கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை.


அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லை என்பதே உண்மை. மதுரையில் இருந்து வாசக எதிர்வினைகள் மிகக் குறைவென்றாலும் சாத்தூர், சிவகாசி, தேனி போடி என சுற்றுவட்டாரங்களில் இருந்து எப்போதுமே நல்ல வாசக எதிர்வினை இருக்கும். மதுரையில் அது தெரிவதில் ஆச்சரியமில்லை. நெல்லை குமரியில் கணிசமாக இருக்கும் சிஎஸ்ஐ கிறித்தவர்கள் தொழிலுக்குத் தேவையான படிப்புக்கு வெளியே பைபிளை மட்டுமே படிக்கவேண்டுமென்ற மதக்கொள்கை கொண்டவர்கள். அவர்களிடம்தான் பணமும் இருக்கிறது.


சென்னைக்கு வெளியே எப்போதுமே நல்ல வாசகர்கள் உள்ள வட்டாரம் கொங்கு மண். இருந்தும் சேலத்தில் வெற்றிகரமாகப் புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைக்கப்படவில்லை, அதற்கான ஆட்கள் அங்கே இல்லை. ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன் முயற்சியில் உருவான புத்தகக் கண்காட்சி மிகவெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது, குறிப்பாக இவ்வருடக் கண்காட்சி அனைவருக்கும் மிகுந்த உற்சாகமளித்திருக்கிறது. இன்றைய காந்தி நல்ல விற்பனையால் வசந்தகுமார்கூட உவகையுடன் இருந்தார்.



சென்னைக்கு அடுத்தபடியாக நல்ல வாசகர்வட்டம் கொண்ட கோவையில் ஏனோ புத்தகக் கண்காட்சி வெற்றிபெற்றதே இல்லை. அதற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று கோவையின் புத்தகவணிகர்கள் சிலர் புத்தகக் கண்காட்சி வெற்றிபெறக்கூடாது என்றே பலவழிகளில் முயல்கிறார்கள் என்பது. செம்மொழிமாநாட்டை ஒட்டி நடந்த புத்தகக் கண்காட்சிகூடப் படுதோல்வி. முக்கிய காரணம் செம்மொழிக்கும் புத்தகங்களுக்கும் உள்ள உறவு ஆட்சியாளர்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. கண்காட்சி ஏதோ சம்பந்தமற்ற மூலையில் ஒதுக்கப்பட்டது. அதற்கு விளம்பரமும் அளிக்கப்படவில்லை.


ஆகவே மேற்கொண்டு கோவையில் புத்தகக் கண்காட்சி நடத்தப் பதிப்பாளர்கள் எவரும் ஆர்வம் கொள்ளவில்லை. அதையும் மீறி சில தனியார் விடாமுயற்சியுடன் அங்கே புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைக்க முயன்று இவ்வருடமும் நடத்தினார்கள். ஆனால் சென்றகால அனுபவங்கள் காரணமாகக் கடைபோட அதிக பதிப்பாளர்கள் வரவில்லை. மிகச்சிறிய அளவிலேயே அமைக்க முடிந்தது. கோவையின் பிரமுகர்கள், தொழில் அமைப்புகள் , கல்விநிறுவனங்கள் ஆகியவை ஒத்துழைக்கவில்லை. ஆகவே விளம்பரம் மிகமிகக் குறைவு. அரசு ஒத்துழைப்பும் குறைவு.


ஆக, இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்த பதிப்பாளர்கள் செலவு செய்தபணம்கூடக் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றே சொன்னார்கள். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் இருபதாயிரம் பேர்வரை ஒரேசமயம் உள்ளே இருந்தார்கள் என்றால் இங்கே எந்நிலையிலும் நூறுபேர் கூட இல்லை. அடுத்தவருடம் இந்த பதிப்பாளர்களும் வரமாட்டார்கள். ஒரு முக்கியமான பண்பாட்டுமையம் என்ற அளவில் கோவை மிகமிக வெட்கவேண்டிய விஷயம் இந்தத் தோல்வி.


புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான என் நண்பர் 'ஓஷோ' ராஜேந்திரன் என்னை அழைத்துப் புத்தகக் கண்காட்சியில் பேசவேண்டுமெனக் கோரியபோது நான் ஒத்துக்கொண்டமைக்கான காரணம் இதுவே. என்னுடைய சிறிய பங்களிப்பும் இருக்கவேண்டுமென நினைத்தேன். எஸ்.ராமகிருஷ்ணனையும் அழைக்கும்படி சொன்னேன். அவர் ஊரில் இல்லை


ஆகஸ்ட் 17 ஆம் தேதி கோவைசென்றுசேர்ந்தேன். அரங்கசாமி அருண் வந்தார்கள். பின்னர் ஈரோட்டில் இருந்து நண்பர்கள் கிருஷ்ணன்,. விஜயராகவன் வந்தார்கள். கோவை தியாகு புத்தகநிலையம் தியாகு வந்தார். முந்தைய அரங்குகளில் மிகமிகக் குறைவாகவே கூட்டம் இருந்தது என்று சொன்னார்கள். மிகச்சிறந்த ஜனரஞ்சகப்பேச்சாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நட்சத்திரமுமான பாரதி கிருஷ்ணகுமார் பேசியகூட்டத்தில்கூட நூறுபேர் இல்லை என்றார்கள். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு எட்டுப்பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துக் கிளம்பிச்சென்றோம். என்னுடன் பதினைந்துபேர் இருந்தார்கள்.



ஆச்சரியமாகக் கூட்டம் ஆரம்பிக்கும்போது போடப்பட்ட இருக்கைகள் நிரம்பிப் பலர் நிற்கும் அளவுக்குக் கூட்டம் வந்தது. எதிர்பாராத கூட்டமென்பதனால் கொஞ்சம் உற்சாகமடைந்துவிட்டேன் போல, நன்றாகவே பேசினேன். எழுதி மனப்பாடம் செய்து 'தன்னியல்பாக'ப் பேசுவது என் பாணி.


என் ஆசிரியர் ஞானி வந்திருந்தார், கோவையில் நான் பேசிய எந்தக்கூட்டத்திலும் அவர் வராமலிருந்ததே இல்லை. அது எனக்கு மிகப்பெரிய கௌரவம். நாஞ்சில்நாடன் வந்திருந்தார். பேச்சுக்குப்பின் ஒரு ஐம்பதுபேர் என்னைச்சுற்றிக்கொண்டார்கள். இணையதளக்கட்டுரைகளைப்பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். ஒன்றரை மணிநேரம் நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.


பொதுவான அவதானிப்புக்களாக எனக்குப்பட்டவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் முப்பதுக்குக் கீழே வயதுள்ள புதியவாசகர்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனேகமாக யாருமில்லை. அத்தனைபேருமே இணையதளம் வழியாக மட்டுமே என்னைக் கேள்விப்பட்டு வாசித்து நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தவர்கள். நிறையப்பேருக்க்கு இலக்கிய அறிமுகமே என் இணையதளம் வழியாகத்தான். அதுவும் ஒருவிவாதத்தின் பகுதியாக எவரோ அவர்களுக்கு ஏதோ ஒரு கட்டுரையைப் பரிந்துரைத்து அதனூடாக உள்ளே வந்திருக்கிறார்கள்.


என் எல்லா நூல்களையும் வாசித்திருப்பதாகச் சொன்ன பல இளைய வாசகர்களைப் பார்த்துக் கொஞ்சம் அரண்டுபோனேன், எனக்கே எல்லாப் பெயரும் ஞாபகமில்லை. வாசகர்களில் ஆச்சரியப்படத்தக்க ஒரு சிறிய வட்டம் கடந்த பதினைந்து நாட்களுக்குள் என்னை வாசிக்க ஆரம்பித்தவர்கள் -ஆம், அயோத்திதாசர் கட்டுரைக்குப்பின்.


அந்த வாசகர்கள் பெரும்பாலானவர்களுக்குப் புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலே என் இணையதளம் வழியாகத் தெரியவந்தது என்பது ஆச்சரியமளித்தது.


பொதுவாக வாசகர்களுக்கு என்னிடம் கேட்க ஏற்கனவே கேள்விகள் இருந்தன. அந்த உரை சார்ந்து ஏதும் கேட்கவில்லை. கேள்விக்கான பதில் முடிவதற்குள் அடுத்த கேள்வி. ஆனால் சமகால சினிமா அரசியல் இலக்கிய வம்பு பற்றிய கேள்விகள் ஏதுமில்லை. எல்லாமே பல்வேறு கருத்தியல்கள் சார்ந்தவை. வாசிப்பின் சிக்கல்கள் சார்ந்தவை.



இரவு அறைக்குத்திரும்பினேன். நண்பர்களுடன் வழக்கம்போல இரவு இரண்டுமணிவரை பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் அண்ணா ஹசாரே பற்றி. அண்ணா ஹசாரே பற்றி இன்று வந்துகொண்டிருக்கும் 'அறிவுஜீவி' ஐயங்களைப்பார்க்கையில் இவர்கள் எவருக்கும் இந்திய வரலாறோ, சென்ற நூறுவருடங்களில் உலகமெங்கும் நிகழ்ந்த காந்தியப்போராட்டங்களின் வரலாறோ தெரியவில்லை என்ற எண்ணமே எழுந்தது. குறிப்பாக நம் இதழாளர்களின் வாசிப்பும் அறிவும் பரிதாபத்துக்குரியவை.


எங்கும் எப்போதும் காந்திய போராட்டம் சிறிய இலக்குகளை எடுத்துக்கொண்டு சிறிய சிறிய வெற்றிகளை ஈட்டியபடித்தான் முன்னகரும், எங்கும் அது போராட்டங்களைக் குறியீடுகளுக்காகவே நிகழ்த்தும் [ காந்தியின் உப்பு, அன்னியத் துணி அல்லது மண்டேலாவின் வசிப்பிடப் பதிவு நிராகரிப்பு] எங்கும் எல்லாவகை மக்களையும் கலந்தே அது நிகழும். மக்கள்கூட்டத்துக்குரிய உணர்ச்சிவேகமும் ஒழுங்கின்மையும் கொண்டதாகவே அது இருக்கும். ஆம் அது ஒருவகை அரசின்மைவாதம். ஆனால் ஜனநாயகபூர்வமானது, வன்முறையற்றது.


சொல்லப்போனால் 'முறை'யான அரசு அமைப்புகள் செயலிழந்து மக்கள் விரோதத்தன்மை கொள்ளும்போது அவற்றைக் கலைத்துப் புதிய ஒன்றை உருவாக்குவதற்காக மக்கள் அரசை எதிர்த்து அரசுநிராகரிப்பை நிகழ்த்துவதே சத்தியாக்கிரகப் போர். காந்தியின் சட்டமறுப்பு உட்பட எல்லாமே இதுதான். ஆகவேதான் அதில் வன்முறையோ தனிநபர் எதிர்ப்போ கூடாதென்கிறார் காந்தி.


காந்தியப்போராட்டம் பற்றி இந்த அறிவுஜீவிகள் எழுப்பும் எல்லாக் கேள்விகளுக்குமான விடைகள் 1930களிலேயே சொல்லப்பட்டுவிட்டன. அவை நூறுவருடங்களில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமானவை என நிரூபிக்கப்பட்டும் விட்டன. அதன் பின் இன்று புதியதாகக் கிளம்பி 'என்னது இது சட்டவிரோதமாக்குமே' என்று விவாதிக்கவருகிறார்கள் 'லோக்பால் வந்தா ஆச்சா?' என்கிறார்கள். 'உப்பு காச்சினா சுதந்திரமா' என்று கேட்ட அதே ஆசாமிகளின் வாரிசுகள்.


இரவு ,இலக்கியம் அரசியல் என்று பேச்சு பரவிச்சென்றபின் விடிகாலையில்தான் தூங்கினோம். காலையில் கோவைக்குத் தமிழருவி மணியன் வருவதாகச் சொன்னார்கள். தமிழருவி மணியன் ஈரோடு சென்ற சில மாதங்களாகவே இன்றைய காந்தி நூலைப்பற்றி நிறைய பேசிவருகிறார். அந்நூல் பரவலாகச் சென்றடைந்தமைக்கு அவர் முக்கியமான காரணம். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அந்நூல் சிறப்பாக விற்றமைக்கு அவர் ஆற்றிய உரை காரணம் என்றார்கள். நான் அவரைச் சந்தித்ததில்லை. அபாரமான நேர்மைகொண்ட மனிதர் என நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கிறார்.


அவரைக் காலையில் சென்று சந்திக்க விரும்பி ஓஷோ ராஜேந்திரனிடம் சொன்னேன். இல்லை அவரே உங்கள் அறைக்கு வருவார் என்று சொன்னார். காலை பத்துமணிக்கு அவரை அரங்கசாமி கூட்டிவந்தார். இரண்டுமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரது இலக்கிய ஆர்வங்கள் பற்றிச் சொன்னார். அவரது இலக்கிய ஆசான் நா.பார்த்தசாரதி. அதன்பின் ஜெயகாந்தன். எப்போதும் பாரதி.



நா.பார்த்தசாரதியை நவீன எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது பற்றிச் சொன்னார். அது நா.பார்த்தசாரதியின் நெருக்கமான நண்பராகக் கடைசிவரை இருந்த சுந்தர ராமசாமியின் தரப்பு, அது நவீனத்துவ அழகியலின் நோக்கு, ஆனால் நான் அப்படிச்செய்பவனல்ல என்றேன். நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்களில் விரிவாகவே அதைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். ஒரு வாசகன் கல்கி, நா.பார்த்தசாரதி அகிலன் போன்ற இலட்சியவாத எழுத்துக்கள் வழியாக இலக்கியத்துக்குள் வருவதே நல்லது. இல்லையேல் அவன் நவீன இலக்கியத்தின் விமர்சன நோக்கால் வெற்று அவநம்பிக்கையாளனாக ஆகிவிட வாய்ப்பு அதிகம் என்பதே என் எண்ணம். ஒரு சமூகத்தில் இலட்சியவாதம் ஏதேனும் வடிவில் எப்போதும் இருந்தபடியேதான் இருக்கவேண்டும்.


பொதுவாகத் தரமான எழுத்தாளர்கள் உள்தூண்டலுக்காகக் காத்திருப்பார்கள் , ஆகவே குறைவாகவே எழுதுவார்கள் என்கிறார்கள், நீங்களோ தரமாகவும் நிறையவும் எழுதுகிறீர்களே என்று கேட்டார். நான் விளக்கினேன். இருவகை எழுத்தாளர்கள் உண்டு. ஒருசாரார் அவர்களின் வாழ்க்கைசார்ந்த ஒரு சிறிய இடத்தை, நுண்மையான ஒரு பகுதியை, மட்டுமே மீண்டும் மீண்டும் அறிய முயல்பவர்களாக இருப்பார்கள். அவர்களின்பார்வை ஒட்டுமொத்தமானது அல்ல. முழுமை நோக்கி விரியக்கூடியதும் அல்ல. மௌனி, ஜானகிராமன், சுந்தரராமசாமி எனத் தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் அவ்வகைப்பட்டவர்கள். உலகம் முழுக்க அப்படிப்பட்டவர்கள் உண்டு


ஆனால் இன்னொருவகை எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகப் பார்க்க நினைப்பவர்கள். தன் ஆழ்மன அறிதல்களை வரலாறு அரசியல் சமூகம் என எல்லா திசைகளுக்கும் விரிப்பவர்கள். அவர்களின் ஆர்வங்களும் தேடல்களும் பல திசைப்பட்டவை. என் நோக்கில் அவர்களே பேரிலக்கியவாதிகள். நான் அவர்களையே முன்னுதாரணமாகக் கொள்கிறேன். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன், சிவராம காரந்த் போன்றவர்கள் எழுதிய அளவில் சிறுபகுதியைக்கூட நான் உருவாக்கவில்லை என்றேன்.


அவருக்குத் தெரிந்த பல எழுத்தாளர்கள் என்னைப்பற்றித் தன்முனைப்புக் கொண்டவர் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார். என்னுடைய எழுத்துக்கள் பலநூறு பக்கங்கள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பக்கங்களில் நான் என் தரப்பை முன்வைத்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் என்னை முன்வைத்ததில்லை. மாறாக ஒரு இலக்கிய மரபையே நான் முன்வைக்கிறேன். ஒரு சிந்தனை மரபையே முன்வைக்கிறேன். புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமி அசோகமித்திரன் தேவதேவன் என நான் எப்போதும் தமிழின் பிற முக்கியமான எழுத்தாளர்களையே முன்னிறுத்துகிறேன், என்னைத் தன்முனைப்புக் கொண்டவன் என்று சொல்லும் எழுத்தாளர்கள் மொத்த எழுத்துவாழ்க்கையில் ஒருமுறைகூட இன்னொரு எழுத்தாளர் பெயரைச் சொல்லியிருக்க மாட்டார்கள். சுயமேம்பாடு தவிர எதற்காகவும் செயல்பட்டிருக்கவும் மாட்டார்கள்.


ஆனால் எனக்கொரு தன்முனைப்பு உண்டு. அது நான் பாரதி முதலான ஒரு மரபில் வந்தவன் என்பதனால். கபிலன் சங்கரன் நாராயணகுரு நித்யா என ஒரு மரபில் வந்தவன் என்பதனால். சிறுமை என்னைத் தீண்டாது என எந்த மேடையிலும் வந்து நின்று சொல்லக்கூடிய தன்முனைப்பு அது. என் சொந்த வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியும் எப்போதும் வெளிப்படையானது, என் வாசகரோ எதிரியோ எவரும் எப்போதும் அதை ஆராயலாம் என்று சொல்லும் துணிவை எனக்களிப்பது அந்த தன்முனைப்பே.


அதற்கு அப்பால் எழுத்தாளனுக்கு என ஓர் ஆழமான தன்முனைப்பு உண்டு. ஒரு படைப்பை எழுதும்போது படைப்பு அவனைமீறி நிகழும் அற்புத கணங்களைக் கண்டிருப்பான். அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கும் அது என்ன என்று. அந்தப் பெருமிதமே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. அந்தத் தருணங்கள் வழியாக வந்தவன் எப்போதும் தன்னை உயர்வாகவே நினைப்பான். நான் அறிவேன், என் படைப்புகளில் தமிழின் ஈராயிரம் வருட இலக்கிய மரபின் உச்சநிலைகள் சில நிகழ்ந்துள்ளன என்று. உலக இலக்கியத்தின் இந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த படைப்புநிலைகளில் அவையும் உண்டு என்று. அதை எவருமே அங்கீரிக்காவிட்டாலும் எனக்கு ஒன்றுமில்லை. அந்த நிமிர்வை நான் விடப்போவதுமில்லை.


நான் விரிந்த வாசகர் வட்டம் கொண்டவன். ஆனால் மிகச்சாதாரண பள்ளி ஆசிரியராக மட்டும் இருந்தவர் தேவதேவன். சர்வசாதாரணமான வாழ்க்கை கொண்டவர். ஒருபோதும் நூறு வாசகர்களைச் சேர்த்துப் பார்த்தவரல்ல. ஆனால் அவரிடம் கூடும் அந்த இயல்பான நிமிர்வு, சிருஷ்டி கர்வம், எனக்கே பலசமயம் ஆச்சரியமளிக்கிறது. ஆம், படைப்பாளிக்குத்தெரியும் படைப்பாளியாக இருப்பதென்றால் என்ன என்று. மற்றவர்களுக்குத் தெரிந்தாலென்ன தெரியாவிட்டாலென்ன?


தமிழ்நாட்டில் இலக்கியத்தின் நிமிர்வை உள்ளூர உணர்ந்தவர்கள் சிலரே. பலர் இலக்கியத்தைப் பள்ளிகளில் கற்றதுடன் சரி. அதற்குமேல் எந்தவிதப் பண்பாட்டுக்கல்வியும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் அறிந்தவரை இலக்கியவாதி என்பவன் அக்குளில் துண்டை இடுக்கிக்கொண்டு கைகட்டி நிற்கவேண்டியவன். பரிசில்வாழ்க்கை வாழவேண்டியவன். செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களைப் புகழவேண்டியவன். அந்தப் பெரும்பான்மைக்கு இலக்கியவாதியின் சுயநிமிர்வு புரிவதில்லை. அதை ஒரு சாமானியனின் அர்த்தமற்ற ஆணவம் என்றே புரிந்துகொள்கிறார்கள்.


ஆம், பல தருணங்களில் ஆணவத்தையே பதிலாக அளித்ததுண்டு. அது ஜெயகாந்தன் எனக்களித்த வரி. 'அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன்' என்றார் அவர். அகங்காரம் மட்டுமே பதிலாக அமையுமளவுக்கு அற்ப எதிர்வினைகளை ஜெயகாந்தனைவிட அதிகமாகக் காணநேர்ந்தவன் நான்


காந்தியைப்பற்றி, நவகாந்திய சிந்தனையாளர்களைப்பற்றி விரிவாகப்பேசிக்கொண்டிருந்தோம். தமிழருவி மணியனுக்கு என் நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். அவருடனான சந்திப்பும் அந்தத் திறந்த உரையாடலும் மிகுந்த நிறைவூட்டுவதாக இருந்தது.


சேலத்தில் இரு பெண்கள் வானவன்மாதேவி, இயலிசைவல்லபி என்று பெயர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறார். Muscular Dystrophy என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள். சூழலில் மிகையாகி வரும் கதிரியக்கம் மற்றும் ரசாயனங்கள் மனித மரபணுக்கூறுகளில் உருவாகிவரும் நோய்களில் ஒன்று அது. அவர்களின் உடல் தசைகள் செயலிழந்து வருகின்றன. அந்நிலையிலும் தட்டச்சு வேலைசெய்து சம்பாதிக்கிறார்கள். ஏராளமாக வாசிக்கிறார்கள் அவர்களைப்பற்றிய செய்திகள் வரவர அவர்களைச்சுற்றி இலட்சிய நோக்குள்ள சேவைமனமுள்ள ஒரு இளைஞர்வட்டம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக குக்கூ அறிவியக்கம் என்ற அமைப்பை நடத்திவரும் சிவராஜ் மற்றும் நண்பர்கள்.



ஈரோட்டுக்கு வந்த எஸ்.ராமகிருஷ்ணன் இவ்விரு பெண்களையும் பற்றிச் சொல்லக்கேட்டு கிருஷ்ணன் உட்பட ஈரோட்டு நண்பர்கள் அவர்களைப்பார்க்கப் புத்தகங்களுடன் சேலம் சென்றிருந்தார்கள். சென்றுவந்தபின் என்னை அழைத்துப்பேசினார்கள். நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். அவர்களுக்கும் ஒரு சிறு பயணமாக இருக்கட்டுமே எனக் கார் ஏற்பாடு செய்து கோவை வரச்சொன்னேன். எல்லாருமாக நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் சென்றோம்.



நாஞ்சில்நாடன் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நிறையப்பேர் வந்துவிட்டார்கள். பலதுறைகளில் சேவைசெய்யக்கூடியவர்கள். அரசுப்பேருந்து ஏறிக் கால் சிதைந்த கீர்த்தனா என்ற 7 வயதுக் குழந்தையுடன் அந்தக் குழந்தையின் தாய் வந்திருந்தார். 12 முறை அதன் காலில் அறுவைசிகிழ்ச்சை செய்யப்பட்டிருக்கிறது. மிகச்சாதாரணமான பொருளியல் சூழல். பெரியமனிதர்களாகத் தேடிச்சென்று நிதி திரட்டிச் சிகிழ்ச்சைசெய்கிறார்கள். இன்னும்சில அறுவைசிகிழ்ச்சைகள் தேவை. அழகான குழந்தை. கண்ணாடியிலும் தாளிலும் ஓவியங்கள் வரைகிறாள். எனக்கு ஓர் ஓவியம் பரிசாகக் கொடுத்தாள்.


நாஞ்சில்நாடன் வீட்டிலேயே மாலைவரை பேசிக்கொண்டிருந்தோம். தமிழக வரலாற்றாய்வுச்சிக்கல்கள், தமிழ்நூல்களைப் பொருள்கொள்ளுதல் பற்றியெல்லாம். கீர்த்தனா மலர்ந்த சிரிப்புடன் பேச்சுக்களை முழுக்க உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். 'அவளைப்போட்டு அறுக்கிறோம்..' என்றார் கிருஷ்ணன். உண்மையில் அப்படி அல்ல. ஓரளவு புத்திசாலியான குழந்தை கூட புரியாத பெரிய விஷயங்களை அதி தீவிர கவனத்துடன் கேட்டுக்கொண்டிருக்கவே முயலும் என்பதைக் கவனித்திருக்கிறேன். பேசப்படுவது சிக்கலானதாக இருக்க இருக்க அவர்களின் கவனம் அதிகரிக்கிறது.



ஆனால் அவர்களுக்கு அதை போதித்தால் அவர்கள் சலிப்படைகிறார்கள். நாம் பேசும்போது நம்மில்கூடும் உத்வேகமே அவர்களை அதிகமாகக் கவர்கிறது. ஆகவே 'உனக்கு இது புரியாது' என்று சொல்லப்படுவதைக் குழந்தைகள் வெறுக்கின்றன. எல்லாக் குழந்தைகளுமே தங்களை அறிவார்ந்தவர்களாக, உலகின் மையங்களாக நினைப்பவை. 'உனக்கு போர் அடிக்கிறதா?' என்றெல்லாம் கேட்பது அவர்களின் அறிவுத்திறனை அவமதிப்பதென்றே எடுத்துக்கொள்வார்கள்.


சைதன்யாவிடம் அதை மிகவும் கவனித்திருக்கிறேன். இன்னொரு முறை தெளிவாகக்கூற முயன்றால்கூடக் கடுப்பாகிப் 'புரியுது மேலே பேசு' என்பாள். ஊட்டி புதுக்கவிதை அரங்கில் முழுக்க அமர்ந்திருந்தாள். எல்லாக் கவிதையையும் கேட்டுப் புரிந்துகொள்ளவும் செய்தாள். 'பாவம் பாப்பா, போய் வெளையாடு' என்று அவளிடம் சொன்ன ஒருவரைக்கூட அவள் மன்னிக்கவில்லை. 'அவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?' என்று உதட்டை அலட்சியமாகச் சுழிப்பாள்.


ஆனால் புத்திசாலியான குழந்தைகள் அறிவார்ந்த விஷயங்களை ஏளனம் செய்வதும் 'செம போர்' என அலட்சியம் செய்வதும் நம் நாட்டில் சகஜம். காரணம் பெற்றோர்தான். சின்னவயதிலேயே குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்குப் புரியாத அறிவார்ந்த விஷயங்களை, நுண்கலைகளைக் கிண்டல்செய்கிறார்கள். குழந்தைகளும் அப்படி இருக்கப் பழகிக்கொள்கிறார்கள். அதுவே இயல்பானது என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மனநிலை கடைசி வரை நீள்கிறது.



ஆகவேதான் பட்டமேற்படிப்பு படித்தபின்னரும்கூட நான்கு பக்கம் கொண்ட கட்டுரையை 'செம நீளம்' என்று கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். கொஞ்சம் சிக்கலான ஒரு விவாதத்தை 'மொக்கைப்பா' என்பார்கள். விஜய்க்கு அசின் நல்ல ஜோடியா இல்லை அனுஷ்காவா என்பதை மணிக்கணக்கில் நாள்கணக்கில் விவாதிப்பது மட்டும் மிக இயற்கையானதாகத் தெரிய ஆரம்பித்துவிடும். அபாரமான அறிவுத்திறன் கொண்ட நம் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை, நாம் அறிவுக்கு எதிரானவர்களாகத் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.


இயலிசைவல்லபி, வானவன்மாதேவி இருவரும் இன்றைய காந்தி வாசித்ததாகச் சொன்னார்கள். காந்திய விவாதத்தில் சில மார்க்ஸிய கலைச்சொற்கள் அல்லாமல் எங்கும் வாசிப்புக்கு இடர் ஏற்படவே இல்லை என்றார்கள். என் கதைகளைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்


இருவரிடமும் அவர்கள் எழுத முற்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னேன். எழுதுவது வேறு எதற்காகவும் அல்ல, அதிலுள்ள திறப்புகளின் இன்பத்துக்காக. அது அளிக்கும் முழுமையான தன்னிலை நிறைவுக்காக. தங்களிடம் மொழி இல்லை என்றார்கள். வாசிக்கவாசிக்க அது அமையும் என்று சொன்னேன். சாதாரணமான மொழியில் ' அதிகம்போனா இன்னும் அஞ்சு வருசம் இருப்போம் சார், அதுக்குள்ள நரம்புநோயாளிகளுக்கான ஒரு ஹோம் கட்டணும்னு ஆசை. இடம் பாக்கிறோம். ' என்று சொன்னார்கள்.


ஏராளமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் அப்பால் ஒவ்வொருவரிடமும் அவர்கள் மட்டுமே எழுதும் ஓர் உலகம் உள்ளது. அதை அவர்களால் எழுதமுடியும் என்றேன்.


அந்த நாள் நிறைவூட்டுவதாக இருந்தது என்று சொன்னார்கள். மாலையில் கிளம்பி அறைக்கு வந்தேன். இரவு எட்டரை மணி ரயிலில் திரும்பி நாகர்கோயில்.




எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை


கோவை புகைப்படத்தொகுதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.