Jeyamohan's Blog, page 26
September 3, 2025
விஜய் அரசியல், மெய்யான அரசியல்
விஜய் தன் அரசியல்கட்சியைத் தொடங்குவதன் வழியாக உருவாகி வரும் அரசியல் பற்றிய என் எண்ணம் என்ன? நான் அரசியல் என நம்புவது உண்மையில் என்ன? அதில் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இன்னொரு கோணத்தில் கட்சியரசியல், அதிகார அரசியல் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ள அரசியல் என்பது என்ன?
முடிவிலா அலைகடல்
அன்புள்ள ஜெ
கடல் நாவலை வாசித்தேன். நாவலை கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கியபோது எனக்கு ஒரு மனப்பதிவு இருந்தது. சினிமாவாக வந்த நாவல், ஆகவே படுகளம் போல பரபரப்பாக இருக்கும் என நினைத்தேன். முதல் அத்தியாயமே முற்றிலும் வேறொன்றாக இருந்தது. நாவல் கதையாகச் சொல்லப்படாமல் மாபெரும் வாக்குமூலங்களாகவே சென்றது. அது வேறொரு அனுபவமாக அமைந்தது. மிகத்தீவிரமான நாவல் என்ற எண்ணம் உருவாகியது. அதை வாசித்து முடிக்க ஓரிரு மாதம் ஆகும் என நினைத்தேன். (நான் விஷ்ணுபுரம் முடிக்க ஒரு வருடம் ஆகியது) ஆனால் மிக மிக விரைவாக, ஒரே வாரத்தில் கடல் நாவலை வாசித்து முடித்தேன். அந்த உணர்ச்சிவேகம் அத்தனை ஈர்ப்பை அளித்தது.
முதல் வரி முதல் உச்சகட்டத்திலேயே நாவல் சென்றது. தாமஸும், சாமும் பேசிக்கொள்ளும் உரையாடல். அவர்களின் ஆன்மாக்கள்தான் பேசிக்கொள்கின்றன. அவர்கள் ஒரு வார்த்தையாவது பேசினார்களா என்பதே சந்தேகம்தான். ஆனால் பேச்சு நடந்தது. அது சிலசமயம் ஒருவருக்கொருவர் பாவமன்னிப்பு கோருவதுபோல் உள்ளது. சிலசமயம் வாள்களால் பொறிபறக்கச் சண்டை செய்வதுபோல இருந்தது. ஆன்மாவின் மாபெரும் வலி இந்த அளவுக்கு உக்கிரமாக வெளிப்பட்ட நாவல்களே தமிழில் குறைவுதான்.
ஆன்மாவின் வலி, மீட்புக்கான ஆன்மாவின் தவிப்பு, மீட்பின் கணம் ஆகியவற்றைச் சொல்ல மட்டுமே முயன்றிருப்பதனால் நிகழ்ச்சிகளை விளக்கவோ, காட்சிகளை விரிவாக்கவோ நீங்கள் முயலவே இல்லை. கதைகூட அவ்வளவு முக்கியம் அல்ல. சந்தர்ப்பங்கள் மட்டுமே நாவலை முன்னெடுத்துச் சென்றன. கதையில் புதுமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நீங்களே அதைச் சொல்லியிருக்கிறீர்கள். சந்தர்ப்பங்களை அமைக்கும் விதத்தில் கதாபாத்திரத்தின் இருட்டோ வெளிச்சமோ வெளியாவதில்தான் நாவலின் தீவிரமான அழகு உள்ளது.
மீட்பின் கணம் என்பது அத்தனை அமைதியாக, காலையொளி வந்து விரிவதுபோல அத்தனை இயல்பாக நிகழ்கிறது. இந்நாவலை ஒரு பெரிய வெஸ்டர்ன் பெயிண்டிங் ஆக நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். கிறிஸ்தவ இறையியலில் இருந்து எழுந்த நாவல். ஆனால் மானுட மீட்பைப்பற்றிய ஒரு இதிகாசம் என்றுதான் சொல்வேன்.
எம்.ஆர்.ராஜேஸ்வரன்
அன்புள்ள ராஜேஸ்வரன்,
என் நாவல்களைப் பற்றி நான் சொல்லுவது ஒன்று உண்டு. அவை அறிவார்ந்த தர்க்கம் கொண்டவை, வடிவபோதத்துடன் உருவாக்கப்படுபவை. ஆனால் அவையிரண்டும் அடித்தளக் கட்டுமானங்களே. அவற்றுக்குமேல் நான் உருவாக்குவது எப்போதும் உணர்வுநாடகங்களையும், அவை உச்சம்கொள்ளும் கவித்துவ உச்சங்களையும்தான். தர்க்கவிளையாட்டு, மொழிவிளையாட்டு ஆகியவை கொண்ட படைப்புகளை உள்ளீடற்றவை என்றுதான் எப்போதும் நம்பிவந்துள்ளேன். ஓர் ஆர்வத்தின் பொருட்டு அவற்றில் முக்கியமானவற்றையெல்லாம் வாசித்துள்ளேன் என்றாலும்.
எனக்கு வரலாற்றார்வம் உண்டு. இந்திய, தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் தொடர்ச்சியாக வாசித்தறிபவன். தொல்லியல் இடங்களுக்கு நேரில் சென்றுகொண்டே இருப்பவன். அதேபோல ஐரோப்பிய வரலாற்றிலும், பண்பாட்டிலும் தீவிரமான ஆர்வம் உண்டு. ஆகவே ஐரோப்பியப் பண்பாட்டின் மீதான விமர்சனமாகவோ, மறுஆக்கமாகவோ வெளிவந்துகொண்டிருக்கும் (சொல்லப்போனால் வெளிவந்துகொண்டிருந்த, இப்போது அந்த அலை பின்னகர்ந்துவிட்டது) அறிவார்ந்த படைப்புகள் எனக்கு ஆர்வத்தையே உருவாக்கின. ஆனால் அவை என்னை எவ்வகையிலும் மேலெடுக்கவில்லை. ஏனென்றால் எனக்கு அவற்றுடன் உணர்ச்சித்தொடர்பு இல்லை.
ஆனால் என்னை ஆழமாக உள்ளிழுத்துக்கொண்ட மேலைப்படைப்புகள் பதினேழாம்நூற்றாண்டு முதலே உண்டு. அவற்றைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். பல நூல்களைப் பற்றி தமிழில் நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் கவனித்துள்ளேன். மேற்குச்சாளரம் என்னும் நூலை பரிந்துரைக்கிறேன். (எந்த வாசகனுக்கும் அப்படி அவனுக்கே உரிய படைப்புகள் இருக்கும். புகழ் சார்ந்து அவன் நூல்களைத் தெரிவுசெய்ய மாட்டான். அவன் தெரிவு தன் அகத்தேடல் சார்ந்தே அமையும்)
அவ்வாறு எனக்கு உகந்த செவ்வியல் படைப்பு டிவைன் காமெடி. அந்தச் சாயல்கொண்ட பல நாவல்கள் என்னை ஆட்கொண்டிருக்கின்றன. மேரி கொரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் உட்பட. அவற்றிற்கு என் ‘டிரிபியூட்’ என்று கடல் நாவலைச் சொல்வேன். முழுக்கமுழுக்க இந்தியத்தன்மை கொண்ட, இந்திய உணர்ச்சி கொண்ட ஒரு நாவல் அது. அந்நாவலுக்கான கதைக்கட்டுமானம் மிகமிகத் தொன்மையானது. இருளில் உழலும் ஆத்மாவை இட்டுச்செல்லும் தேவதை. தெய்வமும் சாத்தானும் இருபக்கமும் நின்று பகடையாடும் அவன் நெஞ்சம்.
ஆனால் அதன் மொழியில், அதன் நிகழ்வுகளில் ஊடாடும் உணர்வுகளில், அதன் குறியீடுகளில் எழும் ஒளியில் என் அகம் நிகழ்ந்திருக்கிறது. ஆகவே எனக்கு மிக முக்கியமான படைப்பு.
ஜெ
வல்லினம் இதழ், செப்டெம்பர்
செப்டம்பர் மாத வல்லினம் பதிவேற்றம் கண்டது. சு. வேணுகோபால், பெருந்தேவி ஆகிய தமிழின் முதன்மை எழுத்தாளர்களின் சிறுகதைகளுடன் அரவின் குமார், ரோட்ரிக்ஸ், ஜி.எஸ்.தேவகுமார் கௌதம் நாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இம்மாத வல்லினத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் மலேசிய நாட்டுப்புற பாடல்களுக்கு ஒலிவடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கோகுலராஜன் நேர்காணலும் நூல் விமர்சன கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. அதோடு இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் லதாவின் கவிதைகளையும் இம்மாத இதழில் வாசிக்கலாம். மிக முக்கியமாக, நவம்பர் மாதம் நடக்கும் ‘வல்லினம் விருது விழா‘ குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ம.நவீன் / M.Navin
வல்லினம் இதழ்புதுமைப்பித்தன் தழுவல் விவாதம்
புதுமைப்பித்தனின் பலகதைகள் தழுவல்களே என்று விமர்சகர்கள் உருவாக்கிய குற்றச்சாட்டும் அதையொட்டி புதுமைப்பித்தன் ஆய்வாளர்கள் அளித்த விளக்கமும் புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் எனப்படுகிறது.

வைரமுத்து விவகாரமும் சாதியும்
வைரமுத்துவும் ராமரும் முக்கியமான ஒரு பேச்சு. வைரமுத்துவை நம்மவர் சும்மா வசைபாடவில்லை. அந்த வசைபாடலை கூடுதலாக முன்வைப்பவர்கள் பிராமணர்கள். ராமனைப் பற்றியெல்லாம் நாங்கள் பேசிக்கொள்கிறோம் என்பதுதான் அவர்களின் குரல்.
வைரமுத்து விவகாரமும் சாதியும்
In this video, Meghana and Sahana look at how the topic of truth is explored in the short stories Shadow Crow and The Last Machine in the book A Fine Thread by Jeyamohan, translated to English by Jegadeesh Kumar.
A Fresh Voiceபூன், எமர்சன் நினைவு தத்துவ வகுப்புகள் – USA
நண்பர்களே,
ஆண்டுதோறும் அமெரிக்காவில் பூன் குன்றில் நிகழ்ந்துவரும் இலக்கிய முகாம், மற்றும் இந்திய தத்துவ முகாம் இந்த ஆண்டும் நிகழவிருக்கிறது.
சென்ற ஆண்டு நிகழ்ந்த இந்திய தத்துவ வகுப்பு முதல் நிலை மீண்டும் நிகழவிருக்கிறது. அதன்பின் தொடர்ந்து இரண்டாம் நிலை வகுப்பும் நிகழும். இரண்டிலும் கலந்துகொள்ளும் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்ற ஆண்டு முதல்நிலை வகுப்பில் கலந்துகொண்டவர்கள் இந்த ஆண்டு இரண்டாம்நிலை வகுப்பில் கலந்துகொள்ளலாம்.
தத்துவ வகுப்பு – நிலை 1 – அக்டோபர் 31 – நவம்பர் 01 2025 (அக்டோபர் 30 செக் இன் – நவம்பர் 2 செக் அவுட்)
தத்துவ வகுப்பு – நிலை 2 – நவம்பர் 02 – நவம்பர் 03 2025 (நவம்பர் 1 செக் இன் – நவம்பர் 4 செக் அவுட்)
இரண்டிலும் பங்கு பெறுபவர்கள் அக்டோபர் 30-ல் செக் இன் செய்து நவம்பர் 4-ல் செக் அவுட் செய்ய வேண்டும்.
வகுப்புகளுக்கு என செலுத்தப்படும் கட்டணத்தில் இருவருக்கு ஒரு அறை என்ற விகிதத்தில் தங்குமிடமும், உணவும், காலை மற்றும் மாலை தேநீரும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துச் செலவும் , மற்ற பயண ஏற்பாடுகளும் பயணர்களின் பொறுப்பு.
முகவரி :
Blowing Rock Conference Center
P.O. Box 2350
Blowing Rock, NC – 28605
Charlotte, NC (CLT) விமான நிலையத்திலிருந்து இரண்டு மணி நேரப் பயணம்.
தத்துவ வகுப்புகளில் இணைய விரும்பும் நண்பர்கள் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
contact@vishnupuramusa.org / vishnupuramusa@gmail.com
September 2, 2025
வளநிலம்

29-12-2007 ல் நாஞ்சில்நாடனுக்கு அறுபது வயது நிறைவடைந்தபோது நான், அருண்மொழி செலவில், எம்.வேதசகாயகுமார் உதவியுடன், நாகர்கோயிலில் ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். நாகர்கோயில் செட்டிகுளம் ஏபிஎன் பிளாஸா அரங்கில் அந்த விழா நடைபெற்றது. அந்த குளிர்சாதன அரங்கில் நிகழ்ந்த முதல் இலக்கிய விழா அது. கூட்டம் நிறைய வந்தமையால் அரங்கின் ஒரு சுவராக அமைந்த தட்டியை கழற்றி இரண்டு அரங்குகளை இணைக்கவேண்டியிருந்தது. நாஞ்சில் நாடன் ஈட்டியிருந்த அன்பு அத்தகையது. அவ்விழாவை ஒட்டி நான் எழுதிய நூல் தாடகை மலையோரத்தில் ஒருவர். இன்று எனக்கு அறுபத்திமூன்று வயது அமைகையில், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு மறுபதிப்பாகிறது. இதுநாள் வரை மின்னூலாகக் கிடைத்துக்கொண்டிருந்தது.
அந்தக் காலம். நாஞ்சில்நாடன் கிடைத்த பேருந்தில் தொற்றிக்கொண்டு மாதம் இருமுறையாவது நாகர்கோயில் வந்துகொண்டிருந்தார். இங்கே அவருடைய சொந்தத்தில் திருமணம், காதுகுத்து என எந்த விழாவும் அவர் இல்லாமல் நடைபெறாது. .அவர் வருவதை எங்களுக்கு அறிவிப்பார். நான், வேதசகாயகுமார், குமரிமைந்தன் என ஒரு கும்பல் அழையா விருந்தாளிகளாக எல்லா விழாக்களுக்கும் செல்வோம். பலசமயம் முந்தையநாள் இரவே கல்யாணமண்டடபம் சென்று விடிய விடிய இருப்போம். இலக்கியச் சர்ச்சைகள், நையாண்டிகள், சிரிப்புகள். வேதசகாயகுமாரையும் குமரிமைந்தனையும் இன்று பெருமூச்சுடன் எண்ணிக்கொள்கிறேன்.

நாஞ்சில் அன்றுமுதல் இன்று வரை என்றும் இனியவர். காலந்தோறும் பழகினாலும் துளி கசப்பு எஞ்சாத ஆளுமை. சிரிப்பன்றி எதுவும் இல்லாத பெருந்தருணங்களை இளையவர்களுக்கு அளிப்பவர். ஒரு நவீன இலக்கியவாதியாகத் தொடங்கி, இன்று தன் முன்னோர்களைப் போலவே கம்பராமாயணத்தில் தோய்ந்து, கனிந்திருக்கிறார். அவருடைய கம்பராமாயண உரைகள் இன்று சர்வதேச அளவில் மாணவர்களைக் கொண்டுள்ளன.
நாஞ்சில்நாடனின் கதைகளிலும் அந்தக் கனிவு நிகழ்ந்து அது ஒருவகை மெய்ஞானமாக திரண்டுள்ளது. தமிழில் எழுதத் தொடங்கிய களத்தில் இருந்து அவ்வண்ணம் மேலும் முன்னகர்ந்து இன்னொரு உச்சத்தை எட்டிய எழுத்தாளர்கள் மிக அரிது. பூனைக்கண்ணன் கடத்திய அம்மன் போன்ற ஒரு மகத்தான கதையை அவர் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்க முடியாது.
அவருடைய படிநிலைகளை கதைகளைக் கொண்டே மதிப்பிடலாம். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் கசப்பற்ற நையாண்டியும், சமூகவிமர்சனப் பார்வையும் கொண்ட நாஞ்சில்நாடனைக் காட்டுகிறது. யாம் உண்பேம் அடுத்த முன்னகர்வு. அதில் உலகுக்கே அமுதுடன் உளம்கனிந்த நாஞ்சில்நாடன் வெளிப்படுகிறார். பூனைக்கண்ணன் கடத்திய அம்மன் இந்த அத்தனை நாடகங்களையும் அப்பால் நின்று பார்க்கும் சித்தனின் அருகே அமர்ந்திருக்கும் நாஞ்சில்நாடனைக் காட்டுகிறது. மூன்று கட்டங்களிலும் நாஞ்சில்நாடனிடம் இருப்பது சிரிப்பு. அது கேலியில் இருந்து முதிர்ந்த அங்கதமாக உருமாறியிருக்கிறது.
இத்தருணத்தில் நாஞ்சில்நாடனை இளையோனாக அடிபணிந்து வணங்கி வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்கிறேன். இந்நூலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி.
ஜெ தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் நாஞ்சில்நாடன் அறுபது பதிவுபா. திருச்செந்தாழை
தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். பா.திருச்செந்தாழையின் கவிதைகள் உணர்ச்சிகரக் கற்பனாவாதத் தன்மை கொண்டவை. ஆனால் கதைகளில் கூரிய யதார்த்தப்பார்வையுடன் மானுட உள்ளங்களின் நுண்ணிய அலைவுகளையும் விளையாட்டுக்களையும் எழுதிக்காட்டுகிறார்.

மானசா பதிப்பகம், கடிதங்கள்
அன்பு ஜெ,
வணக்கம். நலம் விழைகிறேன்.
மானசா பதிப்பகம் கிருபாசைதன்யாவின் கனவு. சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதத் தொடங்கிய என்னை இவர்களில் பார்க்கிறேன்.
நம் புராணங்களின் படி ஈசன் மனதில் இருந்து பிறந்தவள் மானசா. இப்படி சொல்லும் போது எனக்குள் ஒரு சித்திரம் தோன்றும். ஆலகால விஷத்தை ஈசன் பருகும் போது நீலமாகிறார். அமுதத்திற்காக அனைவரும் காத்திருக்க மற்றவர்களுக்காக அவர் அமுதம் அளவே வீரியமான ஆலகாலத்தை பங்கிடாமல் நானே பருகுகிறேன் என்ற போது ஈசனின் மனதில் உருவான ஈரம் மானசை என்று நினைப்பேன்.
மனதில் தோன்றியவள் மானசை என்றால் மானசைக்கு இன்னொரு பெயர் கனவு என்றும் வைக்கலாம். கிருபாசைதன்யாவின் கனவுகள் விரிய வாழ்த்துகளும் அன்பும்.
அன்புடன்,
கமலதேவி
அன்புள்ள ஜெ,
மானசா பதிப்பக விழாவில் கலந்துகொண்டது பெரிய மகிழ்ச்சி.
நமது நண்பர்கள் குழுவிலேயே ஆங்கில புத்தகங்கள் வாசிக்க அதை உரையாட ஒரு சின்ன குழு வைத்து நாங்கள் சிலர் எப்போதும் பேசுக்கொண்டிருப்பதுண்டு. குறிப்பாக சித்தார்த். சிறில். ராம்குமார். ரவி என உடன் science fiction மற்றும் fantasy நாவல்கள் பற்றி தொடர்ந்து உரையாடுவது உண்டு. பின்னால் சினிமா மற்றும் தொடர்களாக வந்த ready player one, three body problem போன்ற நாவல்கள் எல்லாம் மிக முன்னரே வாசித்து விவாதித்திருந்தோம்.. இப்போதும் ஆங்கில புனைவு வாசிப்பும் உரையாடலும் ஒரு இணை வாசிப்பாக இருந்துகொண்டேயிருக்கிறது.
அதே சமயம் ஆங்கிலத்தில் நமது எழுத்துக்கள் மட்டுமே நிரப்பக் கூடிய இடம் பெரிய அளவில் இருக்கின்றது என நினைக்கிறேன்.
உதாரணத்துக்கு, சமீபத்தில் சும்மா ஒரு த்ரில்லர் வாசிக்கலாம் என chatgpt-யிடம் ஒரு ஆலோசனை கேட்டேன். அது எனக்கு சஜஸ்ட் செய்த நாவல். The silent patient.
அதை வாசித்த சின்ன குறிப்பாக கடந்த வாரம் எழுதியிருந்தேன்
பரபரப்பா ஏதாச்சும் வாச்க்கலாம் என நினைத்து தேடியபோது கிடைத்தது இது.
தொன்ம குறியீடு, சைகாலஜி, த்ரில்லர் என அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருந்தது இதைப் பற்றிய அறிமுகங்கள்.
நம்ம ஊர் தொன்ம கதையான சாவித்திரி மாதிரி தெரிந்தாலும், மகனின் இளைமையை வாங்கும் யயாதி கதைக்கு கொஞ்சம் அருகில் இருப்பது போல ஒரு கிரேக்க தொன்ம கேரக்டர் Alcestis.
உண்மையிலேயே மிக சுவாரஸ்யமான தொன்மம்.
தன் கணவனுக்காக உயிரைக்கொடுப்பது மட்டுமல்ல, sacrifice அதன்பின் நடக்கும் விஷயங்கள் மிக சுவாரய்மான கற்பனைக்கு இடமளிக்கிறது, அந்த தொன்மத்தில்.
ஒருவருக்காக உயிரைக்கொடுத்து, மரணத்துகுச் சென்றவர் மறுபடி இந்த உலகத்துக்கு வந்தால் அது வருபவருக்கு மகிழ்ச்சியளிக்குமா, அல்லது தன்னை மரணத்துக்கு அனுப்பியவரைப் பார்க்கும்போது என்ன பேசமுடியும் என்பது ஒரு சிந்திக்கபடவேண்டிய தருணம்.
இந்த நாவலும் அதில் இருந்து மிக சுவாயஸ்யமாக உருவாக்கி இருக்க எல்லா வாய்ப்புகளுடன் தொடங்குகிறது.ஆனால், மிக சாதாரணமாக முடிகிறது.
கடைசியில் வரும் அந்த ட்விஸ்டுக்கு ஏன் அய்யா இவ்வளவு கேரக்டர்கள்.
இந்த அளவு மிக சாதாரணமான நாவல் இந்த அளவு விற்பனையாகியிருக்கிறது, பிரபலமாகியிருக்கிறது என்பது மிக ஆச்சர்யளிக்கிறது.’
இந்த கரு நம்ம எழுத்தாளர்கள் எழுதியிருந்தால் எவ்வளவு ஆழத்துடன் எழுத வாய்ப்புள்ள ஒன்று, ஆனால் மிக சாதாரண “டிவிஸ்ட்” நம்பி எழுதப்பட்ட இந்த நாவல் இவ்வளவு பிரபலாகியிருக்கிறது என்றால், இந்த விஷயங்களில் தொடர் வாசிப்பு இருக்கும் நமது எழுத்தாளர்கள் இதுபொன்ற களங்களில் ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது தான் இந்த பதிப்பகம் பற்றி அழைப்பு வந்தது மிக மகிழ்ச்சியை அளித்தது.
இங்கிருந்து ஆங்கில நாவல்கள் வருவது இன்றைய தலைமுறைக்கு மிக முக்கியமானது, அந்த பொறுப்பை முன்னெடுத்தற்கு சைதன்யாவுக்கும், க்ருபாவுக்கும் எனது நன்றிகள்.
அன்புடன்
சுரேஷ் பாபு
விழா, சரண்யா ராஜேந்திரன்
முதல் முறையாக விருது விழாவில் பங்கெடுத்துள்ளேன் ஆசானே. ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என நினைப்பேன் ஆனால் ஆதித்யா சிறு குழந்தை என தவிர்ப்பேன். இந்த முறை ஈரோடு, பெரியசாமி தூரன் விருது விழா. என் அவதானிப்புகள் சில.
தங்குமிடம், உணவு…
விழாவுக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பே தங்குமிடம் உறுதியானதன் மின்னஞ்சல் வந்தது. பின்னும் ஆனந்தகுமார் சார், குழந்தையை அழைத்து வருவீர்கள் எனில் என்ன வயது என்று கேட்டுக் கொண்டார். பெண்களுக்கு மட்டும் தனியாக ஒரு மண்டபம் என்றும் அதன் பொறுப்பாளர் விஜயபாரதி, மதன் தனுஷ்கோடி என்றும் சொன்னார். நான் உண்மையில் ஒரு பெரிய மண்டபத்தின் ஹாலில் ஜமுக்காளம் விரித்து அத்தனை பேரும் படுத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன். ஏனெனில் எங்கள் ஊரில் மணமகன், மணமகள் அறை தவிர வேறு அறைகள் இருந்தால் அதிசயம் தான். அப்படி இருந்தாலும் மொட்டை மாடியில் தகர கொட்டகை போல தான் இருக்கும். போர்வை எடுத்து வரவில்லையே என வெள்ளி அன்று என்னை நானே திட்டிக் கொண்டேன். ஆனால் இரு பெண்களுக்கு ஒரு பெரிய கட்டில், ஏசி, டிவி என சகல வசதிகளும் கொண்ட பெரிய அறை. மண்டபம் முழுக்க பல அறைகள். வெள்ளி இரவு நான் அந்த ஆச்சர்யத்திலேயே இருந்தேன். ஒவ்வொரு செயலையும் மிகச் சரியாக, சிறப்பாக திட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றிகள் நிச்சயம்.
வெள்ளி மாலை நான் வரும் போது புரோட்டா போட்டுக் கொண்டிருந்தார்கள் சமையல் ஆட்கள். மணம் மூக்கைத் துளைத்தது. இரவு அருமையான விருந்து என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து வந்த அத்தனை நேரத்து உணவுகளும் அப்படித்தான். ஓடி ஓடி ஆதித்யாவும் சாப்பிட்டான். அனைவரும் விரும்பிய உணவு வகைகள்.
குழுவில்…
ஒரு வாரம் முன்னரே WhatsApp குழுவில் இணைந்து கொண்டோம். கிட்டதட்ட 150 பேர். விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் tamilwiki பக்கம், அவர்களின் நேர்காணல், அவர்கள் எழுதிய கட்டுரைகள் என நண்பர்கள் அனுப்பிக் கொண்டே இருந்தனர். அத்தனையையும் படித்த பின்பு அவர்களை சந்திப்பதே நியாயம். கேள்விகள் இருப்பவர்கள் தனியாக தொடர்பு கொள்ள சொல்லி இருந்தனர். நண்பர்கள் அனுப்பிய ஒவ்வொரு கட்டுரையும், தரவும் மிகுந்த ஆழம் கொண்டது. வலங்கை, இடங்கை கட்டுரையை நவீன் தமிழாக்கம் செய்து அனுப்பினார்.
மொத்த தொகுப்பும் மண்டைக்குள் சேர்ந்து விட்ட பிறகே விழாவுக்கு கிளம்ப முடியும்.
விழாவில்…
வெள்ளி மாலை முதலே அரங்குகள் ஆரம்பம். உண்மையிலேயே அத்தனை செறிவான கேள்விகளை கேட்கும் அறிவார்ந்த கூட்டத்தை வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அங்கே தான் பார்க்கிறார்கள் என்றே சொன்னார்கள். படித்து தெளிந்த பின் எழும் கேள்விகளும், படிக்கும் கூட்டமும் அப்படித்தானே இருக்கும்.
ஆதித்யாவுக்கு வரைய நோட்புக், பென்சில், அழிப்பான், கலர் பென்சில்கள் என வாங்கி வைத்திருந்ததால் அவன் அதைக் கொண்டு வரைந்து கொண்டே இருக்க, இங்கே நான் உரைகளை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு அரங்கும் சரியான நேரத்தில் முடிக்க வைக்க நண்பர்கள் இருந்தார்கள். சிறிய இடைவேளை பின் அடுத்த அரங்கு என்பதால் ஆதித்யாவையும் கொஞ்சம் கவனிக்க முடிந்தது. ஆனால் இடைவேளையில் நான் முழுக்கவே அங்கங்கே பேசிக் கொண்டிருந்த நண்பர்களை சுற்றி சுற்றி வந்தேனென்றே சொல்ல வேண்டும். அதுவும் போதாமல் அத்தனை புத்தகங்கள் வேறு சுற்றிலும். எதை வாங்க, எதை விட.
சனி காலை பறவைகள் பார்க்க வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சென்று விட்டு விரைவாக அரங்குக்கு வந்தோம். மிக நல்ல உணவு, நல்ல இடத்தில் உறக்கம்(இலக்கியம் பேச ஆள் இருந்தால் எப்படி வரும் உறக்கம்), அறிவுக்கு அத்தனை அரங்குகள் என எந்த குறையும் இல்லாத நாட்கள் அல்லவா.. அத்தனை குழந்தைகள் அங்கே.. மானசா தொடங்கி வரிசையாக மியூசிக்கல் சேர் விளையாடும் அளவு அவ்வளவு பிள்ளைகள். அவர்கள் உலகில் அவர்கள்… ஆனால் நாதஸ்வரம் இசைத்த போது அசையாத அவர்களைப் பார்த்தேன். பாடல் முடிவில் மானசாவின் மழலை அத்தனை இனிமை.
நண்பர்கள்…
கொற்றவை படிக்கும் குழுவில் இருந்த நண்பர்கள் ஈஸ்வரி, பிரீத்தி அவர்களின் குடும்பம், என் பிரியமான விஜயபாரதி சாரின் குடும்பம், மதன் குடும்பம், தம்பி சபரீஷ், சக்திவேல் அவன் அப்பா(சக்திவேலுக்கு ஊட்டும் போது அப்பாவிடம் எனக்கும் ஊட்ட சொல்லி சாப்பிட்டேன்), தம்பி சிவகுரு நாதன் குடும்பம், தம்பி மோகன் தனுஷுக், முனைவர் பத்மநாபன், கப்பல்காரன் ஷாகுல் அண்ணா மற்றும் அவரின் நண்பர்கள் என அத்தனை பேர்… பெயர் மட்டுமே என நான் கண்டிருந்த அனைவரும் உங்கள் தளத்தில் இருந்து எழுந்து வந்தாகவே தோன்றியது.
அத்தனைக்கும் மேல் கவிஞர் தேவதேவன்..
மீண்டும் மீண்டும் இலக்கியச் சுற்றம் தரும் நிறைவை, மகிழ்வை, நிம்மதியை சொல்லில் சொல்லி விட முடியுமா என்ன.. சனி இரவு இலக்கியம் என்னை தூங்க விட்ட நேரம் விடி வெள்ளி வந்து விட்டது.
ஞாயிறு காலை நீங்கள் நடத்தும் வகுப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என குழந்தைகள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு ஓடியே வந்து விட்டேன். நல்லூழ் அல்லவா…
வகுப்பு முடிந்து மதிய உணவும் தந்து தான் அனுப்பினார்கள் நண்பர்கள்.
இதற்கு மேலும் என்ன வேண்டும் உலகில்… இனி வேறு எந்தக் காரணமும் சொல்லி எந்த விழா நிகழ்வையும் தவற விடக் கூடாது என்ற உறுதியோடு…
பிரியமுடன்
சரண்யா
திண்டுக்கல்
சிறப்பு விருந்தினர்கள் அரங்குகள், அவர்களின் உரை, நாதஸ்வர கலை உலகம், உங்கள் உரை எல்லாம் தனியாக ஒரு கடிதம் எழுத வேண்டிய அளவுக்கு செறிவானது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
