Jeyamohan's Blog, page 2297

August 8, 2011

சாதனைக்கவிதைபற்றி

ஒரு கவிதைச்சாதனை


ஜெ,


பகடி உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறதென்றாலும் சிலசமயம் ரொம்பவே நுட்பமாகப் போய்விடுகிறது. எனக்குப் பெரும்பாலும் நீங்கள் ஆரம்பிக்கும் இரண்டாவது வரியிலேயே சிக்னல் விழுந்து விடும். இம்முறை ஏமாந்துவிட்டேன். கவிதையின் தலைப்பைப்பார்த்ததும் உடனே சிரிப்புவந்தது. அலுவலகத்திலே சிரித்துக்கொண்டு பாய்ந்து எழுந்திருந்து விட்டேன். 'என்னது'என்று கேட்டார்கள். அற்புதமான கவிதை. கண்டிப்பாக ஒரு கவிதைச்சாதனைதான்.


'இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளில் எழுதப்பட்ட எந்தக் கவிதையின் சாயலும் இல்லாமல்,  புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார்'-  அருமையான வரி. கவிதையை வாசித்தபின்னர்தான் அந்த வரிக்குப் பொருள் தெரிந்தது. ஒட்டுமொத்த மனித அறிவுடன் எந்தத்தொடர்புமே இல்லாமல் தூய்மையாக அவதரித்திருக்கிறார் ருத்ரா.


திரும்ப உங்கள் குறிப்பை வாசித்தேன். வரிவரியாக சிரித்தேன். 'அனுபவம் நேர்மையாக, அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது' 'தமிழ்நாட்டில் பல லட்சம்பேர் இதன் உணர்வெழுச்சியுடன் ஒன்றுவார்கள்' ஒன்றமாட்டார்களா பின்னே?


காலையில் ஒரு நல்ல அருமையான தொடக்கம் ஜெ. நன்றி


அருண்

சென்னை


அன்புள்ள அருண்,


நகைச்சுவை என்று போட்டால் உடனே சிரித்துவிடுகிறார்கள். ஆகவேதான். இனிமேல் பின்னணியாக அஹ்ஹாஹாஹாஹாஅஹஹஹஹஹாஹஹாஆஹாஅஹஹாஹாஹா என்ற பயங்கரப்பேரொலி எழுப்பப்பட மென்பொருள் தயாராகிறது. அதன்பின் குழப்பம் இருக்காகது


ஜெ


==================================


நகைச்சுவைக் கட்டுரை எழுதும் போது அதை நகைச்சுவை என்று தெளிவாகப் பதிவு செய்வது, தமிழ் மரபுக்கு எப்போதுமே நல்லது.


(எனக்குக் கவிதை அறிவு கம்மிதான்… அது உண்மையிலே சீரியஸ் கட்டுரை இல்லையே… )


நன்றி

ரத்தன்


 


அன்புள்ள ரத்தன்,


திண்ணையில் அந்தக் கவிதைக்குப் பக்கத்திலே அப்படிப் பதிவுசெய்திருக்கவேண்டும் என்கிறீர்கள் இல்லையா? அதை நீங்கள் திண்ணைக்கு அல்லவா சொல்ல வேண்டும்?


ஜெ


==================================



 ஒரு படத்துல வரும் ஒன்னு கீழ ஒன்னு அதானே கவிதைன்னு. அப்படிப்பட்ட கவிதை இது இல்லையா?

அசோக் சாம்ராட்
அன்புள்ள அசோக்,

உரைநடை    தண்டவாளம் என்றால் கவிதை ஏணிப்படி
ஜெ

+++++++++++++++++++++++++++++++++++





அன்புள்ள ஜெயமோகன்
இதில் கவிஞர் ருத்ராவின் புதிய நடையையும், கவித்துவத்தையும் புகழ்ந்துள்ளீர்கள்.
இதே ருத்ரா ஈவேரா, பாவாணர் போன்றவர்களின் மோசமான இனவாதத்தையும் உள்வாங்கியவர்.
அவருடைய கூகிள் குருப்பில் ஒரு கவிதையில் உங்களையே ஏதோ "தீய ஆரிய" ஆர்கிடைப்பாகச் சாடுகிறார்
http://groups.google.com/group/zooza/browse_frm/thread/9369c26a8fdf2496?hl=en
இவருக்குக் கவித்திறன் இருந்தாலும், இனவாதத்திற்குத் தீனியானவர்.  "ஆரியரகள்"  ஏதோ " திராவிடர்களை"க் களங்கப்படுத்த வந்தவர்கள் போல் எழுதுபவர்.
மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்





அன்புள்ள விஜயராகவன்,


அது  ஒரு பகடி என்று சொன்னால் அதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வீர்களா என்று பயமாக இருக்கிறது


ஜெ


=================================


ஜெயமோகன்,


நீங்கள் அற்புதம் என்றெல்லாம் சொல்லிப் பரிந்துரைத்திருந்த கவிதையை வாசித்தேன். அந்தக்கவிதையிலே [கவிதையா அது கர்மம்] என்ன இருக்கிறது என்று இப்படி சொல்கிறீர்கள்? வெட்கமாக இல்ல? அதை எழுதியது பெண் என்பதனால்தானே அதைக் கவிதை என்று தூக்கி விடுகிறீர்கள்? உங்களைப் போன்றவர்களின் நோக்கம் என்ன? வாசகர்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று நினைக்கிறீர்களா?


நிற்க, இது கவிதையே கிடையாது. சினிமா விமர்சனத்தைக் கீழே அடுக்கினால் கவிதையா? அப்படியென்றால் தினமலர் பொன்னையா எழுதும் சினிமாச்செய்தியும் கவிதைதானே? தெரிந்தால் பேசுங்கள். இல்லாமால் இருந்தால் வாயைமூடுங்கள்


செல்வ ஜெகதீசன்


அன்புள்ள செல்வா,


அப்படியென்றால் பொன்னையா கவிஞர் இல்லையா? யாருமே என்னிடம் சொல்லவில்லையே?


அப்படியே நிற்க, ருத்ரா என்பது பெண் கிடையாதாம். வன்பாக்கம் விஜயராகவன் சொல்கிறார். பரமசிவம் என்பவராம்.


ஜெ


+++++++++++++++++++++++++++++++++


அன்புள்ள ஜெ


நீங்கள் பரிந்துரைத்த கவிதையைக் கண்டேன். அற்புதமான கவிதை. நானும் அந்தத் திரைக் கவிதையை இப்போது பார்த்து ரசித்திருந்தேன். ஆதலினால் என்னால் கவிதையுடன் ஒன்ற முடிந்தது. அருமையான வரிகள்.  'மேய்ச்ச‌ல் புரியும் ம‌ந்தைக‌ளின் ச‌ந்தைக‌ளால்' என்ற வரி சிறப்பானது


மேலும் நீங்கள் http://www.lankasripoems.com  என்ற இணையதளத்திலே வரக்கூடிய கவிதைகளை வாசிப்பீர்களா? அருமையான கவிதைகள். நான் சமீபத்திலே


உள்ளம் விறகாகி

உயிரில் தீ மூண்டது

சொல்ல முடியாத சோகம்

விழிகள் விம்மின


என்ற கவிதையை மிகவும் ரசித்தேன்


விஜயா அம்ருத்


அன்புள்ள விஜயா


'புதிய‌ புதிய‌ ப‌ரிமாண‌ங்க‌ளுக்குள் எல்லாம் பரிணாமம் செய்யும்' என்ற வரிதான் சிறப்பான கவிதை என நினைக்கிறேன். முதல்தடவை வாசித்தபோது எனக்குப் புல்லரித்தது. பிறகு சரியாகப்போய்விட்டது.


நீங்கள்கூட  http://tamilkkavithai.blogspot.com/ என்ற இணையதளத்தை வாசிக்கலாம்.


காத்திருக்கும் கண்களுக்கு

வியர்த்துப் போனால்

அது கண்ணீர்..!

காத்திருக்கும் கண்கள்

கவிதை பாடினால்

அது காதல்..!

இந்த இரண்டையும்

ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!

கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!


என்ற அருமையான காதல்கவிதை காதலிக்காத எல்லாருக்குமே பிடிக்கும்


ஜெ


=========================


எதுக்கு சார் கொலை வெறியைத் தூண்டறீங்க? இதை யாராவது சீரியஸாக வேறு எடுத்துக்கப் போறாங்க என்று பயமாக இருக்கிறது…


ஆர்வி


ஆர்வி,


ஏன் நல்ல கவிதைதானே? 'கலைஞரிய' அழகியல் கொண்ட கவிதை இல்லையா?


 


ஜெ


 


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2011 02:30

August 7, 2011

சினிமாவின் சோதனைமுயற்சிகள்

//எனக்குக் கலை வடிவம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது. அதனாலேயே கொதார்த், லூயி புனுவல் போன்றவர்களையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இது என் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்தது. இவர்களை நவீனத்துவம் முற்றி, அது வெறும் வடிவச்சோதனையாக ஆகி, அடுத்த கட்டம்நோக்கி நகரமுடியாமல் திணறிய காலகட்டத்தின் கலைஞர்கள் என்று வகுத்துவைத்திருக்கிறேன்//


மணி கௌலைப் பற்றிய தன் பதிலில் ஜெயின் இந்த வரிகளைப் படித்தேன்.  இருபதாம் நூற்றாண்டு வடிவச் சோதனைகளின் விளைவாய் 'தூய கலை' என்ற நிலைப்பாடு நவீனத்துவத்தில் ஓங்கியிருந்ததைப் பற்றி நானே முன்னர் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சினிமா என்பது இருப்பதிலேயே இளைய கலை; புகைப்படத்தின் அழகியல் கூட இத்தாலிய ஓவியக்கலையின் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்தே ஆராயப் பட்ட ஒன்று. ஆனால் சினிமா என்பது, அதிலும் ஒலி கூடிய சினிமா என்பது ஒரு நூற்றாண்டே வயதான புத்தம் புதுக் கலை வடிவம். அதன் மொழி, இன்றளவும் முழுமையாக வகுக்கப்படாத ஒன்று. மேற்கிலேயே கூட சினிமாவுக்கென்று மிகக் குறைந்த சாத்திரங்களே உள்ளன. ஐசின்ஸ்டைன், தெலூஸ் , பெரெக்சொன், இவர்கள் எழுதியது மட்டுமே இன்றளவும் செல்வாக்குடைய சாத்திரங்கள். இந்திய கலாசாரத்துக்கு ஏற்ப நமது சினிமாவுக்கென்று எந்த அடிப்படை நூலோ, ஆலோசனையோ திரட்டப்படவில்லை.


எனவே பரிசோதனைகள் இல்லாமல் இந்தப் புதிய ஊடகத்தின் சாத்தியங்களை நிறைவுபடுத்த முடியாது. எந்தக் கலையின் பரிணாமத்திலும் வெற்றி பெற்ற பரிசோதனைகள் மட்டுமே மேலும் எடுத்துச் செல்லப் படுவதால், தோற்றுப் போன பரிசோதனைகளை நாம் நினைவு கூர்வதில்லை. (இது மொழிக்கும், கவிதைக்கும், காவியத்துக்கும் கூடப் பொருந்தும்.)


மேலும், வடிவம் என்பது உட்பொருளின் ஒரு இணைபிரியா அங்கமாகும் வரை பரிசோதனை தேவை. ஒவ்வொரு உட்பொருளும் தனக்கேற்ற வடிவத்தைத் தேர்வு செய்வது என்பது ட்ரையல் அண்ட் எர்ரர் முறைப்படியே சாத்தியமாகிறது; சினிமா என்பது மிகுந்த பொருட்செலவுள்ள ஊடகமாதலால், காகிதம் போலக் கிழித்துப் போட்டு, அடுத்த trialக்குச் செல்ல முடியாது. எனவே இதில் சமூக உணர்வு மிகத் தேவை.


அந்த முறையில், கொதார்த், புனுவெல் போன்றவர்கள் தங்கள் நாடுகளின் பூர்ஷுவா சமூகத்தின் போலித்தனங்கள், மனிதம் குன்றி விட்ட விழுமியங்களை விமர்சிக்க, அவர்களைத் தங்கள் சுகமான மரத்துப்போன போதை நிலையிலிருந்து விழித்துத் தங்கள் வக்ரமடைந்துவிட்ட சுயரூபத்தைக் காண்பிக்க ஏற்படுத்திய வடிவங்களே அவை.


கொதார்த் மஞ்சள் பத்திரிகைகளின் அலறும் தடித்த எழுத்து வடிவங்களாலான inter-titles, மற்றும் தாவித் தாவி அதிர்ச்சியடைய வைக்கும் 'கட்'களையும், அதைப் போன்ற மற்ற வடிவப் பரிசோதனைகளையும் உபயோகித்தது, தன் கருத்துக்களின் தாக்கம் சரியான குறியில் போய் விழ வேண்டும் என்பதற்காக. புனுவெலும் அங்ஙனமே; அவர் சால்வதார் தாலியுடன் சண்டை போட்டு விலகியதே அவரது புரட்சிகரமான கருத்துக்களுக்கு சினிமாவை ஊடகமாக்கியதால் தான். தாலி வெறும் வடிவப் பரிசோதனைகள், ஆழ்மன விசித்திரங்கள் என்பதோடு நிறுத்திக் கொண்டார்; சமூகத்தை நேரடியாய் விமர்சனம் செய்வதில் அவருக்கு உவப்பில்லை.


எனவே இருவரும் மேற்கத்திய சிந்தனை மரபையே தங்களது சினிமா மூலம் முன்னெடுத்துச் சென்றுள்ளனர்; தாமஸ் மன்ன், கார்ல் ஹைஸ்மன், ஹென்ரி மில்லர் போன்றவர்களின் கருத்துக்களையொட்டிய நவீன சிந்தனனையாளர்களாக இவர்களுக்கு அங்கு பெருமதிப்புள்ளது.


நம்மூரில், பாவம் கௌல், NFDC அளித்த shoe-string budgetஐ வைத்துக் கொண்டு தன்னால் இயன்றவரை அபினவ குப்தர், அனந்தவர்தனர் எல்லாம் சொன்னதை நினைத்துக் கொண்டு சில பரிசோதனைகளைச் செய்துள்ளார். அதற்கென்று இந்திய சினிமாவிற்கு ஒரு உபயோகம் உள்ளது; எல்லா ஊடகங்களும் இலக்கியத்தின் இலக்கணத்தைப் பின்பற்றினால், அப்பறம் ஜெ சொல்வதைப் போல ஒன்றை ஒன்று மறுத்து சூன்யம் தானே மிஞ்சும்? தத்தம் பாதைகளைத் தேடி அடைவதில் பிழையில்லையே. எப்படி நல்ல இலக்கியம் படிக்க அதன் மொழியை நாம் கற்க வேண்டுமோ, அதே போல நல்ல சினிமாவின் மொழியையும் புரிந்து கொள்ள ஒரு தனி முயற்சி தேவை; அதுவும் உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு மொழியை அவதானிப்பது மிகவும் பொறுமை தேவையான விஷயம்.


எனவே, ஏதாவது அதிகப் பிரசங்கம் செய்வதாய்த் தோன்றினால் ஜெ மன்னிப்பாராக, எடுத்துக் கூறுவாராக. மற்றவர்களுக்கும் இதே வேண்டுகோள்.


பி.கு. கௌலின் பல படைப்புகள் என்னையும் வெகுவாகத் தொட்டவை அல்ல, வடிவ அல்லது அழகியல் முயற்சிகளே என்று நினைக்கிறேன், ஆனால் அவை தேவை என்றும் நினைக்கிறேன், அதிலும் சினிமா அங்காடியைத் தாண்டிய இந்த முயற்சிகள் மட்டுமே நம் கலாசாரத்திற்குக் கொஞ்சமாவது பலமூட்டும்; நம் அறிவுச் சூழல் இவற்றை ரசிக்காவிட்டலும், தன் புரிதல், தரவரிசை மூலம் அடையாளம் காண வேண்டும், முழுமையான நிராகரிப்பிலிருந்து இவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்றே நினைக்கிறேன்.


சிவன் சுந்தரம்


*


அன்புள்ள சிவன்


நான் கலையில் சோதனை முயற்சிகளுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் சோதனைமுயற்சிகளை நாம் பார்க்கும்போது நமக்கென ஒரு அளவுகோல் தேவையாகிறது. நான் இதை நான்கு தளங்களிலாக அணுகுவேன்


ஒன்று,  போலித்தனம். கலைசார்ந்த நுண்ணுணர்வோ அதற்கான அறிவுத்தயாரிப்போ இல்லாமல் வெறுமே ஏதாவது சாயல்களை அங்கே இங்கே பொறுக்கிக்கொண்டு பண்ணப்படும் செயற்கையான முயற்சிகள். சரியான சொல் பம்மாத்து.


கலை என்பது அவ்வளவு எளிதாக உருவாக்கப்படுவதல்ல. அதன் பின் ஒரு மனம் , ஒரு புத்தி,தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தவிக்கவேண்டும். எந்த ஒரு கலைக்குப்பின்னும் ஒரு ஆத்மார்த்தமான பெருமுயற்சி, ஓர் அர்ப்பணிப்பு உள்ளது. போலிக்கலை உண்மையான கலையின் சில பாவனைகளை சில உத்திகளை மொழி மற்றும்  பாணியிலுள்ள  சில புறவயமான அடையாளங்களை  மட்டுமே மிமிக் செய்கிறது. அதைக்கண்டு கலையுணர்வற்றவர்கள் ஏமாறுவார்கள். அதை உண்மையான கலையுடன் ஒப்பிடுவதுடன் சில சமயம் உண்மையான கலைக்கும் மேலாகவும் முன்வைப்பார்கள். இது வரலாற்றில் எப்போதுமே நிகழக்கூடியது.


இந்தப் போலி முயற்சிகளை உண்மையான முயற்சிகளுடன் ஒப்பிடுவதென்பது கலையில் உள்ள அந்த முயற்சியையும் அர்ப்பணிப்பையும்  அவமதிப்பது. ரசனையை அவமதிப்பது. காலப்போக்கில் கலையையே அழிப்பது. இதில் குரூரமான ஒரு கறார்த் தன்மையுடன் மட்டுமே இருந்தாகவேண்டும்.


தமிழில் கோணங்கியின் எழுத்தும் அவர் தம்பி முருகபூபதியின் நாடகமும் எல்லாம் இவ்வகை.  இலக்கிய, கலை வாசனையற்ற அசடுகள் எப்போதுமே அவர்களுக்கு ரசிகர்களாக அமைவதுமுண்டு. ஓவியத்திலும் இத்தகைய பல நபர்கள் உண்டு என்று வசந்தகுமார் ஒருமுறை சொன்னார்


சினிமாக்களிலும் அவ்வகையான பல போலி முயற்சிகள் உண்டு. மிகச்சிறந்த  உதாரணம் ஜான் ஆபிரகாமின் வித்யார்த்திகளே இதிலே,  அம்ம அறியான் போன்ற படங்கள். கலை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அசட்டு விமர்சகர்களை அவை ஏமாற்றலாம். ஏதாவது ஒரு கலையை உள்ளார்ந்து அறிய முடிந்த ஒருவர் கண்டிப்பாக இவற்றை அடையாளம் காணமுடியும், ஒதுக்கமுடியும்.



 


[ஜான் ஆப்ரஹாம்]


இரண்டு, கணக்குவழக்குகள்.  உண்மையான கலை எழுச்சி அகத்தில் நிகழாமல் கலையின் வடிவத்தால் மட்டுமே ஈர்க்கப்பட்டு  செய்யப்படும் சோதனை முயற்சிகள். இவை வெறும் வடிவப்பரிசோதனைகள். இசையில் செய்யப்படும் கணக்குவழக்குகளுக்கு நிகரானவை.


இலக்கியத்தில் மிகச்சிறந்த உதாரணம் என்றால் தமிழவனின் நாவல்கள். அவர் அங்கே வாசித்ததை இங்கே செய்து பார்க்கிறார். அவ்வளவுதான் அவரது ஆர்வம். சினிமாவில் ஷாஜி என் கருணின் பிறவி தவிர  பல படங்கள் உதாரணம்.ஸ்வம் முதல் குட்டிசிராங்கு வரை எடுத்துப்பார்க்கலாம். உயிர் என்பதே இருக்காது. பிறவி அதன் திரைக்கதையாசிரியரான சி வி ஸ்ரீராமன் என்ற பெரும் சிறுகதையாசிரியரின் சிருஷ்டி.



 


[ஷாஜி என் கருண்]


மூன்று, முதிரா முயற்சிகள் . ஒரு கலையை உருவாக்குவதற்கான மன எழுச்சியும் தேடலும் இருந்தும் அக்கலையை உருவாக்குவதற்கான பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் உருவாக்கப்படக்கூடியவை இவை. எந்த கலையிலும் அக்கலையின் ஊடகம் மீதான தீவிரமான ஒரு பயிற்சி தேவை. அந்தப் பயிற்சி இல்லாத நிலையில் மனம் அடைவதை ஊடகம் அடையாமல் போகும்.


இலக்கியத்தில் அதற்கான பல உதாரணங்கள் உண்டு. தமிழில் சம்பத் எழுதிய குறுநாவலும்,நாவலும் அதற்குச் சிறந்த உதாரணங்கள். அவருக்கு புனைகதையின் வடிவமோ மொழியோ கைகொடுக்கவில்லை. ஆனால் அவர் என்ன உத்தேசித்தார் என அவரது ஆக்கங்கள் சொல்கின்றன


சினிமாவில் சிறந்த உதாரணமாக அமைபவை ஜி.அரவிந்தனின் காஞ்சனசீதா, தம்பு, ஒரிடத்து, எஸ்தப்பான், போக்குவெயில் போன்ற படங்கள். அவரது கலை எழுச்சியின் தீவிரத்தை நாம் அவற்றில் உணரமுடியும். ஆனால் அவை நன்றாக அமைந்த படங்கள் அல்ல. நம் திரையின் பரிணாம வரலாற்றில் அவற்றுக்கு ஓர் இடம் உள்ளது அவ்வளவுதான்.



[ஜி. அரவிந்தன்]


நான்கு, கலைப்பிழைகள். ஓர் உண்மையான கலைஞன் தன்னுடைய சுயவெளிப்பாட்டுக்கான வடிவைக் கண்டடைதலில் அடையும் பிழைகள் இவை. இவை அந்த அளவிலேயே முக்கியமானவை. கலையின் புதிய சாத்தியங்களைத் தொட்டு எழுப்பக்கூடியவை அவை. அக்கலைஞனுக்கு வழக்கமான வடிவம் போதவில்லை. தனக்கான வடிவுக்காக அவன் சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவை அவனை வெளிப்படுத்தாமல், அல்லது முழுமையாக வெளிப்படுத்தாமல் நின்றுவிடுகின்றன.


இலக்கியத்தில் சிறந்த உதாரணம், நகுலன். அவரது ஆக்கங்களில் நாய்கள் போன்ற பல ஆக்கங்கள் பரிதாபகரமான தோல்விகள். சிறுகதைகளில் ஒன்றிரண்டுகூட நல்ல கதைகள் அல்ல. கவிதைகளில் பத்துக் கவிதைகள் தேறினால் அதிகம். நினைவுப்பாதை, வாக்குமூலம் என்னும் இரு ஆக்கங்களையே ஓரளவேனும் அவரது மேதமையின் சாயல் கூடிய ஆக்கங்கள் என்று சொல்லமுடியும். அவையும் கலைவெளிப்பாடுகள் அல்ல, கலைக்கான தவிப்புகளும் தடுமாற்றங்களும் மட்டுமே. ஆங்காங்கே மிளிரும் மேதமையாலேயே அவை கலையாகின்றன


ரித்விக் கட்டக்கின் பெரும்பாலான ஆக்கங்களை இந்த வகையில் சேர்ப்பேன். மேக தக் தாரா விதிவிலக்கு. ஆனால் கட்டக் தேடியது அதை அல்ல. அவரது மேதமை வெளிப்பட்ட படங்கள் சுபர்ணரேகா போன்றவை. ஆனால் அவை சிதைந்த ஆக்கங்கள்.



[ரித்விக் கட்டக்]


ஐந்து , கலைத்திருப்பங்கள். உண்மையில் வெற்றிபெற்ற எல்லாக் கலைப்படைப்பும் எந்த சம்பிரதாயமான வடிவை எடுத்துக்கொண்டிருந்தாலும் அவ்வடிவை வெற்றிகரமாக மறுஆக்கம் செய்திருக்கும். ஆகவே எல்லா நல்ல ஆக்கங்களும் வடிவ அளவில் புத்தம்புதியவையே. ஆனால் அபூர்வமாக சில ஆக்கங்கள் ஒரு கலைச்சூழலில் புத்தம்புதிய வடிவத்தை உருவாக்கி அதன் தேவையைத் தங்கள் கலைத்திறன் மூலம் நிலைநாட்டியும் இருக்கும்.


தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த உதாரணம் என்றால் கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லகிராமம். மிக விசித்திரமான வடிவம் கொண்ட இந்நாவல் அதன் வடிவத்தேவையை முழுமையாக நிலைநாட்டவும் செய்தது. அது ஒரு வகைமையை உருவாக்கவில்லை. கி.ராவே அதை முன்னெடுக்க முடியவில்லை.  ஆனால் அது காலத்தை வென்று நின்று கொண்டிருக்கிறது


சினிமாவில் ஐந்தாம் வகைக்கான உதாரணங்கள் என சத்யஜித் ரேயின்  பாதேர்பாஞ்சாலி, சாருலதா போன்றவற்றைச் சொல்வேன். அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் போன்றவற்றைச் சொல்வேன்


 



[சத்யஜித் ரே]


 



[அடூர்]


நான் சோதனை முயற்சிகளை எப்படிப்பார்க்கிறேன்? முதல் வகையை முழுமையாக-தீவிரமாக நிராகரிக்கிறேன். அவற்றை முழுக்க நிராகரிப்பது கலைக்கும் அதை உருவாக்குபவர்களுக்கும்கூட நல்லது செய்வது என நினைக்கிறேன். இரண்டாம் வகையைப் பொருட்படுத்தவில்லை. மூன்றாம் வகையை எப்போதும் ஆர்வத்துடன் பார்க்கிறேன். நான்காம் வகையை ஆழ்ந்து கவனிக்கிறேன், ரசிக்கிறேன். அந்தக்கலையை என் ரசனையால் முழுமைசெய்துகொள்கிறேன். அது ஏன் முழுமையடையவில்லை என்பதை மீளமீள சிந்திக்கிறேன். ஐந்தாவது வகையை வழிபடுகிறேன்.


என் பார்வையில் மணி கவுல் இரண்டாம் வகையைச்சேர்ந்தவர். அவரது ஆக்கங்கள் உயிரற்றவையாக எனக்குப்பட்டன. வடிவச்சோதனைகளுக்காகச் செய்யப்படும் கலை முயற்சிகளுக்கு மிக மிகத் தற்காலிகமான மதிப்பே உள்ளது. எல்லாக் கலைவடிவங்களும் மிகச்சீக்கிரத்திலேயே காலாவதியாகும். காலத்தைத் தாண்டி வருவது கலைவழியாகத் தன்னை வெளிப்படுத்தும் மானுட ஆழம்தான். கலைஞன் அந்த ஆழம் வெளிப்படும் ஒரு திறப்பு மட்டுமே.


ஜெ


 


'குட்டி சிராங்க் -திருமலைராஜன்


 சுவரில் முட்டிநிற்கும் மலையாள சினிமா





மலையாளசினிமா-கடிதங்கள்


 


நமதுசினிமா ரசனை





மலையாள சினிமா ஒரு பட்டியல்


சமரச சினிமா


 


 


 


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2011 11:30

லயா

லயா என்ற பேரிலான இத்திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது. 2004ல் சுனாமி அடித்த பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்க்கையை, இசையைப் பதிவுசெய்யும் நோக்கம் கொண்டது. மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, தமிழ்நாடு, மாலதீவுகள் எனப் பல பகுதிகளின் இசை பதிவாகியிருக்கிறது. உச்சம் என்றால் மாலத்தீவுகளின் கலைஞர்களின் உக்கிரமான தாள நிகழ்ச்சிதான். தமிழ்ப்பகுதியில் கே.ஏ.குணசேகரன் 'ஜீவிதப்படகு கரைசேரணும்' என்ற நல்ல பாடலை அழகான உணர்ச்சிகளுடன் பாடியிருக்கிறார்.


டிவிடியாக வாங்கக்கிடைக்கிறது.


 


http://www.linktv.org/programs/the-laya-project


http://www.layaproject.com/layaproject/video.html

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2011 11:30

ஒரு கவிதைச்சாதனை

கடந்த சில வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச்சிறந்த கவிதை இவ்வாரத் திண்ணை இதழில் ருத்ரா என்ற புதிய கவிஞர் எழுதியதுதான் என்று சொல்லமுடியும்


பல சிறப்பம்சங்கள்.


1. படிமங்களே இல்லை.  நேரடியாகவே அனுபவம் கூறப்பட்டுள்ளது. எந்தவிதமான சுற்றிவளைத்தல்களும் இல்லை. படிமங்களைக் கண்டு அஞ்சி நவீனக்கவிதையை புரிந்துகொள்ளாமல் ஓடுபவர்கள் இக்கவிதையை வாசித்துப்பார்க்கலாம். அனுபவம் நேர்மையாக, அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது


2. வர்ணனைகள் மற்றும் அடைமொழிகள் நாம் அன்றாடம் நம்மைச்சுற்றிப் புழங்கும் மொழியில் இருந்து நாம் அன்றாடம் கேட்பவைபோலவே உள்ளன. ஆகவே நாம் கவிதைக்குள் இயல்பாகச் செல்லமுடிகிறது. எந்தத் தடையும் இல்லை.


3 . சிக்கலான உணர்வுகளைச் சொல்கிறேன் பேர்வழி என்று கவிதையையும் சிக்கலாக்கிவிடும் இன்றைய கவிஞர்களின் நடுவே நேர்மையாகவும் நேரடியாகவும் உணர்வெழுச்சியைப் பதிவுசெய்திருக்கிறார்


4. க.நா.சு- சுந்தர ராமசாமி மரபு,கவிதையில் இருந்து உணர்ச்சிகளை வெளியேற்றியது.  அதன் பின் கவிதைகள் வெறும் சக்கைகளாகவே வெளியே வந்தன. இக்கவிதையின் உணர்ச்சி உண்மையானது. தமிழ்நாட்டில் பல லட்சம்பேர் இதன் உணர்வெழுச்சியுடன் ஒன்றுவார்கள் என எவரும் சொல்லமுடியும்.


5. கவிதையை நவீனத்துவம் தனிமனிதனை நோக்கிக் குவியச்செய்தது.  விளைவாகக் கவிதையில் சமூகப்பிரக்ஞையே இல்லாமலாகியது. இக்கவிதை நேரடியாகத் தமிழ்ச்சமூகத்தை நோக்கிப்பேசுகிறது.


நவீனக்கவிதையைப் பகடி செய்யும் பா.ராகவன் போன்றவர்கள் இக்கவிதையை மனநிறைவுடன் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.


ருத்ரா,தமிழ்க்கவிதையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறார். இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளி எழுதப்பட்ட எந்த கவிதையின் சாயலும் இல்லாமல்,  புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார் என்பதை ஒரு சாதனையாகவே சொல்வேன்.


 


ருத்ரா தொடர்ந்து எழுதவேண்டும்.  வெளியிட்ட திண்ணை இதழுக்கும் அதன் ஆசிரியர்குழுவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


 


 


ருத்ராவின் கவிதையைப்படிக்க


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2011 07:45

August 6, 2011

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7


 


 


மாற்றுமொழிபும் பௌத்தமும்


 


 


தலித்தியம் பௌத்தம் சார்ந்த என்னுடைய சிந்தனைகளை வடிவமைத்ததில் நண்பர் பிரேமுடனான விவாதங்களுக்குப் பெரும் பங்குண்டு. அதை இத்தருணத்திலே பதிவுசெய்ய விழைகிறேன். 1999ல் குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய பதிவுகள் இலக்கியப்பட்டறையில் அவரை நான் சந்தித்த முதல்நாளில் ஒரு பொது விவாதம் ஏற்பட்டது. நம்முடைய முற்போக்கு- பின் நவீனத்துவச் சிந்தனைகளைப்பற்றி நான் மிகக் கடுமையான ஓர் அவநம்பிக்கையை அன்று சொன்னேன்.


அவர்கள் மேல் நான் சொன்ன குற்றச்சாட்டுகள் மூன்று. ஒன்று, அவர்கள் அடிப்படையில் நடைமுறைத் தளத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் அதை அடிப்படையாக்கியே சொல்கிறார்கள். அவர்களுடைய எல்லா விவாதங்களையும் தர்க்கபூர்வமாக சாரவாதம் [ essentialism ] என்று சொல்லிவிடலாம். பின் நவீனத்துவ சிந்தனைகளாக அவர்களால் இங்கே முன்வைக்கப்படுபவை பழைய எளிய சமூகசீர்த்திருத்த கருத்துக்கள் மட்டுமே. கலைச்சொற்களை மட்டுமே மாற்றிக்கொண்டிருக்கின்றன, ஆனால் அவை விவாதிக்கும்கோணம் சாரவாதம் சார்ந்ததே. அது பிரபஞ்சத்தை, இயற்கையை, வாழ்க்கையை, கடைசியாக வகுத்து வைக்கும்தன்மை கொண்டது. அதை என்னால் ஏற்கமுடியவில்லை.


இரண்டாவதாக, முதலில் சொன்னதன் நீட்சியாக, அவர்களின் இந்திய மரபு மறுப்பைச் சொன்னேன். எந்த ஒரு விஷயத்தையும் அதன் ஐரோப்பிய மேற்கோளில் இருந்து ஆரம்பிப்பது, எந்த சிந்தனைக்கும் ஐரோப்பிய முத்திரை குத்திக்கொள்வது என்றே அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவின் நீண்ட சிந்தனை மரபில் எந்தப்புள்ளியிலும் அவர்கள் தங்களை பொருத்திக்கொள்வதில்லை.


மூன்றாவதாக, உன்னதமாக்கல் [sublimation] என்ற ஒரு இறுதி இலக்கு இல்லாமல் சிந்தனை இருக்கமுடியாது. மீட்பு, முழுமை என்றெல்லாம் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் உன்னதமாக்கலைச் சார்ந்தவையே. அவை இந்த விவாதங்களில் இல்லை.


பிரேம் அதற்கு விரிவாகப்பதில் சொன்னார். 'நீங்கள் மார்க்சியத்தை அல்லது அதன் தத்துவ அடித்தளத்தை ஏற்றுக்கொண்டு மேலே சிந்திக்கும் சிந்தனைகளை மட்டுமே கணக்கில் கொள்கிறீர்கள்' என்றார் 'நவயான பௌத்தம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' என்றார். உண்மையில் நான் அப்போதுதான் அதைப்பற்றி கேள்விப்பட்டேன். 'இல்லை' என்றேன். 'அது அம்பேத்கார் முன்வைத்த நவீனபௌத்தம். பௌத்தசிந்தனைகளை நவீனகாலகட்டத்துக்காக மறு ஆக்கம்செய்து அவர் உருவாக்கிய ஒரு ஞானமரபு அது. நவயானபௌத்தம் மிக வெற்றிகரமாகப் பின்நவீனத்துவ சிந்தனைகளுடன் உரையாட முடியும். அது தனக்கென ஒரு பின்நவீன முறைமையை உருவாக்கிக்கொள்ளமுடியும். அதன் மேல் நீங்கள் சொல்லும் இந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது'


என்னால் அப்போது மேலே பேசமுடியவில்லை, காரணம் நவயானம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நான் கேட்டேன் 'சரி, ஒரு நவயானி புராணங்களை உருவாக்க முடியுமா?' பிரேம் சிரித்துக்கொண்டே 'வெற்றிகரமாக உருவாக்கமுடியும். நானே உருவாக்கியிருக்கிறேன். என்னுடையதை நான் மாற்றுப்புராணம் என்றுகூட சொல்லமாட்டேன். அதைப்போலவே இதுவும் ஒரு மொழிபு மட்டுமே' என்று சொல்லி தேவிபாகவதத்தின் கதையை அவர் மறு ஆக்கம் செய்திருந்ததைச் சொன்னார். அது தேவியை சிவை ஆக உருவகித்து மொத்த சைவ மரபையும் பெண்ணின் கோணத்தில் தலைகீழாக எழுதுவதாக இருந்தது. அந்தக் கதை அவரால் எழுதிமுடிக்கப்படவில்லை என நினைக்கிறேன். வந்திருந்தால் மரபின் தரப்பிலிருந்து வாய்நிறைய வசைகளை வாங்கியிருந்திருப்பார், அதன் கோணம் அத்தகையது.


அன்றிரவு பிறர் அருவியில் குளிக்கையில் நாங்களிருவரும் அவர்களின் சட்டைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். பிரேம் அன்று இந்திய சிந்தனையில் அம்பேத்காரின் பங்களிப்பு பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்தக்கோணத்தில் நான் அவரை அதுவரை புரிந்துகொண்டதில்லை.அவரது அரசியல் முகமன்றி வேறெதுவும் எனக்குத்தெரியாது. கடைசிக்காலத்தில் அம்பேத்கார் இந்திய வரலாற்றாய்வு இந்திய தத்துவசிந்தனை ஆகியவற்றுக்கு அளித்த கொடைகளைப்பற்றி பிரேம் சொன்னார். அதில் முதன்மையானது பௌத்தத்தை மீட்டு எடுத்து நிறுத்தியது


'சாரமின்மை' என்பது பௌத்த மெய்யியலின் முக்கியமான தரிசனம். அந்த ஒரு மையக்கூறினாலேயே பிற இந்திய வைதிக தரிசனங்கள் அனைத்திலிருந்தும் விலகி நிற்கிறது பௌத்தம். மொத்த இந்திய மரபுக்கும் பரபக்கமாக நிற்கும் வல்லமை கொண்டது அது. பௌத்த மெய்ப்பொருளையே அனாத்தம், அநித்தம், துக்கம் என மூன்று சொற்களாக வகுக்கலாம்.  சாரமின்மை வாதம் [அனாத்மவாதம்] நிலையின்மைவாதம் [அநித்தம்] துக்கம் [ அறியமுடியாமைவாதம்]


இந்தத் தத்துவக்கருவி,இந்தியசிந்தனைமரபில் ஒரு ஐநூறாண்டுகள் அனைத்து உறைவுநிலைகலையும் உடைக்கும் சுத்தியலாக இருந்துள்ளது. பொதுவாக எதிர்ப்புகள் எல்லாமே மறுப்புகளாக இருக்கும். எதிர்க்கப்படுபவற்றைவிடப் பெரிதாக ஒன்றை முன்வைக்கமுடிந்ததே பௌத்தத்தின் வெற்றி. இந்திய சமகாலச்சூழலிலும் பெரிய உடைப்புகளை நிகழ்த்த அதனால் முடியும், நவயான பௌத்தம் ஒரு பின்நவீனத்துவ தரப்பாக நிலைகொள்ளமுடியும், மார்க்ஸியர்களின் ஒரு பின்நவீனத்துவ வடிவமும் இங்கே புழக்கத்தில் இருக்கும், வேறு வழியில்லை என்றார் பிரேம்.


உன்னதமாக்கல் என்பது இன்னும் தர்க்கபூர்வமாகவும் முழுமையாகவும் இருப்பது பௌத்தத்தில். அதை அம்பேத்கார் முன்வைத்திருக்கிறார். தங்கள் எழுத்துக்களிலும் அதை உன்னதமாக்கல் என்ற சொல்லாட்சியுடனேயே பேசியிருக்கிறோம் என்று சொன்ன பிரேம் பின்நவீனத்துவத்திலேயே இம்மானுவேல் காண்டின் சிந்தனைகளை முன்வைத்து உன்னதமாக்கலைப்பற்றிப் பேசும் ஒரு பகுதி உண்டு என்று சுட்டிக்காட்டினார்.


ஆனால் எந்த அளவு அதெல்லாம் சாத்தியமானதென்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. தமிழ்ச்சூழலில் வழக்கமான அரசியல்பேச்சுகளில் சில பின்நவீனத்துவ கலைச்சொற்கள் கலந்தனவல்லாமல் ஒன்றும் நிகழவில்லை. எதையுமே ஆழ்ந்து வாசிக்கும், விவாதிக்கும் பண்பில்லாமல் அன்றாட அரசியலை மட்டுமே பேசும் ஒரு தரப்பால் பின்நவீனத்துவச் சொல்லாடல்கள் ஒட்டுமொத்தமாகக் கடத்திச்செல்லப்பட்டு காலிசெய்யப்பட்டன என்று நினைக்கிறேன்.


இங்கே நவயானபௌத்தம்நோக்கிச் செல்லப்போவதில்லை. நவயான பௌத்தம் என்பது பௌத்ததின் தத்துவார்த்தமான சாரத்தை எடுத்து நவீன சுதந்திரஜனநாயக சிந்தனைகளுடன் கலந்து மீட்டுருவாக்கம் செய்வதாகும். அம்பேத்கார் முன்வைத்த பௌத்தத்தின் சாத்தியங்களைப்பற்றிப் பிறிதொரு தருணத்தில் விரிவாகவே பேசவேண்டியிருக்கிறது.


அயோத்திதாசர் முன்வைக்கும் பௌத்தம் பழைமையான தமிழ் பௌத்தம். அடித்தள மக்களிடையே பலவாறாகச் சிதைந்து பல்வேறு நம்பிக்கைகளாகவும் ஆசாரங்களாகவும் நீடித்திருந்த ஒன்று. ஆகவே அது இயல்பாகவே புராணத்தன்மை கொண்டிருந்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவரது செயல்பாடுகளின் தளம் அது.


 



 


அயோத்திதாசரின் புராணமரபு


அயோத்திதாசரின் நூல்களில் குறிப்பிடத்தக்கதாக முன்வைக்கப்படுவது 'புத்தரது ஆதிவேதம்' என்ற நூலாகும். 1912ல் தனி நூலாக வெளிவந்த இந்த ஆக்கம்,இன்றைய நூல் வரையறைகளுக்குள் நிற்பதில்லை. இது ஒரு புராண-நீதி-வரலாற்று நூல். ராஜ்கௌதமன் போன்ற அக்கறைகொண்ட ஆய்வாளர்களே அயோத்திதாசர் முன்வைக்கும் இந்த மொழிபைப் 'புனைவு' என்ற எதிர்மறைத் தொனியில் சொல்லியிருப்பதைக் காணலாம். அயோத்திதாசர் முன்வைத்துப் போராடிய இலக்குகளின் அடிப்படையில் மன்னிக்கக்கூடிய அல்லது புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயமாகவே ராஜ்கௌதமன் இதைப்பார்க்கிறார்.


அயோத்திதாசர் இந்நூலைப் பாலிமொழிப் பிரதிகள், தமிழ்நாட்டுப் பழமொழிகள் மற்றும் அடித்தளமக்களின் நம்பிக்கைகள், குலக்கதைகள், தமிழ் செவ்வியல்நூல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதியிருக்கிறார். அயோத்திதாசர் அவர் எழுதிய இந்நூல் பிற மதத்தார் பௌத்தம் பற்றி எழுதிய நூல்களில் இருந்து வேறுபட்டது என்பதை தெளிவாகவே குறிப்பிடுகிறார்.அதற்கு அவர் சொல்லும் காரணம் அவரது நூல் அசலானது என்பதே. அதாவது பாலி மூலநூல்கள் மற்றும் தமிழ்குலமரபுகளில் இருந்து அது உருவாக்கப்பட்டமையே அதன் தனித்தன்மைக்குக் காரணம் என்பது அயோத்திதாசரின் விளக்கம்.


அவர் தன் நூலை எழுத ஆரம்பிக்கும்போது பௌத்தத்தை மீட்டு எடுத்து நிறுவியவையாகப் புகழ்பெற்ற மூன்று ஐரோப்பிய மூலநூல்களும் வெளிவந்துவிட்டன. [ ஆல்காட்டின் பௌத்த ஞானச்சுருக்கம், பால் காரஸின் புத்தரின் நற்செய்தி, ரய்ஸ்டேவிட்ஸின் பௌத்த இந்தியா]  அந்நூலாசிரியர்களில் ஒருவரை அயோத்திதாசர் நன்கறிவார்;ஒருவரை  நேரில் சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் இன்னொன்று எழுதுகிறார், மொழியாக்கம் செய்யவில்லை என்பதைக் கவனிக்கலாம். அவரது நூலில் அவர் இந்த மூன்று பேரறிஞர்களை மேற்கோள்காட்டவுமில்லை.


அயோத்திதாசர் உருவாக்கியது ஒரு முழுமையான தமிழ்நூல். அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்தால் பௌத்த நிபுணரான ரய்ஸ் டேவிட்ஸ் மீண்டும் அசலான ஆய்வுகளுக்குப்பின்னரே அதை வாசிக்கமுடியும். நான் அயோத்திதாசர்ரை மூலச்சிந்தனையாளர் என்று சொல்வது இந்தத் தனித்தன்மையாலேயே. தன்னுடைய அசல்தன்மையின் மதிப்பைப்பற்றிய தன்னுணர்வுள்ள ஒரு பேரறிஞனாலேயே இந்தத் தன்னம்பிக்கையை அடையமுடியும்.


தமிழில் எழுதப்பட்ட முக்கியமான மூலநூல்களில் ஒன்றாக அயோத்திதாசரின் இந்த ஆக்கத்தை நான் சொல்வேன். பிறிதொரு தருணத்தில் இந்நூலை தர்மானந்த கோசாம்பியின் 'பகவான் புத்தர்', அம்பேத்காரின் 'புத்தரும் அவரது தருமமும்' மயிலைசீனி வேங்கடசாமியின் 'பௌத்தமும் தமிழும்' ஆகிய நூல்களுடன் ஒப்பிட்டு எழுதலாமென நினைத்திருக்கிறேன். நான் இந்நூல்களை ஒப்பிட்டுக் குறிப்புகள் எடுத்து எட்டு வருடங்களாகின்றன. பல பல்கலைகளில் பௌத்தம் கற்பித்த பௌத்த அறிஞரும், நடராஜகுருவின் மாணவரும் , இப்போதைய நாராயணகுருகுல தலைவருமான முனி நாராயணபிரசாத் அவர்களுடன் இதைப்பற்றி விவாதித்துள்ளேன். மேலதிக விவாதங்கள் நிகழாமல் அவர் நோயுறவே அந்தத் திட்டம் அப்படியே நிலைத்தது


அயோத்திதாசர் அவரது நூலை சித்தார்த்தர் உத்பவகதை முதல் ஆதிவேத விளக்கம் வரை 29 அதிகாரங்களில் அமைத்திருக்கிறார். இந்நூலின் அமைப்பு இன்றைய மேலைநாட்டுக்கல்விபெற்ற வாசகர்கள் உள்ளே செல்ல மிகத் தடையானது. ஏற்கனவே சொன்னதுபோல பல்வேறு ஞானமுறைகளின் கலவையாக ஒரு முழுமைநோக்காக அவரது அணுகுமுறை உள்ளது. இதிலுள்ள திதிகள் பட்சங்கள் பற்றிய சோதிடத் தகவல்கள் பல எனக்குத் தலைகால் புரியவில்லை.


அயோத்திதாசர் மரபான புராணங்களைப்போல முதலில் சாக்கிய குல வரலாறையும் பின்னர் சாக்கிய சங்க வரலாற்றையும் கதையாகக் கொடுக்கிறார். கதைகளும் தகவல்களும் பின்னிப்பிணைந்த ஒரு வடிவம் அது. அதன்பின்னர் புத்தரின் கொள்கைகள். அதில் அயோத்திதாசர் அநித்தம், அநாத்தம் என்னும் இரு கொள்கைகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறார். தத்துவமளவுக்கே அறநெறி போதனைகளையும் முக்கியப்படுத்திப்பேசுகிறார்.


அயோத்திதாச பண்டிதரின் நூல்வரிசையில் பலநூல்கள் புராணங்களாகவும் புராணங்களுக்கான மறுவிளக்கங்களாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். அவரது இந்திரர் தேச சரித்திரம போன்ற நூல்களை இன்றைய வாசிப்பில் பல கோணங்களில் மறு ஆய்வுக்குட்படுத்த முடியும்.  ஒரு ஒட்டுமொத்தப்பார்வையில் இந்திரனின் பரிணாமம் ஆச்சரியமான ரகசியங்கள் கொண்டது. வேதகாலத்து முதற்கடவுளான இந்திரன் மெல்ல பிராமணமதங்களால் கைவிடப்படுவதை நாம் காணலாம். இந்துப்பெருமதங்களில் எங்கும் இந்திரனுக்கு ஆலயமோ வழிபாடோ இல்லை.


ஆனால் சங்ககாலத்தில் மருதநிலத்துத் தலைவனாக இந்திரன் இருக்கிறான். மருதத்தின் குணாம்சமான பரத்தையர்கூடலும் களியாட்டமும் இந்திரனின் இயல்புகளும்கூட என்பது கவனத்துக்குரியது. மழைக்கடவுளான இந்திரனை விவசாயம்செய்த மக்கள் கடவுளாக எண்ணியிருக்கலாம். மெதுவாக ஏதோ ஒருகாலகட்டத்தில் இந்திரன் அந்தமக்களின் கடவுளானார்.  பின்னர் பௌத்த சமண மதங்களில் இந்திரன் முக்கியமான இடத்தைப் பெற்றார், வைதிக மதத்தில் இடத்தை இழந்தார். சங்கம் மருவியகாலம் வரை தமிழர்களின் பெருவிழாவாக இந்திரவிழா இருந்திருக்கிறது


இந்தப்பின்னணியில் இந்திரர்தேச சரித்திரம் போன்ற நூல்களை வாசிப்பது பல்வேறு திறப்புகளை உருவாக்குவதாக அமையும்.  இந்திரர் தேசபுராணம் இந்தியாவின் வரலாறு பற்றிய ஒரு புராணச்சித்தரிப்பு. இந்நூல்களை ஒருவகை மாற்றுப்புராண முயற்சிகள் என்றே நினைக்கிறேன். அவற்றின் செறிவான குறியீட்டுத்தளம் விரிவான இலக்கியத்திறனாய்வுமுறைகள் மூலம் மீட்டு எடுக்கப்படவேண்டிய ஒன்று.


 



 


 


முதற்சிந்தனை என்னும் அடர்காடு


 


 


இங்கே நான் முதற்சிந்தனையாளர் என்று குறிப்பிட்ட மூவரையுமே [எஸ்.என்.நாகராஜன்,முதளையசிங்கம்,அயோத்திதாசர்] ஓர் அம்சத்தில் பொதுமைப்படுத்தலாம். மூவரின் எழுத்துலகுமே மிகக் குழப்பமானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது. அரைகுறை முயற்சிகள்,வெறும் மனப்பதிவுகள் ஆகியவற்றுடன் அதீதமான தாவல்கள் கொண்டதாகவும் காணப்படுகிறது.


 


முதற்சிந்தனையாளர்களிடம் இந்தச் சிக்கலைத் தவிர்க்கமுடியாதென்பதே என் கருத்தாகும். இதை மு.தளையசிங்கம் பற்றிய என் கட்டுரையில் விரிவாகவே பேசியிருக்கிறேன்.


 


வழிச்சிந்தனை ஏற்கனவே மாற்றுத்தரப்புடன் நீண்ட விவாதத்தை நிகழ்த்திக்கொண்ட ஒன்று. ஆகவே அதற்கு ஒரு கட்டுக்கோப்பும் வாதநேர்த்தியும் உருவாகியிருக்கும். மேலும் அந்தச் சொற்களன் நமக்குப் பழகியதாகவும் இருக்கும். ஆனால் மூலச்சிந்தனையாளர்கள் நாம் கொஞ்சம்கூட அறியாத ஒரு அறிவுத்தளத்தில் நிற்கிறார்கள். அவர்களின் சொற்களனில் நாம் கவனமாக உழைத்தே உள்ளே செல்லமுடிகிறது. அவர்களின் கலைச்சொற்களை நாம் அவர்களின் பேசுதளத்திற்குச் சென்று பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது.


அத்துடன் முதல்சிந்தனையாளர்கள் எல்லாருமே சற்று அதீதமாகத் தாவியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வனவற்றில் ஒரு கணிசமான பகுதி மிகையாக, பொருந்தாமல்தான் இருக்கிறது.  இந்த மிகை காரணமாக அவர்களின் பேச்சுகளில் முரண்பாடுகள் நிறைய சிக்குகின்றன. மு.தளையசிங்கம் , எஸ்.என்.நாகராஜன், அயோத்திதாசர் மூவருக்குமே இந்த இயல்பு இருக்கிறது. அவர்கள் ஒரு கோணத்தில் சிந்தனைசெய்து பார்க்கிறார்கள். அந்தக் கோணத்தின் தீவிரமே அவர்களை முன்னெடுத்துச் செல்கிறது. அந்தத் தீவிரம் காரணமாகவே அவர்கள் சமநிலையற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு பொதுப்புத்தித்தர்க்கம் மூலம் அவர்களை உள்வாங்கிக்கொள்ளமுடியாது.


அயோத்திதாசர் அவரது நூல்களில் சாதிகள், கடவுள்கள் பற்றிக் கூறிய பல விஷயங்களை வரலாற்று நோக்கில் நிராகரிக்க முடியும். பல விஷயங்களை அவர் வேண்டுமென்றே அதீதமாகச் சொல்லியிருக்கிறார். அவரது இயல்பு எப்போதுமே வீச்சுடன் முன் செல்வதே. அந்த இயல்புக்கான விலையாக இந்தப் பிசிறுகளைச் சுட்டிக்காட்டலாம்.


அயோத்திதாசர் தமிழின் இன்றைய சிந்தனையை நாம் முழுமையாகவே மறுமொழிபுக்கு ஆளாக்குவதற்கான ஒரு முன்வரைவை அளித்திருக்கிறார். நிறையத் தடுமாற்றங்கள்,நிறைய சிக்கல்கள்,நிறைய அதீதப்பேச்சுகளுடன் இருந்தாலும் முக்கியமான ஒரு முன்வரைவு அது. அந்த முன்வரைவை முற்றிலும் நம் மண்ணில் நின்றுகொண்டு அடித்தளமக்களின் மரபில் வைத்து எழுதும் ஒரு வழியையும் காட்டியிருக்கிறார். அந்த முன்னோடி முயற்சியே அவரை தமிழின் முதல்சிந்தனையாளர்களின் மிகமிகச் சிறிய பட்டியலில் சேர்க்கிறது.


வணக்கம்


[முழுமை]


 


[30- 7-2011 அன்று அயோத்திதாசர் ஆய்வுநடுவம் சார்பில் மதுரையில் பேசிய உரை]

 


 


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6


 


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3


 


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1


 


 


 உரை ஒலிவடிவம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2011 11:30

கலை உலகை சமைத்த விதம்

கலைகள் எவ்வாறு தோன்றின?
கலைகளில் மிகைப்படுத்துதல் ஏன்?
கலை காலப்போக்கில் எவ்வாறு மாறி வந்துள்ளது?
கலை அதிகாரத்தை நிலை நிறுத்த எவ்வாறு பயன்பட்டது, பயன்படுகிறது?
-உட்பட இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் தர முயல்கிறது இந்த ஆவணப்படம்.
நமக்குத் தெரிந்த விலையனூர் ராமச்சந்திரன் மற்றும் தெரியாத இன்ன பிற முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பலரின் விளக்கங்களுடன். இரண்டு குறுந்தகடுகள்.
நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
http://www.pbs.org/howartmadetheworld/
வேணு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2011 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.