அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ,


அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் சொல்கிறார். அதைக்கேட்கும்போது நியாயமாகவும் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஞாநியை நேர்மையானவர் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்பதனால் இதைக்கேட்கிறேன்.


வெங்கட் ராமானுஜம்



அன்புள்ள வெங்கட்,


ஒரு பிரச்சினையின்போது வரலாற்றுப்பின்னணியில் வைத்து அதை முழுமையாகப் பார்ப்பவனே சிந்திப்பவன். அவனே பிறரிடம் பேச தகுதி கொண்டவன். நீங்கள் சொன்ன இருவருமே அந்த தகுதி அற்றவர்கள் என்பதை இந்த விஷயத்தில் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த ஒரு சின்ன வட்டத்துக்குள் வைத்து பேசுகிறார்கள். அதன்மூலம் தமிழகச் சிந்தனைக்கு மிகப்பெரிய அநீதியை இழைக்கிறார்கள். அவர்கள் இவ்விஷயத்தில் நேர்மையற்றிருக்கிறார்கள் என நினைக்கிறேன். என் ஆழமான மனக்கசப்பை , ஏன் வெறுப்பை, இப்போது பதிவுசெய்கிறேன்.


இன்று அரசியல்முகம் கொண்ட அனைவருமே ஏதேனும்வகையில் ஊழலுக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அண்ணா ஹசாரேயை வசைபாடுகிறார்கள். பொதுவெளியில் பேசியாகவேண்டிய அரசியல்பத்தி எழுத்தாளர்களோ இம்மாதிரி சிந்தனை சிக்கி தேங்கி கிடக்கிறார்கள். அவநம்பிக்கை விதைக்கிறார்கள். தமிழகத்தின் துரதிருஷடம் என்றே இதைச் சொல்லவேண்டும்.


கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டம் என்ன? இது பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கம். இந்தியச் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை தடுக்கும் பெரும் சக்தியாக இன்று பூதாகரமாக வளர்ந்து நிற்பது பொதுவாழ்க்கையில் ஊழல். அதை ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் ஏதோ ஒருவகையில் உணர்ந்திருக்கிறான். அதைப்பற்றி ஆழமான மனக்கசப்படைந்திருக்கிறான். அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்


ஒரு சாதாரண உதாரணம், சென்ற இருபதாண்டுகளில் ஊழலுக்கு எதிராகப்பேசும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. அந்த பொது உணர்வை தங்கள் ஊடகம் மூலம் உணர்ந்துகொண்ட வணிகத் திரைப்படப் படைப்பாளிகள் தொடர்ந்து அத்தகைய படங்களை உருவாக்குகிறார்கள். அவையெல்லாம் இந்த எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும் பிரச்சார சாதனங்களாக மாறியிருக்கின்றன


ஊழல் புதிய விஷயம் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் இங்கே ஊழலின் பொற்காலமாகவே இருந்திருக்கிறது. சீருடை அணிந்து இந்தியா வரும் பிரிட்டிஷ் நிலக்கரித்தொழிலாளியின் மைந்தன் பெரும் பிரபுவாக ஊர்திரும்பிக் கொண்டிருந்தான். இந்த தேசத்தின் வெப்பத்தை, நோய்களை தாங்கி இங்கே வாழ்வதற்கான உந்துதலை பிரிட்டிஷ் குடிமக்களுக்கு அளித்தது இங்கு கொழித்திருந்த பெரும் ஊழலே. அதற்காகவே அதை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர். இந்தியச்செல்வம் பிரிட்டனுக்கு ஒழுகிச்செல்ல ஊழலும் முக்கியமான காரணம்


இந்திய தேசிய இயக்கமே பிரிட்டிஷ் ஊழல்ராஜுக்கு எதிரான இயக்கம்தான். ஆகவே அதன் நாயகர்கள் ஊழலுக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். அந்த இலட்சியவாத வேகம் அரசியல்வாதிகளில் இந்தியா சுதந்திரம் பெற்று கால்நூற்றாண்டுக்காலம் நீடித்தது.



ஆனால் சுதந்திரம் கிடைத்தபின்னரும் பிரிட்டிஷார் உருவாக்கிய நிர்வாகஅமைப்பும் அதிகார வர்க்கமும் அப்படியே நீடித்தன. அவர்கள் பிரிட்டிஷ்காலகட்டத்து ஊழலையே பழகி அதையே செய்துகொண்டிருந்தார்கள். இங்கே நேரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம், அதாவது லைசன்ஸ் ராஜ், அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை அளித்தது. ஆகவே ஊழல் பலமடங்காக வளர்ந்தது. அதை பெரும்பாலும் இலட்சியவாதிகளான அன்றைய அரசியல்வாதிகளால் ஆளப்பட்ட நம் அரசுகளால் தடுக்க முடியவில்லை என்பதே வரலாறு.


மெல்லமெல்ல அதிகாரிகளால் அரசியல்வாதிகள் ஊழலுக்கு பழக்கப்படுத்தப்பட்டார்கள். நாடு பொருளியல் வளர்ச்சி நோக்கிச்செல்லச் செல்ல ஊழலின் வேகம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இதன் செயல்பாடே ஊழலால்தான் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டது. சுதந்திரப்போராட்ட நாயகர்களில் அதிகாரத்தை நாடாதவர்கள் அதற்கு எதிராக போராடினார்கள். முதல்பெரும் மக்களியக்கம் என்பது ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப்புரட்சி இயக்கம். அந்த காந்திய இயக்கம் சீக்கிரத்திலேயே அவசரநிலை மூலம் ஒடுக்கப்பட்டது. அவசர நிலையை வென்று அந்த ஆட்சியை வீழ்த்திக்காட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனால் முடிந்தது. ஆனால் அவர் நம்பியவர்களே அவரது கனவை சிதைத்தார்கள். அதிகார ருசி கண்டதும் அவர்களும் ஊழலில் மூழ்கி திளைத்தார்கள்.


இன்று உருவாகிவந்துள்ள நம் புதிய தலைமுறையின் அறிவுத்திறன் காரணமாக, அவர்களுக்கு வாய்ப்புகளை அளித்த புதியபொருளாதாரக் கொள்கைகள் வழியாக நாடு மேலும் பொருளாதார வளர்ச்சி காண்கிறது. ஆகவே இப்போது ஊழல் பலமடங்காகப் பெருகிவிட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலையும் போபர்ஸ் ஊழலையும் முந்த்ரா ஊழலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும் அந்த வளர்ச்சியின் விகிதம்.


இந்த ஊழலின் விளைவாக நிகழும் முதல் இழப்பு மக்களுக்கே. வளர்ச்சியின் பெரும்பங்கு வரியாக அரசுக்குச் செல்கிறது. அந்த செல்வம் வளர்ச்சிப்பணிகளாக மக்களிடம் திரும்பி வர வேண்டும். அப்போதுதான் அந்த அடிப்படைக்கட்டுமானங்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சி சாத்தியமாகும். ஆனால் அப்படி வராமல் ஊழல் தடுக்கிறது. ஆகவே இன்று நம் நாடு வளர்ச்சி குன்றித் திகைத்து நிற்கிறது. வளர்ச்சியின் பயன்கள் எளிய மக்களுக்குச் செல்வதில்லை.


ஸ்பெக்ட்ரமே உதாரணம். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியே அந்தத் துறையில் அத்தனை கோடிகளைக் கொண்டுசென்று கொட்டுகிறது. அந்த கோடிகள் அடிப்படைக் கட்டுமானமாகத் திரும்பி வந்தால் மட்டுமே இந்தியா அடுத்தகட்ட தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை அடையமுடியும். அந்தப் புள்ளியில் ராஜா-கனிமொழி-மாறன் கும்பல் சென்று அமரும்போது அந்த இயல்பான வளர்ச்சி உறைந்து பெரும் பின்னடைவு நிகழ்கிறது


ஞானி


ஒவ்வொருதளத்திலும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் அடிப்படைக்கட்டுமானத்தளத்தில் இன்று மிகப்பெரிய சிக்கலாக இருப்பதே ஊழல்தான். அமர்த்யா சென் முதல் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி வரை அதைச் சொல்லிப் புலம்பிவிட்டார்கள். ஒவ்வொரு சாமானிய இந்தியனுக்கும் அது தெரியும்.


அந்த ஊழலே இன்றைய முதல் பெரும் பிரச்சினை. அதைத் தடுக்க என்ன செய்வது? இன்று இந்தியாவிலிருக்கும் சட்டங்கள் கண்டிப்பாகப் போதாது. அதற்கான மிகச்சிறந்த ஆதாரம், இன்றுவரை இங்கே எந்த ஊழல் அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டதில்லை என்பதே.


ஏன்? இங்கிருக்கும் சட்டங்கள் இலட்சியவாதிகளான அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை. கடைசி அதிகாரம் அவர்களிடம் இருக்கும்படித்தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் ஆளும்கட்சி எதிர்கட்சியாகச் செயல்பட்டால் எல்லாத் தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படும் என அரசியல்சட்டமுன்னோடிகள் நம்பினர்.


கனிமொழியோ ராசாவோ பெரும்பாலும் தண்டிக்கப்பட மாட்டார்கள். காரணம் இத்தகைய வழக்கில் உண்மையான ஆதாரங்கள் ஆவணங்களே. அவை அரசிடம், அரசியல்வாதிகளிடம் இருக்கும். அவற்றை அரசு பெரும்பாலும் நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில்லை. அரசியல்வாதிகள் அனைவருமே ஒரே வர்க்கம். நாளையே கூட்டுகள் மாறினால் என்னசெய்வது? அதை கணக்கிட்டே அவர்கள் செயல்படுவார்கள்.


ஞாநி போன்றவர்களுக்கு இந்திய அரசுத்துறைகள் செயல்படும் விதம் பற்றி அரிச்சுவடியே தெரியாது. உங்களுக்குத்தெரியுமா, இந்திய தணிக்கைத்துறை ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு அரசுத்துறைகளைப்பற்றி முன்வைக்கும் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படும் ஊழல்களில் மிகமிகச்சிலவே வெளிவருகின்றன. தணிக்கைத்துறைக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமில்லை. அது பொதுக்கணக்குக் குழுவுக்கே அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும். அந்தக் குழு எப்போதுமே அரசியல்வாதிகளால் ஆனது. அங்கே நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் ஊழல்களையும் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து மறைத்துக் கொள்வார்கள்.


இங்குள்ள எல்லா அமைப்புகளும் இப்படியே. முன்னர் சொன்னதுபோல அவையெல்லாமே அரசியல்வாதிகளை நல்லவர்கள் என்று நம்பிய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று திருடனும் போலீஸும் சமரசம்செய்துகொள்ளும் காலம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாரதிய ஜனதா ஒத்துழைப்பது எளிது, எதியூரப்பா வழக்கில் காங்கிரஸ் ஒத்துழைத்தால் போதும். பெரும்பாலும் கடைசியில் நடப்பது இதுவே. இன்றுவரை இதுவே இந்திய யதார்த்தம்.


இதை எப்படி தடுப்பது? சமீபத்தைய உதாரணமே பார்ப்போம். இன்று வெடித்திருக்கும் ஸ்பெக்ட்ரம்போன்ற ஊழல்கள் பொதுதணிக்கைக்குழு முன்வைத்தவற்றில் இருந்து தற்செயலாக சில பொதுநல ஊழியர்களின் விடாப்பிடியான அணுகுமுறையால் வெளிக்கொணரப்பட்டவைதான். ஒருபக்கம் இன்றைய பொதுத்தணிக்கைக்குழு தலைவர் வினோத் ராய் போன்ற அசாதாரணமான அதிகாரிகள் இருந்தாலும் மறுபக்கம் பரஞ்சோய் குகா போன்ற இதழாளர்கள் இல்லையேல் இந்த ஊழலே வெளியே தெரியாமலாகியிருக்கும்.


ஆகவே அந்த பொதுநல ஊழியர்களையும் ஊழல்தடுப்பு அமைப்புக்கு உள்ளேயே கொண்டுவருவதற்கான முயற்சி என்று ரத்தினச்சுருக்கமாக லோக்பால் மசோதாவின் சாராம்சத்தைச் சொல்லலாம். அதாவது நீதித்துறையில் ஜூரி முறை இருந்ததுபோல. பொதுநலன்நாடுபவர்கள், நேர்மையாளர்கள் என புகழ்பெற்றவர்களின் கண்காணிப்பு அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் என்பதே லோக்பாலின் நோக்கம்.


இந்திய அரசியல்சட்டத்தை உருவாக்கிய முன்னோடிகள் என்ன நினைத்தார்கள் என்றால், அதிகாரிகளை அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளை அதிகாரிகளும் கண்காணித்தால் ஊழல் நிகழாது என. ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் கொள்ளும் முரண்பாட்டால் ஊழல் தடுக்கப்படும் என. ஜனநாயகத்தில் அப்படி முரண்படும் தரப்புகளை உருவாக்கி ஒருவரை ஒருவர் கண்காணிக்கச்செய்துதான் நம்மால் நியாயத்தை உருவாக்க முடியும் , வேறு வழி இல்லை.


இப்போது லோக்பால் மூலம் மூன்றாவதாக ஒரு தரப்பும் வந்து சேர்கிறது. அது ஊழல்தடுப்புக்கான ஒரு மக்கள் அரண் என்று சொல்லலாம். சமகால அரசியல்வாதிகள்மேல் நம்பிக்கை இல்லை என மக்கள் அறிவிக்கும் ஒரு முறை அது. அதற்கான தேவை இன்று வந்துவிட்டிருக்கிறது.


ஏன்? நம் அமைப்பில் அரசாங்கத்தை மக்கள் தேர்தல்மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடிகிறது. நம் முன்னோடிகள் அமைத்த அரசமைப்புச்சட்டம் அப்படி. ஆனால் தேர்தல் என்பது பணபலங்களின் மோதலாக ஆனபின் அதன் வழியாக அரசை மக்கள் கட்டுப்படுத்துவது போதாமலாகிவிட்டிருக்கிறது. ஆகவே இன்னும் நேரடியாக அரசாங்கத்தை மக்கள் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கோரிக்கை எழுந்துகொண்டே இருக்கிறது.


சொல்லப்போனால் கால்நூற்றாண்டாக பல தளங்களில் இக்கோரிக்கைகள் வலுப்பெற்று மிகச்சிறந்த விளைவை ஆற்றி வருகின்றன. முதன்முதலில் இந்த கோரிக்கை எழுந்தது எண்பதுகளில் சூழியல் சார்ந்துதான் என்பது வரலாறு. இயற்கையை அழிப்பதை அரசின் எல்லா அமைப்புகளும் இணைந்து செய்தபோது, ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் அதில் ஒரேகுரலில் பேசியபோது, பொதுநல ஊழியர்களால் பல்வேறு சூழியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை மக்கள்போராட்டங்கள்ளை முன்னெடுத்தன. சட்டப்போர்களை நிகழ்த்தின. அந்த அமைப்புகள் மக்கள் சார்பில் அரசை கண்காணித்தன. மெல்லமெல்ல அரசை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றன.


பின்னர் மனித உரிமை அமைப்புகள், பெண்கள் நல அமைப்புகள் அதே பாணியில் உருவாகி வந்தன. அவற்றில் செயல்படும் பொதுநல ஊழியர்கள் மூலம் இன்று இந்திய அரசின் மீதான முக்கியமான மக்கள்கட்டுப்பாடாக அவை ஆகியிருப்பதை எவரும் காணலாம். அவர்களின் போராட்டத்தால், சர்வதேச நிர்ப்பந்தத்தை அவர்கள் உருவாக்க முடிந்தமையால், மனித உரிமைக்காகவும் பெண்களுரிமைக்காகவும் அரசாங்கத்தைக் கண்காணிக்கும் மக்கள் அமைப்புகளை அரசே இன்று உருவாக்கியிருக்கிறது.


1993ல் இயற்றப்பட்ட மனித உரிமை காப்புச் சட்டம் மூலம் தேசிய மனித உரிமை கழகம் [National Human Rights Commission] அமைக்கப்பட்டதை ஓரு உதாரணமாகச் சொல்லலாம். அந்த அமைப்பு இயல்பாக உருவாகிவரவில்லை. பொதுநல ஊழியர்களின் ஒட்டுமொத்த போராட்டத்தின் விளைவாக உருவாகி வந்தது. கண்டிப்பாக அது ஓர் அரசாங்க அமைப்பு. அதற்கே உரிய பலவீனங்களும் சிக்கல்களும் கொண்டது. ஆனால் அந்த அமைப்பு கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது , அதை இந்திய அரசின் அமைப்புகள் எந்த அளவுக்கு அஞ்சுகின்றன என்று பார்த்தால் அதன் வல்லமை என்ன என்று தெரியும்.


அதேபோன்றுதான் தேசியபெண்கள் உரிமைச்சட்டத்தால் 1992 ல் அமைக்கப்பட்ட தேசிய பெண்கள் உரிமை கழகம் [ National Commission for Women] அதுவும் ஓர் அரசாங்க அமைப்பே. ஆனால் அது உருவான நாளில் இருந்து இந்தியா முழுக்க அது பெண்கள் மீதான என்னென்ன ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டுவந்தது என்பதை எவரும் காணலாம். இன்றும் அரசு மீது அதன் கட்டுப்பாடு எத்தகையது என்பதை காணலாம்


இன்று ஒவ்வொரு சூழியல் போராளியும், ஒவ்வொரு மனித உரிமைப்போராளியும் , ஒவ்வொரு பெண்ணுரிமைப்போராளியும் இந்த அமைப்புகளை முன்வைத்தே போராடுகிறார்கள். ஆம், அதை இன்னும் மேம்படச்செய்யவும்தான் போராடுகிறார்கள். அந்த மேம்பாட்டுக்கு எல்லையே இல்லை. எப்போதும் நடந்துகொண்டிருக்க வேண்டிய ஒரு தொடர் போராட்டம் அது. இதெல்லாம் இங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த அரசு அமைப்புகள் அளிக்கும் எல்லா பாதுகாப்புகளையும் பெற்றுக்கொண்டு நம்மில் சிலர் அரசாங்க அமைப்பால் என்ன பயன் என்கிறோம்.


இவ்வாறு பலதளங்களில் அரசு மீதான பொதுமக்களின் கண்காணிப்பு சாத்தியம் என்றும், அது வெற்றிகரமாக செயல்பட்டு சிறந்த விளைவுகளை உருவாக்கி வருகிறது என்றும் நிரூபிக்கப்பட்டபின்னரே ஊழல் தடுப்பு அமைப்பிலும் அது கோரப்படுகிறது. அண்ணா ஹசாரே அதை அவரது கிராமநிர்மாணச் செயல்பாடுகளில் இருந்து கண்டடைந்து முன்வைத்து வாதாடி வருகிறார். அவரது முன்னுதாரணம் மேலே சொன்ன அமைப்புகளே.


மனித உரிமைக் கழகம் போன்ற சட்டபூர்வமான அமைப்புகளில் மக்கள்பங்கேற்பு, அல்லது பொதுநல ஊழியர் பங்கேற்பு என்பது மிக மறைமுகமானதே. அந்நிலையிலேயே அவை பெரும்பங்களிப்பாற்ற முடிகின்றன. நேரடியான மக்கள் பங்கேற்பு, பொதுநல ஊழியர் பங்கேற்புள்ள ஓர் அமைப்பு இன்னும் பெரிதாக செயல்படமுடியும் என்ற எண்ணமே லோக்பால் அமைப்பின் விதை.ஆனால் இது ஊழல் சம்பந்தமானது என்பதனால் போராட்டம் இன்னும் பிரம்மாண்டமான மக்கள் பங்கேற்புடன் இருக்கவேண்டியிருக்கிறது.


இந்தியாவில் அரசு மீதான மக்கள் கண்காணிப்பு என்பது ஒட்டுமொத்தமாக எண்பதுகளில் ஆரம்பித்த ஓர் இயக்கம். அது பல தளங்களில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. அவ்வாறு சூழியல், பெண்ணுரிமை, மனிதஉரிமை சார்ந்து மக்கள்குழுக்கள் உருவாகி வந்தன. அவை இன்று இந்தியா முடுக்க முக்கியமான ஜனநாய சக்தியாக ஆகியிருக்கின்றன. அவற்றுக்கான ஒரு கருவியாகவே தகவலறியும் உரிமைச்சட்டம் இங்கே கோரப்பட்டது


1990ல் அருணா ராய் முன்வைத்து போராடிய கோரிக்கை. அது இன்றைய வடிவை அடைந்தது அண்ணா ஹசாரே நடத்திய தொடர் மக்கள் போராட்டங்கள்மூலம்தான். அந்தச்சட்டம் இன்று அத்தனை மக்களியக்கங்களாலும் மிகப்பெரிய ஆயுதமாகக் கையாளப்படுகிறது. அரசு மீதான நேரடியான மக்களின் கண்காணிப்பாக அது உள்ளது. அச்சட்டத்தின் அடுத்த விரிவாக்கமே லோக்பால்.


லோக்பால் பெண்ணுரிமைக் கழகம், மனித உரிமைக்கழகம் போன்ற அரசாங்க அமைப்புகளைப்போன்ற ஒன்றாகவே இருக்கப்போகிறது. அங்கும் அதிகார வர்க்க ஊடுருவலும் மெத்தனமும் கண்டிப்பாக இருக்கும். ஆனாலும் அதன் சாத்தியங்கள் அபாரமானவை. அதன் மக்கள் பங்கேற்பு என்பது மற்ற அமைப்புகளை விட பல மடங்கு அதிகம். அதன் அதிகாரமும் பல மடங்கு அதிகம். விளைவாக அரசாங்கத்தின் அத்தனை செயல்பாடுகள் மீதும் நேரடியாக ஒரு மக்கள் கண்காணிப்பு அதன்மூலம் உருவாகி வருகிறது. பிற அமைப்புகள் எப்படி வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கினவோ அப்படியே அதுவும் நிகழ்த்தும்.சொல்லப்போனால் இன்னும் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும்.


தேசிய மனித உரிமைக் கழகம் வந்ததனால் மனித உரிமைப்போர் முடிவுக்கு வரவில்லை, உண்மையில் அதன்பிறகே அது தீவிரமாக ஆரம்பித்தது. அந்தப் போருக்கு அந்த அமைப்பு ஒரு கருவியாக அமைந்தது. அதேபோலத்தான் ஊழலுக்கு எதிரான போருக்கு லோக்பால் அமைப்பு ஒரு வெற்றிகரமான கருவி.


கண்டிப்பாக ஊழலைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது. அம்பேத்காரின் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்டம் மனித உரிமைகளுக்கு முழு பாதுகாப்பளித்திருந்தது. ஆனாலும் தேசிய மனித உரிமைபாதுகாப்புச்சட்டமும், தேசிய மனித உரிமைபாதுகாப்பு கழகமும் ஏன் தேவைப்பட்டது? அதே காரணம்தான் இங்கும். அவை அரசியல்வாதிகளை நம்பி உருவாக்கப்பட்ட சட்டங்கள். இப்போது மக்கள் கண்காணிப்பு தேவையாகிறது


லோக்பால் அமைப்பு அளிக்கும் வாய்ப்பை இந்தியாவின் சட்டங்கள் அளிப்பதில்லை என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்று ஊழல் கண்காணிப்பும் தடுப்பும் அரசு, நீதிமன்றம் இரண்டின் கைகளில் மட்டுமே உள்ளன. நீதிமன்றத்தை அரசு எளிதாக ஏமாற்ற முடிகிறது. லோக்பால் போன்ற மக்கள் அமைப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான மக்களிணைப்பாக இருக்கும். நீதிமன்றத்துக்கு அரசை அது காட்டிக்கொடுக்கும். அரசை நீதிமன்றம் அதனூடாக கண்காணிக்கவும் முடியும். சட்டம் தெரிந்தும் சோ,திட்டமிட்டுக் குழப்புகிறார். தெரியாமல் ஞாநி குழப்புகிறார்.


சொல்லப்போனால் மருத்துவம், நீதித்துறை ஆகிய இரண்டிலும்கூட மக்கள் கண்காணிப்புக்கான அமைப்புகளை உருவாக்கியாகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்றிருக்கிறது. அவற்றின் ஊழல்களால் இந்தியாவின் வாழ்வே அபாயகரமான நிலையில் இருக்கிறது. லோக்பாலுக்கான இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அதுவாகவே இருக்கும்.


ஆம் லோக்பாலில் குறைபாடுகள் இருக்கலாம். சரியான பிரதிநிதித்துவம் இல்லாமலிருக்கலாம். தவறான ஒருசிலர் உள்ளே வரலாம். அதன் சட்டங்களில் ஓட்டைகள் இருக்கலாம். நடைமுறையில் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாமே அதை அடைந்தபின் தொடர் முயற்சிகள் மூலம் சீர்படுத்த வேண்டியவை. அவ்வகையில் சீர்படுத்திக்கொண்டே செல்லவேண்டியிருக்கும். லோக்பாலை விடாபிடியாக செயலூக்கம் கொண்டதாக அமைக்கவேண்டியிருக்கும்.


மாறாக இங்கே என்ன நிகழ்கிறது? அந்தக் கோரிக்கையை முன்வைத்து நடக்கும் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். அதை அடைவதற்காகப் போராடும் பொதுநலவாதிகளைக் கொச்சைப்படுத்த அதைக் காரணமாக ஆக்குகிறார்கள். அதில் உள்ள உள்நோக்கத்தை எளிதில் காணலாம்.


அனைத்துக்கும் மேலாக லோக்பாலுக்கான இந்த போராட்டம் லோக்பால் என்ற அமைப்பை வென்றெடுப்பதற்கானது மட்டுமல்ல. அதை முன்வைத்து ஊழலுக்கு எதிரான போராட்டமாக இது நடக்கிறது. எந்த மக்கள் போராட்டமும் அவ்வாறே நிகழ முடியும் . மக்கள் விழிப்புணர்வுக்கான போராட்டமாக வளர்கிறது என்பதை, அந்த மக்கள் எழுச்சியைக் காணும் கண் ஒருவருக்கில்லை என்றால் அவருக்கு என்ன சிந்தனைத்திறன் இருக்கிறது? என்ன நேர்மை இருக்கிறது?


ஞாநியின் நேர்மை மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது இருவிஷயங்களால் அவர் நேர்மை தவறியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒன்று அவரது தனிப்பட்ட அகங்காரம். அண்ணா ஹசாரேக்குக் கிடைக்கும் தேசியப்புகழ் அவரைப் பொருமச்செய்கிறது. நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்.


ஒருபோதும் தன் தனிவாழ்க்கையில் தியாகங்கள் செய்த களப்பணியாளனுக்கு வரும் மக்களாதரவு வெறுமே சொற்களை இறைக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கு வருவதில்லை. ஞாநியின் இடம் அவ்வளவுதான். அவருடைய பங்களிப்பும் அவ்வளவுதான். அந்த அப்பட்டமான உண்மையை அவரால் ஏற்க முடிந்தால் அவர் நியாயத்தைப் பார்க்கக்கூடும்


இரண்டாவதாக, தன் மீதான பிராமணமுத்திரையைத் தவிர்ப்பதற்காக எப்போதும் முற்போக்கு முத்திரையை தானே குத்திக்கொண்டாகவேண்டிய இடத்தில் இருக்கிறார் ஞாநி. முற்போக்கை விட முற்போக்காகக் காட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது. பரிதாபகரமான நிலைதான். சோவைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்த பிஜெபி தொண்டனையும்போலத்தான் அவரும். அவருக்கான நோக்கங்களே வேறு.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.