Jeyamohan's Blog, page 2292
August 29, 2011
ஹனீபா-கடிதம்
அருமை ஜெயமோகனுக்கு
சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது.
இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது.
எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட பண்டமாகவே தொடர்ந்தும் வினியோகிக்கப்படுகிறது.இங்கு பெரும் ஆரவாரத்துடன் வெளிவரும் மல்லிகை, ஞானம், செங்கதிர்,(அம்பலம் கலைமுகம்) பார்த்திருந்தால் எனது கருத்தை மறுக்கமாட்டீர்கள்.உங்களின் பெரும்பாலான நூல்களைப்படித்து விட்டேன்.அது பற்றியெல்லாம் ஒரு சந்திப்பில் மட்டும்பகிர்ந்து கொள்ள முடியாது என்பதை அறிவீர்கள்.அன்றும் நான் எவ்வளவோ பேச வந்தேன். உங்களைப்பார்த்த பரவசத்தில் எல்லாமே பின்வாங்கி விட்டது போல் இப்பொழுது படுகிறது.
அம்ருதாவில் உங்களின் 2ஜி பற்றிய பதிவுகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் அதையும் மறந்து போனேன்.புகழ் பெற்ற அந்த ஊழலைப்பற்றி பலரும் ஒரேவிதமாகப்பார்க்க நீங்கள் மட்டும் மரபுவழி நின்று அதைச்சொன்ன விதம் உயர்வானது. ஜெயமோகன் போன்றவர்களால் மட்டுமே அவ்வாறு எழுத முடியும் என்ற முடிவுக்கு என்னைவரவழைத்தது.
உலோகம் நாவல் பற்றிய மதிப்புரை படித்தேன். அதில் வருகின்ற ஜோர்ஜ் அவன் காதலி என் ஆத்மார்த்தமான நண்பர்கள். ஜோர்ஜ் புலிகளாலும் அவள் இராணுவத்தாலும் கொல்லப்பட்டார்கள். அருமைத்தோழர் பத்மநாபாவின் நெருக்கத்திற்குரியவர்கள்.அவர்களைப்பற்றிய தகவல்கள் பெரும்பாலும் உண்மையானது அந்த நாவலைக் கொண்டு வரவில்லையே என்று இப்போது கவலைப்படுகிறேன். இலங்கையில் இப்போதைக்குக் கிடைக்காது.
வரும் டிசம்பரில் எமது பல்கலைக்கழங்களில் இடம் பெறும் புத்தகக் கண்காட்சியில் உங்களின் அனைத்து நூல்களையும் காட்சிப்படுத்த எண்ணியிருக்கிறேன்.என்னிடம் இல்லாத உங்களின் நூல்களின் பட்டியலை அடுத்த மெயிலில் அனுப்பி வைப்பேன்.நீங்கள் எனக்கு அதை சேகரித்து தரவேண்டும்.இன்ஷா அல்லாஹ் அடுத்த அடுத்த மாதங்களில் மீண்டும் உங்களைக்காண வருவேன்.மெய்தான்.அம்ரிதா எம்மின் தொகுதியில் படித்துப்பார்த்தீர்களா ? எமது எழுத்தில் ஒரு மாற்றம் புலப்படுகிறது அல்லவா அந்தக்கதைகள் பற்றிய உங்கள் பதிவைப் பார்க்க விரும்புகிறேன்.
ஓட்டமாவடி அறபாத் எனது உறவினன்.உங்களுக்கு எழுதுமாறும் அவன் கதைகளில் இரண்டை உங்களுக்கு அனுப்புமாறும் கேட்டு்க்கொண்டேன்.அது பற்றியும் எனக்கு எழுதுங்கள்.
அன்புடன்
எஸ்.எல்.எம்.ஹனீபா
குறிப்பு:
கோணங்கியை இங்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை கவிஞர் அனாரும் நானும் செய்து கொண்டிருக்கிறோம்.ஜெயமோகன் கடல்வழிக்கப்பலில் ஒருக்கா இலங்கை வந்து போகலாமே !
[image error]
அன்புள்ள ஹனீபா அவர்களுக்கு
உங்கள் கடிதம் கண்டு மிகுந்த மனநிறைவடைந்தேன்.நலமாகத்தான் இருப்பீர்கள்.உங்களுக்கென்ன!
வாழைக்குலையுடன் நீங்கள் நிற்கும் தோரணையே அலாதி. ஒரு வெற்றி வீரனைப்போல. அதிலேயே நிறைவுகண்டுவிட்டீர்கள் போல. உங்கள் வருகையின் அலை இப்போதுமிருக்கிறது. நினைவுகூரும்போதே ஒரு புன்னகை வருவதுபோல.
அங்கே வரவேண்டும். இப்போது மீண்டும் பார்க்கவேண்டிய பெரியவர்களின் பட்டியல் பெரிதாகிவிட்டது. மௌனகுரு, நீங்கள், தெளிவத்தை ஜோசப் என. வருகிறேன். முன்னர் எனக்கு [பழைய சில அரசுப்பதிவுகளினால்] இலங்கை விசா கிடைப்பது தடைபட்டிருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காதென நினைக்கிறேன்.
கோணங்கி வருவது உற்சாகமான விஷயம். அவர் எழுத்தைவிடப் பலமடங்கு பெரிய ஆளுமை அவர். அவர் உருவாக்கும் ஆழமான மனப்பதிவு நெடுநாள் நீடிக்கும். ரசித்துச் சாப்பிடுவார். ஈழ சிறப்பு உணவுகளுக்கு ஏற்பாடு செய்யவும்
ஜெ
அமெரிக்கன் கல்லூரி ,மதுரை
மதுரை அமெரிக்கன் கல்லூரி தென் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்று. கல்விக்கூடம் என்பதற்கு அப்பால் சுதந்திரமான தேடலையும் கலையிலக்கிய ஆர்வங்களையும் அனுமதித்தது. அந்நிறுவனத்தில் பயின்ற யுவன் சந்திரசேகர், பாலா போன்ற பலரிடம் அது உருவாக்கிய ஆழமான மனப்பதிவுகளைப் பார்க்கையில் எனக்கு அப்படி ஒரு கல்விக்கூட அனுபவமே இல்லையே என்ற ஏக்கமே எழும்.
அமெரிக்கன் கல்லூரியின் அமெரிக்க தொடர்பு பிரிவு ஒன்றுக்காக நான் ஒரு சிறுகதைப்பட்டறை நடத்தியிருக்கிறேன்,கொடைக்கானலில். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது அது. ஆனால் என் நண்பரும் தமிழ் எழுத்தாளருமான சு.வேணுகோபால் எல்லாத் தகுதிகளும் இருந்தும் இந்து என்பதற்காக அங்கே பணியாற்றிப் பணிநிரந்தரம் பெற முடியாமல் வெளியேற்றப்பட்டபோது அந்நம்பிக்கை சிதைந்தது
அமெரிக்கன் கல்லூரியின் இன்றைய சிக்கல்களைப்பற்றி இளங்கோ கல்லானை எழுதிய கட்டுரை
தூக்கு- எதிர்வினை
திரு ஜெ,
( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்)
நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வைத்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் 'இந்த' தூக்கு தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த தண்டனைக்கு எதிரான கருத்துள்ள கடிதம் ஒன்றாவது வெளியிடப்பட்டிருந்தால் சரியாயிருந்திருக்கும். எனவேதான் 'இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக' நீங்கள் சொன்னதற்குப்பின்பும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
[image error]
இந்த தூக்கு தண்டனை குறித்த ஓரே ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய இம்மூவரும் ராஜீவ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் அல்ல மாறாகக் கொலைக்கு உடந்தையாய் செயல்பட்டார்கள் என்பதே குற்றச்சாட்டு. (நேரடியாக ஈடுபட்டதாக சொல்லப்படுபவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார்கள் அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்). இவ்வகைக் குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை என்பது அதிகப்படியானது அதுவும் ஏற்கனவே இருபது ஆண்டுகாலம் அவர்கள் வாழ்க்கை சிறையில் கழிந்திருக்கும் நிலையில்.
மேற்குறிப்பிடப்பட்ட மூவரில் பேரறிவாளன், இன்றைக்கும் தான் குற்றமற்றவர் என்று கூறி வருகிறார். அவர் எழுதியுள்ள புத்தகத்தை நீங்கள் படித்துப்பார்த்தீர்களானால், தண்டனக்குப்பயந்து செய்த தவறை இல்லை என்று மறுக்கும் கேவலமான புத்தி உள்ளவர் அல்ல என்பது தெரியும்.
அவர் குற்றமற்றவர் என்று நம்பும் என் போன்றோர்க்கு மிக இளம் வயதிலிருந்தே அவர் அனுபவித்து வரும் சிறைத்தண்டனையே பெரும் வேதனையான விஷயமாகத்தெரியும் போது அவரது மரண தண்டனையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும்?
உங்கள் கட்டுரை குறித்து விமர்சனம் எழுதியுள்ளோர்களின் ஒரு சில வரிகளையும் அதற்கான என்னுடைய பதிலையும் கீழே அளித்துள்ளேன்.
"இந்த விஷயத்தில் இறங்கிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். இவர்கள் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு நல்ல விசயங்களுக்கும் தோள்கொடுத்தவர்களே அல்ல. இந்தியா அழியவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள். அதற்காக இவ்வளவுநாளாகப் பிரச்சாரம் செய்யகூடியவர்கள்.எவ்வளவோ வெளிநாட்டுக் காசு வாங்கிக்கொண்டு பேசுபவர்கள்." –சாமிநாதன்.
சாமிநாதனின் இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது, மிகப்பெரிய அபாண்டமான குற்றச்சாட்டின் மூலம்,தான் எதிர்ப்பவர்களை ஒரேயடியாக சிறுமைப்படுத்தும் முயற்சி.
"இப்போதுகூட 2047லே இந்தியாவைத் துண்டுதுண்டாக சிதறடிப்போம் என்றுதான் வைகோ பேசிக்கொண்டேஇருக்கிறார். 'இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா' என்று இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறார். இவர்களை நம்பியா நாம் ஆதரவு கொடுப்பது?" –சாமிநாதன்.
வைகோ-வைப்பற்றி இவர் தெரிந்து வைத்திருப்பது இவ்வளவுதான். வைகோ-இந்திய அரசாங்கத்திற்கெதிராகக் கோபமாக சொல்லும் வார்த்தைகளை மட்டும் எடுத்து அவருக்கெதிராகப் பயன்படுத்தும் இவர்கள் அந்தக் கோபத்திற்கு மூலகாரணமாக இருக்கும் மனித இனத்திற்கெதிரான கொடுஞ்செயல்களை, முற்றிலுமாக மறைத்து விடுகிறார்கள், மிக சாமர்த்தியமாக.
ராஜீவ்காந்தி இந்தியாவின் அதிபராக இருந்தவர். ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு இருந்தவரும் கூட என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவரைக் கொன்றது கொலை அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்தியது. அது ஒரு தேசிய அவமானம்-சாமிநாதன்.
சாமிநாதனின் இந்தக் கருத்திற்கு அவரது கருத்தையே கொண்டிருக்கும் சரவணனின் கருத்தையே பதிலாகத்தருகிறேன்.
'அதாவது அவர்கள் நம்மைக் கொல்வது நியாயம், நம் அரசு திருப்பி அவர்களைக் கொல்வது அநியாயம். இதுக்கு என்ன அறிவுஜீவி பசப்பு?' –சரவணன் ஆ
ராஜீவ் மரணம் குறித்த என்னுடைய கருத்தைத் தெரிவிப்பது அவசியம் என்று கருதுகிறேன், அது என்னைப்பற்றி மட்டுமல்ல என்னைப் போன்ற தமிழீழ ஆதரவாளர்களைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவும். ஒரு சராசரி மனிதனாக, இந்தியனாக மற்றவர்களைப்போன்றே என் மனதிலும் மிக ஆழமான ஒரு காயத்தை ஏற்படுத்தியது ராஜீவ் கொலை. 1991 மே- 21ம் தேதி நள்ளிரவில் செய்தி தெரிந்த நொடியில் எனக்கேற்பட்ட பெரும் அதிர்ச்சியும் வேதனையும் இன்றும் என்னால் உணர முடிகிறது. மற்றொருபுறம் அதே சராசரி மனிதனாய், தமிழைத் தாய் மொழியாகக்கொண்டவனாக, ஈழத்தில் இந்தியாவின் தலையீட்டால் அவர்களுக்கேற்பட்ட பல்லாயிரம் மடங்கு அதிகமான வேதனைகளும் இழப்புகளும் என்னை பாதிக்கிறது. மிகக்குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால்,
அ) போருக்கு முன்பாகப் புலிகளின் 19 முக்கிய தளபதிகளின் மரணம்(அவர்களுள் பலர் புதிதாய்த் திருமணமானவர்கள்) மற்றும் காந்திய வழியில் போராடி மடிந்த திலீபனின் மரணம்.
ஆ)போரின் போது கொல்லப்பட்ட 12-ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிப் 'பொது' மக்களின் மரணம். குறிப்பாக யாழ் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 87 பேரின் படுகொலைகள் மற்றும் வெல்வெட்டித் துறையில் கொல்லப்பட்ட 300க்கும் அதிகமான பொது மக்களின் மரணம்.
இ) இந்தியாவின் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்- தகவலின் படி ஒப்பந்தத்திற்கெதிரான முறையில் புலிகளையும், பிரபாகரனையும் கொல்ல இந்தியா முயற்சித்தது.
மேலும் நாட்டிற்காகப் பணி செய்ய ராணுவத்தில் இணைந்த நம்து வீரர்களை, எம் மக்களுடனே போரிடச்செய்ததால் ஏற்பட்ட 1400 இந்திய போர் வீரர்கள்களின் மரணம் மற்றும் தனது இன அழிப்பைத்தடுக்கப் போராடிய 4000-க்கும் அதிகமான தமிழ்ப்போராளிகளின் மரணம்,
ஆகிய காரணங்களாலும் இதையொத்த இன்னும் பல காரணங்களாலும் ராஜீவ் மரணத்தைத் தாங்கிக்கொள்ளப் பழகிக்கொண்டேன்.
-அறிவுடை நம்பி.
அன்புள்ள அறிவுடைநம்பி,
உங்கள் கடிதத்தை முழுமையாகவே வெளியிடுகிறேன். நான் இதை முடித்துக்கொள்ளலாமென நினைத்தது ஜனநாயக விவாதம் என்ற பேரில் இருபக்கத்தையும் பேச ஆரம்பித்து ஓர் உணர்ச்சிகரமான விஷயத்தை மழுங்கடிக்கவேண்டாமென்றுதான்.
இருவிஷயங்களில் நான் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். ஒன்று, இம்மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை அவர்களின் சிறைவாசத்துடன் சேர்க்கும்போது அடிப்படை மனிதநீதிக்கு மேலாக போகுமளவுக்கு மிகையானது. ஆகவே தூக்கு அநீதியானது. உடனடியாக நிறுத்தப்படவேண்டியது.
முதற்குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் மரணதண்டனை எப்படி மிகையாகப்பார்த்தாலும் கொலைபற்றிய நேரடித்தகவல்கள் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லாத பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டிருப்பதும் பிழையானதே. அந்தக் கடுமைக்கு அன்றிருந்த தடா சட்டம் காரணம் . அது பின்னர் பிழை என விலக்கிக்கொள்ளப்பட்டதனால் சட்டபூர்வமாகவும் தண்டனை மறுபரிசீலனைக்குரியதாக ஆகிறது
அரசியல் குற்றங்களை உலகமெங்கும் அவை நிகழ்த்தப்பட்ட அரசியல் சூழலையும் கருத்தில்கொண்டுதான் பார்ப்பது வழக்கம். அப்பட்டமான வெறும் குற்றமாகப் பார்க்கும் வழக்கம் நாகரீக உலகில் இல்லை. இந்தியாவிலும் அதே நிலைப்பாடுதான் நாகா, மணிப்பூர் பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இக்குற்றம் நிகழ்த்தப்பட்ட சூழல் முழுமையாகவே மாறி விட்டமையால் இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டாகவேண்டும். ஆகவே இந்தக் கடும் தண்டனையை மறுபரிசீலனை செய்ய எல்லா அரசியல் நியாயமும் உள்ளது. முன்னுதாரணங்களும் உள்ளன.
ஆகவே இந்தத் தூக்குத்தண்டனையை ரத்துசெய்வதே மனிதாபிமானம். அரசியல் விவேகம். அடிப்படைப்பொதுப்புத்தி. ஒரு சமூகத்தின் தார்மீகத்துக்கு எதிராக அரசு செயல்படக்கூடாது.
காங்கிரஸ் அரசு பரிசீலிக்காவிட்டாலும் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றே நினைக்கிறேன். இருபத்தைந்தாண்டுக்கால தனிமைச்சிறையை மரணதண்டனையை ரத்துசெய்வதற்கான வலுவான காரணமாகக் காட்டலாம், அதற்கு நிகரான பத்து முன்னுதாரணங்களாவது இந்திய வரலாற்றில் உள்ளன.
அதற்கு எதிராக இன்று தமிழகத்தில் உருவாகியிருக்கும் மனிதாபிமான இயக்கத்தை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.கடைசிக்கணத்திலாவது அரசும் உண்மைநிலையை உணரக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். ஆகவே இன்னும் ஒரு நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.
அல்லது, அப்சல்குருவை தூக்கிலிடுவதை மதச்சார்பற்ற சித்திரமாகக் காட்ட இம்மூன்று உயிர்களும் தேவைப்படுகின்றன என்றால் அது என்றென்றும் இந்திய ஜனநாயகத்துக்குக் களங்கம்தான்.
காங்கிரஸ் அரசு போர்க்குற்றவாளியான ராஜபக்ஷேக்கு அளிக்கும் ஆதரவின் மூலம் அறுபதாண்டுகளாக சர்வதேச அளவில் அதற்கிருந்து வந்த ஒரு அடிப்படை மரியாதையை இழந்து கோழையான,செயலற்ற, வன்மம் கொண்ட அரசு என்ற சித்திரத்துடன் இன்று நின்றுகொண்டிருக்கிறது.
அதன் மூலம் இந்திய வம்சாவளியினருக்கு உலகமெங்கும் இந்தியா காவல் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் அரசு சிதைத்துவிட்டது. இது ஒரு வரலாற்றின் முடிவு. ஒரு தார்மீகத்தின் அழிவு. அதை இந்தியசமூகம் இன்னமும் உணரவில்லை.
இன்று இந்த தூக்குத்தண்டனை மூலம், அதன் குடிமக்கள் மனத்திலும் அந்தச்சித்திரத்தையே அது நிலைநாட்டப்போகிறது. அது காங்கிரஸ்அரசுக்கு மட்டும் அல்ல நம் ஜனநாயகத்துக்கும் பேரிழப்பே.
ஜெ
தூக்கு-கடிதங்கள்
தூக்கு-எதிர்வினைகள்
August 28, 2011
எஸ்.எல்.எம்.ஹனீஃபா
சிலநாட்களுக்கு முன்னால் என்னைப்பார்க்க இலங்கையிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருந்தார். சுந்தர ராமசாமி வீட்டுக்குச் சென்று எம்.எஸ்ஸும் அவருமாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை. இருபது வயது இளைஞர்களுக்குரிய உற்சாகமும் அலைபாய்தலும் துருதுருப்பும் கொண்டவர். அடங்கிய மனிதரான எம்.எஸ்ஸுக்கு நேர் எதிர். ஆனால் இருவருக்கும் ஒரே வயது. எழுபது பிளஸ் என்று சொல்லாவிட்டால் கோபம் கொள்வார் என நினைக்கிறேன்.
எல்.எல்.எம்ஹனீஃபா இலங்கை எழுத்தாளர்களில் இஸ்லாமிய வாழ்க்கையின் உள்ளடுக்குகளைச் சொல்லும் படைப்பாளி. மக்கத்துச் சால்வை என்ற அவரது சிறுகதைத் தொகுதியின் சிலகதைகள் மிக முக்கியமானவை. ஆனால் மிகமிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். நிறைய எழுதியிருக்கக் கூடும். ஆனால் அவரது எழுத்துமுறைக்கும், அரசியலுக்கும் சரிப்படாது. மெல்லிய எள்ளலும் எகத்தாளமுமாக அன்றாடவாழ்க்கையைச் சித்தரிப்பவை அவரது கதைகள். அரசியல் அற்றவை. பதற்றமான அரசியல்சூழலில் அவருக்கு இயல்பாகவே எழுத்துவேகம் குறைந்தது இயல்பானதே.
மக்கத்துச் சால்வை கதை சிலம்பாட்டப்போட்டியை சித்தரிப்பது ஆபிதீனின் வலைத்தளத்தில் அதை வாசிக்கலாம். அப்பவெல்லாம் மூன்று நான்கு நாள்களுக்கு முந்தியே பெருநாள் மணக்கத் தொடங்கிவிடும். போன்ற சுவாரசியமான எளிய சித்தரிப்புகள். பறங்கி வாழைக்குலை என்கிறார். செவ்வாழையைச் சொல்கிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு படைப்பு அது முளைத்த பண்பாட்டின் பிரதிநிதி. அது அளிக்கும் தகவல்களுக்கு முடிவே இல்லை என்பதற்கான உதாரணம் இந்தக்கதை.
முதல் வாசிப்பில் ஒரு மனிதாபிமானத்தின் கதை இது. ஆனால் அந்த சிலம்பப்போட்டியை வாழ்க்கைப்போட்டியின் அடையாளமாகக் கொண்டால் மிஞ்சிநிற்பது என்ன என்ற கேள்வியை முன்வைக்கும் ஆழமான கதையாக ஆகிவிடுகிறது. வெற்றி தோல்விகள், கௌரவங்களுக்கு அப்பால் செல்வது இந்த வாழ்க்கை முதிர்ந்து மட்கி முடியும் என்ற உண்மை. அதற்கும் அப்பால் செல்வது மானுட அன்பு என்றுமிருக்கும் என்ற பேருண்மை. அதையே ஆயிரம் வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்– மீண்டும் எழுதியிருக்கிறார் ஹனீஃபா
ஹனீஃபா விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது எழுத்தார்வம் மட்டுப்பட்டமைக்கு அதுவும் காரணமாக இருக்கலாம். விவசாயம் ஒரு விஷகன்னி [எஸ்.கெ.பொற்றெகாட்டின் தலைப்பு] அவள் காதலித்தே கொல்லக்கூடியவள். ஹனீபாவின் புகைப்படங்களில் அவரது வயலும் சூழலும் தெரிந்த்து. எங்களூரைப்போலவே வயல்நடுவே நீராழி. உபரி நீரை அதில் வடித்துவிட்டு விவசாயம் செய்வோம்.
இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே விடப்பட்ட கப்பலில் இந்தியா வந்ததாகச் சொன்னார். அந்தக் கப்பல் ஒரு முக்கியமான தொடர்பு ஊடகம், ஒரு நல்ல அனுபவம் என்று சொல்லி என்னை இலங்கைக்கு அழைத்தார்.முதல்முறை அவர் இந்தியா வந்ததே லா.ச.ராமாமிருதத்தைச் சந்திப்பதற்காகத்தான். தென்காசி அருகே வங்கி ஊழியராக இருந்த லா.ச.ராவுடன் ஹனீஃபா நிற்கும் படத்தைப் பார்த்தேன். இளமையாக அழகாக இருந்தார். அதைச்சொன்னபோது ஆவேசமாக 'இப்பவும் இளமை இருக்கு…நான் இனியும் பெண்ணு கெட்டுவேன்' என அறிவித்தார். ஹனீஃபாவுக்கு ஜெயகாந்தனும் ஆதர்ச எழுத்தாளர்.
ஈழச்சூழலில் அவர் முன்வைக்க விரும்பும் எழுத்தாளர்களின் சில தொகுதிகளை எனக்காகக் கொண்டுவந்திருந்தார் ஹனீஃபா. அவற்றை வாசித்துவிட்டேன், எழுதவேண்டும். விடைபெறும்வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். இஸ்லாமில் மார்புறத்தழுவும் ஆசாரம் உள்ளது. எனக்கு மிகப்பிடித்தது அது. மிக அபூர்வமாகவே மார்புறத்தழுவிக்கொள்ளத்தூண்டும் ஆளுமைகளைப் பார்க்கிறோம். ஹனீஃபா அத்தகையவர். அவர் இனிமேலாவது தொடர்ச்சியாக எழுதலாம். இலக்கியம் என்பது ஒரு மாயப்பறவை. நூறு கைக்குச்சிக்கினால் ஒன்றுதான் ஆன்மாவுக்குச் சிக்குகிறது
ஹனீபாவின் மக்கத்துச் சால்வையின் மொத்தச் சிறுகதைகளும் நூலகம் தளத்தில் உள்ளன
தூக்கு-எதிர்வினைகள்
ஜெ,
நாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். 'நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம்! அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்' என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம்
அரங்க.முத்தையா
ஜெ,
தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் எழுதின கட்டுரையை வாசித்தேன். பொதுவாக ஒரு நியாயத்தின் அடிப்படையிலேயே நீங்கள் பேசுவீர்கள். ஆனால் இங்கே அந்த நியாயத்தையே காணோம். மேம்போக்கான ஒரு உணர்ச்சிவேகம் மட்டுமே காணப்படுகிறது. மிகுந்த மனவருத்ததுடன் இதை எழுதுகிறேன்.
நீங்கள் இந்த விசயத்திலே இணையத்திலும் வெளியே மேடைமேலும் கூப்பாடு போடும் அரசியல்வாதிகளுக்கு செவி கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசுவதிலே ஒரு நியாயமான லாஜிக் கூட கிடையாது. எனக்கொரு நீதி மற்றவனுக்கு வேறு நீதி என்ற தடிகாரன்போக்குதான் தெரிகிறது.
இந்த விஷயத்தில் இறங்கிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். இவர்கள் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு நல்ல விசயங்களுக்கும் தோள்கொடுத்தவர்களே அல்ல. இந்தியா அழியவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள். அதற்காக இவ்வளவுநாளாகப் பிரச்சாரம் செய்யகூடியவர்கள்.எவ்வளவோ வெளிநாட்டுக் காசு வாங்கிக்கொண்டு பேசுபவர்கள். இவர்கள் இந்திய தேசியத்தையும் நம் அரசியல்சட்டத்தையும் நீதிமன்றங்களையும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தினார்கள்.
இவர்கள் காந்தியையும் இந்தியாவின் பெரிய இலட்சியமனிதர்களையும் இவ்வளவுநாளாக எப்படியெல்லாம் அவமதித்தார்கள். அன்னா ஹசாரேயின் போராட்டம் பற்றி என்னென்ன நக்கலும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் ஊழல்வாதி என்றும் சாதியவாதி என்றும் மனசாட்சியே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நம்முடைய மனசாட்சியை நோக்கிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
இப்போதுகூட 2047லே இந்தியாவைத் துண்டுதுண்டாக சிதறடிப்போம் என்றுதான் வைகோ பேசிக்கொண்டேஇருக்கிறார். 'இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா' என்று இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறார். இவர்களை நம்பியா நாம் ஆதரவு கொடுப்பது?
இன்றைக்கு ஒரு மனவலிமையும் நேர்மையும் இல்லாத அரசாங்கம் நமக்கு உள்ளது. இந்த நாட்டையே சீரழிக்கும் குற்றவாளிகளை சட்டம் பேசித் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொலை என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. ராஜீவ்காந்தி இந்தியாவின் அதிபராக இருந்தவர். ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு இருந்தவரும் கூட என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவரைக் கொன்றது கொலை அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்தியது. அது ஒரு தேசிய அவமானம்.
ஒரு ஜனநாயகநாடு இந்தமாதிரி விஷயங்களில் என்னென்ன உரிமைகளைக் கொடுக்குமோ எல்லாவற்றையும் நாம் கொடுத்துவிட்டோம். எல்லா சலுகைகளையும் கொடுத்துவிட்டோம். இனி சட்டம் தன் கடமையைச் செய்வதே சரியானது. இதிலே உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமே கிடையாது
சாமிநாதன்
*
ஜெ,
இன்றைக்கு சிலர் ஒரே குரலிலே அண்ணா ஹசாரேவைப் பற்றியும் தூக்குத்தண்டனை மன்னிப்பு பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரேவைப் பற்றிப் பேசும்போது இவர்கள் பேசுவது பெரிய அறிவுஜீவிகளைப்போல. ஆனால் அதே சமயம் தூக்குத்தண்டனை பற்றிப் பேசும்போது தெருவில் இறங்கி நின்று பேசும் தோரணை.
1. அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்று போராடுகிறார். தன்னையே வருத்திக்கொள்கிறார். நாடு அவருக்கு ஆதரவளிக்கிறது. அதை இவர்கள் ஜனநாயக விரோதம் என்கிறார்கள். அண்ணா எலக்ஷனில் நின்று ஜெயித்து வரட்டுமே என்று சொல்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அண்ணா பேசக்கூடாதாம். அது மக்களை அவமதிக்கும் பிளாக்மெயிலாம். அவர் அரசியல்சட்டத்தின் மாண்பை அழிக்கிறாராம்.
ஆனால் வை.கோ போன்றவர்கள் 'ரத்த ஆறு ஓடும்' 'நாடு துண்டுதுண்டாகும் ' என்று அரசாங்கத்தை மிரட்டுவது ஜனநாயக நடவடிக்கை என்கிறார்கள். இத்தனைக்கும் வை.கோவால் ஒரு தொகுதியில்கூட டெப்பாசிட் பெறமுடியாது. அவர்களுக்குப் பின்னால் பத்துப்பேர் கூடக் கிடையாது. உச்ச நீதிமன்றமே தண்டித்த குற்றவாளிகளை வை.கோ நிரபராதிகள் என்று அறிவிக்கிறார். இது அரசாங்கத்தையோ மக்களையோ அவமதிப்பது கிடையாதாம். அரசியல் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றும் செயலாம்.
2. அண்ண ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஷோ என்று கிண்டல்செய்கிறார்கள். காந்தியவழிகள் எல்லாம் வெறும் காமெடி என்கிறார்கள். இவர்களும் அதே மெழுகுவர்த்திகளைத்தான் ஏந்துகிறார்கள். அதே மாதிரி உண்ணாவிரதம்தானே இருக்கிறார்கள்.
3. ஒருபக்கம் வை.கோவும் ராமதாஸும் இவர்கள் நிரபராதிகள் என்கிறார்கள். அதனால் இவர்களை விட்டுவிடவேண்டுமாம். ஆனால் இன்னொரு பக்கம் தூக்குத்தண்டனையே வேண்டாம் என்கிறார்கள். தூக்குத்தண்டனை வேண்டாம் என்று சொல்வதற்குத்தான் அருந்ததி ராய் போன்றோர் ஆதரவு அளிக்கிறார். இவர்கள் இந்தக் குற்றவாளிகள் மூவரும் நிரபராதிகள் என்று சொல்லி அவர்களின் ஆதரவு திரட்டட்டுமே. இதென்ன மோசடி?
4 .இந்த மூன்று குற்றவாளிகளும் ராஜீவ் கொலை தப்பு என்றும் வருத்தப்படுகிறார்களென்றும் இன்றைக்கு வரை சொல்லவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி செண்டிமென்டுகளை உண்டுபண்ண முயற்சி செய்கிறார்கள். ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான் என்று இப்போதும் இவர்கள் மேடையிலேயே சொல்கிறார்கள். 'தமிழ்ப்பெண்களைக் கற்பழிக்க ராணுவத்தை அனுப்பியவர்களுக்கு உரிய தண்டனையைத் தமிழர்கள் கொடுத்தார்கள். அதை அவர்கள் செய்திருக்க கூடாது, நாம் செய்திருக்கவேண்டும்' என்று சீமான் ஈரோட்டிலே பேசினதை நானே கேட்டேன். அமிர்தலிங்கம் போன்றவர்கள் கொல்லப்பட்டதை 'துரோகிகளுக்குப் புலிகள் கொடுத்த தண்டனைகள்' என்று சொன்னார் வை.கோ. இப்போது மரணதண்டனை தப்பு என்கிறார்கள். இஸ்லாமிய நாட்டிலே அல்லாஹூ அக்பர் என்று சொல்லிக் கழுத்தை அறுப்பது நியாயம். இந்தியாவில் அப்சல்குருவைத் தூக்கிலே போட்டால் அநியாயம். அதாவது அவர்கள் நம்மைக் கொல்வது நியாயம், நம் அரசு திருப்பி அவர்களைக் கொல்வது அநியாயம். இதுக்கு என்ன அறிவுஜீவி பசப்பு?
இந்த முரட்டுமுட்டாள்தனத்துக்கெல்லாம் துணைபோகாதீர்கள் , தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்
சரவணன் ஆ
அன்புள்ள நண்பர்களுக்கு,
என் கருத்து இதுவே.
மனிதாபிமானக் கண்ணோட்டத்தால் மட்டுமே உண்மையான ஆதரவைத் திரட்டவும் முடியும். நீதிமன்றத்தைப் பழி தூற்றுவதும், காங்கிரஸை வசைபாடுவதும், பிரிவினைவெறி பேசுவதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.
காரணம் அரசியல்கட்சிகளுக்குப் பல கட்டாயங்கள் உண்டு. அவை நீதிமன்றத்தைத் தாண்டிச்செல்லமுடியாது. ராஜீவ் காந்தி கொலை போன்ற நுட்பமான விஷயத்தை அவை கவனமாகவே கையாள முடியும். உதாரணமாக பாரதிய ஜனதா. அது இவ்விஷயத்தை ஆதரித்தால் அது காங்கிரஸ் எதிர்ப்பால் ராஜீவ் கொலையாளிகளை ஆதரிக்கிறது என்ற நிறம் வரும். இதே இக்கட்டு மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் எல்லாம் உண்டு. காங்கிரஸ் அதை வசதியாக இந்தியா முழுக்க பரப்பும். ஆகவே யோசிப்பார்கள். பிரிவினைவாதம் பேசினால் எந்த அரசியல்கட்சியும் ஆதரவை அளிக்காது.
ஆகவே மனிதாபிமானக் கண்ணோட்டம் மட்டுமே உண்மையாக செல்லுபடியாகக் கூடியது. ஆனால் நம்மில் அந்த விவேகமுள்ளவர் அனேகமாக யாருமில்லை. 'தமிழகம் தனிநாடாகவேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த மூவருக்கும் விடுதலை தேவை என்று சொன்னால் மட்டுமே அவர்களை ஏற்போம் , இல்லையேல் கீழ்த்தரமாக வசைபாடுவோம்' என்கிறார்கள் தமிழிய ஆதரவாளர்கள். அவர்களின் எதிர்ப்பு கடைசியில் ஒரு சின்னக் குமிழியாக உடைந்து போகும். அதிகபட்சம் 10 நாள் நீடிக்கும் ஒரு அனுதாப அலை -அதிலும் பெண்கள் பொருட்படுத்தவே போவதில்லை
இவர்களின் இந்த அரசியல்கண்மூடித்தனமே அம்மூவரையும் தூக்கு நோக்கி உந்திச்செல்கிறது என நான் அஞ்சுகிறேன். இப்போதிருக்கும் சின்ன வாய்ப்பையும் அரசியல் மூலம் கெடுக்கிறார்கள். தூக்கு நடக்கட்டும், அதை அரசியல் கருவியாக ஆக்குவோம் என்று நினைக்கிறார்கள். மிச்சபேருக்கு இந்தத் தருணத்தில் முற்போக்காகத் தோற்றமளிப்பது தவிர ஆர்வம் இல்லை.
நாம் நம்மைக் காட்டிக்கொள்வதற்கான தருணம் அல்ல இது. இவர்கள் [ஏன் நானும்தான்] தூக்கு முடிந்த பத்தாம் நாள் யார் அந்த மூவரும் என்று கேட்கும் நடுத்தரவர்க்கம். மாபெரும் மானுடப்படுகொலையைக் கண்டும், தீக்குளிப்புகளைக் கண்டும், காங்கிரசுக்கு வாக்களித்த நம் மக்கள் முன்னால் இதை ஒரு நேரடியான மனிதாபிமானப் பிரச்சினையாக அல்லவா வைக்கவேண்டும்? 'ரத்த ஆறு ஓடும்', 'ராஜீவ் குடும்பமே பதில் சொல்லவேண்டியிருக்கும்' என்று நாகர்கோயிலில் இவர்கள் பேசுவதைக் கேட்டேன். துரதிருஷ்டம், வேறென்ன சொல்ல?
இனி இதில் பெரிதாக நான் சொல்ல ஏதுமில்லை. எனக்கு வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்களுக்கு மாதிரியாக இவற்றை வெளியிடுகிறேன். இவ்விஷயத்தை இங்கே முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.
ஜெ
August 27, 2011
இந்தப்போராட்டத்தில்…
சமகால அரசியலைப் பற்றிப் பேசக்கூடாது என்பது,என் சுயக் கட்டுப்பாடுகளில் ஒன்று. அதை மீறிய முதல் தருணம் இந்த அண்ணா ஹசாரே போராட்டம். அது தன்னிச்சையாக நடந்தது. தொடக்கத்திலேயே அந்த நிகழ்வு ஒரு முக்கியமான வரலாற்றுத்திருப்புமுனை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை சற்றும் புரிந்துகொள்ளாத மேலோட்டமான எள்ளலும் உள்ளீடற்ற தர்க்கங்களும் அதிகமாகக் காதில் விழுந்தபோது எதிர்வினையாற்றினேன். அது ஒரு தொடர் செயல்பாடாக இன்றுவரை நீண்டு வந்துவிட்டது. அவ்வாறு உடனடி எதிர்வினை ஆற்றலாகாது என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.
என் குழுமத்தில் கிட்டத்தட்ட 450 பேர் இருக்கிறார்கள். வழக்கமாகக் கடிதம் எழுதும் அனைவரும் அங்கேயே நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மிக அதிகமாக விவாதம் நடக்கும் குழுமம் அது. அதற்கு அப்பால் எனக்கு வழக்கமாக வரும் கடிதங்களின் எண்ணிக்கை முன்பிருந்ததில் பாதிதான். ஆனால் இந்தப் போராட்டம் பற்றி எழுத ஆரம்பித்தபின்னர் மீண்டும் என் மின்னஞ்சல்பெட்டி நிறைந்து வழிய ஆரம்பித்தது. நெடுநாட்களுக்கு பகலிரவாக பதில்களை எழுதிக்கொண்டிருக்க நேரிட்டது.
காரணம் இணையத்தில் இலகுவாக அகப்படும், எதிர்வினையாற்றும் எழுத்தாளன் இன்று நான் மட்டுமே என்பதுதான். ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது உணர்ச்சிகள், சஞ்சலங்கள் உச்சநிலையில் உள்ளன. எங்கும் எல்லாரும் அதையே விவாதிக்கிறார்கள். அதே வேகத்துடன் தான் விரும்பும் எழுத்தாளனுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் எந்த எழுத்தாளனும் பல்லாயிரம்பேருடன் விவாதிக்கமுடியாது. விவாதிக்க ஆரம்பித்தால் அது வளர்ந்து வளர்ந்து அது அவன் ஆற்றலை உறிஞ்சி காலியாக்கிவிடும். நான் தனிப்பட்ட பதிலளிக்காத மின்னஞ்சல்கள் ஆயிரத்திஐநூறுக்கும் மேல் உள்ளன. அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.வரும் நாட்களின் வேலையே அவற்றுக்கு பதிலெழுதி முடிப்பதுதான்.
இந்த நாட்களில் அண்ணா ஹசாரே போராட்டம் பற்றி நான் கிட்டத்தட்ட 60 கட்டுரைகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். என் இணையதளமே அண்ணா ஹசாரேவுக்கான தளமாக ஆகிவிட்டது. அதன் கொள்ளளவும் வருகையாளர்களும் அதிகரிக்கவே வேகம் குறைந்து வேறு சர்வர் தேடவேண்டியிருந்தது.ஒருநாள் முழுக்க தளம் இயங்காமல் போனது/எதிர்வினைகளையும் பிரசுரித்திருந்தால் இன்னும் ஐந்தாறு மடங்கு இடம் தேவைப்பட்டிருக்கும். வேறு எந்த விஷயமும் இடம்பெறாது போயிற்று.
அந்தக் கட்டாயம் என்னுடன் விவாதிப்பவர்களால்தான் எனக்கு ஏற்பட்டது. ஐயங்கள் நேர்மையானவை என்பதனால் என்னால் விலக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கு தமிழ்ச்சூழல் சார்ந்து ஒரு தேவையும் இருந்தது. தொடர்ச்சியாக அண்ணா ஹசாரே பற்றிய விரிவான விளக்கங்களை அளித்த தளம் என்னுடையதுதான். ஆனால் வேறு எதுவுமே செய்யமுடியாமலாகியது. சமகால அரசியல் சார்ந்து உடனடியாக இணையவிவாதங்களில் ஈடுபடுவதன் அபாயம் இது. அந்நிகழ்ச்சி முடிந்தபின் என்றால் எல்லாப் பக்கங்களையும் தொகுத்துப்பார்த்து அதிகபட்சம் இரு கட்டுரைகள் எழுதியிருந்தால் தெளிவாகவே எல்லாவற்றையும் பேசிவிடலாம். ஆகவே இனிமேல் சமகால அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் விவாதிக்கப்போவதில்லை.
இந்த விவாதங்களில் என் நண்பர்களும் தீவிரமாக ஈடுபட்டது நிறைவளிக்கிறது. இதையொட்டி அண்ணா ஹசாரே பற்றிய என் எழுத்துக்களின் ஆங்கில மொழியாக்கம் http://thesabarmati.wordpress.com என்ற தளத்தில் பிரசுரமாகிவருகிறது. அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட http://annahazare-tamil.blogspot.com/ என்ற வலைமனை நண்பர்களால் http://www.gandhitoday.in/ என்றபேரில் ஒரு வலையிதழாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காந்தி, காந்தியப்போராட்டங்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும் ஒரே இடத்தில் தொகுப்பதே அதன் நோக்கம்.நண்பர்கள் மொழியாக்கம் செய்து உதவலாம்.
அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு கிழக்கு பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. 'அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான காந்தியப்போராட்டம்'
சிறிய அளவிலேனும் இதில் பங்கெடுத்த நிறைவு எனக்குள்ளது. இப்போதைக்கு இது போதும்.
தளங்கள்
காந்தியம் இன்று இணையதளம் காந்திய கட்டுரைகள்
சபர்மதி இணையதளம் ஆங்கில மொழியாக்கங்கள்
August 22, 2011
அண்ணா ஹசாரேவின் அரசியல்
ஜெ,
இந்து இயக்கங்கள்தான் அண்ணா ஹசாரே பின்னால் இருக்கின்றன என்பதுதான் அவர் மீது சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?
சிவமணி,சென்னை
அன்புள்ள சிவமணி,
லோக்பால் மசோதாவுக்கான இந்தப் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால் அரசியல் கணக்குகள் எளிதில் மாறிக்கொண்டிருப்பதைக் காணலாம். எல்லா அரசியல்கட்சிகளும் இதில் தள்ளாடும் நிலையையே கொண்டிருக்கின்றன. அது புரிந்துகொள்ளக்கூடியதே.
அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆரம்பித்தபோது காங்கிரஸ் அஞ்சியது. அந்தபோராட்டம் காங்கிரஸை ஊழல் அரசாக மக்கள் மத்தியில் சித்தரிக்குமென நினைத்தது. அதை தவிர்க்க எளிய வழி என்பது அண்ணா ஹசாரேவை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவளராக சித்தரிப்பது. அதன் வழியாக இந்த ஒட்டுமொத்தப் போராட்டமே அரசை எதிர்த்து எதிர்க்கட்சியினர் செய்யும் போராட்டம் மட்டுமே என்று காட்டுவது.
அதன் மூலம் எளிதாக அண்ணா ஹசாரேவின் மக்களாதரவை, நம்பகத்தன்மையை குலைக்கமுடியுமென காங்கிரஸ் நினைத்தது. ஏனென்றால் பாரதிய ஜனதாவும் ஊழலில் நனைந்த கட்சியே. லோக்பாலுக்கான கோரிக்கை அரை நூற்றாண்டாக இருக்கிறது. ஒருகாலத்தில் அதற்காக ஜனசங்க நிறுவனர் சியாமபிரசாத் முக்கர்ஜியே பேசியிருக்கிறார். ஆனால் பாரதிய ஜனதாக்கட்சி அதை அவர்களின் ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளவேயில்லை.
இன்று கர்நாடகத்தில் லோக்பால் அளவுக்கு அதிகாரமில்லாத லோக் ஆயுக்தா போன்ற அமைப்பால் அதன் ஊழல்கள் வெளியே இழுத்துப்போடப்பட்டு மிக தர்மசங்கடமான நிலையில் அது உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஊழலைப்பற்றிப்பேசினால் அதை எவரும் பொருட்படுத்தப்போவதில்லை என காங்கிரஸ் அறியும்.
மேலும் அண்ணா ஹசாரேவின் இயக்கத்தை பிளவுபடுத்தவும் அது உதவும். ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும், இடதுசாரிக்கட்சிகளையும் அவரது இயக்கத்தில் இருந்து வெற்றிகரமாக பிரித்துவிட முடியும். அவர்கள் பாரதியஜனதா மீண்டும் பதவிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். ஆகவே காங்கிரஸ் ஊடகங்களும் ஊழல்முத்திரை கொண்ட திமுக போன்ற கட்சிகளும் அண்ணா ஹசாரேவை பாரதிய ஜனதாவுடன் சம்பந்தப்படுத்தி எல்லா ஊடகங்களையும் கவர்ந்துகொண்டு பிரச்சாரம் செய்தன. 'நடுநிலை' இதழாளர்கள் அதற்காக உரிய வாடகைக்கு எடுக்கப்பட்டார்கள்.
ஆனால் மெல்ல மெல்ல அது திருப்பியடிக்க ஆரம்பித்தது. பாரதிய ஜனதா என்பது ஒரு ஒற்றையமைப்பு அல்ல. அதற்குள்ளும் ஊழலால் பொறுமையிழந்த ஒரு பெரும் தொண்டர்படை உள்ளது. அவர்கள் பலவருடங்களாகவே தலைமைமேல் சோர்வுற்று இருந்தார்கள். பாரதிய ஜனதா ஊழல் சார்ந்த விஷயங்களில் மென்று முழுங்குவது அவர்களுக்கு தெரியும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட தனிநபரான சுப்ரமணியசாமி செய்ததைக்கூட பாரதிய ஜனதா என்ற பெரிய எதிர்க்கட்சி செய்யவில்லை என அவர்கள் அறிவார்கள்.
ஆகவே தொண்டர்களில் கணிசமானவர்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின்பால் ஆதரவு மனநிலை கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களால் அண்ணா ஹசாரேவை நம்ப முடியவில்லை. காரணம் இப்போது அண்ணா ஹசாரேகூட இருக்கும் அர்விந்த் கேஜரிவால், கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் வெளிப்படையான இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். தொண்டர்களின் மனம் ஊழல் ஒழிப்பை நோக்கிச் செல்வதை கண்ட பாரதிய ஜனதாவின் தலைமை அண்ணா ஹசாரே இயக்கத்தை ஓர் இடதுசாரிக்குழு என்று சித்தரித்து பிரச்சாரம் செய்தது.
ஆக ஒரு விசித்திரமான நிலை. அண்ணா ஒருபக்கம் பாரதிய ஜனதாக்கட்சிக்காரர் என வசைபாடப்பட்டார். மறுபக்கம் அவர் காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு ஒரு நாடகம் நடத்துபவராக காட்டப்பட்டார். ஒரே சமயம் இருபக்கமும் வசை.
அண்ணா ஹசாரேவுக்கே சங்கடமான நிலைதான். அவர் தன் போராட்ட வேகத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமென்றால் பிளவுபடாத மக்களாதரவு தேவை. அவர் எந்தக்கட்சியையும் சாராதவர் என்ற அடையாளமே அவருக்கு மக்கள்கூட்டத்தை திரட்டுகிறது. ஏனென்றால் மக்கள் அந்த அரசியல்வாதிகள்மேல் ஆழமான ஐயம் கொண்டவர்கள். ஆகவே அவர் தன்மேல் இந்துத்துவ முத்திரை குத்த காங்கிரஸ் செய்த முயற்சிகளை தாண்டவேண்டியிருந்தது.
அதற்காக அண்ணா பல சமரசங்களைச் செய்தார். அவர் ஆரம்பத்தில் பாரதஅன்னை படத்தையும் விவேகானந்தர் படத்தையும் வைத்திருந்தார். இந்திய பண்பாட்டுப்பரப்பில் பாரதமாதா என்பது மதம் சார்ந்ததல்ல. இந்திய சுதந்திரப்போரை ஒருங்கிணைத்த குறியீடு அது. சுவாமி விவேகானந்தரை இந்துத்துவத்துடன் அடையாளப்படுத்துவது அயோக்கியத்தனம் அன்றி வேறல்ல. இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் தேசிய முன்னோடி அவர்– அதை அறுதியாக ஆணையிட்டு சொல்லும் குரலை நாம் அம்பேத்காரில் காணலாம்
ஆனால் காங்கிரஸ்-இடதுசாரி ஊடகங்கள் அவ்விரு படங்களையும் வைத்தே அவரை இந்துத்துவர் என்று முத்திரை குத்தின. தன் இயக்கம் பிளவுபடுவதை விரும்பாத அண்ணா அவற்றை நீக்கிக்கொள்ளவேண்டியிருந்தது. இந்த தர்மசங்கடம் காந்திக்கு பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொருமுறையும் ஒற்றுமையை முன்வைத்து சமரசங்களை அவர் செய்திருக்கிறார். ஏனென்றால் பிளவுபடுத்தப்பட்ட மக்கள் போராட்டம் எளிதில் பிசுபிசுக்கும். அதை எதிரிகள் நன்கறிவார்கள்
உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரம்பத்தில் எல்லா காங்கிரஸ்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஜார்ஜ் ஜோசப் போன்ற கிறித்தவர்கள், அப்துல் ரகுமான் சாகிப் போன்ற இஸ்லாமியர். ஒருகட்டத்தில் ஆலயபிரவேசம் அனுமதிக்கப்படாவிட்டால் மதம் மாறுவோம் என ஈழவர் தலைவரான குஞ்சுராமன் அறிவித்தார். உடனே ஈழவர்களை ஒட்டுமொத்தமாக மதம் மாற்ற இஸ்லாமிய குழுக்களும் கிறித்தவக்குழுக்களும் களமிறங்கின.
இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு பழமைவாதிகள் இந்த ஒட்டுமொத்த ஆலயநுழைவுப்போராட்டமே இந்துமதத்தை அழிக்க இஸ்லாமியரும் கிறித்தவரும் நடத்தும் சதியே என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்துக்கள் மத்தியில் மிக விரைவில் அந்த பிரச்சாரம் வலுப்பெற்றது, எந்த சந்தேகமும் சீக்கிரம் பரவும். சதி என்று கூச்சலிட்டாலே மக்கள் திரும்பிப்பார்ப்பார்கள்
ஆகவே காந்தி வைக்கம் போராட்டத்தில் உள்ள மாற்றுமதத்தவர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று கோரினார். அதை ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடன் அங்கே தற்காலிக முகாமடித்திருந்த ஈவேராவும் சேர்ந்துகொண்டார். காந்திக்கு எதிரான ஒரு குழுவாக அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால் காந்திக்கு வேறு வழி இல்லை. போராட்டத்தை அவர் காத்தாகவேண்டும். அதுதான் இங்கேயும் அண்ணா சந்திக்கும் நிலை.
இவ்வாறு பாரதமாதா, விவேகானந்தர் படங்களை அண்ணா ஹசாரே நீக்கியதைச் சுட்டிக்காட்டி அண்ணா காங்கிரஸ் கைக்கூலி என பாரதிய ஜனதாவின் கொள்கை இதழ்கள் பிரச்சாரம் செய்தன. அண்ணா ஹசாரே அரசுக்கு ஒரு வாய்ப்பளித்து தன் போராட்டத்தை ஒத்திவைத்த நிலையில் பாபா ராம்தேவ் களமிறங்கினார். அவருக்கு ஏற்கனவே அரசியல் ஆசைகள் இருந்தன. கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லிவந்தார். இந்த சந்தர்ப்பம் தனக்கு ஒரு தொடக்கமாக இருக்குமென நினைத்தார்
பாபா ராம்தேவ் களமிறங்கியபோது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மனத்தடையின்றி அதில் ஈடுபட்டனர். அண்ணா ஹசாரேவின் நோக்கத்தையும் பின்னணியையும் பற்றி ஆயிரம் ஐயங்களை எழுப்பிய இந்துத்துவ இதழ்கள் ராம்தேவை அடுத்த விவேகானந்தர் என்றன. அவரை காங்கிரஸ் தலைவர்கள் ரத்தினக்கம்பளம் விரித்து கொண்டுவந்ததைக் கண்டும் அவர்கள் ஐயப்படவில்லை. காரணம் அவர் அணிந்திருந்த காவி.
ராம்தேவை காங்கிரஸ் அஞ்சியது. காரணம் அவரது மதச்சின்னம். அது பழைய ராமஜன்மபூமி விவகாரம்போல வெடிக்கும் என நினைத்தது. ஆனால் சீக்கிரமே அவர் ஒரு பயந்தாங்குளி என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவருக்கு அவரது சீடர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் மட்டுமே பின்புலம், மக்கள் அல்ல என வெளிப்படையாக தெரிந்தது. ஆகவே சாதாரணமாக அவரை அடித்து துரத்தினார்கள்.
மீண்டும் அண்ணா ஹசாரேவின் போராட்டம் ஆரம்பித்த போது எழுந்த மக்கள் ஆதரவு காங்கிரஸ்,பாரதியஜனதா என இரு கட்சிகளையுமே அச்சுறுத்துகிறது. காங்கிரஸின் அச்சம் இந்த மக்களெழுச்சி அரசு மீதான வெறுப்பாக மாறி அடுத்த தேர்தலை பாதிக்கும் என்பது. அரசுகள் எல்லாமே செய்வதைப்போல முன்னர் செய்ததையே திருப்பி செய்துபார்த்தது காங்கிரஸ். அண்ணாவை கைதாக்கி அச்சுறுத்த முயன்றது. அண்ணா ஹசாரே ராம்தேவ் அல்ல என்று நிரூபணமாயிற்று.
மறுபக்கம் பாரதிய ஜனதாக்கட்சி இந்த மக்கள் எழுச்சியை சாதகமான அலையாக மாற்றமுடியுமா என திட்டமிடுகிறது. ராம்தேவிடம் ஏமாந்த அதன் தொண்டர்படையில் கணிசமானவர்கள் ஏற்கனவே அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பாரதிய ஜனதாவின் தலைமை அண்ணா ஹசாரேவை வேறுவழியில்லாமல் ஆதரிக்கிறது.
ஆனால் அவர்களின் அதிதீவிர மையம் அண்ணா ஹசாரேவை ஒரு இடதுசாரியாகவே பார்க்கிறது. காங்கிரஸ் ஏதோ சதி செய்கிறதென்பதே அதன் எண்ணம். அவர்களில் தீவிரவாதிகள் இதை அமெரிக்க சதியாக நினைக்கிறார்கள். அவர்களின் இதழ்களில் அண்ணா ஹசாரே ஒரு ஏமாற்றுப்பேர்வழியாகவே சித்தரிக்கப்படுகிறார்.
காங்கிரஸை அச்சுறுத்துவது லோக்பால் வழியாக பொதுநல ஊழியர்கள் ஆட்சிக்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் என்ன செய்வது என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றை எதிர்கட்சியுடன் பேரம்பேசி மூன்றுவருடம் பொதுக்கணக்கு குழுவுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது, லோக்பால் வந்தால் அது முடியாது. ஆகவேதான் அது லோக்பாலை ஒரு ஒப்புக்குச்சப்பாணி அமைப்பாக ஆக்க முயல்கிறது.
மறுபக்கம் பாரதிய ஜனதாவுக்கும் அதே அச்சம்தான்.அவர்களும் ஆளும்கட்சிதான், பல மாநிலங்களில். நாளை ஒருவேளை மத்தியில். அப்போதும் இதே பொதுநல ஊழியர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது? மிதமான அதிகாரம் கொண்ட கர்நாடக லோக் ஆயுக்தா அமைப்பே எதியூரப்பாவை ஓட ஓட துரத்தியிருக்கிறது.
ஆனால் இருதரப்புமே மக்கள் சக்தியை அஞ்சுகின்றன. அண்ணா இந்த அச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அதுவே சரியானது. இப்போராட்டம் பாரதிய ஜனதாவுக்குச் சாதகமாக சென்றுவிடக்கூடாது என அஞ்சி காங்கிரஸ் சமரசத்துக்கு வநதாகவேண்டும். அதுவே வெற்றியாக அமையும். பாரதிய ஜனதாவைப்பொறுத்தவரை அப்படி சீக்கிரமே சமரசமாகி காங்கிரஸ் தப்பிவிடுமா என்ற ஐயம் காரணமாக அது பதறுகிறது.
இடதுசாரிகளைப்பொறுத்தவரை இந்த எழுச்சி அவர்களுக்குச் சாதகமானதல்ல. ஏனென்றால் இதை அவர்கள் நடத்தவில்லை. இதன் விளைவுகளால் பாரதிய ஜனதா லாபமடையும் என்றால் அவர்களுக்கு அது நஷ்டம். ஆகவே அண்ணாவை எதிர்க்கிறார்கள். ஆனால் லோக்பால் வருமென்றால் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள போகிறவர்கள் அவர்களே. குறிப்பாக தொழிற்சங்க அமைப்புகள். ஆகவே அவர்கள் மென்று முழுங்குகிறார்கள்
கட்சி சாராத ஒரு மக்கள்தரப்பு என்பதை சந்திப்பது இந்த எல்லா அரசியல்தரப்புகளுக்கும் புதிரானதாக உள்ளது ஆகவே ஆளுக்கொரு குரலில் குழப்பிக் குழப்பி பேசிக்கொண்டிருக்கின்றனர். நடுவே அண்ணாவின் இயக்கம் எல்லா மக்களியக்கங்களையும்போல ஒருவகையான தன்னிச்சையான பிரவாகமாக, சமரசங்களும் உத்வேகங்களுமாக முன்னகர்கிறது
அண்ணாஹசாரே இத்தகைய போராட்டத்தில் எந்த நிபந்தனையையும் ஆதரவாளர்கள்மேல் போடமுடியாது. ஏனென்றால் இது தன்னிச்சையான கூட்டம். வருபவர்கள் எல்லாரையும் அவர் ஏற்றாகவேண்டும். அவர்களில் இந்துத்துவர் இருந்தால், அவர்களின் கடைசி நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், தடுக்கமுடியாது. அதேசமயம் அவர் தன்மேல் இந்துத்துவ அடையாளம் விழுவதை அனுமதித்தால் அதைவைத்தே காங்கிரஸ் அவதூறு செலுத்தும். பாரதிய ஜனதாவின் ஆதரவை விலக்குகிறார். காங்கிரஸையும் பாரதியஜனதாவையும் சமதூரத்தில் வைத்துக்கொள்ள முயல்கிறார். இது ஒரு கத்திமேல் நடை.
ஜெ
இரு இந்துத்துவக்குரல்கள்
1. விஜயவாணி
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
திரும்ப திரும்ப அன்னாவை பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும்? . இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம பரவலாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறன். ஆகவே கோபப்படாமல் மேலும் ஒரு சில கேள்விகளுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (உண்மையிலேயே உங்கள் கோபம மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது அதுவும் எழுத்து மூலமாக மட்டும்!! நேரில் எப்படியோ
..)
அன்னாவின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்களை அறிவுஜீவிகள் என்றும், இவர்கள் அவர்கள் அறிவு ஜீவிகள் என்றும் குறிப்பிடுவதை நானும் படித்து தெளிவாக நான் அறிவு ஜீவி இல்லை என்ற முடிவுக்கே எப்போதோ வந்து விட்டேன். எனவே தொனியில் ஏதும் பிழை இருந்தால பொறுத்து கொள்ளவும்..!
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. அன்னாவின் போராட்டத்திற்கு இப்போது ஆதரவளிக்கும் அத்தனை பேரும் இது வரை குறைந்த பட்சம் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்காகவாது லஞ்சம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா?. மிகவும் முரண்பாடான ஒரு நடுத்தர சமூகம் நமது.
"அவன் திறமை சாலி அரசு வேலையில் சேர்ந்த உடனே புடிக்க வேண்டிய ஆளை பிடிச்சு..மேல போய் அஞ்சு வருசத்தில கார், பங்களா ன்னு செட்டில் ஆயிட்டான்",
"கஷ்ட்டப்பட்டு(?) லஞ்சம் கொடுத்து இந்த சீட் வாங்கி குடுத்திருக்கேன்..ஒழுங்கா படி"..
"திடீர்னு ஆபீஸ்-ல பாரின் போக சொல்லிட்டாங்க. அதான அவசர அவசரமா ஆளை புடிச்சு பத்து நாளில் பாஸ்போர்ட் வாங்கிட்டேன்..எட்டாயிரம் ஆச்சு"..
இதெல்லாம் ரொம்ப சாதரணமாக கடந்து செல்லும்..நடுத்தர கூட்டம்தான்.."ஆமாம் ஆமாம் ஊழல் ஒழிக!" என்று கூச்சல் போடுகிறது.
இவர்களில் யாருக்காவது குப்பை அள்ளுகிற அரசு ஊழியனுக்கு காசு கொடுக்க முடியாது என்று சொல்லும் தைரியம் உண்டா?.. ஆனால் தார்மீக ஆதரவு தரலாம்..காசா பணமா?.. கழுதையை தந்துட்டா போகுது..அப்படிப்பட்ட பொறுப்புள்ள சமூகம்தான் இது??..
பேங்கில் வரிசையில் நிற்கும்போது..வேலையை பார்க்காமல் பேசிக்கொண்டிருந்த ஊழியரை கண்டித்த ஒருவரை..மக்கள் எல்லாரும் சேர்ந்து திட்டியதை பார்த்திருக்கிறேன்.. "பாருங்க உங்களால சார் கோவிச்சிக்கிட்டார். எங்க எல்லாருக்கும் வேலை லேட். ஒரு பத்து நிமிசம் பேசிட்டு வந்து அவர் பாட்டுக்கு வேலை பார்த்திருப்பார்.." என்று கூறி அவரை மன்னிப்பு கேட்க வைத்த கூட்டம்தான் நமது சமூகம்.. ..! தனிப்பட்ட வாழ்கையில் எனக்கு இதை போல நிறைய அனுபவங்கள்..!
"அட விடுங்கப்பா..டிவி-ல பாக்கும்போது..ஆமா..ஆமா ஊழல் ஒழியனும்னு சொன்னா போதும்".. தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை தேவை இல்லை..என்ற எண்ணம உடையது தானே நம் சிறந்த ஊழல் எதிர்ப்பு சமூகம்?..இதுதான் காந்தி எதிர் பார்த்த மக்கள் எழுச்சியா?..
இவ்வளவு ஏன்.. (இதை எழுதும்போது தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு… வேறு ஏதும் காரணம் இருந்து..நீங்கள் என்னை திட்டி விடுவீர்கள் என்று..)
நீங்களே கூட கொஞ்ச நாளுக்கு முன் நாகர்கோவிலில் ஒரு போராட்டம் இருந்தவரை "கோட்டி" என்று குறிப்பிடவில்லை?. (தவறு இருந்தால மன்னிக்கவும்).
அரசியல்வாதிகள் திருந்துவது என்பது..அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளால் ஏற்படாது என்பதே என் எண்ணம. ஊழல் செய்வதில் என்ன தவறு செய்ததால் மாட்டி கொண்டோம் என்றுதான் யோசிப்பர்களே தவிர ஊழல் தவறு என்று ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள்.
உண்மையிலே வருத்தமாக இருக்கிறது. 'எனக்கு வேலை ஆகணும்..அதற்காக லஞ்சம் கொடுப்பேன். ஆனா லஞ்சதை ஒழிக்க நானும் குரல் கொடுப்பேன்" என்னவிதமான பொறுப்பை தட்டி கழிக்கும் பாங்கு இது?. இவர்களுக்காக போராட ஒரு காந்தி வேண்டும், அன்னா வேண்டும்..அனால் இவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.
எனக்கு தெரிந்தவரையில் (சிறு அறிவுக்கு எட்டிய வரையில்)..இருக்கும் சட்டங்கள் போதும்..எந்த சட்டமும் ஊழலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஏற்பட வேண்டிய மாற்றம் மக்களிடம்தான்..ஒரு குறைந்த பட்ச நேர்மை ஒவ்வொருவரிடமும் இருப்பது..அஸ்திவாரத்தை ஆட்டும். அது எல்லா மாற்றங்களையும் கொண்டு வரும். அன்னா இதே எழுச்சியை..'லஞ்சம் கொடுக்க மாட்டோம்' என்று மக்களை உறுதி எடுக்க வைத்தால் அதன் மூலம் வரும் மாற்றம் நிரந்தரமாகவும், ஓட்டு மொத்தமாகவும் இருக்கும் இல்லையா?'. அப்படி வாங்குபவர்களை பற்றி புகார் கூற தைரியம் மட்டும் அல்ல..நேர்மையும் வேண்டும்.. கொடுக்காதவர்கள்தானே வாங்கக்கூடாது என்று சொல்ல முடியும்?..
லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற உணர்வுதான் காந்தியின் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றது..! "நீங்க அந்நிய துணியை போடுவீர்களோ மாட்டீர்களோ எனக்கு கவலை இல்லை..! ஆனால் அந்நிய துணியை விக்கிறவன் எல்லாத்துக்கும் தண்டனை வாங்கி தர்றதுக்கு புது சட்டம் வரணும்"..இப்படியா காந்தி போராடினார். மாற்றம் ஏற்பட வேண்டியது யாரிடம் என்பது அவருக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது..! இன்றும் அந்த மாதிரியான மாற்றம்தான் தேவை படுகிறது.
அந்த மாற்றத்தை கொண்டு வர அண்ணாவை போன்ற காந்திய கொள்கை உடைவரால் முடியும் என்பதே என் எண்ணம.
மற்றபடி அன்னாவின் போராட்டத்தை கொச்சை படுத்தி வாழ்பவர்கள்..மிக கீழ்த்தரமான அரசியல் வாதிகள் கூட்டம்தான்… ஒரு கூட்டம்..அவரை காந்தியின் நீட்சியாக பார்த்து..அவருக்கு எதிராக இருந்த அதே அடிப்படைவாத மனநிலையை கொண்டுள்ளது..இன்னொன்று..அவர் அருகில் அமர்ந்திருக்கும் காவி நிறத்தை பார்த்து பயபடுகிறது…அவ்வளவுதான். !
எதுவும் தவறு இருந்தால் மன்னிக்கவும்!!
–
Thanks & Regards,
Kaliraj G
[image error]
அன்புள்ள காளிராஜ்,
உங்கள் கேள்வியில் உள்ளவை சில எளிமையான முன்முடிவுகள் மட்டுமே. வரலாற்றுநோக்குடன் விரிவாகப் பிரச்சினையைப்பார்க்காமல் உடனடி எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
இன்று இந்திய மக்களிடம் குடிமையுணர்ச்சி இல்லை, பொதுவாழ்க்கையில் நேர்மை தேவை என்ற எண்ணம் இல்லை, அவர்களும் அன்றாடவாழ்க்கையில் எல்லா சமரசங்களுக்கும் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை.
ஆகவே அதற்கு தீர்வு 'ஒவ்வொருவரும் மனம்மாறுவதே' என்று சொல்வதைப்போல அப்பாவித்தனமான பேச்சு ஒன்று உண்டா என்ன? அப்படியானால் அரசியலியக்கமே தேவை இல்லையே.
சரி, ஒவ்வொருவரும் எப்படி மாறுவார்கள்? லஞ்சம் தப்பு என்று நம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் இல்லையா? அவர்கள் அதையெல்லாம் தெரியாத அப்பாவி கூட்டம், சொல்லி புரியவைத்தால் உடனே மாறிவிடுவார்கள் இல்லையா?
எந்த சமூகப்பழக்கமும், சமூகக் கருத்தும் ஒரு வாழ்க்கை முறையாக மாறித்தான் நீடிக்கிறது. அந்த வாழ்க்கைமுறை நிலவும்போது ஒரு தனிமனிதர் அதிலிருந்து வெளியே செல்ல முடியாது. தங்கள் இலட்சியத்துக்காக எதையும் இழக்க தயாரானவர்கள் அதைச் செய்வார்கள். சாமானியர் செய்ய முடியாது. அவர்கள் தாங்கள் பிறந்து விழுந்த, தங்களைச்சூழ்ந்துள்ள, வாழ்க்கையையே வாழ்வார்கள்.
அப்படியானால் ஒரு சமூகப்பழக்கம், ஒரு சமூகக் கருத்து எப்படி மாறுதலடைகிறது? ஒட்டுமொத்தமாக சமூகத்தையே பாதிக்கும் கருத்துக்கள்மூலம்தான். அவ்வாறு ஒரு சமூகம் முழுக்க கருத்துக்களை கொண்டு செல்வதற்கு சிறந்த வழி என்ன? ஒட்டுமொத்தமாக சமூகத்தையே கவனிக்கச்செய்யும் பிரம்மாண்டமான சமூகப்போராட்டங்கள் மட்டுமே.
அதைத்தான் காந்தி சொன்னார். இந்தியசமூகத்தின் மனத்தில் ஆழ வேரூன்றியது தீண்டாமை. அதை எதிர்க்க ஆலயப்பிரவேச போராட்டத்தை அவர் நிகழ்த்தினார். அது முதலில் அதிர்ச்சியை பின் குழப்பத்தை பின்னர் மெல்லிய கிளர்ச்சியை உருவாக்கியது. இந்திய சமூகத்தில் அதில் ஈடுபட்டவர்கள் மிகச்சிறுபான்மையினர். அதை வெளிப்படையாக ஆதரித்தவர்கள் சிறுபான்மையினர்.
1923 ல் வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டத்தை காந்தி ஆரம்பித்து 1935 வரை இந்தியா முழுக்க விரிவாக்கம்செய்து நடத்தியபோது அன்றைய சமூகம் ஆற்றிய எதிர்வினைகளை இன்று வாசித்தால் ஆச்சரியமாகவே இருக்கும். மதகுருக்களும் அறிவுஜீவிகளும் எல்லாம் காந்தியை இகழ்ந்திருக்கிறார்கள். ஐயப்பட்டிருக்கிறார்கள். ஒதுங்கி நின்று இலவச ஆலோசனைகளை பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள்.
அன்று சொல்லப்பட்ட எல்லாமே இன்று அண்ணா பற்றி சொல்லப்படும் வரிகளே. காந்தி அவசரப்பட்டு விட்டார் என்றுதான் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவை மன அளவில் தயாரிக்காமல் காந்தி களத்தில் இறங்கி அதிரடியாக செயல்படுகிறார் என்றார்கள். 'ஒவ்வொரு மனிதனும் தீண்டாமை தவறு என்று உணர்ந்தாலே போதும் தானாகவே கோயில் நுழைவு நடக்கும்' என்று காந்திக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.சில தலித்துக்கள் கோயிலில் நுழைந்தால் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப்போகிறது என எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த போராட்டம் இந்திய சமூகமனத்தில் ஆழத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. சராசரி இந்துவின் சாதிசார்ந்த இறுக்கங்கள் தளர்ந்து இங்கே ஒரு ஜனநாயக குடிமைச்சமூக அமைப்பு உருவாக அதுவே காரணம். வெறும் இருபதாண்டுகாலம் கழித்து 1947ல் இந்தியாவின் சுதந்திர அரசு அதிகாரபூர்வமாக தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தபோது அன்றைய இந்திய சமூகம் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டமைக்கு பின்னால் உள்ள கருத்தியல்அங்கீகாரம் அந்த ஆலயப்போராட்ட காலத்தால் காந்தியால் உருவாக்கப்பட்டதுதான்.
எந்த சமூகமாற்றமும் இத்தகைய ஒட்டுமொத்தமான சமூகப்போராட்டங்கள் மூலம் உருவாகும் தீவிரமான கருத்துப்பிரச்சாரம் வழியாகவே நிகழும். அன்னியத்துணி போராட்டமும் அப்படித்தான். அன்னியத்துணிகளைப் போடக்கூடாது என்று காந்தி சொன்னால் போதுமே, எதற்காக வீடு வீடாகச் சென்று பேசி வற்புறுத்தி முச்சந்தியில் போட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்?
மேலும், அது அன்னியத் துணிகளுக்கு எதிரான போராட்டம் அல்ல. நாம் நம் தேவையை நாமே நிறைவேற்றிக்கொள்ளவேண்டுமெனக் கோரும் போராட்டம். நாம் பொருளியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறோம் என நம் மக்களே உணரவைக்கும் போராட்டம். அந்த உணர்ச்சியை அந்த அன்னியத்துணி புறக்கணிப்புப் போராட்டம் மூலம் உருவாக்கியமையாலேயே இந்திய மக்களுக்கு பிரிட்டிஷார்மேல் இருந்த மயக்கம் கலைந்தது. தேசிய இயக்கம் மக்களியக்கமாக மலர்ந்தது.
இப்போது அண்ணா ஹசாரே உருவாக்கும் போராட்டமும் அப்படித்தான். அதன் நிகர விளைவு என்பது நம் சமூக மனத்தில், கோடிக்கணக்கான இளைஞர்களில், பொதுவாழ்க்கையின் ஊழலுக்கு எதிராக உருவாகும் நகர்வுதான். அப்படித்தான் இங்கே ஒரு சமூக மாற்றம் வரமுடியும். ஒரு போராட்டத்தால், ஒரு கோரிக்கை வெற்றி பெறுவதால் அது நிகழாது. அத்தகைய பல போராட்டங்கள் வழியாக மெதுவாக சமூக மனத்தில் அது உருவாகி வரும்.
எல்லா குடிமையுணர்ச்சிகளும் அப்படித்தான் உருவாகி வருகின்றன. பெருந்திரள் போராட்டங்கள் மூலம் உருவாகும் மறைமுகமான ஒட்டுமொத்தமான கருத்தியல் மாற்றமே சமூகத்தை மாற்றியமைக்கிறது. சட்டங்களை செய்வதும், எதிர்ப்பதும் எல்லாம் அந்த மாற்றத்தை நிகழ்த்துவதற்கான மேல்தள முயற்சிகளே
சென்ற கால்நூற்றாண்டை நீங்கள் பார்க்கமுடிந்தால் அப்படி எவ்வளவு மகத்தான மனமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என எளிதில் உணரலாம். ஏன் 2002 ல் நாகர்கோயிலில் ஒரு தொண்டு நிறுவனம் மூன்றாம்பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கவேண்டும் என்று ஒரு போராட்டத்தை நடத்தியபோது செய்திகள் கிண்டலான தொனியிலேயே வெளியிடப்பட்டன. மக்கள் கூடி நின்று சிரித்தார்கள். இன்று பத்து வருடம் கழித்து அவர்கள் தங்களுக்கான சட்டங்களுக்காக போராடும்போது 'அவுங்களுக்கும் ரைட் இருக்கில்லாடே' என மக்கள் சொல்வதை கேட்கிறேன்.
இப்படித்தான் மக்களியக்கங்கள் நிகழ முடியும். இப்படித்தான் காந்திய யுகத்தில் நிகழ்ந்தது. உலகமெங்கும் காந்தியப்போராட்டங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. நாளையும் இப்படியே நிகழும். வேறு வழியே இல்லை.
ஜெ
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2
அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…
பஷீர் காணொளி
அன்புள்ள ஜெ
வைக்கம் முகமதுபஷீரின் பேட்டி, காணொளி
httpv://www.youtube.com/watch?v=Cj7DqtnGbIE
httpv://www.youtube.com/watch?v=zMAkGaahQzQ
எஸ்.ராம லக்ஷ்மணன்
அண்ணா-எதிர்வினைகள்
"நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி
ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்."
வந்து விட்டார்!
இன்றைய இந்து நாளிதழில் அவரது " நான் அன்னாவாக இல்லாமல் தான் இருப்பேன்
" என்ற கட்டுரையை யாராவது படித்தீர்களா..? அவர் கருத்து, "அன்னாவின்
வழிமுறைகள் வேண்டுமானால் காந்திய வழியிலிருக்கலாம். ஆனால் கோரிக்கைகள்
கண்டிப்பாக அப்படி அல்ல "
அன்னாவின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஆய்வு செய்து எழுதப்பட்டு வரும்
தொடர்கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது மேசையில் வந்து விழுந்தது
பேப்பர். அருந்ததியின் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது. என்ன செய்ய..?
வினோத்
http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true
அன்புள்ள வினோத்,
அருந்ததி வெளிவராமல் இருக்கமுடியாதென நான் அறிவேன், ஆகவேதான் சொன்னேன். அந்தப் பெண்மணியின் இலக்கு விளம்பரம் மட்டுமே.
இன்று அண்ணா ஹசாரே பற்றி அக்குவேறு ஆணிவேறாக கழற்றி ஆராய்ச்சி செய்யும் கும்பல் இன்றுவரை அருந்ததி பற்றி என்ன சொல்லியிருக்கிறதென பாருங்கள். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நேர்மை என்றாவது விவாதிக்கப்பட்டிருக்கிறதா? அவரது ஆர்ப்பாட்டங்களும் அதிரடிகளும் ஜனநாயகச் செயல்பாடுகள் என்றுதானே இவர்கள் பேசினார்கள்? நீதிமன்றத்தை அவமதித்து எழுதி ஒருநாள் சிறையிலிருந்ததை காந்தி சிறைசென்றதற்கு நிகராக எழுதினார்கள். அன்றெல்லாம் அந்த அம்மணியின் கலாட்டாக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்று எவரேனும் கேட்டிருக்கிறார்களா?
குறைந்தபட்சம் அவரிடம் 'ஏய் நீ யார்?' என்றாவது கேட்டிருக்கிறார்களா? உன் பின்னணி என்ன, நாட்டுக்காகவோ மக்களுக்காகவோ நீ எதையாவது எப்போதாவது இழந்திருக்கிறாயா? ஒரு கேள்வி வந்திருக்கிறதா? அண்ணா ஹசாரே எங்கிருந்தார் என்று கேட்பவர்கள் இந்த அம்மணி எங்கிருந்தார் என்று உசாவியிருக்கிறார்களா?
ஒரு அசட்டு பைங்கிளி நாவலை எழுதி அரைநிர்வாண படம் போட்டு விற்ற பெண் எப்படி ஒரு தேசிய குரலாக முடியும் என எவரும் கேட்கவில்லை. ஆனால் காந்திய நிர்மாணத்திட்டத்தில் சாதனைகளைச் செய்து காட்டி முப்பதாண்டுக்காலம் பொதுவாழ்வில் போராடிய மனிதர் எப்படி தேசியக்குரலாக முடியும் என வெட்கம் மானமில்லாமல் வந்து ஊடகங்களில் கேட்கிறார்கள் அயோக்கியர்கள்.
ஏன்? ஏனென்றால் அண்ணா இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறார். இந்தியா மேல், இதன் கோடானுகோடி மக்கள் மேல், அவர்களின் ஆன்மீகவெளிப்பாடான இதன் ஜனநாயகம் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்தப்பெண்மணி இந்த நாடு உடைந்து அழிய விரும்புகிறார். இந்த ஜனநாயக மதிப்பீடுகளை அழிப்பதற்காக மட்டுமே எழுதுகிறார். இதன் மக்களின் ஆன்மாவை ஒவ்வொரு கணமும் அவமதிக்கிறார்.
கூலிப்படை அறிவுஜீவிகளுக்கு அப்பால் பார்க்கும் கண் என்று நமக்கு வாய்க்கும்?
ஜெ
ஜெ
http://viduthalai.in/new/headline/16358-2011-08-22-05-45-30.html#.TlH1t-UWIPM.facebook
முடியல!
கார்த்திகா பேச்சிநாதன்
அன்புள்ள கார்த்திகா பேச்சிநாதன்,
நமீதாவை நான் சந்தித்திருக்கிறேன். அவராலும் பிழையில்லாமல் ஆங்கிலம் பேசமுடியும். அருந்ததி ராய்க்கு இருக்கும் தகுதி அவருக்கும் இருக்கிறது.
ஜெ
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2
அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
