அண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி

வணக்கம்.


தொந்தரவுக்கு மன்னிக்கவும். அண்ணா ஹசாரேயின் போராட்ட்டத்தை பற்றி சில சொல்லவேண்டிஇருக்கிறது.


தற்போதைய அரசியல் வாதிகள் அனைவரும் தங்கள் கை காசை செலவழித்து தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வருவது எப்படியாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலா?. அல்லவே. எப்படியாவது ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டும் என்பதே. அப்படி பட்டவர்களிடம் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவரும் படி கூறினால் எப்படி முடியும். கந்தியப்போராட்டமே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது தானே. ஆனால் ஹசாரே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேருவதாக தெரிய வில்லையே. ஒரே அடியில் எதிரியின் கோட்டையையே அல்லவா தகர்க்க முனைகிறார்.


மேலும் ஹசாரேவுடன் உள்ளவர்கள் அனைவருமே வருமான வரியை சரியாக செலுத்தியவர்கள்தானா?.அரசியல் வாதிகள் இந்த கேள்வியை ஹசாரே விடமும் அவர்கள் ஆதரவாளர்களிடமும் கேட்டால் ஹசாரே என்ன பதில் கூறுவார்? கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதம் வரியாக கட்டசொன்னால் யார்தான் கட்டுவார்கள்?. சட்டத்திற்கு உட்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதியுங்கள் அதில் பத்து சதவிகிதம் வரியாக கட்டினால் போதும் என்று இருந்தால் இங்கே கருப்பு பணம் தான் இருக்க முடியுமா?. முதலில் தங்களிடம் உள்ள குறைகளை களைந்து விட்டு; களைவதற்கான போராட்டங்களை நடத்திவிட்டு அதாவது அரசாங்கத்திடம் வருமான வரியை குறைக்க சொல்லி போராடி வெற்றி பெற்று விட்டு ஹசாரே அடுத்த கட்டத்திற்கு போகலாமே!. ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் எத்தனை பேர் குறைந்த பட்சம் சாலை விதிகளையாவது ஒழுங்காக கடைபிடிக்கிறார்கள். எனது நண்பர் 2 ஜி உழலைபர்ரியும் அதை செய்தவர்களை பற்றியும் மணிக்கணக்காக என்னிடம் பேசிவிட்டு உழல் செய்தவர்களை திட்டிவிட்டு எந்த கூச்சமும் இல்லாமல் சாலையின் அடுத்த பக்கம் போவதற்கு இடது புறம் சென்று U டர்ன் எடுப்பதற்கு பதிலாக ராங் ரூட்டிலேயே ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்கிறார்.குறைந்த பட்சம் சாலை விதிகளையே மதிக்கத்தெரியாதவர்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள்.


திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் இருவர்க்கும் ஏதாவது நோய் உள்ளதா? என்று பரிசோதித்து விட்டுதான் திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் இப்பொழுது எவ்வளவு முக்கியம் என்பது தாங்கள் அறியாததா? இதை போன்ற மிக அவசரமான சட்டங்களை வேண்டி ஹசாரே போராடுவதுதானே இப்போது முக்கியம்?இதிலெல்லாம் வெற்றி பெற்று படிப்படியாக தானே மேலே செல்லவேண்டும். ஹசாரே இப்பொழுது கையிலெடுத்திருப்பது கடைசியாக செய்ய வேண்டிய போராட்டம் என்பது எனது கருத்து. ஹசாரே வுக்கு இலக்கியப் பரிச்சயம் இருந்திருந்தால் அவ்வாறு செய்ய முற்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம். இதில் தங்கள் கருத்தை அறிய முற்படுகிறேன்.


பணிவன்புடன்


கண்ணன்

திருச்சி


அன்புள்ள கண்ணன்,


நல்ல கடிதம். இதே கடிதத்தை ஏன் இன்னும் விரிக்கக்கூடாது? இப்போது ரேஷன் கார்டுகளில் பெயர்களை நிறையபேருக்கு தப்பாக அச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து ஏன் அண்ணா ஹசாரே உண்ணாவிரதமிருக்கக்கூடாது? பான்பராக் போட்டுக்கொண்டு கண்ட இடங்களில் துப்புகிறார்கள் அதை எதிர்த்து அல்லவா அண்ணா ஹசாரே முதலில் போராடியிருக்கவேண்டும்?


உங்களுக்கே இதெல்லாம் சங்கடமாக தெரியவில்லையா? உண்மையிலேயே மனமறிந்துதான் இதையெல்லாம் பேசுகிறீர்களா? இத்தகைய அபத்தமான குரல்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அதிகம் ஒலிக்கின்றன்றன?


வரலாற்றை பாருங்கள். எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது என காணலாம். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது வடமாநில மத்தியவற்கம் போராடித்தான். தென்னகத்தில் சுதந்திரப்போராட்டம் பெயரளவுக்கே நடந்தது. காந்தி மீண்டும் மீண்டும் இங்கே வந்து போராடியும்கூட இங்குள்ள நடுத்தரவர்க்கம் அஞ்சி, சோம்பியே கிடந்தது. இந்திராவின் ஊழலுக்கு எதிராஜ ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டமும் சரி, அவசரநிலைக்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டமும் சரி முழுக்கவே வடஇந்திய நடுத்தரவர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. தென்னக அறிவுஜீவிகள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவான நியாயங்களை புனைந்துகொண்டிருந்தார்கள்.


இந்தியாவின் எந்த ஒரு அரசியல்போராட்டமும் தென்னகத்தில் முனைகொள்ளவில்லை என்பதே உண்மை.நமது நடுத்தரவர்க்கம் கோழைத்தனத்தால், சுயநலத்தால் கட்டுண்டது. அதற்கான நியாயங்கள் புனைய தன்னுடைய முழுச் சிந்தனையையும் கற்பனையையும் பயன்படுத்தக்கூடியது. அதற்காக விதண்டாவாதம் செய்துகொண்டு நிறைவுகொள்வது.


காந்தியப்போராட்ட காலத்திலும் இதெல்லாம்தான் இங்கே பேசப்பட்டன . அன்றும் விதண்டாவாதத்தின் இரு முகங்கள் இவையாகவே இருந்தன. ஒன்று, போராட்டத்தின் இலக்கை குறைகூறி அதைவிட முக்கியமான போராட்டங்கள் உள்ளன, அவற்றுக்காக போராடியிருக்கலாமே என்று பேசுவது. இரண்டு, போராடுபவர்களின் தனிப்பட்ட தகுதியை ஐயப்படுவது.


அன்னியத்துணி புறக்கணிப்பின்போது அன்னிய ரயில்வேயை புறக்கணிக்கவேண்டியதுதானே என்ற கேள்வி பக்கம்பக்கமாக கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியா அன்று பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் அளித்த ஆதரவால்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்தது. பிரிடிஷாரை நீதிமன்றம் ரயில் எல்லாம் கொண்டுவந்த நல்லவர்களாக அன்றைய எளிய மக்கள் நினைத்தனர். ஆனால் மறைமுகப் பொருளாதாரச்சுரண்டல் மூலம் இந்தியாவின் பல்லாயிரம் வருடத்தைய பொருளியல் அடித்தளமே ஆட்டம்கண்டுவிட்டிருந்தது . அந்த உண்மையை மக்களுக்கு கொண்டுசெல்லவே அன்னியதுணி புறக்கணிப்பு போராட்டம் என்பது காந்தியால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் நம்முடைய அறிவுஜீவிகளுக்கு அது புரியவில்லை, அல்லது புரிந்துகொள்ள அவர்களின் சுயநலமும் கோழைத்தனமும் அனுமதிக்கவில்லை.


[image error]


அன்னியத்துணி புறக்கணிப்பை விட உடனடியாகச்செய்யப்படவேண்டியவை என ஒரு ஐம்பது நூறு போராட்டங்கள் ஒதுங்கிநின்றவர்களால் சொல்லப்பட்டன. அவற்றில் முக்கியமானது வங்கத்திலும் பிகாரிலும் எழுந்த பெரும் பஞ்சங்கள். அந்த பஞ்சங்களின்போதும்கூட பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. உடனடியாக காந்தி அங்கே போய் அந்த மக்களுக்காக போராடவேண்டும், துறைமுகம் சென்று ஏற்றுமதியாகும் தானியங்களை மறிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது சில காந்திய ஆதரவாளர்களுக்கும் சஞ்சலம் வந்திருக்கிறது.


ஆனால் காந்தி தெளிவாகவே இருந்தார். அவரது போராட்டம் மக்களுக்கு உண்மையை கற்பிக்கும் நோக்கம் கொண்டது. அப்பட்டமான ஓர் நடைமுறை உண்மையை தொகுத்து சொல்லும்போது மட்டுமே மக்களுக்கு அது சென்று சேர்கிறதென அவர் அறிந்திருந்தார். இந்தியாவில் அன்றுவரை எந்த காங்கிரஸ் போராட்டமும் மக்கள் பங்கேற்புடன் நிகழ்ந்ததில்லை. காரணம் மக்களுக்கு பிரிட்டிஷார் மேல்தான் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை அன்னியத்துணி புறக்கணிப்பும், அதன் வழியாக அப்பட்டமாக தெரியவந்த பிரிட்டிஷ் சுரண்டலும் அழித்தபின்னர்தான் இந்திய சுதந்திரப்போரில் பெருவாரியான மக்கள் பங்கேற்பு நிகழ ஆரம்பித்தது. காங்கிரஸ் படித்தபண்டிதர் கைகளில் இருந்து விலகி மக்களிடம் வந்து சேர்ந்தது.


காந்தியப்போராட்டங்களின்போது அன்றும் போராடுபவர்கள் மேல் ஐயம் உருவாக்கப்படுவது ஓர் உத்தியாகவே கடைப்பிடிக்கப்பட்டது. எப்போதுமே அரசியல் போராட்டத்துக்கு முதலில் வருபவர்கள் படித்த உயர்குடிகளே. நேருவும் பட்டேலும் சுபாஷும் எல்லாருமே படித்த உயர்தட்டினரே. அவர்களை சுட்டிக்காட்டி காந்தியப்போராட்டம் ஒரு போலி உயர்குடிக்கலகம் என்று அன்றும் சொல்லப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கான எளியமக்களை தெருவில் போராட வைத்தது அவ்வியக்கமே. உலக வரலாற்றில் மிக அதிகமான மக்கள் நேரடியாக ஈடுபட்ட போராட்டங்களில் ஒன்று இந்திய சுதந்திரப்போர்.



உங்களைப்போன்ற கேள்விகேட்டு நிற்பவர்களுக்கு சொல்லவேண்டியது ஒரே பதில்தான், அண்ணா அவருக்கு முக்கியமென படுவதற்காக தெருவில் இறங்கி போராடுகிறார். நீங்கள் முக்கியமென நினைப்பதற்காக நீங்கள் ஏன் போராடக்கூடாது? அப்படி எல்லா முக்கியமான விஷயங்களுக்காகவும் இங்கே போராட்டங்கள் நடக்கட்டுமே, யார் வேண்டாமென்றார்கள்? நடக்கும் போராட்டத்தை மட்டம்தட்ட நடக்காத போராட்டங்களை பற்றி பேசும் அற்பத்தனத்தை என்று விட்டொழிப்போம்?


அண்ணா ஹசாரேயின் போராட்டம் அவர் ஏதோ திடீரென ஆரம்பித்த ஒன்றல்ல. அவர் முப்பதாண்டுக்காலமாக பொது வாழ்க்கையில் இருக்கிறார். கிராம நிர்மாணத்திட்டங்களைச் செயல்படுத்திக்காட்டியிருக்கிறார். அந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எதிரியாக இருப்பது ஊழலே என உணர்ந்து நடைமுறையில் சந்திக்க நேர்ந்த ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தார். அவரது நேர்மையும் அவரது உறுதியும் அவர் இதுவரை சாதித்துக்காட்டியதும் சேர்ந்துதான் அவரை மக்கள் நாயகனாக ஆக்கின.


இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர்வது இன்று இந்தியாவின் ரத்தத்தை விஷமாக்கும் ஊழலைப்பற்றி. அந்த வேகமே அவருக்குப்பின்னால் இந்த பெரும் திரளை கூடச்செய்திருக்கிறது. எந்த ஒரு மக்கள் போராட்டமும் வெளியே இருந்து கொண்டுவரப்படுவதல்ல. அந்த மக்களின் உள்ளார்ந்த எதிர்ப்பாக அது ஏற்கனவே திரள ஆரம்பித்திருக்கும். அதற்கு ஒருவடிவமும் திசையும் கொடுப்பதே மக்கள்நாயகர்களின் பணி.


ஆகவேதான் ஆங்கிலம்பேசி, கோட்பாடுகளை விவாதித்து, இரவுபகலாக தொலைக்காட்சியில் தோன்றிக்கொண்டிருக்கும் ஆசாமிகளை மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்கள் தேடுவது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தலைவர்களை. அவர்களுடன் பேசும் தலைவர்களை. தர்க்கத்தால் பேசுபவர்களை அல்ல, இதயத்தால் பேசுபவர்களை.


அண்ணா ஹசாரேவைப்பற்றி 'ஆய்வு'கள் நடத்திக்கொண்டிருக்கும் நம் அறிவுஜீவிகளிடம் நம் மக்கள் 'டேய் நீ யாரு?' என்று கேட்பது அவர்கள் காதுகளில் விழுவதில்லை. உண்மையான காந்தியவாதி தியாகத்தால் உருவாகி வருகிறார். தியாகம் மூலம் அவரது சொற்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. வெட்டிவிவாதங்கள் மூலம் எவரும் அவரை விமர்சிக்கும் தகுதியைப்பெறுவதில்லை.


இத்தனை நீண்ட கடிதத்தை எழுதும் நீங்கள் குறைந்தது நான் இக்கேள்விகள் அனைத்துக்கும் ஏற்கனவே பதில் சொல்லியிருப்பதை அந்த நேரத்தில் பாதியைச் செலவிட்டு வாசித்திருக்கலாமே.?


ஜெ


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2


அண்ணா ஹசாரே கடிதங்கள்..


அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…


அண்ணா ஹசாரே,வசைகள்


அண்ணா ஹசாரே-2


அண்ணா ஹசாரே-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2011 05:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.