Jeyamohan's Blog, page 2285
September 24, 2011
நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் எழுதிய கடிதத்துக்கு ஒரு நண்பர் எழுதிய பதிலைப் பார்த்தேன். அவர் என்னை அணுமின் சக்தியின் தீவிர ஆதரவாளன் என்று நினைத்தால் அது தவறு. என்னுடைய கடிதம் அணுமின் சக்தியை முன்னிலைப்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஆனால் ஒழுங்கான அறிவியல் சார்ந்த விவாதம் இல்லாமல் அதை வெறுமனே எதிர்ப்பது சரியல்ல என்ற எனது எண்ணத்தை தான் எழுதியிருந்தேன்.
நிலக்கரி மின் நிலையங்களைப் பொறுத்தவரை அவற்றை இயக்குவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விட நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவதால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம். அதுவும் இன்றைய செய்தியைப் பார்த்தால் தெளிவாகும். Centre for Science and Environment (CSE) என்ற தன்னார்வ நிறுவனத்தின் தகவலின்படி 2009ஆம் ஆண்டு மத்திய அரசால் காடுகளை அழிக்கக் கொடுக்கப்பட்ட அனுமதி மட்டுமே 1981ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டதில் 25% ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அனுமதி அதற்கு முன் கொடுக்கப்பட்டதை விட இருமடங்கு அதிகமாகும். இதில் பாதிக்கு மேல் நிலக்கரி சுரங்கம் தோண்டக் கொடுக்கப்பட்டது.
The pace of forest land diversion for clearing projects has doubled in the last five years. In one single year, in 2009 alone, as much as 87,883.67 hectares (ha) of forest land was granted clearance. This diversion is about 25 per cent of all forest land diverted for development projects since 1981. An assessment done by the Centre for Science and Environment (CSE), an NGO, has also revealed that coal mining accounted for more than half of all the forest land diverted for mining. (http://dailypioneer.com/nation/8409-forest-land-diversion-goes-up.html)
அது போதாதென இப்போதைய தகவலின்படி அடர்ந்த காடுகளிலும் சுரங்கங்கள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்க முடிவெடுத்துவிட்டது போல தெரிகிறது.
A group of Indian ministers agreed to allow companies to seek approval to mine coal in some dense forest areas, overturning an environment ministry ban, according to two government officials. (http://www.yourmoneysite.com/news/2011/sep/government-said-to-lift-curbs-on-coal-mining-in-dense-forest-areas.html)
புவிவெப்பமயமாதல் ஒரு மாயை என்பது அமெரிக்க தீவிர வலதுசாரியினர் வைக்கும் குற்றச்சாட்டு. இது குறித்து ஒருபுறம் அறிவியல் களத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் நாம் காணும் மிகுந்த தட்பவெப்ப மாற்றத்தினை வேறு எதைக் கொண்டு விளக்க இயலும் என்று தெரியவில்லை.
நிலக்கரி மின் நிலையங்களில் 'Clean Coal' என்ற தொழில்நுட்பம் இப்போது சில வளர்ந்த நாடுகளிலும் சீனாவிலும் பரிசோதனை செய்து பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களையும், கரித்துகள்களையும் கட்டுப்படுத்த முடியும், ஆனால் காடுகள் அழிக்கப்படுவதையும் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. கடந்த 42 வருடங்களாக ஒரு நிலக்கரி சுரங்கம் அமெரிக்காவில் எரிந்து கொண்டிருக்கிறது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது (http://www.treehugger.com/files/2009/12/underground-coal-fire-centralia-started-1962-burns.php). இந்த தீ வெறுமனே ஒரு ஊரில் குப்பைமேட்டின் மீது சிலர் தீ வைத்ததால் உருவானது.
இந்தியாவில் 150 சதுர கிலோமீட்டர் அளவில் பூமிக்குக் கீழே பல நிலக்கரி சுரங்கங்கள் எரிந்துக் கொண்டிருக்கின்றன.(http://en.wikipedia.org/wiki/Coal_seam_fire). இத்தகைய சுரங்கத்தீ பரந்த நிலப்பரப்புகளை உயிரினங்கள் வாழ ஏற்கத்தகாதது ஆக்குவதுடன் பெருமளவில் நச்சுப்பொருட்களையும் கக்குகின்றது.
இப்படியே ஒவ்வொன்றுக்கும் விளைவுகளைச் சொல்ல முடியும். உண்மை என்னவெனில் சரியாக மாசுகட்டுப்பாட்டு விதிகளைப் செயல்படுத்தாவிட்டாலோ அல்லது கவனக்குறைவாக செயல்பட்டாலோ எந்த தொழில்நுட்பமும் அபாயகரமானதே.
இன்றைய சூழலில் அணுமின் நிலையங்களின் விளைவுகளைப் பற்றி பேசுவது மிகவும் எளிது. செர்னோபில், புகுஷிமா போன்றவை நம் கண் முன் வந்து நிற்கின்றன. அணுக்கரு இயற்பியலை சாதாரண மக்களுக்கு விளக்குவது கடினமாகையால் அதன் மீது உள்ள அச்சத்தை நீக்குவதும் கடினமாகிறது. ஒரு படகு மூழ்கி விபத்தில் இருபது பேர் இறந்தால் அது பெரிய செய்தி அல்ல. ஒரு விமான விபத்தில் இரண்டு பேர் இறந்தால் அது எப்போதும் பெரிய செய்தி தான். ஏனெனில் பறப்பது என்பது பொதுவாக இயற்கையை மீறிய ஒரு செயலாகத் தெரிவதால் மனித மனதுக்கு அது ஒருவிதமான இன்பத்தையும், திகிலையும் ஒருங்கே அளிக்கிறது. இரண்டாம் உலகப்போர் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது ஹிரோஷிமா நாகசாகி தான். ஹிரோஷிமாவில் கிட்டத்தட்ட 80 ஆயிரம்-1 லட்சம் பேரும் நாகசாகியில் 60-70 ஆயிரம் பேரும் இறந்தனர். ஆனால் ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் ட்ரெஸ்டென் நகரங்கள் சாதாரண குண்டுகள் வீசி அழிக்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இதில் ஹாம்பர்க் நகரத்தில் 50 ஆயிரம் பேரும் ட்ரெஸ்டென் நகரத்தில் 25 ஆயிரம் பேரும் இரண்டே நாட்களில் கொல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் ஹாம்பர்க் நகரத்தில் 1500 அடி உயரமுள்ள ஒரு பெரும் சூறாவளித்தீ உருவாகி நகரினை முற்றிலும் அழித்தது (http://en.wikipedia.org/wiki/Dresden_bombing, http://en.wikipedia.org/wiki/Bombing_of_Hamburg_in_World_War_II).
இன்று நாம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்து அணுவினால் மட்டுமே அல்ல. ரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகளாலும் நாம் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். இத்தகைய சூழலில் வெறுமனே அது சரி இது சரியல்ல என்ற வாதம் ஒன்றின் மீது நம் முழு கவனத்தையும் செழுத்தி மற்றத்தை மறந்து விடச்செய்யக்கூடும். செர்னோபில் விபத்தினால் விற்காமல் போன இறைச்சி மற்றும் காய்கறிகளை விட பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலினால் விற்காமல் போனவை உலகளவில் அதிகமாக இருக்கும் அல்லவா?
நம்முடைய தேவைகள் அதிகரித்துவிட்டன. இயற்கையால் நம்முடைய தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்ய முடிவதில்லை. "Earth provides enough to satisfy every man's need, but not every man's greed" என்ற மகாத்மாவின் வாக்கு உண்மையே. நம்முடைய இந்த நாகரீக(?) வாழ்க்கைக்குத் தேவையான எரிசக்தியை கொடுப்பதில் அணுமின்சக்தி பெரும் பங்கு வகிக்க இயலும். ஆனால் இன்று உள்ள நிலையில் அது மட்டுமே நமது எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறமுடியாது. அது போலவே அதனை முற்றிலும் புறந்தள்ளி மற்ற எரிசக்தி ஆதாரங்களையே பயன்படுத்தலாம் என்றால் அதுவும் ஏற்கத்தக்கது அல்ல. அணுக்கரு இயற்பியல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. Breeder Reactor போன்றவை மூலம் நம் நாட்டில் எளிதாகக் கிடைக்கும் தோரியம் போன்ற தாதுக்களைக் கொண்டு அணுமின் சக்தி தயாரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் வளர வளர அணுமின் நிலையங்களை மேலும் பாதுகாப்பாக செயல்படுத்த முடியும்.
கூடங்குளத்தைப் பொறுத்தவரை அதே வடிவமைப்பைக் கொண்ட அணு உலைகள் உலகில் பல இடங்களில் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன என்றாலும் மக்களின் நம்பிக்கையை அரசு பெறும்வரை அதை நிறுத்தி வைப்பது சரியானதே. அதே நேரம் அணுமின்சக்தியை பற்றிய விவாதமானது சரியான அறிவியல் சார்ந்ததாக இல்லாவிட்டால் நாம் நம்முடைய இளைய தலைமுறையினருக்கு அணுக்கரு இயற்பியல் மீது அவநம்பிக்கையையும் ஆர்வமின்மையையும் ஏற்படுத்திவிடுவோம் என்று அஞ்சுகிறேன். அப்படி நிகழ்ந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.
இத்துடன் இதனை முடித்துக்கொள்கிறேன். தொடர்ந்து அனல்வாதம் புனல்வாதம் நடத்தி உங்கள் வலைத்தளத்தில் இடத்தை ஆக்கிரமிக்க நான் விரும்பவில்லை.
அன்புடன்,
சண்முகம்
தொடர்புடைய பதிவுகள்
அனலும் அணுவும்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்
September 23, 2011
உலோகம்,கடிதம்
அன்புள்ள ஜெ வணக்கம்
நான் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படிப்பேன் தற்போது உங்கள் இணையத்தைத்
தொடர்ந்து படித்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரையில் மிகவும்
பயனுள்ளதொன்றாகவே இதைக் கருதுகிறேன்.
(உலோகம்- கடிதம்) என்னும் கடிதம் வாசித்தேன் தான்- தமிழன்
என்றும் ஈழத்தவன் என்றும் விமலன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய
கடிதம் வாசித்து முடித்தபின்பும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது
எனக்குப் புலப்படவில்லை. தவிர எழுத்துப்பிழைகள் வாசிக்கும்போது
எரிச்சலடைய வைக்கின்றன. சரி அவற்றைப் பெரிது படுத்தாமல் விட்டாலும்
அவருடைய கடிதம் ஈழத்து மொழிப்பிரயோகத்தின் சாயலில் எழுதப்பட்டிருந்தது.
நானும் ஈழத்தவன்தான் ஆனால் அவர் யாழ்ப்பாணப் பேச்சுமொழியைக்
கையாள்கிறாரா? மட்டக்களப்புப் பேச்சு மொழியைக் கையாள்கிறாரா? மலையகப்
பேச்சுமொழியைக் கையாள்கிறாரா? என்பது புலப்படவில்லை. ஏன் இந்த மாறாட்டம்?
அவருடைய பேச்சு அப்படித்தான் என்றால் அதில்நான் தலையிடவில்லை திட்டமிட்டு
நடந்துகொள்ளாவிட்டால் சரி. இதில் நடிகர் விவேக் கதைத்ததை எப்படிக்குற்றம்
சொல்ல முடியும் என்றுதான் யோசிக்கிறேன்?
நன்றி
அன்புடன்
அ.கேதீஸ்வரன்.
அன்புள்ள சரவணபவன், கேதீஸ்,
இதேபோல பல கடிதங்கள் வந்துள்ளன.
இந்தக் கடிதத்தை அல்லது கட்டுரையை நான் பிரசுரித்த நோக்கமே அதுதான். அது ஈழத்தமிழே அல்ல. ஈழத்தமிழைப் போலி செய்கிறது. தவறாக. ஆனால் இதேபோன்ற எழுத்துக்கள் தமிழகத்தில் இப்போது பெருகி வருகின்றன. இந்தியாவில் இருந்தபடியே ஈழவரலாற்றை ஈழப்பண்பாட்டைத் தாங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் ஒரு சாரார். இதற்குத் தமிழ்ப்பற்று என்று பெயர் சூட்டுகிறார்கள்.
யோசித்துப்பாருங்கள், அந்த முன் குறிப்புக்கடிதம் இல்லாமல் இது ஒரு இதழில் அச்சாகியிருந்தால் சராசரித் தமிழன் இதை முள்ளிவாய்க்காலில் போராடி முள்வேலியுள் வாழும் ஒரு ஈழப் போராளி எழுதியிருப்பார் என்றே நம்பிவிடுவான் இல்லையா? ஆகவே அந்த முன்குறிப்புடன் பிரசுரித்தேன். ஆகவேதான் சாதாரணமான பதிலை அளித்தேன்.
சென்றகாலங்களில் எப்போதுமே ஈழப்போராட்டத்துக்கு ஆதரவோ தொடர்போ இல்லாமலிருந்து இப்போது சட்டென்று அதைப்பற்றி மிகையுணர்ச்சியுடன் பேச ஆரம்பிக்கும் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இவர்களுக்கு எந்த வரலாறும் தெரியாது. எந்தப் பின்னணியும் புரியாது. இவர்கள் இன்றைய ஊடகப்பிரச்சாரம் வழியாக எளிமையாக உருவாக்கிக்கொண்டுள்ள ஒரு சித்திரத்தை அல்லாமல் எவர் என்ன சொன்னாலும் அது தமிழ்த்துரோகம் என்ற கெடுபிடியை உருவாக்குகிறார்கள். இந்தக் கெடுபிடிகளால் ஈழ எழுத்தை ஒரு தலைமுறைக்காலம் அழித்தார்கள். தமிழில் இந்த மிரட்டல்களுக்கு ஆட்பட்டால் எழுத்தே அழிந்துவிடும் என நினைக்கிறேன்.
ஈழத்தில் ஒரு போர் நடந்தது. அதன் அழிவுகளை சுமக்கும் அந்த மக்களுக்கு தங்கள் வரலாற்றையும் வரலாற்றில் இருந்து பெறும் பாடங்களையும் எழுதிக்கொள்வதற்காவது உரிமை எஞ்சட்டும் என்பதே என் எண்ணம். அதையும் நாங்களே எழுதி அவர்களுக்குக் கொடுப்போம் என்ற எண்ணமே இங்கே சிலரிடம் ஓங்கியிருக்கிறது இன்று. அதற்கான ஆதாரமே இக்கடிதம்.
அதேபோல உலோகம் முழுக்கமுழுக்க இந்தியச் சூழலில் இந்தியா சார்ந்த எதிர்வினையாக உருவாகி உள்ளது. அது ஈழப்போராட்டம் பற்றிய நாவல் அல்ல, இந்தியாவில் நடந்தவை பற்றிய நாவல். அந்த வகையில் அது மிகமிக உண்மையானது என்றும், அந்த உண்மையை விவாதிக்குமளவுக்கு விஷயமறிந்தவர்களே குறைவு என்றும் மட்டுமே நான் சொல்லமுடியும். அதை எழுதுவதற்கான உரிமையை மறுக்க ஈழத்தவருக்கும் உரிமை இல்லை.
திரில்லர் என்பது அந்த விஷயங்களைப் பேசுவதற்குப் பிற எவற்றைவிடவும் வசதியான வடிவம் என்பதனால் அந்த வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அடிப்படையான ஒரு விஷயத்தைப் பேசுகிறது. ஒருவகையில் பின் தொடரும் நிழல் பேசிய அதே விஷயம்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஹனீபா-கடிதம்
ஈழம்-இருகடிதங்கள்
உலோகம்-கடிதம்
எஸ்.எல்.எம்.ஹனீஃபா
ஈழம் இரு கடிதங்கள்
Srilankan War Crimes Investigation
ஈழம்,கடிதங்கள்
ஈழப் படுகொலைகள்,காலச்சுவடு
புதிய புத்தகங்கள்-கடிதங்கள்
புத்தகக் கண்காட்சி-கடிதங்கள்
அனலும் அணுவும்
நிலக்கரி மூலம் அனல்மின்சக்தி என்பதற்கு எதிராகச் சொல்லப்படும் காரணங்கள் இரண்டு: 1. காற்று மாசுபடுதல், 2. சுரங்க விபத்துகள்
கார்பன் துகள்களை வடிகட்டும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. நிலக்கரி மின் உற்பத்தியில் வெளியாகும் கரியமிலவாயு, கந்தக வாயு ஆகியவறைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் இன்றே உள்ளன. ஆனால் எரிசக்தி கொள்விலையை அதிகமாக்குவதாகச்சொல்லி அவற்றை வளர்த்தெடுக்கவோ நிறுவவோ மேற்கின் அனல்மின் சக்தி முன் நிலையங்கள் தயங்குகின்றன. மேற்கின் விலையதிக தொழில்நுட்பங்கள் எல்லாம் கிழக்கினால் விலை குறைக்கப்பட்டு வரும் காலம் இது. சீனாவிலும் இந்தியாவிலும் மலிவாய்க் கிடைக்கும் மனித வளம் மேற்கில் இல்லாத ஒன்று. இந்தியா இந்த துறையில் குறிப்பாய் கவனம் செலுத்தி நிலக்கரி மின் நிலையங்களின் மாசு வெளியேற்றத்தை அடுத்த பத்தாண்டுகளில் பெரிதும் குறைக்க முடிந்தால் அதைவிட நம் நாட்டுக்கு மாபெரும் நன்மை வேறெதுவும் இருக்க முடியாது.
((குறிப்பு: குளோபல் வார்மிங் என்னும் ஐரோப்பாவின் புதிய பூச்சாண்டிக்கு நாம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பணயம் வைக்கக்கூடாது. குளோபல் வார்மிங்கை ஒப்புக்கொள்ளாதது என்பது அறிவியலையோ, சூழல் பாதுகாப்பையோ மறுதலிப்பதாகாது. இது குறித்து என் விரிவான கட்டுரை, "அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங்" என்று சொல்வனத்தில் வந்தது:
பகுதி 1: http://solvanam.com/?p=121
பகுதி 2: http://solvanam.com/?p=318
பகுதி 3: http://solvanam.com/?p=590
ஒரு அணுமின்சக்தி நிலையத்தின் ரிஸ்கை அனல் மின்னுற்பத்தியுடன் ஒப்பிடும்போது, விபத்தின் உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகள், காற்று, தண்ணீர் என சூழலமைப்பு மொத்தமும் கெட்டுப்போவது என்பதோடு, எல்லைகள் தாண்டி அவை உருவாக்கக்கூடிய விளைவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். செர்னோபில் கதிரியக்கத்தின் விளைவு பிரிட்டனில் இன்றும் உள்ளது. செர்னோபில் விபத்து நடந்த வருடம் பிரிட்டனில் 9000 பண்ணைகள் பாதிப்புக்குள்ளானதாகக் கண்டறியப்பட்டு அவற்றின் விளைபொருட்கள் (பால், மாமிசம், தாவரம் என்று எல்லாமே) கட்டுப்படுத்தப்பட்டன. 2006-இல் பிரிட்டனின் உணவுத்தரக்கட்டுப்பாடு துறை இன்னமும் கூட 355 பண்ணைகள் பாதிப்பில் இருந்து வெளிவரவில்லை என்று அறிவித்தது (டெலிகிராஃப் செய்தி).
இந்தப்பண்ணைகளின் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விற்க வேண்டுமென்றால் கட்டுப்பாட்டு சோதனைக்கு எழுதி அதிகாரி வரவழைக்கப்பட்டுக் கதிரியக்க சோதனை செய்யப்பட வேண்டும். இவை ஒவ்வொன்றிற்கும் ஆகும் செலவை ரஷ்ய அரசு ஏற்கப்போவதில்லை. இந்தியாவில் இதுபோன்ற நிலை பக்கத்து நாட்டு அணுமின் நிலைய விபத்தால் வந்தால், என்ன ஆகும்- யாருக்கு என்ன காம்பன்சேஷன் கிடைக்கும்- போபாலில் நடந்தது என்ன என்றெல்லாம் நாம் யோசிக்கலாம்.
அனல்மின் சக்தி நிலையங்களின் தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாய் அமல்படுத்தப்பட வேண்டும். மீறல்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் ஆனாலும் லஞ்சம் தலைவிரித்தாடும் நாட்டில் இதனை முழுமையாய் நடைமுறைப்படுத்த முடியாமல் இழப்புகள் தொடரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் அதே போன்ற ஒரு ஊழல் நிறைந்த அரசியல் சூழலில்தான் நம் அணு மின் நிலையங்களும் இயங்குகின்றன என்பதை நினைத்தால்தான் எனக்குப் பதைக்கிறது.
ஆனால் மின்நிலைய விபத்து/ விபத்தினால் பாதிப்பு என்று எடுத்துக்கொண்டால், சுரங்க விபத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை அணுமின்நிலைய பாதிப்புகளை விட பலமடங்கு குறைவுதான். பல நேரங்களில் சுரங்கம் அமைக்கப்படும் வடிவமைப்பிலேயே பாதுகாப்பை மையமாக்கி அமைக்கும் விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும். சிலியில் அவ்வளவு பெரிய விபத்திலிருந்தே அத்தனை சுரங்கத்தொழிலாளர்களும் பல வாரங்களுக்குப்பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குழும நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
உலகிலேயே நிலக்கரி வளம் அதிகம் உள்ள நாடுகளில் மூன்றாம் இடம் வகிக்கிறது பாரதம். 62,300 மில்லியன் ஷார்ட் டன் உற்பத்தி செய்யக்கூடிய அளவு நிலக்கரி வளம் நம் நாட்டில் உள்ளது. இதில் நாம் இன்று உற்பத்தி செய்திருப்பது 528.5 மில்லியன் ஷார்ட் டன்கள் மட்டுமே. அதாவது 1%-க்கும் குறைவு! நம் நாட்டின் எரிசக்தித் தேவையை அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு முழுமையாகத் தீர்க்கும் அளவுக்கு நம்மிடம் நிலக்கரி உள்ளது. (ஆனால் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறோம்!!! லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் நிலக்கரி அமைச்சரவை முன்னணியில் நிற்கிறது, கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஷிபு சோரன், தெலுங்கு திரைப்படத் துறையைச்சார்ந்த தாசரி நாராயண ராவ் போன்ற "தொழில் வித்தகர்களை" அமைச்சர்களாகக் கண்ட பெருமை வாய்ந்தது இத்துறை.)
அணுமின் நிலையங்களால் மேற்கு நாடுகளுக்கு உடனடி நன்மை உண்டு. அனல் மின்நிலையங்களால் நம் நாட்டிற்கு நீண்ட கால நன்மை உண்டு. எந்த ஒற்றைவகை மின்சக்தியும் முழுமையாய் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யப்போவதில்லை. ஆனால் அணுமின் நிலையங்கள் மீதான நம் சார்பை மிகவும் குறைவாக வைத்துக்கொள்வதே நம் எதிர்காலத்திற்கு நல்லது என்று எனக்குப்படுகிறது. நம் நிலக்கரிவளங்களை நாம் முழுமையாக உபயோகப்படுத்தத் தொடங்குவதே அணுமின் நிலையங்கள் மீதான நம் சார்பை மட்டுப்படுத்தும். நம் நாட்டின் நிலக்கரி வளத்தைப்புறக்கணித்து விட்டு வெளிநாட்டில் இருந்து அணுமின் தொழில்நுட்பங்களை வாங்குவது, கறவை மாட்டை வீட்டில் வைத்துக்கொண்டு கடையில் மோர் வாங்குவது போல.
அருணகிரி.
தொடர்புடைய பதிவுகள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்
கடிதங்கள்
அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
September 22, 2011
உலோகம்-கடிதம்
அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலமறிகிறேன்.
இத்துடன் தங்களின் மேலான பார்வைக்கு, உலோகம் புதினம் தொடர்பான எனது திறனாய்வுப் பிரதியொன்றை மகிழ்வுடன், இணைத்துள்ளேன். ஒரு ஈழவனின் இயங்கு திசையில், மொழியில் இவ்வாய்வு அமைகிறது. வாழ்த்துக்கள்! தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி!
நல்லன்புடன்,
இரா.மோகன்ராஜன்,
முத்துப்பேட்டை.
அன்புடன் ஜெயமோகன் அன்ணைக்கு..,
வணக்கம் ஜெயமோகன் அன்ணை, நான் விமலன் தமிழன், ஈழத்தவன் கதைக்கிறன் நான். நீங்கள் சுகமோ? எண்டால் நலம். நாங்கள் அப்படியிருக்கயில்லை. எப்படியிருக்கறது? எங்களை வடிவா விடுறதுக்கு அவங்களுக்கு என்ன விசர் பிடிச்சிப்போட்டிருக்கோ? முள்ளிவாய்க்காலுக்குத் தப்பி, முள்வேலி முகாமுக்குள்ளாக அடைபட்டு, வெளிக்கிட்டு இப்பநான் புலம் பெயர் நாட்டிலொன்றில் அடைக்கலமாகியிருக்கிறன். கனகாலமாக குண்டு வீச்சிலும், ஷெல்லடியிலும் சிக்கி சின்னபின்மாகி சனங்களோடு சனங்களா கிடந்து பட்ட வேதனை சொல்லி மாளாது அன்ணை.
அவையெல்லாம் கதைச்சிப் போட்டெனண்டால், 'உலோகம்' கனக்கா கண், காது, மூக்கு எண்டு வச்சி வடிவா இன்னொரு புதினத்தை நீங்கள் படைச்சிப்போடுவிங்கள். பாருங்கோவன், 'உலோகம்' எண்டதும் நினைவுக்கு வந்துபோட்டது, இஞ்ச புலம் பெயர்ந்த எடத்திலைதான் உங்கட புதினம் வாசிக்க கிடைச்சது. பயப்படாதீங்கோ எண்ட ஒரிஜனல் பெயரிலைதான் கதைக்கிறான் நான்.
ஒங்கட சொர்லஸை, பார்க்கக்க பரிதாபமாயிட்டு இருக்கு. நானும் கனகாலமாய் இயக்கத்திலை இருந்தவன்தான், எண்டா, இவனைப்போல ஆட்களைத்தான் கண்டதில்லை. எனக்கு ஒரு சந்தேகம் அன்ணை,எங்களைப் போன்ற இயக்கத்திலை இருக்கும் ஆட்களை என்டைக்காவது சந்திச்சி கதைச்சுப் போட்டதுண்டா நீங்கள் எண்டு, ஏனெண்டா போராளிக்கும், விசர் பிடிச்ச மனுசனுக்கும் எந்த வித்தியாசமுமில்லாமல் தங்கட கதாநாயகன் இருக்கினம்.
சொர்லஸ் ஓர் சீவிக்கும் மனுசத் துவக்கு, கொல் எண்டா, கொல்லும். 'டைம் பொம்' ஆள். அம்மா, தங்கை கொமர், குழந்தைகள், வயோதிபர் எண்டெல்லாம், குண்டுகள் வெடிக்கக்க கவனத்திலை எடுப்பதில்லை, சொர்லஸ_ம் அப்படியான ஆள்தான். இயக்கத்திலை சேர்ந்து நிழல் உலகுக்குப் போய்விட்டவை தற்கொலைப் போராளி எண்டவரைக்குஞ் சரிதான். வெளிஉலகுக்கு முகங்காட்டமை அவைகள் வாழ தங்களை, அனுசருச்சி கொண்டவைதான், மற்றது, அவை புண்ணாக்குப் போல, குழந்தைகளைக் கண்டுபோட்டவை எண்டா சிரிக்காமலும், தொட்டுத் தூக்காமலுமிருக்க இயலுமென்டு ஜெயமோகன் சொல்லக்கதான் வியப்பாகிப்போட்டது. விடுதலைப் போராளியெண்டா, அவன் கல்லாலை செஞ்போட்டவை எண்டு உது யார் சொல்லிப்போட்டவை இவருக்கெண்டு விளங்கேயில்லை.
அமெரிக்கா சுட்டிப்போடுற 'பயங்கரவாதி', ஜெயமோகன் அடையாளப்படுத்திப்போடுற 'போராளியும்' ஒண்டுபோல காணக்கிடக்குதப்பா!
இலக்கில்லாத சனங்களோடை இந்தியவுக்கு எடுக்கும் சொர்லஸை, இந்திய நேவிக்காரர்கள் சந்தேகத்தோடை பிடிச்சி கதைக்கிறாங்கள், அங்க இன்னமும் ஆட்கள் அடிச்சிகொள்ளறதை கேட்டுப்போட்டு, 'முட்டாள்கள்' எண்டு கோபப்படுவினம் ஒரு நேவி ஒபிசர். சண்டை சச்சரவு எண்டு காணது அந்த ஒபிசர் அவையிண்ட இளைப்பரலை முடிச்சுகொள்வினம் எண்டு ஜெயமோகன் எழுதுவர். எண்டா ஜெயமோகனும், ஒருக்கா ஈழத்திலை எண் நடக்கிறதெண்டு கண்டு போட்டுவாறதும் நியாயமாயிட்டிருக்கும் ஒம்.
ஆல்பர்ட் காம்ய+யோடை, 'அந்நியன்' சொர்லஸை நினைவுப்படுத்திப்போடுது.நிலவும் சூழலுக்குப் பொருந்தி வாறாத மனுசன்தான் அந்நியன் எண்டா, அந்நியனிண்ட குண இயல்புகளை உலோகத்திண்ட கதாநாயனுக்கு பொருத்திப் பார்க்கினம் மோகன் அன்ணை. இது ஏனெண்டு எண்ட மூளைக்கு கடைசிவரைக்கும் விளங்கிப்போடுவதாயில்லை.
படகிலை எடுத்து இந்தியா வாறது தொடக்கம், இடையிலை தீடையிலை நிண்டு பிறவு மண்டபத்திலை வைத்து ஜோர்ஜை, சார்லஸ் சந்திக்கினம், இந்த இடத்திலைதான் கதை பிக்கொப் ஆகிறது, ஒரு கடைஞ்செடுத்த சினிமா பைத்தியம் தான் ஜோர்ஜ் எண்டு இல்லை, இல்லை ஈழத்தமிழனெண்டு அன்ணை சொல்லுவினம் அவைமட்டுமா சொல்லுவினம் விவேக்கை வைச்சி யோகராசா வெண்டு கொமடி பண்ணி புலத்திலையும் இஞ்சையும் செய்தவையைதான், அண்ணை எழுத்திலையும் செய்தவையாக்கும். நிசத்திலை, எங்கட இளைஞர்கள் அப்படியானவை எண்டு பொதுபுத்தியில் உறைக்க இவைக்கு ஆர் சொன்னவை.? எத்தனை ஆட்கள் இப்படியெண்டு இவை கண்டு போட்டவை. அரசியல் துரோகத்தாலையும், தமிழன் என்கிறதாலையும், எமது சனங்களும், இளைஞர்களும் , யுவதிகளும், குழந்தைகளும், செத்து சீரழிவினம், எமது பொடியன்கள், பொன்னம்பலத்தார் கதைப்பது போலை 'தோணி வலிக்கும் பையன்கள்' மட்டுமல்ல, யாழ்.கலாசாலையில் கல்வி புலமை பெற்ற இன்டெலெக்சுவெல் அறிவுசீவிகளும் பங்களித்துள்ளமை வெளிப்படையாகும்.
சொர்லஸ_ண்ட உடம்பிலை துவக்கு சன்னமொண்டு புகுந்து கிடக்கினமாம், அது அவை, மனுச உணர்ச்சி அடையும் வாக்கிலை சன்னம் வலி கொடுத்து அவனை இயந்திரமாக்கிப் போடுவினமாம். நல்ல கவித்துவம். எண்டா மோகன் அன்ணை, சொர்லஸ_ண்ட விலாவிலை ஒரு வண்ணத்துப்ப+ச்சி துடித்தினம்மெண்டா எவ்வளவு வடிவாயிட்டிருக்கும். அவனைத்தான் நீங்கள் இயந்திரமாக்கி போட்டிங்களே.
இந்திய உளவுத்துறை ஆட்கள் ஒட்டுக்குழுக்களை, உதிரி இயக்கங்களைக் கைக்கூலிகளாக் கொண்டு, எம்மையும் எமது விடுதலை இயக்கத்திரையும் ஒழிச்சிப்போட, செய்யும் தந்ரோபாயங்களை வடிவா சொல்லிப் போட்டிங்கள் அன்ணை. இது வொண்டுதான் புதினத்திண்ட நல்ல அம்சம் என்ன..
இந்த ஜோர்ஜை உளவுத் துறை போட்டுத்தள்ளியதுயெண்டா, அவனின்ட மனைவியை, உளவுத்துறை பொலீஸ் ஆள் வீராகவன், அங்காலை, இவன் சொர்லஸ். இயக்கத்திண்ட விதிகளுக்கு முரணாக நடந்துபோடுவினம். ஓண்டு இயக்க ஆள் இல்லை எண்ட சந்தேகத்தினை போக்கிப்போட, அல்லவெண்டா செயமோகன் அன்ணையோடை வக்கிர கற்பனையெண்டுதான் சொல்லிப்போடனும்.
சந்தர்ப்பம் கிடைச்சவை யெண்டா, அதைச் சாக்கிட்டு, பெண்பிள்ளைகளை வலைச்சிப்போடுவினம் எண்டு போராளிகளை நினைப்பவைகள், தலைவரை நேர்கண்ட அனிதாபிரதாப்பிண்ட ஒருக்க கதைச்சிப் போடவேணும், போராளிகளோடை இராத்தங்கி வந்தவை அவை சொல்வினம், "இவை என்னை ஒரு பெண்பிள்ளை எண்டு கூட பார்க்காமலை, அவங்களிலை ஒருத்தரா நடத்துவினம்' ஒழுக்கம், கட்டுப்பாடு என்னவெண்டு இவையிடம் பார்த்தநான்" எண்டவை.
கொழும்புவிலை அரசியல் துரோகியை சுட்டுப்போட்டு வெளிக்கிடும், சொர்லஸ_க்கு, இந்தியாவிலை சொந்த இயக்கத்து ஆளான சிறிமாஸ்றரை போடுவதாலை துரோகிக் குழுவினுக்க அவை தலைவனாகினம். இஞ்சதான் இந்திய உளவுத்துறை நம்பிக்கையை பெற்றுக்கௌ;கிறவன் சொர்லஸ். அவையாலை, தலைநகர் தில்லிக்கு அனுப்பிவைக்கப்டுவினம், எதற்கெண்டா அங்காலை ஒரு தமிழ் மக்களிண்ட அரசியற் துரோகி இந்திய மக்களிண்ட வரிப்பணத்திலை சொகுசா வாழ்வினம் (வடக்கு-கிழக்கு முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாளை நினைவு படுத்தி போடுது, அமிர் அன்னை போலவும் கிடக்குது. ) இவையை சொர்லஸ் போட்டினமெண்டா, அவன் பெரிய இயக்கத்திண்ட ஆள் எண்டது உறுதியாகிப்போடும், மற்றது, சொர்லஸ_ண்ட நோக்கமும் நிறைவேறிப்போடும். உளவுத்துறையும், சொர்லஸ_ம் கண்ணாமூச்சி ஆடுவினம்.
சொர்லஸ் பயிற்சி எடுத்த ஆள் ஆனபடியாலை சமயோசிதமும், செயலுக்கமுமிக்கவை என்பது உண்மையே, உது நான் முன்னாலை கதைச்சது போலை கனகலிங்கம் பொன்னம்பலம் ஆர் எண்டா இயக்கத்துக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்து போட்டு பதுங்கிகிடப்பவை அப்படித்தான் கதைபோறதாக்கும். பொன்னம்பலத்தார்
சொல்வினம், "உலகத்திலேயே நம்ப முடியாத இயக்கமெண்டா அது இவைதான் யார் மேலேயும் சந்தேகத்தை கிளப்பிப்போட்டு, கொல்றதுக்கு ஆள் அனுப்பிவிடுவாங்கள்," எண்டு, எண்டா, இவர் மட்டும் 'ரோவோடு' சேர்ந்து போட்டு இயக்கம் ஆரம்பிக்க செய்வர், என்ன கதையெண்டு கேட்டால், அவை துரோகியெண்டு சொல்லி போட்ட்படியாலை நான் இவைகளோடு சேர்ந்து கொண்டினம் எண்டு கதைச்சிபோடும்.
துரோகம் என்பவை ஏதோ பத்தோடு பதினைந்தாக போய்விடுதில்லைதானே, ஆட்களை, இயக்கதினை, மக்களை எண்டு சகலத்தையும் அழிச்சிப்போடும் மத்தவை போல துரோகத்திற்கும் சலுகை காமிச்சமெண்டா, அதற்கான பலனை அனுபவிச்சி போடனும் தானே? எண்டாதாலை முளையிலேயே கிள்ளிப்பேடுவினம், அதை ஆர் எதற்கெண்டு செய்து போட்டினமெண்டாலும் சாவா, வாழ்வா எண்டு களத்திலே நிப்பவைகளுக்கு எல்லாஞ் சரிதான்.
அங்காலை பொன்னம்பலத்தாரின்ட மகள் வைஜெந்தி, பிறகொருமுறை இவன் சொர்லஸஸ_ண்ட கதைக்கக்க, அவளிண்ட தந்தை, பொன்னம்பலத்தார் சொல்வாரெண்டு சொல்லி, ஒருநாளைக்கி மொத்த ஈழ சனத்ததையும் அவங்கள்(இயக்கத்திலை) துரோகியெண்டு சொல்லிப்போடுவாங்கள் எண்டு சொல்லுவள். எமது விடுதலைப் போராட்டமெண்டது நீண்ட நெடிய போக்குடையது, பேச்சு, அது பலனளிக்காவிட்டதெண்டால் துவக்கு எண்டு மாறி மாறி அமைந்த ஒண்டாகும். பேச்சை விட செயலில் நம்பிக்கை வைத்தமையாலேயே எமது பிரச்சனை இண்டைக்கு சகலருக்கும் தெரிஞ்ச ஒண்டா காணக்கிடக்குது. இதிலை துரோகிகள், கைக்கூலிகள் எவையெண்டு மக்களுக்கு அடையாளம் காண்பிச்சிப்போடுவது ஒரு கடமை.
இவர், பொன்னம்பலத்தார், தமது துரோக வாழ்க்கைக்கு பாதுகாப்பளிக்க பயிற்சியெடுத்த ஈழத்தவன் ஒருத்தனை ஏற்பாடு செய்கிறவர். எண்டாக்க அவரது நம்பிக்கை பெற்றுக்கொண்டு சொர்லஸ் அங்காலை தில்லியில் தங்குகிறவன். இயக்கத்திற்கும், மக்களுக்கும் துரோகம் செய்து போட்டவை யெண்டதாலும் அவை காற்று புகாத இடத்திலையும் தேடி வந்து கொன்டுபோடுவாங்கௌண்டு கிலேசமடைகிறவர் பொன்னம்பலத்தார். சொர்லஸ் இயக்கத்திண்ட தமிழக பொறுப்பாளனிடம் உத்திரவும், செல்போனையும் பெற்று அதை தமது மலகுடலினுக்குளாக வைச்சி காப்பினம். தலைமை 'போட்டுத்தள்ளும்' உத்திரவை இடும் வரை இஞ்சை இவன் மீள, மீள எடுத்து உத்திரவு 'லொட்' ஆகியிருக்காவெண்டு பார்க்கினம், பொக்கெட்டிலிருந்து ஏதோ புகைச்சல் பொதியை எடுப்பவை போண்டு எடுத்து பார்க்கினம்.
இஞ்சை இந்தியாவிலைதான், மக்களுக்கு துரோகம் செய்து போட்டு அரசியல் வாதிகள் உல்லாசமாக இருக்க ஏலும். அங்காலை அவை எண்ணி பார்த்தவெண்டாலே பயந்து போடுவாங்கள். அவைக்குத் வடிவாத் தெரியும் அய்க்கிய தேசியக்கட்சி எம்.பி கனகரத்தினம், யாழ். மேயர் அல்பிரட் துறையப்பா, என்ன கதிக்கு ஆளாயினாங்கள் எண்டு. இவை, ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், அமிர்அன்னா, யோகிசுவரன் போன்றவைகளை, இந்திய உளவுத்துறை ரோவின்ற ஆட்களும் அவையினண்ட கைகூலிகளுமே போட்டுத் தள்ளினம். எண்டா, இயகத்து மேலை அந்தப் பலியைப் போட்டினம்.
துரோகம், சதி, கொலை, குருதி எண்டு, சதா ஈழதெய்வம் தாகமெடுத்து பலி கேட்டினம், மோகனன்ணை என்னவெண்டா, ஈழத்துயரை திரில்லர் எண்டு சொல்லி அதன் சமூக அவலத்தை பகடிசெய்துபோட்டினம்.
ஓண்டு தெரியுமா அன்ணை ஒங்களுக்கு? இஞ்சை, இந்தியப் படை நின்ற காலத்திலை, அவைக்கும் இயக்கத்துக்கும் சண்டை துவங்கக்க, அங்காலை, அவை வாரும் வழியிலை, இயக்கத்திண்ட ஆட்கள் கண்ணிவெடியை புதைச்சிப்போட்டு காத்திருந்தவைகள், அண்டைக்கு எண்டா பாடசாலை பிள்ளைகளை ஏத்திப்போட்டு வான் வண்டியொண்டு அந்த வழியா திடீரெண்டு வாரக்கண்டு பதைச்சிப்போன இயக்கத்து போராளி யொருத்தன் கெதியா வெளிக்கிட்டுப்போய் அந்த கண்ணிவெடியாலை காலை வச்சிப்போட்டு அவைகளை தடுத்து நிறுத்த சைகை காமிச்சிப்போட்டு இவன், வெடித்து சிதறினவன். ஈழத்தின்ட குழந்கைள் மேலை எத்தனை அன்பு கொண்டிருந்தவை யெண்டா, இவன் இதை இப்படி செய்து போட்டிருப்பான் எண்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கோவன். போராளிகளோடை, விலாவிலை துடிக்கிற வண்ணத்துப்ப+ச்சியிண்ட இறக்ககை சத்தத்தை காதிலை கேட்டுப்போடுங்கோ ஜெயமோகன் அன்ணை.
கனத்த தியாகத்தாலையும், அர்ப்பணிப்பாலையும் துணிவாலையும் இவைகள் ஈழத்தினையும் வரலாற்றினையும் உருவாக்கினம். என்டா வரலாறு பற்றி பொன்னம்பலத்தாரும், சொர்லஸ_ம் கதைப்பவை பேரரசுகள் பற்றி எண்டு எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிரை, இனவாதத்திற் கெதிரான, விடுதலையின் பாற்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டவையின் தற்காப்பு யுத்தத்தினை, விடுதலைபோராட்டத்தினை எண்டு தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. விடுதலைப்போராட்டத்திற்கும், பயங்கரவதத்திற்குமான வேறுபாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும், ஏணென்டா இண்டைக்கு அரசே பயங்கரவாதத்தினை நிகழ்த்தும் போக்கு காணக்கிடக்குது. இந்த கனத்த வேறுபாட்டை அன்ணை ஜெயமோகன், எளிதாக, செங்கிஸ்கான், அவை, இவை யெண்டு கெதியா, சொல்லிப்போடுவதோடை, கடந்து போறதுதான் கனத்த சந்தேகத்ததை கிளப்பிப்போடுவினம்..
பொன்னம்பலத்தார், உண்மையிலை ஒரு 'கொமெடியன';தான் சிரியசான ஆள் எண்டு அன்ணை உருவாக்கிப்போட்டினம் எண்டா இவை வளப்பமான உயர் சாதி சைவ, வெள்ளாள பார்பானை யாழ் புத்தி சீவியெண்டு சொல்லிப்போடுவினமெண்டா, அவர் அவரிண்ட உயிரை காப்பாற்றிப்போடும்படி சொர்லஸிடம் அடிக்கடி கெஞ்சுவதும், கண்ணீர் விட்டு கதறுவதும் நல்ல பகடிதான், அவரது மகள் வைஜெந்தி ( கலாவதி, யாழினி, கமலினி எல்லாம் எங்கள் மண்னை விட்டுப்போட்டு எங்கே போயினவங்கள் அன்னை?) நல்ல 'பப+'னாக்கும். அவை சொல்வினம், தன்னோடை தந்தையை போட்டுவி;ட்டினமெண்டால், எல்லா பகையும் ஒழிஞ்சவை எண்டு,
சொர்லஸாலைதான் தந்தையும், மகளும் நம்புறவங்கள், இதிலை ஒருபடி மேலே போய், பென்னம்பலத்தாரின்;ட செல்லமகள், வைஜெந்தி, இவையை மனதிலை போட்டு, சொர்லஸிடம் தன்னை கெ(டு)hடுக்கறவள். இவன் சொர்லஸ், தற்கொலை போராளியா மற்றது, ஹொலிவுட் ஹ{ரொவா எண்டு கன சந்தேகத்தை கிளப்பிபோடுதப்பா, போற இடத்திலையெல்லாம், துவக்கையெடுத்து நீட்றவை, பெண்களை கண்டமெண்டா வளைச்சிப் போடுறவை.
தற்கொலை போராளிணெ;டவை, தலைவரிண்ட மூளையில் பிரத்யேகமாக உதித்தவை, தமிழ்மக்களிண்ட காவல் தெய்வங்கள், அவைகள். பதட்டமில்லாமை வாழவும், கொல்லவும், சாகவுமெண்டு பழகியவைகள். சொர்லஸ் எண்டா சைவப்பழம் பொன்னம்பலத்தரோடை சேர்நது போட்டு தத்துவமெல்லாம் பிதற்றினம்,
யுத்த நிலம் உருவாக்கிப்போடும் வாழ்க்கை ஜெயமோகன் அன்ணை அனுபவிச்சுப்போடாத ஒண்டாக்கும், எண்டா என்னை போன்ற ஆட்களிடம் கதைச்சிப் போட்டு செய்திருக்கவேணும், இதிலை, ஈழத்தமிழில் கதைக்க தனக்கு ஏலாது எண்டு துவக்கத்திலை சொன்னவர் அன்ணை. ஆனபடியாலை, ஈழக்கதை யெண்டு சொல்லிபோட்டாலும் மனசிலை நிற்க ஏலவில்லை கண்டீர். எடுத்துக் கொண்ட விடயத்தை, செய்து முடிப்பவை இயக்காத்தாட்கள் இல்லையெண்டா அவை இயக்கத்தாள் கிடயாதுதான். கொழும்புவிலை காரியத்தை முடிச்சுப்போட வெளிக்கிடும் கரும்படை அணியாள், அங்காலை வீதியிலை, பிச்சையெடுத்தும், மரக்கறி வியாபாரம் செய்துபோட்டும், மழையிலும், வெயிலிலும் உரிய நேரம் வார வரை காத்திருப்பவை அப்படி வந்திட்டா, அவையையும், குறிச்ச ஆளையும், தாக்கிப்போடடுவதை எந்த சக்தியாலையும் தடுத்துப்போட ஏலாது. ஓண்டு கவனிச்சியெண்டால் தெரியும் கொழும்புவிலை சொகுசாக வாழ்வதற்கும், குடிப்பதற்கும், குடிச்சிப்போட்டு உறங்கவும், காசு பணத்திண்ட புழக்கத்திற்கும் ஃபைவ்ஸ்டொர் ஹொட்டலில் தங்கிபோட்டு தாங்கள் வந்த வேலையை மறந்து போட்டு இயக்கத்தாலையிருந்து தப்பிபோகலாம் அப்படியொரு கரும்படையாள் ஒண்டையேனும் காண்பிச்சி போடுங்களன் பார்ப்பம்.
அன்ணை விடுதலை இயக்க ஆட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அரசியல் நீக்கம் செய்த கதையை கொடுக்க முயன்றவை, செங்கிஸ்கானை போண்ட ஆட்கள் வரலாற்றை படைக்க முயற்சித்தவை எண்டு சொல்லுவினம்., அங்காலை விடுதலை இயக்கமும், தலைவரும் ஏதோ திட்டமிட்டு வாரலாற்றை உருவாக்கினம் எண்ட நினைப்பை உண்டாக்கிப்போடுவினம், புதினத்தை வாசிச்சி முடிக்ககைக்க இந்த நினைப்பு வந்துபோடுவதை தவிர்க்க ஏலவில்லை எண்டுதான் சொல்லவேண்டுமப்பா. இதுதான் ஜெயமோகனிண்ட திட்டமோ எண்டும் தெரியேல்லை. வரலாற்றை ஜெயிச்சவங்கள் எழுதுறவை எண்டு பிரசங்கம் பண்ணிப்போடும் அன்ணை, வரலாற்றை திரிச்சிப் போடுறவை ஆர் எண்டதையும் விளக்கிப் போட்டா வடிவாயிருக்கும் என்ன..
உலோகத்திண்ட கதை ஈழச்ச சமூகத்திண்ட அவலத்தை சொல்லினமெண்டா எத்தனை வடிவாயிருக்கும்.. இவன் சொர்லஸ், போராளியானதுக்குப் பின்னாலை எவ்வளவு கனத்த கதையிருக்கும்? ஏதோ துவக்கை தூக்கப் பிடிக்குமெண்டதாலை விரும்பி போரளியாகிப்போட்ட ஆட்கள் எண்டுசொல்ல ஏலுமா என்ன. பெத்த குழந்தை சீவனை அதனிண்ட தாய் கொன்டு போடுறவள் எண்டா அவளிண்ட பின்னால் எங்கட சமூகத்திண்ட அழுத்தம் எத்தனை வலுவாயிட்டிருக்கும் ? அவை விசர் பிடிச்ச மனுசி யெண்டு சொல்லிப் போட்டினமெண்டால் சரியோ? துவக்கை எடுத்தினமெண்டால் அவனை மனநோய் பிடித்தனவனெண்டு எப்படி சொல்லுறது.
வைஜெந்தி –மற்றது பெண்பிள்ளைகள் கழுத்து, கன்னம், உதடு எண்டு ஆராய்ச்சியில் சொர்லஸ் மூழ்கிவிடுவதை காணக்க சிரிப்பதா, அழுவதா எண்டு தெரியேல்லை.
சொர்லஸை பயன்படுத்கொண்ட இவள், பெட்டை, தண்ட தந்தையை போட்டுத்தள்ள கேட்டினமெண்டால், மற்றது, இங்காலை 'இரசீவ் காந்தியை கொன்டவைக்கே' ஆயுள் தண்டனைதான் கொடுத்தினம் என்கிறவள். போறபோக்கிலை, ஆட்களுக்கும், நீதிக்கும் புதிய அறத்தை கற்பிக்கிறவை அன்ணை.
கடைசியிலை பொன்னம்பலத்தார், இயக்கத்தோடை 'லிங்' கிடைச்சிவிட்டதெண்டும், ரோவிண்ட ஆட்கள் பெயர் கேட்டினம் எண்டும் கதைக்கிறவர். எண்டா, சொர்லஸ_க்கு 'டூ' எண்டு மலக்குடலுக்கு செய்தி வருவினம். புறகெண்டா சொர்லஸ், பொன்னம்பலத்தாரை போட்டுத்தள்ளினம்.
பகுத்தறிவுள்ள துவக்கு சொர்லஸ், தான் வந்த வேலையை முடிச்சிப்போட்டு தப்பிக்கிறவன் இங்காலை கதை சுபமாகினம். எண்டா சொர்லஸ், உடம்பிலை துவக்கு சன்னம் அவனை துளைச்சிப் போட்டு இதயத்தாலை வெளிக்கிடுமெண்டால், அவனிண்ட மனுசத்தன்மை வெளிக்கிடுமென்ன!
பிறகெண்டா அவனிண்ட இமை வழியாலை, இதயக்கூட்டினுள் வண்ணத்துப்பூச்சியொண்டு வந்துபோடும் சரியோ!
தங்கடை அன்புத்தம்பி:
விமலன்.
அன்புத்தம்பி 'விமலன்',
திரில்லர் நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட வடிவம். எல்லாக் கதை வடிவங்களும் ஒரே முக்கியத்துவம் கொண்டவை. உள்ளது உள்ளபடி சொல்லும் யதார்த்தபாணி கதைகள் மட்டுமே இலக்கியம், மற்றதெல்லாம் இலக்கியம் அல்ல என்று சொன்ன காலகட்டம் இப்போது இல்லை. எல்லாக் கதைகளையும் போல இதுவும் ஒரு கதை. எந்த யதார்த்தக் கதையிலும் எந்த அளவுக்கு உள்ளடக்கத்தில் உண்மை உள்ளதோ அந்த அளவுக்கு இதிலும் உள்ளது.
இந்த வகை கதை யதார்த்தத்தை 'அப்படியே' சொல்லாமல் வேகமான தொடர்நிகழ்வுகளாக ஆக்குகிறது. அந்தத் தொடர்ச்சிக்காக சில சம்பவங்களை விரிவாகவும் சிலவற்றை சுருக்கமாகவும் சொல்கிறது. ஒரு செயற்கையான இறுக்கத்தையும் ஒற்றைப்படை ஓட்டத்தையும் அடைகிறது. இதெல்லாம் இந்த வடிவத்தின் இயல்புகள். இதை ஒரு யதார்த்தச் சித்தரிப்புக் கதையுடன் ஒப்பிடக்கூடாது. நம்மிடம் இலக்கிய ரீதியாக திரில்லர்களை மதிப்பிடும் அளவுகோல்கள் இன்னும் உருவாகவில்லை.
பொதுவாக இந்நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் அதிக தீவிரத்துடன் எழுதியவர்கள் விடுதலை இயக்கங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். எண்பதுகளின் ஆரம்பத்திலேயே புலம்பெயர்ந்து வசதியாக வாழ ஆரம்பித்தவர்கள். அவர்கள் ஒரு குற்றவுணர்ச்சியாலோ அல்லது தங்களுக்கென பிம்ப உற்பத்திக்காகவோ இன்று அதிதீவிர உணர்ச்சிநிலைப்பாடு எடுக்கிறார்கள். இயக்கங்களின் வாரிசுகளாகத் தங்களையே பதவி நியமனம் செய்துகொள்கிறார்கள். ஏனென்றால் இப்போது எந்த 'ரிஸ்கும்' கிடையாது. அவர்களை நான் ஒரு வகை வேடிக்கைகளாக மட்டுமே எடுத்துக்கொள்கிறேன்.
இதில் சிக்கல் என்னவென்றால் இவர்கள் ஒருவகை வரலாற்று உற்பத்தியைச் செய்வதுதான். புலி இயக்கத்தில் புகை பிடிக்கத் தடை இருந்தது, ஆகவே எந்தபுலியும் எப்போதும் புகைபிடிக்க மாட்டார், அவ்வாறு சொல்வதே அவதூறு என்றவகையில் பஜனை. நேற்று ஆயுதத்தால் விரும்பிய வகையில் வரலாறை எழுதவைக்க முயன்றார்கள். இப்போது கழிவிரக்கம் குற்றவுணர்ச்சியை அதற்குப் பயன்படுத்துகிறார்கள். இலக்கியம் இதற்கெல்லாம் கட்டுப்படாது.
அமைப்புகளில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்த பலர் எனக்கு இன்னும் நெருக்கமான நண்பர்கள். ஒருவரேனும் இந்த நாவலை பற்றி இவ்வகைக் கருத்துக்களைச் சொல்லவில்லை. அதிகம்போனால் இனிமேல் இதையெல்லாம் பேசி என்ன என்ற சலிப்பை மட்டுமே சொன்னார்கள். சலம்புபவர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது
தம்பி கனகாலமாய் இயக்கத்தில் இருந்தீர் என்றீர்கள். சீனியரிடம் கேட்டுப்பாருங்கள். யார் யார் என்ன ஏது என்று தெளிவாகவே சொல்வார்கள்.அதை மோகனராஜனுக்கு எழுதி அனுப்புங்கள். அவர் உள்ளூரில் இருந்துகொண்டு உலக வரலாற்றை எழுதுகிறார்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஹனீபா-கடிதம்
ஈழம்-இருகடிதங்கள்
புதிய புத்தகங்கள்-கடிதங்கள்
புத்தகக் கண்காட்சி-கடிதங்கள்
மனித ஆயுதம்
உலோகம் நாவல் தொகுப்பு
உலோகம் 12
உலோகம் – 2
உலோகம் 1
கூடங்குளம் இரு கடிதங்கள்
Dear J,
I feel you have not considered all facts about the issue and got swayed by mass movement.
1. Safety Aspects during Normal Times : Nuclear reactors are extremely safe to operate. BARC reactors are about 50 years old, scientists and engineers have joined and retired after having spent their entire working life there. We, in the defence services, live and work within a few meters of nuclear reactor in nuclear submarines for months together. Officers and sailors are as healthy as others serving in surface ships. So this talk of radiation hazard from a working nuclear reactor is incorrect information.
2. Safety Aspects during Earth Quake/Sunami etc: Though the reactor is designed to withstand a certain degree of earth quake, disaster can not be ruled out in case of severe earth quake. However geologically South-Indian rocks are 3.5 billion years old and there is no known appreciable earth quake activity in recorded times.
Assuming Kudankulam activists are right in their demand to scrap the project in view of one in billion chance of severe earth quake occurring at unknown future, the other issues to be addressed are:
1. Should we scrap all other nuclear installations such as Kalpakkam, Kota, Tarapore etc?
2. Should we scrap BARC research reactors since they can also cause disaster in case of an earth quake? Of course all scientists and engineers can be asked to take voluntary retirement.
3. If we scrap all nuclear reactors from where we will get fissionable materials to make atom bombs?
4. Again from where we get isotopes to treat cancer patients and other innumerable industrial applications? We should start importing them at considerable cost. What will happen to patients who can not afford the high cost?
5. Should we scrap our nuclear submarine project since it will also have a nuclear reactor and will be berthed in naval ports like Mumbai, Vizag, Calcutta etc?
6. What do we do with our existing stock of atom bombs (about 120-150). They are located in the Air Force stations which are very close to cities such as Jamnagar, Pune, New Delhi, Pathankot etc. In case of earth quake, the bomb materials will spill over and there will be a disaster.
7. If we decide to dismantle our nuclear weapons, what happens to our nuclear deterrence? The western world will be thrilled and Pakistan & China may declare a national holiday and celebrate. Kudankulam protesters may even get Nobel Peace Prize for dismantling Indian Nuclear weapons and derailing nuclear programme..
A lot of such issues are there. Mass hysteria instigated by a few self-appointed activists can not address these issues.
The real danger/ disaster waiting to happen is not a nuclear reactor in Kudankulam , but an atom bomb/crude nuclear bomb in the hands of Isalmic terrorists.
regards,

Dear Jeyamohan,
Last week I came to know you and now I read your articles.
Your articles are good.After coming to know about the fasting, I decided to know more about nuclear energy and gather facts about KNPP.
I have attached one article that isn't related to KNPP but relevant.
I am not a scientist.
But I understood that the reactor and the fuel used in KNPP are very bad for the people and the environment.
Please take a few minutes to read the attached article.
After reading similar articles, I realized that nuclear energy is neither safe nor cheap.
KNPP cannot be economical with just two reactors.
NPCIL is a for-profit company and will try to bring as much as possible.
I question their ability to manage complex and high risk technology.
The KNPP project timeline speaks in volume and unaccountability.
Through this fast, people of Idindakarai and Koodunkulam have laid a foundation to question nuclear energy in India.
The struggle has just began.
Thanks for your time.
Michael Titus
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சண்டிகேஸ்வரர்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமா? போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார்.
திடீரென்று இன்று இணையத்தில்தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் தந்தை காலை விசாரசருமர் வெட்டிவிடுகிறான்.உடனே சிவன் பார்வதியுடன் தோன்றி சண்டிகேச பதவியைத் தருகிறார்.
மக்களுடைய நம்பிக்கை
1) சிவனை வணங்கும்போது சண்டிகேஸ்வரரையும் வணங்கினால்தான் பலன் கிட்டும்
2) கைதட்டுவது நூலைப்போடுவது போன்றவைகள், நான் எதையும் கோயிலிலிருந்து எடுத்துச் செல்லவில்லை என்று சொல்வதற்கு.
3) கைதட்டுவதும் நூலைப்போடுவதும் கூடாது என்றும் சிலர்….
4) சண்டிகேஸ்வரர் கோயிலை வலம்வரக்கூடாது என்று சிலர்
ஒரு நம்பிக்கைக்கும் மற்றொரு நம்பிக்கைக்கும் பெரிய முரண் உள்ளது. நம்பிக்கைகள் ஒருமையாக இருந்தால் ஏதோ பின்பற்றலாம்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது? எது மூலக்கதை? இதைப்பற்றி எந்த நூலாவது சொல்கிறதா? உண்மையில் சண்டிகேஸ்வரரின் தத்துவம் என்ன? தயவுசெய்து விளக்கம் அளிக்கவும். செய்வீர்களா? நன்றி.
இப்படிக்கு
பா.மாரியப்பன்

சண்டிகேஸ்வரர்
அன்புள்ள மாரியப்பன்,
முதல் குழப்பத்தைக் களையுங்கள். சண்டீச நாயனார் என்ற சிவ பக்தருக்கும் சண்டிகேஸ்வரர் என்ற சைவக்கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.
சண்டீசநாயனார் பத்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவராக இருக்கலாம். அவரைப்பற்றி இருவேறு கதைகள் உள்ளன. பெரியபுராணத்தின்படி அவர் திருசேஞ்ஞல்லூரில் காசியப கோத்திரத்தில் எச்சதத்தன் என்ற அந்தணரின் மகனாகப் பிறந்தவர் . பெயர் விசாரசருமர். சிவரகசியம் என்ற நூலில் கர்க்ககுலத்தில் கணபத்திரன் என்ற அந்தணரின் மகனாகப்பிறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் வந்த நூல்களில் சண்டீச நாயனார்தான் சண்டிகேஸ்வரர் என்ற கூற்று உள்ளது. ஆனால் அது சரியானதல்ல. சண்டீஸ்வரர் ஒரு தொன்மையான தெய்வம். சண்டீசநாயனாரின் கதை அந்த தெய்வத்துடன் பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் இணைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். சண்டீஸ்வரர் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவத்துக்குள் நுழைந்த தெய்வம்.
அதற்கு ஆதாரமாக இன்று சொல்லப்படவேண்டியது ஆகமமுறைப்படி சண்டிகேஸ்வரர் ஒரு பரிவார தேவதை அல்ல என்பதையே. சிவனைப்போலவே அவர் ஒரு தனிக்கடவுள். காமிகஆகமத்தில் அவருக்குத் தனி ஆலயம், கொடிமரம், பூசைவிதிகள் ,திருவிழா எல்லாமே சொல்லப்பட்டுள்ளன. ஆகவே எப்போதோ ஒரு காலகட்டத்தில் ஒரு தரப்பு மக்களின் தனிப்பெருந்தெய்வமாக இருந்திருக்கிறார். இவருக்கு தேவியும் உண்டு. சண்டிகா தேவி.
ஆகமங்களின் படி இவர் கரியநிறம் கொண்டவர். காளை வாகனம் கொண்டவர். நான்கு கரங்கள். அவற்றில் சூலம் உளியும் கொண்டு அபய, வரத முத்திரைகளுடன் இருப்பார். நான்கு தலைகள். நாகத்தால் உபவீதம் [பூணூல்] அணிந்து நாககங்கணம் அணிந்து வெண்தாமரைப் பீடத்தில் அமர்ந்திருப்பார். ஆனால் சண்டிகேஸ்வரர் ஒரு பெருந்தெய்வமானதனால் அவருக்குப் பல்வேறு தோற்றங்கள் உண்டு. ஆகவே ஊருக்கொரு வடிவில் காணப்படுவார்.
இவர் எந்த மக்கள்குழுவின் தனிக்கடவுளாக இருந்தார் என்று தெரியவில்லை.சைவம் பெருமதமாக எழுந்த காலகட்டத்தில் பல்வேறு தெய்வங்கள் சைவத்துக்குள் இழுக்கப்பட்டன. தட்சிணாமூர்த்தியும் அப்படிப்பட்ட தனிப்பெரும் தெய்வமே. அவை சிவ வடிவங்களாகவோ சிவசம்பந்தம் கொண்ட தெய்வங்களாகவோ உருமாற்றம் பெற்றன. சண்டிகேஸ்வரரும் அப்படி பரிணாமம் கொண்டவர்.
ஆனால் சைவத்துள் நுழையும்போதே சண்டிகேஸ்வரர் முழுமுதல் கடவுளாக இருந்திருக்கிறார், பழங்குடித்தெய்வமாக அல்ல. அதற்கு உதாரணம் அவரது தாமரை இருக்கை. அவரது நாக ஆபரணங்களை வைத்துப் புராதன நாகர்களின் தெய்வம் அவர் என்று சொல்பவர்கள் உண்டு.
சைவம் பெருமதமாக வளர்ந்த காலகட்டத்தில், அதாவது பிற்காலச் சோழர்காலகட்டத்தில், பல்வேறு தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் சைவத்துக்குள் கொண்டுவரும்பொருட்டு ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர தலபுராணங்கள் ஆங்காங்கே இருந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. பின்னர் பூசாரிகள் அவரவர்களுக்குத் தோன்றிய சடங்குகளையும் கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார்கள்.
எனவே சிவவடிவங்கள், உபதெய்வங்கள் சார்ந்த எல்லா வினாவுக்கும் நாம் ஆகமங்களை ஆராய்வதே முறையாகும். ஆகமமுறைகளின்படி அவருக்கு பலிச்சடங்குகள் இல்லை. முதற்பெரும்தெய்வத்துக்குரிய எல்லாப் பூசைகளும் செய்யப்பட்டாகவேண்டும். அதாவது அவர் சிவபரிவாரம் அல்ல சிவ வடிவம்.
சண்டிகேஸ்வரருக்குப் புத்தாடை [வஸ்திரம்] சார்த்தி வழிபடவேண்டும். அதைத்தான் யாரோ எப்போதோ பஞ்சகாலத்தில் நூலே போட்டால் போதும் என மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அது புதியநூலாக இருக்கவேண்டும். ஆடையில் இருந்து பிய்த்துப்போட எவர் ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. இந்த அபத்தமான வழக்கத்துக்கு உடனே ஒரு கதையையும் கட்டிவிட்டார்கள். காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் இதைப் பல இடங்களில் கண்டித்திருக்கிறார்.
சண்டிகேஸ்வரரை வலம் வருதல் கூடாது என்பதும், கும்பிடும்போது கைதட்டிக்கும்பிடவேண்டும் என்பதும் அத்தெய்வத்தின் மூலமதத்தில் இருந்த நம்பிக்கை, சடங்கு ஆக இருக்கலாம். இப்படி பல தெய்வங்கள் பெரு மதத்தில் இணையும்போது அந்த மூல வழிபாட்டு முறை பெரும்பாலும் அப்படியே நீடிப்பதே வழக்கம். நவக்கிரக வழிபாடு, சக்கர வழிபாடு, சூரிய வழிபாடு, கணபதி வழிபாடு போன்றவை உதாரணம். காரணம் அந்தத் துணைமதப்பிரிவினர் தங்கள் தெய்வத்தை அதே முறைப்படித்தான் பெரும்கோயிலுக்குள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
இன்று அவை அப்படியே நீடிப்பது அவசியமும் கூட. ஒன்று, அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள். இரண்டு,அவை தொன்மங்கள் , குறியீடுகள். அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது. தியான மரபில் அவற்றுக்கு வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஆகவே சடங்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கோயிலுக்கே செல்லக்கூடாது. நம்பிக்கை இருந்து கோயிலுக்குள் சென்றால் குறியீட்டுச் சடங்குகளை மாற்றக்கூடாது.
சண்டிகேஸ்வரர் பற்றிய கதைகள் பிற்காலத்தைய அர்ச்சகர்களின் கற்பனை வளமற்ற உருவாக்கங்கள் மட்டுமே. அதாவது சிவன்கோயிலின் காவலர் சண்டிகேஸ்வரர், கோயிலைவிட்டுச் செல்லும்போது ஒன்றும் கொண்டுசெல்லவில்லை என்று கைதட்டிக் காட்டவேண்டும் என்பது . எந்த முக்கியமான நூலிலும் இந்த கதைகள் கிடையாது. ஒரு ஐம்பது அறுபது வருடங்களில் உருவாக்கப்பட்ட அசட்டுக் கதை இது. முன்னரே சொன்னதுபோல காமிக ஆகமப்படி சண்டிகேஸ்வரர் ஒரு காவலர் அல்ல, துணைத்தெய்வமும் அல்ல, இணைத்தெய்வம்.
சண்டிகேஸ்வரர் பற்றிய ஆகம நெறிப்படுத்தல் இவ்வளவே. சிவாலயத்துக்குள் நுழைவதற்கு முன்னரே ஆலயச்சுற்று வரும்போது அவரை வழிபடவேண்டும். ஒரேமுறை கைதட்டி மும்முறை வணங்கவேண்டும். அச்சம், நடுக்கம் தவிர்க்க அவரை வழிபடலாம். அவருக்கான பிற வழிபாடுகள் எல்லாமே சிவனுக்குரியவைதான். அவரை சிவ வடிவமாகவே எண்ணவேண்டும், பரிவார தேவதையாக அல்ல
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
September 21, 2011
கூடங்குளம்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
கூடங்குளம் பற்றிய உங்கள் பதிவையைப் படித்தேன். உண்மையில் அணுசக்தி மட்டும் தான் நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கு தீர்வாக அமையும் என்ற மத்திய அரசின் பேச்சு எடுபடாததுதான். ஜார்ஜ் புஷுடன் மன்மோகன் சிங் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நிறுவனங்களின் நன்மைக்காகவே செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த வகையில் அதை எதிர்ப்பதும் ஜைதாபூர் போன்ற நிலநடுக்கப் பாதிப்புள்ள இடங்களில் மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதும் ஏற்கத்தக்கதே. அதே சமயம் கூடங்குளம் மிகுந்த நிலநடுக்கப் பாதிப்புள்ள இடமல்ல. உண்மையில் பூமியில் எந்த இடம் தான் முற்றிலும் நிலநடுக்கப் பாதிப்பற்றது?
3.5 பில்லியன் டாலர் செலவு செய்து அணுமின் நிலையத்தைக் கட்டிமுடித்தாகிவிட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அணுமின் நிலையங்களுக்கு இன்றைய மாற்று என்ன என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா? நிலக்கரி மின் நிலையங்கள் அமைக்கலாம். நிலக்கரி இந்தியாவில் நிறையவே கிடைக்கிறது, ஆனால் அதை தோண்டுவதும் பயன்படுத்துவதும் சுற்றுசூழலுக்கு மிகுந்த பாதிப்பை உருவாக்குகிறது. அதற்குப் பதில் அணைகளைக் கட்டி நீரில் இயங்கும் மின் நிலையங்களைக் கட்டலாம் ஆனால் அதுவே நிலநடுக்கங்களை உருவாக்குகிறது என்று கருதப்படுகிறது. அதுபோக வனங்களும் அழிகின்றன. இந்தியாவில் நீர் மின் நிலையங்கள் கட்ட நீர் வளமும் குறைவு, அதுவும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அது மிகவும் குறைவு. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் படித்தேன் சூரிய சக்திப் பலகைகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று சுற்றுப்புறத்தை பெரிதும் மாசுபடுத்துவதால் சீனாவில் ஒரு ஊர் மக்கள் அதற்கு எதிராகப் போராடி அடி வாங்கினார்கள் என்று.
அணுமின் நிலையங்கள் மட்டும் தான் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றனவா? உலகத்திலேயே மிகவும் பயங்கரமான தொழிற்சாலை விபத்துக்களில் ஒன்றாகக் கருதப்படும் போபால் விஷவாயு விபத்து ஒரு ரசாயனத் தொழிற்சாலையால் ஏற்பட்டது என்பது நாம் அறிந்ததே. பல அணுமின் நிலைய விபத்துக்களை விட அதிகமாக மக்கள் அதில் பாதிக்கப்பட்டனர். அதை விடுங்கள், எண்டோஸல்பான் கேரளத்தில் இத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? பொதுவாக பசு போல சாதுவாகக் நம் நகரங்களில் காட்சியளிக்கும் பல ரசாயனத் தொழிற்சாலைகள் இந்த வகையைச் சேர்ந்தவையே. அவற்றை எல்லாம் எதிர்க்க நாம் தயாராக இருக்கிறோமா?
அதற்காக நான் அணுமின் நிலையங்களே நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்குத் தீர்வு என்று கூறவில்லை. ஆனால் அதை முற்றிலும் நிராகரிக்கும் முன் அதற்கு பதில் என்ன என்பதையும் எண்ண வேண்டும் என்று தான் கூறுகிறேன். கூடங்குளத்தை பொறுத்தவரை அது செர்னோபில் உலையின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டது. செர்னோபில் RBMK என்ற வகையைச் சார்ந்தது, கூடங்குளம் VVER 1000 மற்றும் VVER 1200 வகையைச் சார்ந்தது. இது இன்று பல மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தபடும் அணு உலைகளுக்கு நிகராகவே கருதப்படுகிறது.
இன்று அணு உலைகளை புதிதாக எந்த மேற்கத்திய நாடும் நிறுவவில்லை என்றாலும் இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகளை படிப்படியாகத் தான் மூடுகின்றனவே தவிர உடனடியாக அல்ல. ஜெர்மனியைப் பொறுத்தவரை அணு உலைகளை மூடும் திட்டம் அரசியல் சார்ந்தது. அங்கு அரசியலில் பசுமைகட்சிகள் எனப்படும் சுற்றுச்சூழல் தீவிரவாதக்கட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே மற்ற கட்சிகள் அவற்றை விடப் பசுமையாகக் காட்டிக்கொள்ள முயலுகின்றன.
இன்று கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்குக் காரணம் நமது அரசு பொதுவாக மக்களின் நம்பிக்கையை பெறாததே என்று நான் நினைக்கிறேன். பொதுவாக மாசுகட்டுப்பாட்டு விதிகள் சரியாக கடைபிடிக்கப்படும் நிலை இருந்திருந்தால் மக்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பார்களா என்பது சந்தேகமே.
நானும் திருநெல்வேலி மாவட்டத்துக்காரன் தான். இப்போது சென்னையில் வசிக்கிறேன். என்னைப்போல பலர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பிழைப்புக்காக வந்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இங்கு மட்டும் பாதுகாப்பு இருக்கிறதா என்ன? கல்பாக்கம் அணு உலையில் ஏதாவது பிரச்சனை என்றால் சென்னை முழுவதும் தான் பாதிக்கப்படும். அது போக சென்னை பலகாலமாகவே பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அணுஆயுத ஏவுகணைகளின் எல்லைக்குள் இருக்கிறது. இது தான் இன்று மனித குலத்தின் நிலை. ஒருவரை ஒருவர் முற்றிலும் அழிக்கக் குறி வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியில் இந்தியா மிகுந்த தயக்கத்துடன் தான் சேர்ந்தது. இதற்குத் துணியாவிட்டால் நாம் மானமிழந்து பிறநாடுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழவேண்டியிருக்கும் என்பதே உண்மை.
இதற்கெல்லாம் காரணம் மனித குலம் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு நிகராக தன்னைப் பெரிதாகக் கருதி செயல்படுவதே என்று நான் கருதுகிறேன். ஆனால் வேறு வழியுமில்லை. கணக்குப் பார்த்தால் எதுவுமே சரியில்லை. ஒரு இருதய சிகிச்சை நிபுணரிடம் ஒரு பத்திரிக்கையாளர் எந்த எண்ணெய் இதயதுக்கு நல்லது என்று கேட்டார். அதற்கு அவர் எல்லா எண்ணெயுமே கெட்டது என்றார். ஆனால் இதற்கு அது பரவாயில்லை என்று தான் பார்க்கமுடியும். அது போல ஒரு ஆராய்ச்சியில் ஒரு பிரிவினருக்கு தானிய வகை உணவும் இன்னொரு பிரிவினருக்கு திண்பண்ட வகையும் காலை உணவாகக் கொடுக்கப்பட்டது. அவர்களில் தானிய வகை உண்டவர்கள் நாளை மகிழ்ச்சியோடும் திண்பண்டம் உண்டவர்கள் நாளை கவலையோடும் கழித்தனர், தாங்கள் உண்ட உணவை எண்ணி. ஆனால் கொடுக்கப்பட்ட தானியவகை மற்றும் திண்பண்ட வகை உணவுகள் இரண்டுமே ஒரே அளவு போஷாக்கு கொண்டவையே. இது போலத்தான் அணுசக்தி பற்றிய விவாதமும். ஒளிவுமறைவின்றி உண்மைகளை சொல்லி, பொறுமையுடன் கேள்விகளுக்கு பதிலளித்து, மக்களின் நம்பிக்கையைப் பெறாவிட்டால் மிகவும் கடினம்.
இந்த வகையில் தமிழக அரசின் செயல்பாட்டை நான் வரவேற்கிறேன். மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்துவது நல்லதல்ல. அதே சமயம் வெறுமனே அணுமின் சக்தியைப் பற்றிய விவாதமாக இல்லாமல் இது ஒட்டுமொத்தமாக நமது எரிசக்திக் கொள்கையைப் பற்றிய விவாதமாக நடைபெற வேண்டும். அப்படிச் செய்தால் இருபுறமும் உள்ள நிறைகுறைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
சண்முகம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கூடங்குளம் அனுபவப்பதிவு
21-09-2011 காலை மீண்டும் கூடங்குளம் செல்வதாக முடிவெடுத்தேன். சென்றமுறை சென்றபோது கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரைக்கு பேருந்து விடப்படுவதில்லை என அறிந்து வெயிலில் வெந்து நடந்துசெல்ல நேரிட்டது. ஆகையால் பார்வதிபுரத்தில் இருந்து ஒரு டாக்ஸி பிடித்துச் செல்ல முடிவெடுத்தேன்.டாக்ஸி இருப்பதனால் அ.கா.பெருமாளை அழைத்துப்பார்த்தேன். அவர் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். வேதசகாயகுமார் வருவதாகச் சொன்னார். இருவருமாகக் கிளம்பினோம்.
பத்துமணிக்கு கூடங்குளம் தாண்டிச்சென்றோம். கூடங்குளத்தில் வழக்கத்தைவிட அதிகமான போலீஸ்பாதுகாப்பு. படைபடையாக சீருடையணிந்த காவலர்கள் இறக்கப்பட்டிருந்தார்கள். எங்கள் வண்டியை அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை என்றாலும் கூட்டமாக மக்கள்செல்லும் வேன்களை நிறுத்தி சோதனையிட்டு கேள்விகள் கேட்பதைக் கண்டேன். விஜயாபதி என்ற ஊரைத்தாண்டி இடிந்தகரைக்குச் செல்லவேண்டும். இடிந்தகரை கடலோரமாக அமைந்த ஒரு சின்னஞ்சிறு மீனவக் கிராமம். அங்கே லூர்துமாதா ஆலயத்தருகே அமைந்த பந்தலில் உண்ணாவிரதம் நடக்கிறது.
கூடங்குளத்துக்குள் எந்த வகையான போராட்டத்துக்கும் அனுமதி இல்லை என்பதனால்தான் இந்த சிற்றூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஓரளவு வசதியான சிற்றூர். பேருந்து வசதி வழக்கமாகவே மிகக் குறைவு. இப்போது முற்றாகவே நிறுத்திவிட்டார்கள். ஆனால் ஒரு வகையில் நல்லதுதான். நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்துவதற்கான இடமும் மக்கள் கூடுவதற்கான வசதியும் இங்கே உள்ளன. இந்தச் சிற்றூர் எப்படியோ வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது
நாகர்கோயிலில் நல்ல சிலுசிலுவென இளமழை. நேர்மாறாக அஞ்சுகிராமம் தாண்டியதுமே திருநெல்வேலியின் அனல் அடிக்க ஆரம்பித்திருந்தது. இடிந்தகரைசெல்வதற்குள் உடல்கொதிக்கும் வெயில். அந்த வெயிலில் திருவிழாக்கூட்டம்போல மக்கள் நாலாபக்கமும் கிராமங்களில் இருந்து கிளம்பி வந்து குவிந்துகொண்டே இருந்தார்கள். பத்தாம் நாளாகிய இன்று கூட்டம் உச்சகட்டம். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம்பேர் வரை பந்தலிலும் வெளியிலுமாக கூடியிருந்தார்கள்.
கூட்டத்தைப்பற்றிய அவதானிப்புகள் ஆச்சரியம் அளித்தன. கூட்டத்தில் எழுபது சதவீதம்பேர்வரை பெண்கள். குழந்தைகளுடன் நிறையப்பெண்கள் இருந்தார்கள். பல ஊர்களில் இருந்து திரளாக கிளம்பி கால்நடையாகவும் வண்டிகளும் வந்தார்கள். அவர்கள் பந்தலுக்குள் நுழையும்போது எந்த ஊரில் இருந்து வருகிறார்கள் என்பது அறிவிக்கப்பட்டு கூட்டாக கோஷம்போடப்பட்டது. பெரும்பாலும் பெண்கள் பந்தலில் அமர ஆண்கள் வெளியே கூடி நின்றார்கள்.
ஏற்கனவே கடலோர மக்கள் நிகழ்த்தும் சில போராட்டங்களை நான் கவனித்திருக்கிறேன். கரைமக்கள் அவற்றில் பங்கெடுப்பதில்லை. நெடுங்காலமாகவே அவர்களுக்குள் நிகழ்ந்து வந்த பூசல்கள் ஒரு நிரந்தரப்பகையை உருவாக்கியிருந்தன. மேலும் கடலோர மக்களின் போராட்டங்களை பெரும்பாலும் கிறித்தவ கத்தோலிக்க திருச்சபை முன்னின்று நடத்துவதனால் அவற்றுக்கு எப்போதுமே ஒரு மத அடையாளம் உண்டு. இந்தபோராட்டத்திலும் திருச்சபையின் பங்கே மையமானது. ஆனால் பெருமளவில் கரையோர மக்கள் பங்கெடுத்ததைக் காணமுடிந்தது. குறிப்பாக அய்யாவழி குருவான பாலபிரஜாபதி அடிகள் பங்கெடுத்தமையால் அவரது ஆதரவாளர்கள் நிறைய பேர் பந்தலில் இருந்தனர்.
எண்பதுகளின் இறுதியில் கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே அதற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்தன. அவற்றில் சிலவற்றில் நான் காசர்கோட்டில் இருந்து வந்து கலந்துகொண்டிருக்கிறேன், ஒருமுறை சுந்தர ராமசாமியும் வந்திருக்கிறார். அப்போது ஆர்ப்பாட்டங்களுக்கு இருநூறுபேர் இருந்தால் அதிகம். கடலோர மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கரைமக்கள் அணுமின் நிலையம் வந்தால் தங்கள் தரிசு நிலங்களுக்கு பெரும் விலைமதிப்பு உருவாகும் என்ற நம்பிக்கையில் அதற்கு ஆதரவாக இருந்தார்கள்.
அரசுதரப்பில் செய்யப்பட்ட கடுமையான பிரச்சாரங்கள் காரணமாக அன்று மெல்லமெல்ல எதிர்ப்பு போராட்டங்கள் வலுவிழந்தன. ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி முதல்வராக பின்னாளில் பணியாற்றிய ஒரு இயற்பியல் பேராசிரியர் தலைமையில் 'அறிஞர்'படை கிராமம் கிராமமாகச் சென்று அணு உலை என்பது அதிகபட்சம் நூறு செங்கற்சூளை அளவுக்கு வெப்பத்தை உமிழக்கூடியது, அவ்வளவுதான் என பிரச்சாரம்செய்தார்கள். அத்துடன் சர்வதேச அணுசக்தி குழும எதிர்ப்பினால் திட்டம் கிடப்புக்குச் சென்றபோது எதிர்ப்பும் மழுங்கியது.
அதன்பின்னர் 2001ல் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் திட்டம் புத்துயிர் பெற்றது. அப்போது எதிர்ப்பு வலுவாக உருவாக ஆரம்பித்தது. அதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நண்பர் 'அசுரன்' சிலமுறை என்னைச் சந்தித்திருக்கிறார். [அவரது நூலை நான் நியூயார்க்கில் வெளியிட்டிருக்கிறேன்] இன்றைய அளவில் எதிர்ப்பியக்கம் உருவாக சுப.உதயகுமார் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து இதில் ஈடுபட ஆரம்பித்தது முக்கியமான காரணம். அத்துடன் மீனவர்கள் உண்மையான பாதிப்புகளை உணர ஆரம்பித்ததும் சேர்ந்துகொண்டது.
அன்றிருந்த எதிர்ப்பியக்கத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது சூழியல் ஆர்வம் கொண்ட சிலர் முன்னெடுக்கும் இயக்கமாக இல்லை. பெரிய மக்களியக்கமாக உள்ளது. மக்களியக்கத்துக்கே உரிய வேகம், கட்டின்மை, கொந்தளிப்பு எல்லாமே உள்ளது. அங்கே அத்தனை மக்களைப்பார்த்தது பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அனேகமாக ஒரு சூழியல் இயக்கத்தில் இத்தனை மக்கள் பங்கேற்பு தமிழகத்தில் இதுவே முதன்மையானதாக இருக்கும்.
மேடையில் கவிஞர் மாலதி மைத்ரியை பார்த்தேன். என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். என்னையும் வேதசகாயகுமாரையும் அமைப்பாளர்களுக்கு அறிமுகம்செய்து வைத்தார். முன்னால் அமர்ந்துகொண்டோம். தொடர்ந்து பல்வேறு சூழியல் குழுக்களைச்சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்தவகையான இயல்பான மக்களியக்கத்தை அருகில் இருந்து கவனிக்கும்போது நான் கொண்டிருக்கும் பல எண்ணங்கள் உறுதிப்பட்டன. பல புரிதல்கள் உருவாயின. ஏற்கனவே அண்ணா ஹசாரே இயக்கம் பற்றி இவ்வகை மனப்பிம்பங்களே எனக்கிருந்தன.
ஒரு குறிப்பிட்ட கோட்பாடு அல்லது கொள்கை சார்ந்து ஒருங்கிணைந்த தொண்டர்படைக்கும் இந்த மக்களுக்கும் பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.இவர்கள் பொதுவான நம்பிக்கைகள் கொண்டவர்கள் அல்ல. பொதுவான அச்சங்களையும் பொதுவான கோரிக்கைகளையும் கொண்டவர்கள் அவ்வளவுதான். இவ்வாறு தன்னிச்சையாக திரளும் கூட்டம் மீது அதன் அமைப்பாளர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு மிக குறைவானது. இத்தகைய போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால் அல்லது ஊடகம் எதிர்மறையாக சித்தரிக்க நினைத்தால் மிக எளிதில் இதில் பேதங்களையும் குழப்பங்களையும் உருவாக்கிவிடமுடியும்.
ஏனென்றால் அமைப்பாளர்கள் எந்த ஒரு தரப்பின் ஆதரவையும் மறுக்க முடியாது. போராட்டக்களத்தில் நின்றுகொண்டு ஆதரவாளர்களின் உண்மையான நோக்கத்தையும் கொள்கைகளையும் பரிசீலிப்பதும் சீர்தூக்கி பார்ப்பதும் சாத்தியமல்ல. முடிந்தவரை அனைவரையும் கூட்டி ஆதரவுத்தளத்தை விரிவாக்கம்செய்வதை மட்டுமே செய்யமுடியும். இந்நிலையில் போராட்டத்தை நடத்தும் மையக்குழுவின் கருத்துக்களை மட்டுமே அந்த போராட்டத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டும், அந்த மேடையில் ஒலிக்கும் எல்லா குரல்களையும் அப்படி எடுத்துக்கொள்ள கூடாது.
ஆனால் பொதுவாக போராட்டத்தின் எதிரிகள் அப்படி தங்களுக்கு தாக்க வசதியான குரலை எடுத்துக்கொண்டு அதையே போராட்டத்தின் குரலாக காட்டமுயல்வார்கள். அண்ணா ஹசாரேயின் போராட்டத்தில் அதுவே நடந்தது. அதற்கான எல்லா வாய்ப்புகளும் இந்த மேடையில் இருந்தன. தீவிர இடதுசாரிகள், தமிழ்த் தேசியவாதிகள், கிறித்தவ பாதிரிமார் என மேடையேறியவர்கள் தங்கள் அரசியலையே பேசினார்கள். தங்கள் எதிரிகளை தாக்கினார்கள். பலருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
முன்னாள் நக்சலைட் சுப.இளவரசன் தலைமை தாங்கும் தமிழ்தேசியக் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு விதிக்கப்பட்ட தமிழ்தேசியவாதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்று துண்டுபிரசுரம் அச்சடித்து வந்து வினியோகம் செய்தார்கள். பங்கேற்றிருந்த பல கிறித்தவர்களுக்கு அவ்வெண்ணம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளமுடிந்தது. சுப.தமிழரசன் அனல் கக்க பேசுவார் என நினைத்தேன். தட்டுத்தடுமாறி ஏதேதோ பேசினார். தமிழகத்தில் போலீஸ் என்கவுண்டருக்கு நாள் குறித்தபின் தப்பியவர் அவர் மட்டுமே என்றார். தன் கட்சியின் அரசியலைப்பற்றி சொன்னார். தமிழர்களைக் கொல்ல இரு அணுநிலையங்களை வடவர் அரசு அமைத்துள்ளது என்பதே அவரது பேச்சின் சாரம்.
சில இளைஞர்கள் வன்முறையாகப் பேசி கைதட்டல் பெற முனைந்தார்கள். இத்தகைய அரங்குகளை இவ்வாறு சம்பந்தமற்ற கோரிக்கைகளுக்கான களமாக ஆக்குவது மிக எளிதாக திசைதிருப்பல்களை கொண்டுவந்து சேர்க்கும். ஆனால் இதை எந்த அமைப்பாளர்களும் தடுக்கமுடியாது. இத்தகைய ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க மட்டுமே முடியும். அதுவே வளர்ந்து முடிவை நோக்கிச் செல்லும். மக்கள்சக்தி என்பது புதுவெள்ளம் போல. எல்லாவற்றையும் அடித்துக்கொண்டுவந்து சேர்க்கும்.
சூழியல் அமைப்புகளைச் சேர்ந்த பலர் புள்ளிவிவரங்களுடன் அழகாகப் பேசினார்கள். பொதுவாக கேரளத்தில் இருந்து வந்திருந்த சூழியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நன்றாக தகவல்களுடன் பேசினார்கள். ஏற்கனவே அவர்களுக்கு இந்த வகையான போராட்டங்களில் அனுபவம் இருந்தது. ஒரு மலையாளப்பேச்சை வேதசகாயகுமார் மொழியாக்கம் செய்தார்.
என்னை மேடைக்கு பேச அழைத்தார்கள். நான் வாழ்நாளில் இதைப்போன்ற ஒரு பெருங்கூட்டத்தில் பேசியதில்லை. கண்முன் முகங்களின் கடல். கண்களைப்பாராமல் பேசி எனக்கு பழக்கம் இல்லை. மூச்சுத்திணறி ஐந்து நிமிடம் பேசினேன். 'சமீபத்தில் தூத்துக்குடியில் ஒரு கப்பல் வந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் இருந்தது முழுக்க சிகாகோ நகரின் குப்பை. கக்கூஸ் குப்பை. ஆஸ்பத்திரிக் கழிவு. நோய்பரப்பும் பொருட்கள். அவற்றை நமக்கு அவர்கள் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். நாம் அவர்களின் குப்பைக்கூடையாக ஆகிவிட்டிருக்கிறோம்' என்றேன்
'அதேபோன்ற ஒரு பெரிய குப்பைதான் இந்த அணுமின்நிலையம். இது நமக்கு பரிசாக அளிக்கப்பட்டது என்றும் நாம் விலைகொடுத்து வாங்கியது என்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு பயன்படாத குப்பை. அவர்களுக்கு ஆபத்தான குப்பை. நாம் இதை விலைகொடுத்து வாங்கி கொண்டுவந்து வைத்திருக்கிறோம்' என்றேன்
வேதசகாயகுமார் நன்றாகவே பேசினார். 'இந்த திட்டம் முதலில் கேரளத்திற்குத்தான் கொண்டுவரப்பட்டது. வருமுன் காக்கும் எண்ணத்துடன் அவர்கள் எதிர்த்து இதை துரத்தினார்கள். ஆனால் இந்த அணு உலையின் முக்கியமான நோக்கம் திருவனந்தபுரம் டைடல் பார்க்குக்கு மின்சாரம் வழங்குவது. ஆகவே கேரளத்தை விட்டு அதிக தொலைவில் இல்லாத நம் மண்ணில் இதை நிறுவினார்கள்' என்றார்.
மாலதிமைத்ரி உணர்ச்சிகரமாகவும் நன்றாகவும் பேசினார். 'நம்முடைய பிரச்சினையே அறிவுஜீவிகளை எப்படி சமாளிப்பது என்பதுதான். சாதாரண கிராமத்துப்பெண்களுக்கு புரியக்கூடியது அவர்களுக்கு புரியவில்லை. இத்தனை செலவிட்டபின் இதை நிறுத்தமுடியுமா என்று இன்று இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். இங்கே ஒரு பாட்டியிடம் அதைப்பற்றி கேட்டேன். 'பத்துலட்சம் செலவு செய்து பந்தல் போட்டுவிட்டு பையனுக்கு எய்ட்ஸ் சீக்கு என்று தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்தமாட்டோமா? இல்லை பந்தலுக்காக திருமணத்தை நடத்துவோமா?' என்று கேட்டார்' என்றார்.
மூன்றுமணிக்கு திருமாவளவன் வந்தார். அரங்கின் முன்னால் அமர்ந்துகொண்டார். சென்னையில் தூதுக்குழு முதல்வரிடம் பேசிவிட்டதாகவும் முதல்வர் நாளை அமைச்சரவை கூட்டத்தில் அணு உலை வேலைகள் நிறுத்தப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்படும் என சொன்னதை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ளவிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் முறையான அறிவிப்புக்கு பின்னரே போராட்டம் விலக்கப்படும் என்றார்கள். அனேகமாக நாளை [22-09-2011] அன்று போராட்டம் முடிவுக்கு வரலாம்.
ஜெயலலிதா ஆரம்பம் முதலே போராட்டத்துக்கு ஆதரவான மனநிலை கொண்டிருந்தார் என்றார்கள். அவருக்கான நிர்ப்பந்தங்களை தாண்டி வந்து இந்த விஷயத்தை புரிந்துகொள்ள முயன்றார்கள். அமைச்சரவை தீர்மானம் என்பது பெரிய விஷயம். அணு ஆற்றல் விஷயத்தில் தமிழக வரலாற்றில் அது ஒரு முற்றிலும் புதிய திருப்பம். அரசு இனிமேல் தமிழகத்தில் அணு ஆற்றல் சார்ந்த எந்த திட்டத்தையும் அனுமதிக்காதென்றும் கூடங்குளம் விரிவாக்கத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்தால் அதை இந்தபோராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம். இன்றுவரை சூழியல்போர் எதிலும் தமிழக அரசு இத்தனை சாதகமான முடிவை எடுத்ததில்லை.
கூடங்குளம் விஷயத்தில் தமிழக அரசில் நிலை மத்திய அரசுக்கு சங்கடங்களை உருவாக்கும் என்று தோன்றுகிறது. இன்று சோவியத் ருஷ்ய அணுஆற்றல் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் அவர்களின் அச்சம் தெரிகிறது. அணுஉலையை நிறுத்திக்கொள்ள அரசு முடிவெடுத்தால் அது துரதிருஷ்டவசமானது என்றும் மற்ற வளர்ச்சிதிட்டங்களை தாங்கள் கைவிட வேண்டியிருக்கும் என்றும் மிரட்டியிருக்கிறார்கள். இதையும் போராட்டத்தின் வெற்றி என்றே கொள்ளவேண்டும்.
இந்த போராட்டம் தொடர்ச்சியாக மேலும் பலபடிகளாக நடந்து அதன் இறுதி வெற்றியை நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது. எந்த ஒரு மக்கள் போராட்டமும் அப்படி பல படிகளாகவே வளர்ச்சி அடைய முடியும். அந்த வளர்ச்சி என்பது மக்களின் பிரக்ஞையில் ஏற்படும் மாற்றமே. தமிழக மக்களில் பாதிப்பேருக்குமேல் அணு உலை தேவையில்லை என நினைத்தால் பின் எவர் இங்கே அதை நிறுவ முடியும்?
வேதசகாயகுமார் நீரிழிவுநோயாளி. பசி தாங்காமல் மயக்கம் வருகிறது என்றார். எனக்கும் பசிதான். பசி தாங்க முடியாதது எனக்கு என்னைப்பற்றி பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மேடையில் பத்துநாட்களாக உண்ணாவிரதம் இருப்பவர்களைப்பார்த்தேன். பலர் அரைமயக்கத்தில் இருந்தார்கள். சிலர் அமர்ந்து கூட்டத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
கிளம்பலாம் என முடிவெடுத்தேன். திருமாவளவனை பார்த்து மீண்டும் அறிமுகம் செய்துகொண்டு விடைபெற்றேன். எப்போதுமே அவரைப் பார்ப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு கலைஞனின் மகிழ்ச்சி அது. அவர்தான் தமிழக அரசியல் தலைவர்களிலேயே பார்வைக்கு அழகானவர். அந்த சிரிப்பும் கம்பீரமும் அணுக்கத்தில் இன்னமும் மனம் கவரக்கூடியது.
நாலரை மணிக்கு கிளம்பினோம். கூட்டத்தில் இருந்து அலையலையாக மக்கள் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்கள். அதைவிட அதிகமாக வந்துகொண்டே இருந்தார்கள்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்
அண்ணா ஹசாரே எப்படி ராலேகான் சித்தியை வளமுள்ளதாக ஆக்கினார் என்பதைப்பற்றிய ஒரு சிறிய ஆவணப்படம். திண்ணை இணைய இதழில் இருந்து
http://www.youtube.com/watch?feature=...
தொடர்புடைய பதிவுகள்
கூத்து, ஆவணப்படம்
பஷீர் ஆவணப்படம்
அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
அண்ணா ஹசாரே சாதிவெறியரா?
தூக்கு-எதிர்வினைகள்
இந்தப்போராட்டத்தில்…
அண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்
ஒரு வரலாற்றுத்தருணம்
அண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்
அண்ணா ஹசாரே- இரு தரப்புகள்
யுவன் கவிதையரங்கு – கன்யாகுமரி – அக் 7,8,9
மேலும் சிலர் தங்குவதற்கான வசதி கிடைத்துள்ளதால் மேலும் 10 நண்பர்கள் கலந்துகொள்ளலாம் . (கவிஞர்கள் தேவதச்சன் , கலாப்பிரியா , சுகுமாரன் , தேவதேவன் இவர்களுடன் யுவன் , ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்) கலந்துகொள்ள இந்த படிவத்தை நிரப்பவும் , உங்களை அழைத்து உறுதி செய்கிறோம்.
(ஊட்டி சந்திப்புக்கான வழிமுறைகள், நிபந்தனைகள் இதற்கும் பொருந்தும் , விவரங்களுக்கு ஊட்டி சந்திப்பு குறித்து)
தொடர்புடைய பதிவுகள்
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்
பண்பாடு மீண்டும் ஒரு கடிதம்
சிறியவிஷயங்களின் கதைசொல்லி
கதைநிலம்
சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்
கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
