Jeyamohan's Blog, page 2289
September 8, 2011
ரசனை கிடைக்கப்பெறுவதா ?
ஆசிரியருக்கு,
நீங்கள் எனக்கு சிற்பக்கலையை அறிமுகப்படுத்திய அந்த அம்பை கோயில் கணங்கள் மறக்க முடியாதவை , பின் முண்டந்துறை செல்லும்போது ஓவியத்தையும், பின் ஓரிரு ஆண்டுகளில் சிதம்பரத்தில் நடனத்தையும், கடுமையான எதிர்விசை இருந்தும் மெல்ல மெல்லக் கர்நாடக இசையையும் என சம வீச்சுடன் இவைகள் அறிமுகமானது , பின் நமது திருவையாறு பயணமும் என இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்குக் கிட்டத்தட்ட எல்லாக் கலைகளையும், அதன் அடிப்படைகளையும் நீங்கள்தான் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். இன்று அந்த சூடு தணிந்த நிலையில் நான் மெல்ல இவைகளையும் என்னையும் மதிப்பீடு செய்கிறேன்.
எனக்கு அறிமுகமான எல்லா முதற் கணங்களும் அபாரமானவை, கோட்டை மதில் சுவர் அகல வீசித் திறப்பது போல, அதிகாலை கோயில் நடை திறப்பது போல மிக விசாலமானது, அவ்வறிமுகக் கணங்களில் அவ்விடத்தில் யார் இருந்திருந்தாலும் கிட்டத்தட்ட இதே துவக்கமும் பின் தொடர்பும் நிகழ்ந்திருக்கும்.
இலக்கியத்தில் சிறப்புத் தேர்ச்சியும், பிற கலைகளில் உபரி ஞானமும் உள்ள பெரும் கலைஞன் ஒருவரின் அறிமுகம் இலக்கியத்தின் மீது முதன்மையான அழுத்தமும் பிற கலைகள் மீது ஆர்வமும் நாட்டமும் என என்னை நடத்துகிறது. பிற கலைப்படைப்புகள் கிடைக்கப் பெறுவதைவிட விட (இசை விதிவிலக்கு ) இலக்கியப் படைப்புகள் எளிதில் அகப்படுகிறது, ஊருக்கொரு நூலகம், புத்தகக் கடைகள், கண்காட்சிகள் , வாசிக்கும் நபரொருவரை சந்தித்து உரையாடுவதும் ஒப்பீட்டளவில் எளிது, எனவே முதலில் நான் புத்தகம், பிறகு ஜெ மூலமாகத் தீவிர இலக்கியம் என இயல்பில் வந்து சேர்ந்தேன்.
இதே சாத்தியத்தில் , உதாரணமாக ஓவியமோ, சிற்பமோ சமூகத்தில் எளிதில் அகப்படுகிறது, அதன் பெரும் கலைஞர்களை , ரசிகர்களை சந்தித்து உரையாடுவதும் எளிது என்ற நிலை இருந்தால் எனக்கு முதலில் எளிதில் அறிமுகமாகும் கலையுடன் பிரதான தொடர்பும் பிற கலைகளுடன் உபரித் தொடர்பும் இருந்திருக்குமா? மனிதன் எளிதில் ஆழமாக ஆட்படக் கூடியவனா ? நான் உட்பட உங்களின் எத்தனை வாசகர்கள் இலக்கியத்தில் மிஞ்சுவோம் ? மனிதனின் மானசிகமான உறவென்பது திருமண உறவு போலப் பெரிதும் கிடைக்கப் பெறுவதும் , அணுக சாத்தியமானதும் (availability and accessibility) என்ற எளிமையான விதி சார்ந்ததா ?
நமது மதுரை சந்திப்பில் கேட்க நினைத்த கேள்வி இது.
கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்,
சாதாரணமாகப் பார்த்தால் அப்படித்தெரியும். ஆனால் பெறுவது- அடைவது என்ற இரு தரப்பிலும் நின்று பார்த்தால் அப்படி அல்ல என்பதைக் காணலாம்.
நல்ல கலையும் இலக்கியமும் மக்களுக்குக் கிடைத்தாகவேண்டியிருக்கிறது. அதுவும் உரிய வயதில். அப்போது கணிசமானவர்கள் இயல்பாகவே அவற்றுக்குள் வருவார்கள். மேலைநாடுகளில் சிறுவயதில் மேலை இசையுடன் ஒரு தொடர்பு குடும்பத்திலேயே அளிக்கப்பட்டுவிடுகிறது. படுக்கைநேரவாசிப்பு மூலம் இலக்கியமும் அறிமுகமாகிறது. எங்கும் இலக்கியமும் கலைகளும் கிடைக்கின்றன. ஆகவே அங்கே ஓரளவுக்கு அடிப்படை ரசனை உடையவர்கள்கூட இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் வந்து சேர்கிறார்கள்
நம் நாட்டில் நல்ல ரசனை உடையவர்கள் அறிவுத்திறன் உடையவர்கள் நல்ல கலையையும் இலக்கியத்தையும் கடைசிவரை அறிமுகம் செய்துகொள்ளாமலேயே போகும் வாய்ப்பே அதிகம். நல்ல ஒரு வாசகரிடம் எப்படி வாசிக்க ஆரம்பித்தீர்கள் என்று கேட்டால் ஒரு தற்செயலை, ஒரு மனிதரை சுட்டிக்காட்டுவார். இயல்பான அறிமுகம் நிகழ அனேகமாக வாய்ப்பே இல்லை, தற்செயலே ஒரே திறப்பு.ஆகவேதான் இலக்கியமும் கலைகளும் இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று வாதிடுகிறோம்.
ஆனால் அதே ஐரோப்பியநாடுகளில்கூட எல்லாரும் கலையிலக்கியம் பக்கம் வந்துவிடுவதில்லை. அவர்கள் அங்கும் மிகச்சிறுபான்மையினரே. பிறர் அன்றாடவாழ்க்கையில் மூழ்கி மறையவே வாய்ப்பு. எப்போதுமே மானுட விதி அதுதான். அவனுடைய மூளைக்குள் ரசனையும் அறிவுத்தேடலும் பிறப்பிலேயே இருக்கவில்லை என்றால் புற அறிமுகத்தால் என்ன பயன்?
நாயைப் புலால்மணமே இல்லாமல் வளர்ப்பவர்கள் உண்டு. ஆனால் பிறந்து வெளிவந்த குட்டியானாலும் சரி பத்து வருடம் அசைவ வாசனையே இல்லாமலிருக்கும் நாயானாலும் சரி மாமிசத்தை மணம் காட்டினால் வந்து கவ்விக்கொள்ளும். அதன் உணவு அது என அதன் மூளைக்குத்தெரியும். பலசமயம் ரசனை என்பது இப்படித்தான்.
ஜெ
ஆங்கில நாடகங்கள்
அன்புள்ள ஜெ.,
நீங்கள் அஜிதனைக் கல்லூரியில் சேர்க்க பெங்களூரு வந்திருந்த போது தங்களைச் சந்தித்திருந்தேன். அப்போது எனது நாடகத் துறை ஆர்வம் பற்றியும் அதில் சந்திக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் கூறியது நினைவிருக்கலாம். (மேலும், blogswara பற்றியும், பிற சந்தர்ப்பங்களில் படைப்பூக்கம் தொடர்பான மற்றும் வேறு சந்தேகங்களைக் கேட்கவும் தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.) அந்த சந்திப்புக்குப் பின், மேலும் இரு நாடகங்களுக்குப் பிறகும் திரும்பவும் அதே போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கின்றேன்!
விஷயம் இது தான்:
இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் நிலையை ஒட்டி எழுதப்பட்ட, எல்லா விதங்களிலும் சிறந்த, நாடகங்கள் அதிகம் இல்லை (அல்லது, எனக்குத் தெரியவில்லை). அதனால், திரும்பத் திரும்ப ஏதாவதொரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நாடகாசிரியரின் நகைச்சுவை நாடகத்தையே மேடையேற்றிக் கொண்டிருக்கிறோம். (மக்கள் நாடகத்துக்கு வந்து சந்தோஷமாக சிரித்து விட்டுப் போகிறார்கள். எனக்குத்தான், ஏதோ ஒரு விதத்தில் artistic counterfeiting செய்கிறேனோ என்று ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது.)
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் எழுதப்படும் நாடகங்கள் பல நேரங்களில் ஒரு வித அந்நியத் தன்மையுடனேயே இருக்கின்றன. இதில் வியப்பேதும் இல்லை. (மேலை நாட்டுக் கலாசார சூழல் புரியாவிட்டால் நாடகத்தில் வரும் ஜோக்குகள் மற்றும் references புரியாது; ஜோக்குகள் புரியாவிட்டால் பார்வையாளர்கள் "சிரி-சிந்தி" என்பதில் முதல் நிலையிலேயே தடுக்கி விடுவார்கள்; references புரியவில்லை என்றால் பார்வையாளர்களுக்குத் தாங்கள் எதைத் தவற விடுகிறோம் என்பது கூடத் தெரியாமலே போகும்.)
பழைய இந்திய நாடக ஆசிரியர்களின் எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் அவை 1991-க்கு முன்பு எழுதப்பட்டவை. அதனால், liberalisation மற்றும் globalisation போன்ற நிகழ்வுகளுக்கு முந்தைய இந்தியாவைப் பற்றியும் அப்போதிருந்த பிரச்சினைகள் பற்றியும் பேசுகின்றன. (உதாரணத்துக்கு, விஜய் டெண்டுல்கர் அல்லது கிரீஷ் கர்னாட் போன்றவர்களின் பல நாடகங்களில் வரும் சம்பவங்கள் மற்றும் பாத்திரங்கள் தற்காலத்தின் பார்வையில் அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. அந்த சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் ஊடாக இந்த ஆசிரியர்கள் சுட்டும் அடிப்படை தரிசனங்கள் எல்லாக் காலத்திற்குமானவையாக இருக்கலாம்; ஆனால், சம்பவங்கள் மற்றும் பாத்திரங்கள் எழுபதுகள் மற்றும் எண்பதுகளிலிருந்து வந்தால் பார்வையாளர்களை இவற்றினூடாக அந்த தரிசனத்திற்குக் கூட்டிச் செல்வது முடியாமல் போகிறது!)
புதிதாக நாடக உலகத்திலிருந்தே எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்புகிற சிலரும் (எல்லோரையும் சொல்லவில்லை) அடிப்படை இலக்கிய ஆர்வமோ சமூக அக்கறையோ இல்லாமல், நாடகத்தைக் கலையாக இல்லாமல் வெறும் கேளிக்கையாக மட்டுமே பார்ப்பவர்களாக இருப்பதால், பொருட்படுத்தத்தக்க நாடகங்கள் வெளிவருவதில்லை. (இதில் இன்னொரு பிரச்சினை, இதில் பலர் சினிமா மோகத்தால் பெரிதாக பாதிக்கப்பட்டவர்கள்; அதனால், ஒரு ஹிந்தி அல்லது இங்கிலீஷ் படம் நன்றாக ஓடிவிட்டால், அல்லது ஒரு புத்தகத்துக்கு "mass appeal" இருக்கிறதென்று தெரிந்து விட்டால், அதை இங்கங்கு கொஞ்சம் டிங்கரிங் செய்து, இரட்டையர்த்த வசனங்கள் மற்றும் கிளுகிளுப்புக்குத் தேவையான சங்கதிகள் சேர்த்து, மேடையேற்றி கொஞ்சம் புகழ், வெற்றி, காசு பார்க்கலாமா என்று துடிக்கிறார்கள். அண்மைக்கால உதாரணம், சேத்தன் பகத்தின் Five Point Someone.
உயர்ந்த தரத்திலான, தத்துவப் பின்புலம் கொண்ட, முக்கியமான விஷயங்களைப் பேசுபொருளாகக் கொண்ட, வடிவ நேர்த்தி கொண்ட, அழுத்தமான-ஆயினும்-நம்பும்படியான பாத்திரப் படைப்பு அமையப்பெற்ற நாடகங்கள் எழுதப்பட வேண்டும், அவை சிறப்பாக மேடையேற்றப்பட வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிற என்னைப் போன்ற சிலருக்கோ, "நாமே எழுதிடலாமோ" என்று நினைக்க முற்படும்போதே அது எவ்வளவு ஒரு அசட்டு எண்ணம் என்பதும், அப்படி ஒரு நாடகத்துக்கான கருவைக் கற்பனை செய்து விடுவதே எளிதல்ல என்பதும் உடனடியாகப் புரியவும் புரிகிறது. அதற்கான தயார் நிலைக்கு வருவதற்கே பெரியதொரு புரிதலும் படைப்பூக்கமும் இசைந்து வர வேண்டும்—அதற்கு மேலாகப் பெரியதொரு உழைப்பு!
இப்போது திரும்பவும் முதல் வரிக்கு வருகிறேன்:
"இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் நிலையை ஒட்டி எழுதப்பட்ட நாடகங்கள் அதிகம் இல்லை (அல்லது, எனக்குத் தெரியவில்லை)"
இருக்கின்றன, ஆனால் எனக்குத் தான் தெரியவில்லை என்றால் என் தேடுதலில் நான் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவது பயனளிக்கலாம்?
அல்லது,
நான் ஐயப்படுவது போல, "The post-liberalisation generation of India has not begun to evolve its intellectual, insightful playwrights yet" என்பது உண்மையாக இருந்தால், இதற்குத் தீர்வு எந்த வகையில் அமைய வாய்ப்புண்டு? இந்திய ஆங்கிலத்தில் தான் இல்லையா, அல்லது நமது இந்திய மொழி இலக்கியங்களிலும் தற்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த, ஆழமான புரிதல் கொண்ட நாடக ஆசிரியர்கள் இன்று பற்றாக்குறை தானா? தற்கால இந்திய ஆங்கில நாடகங்களில் இவை மிக முக்கியமானவை, மேடையேற்றப்பட வேண்டியவை, என்று நீங்கள் ஒரு பட்டியல் தர முடியுமா?
அன்புடன்,
விஜய்
அன்புள்ள விஜய்
பெங்களூரில் தற்செயலாக உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. அதன்பின்புதான் பதில் கடிதம் மிச்சமிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
பொதுவாக இந்தியாவைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதுவதில் நடிப்பதில் எனக்கு ஒரு கண்டனம் உண்டு. அதிலிருந்து நம் காலனியடிமைநாட்களின் மனநிலையை நீக்கவே முடியாதென்றே நினைக்கிறேன். முற்றிலும் இந்தியத்தன்மை கொண்டது என ஒரு இந்திய ஆங்கில நூலைக்கூட நான் வாசித்ததில்லை.
ஆனால் நம் இளையதலைமுறை அதிகமும் ஆங்கிலத்திலேயே கல்வி கற்கிறதென்பதனால் வேறு வழியே இல்லை, நாம் ஆங்கிலத்தில் எழுதி நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
நானே கவனித்திருக்கிறேன், இந்திய ஆங்கில நாடகங்கள் பெரும்பாலும் மேலைநாட்டு நாடகங்களைத் தழுவி நடிப்பவை அல்லது அப்படியே நடிப்பவை. இதன் இழப்பு என்னவென்றால் அவற்றின் குறியீடுகள் எல்லாமே அன்னியமானவை என்பதுதான். அவை ஒரு விசித்திரமான அனுபவமாகவே ஆகின்றன. உதாரணமாக நான் திருவனந்தபுரத்தில் பார்த்த நாடகத்தில் பிச்சைக்காரன் தொப்பியை நீட்டுகிறான்!
இந்திய ஆங்கில நாடகங்களில் சமகால இந்தியாவை எதிர்கொள்ளும் இலக்கியத்தரமான நாடகங்கள் என எதையுமே நான் வாசித்ததில்லை . நான் கேட்டவரைக்கும் அப்படி ஏதும் இல்லை.
இதைத்தவிர்க்க சிறந்த வழி தமிழில் அல்லது கன்னடத்தில் உள்ள நல்ல நாடகங்களை மொழியாக்கம் செய்து நடிப்பதுதான். ஆனால் அப்போதுகூட குப்பம்மா பாட்டி ஆங்கிலத்தில் பேசுவதை எப்படி என்னால் எதிர்கொள்ளமுடியும் என்று சந்தேகமாகவே இருக்கிறது
மராட்டிய நாடகத்தில் மும்பை பெருநகர் வாழ்க்கையைச் சொல்லும் நாடகங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெற்ற்கரமாக நடித்திருக்கிறார்கள் - மோகன் ராகேஷ், தெண்டுல்கர் நாடகங்களை.
தமிழில் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் அப்படிப்பட்ட சாத்தியங்கள் கொண்டவை. 'மழை', 'போர்வைபோர்த்திய உடல்கள்' போன்றவை.
ஜெ
இளமாறனின் காடு
சிறுவயதில், காட்டைப் பற்றிய தீராத விருப்பம் ஆத்தாவின் கொள்ளிபத்தை பிசாசு கதைகளிலும், அரிபிசாசு கதைகளிலும் ஆரம்பித்தது. ஊர் பண்ணகட்டுகளுடன், உடும்பைத் தேடி காராம் பத்தைகள், சூராம் பத்தைகள் நிரம்பிய கோயில் காடுகளிலும், கரம்பு நிலங்களிலும் அலைந்து திரிவேன். மிக அரிதாக பழநிக்குச் சென்ற பயணங்களில், வழியில் தென்படும் மொட்டைப் பாறைகளில், காட்டை வளர்த்து, சிறிது நேரம் கானுலா செல்வேன். பின்பு மீண்டும் பேருந்தில் புகுந்து கொள்வேன். பசும் மரங்கள் நிறைந்த மலைகள் இல்லாத சமவெளியில் பிறந்த அபாக்கியத்தை எண்ணி மனம் வருந்துவேன். கல்லூரிப் படிப்பு, வேலை என சில வருடங்களுக்குப் பின், திடீர் என்று ஒரு நாள் விழித்தெழுந்து, கனவில் மட்டுமே கண்ட மலைக்காட்டினை நனவில் கண்டேன். ஊர் திரும்பிய பின், 'காடு' நாவலை வாங்கி படிக்கத் தொடங்கினேன். 6 மாதங்களுக்கு முன்பு 'காடு' நாவலை படித்து முடித்து விட்டு, அதன் பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆயின. அந்த பாதிப்பு – சில சிறுகதைகள், சில திரைப்படங்கள், சில வாழ்க்கைச் சம்பவங்கள், சில மறந்து, தொலைந்து போன குழந்தைக் கால நட்புகளின் நினைவுகள் மட்டுமே தரும் பாதிப்பு.

காடு
இந்த நாவலை நான் வாங்குவதற்குக் காரணம், அதன் பெயர் – 'காடு'. காடு என்ற எளிய ஒற்றைச்சொல், பல்லாயிரம் பக்கங்களுக்கு எழுதப்பட்டாலும் தீர்ந்தே போகாத, விரிந்தே செல்லக்கூடிய சொல். ஒரு பெருங்காட்டை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்ட ஒற்றைவிதையை ஒத்த சொல். நாவலைப் படிக்கும் முன், ஒரு வேட்டைக்காரன் வந்து செல்லும் காட்டைப் பற்றிய கதை என்றோ அல்லது பழங்குடிகள் வாழும் காட்டைப் பற்றிய கதை என்றோ தான் நினைத்து இருந்தேன். ஆனால் படிக்க தொடங்கிய பின்தான் தெரிந்து கொண்டேன். காடு என்பது நாவல் நடப்பதற்கான ஒரு நிலம் என்று. அந்த நிலத்தை வைத்துக் கொண்டு, எளிய மனிதர்களைப் பற்றி சொல்ல வந்த கதை என்று. அந்த எளிய மனிதர்களின் காமத்தை சொல்ல வந்த கதை என்று.
கிரிதரன் என்னும் பதின்பருவ சிறுவன் , தன் மாமாவின் காண்ட்ராக்ட் வேலையை மேற்பார்வையிட காட்டுக்கு வருகிறான். அவனது காட்டு வாழ்க்கை, ஊர் வாழ்க்கை , அதற்கு பின்பான நகர வாழ்க்கை அவனது நினைவுகளால் சொல்லப்படுவதே (நனவோடை உத்தி?) 'காடு' நாவல். படித்து முடித்து, ஒரு மாதத்திற்கு பின் நாவலை மீண்டும் நினைவில் கொண்டு வந்தேன். கதை என்று பார்த்தால் எளிமையான கதைதான். ஆனாலும் மிகவும் பாதித்ததிற்குக் காரணம் காட்டின் மீதான என் தனிப்பட்ட பித்தா? இல்லை கதை மாந்தர்கள் சிலரின் வாழ்க்கை, நான் நேரில் கண்ட, கேட்ட சிலரின் வாழ்க்கையைப் போன்றதனாலா? யோசித்த பின், புலப்பட்ட காரணம் – அபத்தக் கனவுகளும், எதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்புகளும் கொண்ட பதின்பருவ சிறுவன், அவன் எதிர்பார்த்தே இருக்க முடியாத வாழ்க்கை வாழ நேரிட்டதன் அவலம். மலை உச்சியில் பலகாலம் இருந்த பாறை ஒன்று, திடீர் என்று ஒரு நாள் உருண்டோடி, தரையை அடைந்து, மீளவே முடியாத அந்த உச்சியை மீண்டும் மீண்டும் எண்ணி, எண்ணி ஏங்கும் வாழ்க்கை வாழ்வதன் துயரம். நினைத்த வாழ்வையும் வாழ முடியாமல், கிடைத்த வாழ்வையும் வாழ ஒவ்வாமல், அலைக்கழிப்புகளால் ஆன வாழ்வின் அவலம். சொந்த வாழ்க்கையின் இன்ப, துன்ப அனுபவங்களாலும், படித்த, பார்த்த மனிதர்களாலும் மட்டுமே படைப்புகளை அடையாளப்படுத்தி புரிந்து கொள்பவன் நான். இந்த நாவலையும், அப்படியே அடையாளப்படுத்திப் படித்தேன். என்றாலும், ஒரு தனி மனிதனின் ஒட்டு மொத்த வாழ்வைக் கூறி, அது தரும் அனுபவத்தாலும் புரிந்து கொள்ள செய்த படைப்பு இது.
உண்மையில் இந்த நாவலை என் வாசிப்பில் நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன்? கனவு, காதல், எதார்த்தம் – என்ற மூன்று இணை கோடுகளை, ஊடுருவிச் செல்லும் ஒரு தனிக்கோடாகக் காமம். நெற்றியில் பூசப்பட்ட மூன்று சந்தனக்கோடுகளை, ஊடறுத்துச் செல்லும் குங்குமக் கோடு போல. அந்தக் காமம் ஊடறுத்துச் சென்ற ஒருவனின் வாழ்வைப் பற்றிக் கூற வந்த நாவல் என்றே புரிந்து கொள்கிறேன். கனவை விதைக்கும் சங்கப்பாடல்களைக் கற்ற கிரிதரன் (அருமையான குறியீட்டுப் பெயர்!), காட்டிற்கு செல்கிறான். அங்கே தன்னைப் போலவே சங்கப்பாடல்களில் மனதைப் பறிகொடுத்த அய்யரை (தி.ஜாவின் சாயல்) சந்திக்கிறான். கனவின் இருமுகங்களாக அய்யரும், கிரியும்.
அய்யரின் கனவிற்கும், கிரியின் கனவிற்கும் உள்ள வித்தியாசம் – அய்யரின் கனவு, எதார்த்தத்தைத் தெரிந்து கொண்டு, அதில் இருந்து மேலெழுந்த கனவு. நல்ல படிப்பு, வேலை, குடும்பம், ரசிக்க சங்கீதம், தடவ பெண்கள் எல்லாவற்றுக்கும் மேலே அவர் எப்போதும் காதலிக்கும் காடு என நிறைவான வாழ்வு வாழ்ந்தாலும், அவைகளைத் தாண்டிய, தீரவே தீராத ஏக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டியதன் கனவு. மாறாக, கிரியின் கனவு எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலாத வயதில், 'குண்டியில் கிருமி கடிக்கும் நாய்' போன்றவனின் கனவு . தன்னைக் கவிஞனாகவும் நினைத்துக்கொள்கிறான். கனவுகளும், கற்பனைகளும் கவிஞனுக்குப் பஞ்சமா? கூடவே காதலும், காமமும் சேர்ந்து கொண்டால்? இவர்களுக்கு ஊடாகக் கனவின் பல இணைமுகங்களாக சோதிடக்கனவுகளில் வாழும் கிரியின் அப்பா, மூன்றாவது குழந்தை பிறந்தாலாவது வாழ்க்கை சுபிட்சமாகும் என்ற கனவில் வாழும் அம்பிகா அக்கா, அவளது கணவன்.
கனவுகளின் காதலானாக வரும் கிரி, காட்டில் குளிக்கும் மலைப்பெண்ணான நீலியைப் பார்க்கிறான். அவளுடன் காதல் கொள்கிறான். இங்கே காதலின் இருமுகங்களாக கிரியும், மலை நீலியும். காதலில் விழுபவன் காட்டில் அலைகிறான். தான் மேற்பார்வை செய்ய வந்த வேலையில் கவனம் கொள்ளாது போகிறான். இறுதியில் அவன், காண்டிராக்ட் வேலையையே வாழ்வாதாரமாக கொள்கிறான். காட்டில் தான் ஒரு போதும் கற்காத அதன் நெளிவு, சுளிவுகளில் வாழ்வின் எதார்த்தத்தை உணர்கிறான். எதார்த்தத்தை முற்றிலும் புரிந்து கொண்ட முகங்களாக குட்டப்பனும், மாமாவும். அவர்கள் கனவுகளோ, காதலோ அற்றவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் இளவயதிலேயே எதார்த்தத்தின் பிடிக்குள் வந்தவர்கள் என்பதால்தான். இவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒருவகையில் கிரியின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். இவர்களை ஊடுருவிச் செல்லும் அந்த தனிக்கோடாகக் காமம்.
நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகம் ஆகும் மனிதர்களின் காமம், கிரிதரன் பயணப்படும் காடு மரம், செடி, கொடிகளால் ஆனதல்ல மனித உறவுகளின் காமத்தால் ஆனது என்பதைத் தெரிவிக்கிறது. நாவலின் முதல் அத்தியாயத்தில் வரும் மிளாவின் காலடித் தடம் காட்டிற்கான திறப்பு வாசல் என்றால், இரண்டாம் அத்தியாயத்தில் வரும் மாமாவின் இளவயது புணர்ச்சி, காமத்திற்கான திறப்பு வாசலாக உள்ளது. காமம் என்றவுடன், ஊரில் கொண்டாடப்பட்ட பண்டிகையான காமாண்டி ஞாபகம் வருகிறது. தெரு முக்கில், கம்புகளால் போடப்பட்ட சிறு பந்தல், வைக்கோல் பிரிகளால் சூழப்பட்டு இருக்கும். பந்தலுக்கு 15 நாட்கள் விளக்கு போடப்படும், 16- நாளின் முடிவில் மன்மதன் , ரதி என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து லாவணி பாடல்கள் பாடப்படும். முடிவில் பந்தல் தீயிட்டுக் கொளுத்தப்படும். வைக்கோல் பிரியில் மூளும் தீயில் மன்மதனின் காமம் பற்றி எரியும். தீயினை சுற்றி சிறுவர்களும், இளஞ்செட்டுகளும் நடனம் ஆடுவார்கள். புரியாத வயதில் நடனமாடி, புரியும் போது பண்டிகை காணாமல் போய், காமம் மட்டும் மீதம் இருக்கும் வயதில், மனிதர்களின் காமத்தைப் புரிந்து கொள்ளும் திறப்பு வாசலாகவும் உள்ளது நாவலின் இரண்டாம் அத்தியாயம்.
எண்ணை செட்டிச்சியின் மகளை, மாமா புணருவதில் தொடங்கும் காமத்தின் ஓட்டம், பங்குபணம் போட்ட ஊர் நாயர்கள், செட்டிச்சி மகன், வெள்ளைக்கார பாதிரி, மாமி, போத்தி, குட்டப்பன், சினேகம்மை, குரிசு, கத்தரிக்கோல் இரட்டையர்கள், அய்யர், மேனத்தி என பலவித மனிதர்களின் வழியே ஓடி, கிரிதரனின், 40-வயதிலும் விடவே முடியாத கைப்பழக்கம் வழியே தொடர்கிறது. காட்டின்(மரம், மனிதன் ) மறுபக்கமாய் காமம். கசிந்துருகும் பாறை நீராகவும், ஆர்ப்பரிக்கும் மழைக்கால மலை அருவியாகவும் ஓடும் காமம். கதை மாந்தர்கள் எல்லோரும் வழியாகவும் ஊடுருவி நிற்கும் காமம். அவர்கள் எல்லோரின் இருப்பின் மீதான விருப்புக்கு அடிப்படையாக இருக்கும் காமம். கிரிதரன் கனவும், காதலும் கொண்ட பருவத்தில் செய்யும் அந்தச் செயலால், எரிச்சலையும், தனிமையையும் உண்டாக்கும் காமம். அதே செயலால், பிற்பகுதி வாழ்வின் மீதான எரிச்சலையும், தனிமையையும் போக்க உதவும் காமம். கனவோ, காதலோ இல்லாத, கரும்பாறை குரிசுவைக் கூட எதார்த்தத்தை நாடச் சொல்லும் காமம்.
கோட்டயம் புஷ்பநாத்தின் மோகினியைப் போல வரும் மாமியும், மதம் கொண்ட யானையாக வரும் மேனத்தியும் காமத்தின் இரு முகங்கள். சிறு வயதில், பட்டினியால் அலைந்தவள் மாமி. செல்வ செழிப்பிற்கு பின், அவள் கொள்ளும் பசி அவளிடம் அதுவரை உறைந்திருந்த காமத்தின் பசி. காண்பவர்கள் எல்லோரிடமும் துளி காமத்தினை விட்டுச் செல்லும் மேனத்தி, ஊரில் வாழும் மாமியின் மலை வடிவம் . நாவலில் வரும் பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு பயந்தவர்களாவோ, அவர்களால் அடக்கி ஆளப்படுபவர்களாவோ, கட்டுப்பட்டவர்களவோ உள்ளனர். மாமா, மாமியைத் திருமணம் செய்து, பின்பு வந்த பத்து வருடங்களில் அவளின் காலடியில் கட்டுண்டு கிடக்கிறார். மாமாவின் மலைவடிவமான எஞ்சினியர் மேனன், மேனத்தியின் சொல்லுக்கு மறுசொல் கூறாதவராக வருகிறார். மாமியிடம் கொண்ட காமத்தில் சலித்தோ அல்லது அதற்கு ஈடு கொடுக்க பயந்தோ, ரெசாலத்தின் மனைவியிடம் மாமா தொடர்பு கொள்கிறார். மலையில் எஞ்சினியர் மேனன், மேனத்தியை விட்டு, ஏதோ ஒரு பங்களாவில் பெண்களுடன் கூடுவது இதே காரணத்தில் தான். இந்த இருவருக்கும் காமம் இங்கே ஒரு இளைப்பாறுதலின் ஒரு வழி. கிரியின் அப்பா, அவனின் அம்மாவிற்குக் கட்டுப்படுகிறார். அவருக்குள் இருக்கும் ஆண் வெளிவரும் நேரம், அவர் தன்னை உணராத குடிபோதையில் இருக்கும் போதும் மட்டுமே. அந்த நேரத்தில் கிரியின் அம்மா, காட்டும் காதல் அவரிடம் வெளிப்படும் ஆணை ரசிப்பதால் தான்.
மாறாக, குழந்தையில் இருந்து அம்மாவின் கண்டிப்பு கலந்த காதலை மட்டுமே கண்ட கிரி, அவன் ஆணாக மாறிய பின்பு, அவளிடம் வரும் மாற்றத்தைக் கண்டு திடுக்கிடுகிறான். அம்மாவின் காதல், எச்சரிக்கை கலந்த அன்பாக மாறுகிறது. மலையில் கண்ட நீலியுடன் கிரி கொள்ளும் காதல், ஒரு வகையில் அவன் அம்மாவிடம் இனி காணவே முடியாத காதலின் மறுவடிவம். இந்த நேர்-எதிர் என்ற பாகுபாடு இல்லாமல், சமநிலையுடன் வரும் இரு எதார்த்த பாத்திரங்கள்- குட்டப்பனும், சினேகம்மையும். சினேகம்மை குட்டப்பனின் பெண் வடிவம். அவர்களுக்கு இடையே ஏற்படும் உறவு, தூய காமத்தின் ஒருங்கிணைந்த நிலை மட்டுமே. கிரிதரன் தன் வாழ்க்கை முழுக்க, பெண்களால் அலைக்கழிக்கப்படுகிறான். அவனது வாழ்க்கை பெண்களால் கட்டமைக்கப் பட்டு, அவர்களாலேயே அழிக்கப்படும் வாழ்க்கை. விஷக் கந்தகம் அம்மாவின் அன்பில் வளர்ந்து, கருஞ்சிலை நீலியின் காதலில் விழுந்து, காமப் பிடாரி மேனத்தியிடம் தன்னை இழந்து, காம யட்சி மாமியின் மார்புச்சரிவுகளில் இருந்து தப்பி, கருங்குரங்கு வேணியின் மாறாத முகச்சுளிப்பில் வாழ விதிக்கப்படுகிறான். முடிவில் கனவு, காதல் என்ற இந்த இரண்டு முகங்களில் இருந்து, காமம் மட்டும் தொடரும் எதார்த்தம் என்ற முகத்தை நோக்கிச் சென்ற அவனின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய நாவல் என்றே புரிந்து கொள்கிறேன்.
நாவலைப் படிக்க ஆரம்பித்த நான் முதலில் கவனித்தது அதன் நடையை. சொல்லும் காட்சியை, உணர்வை துல்லியமாக சொல்ல தேவையான சொற்களால் அமைந்த சிறு சிறு சொற்றொடர்கள் கொண்ட நடை. அதே நேரத்தில் ஒரு வித அமைதியுடன்,அவ்வப்போது பொங்கி எழுந்தபடி செல்லும் எளிய நடை. காட்டையும், காமத்தையும், மனதையும் விலாவாரியாகவும், பெரும் சம்பவங்களை போகிறபோக்கிலும் சொல்லிச் செல்லும் கவித்துவமான நடை. ஒரு மையத்தை எடுத்துக்கொண்டு, அதை நாவலாக கற்பனையாலும், சேகரிக்கப்பட்ட தகவல்களாலும் முழுக்க முழுக்க வளர்த்து எடுக்காமல், எழுத்தாளன் தான் அனுபவித்த, உணர்ந்த, கேட்ட சுய வாழ்வின் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட பகுதியை அதில் சேர்க்கும் போது, அந்த படைப்பு வலிமை பெறுகிறது.
உதாரணமாக, நாவலில் பரவிக் கிடக்கும் காடு பற்றிய அக, புற வர்ணனைகள் காட்டுக்குள் சாதாரணமாக சென்று வந்த ஒருவருக்கு புதிதாகவே இருக்கும். காடு சிறிதளவாவது தலைக்கேறிய ஒருவரால் மட்டுமே அவ்வாறான வர்ணனையை எழுத முடியும். அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் 'சிலந்தி வலைப் பின்னல்களில் மென்மையான குகைகள் ' போன்ற வர்ணனைகளில் இருக்கும் ஒரு குழந்தைப் பார்வை,காட்டை நாம் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொள்ள தூண்டவும் செய்கிறது. 'ஊமைச் செந்நாய்', 'படுகை' போன்ற சிறுகதைகளில் காடு பற்றிய வர்ணனைகளை படித்து இருந்தாலும், 'அத்தகைய வெயில் முன்பெல்லாம் சமவெளிகளில் மட்டுமே அடிக்கும்', 'காட்டை கண்டவனால் காட்டை விடமுடியாது', 'காடு ஒவ்வொரு கணமும் புதிதாக இருக்கக்கூடிய ஓர் இடம்' போன்ற 'காட்டின்' வர்ணனைகள் மனதில் திடுக்கிடலையும், எரிச்சலையும், கசப்பையும் தூண்டுகிறது. நான் மட்டுமே கவனித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்ட காட்டின் நுட்பங்களைக் கண்டதன் திடுக்கிடல் அது. யாரும் ஏறாத மலைச்சிகரத்தில் ஏறி, பெருமிதம் கொள்ளும் போது, அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் கண்ட திடுக்கிடல் அது. அப்படியே கவனித்திருந்தாலும், இந்த நுட்பங்களைத் தாண்டி, புதிதாக காட்டைக் காண வேண்டியதன் எரிச்சல் அது. மனதில் சேமித்து வைக்கப்பட்ட உவமைகள் பல காலியாவதன் கசப்பு அது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காடு கிளர்த்தும் காம, பெண் நினைவுகளை பற்றிய வரி, ஆழ்மனதின் ஒரு துளியைத் தொட்டு எழுதியது போன்ற வரி.
காட்டைப் பற்றி எழுதியதிலேயே சிறந்த வரி என்று நான் நினைப்பது – 'சாலை என்பது மனிதன் காட்டை உரிமை கொள்ளச் செய்யும் முதல் முயற்சி' என்ற வரி. காட்டில் புகுந்த சாலை, நம் அந்தரங்கத்தில் புகுந்த அந்நியன் ஒருவன் போல. அதன் பிறகு காடு, பழைய காடாகவும் இருக்க போவதில்லை. நாம், பழைய மனிதனாகவும் இருக்கப்போவதில்லை. இதைப் போல பல நுட்பமான வரிகள் நாவலெங்கும் பரவிக் கிடக்கிறது. காட்டைப் போலவே, அதில் வாழும் உயிர்களைப் பற்றிக் கூறும் போதும், அதே நுட்பமான வரிகள். தேவாங்கு காட்டில் வாழும் சிறு விலங்கு. ஊரில் நரிக் குறவர் ஒருவர் அதைக் கொண்டு வந்தபோது கண்டதாக நினைவு. அதன் பிறகு சில புகைப்படங்களில் மட்டுமே பார்த்த, மங்கலான நினைவு. நாவலில் வரும் மூன்றே வரிகளில், அந்த விலங்கு உயிருடன் எழுந்து வருகிறது.
'தேவாங்கின் அசைவுகளில் ஆயிரம் வயதான அலுப்பு, சலிப்பு' – என்ற முதல்வரியில் அதன் அசைவுகளும், 'தேவாங்கு 'நான் வேற என்னத்த கண்டேன்' என்பது போல பாவமாய்த் திரும்பிப் பார்த்தது" – என்ற வரியில் அதன் எப்போதும் சோர்வான கண்களும், தொடர்ந்து வரும் உரையாடலில், குட்டப்பன் ரெசாலத்திடம் சொல்வதை போல இயல்பாக வரும், 'ஆனை சவிட்டிப் போட்ட குட்டிக்குரங்கு' என்ற வரியில் அந்த மொத்த விலங்கும் உயிர் பெற்று எழுகிறது. முதல் இரண்டு வரிகளும் ஒரு தொடர் உரையாடலின் போது, மனதில் எழும் வர்ணனைகள். கடைசி வரி, உரையாடலின் ஒரு அங்கமாக வந்து முந்திய இரண்டையும் பூர்த்தி செய்கிறது. தேவாங்கை இதுவரை பார்த்திராதவர்கள் கூட, கடைசி வரியில் அந்த விலங்கை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஒரு வேளை இதைத்தான், 'எழுத்தாளனையும் மீறி நிகழும் எழுத்து' என்கிறார்கள் போலும்.
சரி, காட்டை விடுத்து, பெண்களிடம் போகும் போதும், 'இழைத்த மரத்தில் தெரியும் சரும வரிகள்' போன்ற அதே நுட்பமான வர்ணனைகள். குறிஞ்சி நிலமான மலையைப் பற்றிய பல சங்கப்பாடல் வரிகள் – கபிலராலும், பரணராலும் பாடப்பட்ட வரிகள் – நாவலில் இறைந்து கிடக்கின்றன. படிக்க, படிக்கத் தூண்டும் அழகிய வரிகள். ஆனாலும் ஒரு வருத்தம். பல பாடல் வரிகளின் ஆழம் புரியவில்லை என்பதால் அவை வருவதின் சூழலும் புரியவில்லை. தமிழ் ஒழுங்காகக் கற்காததின் விளைவு. ஆனால் 'சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூங்கட் பேதை' என்று தொடங்கும் பாடலின் வரிகள் மட்டும் புரிகிறது. பூத்தொடுத்துக் கொண்டே, கிளிவிரட்டும் அந்தப் பெண்ணை என் வாழ்வில் இதுவரையிலும் காணாது, பெருமூச்சு விடுவதால் என்னவோ நன்றாகப் புரிகிறது போலும். சங்கப் பாடல்களைப் படித்தபின் அந்த சூழலைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் நாவலின் சம்பவங்களில், சங்கப்பாடல்களின் உரிப்பொருள்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீலியின் மறைவுக்குப் பின், கிரி அவள் நினைவுகளில் ஏங்குவதெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் கூடிய பாலைத்திணை என்று புரிகிறது.
நாவலின் வடிவம் என்று பார்த்தால், மார்கழியில் வாசலில் போடப்படும் புள்ளிக் கோலம் போன்றது. குறுக்கும் நெடுக்குமாக புள்ளிகளின் வழியே, மாவுடன் பரவும் கை, நிமிர்ந்து எழும்போது , உருவாகி இருக்கும் முழுக் கோலம் போல. சம்பவங்கள் முன்னும் பின்னும் வெட்டி இழுக்கப்பட்டு, ஒரே மூச்சில் எழுதப்பட்டது போல உள்ளது. நிகழ்வுகள் வந்து இணையும் புள்ளிகள் அவ்வளவு இயல்பாக உள்ளது. தேர்ந்த தச்சனின் கைத்திறன் போலும்! கச்சிதமாக உள்ளது. நாவலுக்குக் கச்சிதம் தேவை தானோ?
நாவலின் மற்றொரு பலமான அம்சமாக இருப்பது உரையாடலில் இருக்கும் அங்கதமும், வட்டார வழக்கின்(மேற்கு கன்னியாகுமரி?) சரளமும். 'ஏன்வே மோங்குதீரு? ', 'நீக்கம்போ… குருவோ .', 'படு கேமன்', 'கண்ணானை ' போன்ற உரையாடல்கள் எனக்குப் புரியவில்லை என்றாலும், வட்டார வழக்கு படு சரளமாகவே இருப்பதாகவே நினைக்கிறேன். கூடவே மிளா, அயனி, காந்தாரி போன்ற புரியாத உதிரிச் சொற்கள், காட்டில் பூக்கும் பெயர் தெரியாப் பல வண்ண மலர்களின் பட்டியல் தருகிறது. (வட்டார வழக்குச் சொற்களுக்கான பொருள் இணைப்பைத் தராததற்கு நன்றி).
நாவலின் நெருடலாக, என் முதல் வாசிப்பில் உணர்ந்தது – சி.வி. ராமன் பிள்ளை,சங்ஙம்புழா, போத்தியின் ஜமா என வரும்போது கதை கூறுவது கிரிதரனா, இல்லை ஜெயமோகனா என்ற சந்தேகம். இது ஜெயமோகன் அவருடைய கட்டுரைகளில் சொன்ன மனிதர்களை மீண்டும் இங்கேயும் பார்ப்பதால் ஏற்படுவது. இதனால் வாசிப்புத் தொடர்ச்சி அறுபடுவதால் சிறு சங்கடம் எழுகிறது.
இரண்டாம் வாசிப்பில் சில இடங்களில் பேசுவது கதாபாத்திரங்களா இல்லை ஜெயமோகனா என்ற சந்தேகம். அந்த கதாபாத்திரங்களின் போகிறபோக்கில் வந்து விழும் சில சரளமான, உரையாடல் வரிகளில் இருக்கும் ஆழம், அவர்களின் முதிர்ச்சி ஜெயமோகனுடையதோ என்ற சந்தேகம். இது என் வாசிப்பின் கோளாறா இல்லை ஒரு நாவலை எவ்வாறு புரிந்து படிக்க வேண்டும் என்று தெரியாததன் கோளாறா என்று தெரியவில்லை. ஆனால் என் வாசிப்பில் உணர்ந்த நிஜ உணர்வுகள்.
காடு நாவலைப் படிக்க விரும்பும் எவருக்கும், வாசித்த வாசகனாக சொல்ல விரும்புவது என்னவென்றால், தயவு செய்து ஜெயமோகனின் கட்டுரைகள், நாவலின் முன்னுரை, பின்னட்டை வாசகம் என எதையும் படிக்காதீர்கள். மெதுவாக பின்னர் படித்துக் கொள்ளுங்கள். நேராக கதைக்குள் சென்று விடுங்கள். அங்கே உங்களுக்கென ஒரு உலகம் காத்திருக்கிறது. அங்கே உங்களை ஒப்படைத்து விடுங்கள்.
நாவலைப் படித்த முடித்த பின்பு எதிலும் நம்பிக்கை அற்ற தன்மை மனதில் ஏற்பட்டது. "என்ன மயிறு வாழ்க்கை.. இவ்வளதுதான் .. ஒண்ணும் பெருசா புடுங்க முடியாது" என்ற ஒரு எண்ணம். ஐந்து வருடங்களுக்கு முன்னர் படித்து இருந்தால், வேட்டிக்கும், ஜம்பருக்கும் இடையே பிதுங்கி நிற்கும் சிவந்த சதை போல, நீலிக்கும், மாமிக்கும் இடையில் மனம் பிதுங்கி இருந்திருக்கும். இப்போது கிரியின் அழிந்த கனவும், வாழ்ந்த வாழ்வும் பெரிதாகத் தெரிகிறது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் படித்தால் புதிதாக என்ன தெரிந்து கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.
ஆத்தா அடிக்கடி சொல்வாள் – "பதினாலு வருஷம் வாழ்ந்தவனும் கிடையாது…பதினாலு வருசம் வீழ்ந்தவனும் கிடையாது". அவள் எந்த அர்த்தத்தில் சொல்கிறாள் என்று அப்போது புரியவில்லை. கிரி பிற்கால வாழ்வில் சிறுகச், சிறுக காசை சேர்த்து, அவன் பிள்ளைகள் அதில் படித்து, வாழ்வில் சொல்லிக்கொள்வது போல வருகிறார்கள். பட்டமரத்தில் துளிர் விடுவது போல. அந்த அர்த்தத்தை இப்போது புரிந்து கொள்கிறேன். கிரியாவது பிற்பகுதி வாழ்வில் ஓரளவு முன்னேறுகிறான். ஆனால் கிரி வாழும் வாழ்க்கையின் பிம்பமாய் வாழும் அண்ணாச்சியின் வாழ்க்கை பின்னர் என்ன ஆனதென்று தெரியவில்லை. யார் கண்டது அங்கே இன்னொரு நாவல் நிகழ்ந்து முடிந்திருக்கலாம்.
வாழ்வின் பல தோல்விகளுக்கு பிறகு, அய்யரைக் கடைசியாக வந்து சந்திக்கும் கிரிதரன் அவரிடம் 'நான் என்ன தப்பு செய்தேன்னு நீங்க நினைக்கிறீங்க…' என்று கேட்கிறான். 'எல்லோரும் செய்ற தப்புதான் …அகங்காரம் … உன்னைப்பத்தியே நினைக்கிறது… மத்தவங்க உன்னை பேனனும்னு நினைக்கிறது…' என்று சொல்கிறார். கூடவே அவர் அந்தத் தோல்வியை எதிர்பார்த்தவர் போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். உண்மையில் அய்யருக்கு, கிரிதரனின் தோல்வி அவன் மலைக்கு வந்த நாளே தெரிந்து விட்டதோ?
நாம் எல்லோரும் எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையில் இருக்கிறோம். நம் வாழ்க்கை, நம் எதிர்காலம் என்ற சட்டகத்திற்குள் தான்.எப்போதும் சிந்திக்கிறோம். வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்ற பயத்தில் தான் வாழ்கிறோம். உண்மையில் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது என்ன? கழுத்தில் போட்ட மாலை, அது இருக்கும் வரை கனக்கும் தருணம் போன்றது தானா?
சில சமயங்களில் யோசிக்கும் போது, போத்தி சொல்வது போல 'மனுசன சாமிகள் வட்டா போட்டு விளையாடுதுவ', அதில் வெற்றி, தோல்விகள் அவ்வப்போது வந்து செல்லும் நிகழ்வுகள் என்று தோன்றுகிறது. இருக்கும் கணம் மட்டுமே வாழ்க்கை. அதில் இருந்தபடியே, எல்லாவற்றையும் இழப்பதே வாழ்க்கை என்று தோன்றுகிறது. ஆனாலும் ?????….ஆனாலும் ….?????
நாவலைப் படித்து முடித்த, சில நாட்களுக்குப் பிறகு சில வருடங்களுக்கு முன்பு படித்த, கண்டராதித்தனின் கவிதை ஒன்று, யதேச்சையாக நினைவில் வந்தது.
" துக்கமாகவும், கண்ணீருடனும்
கடந்து விட்ட நேற்றை
ஒரு நரி கவ்விப் போனதைப் பார்த்தும்
பார்க்காதது போலிருந்து விட்டேன்
கொண்டைத் தலையுடன்
கண்களை உருட்டியுருட்டி
நமக்கெல்லாம்
உயரேயொரு
கிளையிலமர்ந்து
பசியாற்றும் பட்சியின்
அலகிலிருந்து உதிர்ந்தது
இந்த நாள்
நேற்றை
இன்றை
கடப்பது போல
நாளையை கடந்தும்
பறந்து கொண்டிருக்கிறது
ஒரு பறவை"
ஆம், அந்தப் பறவைதான் 'நான் நான் ' என்கிறது. பின்னர் 'ஏன்', 'ஏன்' என்கிறது.
நாவலை முடித்த, இந்த ஆறு மாதங்களாக, மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. அது மனதில் இடைவிடாது தொக்கி நிற்கிறது. படிச்ச தம்புரானாலும் சொல்ல முடியுமா என்று சந்தேகிக்கும் கேள்விதான். இருந்தாலும் யாராவது பதில் சொல்ல முடியுமா? உண்மையில் காமம், சுயநலம் தவிர மனித உறவுகளுக்கு வேற ஏதாவது அடிப்படை உண்டா?
பி.கு:
1. நாவலைப் பற்றிய என் எண்ணங்களை,எழுதத்தூண்டி, ஊக்கப்படுத்திய 'பராக்கா' அரவிந்திற்கு நன்றி.குரங்குத்தவத்தின் கட்டுரைகள் எனக்கு ஒரு ஊக்கமூட்டி.
2. இதை விரித்து இன்னும் தெளிவான மொழியில், ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்றே எழுதிய பிறகு எண்ணுகிறேன். ஆனால் நேரம் கிடைக்காததால் அதற்கான உழைப்பை அளிக்கமுடியாது. குறைகள் கண்டால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
-இளமாறன்
September 7, 2011
ஜாமீன் சாஹேப்-2
[image error]
-4-
தனது உறவினரின் மகள் திருமணத்துக்காக ஒருமுறை தயானந்தா,சாகர் வரை செல்ல வேண்டியிருந்தது.அந்த சமயத்தில் மீனாட்சி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அவள் கணவனைக் கைது செய்திருந்தது.மீனாட்சியின் தாய்,தயானந்தாவின் அம்மாவுக்கு தூரத்து உறவினள்;அதை விட அவர்கள் முன்பு அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தவர்கள் என்பது,இன்னும் கூட முக்கியமானது.அந்தக் குடும்பத்திலிருந்த நான்கு பெண்களில் மீனாட்சியே இளையவள்.அவளுடைய தந்தை வாசுதேவ்,ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார்.முதல் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகும்,மெட்ரிக் தேர்வை எழுதி முடிக்கும் வரை மீனாட்சியை அவர் விட்டு வைத்திருந்ததே பெரும் சாதனைதான்.அதற்குப் பிறகு மீனாட்சி,ஷீனாவுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்தது.
ஷீனாவின் குடும்பம் விறகு விற்பனை செய்யும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்தது.ஊரறிந்த பல வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பண்புகளை அப்படியே சுவீகரித்துக் கொண்டிருந்ததோடு அதையெல்லாம் விடக்கூட மோசமானவனாக இருந்தான் ஷீனா.தீய குணங்களின் மொத்த உருவமாகவே இருந்த ஷீனாவிடம் சுய கௌரவம் என்பது கொஞ்சமும் இல்லை.யாராவது தனக்குச் சாபம் விட்டால் கூட அதை அவன் சங்கீதமாகத்தான் எடுத்துக் கொள்வான்.இப்படிப்பட்ட ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொள்வதை விட இறந்து போய்விடுவது எவ்வளவோ மேலானது என்றுதான் நினைத்தாள் மீனாட்சி.ஆனால் தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் தான் ஒரு சுமையாகி விடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்குள் அழுத்தமாக ஊறிப் போயிருந்தது.;தன் தந்தையின் நிராதரவான நிலை அவளுக்குக் கண்கூடாகத் தெரிந்தது.மீனாட்சியின் ஜாதகத்தைப் பையில் வைத்தபடி அவர் வெளியே கிளம்பும்போதெல்லாம் தனது கையாலாகத நிலை குறித்து அவர் புலம்புவதைப் போலவே அவளுக்குத் தோன்றும்.ஷீனாவின் குடும்பத்திலிருந்து அவளைப் பெண் கேட்டு வந்தபோது அதை மறுத்துப் பேசும் நிலையில் அவள் இல்லாததற்குக் காரணம் அதுதான்.
''ஜனங்க அப்படித்தான்…நூறையும் சொல்லுவாங்க! நீதான் தைரியமா இருக்கணும்!ஊரார் பேசறதையெல்லாம் காதிலே போட்டுக்காமெ ஒதுக்கித் தள்ளிடணும்! எல்லா பாரத்தையும் சாமி மேல போடு. எது நிஜம்கிறது அவருக்குத்தான் தெரியும்'' என்று கண்ணீர் மல்கிய கண்களோடு அவளது குடும்பம் அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தது.ஷீனாவைப் போன்ற ஒரு ஆளைக் கல்யாணம் செய்து கொள்ள யார்தான் வரப் போகிறார்களோ என்று அதுநாள் வரை பேசி வந்த ஊர்,இப்போது அவனுக்கு வாய்த்திருக்கும் அதிருஷ்டத்தைப் பற்றியும்,மீனாட்சிக்கு ஏற்பட்டுப் போன துர்ப்பாக்கியம் குறித்தும் பேசத் தொடங்கியிருந்தது.
ஷீனா,தன் மனைவியை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தான் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.ஒரு சில நாட்கள் அவன் தன் மனைவிக்கு விசுவாசமாக-அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தான்.அதற்குப் பிறகு அவள் எதைச் செய்தாலும் அது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாகவே அவனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.ஒரு நாள் அவள் வைத்திருந்த குழம்பு மிகவும் காரமாக இருந்ததால்,கொல்லைப்பக்கம் முழுக்க அவளைத் துரத்தித் துரத்தி விரட்டியபடி அதை அவள் தலையில் அப்படியே ஊற்றிவிடக் கூட அவன் முயன்றிருக்கிறான்.அவளை மிக மோசமாகப் போட்டு அடிப்பான் அவன்;அதில் அவள் உடல் முழுவதும் கடுமையான இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன.இரவு நேரங்களில் அவன் மிகவும் தாமதமாகவே வீடு திரும்புவான்;சில சமயங்களில் வராமலும் கூட இருந்து விடுவான்.மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவளை ஆபாசமாகத் திட்டுவான்.
ஒரு நாள் அவளைக் கொன்றுவிடப்போவதாக அவன் மிரட்டியபோது பயந்து போன மீனாட்சி,ஒரு அறைக்குள் சென்று அதைப் பூட்டிக் கொண்டாள்.அவள் மட்டும் வெளியே வரவில்லையென்றால் குழந்தைகளின் கழுத்தை நெரித்து விடப் போவதாகப் பயமுறுத்தினான் அவன்.குடி போதையில் இருக்கும்போது எப்படிப்பட்ட கொடூரமான செயலுக்கும் அவன் துணிந்து விடக் கூடும் என்று பயந்து போன மீனாட்சி,அறையை விட்டு வெளியே வர,விறகுக் கட்டை ஒன்றால் அவளைக் கடுமையாகத் தாக்கி விட்டான் ஷீனா.இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையிலேயே தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற மீனாட்சி,தன் கணவன் மீது அங்கே ஒரு புகாரைப் பதிவு செய்தாள்.இரவு நேரத்தில்,அப்படிப்பட்ட ஒரு கோலத்தில் குழந்தைகளுடன் வந்து நின்ற அவளது நிலையைக் கண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் உள்ளம் இரக்கத்தால் கசிந்தது.ரமாநாயக் என்ற கான்ஸ்டபிளை அழைத்து ஷீனாவின் முந்தைய குற்றப் பின்னணிகள் குறித்து விசாரித்தார் அவர்.ஷீனாவின் கேவலமான கடந்தகால நடவடிக்கைகளைப் பற்றி நாயக் விவரிக்கத் தொடங்கியதுமே அவன் மீது உடனடியாகப் புகாரைப் பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர்,ஷீனாவின் வீட்டுக்கு விரைந்து சென்று ,அங்கே குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்த அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்.அங்கே கிடைத்த அடி,உதை இவற்றால் அவனுள் ஏறியிருந்த குடிபோதை முற்றிலுமாய்த் தெளிந்து போய் விட்டது.ஷீனா லாக்-அப்பில் அடைக்கப்பட்டான்.கலக்கமடைந்தவளாய் நிலை குலைந்து போயிருந்த மீனாட்சி நேராகத் தன் தந்தை வீட்டுக்குச் சென்றாள்.அங்கேயும் தனக்கு இடமில்லாமல் போனால்,குழந்தைகளோடு கிணற்றில் குதித்துவிடப் போவதாக அறிவித்தாள் அவள். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட வாசுதேவா, தன் மகள் அந்த வீட்டில் தங்கியிருப்பதற்கு ஒத்துக் கொண்டார்.
ஷீனா கைது செய்யப்பட்ட தகவல்,மறுநாளே ஊர் முழுவதும் பரவி விட்டது.ஆனாலும் அவனை விடுவிக்க யாரும் முன் வரவில்லை.ஜாமீன் சாஹேபும் கூட அந்த சமயம் ஊரில் இல்லை.மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் சமாளித்துக் கொண்டிருந்த ஷீனா, பிறகு பசி தாங்காமல் தனக்கு ஏதாவது சாப்பிடத் தருமாறு போலீஸ் எஸ் ஐயிடம் கேட்டான்;அவரோ அவன் மீது வசை மாரி பொழிந்தபடி அடி வெளுக்கத் தொடங்கி விட்டார்;நரக வேதனை இன்னதென்பதை அப்போது உணர்ந்தான் ஷீனா.போலீஸ் எஸ் ஐ வெளியே கிளம்பிச் செல்லும் வரை காத்திருந்த ஷீனா,பிறகு ஒரு கான்ஸ்டபிளை அழைத்து எப்படியாவது ஜாமீன் சாஹேபை அழைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டான்.கான்ஸ்டபிளிடம் அவன் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் நீட்டிவிட்டதால்,அதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு ஷீனாவத் தேடிச் சென்றான் அந்தப் போலீஸ்காரன்.சாகருக்குப் போய்விட்டு அப்போதுதான் திரும்பிவந்து கொண்டிருந்த தயானந்தா,தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்;வழியிலேயே அவனைப் பார்த்து விட்ட கான்ஸ்டபிள்,நடந்த எல்லாவற்றையும் அவனிடம் விவரித்தான்.இந்த வழக்கைப் பொறுத்த வரை,போலீஸ் எஸ் ஐ இதில் தீவிரமான அக்கறை காட்டி வருவதையும்,மீனாட்சியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையைக் கூட அவர் வாங்கி வைத்திருப்பதையும் தெரிவித்தான் அவன்.ஷீனாவின் மிருகத்தனமான நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போகும்போது- மீனாட்சியின் மீது எதிர்பாராமல் ஏற்பட்டு விட்ட இரக்க உணர்வால் கொஞ்சம் மிகையாகவே அவற்றை வருணித்து விட்டான் அவன்.இந்த வழக்கு சற்று சிக்கலானதுதான் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாலும்,அதனுடன் கூடவே எஸ் ஐ கொண்டிருக்கும் இரக்கத்தை எப்படி அகற்றலாம் என்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் யோசிக்கத் தொடங்கி விட்டிருந்தான் தயானந்தா.நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற அவன்,தன் அறிவுக் கூர்மையின் ஒவ்வொரு அங்குலத்தையும்,மேலும் பல கபடமான தந்திர உத்திகளையும் கையாண்டு ஷீனாவை விடுவித்து விட்டான்.அவனுக்கு ஷீனாவோடு மூவாயிரம் ரூபாய்க்கான பேரம் படிந்திருந்தது.
சற்றும் எதிர்பாராதபடி தன் பக்கம் வீசிய அதிருஷ்டக் காற்றால் பூரித்துப் போனவனாய் வீட்டுக்குள் நுழைந்த தயானந்தாவை மீனாட்சியின் நிலை குறித்த ஆவேசக் குமுறலோடு முதலில் எதிர்கொண்டாள் அவனது தாய்.
''அப்படிப்பட்ட மோசமான ஒரு ஆளை விடுதலை செய்யற காரியத்திலே உன்னாலே கூடத் துணிஞ்சு இறங்க முடியாது'' என்பதையும் தன் பேச்சில் கூடவே சேர்த்துக் கொண்டாள் அவள்.
மிகப் பெரும் வெற்றியடைந்தவனைப் போலத் தன் கைகளைத் தட்டி ஆரவாரித்த தயானந்தா,
''அவனைத்தான் நான் ஏற்கனவே வெளியே கொண்டு வந்தாச்சே?இந்த தயானந்தாவைத் தவிர அவனை விடுவிக்கிற துணிச்சல் ஊரிலே வேற எவனுக்கு இருக்கு?''
என்று அவளுக்குப் பதிலளித்தான்.
அதைக் கேட்டதும் -இதுநாள்வரை அவன் அவளிடம் கண்டிராத கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தோடும்,கோபத்தோடும் சீறிப் பாய்ந்தாள் அவள்.
''அப்படீன்னா அதைத்தான் மொதல் வேலையாச் செஞ்சுட்டு வந்திருக்கியா நீ? போயும் போயும் அந்தக் கேடு கெட்ட மிருகத்தை…அந்தக் குடும்பத்துக்கே ஒரு சாபமா இருக்கிற அவனையா நீ விடுவிச்சிட்டு வந்திருக்கே?இந்த ஊரிலே இருக்கிற ஜனங்க எல்லாம் பணத்துக்கு மயங்கிடாதவங்க;நியாயத்துக்குக் கட்டுப்பட்டவங்க…அதனாலேதான் ஷீனாவை விடுதலை செய்யறதுக்கு யாருமே முயற்சி எடுக்கலை..உன்னோட அதிகாரபலத்தைக் காட்டிக்கணும்னா அதுக்கு இதுதான் முதலிலே கெடைச்சதா ஒனக்கு?பணத்துக்காகப் பீயை நக்கறதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?எல்லாத்தையும் கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்னு நீ விட்டிருக்கணும்..அந்தப் பாவப்பட்ட மீனாட்சி இருக்காளே…அவளைப் பத்தி நெனச்சுப் பாக்கணும்னு கொஞ்சமாவது ஒனக்குத் தோணிச்சா?''
''சும்மாக் கன்னா பின்னான்னு எதையாவது கத்தாதேம்மா! நான் ஒண்ணும் அப்படி எந்தக் குத்தத்தையும் செஞ்சிடலை. எல்லாத்தையும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் செஞ்சிருக்கேன்..''என்று சற்றுக் குரலை உயர்த்தினான் தயானந்தா.அதைக் கேட்டதும் அவனது அம்மாவின் ஆத்திரம் இன்னும் அதிகமாகி விட,…அவளும் பதிலுக்குக் கத்தினாள்.
''நாறப் பயலே..வெக்கமா இல்லே ஒனக்கு?இவ்வளவுத்தையும் செஞ்சதுமில்லாமே-பண்ணினதெல்லாம் சரின்னு வேற இன்னும் நம்பிக்கிட்டிருக்கே!…ஒருவேளை சட்டப்படி எல்லாம் சரியா இருந்ததுன்னா ஒரு ஆளைக் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டே போலே இருக்கு..! இந்தமாதிரி அருவருப்பான காரியங்களைச் செஞ்சு பொழைக்கறதை விடத் தெருவிலே போய்ப் பிச்சை எடுக்கறது எவ்வளவோ கௌரவமா இருக்கும்..!''
தனது தாயின் மூர்க்கமான ஆவேசம்,இதுவரை அவன் பார்க்காத ஒன்றாக இருப்பதைக் கண்டு,திகைத்துப் போய் நின்றான் தயானந்தா.இன்னும் கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தால் தொடர்ந்து அவள் தன்னைக் குதறி எடுத்து விடுவாள் என்று அஞ்சியவனாய் அங்கிருந்து வெளியேற முற்பட்டான்.
அவனுடைய மனைவி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.அவன் அங்கிருந்து போவதைப் பார்த்த அவன் அம்மா அவனை நோக்கியபடி கத்தினாள்..
''இப்ப எங்கே போறே நீ ?அந்தப் போலீஸ்காரனோட குண்டியை நக்கறதுக்கா?….இதுக்குள்ளே ஷீனா அந்த மீனாட்சியை அறுத்துக் கூறு போட்டிருப்பான்..''
படிகளில் இறங்கிச் செல்லும்போது அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதைப் போலிருந்தது தயானந்தாவுக்கு.
-5-
உண்மையில் சொல்லப்போனால் மீனாட்சியைப் பற்றிய ஒரு சின்ன எண்ணம் கூட தயானந்தாவுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.ஷீனாவைக் குற்றமற்றவனாகக் காட்டுவது எப்படி என்பதிலேயே அவன் தனது கவனம் முழுவதையும் செலுத்தியிருந்தான்.இப்படிப்பட்ட நுட்பமான சிக்கல்கள் வரும்போது-இவ்வாறான வேலைகளில் ஈடுபடும் சமயங்களில்-சில கேள்விகளையும்,பிரச்சினைகளையும் எழுப்பியபடி மனச்சாட்சி போடும் தடைகளை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.சிக்கல்கள் நிறைந்த- வழி தெரியாத ஒரு பாதையில் வளைந்து நெளிந்து சாமர்த்தியமாகச் சென்றுகொண்டிருக்கும்போது,ஒரு கணம் தயங்கி நின்றாலும் கூடத் தடையாகி விடுவதைப் போன்றதுதான் இதுவும்.வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது- உயரங்களை எட்டுவதற்கான அந்த விளையாட்டின்போது- தனக்குப் பின்னோக்கிப் பார்ப்பதை-அவ்வாறு சிந்திப்பதைக் கூட ஒருவன் விட்டுவிட வேண்டும்;இல்லையென்றால் அவை அவனைக் களைப்படைய வைத்து விடும்.ஒருக்கால் ஷீனாவுக்குப் பதிலாக மீனாட்சிக்கு ஜாமீன் தர வேண்டிய நிலை தயானந்தாவுக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட – பாலியப் பருவத்தின் ஞாபகங்கள்,சின்னக் குழந்தையாக இருந்தபோது அவளோடு தான் பகிர்ந்து கொண்ட இனிமையான விஷயங்கள் ஆகிய எதுவும் அவனது இதயத்தைத் தொட்டிருக்க வாய்ப்பே இல்லை.
தயானந்தாவும் ,மீனாட்சியும் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தபோது ஏழாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில்தான் படித்தார்கள்;பிறகு,அவள் பெண்கள் பள்ளிக்குப் போய் விட்டாள்.இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போய் வருவார்கள்.ஸ்கூலுக்குக் கிளம்புவதில் எப்போதுமே சற்றுத் தாமதம் செய்பவன் தயானந்தா.ஆனால் மீனாட்சியோ எப்போதுமே சரியான நேரத்துக்கு வந்து விடுவாள்;தலையில் எண்ணெய் தடவி நன்றாகச் சீவிப் பின்னல் போட்டு ஒரு ரிப்பனால் முடிச்சுப் போட்டபடி வரும் அவள்,வீட்டுக்கு வெளியிலுள்ள நடைபாதையில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்.அப்போதுதான் தன் புத்தகங்களையெல்லாம் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தி அடுக்குவான் தயானந்தா.தன் சிலேட்டுப் பலகையைச் சுத்தமாகத் துடைப்பதற்காக – ஈரமான ஒரு உறியும் பஞ்சை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பாள் மீனாட்சி.அந்தப் பஞ்சின் மீது தயானந்தாவுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தபோதும்,அவளிடம் அதைக் கேட்டுப் பெற முடியாதபடி அவனது அகங்காரம் தடுத்து விடும்.அந்தப் பஞ்சை அவன் பயன்படுத்திக் கொள்ள அவள் அனுமதித்தாலும்,மறக்காமல் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு விடுவாள் அவள்.அதை எப்படியாவது திருடி விட வேண்டும் என்ற தூண்டுதல் அவனிடம் இருந்தாலும்,அதைப் பள்ளிக்கூடத்தில் வைத்துப் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் அப்படிச் செய்ய முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.
அவனுடைய அம்மா, தங்களிடம் மீதமாகிப் போகும் சாப்பாட்டை மீனாட்சி வீட்டுக்கு அவனிடம்தான் கொடுத்தனுப்புவாள்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தப் பஞ்சை அவளிடம் எப்படியாவது கேட்டு வாங்கி விட வேண்டுமென்ற ஆசை அவனுக்குள் இருந்தாலும்,அவன் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடுவான்.
மாலை நேரங்களில் ஆலமரத்தடியிலிருந்த மேடையில் ஊர்ப்பெண்களெல்லாம் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையின் உடைசல்களாகக் கீழே கிடக்கும் விரிசல் விட்ட கல்துண்டுகளை வைத்துக் கொண்டு குழந்தைகளெல்லாம் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.தயானந்தாவும்,மீனாட்சியும் தினமும் அதே இடத்தில் ஒன்றாக விளையாடுவார்கள்.ஆனால் கொஞ்சம் வளர்ந்த பிறகு,தயானந்தா கோலிக் குண்டு விளையாட்டுக்கு மாறி விட்டான்.கோலிக்குண்டு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை அறிந்த பெரிய பையன்கள்- ஆரம்பத்தில் தயானந்தாவைத் தங்களோடு விளையாடச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வந்தார்கள்.நடுவிரலை வில்லைப் போல் வளைத்து வைத்தபடி, கோலிக்குண்டை அடிக்கும் பிற பையன்களின் திறமையால் கவரப்பட்ட தயானந்தா,அவர்கள் செய்வதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருப்பான்.அவர்கள் அடிக்கும் கோலிக்குண்டு,தரைக்குப் போய்..அங்கேயிருக்கும் இன்னொரு குண்டை அடித்து மேலே தூக்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பான் அவன்.அந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டோடு-ஒரே மனதாய்க் கருத்துச் செலுத்திய அவன்,வெகு சீக்கிரத்திலேயே அதில் கை தேர்ந்தவனாக ஆகி விட்டான்.கோலிக் குண்டு விளையாட்டின் மீதான மோகம் வடிந்து போன பிறகு,கில்லி தாண்டும் விளையாட்டை நோக்கி நகர்ந்துவிட்ட தயானந்தாவுக்கு அது ஆர்வமூட்டும் ஒரு புது வரவாயிற்று.அதன் பிறகு,லகோரி,கபடி என்று தொடர்ந்து வேறு பல விளையாட்டுக்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தான் அவன்.விளையாட்டுக்கள் மாற மாறப் பழைய நண்பர்கள் ஒரு சிலரே அவனுடன் இருப்பார்கள்.ஒவ்வொரு புது விளையாட்டும் புதிய நண்பர்களைக் கொண்டு வந்து சேர்க்கும்போது பழைய நண்பர்கள் மெள்ள மெள்ளப் பின்னுக்குப் போய் விடுவார்கள்.
கோலி விளையாடத் தொடங்கியதுமே ஆல மரத்தடி மேடைக்குப் போவதை நிறுத்திக் கொண்டு விட்டான் அவன்;ஆனால் மீனாட்சி தொடர்ந்து அங்கேதான் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு முறை தன்னோடு விளையாட வேறு யாரும் அகப்படாததால் தயானந்தாவைத் தன்னோடு விளையாட அழைத்தாள் அவள்.தயானந்தா அதை மறுத்து விட்டதால் அவள் ஏமாற்றமடைந்தாள்.அவளது ஏமாற்றத்தையும்,தனித்து விடப்பட்டது போன்ற உணர்வோடு அவள் திரும்பிச் செல்வதையும் பார்த்து விட்டு அவளோடு விளையாட ஒத்துக் கொண்டான் தயானந்தா.தான் முதலில் அழைத்தபோது அவன் வராததால் இப்போது அவனோடு விளையாட அவளுக்கு விருப்பமில்லை;ஆனாலும் எப்படியோ அவளைச் சமாதானப்படுத்திவிட்டான் தயானந்தா.இருவரும் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.ஆனால்,குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து வீடு கட்டும் அந்த விளையாட்டு,கொஞ்ச நேரத்திலேயே அவனுக்குச் சலித்துப் போய்விட்டது.
இரத்தத்தைச் சுவை பார்த்துப் பழகிப் போன புலியைப் போலக் கோலி விளையாட்டின் இறுதி இலக்கை எப்படி எட்டுவது என்பது பற்றிய சிந்தனையிலேயே நிலை கொள்ளாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தான் தயானந்தா.
[கன்னட மூலம்;விவேக் ஷன்பேக்
ஆங்கில மொழியாக்கம்;என்.மனு சக்ரவர்த்தி,ஷரத் அனந்தமூர்த்தி,
ஆங்கில வழி தமிழாக்கம்;எம்.ஏ.சுசீலா]
ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1
1-
தயானந்தா முதன்முதலாக அளித்த ஜாமீன் அவனுடைய தந்தைக்குத்தான்! அப்போது அவனுக்கு வயது இருபத்திரண்டு. பி.ஏ.,பரீட்சையில் முதல் இரண்டு முயற்சிகளில் தோற்றுப் போனபிறகு,எப்படியாவது அதை முடித்து விட வேண்டும் என்று அவன் போராடிக் கொண்டிருந்த நேரம் அது.
தங்களது விடுமுறை நாட்களில் ஒன்றுகூடும் அவனது பட்டதாரி நண்பர்கள்,தங்களது ஊதிய விகிதம்,கடன் வாங்கும் தகுதி,தங்களுக்குரிய விடுப்புக் காலம்,வீட்டிலிருந்து தள்ளி இருக்கும்போது ஏற்படும் சாப்பாட்டுப் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது,தானும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று தயானந்தாவுக்கும் தோன்றும்.ஒரு சில சிபாரிசுகள்,அறிமுகங்களின் மூலம் வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவன் செய்த முயற்சிகளுக்கு-அவன் ஒரு பட்டதாரியாக மட்டும் ஆகி விட்டால் நிச்சயமாக உதவி செய்கிறோம் என்ற இனிப்பான வாக்குறுதிகளே பதிலாகக் கிடைத்து வந்தன.
தயானந்தாவின் தந்தை கமலாகர்,ஒரு காலத்தில் கார்வார் முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு ஜவுளிக் கடையின் உரிமையாளர்.துறைமுகத்துக்குச் செல்லும் வழியில்,பஸ் நிறுத்தத்தை ஒட்டினாற்போல அந்தக் கடை இருந்தது.அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் திருமணத்துக்கான துணிமணிகள் எடுக்க எப்போதும் கமலாகரின் கடைக்கே வந்து குவிந்து கொண்டிருந்தார்கள்.வருடத்துக்கு இரண்டு தடவை ,கமலாகரே பம்பாய் சென்று,தேவையான ஜவுளிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவார்;அவற்றுக்கான விலையையும் நிர்ணயம் செய்வார்.மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெவ்வேறு வண்ணக் குடைகள் அங்கே விற்பனைக்கு வந்து விடும்.அந்தக் குடைகள் அங்கே வந்து சேர்ந்ததுமே அவற்றின் உட்புறங்களில் வெள்ளிஜரிகையால் பெயர் பொறிக்கும் தன் வியாபாரத்தைத் தொடங்கி விடுவார் அடுத்த கடைக்காரரான பொற்கொல்லர் மோகன்.
நல்ல முறையில் செழித்து வளர்ந்தபடி,எப்போதும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த அந்தக்கடை,கமலாகரின் கண்களுக்கு முன்பாகவே வீழ்ச்சியடையத் தொடங்கியது.காமத் வாத்தியாருடனும் அவரது கூட்டாளிகளுடனும் சேர்ந்து கொண்டு,பணம் வைத்துச் சீட்டாடும் பழக்கத்திற்குக் கமலாகர் ஆட்பட்டுப் போன பிறகு,அந்தக் கடையின் தலையெழுத்தே மாறிப் போக ஆரம்பித்தது.தன் பொறுப்புக்களையெல்லாம் தன் இளைய சகோதரர்களிடம் தள்ளிவிட்ட கமலாகர்,பம்பாய் சென்று துணி வாங்கும் வேலை,கடையின் கணக்கு வழக்குப் பார்ப்பது என்று சகலத்தையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.
நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில்-பழைய இடத்தின் பற்றாக் குறையைக் காரணம் காட்டிப் பிற ஊர்களிலிருந்து கார்வாருக்கு வந்து சேரும் பேருந்துகள் நிற்க வசதியாக-முன்பிருந்த பஸ் நிறுத்தமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.அந்தக் கடைத் தெருவின் உயிர்நாடியே பேருந்து நிலையம்தான் என்பது போலப் புதிய பேருந்து நிலையம் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடைத்தெரு வளர்ச்சியடையத் தொடங்கியது.புதிய கடைகளின் ஜொலிஜொலிக்கும் விளக்குகள்,பழைய கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களைத் தானாகவே அங்கு கொண்டு வந்து சேர்த்தன.குடைகளும் கூட அங்குள்ள எல்லா இடங்களிலுமே கிடைக்க ஆரம்பித்து விட்டன.அந்த ஆண்டின் மழைக் காலத்தில்,கமலாகரின் கடையில் அறுபது குடைகள் விற்பனையாகாமல் தேங்கிப் போயிருந்தன;நாற்பது குடைகள் மட்டுமே எப்படியோ விற்றுப் போயின. அதே போன்ற குடைகள்,பிற கடைகளில் மூன்று ரூபாய் குறைவாகவே கிடைத்தன.
தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உணர்வில் உறைப்பதற்கு முன்னமே கமலாகர் திவாலாகி விட்டிருந்தார்.தான் செலுத்தியாக வேண்டிய தொகை, தனக்கு வர வேண்டிய தொகை என எதற்குமே சரியான கணக்கு வழக்குகள் அவரிடம் இல்லை.புதிதாக ஜவுளிக் கொள்முதல் செய்ய வேண்டிய தேவையே இல்லாதபடி,கடந்த சில ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருந்த சரக்குகளையே மிகுந்த சிரமத்தோடுதான் அவர் தள்ளி விட வேண்டி இருந்தது.
வண்ண மயமான துணிகளை விளம்பரப்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டிருந்த கடையின் வெளிப்புற ஜன்னல்களெல்லாம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தன.காலி அலமாரிகளும்,பல கஜ நீளம் கொண்ட துணிகளைச் சுற்றி வைக்க ஒரு காலத்தில் பயன்பட்டுக் கொண்டிருந்த மரக் கழிகளும் கடையின் ஒரு மூலையில் போட்டு வைக்கப்பட்டன.
ஜவுளி வியாபாரத்தைக் கை விட்டு விட்டுத் தன் கடையின் ஒரு பக்கத்திலேயே தேங்காய் வியாபாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து போய்விட்டார் கமலாகர்.அவரது தம்பிகள் இருவரும் இதற்காக அவரைப் பழித்ததோடு மட்டுமல்லாமல்,தங்கள் பங்குச் சொத்தைப் பிரித்துத் தரும்படியும் அவரை வற்புறுத்தத் தொடங்கியிருந்தனர்.தன்னிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்சப் பொருளையும் பங்கு போட்டு இழந்து விட மனம் வராத கமலாகர்,அவர்களது கோரிக்கைக்குப் பணிந்து கொடுக்க மறுத்து விட்டார்.காவல்துறையோடு ஏதோ இரகசிய ஒப்பந்தம் செய்தபடி,பொய் சாட்சிகளை உருவாக்கிக் கொண்ட அவரது சகோதரர்கள் சொத்துத் தகராறு காரணமாக அவர் தங்களை அடித்து விட்டதாக ஒரு பொய்ப் புகாரை அளித்தனர்.அதன் அடிப்படையில் போலீசர்ர் ஒரு நாள் இரவு முழுவதும் கமலாகரை லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.நிலைமை இந்த எல்லை வரை செல்லக் கூடும் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத தயானந்தாவும்,அவனது தாயும் அந்த இரவுப் பொழுதை மிகுந்த கவலையோடு கழிக்க நேர்ந்தது.
மறுநாள் காலையில் வழக்கறிஞர் நாயக்கின் வீட்டை நோக்கி விரைந்த அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவர்,தயானந்தா மூலம் ஜாமீன் வாங்கித் தந்து கமலாகர் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
சகோதரர்களுக்கு இடையிலான சச்சரவில் இப்பொழுது சிக்கிக் கொண்டான் தயானந்தா.
அந்த நகரத்திலிருந்த பெரிய மனிதர்கள் பலரும் சமாதானமாகப் போகுமாறு கமலாகரின் தம்பிகளுக்கு ஆலோசனையளித்தனர்.
''எது சரி..எது தப்புன்னு கோர்ட்டே முடிவு பண்ணிக்கட்டும்''
என்று கூறிய அந்தச் சகோரர்கள் அந்த அறிவுரைகளைப் புறந்தள்ளி விட்டனர்.அவர்களது கொடூரமான மனப்போக்கைப் பார்த்து ஆவேசமடைந்தான் தயானந்தா.
''உங்களை நாங்க அடிச்சதாப் புகார் கொடுத்தீங்களே…உண்மையிலே அப்படியா நடந்தது..சொல்லுங்க!''
என்று உரக்கச் சத்தமிட்டபடி,ஒரு விறகுக் கட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு தன் சித்தப்பா ஒருவரின் மீது பாய்வதற்குக் கூடத் துணிந்து விட்டான் அவன்.
நிலைமை கை மீறிப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்ததாலும்,காவல்துறையோடு போராடி அலுத்துப் போய்விட்டதாலும் நொந்து போய்க் கிடந்த கமலாகர் வேறு வழியின்றி, மூன்று பகுதிகளாகத் தன் சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சம்மதித்து விட்டார்.
'கமலாகர் குல்கர்னி இல்லம்'என்ற அஞ்சல் முகவரியோடு இது வரை இருந்த அந்த இல்லம்.,இப்போது'குல்கர்னி காம்பவுண்ட்'என்பதாக மாறிப் போயிற்று.
வீட்டைத் தனக்குரியதாக வைத்துக் கொண்டு,அதைச் சுற்றியிருந்த திறந்த வெளியைத் தன் சகோதரர்களுக்குக் கொடுத்து விட்டார்கமலாகர். அந்த இடத்தில் அவர்கள் சிறியதாக வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.அதற்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்வதில் கூடக் கமலாகர் ஆர்வம் காட்டவில்லை;அந்த அளவுக்கு முழுமையாக உடைந்து நொறுங்கிப் போயிருந்தார் அவர்.
தனது தேங்காய் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த கமலாகரை விட்டேற்றியான ஒரு மனோபாவம் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது.இவ்வாறு எல்லாக் காரணங்களும் ஒன்றாகச் சேர்ந்து போனதால் அவரது ஒரே மகனான தயானந்தாவே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.
-2-
பி.ஏ.,தேர்வில் தோல்வியடைந்து விட்டானே தவிர , தயானந்தா அப்படி ஒன்றும் எதற்கும் உபயோகமற்றவனாக ஆகி விடவில்லை.தேங்காய் வியாபாரத்தால் மட்டுமே தங்கள் குடும்ப நிலைமை உயர்ந்து விட்ப்போவதில்லை என்பது, தனது தந்தைக்கு முன்பாகவே அவனுக்குப் புரிந்து விட்டிருந்தது.;அதனாலேயே வருவாயைப் பெருக்கும் ஒரு உப தொழிலாகப் பதநீர் விற்பனையையும் அவன் தொடங்கியிருந்தான்.ஒரு பானை நிறையப் பதநீரை நிரப்பிக் கொள்வதற்காகப் பதநீர் இறக்கும் இடத்திற்குப் பொழுது விடிவதற்கு முன்பாகவே தன் சைக்கிளில் போய்விடுவான் தயானந்தா.பானையைத் தன் சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டிக் கொண்டு,அதை விற்பனை செய்வதற்காக நெடுஞ்சாலைக்கு அருகே செல்வான்.பதநீர் விற்பனை என்பது,அத்தனை கௌரவமான ஒரு வேலையாகக் கருதப்படாததால் காலை ஏழு மணிக்குள் அதை முடித்துவிடுவது அவனுக்கு வசதியாக இருந்தது.
'இங்கே பதநீர் விற்கப்படும்'என்ற பெயர்ப்பலகையோடு தன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருப்பான் அவன்.அவனிடமிருந்த சரக்கு முழுவதும் விற்பனையாவதற்கு,அந்த வழியாக ஐந்து,ஆறு கார்கள் போனாலே போதுமானதாக இருந்தது.சில நேரங்களில் தன் வாடிக்கையாளர்களின் முகங்களை நோட்டம் விட்டபடி,விலையைக் கொஞ்சம் கூட்டிச் சொல்லிச் சற்றுக் கூடுதான பணத்தைக் கூட அவனால் சம்பாதிக்க முடிந்தது.
ஒரு நாள் அதிகாலை வேளையில் பதநீரை விற்றுவிட்டு தயானந்தா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,கார்வாரிலிருந்து வந்து கொண்டிருந்த கார் மூலம் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது.தனது சைக்கிளில் இளநீர்க் காய்களைக் கட்டி வைத்தபடி வந்து கொண்டிருந்த ஒரு நபரின் மீது கார் மோதி அவன் கீழே விழுந்து விட்டான்;அவனது பின்புறமாக வந்து கொண்டிருந்த கார் சற்றுத் திரும்பும்போது அவன் மீது மோதியிருந்தது.
காருக்கடியில் அகப்பட்டு அவன் நசுங்கிப் போய்விடவில்லை என்றபோதும் அவனுக்குக் காயம் பட்டு விட்டது.
அவனுக்கு உடனடியாக உதவி செய்ய விரைந்தான் தயானந்தா.அந்தக் காரில் இருந்த வயதான தம்பதிகள்,கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள்;தங்கள் மகனுடனும்,மருமகளுடனும் அவர்கள் கோவாவிலிருந்து மங்களூருக்குச் சென்று கொண்டிருந்தார்கள .தரையில் சிதறிக் கிடந்த தேங்காய்களைத் தயானந்தாவின் உதவியுடன் ஒன்றுதிரட்டிச் சேகரித்தத அவர்கள்,அடிபட்ட மனிதனுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அரசு மருத்துவ மனைக்கு விரைந்தனர்.அது ஒரு விபத்தாகப் போய்விட்டதால்,மருத்துவ மனை நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுக்க,அவர்களும் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்தனர்.தன்னுடைய சைக்கிளைத் திரும்ப எடுத்துக் கொள்வதற்காகத் தான் பதநீர் விற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து,தயானந்தா வீடு திரும்பும்போது உச்சிப் பொழுதாகி விட்டது.
அன்று மாலையே வேறொரு வேலைக்காக தயானந்தா அந்த மருத்துவ மனைக்கு மீண்டும் செல்ல வேண்டியிருந்தது.ஏதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவனாக,அந்த இளநீர்க்காரன் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதற்குப் போனான் அவன்;ஒரு சில காயங்களால் சிறிது இரத்தசேதம் ஏற்பட்டிருந்ததைத் தவிர – மற்றபடி நன்றாகவே இருந்தான் அவன்.வேண்டுமென்றே ஒரு பதட்டத்தையும்,பயத்தையும் ஏற்படுத்துவதற்காக அவன் மருத்துவ மனையின் கண்காணிப்பில் இருந்தாக வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.
அந்த வயதான தம்பதியரும் அவர்களது மருமகளும் – அன்று பகல் முழுவதும் போலீஸ் கெடுபிடிகளைத் தாங்கிக் கொண்டு,ஒன்றும் சாப்பிடாமல் கூட அங்கே இருந்த கோலத்தைப் பார்த்துத் தயானந்தாவுக்குப் பரிதாபமாக இருந்தது.காரை ஓட்டியது அவர்களது மகன் என்பதால் காவலர்கள் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.அந்த மனிதர்களுக்கு மராத்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் சரியாகப் பேசத் தெரியவில்லை.தாங்கள் கோலாப்பூருக்குத் திரும்பிச் சென்ற பிறகு,காயம்பட்ட அந்த மனிதனுக்குத் தேவையான பணத்தை அனுப்பி வைப்பதோடு-அவசியம் ஏற்பட்டால் நல்லதொரு மருத்துவ மனைக்கு அவனை மாற்றித் தகுந்த சிகிச்சையளிப்பதாகவும் வாக்களித்தபடி,தங்கள் மகனை விடுதலை செய்யுமாறு அவர்கள் மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் நிலையைப் பார்த்து இரக்கம் கொண்ட தயானந்தா,வழக்கறிஞர் நாயக்கின் வீட்டுக்குச் சென்று,அவரையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றான்.வக்கீலின் ஆலோசனைப்படி அந்த இளைஞனுக்கு ஜாமீன் தந்து அவன் விடுவிக்கப்படவும் உதவினான்.போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம்..எளிதில் புரிந்து கொள்ள முடியாத சட்ட நுணுக்கங்கள் தொடர்பான கடினமான பல சொற்களைப் பயன்படுத்திக் கச்சிதமாக விடையளித்தார் வழக்கறிஞர்.குறிப்பிட்ட இந்த வழக்கில் நிறையப் பணம் கறந்து விடலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்த போலீசாருக்கு இது மிகவும் ஆத்திரமூட்டியது.
''ஜாமீன் கொடுக்கிறதுன்னா என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்..அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..''
என்று அந்த இளைஞனை விடுதலை செய்யும்போது தயானந்தாவிடம் எச்சரிக்கை செய்தார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.
ஏதோ ஒரு கணம் ஏற்பட்ட அசட்டுத் தைரியத்தில் அந்த விபத்தின் பாரம் முழுவதையும் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு விட்டோமோ என்று அப்போது சற்று யோசித்தான் தயானந்தா.
தங்கள் மகனைப் பார்த்த சந்தோஷத்தில் இருந்த அந்த முதிய தம்பதியர் நன்றிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.
தாங்கள் வாக்களித்தபடியே – இரண்டே நாட்களில்,மேலும் மூன்று பேரையும்,ஒரு வக்கீலையும் அழைத்துக் கொண்டு அவர்கள் திரும்பி வந்து விட்டனர்.அந்த இளநீர்க்காரனும் நன்கு தேறிக் கொண்டிருந்தான்.அவனுக்கு ஒரு கணிசமான தொகையை அவர்கள் வழங்கினர்.போலீசுக்கும் கூட அவர்கள் ஏதாவது கையூட்டு தந்திருக்கக் கூடும்.எப்படியோ அந்த வழக்கு சிக்கலின்றி நல்லபடியாக முடிவடைந்து விட்டது.அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு தயானந்தாவின் கடைக்கு வந்த அந்த மனிதர்கள்,அவனிடம் ஒரு 'கவ'ரைக் கொடுத்தனர்.அதில் பணம் இருக்கலாம் என்பதை ஊகித்து விட்ட தயானந்தா அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தான்.
''அந்த சாமியே நேரிலே வந்தாப்பிலே நீங்க வந்து தலையிட்டு எங்க மானத்தைக் காப்பாத்தினீங்க..''
என்றபடி அதை அவன் கட்டாயம் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து அவனை வற்புறுத்தினர்.
வீடு திரும்பி அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்த தயானந்தா அதற்குள் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று இருப்பதைக் கண்டான்;வேறு எவரிடமும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல் தானே அதை வைத்துக் கொண்டான் அவன்.
தானாக முன் வந்து செய்த ஒரு உதவி,இவ்வாறு பணத்தால் அளக்கப்படுவது அவனுக்கு இலேசான மனத் தாங்கலை அளித்தாலும்,அப்போது அவன் இருந்த மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகவும்,பணத்தைச் சம்பாதிப்பதற்குப் பலவகையான வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டிய போராட்டத்தில் தான் இருந்ததாலும் அந்த அன்பளிப்பை வாங்கிக் கொண்டதில் தவறில்லை என்று தனக்குள் சமரசம் செய்து கொண்டான் அவன்.எதிர்பாராமல் அவனுக்குக் கிடைத்த அந்தப் பரிசுத் தொகை,அவனது தேங்காய்க் கடையின் கொள்முதலை அதிகரித்துக் கொள்வதற்குப் பயன்பட்டது.ஆனாலும் கூட இப்படிப்பட்ட சின்னச் சின்ன வரும்படிகளால் தயானந்தாவின் வருமானம் பெருமளவில் அதிகரித்து விடவில்லை;அதனால் அவன் இன்னும் கூடப் பதநீர் விற்றுக் கொண்டுதான் இருந்தான்.
அந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் சென்ற பிறகு,முன்பு தயானந்தாவுடன் ஒன்றாகப் படித்திருந்த பள்ளித் தோழனான உமேஷ்,காவல்துறைப் பணியில் சேர்ந்தான்.தயானந்தாவுக்கு இது பற்றித் தெரிய வந்தபோது முந்தைய ஞாபகம் ஒன்று அவனது மனதுக்குள் மீண்டு வந்தது.பதநீர் வியாபாரத்தால் அதிகம் சம்பாதிப்பது என்பது தயானந்தாவால் முடியக்கூடிய காரியமாக இல்லை.மிகுந்த யோசனைக்குப் பிறகு உமேஷை நாடிச் சென்ற தயானந்தா,தன் உள்ளத்திலிருப்பதையெல்லாம் திறந்து காட்டினான்.உமேஷ் அனுபவமில்லாத ஒரு போலீஸ்காரன் என்பதால் ஒரு 'வாடிக்கையாள'ரைக் கூட்டிக் கொண்டு வர அவனுக்கு ஆறு மாதம் பிடித்தது.விபசார விடுதி ஒன்றில் நடந்த காவல் துறை 'ரெய்'டின்போது அதில் மாட்டிக் கொண்ட வங்கி அலுவலரான அந்த நபர்,கும்தாவைச் சேர்ந்தவர்.உமேஷுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற தயானந்தா இருநூறு ரூபாய் ஜாமீன் தந்து அந்த ஆளை மீட்டுக் கொண்டு வந்தான்.அந்தத் தொகையில் ஐம்பது ரூபாய் உமேஷுக்கும்,மற்றொரு ஐம்பது ரூபாய் சப் இன்ஸ்பெக்டருக்கும் போய்ச் சேர்ந்தது.வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்கும் லாபகரமான ஒரு வியாபாரத்தைத் தயானந்தா தொடங்கியது இப்படித்தான்.
-3-
அந்த வியாபாரத்தின் ஆரம்பக் கட்டத்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு ஜாமீன் தருவதற்கு தயானந்தா மிகவும் பயந்து கொண்டிருந்தான்;ஆனால் அவனுக்குத் தெரிந்த மனிதர்களுக்கோ ஜாமீன் தேவையாக இல்லை.கார்வார் நகரும் அதன் சுற்றுப் புறங்களும் எவ்வளவு பெரியதாய் இருந்தனவோ அதே அளவுக்கு அங்கே நடக்கும் குற்றங்களும் பெரிதாகவே இருந்தன.முதலில் தன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பிற மனிதர்களுக்கு ஜாமீன் அளிக்க முன் வந்து கொண்டிருந்தான் தயானந்தா.தொடக்க காலங்களில்,குறிப்பிட்ட அந்தக் குற்றத்தைத் தானே செய்வது போன்ற உணர்வே அவனைப் பீடித்திருந்தது.கோலாப்பூரிலிருந்து வந்த மனிதர்களுக்கு அவன் ஜாமீன் தர முன் வந்த நேரத்தில் ''அவன் மட்டும் தலை மறைவாப் போனான்னு வச்சுக்கோ..அப்புறம் உன்னை ஜெயிலிலே போட்டு அடைச்சிடுவேன்..''என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் செய்திருந்த எச்சரிக்கை அவனது உள்ளத்தில் ஆழமாகப்பதிவாகியிருந்தது.ஆனாலும் தான் ஒன்றும் எந்த வகையான சட்ட மீறலையும் செய்து விடவில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.
இந்த பேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது போலீசாருடனான நட்பு;அதன் மூலம் அவன் பலதரப்பட்ட குற்றங்களைப்பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முடிந்தது.சொந்த சகோதரர்களையே கழுத்தறுத்தவர்கள், மனைவிகளைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட கணவர்கள்,வீட்டு வேலைக்காரிகளைக் கர்ப்பவதிகளாக்கிய எஜமானர்கள்,விபசார விடுதிகளில் நடந்த சோதனைகளில்பிடிபட்டவர்கள்,வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் என்று பல்வேறு வகையான மனிதர்களுக்கு அவன் ஜாமீன் அளித்து வந்தான்.தனது தொழில் மூலம் பெற்ற தொடர்புகளால் வெவ்வேறு வகையான குற்றங்களையும்,குற்றவாளிகளையும் அவன் எதிர்ப்பட நேர்ந்தது.முதன் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகள் – அதனுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள்,ஜாமீன் தருவது போன்ற எதைப் பற்றியும் தெரிந்திருப்பதில்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.அவன் மட்டும் நினைத்திருந்தால் அவ்வாறான நபர்களைத் தன்னால் முடிந்த அளவு ஏமாற்றிப் பணம் பறித்திருக்க முடியும்தான்;ஆனால் தன்னாலும் கூட இப்படிப்பட்ட தவறுகளைச் செய்ய முடியும் என அவனது மனதுக்குள் இருந்த மெல்லிய கீற்றுப் போன்ற ஒரு எண்ணம்,அவர்களது நிராதரவான நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியாதபடி அவனைத் தடுத்து விட்டது.நாளாக ஆக,இந்த விளையாட்டில் கரை கண்டவனாக மாறிவிட்ட தயானந்தா,தான் ஜாமீன் தரும் நபர்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டவர்கள் குறித்த எல்லா விவரங்களையும் தோண்டித் துருவிப் பார்க்கும் பொறுமையைக் கூட இழந்தவனாக ஆகிப் போனான்.
போலீசாருடன் நட்புக் கொண்டிருப்பது மட்டுமே போதாது என்பதை உணர்ந்து கொண்ட பிறகு,வக்கீல் நாயக்குடனும் நல்ல பழக்கம் வைத்துக் கொள்ளத் தொடங்கிய தயானந்தா,பெரும்பாலான தனது நேரத்தைக் கோர்ட்டிலும்,போலீஸ் ஸ்டேஷனிலும் மட்டுமே செலவழித்து வந்தான்.கடையில் இருக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது என்பதால் மாலை வேளைகளில் கொஞ்ச நேரம் மட்டுமே அங்கே இருப்பான் அவன்.எந்த வழக்கிலும் தான் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்ற அவனது விருப்பம், சட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு அவனைத் தூண்டியது.இதனால் அவனும்,வழக்கறிஞர் நாயக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டிருந்தனர்.ஜாமீனளிக்கும் வியாபாரம் மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக மாறிப் போய்விட்டதால்,வக்கீலுக்கும் அதில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது.வக்கீல்,போலீஸ்-இவர்களுடனேயே தொடர்ச்சியாகப் பழக நேர்ந்ததால் சட்டம் தொடபான அனைத்து விஷயங்களும் அவனுக்கு அத்துப்படியாகிவிட்டிருந்தன.
தான் எடுத்துக் கொள்ளும் வழக்கின் முடிவு வரை அதைத் தொடர்ந்து அவதானிப்பவன் தயானந்தா.அது,அவனுக்கு ஒரு பழக்கமாக-சுவாரசியமான ஒரு விளையாட்டாகவே ஆகிப் போயிற்று. ஒரு குற்றம் சார்ந்த தகவல்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அதற்கான தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை அவனால் முன்கூட்டியே சொல்லி விட முடியும்.ஆனால்,கடத்தல்காரர்களுக்கு ஜாமீன் தர முற்பட வேண்டாம் என்று வக்கீல் நாயக் கூறியிருந்த ஆலோசனையை மட்டும் அவன் ஒருபோதும் மீறியதே இல்லை.எல்லா விஷங்களையும் சட்டத்தின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்து பார்ப்பதிலேயே அவனது கவனம் முழுவதும் குவிந்திருந்தது.குறிப்பிட்ட சில வழக்குகளைப் பொறுத்தவரை,மறைவான சில சந்துபொந்துகளை,எவருக்கும் தெரியாத குறுக்கு வழிகளைக் கண்டு பிடித்து இரகசியமாகத் தப்பித்துச் செல்லும் முறைகளைப் பற்றிக் கூட அவன் தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்தான்.இவ்வாறு சட்டம் பற்றிய யோசனைகளே அவனது மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால்,குற்றம் சார்ந்த பிற தகவல்கள் பற்றிய பயமும்,கவலைகளும் இப்போது அவனை விட்டுப் போய் விட்டிருந்தன.தன்னிடம் வருபவர்களின் குற்றங்களுக்கும்,கொடூரச் செயல்களுக்கும் எப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கக் கூடும் என்பதைக் கூட வரையறுத்துச் சொல்லத் தொடங்கியிருந்தான் அவன்.
குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் செய்திருக்க முடியுமே என்று ஆச்சரியப்படும் எல்லை வரைக்கும் கூட அவன் சென்று விட்டிருந்தான்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜாமீன் தரும்போது
''என் கிட்டே நீ ஏன் இதைப் பத்திக் கேக்கலை? நீ மட்டும் அந்த மாதிரி நடந்திருந்தா இந்த உலகத்திலே இருக்கிற எந்தச் சட்டத்தாலேயும் உன்னை வளைச்சுப் பிடிச்சிருக்க முடியாது.''என்பான் அவன்.
சரி எது,தவறு எது என்ற முடிவுகள்,குறிப்பிட்ட வழக்குகளோடு பொருத்திப் பார்த்து மறுவரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்பதால் அவ்வப்போது சட்டங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றியும் அவன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான்.
''நீ சட்டப் பரீட்சை மட்டும் எழுதிப் பாஸாகலை..அவ்வளவுதான்.மத்தபடி எந்த வக்கீலுக்கும் சளைச்சவன் இல்லைப்பா நீ''என்று வழக்கறிஞர் நாயக் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.
மாதத்தில் ஐந்து,ஆறு பேருக்கு ஜாமீன் தந்தாலும் கூட தயானந்தாவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.அந்த ஊரிலிருந்தவர்கள் தனக்கு 'ஜாமீன் சாஹேப்'என்று பெயர் சூட்டியிருப்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது;அதைத் தன்னால் எந்த வகையிலும் மறுத்துப் பேச முடியாமலிருந்தது அவனுக்கு வருத்தமளித்தது.அவனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதும் கூட சுவாரசியமான ஒரு கதைதான்.தயானந்தா ஜாமீன் தர ஆரம்பித்திருந்த புதிதில்-அந்தத் தொடக்க காலகட்டத்தில்,ரானே என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார்.ஒரு நாள் சாயங்கால வேளையில்,தன் கால்களை விரித்து நீட்டிக் கொண்டு,போண்டாவை மென்றபடி தேநீரை உறிஞ்சிக் கொண்டு-வேலையில் புதிதாகச் சேர்ந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவனக் கொடுமைப்படித்தியபடி,தன்னுடைய உலகத்திற்குள் மூழ்கிப் போயிருந்தார் அவர்;சரியாக அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் தயானந்தா.ஸ்டேஷனுக்குள் யாரோ வருவதைப் பார்த்த ரானே,அது யாரென்று கான்ஸ்டபிளிடம் கேட்டார்.தயானந்தாவை முதல் நாள்தான் பார்த்திருந்தபோதும் அவனது பெயர் நினைவுக்கு வராமல் தடுமாறினான் அந்த கான்ஸ்டபிள்.உற்சாகமான ஒரு மனநிலையில் இருந்த அந்த சப் இன்ஸ்பெக்டர்,
''எதுக்காக இப்படித் தட்டுத் தடுமாறிக்கிட்டிருக்கே நீ?அது நம்ம சாஹேப்தானே..?உள்ளே வரச் சொல்லு அவரை''
என்று அவனிடம் ஜோக்கடித்தார்.அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் தயானந்தா.அவனைப் பார்த்ததும்,
''அடேடே வாங்க 'ஜாமீன் சாஹேப்'..வாங்க வாங்க..''
என்று உரக்கக் குரல் கொடுத்தார் அவர். தன்னுடைய ஜோக்கைத் தானே ரசித்து மகிழ்ந்து கொண்டிருப்பவரைப்போலக் காணப்பட்ட அவரைத் திருப்திப்படுத்தும் பாவனையில் மெல்லிதாகப் புன்னகை செய்தான் தயானந்தா.'ஜாமீன் சாஹேப்'என்ற பெயரைத் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் ரானே;அப்படி ஒரு பெயரைத் தான் கண்டு பிடித்து விட்டோமென்பதில் தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.அதற்குப் பிறகு எப்போதும் தயானந்தாவை அந்தப் பெயரை வைத்தே கூப்பிடத் தொடங்கி விட்டார் அவர்.நகரம் முழுவதும் அந்தப் பெயர் பரவ வெகு நாளாகவில்லை.
தயானந்தாவின் குடும்பத்திலிருந்த எவரும் ஒருபோதும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில்லை.அவனது மனைவி சுனந்தாவுக்குக் கூடத் திருமணத்துக்கு முன்பே இது பற்றித் தெரிந்திருந்தது.அவளுக்கு இதில் விருப்பமில்லாதபோதும் இந்தப் பிரச்சினையை எழுப்பிக் கணவனோடு சண்டை போடும் துணிச்சல் அவளிடம் இல்லை.போலீஸ்காரர்களுடன் கொண்ட நட்பும்,வக்கீல்களோடான தொடர்பும் தயானந்தாவைச் சுற்றி வித்தியாசமான ஒரு ஒளிவட்டத்தை உண்டாக்கி விட்டிருந்தன.அதனுடன் கூடவே அவனிடம் பணமும் படிப்படியாகச் சேர ஆரம்பித்திருந்தது.குடும்ப கௌரவம்,மரியாதை என்று அவன் தந்தை சிலவேளைகளில் ஏதாவது முணுமுணுப்பார்;ஆனால் மற்றவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆரம்ப காலத்தில் தொந்தரவு செய்து கொண்டிருந்த மாமாக்களும் கூட,தயானந்தாவின் 'சாதனைக'ளைப் பார்த்த பிறகு மென்மையானவர்களாக மாறிப் போய்விட்டார்கள்.பொதுவாகவே – சமூகத்தை எதிர்கொள்வதென்பது,தன் குடும்ப உறுப்பினர்களுக்குத் தர்மசங்கடம் அளிப்பதாக இருப்பதைக் கண்டு – அது குறித்த மன உளைச்சல் தனக்கு ஏற்படும்போதெல்லாம்,தனது சட்டஞானமும்,போலீசுடனான நெருக்கமும் தன்னைச் சக்தியும்,அதிகாரமும் மிகுந்தவனாக ஆக்கி வைத்திருப்பதை நினைத்தபடி தன்னைச் சமாதானம் செய்து கொள்வான் அவன்.வாய்ப்புக் கிடைத்தால்-தனக்குரிய வரம்புகளையெல்லாம் மீறிக்கூடத் தன் சக்தியை வெளிப்படுத்தி அதை நிரூபித்து விட வேண்டுமென்று அவனுக்குள் குடியிருந்த அதிகார போதை அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.உலகத்தின் பார்வையில் தன் அதிகார பலத்தை எப்படியாவது காட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தான் அவன்.
தூக்கு-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய இடுகையைப் படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வரை நான் அந்த மூவரையும் தூக்கில் போடுவது சரி என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். பின்னர் பேரறிவாளனின் தாயாரின் பேட்டியைப் படித்தேன். அவரது குற்றம் குண்டுக்கு பேட்டரி வாங்கியது என்று தெரிய வந்தது. பேட்டரிக்கு எந்தக் கடையில் பில் தருகிறார்கள் என்ற அவரது தாயாரின் கேள்வி நியாயமானதாகவே இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக ஒரு நிரபராதியை தண்டிப்பதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. பலரது எண்ணமும் அதுவாகவே இருக்கும்.
இந்த வகையில் திரு. ராம்ஜெத்மலானியின் ஒரு பேட்டியை நினைவுகூர்கிறேன் – இந்திரா கொலை வழக்கைப் பற்றி. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு ஆதரவாக ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் வாதாடி இரண்டு பேர் குற்றமற்றவர்கள் என நிரூபித்து விடுதலையே வாங்கித் தந்தார். இதனால் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மத்தியில் அவருக்குக் கொலையாளிகளின் ஆதரவாளர் என்ற பெயரே இருந்தது/இருக்கிறது. ஆனால் அந்த பேட்டியில் அவர் அதைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அந்த இருவரைக் காப்பாற்றியதைத் தன் வாழ்நாள் சாதனை என்றே கருதுவதாக அவர் கூறினார். பின்னர் அவர் கூறியது என்னை சிந்திக்க வைத்தது; அந்த மூன்றாவது நபரைக் காப்பாற்றமுடியவில்லை அவர் தூக்கிலிடப்பட்டார்,ஆனால் அவரும் குற்றமற்றவரே என்றார். பொதுவாக இத்தனை வருடங்களுக்குப் பின் ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்காகப் பேசுவதில்லை, அவர் இறந்தபின் அதற்கு அவசியமும் இல்லை. அவர் பேசியது எனது மனசாட்சியைச் சிறிது உறுத்தியது. அவர் கூறியது உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
இதே கண்ணாடி வழியாகப் பார்க்கையில் பேரறிவாளன் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் என்னை அவரது தூக்குக்கு எதிராக ஒரு நிலையை எடுக்க வைத்தது. உங்களது இடுகையைப் படித்தபின் மற்ற இருவர் குற்றம் செய்தவர்களாகவே இருந்தாலும் மனிதாபிமானப்படி 20 வருட மன வலியின் பின் வாழ அனுமதிக்கப்படவேண்டியவர்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இது போக மக்களாட்சி மற்றும் நீதியின் ஆட்சி நிலைபெற்ற ஒரு நாட்டில் ஒரு குற்றத்துக்கு தண்டனை என்பது அந்தக் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்தே இருக்கமுடியும். கொலையில் இந்த மூவரின் பங்களிப்பு(சிபிஐ தரப்பின்படியே) சிறியது,ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் அளவு மிகப்பெரியது. இதே வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தின் முன் வந்தால் அவர்கள் தூக்கிலிருந்து தப்பிக்கக்கூடும் என்றே கருதுகிறேன். ஏனெனில் இன்று அது இந்திய சமூகத்தின் நினைவில் இருந்து பெரும்பாலும் அகன்றுவிட்ட ஒரு நிகழ்வு. உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை என்பது முதல் படி.
அதே சமயம் இந்த வழக்கோடு அஃப்ஜல் குரு வழக்கும் பின்னிப்பிணைந்து கொண்டிருக்கிறது. இம்மூவரும் மன்னிக்கப்பட்டால் அஃப்ஜல் குருவும் இதே காரணத்தைக் காட்டி தூக்கிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம் என்பதால் பலர் இதை எதிர்க்கின்றனர். என்னுடைய கேள்வி – இந்த காரணத்தால் அஃப்ஜல் குரு விடுதலை செய்யப்பட்டால்தான் என்ன என்பது தான். அஃப்ஜல் குரு தப்பிக்கக்கூடும் என்பதற்காக இந்த மூவரும் சாக வேண்டுமா?
மற்றபடி தூக்குதண்டனை என்பது மிகக் கொடிய கொலைக் குற்றங்களுக்கு எதிராக ஒரு 'deterrent' ஆக சட்டத்தில் இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன். ஆனால் அதை செயல்படுத்துவது 'rarest of the rare case' களில், குற்றம் சாட்டப்பட்டவரின் பங்களிப்பைப் பொறுத்தே இருக்க வேண்டும்.
அன்புடன்,
சண்முகம்
அன்புள்ள சண்முகம்
தூக்கு தண்டனைக்கு எதிரான குரல்கள் எப்போதுமே மதம், அரசியல் சார்ந்த குழுப்பின்னணி கொண்ட குற்றவாளிகள் தூக்கிலிடும்போதே எழுந்து வருகின்றன. பிறர் மௌனமாக செத்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் இவ்வாறு மனிதாபிமானம் பேசுபவர்கள்மேல் நம்பிக்கை கொள்ளாமலிருக்க இதுவே காரணம். அரசியலற்ற அவர்களில் ஒருவர் தவறாக தண்டிக்கப்பட்டால், காவல்துறையால் கொடுமைக்குள்ளானால் , இந்த அரசியல்வாதிகள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என அவர்கள் அறிவார்கள்
ஜெ
September 6, 2011
நம் அறிவியல்- கடிதம்
அன்புள்ள ஜெ,
நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது.
வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது, ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத் தெரிய வந்தது. சூடுபட்டு விழித்துக் கொண்டோம். 2000 ம் ஆண்டில் வேம்பு வழக்கில் பழைய ஆயுர்வேத நூல்களின் பல சம்ஸ்கிருத சுலோகங்களை மேற்கோள் காட்டி இந்தியா வென்றது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் பாரம்பரிய அறிவியலைப் பாதுகாக்க அப்போதைய பா.ஜ.க அரசு நீண்ட காலத் தொலை நோக்குத் திட்டத்துடன் TKDL (Tranditional knowledge Digital library) என்னும் அற்புதமான தகவல் களஞ்சியத்தைப் பல்துறை அறிஞர்களின் உதவி கொண்டு உருவாக்கியது. வெறும் 10 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தத் தகவல் களஞ்சியம் அதன் பிறகு வந்த பல வழக்குகளில் சீன, மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மருத்துவ அறிவைத் திருடுவதைத் தடுத்தி நிறுத்திப் பாதுகாப்பளித்தது.
இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய டாக்டர் முரளி மனோகர் ஜோஷி கல்வியைக் காவிமயமாக்குவதாக நமது ஊடகங்களாலும், காங்கிரஸ், இடது கட்சிகளாலும் கடுமையாக வசைபாடப் பட்டார். பொட்டு வைத்த அவரது தோற்றத்தை ஜோசியர் என்று கேலி செய்தார்கள். டாக்டர் ஜோஷி நிறப்பிரிகை தொடர்பான இயற்பியல் ஆய்வுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதைக் கூட வசதியாக மறந்தும், மறைத்தும் விட்டார்கள்.
TKDL பற்றி அ.நீ எழுதிய கட்டுரை இங்கே - http://www.tamilpaper.net/?p=525
இதே போல யோகாசனங்களுக்குக் காப்புரிமை பெற முயன்ற பல மேற்கத்திய கம்பெனிகளின் சமீபத்திய முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப் பட்டன. யோகாசனம் ஏதோ பூச்சாண்டி வேலை அல்ல, முறையாக ஆவணப்படுத்தப் பட்ட பாரம்பரிய இந்து அறிவியல் என்ற விஷயம் உலக அளவில் ஓரளவு இப்போது புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் யோகாசனங்கள் குறித்து ஏற்பட்டிருக்கும் பரந்துபட்ட விழிப்புணர்வும் இதற்கு ஒரு காரணம். யோகத்தை மக்கள் இயக்கமாக வெகுஜன அளவில் பிரலபப் படுத்திய பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ, ஜக்கி மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கும் இதற்காக நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு,
யோகக்கலையை அப்படி சர்வதேச கவனத்துக்குக் கொண்டுசென்றவர் பி.கெ.எஸ்.ஐயங்கார். ராஜயோகத்தைப்பற்றிய முதல் விழிப்பை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர். அந்த முன்னோடிகளிடம் இருந்து அந்த அலை ஆரம்பிக்கிறது. மகேஷ் யோகிக்குப் பின் அதில் வணிகரீதியான பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகமாகியது. அதில் பல இழப்புகள். ஆனாலும் யோகா பிரபலமாக அதுவே காரணம்.
ஜெ
அன்புள்ள ஜெ,
இந்திய அறிவியல் எங்கே ? என்ற தங்கள் பதிவு கண்டேன்.
நல்ல விளக்கம். பழமை என்ற ஒற்றைச் சொல்லால் ஒட்டு மொத்த சிந்தனை மரபையும் ஒதுக்கிவிடும் போக்கு இன்று இருப்பது வேதனையளிக்கிறது.நீங்கள் குறிப்பிடும் இரண்டு நேர் எதிரான மனப்பாங்கும் எங்கள் மருத்துவத்துறையில் காணலாம்.ஒரு புறம் இந்திய மருத்துவம் என்றாலே அறிவியலுக்குப் புரம்பானது,ஆதாரமற்றது, காட்டு மிராண்டித்தனமானது என்று நினைத்து ஒதுக்கும் நவீன மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள்.இன்னொரு துருவமாக இந்திய மருத்துவத்தில் கான்சரில் இருந்து எயிட்ஸ் வரை எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது என்று கிளப்பிவிடுபவர்கள் இருக்கின்றனர். இடைநிலையில் இரண்டுக்குமான ஒரு உரையாடல் நடப்பது பகற்கனவாகவே இருக்கிறது.
தற்செயலாகக் கிடைத்த வீடியோ . பிள்ளையார் சதுர்த்தி அன்று அனுப்புவது பொருத்தமாக இருக்கிறது. நமது தொன்மையை எளிதில் புறந்தள்ளுவது அறிவான செயலாக இராது .
http://www.youtube.com/watch?v=U9zqRsdYyFA
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அன்புடன்
Dr.ராமானுஜம்
யோகமும் கிறித்தவமும்
அன்பின் ஜெ.எம்.,
யோகக் கலை பற்றிய தவறான கிறித்துவப் பார்வை ஒன்றை இன்று தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.
மனம் வருந்துகிறது.
அத்வைதத் தத்துவத்தை இதை விட அவலமாக்கி விட முடியாது…
அந்த ஆற்றாமையை உங்களுடன் பகிர விழைகிறேன்.
இனி..அந்தப் பதிவு..
யோகா – ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் -
எம்.ஏ.சுசீலா

அன்புள்ள சுசீலா,
அந்தக் கட்டுரை வாசித்தேன். கிறித்தவ நோக்கில் அது சரியான கட்டுரைதான்.
யோகம் என்பது ஒரு வெறும் பயிற்சி அல்ல. அதன் பின் ஒரு விரிவான தத்துவம் உள்ளது, அதை வேறு மதங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற அவசியம் உண்டா என்ன?
முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி காண்பதெல்லாம் கடவுள் தான். இறைவன் ஒரு ஆள்தத்துவத்தோடு இல்லாமல் ஒரு ஆன்மீகப் பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது வார்த்தையினால் படைத்த ஆள்தத்துவமுள்ள ஒருவரே எனத் தெளிவாய்க் கூறுகிறது.
என அந்த ஆசிரியர் மிக சிறப்பாகவே அந்த வேறுபாட்டைச் சொல்கிறார்.
நாம் இன்று கடைப்பிடிக்கும் சேஸ்வர யோகம் கூறும் ஞானம் என்னவென்றால் இந்தப் பிரபஞ்சமும் பரம்பொருளும் வேறு வேறல்ல என்பதே. பரம்பொருள் என்பது நம் ஞானத்துக்கு அப்பாற்பட்ட ஓர் அறியமுடியாமை மட்டுமே. அதை அதன் வடிவமாக நம்மைச்சூழ்ந்துள்ள முடிவிலா பெருவெளியும் முடிவிலா விண்ணகங்களும் நிறைந்த பிரபஞ்சமாகவே காணமுடியும், அறியமுடியும். பிரபஞ்சம் பரம்பொருளின் படைப்பு அல்ல. ஏனென்றால் பரம்பொருள் அன்றி எதுவுமே இல்லை. ஆகவே பிரபஞ்சமும் அதன் சிறுதுளியாகிய நாமும் பரம்பொருளே. நம்மை நாம் முழுதுணர்வது பரம்பொருளை அறிவதே. அதுவே மனிதனுக்குச் சாத்தியமான மெய்ஞ்ஞானம்.
ஆனால் நாம் நம்மை நாமென உணரும்போது பிரபஞ்சத்தைப் பிறிதென உணர்கிறோம். ஆகவே பரம்பொருளில் இருந்து வேறுபடுகிறோம். அந்த பேதபுத்தியே அறியாமை என்பது யோகஞானம். அந்த அறியாமையே துயரம். துயரத்தை வெல்வதே முக்தி. அதற்கு அறியாமையை வெல்லவேண்டும். அறியாமையின் மூலகாரணமாகிய பேதபுத்தியில் இருந்து மீண்டு ஒன்றாதலே யோகம். யோகம் என்றாலே இணைவு என்றே பொருள். அதற்கான வழிமுறைகளைப் பதஞ்சலி முதல் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
கிறித்தவ மரபின்படி இறைவன் படைப்பாளி, இந்த உலகம் படைப்பு [கிறித்தவக் கொள்கைப்படி பிரபஞ்சம் என்ற கருத்தாக்கம் கிடையாது] படைப்பை நிர்வகிப்பவன் இறைவன். கடவுளுக்கு ஆளுமையும், வடிவமும், தனித்த இருப்பும் உண்டு. மனிதன் கடவுளின் அதே வடிவில் படைக்கப்பட்டவன். ஆகவே படைப்புகளில் முதன்மையானவன் அவன். பிற படைப்புகள் அனைத்துமே மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதனுக்குக் கடவுள் தந்தை போன்றவர். அவர் மனிதர்கள் இறந்தபின் சென்று சேரும் பரலோகம் என்னும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு பூமியை நிர்வாகம்செய்கிறார்.
கிறித்தவக் கொள்கையின்படி மனிதன் கடவுளின் ஆதி இச்சையை விட்டு மீறி சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்தான். ஆகவே பாவத்தில் வீழ்ந்தான். அந்தப் பாவத்தை எல்லா மனிதர்களும் கருவிலேயே கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாவத்தை ஒவ்வொருவரும் கழுவிக்கொள்ளவேண்டும். அதற்கான ஒரே வழி கடவுளாகிய பரமபிதாவிடம் முழுமையாகச் சரண் அடைவதும், பாவங்களை அறிக்கையிட்டு மேலும் பாவம்செய்யாமல் வாழ்வதும் மட்டுமே.
கிறித்தவ மரபின்படி பாவத்தின் விளைவாக வரும் துன்பங்களைத் தீர்ப்பதற்காகவும், உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளுக்காகவும் பரமபிதாவிடம் வேண்டிக்கொள்ளுவது மட்டுமே ஒரு கிறித்தவன் செய்யக்கூடிய ஒரே வழிபாட்டுமுறையாகும். தியானம், ஜெபம் போன்ற சொற்களைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவதெல்லாம் 'வேண்டிக்கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் மட்டுமே
ஆகவே அந்தக் கிறித்தவ அறிஞர் அவரது கோணத்தில் சரியாகவே சொல்கிறார். அவர் கொண்டுள்ள மத நம்பிக்கை அது.அவருக்கு சரியான பாதை அதுவே, அவர் அதை நம்பும் வரை.
ஓர் இந்து பிறமதங்களை விமர்சனம்செய்யக்கூடாது, மறுக்கவும்கூடாது. நதிகள் பல கடல் ஒன்றே என்பதே உபநிடத ஞானம்.
ஜெ
September 5, 2011
தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
யூஜின் அயனெஸ்கோ எழுதிய காண்டாமிருகம் என்ற பிரெஞ்சு நாடகம் புகழ்பெற்றது [ Rhinoceros - Eugène Ionesco]. எண்பதுகளில் அந்நாடகத்தின் மலையாளத் தழுவலை நான் திருவனந்தபுரத்தில் மேடையில் முதல் முறையாகப் பார்த்தேன்.பிற்காலத்தில் திரைப்படத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன்குட்டிநாயர் அதில் சிறப்பாக நடித்திருந்தார்.
அதில் ஒரு காட்சி வரும். மேடையில் சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். குடையை இடுக்கி, வேட்டியை மடித்துக்கட்டி, வெற்றிலைபாக்குக்கடை முன்னால் நின்று சாவகாசமாகக் குதப்பியபடி பீடி பிடித்தபடி கேரள கூட்டணி அரசியலை அலசிக்கொண்டிருப்பார்கள். ஒரு பெரிய காண்டாமிருகம் அவர்கள்நடுவே புகுந்து திம்திம் என அந்தப்பக்கமாக செல்லும் .அவர்கள் பேச்சு சுவாரசியத்தில் அதை கவனிக்கவே மாட்டார்கள்.

ஆல்காட்
அதனுடன் ஒப்பிடக்கூடிய அபத்தங்களை நாம் நம் வரலாற்றெழுத்திலே காணலாம். எதையெதையோ பேசிக்கொண்டிருப்பார்கள். நடுவே பிரம்மாண்டமாக ஒன்று கடந்து சென்றிருக்கும், யார் கண்ணிலுமே படாது. அந்த விஷயத்துக்கு மட்டுமாக ஒரு தனி குருட்டுத்தன்மை இருக்கும். அதற்குச் சிறந்த உதாரணம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த தலித் எழுச்சியை தமிழ் வரலாற்றுப்பார்வை அப்படியே கண்மூடித் தாண்டிவந்தது.
சொல்லப்போனால் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் வெகுஜன அரசியல் இயக்கம் என்றே தலித் எழுச்சியைச் சொல்லிவிடமுடியும். சென்னையைச் சுற்றி வாழ்ந்த தலித் மக்களிடையே ஆயிரத்து எண்ணூறுகளின் கடைசியில் உருவானது இந்த விழிப்புணர்ச்சி. அதன் நாயகர்கள் பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள். அந்த எழுச்சி உருவாவதற்கான சமூகக்காரணங்கள், வரலாற்று வாய்ப்புகள் பற்றி எல்லாம் நமக்கு இன்று எதுவுமே தெரியாது. காரணம் கிட்டத்தட்ட நூறு வருடம் இந்த வரலாற்றுநிகழ்வு முழுக்கவே நம் பார்வையில் படாமல் இருந்தது, நமக்கு மறைக்கப்பட்டிருந்தது.
இன்றைக்குக் கூட இந்தமூவரைப்பற்றி விரிவான, முழுமையான ஒரு வாழ்க்கைவரலாறு இல்லை. இந்த அரசியல் அலையைப்பற்றி அறிவதற்கான நல்ல வரலாற்றாய்வு நூல் இல்லை. இப்போதுதான் எழுத்து போன்ற தலித் அமைப்புகளின் முன்முயற்சியால் சிறிய அளவில் அந்நூல்கள் நூறாண்டுக்கால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் அச்சேற ஆரம்பித்துள்ளன. இனி மேலும் நூல்கள் வெளிவரக்கூடும். இந்தத் தளத்தில் சலிக்காமல் சோர்வில்லாமல் பணியாற்றிவரும் அயோத்திதாசர் நடுவம் நண்பர்களான அலெக்ஸ், பாரிசெழியன் ஆகியோரை மனமாரப் பாராட்டுகிறேன்
இவையெல்லாம் ஆதாரநூல்கள். இந்நூல்கள் காட்டும் தகவல்கள் வழியாக ஒரு விவாதம் நிகழ்ந்து அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக நம் வரலாற்றுணர்வு பெருமளவு திருத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்நூல்கள் பொது அறிவுத்தளத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்ற எண்ணம் நண்பர்களுக்கு இருக்கிறது. இந்தவகையான கருத்தரங்குகள் அந்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை. அது நிகழுமென எதிர்பார்ப்போம்.
இந்தியவரலாற்றில் சில ஆச்சரியமான அம்சங்கள் உண்டு. பழையவரலாறு நம் மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்,சமகாலத்துக்கு கொஞ்சம் நெருக்கமான வரலாறைக் கேட்டால் ஒன்றுமே தெரிந்திருக்காது. கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழன் கப்பல் ஓட்டிக்கொண்டு சென்று மெக்ஸிகோவிலே மாயா நாகரீகத்தை உருவாக்கினான் என்று பக்கத்தில் நின்று பார்த்தவர்கள் போல கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் நீ வாழும் நகரத்தை ஆண்டது யார் என்று கேட்டால் தெரியாது
இது நம் பண்பாடாகவே ஆகிவிட்டிருக்கிறது. 'நாங்கள்லாம் காவேரிப்பூம்பட்டினத்திலே இருந்துவந்தவங்க, எங்க குலத்திலே செம்புடையார்னு ஒரு பெரியவர் அந்தக்காலத்திலே குலோத்துங்க சோழன் போருக்கு போறப்ப இவருதான் அவன் வாளை உருவி அவன் கையிலே குடுப்பார்' என்று குலவரலாறு சொல்வார்கள். 'சரி, உங்கள் தாத்தாவுக்கு அப்பா என்ன தொழில் செய்தார்?' என்று கேட்டால் சொல்லத்தெரியாது.
நமக்கு வரலாற்றுணர்வு கிடையாது என்பதை எல்லாருமே சொல்லியிருக்கிறார்கள். அதை நமக்கு நவீனவரலாற்றுணர்வு கிடையாது என்று நான் திருத்திச் சொல்லுவேன். நமக்கு வரலாறு என்பது குலவரலாறு மட்டும்தான். குலப்பெருமையை சொல்வதற்கான வரலாற்றுப்பிரக்ஞை மட்டுமே நம்மிடம் இருக்கிறது. நாம் பண்டைய வரலாற்றுக்குச் செல்வதே அதற்காகத்தான், அங்கே நாம் பெருமையடித்துக்கொள்ள ஒரு தொன்மத்தை நாம் கண்டடைய முடியும்.
இன்றைக்கு நிகழும் வரலாற்றாய்வுகளை நான் கூர்ந்து பார்க்கிறேன். பெரும்பாலான வரலாற்றாய்வுகள் நிரூபணம் சாத்தியமே இல்லாத தளங்களில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. சீனமொழி தமிழில் இருந்து வந்தது, அரேபிய நாகரீகமே தமிழ் நாகரீகம்தான் -இந்தவகையில். அது சீனன் காதிலும் அரேபியன் காதிலும் விழப்போவதில்லை என்ற நம்பிக்கை.
தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் எழுதப்படவேண்டிய ஆய்வுக்களங்களில் செல்லும் ஆய்வாளர்கள் நம்மிடம் மிகமிகக் குறைவு. ஆகவே நாம் சங்ககாலத்துக்கு முன்னால் பார்க்க முயல்கிறோம், பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுவதே இல்லை.
ஓர் உதாரணம் சொல்கிறேன், கட்டபொம்மன் பற்றிய எல்லா மூலஆவணங்களும் நம் ஆவணக்காப்பகங்களில் உள்ளன. அவற்றை சென்று எடுத்து வாசித்துப்பார்த்து ஒரு உண்மையான வரலாறு இன்னும்கூட எழுதப்படவில்லை. கட்டபொம்மன் சினிமாவுக்கு சக்தி கிருஷ்ணசாமி எழுதிய வசனத்தையே வரலாறாகக் கொண்டிருக்கிறோம் நாம்.
ஆகவேதான் ஒருநாள் எனக்கு அலெக்ஸ் இந்நூல்களை அளித்தபோது ஒருவகையான பரவசம் ஏற்பட்டது. இந்நூல்களில் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களும் திருமதி என்.ஏ.கோர்ட்ரைட் அவர்களும் சேர்ந்து எழுதிய 'தலித் மக்களும் கல்வியும்' என்ற சிறிய நூல் ஒரு நேரடி ஆவணம். அது கருத்துக்களை முன்வைக்கக்கூடிய நூல் என்பதைப்பார்க்கிலும் கருத்துக்களுக்கு வந்து சேர்வதற்கான மூல ஆவணம் என்ற வகையில் மிக முக்கியமானது.
நூறாண்டுகளுக்கு முன்னால் சென்னையை ஒட்டி ஒரு வெகுஜன மக்களியக்கம் இயல்பாக உருவாவதற்கான சூழல் அமைந்தது. அதை நான் இப்படி உருவகித்துக்கொள்கிறேன். ஆங்கிலேயர் செறிந்த சென்னையில் அவர்களுக்கு மாட்டிறைச்சி சமைக்கவும் பரிமாறவும்கூடிய சமையற்காரர்கள் தேவைப்பட்டார்கள் இந்தியசாதிகளில் அதை தலித்துக்கள் மட்டுமே செய்யமுடியும் என்பதனால் எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இருளில் கிடந்த தலித்துக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அது அவர்களுக்கு சிறிய பொருளியல்விடுதலையை அளித்தது.
பொருளியல் விடுதலை உடனே கல்வியாக மாறும். தலித்துக்களில் ஒருசாராருக்கு ஏற்கனவே மரபுவழிப்பட்ட கல்விமுறைகள் அவர்கள் சாதிக்குள்ளேயே இருந்தன. கல்வி அவர்களுக்குப் புதியதல்ல. ஆகவே அவர்கள் மிக எளிதாக, ஒரேதலைமுறையில் உயர்கல்வி வரை வந்து சேர்ந்தார்கள். அந்த படித்த தலித் சாதியினர் அன்றைய சமூகச்சூழலில் இருந்த ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஆங்கிலக்கல்வி மூலம் பெற்றுக்கொண்ட நவீன ஜனநாயக விழுமியங்கள் அவர்களுக்கு வழிகாட்டின.
இப்படித்தான் இங்கே நான் முதலில் சுட்டிக்காட்டிய முதல் அரசியல் விழிப்பியக்கம் உருவானது. உண்மையில் இங்கே உருவான பிற அரசியலியக்கங்களுக்கு அதுவே முன்னோடியானது.இங்கே நிகழ்ந்த வெகுஜன அரசியலுக்கு அதுவே தூண்டுகோலானது என்று சொல்லலாம். ஆனால் பிறகு எப்போதோ பிற்பாடு உருவான காங்கிரஸ் இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றால்தான் தமிழகத்தில் தலித் விடுதலைக்கான தொடக்கம் உருவாக்கப்பட்டது என்ற சித்திரம் வரையப்பட்டுவிட்டது.
அதிலும் இன்று, 1925க்குப்பின் உருவம் கொள்ள ஆரம்பித்த திராவிட இயக்கங்களை தலித் விழிப்புணர்ச்சிக்கான முக்கியமான காரணிகளாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினர் விரும்பி ஏற்கும் வரலாற்றுப்பாடமாக அது உள்ளது. அதற்குஎதிரான பாடங்களை புதைத்து அழிக்க நூறாண்டுக்காலமாக அவர்கள் முயன்றுள்ளனர். முன்னோடி தலித் சிந்தனையாளர்கள் வரலாற்றில் மறைந்தது இவ்வாறுதான். தி.பொ.கமலநாதன் அவரது தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் என்ற நூலில் விரிவாக அந்த மோசடியை விளக்கிப்பேசுகிறார்.
மேலே சொன்ன முதல் தமிழ் வெகுஜன இயக்கமான தலித் இயக்கம் நிகழ்வதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக சென்னை அடையாறில் உருவான பிரம்மஞான சங்கமும் அதன் நிறுவனத்தலைவரான கர்னல் ஆல்காட்டும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு சிறிய ஆவணநூல் என்று 'தலித் மக்களும் கல்வியும்' என்ற நூலைச் சொல்லலாம்.

ஆல்காட் ஆரம்பித்த முதல் பஞ்சமர் பள்ளி
உண்மையில் இந்த நூல் ஓர் அறிக்கையும் இரு துண்டுப் பிரசுரங்களும் இணைந்த தொகுப்பு மட்டுமே. ஆல்காட் எழுதிய The Poor paraiyah என்ற சிறு நூலும் கோர்ட்ரைட் எழுதிய How to teach Paraiyah' என்ற சிறு நூலும் அடங்கியது இது. ஆல்காட் ஆரம்பித்த பஞ்சமர் இலவசப்பள்ளி என்ற அமைப்பைப்பற்றிய ஒரு அறிக்கை என இதைச் சொல்லலாம்
இன்றைக்கு ஆல்காட் பள்ளி என்ற பேரில் அடையாறில் இயங்கி வரும் தொன்மையான இந்தப்பள்ளியானது பஞ்சமர் என அழைக்கப்பட்ட தலித் மக்களுக்கு இலவசமாக நல்ல கல்வி அளிக்கும்பொருட்டு ஆல்காட் அவர்களால் 1894ல் ஆரம்பிக்கப்பட்டது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. நம் சமகால வரலாற்றில் புதைந்து போன ஒரு விஷயமாக இது உள்ளது. இந்தப்பள்ளி தமிழகத்தின் தலித் எழுச்சியில் ஆற்றிய பங்கு மிகமிக முக்கியமானது.
ஆல்காட்டின் திட்டம் பிரம்மாண்டமானது. ராஜ்சேகர் பாசு எழுதிய 'நந்தனாரின் குழந்தைகள் ' [ Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 - 1956. Raj Sekhar Basu ] என்ற நூலில் ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தலித் மாணவர்களுக்கு நவீனக் கல்வி அளித்து உயர்நிலைப்பள்ளிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஆல்காட்டுக்கு இருந்தது என்று நாம் காண்கிறோம். 1895ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பஞ்சமர் இலவசப்பள்ளி 55 மாணவர்களுடன் ஆரம்பித்தது. இரண்டு வருடங்களில் 125 மாணவர்களாக வளர்ந்தது.
பல எதிர்மறைச்சூழல்களில் செயல்பட்டது என்பதை நாம் காண்கிறோம். குறிப்பாக பஞ்சங்கள். அவை குழந்தைகள் வேலைசெய்தாகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கின. மேலும் மக்கள்தொகை செறிந்த நகரம் சுகாதாரப்பிரச்சினைகளால் நோய்க்களமாகியது. தொற்றுநோய்களில் குழந்தைகள் இறந்துகொண்டிருந்தன. ஆகவே ஒருகட்டத்தில் பிரம்மஞானசபை ஆசிரியர்கள் குடிசைகள்தோறும் சென்று மாணவர்களைத் திரட்டிப் பள்ளிக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரம்மஞானசபையின் தலித் சேவைகளை விரிவாகப்பேசும் ராஜ்சேகர் பாசுவின் இந்த நூலைத் தமிழாக்கம்செய்வது அவசியம்.
இந்தப் பணிகளுக்குப் பின்புலமாக அமைந்தவர் இப்பள்ளிகளின் பொறுப்பில் இருந்த கல்வியாளரான திருமதி என்.ஏ.கோர்ட்ரைட். இலங்கையில் கல்விச்சேவைசெய்த இந்த அம்மையாரை ஆல்காட் தமிழகத்துக்குக் கொண்டுவந்தார். கிண்டர்கார்ட்டன் வகைக் கல்வியை அவர் அந்த பள்ளிகளில் அறிமுகம்செய்தார். இந்த அம்சத்தை நாம் கொஞ்சம் கவனமாக ஆராயவேண்டும். அக்கால பிரிட்டிஷ் பள்ளிகள் தொன்மையான மதபாடசாலைகளான ஜிம்னேஷியங்களின் அமைப்பு கொண்டவை. ஆரம்பக்கல்வியில் நம் திண்ணைப்பள்ளிக்கூட முறை பின்பற்றப்பட்டது. இந்த முறையில் கடுமையான கண்காணிப்புடன் பள்ளியை நடத்தும் மூத்த ஆசிரியரே பொறுப்பாளர்.
பஞ்சம மாணவர்களுக்கு உடனடியாகக் கல்வியை அளிக்கும் ஒரு அமைப்பை முன்னெடுத்த பிரம்மஞானசங்கம் அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு எங்கே செல்லும்? பஞ்சமர் பள்ளிகளில் பணியாற்ற பஞ்சமர்களையே ஆசிரியர்களாக கண்டுபிடிக்கவேண்டும் இல்லையா? அத்தனை ஆசிரியர்களுக்கு முதல்தலைமுறை நவீனக்கல்வி பெறும் பஞ்சமர்களுக்குள் எங்கே போய் தேடுவார்கள்? ஆகவே என்.ஏ.கோர்ட்ரைட்டின் கிண்டர்கார்ட்டன் கல்விக்கூட முறை பேருதவியாக அமைந்தது. இந்த முறையில் சிலமாதங்கள் மட்டும் அடிப்படைப் பயிற்சி மட்டும் பெற்ற ஒருவர் குழந்தைகளுக்கு விளையாட்டுமூலம் கல்விகற்பிக்கமுடியும். மூத்தமாணவர்கள் குழந்தை மாணவர்களுக்குக் கல்வியளிக்க முடியும்.
என்.ஏ.கோர்ட்ரைட் பஞ்சம மாணவர்களுக்குக் கல்வியளிக்க செய்த சேவைகள் இன்று மறக்கப்பட்டுவிட்டன. மிகமிகக் குறைவாகவே அவரைப்பற்றிய தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. தலித் வரலாறு துளித்துளியாக எழுதப்படும் இந்தக் காலகட்டத்தில் என்றாவது அம்மையாரின் ஒரு நல்ல வரலாறும் எழுதப்படும் என நான் நம்புகிறேன். ஆகவேதான் தலித் மாணவர்களை எப்படிப் பயிற்றுவிக்கவேண்டும் என்ற இந்த கையேட்டை அவர் எழுதியிருக்கிறார். கிண்டர்கார்ட்டன் ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சிக்கையேடு இது . அன்றைய தலித் மாணவர்களைக் கற்பிப்பதில் இருந்த பிரச்சினைகளை விவரிக்கும் நூல்.
ஆல்காட்டின் பஞ்சமர் இலவசப்பள்ளிகள் சென்னையின் கல்வி வரைபடத்தை மாற்றியமைத்த சித்திரத்தை நாம் இந்தச் சிறுநூலில் காண்கிறோம். ஒவ்வொரு வருடமும் பள்ளிகளும் மாணவர்களும் ஏறிக்கொண்டெ செல்கிறார்கள். நடுவே வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. அந்தக் காலகட்டத்துச் சூழலைக் கருத்தில்கொண்டு பார்க்கவேண்டியது இது. மாணவர் வருகை குறைந்தமையால் ஆல்காட் பள்ளிகள் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அறிமுகம் செய்தன- மதிய உணவுத்திட்டம். ஆம், இந்தியப்பள்ளிகளிலேயே முதல் இலவச மதிய உணவுத்திட்டம் ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளிகளில் 1902 ல் அறிமுகம்செய்யப்பட்டதுதான் என்ற வரலாற்று உண்மையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அக்கால அரசாங்க ஆவணங்களில் இருந்து ஆல்காட் பள்ளிகளில் கற்ற மாணவர்கள் பிற கல்விக்கூடங்களில் கற்ற மாணவர்களை விட எளிதாக அதிக மதிப்பெண் பெற்று சிறந்த இடத்தில் இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் ராஜ்சேகர் பாசு. ஒருகட்டத்தில் பள்ளிகளுக்கு நிதிச்சுமை அதிகரித்தது. அந்நிலையில் பிரம்மஞான சபையின் அமெரிக்க தொடர்பாளரான அலெக்ஸாண்டர் ஃபுல்லர்ட்டன் நிதிசேகரிக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். தமிழக தலித்துக்களின் நிலைமைகளைப்பற்றி விரிவான கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதி அவர்கள்மேல் பரவலாக உலகக் கவனத்தைக் கொண்டுவந்தவர் அவர். சென்னையில் தலித்துக்கள் நடுவே களப்பணி ஆற்றியவர். தமிழக தலித் வரலாற்றில் அவர் பெயரும் என்றேனும் இடம்பெறுமென நினைக்கிறேன்.
தன்னுடைய நாட்குறிப்புகளில் ஆல்காட் சென்னையை அடுத்த உரூர் என்ற கிராமத்தில் கோர்ட்ரைட் அம்மையாரின் பள்ளிக்கு அமெரிக்க வருகையாளர்களுடன் சென்றதைப்பற்றி எழுதுகிறார். 114 மாணவர்கள் படித்த அந்த பள்ளியின் மாணவர்களின் தரம் அன்றைய சென்னை ராஜதானி பள்ளிகளின் பொதுவான தரத்தைவிடப் பலமடங்கு அதிகம் என்று அவர் சொல்கிறார்.
இந்த முக்கியமான சேவைக்குத் தொடக்கமிட்ட ஆல்காட்டைப்பற்றி இன்று அனேகமாக எந்த விவாதங்களிலும் எவரும் குறிப்பிடுவதில்லை. தலித் மக்களிலேயே பெரும்பாலும் எவருக்கும் ஆல்காட் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என நம்பலாம். நானேகூட ஒரு இறையியலாளராக அவரை அறிந்திருந்தாலும் அவர் தலித்துக்களுக்கு ஆற்றிய சேவையை அலெக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறிய நூல் வழியாகவே முதலில் அறிந்துகொண்டேன். அதில் எனக்கு வெட்கமில்லை, ஏனென்றால் எனக்கு இவ்வரலாறுகள் இதுவரை சொல்லப்படவேயில்லை.
1832 ல் பிறந்து 1907 ல் மறைந்த கர்னல் ஆல்காட் பிறப்பால் அமெரிக்காவைச் சேர்ந்தவர். நியூஜெர்ஸி ஆரஞ்ச் பகுதியில் ஒருவணிகருக்கு மகனாகப் பிறந்தார்.ஆரம்பத்தில் கிறித்தவ சேவை அமைப்புகளில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை வறுமையுற்றமையால் படிப்பை முடிக்காமல் ஆல்காட் நியூயார்க் டிரிபியூன் பத்திரிகையின் விவசாயச் செய்தியாளராக பணியாற்றினார். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து அமெரிக்க உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்களுக்கு எதிராகப் போராடினார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருக்கு நிறவெறி, இனவெறிக்கு எதிரான எண்ணங்கள் உறுதிப்பட்டன. ஆபிரகாம்லிங்கனுக்கு நெருக்கமானவராக இருந்த ஆல்காட் அவர் கொல்லப்பட்டபோது விசாரித்தகுழுவிலும் பணியாற்றினார். கர்னல் பட்டத்துடன் ஓய்வுபெற்றபின் அவர் கொஞ்சநாள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1874ல் அவர் எட்டி சகோதரர்கள் என்ற பிரபலமான ஆவி உபாசகர்களை ஆராய்வதற்காகச் சென்றார். அது அவருக்கு மறைஞானம் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதனூடாக அவர் கீழை ஞானத்தைக் கற்க ஆரம்பித்தார். இத்தருணத்தில் அவர் கீழை மறைஞானத்தைப்பற்றி ஆராய்ச்சிசெய்துகொண்டிருந்த ஹெலெனா பிளவாட்ஸ்கியைச் சந்தித்தார். அச்சந்திப்பு வாழ்நாள் நீண்ட ஓர் நட்பாக அமைந்தது. அவர்கள் இணைந்து 1975ல் பிரம்மஞான சங்கத்தை அமைத்தார்கள்.
ஆல்காட் 1879ல் மும்பை வழியாகச் சென்னைக்கு வந்தார். அவர் இந்தியாவை புத்தர் பிறந்த மண்ணாகவும் தன் சொந்த நாடாகவும் உணர்ந்தார். சென்னையில் அடையாறில் பிரம்மஞானசங்கத்தின் தலைமைச்செயலகம் அமைந்தது.
ஆல்காட் அமெரிக்காவில் இருக்கும்போதே தன்னை புத்தமதத்துக்கு மாற்றிக்கொண்டார். ஆனால் 1880ல் கொழும்புவில் சடங்குகள் மூலம் முழுமையாகவே பௌத்தரானார். ஆல்காட்டின் சிந்தனைத்தளத்து முக்கியமான பங்களிப்பு என்பது அவர் கட்டியமைத்த புதிய ஏற்பாடு புத்தமதம்தான்.
இந்தியா , திபேத் ,தாய்லாந்து , இலங்கை, பர்மா என பலநாடுகளில் இருந்த பலவகையான பௌத்த மரபுகள் தங்களுக்குள் தொடர்பே இல்லாமல் இருந்தன. அந்த பௌத்தஞானமரபுகளை சீராகத் தொகுத்து அவற்றின் சாராம்சமான தத்துவத்தை மீட்டவர்களில் ஆல்காட் முக்கியமானவர். 1881ல் வெளிவந்த அவரது பௌத்த ஞானம் [The Buddhist Catechism] என்ற நூல் இவ்வகையில் ஒரு முன்னோடி ஆக்கம். பின்ன்னாளில் அம்பேத்கார் பௌத்தம் பற்றி ஆய்வுசெய்து எழுதியபோது அவரது சிந்தனையை ஆல்காட் பெருமளவு பாதித்திருப்பதைக் காணமுடிந்தது.
ஆல்காட் 1907ல் இறப்பது வரை சென்னை அடையாறு பிரம்மஞானசபையின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். அவருக்குப்பின்னர் அவரது இடத்துக்கு அன்னிபெசண்ட் வந்தார். ஆல்காட் சென்னையில் இருந்த காலகட்டத்தில் சென்னையின் அறிஞர்களுடன் நேரடித் தொடர்புடையவராக இருந்தார். அவருடன் தொடர்புகொண்டசிந்தனையாளர்களே சென்னையில் ஒரு பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை அமைத்தார்கள். அவர்களில் அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர்முக்கியமானவர்கள்.
சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் எழுச்சிக்கு இருவகையில் ஆல்காட் காரணமாக இருந்தார். ஒன்று அயோத்திதாசர் போன்றவர்களுடன் அவருக்கிருந்த நேரடி உறவுமூலம் நவீன அரசியலெண்ணங்களை அவர்களுக்கு அளித்தார். தலித் மாணவர்களுக்கு நவீனக்கல்வியை அளித்ததன் மூலம் ஒரு புதிய தலைமுறை உருவாகக் காரணமாக அமைந்தார்.
ஆல்காட்டின் இந்த தத்துவத்தளத்துப் பங்களிப்பு பெரும்பாலும் ஆய்வாளர்கள் அறிந்தது. அவர் இங்கே அயோத்திதாசர் போன்றவர்களுக்கு அளித்த ஆதரவு காரணமாக ஒரு தலித் மறுமலர்ச்சி உருவாகக் காரணமாக அமைந்தார். அதிகமும் அறியப்படாமல் போனது அவரது கல்விப்பணி. இந்தச்சிறுநூல் அதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆல்காட் மறைந்து போன பின் இந்நூல் வழியாகத் தமிழ் அறிவுலகப்பரப்பில் மீண்டும் தோன்றியிருக்கிறார். அதற்காக அலெக்ஸுக்கும் பாரிக்கும் நன்றிகள். ஒரு இலட்சியவாதி மறக்கப்படுவதென்பது இலட்சியம் என்ற கருத்தாக்கமே தோற்கடிக்கப்படுவதுபோல. ஒருபோதும் அது நிகழக்கூடாது. மகத்தான கனவுகள் ஒருபோதும் நிறைவேறாமல் போவதில்லை.
அமெரிக்கா உலகுக்கு அளித்தவை இருவகை சிந்தனைப்போக்குகள். ஒன்று, எமர்சன், தோரோ போன்றவர்களால் உருவாக்கப்பட்ட ஆழ்நிலைவாதம். [Transcendentalism] இன்னொன்று, சார்ல்ஸ் பியர்ஸ் [Charles Sanders Peirce ] வில்லியம் ஜேம்ஸ் [William James] போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட செயல்முறைவாதம். [Pragmatism] இரு வேறுபட்ட சிந்தனைப்போக்குகள் இவை. இரு எல்லைகள் என்றே சொல்லலாம்.
ஆழ்நிலைவாதம் மனிதனின் உள்ளுணர்வுக்கு மைய இடத்தைக் கொடுக்கும் சிந்தனை எனலாம். புறவயமான தர்க்கம் மூலமோ நடைமுறைச்செயல்பாடுகள்மூலமோ வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்ள முடியாது. மனிதன் தன்னுள் ஆழ்ந்து தன் உள்ளுணர்வைத் தீட்டிக்கொள்வதன் மூலமே அதை அறிய முடியும். அந்த அறிதல் பெரும்பாலும் அவனுக்கு மட்டுமே உரியதாக இருக்கும். அதைப் புறவயமாக நிரூபிக்கமுடியாது, தர்க்கபூர்வமாக விளக்கிவிடவும் முடியாது.
ஆழ்நிலைவாதம் எல்லா மதங்களிலும் உள்ள சாராம்சமான உண்மைகளைத் தொகுத்துக்கொள்ள முயன்றது. முழுமுதல் உண்மையை நோக்கிய அகவயமான பயணத்தை முன்வைக்கும் கீழைமதங்களுக்கு அது அதிக முக்கியத்துவம் அளித்தது. ஆகவே அது இந்துமதம், பௌத்தமதம் ஆகிய இருமதங்களையும் அதிகமாகக் கூர்ந்து கவனித்தது. அக்காலகட்டத்தில் ஜெர்மனியமொழியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்ட இந்து, பௌத்த மூலநூல்கள் அவர்களுக்குப் பெரும் ஈர்ப்பை அளித்தன. அவர்களின் சிந்தனைகளை வடிவமைத்தன.
ஆழ்நிலைவாதிகளைப்பொறுத்தவரை கடவுள் ஓர் ஆளுமையோ, பிரபஞ்சத்தின் நிர்வாகியோ அல்ல. கடவுளை மனிதன் முழுமையாக அறியமுடியாது. ஆனால் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் இருப்பை அவன் காணமுடியும். ஆகவே இயற்கையே இறைவன். இயற்கையை அறிந்து அதில் கலந்திருப்பதே இறையனுபவம்.
மனிதன் பல்வேறு அறியாமைகளால் மூடப்பட்டிருப்பதனால்தான் அவனைச்சூழ்ந்திருக்கும் இயற்கையில் நிறைந்திருக்கும் இறைவனின் ரகசியத்தை அவனால் உணர முடிவதில்லை. சமூக வழக்கங்களின் விளைவான அறியாமை, தன்னுடைய காமகுரோதங்களால் உருவாகும் அறியாமை. அந்த அறியாமையை வெல்வதே அவன் இயற்கையில் இருந்து இறைச்செய்தியை பெறுவதற்கான வழி. ஆகவே எந்த ஆன்மீகச்செயல்பாடும் அறிவுபரப்பும் செயல்பாடாகவே இருக்கமுடியும்.
செயல்முறைவாத தத்துவம் என்பது அதன்செயல்முறையில் இருந்து வேறுபட்டு இருக்கமுடியாது என வாதிடும் ஒரு தத்துவத்தரப்பு. செயல்முறையில் இருந்தே தத்துவக்கொள்கைகள் உருவாகவேண்டும். தத்துவங்களெல்லாமே செயல்முறைக்குக் கொண்டுவந்து சரிபார்க்கப்படவேண்டும் என அது வாதிட்டது. ஆகவே நவீன அறிவியலை அது மிகவும் ஏற்றுக்கொண்டு பாராட்டியது.
அமெரிக்கச் சிந்தனை இவ்விரு தத்துவப் போக்குகளும் விவாதித்து உருவானது என்று சொல்லலாம். அமெரிக்காவின் இலட்சியவாதத்தை உருவாக்குவதில் ஆழ்நிலைவாதம் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறது. நதானியல் ஹாதர்ன், ஹெர்மன் மெல்வில், வால்ட் விட்மான், எமிலி டிக்கன்ஸன், ராபர்ட் ஃப்ரோஸ்ட் போன்ற பெரும்பாலான அமெரிக்க இலட்சியவாதிகளில் ஆழ்நிலைவாதத்தின் பெரும் செல்வாக்குண்டு. ஆழ்நிலைவாதத்தின் உச்சகாலகட்டம் என 1850 முதல் 1900 வரையிலான ஐம்பதாண்டுகளைச் சொல்லலாம். அதுதான் அமெரிக்கா சுதந்திரம் சமத்துவம் மனிதநேயம் என்னும் உயர் இலட்சியங்களின் தேசமாக அறியப்பட்ட பொற்காலம்
நூறுவருட வரலாற்றைப்பார்த்தால் அமெரிக்கா மெல்லமெல்ல அதன் ஆழ்நிலைவாதத்தை மறந்துவிட்டிருப்பதைக் காணலாம். செயல்முறைவாதம் அங்கே நவீன அறிவியலின் செல்லப்பிள்ளையாக மாறி வளர்ந்தது. அயன்ராண்ட் போன்றவர்களின் நடைமுறைவாதம் அங்கே மேலும் செல்வாக்கு பெற்றது. லாபம் அதன் மந்திரவார்த்தையாக ஆகியது.
அமெரிக்காவின் இலட்சியவாத யுகத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒரு தூதர் என நாம் ஆல்காட்டைச் சொல்லலாம். ஆல்காட்டை உருவாக்கிய சிந்தனை மரபு என்பது ஆழ்நிலைவாதமே. மனிதன் தன் அகத்தில் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டடையமுடியும் என்ற அவர்களின் அறைகூவலே அவரைக் கீழைநாட்டுச்சிந்தனைகளை நோக்கிக் கொண்டுவந்து பௌத்தத்தில் நிலைக்கச் செய்தது. ஆல்காட்டின் எழுத்துக்களில் நாம் எமர்சனின் வரிகளை அவ்வப்போது காணமுடியும்.
ஆழ்நிலைவாதத்தின் மையக்கருத்து அறிவே விடுதலைக்கான வழி என்பது. ஆல்காட் அதையே பௌத்தத்தின் மையச்செய்தியாகக் கண்டார். அந்த நம்பிக்கையே அவரை சென்னையில் தலித் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் பெரும் திட்டத்தை உருவாக்கும்படி தூண்டியது. அந்தசெயலின் பின்னாலுள்ள அடிப்படை தரிசனத்தை இன்று கிட்டத்தட்ட நூற்றியிருபதாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நினைவுகூர இந்த சின்ன நூல் இப்போது காரணமாக அமைவதாக – ஆம், அறிவும் விடுதலையும் ஒன்றே
[3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் ஆற்றிய உரை]
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 7
யாப்பு மென்பொருள்
கடைசியில் யாப்பை ஒரு மின்னணு வாய்ப்பாடாக ஆக்கிவிட்டார்கள் ! யாப்புவகையைப் பிரித்துப்பார்ப்பதற்கான மென்பொருள்
http://www.virtualvinodh.com/avalokitam
இப்படியே தமிழ்ப் புதுக்கவிதைக்கும் ஒன்று செய்தால் நல்லது
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
