலப் பதிப்பை வாங்கவும், ஆசிரியரை சந்திக்கவும்,  சிறிய உரையாடலுக்கான வாய்ப்பும் உள்ள இந்த நிகழ்வுக்கு வாசக நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

நம் தமிழ்ச் சூழலையும், தமிழ் இலக்கியத்தையும் அமெரிக்காவில் படிக்கும் அடுத்த தலைமுறைக்கோ அல்லது அமெரிக்க நண்பர்களுக்கோ  அறிமுகம் செய்ய சரியான தேர்வாகிய இந்தப் புத்தகத்தை ஆசிரியரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள கிடைக்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நிகழ்வு குறித்து Barnes & Noble தளத்தில் : https://stores.barnesandnoble.com/event/9780062196180-0   

நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு எதுவும் தேவையில்லை. புத்தகக் கடையில் தேவைக்கதிகமாகவே இலவச பார்க்கிங் வசதியும் இருக்கிறது. 

மேலும் தொடர்புக்கு: vishnupuramusa@gmail.com / +1 972-822-9639

அன்புடன்,

டெக்ஸஸ் நண்பர்கள்  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2025 06:37

October 14, 2025

கரூர் விபத்தில் கற்கவேண்டியவை…

பொதுவாக ஒரு விபத்து அல்லது பரபரப்பு நிகழ்வுகளுக்கு உடனே ஏதேனும் எதிர்வினையாற்றுவதை நான் செய்வதில்லை. ஆகவே கொஞ்சம் தாமதமாக இதை பேசியிருக்கிறேன். ஒரு நிகழ்வுக்கான உடனடி எதிர்வினை என்பதற்கு அப்பால் நாம் கருத்தில்கொள்ள வேண்டிய சில இந்த நிகழ்வில் உள்ளன.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2025 11:36

வெளியேறும் வழி-2

வெளியேறும் வழி-1

(தொடர்ச்சி)

நாம் இன்று சிக்கிக்கொண்டிருக்கும் சுழல்பொறியில் இருந்து வெளியேறும் வழி இரண்டு. ஒன்று வெளியே உள்ள வெளி நோக்கி செல்வது. இன்னொன்று தன்னகத்தே ஒரு வழியை உருவாக்கிக் கொள்வது.

வெளியே உள்ள வெளி எப்போதும் அங்குதான் உள்ளது. நாம் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பொறி நமக்களிக்கும் அனைத்தையும் துறந்து அதை நோக்கிச் சென்றவர்களின் ஒரு வரிசை எப்போதும் நம் முன் உள்ளது. நாம் தொடர்ந்து செய்திகளில் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உயர்ந்த வேலையை, சமூக இடத்தை துறந்து உள்ளத்திற்கு உகந்த சேவை ஒன்றிற்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் பலர். தங்கள் உள்ளம் விழைந்த கலைக்கும் இலக்கியத்துக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் தங்களை அளிக்கும்பொருட்டு முற்றாக உலகில் இருந்து விடுவித்துக் கொண்டவர்கள் அவர்கள்.

அவ்வாறு சென்றவர்கள் முதலில் நுகர்வைத் துறக்கிறார்கள். நுகர்வைத் துறந்தால் பணமீட்டியாகவேண்டிய பொறுப்பையும் துறக்கலாம். அதுவே விடுதலை. ஆனால் அதை எய்துபவர்கள் சராசரிக்கு மேம்பட்ட அகத்திறன் கொண்டவர்கள். வேண்டாம் என்று சொல்வதற்கு அதற்குரிய தனி உளஆற்றல் தேவை. தன்னைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு உறவிலிருந்தும் விடுபடவேண்டும்.தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேண்டுகோள்களை, மன்றாட்டுக்களை நிராகரித்து, தன்னுடைய அகத்தின் குரலை மட்டுமே கேட்டு, முன நகரவேண்டும். அதன் விளைவு அப்போது கண்ணுக்குத் தெரியாது. நம் கனவு மட்டுமே நம்முடன் இருக்கும். அதை மட்டுமே நம்பவேண்டும். அதை இன்னொருவருக்கு புரியவைக்க முடியாது. அத்துடன் அதில் தோல்விகளும் நிகழலாம். அப்போது நாம் இளக்காரத்துக்கு உள்ளாவோம். கண்டிக்கப்படுவோம், பழிக்கப்படுவோம். அந்த முடிவை எடுப்பது மிகக் கடினமான ஒரு செயல். நேற்றைய துறவைவிட கடினமானது அது.

நுகர்வு இன்று ஒவ்வொருவருக்கும் வெறும் கேளிக்கையோ ஆடம்பரமோ மட்டுமல்ல. அது இன்று ஒருவரின் அடையாளம்தான். நீங்கள் என்ன ஆடை அணிந்து இருக்கிறீர்கள், என்ன செல்பேசி வைத்திருக்கிறீர்கள், எத்தகைய வீட்டில் தங்குகிறீர்கள், என்ன கார் வைத்திருக்கிறீர்கள் என்பதே உங்களுடைய அடையாளத்தை இன்று தீர்மானிக்கிறது. அந்நிலையில் நுகர்வு துறப்பு என்பது அடையாளத் துறப்பும் கூடத்தான். அடையாளத் துறப்பு எல்லாமே சாவுதான். அடையாளச் சாவிலிருந்து ஒருவர் மீண்டும் ஒரு புதிய அடையாளத்தில் பிறந்தெழுந்தாக வேண்டும். அதற்கான வாய்ப்புண்டு. ஆனால் அப்படி மீண்டும் நிகழாமல் போய்விடும் வாய்ப்பும் உண்டு. அந்த மறுபிறப்பும் புதிய அடையாளமு நிகழவில்லையேல் அது அவரது முற்றழிவாக ஆகிவிடக் கூடும்.

அத்துடன் இந்தியச் சூழலில் நாம் எவரும் தனிநபர்கள் அல்ல. இங்கே நாமெல்லாம் குடும்பமாகவே வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் நம்பி வாழ்கிறோம். ஆகவே ஒருவர் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை துறக்கையில் அவருடன் அணுக்கமான அத்தனை பேரும் அந்த அடையாளத்தை துறக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறன்றி ஒருவர் அவருடைய உறவுகளை அனைத்தையும் அவர் துறப்பது என்பது இன்னும் பெரிய ஒரு சாவாக முடியும். அந்த ஒரு காரணத்தினாலேயே தங்களுடைய எல்லைகளுக்குள் சிக்கிக்கொண்ட பலரை எனக்குத் தெரியும். பொறுப்புகளையும் கடமைகளையும்  எவரும் எளிதாகத் துறக்கமுடியாது.

என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் ஒரு பெரும் பதவியில் இருந்தார். அதை துறந்து ஒரு சிற்றூரில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். வேளாண்மைப் பணிக்காக இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்று கொண்டிருந்த அவரை காரில் வந்த ஒருவர் காரை நிறுத்தி, கை சுண்டி ,  ‘யோவ் வாய்யா இங்க’ என்று அழைத்தார். நண்பர் அவருக்குள் அந்த நேரத்தில் எழுந்த கடும் சீற்றத்தை வெல்ல தனக்கு நீண்ட பொறுமை தேவைப்பட்டது என்றார். அந்தக் காரில் வந்த நபர் வைத்திருந்த காரை விட பத்துமடங்கு விலைமதிப்புள்ள கார் வைத்திருந்தவர் நம் நண்பர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது, அவர் துறந்தது அவர் அமெரிக்காவில் ஆற்றிய அந்தப் பணியை மட்டுமல்ல, அது உருவாக்கிய சமூக அடையாளத்தையும் கூடத்தான். அந்த அடையாள இழப்பு அவரைவிட அவர் மனைவிக்கு பெரும் துயரத்தை அளித்திருக்கலாம். ஏனெனில் நம் தமிழ்ச் சூழலில் ஆண்கள் பெறும் புதிய அடையாளங்களை பெண்கள் அடைவதில்லை. ஆனால் அவர்கள் இழக்கும் பழைய அடையாளங்களை பெண்கள் உடனே இழந்து விடுகிறார்கள்.

ஒருவர் துறந்து வெளியேறி வெளியே தனக்கான இடத்தை தேடிக்கொள்ள முடியும். அதற்கு தேவையான ஆன்ம பலமும், உள்ள உறுதியும் மிகச்சிலருக்கே அமைகின்றன.  அவ்வாறு இல்லாத பிறருக்கான வழி என்பது அகத்தே  ஒரு வழியை தேடுவதுதான். தன் உழைப்பு-நுகர்வு என்னும் இயந்திரச்சுழற்சிக்குள் தனக்கான ஒரு சிறு இடத்தை உருவாக்கிக் கொள்வது. தனக்கான ஒரு செயலைக் கண்டடைவது, அதன் வழியாக விடுதலையை ஈட்டுவது என்று நான் சொல்வது அதையே.

நான் அமெரிக்காவுக்கு சென்றபோது பதினேழாம் நூற்றாண்டில் அஙகு ஒரு நம்பிக்கை இருந்த்தை அறிந்தேன். கருப்பினத்தார் தூங்குவது இல்லை என்று வெள்ளை இனத்தார் நம்பினார்கள். ஏனெனில் உண்மையிலேயே அடிமைகள் மிகக் குறைவான நேரம்தான் தூங்கினார்கள். வெளிச்சம் வந்த நேரத்தில் இருந்து வெளிச்சம் மறையும் நேரம் வரைக்கும் அவர்கள் உரிமையாளர்களின் வயல்களில் வேலை செய்தாக வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் தங்களுடைய சிறு குடில்களுக்குச் செல்ல முடியும். அங்கு சென்று உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் தூங்க வேண்டும். ஆனால் அந்த தூங்கும் நேரத்தில் சற்றுப் பொழுதை எடுத்துக் கொண்டால் அவர்கள் பாடிக்கொள்ள முடியும். அன்புடன் உரையாடிக் கொள்ள முடியும். சிறிய கலைச் செயல்பாடுகளில் ஈடுபட முடியும். அவர்கள் தூக்கத்தை இழந்து அந்த சிற்று உலகத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அதைக்கண்ட உரிமையாளர்கள் கருப்பினத்தார் தூங்குவதே இல்லை என எண்ணினர்.

ஏன் அந்த தியாகம்? அந்தச் சிறியபொழுதில் அவர்கள் வாழ்வதுதான் அவர்களின் உண்மையான வாழ்க்கை. வயலில் வாழ்வது வெறும் அடிமை வாழ்க்கை மட்டும்தான். வாழ்வது என்பது மகிழ்வுடன் இருப்பதே. உழைப்பதும் உண்பதும் பிழைப்பது மட்டுமே. இன்றைய நவீன அடிமைகளுக்கும் அதுவே வழி. அவர்கள் அவர்களுக்குரிய ஒரு சிறுபொழுதே உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரு அகவாழ்க்கையை திரட்டிக்கொள்ள முடியும். அவர்களின் நேரத்திலும் அகத்திலும் ஒரு சிறு பகுதியை அவர்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ள முடியும். அதன் வழியாக அவர்கள் தங்களின் அடிமைத்தனத்தை முழுமையாக அடையாமல் இருக்க முடியும்.  தங்களை அடிமைப்படுத்தும் அமைப்பை நோக்கி ஒரு ரகசியப் புன்னகையை புரிய முடியும்.

செயல் செயல் என்று திரும்பத் திரும்ப நான் சொல்வது இந்த விடுதலையையே. செயல் என்று சொல்லும்போது நான் அதன் வழியாகப் பணம் ஈட்டுவதையோ, அதிகாரம் எய்துவதையோ அல்லது அடையாளத்தை நாடுவதையோ குறிக்கவில்லை. ஒருவர் தனக்கு இன்பமும் விடுதலையும் அளிக்கக்கூடிய ஒரு செயலை கணடடைந்து, அதை செய்வதனூடாகத் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ளமுடியும் என்று மட்டுமே சொல்கிறேன். தன் ஆத்மாவை முழுமையாக விற்பனை செய்வதிலிருந்து தன்னை தடுத்துக் கொள்ளமுடியும். ஒரே வாழ்க்கையின் பொருளற்ற சுழற்சியில் இருந்து ஒரு சிறு இடத்தை மீட்டுக்கொள்ள முடியும். தான் ஓர் அடிமை அல்ல என்று அவர் அதன்பின் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடியும். அந்த விடுதலைக்காகவே செயல் என்று ஒன்றை கண்டடைய வேண்டும் என்று சொல்கிறேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2025 11:35

கே.பழனிவேலு

கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். கல்வியியல் தொடர்பான நூல்களையும், கோட்பாடு சார்ந்த ஆய்வு நூல்களையும் எழுதினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றார்.

கே.பழனிவேலு கே.பழனிவேலு கே.பழனிவேலு – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2025 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.