மானசா பதிப்பகம், கடிதங்கள்
அன்பு ஜெ,
வணக்கம். நலம் விழைகிறேன்.
மானசா பதிப்பகம் கிருபாசைதன்யாவின் கனவு. சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதத் தொடங்கிய என்னை இவர்களில் பார்க்கிறேன்.
நம் புராணங்களின் படி ஈசன் மனதில் இருந்து பிறந்தவள் மானசா. இப்படி சொல்லும் போது எனக்குள் ஒரு சித்திரம் தோன்றும். ஆலகால விஷத்தை ஈசன் பருகும் போது நீலமாகிறார். அமுதத்திற்காக அனைவரும் காத்திருக்க மற்றவர்களுக்காக அவர் அமுதம் அளவே வீரியமான ஆலகாலத்தை பங்கிடாமல் நானே பருகுகிறேன் என்ற போது ஈசனின் மனதில் உருவான ஈரம் மானசை என்று நினைப்பேன்.
மனதில் தோன்றியவள் மானசை என்றால் மானசைக்கு இன்னொரு பெயர் கனவு என்றும் வைக்கலாம். கிருபாசைதன்யாவின் கனவுகள் விரிய வாழ்த்துகளும் அன்பும்.
அன்புடன்,
கமலதேவி
அன்புள்ள ஜெ,
மானசா பதிப்பக விழாவில் கலந்துகொண்டது பெரிய மகிழ்ச்சி.
நமது நண்பர்கள் குழுவிலேயே ஆங்கில புத்தகங்கள் வாசிக்க அதை உரையாட ஒரு சின்ன குழு வைத்து நாங்கள் சிலர் எப்போதும் பேசுக்கொண்டிருப்பதுண்டு. குறிப்பாக சித்தார்த். சிறில். ராம்குமார். ரவி என உடன் science fiction மற்றும் fantasy நாவல்கள் பற்றி தொடர்ந்து உரையாடுவது உண்டு. பின்னால் சினிமா மற்றும் தொடர்களாக வந்த ready player one, three body problem போன்ற நாவல்கள் எல்லாம் மிக முன்னரே வாசித்து விவாதித்திருந்தோம்.. இப்போதும் ஆங்கில புனைவு வாசிப்பும் உரையாடலும் ஒரு இணை வாசிப்பாக இருந்துகொண்டேயிருக்கிறது.
அதே சமயம் ஆங்கிலத்தில் நமது எழுத்துக்கள் மட்டுமே நிரப்பக் கூடிய இடம் பெரிய அளவில் இருக்கின்றது என நினைக்கிறேன்.
உதாரணத்துக்கு, சமீபத்தில் சும்மா ஒரு த்ரில்லர் வாசிக்கலாம் என chatgpt-யிடம் ஒரு ஆலோசனை கேட்டேன். அது எனக்கு சஜஸ்ட் செய்த நாவல். The silent patient.
அதை வாசித்த சின்ன குறிப்பாக கடந்த வாரம் எழுதியிருந்தேன்
பரபரப்பா ஏதாச்சும் வாச்க்கலாம் என நினைத்து தேடியபோது கிடைத்தது இது.
தொன்ம குறியீடு, சைகாலஜி, த்ரில்லர் என அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருந்தது இதைப் பற்றிய அறிமுகங்கள்.
நம்ம ஊர் தொன்ம கதையான சாவித்திரி மாதிரி தெரிந்தாலும், மகனின் இளைமையை வாங்கும் யயாதி கதைக்கு கொஞ்சம் அருகில் இருப்பது போல ஒரு கிரேக்க தொன்ம கேரக்டர் Alcestis.
உண்மையிலேயே மிக சுவாரஸ்யமான தொன்மம்.
தன் கணவனுக்காக உயிரைக்கொடுப்பது மட்டுமல்ல, sacrifice அதன்பின் நடக்கும் விஷயங்கள் மிக சுவாரய்மான கற்பனைக்கு இடமளிக்கிறது, அந்த தொன்மத்தில்.
ஒருவருக்காக உயிரைக்கொடுத்து, மரணத்துகுச் சென்றவர் மறுபடி இந்த உலகத்துக்கு வந்தால் அது வருபவருக்கு மகிழ்ச்சியளிக்குமா, அல்லது தன்னை மரணத்துக்கு அனுப்பியவரைப் பார்க்கும்போது என்ன பேசமுடியும் என்பது ஒரு சிந்திக்கபடவேண்டிய தருணம்.
இந்த நாவலும் அதில் இருந்து மிக சுவாயஸ்யமாக உருவாக்கி இருக்க எல்லா வாய்ப்புகளுடன் தொடங்குகிறது.ஆனால், மிக சாதாரணமாக முடிகிறது.
கடைசியில் வரும் அந்த ட்விஸ்டுக்கு ஏன் அய்யா இவ்வளவு கேரக்டர்கள்.
இந்த அளவு மிக சாதாரணமான நாவல் இந்த அளவு விற்பனையாகியிருக்கிறது, பிரபலமாகியிருக்கிறது என்பது மிக ஆச்சர்யளிக்கிறது.’
இந்த கரு நம்ம எழுத்தாளர்கள் எழுதியிருந்தால் எவ்வளவு ஆழத்துடன் எழுத வாய்ப்புள்ள ஒன்று, ஆனால் மிக சாதாரண “டிவிஸ்ட்” நம்பி எழுதப்பட்ட இந்த நாவல் இவ்வளவு பிரபலாகியிருக்கிறது என்றால், இந்த விஷயங்களில் தொடர் வாசிப்பு இருக்கும் நமது எழுத்தாளர்கள் இதுபொன்ற களங்களில் ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது தான் இந்த பதிப்பகம் பற்றி அழைப்பு வந்தது மிக மகிழ்ச்சியை அளித்தது.
இங்கிருந்து ஆங்கில நாவல்கள் வருவது இன்றைய தலைமுறைக்கு மிக முக்கியமானது, அந்த பொறுப்பை முன்னெடுத்தற்கு சைதன்யாவுக்கும், க்ருபாவுக்கும் எனது நன்றிகள்.
அன்புடன்
சுரேஷ் பாபு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
