Jeyamohan's Blog, page 2283
September 30, 2011
திருமந்திரம் ஒரு கடிதம்
பதஞ்சலி தெரிந்த அளவுக்கு நமக்கு திருமூலர் தெரியாது. (ஒன்றே தேவன்…மரத்தில் மறைந்தது..போன்ற சில தவிர). ஏன்? தமிழ் ஞான மரபில் திருமந்திரத்தின் பங்கு என்ன?
http://www.youtube.com/watch?v=GIG0hHb6exM&feature=related
எனக்கு இவரது குரலும் மொழியும் பிடித்திருக்கிறது

http://www.youtube.com/watch?v=Chsw_0NwNSI&feature=autoplay&list=ULRkBKuxM7Oek&lf=mfu_in_order&playnext=1
நேரம் வாய்த்தால் பார்க்கவும்.
நன்றி
வெங்கட் சி
அன்புள்ள வெங்கட்,
திருமந்திரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது. ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளையால். அவர் சிறந்த திருமந்திர விளக்கச் சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார். முழுமையான மொழியாக்கம் வந்தது பின்னால்தான்
ஆனால் திருமந்திரம் தமிழிலேயே சரியாக புரிந்துகொள்ளப்படாத நூல். அதன் இரண்டாம் இருநூறுகளில் பெரும்பாலான பாடல்களை சரிவர பொருள்கொள்ளமுடியவில்லை. மனம்போனபடி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காரணம் அது பல்வேறு மறைஞானச் சடங்குகள் மற்றும் குறியீடுகளைக் குறிப்பிடுகிறது. அவற்றை பற்றிய முறையான ஞானத்தொடர்ச்சி இங்கே இருக்கவில்லை. அவை சைவ தாந்திரீக மதத்தை சேர்ந்தவை, அந்த மதங்கள் பதினெட்டாம் நூற்றாண்டுக்குள் மெல்ல மெல்ல அழிந்து சிதைந்து பெருமரபுக்குள் கலந்தன. ஆகவே அவற்றின் சடங்குகளும் குறியீடுகளும் என்ன என்றே பெரும்பாலும் தெரியாது.
பதஞ்சலி முன்வைத்த மரபு செயல்தளத்தில் அழியாமல் அறுபடாமல் நீடித்தது. காரணம் அது எல்லா யோகமரபுகளுக்கும் பொதுவான நூல். ரகசியத்தன்மை அற்றது. திருமந்திரம் சைவ தாந்திரீக மதத்தைச் சார்ந்தது. சைவ பக்தி மரபால் கண்காணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது சைவ தாந்த்ரீக மதம். ஆகவே நெடுங்காலம் அது ரகசியமாகவே செயல்பட நேர்ந்தது. திருமந்திரத்தை சைவப்பெருமரபு ஏற்றுக்கொண்டு தனக்குரிய விளக்கம் கொடுக்க ஆரம்பித்தது பின்னால்தான். இன்றும்கூட திருமந்திரத்தை விலக்கும் சைவர்கள் உண்டு
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
உப்பு,மேலும் கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மிகவும் அழுத்தமான, மற்றும் அடர்த்தியான கட்டுரை. இரண்டு அல்லது மூன்று முறை வாசித்து இருப்பேன்.
மாறு பட்ட தாவரங்கள் – சூழலை (Environment) அழித்துப் பஞ்சம் ஏற்படுத்த கூடும் – என்பது அடிக்கடி வரலாற்றில் தெரிய வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட வேலி தவிர இண்டிகோ (indigo) தாவரத்தின் பாதிப்புகள் -
http://sos-arsenic.net/english/homegarden/indigo.html காணலாம்
போத்ஸ்வானா(Botswana) விலும் மாட்டுத் தீவனத்திற்காக (ஏற்றுமதி செய்ய ) பயிரிடப்பட்ட தாவரங்கள் – அந்த நிலத்தின் சத்துகளை மாற்றிவிட்டதால் பெரும் பஞ்சத்திற்கு ஆளானர்கள்.
'நமக்குத் தெரியாத விஷயங்களே நம்மை பாதிக்கும்' என நசீம் நிகோலஸ் தலீப் (Nassim Nicholas Taleb ) – தனது 'கார் அன்னம்' (Black Swan) புததகத்தில் குறிபிட்டுள்ளார். மாறுபட்ட நோக்குடைய சுவாரசியமான புத்தகம்.
http://en.wikipedia.org/wiki/The_Black_Swan_(Taleb_book) மெல்லிய அட்டை வடிவில் கிடைக்கிறது
இதனை அரிய உண்மையாகத் தெரிந்து கொண்டேன்,
காந்தியை மீண்டும் இணைத்திருப்பது பொருத்தமாக இருந்தது,
புதிதாக ஒரு பழைய விஷயத்தைத் தெரிவித்ததற்கு நன்றி
அன்புடன்
முரளி
அன்புள்ள ஜெ,
Salt, Salary என்ற சொற்கள், Salarium என்று latin சொல்லில் இருந்தே வந்தன.
Root word ஒன்று தான் !
–
With Warm Regards,
K.R.Athiyaman
ஆம், தமிழிலும் சம்பளம் என்பது சம்பா+அளம் என்ற சொல் என்று சொல்லப்படுவதுண்டு . அதாவது நெல்லும் உப்பும் [தொ.பரமசிவம்] எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் உப்பு விற்கும் உமணர் முக்கியமான சாதியினர். அவர்களின் பெரிய சுமைவண்டிகளைப்பற்றிய வர்ணனையை நாம் நிறைய பார்க்கலாம். ஆனால் தென்னகத்தில் உப்பு முக்கியமான வணிகப்பொருளாக இருந்திருக்க நியாயமில்லை என்றே நினைக்கிறேன்
ஜெ
உலகின் மிகப்பெரிய வேலி
தொடர்புடைய பதிவுகள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
காந்தியின் தேசம்
அண்ணா ஹசாரே மீண்டும்
காந்தியும் அரட்டையும்
சங்கப்பாடல் நவீனவாசிப்புகள்
September 29, 2011
கடிதங்கள்
'kambar gets jnanpeeth' என்று படித்துவிட்டு, என்னதான் posthumous ஆகக் கொடுத்தாலும், இவ்வளவு பிந்தியிருக்கக் கூடாது என்று நினைத்தேன் ஒரு கணம். சந்திரசேகரக் கம்பாரை மறந்துவிட்டேன்
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா,
அவர் கம்பரின் கொடிவழி வந்த இன்னொரு கம்பர் தானோ என்னவோ யார்கண்டது?
ஒரு டாகுமெண்டரியில் குரல் சொல்கிறது. 'ராலேகான் சித்தியில் ஹசாரே செய்த சேவை காரணமாக அவர் மூத்த சகோதரர் என்ற பொருளில் அண்ணா என்று மக்களால் அழைக்கப்பட்டார்'. சுத்தமான தமிழ்ச்சொல். மகாராஷ்டிரர் இங்கே இருநூறாண்டுகள் ஆட்சித்தொடர்பில் இருந்தவர்கள் என்பதை நினைவுகூரலாம்
ஆனால் நம் ஊடகங்கள் அன்னா என்றுதான் எழுதுகிறார்கள். ஆங்கிலத்திலே வாசித்துவிட்டு. மராட்டியில் எப்படி தமிழ்ச் சொல் இருக்க முடியும் என்ற எண்ணம்.
ஜெ
"எந்த ஒரு கலை வடிவமும் மக்களை போய் சேரணும், புரியாதவுங்களுக்குப் புரியவைக்க வேண்டியது நம்ம கடமைதானே" என்று சிந்து பைரவி திரைப்படத்தில் வரும் வசனம். குமுதத்தில் அரசு பதில்களைப் படித்து விட்டுத் தனக்கு அறிவு வளர்ந்து விட்டதாய் நினைத்துப் பூரித்துக் குப்புறபடுத்துத் தூங்கும் அந்த மனிதனுக்கு விஷ்ணுபுரம் புரியவைக்க ஏதாவது கூடுதல் தகவல் தரமுடியுமா?
ராமா லக்ஷ்மன்
பெங்களூர்.
அன்புள்ள ராமா
எறும்புக்கு யானைக்கவளத்தை ஊட்டமுடியுமா என்பதைப்போன்ற ஒரு கேள்விதான் இதுவும். அதன் தேவை, அதன் சாத்தியம் என்று ஒன்று உள்ளதல்லவா?
கலைகளுக்கும் அறிவுத்துறைக்கும் உள்ளே நுழைய இரு தகுதிகள் தேவை. ஒன்று, இயல்பிலேயே ரசனையும் அறிவுத்திறனும் இருத்தல். இரண்டு, தொடர்ச்சியான பயிற்சி. பெரும்பாலும் நம்மிடம் இரண்டாவது அம்சம் இருப்பதில்லை.
ஒருவர் அடிப்படை ஆர்வம் கொண்டவராக இருந்தால் எளிமையான ஆரம்பகட்ட நூல்கள் சுவாரசியத்தை உருவாக்கி உள்ளே கொண்டு வர முடியும். விஷ்ணுபுரத்தை ஒருவர் வாசிக்க ஆரம்பிக்கமுடியாது. ஏழாம் உலகத்தை வாசிக்க ஆரம்பிக்க முடியும்
ஜெ
ஜெ,
கணிதம் ஒரு கடிதத்தில் ,
இதில் ஒரு பிழை இருப்பது போல் தோன்றுகிறது . Theory of Incompleteness , betrand russel கண்டுபிடிப்பு இல்லை . அது Gödel இன் ஆகப் பெரிய சாதனை .
ஐன்ஸ்டீன் தனது இறுதிக்காலத்தில் அமெரிக்கா சென்று கோடெலுடன் வாழ்ந்தார் . இந்த மனிதருடன் நானும் வாழ்கிறேன் என்பது ஒரு பெரிய வரம் என கொண்டார் ஐன்ஸ்டீன் .
கணிதத்தைப் பொறுத்தவரையில் நமக்கு இருக்கும் ஒரு எண்ணம் , அதில் இறுக்கம் அனைத்துமே தருக்கத்தால் நிரூபிக்கலாம் என்பதே . அதை ஒரு தவறு என்று நிரூபித்தது தான் கோடேலின் சாதனை .
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அனைத்து கணிதம் சார்ந்த கருத்துகளையும் தருக்கத்தைக் கொண்டு நிரூபித்துவிட முடியும் என்று எண்ணினார்கள் .
ரஸ்ஸல் 1 + 1 = 2 போன்ற அடிப்படை விஷயங்களை கூட தருக்கதால் நிருபிக்க முயற்சி மேற்கொண்டார் . இந்த காலத்து கணித மேதைகள் அனைவரும் இப்படி ஒரு கனவு கண்டார்கள் .
இதன் தொடர்ச்சியாகவே கோடெல் தனது theory of Incompleteness இது தவறு என நிரூபித்தார். எந்த ஒரு கணித அமைப்பும் முழுமையாகவும் , முரண்பாடற்றதாகவும் இருக்க முடியாது என்பதே இவரின் கண்டுபிடிப்பு .
- ஒரு முழுமையான கணித முறை என்றால் அதில் இருக்கும் அனைத்துமே நிரூபிக்கப்படலாம் , தருக்கத்தின் உதவியோடு .
-ஒரு முரண்பாடற்ற கணித முறை என்றால் , அதில் இருக்கும் அடிப்படை விஷயங்களைக் கொண்டு நாம் ஒரு இயல்புக்கு மாறான (paradox) ஒரு முடிவுக்கு வர முடியாத தன்மை .
கீழே உள்ள கணித வாக்கியத்தை அல்ல உறுதி சொல் (axiom) கொண்டு நாம் ஒரு paradox வந்து அடைவோம் , இதுவே கோடேலின் கண்டுபிடிப்பு .
'இந்த வாக்கியத்தை நிரூபிக்க முடியாது '
இதை நிரூபிக்க முடிந்தால் , இது ஒரு முரண்பாடுள்ள கணித முறை .
இதை நிரூபிக்க முடியாவிட்டால் , இது ஒரு குறைபாடுள்ள முறை .
இதனால் கணிதம் ஒன்று குறைபாடுள்ளதாக இருக்கும் , இல்லை முரண்பாடுள்ளதாக இருக்கும் . இதுவே கோடேலின் சிந்தனையின் சாரம் .
இதை பற்றி ஒரு அற்புதமான video http://www.youtube.com/watch?v=gV67Sj2jkVg
கோடெல் தனது கடைசி காலங்களில் மனநலம் பாதிக்கப் பட்டு இறந்தார் .
http://video.google.com/videoplay?docid=-5122859998068380459
நன்றி,
Ashok
அன்புள்ள அசோக்
கணிதம் எனக்கு எப்போதுமே புரியாத புதிர்
E T Bell எழுதிய Men Of Mathematics முதல் அத்தியாயம் தாண்ட மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறேன். நான் நவீன கணிதமே படித்ததில்லை- 11 ஆம் வகுப்பு வரை பழைய கணிதம் மட்டுமே படித்தேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
புதிய பிரபஞ்சம்
நுண்தகவல்களும் நாஞ்சிலும்
நாமறியும்தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன்.
ஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி விழுந்தன. நான் அடாடா என்றேன். கடை உரிமையாளரான பெண்மணி சிரித்துக்கொண்டு வந்து 'பரவால்லை…என்ன சார் வேணும்?' என்றாள். அவளே சாக்லேட் எடுத்துத் தந்தாள்.
திரும்பிச் செல்லும்போது சைதன்யா சாக்லேட் நக்கியபடி 'அப்பா கடையில் இருந்தாங்களே அந்தக் கொண்டை போட்ட டீச்சர்…' என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க 'அவங்க டீச்சர் இல்ல பாப்பா… கடைக்காரங்க' என்றேன். 'இல்ல அவங்க டீச்சர்…அவங்க அந்த அக்காவ காலை மிதிச்சாங்களே' நான் ஆச்சரியத்துடன் 'மிதிச்சாங்களா? எப்டி?' என்றேன். டெஸ்குக்கு அடியில் எப்படிக் காலை மிதித்தாள் என்று சைதன்யா நடித்துக் காட்டினாள். மிதிபட்டவளின் முகபாவனையில் இருந்தே ஊகித்துக்கொண்டிருந்தாள்.
'பொறவு அந்த செவப்பு அக்கா செரிபோட்டும்னு சொன்னாங்க' இன்னொரு பெண் முகபாவனையிலேயே ஆறுதல் சொல்லியிருக்கிறாள். நானறியாமல் ஒரு சோகநாடகமே நடந்து முடிந்திருக்கிறது.
இலக்கியம் கோருவது சாதாரண பெரு உண்மைகளை அல்ல. சிறிய உண்மைகளை. பொதுத் தகவல்களை அல்ல, நுண்தகவல்களை.நுண்தகவல்களின் வெளியே ஒரு நல்ல நாவலின் நெசவுப்பரப்பை உருவாக்குகிறது.
நாஞ்சில்நாடனின் எழுத்த்துக்களில் முக்கியமான ஒன்று 'நாஞ்சில்நாட்டு வேளாளர் வாழ்க்கை'. சமூகவியல் தகவல்களின் தொகை என அதை சொல்லிவிடலாம். ஆனால் இதே தகவல்களை ஓர் ஆய்வாளர் எழுதியிருந்தால் அதை நம்மால் வாசிக்கமுடியுமா என்று பார்த்தால் இதன் உண்மையான மதிப்பு தெரியும். நாஞ்சில்நாடனின் இக்குறிப்புகள் வழியாக ஒரு வாழ்க்கையே நம்முன் விரிகிறது.
தொடர்புடைய பதிவுகள்
நகுலன் நினைவு
உண்பேம்
கடிதங்கள்
நாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
ஜனவரி 3
கடிதங்கள்
குணங்குடி-நாஞ்சில்
நக்கலும் நாஞ்சிலும்
உப்பு-கடிதங்கள்
உலுக்கிப் போடும் ஒரு கட்டுரை, ஜெ.
Churchill's secret war புத்தகம் பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதியாண்டுகளில் நிகழ்ந்த சுரண்டல் பற்றிய மனம் கொந்தளிக்க வைக்கும் சித்திரத்தை அளிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகம் தங்கள் ஆட்சி வேரூன்றும் காலத்திலேயே எப்படி அதற்கான அமைப்பை பிரிட்டிஷார் உருவாக்கினார்கள் என்பதைப் பேசுகிறது. இரண்டு புத்தகங்களும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் உண்மையான தாக்கம் பற்றி நாம் தெரிந்து கொள்ள Companion புத்தகங்காக இருக்கும் என்று தோன்றுகீறது.
எவ்வளவு பெரிய வரலாற்றுத் தடங்களை எவ்வளவு எளிதாக நாம் மறந்துவிட்டிருக்கிறோம் என்ற உணர்வே மேலெழுகிறது.
அன்புடன்,
ஜடாயு
*
அருமை! கம்ப்யூட்டர் ஜாலம் போலக் கட்டுரையின் விவரிப்பில் ஒரு சிறிய பாம்பு ஒரிஸ்ஸாவின் கடற்கரையோரம் பூமியில் பிறந்து, பின்னர் மளமளவென ராட்சதப் பச்சைப் பாம்பாக வளர்ந்து, காஷ்மீரில் ஒரு மலைமுடியில் தலையை வைத்து, ஒரிய கடலுக்குள் வாலை விட்டு நீரை அளையும் விரல்போல் ஆட்டிக்கொண்டு சாவகாசமாக ஆறரைக்கோடி மக்களை முழுங்கி விட்டு முறுங்கி நெளிவது போல தோன்றியது. இத்தனை ஆண்டுகள் தெரியாமல் போனதை விட, புத்தகமாக வெளியிடப்பட்டும் 1996க்குப் பிறகு, இணைய யுகத்திலும் இது பரவலாகத் தெரியாமல் போனது ஆச்சர்யமே. பிபிசி போன்றவை இதையெல்லாம் எப்படி டாக்குமெண்டரி ஆக்காமல் விட்டார்கள் என்றும் தெரியவில்லை. இதெல்லாம் பாடங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியா மேற்கிற்கு எப்பொழுதும் 'மாயாஜாலப் பெட்டி' போல, ஒவ்வொருமுறை கையை விட்டாலும் ஏதாவது ஆச்சர்யமான விஷயம் கிடைக்கிறது.
'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' போன்று பல பழமொழிகள் பண்பாட்டில் அப்படிச் சும்மா வந்துவிடவில்லை என்பதைப் புரியவைக்கிறது. தன் நாட்களைச் செலவிட்டு ஆரய்ந்து உண்மைகளைப் பூசிமெழுகாமல் சொன்ன ராய் மாக்ஸ்ஹாமுக்கும், அறிமுகப்படுத்திய ஜெமோவுக்கும் நன்றிகள்.
- பிரகாஷ் சங்கரன்
www.jyeshtan.blogspot.com
காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை மார்க்சியர்கள் கிண்டல் செய்தார்கள் என ஜெ எழுதும் போது சந்தோஷமாக இருந்தாலும், எனக்குத் தெரிந்த உண்மையையும் சொல்ல வேண்டும். எல்லா மார்க்சியர்களும் அல்ல. உப்பு சத்தியாகிரகம் குறித்த ஒரு மிக முழுமையான ஆதரவுக் கட்டுரை எழுதியவர் மார்க்சியரான ஹால்டேன். அவருடைய 'Biochemistry and Mr.Gandhi' ஒரு மிக முக்கியமான கட்டுரை. 'Continuation of Salt Tax is the biological argument for Swaraj' என ஹால்டேன் முடிக்கிறார்.(கூடவே அந்தக் கட்டுரையில் ஹால்டேன் பனங்கள் தேவை என்றும் சீமை சாராயம் தடை செய்யப்படுவது நல்லது என்றும்
கூறுகிறார்) ஹால்டேனின் காந்தி ஆதரவு மார்க்சிலிருந்து வந்ததாகக் கருத முடியாது. ஆனால் அவர் அப்போது மார்க்சிய குரலாக கருதப்பட்டார். இறுதியில் அறிவியல் உண்மையா மார்க்சிய சோவியத்தா என வந்த போது ஹால்டேன் இந்தியாவை
வந்தடைந்தார்.
அரவிந்தன் நீலகண்டன்
*
கோவை மாவட்டக் கல்யாணத்தில் "உப்புவாங்குதல்" என்ற ஒரு தனிச்சடங்கே உண்டு. இரு சிறிய கூடை உப்பை பெண் மட்டும் மாப்பிள்ளை வீட்டார் கலந்து மாற்றிக்கொள்வார்கள்; மண ஊர்வலத்திலும் சிறிய உப்புக்கூடையைச் சுமந்து செல்வார்கள் சின்ன வயது ஞாபகம். இன்றும் வழக்கம் உள்ளதா கோவையில் அல்லது வேறு ஊர்களில்….
வேணு தயாநிதி
*
அருமையான கட்டுரை. ச்சே எந்தளவிற்கு புத்திசாலித்தனமாக சுரண்டப் பட்டிருக்கிறோம் என்று நினைக்கும் போது வியப்பாகவும், மனச்சோர்வாகவும் இருக்கிறது.
உப்பு நம் மரபில் இன்றும் முக்கியமான இடத்திலேயே வைக்கப் படுவது புரிந்துகொள்ள முடிகிறது. இன்று எங்கள் ஊர் பக்கங்களில், புதுமனை புகுவிழாக்களுக்குச் செல்பவர்கள் உப்பு மஞ்சள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் இருகிறத.
நன்றி,
சுந்தரவடிவேலன் சுப்புராஜ்
*
கட்டுரையில் ஸ்லீமன் என்ற பெயர் பொறி தட்டியதில் , என் மின் நூலகத்திலிருந்து கண்டது.
W.H.Sleeman எழுதிய Rambles and Recollections of an Indian Official, கிடைக்கும் இடம் இதோ.
http://www.gutenberg.org/files/15483/15483-h/15483-h.htm
இந்து திருமணங்கள், சதி , கோஹினூர் மற்றும் அன்றைய பாரதம் பற்றின பல சுவாரஸ்ய விஷயங்கள் படித்து இன்புற.
சிவராமன்
*
ஜெ,
நெருங்காலமாகவே மூன்று விஷயங்களை நீங்கள் சொல்லி வருகிறீர்கள். பலசமயம் அவற்றையெல்லாம் சொற்பொழிவுகளில் சொல்லிச்செல்கிறீர்கள். பிரிட்டிஷார் இந்தியாவிலே ஊழல் மிகுந்த அரசைத்தான் உருவாக்கினார்கள், இந்தியாவிலே உண்மையை அன்றைவிட ஊழல் இன்றைக்குக் குறைவு என்று சொல்கிறீர்கள். இந்தியாவிலே மாபெரும்பஞ்சங்களை பிரிட்டிஷ் ஆட்சிதான் உருவாக்கியது என்கிறீர்கள். இந்தியாவின் ஏழை அடித்தள மக்கள் இந்த அளவுக்குக் கேவலமான வாழ்க்கை வாழ பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்கிறீர்கள்
இந்த விஷயங்களை உங்கள் இணையதளத்திலே பலர் மறுத்து எழுதியிருக்கிறார்கள். [ உதாரணமாக இந்தியாவில் பஞ்சம் இருந்ததா? என்ற கட்டுரை] என்னிடமே ஜெயமோகன் ஆதாரமில்லாமல் ஊகமாக அடித்துவிடுகிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் ஆதாரம் வைத்திருப்பார் என்று சொல்லுவேன். இப்போது மிக விரிவாக ஆதாரம் காட்டியிருக்கிறீர்கள். அதுவும் பிரிடிஷாரே எழுதிய ஆதாரம்.
இப்போதாவது பிரிட்டிஷார் இந்தியாவை வளர்த்தார்கள் என்று சொல்லக்கூடியவர்கள் மனசாட்சியுடன் யோசிக்கவேண்டும்
சத்யநாதன், சென்னை
*
அன்பிற்குரிய ஜெ ,
கண்ணீர் சிந்தாமல் இதனைப் படிக்க இயலாது , நன்றி கலந்த விம்மல்கள் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததற்காக நன்றிக் கடன்கள்.
இந்நாள்வரை இதனைப் பற்றி ஒரு புரிதலும் இல்லாமல் இருந்தமைக்கு வருத்தப்பட்டுக் கொண்டேன், காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் ஒன்று வலது சாரி மேல்ஜாதி வசைகள் , அல்லது இடது சாரி மேட்டிமைவாதம் -இதைத் தவிர ஒரு சமனிலைக் கூற்றை இதுவரை கேட்டதில்லை.
இல்லாவிட்டால் காந்தியை ஒரு சிலை பிம்பமாக ஆக்கி வோட்டு வசூல் செய்தார்கள் , ஒரு தொகுப்பே இல்லை.நன்றி இந்தியப் பஞ்சத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கட்டுரை, நான் சாப்பிடும் பொழுது தினமும் நினைவிற்கு வரும். வார்த்தைகள் வரவில்லை. நன்றி
மது லட்சின்
உலகின் மிகப்பெரிய வேலி
தொடர்புடைய பதிவுகள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
காந்தியின் தேசம்
அண்ணா ஹசாரே மீண்டும்
காந்தியும் அரட்டையும்
சங்கப்பாடல் நவீனவாசிப்புகள்
காந்தியும் அறமும்
சிற்பச்செய்திகள்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது? தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா?
இப்படிக்கு
பா.மாரியப்பன்
அன்புள்ள மாரியப்பன்
கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ நடராசன் இருவரும் இணைந்து கோயில்சிற்பக்கலை சார்ந்த ஒரு சிறிய கலைக்களஞ்சியம் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடங்களாக வேலை நடந்துகொண்டிருக்கிறது
கீழக்கண்ட நூல்கள் தகவல்களை அளிக்க உதவியானவை
சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்
http://www.jeyamohan.in/?p=2291
தென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன் http://www.jeyamohan.in/?p=2042
திருவட்டார் பேராலயம்- அ.கா.பெருமாள்-
http://www.jeyamohan.in/?p=2042
தஞ்சை பெரியகோயில் – குடவாயில் பாலசுப்ரமணியம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
தறி-ஒருகடிதம்
கடிதங்கள்.
கடிதங்கள்
இரு கடிதங்கள்
கடிதங்கள்
இன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு
வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு
படைப்புடன் அடையாளப்படுத்திக்கொள்ளுதல்
September 28, 2011
உலகின் மிகப்பெரிய வேலி
சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி.

ராய் மாக்ஸ்ஹாம்
இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட இந்தியாவை இரு நேர்பாதிகளாக இது பிளந்தது. 4000 கிமீ மைல் நீளத்துக்கு பெரும் பொட்டல்களை, விளைநிலங்களை, கிராமங்களை, நகரங்களை, பாலைவனங்களை, குன்றுகளைப் பகுத்தபடி ஓடியது இது. இதன் உச்சகாலகட்டத்தில் 1872ல் கிட்டத்தட்ட 14000 முழுநேர பிரிட்டிஷ் அரசூழியர்கள் இதை காவல்காத்துப் பராமரித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் இது பிரிட்டிஷ் -இந்திய அரசின் அதிகாரத்தின் சின்னமாக நீடித்திருந்தது.
இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை. இந்தியாவில் உள்ள எந்த சமூக, பொருளாதார அறிஞரும் இதைப்பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. 1995 வரை.
பயணக்கட்டுரையாளரும் லண்டன் நூலக ஆவணப்பராமரிப்பாளருமான ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது. ஸ்லீமான் 1850களில் பிரிட்டிஷ் இந்தியாவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி அன்றைய இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறார். அவரது பயணக்குறிப்புகளில் மன்னர்கள், சிற்றரசர்கள், கொள்ளையர்கள், புனித நகரங்கள், கோயில்கள் பற்றிய சித்தரிப்புடன் அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் வரிவசூல் முறைகளைப்பற்றிய குறிப்பும் இருந்தது. அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்கிறார்
ராய் மாக்ஸ்ஹாம் ஆச்சரியம் கொள்கிறார். இது கற்பனையா என ஐயம் அடைகிறார். பிரிட்டிஷ் ஆவணங்களை ஆராய்கிறார். பெரும்பாலான குறிப்புகள் 1870களுக்குப் பின்னால் வந்தவை. அவற்றில் வேலியைப்பற்றிய தகவல்களே இல்லை. லண்டனில் முறையாகப் பராமரிக்கப்படும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்களில் பொறுமையாகத் தேடுகிறார். ராய் மாக்ஸ்ஹாம் தொழில்முறையாக ஒரு அரிய ஆவணக்காப்பாளர் என்பது அவருக்கு உதவுகிறது. கடைசியில் அந்த வேலிபற்றிய சர்வே தகவல்களும் அதை நிறுவிப் பராமரித்ததைப்பற்றிய கணக்குவழக்குகளும் அவருக்குக் கிடைக்கின்றன.
இந்த வேலியை பிரிட்டிஷ்காரர்களின் ஒரு கிறுக்குத்தனம் என முதலில் நினைக்கும் ராம் மாக்ஸ்ஹாம் மெல்லமெல்ல அதன் பின்னால் உள்ள கொடூரமான சுரண்டலைக் கண்டுகொள்கிறார். மிக விரிவான ஆய்வுகள் வழியாக அதை அவரது இந்தியாவின் மாபெரும் வேலி என்ற பயண நூலில் சித்தரித்துக்காட்டுகிறார்.

சுங்கவேலி 1870
இந்த வேலி முழுக்க முழுக்க உள்நாட்டு உப்புவணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இது சுங்கவேலி [Customs hedge] என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் முக்கியமான வருமானமே அவர்கள் உப்புக்கு போட்ட உள்நாட்டுச் சுங்க வரிதான். அதை வசூலிக்கும் பொருட்டு உள்நாட்டு உப்புப்பரிமாற்றத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரிட்டிஷார் இந்தியாவில் அவர்கள் வேரூன்றிய 1803 முதல் இதை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை நாற்பதாண்டுக்காலத்தில் கட்டி முடித்தார்கள். 1843ல் இந்த வேலி முழுமையடைந்து உள்நாட்டுச் சுங்கத் துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
இதைப் புரிந்துகொள்ள முதலில் இந்தியாவின் நில அமைப்பையும் அதில் உப்புக்கு உள்ள இடத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் வட இந்தியப்பகுதி மிக அகலமானது. கடலை விட்டு மிகவும் தள்ளி இருக்கக்கூடிய பிரம்மாண்டமான நிலப்பகுதிகளைக் கொண்டது. வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், மக்கள் செறிந்த பிகார், உத்தரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகள் அனைத்துமே உப்புக்குத் தென்பகுதிக் கடலோரங்களை நம்பி இருந்தன.
உப்பு பெருமளவுக்கு காய்ச்சப்பட்டது குஜராத்தில் கட்ஜ் வளைகுடா பகுதியில். இப்பகுதியில் கடலில் பெரிய ஆறுகள் கலப்பதில்லை. ஆகவே உப்புச்செறிவு அதிகம். வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் உக்கிரமான வெயிலும் அடிக்கும். சாம்பார் ஏரி போன்ற உப்பு ஏரிகள் கோடைகாலத்தில் தானாகவே வற்றி உப்புவயல்களாக ஆகும். ஆகவே பாரம்பரியமாக குஜராத்தில் இருந்து உப்பு வட மாநிலங்களுக்குச் சென்றது. அதற்காக நீண்ட உப்புப்பாதைகள் இருந்தன. மகாராஷ்டிரா ஒரிசா கடலோரங்களிலும் உப்பு பெருமளவுக்கு விளைந்தது. அவையும் கரைவழியாக வடமாநிலங்களுக்கும் இமய மலைப்பகுதிகளுக்கும் சென்றன.
சரி அப்படியென்றால் எதற்கு காஷ்மீர் வரை வேலி? இன்று பாகிஸ்தானில் இருக்கும் இமயமலைப்பகுதிகளில் உலகின் மிகப்பெரிய உப்புமலைகள் உள்ளன. மிகச்சுத்தமான இந்த உப்பு மிகமிக மலிவானதும்கூட. திபெத் உட்பட இமயமலைப்பகுதிகளுக்கு நூற்றாண்டுகளாக இந்த உப்புதான் சென்றுகொண்டிருந்தது. அதைத் தடுக்கவே அங்கே வேலி அமைக்கப்பட்டது.
உப்பு அவ்வளவு முக்கியமான வணிகப்பொருளா என்ன? ஆம் என்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். அன்றைய இந்தியாவில் பெரும்பாலான கிராமங்கள் தன்னிறைவு கொண்டவை. மக்களுக்குத் தேவையான தானியங்கள் காய்கறிகள் நெய் போன்ற நுகர்பொருட்கள் துணிகள் ஆயுதங்கள் எல்லாமே கிராமசமூகங்களுக்குள்ளாகவே உற்பத்திசெய்யப்படும். வெளியே இருந்து வந்து சேரக்கூடிய ஒரே உற்பத்திப்பொருள் என்பது உப்புதான். ஆகவே அதுவே அன்றைய இந்தியாவின் மிக முக்கியமான வணிகம்
உப்பு அந்த அளவுக்கு இன்றியமையாததா? இன்று உப்பு ஒரு முக்கியமான தேவையாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் இன்று பதப்படுத்தியும் சேமித்தும் உண்ணப்படும் பல்வேறு உணவுப்பொருட்களில் உப்பு நிறையவே இருக்கிறது. புலாலில் உப்பு உண்டு. ஆனால் அன்றைய இந்தியாவில் விவசாயியின் சாதாரண உணவு தானியமும் காய்கறிகளும் மட்டுமே. அவன் உப்பு சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும். மேலும் வியர்த்து வழிய வெயிலில் நின்று வேலைசெய்யும் இந்திய விவசாயி பெருமளவு உப்பை இழக்கிறான். அவன் உப்பு இழப்பை அவன் உணவு மூலம் ஈடு கட்டியாகவேண்டும். அத்துடன் வட இந்திய நிலங்களில் உப்பு குறைவு. ஆகவே மிருகங்கள் மண்ணைநக்கி உப்பை எடுத்துக்கொள்ளமுடியாது. அவற்றுக்கும் உப்பு கொடுக்கப்பட்டாகவேண்டும்.
வட இந்தியாவின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் எந்த அளவுக்கு உப்பு தேவைப்படும் என்று பார்க்கலாம். அந்த அளவுக்கான உப்பு எவ்வளவு பெரிய வணிகம்! அந்த உப்பு குஜராத் அல்லது ஒரிசாவில் இருந்து மாட்டுவண்டிகளிலும் கோவேறு கழுதைகளிலும் தலைச்சுமைகளிலுமாக பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்துசேரும்போது அதன் விலை எத்தனை மடங்கு பெருகியிருக்கும் என ஊகிக்கலாம். பிகாரில் ஒரு விவசாயி சராசரியாக ஒரு மாதம் ஈட்டும் வருமானம் ஒரு வருடத்து உப்புச்செலவு என்று பல குறிப்புகளைக் கொண்டு கணித்துச் சொல்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். மலைப்பகுதி மக்கள் தானியத்துக்குச் செலவழிக்கும் அதே அளவு பணத்தை உப்புக்குச் செலவிட்டிருக்கிறார்கள்!
உப்பு மிகமிக அருமையான பொருளாக இருந்திருக்கிறது. பல இடங்களில் அது நாணயமாகக் கூட புழங்கியது. உப்பு மழைக்காலம் முழுக்க சேமிக்கப்பட்டாகவேண்டும் என்பதனால் உப்பு கைமாற்றாக அளிக்கப்படுவது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. உப்புமேல் சத்தியம் செய்வது மிக அழுத்தமானதாகக் கருதப்பட்டிருக்கிறது.
உப்பு அத்தனை அவசியப்பொருளா என்ன? ஒருநாளைக்குக் குறைந்தது 1500 முதல் 2500 மில்லிகிராம் சோடியம் மனித உடலுக்குத் தேவை. அதிகமாக உப்பு உடலை விட்டு வெளியேறும் இந்தியா போன்ற கோடைநிலங்களில் வாழும் மனிதனுக்குக் குறைந்தது இரண்டு அவுன்ஸ் உப்பு தேவை என்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறார். அந்த உப்பு அவனால் உண்ணப்படாவிட்டால் Hyponatremia என்ற நோய்க்கு அவன் ஆளாகிறான். குழந்தைகள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உப்புக்குறைவு நோயின் அடிப்படையான கோளாறு என்னவென்றால் உப்புக்குறைவால்தான் அந்நோய் உருவாகிறது என்று நோயாளியோ மருத்துவனோ உணர முடிவதில்லை என்பதே
உப்பு உடலின் திரவச்சமநிலையை தக்கவைத்துக்கொள்ள இன்றியமையாதது. உப்பு குறையும்போது ரத்தம் கனமிழக்கிறது. ஆகவே உடல் நீரை வெளியேற்றுகிறது. ஆகவே ரத்த அழுத்தம் குறைகிறது. நோயாளிக்கு தலைச்சுற்றும் வாந்தியும் சமநிலை இழப்பும் ஏற்படுகிறது. மூச்சுத்திணறலும் மயக்கமும் உருவாகிறது. இந்நிலை தொடர்ந்தால் மரணம் நிகழ்கிறது. பட்டினியால் வாடிய இந்தியாவில் பெரும்பாலும் உப்புகுறைவு நோய் பட்டினியின் விளைவான பலமிழப்பாகவே கருதப்படுகிறது. ஆகவே அது எளிதாக உயிரைக்குடிக்கிறது
இந்த பிரம்மாண்டமான வணிகத்தை முகலாயர்களும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களின் வரி மேலோட்டமானது, குறைவானது. ஒட்டுமொத்தமாக உப்புப்பரிமாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் முயலவில்லை. பிரிட்டிஷார் அதை சுங்கவேலி வழியாக சாதித்தார்கள்
ராய் மாக்ஸ்ஹாம் இது உருவான வரலாற்றை சொல்கிறார். ஆரம்பத்தில் பிரிட்டிஷார் வங்காளத்தைத்தான் கைப்பற்றினார்கள். வங்காளத்தில் உப்புக்காய்ச்சுவது மிகக் கடினமானது. கங்கை கொண்டு வந்து கொட்டும் நல்ல நீரின் காரணமாக அங்கே நீரில் உப்பு குறைவு. ஆகவே நீரை வற்றச்செய்து மேலும் விறகால் எரித்து சுண்டச்செய்துதான் உப்பை எடுப்பார்கள். இந்த உப்பு மிக மிகக் கீழான நிலையில் வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்டது. உப்பின் விலையும் அதிகம்.
இந்த உப்பு காய்ச்சப்பட்டதாகையால் வங்காள பிராமணர்கள் இதை உண்ண மாட்டார்கள். சமைக்கப்பட்ட உணவுக்குச் சமம் அது. ஆகவே சூரிய ஒளியில் சுண்டிய உப்பு ஒரிசாவில் இருந்து வந்தது. பிளாசி போரில் கிளைவ் வங்காள நவாபை வென்று வங்கத்தைப் பிடித்ததும் வங்காளம் முழுக்க விரிவான வரிவசூல் முறையை நிறுவினார். உப்புக் காய்ச்சும் ஆலைகளுக்கு வரியைப் பலமடங்காக ஆக்கினார். அது முக்கியமான வருமானமாக ஆகியது
இந்த உப்பு வரி உப்பின் விலையை அதிகரித்து ஒரிசாவில் இருந்து வரும் உப்பின் விலையை விட அதிகமாகியது. ஆகவே ஒரிசாவில் இருந்து வரும் உப்புக்குக் கடும் வரி போடவேண்டியிருந்தது. அவ்வாறுதான் ஒரிசா வங்க எல்லையில் மகாநதி ஓரமாக முதலில் சுங்கச்சாவடிகளை அமைக்க ஆரம்பித்தார்கள் பிரிட்டிஷார்.ஒரிசாவின் சோனாப்பூர் என்ற ஊரில் முதல் சாவடி அமைந்தது. அதில் இருந்து சந்திரபூர் வரை சுங்கத்தடுப்புக்கோடு உருவாக்கப்பட்டது.
மெல்லமெல்ல பிரிட்டிஷாரின் அதிகாரம் பிகாருக்கும் உத்தரபிரதேசத்துக்கும் மத்தியப்பிரதேசத்துக்கும் பரவியது. ஆகவே சுங்கச்சாவடிகளை பர்ஹான்பூர் வரை நீட்டித்தார்கள். உப்புச் சுங்கத்தின் பெரும் லாபத்தை பிரிட்டிஷார் கண்டுகொண்டார்கள். அதற்காகப் பெரும்பணத்தை முதலீடுசெய்ய முன்வந்தார்கள். மத்தியப்பிரதேசத்தின் விரிந்த பொட்டல்நிலத்தை சுங்கக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது கடினமாக இருந்தது. ஆகவே ஒரு பெரிய வேலியை உருவாக்கும் எண்ணம் வந்தது. இவ்வாறுதான் பர்ஹான்பூர் முதல் சுங்க வேலி தோன்றியது.
இதே காலகட்டத்தில் 1823ல் ஆக்ரா சுங்க ஆணையர் ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவர் கங்கை யமுனைக்கரையிலூடாக மிர்சாப்பூர் முதல் அலஹாபாத் வரை ஒரு பெரிய வேலியை அமைத்தார். அலஹாபாதில் இருந்து நேப்பாளம் வரையில் அங்கிருந்து சிந்து வரையில் 1834ல் ஜி.எச்.ஸ்மித் ஒரு வேலியை அமைத்தார். தொடந்து சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து அந்தச்சாவடிகளை வேலியால் இணைத்துக்கொண்டே சென்றார்கள். இவ்வ்வாறுதான் சுங்கவேலி படிப்படியாக உருவாகிவந்தது.
ஆரம்பத்தில் காய்ந்தமரத்தாலும் மூங்கிலாலும் ஆன வேலியைத்தான் கட்டினார்கள். வேலிக்கு இருபக்கமும் ஆழமான கிடங்கு வெட்டப்பட்டது. ஆனால் அந்த வேலியைப் பாதுகாப்பது கடினமாக இருந்தது. வருடம்தோறும் அது சிதல்பிடித்தும் தீப்பிடித்தும் அழிந்தது. அதற்காக நிறைய பணம்செலவிட வேண்டியிருந்தது. அப்போதுதான் 1867ல் சுங்க ஆணையராகப் பதவிக்கு வந்தார் ஹ்யூம்.மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்த அவர் இந்தவேலியைப் பராமரிப்பதற்கான செலவைக் கணக்கிட்டு ஆராய்ந்தார். ஹ்யூம் சுங்கவேலியை உயிர்வேலியாக அமைப்பது ஆரம்பத்தில் செலவேறியதென்றாலும் சில வருடங்களில் பராமரிப்பே தேவையற்ற ஒன்றாக அது ஆகிவிடுமெனக் கண்டுபிடித்தார். மிக எளிதில் உயரமாக வளரும் முள்மரங்களைக் கண்டுபிடித்து அவற்றை நட்டு அந்த உயிர்வேலியை அவர்தான் உருவாக்கினார்.

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சியான சிப்பாய்க் கலகத்தை ஒடுக்குவதில் பெரும்பங்காற்றி முக்கியமானவராக ஆனவர். அவரே இந்தியா மீதான பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான முதல் சுரண்டலமைப்பைக் கட்டி எழுப்பினார் என்பது மிக ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் அவர் பின்னாளில் இந்திய தத்துவ ஞானத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடுகொண்டவராக ஆனார். இந்தியர்களுக்கு அதிகமான தன்னுரிமை தேவை என வலியுறுத்தினார். நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு அதிக இடம் அளிக்கவேண்டுமென வாதாடி அதற்காக ஓர் அமைப்பை உருவாக்க முன்கை எடுத்தார். காந்தியின் தலைமையில் பின்னாளில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் 1885ல் அவ்வாறுதான் உருவானது.
ராய் மாக்ஸ்ஹாம் அளிக்கும் தகவல்கள் நம்மை ஆழமான மனச்சோர்வில் கொண்டுசென்று தள்ளுபவை. முதல் விஷயம் இந்தியாவில் உருவாகிவந்த பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பகட்டம் முதல் உச்சகட்ட ஊழலையே நிர்வாகத்தின் இயல்பான வழிமுறையாகக் கொண்டிருந்தது என்பதை சித்தரித்துக் காட்டுகிறார் ராய் மாக்ஸ்ஹாம். கிளைவ் இந்தியாவை வென்றதே ஊழல் மூலம். சாதாரண அலுவலக குமாஸ்தாவாக இந்தியா வந்த அவர் அந்த ஊழலில் சம்பாதித்த பணத்தால் பிரிட்டனின் முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவராக ஆனார். அன்றைய ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் மிகக்குறுகிய காலகட்டத்தில் உச்சகட்டமாக ஊழல் செய்து பணக்காரர்களாக ஆனார்கள்
அத்துடன் கீழ்மட்டத்தில் ஊழியர்களுக்கு மிகமிகக் குறைந்த ஊதியத்தை அளித்தோ அல்லது ஊதியமே இல்லாமலோ வேலைசெய்ய வைத்தது கம்பெனி. அவர்கள் ஊழல்மூலம் சம்பாதிக்க ஊக்குவித்தது.அதன் மூலம்தான் பல்லாயிரம் இந்தியர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணிபுரிய ஆர்வத்துடன் திரண்டு வந்தார்கள். மிகச்சில வருடங்களிலேயே பிரிட்டிஷார் தங்களுக்குரிய அதிகார வர்க்கத்தை இவ்வாறுதான் உருவாக்கிக்கொண்டார்கள். அதாவது இன்றும் நீடிக்கும் நம் அதிகார வர்க்கமானது ஊழலால் ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று
இவ்வாறு ஊழலில் அதிகாரிகள் ஈடுபடும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே அடிமட்ட மக்கள்தான். பிரிட்டிஷாரை ஆதரித்த நிலப்பிரபுக்களுக்கு அதிக இழப்பு ஏற்படாமல் எந்த விதமான ஒருங்கிணைப்பு பலமும் இல்லாமல் இருந்த ஏழைகளுக்கே அதிக பாதிப்புவரும் வகையில் வரிகள் போடப்பட்டன. ஆகவேதான் உப்புவரிக்கு இத்தகைய முக்கியத்துவம் வந்தது. சிலர் இன்று எழுதுவதுபோல பிரிட்டிஷ் ஆட்சி அடித்தள, தலித் மக்களுக்கான விடிவாக இருக்கவில்லை. அவர்களை மிகக்கொடுமையாக ஒடுக்கிப் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடியதாகவே இருந்தது
பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் உருவான மாபெரும் பஞ்சங்களில் இரண்டாவது பெரும் பஞ்சத்தில் 11876–78 ல் கிட்டத்தட்ட ஆறரைக்கோடிப் பேர் இந்தியாவெங்கும் பட்டினிகிடந்து செத்தார்கள். அதாவது அன்றைய இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி. அதில் 30 லட்சம்பேர் அன்றைய ஒருங்கிணைந்த வங்க மாநிலத்தில் செத்தார்கள்.உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சம் இதுவே .இது பஞ்சம் என்பதைவிடப் பொருளியல் சுரண்டல் வழியாக நிகழ்ந்த ஒரு மாபெரும் படுகொலை என்பதை இந்நூல் மிக துல்லியமாகச் சித்தரிக்கிறது. வெள்ளையர்களின்தாசர்களான நம் ஆய்வாளர்கள் மழுப்பிச்செல்லும் இந்த இடத்தில் ஒரு ஆங்கிலேய ஆய்வாளர், பிரிட்டிஷ் இந்தியாவில் அதிகாரியாக இருந்த ஒருவரின் பேரன், இந்த அளவுக்குத் திட்டவட்டமாக எழுதியிருப்பதை ஆச்சரியமென்றே கொள்ளவேண்டும்.
பஞ்சத்தை உருவாக்கிய கூறுகள் என்ன? மாபெரும் வங்கப்பஞ்சம் தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு 1874, 1875களில் வடஇந்தியா முழுக்க மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது என பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன என்கிறார் ஆசிரியர். பொதுவாக இந்தியாவில் ஒரு நல்ல விளைச்சல் ஐந்தாண்டுவரை பஞ்சம்தாங்கும் தன்மை கொண்டது, காரணம் சராசரி இந்தியர்களின் நுகர்வு இன்றுபோலவே அன்றும் மிகமிகக் குறைவு. அப்படியானால் எப்படி பஞ்சம் வந்தது?
இந்தியாவில் போடப்பட்ட ரயில்பாதைகளினால்தான். அந்த ரயில்கள் அனைத்துமே மைய நிலங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்காகப் போடப்பட்டவை. அவற்றின் வழியாக இந்தியாவின் விளைச்சல் முழுக்கத் திரட்டப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. உலகமெங்கும் விரிவாக்கப்போர்களில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவிலாத உணவுத்தேவைக்காக அவை சென்றன. அதற்கு முன்னர் விளைச்சல்கள் அந்தந்த இடங்களிலேயே சேமிக்கப்படும், பஞ்சங்களில் பயன்படுத்தப்படும். ஆனால் ரயில்பாதை காரணமாக உபரியே இல்லாத நிலை வந்தது.
இரண்டாவதாக, பிரிட்டிஷாரின் இந்த மாபெரும் சுங்கவேலி. அந்த வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. ஆந்திரம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஓரளவுக்கு நல்ல விளைச்சல் இருந்தது. அந்த நிலப்பகுதிகளில் இருந்து இந்த வேலி வங்கத்தை முழுமையாகவே துண்டித்துவிட்டது. வங்கத்தில் மக்கள் லட்சகணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது பம்பாயிலிருந்தும் சென்னையில் இருந்தும் கப்பல்கப்பலாக தானியம் வெளியேறிக்கொண்டிருந்தது
கடைசியாக, ராய் மாக்ஸ்ஹாம் உப்புவரியைச் சொல்கிறார். இந்த பெரும்பஞ்சங்களின்போதுகூட பிரிட்டிஷார் உப்புவரியை நீக்கவில்லை. ஒருங்கிணைந்த வங்கத்திலும் வடகிழக்கிலும் உப்பின் விலை அதிகமாகவே இருந்தது. ஆகவே தானியமே வாங்கமுடியாத மக்கள் உப்பை முழுக்கவே தவிர்த்தார்கள். உப்புக்குறைபாட்டால் கால்நடைகளும் குழந்தைகளும் ஏராளமாக இறந்தார்கள். பின்னாளில் அன்று இறந்தவர்களைப்பற்றிய அறிக்கைகளில் இருந்து பல லட்சம்பேர் உப்புக்குறைபாடு நோயால்தான் இறந்திருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தார்கள்.
இவ்வாறு இந்த மாபெரும்வேலி இந்தியாவை ஒரு பிரம்மாண்டமான விலங்கால் கட்டிப்போட்டது. இந்தியாமீதான பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கான பொருண்மையான ஆதாரமாக இருந்தது. ஒரு புற்றுநோய்க்கட்டிபோல இந்தியாவின் உயிரைக்குடித்துக்கொண்டிருந்தது இது.
துறைமுகங்களும் ரயில்பாதைகளும் உருவாகி பிரிட்டிஷாருக்கு இந்தியாவின் மீது முழு பொருளியல் கட்டுப்பாடு வந்தபோது எல்லாப் பொருட்களிலும் வரிவிதிக்கமுடிந்தது. ஆகவே உப்புவரி முக்கியத்துவம் இழந்தது. மேலும் தென்னாட்டில் உப்பளங்களின் மீது போடப்பட்ட நேரடி வரிமூலம் சுங்கவேலி அளித்த வருமானத்தை விட அதிகமான வருமானம் வர ஆரம்பித்தது. ஆகவே வைஸ்ராய் லார்ட் லிட்டன் 1879ல் உள்நாட்டு சுங்கவரியை ரத்துசெய்தார். உப்பு மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டது. உப்புக்காக உருவாக்கப்பட்ட சுங்கவேலி கைவிடப்பட்டு அழிந்தது.
காந்தியின் உப்புசத்தியாக்கிரகத்தைப்பற்றி நான் நினைவுதெரிந்த நாள் முதலாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலகோணங்களில் அது எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எரியும் பிரச்சினைகள் பல இருக்க, ஒடுக்குமுறைச் சட்டங்களே பல இருக்க, உப்புக்காய்ச்சுவதற்கு எதிரான சட்டத்தை மீறும் முடிவை எதற்காக காந்தி எடுத்தார்?
அதற்கான விளக்கமாக இன்றுவரை கொடுக்கப்பட்டுவந்ததுது இதுதான். ஆங்கிலேயர் கப்பல்களில் இந்தியாவிற்குத் துணிகளை இறக்குமதி செய்தபோது கப்பல்களின் அடித்தளத்தில் எடைக்காக உப்பு நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அந்த உப்பு விலை அதிகமானது. அதை விற்பதற்கு உள்ளூர் உப்புக்கு வரிபோட்டு விலையை ஏற்ற வேண்டியிருந்தது. காந்தி ஏன் உப்புசத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தாரென்றால் இந்தியாவின் எல்லா அடித்தள மக்களுக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடியதாக உப்புவரி இருந்தது.
அது ஓரளவே உண்மை, அதாவது வங்க அளவுக்கு. வங்காளத்தில் உப்பு ஏற்கனவே விலை அதிகம். தீயில் காய்ச்சப்படாத உப்பை வங்க பிராமணர் விரும்பினார்கள். அந்த இடத்தில் இந்த கப்பல் உப்பை பிரிட்டிஷார் விற்றார்கள். அதனுடன் நிகராக இருப்பதற்காக உள்ளூரில் காய்ச்சப்படும் உப்புக்கு அதிக வரி போட்டார்கள். ஆனால் இந்திய அளவில் இது உண்மை அல்ல.
ஒட்டுமொத்தமாக உப்புசத்தியாக்கிரகத்தின் சமூகவியல் உள்ளடக்கம் என்ன என்பதை சரேலெனத் திறந்து காட்டுகின்றன இந்த நூல் அளிக்கும் தகவல்கள். இந்தத் தகவல்கள் எவையும் இன்றுவரை இந்தியச்சூழலில் பேசப்பட்டதில்லை. உப்புசத்தியாக்கிரகம் காந்தியின் ஒரு காரியக்கிறுக்கு என்றே இங்கே சொல்லப்பட்டுவந்தது. மார்க்ஸிய சோஷலிச அறிஞர்கள் உப்புசத்தியாக்கிரகத்தை காந்தி வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை கிண்டல் செய்து ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்.

காந்தி தண்டி யாத்திரை
தன் சமகால அரசியல்வாதிகளில் இருந்தும், நம் சமகால 'அறிஞர்களில்' இருந்தும் காந்தி எப்படி உண்மையான வரலாற்றறிவால், விரிவான சமூகப்புரிதலால் அவர்கள் எட்டவே முடியாத அளவுக்கு மேலே நின்றார் என்பதைக் காட்டுகிறது இந்தத் தகவல்புலம். அவர்கள் எவருக்கும் அன்றும் இன்றும் இந்திய வரலாற்றில் உப்பு என்றால் என்ன என்று தெரிந்திருக்கவில்லை. பண்பாட்டிலும் சமூக உளவியலிலும் உப்பு வகிக்கும் இடம் புரிபட்டிருக்கவில்லை.
காரணம், அவர்கள் எவருமே அடித்தள மக்களை அறிந்தவர்கள் இல்லை. அடித்தள மக்களுக்காகப் போராடும்போதுகூட அவர்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் தங்களை நினைத்துக்கொண்டார்களே ஒழிய அவர்களில் ஒருவராக எண்ணிக்கொள்ளவில்லை. உதாரணமாக மார்க்ஸிய முன்னோடி எம்.என்.ராய் உப்பு சத்தியாக்கிரகம் பற்றி எழுதிய நக்கலும் கிண்டலும் நிறைந்த கட்டுரைகளைச் சுட்டிக்காட்டலாம். எம்.என்.ராய் இந்தியாவில் பயணம்செய்து ஏழை இந்தியர்களை அறிந்தவர் அல்ல. காந்தி என்றும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆகவே எம்.என்.ராய்க்குத் தென்படாத உண்மையான மக்கள் வரலாறு காந்திக்கு தெரிந்தது.
மிக நுட்பமான ஒரு விஷயத்தை ராய் மாக்ஸ்ஹாம் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் எப்போதுமே நிலவரி x உப்புவரி என்ற இருமை இருந்திருக்கிறது. நிலவரி நில உடைமையாளர்களை பாதிப்பது, உப்புவரி அடித்தள மக்களைப் பாதிப்பது. பிரிட்டிஷ் அரசு எப்போதுமே உப்புவரியை அதிகரிக்க இந்திய உயர்குடிகளால் கட்டாயப்படுத்தப்பட்டது.
1930 மார்ச் 12ல் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டபோது அடுத்த தலைமுறை கிராமவாசிகளின் நினைவுகளில்கூட முந்தைய உப்பு ஒடுக்குமுறை இல்லாமலாகியது. அப்போது உப்புமீது இருந்த வரி ஒப்புநோக்க மிகச்சிறியதாக இருந்தது. தென் மாநிலங்களில் அது ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை
ஆனால் மொழியிலும் பண்பாட்டிலும் உப்பு ஆழமாக வேரோடியிருந்தது. உப்பு என்ற சொல்லே ஆழமான உணர்வெழுச்சியை உருவாக்கக்கூடியதாக இருந்தது. அதை காந்தி அம்மக்களிடையே மூன்றாம்வகுப்பு ரயில்பெட்டிகளில் பயணம் செய்து வாழ்ந்து அறிந்திருந்தார். அதை கோகலேயோ, திலகரோ, நேருவோ, சுபாஷ்சந்திரபோஸோ, அம்பேத்காரோ அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர்களால் உப்புசத்தியாக்கிரகத்தை ஒரு தவிர்க்கமுடியாத கிழவரின் கிறுக்குத்தனம் என்று மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. அது நம்பமுடியாத அளவுக்கு விளைவுகளை உருவாக்கியபோது அதற்கு விளக்கமளிக்கவும் முடியவில்லை
காந்தி உப்புசத்தியாக்கிரகத்தை அறிவித்தபோது அவரைச்சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் நிலவரி அல்லது சுங்கவரிக்கு எதிராக போராடலாம் என்று ஆலோசனை சொல்லி வற்புறுத்தியதை ராய் மாக்ஸ்ஹாம் குறிப்பிடுகிறார். காந்தி அதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், உப்புசத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கும்படி அவரிடம் சொன்னது அவரது அந்தராத்மா என்பதுதான். நிலம் உயர்சாதி உயர்குடியின் பிரச்சினை. உப்பு அடித்தள மக்களின், தலித் மக்களின் பிரச்சினை என காந்தி அறிந்திருந்தார். அவரது அந்தராத்மாவை அன்றும் இன்றும் கிண்டல்செய்யும் எந்த அறிஞனை விடவும் அந்த அந்தராத்மாவுக்கு வரலாறு தெரிந்திருந்தது.
இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால அறிவுலகச் செயல்பாடுகளில் பல்லாயிரம் நூல்களை எழுதித்தள்ளிய நம் சமூகவியல் பேராசிரியர்களின் ஆய்வுகளின் அடித்தளமின்மையை அதிர்ச்சியளிக்கும்படி அம்பலப்படுத்துகிறது இந்நூல். 1996ல், இந்தியா சுதந்திரம் பெற்று கிட்டத்த அரைநூற்றாண்டு கழித்து, உப்புசத்தியாக்கிரகம் நிகழ்ந்து முக்கால்நூற்றாண்டு கழித்து, இந்தியா வரும் ராய் மாக்ஸ்ஹாம் இங்குள்ள வரலாற்று அறிஞர்களை ,சமூக ஆய்வாளர்களை, அரசியல் விமர்சகர்களை சந்தித்து இந்த வேலிபற்றிக் கேட்கிறார். எவருக்கும் எந்த அறிதலும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்.
எப்படி இருந்திருக்கும்? இங்கே நம் கல்விப்புலம் சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமே பயணங்கள்செய்யவும் ஆவணங்களை ஆராயவும் வசதி உள்ளது. அவர்களுக்கு மேலைநாட்டு ஆய்வுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமே உண்மையான நவீன ஆய்வு என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஓரளவு முறைமையுடன் ஆராய்பவர்கள் மேலைநாட்டுப் பல்கலைகளில் ஆய்வுப்பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனேகமாக அனைவருமே இந்தியா என்ற பிற்பட்ட நிலப்பரப்பை நவீன தேசமாகக் கட்டியவர்கள் ஆங்கிலேயர் என்ற கொள்கையைக் கிட்டதட்ட மதநம்பிக்கை போலப் பெற்றுக்கொண்டுதான் இங்கே வருகிறார்கள்.
ராய் மாக்ஸ்ஹாமின் நூல் மிகசுவாரசியமான வாசிப்புத்தன்மை கொண்டது. உண்மையில் இது ஒரு பயணநூல். சுங்கவேலியைத் தேடி இந்தியாவுக்கு வரும் ராய் மாக்ஸ்ஹாம் அதன் எச்சங்களைத் தேடி இந்தியாவுக்குள் பயணம்செய்கிறார். எருமையின் மூச்சு பிடரியில் பட யமுனைக்கரை கிராமத்தின் கயிற்றுக்கட்டிலில் படுத்துத் தூங்குகிறார். முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பிதுங்கி வழிந்து பயணம் செய்கிறார். ஓம்காரேஸ்வரிலும் காசியிலும் வேலியைக் காட்டித்தரும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார். அது கொஞ்சம் அதிகமோ என எண்ணித் தன் குடும்பத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.
பல விஷயங்கள் புன்னகை வரவழைக்கின்றன. ராய் மாக்ஸ்ஹாம் இந்தியாவில் முதல்வகுப்பு கூபேயில் பயணம்செய்பவர்களே நாகரீகமற்ற அகங்காரம்கொண்ட மக்கள் என நினைக்கிறார். செல்பேசியில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். வெளியே வேடிக்கை பார்க்கவும் முடிவதில்லை. இரண்டாம் வகுப்பில் நட்பான சுமுகமான சூழல் உள்ளது, என் அனுபவமும் அதுவே. அவரது பயணப்பதிவுகளில் உள்ள மெல்லிய வேடிக்கை இந்நூலை சுவாரசியமான அனுபவமாக ஆக்குகிறது.
ராய் மாக்ஸ்ஹாம் கடைசியில் சம்பலில் அந்த வேலியின் எஞ்சிய பகுதியயைக் கண்டுகொள்கிறார். முன்னாள் கொள்ளையரும் இந்நாள் அனுமார்கோயில் பூசாரியுமான ஒருவரின் உதவியால். பிற எல்லா இடங்களிலும் நவீனமயமாக்கல் வேலியை அழித்துவிட்டது. அதற்குக் காரணம் மிக எளிது. இந்த வேலியை ஒட்டியே பெரும்பாலும் சாலைகள் உருவாகி வந்தன. சாலைகள் விரிந்து வேலியை விழுங்கிவிட்டன.
நம்மை நாமே ஆராயத்தூண்டும் முக்கியமான நூல் இது. சுங்கவேலி நம் முதுகின் ஒரு சாட்டைத்தழும்பு. அது மறைந்தாலும் நம் மொழியில் கனவில் மிஞ்சியிருக்கிறது.
அள்ளிப்பதுக்கும் பண்பாடு,கடிதங்கள்
பன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'
வெங்கடேஷ் மாட்கூல்கரின் 'பன்கர் வாடி'
இந்தியாவில் பஞ்சங்கள் இருந்தனவா?
தொடர்புடைய பதிவுகள்
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
காந்தியின் தேசம்
அண்ணா ஹசாரே மீண்டும்
காந்தியும் அரட்டையும்
சார்பியல்-கடிதங்கள்
ஐன்ஸ்டினின் சூத்திரம் முற்றிலும் தவறானது என்றல்ல.
அவரின் சூத்திரம் பிரபஞ்சவியலின் பல விஷயங்களை விளக்கப் போதுமானதாக இல்லை, காரணம் பல காரணிகளை இச்சூத்திரம் உள்ளடக்கவில்லை ஆகவே தோரயமானது; இச்சூத்திரத்தின் துல்லியம் போதவில்லை என்பதால்தான் அதன் மீது விமர்சனங்கள் தோன்றி ஸ்ட்ரிங் தியரியாக வளர்ந்தன http://superstringtheory.com/ . எளிமைப்படுத்தியதால் வரும் சிக்கல்கள். இதை ஐன்ஸ்டீனும் உணர்ந்தே இருந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
பிரையன் கிரீன் எழுதிய "தி எலெகண்ட் யுனிவர்ஸ்" http://en.wikipedia.org/wiki/The_Elegant_Universe என்ற புத்தகமும்
அதை அடிப்படையாகக் கொண்ட கீழ்வரும் டாகுமெண்டரியும் http://www.pbs.org/wgbh/nova/elegant/
இவ்விஷயங்களை அறிமுகமும் இல்லாத அனைவரும் புரிந்துகொள்ள உதவுபவை, ஒரு தடவை அவரை நேரில் சந்தித்தும் இருக்கிறேன். நண்பர் சிறிலிடம் இந்தக் காணொளி குறுந்தகடுகள் உள்ளன.
வேணு தயாநிதி
இதே போன்ற ஒரு பரிசோதனையில் ஏற்கனவே Fermilab-இல் இந்த விஷயம் இன்னும்
சிறந்த துல்லியத்துடன் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாது, இதே neutrino-க்கள் Supernova Explosion-இலும்
கன்டறியப்பட்டுள்ளன. ஒரு Supernova Explosion-இன் போது, ஒளி வந்து
சேர்வதற்குள், மூன்று மணி நேரத்திற்குள் இந்த neutrinos வந்து சேர்ந்தது,
கண்டறியப்பட்டுள்ளது.
http://scienceblogs.com/startswithabang/2011/09/this_extraordinary_claim_requi.php
http://scienceblogs.com/startswithabang/2011/09/are_we_fooling_ourselves_with.php
கிருத்திகா சுப்ரமணியம்
புதிய பிரபஞ்சம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
September 27, 2011
எழுத்தாளர் முகங்கள்.
நண்பர் தளவாய் சுந்தரத்தின் இணையதளத்தில் நிறைய எழுத்தாளர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கிறார்.தமிழின் எழுத்தாளர்களின் புகைப்படங்கள் எத்தனை அரிதானவை என்பது பலருக்கும் தெரியாது. உதாரணமாக 'இடைவெளி' சம்பத்தின் ஒரு படத்தைக்கூட நான் பார்த்ததில்லை.ஆதவனின் ஒரேபடம்தான் சுற்றிவரும்.
எழுத்தாளர்களின் படங்கள் அவர்கள் குடும்பங்களில் இருக்கலாம். ஆனால் அவற்றை சேமித்து வைப்பதற்கு அவர்களின் குடும்பத்தினர் அக்கறை காட்டுவதில்லை, அவர்களின் பார்வையில் அவர் ஒரு முக்கியமானவராக இருப்பதில்லை. அந்தப் புகைப்படங்களை வாங்கிப் பிரசுரிக்க நம் இதழ்களும் முனைவதில்லை. அவர்களுக்கும் அவர்கள் முக்கியமானவர்களல்ல.
அதற்குமேல், இலக்கியச்சூழலுக்கே எழுத்தாளர்களின் படங்களை வெளியிடுவது சம்பந்தமாக ஒரு தயக்கம் இருந்தது. தமிழில் எழுத்தாளர்களை அட்டையில் பெரிய வண்ணப்படமாகப் போட்ட சிற்றிதழ் நாங்கள் நடத்திய சொல் புதிது. அப்போது அதற்குக் கடுமையான எதிர்வினைகள் வந்தன, எழுத்தாளர்களை நடிகர்களாக ஆக்கவேண்டாம் என்று.
பழைய எழுத்தாளர்களின் படங்கள் எந்த அளவுக்கு அபூர்வமானவையோ அந்த அளவுக்கே புதிய எழுத்தாளர்களின் படங்களும் கிடைத்தற்கு அரியவை. மாதிரிக்கு சிலமுகங்களை சேர்த்து வைக்கும் தளவாய் பாராட்டுக்குரியவர். ஆனால் எனக்குப் புரியாதது என்னவென்றால் அந்தப்பட்டியலில் உள்ள சில பெண்முகங்கள் நான் இதுவரை கேள்விப்படாதவை. ஜென்னிஃபர் , அழகுநிலா…இவர்களெல்லாம் ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்ன? எழுதியிருப்பார்கள். இல்லையென்றால் எழுத்தாளர்களாகக் கருதப்பட வாய்ப்பில்லை அல்லவா?
http://www.flickr.com/photos/dhalavaisundaram/
தொடர்புடைய பதிவுகள்
அயோத்திதாசர்-கடிதங்கள்,படங்கள்
அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்
படைப்பாளிகளின் மேற்கோள்கள்
பயண நண்பர்கள்
பூட்டான், குழந்தைகள்
அந்தப்பெண்கள்…
பூட்டான்- கட்டிடங்கள்
பனிவெளியிலே
வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை
வடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்
ஐன்ஸ்டீனின் கனவுகள்
நான் அமெரிக்காவில் இருந்து வாங்கிவந்த நாவல்களில் ஒன்று ஐன்ஸ்டீனின் கனவுகள். [Einstein's Dreams] ஆலன் லைட்மான் [ Alan Lightman] எழுதிய புகழ்பெற்ற சிறுநாவல் இது. அரைமணிநேரத்தில் வாசித்து முடிக்கக்கூடிய சிறிய நாவல்களில் ஒன்று. அதிக புனைவுச்சிக்கல்கள் இல்லாத நேரடியான படைப்பு. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ஈரோடு விஜயராகவனிடம் கொடுத்தேன். மொழியாக்கம் செய்துவிட்டார் என்றார். விரைவில் வெளிவரலாம்.
[image error]
இளம் அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905இல் அவரது சார்பியல் கோட்பாட்டை வெளியிடும் காலத்தில் இருந்த மனநிலையை விவரிக்கும் நாவல் இது. நாம் வாழும் இந்த உலகம் சில திண்மைகளின் மேல் அமைந்துள்ளது. காலம், இடம் சார்ந்த திண்மை அவற்றுள் முக்கியமானது. சட்டென்று சார்மை வெளிப்பட்டு அந்தத் திண்மைகள் ஆட்டம் காணுமென்றால் நம் ஆழ்னமனம் திடுக்கிடுகிறது.அது அறிந்து உள்வாங்கி சமைத்துள்ள மொத்தப் பிரபஞ்சத்தையும் திரும்பக் கட்டியெழுப்ப முயல்கிறது
அந்த முயற்சியைக் கனவுகளாக எதிர்கொள்கிறார் ஐன்ஸ்டீன். அதைச் சித்தரிக்கும் நாவல் இது. முப்பது சிறிய அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல் ஐன்ஸ்டீன் கண்ட முப்பது தனித்தனியான கனவுகளைச் சித்தரிக்கிறது. ஒவ்வொரு கனவும் வாழ்க்கையை சார்மை விதிகளின்படி திருப்பி அமைக்கக்கூடியதாக இருக்கிறது. ஐன்ஸ்டீன் காப்புரிமை அலுவலகக் குமாஸ்தாவாக, சார்பியல் கோட்பாட்டைத் தொட்டுவிட்டுத் திகைத்து நிற்பவராக இந்நாவலின் தொடக்கத்தில் அறிமுகமாகிறார்.
1905ல் சுவிட்சர்லாந்தில் பெர்னே நகரில் தன் காப்புரிமை அலுவலகத்திற்கு ஐன்ஸ்டீன் ஜூன் 29 காலை வருமிடத்தில் அவரை அறிமுகம் செய்துகொண்டு ஆரம்பிக்கிறது நாவல் . அந்தக்காலையில்தான் ஐன்ஸ்டீன் நகரும் துகள்களின் மின்னியக்கவியல் என்ற தன் ஆய்வேட்டை முடித்துத் தட்டச்சுக்குக் கொடுக்கிறார். அதில் பின்னாளில் சார்பியல் கோட்பாடு என்றபேரில் புகழ்பெற்ற கொள்கையை முன்வைத்திருந்தார். அரை மணி நேரம் கழித்துத் தட்டச்சாளர் அலுவலகத்திற்குள் நுழையும்போது நாவல் முடிகிறது. தொடர்ந்து முப்பது நாட்களில் கண்ட முப்பது தனிக்கனவுகளாக நாவல் முன்னகர்கிறது. ஒரு முடிவுப்பகுதியுடன் நிறைவடைகிறது
இந்தக்கனவுகளை வெவ்வேறு வகையில் காலம் வெளி பற்றிய அவதானிப்புகளாக வாசிக்கலாம். உதாரணமாக முதல் கனவில் காலம் ஒரு வட்டச்சுழற்சியாகி மனிதன் முடிவில்லாமல் செய்வதையே திரும்பச் செய்து அடைந்தவற்றையே திரும்ப அடைந்து வாழும் நிலையைக் காட்டுகிறது. அவ்வாறு விதவிதமான கோணங்களில் அமைந்த காலம் வழியாக வாழ்க்கைநிகழ்வதைக் காட்டுகின்றன இக்கதைகள்.
ஓர் இலக்கிய வாசகனாக எனக்கு இக்கதைகள் பெரிய அனுபவத்தை அளிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் கனவுகளைவிட சிக்கலான நுண்மையான கனவுகளை இலக்கியத்திலும் கவிதையிலும் நாம் ஏற்கனவே வாசித்திருக்கிறோம். கனவு என்பதை காலமில்லாத காலநிகழ்வு என்று கொண்டால் அங்கே காலம் அடையும் பலவடிவங்களை இன்னும் பிரமிப்பூட்டும்படி நாம் புனைவிலக்கியத்தில், சரிரியலிஸ ஓவியங்களில் காணமுடியும்.
இந்தக் கதைகளின் முக்கியமான குறைபாடு என்னவென்றால் இவை கனவின் காலமின்மையில் நிகழும் படிமவெளியை மொழியால் அள்ளமுடியாமல் நின்றுவிடுகின்றன என்பதுதான். ஆகவே ஒரு கனவைக் காணும் அனுபவம் நிகழ்வதில்லை, கனவைப்பற்றிய ஒரு உரையாடலைக் கேட்கும் அனுபவமே எஞ்சுகிறது.
இந்தக் கனவுகள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையைப் பல கோணங்களில் விளக்கும் அறிவியல் முக்கியத்துவம் கொண்டவை என்று வாசித்தேன். அந்த அம்சம் எனக்கு முக்கியமாகப் படவில்லை.
இந்த எளிய சிறிய நாவல் புனைவின் பாய்ச்சலுக்காக அல்லாமல் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைக்காக வாசிக்கப்படவேண்டியது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
