Jeyamohan's Blog, page 2293

August 21, 2011

ஜான்சன் சில பாடல்கள்

அன்பு ஜெ,


ஜான்சனைப்பற்றிய உங்களுடைய சுருக்கமான குறிப்பு கண்டேன். மனம் நெகிழ்ந்தேன். நானும் உங்கள் ஊருக்கு பக்கம்தான். களியிக்காவிளை. ஜான்சனின் சிறந்த எல்லா பாடல்களையும் சொல்லமுடியாதுதான் என்றாலும் சில மிகமுக்கியமான பாட்டுகளை விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். அதை சுட்டிககட்டியிருக்கிறேன்


ஸ்ரீதர்


கல்கத்தா


கண்ணீர் பூவின்றே கவிளில் தலோடி



மௌனசரோவரம் ஆகே உலஞ்ஞு



மதுரம் ஜீவாம்ருத பிந்து



பழந்தமிழ்பாட்டுணரும்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2011 11:41

காந்தியின் தேசம்

என் நண்பர் ஒருவர் சொன்னார். ஓர் இடதுசாரி அவரிடம் சொன்னாராம்,  ராமச்சந்திர குகா எழுதிய 'இந்தியவரலாறு-காந்திக்குப்பிறகு' என்ற இருபாகங்களினாலான சமகால வரலாற்று நூல் ஓர் இந்துத்துவநூல் என்று.ஒருவேளை ராமச்சந்திர குகா இந்த விமர்சனத்தை வேறெங்கிருந்தும் சந்தித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் 'ஏன் அப்படிச் சொல்கிறார்?' என்று .அது, 'இந்தியாவைப் புகழ்ந்து பேசுகிறது'என்று அந்த நண்பர் சொன்னாராம். நம் இடதுசாரிகள் அளவுக்கு விசித்திரமான பிறவிகளை வேறெங்கும் பார்க்கமுடியாது. இங்கே இடதுசாரி அரசியல் என்பது எந்த மதத்தை விடவும் ஆழமான மூடநம்பிக்கைகளால் ஆனது. வாசிப்புக்கும் சிந்தனைக்கும் எதிரானது.


இந்தியா உடைந்து சிதறவேண்டுமென இடதுசாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் அதை சீனாவின் ஆதிக்கத்துக்குள் எளிதில் கொண்டுசெல்ல முடியும். எளிதில் சிவப்பாக்க முடியும் திபெத் போல நேபாளம் போல. ஒருங்கிணைந்த இந்தியா என்றைக்குமே சீனாவுக்கு எதிரான சக்தி. அவர்களின் வரலாற்றுத்தர்க்கம் இது உடையும் என்றே சொல்கிறது. ஏன் உடையவில்லை என்று புரியவில்லை


கிழக்கு வெளியீடாக ஆர்.பி.சாரதி மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள குகாவின் நூலின் சாராம்சமான கேள்வி உண்மையில் அதுதான். இந்தியா பெருங்குழப்பத்தில் கலவரத்தில் அவநம்பிக்கையில் பிறவிகொண்ட தேசம். 1947ல் நிகழ்ந்த கலவரங்களைக்  கண்ட எந்த அரசியல் நிபுணரும் இந்தியா சில ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்காது என்றுதான் நினைத்திருப்பார். உண்மையில் தேசியத்தலைவர்களுக்கே அந்த எண்ணம் இருந்திருக்கலாம்.  இந்தியாவைச்சுற்றி இருந்த எல்லா நாடுகளும் ஜனநாயகத்தை இழந்தன. பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவைச் சந்தித்தன.



[ராமச்சந்திர குகா]


ஆனால் இந்தியா அரைநூற்றாண்டுகளாக ஜனநாயக நாடாகவே நீடிக்கிறது.  மெதுவாக என்றாலும் உறுதியான பொருளியல் வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. அதன் அத்தனை சிக்கல்களுடனும் போராட்டங்களுடனும் இன்னும் உயிருள்ள ஒரு பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது ஏன் என்ற கேள்வியைத்தான் இந்தப் பெரிய நூல் மிக விரிவாக நுட்பமான தகவல்களினூடாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா உடைந்து சிதறுவதற்கான எல்லா நியாயங்களும் இருக்கிறது, உடைந்து சிதற எந்த வாய்ப்பும் இல்லை என்றே இந்நூல் முடிகிறது. அந்த விந்தையை இதுவரையிலான அரசியல் வரலாற்றைக் கறாரான தகவல்கள் வழியாக விவரிப்பதனூடாகக் கண்டடைய முயல்கிறது.


ஆகவே நம் இடதுசாரி மூடநம்பிக்கையாளர்களின் கசப்பு விளக்கக்கூடியதுதான். அவர்கள் இந்தியாவின் வரலாறு,பண்பாடு, சமகால ஜனநாயகம்,பொருளியல் அனைத்தைப்பற்றியும் மிக இருண்ட ஒரு சித்திரத்தையே உருவாக்கிவந்திருக்கிறார்கள். ரஜனிபாமி தத்தின் 'இன்றைய இந்தியா' முதல் இன்று வரும் நாளிதழ் கட்டுரைகள் வரை அந்த மனநிலையைக் காணலாம். அவர்கள் அளிக்கும் அத்தனை தகவல்களையும் இன்னும் நுட்பமாகவும் விரிவாகவும் திரட்டி அளிக்கிறார் குகா.  அதேசமயம் கடந்த அறுபதாண்டுக்காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மேற்கத்திய தாராளவாத அரசியல் ஆய்வாளர்களும் இடதுசாரி ஆய்வாளர்களும் இந்தியா பற்றி முன்வைத்த மிக இருண்ட ஆருடங்கள் எப்படிப் பொய்த்துப்போயின என்று சொல்கிறார். இன்றுவரை அவர்கள் உருவாக்கும் எதிர்மறைச்சித்திரம் எத்தனைதூரம் உள்ளீடற்றது என உடைத்துவைக்கிறார்.


அதேபோல இன்று இந்தியா பற்றி அதே மேலை ஆய்வாளர்கள் முன்வைக்கும் சாதகமான ஆருடங்களையும் தகவல்களின் அடிப்படையில் நிராகரிக்கிறார் குகா. இந்நூல் உண்மையில் இந்தியாவைப் புகழ்வதோ வாழ்த்துவதோ அல்ல. சொல்லப்போனால் இந்நூல் காட்டுமளவுக்கு இருண்ட சித்திரங்களை உள்நோக்கமும் குரோதமும் கொண்ட மேலைஆய்வாளர்களும் இடதுசாரிமூடநம்பிக்கையாளர்களும்கூட முன்வைத்ததில்லை. இந்நூல் அதனூடாக ஓடும் அந்த வசீகரமான மர்மத்தை மட்டுமே அறியமுயல்கிறது.


குகா அவரது நூலை இப்படி முடிக்கிறார். ' இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்திய அரசியல்சட்ட்டம் உருத்தெரியாத அளவு திருத்தப்படாவிட்டால், தேர்தல்கள் உரிய காலத்தில் முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டால், மதச்சார்பின்மை பெரும்பாலும் பரவியிருந்தால்,நாட்டுமக்கள் தாங்கள் விரும்பும் மொழியில் எழுதவும் பேசவும் முடிந்தால், ஒருங்கிணைந்த சந்தையும் சுமார்திறமைகொண்ட ஆட்சிப்பணி அமைப்பும் இருந்தால், கூடவே சொல்ல மறந்துவிட்டேனே இந்திப்படங்கள் பார்க்கப்பட்டுப் பாடல்கள் கேட்கப்பட்டால் இந்தியா நிலைத்துவாழும்'


குகாவின் பட்டியலில் முதலாவதாகச் சொல்லப்படுவது இந்திய அரசியலமைப்புச்சட்டம்தான். ஒரேநாடாக இந்தியாவை இன்றும் காப்பாற்றிவருவதில் அரசியலமைப்புச்சட்டத்தில் இருக்கும் தொலைநோக்குப்பார்வை,ஜனநாயகப்பிடிப்பு,நடைமுறை நோக்கு மற்றும் இலட்சியவாதத்துக்கு பெரும் முக்கிகியத்துவம் உண்டு. இன்றும் இந்தியாவின் எந்த அறச்சிக்கலும் அரசியலமைப்புச்சட்டத்தின் நோக்கங்களுக்கு இசைவாக விளக்கப்படுமென்றால் நியாயமாகவே அதன் எல்லா குடிகளாலும் உணரப்படுகிறது. குகாவின் நூல் முழுக்க அதற்கான ஆதாரங்களைக் காணலாம்.அந்த அரசியல்சட்டம், அடிபப்டையில் காந்தி அரைநூற்றாண்டுகளாகப் போராடிவந்த விழுமியங்களுக்காக நிலைகொள்வதாக உறுதிகொண்ட ஒன்று. . அரசியலமைப்புச்சட்டத்தின் சிற்பிகளான அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழுவுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.


ஒரு தேசமாக இந்தியாவை நிலைநாட்டுவதில் காந்தி என்ற குறியீட்டுக்கு, காந்தியம் என்ற கோட்பாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் குகாவின் நூல் பலநூறு ஆதாரங்களை சாதாரணத் தகவல்களாகவே அளித்துச்செல்கிறது. உதாரணமாக இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல்.1952இல் இந்தத் தேர்தலை இந்தியா சந்திக்கும்போது அப்போதுதான் அரசியல்சட்டம் எழுதிமுடிக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் பெற்று ஐந்தாண்டு ஆகாத தேசத்தில் பலபகுதிகளில் சுதேசிமன்னர்கள் அப்போதும்கூட செல்வாக்குடன் இருந்தனர். மக்களில் கணிசமானவர்களுக்கு இந்தியா என்ற தேசம் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஜாதியால் மதத்தால் இனத்தால் நிறத்தால் மொழியால் பிரிந்து கிடந்த பலநூறு மக்கள்கூட்டங்களின் பெருந்தொகையாக இருந்தது இந்தியா. அனைத்துக்கும் மேலாக ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளும் கல்வியறிவு பெரும்பாலானவர்களுக்கு இருக்கவில்லை


ஆகவே இந்தியாவின் முதல் தேர்தல் பெரியதோர் அற்புதமாக இருந்தது. அது வெற்றிகரமாக நிகழ்ந்ததே இன்றும் நீடிக்கும் இந்திய ஜனநாயகத்துக்கான அடிப்படையை அமைத்தது. இந்திய அரசியல்சட்டத்துக்கு இந்தியமக்கள் அளித்த அங்கீகாரம் அது. அந்த அங்கீகாரத்தை இமயம் முதல் குமரி வரை ஒரே குரலில் மிகமிகப்பெரும்பான்மை வாக்குகள் வழியாக இந்திய மக்கள் அளித்ததற்குக் காரணமாக அமைந்தது காந்தி என்ற ஒற்றைச்சொல். அதைத் தன் அடையாளமாக முன்வைத்த நேருவின் ஆளுமை. அதை முதல் தொகுதியிலேயே மிகத்தெளிவாக முன்வைக்கிறார் குகா


இரண்டாவது பகுதி,நேருவின் மரணத்துடன் ஆரம்பிக்கிறது. முதல் பகுதி காட்டிய நேரு உண்மையில் ஆட்சியாளருக்கு அவசியமான நடைமுறை நோக்கு குறைவான இலட்சிவாதி மட்டுமே. அவரது வாழ்க்கையின் இறுதிக்காலம் மனமுடைந்த நிலையில் இருந்தது. சீனா இந்தியாமேல் தொடுத்த போர்,தன் வசீகரத்தின் மீதும், தார்மீகத்தின் அடிப்படை வல்லமை மீதும் நேருவிற்கு இருந்த நம்பிக்கையை குலைத்தது. அவரைக் கிட்டத்தட்ட செயலற்றவராக ஆக்கியது. பெரும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர் ஐம்பதுகளில் ஆரம்பித்த பெருந்தொழில்மயமாக்கம் வறுமை ஒழிப்புக்குப் பெரிய அளவில் உதவவில்லை. கிராமப்புறங்களில் சுதந்திரத்தின் மறுமலர்ச்சி உருவாகவில்லை என்பதை நேரு கண்டார். வாழ்நாளெல்லாம் காந்தியக்கொள்கைகளை எதிர்த்து நவீனமயமாதலை ஆதரித்துவந்த நேரு அந்நம்பிக்கையை இழந்தார். காந்திய வழிமுறைகளை நோக்கிச் செல்லவும் மனமில்லாதவராக இருந்தார். 1964ல் அவர் மறைந்தார்



வழக்கம்போல நேருவின் மரணத்துக்குப்பின் இந்தியா அழியும் என ஆருடங்கள் கிளம்பின. இந்தியாவின் ஜனநாயகமே நேரு என்ற மனிதரின் ஆளுமையின் கவர்ச்சியால் உருவான ஒரு கொப்புளம் மட்டுமே என்றனர் ஆய்வாளர்கள். அதற்கேற்ப இந்தியா பஞ்சத்தால் இருண்டு கிடந்தது. மொழிவழி மாநிலப்பிரிவினைக்கான கிளர்ச்சிகள் மனக்கசப்புகளாக ஆகிப் பிராந்தியவாதங்களாக வளர்ந்திருந்தன. ஆனால் காங்கிரஸ் எளிதாகவே அடுத்த தலைவரைக் கண்டுகொண்டது. இந்தியாவின் அமைப்பு,சிறு கசங்கலுமில்லாமல் தலைமை மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.


லால்பகதூர் சாஸ்திரி பற்றிப் பொதுவாக இந்திய ஊடகம் மிக எதிர்மறையான சித்திரத்தையே அளித்து வருகிறது. நானும் அச்சித்திரத்தை வெகுநாள் கொண்டிருந்தேன். அவர் திறமையற்ற கோழையான கூழைக்கும்பிடு ஆசாமி என்ற சித்திரம். இச்சித்திரத்தை உருவாக்கி நிலைநிறுத்தியதில் காங்கிரஸுக்குப் பெரும்பங்குண்டு. நேருவுக்குப்பின் நேரடியாக இந்திரா காந்திக்கு வரும் மனநிலையில் உதித்த தந்திரம் அது. அத்துடன் நம் இதழாளர்களின் மேட்டுக்குடிச்சிந்தனைக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்குடிப்பிறப்போ ஆங்கில ஞானமோ தோற்றப்பொலிவோ உள்ளவரல்ல சாஸ்திரி . மிக எளிய மனிதர். ஒரு சாதாரண 'தேசி'.


குகா காட்டும் லால்பகதூரின் சித்திரமே வேறு. அவர் ஒரு சமரசமாகவே தலைமைக்கு தேர்வுசெய்யப்பட்டாரென்பது உண்மை. பிடிவாதக்காரரும் அரசியல் அடித்தளம் உடையவருமான மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதற்கான குறுக்குவழி அது. ஆனால்,மிகச்சில மாதங்களிலேயே அரசையும் ஆட்சியையும் தன் முழுப்பிடிக்குக் கொண்டுவந்தார் லால் பகதூர். ஒருகட்டத்தில் அவர் உண்மையான இந்திய ஆட்சியாளராக ஆனார். அவரது காலகட்டத்தில்தான் இந்தியா மேல் முதன்முதலாகப் பாகிஸ்தான் படை எடுத்தது.


ஒரு முதன்மையான ஆட்சியாளர் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார் லால் பகதூர்.  உண்மையிலேயே தகுதியான மனிதர்களிடம்  போரை ஒப்படைத்தார். தெளிவான விரைவான ஆணைகளை அளித்தார். நாட்டு மக்களுக்கும் ராணுவத்துக்கும் ஊக்கமூட்டும் அரசியல் கோஷத்தை உருவாக்கி அதை முன்னிறுத்தினார் [ஜெய் ஜவான் ஜெய் கிசான்] முந்தைய சீனப்போரின்போது நேருவால் இவை எவற்றையுமே செய்யமுடியவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இந்தியா அடைந்த போர்வெற்றி இந்தியாவின் தேசியத் தன்னம்பிக்கையை மிக ஆழமாக நிலைநாட்டியது. சீனப்போரின் சோர்விலிருந்து இந்தியா அதிசயகரமாக மீண்டு வந்தது


இந்தியாவில் உணவுப்பஞ்சங்களை சமாளிக்கப் பசுமைப்புரட்சியை ஆரம்பித்து வைத்து அதன் ஆரம்பவெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவரும் சாஸ்திரிதான். இன்னும் சொல்லப்போனால் வெறும் இரண்டு வருடங்களில் நேருவின் பதினைந்து வருட ஆட்சியின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நடைமுறைத்தீர்வு காண சாஸ்திரியால் முடிந்தது என்பதே உண்மை. அதற்குக் காரணம், அவர் இந்திய சாமானியர்களின் பிரதிநிதி என்பதே. நேருவையும் பின்னர் வந்த இந்திராவையும்போல இந்திய சாமானிய வாழ்க்கையை அறியாத உயர்குடியினர் அல்ல அவர்.


லால்பகதூர் மேலும் பத்து வருடம் உயிருடனிருந்திருந்தால் நேரு குடும்ப ஆதிக்கம் இந்தியாவில் உருவாகியிருக்காதென்பதில் ஐயமில்லை.  ஆனால் 1966ல் சாஸ்திரி இறந்தார். அன்று காங்கிரஸின் பொறுப்பில் இருந்த கு.காமராஜ் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் மத்தியஸ்தங்களுக்குத் தலைமை வகித்தார். அப்போதும் செல்வாக்கு மிக்க போட்டியாளராக இருந்த மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதே முக்கியமான நோக்கமாக இருந்தது. மொரார்ஜிதேசாயை சக்திவாய்ந்த மும்பை- அகமதாபாத் தொழில்கூட்டணி ஆதரித்ததனால் பிற தொழில்வட்டங்கள் அனைத்தும் அவரை எதிர்த்தன. ஆகவே காமராஜ் நேருவின் மகளான இந்திராகாந்தியை முன்னிறுத்த முடிவெடுத்தார்.



[லால் பகதூர் சாஸ்திரி]


காமராஜ் அப்படி முடிவெடுக்கப் பல காரணங்கள் இருந்தன. நேருவின் பெயர் தேர்தல் வெற்றிகளுக்கு உதவும் என நினைத்திருக்கலாம். அதைவிட வெறும் நாற்பத்தொன்பது வயதான அனுபவமற்ற பெண்மணியான இந்திரா,தன் கட்டுப்பாட்டில் இருப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அதன்வழியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய ஒரு அநீதியை காமராஜ் இழைத்தார் என்பதே உண்மை. பின்னர் தன் வாழ்நாளெல்லாம் அதற்காகக் காமராஜ் வருந்திக் கண்ணீர் சிந்தினார்


ராம் மனோகர் லோகியாவால் குங்கி குடியா [முட்டாள் பொம்மை] என வர்ணிக்கப்பட்ட இந்திரா,படிப்பறிவு குறைந்தவர். மோசமான மாணவியாக அறியப்பட்டவர். வாசிப்போ சிந்தனையோ அற்றவர். தந்தையின் நிழலாக இருந்துவந்தது மட்டுமே அரசியல் தகுதியாகக் கொண்டவர். தாயில்லாமல் வளர்ந்து மேட்டிமைப்போக்கு கொண்ட விஜயலட்சுமிபண்டிட் போன்ற அத்தைகளால் அவமதிக்கப்பட்டு முரட்டுத்தனமும் தனிமையுணர்ச்சியும் கொண்டவராக உருவானவர்.


ராமச்சந்திர குகாவின் இந்நூல்,ஆரம்பம் முதலே இந்து பழைமைவாதத்தை இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நோயாகச் சித்தரிக்கிறது. இந்தியாவின் பிறவிக்கணத்தில் காந்தியைக் கொலைசெய்தது அது. இந்தியாவின் ஆரம்ப வரலாறு முழுக்க அது உருவாக்கிய அழிவுகள் தேசத்தைப் பின்னுக்கிழுத்தன. அதற்கு நிகரான அழிவுச்சக்தியாக இந்திராகாந்தியைக் காட்டுகின்றன,குகா விமர்சனமே இல்லாமல் வைத்துச்செல்லும் நேரடித் தகவல்கள். தன்னுடைய பாதுகாப்பின்மையுணர்வால் இந்திராகாந்தி காந்தி, அம்பேத்காரும் நேருவும் உருவாக்கிச்சென்ற இந்தியாவின் ஜனநாயகக் கட்டுமானத்தை அழித்தார். இந்தியாவில் பொதுநிர்வாகத்துறை நியமனங்களிலும் ஜனநாயக அமைப்புகளிலும் அரசியல் செல்வாக்கைச் செலுத்திய முதல் ஆட்சியாளர் இந்திராதான். ஆட்சியின் மையத்தில் சதிகார துதிபாடிக் கும்பல் ஒன்றை அமர்த்தி அனைவரையும் அவர்களுக்கு அடிபணிய வைத்தது அவர்தான்.


இந்தியாவின் முதல்பெரும் பிரிவினைக்கோரிக்கையானது உண்மையில் ஜம்முகாஷ்மீரின் டோக்ரி மக்களின் போராட்டத்தை இந்து போராட்டமாக உருமாற்றிக் காஷ்மீர் முஸ்லீம்களின் அவநம்பிக்கையை எழுப்பிய பாரதிய ஜனசங்கத்தின் சிருஷ்டி எனக் காட்டுகிறார் குகா. அன்றுவரை இந்தியாவின் பகுதியே காஷ்மீர் என்று சொல்லிவந்த ஷேக் அப்துல்லாவின் குரல் மாறுபட ஆரம்பித்தது அப்போதுதான். ஆனால் அஸ்ஸாம், பஞ்சாப், மேகாலயா, மணிப்பூர் என எல்லாப் பிரிவினைக்கோரிக்கைகளும் இந்திராகாந்தியின் உருவாக்கங்களே. அவரால் பிராந்திய தன்னதிகாரங்களை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மக்களின் ஜனநாயகத் தேர்வுகளை எதேச்சாதிகாரமாக அவர் கலைத்து ஒடுக்கினார். உணர்வுகளை அவமதித்தார்.


அதைவிட மோசமாக, இந்திரா மாநில உணர்வுகளை அழிக்க அதைவிடத் தீவிர மாநிலப்பிரிவினையுணர்வுக்ளை உருவாக்கினார், சிறந்த உதாரணம் பிந்திரன் வாலே. ஒரு ராட்சதனை உருவாக்கி அவனைஅழித்து அரசியல் லாபம் பெறுவதே அவரது வழியாக இருந்தது. அதற்கு தேசம் பெரும் விலை கொடுக்க நேர்ந்தது. இந்திராகாந்தியே அதற்குப் பலியானார். 


இந்திய அரசியல் சூழலில் அரசியல் விவாதங்களை சீரழித்ததில் முன்னோடியான அரசியல்வாதி அவர்தான். தன் கொள்கைக்கு எதிரான எந்தப் பேச்சையுமே தேசத்துரோகம் , அன்னியநாட்டுச்சதி, தன்னைக்கொல்ல முயற்சி என்று வசைபாடுவதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக, இன்று இந்தியாவில் நீடிக்கும் ஆயுதபேர ஊழல்களுக்கு அடித்தளமிட்டதே அவர்தான்.


அனைத்துக்கும் மேலாக நெருக்கடி நிலை. இந்திராவின் நெருக்கடிநிலைமூலம் இந்தியாவில் உருவானது வெறும் அடக்குமுறை மட்டுமல்ல, இந்த தேசத்தை எப்படி ஏகாதிபத்தியமயமாக்குவதென்ற முன்னுதாரணமும்கூடத்தான். நாளை என்றாவது இந்தியா சர்வாதிகார நாடாகுமென்றால் அதற்கான வழிகாட்டி இந்திராதான். இந்தியாவின் எல்லா அமைப்புகளையும் வெற்றிகரமாகச் சீரழித்ததுடன் இன்றும் இந்தியாவில் நீடிக்கும் போலீஸ் அடக்குமுறைக்கு இந்திய ஆயுதப்படைகளைப் பழக்கியதும் நெருக்கடிநிலையே.


எல்லா சர்வாதிகாரிகளும் அவர்களின் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையால் அழிகிறார்கள். இந்திரா அவரது நெருக்கடிநிலையை ரத்து செய்து தேர்தலைச் சந்தித்ததும் அதனால்தான்.  இந்தியாவின் ஜனநாயகம் திருப்பியடித்தது. இந்தியாவின் பிரச்சினைகள் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுபவை, ஆனால் ஜனநாயகம் இயற்கையானது என நிரூபித்த தேர்தல் அது. அதன் நாயகர்களாக உருவாகி வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் அழியாத சித்திரத்தை இந்நூல் காட்டுகிறது.


ஜெயப்பிரகாஷ் நாராயணன்


இந்திய ஜனநாயகம் என்பது காந்தியின் கொடை என்பதை மீண்டும் நிரூபித்தது ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் பங்களிப்பு. காந்தியர்களான அவர்களே இந்திய ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டுவந்தார்கள். பின்னும் இந்தியாவின் பெரும் மக்களியக்கமான சூழியலியக்கங்கள் காந்தியவாதிகளாலேயே உருவாக்கப்பட்டன. அந்த மரபு இன்று அண்ணா ஹசாரே வரை நீடிக்கிறது.


வரலாறு அளித்த வாய்ப்பை ஜனதா கட்சி வீணடித்ததை குகா சுருக்கமான தகவல்கள்மூலம் விளக்குகிறார்.இரு விஷயங்கள் கவனத்துக்குரியவை. நெருக்கடிநிலைக்காலத்தில் செய்யப்பட்ட கட்டாயக் கருத்தடை மற்றும் காவல்துறை ஒடுக்குமுறை மூலம் தலித்துக்களும் இஸ்லாமியர்களும் காங்கிரஸைக் கைவிட்டார்கள். ஆகவேதான் இந்திரா தோற்றார். ஆனால் ஜனதா வந்ததுமே காந்தியவாதிகளான அதன் வழிகாட்டிகள் கழற்றிவிடப்பட்டார்கள். இரு புதிய அதிகார சக்திகள் உருவாகி வந்தன. இந்துக் கட்சியான பாரதிய ஜனசங்கம் ஜனதாவின் முக்கியமான அம்சமாக இருந்தது. லோகியாவின் சோஷலிசக் கட்சியின் துண்டுகள் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் முகங்களாக மாறி ஜனதாக்கட்சியின் இரண்டாவது பெரிய அம்சமாக இருந்தன.


ஜனதாகட்சியின் ஆட்சி பலவகைகளில் முக்கியமானது என்று குகா காட்டுகிறார். முக்கியமாக எளிதில் ஜனநாயகப்படுகொலை செய்யமுடியாதபடி அரசியல்சட்டம் திருத்தப்பட்டது. ஜனநாயக அமைப்புகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டது. இந்திரா உருவாக்கிய பல தேசிய அழிவுகள் சீர்செய்யப்பட்டன. ஆனால் அதிகாரம் பெற்ற இந்துத்துவசக்திகள் இக்காலகட்டத்தில் இந்தியாவின் வரலாற்றில் மிக அதிகமான மதக்கலவரங்களை உருவாக்கினர். கலவரம் எதற்காக யாரால் தொடங்கப்பட்டிருந்தாலும் கடைசியில் இஸ்லாமியரே பாதிக்கப்பட்டனர் என்று குகா காட்டுகிறார்


அதேபோலப் பிற்படுத்தப்பட்டோர் அதிகாரம் பெற்ற மறுகணமே தலித்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்தது. இந்திய வரலாற்றிலேயே தலித்துக்களுக்கு எதிரான அதிக வன்முறை நிகழ்ந்த காலகட்டம் அதுவே. ஆதலால் தலித்துக்களும் இஸ்லாமியரும் மீண்டும் காங்கிரஸுக்கே சென்றார்கள். இந்திரா வெற்றிகரமாக ஜனதா கட்சியைப் பிளந்து சிதறடித்து ஆட்சிக்கு வந்தார். அவரது மரணம் ராஜீவ்காந்தியை அரசியலுக்குக் கொண்டுவந்தது. ராஜீவ் காலகட்டம் அதுவரை இந்தியா கொண்டிருந்த இடதுசாரிப் பொருளியலை முழுமையாகக் கைவிட்டு வலதுசாரிப் பொருளியலுக்குத் திரும்ப வழிகோலியது.


இந்நூலை வாசிக்கையில் தகவல்களாக சரித்திரம் தொகுத்தளிக்கப்பட்டிருப்பதையே காண்கிறோம். அந்தத் தொகுப்பில்தான் குகாவின் கருத்துநோக்கு உள்ளதே ஒழிய அவ்ர் வாதாடுவதில்லை. பலகோணங்களில் இந்திய அரசியல் பொருளியல் நிகழ்வுகளை தொகுத்தளித்தபடி சரித்திர விவரணை ஓடிச்செல்கிறது. வாசகனாக நாம் உருவாக்கிக்கொள்ளும் அவதானிப்புகளே இது அளிக்கும் அனுபவம்.


உதாரணமாக, ஜெபி பற்றி ஓர் அமெரிக்கத் தோழிக்கு இந்திரா எழுதிய கடிதமொன்றில் அவர்  தன் தந்தையின் தோழரான ஜெபியை அவமரியாதையாகப் பேசியிருக்கும் இடம். ஜெபியின் பிரம்மசரிய சோதனைகளைக் கிண்டலடிக்கிறார் இந்திரா. அவருக்குக் காந்திய மதிப்பீடுகளில் இருந்த அவநம்பிக்கைக்கான சான்று இது.அவர் காந்தியத்தைக் குறைத்து மதிப்பிட்டாரென்பதற்கு ஜெபி அவரைக் கீழே இறக்கிக் காட்டியதே சான்று.


இந்திய அரசியலை அவதானிக்கும் மேலைநாட்டு அரசியல்நோக்கர்கள் தொடர்ந்து இந்தியா மேல் முன்வைக்கும் ஆழமான அவநம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது. பலசமயம் அதற்குத் தர்க்கமே இருப்பதில்லை. ஐம்பதாண்டுகளில் பல்வேறு முறை அந்த மோசமானஆருடங்கள் பொய்யான பிறகும் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக நீடிப்பதை அவர்கள் நம்பவில்லை என்று முதலில் பட்டாலும் அவர்கள் நம்ப விரும்பவில்லை அல்லது அப்படி இருப்பதையே விரும்பவில்லை என்றுதான் இறுதியாகத் தோன்றுகிறது.


காரணம் ஐரோப்பா,தங்கள் உச்சகட்ட சாதனையாக முன்வைப்பது அவர்களின் ஜனநாயகத்தைத்தான். பலநூறு வருடப் போராட்டங்கள், போர்களுக்குப்பின் அவர்கள் அடைந்த ஒன்றைப் பெரிதும் ஏழை மக்கள் நிறைந்த ஒரு நாடு சாதாரணமாக அடைந்ததை ஏற்க அவர்களால் முடியவில்லை. அதிலும் பேதங்களும் பற்றாக்குறைகளும் நிறைந்த ஒரு நாடு. இந்தியா ஆப்ரிக்க நாடுகளைப்போல ஜனநாயகம் சீரழிந்து வறுமையில் மூழ்கிப்போனதென்றால் அவர்களுக்குள் உள்ள வெள்ளையன் நிறைவடைந்திருக்கக்கூடும்


அதற்கு மாற்றாக உள்ளது இந்நூலின் கடைசியில் இந்தியக்குடியுரிமை பெற்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் ஹால்டேன் எழுதிய வெளியிடப்படாத கடிதத்தில் இந்தியாவைப்பற்றி சொல்லியிருக்கும் மதிப்பீடு.'ஐரோப்பாவை விட இந்தியாவே அதிக வேறுபாடுகள் கொண்டதாக உள்ளது.இது எதிர்காலத்தில் உடைந்தாலும் உடையலாம். ஆனாலும் இது அற்புதமான சோதனை.எனவே நான் இந்தியக்குடிமகன் என்று சொல்லிக்கொள்வதையே விரும்புகிறேன்'


என் உணர்வுகளைத்தொட்ட வரி இது. சமீபகாலங்களில் இனப்பன்மைக்காக முயலும் கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்று அங்கே இன்னும் தனித்தனியாகவே வாழும் மக்களையும் நடுவே இனக்கலப்பால் உருவான குழந்தைகளையும் காணும்போது நான் நினைத்துக்கொள்வதுண்டு– இப்படியே இவர்கள் இன்னும் சிலநூறு ஆண்டுகள் சென்றால் ஓர் இந்தியாவாக உருமாறக்கூடும் என்று.


பன்மையில் ஒருமையை நிலைநாட்டும் சக்தியாக நான் காண்பது இரு கூறுகளைத்தான். ஒன்று, இந்திய மெய்ஞான மரபு. இன்னொன்று அது காட்டிய சமரச வழியை நவீன அரசியல் சித்தாந்தமாக ஆக்கிய காந்தியம். அத்தனைக்கும் அப்பால் இந்தியா இந்தியாவாக இன்றும் நீடிக்கும் மர்மத்திற்குக் காரணம் அவ்விரு வாழும் பாரம்பரியங்கள்தான்.


அதை நாமறியாவிட்டாலும் நம் எதிரிகள் அறிவார்கள். ஆகவேதான் எப்போதுமே இந்திய ஞானமரபுக்கும் காந்தியத்துக்கும் எதிராக உச்சகட்ட அவதூறுப்பிரச்சாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.


நாம் அரசியல் பேச்சுகளில் எப்போதுமே அன்றாட அரசியலை அன்றாடச்செய்திகளில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அரசியலைத் தொகுத்துப்பார்க்க முடிவதில்லை. அத்தகைய பார்வையை உருவாக்கும் அரிய நூல் இது.


[இந்திய வரலாறு காந்திக்குப்பிறகு. [பகுதி 2]  ராமச்சந்திர குகா. தமிழாக்கம் ஆர்.பி.சாரதி. கிழக்கு பிரசுரம். விலை 350]


 





காந்தியின் கையில் இருந்து நழுவிய தேசம்- இந்திய வரலாறு-காந்திக்கு பிறகு பகுதி ஒன்று





ஒரு வரலாற்று நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2011 11:30

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ,


அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் சொல்கிறார். அதைக்கேட்கும்போது நியாயமாகவும் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஞாநியை நேர்மையானவர் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்பதனால் இதைக்கேட்கிறேன்.


வெங்கட் ராமானுஜம்



அன்புள்ள வெங்கட்,


ஒரு பிரச்சினையின்போது வரலாற்றுப்பின்னணியில் வைத்து அதை முழுமையாகப் பார்ப்பவனே சிந்திப்பவன். அவனே பிறரிடம் பேச தகுதி கொண்டவன். நீங்கள் சொன்ன இருவருமே அந்த தகுதி அற்றவர்கள் என்பதை இந்த விஷயத்தில் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த ஒரு சின்ன வட்டத்துக்குள் வைத்து பேசுகிறார்கள். அதன்மூலம் தமிழகச் சிந்தனைக்கு மிகப்பெரிய அநீதியை இழைக்கிறார்கள். அவர்கள் இவ்விஷயத்தில் நேர்மையற்றிருக்கிறார்கள் என நினைக்கிறேன். என் ஆழமான மனக்கசப்பை , ஏன் வெறுப்பை, இப்போது பதிவுசெய்கிறேன்.


இன்று அரசியல்முகம் கொண்ட அனைவருமே ஏதேனும்வகையில் ஊழலுக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அண்ணா ஹசாரேயை வசைபாடுகிறார்கள். பொதுவெளியில் பேசியாகவேண்டிய அரசியல்பத்தி எழுத்தாளர்களோ இம்மாதிரி சிந்தனை சிக்கி தேங்கி கிடக்கிறார்கள். அவநம்பிக்கை விதைக்கிறார்கள். தமிழகத்தின் துரதிருஷடம் என்றே இதைச் சொல்லவேண்டும்.


கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டம் என்ன? இது பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கம். இந்தியச் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை தடுக்கும் பெரும் சக்தியாக இன்று பூதாகரமாக வளர்ந்து நிற்பது பொதுவாழ்க்கையில் ஊழல். அதை ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் ஏதோ ஒருவகையில் உணர்ந்திருக்கிறான். அதைப்பற்றி ஆழமான மனக்கசப்படைந்திருக்கிறான். அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்


ஒரு சாதாரண உதாரணம், சென்ற இருபதாண்டுகளில் ஊழலுக்கு எதிராகப்பேசும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. அந்த பொது உணர்வை தங்கள் ஊடகம் மூலம் உணர்ந்துகொண்ட வணிகத் திரைப்படப் படைப்பாளிகள் தொடர்ந்து அத்தகைய படங்களை உருவாக்குகிறார்கள். அவையெல்லாம் இந்த எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும் பிரச்சார சாதனங்களாக மாறியிருக்கின்றன


ஊழல் புதிய விஷயம் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் இங்கே ஊழலின் பொற்காலமாகவே இருந்திருக்கிறது. சீருடை அணிந்து இந்தியா வரும் பிரிட்டிஷ் நிலக்கரித்தொழிலாளியின் மைந்தன் பெரும் பிரபுவாக ஊர்திரும்பிக் கொண்டிருந்தான். இந்த தேசத்தின் வெப்பத்தை, நோய்களை தாங்கி இங்கே வாழ்வதற்கான உந்துதலை பிரிட்டிஷ் குடிமக்களுக்கு அளித்தது இங்கு கொழித்திருந்த பெரும் ஊழலே. அதற்காகவே அதை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர். இந்தியச்செல்வம் பிரிட்டனுக்கு ஒழுகிச்செல்ல ஊழலும் முக்கியமான காரணம்


இந்திய தேசிய இயக்கமே பிரிட்டிஷ் ஊழல்ராஜுக்கு எதிரான இயக்கம்தான். ஆகவே அதன் நாயகர்கள் ஊழலுக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். அந்த இலட்சியவாத வேகம் அரசியல்வாதிகளில் இந்தியா சுதந்திரம் பெற்று கால்நூற்றாண்டுக்காலம் நீடித்தது.



ஆனால் சுதந்திரம் கிடைத்தபின்னரும் பிரிட்டிஷார் உருவாக்கிய நிர்வாகஅமைப்பும் அதிகார வர்க்கமும் அப்படியே நீடித்தன. அவர்கள் பிரிட்டிஷ்காலகட்டத்து ஊழலையே பழகி அதையே செய்துகொண்டிருந்தார்கள். இங்கே நேரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம், அதாவது லைசன்ஸ் ராஜ், அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை அளித்தது. ஆகவே ஊழல் பலமடங்காக வளர்ந்தது. அதை பெரும்பாலும் இலட்சியவாதிகளான அன்றைய அரசியல்வாதிகளால் ஆளப்பட்ட நம் அரசுகளால் தடுக்க முடியவில்லை என்பதே வரலாறு.


மெல்லமெல்ல அதிகாரிகளால் அரசியல்வாதிகள் ஊழலுக்கு பழக்கப்படுத்தப்பட்டார்கள். நாடு பொருளியல் வளர்ச்சி நோக்கிச்செல்லச் செல்ல ஊழலின் வேகம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இதன் செயல்பாடே ஊழலால்தான் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டது. சுதந்திரப்போராட்ட நாயகர்களில் அதிகாரத்தை நாடாதவர்கள் அதற்கு எதிராக போராடினார்கள். முதல்பெரும் மக்களியக்கம் என்பது ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப்புரட்சி இயக்கம். அந்த காந்திய இயக்கம் சீக்கிரத்திலேயே அவசரநிலை மூலம் ஒடுக்கப்பட்டது. அவசர நிலையை வென்று அந்த ஆட்சியை வீழ்த்திக்காட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனால் முடிந்தது. ஆனால் அவர் நம்பியவர்களே அவரது கனவை சிதைத்தார்கள். அதிகார ருசி கண்டதும் அவர்களும் ஊழலில் மூழ்கி திளைத்தார்கள்.


இன்று உருவாகிவந்துள்ள நம் புதிய தலைமுறையின் அறிவுத்திறன் காரணமாக, அவர்களுக்கு வாய்ப்புகளை அளித்த புதியபொருளாதாரக் கொள்கைகள் வழியாக நாடு மேலும் பொருளாதார வளர்ச்சி காண்கிறது. ஆகவே இப்போது ஊழல் பலமடங்காகப் பெருகிவிட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலையும் போபர்ஸ் ஊழலையும் முந்த்ரா ஊழலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும் அந்த வளர்ச்சியின் விகிதம்.


இந்த ஊழலின் விளைவாக நிகழும் முதல் இழப்பு மக்களுக்கே. வளர்ச்சியின் பெரும்பங்கு வரியாக அரசுக்குச் செல்கிறது. அந்த செல்வம் வளர்ச்சிப்பணிகளாக மக்களிடம் திரும்பி வர வேண்டும். அப்போதுதான் அந்த அடிப்படைக்கட்டுமானங்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சி சாத்தியமாகும். ஆனால் அப்படி வராமல் ஊழல் தடுக்கிறது. ஆகவே இன்று நம் நாடு வளர்ச்சி குன்றித் திகைத்து நிற்கிறது. வளர்ச்சியின் பயன்கள் எளிய மக்களுக்குச் செல்வதில்லை.


ஸ்பெக்ட்ரமே உதாரணம். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியே அந்தத் துறையில் அத்தனை கோடிகளைக் கொண்டுசென்று கொட்டுகிறது. அந்த கோடிகள் அடிப்படைக் கட்டுமானமாகத் திரும்பி வந்தால் மட்டுமே இந்தியா அடுத்தகட்ட தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை அடையமுடியும். அந்தப் புள்ளியில் ராஜா-கனிமொழி-மாறன் கும்பல் சென்று அமரும்போது அந்த இயல்பான வளர்ச்சி உறைந்து பெரும் பின்னடைவு நிகழ்கிறது


ஞானி


ஒவ்வொருதளத்திலும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் அடிப்படைக்கட்டுமானத்தளத்தில் இன்று மிகப்பெரிய சிக்கலாக இருப்பதே ஊழல்தான். அமர்த்யா சென் முதல் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி வரை அதைச் சொல்லிப் புலம்பிவிட்டார்கள். ஒவ்வொரு சாமானிய இந்தியனுக்கும் அது தெரியும்.


அந்த ஊழலே இன்றைய முதல் பெரும் பிரச்சினை. அதைத் தடுக்க என்ன செய்வது? இன்று இந்தியாவிலிருக்கும் சட்டங்கள் கண்டிப்பாகப் போதாது. அதற்கான மிகச்சிறந்த ஆதாரம், இன்றுவரை இங்கே எந்த ஊழல் அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டதில்லை என்பதே.


ஏன்? இங்கிருக்கும் சட்டங்கள் இலட்சியவாதிகளான அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை. கடைசி அதிகாரம் அவர்களிடம் இருக்கும்படித்தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் ஆளும்கட்சி எதிர்கட்சியாகச் செயல்பட்டால் எல்லாத் தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படும் என அரசியல்சட்டமுன்னோடிகள் நம்பினர்.


கனிமொழியோ ராசாவோ பெரும்பாலும் தண்டிக்கப்பட மாட்டார்கள். காரணம் இத்தகைய வழக்கில் உண்மையான ஆதாரங்கள் ஆவணங்களே. அவை அரசிடம், அரசியல்வாதிகளிடம் இருக்கும். அவற்றை அரசு பெரும்பாலும் நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில்லை. அரசியல்வாதிகள் அனைவருமே ஒரே வர்க்கம். நாளையே கூட்டுகள் மாறினால் என்னசெய்வது? அதை கணக்கிட்டே அவர்கள் செயல்படுவார்கள்.


ஞாநி போன்றவர்களுக்கு இந்திய அரசுத்துறைகள் செயல்படும் விதம் பற்றி அரிச்சுவடியே தெரியாது. உங்களுக்குத்தெரியுமா, இந்திய தணிக்கைத்துறை ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு அரசுத்துறைகளைப்பற்றி முன்வைக்கும் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படும் ஊழல்களில் மிகமிகச்சிலவே வெளிவருகின்றன. தணிக்கைத்துறைக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமில்லை. அது பொதுக்கணக்குக் குழுவுக்கே அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும். அந்தக் குழு எப்போதுமே அரசியல்வாதிகளால் ஆனது. அங்கே நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் ஊழல்களையும் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து மறைத்துக் கொள்வார்கள்.


இங்குள்ள எல்லா அமைப்புகளும் இப்படியே. முன்னர் சொன்னதுபோல அவையெல்லாமே அரசியல்வாதிகளை நல்லவர்கள் என்று நம்பிய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று திருடனும் போலீஸும் சமரசம்செய்துகொள்ளும் காலம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாரதிய ஜனதா ஒத்துழைப்பது எளிது, எதியூரப்பா வழக்கில் காங்கிரஸ் ஒத்துழைத்தால் போதும். பெரும்பாலும் கடைசியில் நடப்பது இதுவே. இன்றுவரை இதுவே இந்திய யதார்த்தம்.


இதை எப்படி தடுப்பது? சமீபத்தைய உதாரணமே பார்ப்போம். இன்று வெடித்திருக்கும் ஸ்பெக்ட்ரம்போன்ற ஊழல்கள் பொதுதணிக்கைக்குழு முன்வைத்தவற்றில் இருந்து தற்செயலாக சில பொதுநல ஊழியர்களின் விடாப்பிடியான அணுகுமுறையால் வெளிக்கொணரப்பட்டவைதான். ஒருபக்கம் இன்றைய பொதுத்தணிக்கைக்குழு தலைவர் வினோத் ராய் போன்ற அசாதாரணமான அதிகாரிகள் இருந்தாலும் மறுபக்கம் பரஞ்சோய் குகா போன்ற இதழாளர்கள் இல்லையேல் இந்த ஊழலே வெளியே தெரியாமலாகியிருக்கும்.


ஆகவே அந்த பொதுநல ஊழியர்களையும் ஊழல்தடுப்பு அமைப்புக்கு உள்ளேயே கொண்டுவருவதற்கான முயற்சி என்று ரத்தினச்சுருக்கமாக லோக்பால் மசோதாவின் சாராம்சத்தைச் சொல்லலாம். அதாவது நீதித்துறையில் ஜூரி முறை இருந்ததுபோல. பொதுநலன்நாடுபவர்கள், நேர்மையாளர்கள் என புகழ்பெற்றவர்களின் கண்காணிப்பு அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் என்பதே லோக்பாலின் நோக்கம்.


இந்திய அரசியல்சட்டத்தை உருவாக்கிய முன்னோடிகள் என்ன நினைத்தார்கள் என்றால், அதிகாரிகளை அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளை அதிகாரிகளும் கண்காணித்தால் ஊழல் நிகழாது என. ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் கொள்ளும் முரண்பாட்டால் ஊழல் தடுக்கப்படும் என. ஜனநாயகத்தில் அப்படி முரண்படும் தரப்புகளை உருவாக்கி ஒருவரை ஒருவர் கண்காணிக்கச்செய்துதான் நம்மால் நியாயத்தை உருவாக்க முடியும் , வேறு வழி இல்லை.


இப்போது லோக்பால் மூலம் மூன்றாவதாக ஒரு தரப்பும் வந்து சேர்கிறது. அது ஊழல்தடுப்புக்கான ஒரு மக்கள் அரண் என்று சொல்லலாம். சமகால அரசியல்வாதிகள்மேல் நம்பிக்கை இல்லை என மக்கள் அறிவிக்கும் ஒரு முறை அது. அதற்கான தேவை இன்று வந்துவிட்டிருக்கிறது.


ஏன்? நம் அமைப்பில் அரசாங்கத்தை மக்கள் தேர்தல்மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடிகிறது. நம் முன்னோடிகள் அமைத்த அரசமைப்புச்சட்டம் அப்படி. ஆனால் தேர்தல் என்பது பணபலங்களின் மோதலாக ஆனபின் அதன் வழியாக அரசை மக்கள் கட்டுப்படுத்துவது போதாமலாகிவிட்டிருக்கிறது. ஆகவே இன்னும் நேரடியாக அரசாங்கத்தை மக்கள் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கோரிக்கை எழுந்துகொண்டே இருக்கிறது.


சொல்லப்போனால் கால்நூற்றாண்டாக பல தளங்களில் இக்கோரிக்கைகள் வலுப்பெற்று மிகச்சிறந்த விளைவை ஆற்றி வருகின்றன. முதன்முதலில் இந்த கோரிக்கை எழுந்தது எண்பதுகளில் சூழியல் சார்ந்துதான் என்பது வரலாறு. இயற்கையை அழிப்பதை அரசின் எல்லா அமைப்புகளும் இணைந்து செய்தபோது, ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் அதில் ஒரேகுரலில் பேசியபோது, பொதுநல ஊழியர்களால் பல்வேறு சூழியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை மக்கள்போராட்டங்கள்ளை முன்னெடுத்தன. சட்டப்போர்களை நிகழ்த்தின. அந்த அமைப்புகள் மக்கள் சார்பில் அரசை கண்காணித்தன. மெல்லமெல்ல அரசை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றன.


பின்னர் மனித உரிமை அமைப்புகள், பெண்கள் நல அமைப்புகள் அதே பாணியில் உருவாகி வந்தன. அவற்றில் செயல்படும் பொதுநல ஊழியர்கள் மூலம் இன்று இந்திய அரசின் மீதான முக்கியமான மக்கள்கட்டுப்பாடாக அவை ஆகியிருப்பதை எவரும் காணலாம். அவர்களின் போராட்டத்தால், சர்வதேச நிர்ப்பந்தத்தை அவர்கள் உருவாக்க முடிந்தமையால், மனித உரிமைக்காகவும் பெண்களுரிமைக்காகவும் அரசாங்கத்தைக் கண்காணிக்கும் மக்கள் அமைப்புகளை அரசே இன்று உருவாக்கியிருக்கிறது.


1993ல் இயற்றப்பட்ட மனித உரிமை காப்புச் சட்டம் மூலம் தேசிய மனித உரிமை கழகம் [National Human Rights Commission] அமைக்கப்பட்டதை ஓரு உதாரணமாகச் சொல்லலாம். அந்த அமைப்பு இயல்பாக உருவாகிவரவில்லை. பொதுநல ஊழியர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தின் விளைவாக உருவாகி வந்தது. கண்டிப்பாக அது ஓர் அரசாங்க அமைப்பு. அதற்கே உரிய பலவீனங்களும் சிக்கல்களும் கொண்டது. ஆனால் அந்த அமைப்பு கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது , அதை இந்திய அரசின் அமைப்புகள் எந்த அளவுக்கு அஞ்சுகின்றன என்று பார்த்தால் அதன் வல்லமை என்ன என்று தெரியும்.


அதேபோன்றுதான் தேசியபெண்கள் உரிமைச்சட்டத்தால் 1992 ல் அமைக்கப்பட்ட தேசிய பெண்கள் உரிமை கழகம் [ National Commission for Women] அதுவும் ஓர் அரசாங்க அமைப்பே. ஆனால் அது உருவான நாளில் இருந்து இந்தியா முழுக்க அது பெண்கள் மீதான என்னென்ன ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டுவந்தது என்பதை எவரும் காணலாம். இன்றும் அரசு மீது அதன் கட்டுப்பாடு எத்தகையது என்பதை காணலாம்


இன்று ஒவ்வொரு சூழியல் போராளியும், ஒவ்வொரு மனித உரிமைப்போராளியும் , ஒவ்வொரு பெண்ணுரிமைப்போராளியும் இந்த அமைப்புகளை முன்வைத்தே போராடுகிறார்கள். ஆம், அதை இன்னும் மேம்படச்செய்யவும்தான் போராடுகிறார்கள். அந்த மேம்பாட்டுக்கு எல்லையே இல்லை. எப்போதும் நடந்துகொண்டிருக்க வேண்டிய ஒரு தொடர் போராட்டம் அது. இதெல்லாம் இங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த அரசு அமைப்புகள் அளிக்கும் எல்லா பாதுகாப்புகளையும் பெற்றுக்கொண்டு நம்மில் சிலர் அரசாங்க அமைப்பால் என்ன பயன் என்கிறோம்.


இவ்வாறு பலதளங்களில் அரசு மீதான பொதுமக்களின் கண்காணிப்பு சாத்தியம் என்றும், அது வெற்றிகரமாக செயல்பட்டு சிறந்த விளைவுகளை உருவாக்கி வருகிறது என்றும் நிரூபிக்கப்பட்டபின்னரே ஊழல் தடுப்பு அமைப்பிலும் அது கோரப்படுகிறது. அண்ணா ஹசாரே அதை அவரது கிராமநிர்மாணச் செயல்பாடுகளில் இருந்து கண்டடைந்து முன்வைத்து வாதாடி வருகிறார். அவரது முன்னுதாரணம் மேலே சொன்ன அமைப்புகளே.


மனித உரிமைக் கழகம் போன்ற சட்டபூர்வமான அமைப்புகளில் மக்கள்பங்கேற்பு, அல்லது பொதுநல ஊழியர் பங்கேற்பு என்பது மிக மறைமுகமானதே. அந்நிலையிலேயே அவை பெரும்பங்களிப்பாற்ற முடிகின்றன. நேரடியான மக்கள் பங்கேற்பு, பொதுநல ஊழியர் பங்கேற்புள்ள ஓர் அமைப்பு இன்னும் பெரிதாக செயல்படமுடியும் என்ற எண்ணமே லோக்பால் அமைப்பின் விதை.ஆனால் இது ஊழல் சம்பந்தமானது என்பதனால் போராட்டம் இன்னும் பிரம்மாண்டமான மக்கள் பங்கேற்புடன் இருக்கவேண்டியிருக்கிறது.


இந்தியாவில் அரசு மீதான மக்கள் கண்காணிப்பு என்பது ஒட்டுமொத்தமாக எண்பதுகளில் ஆரம்பித்த ஓர் இயக்கம். அது பல தளங்களில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. அவ்வாறு சூழியல், பெண்ணுரிமை, மனிதஉரிமை சார்ந்து மக்கள்குழுக்கள் உருவாகி வந்தன. அவை இன்று இந்தியா முடுக்க முக்கியமான ஜனநாய சக்தியாக ஆகியிருக்கின்றன. அவற்றுக்கான ஒரு கருவியாகவே தகவலறியும் உரிமைச்சட்டம் இங்கே கோரப்பட்டது


1990ல் அருணா ராய் முன்வைத்து போராடிய கோரிக்கை. அது இன்றைய வடிவை அடைந்தது அண்ணா ஹசாரே நடத்திய தொடர் மக்கள் போராட்டங்கள்மூலம்தான். அந்தச்சட்டம் இன்று அத்தனை மக்களியக்கங்களாலும் மிகப்பெரிய ஆயுதமாகக் கையாளப்படுகிறது. அரசு மீதான நேரடியான மக்களின் கண்காணிப்பாக அது உள்ளது. அச்சட்டத்தின் அடுத்த விரிவாக்கமே லோக்பால்.


லோக்பால் பெண்ணுரிமைக் கழகம், மனித உரிமைக்கழகம் போன்ற அரசாங்க அமைப்புகளைப்போன்ற ஒன்றாகவே இருக்கப்போகிறது. அங்கும் அதிகார வர்க்க ஊடுருவலும் மெத்தனமும் கண்டிப்பாக இருக்கும். ஆனாலும் அதன் சாத்தியங்கள் அபாரமானவை. அதன் மக்கள் பங்கேற்பு என்பது மற்ற அமைப்புகளை விட பல மடங்கு அதிகம். அதன் அதிகாரமும் பல மடங்கு அதிகம். விளைவாக அரசாங்கத்தின் அத்தனை செயல்பாடுகள் மீதும் நேரடியாக ஒரு மக்கள் கண்காணிப்பு அதன்மூலம் உருவாகி வருகிறது. பிற அமைப்புகள் எப்படி வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கினவோ அப்படியே அதுவும் நிகழ்த்தும்.சொல்லப்போனால் இன்னும் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும்.


தேசிய மனித உரிமைக் கழகம் வந்ததனால் மனித உரிமைப்போர் முடிவுக்கு வரவில்லை, உண்மையில் அதன்பிறகே அது தீவிரமாக ஆரம்பித்தது. அந்தப் போருக்கு அந்த அமைப்பு ஒரு கருவியாக அமைந்தது. அதேபோலத்தான் ஊழலுக்கு எதிரான போருக்கு லோக்பால் அமைப்பு ஒரு வெற்றிகரமான கருவி.


கண்டிப்பாக ஊழலைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது. அம்பேத்காரின் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்டம் மனித உரிமைகளுக்கு முழு பாதுகாப்பளித்திருந்தது. ஆனாலும் தேசிய மனித உரிமைபாதுகாப்புச்சட்டமும், தேசிய மனித உரிமைபாதுகாப்பு கழகமும் ஏன் தேவைப்பட்டது? அதே காரணம்தான் இங்கும். அவை அரசியல்வாதிகளை நம்பி உருவாக்கப்பட்ட சட்டங்கள். இப்போது மக்கள் கண்காணிப்பு தேவையாகிறது


லோக்பால் அமைப்பு அளிக்கும் வாய்ப்பை இந்தியாவின் சட்டங்கள் அளிப்பதில்லை என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்று ஊழல் கண்காணிப்பும் தடுப்பும் அரசு, நீதிமன்றம் இரண்டின் கைகளில் மட்டுமே உள்ளன. நீதிமன்றத்தை அரசு எளிதாக ஏமாற்ற முடிகிறது. லோக்பால் போன்ற மக்கள் அமைப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான மக்களிணைப்பாக இருக்கும். நீதிமன்றத்துக்கு அரசை அது காட்டிக்கொடுக்கும். அரசை நீதிமன்றம் அதனூடாக கண்காணிக்கவும் முடியும். சட்டம் தெரிந்தும் சோ,திட்டமிட்டுக் குழப்புகிறார். தெரியாமல் ஞாநி குழப்புகிறார்.


சொல்லப்போனால் மருத்துவம், நீதித்துறை ஆகிய இரண்டிலும்கூட மக்கள் கண்காணிப்புக்கான அமைப்புகளை உருவாக்கியாகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்றிருக்கிறது. அவற்றின் ஊழல்களால் இந்தியாவின் வாழ்வே அபாயகரமான நிலையில் இருக்கிறது. லோக்பாலுக்கான இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அதுவாகவே இருக்கும்.


ஆம் லோக்பாலில் குறைபாடுகள் இருக்கலாம். சரியான பிரதிநிதித்துவம் இல்லாமலிருக்கலாம். தவறான ஒருசிலர் உள்ளே வரலாம். அதன் சட்டங்களில் ஓட்டைகள் இருக்கலாம். நடைமுறையில் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாமே அதை அடைந்தபின் தொடர் முயற்சிகள் மூலம் சீர்படுத்த வேண்டியவை. அவ்வகையில் சீர்படுத்திக்கொண்டே செல்லவேண்டியிருக்கும். லோக்பாலை விடாபிடியாக செயலூக்கம் கொண்டதாக அமைக்கவேண்டியிருக்கும்.


மாறாக இங்கே என்ன நிகழ்கிறது? அந்தக் கோரிக்கையை முன்வைத்து நடக்கும் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். அதை அடைவதற்காகப் போராடும் பொதுநலவாதிகளைக் கொச்சைப்படுத்த அதைக் காரணமாக ஆக்குகிறார்கள். அதில் உள்ள உள்நோக்கத்தை எளிதில் காணலாம்.


அனைத்துக்கும் மேலாக லோக்பாலுக்கான இந்த போராட்டம் லோக்பால் என்ற அமைப்பை வென்றெடுப்பதற்கானது மட்டுமல்ல. அதை முன்வைத்து ஊழலுக்கு எதிரான போராட்டமாக இது நடக்கிறது. எந்த மக்கள் போராட்டமும் அவ்வாறே நிகழ முடியும் . மக்கள் விழிப்புணர்வுக்கான போராட்டமாக வளர்கிறது என்பதை, அந்த மக்கள் எழுச்சியைக் காணும் கண் ஒருவருக்கில்லை என்றால் அவருக்கு என்ன சிந்தனைத்திறன் இருக்கிறது? என்ன நேர்மை இருக்கிறது?


ஞாநியின் நேர்மை மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது இருவிஷயங்களால் அவர் நேர்மை தவறியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒன்று அவரது தனிப்பட்ட அகங்காரம். அண்ணா ஹசாரேக்குக் கிடைக்கும் தேசியப்புகழ் அவரைப் பொருமச்செய்கிறது. நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்.


ஒருபோதும் தன் தனிவாழ்க்கையில் தியாகங்கள் செய்த களப்பணியாளனுக்கு வரும் மக்களாதரவு வெறுமே சொற்களை இறைக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கு வருவதில்லை. ஞாநியின் இடம் அவ்வளவுதான். அவருடைய பங்களிப்பும் அவ்வளவுதான். அந்த அப்பட்டமான உண்மையை அவரால் ஏற்க முடிந்தால் அவர் நியாயத்தைப் பார்க்கக்கூடும்


இரண்டாவதாக, தன் மீதான பிராமணமுத்திரையைத் தவிர்ப்பதற்காக எப்போதும் முற்போக்கு முத்திரையை தானே குத்திக்கொண்டாகவேண்டிய இடத்தில் இருக்கிறார் ஞாநி. முற்போக்கை விட முற்போக்காகக் காட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது. பரிதாபகரமான நிலைதான். சோவைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்த பிஜெபி தொண்டனையும்போலத்தான் அவரும். அவருக்கான நோக்கங்களே வேறு.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2011 11:30

August 20, 2011

அண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்

வணக்கம்,


உங்களது ப்ளாக் சிறிது நாட்களாக படித்துவருகிறேன். எனது தாய் மொழி தமிழ் ஆகினும், படித்தது K .V இல். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. பிழை இருந்தால் மன்னிக்க கோரி சொல்கிறேன். உங்களது தெள்ள தெளிவான சிந்தனை அற்புதம். அதை தமிழில் படிக்கையில் ஒரு படி மேலே.


விஷயத்துக்கு வருக்கிறேன். அண்ணா ஹஜாரே பற்றிய உங்களது சமீபத்திய கடிதம் ஒரு நெத்தியடி. எனக்கு. பல நாட்களாக யோசித்தும் அண்ணா வின் இந்த போராட்டத்தை முழுமையாக சப்போர்ட் செய்ய என்னால் முடியவில்லை. காரணம் சிலவற்றை நீங்களே சொல்லி விட்டீர்கள். நம் முன்னோர்கள் நம்மை ஒரு முறைக்கு பல முறை யோசி என்று சொல்லியதை தவறாக எடுத்துகொண்டு கோடி முறை யோசிக்கின்றோம். Thoughts without actions . Arm Chair /Tea Shop critics – தேசத்திலேயே நம் ஊரில் தான் அதிகம். இன்று எனது நிலை மாறியிருக்கின்றது. இது நாள் வரை இருந்த கேள்விகளை பற்றி விவாதிக்கையில், இந்த போராட்டத்தில் ஓரளவு கலந்து கொள்ள முயல்வேன்.


கேள்விக்கு வருகிறேன். எனக்கு ஒரு நாளும் அண்ணா மீது சந்தேகம் இல்லை. ஏனெனில் இவ்வளவு நாட்களாக அரசாங்கம் கறையை தேடி தேடி நொந்து விட்டார்கள். அவர் நல்லவரே. அடுத்தது கோக்கு மாக்காக கேள்வி என்னுள் எழ வில்லை. இந்த போராட்டம் இந்த அரசுக்கு எதிராக அவசியமே. சில ஊழல் பேர்வழிகள்(யார் யார் என்று அனைவருக்கும் தெரியும் ) நரகத்துக்கு சென்று பஜ்ஜி சொஜ்ஜி ஆக வேண்டும் என்பது என் ஆசை. இருப்பினும் எதனால் நான் யோசித்தேன் ? குற்ற உணர்ச்சி. நான் பெங்களூர்-இல் வசிப்பவன். என்னால் ஒரு நாள் கூட டிராபிக் ரூல்ஸ் -ஐ முழுமையாக கடை பிடிப்பது சாத்தியமே இல்லை. சத்தியமாக சொல்கிறேன். அடித்தது tax


. நான் tax சரியாக கட்டுவதற்கு ஒரே காரணம், அது என் கம்பெனி யே பிடித்து கொண்டு கொடுப்பதால். நான் பிசினஸ் செய்து இருந்தால் கட்டிருப்பேனா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதே போல் தான் நான் காணும் அணைத்து பேர்வழிகளும். இத்தனை அய்யோக்ய தனத்துடன் என்னால் பாசாங்கு செய்ய முடிய வில்லை. பாதி கோடி முறை யோசித்து விட்டேன். இன்னும் பாதி மிச்சம்.


இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் "தான் ஒரு உண்மையான குடிமகனாக வாழ்வேன்; நான் காணும் சின்ன சின்ன உழல்களையும் தட்டி கேட்பேன்" என்ற சத்தியத்தை செய்ய முனைந்தாலே 2 விஷயங்கள் சரிஆகிவிடும்: 1 ) moral right to question உண்டாகும் 2 ) சமுதாயம் உருப்படியாகும்.


இது அனைத்தும் எழுத காரணம், இன்று ஒரு வேடிக்கையான நிகழ்வை கண்டது தான். ஒரு இடத்தில ஐ.டி மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு 100 அடி தாண்டி ஒரு U – turn பக்கத்தில் சில ஆசாமிகள் டிராபிக் constable கு லஞ்சம் குடுத்து கொண்டிருந்தார்கள். அந்த கோஷத்தை 100 அடி தாண்டி நடத்தி இருந்தால் சிறிதளவு உபயோகமாக இருந்திருக்கும். என்னை பொறுத்த வரை நமது நாடே குட்டி சுவராக போய் விட்டது. இந்த போராட்டம், ஷங்கர் படத்தை போல ஒரு நல்ல முடிவு குடுத்தால் அற்புதமாக இருக்கும்.


-ரவி



அன்புள்ள நண்பருக்கு


நான் சற்றே தீவிரமான மொழியில் எழுதுவது எந்த கோபத்தாலும் அல்ல. தொடர்ச்சியாக இந்த வகையான வாதங்களை எழுப்பிக்கொள்பவர்கள் தங்களை ஒருகணம் கூட பார்த்துக்கொள்வதில்லை என்பதன் மீதான விமர்சனம்தான் அது. உங்கள் கடிதத்தின் தொனி எனக்கு நிறைவளித்தது.


முதலில் அண்ணா ஹசாரேயின் நேர்மை பற்றிய ஐயம். இதைச்சொல்பவர்கள் சில கணங்கள் திரும்பி தங்களைப்பார்த்துக்கொள்ள முடிந்தால் அந்த ஐயம் வருமா என்ன? முப்பதாண்டுக்காலமாக பொதுவாழ்க்கையில் இருப்பவர் , சர்வதேச புகழ்பெற்றவர், இன்றும் ஒரு கீழ்நடுத்தர வாழ்க்கையில் இருக்கிறார். அவரது குடும்பமும் அப்படியே. அவர் திடமாக பொதுமேடைக்கு வந்து நின்று 'நான் குற்றம்சாட்டுகிறேன்' என்று சொல்வதிலேயே அந்த நேர்மை உள்ளது. மடியில் கனத்துடன் அதைச் சொல்லமுடியாது.


அவர் பதினைந்தாண்டுகளாக அவரது சொந்த மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக போராடியவர். பல அமைச்சர்களை வீட்டுக்கனுப்பியவர். அவரிடம் பிழை இருந்தால் இதற்குள் சந்தி சிரிக்க வைத்திருப்பார்கள் அரசை கையில் வைத்திருக்கும் நம் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும். அவர் மேல் களங்கம் காண விடாப்பிடியாக முயன்று இரவுபகலாக ஆராய்ந்து ஒரு விழாவில் இரண்டு லட்சம் செலவுசெய்யப்பட்டிருக்கலாம் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து விசாரிக்க கமிஷன் போடுகிறார்கள். அதை ஏதோ ஸ்பெக்ட்ரம் ஊழல் கமிஷனும் அதுவும் சமம் என்பதுபோல ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். [விஷ்ணுபுரம் அமைப்பு நடத்தும் ஒரு கூட்டத்துக்கே சாதாரணமாக ஐம்பதாயிரம் செலவாகிறது]


அதை அலசி பகுத்து ஆராயும் நம் இதழாளர்கள் நட்சத்திர ஓட்டல்களின் வரவேற்பறைகளில் வாழும் அரசியல் தரகர்கள். அதை இம்மிகூட பகுத்தறியாமல் நம்மவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். காரணம் நம்முடைய அடிப்படையான நேர்மையின்மை. நாம் நேர்மையற்றவர்களை எளிதில் நம்புகிறோம். பிறரது நேர்மையை நம்ப மறுக்கிறோம்.


இரண்டாவதாக , அவரை ஏதோ அப்பாவி என்பது போல சித்தரிப்பவர்கள். இவர்கள் மெத்தப்படித்தவர்கள். அண்ணா இந்தி மட்டும் வாசிக்கிறார் என்பதனாலேயே அவருக்கு அறிவு கிடையாது என ஒரு ஆசாமி தொலைக்காட்சியிலே சொல்கிறார். என்ன ஒரு கேவலம்! இந்தியாவில் பல்லாயிரம் மணிநேரம் பேசுவதும் ஆயிரம் பக்கம் எழுதுவதும் மிக எளிது. இந்த மக்களிடையே சென்று ஒரு சின்ன விஷயத்தைச் செய்து பாருங்கள் தெரியும். செய்து காட்டிய ஒரு செயல்வீரரை விட எந்த அறிவுஜீவியும் பெரியவரல்ல. செய்துகாட்டுபவர் மட்டுமே உண்மையான காந்தியவாதி. நம்மால் பேசமட்டுமே முடியும், எதையுமே செய்யமுடியாதென்பதனால் நாம் அண்ணாவை மட்டம் தட்டும் வாய்ச்சொல் வீணர்கள் பக்கம் எளிதில் சேர்கிறோம்.


இதெல்லாம் நடக்குமா, இதற்கெல்லாம் என்ன பயன், இதை வேறுமாதிரி செய்யலாமே என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டிருப்பது ஒரே காரணத்தால்தான். நம்முடைய செயலின்மையை, கையாலாகாத்தனத்தை நம்மிடமிருந்து மறைப்பதற்காக.


நண்பர் கிருஷ்ணன் சொன்னார். அவர் ஈரோட்டில் ஒருவரை பார்த்தார். பேச்சுவாக்கில் 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்றார். 'சிந்தனையாளரா இருக்கேன்' என்றாராம். இவர் அரண்டு போய்விட்டார். அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை 'அப்டீன்னா?' என்றார். 'அதாங்க சிந்திக்கிறது, அதான் செய்றேன்' கிருஷ்ணன் புரிந்துகொண்டு 'ஓ, எழுதறீங்களா?' என்றார். 'இல்லீங்க' குழப்பத்துடன் 'அப்ப மேடையிலே பேசுவீங்க இல்ல?' என்று கிருஷ்ணன் ஆர்வமாக கேட்டார். ' அதெல்லாம் நமக்கு சரிப்படாதுங்க' என்றார் கிழவர். 'சும்மா பேசிட்டிருப்பீங்களோ' என்றார் கிருஷ்ணன். 'எங்கங்க…அதுக்கெல்லாம் ஒண்ணும் ஆவுறதில்லீங்க' என்றார் பெரியவர். ' வாசிப்பீங்களோ?' என்றார் கிருஷ்ணன். அவர் ' திருக்குறள் அப்பப்ப வாசிக்கிறதுங்க…கண்ணு சரியில்லே அதனால அதிகமா ஒண்ணும் வாசிக்கிறதில்ல' என்றார். 'அப்ப?' என்றார் கிருஷ்ணன் மனம் உடைந்து. 'அதாங்க சிந்திக்கிறதோட சரி'


பிரச்சினை அண்ணாவிடம்தான் ஏன் உறுதியாக இருக்கிறீர்கள்? ஏன் உங்களை நீங்கள் பார்க்கக்கூடாது? ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? ஏன் இப்படி ஆவேசமாக எதிர்த்து வாதிடுகிறீர்கள்? உங்களுக்கு இயல்பாக அந்த ஐயங்களும் கசப்பும் தோன்ற என்ன காரணம்?


நம்மில் பலர் சிந்தனையாளர்கள். மிச்சபேர் நிந்தனையாளர்கள். அதுதான் சிக்கலே


ஜெ


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2


அண்ணா ஹசாரே கடிதங்கள்..


அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…


அண்ணா ஹசாரே,வசைகள்


அண்ணா ஹசாரே-2


அண்ணா ஹசாரே-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2011 21:17

அயோத்திதாசர், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,


நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். உங்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் எதையுமே வாசித்தது கிடையாது. உங்களைப்பற்றி எல்லாரும் சொன்னதுதான் காரணம். நீங்கள் சாதிவெறி உடையவர் என்றார்கள். இந்துத்துவா கொள்கை எனக்குப் பிடிக்காது. ஆகவே படிக்கவில்லை.


விடுதலைச்சிறுத்தைகள் சார்பிலே திருமா ஐயா படம் போட்டு உங்கள் போஸ்டரை மாட்டுத்தாவணியிலே பார்த்துக் கூட்டத்துக்கு வந்தேன். நீங்கள் அயோத்திதாசரைப்பற்றிப் பேசியதைக் கேட்டேன். நான் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறேன். அயோத்திதாசரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதிகமாகத் தெரியாது. உங்கள் உரை பிரமிப்பு அளித்தது.அற்புதமான உரை. மிகச்சிறப்பு. எனக்கு இந்தத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சரித்திரத்தையே திரும்பப் பார்க்க வைத்தது. இவ்ளவுதான் நடந்திருக்கிறது என்று தெரிந்துகொண்டபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


அயோத்திதாசர் போன்ற பொக்கிஷங்களை எல்லாம் மறைத்துவிட்டார்கள். அயோத்திதாசர் அவர்களை ஒரு அசல்சிந்தனையாளர் என்று சொன்னீர்கள். நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். ஆனால் இதுவரை இதெல்லாம் கேள்விப்பட்டதில்லை. உங்கள் உரையின் எல்லாப் பகுதிகளையும் நான் புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியாது. நிறையப் பகுதிகளை என்னால் சரியாக உள்வாங்கிக்கொள்ளமுடியவில்லை. நீங்கள் மற்ற பேச்சாளர்களைப்போல நிறுத்தி நிறுத்திப் பேசாமல் பேசிக்கொண்டே போனீர்கள். ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதற்குள் அடுத்த கருத்து வந்துவிடுகிறது. ஆனாலும் எல்லாமே சிந்திக்கவைக்கக்கூடியவை.


நீங்கள் சொல்வது என்ன என்று இப்போது புரிகிறது. நம் மண்ணுக்கேற்ற சிந்தனைக்காகப் பேசுகிறீர்கள். அது இந்துத்துவம் கிடையாது. அதிலே அசலாக சிந்திக்கிறவர்களை முன்நிறுத்திப் பேசுகிறீர்கள். உங்களை சந்தித்து கமலநாதன் ஐயா நூலிலே கையெழுத்து வாங்கிக்கொண்டேன். உங்கள் இணையதளத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வலைப்பூ எழுதலாமென்றும் நினைக்கிறேன். நன்றி


முருகேசன்


அன்புள்ள முருகேசன்


தொடர்ந்து வாசியுங்கள். புரியாமல் போவதென்பது சிந்தனையில் அதுவரை என்ன நடந்ததெனத் தெரியாமலிருக்கும்போதுதான். வாசிக்க ஆரம்பித்தால் சிலநாட்களிலேயே எல்லாம் தெளிவாகிவிடும்.


எழுதுங்கள்


ஜெ


அன்பின் ஜெ.எம்.,


அயோத்திதாசர் பற்றி ஓர் ஆய்வே நடத்தி வருகிறீர்கள்.


முதற் சிந்தனையாளர் என்ற தொடரமைப்பே மிகவும் புதுமையான சொல்லாக்கமாக,அடுத்த சிந்தனையின் கண்ணியை-அதை முன்னெடுத்துச் சென்ற சிந்தனையாளர் பற்றி அறியும் ஆவலைத் தூண்டிக் கை பிடித்து அழைத்துப் போகிறது.


வாசிப்பில் ஆர்வமிருப்பவர்களுக்குமே கூட எல்லாத் துறை சார்ந்த எல்லா நூல்களையும் படிக்க நேரமும்,உரிய நூல்களும் கிடைப்பதில்லை.அத்தகையோர்க்கு உங்கள் கட்டுரைகள் அயோத்திதாசரின் சிந்தனைப் பின் புலத்தின் சாரத்தையே பிழிந்து தருவது மிகவும் பயனளிக்கக் கூடியது.


அயோத்திதாசர் குறித்த ஆய்வாக மட்டுமன்றி அது சார்ந்த சிந்தனைகளைப் பல தளங்களில்..பல பரிமாணங்களில்,பலரின் அணுகுமுறை பற்றிய வேறுபட்ட பார்வைகளோடு-அவற்றிலுள்ள முரண் மற்றும் ஒற்றுமை சார்ந்த அலசல்களோடு  விரித்தெடுத்துச் செல்லும் உங்கள் கட்டுரைகள் தமிழுக்கு நிலையாக வாய்க்கப் போகும் கொடைகளாகவே எனக்குப் படுகின்றன.


அன்புடன்,

எம்.ஏ.சுசீலா,

புதுதில்லி.


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்-7


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2011 11:30

அஞ்சலி, ஜான்சன்

நான் கல்லூரியில் காலடி எடுத்துவைத்த காலகட்டத்தில் மலையாள திரையுலகில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. மிகப்புகழ்பெற்றிருந்த அடிதடி கதாநாயகனாகிய ஜயன் விபத்தில் மறைந்தார். அது ஒரு நிமித்தம்போல, ஒரு அடையாளம் போல தோன்றியது. மிக விரைவிலேயே மலையாள அடிதடிப்படங்கள் மறைய ஆரம்பித்தன. யதார்த்தமான கலையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்தன. இன்று மலையாளத்தை உலகசினிமாவின் வரைபடத்தில் நிறுத்திய முக்கியமான இயக்குநர்கள் ஓர் அலைபோல மலையாளத்தில் நிகழ்ந்தனர்.



ஒருபக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கலைப்பட இயக்கம். மறுபக்கம் பரதன், பத்மராஜன், மோகன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வணிக அம்சம் கொண்ட கலைப்படங்கள். அந்தப்படங்களின் வணிக வெற்றி பொது ரசனையை மாற்றியமைத்தது. செயற்கையான காட்சியமைப்புகளும் நாடகத்தருணங்களும் மறைந்தன. மிகப்பெரிய வணிக இயக்குநர்களாக இருந்த ஐ.வி.சசி, ஜோஷி,ஹரிஹரன் போன்றவர்களும் கலைநடுத்தரப் படங்களை நோக்கி வந்தனர். மலையாள சினிமாவின் பொற்காலம் எண்பதுகளில் தொடங்கி தொடர்ச்சியாக இருபதாண்டுக்காலம் நீடித்தது. அனேகமாக இந்தியாவில் எந்த மொழியிலும் அப்படி ஒரு நீண்ட மலர்ச்சிக்காலம் இருந்ததில்லை.


1978ல் ஆரவம் என்றபடம் வெளிவந்தது. விசித்திரமான படம். ஒரு சின்ன கிராமத்தின் வேறுபட்ட மனிதர்களின் சித்திரம் மட்டும் கொண்டது. அங்கே ஒரு சின்ன சர்க்கஸ் கம்பெனி வந்து சேர்ந்து பண்பாட்டை மாற்றியமைத்துவிட்டு அது பாட்டுக்கு கிளம்பிச்செல்கிறது. மலையாள திரையின் பிற்கால நாயகர்கள் பலர் அறிமுகமான படம். படத்தை எழுதியவர் 'நட்சத்திரங்களே காவல்' என்ற நாவல் வழியாக உச்சபுகழுடன் இருந்த பி.பத்மராஜன். இயக்கியவர் கலை இயக்குநராக இருந்த பரதன். காவாலம் நாராயணப்பணிக்கரின் நவீனநாடகத்தில் நடித்த நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன் ஆகியோர் நடிகர்கள்.


அந்தப்படத்தில் ஓர் இசை இயக்குநரும் அறிமுகமானார், ஜான்ஸன். அன்றுமுதல் மலையாள நவீன திரைப்படங்களின் முக்கியமான ஒரு அடையாளமாக இருபத்தைந்தாண்டுக்காலம் இருந்தவர் ஜான்ஸன். முதல் படத்தில் 'முக்குற்றீ திருதாளீ' என ஆரம்பிக்கும் நாட்டுப்புறப்பாடல் கவனத்தைக் கவர்ந்ததென்றாலும் அடுத்து வந்த பரதன் படமான 'தகரா' மூலம் ஜான்ஸன் கேரளத்தை கவனிக்கச்செய்தார்.


தகரா பலவகையிலும் முக்கியமான படம். ஒருவகையில் ஒரு பாலியல்கிளர்ச்சிப்படம் அது. அன்று வரை சினிமாவில் இருந்துவந்த எந்த பாவனைகளும் இல்லாமல் காமத்தைக் காட்டியது. நாயகிக்குரிய அழகற்ற, ஆனால் மிகக்கவர்ச்சியான கிராமத்து கதாநாயகி. சப்பையான கதாநாயகன். சர்வசாதாரணமான சம்பவங்கள், இயல்பான உரையாடல். அதன் காட்சியமைப்புகளும் சரி ஒளிப்பதிவும் சரி அன்று ஒரு பேரனுபவமாக இருந்தன. இன்றும், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின்னரும் அந்தப்படத்தின் அழகும் நேர்த்தியும் மனதைக் கவர்கிறது. ஒருமேதையின் அறிமுகம் உண்மையில் நிகழ்ந்த படம்.


தகரா அன்று அது இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக இருந்தது அன்று. அது அடைந்த வெற்றி தொடர்ச்சியாக அத்தகைய படங்களை உருவாக்கியது. நடுத்தரக் கலைப்படங்களுக்கான சந்தையும் அதற்கான நடிகர்களும் தொழில்நுட்பக்கலைஞர்களும் உருவாகி வந்தார்கள். அனைவருமே பெரும்புகழ்பெற்றார்கள். ஜான்ஸனும். மலையாளத்தில் எப்போதுமே இன்னிசைமெட்டுகளே பெரும்புகழ்பெறும். அன்று சலீல் சௌதுரியும் தேவராஜனும் உச்சத்தில்தான் இருந்தார்கள். ஆனால் புதிய படங்களுக்கான புதிய இசையுடன் வந்தார் ஜான்ஸன்.


1953ல் திரிச்சூர் அருகே நெல்லிக்குந்நு என்ற ஊரில் இசைப்பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார் ஜான்ஸன். அவரது தந்தை ஒரு வங்கி ஊழியர். ஜான்ஸன் சர்ச்சில் புகழ்பெற்ற பாடகராக இருந்தார். பெண்குரலில் பாடுவதில் இருந்த திறமையால் மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் வந்தன. 1968ல் ஜான்ஸனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வாய்ஸ் ஆஃப் திரிச்சூர் என்ற இசைக்குழுவை உருவாக்கினார்கள். ஜான்ஸன் சிறந்த ஆர்மோனிய கலைஞர். புல்லாங்குழல், டிரம்ஸ், வயலின் போன்றவற்றையும் அவர் இசைப்பார்


விரைவிலேயே மெல்லிசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஒருகட்டத்தில் அதில் ஐம்பது உறுப்பினர்கள்கூட இருந்தார்கள். அவர்களின் குழுவின் நிகழ்ச்சிகளில் பாடகர் ஜெயச்சந்திரன் வந்து பாடுவதுண்டு. ஜெயச்சந்திரன் அவரை இசையமைப்பாளர் ஜி தேவராஜனுக்கு அறிமுகம் செய்தார். 1974ல் தேவராஜன் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஜான்ஸனை சென்னைக்கு கூட்டிவந்தார். ஜான்ஸன் தேவராஜனின் இசைக்குழுவில் அக்கார்டின் வாசிக்க ஆரம்பித்தார்.நான்குவருடங்களில் ஆரவம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்


ஜான்சன் இசையமைத்தபிரேமகீதங்கள் என்றபடத்தின்'ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம்' போன்றபாடல்கள் கேரளத்தில் இன்றுவரை பெரும் புகழுடன் இருப்பவை. ஜான்ஸன் பத்மராஜனிடமும் நெருக்கமானவராக இருந்தார். யதார்த்தச்சித்தரிப்பும் நுட்பமான மெல்லுணர்வுகளும் கொண்ட பத்மராஜன் படங்களில் அவரது இசை உணர்ச்சிகரமான ஒரு அம்சமாக இருந்தது. பத்மராஜனின் கடைசிப்படமான ஞான் கந்தர்வன் வரை அவரது 17 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சத்யன் அந்திகாடும் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவர். அவரது 25 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். கணிசமான பரதன் படங்களுக்கும் இசையமைத்தவர் அவரே


ஜான்சன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 1994ல் பொந்தன்மாட என்ற படத்துக்காக பெற்றார். அடுத்த வருடம் சுகிர்தம் படத்துக்காக மீண்டும் தேசியவிருது பெற்றார். சிறந்த இசையமைப்புக்காக ஓர்மைக்காய் [1982] வடக்கு நோக்கி யந்திரம் , மழவில் காவடி [1989] அங்கினெ ஓரு அவதிக்காலத்து [1999] ஆகிய படங்களுக்காக மூன்றுமுறை கேரள அரசு விருது பெற்றார். பின்னணி இசைக்காக சதயம் [1992] சல்லாபம் [1996] ஆகியபடங்களுக்காக கேரள அரசு விருது கிடைத்தது. 2006ல் மாத்ருபூமி விருது போட்டோகிராபர் படத்துக்காக கொடுக்கப்பட்டது


ஆனால் 1995களுக்குப் பின் அவரது இசையில் தளர்ச்சி ஏற்பட்டது. அவர் மெல்லமெல்ல ஒதுங்கிக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். 2000த்துக்குப் பின்னர் அவர் ஆறுவருடம் இசையமைக்கவேயில்லை. 2006ல் ஃபோட்டோகிராஃபர் என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப்படத்தின் பாடல்கள் அதே தரத்தில் இருந்தன, வெற்றியும் அடைந்தன. ஆனாலும் அவருடைய இசை வேகம் கொள்ளவில்லை


மேற்கண்ட தகவல்களை விக்கிபீடியாவில் இருந்து எடுத்திருக்கிறேன். ஜான்ஸன் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார், தமிழில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கண்களால் கைது செய் படத்துக்காக தீக்குருவி என்றபாடல் என விக்கிபிடியா சொல்கிறது.


ஜான்ஸன் சென்ற ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் மாரடைப்பால் இறந்தார். அவர்ருக்கு ஷான் , ரென் என இரு பிள்ளைகள். மனைவி ராணி.


ஜான்சன் லோகியின் நெருக்கமான நண்பர். லோகி எழுதிய பல படங்களுக்கு ஜான்ஸன் தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். நான் சென்னையில் ஒரே ஒருமுறை குமரகம் உணவகத்தில் ஜான்ஸனைப் பார்த்திருக்கிறேன். அவரது இசை என்னை என் இளமையில் கனவில் ஆழ்த்தியதைப்பற்றிச் சொன்னேன். [ஆனால் அவர் புகழுடன் இருந்த காலகட்டத்தில் அவரது பேரையெல்லாம் நான் கவனித்ததில்லை] அதிகம் பேசாதவரான ஜான்ஸன் புன்னகை செய்தார். செல்லும்போது என் கைகளை பற்றி மெல்ல அழுத்திவிட்டு சென்றார்.


ஜான்ஸனின் முக்கியமான பங்களிப்பு பின்னணி இசைக்கோர்ப்பிலேயே என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மலையாளத்தில் உருவாகிவந்த புதிய அலை திரைப்படங்களுக்கு பொருத்தமான மென்மையான, மௌனம் நிறைந்த இசையை அவர் அளித்தார். படத்தை விளக்கவோ மிகையாக்கவோ முயலாமல் மெல்லிய உணர்ச்சிகர இணைப்பை மட்டுமே அளிக்கக்கூடியது அவரது பின்னணி இசை.


ஜான்ஸனின் பல மெட்டுகள் என் இளமையின் நினைவுகளாக நெஞ்சில் தேங்கிக்கிடக்கின்றன. ஆடிவா காற்றே பாடிவா காற்றே ஆயிரம் பூக்கள் நுள்ளி வா , மெல்லெ மெல்லெ முகபடம் தெல்லொதுக்கி அல்லியாம்பல் பூவினே தொட்டுணர்த்தி , கோபிகே நின் விரல் தும்புரு மீட்டி , ஸ்வர்ணமுகிலே ஸ்வர்ண முகிலே ஸ்வப்னம் காணாறுண்டோ? , தங்கத்தோணி தென் மலயோரம் கண்டே' 'ஸ்யாமாம்பரம்' எல்லாமே இனிய வேதனையை மனதில் ஊறச்செய்யும் மென்மையான பாடல்கள்.


ஜான்ஸனுக்கு அஞ்சலி


சியாமாம்பரம்



ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம்



மெல்லெ மெல்லே முகபடம்



கோபிகே நின் விரல்



சுவர்ண முகிலே



அஞ்சலிகள்


ஹனீஃபாக்கா


லோகித் தாஸ் லோகி 2


முரளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2011 11:30

தமிழினி

'அன்னா ஹஜாரேவுக்கு இது புதிது அல்ல. அவருடைய போராட்டம் நாற்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. தனது சொந்த கிராமத்தை சீர்திருத்தி வளப்படுத்துவதில் தொடங்கிய அவருடைய சமூக, அரசியல் விழிப்புணர்வு போராட்டம் இன்றும் தேசம் தழுவிய ஒரு பெரும் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது.'


காந்தியம் இன்னும் சாகவில்லை என்ற கட்டுரையில் எம்.கோபாலகிருஷ்ணன் [மணல்கடிகை நாவலாசிரியர்] எழுதுகிறார்


தமிழினி பதிப்பகத்தின் வெளியீடான தமிழினி மாத இதழின் இணையப்பதிப்பு இப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழினி பெரும்பாலும் தமிழாய்வுகள், பண்பாட்டாய்வுகளை முன்னிறுத்தும் இதழ்


[image error]



தமிழினி இணைய இதழ்


தமிழினி பற்றி


தமிழினி ஐந்தாமிதழ்


தமிழினி இரண்டாமிதழ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2011 03:30

August 19, 2011

தறி-ஒருகடிதம்

ஜெ,


நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.


நானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை).


ஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழைய தறி. பட்டுத் தவிர மற்றவை எல்லாம் குழித்தறியில் தானே நெய்யப் பட்டிருக்கிறது. மேசைத்தறி அல்லது சப்பரத் தறி எனக்கு குறிப்பிடப்படுவது காலத்தால் மிகப்பிந்தியது என்று நினைக்கிறன். பட்டுக்கான தறி அமைப்பே வேறு, ஒடக்கோள் கையாலேயே நகர்த்தப் படுவது. சில 40 -50 வருட நெசவாளர்களிடம் பேசிய போது குழித்தறியில்வரும் தயாரிப்பு நேர்த்தி மற்றைய தறிகளில் வருவதில்லை என்று கூறினார்கள்.


உங்களுக்கே தெரிந்து இருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் கைத்தறி சார் தொழில் நகரம். நான் இங்க விசாரித்து அறிந்த வரை மேசைத் தறிகள் வந்தது ஒரு 50 – 60 வருடங்களுக்கு உள்ளாகத்தான். இங்கு நெசவு செய்யும் வெவ்வேறு சமூகத்தினர் உண்டு, எல்லோருக்கும் பொதுவாகவே இந்த நிலை இருக்கிறது!


தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.


நன்றிகளுடன்,

சுவ.


அன்புள்ள சுந்தரவடிவேலன்


நான் சொன்னது அப்படி அல்ல. அ.கா.பெருமாள் அவர்கள் அவரது குமரிமாவட்ட ஆய்வுகளில் இங்கே கைக்கோளமுதலியார் என்ற சாதி இருப்பதைப்பற்றிச் சொல்லியிருந்தார். அவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டுவாக்கில் தஞ்சையில் இருந்து வந்தவர்கள். அந்தக் கைக்கோளமுதலியார்கள் தஞ்சையில் சாதிப்படியின் உச்சியில் போர்வீரர்களாக,கைக்கோளபப்டையாக இருந்தவர்கள். நாடுவிட்டு நாடுவந்து தொழில் மாற நேர்ந்தமையால் சாதி இறங்குமுகமாகி ஓர் உபசாதியாக மாறியது என சொல்லியிருந்தார். இருபதாம் நூற்றாண்டில் மேஜைத்தறி இங்கே அறிமுகமானபோது இங்குள்ள நெசவாளர்கள் வெளியே இருந்து வந்த அந்த 'வரத்தர்'களை மேஜைத்தறி போடக்கூடாது குழித்தறியிலேயே இருந்து நெசவுசெய்ய வேண்டும் என்று வகுத்துத் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டார்கள் என்றார்.  அதை நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2011 11:30

கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை.


அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லை என்பதே உண்மை. மதுரையில் இருந்து வாசக எதிர்வினைகள் மிகக் குறைவென்றாலும் சாத்தூர், சிவகாசி, தேனி போடி என சுற்றுவட்டாரங்களில் இருந்து எப்போதுமே நல்ல வாசக எதிர்வினை இருக்கும். மதுரையில் அது தெரிவதில் ஆச்சரியமில்லை. நெல்லை குமரியில் கணிசமாக இருக்கும் சிஎஸ்ஐ கிறித்தவர்கள் தொழிலுக்குத் தேவையான படிப்புக்கு வெளியே பைபிளை மட்டுமே படிக்கவேண்டுமென்ற மதக்கொள்கை கொண்டவர்கள். அவர்களிடம்தான் பணமும் இருக்கிறது.


சென்னைக்கு வெளியே எப்போதுமே நல்ல வாசகர்கள் உள்ள வட்டாரம் கொங்கு மண். இருந்தும் சேலத்தில் வெற்றிகரமாகப் புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைக்கப்படவில்லை, அதற்கான ஆட்கள் அங்கே இல்லை. ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன் முயற்சியில் உருவான புத்தகக் கண்காட்சி மிகவெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது, குறிப்பாக இவ்வருடக் கண்காட்சி அனைவருக்கும் மிகுந்த உற்சாகமளித்திருக்கிறது. இன்றைய காந்தி நல்ல விற்பனையால் வசந்தகுமார்கூட உவகையுடன் இருந்தார்.



சென்னைக்கு அடுத்தபடியாக நல்ல வாசகர்வட்டம் கொண்ட கோவையில் ஏனோ புத்தகக் கண்காட்சி வெற்றிபெற்றதே இல்லை. அதற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று கோவையின் புத்தகவணிகர்கள் சிலர் புத்தகக் கண்காட்சி வெற்றிபெறக்கூடாது என்றே பலவழிகளில் முயல்கிறார்கள் என்பது. செம்மொழிமாநாட்டை ஒட்டி நடந்த புத்தகக் கண்காட்சிகூடப் படுதோல்வி. முக்கிய காரணம் செம்மொழிக்கும் புத்தகங்களுக்கும் உள்ள உறவு ஆட்சியாளர்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. கண்காட்சி ஏதோ சம்பந்தமற்ற மூலையில் ஒதுக்கப்பட்டது. அதற்கு விளம்பரமும் அளிக்கப்படவில்லை.


ஆகவே மேற்கொண்டு கோவையில் புத்தகக் கண்காட்சி நடத்தப் பதிப்பாளர்கள் எவரும் ஆர்வம் கொள்ளவில்லை. அதையும் மீறி சில தனியார் விடாமுயற்சியுடன் அங்கே புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைக்க முயன்று இவ்வருடமும் நடத்தினார்கள். ஆனால் சென்றகால அனுபவங்கள் காரணமாகக் கடைபோட அதிக பதிப்பாளர்கள் வரவில்லை. மிகச்சிறிய அளவிலேயே அமைக்க முடிந்தது. கோவையின் பிரமுகர்கள், தொழில் அமைப்புகள் , கல்விநிறுவனங்கள் ஆகியவை ஒத்துழைக்கவில்லை. ஆகவே விளம்பரம் மிகமிகக் குறைவு. அரசு ஒத்துழைப்பும் குறைவு.


ஆக, இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்த பதிப்பாளர்கள் செலவு செய்தபணம்கூடக் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றே சொன்னார்கள். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் இருபதாயிரம் பேர்வரை ஒரேசமயம் உள்ளே இருந்தார்கள் என்றால் இங்கே எந்நிலையிலும் நூறுபேர் கூட இல்லை. அடுத்தவருடம் இந்த பதிப்பாளர்களும் வரமாட்டார்கள். ஒரு முக்கியமான பண்பாட்டுமையம் என்ற அளவில் கோவை மிகமிக வெட்கவேண்டிய விஷயம் இந்தத் தோல்வி.


புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான என் நண்பர் 'ஓஷோ' ராஜேந்திரன் என்னை அழைத்துப் புத்தகக் கண்காட்சியில் பேசவேண்டுமெனக் கோரியபோது நான் ஒத்துக்கொண்டமைக்கான காரணம் இதுவே. என்னுடைய சிறிய பங்களிப்பும் இருக்கவேண்டுமென நினைத்தேன். எஸ்.ராமகிருஷ்ணனையும் அழைக்கும்படி சொன்னேன். அவர் ஊரில் இல்லை


ஆகஸ்ட் 17 ஆம் தேதி கோவைசென்றுசேர்ந்தேன். அரங்கசாமி அருண் வந்தார்கள். பின்னர் ஈரோட்டில் இருந்து நண்பர்கள் கிருஷ்ணன்,. விஜயராகவன் வந்தார்கள். கோவை தியாகு புத்தகநிலையம் தியாகு வந்தார். முந்தைய அரங்குகளில் மிகமிகக் குறைவாகவே கூட்டம் இருந்தது என்று சொன்னார்கள். மிகச்சிறந்த ஜனரஞ்சகப்பேச்சாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நட்சத்திரமுமான பாரதி கிருஷ்ணகுமார் பேசியகூட்டத்தில்கூட நூறுபேர் இல்லை என்றார்கள். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு எட்டுப்பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துக் கிளம்பிச்சென்றோம். என்னுடன் பதினைந்துபேர் இருந்தார்கள்.



ஆச்சரியமாகக் கூட்டம் ஆரம்பிக்கும்போது போடப்பட்ட இருக்கைகள் நிரம்பிப் பலர் நிற்கும் அளவுக்குக் கூட்டம் வந்தது. எதிர்பாராத கூட்டமென்பதனால் கொஞ்சம் உற்சாகமடைந்துவிட்டேன் போல, நன்றாகவே பேசினேன். எழுதி மனப்பாடம் செய்து 'தன்னியல்பாக'ப் பேசுவது என் பாணி.


என் ஆசிரியர் ஞானி வந்திருந்தார், கோவையில் நான் பேசிய எந்தக்கூட்டத்திலும் அவர் வராமலிருந்ததே இல்லை. அது எனக்கு மிகப்பெரிய கௌரவம். நாஞ்சில்நாடன் வந்திருந்தார். பேச்சுக்குப்பின் ஒரு ஐம்பதுபேர் என்னைச்சுற்றிக்கொண்டார்கள். இணையதளக்கட்டுரைகளைப்பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். ஒன்றரை மணிநேரம் நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.


பொதுவான அவதானிப்புக்களாக எனக்குப்பட்டவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் முப்பதுக்குக் கீழே வயதுள்ள புதியவாசகர்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனேகமாக யாருமில்லை. அத்தனைபேருமே இணையதளம் வழியாக மட்டுமே என்னைக் கேள்விப்பட்டு வாசித்து நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தவர்கள். நிறையப்பேருக்க்கு இலக்கிய அறிமுகமே என் இணையதளம் வழியாகத்தான். அதுவும் ஒருவிவாதத்தின் பகுதியாக எவரோ அவர்களுக்கு ஏதோ ஒரு கட்டுரையைப் பரிந்துரைத்து அதனூடாக உள்ளே வந்திருக்கிறார்கள்.


என் எல்லா நூல்களையும் வாசித்திருப்பதாகச் சொன்ன பல இளைய வாசகர்களைப் பார்த்துக் கொஞ்சம் அரண்டுபோனேன், எனக்கே எல்லாப் பெயரும் ஞாபகமில்லை. வாசகர்களில் ஆச்சரியப்படத்தக்க ஒரு சிறிய வட்டம் கடந்த பதினைந்து நாட்களுக்குள் என்னை வாசிக்க ஆரம்பித்தவர்கள் -ஆம், அயோத்திதாசர் கட்டுரைக்குப்பின்.


அந்த வாசகர்கள் பெரும்பாலானவர்களுக்குப் புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலே என் இணையதளம் வழியாகத் தெரியவந்தது என்பது ஆச்சரியமளித்தது.


பொதுவாக வாசகர்களுக்கு என்னிடம் கேட்க ஏற்கனவே கேள்விகள் இருந்தன. அந்த உரை சார்ந்து ஏதும் கேட்கவில்லை. கேள்விக்கான பதில் முடிவதற்குள் அடுத்த கேள்வி. ஆனால் சமகால சினிமா அரசியல் இலக்கிய வம்பு பற்றிய கேள்விகள் ஏதுமில்லை. எல்லாமே பல்வேறு கருத்தியல்கள் சார்ந்தவை. வாசிப்பின் சிக்கல்கள் சார்ந்தவை.



இரவு அறைக்குத்திரும்பினேன். நண்பர்களுடன் வழக்கம்போல இரவு இரண்டுமணிவரை பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் அண்ணா ஹசாரே பற்றி. அண்ணா ஹசாரே பற்றி இன்று வந்துகொண்டிருக்கும் 'அறிவுஜீவி' ஐயங்களைப்பார்க்கையில் இவர்கள் எவருக்கும் இந்திய வரலாறோ, சென்ற நூறுவருடங்களில் உலகமெங்கும் நிகழ்ந்த காந்தியப்போராட்டங்களின் வரலாறோ தெரியவில்லை என்ற எண்ணமே எழுந்தது. குறிப்பாக நம் இதழாளர்களின் வாசிப்பும் அறிவும் பரிதாபத்துக்குரியவை.


எங்கும் எப்போதும் காந்திய போராட்டம் சிறிய இலக்குகளை எடுத்துக்கொண்டு சிறிய சிறிய வெற்றிகளை ஈட்டியபடித்தான் முன்னகரும், எங்கும் அது போராட்டங்களைக் குறியீடுகளுக்காகவே நிகழ்த்தும் [ காந்தியின் உப்பு, அன்னியத் துணி அல்லது மண்டேலாவின் வசிப்பிடப் பதிவு நிராகரிப்பு] எங்கும் எல்லாவகை மக்களையும் கலந்தே அது நிகழும். மக்கள்கூட்டத்துக்குரிய உணர்ச்சிவேகமும் ஒழுங்கின்மையும் கொண்டதாகவே அது இருக்கும். ஆம் அது ஒருவகை அரசின்மைவாதம். ஆனால் ஜனநாயகபூர்வமானது, வன்முறையற்றது.


சொல்லப்போனால் 'முறை'யான அரசு அமைப்புகள் செயலிழந்து மக்கள் விரோதத்தன்மை கொள்ளும்போது அவற்றைக் கலைத்துப் புதிய ஒன்றை உருவாக்குவதற்காக மக்கள் அரசை எதிர்த்து அரசுநிராகரிப்பை நிகழ்த்துவதே சத்தியாக்கிரகப் போர். காந்தியின் சட்டமறுப்பு உட்பட எல்லாமே இதுதான். ஆகவேதான் அதில் வன்முறையோ தனிநபர் எதிர்ப்போ கூடாதென்கிறார் காந்தி.


காந்தியப்போராட்டம் பற்றி இந்த அறிவுஜீவிகள் எழுப்பும் எல்லாக் கேள்விகளுக்குமான விடைகள் 1930களிலேயே சொல்லப்பட்டுவிட்டன. அவை நூறுவருடங்களில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமானவை என நிரூபிக்கப்பட்டும் விட்டன. அதன் பின் இன்று புதியதாகக் கிளம்பி 'என்னது இது சட்டவிரோதமாக்குமே' என்று விவாதிக்கவருகிறார்கள் 'லோக்பால் வந்தா ஆச்சா?' என்கிறார்கள். 'உப்பு காச்சினா சுதந்திரமா' என்று கேட்ட அதே ஆசாமிகளின் வாரிசுகள்.


இரவு ,இலக்கியம் அரசியல் என்று பேச்சு பரவிச்சென்றபின் விடிகாலையில்தான் தூங்கினோம். காலையில் கோவைக்குத் தமிழருவி மணியன் வருவதாகச் சொன்னார்கள். தமிழருவி மணியன் ஈரோடு சென்ற சில மாதங்களாகவே இன்றைய காந்தி நூலைப்பற்றி நிறைய பேசிவருகிறார். அந்நூல் பரவலாகச் சென்றடைந்தமைக்கு அவர் முக்கியமான காரணம். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அந்நூல் சிறப்பாக விற்றமைக்கு அவர் ஆற்றிய உரை காரணம் என்றார்கள். நான் அவரைச் சந்தித்ததில்லை. அபாரமான நேர்மைகொண்ட மனிதர் என நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கிறார்.


அவரைக் காலையில் சென்று சந்திக்க விரும்பி ஓஷோ ராஜேந்திரனிடம் சொன்னேன். இல்லை அவரே உங்கள் அறைக்கு வருவார் என்று சொன்னார். காலை பத்துமணிக்கு அவரை அரங்கசாமி கூட்டிவந்தார். இரண்டுமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரது இலக்கிய ஆர்வங்கள் பற்றிச் சொன்னார். அவரது இலக்கிய ஆசான் நா.பார்த்தசாரதி. அதன்பின் ஜெயகாந்தன். எப்போதும் பாரதி.



நா.பார்த்தசாரதியை நவீன எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது பற்றிச் சொன்னார். அது நா.பார்த்தசாரதியின் நெருக்கமான நண்பராகக் கடைசிவரை இருந்த சுந்தர ராமசாமியின் தரப்பு, அது நவீனத்துவ அழகியலின் நோக்கு, ஆனால் நான் அப்படிச்செய்பவனல்ல என்றேன். நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்களில் விரிவாகவே அதைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். ஒரு வாசகன் கல்கி, நா.பார்த்தசாரதி அகிலன் போன்ற இலட்சியவாத எழுத்துக்கள் வழியாக இலக்கியத்துக்குள் வருவதே நல்லது. இல்லையேல் அவன் நவீன இலக்கியத்தின் விமர்சன நோக்கால் வெற்று அவநம்பிக்கையாளனாக ஆகிவிட வாய்ப்பு அதிகம் என்பதே என் எண்ணம். ஒரு சமூகத்தில் இலட்சியவாதம் ஏதேனும் வடிவில் எப்போதும் இருந்தபடியேதான் இருக்கவேண்டும்.


பொதுவாகத் தரமான எழுத்தாளர்கள் உள்தூண்டலுக்காகக் காத்திருப்பார்கள் , ஆகவே குறைவாகவே எழுதுவார்கள் என்கிறார்கள், நீங்களோ தரமாகவும் நிறையவும் எழுதுகிறீர்களே என்று கேட்டார். நான் விளக்கினேன். இருவகை எழுத்தாளர்கள் உண்டு. ஒருசாரார் அவர்களின் வாழ்க்கைசார்ந்த ஒரு சிறிய இடத்தை, நுண்மையான ஒரு பகுதியை, மட்டுமே மீண்டும் மீண்டும் அறிய முயல்பவர்களாக இருப்பார்கள். அவர்களின்பார்வை ஒட்டுமொத்தமானது அல்ல. முழுமை நோக்கி விரியக்கூடியதும் அல்ல. மௌனி, ஜானகிராமன், சுந்தரராமசாமி எனத் தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் அவ்வகைப்பட்டவர்கள். உலகம் முழுக்க அப்படிப்பட்டவர்கள் உண்டு


ஆனால் இன்னொருவகை எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகப் பார்க்க நினைப்பவர்கள். தன் ஆழ்மன அறிதல்களை வரலாறு அரசியல் சமூகம் என எல்லா திசைகளுக்கும் விரிப்பவர்கள். அவர்களின் ஆர்வங்களும் தேடல்களும் பல திசைப்பட்டவை. என் நோக்கில் அவர்களே பேரிலக்கியவாதிகள். நான் அவர்களையே முன்னுதாரணமாகக் கொள்கிறேன். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன், சிவராம காரந்த் போன்றவர்கள் எழுதிய அளவில் சிறுபகுதியைக்கூட நான் உருவாக்கவில்லை என்றேன்.


அவருக்குத் தெரிந்த பல எழுத்தாளர்கள் என்னைப்பற்றித் தன்முனைப்புக் கொண்டவர் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார். என்னுடைய எழுத்துக்கள் பலநூறு பக்கங்கள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பக்கங்களில் நான் என் தரப்பை முன்வைத்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் என்னை முன்வைத்ததில்லை. மாறாக ஒரு இலக்கிய மரபையே நான் முன்வைக்கிறேன். ஒரு சிந்தனை மரபையே முன்வைக்கிறேன். புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமி அசோகமித்திரன் தேவதேவன் என நான் எப்போதும் தமிழின் பிற முக்கியமான எழுத்தாளர்களையே முன்னிறுத்துகிறேன், என்னைத் தன்முனைப்புக் கொண்டவன் என்று சொல்லும் எழுத்தாளர்கள் மொத்த எழுத்துவாழ்க்கையில் ஒருமுறைகூட இன்னொரு எழுத்தாளர் பெயரைச் சொல்லியிருக்க மாட்டார்கள். சுயமேம்பாடு தவிர எதற்காகவும் செயல்பட்டிருக்கவும் மாட்டார்கள்.


ஆனால் எனக்கொரு தன்முனைப்பு உண்டு. அது நான் பாரதி முதலான ஒரு மரபில் வந்தவன் என்பதனால். கபிலன் சங்கரன் நாராயணகுரு நித்யா என ஒரு மரபில் வந்தவன் என்பதனால். சிறுமை என்னைத் தீண்டாது என எந்த மேடையிலும் வந்து நின்று சொல்லக்கூடிய தன்முனைப்பு அது. என் சொந்த வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியும் எப்போதும் வெளிப்படையானது, என் வாசகரோ எதிரியோ எவரும் எப்போதும் அதை ஆராயலாம் என்று சொல்லும் துணிவை எனக்களிப்பது அந்த தன்முனைப்பே.


அதற்கு அப்பால் எழுத்தாளனுக்கு என ஓர் ஆழமான தன்முனைப்பு உண்டு. ஒரு படைப்பை எழுதும்போது படைப்பு அவனைமீறி நிகழும் அற்புத கணங்களைக் கண்டிருப்பான். அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கும் அது என்ன என்று. அந்தப் பெருமிதமே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. அந்தத் தருணங்கள் வழியாக வந்தவன் எப்போதும் தன்னை உயர்வாகவே நினைப்பான். நான் அறிவேன், என் படைப்புகளில் தமிழின் ஈராயிரம் வருட இலக்கிய மரபின் உச்சநிலைகள் சில நிகழ்ந்துள்ளன என்று. உலக இலக்கியத்தின் இந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த படைப்புநிலைகளில் அவையும் உண்டு என்று. அதை எவருமே அங்கீரிக்காவிட்டாலும் எனக்கு ஒன்றுமில்லை. அந்த நிமிர்வை நான் விடப்போவதுமில்லை.


நான் விரிந்த வாசகர் வட்டம் கொண்டவன். ஆனால் மிகச்சாதாரண பள்ளி ஆசிரியராக மட்டும் இருந்தவர் தேவதேவன். சர்வசாதாரணமான வாழ்க்கை கொண்டவர். ஒருபோதும் நூறு வாசகர்களைச் சேர்த்துப் பார்த்தவரல்ல. ஆனால் அவரிடம் கூடும் அந்த இயல்பான நிமிர்வு, சிருஷ்டி கர்வம், எனக்கே பலசமயம் ஆச்சரியமளிக்கிறது. ஆம், படைப்பாளிக்குத்தெரியும் படைப்பாளியாக இருப்பதென்றால் என்ன என்று. மற்றவர்களுக்குத் தெரிந்தாலென்ன தெரியாவிட்டாலென்ன?


தமிழ்நாட்டில் இலக்கியத்தின் நிமிர்வை உள்ளூர உணர்ந்தவர்கள் சிலரே. பலர் இலக்கியத்தைப் பள்ளிகளில் கற்றதுடன் சரி. அதற்குமேல் எந்தவிதப் பண்பாட்டுக்கல்வியும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் அறிந்தவரை இலக்கியவாதி என்பவன் அக்குளில் துண்டை இடுக்கிக்கொண்டு கைகட்டி நிற்கவேண்டியவன். பரிசில்வாழ்க்கை வாழவேண்டியவன். செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களைப் புகழவேண்டியவன். அந்தப் பெரும்பான்மைக்கு இலக்கியவாதியின் சுயநிமிர்வு புரிவதில்லை. அதை ஒரு சாமானியனின் அர்த்தமற்ற ஆணவம் என்றே புரிந்துகொள்கிறார்கள்.


ஆம், பல தருணங்களில் ஆணவத்தையே பதிலாக அளித்ததுண்டு. அது ஜெயகாந்தன் எனக்களித்த வரி. 'அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன்' என்றார் அவர். அகங்காரம் மட்டுமே பதிலாக அமையுமளவுக்கு அற்ப எதிர்வினைகளை ஜெயகாந்தனைவிட அதிகமாகக் காணநேர்ந்தவன் நான்


காந்தியைப்பற்றி, நவகாந்திய சிந்தனையாளர்களைப்பற்றி விரிவாகப்பேசிக்கொண்டிருந்தோம். தமிழருவி மணியனுக்கு என் நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். அவருடனான சந்திப்பும் அந்தத் திறந்த உரையாடலும் மிகுந்த நிறைவூட்டுவதாக இருந்தது.


சேலத்தில் இரு பெண்கள் வானவன்மாதேவி, இயலிசைவல்லபி என்று பெயர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறார். Muscular Dystrophy என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள். சூழலில் மிகையாகி வரும் கதிரியக்கம் மற்றும் ரசாயனங்கள் மனித மரபணுக்கூறுகளில் உருவாகிவரும் நோய்களில் ஒன்று அது. அவர்களின் உடல் தசைகள் செயலிழந்து வருகின்றன. அந்நிலையிலும் தட்டச்சு வேலைசெய்து சம்பாதிக்கிறார்கள். ஏராளமாக வாசிக்கிறார்கள் அவர்களைப்பற்றிய செய்திகள் வரவர அவர்களைச்சுற்றி இலட்சிய நோக்குள்ள சேவைமனமுள்ள ஒரு இளைஞர்வட்டம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக குக்கூ அறிவியக்கம் என்ற அமைப்பை நடத்திவரும் சிவராஜ் மற்றும் நண்பர்கள்.



ஈரோட்டுக்கு வந்த எஸ்.ராமகிருஷ்ணன் இவ்விரு பெண்களையும் பற்றிச் சொல்லக்கேட்டு கிருஷ்ணன் உட்பட ஈரோட்டு நண்பர்கள் அவர்களைப்பார்க்கப் புத்தகங்களுடன் சேலம் சென்றிருந்தார்கள். சென்றுவந்தபின் என்னை அழைத்துப்பேசினார்கள். நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். அவர்களுக்கும் ஒரு சிறு பயணமாக இருக்கட்டுமே எனக் கார் ஏற்பாடு செய்து கோவை வரச்சொன்னேன். எல்லாருமாக நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் சென்றோம்.



நாஞ்சில்நாடன் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நிறையப்பேர் வந்துவிட்டார்கள். பலதுறைகளில் சேவைசெய்யக்கூடியவர்கள். அரசுப்பேருந்து ஏறிக் கால் சிதைந்த கீர்த்தனா என்ற 7 வயதுக் குழந்தையுடன் அந்தக் குழந்தையின் தாய் வந்திருந்தார். 12 முறை அதன் காலில் அறுவைசிகிழ்ச்சை செய்யப்பட்டிருக்கிறது. மிகச்சாதாரணமான பொருளியல் சூழல். பெரியமனிதர்களாகத் தேடிச்சென்று நிதி திரட்டிச் சிகிழ்ச்சைசெய்கிறார்கள். இன்னும்சில அறுவைசிகிழ்ச்சைகள் தேவை. அழகான குழந்தை. கண்ணாடியிலும் தாளிலும் ஓவியங்கள் வரைகிறாள். எனக்கு ஓர் ஓவியம் பரிசாகக் கொடுத்தாள்.


நாஞ்சில்நாடன் வீட்டிலேயே மாலைவரை பேசிக்கொண்டிருந்தோம். தமிழக வரலாற்றாய்வுச்சிக்கல்கள், தமிழ்நூல்களைப் பொருள்கொள்ளுதல் பற்றியெல்லாம். கீர்த்தனா மலர்ந்த சிரிப்புடன் பேச்சுக்களை முழுக்க உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். 'அவளைப்போட்டு அறுக்கிறோம்..' என்றார் கிருஷ்ணன். உண்மையில் அப்படி அல்ல. ஓரளவு புத்திசாலியான குழந்தை கூட புரியாத பெரிய விஷயங்களை அதி தீவிர கவனத்துடன் கேட்டுக்கொண்டிருக்கவே முயலும் என்பதைக் கவனித்திருக்கிறேன். பேசப்படுவது சிக்கலானதாக இருக்க இருக்க அவர்களின் கவனம் அதிகரிக்கிறது.



ஆனால் அவர்களுக்கு அதை போதித்தால் அவர்கள் சலிப்படைகிறார்கள். நாம் பேசும்போது நம்மில்கூடும் உத்வேகமே அவர்களை அதிகமாகக் கவர்கிறது. ஆகவே 'உனக்கு இது புரியாது' என்று சொல்லப்படுவதைக் குழந்தைகள் வெறுக்கின்றன. எல்லாக் குழந்தைகளுமே தங்களை அறிவார்ந்தவர்களாக, உலகின் மையங்களாக நினைப்பவை. 'உனக்கு போர் அடிக்கிறதா?' என்றெல்லாம் கேட்பது அவர்களின் அறிவுத்திறனை அவமதிப்பதென்றே எடுத்துக்கொள்வார்கள்.


சைதன்யாவிடம் அதை மிகவும் கவனித்திருக்கிறேன். இன்னொரு முறை தெளிவாகக்கூற முயன்றால்கூடக் கடுப்பாகிப் 'புரியுது மேலே பேசு' என்பாள். ஊட்டி புதுக்கவிதை அரங்கில் முழுக்க அமர்ந்திருந்தாள். எல்லாக் கவிதையையும் கேட்டுப் புரிந்துகொள்ளவும் செய்தாள். 'பாவம் பாப்பா, போய் வெளையாடு' என்று அவளிடம் சொன்ன ஒருவரைக்கூட அவள் மன்னிக்கவில்லை. 'அவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?' என்று உதட்டை அலட்சியமாகச் சுழிப்பாள்.


ஆனால் புத்திசாலியான குழந்தைகள் அறிவார்ந்த விஷயங்களை ஏளனம் செய்வதும் 'செம போர்' என அலட்சியம் செய்வதும் நம் நாட்டில் சகஜம். காரணம் பெற்றோர்தான். சின்னவயதிலேயே குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்குப் புரியாத அறிவார்ந்த விஷயங்களை, நுண்கலைகளைக் கிண்டல்செய்கிறார்கள். குழந்தைகளும் அப்படி இருக்கப் பழகிக்கொள்கிறார்கள். அதுவே இயல்பானது என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மனநிலை கடைசி வரை நீள்கிறது.



ஆகவேதான் பட்டமேற்படிப்பு படித்தபின்னரும்கூட நான்கு பக்கம் கொண்ட கட்டுரையை 'செம நீளம்' என்று கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். கொஞ்சம் சிக்கலான ஒரு விவாதத்தை 'மொக்கைப்பா' என்பார்கள். விஜய்க்கு அசின் நல்ல ஜோடியா இல்லை அனுஷ்காவா என்பதை மணிக்கணக்கில் நாள்கணக்கில் விவாதிப்பது மட்டும் மிக இயற்கையானதாகத் தெரிய ஆரம்பித்துவிடும். அபாரமான அறிவுத்திறன் கொண்ட நம் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை, நாம் அறிவுக்கு எதிரானவர்களாகத் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.


இயலிசைவல்லபி, வானவன்மாதேவி இருவரும் இன்றைய காந்தி வாசித்ததாகச் சொன்னார்கள். காந்திய விவாதத்தில் சில மார்க்ஸிய கலைச்சொற்கள் அல்லாமல் எங்கும் வாசிப்புக்கு இடர் ஏற்படவே இல்லை என்றார்கள். என் கதைகளைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்


இருவரிடமும் அவர்கள் எழுத முற்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னேன். எழுதுவது வேறு எதற்காகவும் அல்ல, அதிலுள்ள திறப்புகளின் இன்பத்துக்காக. அது அளிக்கும் முழுமையான தன்னிலை நிறைவுக்காக. தங்களிடம் மொழி இல்லை என்றார்கள். வாசிக்கவாசிக்க அது அமையும் என்று சொன்னேன். சாதாரணமான மொழியில் ' அதிகம்போனா இன்னும் அஞ்சு வருசம் இருப்போம் சார், அதுக்குள்ள நரம்புநோயாளிகளுக்கான ஒரு ஹோம் கட்டணும்னு ஆசை. இடம் பாக்கிறோம். ' என்று சொன்னார்கள்.


ஏராளமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் அப்பால் ஒவ்வொருவரிடமும் அவர்கள் மட்டுமே எழுதும் ஓர் உலகம் உள்ளது. அதை அவர்களால் எழுதமுடியும் என்றேன்.


அந்த நாள் நிறைவூட்டுவதாக இருந்தது என்று சொன்னார்கள். மாலையில் கிளம்பி அறைக்கு வந்தேன். இரவு எட்டரை மணி ரயிலில் திரும்பி நாகர்கோயில்.




எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை


கோவை புகைப்படத்தொகுதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2011 11:30

அண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி

வணக்கம்.


தொந்தரவுக்கு மன்னிக்கவும். அண்ணா ஹசாரேயின் போராட்ட்டத்தை பற்றி சில சொல்லவேண்டிஇருக்கிறது.


தற்போதைய அரசியல் வாதிகள் அனைவரும் தங்கள் கை காசை செலவழித்து தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வருவது எப்படியாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலா?. அல்லவே. எப்படியாவது ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டும் என்பதே. அப்படி பட்டவர்களிடம் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவரும் படி கூறினால் எப்படி முடியும். கந்தியப்போராட்டமே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது தானே. ஆனால் ஹசாரே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேருவதாக தெரிய வில்லையே. ஒரே அடியில் எதிரியின் கோட்டையையே அல்லவா தகர்க்க முனைகிறார்.


மேலும் ஹசாரேவுடன் உள்ளவர்கள் அனைவருமே வருமான வரியை சரியாக செலுத்தியவர்கள்தானா?.அரசியல் வாதிகள் இந்த கேள்வியை ஹசாரே விடமும் அவர்கள் ஆதரவாளர்களிடமும் கேட்டால் ஹசாரே என்ன பதில் கூறுவார்? கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதம் வரியாக கட்டசொன்னால் யார்தான் கட்டுவார்கள்?. சட்டத்திற்கு உட்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதியுங்கள் அதில் பத்து சதவிகிதம் வரியாக கட்டினால் போதும் என்று இருந்தால் இங்கே கருப்பு பணம் தான் இருக்க முடியுமா?. முதலில் தங்களிடம் உள்ள குறைகளை களைந்து விட்டு; களைவதற்கான போராட்டங்களை நடத்திவிட்டு அதாவது அரசாங்கத்திடம் வருமான வரியை குறைக்க சொல்லி போராடி வெற்றி பெற்று விட்டு ஹசாரே அடுத்த கட்டத்திற்கு போகலாமே!. ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் எத்தனை பேர் குறைந்த பட்சம் சாலை விதிகளையாவது ஒழுங்காக கடைபிடிக்கிறார்கள். எனது நண்பர் 2 ஜி உழலைபர்ரியும் அதை செய்தவர்களை பற்றியும் மணிக்கணக்காக என்னிடம் பேசிவிட்டு உழல் செய்தவர்களை திட்டிவிட்டு எந்த கூச்சமும் இல்லாமல் சாலையின் அடுத்த பக்கம் போவதற்கு இடது புறம் சென்று U டர்ன் எடுப்பதற்கு பதிலாக ராங் ரூட்டிலேயே ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்கிறார்.குறைந்த பட்சம் சாலை விதிகளையே மதிக்கத்தெரியாதவர்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள்.


திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் இருவர்க்கும் ஏதாவது நோய் உள்ளதா? என்று பரிசோதித்து விட்டுதான் திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் இப்பொழுது எவ்வளவு முக்கியம் என்பது தாங்கள் அறியாததா? இதை போன்ற மிக அவசரமான சட்டங்களை வேண்டி ஹசாரே போராடுவதுதானே இப்போது முக்கியம்?இதிலெல்லாம் வெற்றி பெற்று படிப்படியாக தானே மேலே செல்லவேண்டும். ஹசாரே இப்பொழுது கையிலெடுத்திருப்பது கடைசியாக செய்ய வேண்டிய போராட்டம் என்பது எனது கருத்து. ஹசாரே வுக்கு இலக்கியப் பரிச்சயம் இருந்திருந்தால் அவ்வாறு செய்ய முற்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம். இதில் தங்கள் கருத்தை அறிய முற்படுகிறேன்.


பணிவன்புடன்


கண்ணன்

திருச்சி


அன்புள்ள கண்ணன்,


நல்ல கடிதம். இதே கடிதத்தை ஏன் இன்னும் விரிக்கக்கூடாது? இப்போது ரேஷன் கார்டுகளில் பெயர்களை நிறையபேருக்கு தப்பாக அச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து ஏன் அண்ணா ஹசாரே உண்ணாவிரதமிருக்கக்கூடாது? பான்பராக் போட்டுக்கொண்டு கண்ட இடங்களில் துப்புகிறார்கள் அதை எதிர்த்து அல்லவா அண்ணா ஹசாரே முதலில் போராடியிருக்கவேண்டும்?


உங்களுக்கே இதெல்லாம் சங்கடமாக தெரியவில்லையா? உண்மையிலேயே மனமறிந்துதான் இதையெல்லாம் பேசுகிறீர்களா? இத்தகைய அபத்தமான குரல்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அதிகம் ஒலிக்கின்றன்றன?


வரலாற்றை பாருங்கள். எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது என காணலாம். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது வடமாநில மத்தியவற்கம் போராடித்தான். தென்னகத்தில் சுதந்திரப்போராட்டம் பெயரளவுக்கே நடந்தது. காந்தி மீண்டும் மீண்டும் இங்கே வந்து போராடியும்கூட இங்குள்ள நடுத்தரவர்க்கம் அஞ்சி, சோம்பியே கிடந்தது. இந்திராவின் ஊழலுக்கு எதிராஜ ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டமும் சரி, அவசரநிலைக்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டமும் சரி முழுக்கவே வடஇந்திய நடுத்தரவர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. தென்னக அறிவுஜீவிகள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவான நியாயங்களை புனைந்துகொண்டிருந்தார்கள்.


இந்தியாவின் எந்த ஒரு அரசியல்போராட்டமும் தென்னகத்தில் முனைகொள்ளவில்லை என்பதே உண்மை.நமது நடுத்தரவர்க்கம் கோழைத்தனத்தால், சுயநலத்தால் கட்டுண்டது. அதற்கான நியாயங்கள் புனைய தன்னுடைய முழுச் சிந்தனையையும் கற்பனையையும் பயன்படுத்தக்கூடியது. அதற்காக விதண்டாவாதம் செய்துகொண்டு நிறைவுகொள்வது.


காந்தியப்போராட்ட காலத்திலும் இதெல்லாம்தான் இங்கே பேசப்பட்டன . அன்றும் விதண்டாவாதத்தின் இரு முகங்கள் இவையாகவே இருந்தன. ஒன்று, போராட்டத்தின் இலக்கை குறைகூறி அதைவிட முக்கியமான போராட்டங்கள் உள்ளன, அவற்றுக்காக போராடியிருக்கலாமே என்று பேசுவது. இரண்டு, போராடுபவர்களின் தனிப்பட்ட தகுதியை ஐயப்படுவது.


அன்னியத்துணி புறக்கணிப்பின்போது அன்னிய ரயில்வேயை புறக்கணிக்கவேண்டியதுதானே என்ற கேள்வி பக்கம்பக்கமாக கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியா அன்று பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் அளித்த ஆதரவால்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்தது. பிரிடிஷாரை நீதிமன்றம் ரயில் எல்லாம் கொண்டுவந்த நல்லவர்களாக அன்றைய எளிய மக்கள் நினைத்தனர். ஆனால் மறைமுகப் பொருளாதாரச்சுரண்டல் மூலம் இந்தியாவின் பல்லாயிரம் வருடத்தைய பொருளியல் அடித்தளமே ஆட்டம்கண்டுவிட்டிருந்தது . அந்த உண்மையை மக்களுக்கு கொண்டுசெல்லவே அன்னியதுணி புறக்கணிப்பு போராட்டம் என்பது காந்தியால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் நம்முடைய அறிவுஜீவிகளுக்கு அது புரியவில்லை, அல்லது புரிந்துகொள்ள அவர்களின் சுயநலமும் கோழைத்தனமும் அனுமதிக்கவில்லை.


[image error]


அன்னியத்துணி புறக்கணிப்பை விட உடனடியாகச்செய்யப்படவேண்டியவை என ஒரு ஐம்பது நூறு போராட்டங்கள் ஒதுங்கிநின்றவர்களால் சொல்லப்பட்டன. அவற்றில் முக்கியமானது வங்கத்திலும் பிகாரிலும் எழுந்த பெரும் பஞ்சங்கள். அந்த பஞ்சங்களின்போதும்கூட பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. உடனடியாக காந்தி அங்கே போய் அந்த மக்களுக்காக போராடவேண்டும், துறைமுகம் சென்று ஏற்றுமதியாகும் தானியங்களை மறிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது சில காந்திய ஆதரவாளர்களுக்கும் சஞ்சலம் வந்திருக்கிறது.


ஆனால் காந்தி தெளிவாகவே இருந்தார். அவரது போராட்டம் மக்களுக்கு உண்மையை கற்பிக்கும் நோக்கம் கொண்டது. அப்பட்டமான ஓர் நடைமுறை உண்மையை தொகுத்து சொல்லும்போது மட்டுமே மக்களுக்கு அது சென்று சேர்கிறதென அவர் அறிந்திருந்தார். இந்தியாவில் அன்றுவரை எந்த காங்கிரஸ் போராட்டமும் மக்கள் பங்கேற்புடன் நிகழ்ந்ததில்லை. காரணம் மக்களுக்கு பிரிட்டிஷார் மேல்தான் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை அன்னியத்துணி புறக்கணிப்பும், அதன் வழியாக அப்பட்டமாக தெரியவந்த பிரிட்டிஷ் சுரண்டலும் அழித்தபின்னர்தான் இந்திய சுதந்திரப்போரில் பெருவாரியான மக்கள் பங்கேற்பு நிகழ ஆரம்பித்தது. காங்கிரஸ் படித்தபண்டிதர் கைகளில் இருந்து விலகி மக்களிடம் வந்து சேர்ந்தது.


காந்தியப்போராட்டங்களின்போது அன்றும் போராடுபவர்கள் மேல் ஐயம் உருவாக்கப்படுவது ஓர் உத்தியாகவே கடைப்பிடிக்கப்பட்டது. எப்போதுமே அரசியல் போராட்டத்துக்கு முதலில் வருபவர்கள் படித்த உயர்குடிகளே. நேருவும் பட்டேலும் சுபாஷும் எல்லாருமே படித்த உயர்தட்டினரே. அவர்களை சுட்டிக்காட்டி காந்தியப்போராட்டம் ஒரு போலி உயர்குடிக்கலகம் என்று அன்றும் சொல்லப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கான எளியமக்களை தெருவில் போராட வைத்தது அவ்வியக்கமே. உலக வரலாற்றில் மிக அதிகமான மக்கள் நேரடியாக ஈடுபட்ட போராட்டங்களில் ஒன்று இந்திய சுதந்திரப்போர்.



உங்களைப்போன்ற கேள்விகேட்டு நிற்பவர்களுக்கு சொல்லவேண்டியது ஒரே பதில்தான், அண்ணா அவருக்கு முக்கியமென படுவதற்காக தெருவில் இறங்கி போராடுகிறார். நீங்கள் முக்கியமென நினைப்பதற்காக நீங்கள் ஏன் போராடக்கூடாது? அப்படி எல்லா முக்கியமான விஷயங்களுக்காகவும் இங்கே போராட்டங்கள் நடக்கட்டுமே, யார் வேண்டாமென்றார்கள்? நடக்கும் போராட்டத்தை மட்டம்தட்ட நடக்காத போராட்டங்களை பற்றி பேசும் அற்பத்தனத்தை என்று விட்டொழிப்போம்?


அண்ணா ஹசாரேயின் போராட்டம் அவர் ஏதோ திடீரென ஆரம்பித்த ஒன்றல்ல. அவர் முப்பதாண்டுக்காலமாக பொது வாழ்க்கையில் இருக்கிறார். கிராம நிர்மாணத்திட்டங்களைச் செயல்படுத்திக்காட்டியிருக்கிறார். அந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எதிரியாக இருப்பது ஊழலே என உணர்ந்து நடைமுறையில் சந்திக்க நேர்ந்த ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தார். அவரது நேர்மையும் அவரது உறுதியும் அவர் இதுவரை சாதித்துக்காட்டியதும் சேர்ந்துதான் அவரை மக்கள் நாயகனாக ஆக்கின.


இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர்வது இன்று இந்தியாவின் ரத்தத்தை விஷமாக்கும் ஊழலைப்பற்றி. அந்த வேகமே அவருக்குப்பின்னால் இந்த பெரும் திரளை கூடச்செய்திருக்கிறது. எந்த ஒரு மக்கள் போராட்டமும் வெளியே இருந்து கொண்டுவரப்படுவதல்ல. அந்த மக்களின் உள்ளார்ந்த எதிர்ப்பாக அது ஏற்கனவே திரள ஆரம்பித்திருக்கும். அதற்கு ஒருவடிவமும் திசையும் கொடுப்பதே மக்கள்நாயகர்களின் பணி.


ஆகவேதான் ஆங்கிலம்பேசி, கோட்பாடுகளை விவாதித்து, இரவுபகலாக தொலைக்காட்சியில் தோன்றிக்கொண்டிருக்கும் ஆசாமிகளை மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்கள் தேடுவது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தலைவர்களை. அவர்களுடன் பேசும் தலைவர்களை. தர்க்கத்தால் பேசுபவர்களை அல்ல, இதயத்தால் பேசுபவர்களை.


அண்ணா ஹசாரேவைப்பற்றி 'ஆய்வு'கள் நடத்திக்கொண்டிருக்கும் நம் அறிவுஜீவிகளிடம் நம் மக்கள் 'டேய் நீ யாரு?' என்று கேட்பது அவர்கள் காதுகளில் விழுவதில்லை. உண்மையான காந்தியவாதி தியாகத்தால் உருவாகி வருகிறார். தியாகம் மூலம் அவரது சொற்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. வெட்டிவிவாதங்கள் மூலம் எவரும் அவரை விமர்சிக்கும் தகுதியைப்பெறுவதில்லை.


இத்தனை நீண்ட கடிதத்தை எழுதும் நீங்கள் குறைந்தது நான் இக்கேள்விகள் அனைத்துக்கும் ஏற்கனவே பதில் சொல்லியிருப்பதை அந்த நேரத்தில் பாதியைச் செலவிட்டு வாசித்திருக்கலாமே.?


ஜெ


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2


அண்ணா ஹசாரே கடிதங்கள்..


அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…


அண்ணா ஹசாரே,வசைகள்


அண்ணா ஹசாரே-2


அண்ணா ஹசாரே-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2011 05:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.