வெளியேறும் வழி-2
(தொடர்ச்சி)
நாம் இன்று சிக்கிக்கொண்டிருக்கும் சுழல்பொறியில் இருந்து வெளியேறும் வழி இரண்டு. ஒன்று வெளியே உள்ள வெளி நோக்கி செல்வது. இன்னொன்று தன்னகத்தே ஒரு வழியை உருவாக்கிக் கொள்வது.
வெளியே உள்ள வெளி எப்போதும் அங்குதான் உள்ளது. நாம் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பொறி நமக்களிக்கும் அனைத்தையும் துறந்து அதை நோக்கிச் சென்றவர்களின் ஒரு வரிசை எப்போதும் நம் முன் உள்ளது. நாம் தொடர்ந்து செய்திகளில் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உயர்ந்த வேலையை, சமூக இடத்தை துறந்து உள்ளத்திற்கு உகந்த சேவை ஒன்றிற்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் பலர். தங்கள் உள்ளம் விழைந்த கலைக்கும் இலக்கியத்துக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் தங்களை அளிக்கும்பொருட்டு முற்றாக உலகில் இருந்து விடுவித்துக் கொண்டவர்கள் அவர்கள்.
அவ்வாறு சென்றவர்கள் முதலில் நுகர்வைத் துறக்கிறார்கள். நுகர்வைத் துறந்தால் பணமீட்டியாகவேண்டிய பொறுப்பையும் துறக்கலாம். அதுவே விடுதலை. ஆனால் அதை எய்துபவர்கள் சராசரிக்கு மேம்பட்ட அகத்திறன் கொண்டவர்கள். வேண்டாம் என்று சொல்வதற்கு அதற்குரிய தனி உளஆற்றல் தேவை. தன்னைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு உறவிலிருந்தும் விடுபடவேண்டும்.தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேண்டுகோள்களை, மன்றாட்டுக்களை நிராகரித்து, தன்னுடைய அகத்தின் குரலை மட்டுமே கேட்டு, முன நகரவேண்டும். அதன் விளைவு அப்போது கண்ணுக்குத் தெரியாது. நம் கனவு மட்டுமே நம்முடன் இருக்கும். அதை மட்டுமே நம்பவேண்டும். அதை இன்னொருவருக்கு புரியவைக்க முடியாது. அத்துடன் அதில் தோல்விகளும் நிகழலாம். அப்போது நாம் இளக்காரத்துக்கு உள்ளாவோம். கண்டிக்கப்படுவோம், பழிக்கப்படுவோம். அந்த முடிவை எடுப்பது மிகக் கடினமான ஒரு செயல். நேற்றைய துறவைவிட கடினமானது அது.
நுகர்வு இன்று ஒவ்வொருவருக்கும் வெறும் கேளிக்கையோ ஆடம்பரமோ மட்டுமல்ல. அது இன்று ஒருவரின் அடையாளம்தான். நீங்கள் என்ன ஆடை அணிந்து இருக்கிறீர்கள், என்ன செல்பேசி வைத்திருக்கிறீர்கள், எத்தகைய வீட்டில் தங்குகிறீர்கள், என்ன கார் வைத்திருக்கிறீர்கள் என்பதே உங்களுடைய அடையாளத்தை இன்று தீர்மானிக்கிறது. அந்நிலையில் நுகர்வு துறப்பு என்பது அடையாளத் துறப்பும் கூடத்தான். அடையாளத் துறப்பு எல்லாமே சாவுதான். அடையாளச் சாவிலிருந்து ஒருவர் மீண்டும் ஒரு புதிய அடையாளத்தில் பிறந்தெழுந்தாக வேண்டும். அதற்கான வாய்ப்புண்டு. ஆனால் அப்படி மீண்டும் நிகழாமல் போய்விடும் வாய்ப்பும் உண்டு. அந்த மறுபிறப்பும் புதிய அடையாளமு நிகழவில்லையேல் அது அவரது முற்றழிவாக ஆகிவிடக் கூடும்.
அத்துடன் இந்தியச் சூழலில் நாம் எவரும் தனிநபர்கள் அல்ல. இங்கே நாமெல்லாம் குடும்பமாகவே வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் நம்பி வாழ்கிறோம். ஆகவே ஒருவர் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை துறக்கையில் அவருடன் அணுக்கமான அத்தனை பேரும் அந்த அடையாளத்தை துறக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறன்றி ஒருவர் அவருடைய உறவுகளை அனைத்தையும் அவர் துறப்பது என்பது இன்னும் பெரிய ஒரு சாவாக முடியும். அந்த ஒரு காரணத்தினாலேயே தங்களுடைய எல்லைகளுக்குள் சிக்கிக்கொண்ட பலரை எனக்குத் தெரியும். பொறுப்புகளையும் கடமைகளையும் எவரும் எளிதாகத் துறக்கமுடியாது.
என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் ஒரு பெரும் பதவியில் இருந்தார். அதை துறந்து ஒரு சிற்றூரில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். வேளாண்மைப் பணிக்காக இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்று கொண்டிருந்த அவரை காரில் வந்த ஒருவர் காரை நிறுத்தி, கை சுண்டி , ‘யோவ் வாய்யா இங்க’ என்று அழைத்தார். நண்பர் அவருக்குள் அந்த நேரத்தில் எழுந்த கடும் சீற்றத்தை வெல்ல தனக்கு நீண்ட பொறுமை தேவைப்பட்டது என்றார். அந்தக் காரில் வந்த நபர் வைத்திருந்த காரை விட பத்துமடங்கு விலைமதிப்புள்ள கார் வைத்திருந்தவர் நம் நண்பர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது, அவர் துறந்தது அவர் அமெரிக்காவில் ஆற்றிய அந்தப் பணியை மட்டுமல்ல, அது உருவாக்கிய சமூக அடையாளத்தையும் கூடத்தான். அந்த அடையாள இழப்பு அவரைவிட அவர் மனைவிக்கு பெரும் துயரத்தை அளித்திருக்கலாம். ஏனெனில் நம் தமிழ்ச் சூழலில் ஆண்கள் பெறும் புதிய அடையாளங்களை பெண்கள் அடைவதில்லை. ஆனால் அவர்கள் இழக்கும் பழைய அடையாளங்களை பெண்கள் உடனே இழந்து விடுகிறார்கள்.
ஒருவர் துறந்து வெளியேறி வெளியே தனக்கான இடத்தை தேடிக்கொள்ள முடியும். அதற்கு தேவையான ஆன்ம பலமும், உள்ள உறுதியும் மிகச்சிலருக்கே அமைகின்றன. அவ்வாறு இல்லாத பிறருக்கான வழி என்பது அகத்தே ஒரு வழியை தேடுவதுதான். தன் உழைப்பு-நுகர்வு என்னும் இயந்திரச்சுழற்சிக்குள் தனக்கான ஒரு சிறு இடத்தை உருவாக்கிக் கொள்வது. தனக்கான ஒரு செயலைக் கண்டடைவது, அதன் வழியாக விடுதலையை ஈட்டுவது என்று நான் சொல்வது அதையே.
நான் அமெரிக்காவுக்கு சென்றபோது பதினேழாம் நூற்றாண்டில் அஙகு ஒரு நம்பிக்கை இருந்த்தை அறிந்தேன். கருப்பினத்தார் தூங்குவது இல்லை என்று வெள்ளை இனத்தார் நம்பினார்கள். ஏனெனில் உண்மையிலேயே அடிமைகள் மிகக் குறைவான நேரம்தான் தூங்கினார்கள். வெளிச்சம் வந்த நேரத்தில் இருந்து வெளிச்சம் மறையும் நேரம் வரைக்கும் அவர்கள் உரிமையாளர்களின் வயல்களில் வேலை செய்தாக வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் தங்களுடைய சிறு குடில்களுக்குச் செல்ல முடியும். அங்கு சென்று உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் தூங்க வேண்டும். ஆனால் அந்த தூங்கும் நேரத்தில் சற்றுப் பொழுதை எடுத்துக் கொண்டால் அவர்கள் பாடிக்கொள்ள முடியும். அன்புடன் உரையாடிக் கொள்ள முடியும். சிறிய கலைச் செயல்பாடுகளில் ஈடுபட முடியும். அவர்கள் தூக்கத்தை இழந்து அந்த சிற்று உலகத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அதைக்கண்ட உரிமையாளர்கள் கருப்பினத்தார் தூங்குவதே இல்லை என எண்ணினர்.
ஏன் அந்த தியாகம்? அந்தச் சிறியபொழுதில் அவர்கள் வாழ்வதுதான் அவர்களின் உண்மையான வாழ்க்கை. வயலில் வாழ்வது வெறும் அடிமை வாழ்க்கை மட்டும்தான். வாழ்வது என்பது மகிழ்வுடன் இருப்பதே. உழைப்பதும் உண்பதும் பிழைப்பது மட்டுமே. இன்றைய நவீன அடிமைகளுக்கும் அதுவே வழி. அவர்கள் அவர்களுக்குரிய ஒரு சிறுபொழுதே உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரு அகவாழ்க்கையை திரட்டிக்கொள்ள முடியும். அவர்களின் நேரத்திலும் அகத்திலும் ஒரு சிறு பகுதியை அவர்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ள முடியும். அதன் வழியாக அவர்கள் தங்களின் அடிமைத்தனத்தை முழுமையாக அடையாமல் இருக்க முடியும். தங்களை அடிமைப்படுத்தும் அமைப்பை நோக்கி ஒரு ரகசியப் புன்னகையை புரிய முடியும்.
செயல் செயல் என்று திரும்பத் திரும்ப நான் சொல்வது இந்த விடுதலையையே. செயல் என்று சொல்லும்போது நான் அதன் வழியாகப் பணம் ஈட்டுவதையோ, அதிகாரம் எய்துவதையோ அல்லது அடையாளத்தை நாடுவதையோ குறிக்கவில்லை. ஒருவர் தனக்கு இன்பமும் விடுதலையும் அளிக்கக்கூடிய ஒரு செயலை கணடடைந்து, அதை செய்வதனூடாகத் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ளமுடியும் என்று மட்டுமே சொல்கிறேன். தன் ஆத்மாவை முழுமையாக விற்பனை செய்வதிலிருந்து தன்னை தடுத்துக் கொள்ளமுடியும். ஒரே வாழ்க்கையின் பொருளற்ற சுழற்சியில் இருந்து ஒரு சிறு இடத்தை மீட்டுக்கொள்ள முடியும். தான் ஓர் அடிமை அல்ல என்று அவர் அதன்பின் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடியும். அந்த விடுதலைக்காகவே செயல் என்று ஒன்றை கண்டடைய வேண்டும் என்று சொல்கிறேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

