Jeyamohan's Blog, page 2295

August 15, 2011

மெல்லுணர்ச்சிகளும் கலையும்

ஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் மெல்லுணர்ச்சிகளுக்கான இடம் என்ன என்று கேட்கப்பட்டது.  நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது


உணர்ச்சிகள் அல்லது மெல்லுணர்ச்சிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. இந்தக்காலத்தில் நுண்மையான உணர்ச்சிகள் குறைகின்றன என்று சொல்வது ஒரு வழக்கம் என்றாலும் அது உண்மை அல்ல. யோசித்துப்பாருங்கள், பெரும்போர்கள் பஞ்சங்களின் காலமாக இருந்த நம் இறந்தகாலங்கள் மெல்லுணர்ச்சிகளுக்கு இன்றைவிட சாதகமான காலங்களா என்ன? மெல்லிய உணர்ச்சிகள் எப்போதும் இருக்கும். அவை இலக்கியத்தையும் கலைகளையும் எப்போதும் ஊடகமாகவும் கொள்ளும்.


ஆனால் இந்த மெல்லுணர்ச்சி என்ற சொல்லை நாம் கொஞ்சம் கவனமாகப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. பலசமயம் சல்லிசான ஒரு உணர்ச்சியையே மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்கிறார்கள்.  பெரும்பாலும் அன்றாட லௌகீக வாழ்க்கையின் சில சாதாரணமான தருணங்களை வேறுகோணங்களில் கண்டடைவதையே அப்படி எண்ணுகிறார்கள். அவற்றை முன்வைக்கும் எழுத்துக்களுடன் எளிதாக அடையாளம் காணமுடிகிறதென்பதே அவற்றை ரசிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.


பலசமயம் ஹோமியோ மருந்துபோல ஊசிமுனையில் தொட்டு ஒரு செம்பு நீரில் கலக்கி ஒன்றை அளித்தால் அது நுண்மை என்றும் அதை ஊகித்தெடுப்பதே கலையுணர்வு என்றும் சொல்லப்பட்டது. அவை உத்திநுட்பங்களே அல்லாமல் இலக்கியநுட்பங்கள் அல்ல. நல்ல வாசகன் ஒருபோதும் படைப்பின் உத்திநுட்பங்களை அக்கறைகொண்டு வாசிக்கமாட்டான்


அறுபது எழுபதுகளில் சாதாரணமான மனிதர்களிடம் மனிதாபிமானம் வெளிப்படும் தருணங்களைக் கண்டுபிடித்து எழுதுவது மெல்லுணர்ச்சி சார்ந்ததாகக் கருதப்பட்டது. இத்தகைய கணிசமான கதைகளைத் 'தப்பாகப்புரிந்துகொண்டுவிட்டுப் பின்னால் வருந்துவது' என்ற வகைமைக்குள் அடக்கிவிடலாம். ஒரு முறைமீறிய பாலுறவை மெல்ல தொனிக்கவிட்டுச் சொன்னால் அது மெல்லுணர்வு என்று எழுபதுகளில் கருதப்பட்டது.    இன்று அக்கதைகளை செம்மலர் கணையாழி தொகுதிகளில் வாசித்தால் ஆச்சரியமாகவே உள்ளது.


சுந்தர ராமசாமி சொல்வார் 'காலையில் எழுந்ததுமே இன்று எதைப்பார்த்து நெகிழலாம் என யோசிக்கும் மனநிலை இது'  என. இதை மிகையுணர்ச்சி [செண்டிமென்ட்] என்றே சொல்வேன். எப்படி மிகைநாடகம் [மெலோடிராமா] இலக்கியத்துக்கு ஒவ்வாததோ அப்படித்தான் இதுவும். ஆசிரியரே நெகிழ்ந்துகொண்டே கதைசொல்வது எப்போதுமே தமிழில் ரசிக்கப்படுகிறது. வாசகர் முன்கூட்டியே அந்த மனநிலைக்குத் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார். தன் முதிர்ச்சி, தர்க்கபுத்தி, நகைச்சுவைஉணர்ச்சி ஆகியவற்றை இக்கதைகளுக்காக கொஞ்சம் ரத்து செய்துகொள்கிறார்.


நல்ல வாசகன் அதைச்செய்வதில்லை. அவனுக்குத் தேவை சௌகரியமான சில மனநிலைகள் அல்ல. உண்மைகள். ஆகவே தன் முழுத் தர்க்கத்தாலும், முழு நகைச்சுவையாலும், முழு முதிர்ச்சியாலும் இலக்கியத்தை அணுகுவதே அவன் வழக்கமாகும். அந்த நிலையிலும் அவனை ஈர்த்து மேலே கொண்டுசெல்லும் ஆக்கங்களையே நாம் முக்கியமானவை என்கிறோம். தர்க்கத்தை நிறைவுசெய்தபின் உணர்வுகளையும் உள்ளுணர்வுகளையும் நோக்கிப் பேசுபவையாக அவை இருக்கும்.


அப்படியானால் மெல்லுணர்ச்சி என்றால் என்ன? 'மெல்லுணர்ச்சி என்பது இயற்கையிலும் மனிதர்களிலும் மறைந்துகிடக்கும் நுண்ணிய விஷயம் 'ஒன்றை உணர்வால் தொட்டு எடுப்பது' என வரையறை செய்யலாம். அந்த அம்சம் என்றும் இலக்கியத்தில் உண்டு. அத்தகைய உண்மையான மெல்லுணர்ச்சி என்பது அதைத் தொட்டதுமே சல்லிசாகப் போய்விடாது. நினைவிலும் உணர்விலும் வளரும். நாம் இங்கே சாதாரணமாக மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்ளும் பலவிஷயங்கள் ஒருநாள் தாண்டினால் அற்பமானவையாக ஆகிவிடுகின்றன.


கலையின் இலக்கு இதெல்லாமா என்ன? கலையின் ஊடகம் கற்பனை. அது நம்மைக் கற்பனைவழியாக இணையான ஒரு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். அன்றாடவாழ்க்கையில் எப்போதோ ஒரு உச்ச அனுபவத்தருணத்தில் மட்டுமே நாம் நம் ஆழத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தத் தருணத்தைக் கலை கற்பனைமூலம் அளிக்கவேண்டும். அதன் வழியாக நம் ஆழ்மனத்தை நோக்கி , அதன் வழியாக வாழ்க்கையின் மையம் நோக்கி அது செல்லவேண்டும்.


அறிவுடன் மட்டும் பேசும் மேலான ஆக்கங்கள் உள்ளன. அங்கத இலக்கியங்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் சிறந்த இலக்கியங்கள் நம் கனவுடன் பேசுகின்றன. நம்மில் ஊடுருவி நம் கனவை அவை கட்டமைக்கின்றன. அதற்காக மொழியைப் படிமங்களாக ஆக்குகின்றன.


அப்படியானால் படைப்பில் தர்க்கம் எதற்காக? ஒரு நல்ல வாசகனின் கனவுத்தளம் வலிமையான தர்க்கத்தால் மூடப்பட்டதாகவே இருக்கும். அவன் அதுவரை வாசித்தவையும் யோசித்தவையும் அடங்கிய ஒரு ஓடு அது. அதை உடைத்துத் திறக்கக்கூடிய அளவுக்கு வல்லமையான தர்க்கம் எழுத்தில் தேவை. வாசகனைவிட மேலான அறிவார்ந்த தர்க்கதளம் இல்லாத  படைப்பு அவனைக் கவர்வதில்லை. ஆனால் அந்தக்கதவைத் திறந்தபின் இலக்கியம் செல்லும் இலக்கு அவனுடைய ஆழ்மனக் கனவுகளை நோக்கியே.


நல்ல வாசகனின் கனவுலகைச்சுற்றி அவன் அறிவுத்தர்க்கம் வீட்டைக் காக்கும் நாய்களைப்போல நின்றுகொண்டிருக்கிறது, எப்போதும் விழிப்புடன். அவனுக்கு அந்தக் கனவு அவ்வளவு முக்கியமென்பதனால் அவன் அதை அப்படிப் பத்திரமாக அந்தரங்கமாகத்தான் வைத்திருப்பான். அதைத் தீண்டாமல் ஆயிரம் கதைகளை சும்மா வாசித்துத் தள்ளிக்கொண்டுமிருப்பான். புனைகதையின் அறிவார்த்தம் என்பது அந்த வேட்டைநாய்களுக்கான இறைச்சித்துண்டுகள்தான். அவற்றை மீறி உள்ளே நுழைவதற்காக.


ஒரு நல்ல படைப்பின் உடல் மெல்லுணர்வைத் தீண்டும் நூற்றுக்கணக்கான அவதானிப்புகளுடன் மொழிவெளிப்பாடுகளுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில வரிகளை எடுத்து நீர்க்கச்செய்து அளித்தால் எளிய வாசகர்கள் எழுச்சியும் உவகையும் கொள்வார்கள். ஆனால் நல்ல வாசகனுக்கு அவை அவன் செல்லும் வழியாகவே இருக்கும் , இலக்காக அல்ல. இலக்கு என்பது மெய்மையைத் தீண்டும் கனவாகவே இருக்கமுடியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2011 11:30

நவகண்டம்

அன்புள்ள ஜெ,


காவல் கோட்டம் அட்டைப்படத்தில் உள்ள நவகண்டம் கொடுக்கும் பெண் சிலையின் அபூர்வத்தன்மையைப் பற்றிக் கூறியிருந்தீர்கள் (டொரண்டோ அருங்காட்சியகம் பதிவில்). எங்கள் ஊர் (தென்கரை, சோழவந்தான் அருகில், மதுரை மாவட்டம்) சிவன் கோயிலின் முன்புள்ள களத்தில் அப்படி ஒரு சிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. தொல்லியல் துறை சார்பாகப் பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு, கோயிலைச் சேர்ந்த தேவரடியார் பெண் அது என்றும், மற்றும் பல வரலாற்றுத் தகவலும் தொகுக்கப்பட்டுப் 'பராக்கிரமபாண்டியபுரம்'  என்னும் தலைப்பில் தனிநூலாக வெளியிட்டுள்ளது (மதுரை நாயக்கர் மகாலில் நூல் கிடைக்கும்). சிலை வெட்டவெளியில், முக்கியத்துவம் அறியப்படாமல் இருந்தாலும், உள்ளூர் மக்கள் அதையும் தெய்வமாகவே பாவிப்பதால், அவ்வப்போது படையலும், புதுத்துணியும் பெற்று 1000 ஆண்டுகளாக அழியாமல் உள்ளது. களம் சிமிண்ட் போடப்பட்டு நவகண்ட பெண் கால் புதைந்து நிற்கும் காட்சியும் இத்துடன் இணைத்துள்ளேன்.


மேலும் விவரங்கள் http://thenkarai.blogspot.com/
நன்றி,
பிரகாஷ்.

 


ஒண்டேரியோ அருங்காட்சியகம்


அம்மன் வழிபாடும் தற்கொலைப்போராளிகளும்


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2011 11:30

August 14, 2011

எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்

அன்புள்ள ஜெ ,,


எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எழுத்தாளர்கள் ஏன் எழுத்தாளர்களைப்போல இல்லை என்று கேட்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அதாவது எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு சீரான உறவு உண்டா என்ன?


அதாவது ஒரு நாவலை வாசித்து 'இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்' என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா?  நான் சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது இதுதான். நாம் ஏன் ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துப்பேசவேண்டும்? நீங்கள் உங்கள் விமர்சனங்களில் ஓரளவுக்குத் தனிப்பட்ட விஷயங்களை தொட்டுக்கொள்கிறீர்கள். அதைப்பற்றித்தான் கேட்கிறேன்.எழுத்தாளனை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும்? அதனால்தான் இந்தக்கேள்வி. இன்னும் நான் சரியாகக் கேட்கவில்லை.


தமிழ்


 


அன்புள்ள தமிழ்


நீங்கள் கேட்கும் கேள்வி இதுதான். சமூகப் பொதுமனதில் இருந்து எழுத்தாளன் என்ற  ஒரு பொதுப்பிம்பம் உருவாக்கப்பட்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை எல்லா எழுத்தாளர்களுக்கும் போட்டுப் பார்க்கிறீர்கள். அந்தக் கற்பனைச்சித்திரத்தின் குரலாக எழுத்துக்களை வாசிக்கிறீர்கள். ஆனால் நேரில் சந்தித்தால் எழுத்தாளர்கள் அப்படி இருப்பதில்லை. இது ஏன்? எழுத்தாளர்களின் பொதுபிம்பம் என எதையும் வகுத்துவிடமுடியாது என்பதே என் பதில். நான் இங்கே பேசுவதெல்லாம் உண்மையான எழுத்தாளர்களைப்பற்றி. ஒரு நல்ல ஆக்கத்தையாவது உருவாக்கிய கலைஞர்களைப்பற்றி. பிற எதிலும்போலவே எழுத்தாளர்களிலும் போலிகளே அதிகம். பலசமயம் அதிக புகழுடன் இருப்பவர்களும் அவர்களே. காரணம் வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் போலிகள். உண்மையான வாசகனுக்கு நீடித்தகவனமும் சுயமான கற்பனையும் தேவை. போலிகளுக்கு அவை எதுவும் தேவையில்லை.


எழுத்தாளர்களின் மனம் என்பது அந்தச் சமூகத்தின் மனத்தின் உச்சமாக வெளிப்படுவது. அதற்காகவே தீவிரப்படுத்தப்பட்ட சமூகமனத்தின் ஒரு சிறு பகுதி  அது என்று சொல்லலாம். ஒரு சமூகத்தின் கூட்டுஆழ்மனத்தின் லாவா  வெளிப்படும் சில புள்ளிகள் என்று எழுத்தாளர்களை வகுத்துக்கொள்ளலாம்.  ஆகவே அச்சமூகத்தின் உன்னதங்களும் கீழ்மைகளும் எல்லாம் அங்கே பீறிட்டு வெளிக்கிளம்புகின்றன. எழுதும் கணத்தில் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு நாவாக அவன் மாறுகிறான். தனிப்பட்ட முறையில் எழுத்தாளனின் பணி என்பது தன்னைத் துல்லியமான ஓர் ஊடகமாக ஆக்கிக்கொள்வது மட்டுமே.  எழுத்தில் எழுத்தாளனுக்குத் தேவையாக உள்ள பயிற்சி என்பது அதுவே.  ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி.  ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான்.  அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்தகாலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும். விளைவாகத் தனக்குரிய படிமமொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இதுதான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான். ஆனால் இது படைப்பூக்க நிலையில் மட்டும்தான். அப்போது மட்டுமே அவன் எழுத்தாளன். மிச்சநேரத்தில் அவன் வெறும் மனிதனே.


இன்னும் சொல்லப்போனால் சராசரி மனிதர்களை விட உள்வாங்கியவனாகவும் சஞ்சலங்கள் கொண்டவனாகவும் உணர்ச்சிகரமானவனாகவும் அவன் இருக்கக்கூடும். ஆனால் வாசகர்களுக்கு எப்போதும் எழுத்தாளன் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அந்தபிம்பம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒன்று. அதிகம் வாசிக்காதவர்களுக்குக்கூட அந்தச் சித்திரம் மனதுக்குள் உள்ளது. நம் வணிகக்கதைகள் திரைப்படங்கள் எல்லாமே அந்த எளிமையான சித்திரத்தை அளிப்பவை. அந்தச் சித்திரத்துடன் எழுத்தாளனைச் சந்திக்கும் வாசகனுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. பலசமயம் நடை உடைபாவனைகளேகூட ஏமாற்றத்தை அளிக்கின்றன.


நான் எப்போதுமே எழுத்தாளன் என்று சமூகம் கட்டமைத்துள்ள அந்த பிம்பத்தைச் சுமக்கக்கூடாதென நினைத்துக்கொண்டிருப்பவன். லௌகீகவாழ்க்கையில் நான் எதுவோ அதையே புறத்தோற்றமாகக் கொண்டவன். சமூக மரியாதைகளைப் பேணக்கூடியவன். ஆகவே என்னைச் சந்திக்கும் பலர் 'நீங்க எழுத்தாளர் மாதிரியே இல்லை' என்று சொல்வதுண்டு. மேலும் ஓர் அளவுக்குமேல் நெருக்கமாக ஆகிவிட்டவர்களிடமே நான் விரிவாகவும் தீவிரமாகவும் பேசுகிறேன். ஆகவே சிலருக்கேனும் என் பிம்பம் நேரில் சிதையக்கூடும். ஆனால் என்பிம்பம்  கணிசமான வாசகர்களிடம் மெல்ல மெல்ல வேறுவகையில் வலுவாக உருவாவதையே காண்கிறேன். அதுவே எனக்கிருக்கும் மிக விரிவான தனிப்பட்ட நண்பர்-வாசகர் வட்டத்துக்கான காரணம். இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு விலகிச்சென்ற நண்பர்கள், வாசகர்கள் ஓரிருவர்கூட கிடையாது. அவர்களனைவருமே வழக்கமான எழுத்தாள சித்திரம் ஒன்றை உடைத்துவிட்டு என்னைப்பற்றிய வேறு ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்பிம்பம் உடைவதில்லை.



[காஃப்கா]


 கலைஞர்களைப்பற்றிய இந்த சமூகச்சித்திரம் எப்படி உருவானது? ஒரு தொடக்கப்புள்ளியாக ஜான் ரஸ்கின் எழுதிய 'நவீன ஓவியர்கள்' என்ற பெரும் நூலைச் சொல்லலாம். அது ஓவியத்தை விட அதிகமாக நவீன இலக்கிய விமர்சனத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தியதாகும். எழுத்தாளனின் மனதை அடிப்படையாகக் கொண்டு எழுத்தை ஆராய்வதற்கான சிறந்த தொடக்கமாக அமைந்தது அந்த நூல். அதன் பின்னர் இன்றைய விமரிசனம் வரை தொடர்ச்சியாக எழுத்தாளனின் மனதுக்கும் எழுத்துக்கலைக்குமான உறவைப்பற்றி ஏராளமான கோட்பாடுகள் பேசப்பட்டிருக்கின்றன. கலை என்பது கலைஞனின் ஆளுமையின் ஓர் உச்ச வெளிப்பாடு என்ற கருத்தை மேலைச்சிந்தனையில் ஆழமாகப் பதிவுசெய்தது ரஸ்கினின் நூல்தான். இன்றுவரை அந்த அடிப்படை நம்பிக்கையில் இருந்து மேலைச்சிந்தனை வெளிவந்து விட்டது என்று சொல்ல முடியாது. இன்றைய இலக்கிய விமர்சன மரபு என்பது கிட்டத்தட்ட ரஸ்கினின் சமகாலகட்டத்தில் தத்துவ விவாதம், அறிவியல் விளக்க கட்டுரைகள், மதவிளக்கக் கட்டுரைகள் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆகவே ஆரம்பகால இலக்கியவிமர்சனம் எழுத்தாளனின் ஆளுமைக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு நேர்கோட்டைப் போட முயல்கிறது.


சாமுவேல் ஜான்சன், கூல்ரிட்ஜ் போன்றவர்களின் இலக்கிய விமரிசனத்தின் செயல்பாட்டை எளிமையாக இவ்வாறு சொல்லலாம். இலக்கியப் படைப்புகள் காட்டும்  உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்கள் வழியாகவும் வாழ்க்கை வரலாற்றுத்தகவல்கள் வழியாகவும் அந்த படைப்பாளியின் ஆளுமையை உருவகித்துக்கொள்கிறது அது. அதன்பின் அந்த ஆளுமையின் வெளிப்பாடாக அந்த இலக்கியப்படைப்புகளை வாசிக்கிறது. படைப்பு> படைப்பாளி > மீண்டும்படைப்பு என்ற இந்தச் சுழற்சியை நாம் மரபான விமர்சனங்கள் அனைத்திலும் காணலாம். இது இயல்பானதும் பயனுள்ளதுமாகும் என்றே நானும் நினைக்கிறேன்.  இதன் போதாமைகளை நிரப்பி நாம் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. படைப்பைப் படைப்பாளியின் ஆளுமையாகக் காண ஆரம்பித்ததுமே படைப்பாளியின் ஆளுமைச்சித்திரம் பிரம்மாண்டமானதாக ஆகியது. எழுத்தாளன் அவன் வாழும் காலகட்டத்தின் மாதிரிச்சான்று என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே அவனை ஆராய்வது அச்சமூகத்தையே ஆராய்வதாகும் என நம்பினர். கலைஞனைக் கதாநாயகனாக ஆக்குவதென்பது ரஸ்கினின் காலம் முதலே இலக்கியத்தில் பெருமரபாக ஆகிவிட்டிருந்தது. கலைஞன் மிகமிகச் சிக்கலான ஆளுமை என்றும் அவனுடைய அகம் நுட்பங்களால் ஆனது என்றும் உருவகிக்கப்பட்டது. கலைஞனின் அகத்தைச் சித்தரிப்பதென்பது எழுத்தாளர்களுக்கு எளியது, அவர்களால் அதைத் தன்னுடன் சேர்த்து அடையாளம் காணமுடியும் என்பதும் காரணம்.


ஆனால் இவ்வாறு பத்தொன்பதாம்நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கதாநாயகக் கலைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என மேலை இலக்கியத்தில் விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. ரோமெய்ன் ரோலந்தின் ழீன் கிரிஸ்தோஃப் என்ற புகழ்பெற்ற பேரிலக்கிய நாவலை முன்வைத்து விரிவான சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன. அந்த உருவகங்கள் பெரிதும் விருப்பக் கற்பனைகளே என்று கூறப்பட்டது. கலைஞனைத் தன்னைப்போன்றவன் என நினைக்கும் எழுத்தாளன் கலைஞனின் சித்திரத்தை மிகையாகப் புனைய ஆரம்பிக்கிறான். தன் இலட்சிய பிம்பமாக அவனைப் புனைந்து வைக்கிறான். ஐரோப்பாவின் சமகாலப் பண்பாட்டு வரலாற்றில் ஷீன் கிறிஸ்தோஃப் முதலிய பேரிலக்கியங்கள் ஆற்றிய பங்களிப்பு மிக நுட்பமானது. முந்தைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கலைஞர்கள் ஒருவகை அன்னியர்களாகவே கருதப்பட்டார்கள். அவர்கள் கட்டற்றவர்களாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் எண்ணப்பட்டார்கள். வீரர்களுக்கும் பிரபுக்களுக்கும் அளிக்கப்பட்ட மரியாதையில் சிறுபகுதிகூட கலைஞர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் ஜனநாயக யுகம் ஆரம்பித்தபோது குலப்பெருமை வழிபாடு பின்னகர்ந்தது. வீரவழிபாடு வேறு வடிவங்களுக்கு உருமாற்றம் கொண்டது. மக்களை கவரக்கூடியவர்களான கலைஞர்கள் பெரும் வழிபாட்டு பிம்பங்களாக எழுந்து வந்தார்கள். அப்போது கலைஞர்களின் பொதுப்பிம்பங்களைக் கட்டி எழுப்பவேண்டிய தேவை உருவானது. அதற்கான முன்னுதாரணங்களைப் புனைவில் உருவாக்கி அளித்தன ஷீன் கிறிஸ்தோஃப் போன்ற நாவல்கள்.


ஐரோப்பிய வரலாற்றை எடுத்தால் பல கலைஞர்களின் ஆளுமைகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுப் பெருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். முக்கியமான உதாரணம் மொசார்த் தான். நவீன ஐரோப்பிய பண்பாட்டின் தொடக்கப்புள்ளி என்றுகூட அவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அங்கே ஆரம்பித்த இந்தக் கலைஞனைச் சித்தரிக்கும் போக்குத்தான் இன்று எழுத்தாளர்களின் வரலாற்றை எழுதுவதில் வந்து நிற்கிறது.  


[மொஸார்த்]


 நமக்கு நவீன இலக்கியம் ஐரோப்பிய கற்பனாவாத இலக்கியங்கள் மூலம் அறிமுகமாகியது. அதனுடன் சேர்த்தே கலைஞன் என்ற நவீன உருவகமும் இங்கே வந்திருக்கவேண்டும். அந்த உருவகம் இங்கிருந்த எழுத்தாளர்களை எப்படிக் கிளர்ச்சி கொள்ளவைத்திருக்குமென ஊகிக்க முடிகிறது. ஆரம்பகால வங்க எழுத்துக்களிலெல்லாம் கலைஞனான  இலட்சியக் கதாநாயகனை நாம் காண்கிறோம். இந்த இலட்சியவாத நோக்கு பின்னர் கலைஞர்களை அந்த வெளிச்சத்தில் சித்தரித்துக்கொள்ள நமக்குத் தூண்டுதலாகியது. கலைஞர்களை நாம் சித்தரித்துக்கொண்டதை சமூகமே சேர்ந்து நிகழ்த்திக்கொண்ட புனைவு என்று சொல்லலாம். உதாரணமாக நாம் பாரதியை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று பாருங்கள். பாரதியின் பாடல்களின் உணர்ச்சிநிலைகள் வழியாக நாம் அவரை உணர்ச்சிகரமானவராக, கற்பனாவாதப்பண்பு கொண்டவராக, கொந்தளிப்பானவராக உருவகித்துக்கொள்கிறோம். அவரது கருத்துக்கள் வழியாக அவர் ஒரு தேசியவாதி, தமிழ்ப்பற்றுக் கொண்டவர், சக்தி வழிபாட்டாளர்,பின்னர் அத்வைதி என்று புரிந்துகொள்கிறோம். அதன் பின் பாரதியின் வாழ்க்கைவரலாற்றை இந்தக் கோணத்தின் வழியாகத் தேடிக் கிடைக்கும்  பலவகையான தகவல்கள் வழியாகப் புனைந்து உருவாக்கிக் கொள்கிறோம். இலக்கியம் அளிக்கும் சித்திரத்தை வைத்தே வாழ்க்கை வரலாற்றுச் சித்திரத்தைத் தொகுத்துக்கொள்கிறோம். பலசமயம் இலக்கியம் அளிக்கும் சித்திரத்தைக் கொண்டு வாழ்க்கைவரலாற்றின் இடைவெளிகளைக் கற்பனை மூலம் நிரப்பிக்கொள்கிறோம். நிறைய சந்தர்ப்பங்களில் இலக்கியம் அளிக்கும் சித்திரத்துடன் பொருந்தும்படியாகப் பாரதியின் வாழ்க்கையைக் கற்பனைமூலம் மிகைப்படுத்தவும் செய்கிறோம். பாரதி காந்தியைச் சந்தித்தது போன்ற பல நிகழ்ச்சிகள் பின்னர் இவ்வாறு உருவாக்கப்பட்டவை. பாரதியின் வாழ்க்கையைச் சித்தரித்து அவரது ஆளுமைச்சித்திரத்தை உருவாக்க  அப்படி எத்தனை நூல்கள் தொடர்ச்சியாக ஐம்பதாண்டுக்கால இடைவெளியில் எழுதப்பட்டுள்ளன என்று பார்த்தால் ஆச்சரியம் ஏற்படும். கற்பனை அம்சம் குறைவான நூல்கள் என்று யதுகிரி அம்மாளின் 'நான் கண்ட பாரதி' ,கனகலிங்கத்தின் 'எனது குருநாதர்' போன்ற நூல்களைச் சொல்லலாம். கற்பனை அம்சம் கூடிய சித்தரிப்புகள் என வராவின் 'மகாகவி பாரதி' என்ற வரலாற்றையும் பரலி சு நெல்லையப்பரின் 'மகாகவி பாரதி வரலா'ற்றையும் சொல்லலாம். இந்தப்போக்கு கடைசியில் படைப்புக்களில் இருந்து உருவாக்கப்பட்ட பாரதியே பாரதியின் ஆளுமை என்ற  இறுதிநிலையை அடைவதை ராஜம் கிருஷ்ணனின் 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்ற நூலில் காணலாம்.


[பாரதி]


 இவ்வாறுதான் சென்றகாலத்தைய இலக்கிய ஆளுமைகளின் சித்திரங்கள் முழுக்க நமக்கு உருவாக்கியளிக்கப்பட்டிருக்கின்றன. மேலைநாட்டில் இலக்கிய ஆளுமைகளின் குணசித்திரத்தைப் படிப்படியாகப் பல்வேறு நூல்கள் மூலம் உருவாக்கிக் கொள்வதென்பது முக்கியமான இலக்கியச் செயல்பாடாகவே உள்ளது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, பால்ஸாக்,மாப்பசான், மார்சல் புரூஸ்ட் போன்ற எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சித்தரிப்புகள்,பல தலைமுறை எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டவை. அதன்பின் வந்த நவீனத்துவ இலக்கிய காலகட்டம்,எழுத்து என்பதை எழுத்தாளனின் ஆளுமையின் ஒரு முகம் மட்டுமே என்று எண்ணியது. ஆகவே இக்காலகட்டத்தில் கலைஞனின் தனிவாழ்க்கை என்பது மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. உதாரணமாக எந்தக் காஃப்கா கதையும் காஃப்காவின் தனிவாழ்க்கை அளவுக்குப் பேசப்பட்டதில்லை. அவரது தனிவாழ்க்கையை மனதில் கொள்ளாமல் அவரது எந்தக் கதையும் வாசிக்கப்பட்டதில்லை இக்கணம் வரை இவ்வாறு கலைஞனின் ஆளுமையைப் புனைவதும் மறுபுனைவுசெய்வதும் ஆராய்வதும் மேலைநாட்டு இலக்கியத்தில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. வின்செண்ட் வான்கா, போன்ற ஓவியர்கள்,  விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவ அறிஞர்கள் எக்காலமும் வாழ்க்கைவரலாற்று ஆய்வாளர் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில்கூட இன்றும் அப்போக்கு தொடர்கிறது. தமிழிலக்கியத்தில் கற்பனாவாதச் சாயலுடன் கலைஞனைக் கதாநாயகனாக ஆக்கிய படைப்புகளுக்கு மூன்று சிறந்த முன்னுதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று, 'மோகமுள்'. பாபுவை இசைக்கலைஞனாகச் சித்தரிப்பதனூடாக அவனை மிகமிக நுட்பமானவனாக உணர்ச்சிகரமானவனாகக் காட்டுகிறார் தி.ஜானகிராமன். பாபுவின் நெகிழ்ச்சிகள் எல்லாமே இசைமூலமே சொல்லப்படுகின்றன என்பது அந்நாவலை மிக விரும்பத்தக்கதாக ஆக்கியது. இன்னொரு உதாரணம் கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்'.சிக்கல் ஷண்முகசுந்தரம் என்ற இசைக்கலைஞனின் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது இந்நாவல். அன்றைய இசைமேதையான ராஜரத்தினம்பிள்ளையின் சாயலில் உருவாக்கப்பட்டது இக்கதாபாத்திரம். ராஜரத்தினம்பிள்ளை அவரது கலைச்செருக்கு,சுதந்திர மனப்பான்மை,கட்டற்ற உணர்ச்சிநிலைகள் ஆகியவற்றுக்காகப் பெரும்புகழ்பெற்றவர். அந்த ஆளுமைக்கூறுகளை இந்நாவல் வெற்றிகரமாக அதன் நாயகனுக்கும் அளிக்கிறது. இவ்விரு நாவல்களும் கிட்டத்தட்ட ஷீன் கிறிஸ்தோஃப் ஆற்றியபணியையே இங்கே செய்தன என்பதை காணலாம். அவை நவீன ஜனநாயக சூழலுக்காக கலைஞன் என்ற முன்னுதாரணச் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன.பழைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிரபுக்களின் சேவகர்களாக இருந்த கலைஞர்கள் அக்காலகட்டத்தில் மக்கள்நாயகர்களாக மாற ஆரம்பிக்கிறார்கள். அதற்கு இந்தச் சித்தரிப்புக்கள் பேருதவி செய்கின்றன. அதற்கு அன்று பேருருவம் கொண்ட அச்சு, காட்சி ஊடகங்களும் உதவின.இக்காலகட்டத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா, ராஜரத்தினம் பிள்ளை போன்ற வசீகரமான கலைஞர்களின் ஆளுமைகள் வாய்மொழிப்பேச்சுக்களில் பரவிய துணுக்குச்செய்திகள் மூலம் சமூகமனத்தில் கட்டி எழுப்பப்பட்டன. இக்கலைஞர்களின் ஆளுமையில் மிக வசீகரமாக இருந்தது இவர்களின் மீறல்தான். மரபை இவர்கள் மீறிய விதம். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை உதறி முன்னால்சென்ற விதம். ஏன் ஒழுக்கத்தை மீறி எழுந்த விதமும்தான். மக்கள் அவர்கள் விழைந்த மீறல்களைச் செய்பவர்களாக இவர்களைப்புனைந்தார்கள். உண்மையில் தில்லானா மோகனாம்பாளுக்குப் பின்னரே ராஜரத்தினம்பிள்ளை பெரும் ஆளுமையாகச் சமூக மனதில் வளர்ந்தெழுந்தார் என்கிறார்கள். இருக்கலாம். அது ஒரு கொண்டு-பெற்று வளரும் உறவு. வாய்மொழிக்கதைகள் இலக்கியமாகின்றன. இலக்கியம் வாய்மொழிக்கதைகளை வளர்க்கிறது இவ்விரு நாவல்களையும் இன்று வாசித்தால் இருமைகள் கட்டமைக்கப்பட்டு அந்த வேற்றுமைகள் மூலம் இலட்சியக்கலை, இலட்சியக்கலைஞன் என்ற படிமம் செதுக்கி உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தியாகையரின் சாயலில் உருவாக்கப்பட்ட ரங்கண்ணா என்ற இசையாசிரியனின் நேரடி வாரிசாக பாபு உருவாக்கப்படுகிறான். இசையை வணிகக்கலையாக ஆக்கும் ராமு,பாபுவுக்கு நேர் எதிரான ஆளுமையாகக் கட்டமைக்கப்படுகிறான். அதேபோலப் பல இருமைகளைத் தில்லானா மோகனாம்பாள் உருவாக்குகிறது. பழமையில் தேங்கிப்போய் ஒரேமாதிரியாக வாசிக்கும் மரபுக்கு நேர் எதிராகத் திருவாரூர் பாரிநாயனத்தை எடுத்து வாசிக்கும் சண்முகசுந்தரம் உருவாக்கப்படுகிறான். இன்னொருபக்கம் அன்று வந்துகொண்டிருந்த ஆங்கில இசைக்கு எதிரான தேசிய இசையின் கலைஞனாகக் காட்டப்படுகிறான். இன்னொரு பக்கம் 'டப்பாங்குத்து' இசையான ஜில்ஜில் ரமாமணியின் இசைக்கு எதிரானவனாக அவன் நிறுத்தப்படுகிறான்.  


[ராஜரத்தினம் பிள்ளை ]


  அக்காலகட்டத்து வெற்றிகரமான வணிகநாவலாக இருந்த, ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனின் 'சித்திரப்பாவை',கலைஞனை ஒட்டுமொத்த சமூகத்தையே வழிநடத்தும் இலட்சியவாதியாக மேலும் முன்னெடுத்துச் செல்வதைக் காணலாம். அதன் கதாநாயகன் அண்ணாமலை ஒர் ஓவியன். அன்றைய வெகுஜன வாசகர்களுக்குப் புரியும்படியாக ஒரு எளிமையான உருவப்படம் தீட்டும் ஓவியனாகவே அகிலன் அவனைக் காட்டியிருக்கிறார். 'இன்றைய வாழ்க்கையின் அகப்புற நிலைகளை ஆராய்ந்து, எதிர்காலத்துக்கான மனப்போக்கை உருவாக்கும் கடமை எனக்கிருப்பதாக நான் நம்புகிறவன்' என சித்திரப்பாவையின் முன்னுரையில் அந்நாவலின் நோக்கத்தைச் சொல்லும் அகிலன்,அந்த உயர் இலட்சியவாதத்தின் மனிதவடிவமாகவே அண்ணாமலை என்ற கலைஞனைப் படைத்திருக்கிறார். தமிழில் நவீனத்துவ எழுத்து அதன் தொடக்கத்தை நிகழ்த்தியபோதே அறிவுஜீவியும் கலைஞர்களுமான கதாநாயகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். இதற்கும்  இரு முக்கியமான உதாரணங்கள். ஒன்று, ஜெயகாந்தனின் 'பாரீஸுக்குப் போ' அதில் இசைக்கலைஞன் இசைக்கலைஞனாக அல்ல, நவீனத்துவத்துக்கே பிரதிநிதியாக வெளிப்படுகிறான். பழமையுடன் போரிடுபவனாக, புதிய உலகின் விழுமியங்களை உள்வாங்கித் தெளிவாக முன்வைப்பவனாக அவன் காட்டப்படுகிறான். சுந்தர ராமசாமியின் 'ஜே ஜே சிலகுறிப்புகள்' இன்னொரு உதாரணம். சுந்தர ராமசாமி கலைஞனை ஒரு இலட்சியவாதியாகக் காட்டவில்லை. அவனுடைய சஞ்சலங்களையும் தத்தளிப்புகளையும் தேடலையும் முதன்மைப்படுத்துகிறார். நவீனத்துவத்துக்கு இரு முகங்கள். ஒன்று, பழைய மதிப்பீடுகளை மறுத்து வாதாடும் சீர்திருத்த வேகம். அதற்கு ஜெயகாந்தனின் நாவல் உதாரணம். இன்னொன்று, நவீன யுகத்தில் தன் இருப்புக்காகத் தேடி விழுமியங்களுக்காக அலைமோதும் இருத்தலியல். அதற்கு ஜேஜே சிலகுறிப்புகள் உதாரணம் இவ்வாறு கிட்டத்த இரு நூற்றாண்டுகளாகப் பண்பாட்டுவெளியில் எழுத்தாளன் என்ற படிமம் தொடர்ந்து செதுக்கப்பட்டுவருகிறது. அது ஒரு நவீனத்தொன்மம் என்று கொள்வதே சிறந்தது. அதற்குப் பலவகையான சமூகப்பயன்பாடுகள் இருந்தன. ஆகவேதான் அது தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டது. இன்றும் நீடிக்கிறது. முதலில் அது கருத்தியல்செயல்பாடு, கலைகள், இலக்கியம் ஆகியவற்றுக்குச் சமூக அறத்தை உருவாக்கி நிலைநாட்டுவதில் உள்ள பங்கைச் சமூக மனதில் நிலைநாட்டுகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கலைஞனுக்கு இந்த இடம் இல்லை என்பதை நினைவுகூரவேண்டும். அவன் அரசசபைகளிலோ அல்லது தேர்ந்த சில ரசிகர்களிடமோ மட்டுமே தொடர்புகொண்டுவந்தான். அவன் ஜனநாயக யுகத்தில் இவ்வாறு  பொதுக்கருத்தை உருவாக்கும் ஆளுமையாகக் கட்டமைக்கப்படுகிறான். பாரதி,கல்கி, ஜெயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த செல்வாக்கு இவ்வாறு உருவானதே. ஒருபடைப்பை வாசிப்பதற்கு எப்படியோ அந்த படைப்பாளியின் ஆளுமை என்ற ஒரு மானசீகச் சித்திரம் தேவையாகிறது. வாசகன் அந்த ஆளுமையுடன் கொள்ளும் அந்தரங்கமான உரையாடலே வாசிப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. அந்த எழுத்துக்களின் உச்சநிலைகளை மட்டுமே தொடுத்து உருவாக்கப்பட்ட ஆளுமையாகவே அந்தச் சித்திரம் இருக்க முடியும். அது ஓர் இலட்சிய பிம்பமே. எழுத்தாளனின் உண்மையான அன்றாட ஆளுமை அந்தப் பணியை ஆற்றமுடியாது. அந்த வாசகன் எழுத்தாளனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு அன்றாடவாழ்க்கையிலும் அவ்வெழுத்தாளன் அல்லது கலைஞன் கொள்ளும் உச்சகட்ட வெளிப்பாட்டு நிலைகளையும் மனநிலைகளையும் நேரில் கண்டாலொழிய. அது அனைவருக்கும் சாத்தியமல்ல. ஆகவே பொதுவெளியில் எழுத்தாளன் கலைஞன் என்ற ஒரு நவீன தொன்மம் எப்போதுமே நீடிக்கும். அதன் ஒளியில் எல்லா எழுத்தாளர்களும் வாசகனால் கட்டமைக்கப்படுவார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் உண்டு. ஆனால் எழுத்தாளனிடம் அந்த ஆளுமையை அப்படியே எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். அப்படி எதிர்பார்க்காமல் இருக்கலாம். அல்லது எழுத்தாளனைச் சந்திக்காமல் இருக்கலாம். இதில் இன்னொன்று உண்டு. போலிஎழுத்தாளர்கள் மிக எளிதாக அந்தப் பொதுபிம்பத்தைத் தங்கள் ஆளுமையாக ஆக்கி நடிப்பார்கள். அப்படி எத்தனையோ போலிகளை நாம் மேடைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இதை ஒரு விதி என்றேகூட சொல்லுவேன். ஓர் எழுத்தாளனை நேரில் சந்திக்கும்போது உங்கள் மனதில் உள்ள சித்திரம் மாறவில்லை என்றால் அவன் எழுத்தாளன் அல்ல, நடிகன்.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2011 11:30

சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,


எனக்கு வயது நாற்பத்துமூன்று. என்னுடைய பிளஸ்டூ வயதிலே நான் சுஜாதா வாசித்தேன். அப்போது என்னுடைய ஆதர்சம் அவர்தான். பின்னாடி ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷம் கழித்து வாசித்தபோது 'என்ன இது'ங்கிற மாதிரித்தான் இருந்தது. ஆனாலும் வாசிக்கவும் முடிந்தது. தொடர்ந்து ஒரு மூன்றுநாவல் வாசித்தபின் சலிப்பாகிவிட்டது.


உங்கள் இணைய தளத்தில் சுஜாதாவைப்பற்றி நடக்கும் சர்ச்சைகளை வாசிக்கிறேன். பலருக்குக் கோபம் இருக்கிறது என்று இணையத்தில் வாசித்தேன். அப்படி கோபம் கொள்பவர்களிலே கொஞ்சம் சாதியபிமானமும் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவர் என் அலுவலகத்திலேயே மிகவும் கோபமாகப் பேசினார். ஆனால் எல்லாருமே அந்த இளமைப்பருவ வாசிப்பிலேயே நின்றுபோனார்கள் என்றும் நினைத்தேன். மேலே எதையும் வாசிக்கும் மனநிலை இல்லாமல் சுஜாதாவை வைத்துக்கொள்ளக் கஷ்டப்படுகிறார்கள்.


இப்போது ஒரு இருபது வயசாகக்கூடிய பையன்களுக்கு சுஜாதா பிடித்திருக்குமா என்று தோன்றியது. சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். அப்படி இல்லை. அவர்களுக்கு சுஜாதா பெரிதாக சுவாரசியமாக இல்லை. சுஜாதாவின் கதைகளிலே உள்ள டெக்னிக் எல்லாம் அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறது. நடையும் பெரிதாக ஈடுபாடு இல்லை. நான் சொல்வது பெரிய இலக்கிய வாசகர்களை இல்லை. சும்மா ஆங்கிலநாவல் வாசிக்கும் வாசகர்களைத்தான். சுஜாதாவைக் கட்டுக்கட்டாக வாங்கிக்கொண்டு போகிறவர்கள் சின்னவயசிலே அவரைப் படித்தபிறகு வேறு எதுவுமே பெரிதாகப் படிக்காமல் இப்போது மீண்டும் படிப்பவர்கள்தான்.


சமீபத்திலே சுஜாதா என்று தேடியபோது இந்த இணைப்பு கிடைத்தது. http://crackedpots.co.in/?p=1136 , http://crackedpots.co.in/?p=1146. இந்தப்பையன் சின்னவயசு. யாரோ சொல்லிக் கேள்விப்பட்டு சாதாரணமாக சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்து ஏமாற்றம் அடைந்திருக்கிறான்.அவனை அதற்காக நிறையப்பேர் திட்டியிருக்கிறார்கள்.சுஜாதா இளையதலைமுறைக்கான எழுத்தாளர் என்ற பில்ட் அப் கலைகிறதே என்றுதான் திட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன். சுஜாதாவின் எழுத்துக்களை ஏன் எல்லாரும் வாசிக்கிறார்கள் என்றால் அதைப்பற்றித்தான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதை வாசிக்கப் பெரிதாக சிரமப்படவும் தேவையில்லை என்பதுதான் காரணம்


சீனிவாசன் கண்ணன்


அன்புள்ள சீனிவாசன்,


சுஜாதா ஒரு வாசிப்புக்கட்டத்தை நிரப்பக்கூடியவர். அந்த இடத்தில் அவர் கொஞ்சநாள் இருப்பார் என்றே நினைக்கிறேன். அதை வாசித்து வளர்ந்தவர்களின் மலரும் நினைவுகளில் இன்னும் அரைநூற்றாண்டு கூட நீடிக்கலாம். நீங்கள் சொல்வதுபோல அவரது எழுத்து இளைஞர்களைக் கவர்கிறதா என்பது எனக்கே சந்தேகம்தான்.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2011 11:30

August 13, 2011

சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு

அன்புள்ள ஜெ,  உங்கள் பார்வைக்கு:


http://www.kalachuvadu.com/issue-140/page43.asp


சிங்காரவேலு முதலியாரின் நடத்தைக்குக் காரணம்  அப்போது இங்கு வளர்ந்து வந்த திராவிட இயக்கக் கருத்தியலா அல்லது அவரது இயல்பான காழ்ப்புணர்வா தெரியவில்லை.


தமிழக  பௌத்த இயக்கங்களுக்கும்  திராவிட இயக்கத்திற்கும் இடையே ஏதாவது ஊடுபாடுகள்  நடந்ததா என்றும் தெரியவில்லை.


அன்புடன்,

ஜடாயு




http://www.tamilhindu.com/author/jatayu/


 


 



 


[சிங்காரவேலர்]


 அன்புள்ள ஜடாயு


வரலாற்றாசிரியர் டி. டி. கோசாம்பியின் அப்பா தாமோதர தர்மானந்த கோஸாம்பி அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறார். அவர் எழுதிய 'பகவான் புத்தர்' என்ற நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.


சிங்காரவேலு முதலியாரின் நடத்தை புரிந்துகொள்ளத்தக்கதே.  அது முதலியார்கள், வேளாளர்களின் அன்றைய மனநிலை.அந்த மனநிலை அதே அளவுக்குக் கேரள நாயர்களிடமும் இருந்தது, என் குடும்பத்திலும்.


காரணம் அவர்கள் நிலப்பிரபுத்துவ சாதி. ஒரு காலகட்டம் வரை பிராமணர்கள் சில பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் அவர்களின் ஆதிக்கத்துக்குக் கீழேதான் இருந்தார்கள். அறிவார்ந்த , மதம் சார்ந்த ஓர் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தாலும் நேரடியான நில, பொருளியல் அதிகாரம் இவர்களிடமே இருந்தது


ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி அளித்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு  பிராமணர் மேலே சென்று அதிகாரத்தைக் கையாள்பவர்களாக ஆனார்கள். கணிசமான பிராமணர்கள் அக்ரஹாரத்தின் கொடுமையான வறுமையில் இருந்து ஆங்கிலக் கல்வி மூலம் மேலே சென்றிருப்பதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்டால் அறியலாம்.


ஆனால் நிலப்பிரபுத்துவசாதிகள் நிலத்தை நிரந்தரச் சொத்து என நினைத்தன. வேலைசெய்வதைக் கௌரவப்பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டன. ஆனால் உருவாகிவந்த முதலாளித்துவ அமைப்பு அளித்த வாய்ப்புகள் காரணமாகக் குறைந்த கூலிக்கு அடிமைச்சாதியினரின் உடலுழைப்பு கிடைப்பது தடைப்பட்டதனால் வேளாண்மை நஷ்டமாக ஆரம்பித்தது. இது,நிலப்பிரபுத்துவ சாதிகளை பொருளியல் ரீதியாக கீழே தள்ளியது. இவ்வீழ்ச்சி ஒரு ஐம்பது வருடங்களில் நடந்திருப்பதைக் கணிசமான வேளாள-முதலியார் குடும்பங்களில் காணலாம். என் குடும்பமே ஒரு அரிய ஆவணம்.


கூடவே இரு உலகப்போர்களில் பிரிட்டன் விதித்த கடுமையான வரிகளும் அவர்களை அழித்தன. அந்த வரிகளை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்பதனால் கசப்பு இன்னும் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகப் பிராமணர்களின் எழுச்சி இச்சாதியினரை எரிச்சலூட்டியது. தமிழகத்திலும் கேரளத்திலும் உருவான பிராமணவெறுப்பின் ஊற்றுமுகம் இதுவே. பின்னர் வரலாற்றிலும் அதற்கான காரணங்களைத் தோண்டி கண்டுபிடித்தார்கள்.


முன்னரே புதியதாக மேலெழுந்து வந்த பிராமணர்கள்,தங்களைத் தனிமையாகவும் மேலானவர்க்கமாகவும் காட்டிக்கொள்ளவும் முயன்றனர். தங்களைத் தமிழ்ப்பண்பாட்டில் இருந்து விலக்கிக்கொண்டு சம்ஸ்கிருதப் பண்பாட்டைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்வது அவர்களின் மோஸ்தராகியது.  அதற்கேற்ப அக்காலகட்டத்தில் இந்தியவியல் சம்ஸ்கிருதத்தின் தொன்மையையும் சம்ஸ்கிருத நூல்களின் தத்துவ, இலக்கிய ஆழத்தையும் தொடர்ந்து வெளிக்கொண்டுவந்தபடி இருந்தது. ஆங்கிலம் வழியாக அவற்றை மேலோட்டமாக அறிந்த பிராமணர்கள் அம்மரபை அவர்களுடையதெனச் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்.


அத்துடன் அன்றைய சமூகச்சூழலில் பதவியையும் செல்வத்தையும் அடைந்த படித்த பிராமணர்களில் கணிசமானவர்கள் மிகமிகப்பிற்போக்கான சிந்தனைகளைப் பொதுவெளியில் முன்வைப்பவர்களாக இருந்தார்கள். சாதியத்தையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தக்கூடியவர்களாக, பிறசாதியினரின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்களாக, அதற்கு முடிந்தவரை தடைகளைச் செய்பவர்களாக இருந்தார்கள். அக்கால சுதேசமித்திரன் போன்ற இதழ்களைக் கண்டாலே இதை உணரலாம். இன்று அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஊட்டும் கருத்துவெளிப்பாடுகளைக் கொண்ட கடிதங்கள் அவை.


இன்று இத்தனை முன்னேற்றத்துக்குப் பின்னரும்கூட ஒரு சாராரில் அந்த மேட்டிமைநோக்கும் காழ்ப்பும் நீடிப்பதை உங்கள் தமிழ்ஹிந்து இணைய இதழின் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தொடர்ந்து காணத்தானே செய்கிறோம். படித்த, இலக்கியம் எழுதும் இளைஞர்களில்கூட ஒருசாராரிடம் அந்த மனநிலை வலுவாக நீடிப்பதை நான் காண்கிறேன்.


தமிழக முற்போக்குசிந்தனைகளில் பிராமணர்களின் இடம் முக்கியமானது. ஆனால் அவாறு உருவாகிவந்த முற்போக்கு எண்ணம் கொண்ட பிராமணர்களுக்கு முதல்பெரும் தடையாக இருந்தவர்கள் இந்தப் பிற்போக்கு பிராமணச்சமூகத்தினரே.  அன்று பொதுவெளிக்குக் கல்வி,வணிகம் மூலம் எழுந்து வந்த எல்லா சாதியினரும் பிராமணர்களின் நேரடி அடக்குமுறைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானவர்களாக இருந்தார்கள். அதற்கான கசப்புகள் அவர்களிடம் சேர்ந்துகொண்டே இருந்தன.


ஆகவே பிராமண வெறுப்புடன் தங்கள் இடத்தைத் தேடிய வேளாளர்களும் முதலியார்களும் செட்டியார்களும் ஒரு தமிழ்த்தொன்மையைக் கட்டமைத்தனர். சைவ மீட்பு இயக்கம் உருவானது. அது சம்ஸ்கிருத சார்பற்ற தூய தென்னக மதம் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது. அது பிஷப் கால்டுவெல் உருவாக்கிய ஆரிய-திராவிட இனவாதக் கொள்கையுடன் முடிச்சிடப்பட்டது. அதற்கு,இந்தியவியல் கண்டுவெளியிட்ட நூல்களும் ஏடுகளில் இருந்து அச்சிலேற்றப்பட்ட நூல்களும் உதவின.


[image error]


[ஆச்சாரிய டி டி கோஸாம்பி ]


இந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலுமுதலியார். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன. அதற்கான பின்னணியையே மேலே சொன்னேன்.


எல்லாத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்,அன்று உருவாகிவந்த அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் கையகப்படுத்தி,அவற்றையும் தங்கள் பழமைவாத நோக்குகளாலும் குறுகிய இனக்குழு அரசியலாலும் நிரப்பினர் என்பதே உண்மை. தமிழக காங்கிரஸ், ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சபை, ஆரியசமாஜம் ஆகியவற்றின் வரலாற்றில் பிராமணர்களின் இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்திருப்பதை காணலாம். முதலில் இலட்சிவாதிகளான அர்ப்பணிப்புள்ள பிராமணர்களே உள்ளே வந்து அவ்வியக்கத்தின் முன்னோடிகளாகிறார்கள். ஆனால் அவர்களை முன்னால் நிறுத்திக் குறுகிய சாதியவாதிகள் பின்னர் அவ்வியக்கத்தைக் கையகப்படுத்துகிறார்கள் என்பது நடைமுறை உண்மை


சிங்காரவேலு முதலியாருக்கு அவரது சாதிச்சூழல் சார்ந்தும், அன்றைய சமூக அதிகாரப்போட்டி சார்ந்தும் பிராமணர் மேல் கசப்பும் வெறுப்பும் இருந்திருக்கலாம். அத்துடன் அன்று சிறிய அளவில் உருவாகி வந்த நவபௌத்த இயக்கங்களையும் பிராமணர்கள் கைப்பற்றித் தங்கள் குறுங்குழு அரசியலுக்குள் தேக்கிவிடுவார்களோ என அவர் அஞ்சியிருக்கலாம். கோஸாம்பியை அவர் ஐயப்பட்டது அதனால்தான் என நான் நினைக்கிறேன்.


கோஸாம்பி நவபௌத்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வருத்தமானதே. ஆனால் தமிழக ராமகிருஷ்ண இயக்கத்தின் உச்சகட்ட ஆளுமையான சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண மடத்தில் நீடிக்க முடியாமல் பிராமண அரசியலால் வெளியேற்றப்பட்டார் என்ற வரலாற்று உண்மையையும் நாம் பார்க்கவேண்டும். நித்ய சைதன்ய யதி அவர் பிராமண நிர்வாக அமைப்பால் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைச் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார்.


[image error]

சித்பவானந்தர்


ஆக, இந்த விஷயத்தை அக்காலகட்டத்தின் சமூக அதிகாரத்துக்கான போட்டியின் ஒரு விளைவாகவே காணவேண்டும். சிங்காரவேலு முதலியாரைத் தமிழக பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்கும் முன்னோடியாகச் சொல்லலாம்.பிராமணர்களுக்கு எதிரான உயர்சாதியினரின் ஒருங்கிணைவு பிராமணரல்லாதோர் இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என பல வடிவங்களைப் பெற்றது. அது முதலியார்களும் நாயர்களும் நாயுடுகளும் சேர்ந்து உருவாக்கிய சுயமேம்பாட்டு இயக்கமே. பின்னர் அது சுயமரியாதை இயக்கமாகவும் திராவிட இயக்கமாகவும் பரிணாமம் கொண்டது.


திராவிட இயக்கம் ஓர் உத்தியாகப் பிற்படுத்தப்பட்டோர் அரசியலைக் கையில் எடுத்தது. அதன் சைவ- உயர்சாதி அரசியல் கோட்பாட்டைத் தக்கவைத்தபடியே பிற்படுத்தப்பட்டோர் அரசியலுக்குள் சென்று இன்றைய வடிவை அடைந்தது.


கேரளத்தில் இருந்த பிராமண வெறுப்பு,மன்னத்து பத்மநாபன் போன்ற காந்திய சீர்திருத்தவாதி சாதிச்சீர்திருத்தத்தில் ஈடுபட்டு நாயர் சாதி பொருளியல் வெற்றியை அடைந்ததும் காணாமலாகியது. நாராயணகுரு மூலம் ஈழவ சாதி பொருளியல் வெற்றியும் சமூக வெற்றியும் அடைந்தபோது முழுமையாக மறைந்தது.அதுவே இயல்பான போக்காக இருக்கவேண்டும். தமிழகத்தில் அந்த வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட திராவிட இயக்கம் அதை ஒரு வசதியான கருத்தியலாக நீட்டித்துக்கொண்டிருக்கிறது.


இன்று அந்தக்கருத்தியல்,பிராமணர்களைப் பொது எதிரியாகக் கட்டமைத்துக் காட்டி தலித்துக்களைத் தங்களுக்குக் கீழே வைத்துக்கொள்ளப் பிற்படுத்தப்பட்டோர் செய்யும் ஓர் உத்தியாகச் செயல்பட்டுவருகிறது. அந்தத் தேவை இருக்கும் வரை அது நீடிக்கும். இன்னொருபக்கம் அதையே காரணமாகக் காட்டித் தங்களை 'அவமதிக்கப்பட்டோர்' என்று சித்தரித்துக்கொண்டு பிராமணர்களில் ஒருசாரார் தங்கள் பழமைவாத வெறுப்புமனநிலையை நீட்டித்துக்கொள்ளவும் அது காரணமாகிறது.


வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, காழ்ப்புகளும் தனிப்பட்ட உணர்வுகளும் இல்லாமல், நிதானமாகப் பார்க்கவேண்டிய ஒரு தளம் இது.


ஜெ





சித்பவானந்தர் வாழ்க்கை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2011 11:30

கோவை புத்தகக் கண்காட்சியில் பேசுகிறேன்

கோவை புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 12 முதல் 21 வரை கோவை காந்திபுரம் வ.உ.சி பூங்கா வாசலருகே கைத்தறிக் கண்காட்சியகத்தில் நடைபெறுகிறது. தினமும் 11 மணிமுதல் கண்காட்சி நிகழும்


அதில் 17-8-2011 அன்று மாலை ஆறு மணிக்கு நான் பேசவிருக்கிறேன்.


18 -8-2011 மாலை ஊர்திரும்புவேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2011 11:30

August 12, 2011

அசோகமித்திரன் என்னைப்பற்றி…

அசோகமித்திரனின் பேட்டி சூரியக்கதிரில்.  வழக்கம்போலக் கருத்துக்கள் எனப் பெரிதாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் இருந்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்றவை என்றோ அதிகப்பிரசங்கித்தனம் என்றோ தோன்றுகின்றன. நான் எடுத்த பேட்டியிலும் அதைச் சொல்லியிருக்கிறார்.


என்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அது அவர் எப்போதும் சொல்வது. குறைவாகச் சொல்வதையே கலையாகக் கொண்ட மேதையிடமிருந்து வரும் அச்சொற்கள் இச்சூழலில் நான் பெற்ற பெரும் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன்.


கடைசிப்பத்திதான் அசல். அமி சீரியஸாகச் சொல்கிறாரா வேடிக்கையாகச் சொல்கிறாரா எனப் பேட்டி எடுத்தவர் குழம்பியிருப்பார். நான் வெடித்துச் சிரித்துவிட்டேன்.





அசோகமித்திரன் பேட்டி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2011 11:30

பிரபஞ்சனும் சங்ககாலமும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


உயிர்மையில் வெளிவரும் திரு.பிரபஞ்சனின் சங்க காலகட்டத்தின் தமிழர் வாழ்வு பற்றிய கட்டுரைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


அவர் அக் காலத்தில் 'பெண்கள் ஒன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய நிலையில் இல்லை, கவிஞர்கள் பாட ஒரு பொருளாகவே இருந்தனர்' போன்ற கருத்தினை முன் வைக்கிறார். இப்போதிருக்கும் காலகட்டத்தினைக் கொண்டு அக்கால வாழ்வினை ஆழ்ந்து விமரிசிப்பது சரியா? உலகில் எந்த ஒரு பண்டைய சமூகத்திலாவது பெண்கள் சம அந்தஸ்துடன் அனைத்து நிலையிலும் நடத்தப்பட்டிருக்கிறார்களா? அல்லது அவர் நம்மை நம் 'சங்க காலம் பொற்காலம்' என்ற 'மாயை'யிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று எண்ணி எழுதுகிறாரா?


ராம்குமார் சாத்தூரப்பன்


 



பிரபஞ்சன்


 சங்ககாலம் பொற்காலம் என்ற தரப்பையும் சரி , சங்க காலம் அடக்குமுறைக்காலம் என்ற தரப்பையும் சரி, இருவகை எல்லைநிலைகளாகவே நான் நினைக்கிறேன். பிரபஞ்சன் முறையாகத் தமிழ் கற்றவர். ஆராய்ந்தவர். அவருடன் நான் நேரிலும் விரிவாக இதைப்பற்றி உரையாடியிருக்கிறேன். அவரது நோக்கம் இன்றுள்ள சில பிரமைகளை உடைப்பதே என நினைக்கிறேன்.


நாற்பதுகளில் வேதகாலம் பொற்காலம் என்ற வடக்கத்திய கோஷத்துக்கு மாற்றாக இங்கே ஒரு கோஷமாக சங்ககாலம் பொற்காலம் என்று சொல்லப்பட்டது. சங்க காலத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை, மூடநம்பிக்கைகள் இல்லை என்று  மேடைகள் தோறும்  ஓங்கிச்சொல்லப்பட்டு சமூக மனத்தில் நிறுவப்பட்டது. பாடநூல்களில் பதிக்கப்பட்டது.


பின்னர் வந்த ஆய்வாளர்களால் அதெல்லாமே விருப்பக்கற்பனைகளே என நிறுவப்பட்டன. சங்ககாலத்தில் சாதி இருந்தது, பெண்ணடிமைத்தனம் இருந்தது, மூடநம்பிக்கைகள் இருந்தன, ஏன் அடிமைமுறையே இருந்தது என்பதைச் சங்ககாலப்பாடல்களே காட்டுகின்றன.


ஆனால் உடனே அதை ஒரு 'கெட்ட' காலம் என்று சொல்வதும் பிழையாகிவிடும். அது வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் ஒரு ஆரம்ப காலகட்டம். நாற்றங்கால்காலகட்டம் எனலாம். நம் இன்றைய பல்வேறு பண்பாட்டுக்கூறுகளின் வேர்கள் அங்கே உள்ளன.


 



முதல் விஷயம் சங்க இலக்கியங்களை நேரடியான வரலாற்றுப்பதிவுகளாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான். புறப்பாடல்களில் வளர்ந்த நகர நாகரீகத்தையும், அரசியல் சிக்கல்களையும் காண்கிறோம். அகப்பாடல்களில் அரைப்பழங்குடி வாழ்க்கையைச் சித்தரிக்கக் காண்கிறோம். புறப்பாடல்களில் தொன்மையான பாடல்களுக்கும் பிற்காலப் பாடல்களுக்குமிடையே மூன்று நூற்றாண்டுக்கால இடைவெளி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


புறப்பாடல்கள் காட்டும் சங்ககாலம்,வேளிர்கள் முதலிய சிறுகுடி மன்னர்களின் காலகட்டம் மெல்ல மெல்லப் பெருங்குடி மன்னர்களால் அழிக்கப்பட்டு மைய அரசுகள் உருவாகி வரும் பரிணாமத்தில் உள்ளது. ஆகவே ஒரு பக்கம் பழங்குடி மரபுகள் உள்ளன. மறுபக்கம் நகர நாகரீகம் உள்ளது. பழங்குடி மரபுகள் அகத்துறையில் பண்பாட்டு அடையாளங்களாகக் கலைகளில் நீடித்தன- இன்றும் மன்னர்கள் கலைகளில் இருப்பதைப்போல.


இந்தக்காலகட்டத்தில் ஒருபக்கம் ஒரு நிலவுடைமைச்சமூகத்தின் எல்லாச் சுரண்டல்களும் அடக்குமுறைகளும் இருந்தன. அப்படி சுரண்டலும் அடக்குமுறையும் இல்லாமல் மக்களிடம் உருவாகும் உபரிநிதி மைய அரசுக்குச் சென்று குவிய முடியாது. அப்படிக்குவிந்தால்தான் அரசுகள் வலுப்பெற முடியும். வலுப்பெற்றால்தான் பண்பாடு வளர முடியும். இது சிக்கலான ஒரு வட்டம்.


ஆகவே நிலவுடைமைச்சமூகத்தில் எங்கும் நிகழ்வதுபோல மக்கள் பிறப்பு, உற்பத்தி முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் அடுக்கதிகாரத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். தொன்மையான குலப்பிரிவினைகள், இனக்குழுப்பிரிவினைகள் சாதிகளாகி அவை,மேல் கீழ் என்ற அடுக்குநிலைக்குள் வைக்கப்பட்டன. தந்தைவழிச் சொத்துரிமை உருவாகி நிலைபெற்றது. பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன. காரணம் வாரிசுரிமை என்ற ஒன்று இருந்தால் கருப்பை காவலுக்குள் வைக்கப்படவேண்டும்.


அதேசமயம் பழங்குடி வாழ்க்கையின் பல விழுமியங்கள் உருமாறியேனும் நீடித்தன. பெண்கள் குடும்ப அமைப்புக்குள் வரையறுக்கப்பட்டு நிறுத்தப்பட்டாலும் அவர்களின் உரிமைகளும் கௌரவங்களும் குலஆசாரங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டன.


 



இரு விஷயங்களை மட்டும் சுட்டலாம். ஒன்று, சங்க இலக்கியங்கள் பெண்களைத் தூக்கிக்கொண்டு சென்று மணப்பதைச் சித்தரிக்கவில்லை. அவளே விரும்பி உடன்போக்கு நிகழ்ந்தால்தான் உண்டு. ஆனால் வட இந்திய தொல் இலக்கியங்களில் காந்தருவமணம் எப்போதுமே பேசப்பட்டுள்ளது.


இரண்டு, பௌத்தமும் சமணமும் வட இந்தியாவிலிருந்தபோது பெண்களை மையமாக்கியவையாக இருக்கவில்லை.  அவை பெண்களின் முக்தியை, தெய்வநிலையைப் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் அவை வந்ததுமே பெண்மையச் சித்தரிப்புக்குள் வந்தன. கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி என பௌத்தசமண காவியங்களின் பெருங்கதாபாத்திரங்கள் பெண்களே. அவர்களைத் தெய்வங்களாகவும் இறுதி மீட்பு அடைபவர்களாகவும் அவை சித்தரித்தன. [இந்த அம்சத்தை அயோத்திதாசர் சுட்டிக்காட்டுகிறார். இதைப்போன்ற சிலவற்றை வைத்தே தமிழ்பௌத்தம் என்ற தனி பௌத்த தரிசனத்தை அவர் நிறுவ முயல்கிறார்.]


அதற்குக் காரணம் இங்கிருந்த சமூகச் சூழ்நிலை. பெண்மையச் சமூகமாக இது இருந்திருக்கவேண்டும். அன்றைய ஆழ்படிமங்களும் மனநிலைகளும் நீடித்திருக்கவேண்டும். பல்வேறு பெண்தெய்வங்கள் இங்கே வழிபடப்பட்டிருக்கவேண்டும். ஆகவே இந்த மதங்கள் அம்மக்களை உள்ளிழுக்கத் தங்கள் தரிசனத்தை மாற்றியமைத்துக்கொண்டன. இது பெண்களுக்கு நாட்டுப்புறமரபில், அடிமட்டநிலையில் அன்றிருந்த மதிப்பின் அடையாளமென்றே நான் நினைக்கிறேன். அது ஒருவேளை உயர்மட்டத்தில் இல்லாமலிருந்திருக்கலாம்.


சங்ககாலம் பற்றி எல்லாவகையான பார்வைகளும் வரட்டுமே. விவாதம்மூலம் தெளிவுகள் உருவாகட்டும்.


பி.கு இவ்விவாதத்தில் மிக முக்கியமாகக் கொள்ளத்தக்கவை பேரா ராஜ்கௌதமன் எழுதிய இரு நூல்கள். 'பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்' , 'ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்' [தமிழினி வெளியீடு]


 


 


ஜெ


 


 


ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2011 11:30

August 11, 2011

சில்லறை-கடிதம்

அன்பின் ஜெ.எம்.,


விவேக் ஷன்பேக்கின் சில்லறை ,எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும்,அதிசயத்தையும் கொடுக்கும் கதையாக அமைந்து விட்டது.

காரணம் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் அம்மாவுக்கு இதே போல-ஒன்று விடாமல்-கணக்கெழுதும் பழக்கம் இருந்திருக்கிறது.அவர்கள் தலைமை ஆசிரியையாக இருந்தவர்.'50களில் அவருக்குக் கிடைத்த 60,70 ரூபாய் சம்பளத்தைச் சிக்கனமாய்ச் சேமித்துக் குடும்பத்தை நடத்த வேண்டும் என்னும் எண்ணத்தில் அந்தப் பழக்கம் ஏற்பட்டதா..அல்லது அம்மாவின் மூதாதையர் யாருக்கும்(நான் யாரையும் பார்த்ததில்லை)அந்தப் பழக்கம்  உண்டா,தெரியாது.

அம்மா 76 வயதில் நோய்ப் படுக்கையில் விழும் வரை இப் பழக்கம் அவர்களிடம் தொடர்ந்ததோடு நானும் அவ்வாறே செய்யுமாறு அவர்களால் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன்..


கதையில் வரும் அதே வகையில் அவர்கள் எதிலும் எந்தக் கஞ்சத் தனமும் காட்டியதில்லை;எதை வேண்டுமானாலும் வாங்கலாம்;நம்மால் முடிந்த அளவு செலவழிக்கவும் செய்யலாம்;ஆனால் எதற்கும் எழுதப்பட்ட கணக்கு வேண்டும் என்பதை உறுதியான கொள்கையாகச் சாகும் வரை அவர்கள் கடைப் பிடித்தார்கள்.


அவர்கள் உயிரோடு இருந்த சமயங்களில் அந்தமாதிரிக் கணக்கு வழக்குகளில் நான் சற்று நீக்குப் போக்குக் காட்டினாலும் -அது என்னவோ தெரியவில்லை,அவர்களின் மரணத்திற்குப் பிறகு -அது கட்டாயம் செய்தாக வேண்டிய ஒரு விஷயம்..அதுவும் அவர்களின் நினைவாக- என்பது போன்ற அசட்டுத்தனமான அப்செஷன் என்னைத் தொற்றிக் கொண்டது..அதன் பிடியில் 12 ரூபாய்க் கணக்குக்கு விழி பிதுங்கிப் போனது போல நானும் முட்டி மோதித் தவித்த சில கணங்கள் உண்டு..


இப்போது 5,6 ஆண்டுகளாகத்தான் – அந்தக் காரியம்,அவர்கள் நினைவுக்கு ஆற்றும் அஞ்சலி என்பது போன்ற மூடத்தனத்திலிருந்தும்,அசட்டுத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்று நிம்மதிக் காற்றை சுவாசிக்கிறேன்…

சுகமாகப் பறப்பது போல உணர்கிறேன்..


இக் கதை என் சொந்த வாழ்வின் பிரதியாகவே எனக்குப் படுகிறது…


அதைப் பகிரவே இக் கடிதம்.


எம்.ஏ.சுசீலா


புதுதில்லி


 


அன்புள்ள சுசீலா


நானும் பலகுடும்பங்களில் இவ்வழக்கத்தைப் பார்த்திருக்கிறேன். நான் என்ன நினைத்திருந்தேன் என்றால் ஏதோ ஒருவகையில் இது பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட குடும்பங்களில் உள்ள மனப்பழக்கம் என. ஆனால் பின்னர் பல தனிநபர்களைப்பார்க்கும்போது பலதலைமுறைகளாக இவ்வழக்கம் இருப்பது தெரியவருகிறது. வியாபாரச்சாதிகளில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும் வழக்கம் இருந்தது. 1700களைச்சேர்ந்த பைசாக்கணக்குகள் இன்றும் கிடைக்கின்றன.


நடுத்தர வர்க்கத்தின் எப்போதுமுள்ள பாதுகாப்பின்மை உணர்வே இதற்கு அடிப்படை. 1800களில் நடுத்தரவர்க்கம் பெரும்பஞ்சங்களின் விளைவாகப் பயங்கரமான அடிகளைப் பெற்றிருக்கலாம். அதிலிருந்து உருவான பாதுகாப்பின்மையாக இருக்கலாம். மிக அவசியத் தேவைக்குமேல் உள்ள ஒவ்வொரு காசையும் சேமிப்பவர்களாகவே நான் என்னைச் சுற்றிலுமுள்ள மனிதர்களைப் பார்க்கிறேன். என் அலுவலக வாழ்க்கையில் நான் கண்ட பலர் உணவு உடை உறைவிடம் மற்றும் அவசிய சமூகக் கடமைகளுக்கு மேலாக மனமகிழ்ச்சிக்காக எதையுமே செலவிட்டறியாதவர்கள். அதுவே இந்திய மனநிலை.


அந்தமனநிலையை உதறுவதே புதிய பொருளியல் விடுதலை என்று சொல்லப்படுகிறது என்று ஷன்பேகின் கதை காட்டுகிறது போலும். அதை உதறியதுமே அள்ளி வீசிச் செலவழிக்கும் மனநிலை வருகிறது. அந்த வீடு மற்றும் சீனப்படங்களைப்பற்றிய குறிப்பு . அந்த மனநிலை வந்ததுமே சம்பாதிக்கும் வெறி வருகிறது. இரவுபகலில்லாத உழைப்பில் சிக்கிக்கொள்ளும் மனநிலை வாய்க்கிறது. ஒட்டு மொத்தச் சமூகமே பொருளியல் வெறியில் இயந்திரவேகத்தில் செயல்பட ஆரம்பிக்கிறது


சில்லறைமனநிலையை உடைத்து வரும் விடுதலை. சில்லறை என்று எதைச்சொல்கிறார் என்பதுதான் கதை


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2011 11:30

மேற்குநாடுகளின் ஆதிக்கம் வீழ்கிறதா?

மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் பெறக் காரணமான ஆறு முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த ஆவணப்படங்கள் மூலமாக எனக்குப் பல புதிய விஷயங்கள், நிகழ்வுகள் தெரிய வந்தன. நாம் அடிக்கடி விவாதிக்கும் பல விஷயங்களைத் தொட்டுச் செல்வதால் இவை அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறேன்.


ஆனால் இந்த ஆவணப்படங்கள் சொல்வது தான் உண்மையான சரித்திரம் என்று நான் நினைக்கவில்லை. White Man's Burden என்ற கருத்து பல இடங்களில் உறுத்துகிறது. இருப்பினும் இது ஒரு முக்கியமான முயற்சி என்றே நான் நினைக்கிறன். குறிப்பாக சரித்திரம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றிப் புதிதாகத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு.


http://www.youtube.com/watch?v=arhBShGlZjI


 


சத்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2011 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.