Jeyamohan's Blog, page 2279

October 17, 2011

எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்

அன்பிற்குரிய ஜெயமோகன்:


உங்கள் நல்வரவு கட்டுரையை வாசித்தேன். குற்றாலம் கவிதைப் பட்டறையில் மௌனி-பார்ப்பாரக்குட்டி காமெண்ட் நான் சொல்லவில்லை. கட்டுரை முழுக்க நான் பேசாததையோ, எழுதாதையோ -மற்றவர்கள் சொன்னதை என் மேல் ஏற்றி-'திரண்ட பொருள்' காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தினமணி சுரா கட்டுரை செய்ததாக நீங்கள் வருத்தப்பட்ட தவறை நீங்களே செய்யக்கூடாது.மற்றபடி நான் எழுதியதை உங்கள் விருப்பம் போல் வாசிக்கலாம். நகுலன், மௌனி கட்டுரைகள் உட்பட.


இன்னொரு தகவல் பிழை உங்கள் விஷச்செடி கதை பற்றி நான் ஒன்றும் விரிவான வாசிப்பை முன் வைக்கவில்லை. மேலும் இதழ் பேட்டியொன்றில் கேட்ட கேள்விக்கு பதிலாய் சொன்னேன். அதற்கு நீங்கள் 40 பக்க கடிதம் பதில் எழுதினீர்கள். அதில் மேலாண்மை பொன்னுசாமி பற்றிய குறிப்பு இல்லை. இப்போது நீங்கள் quote செய்யும் வரி கூட உங்களைப் பற்றியில்லை உங்களைத் தாண்டிய ரசனை விமர்சனம் பற்றித்தான் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்.


மற்றபடி நகைச்சுவையோடு, தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்காமல் உரையாட எனக்கும் விருப்பம்தான். என்ன உங்களைப் போல் உடனடியாக பல பக்கங்களை எழுதிவிட முடியாது. நான் பதிலெழுதுவதற்குள் தாமிரவருணியில் தண்ணீர் நிறைய ஓடிவிடும்தான். தட்டுத் தடுமாறி effective-ஆன ஒரு பத்தி பதிலை எப்போதாவது எங்கேயாவது எழுதிவிடுவேன். மதிப்பில்லாமல் உரையாடுவது எனக்கும் பழக்கம் இல்லை.


நல்வரவுக்கு வந்தனம்,


அன்புடன்,

எம்.டி.முத்துக்குமாரசாமி


அன்புள்ள எம்.டி.எம்,


குற்றாலம் கவிதை அரங்கில் நீங்கள் சொல்லி சிரிக்க நானே கேட்ட வரி அது என்பதே என் நினைவு. ஆனால் நீங்கள் அதைப் பதிவுசெய்யாதபோது அதை மறுப்பீர்கள் என்றால் நான் அதை சொல்ல மாட்டேன். எடுத்துவிடுகிறேன். மன்னிக்கவும்


நான் உங்களுக்கு விரிவான கடிதங்கள் பல எழுதியிருக்கிறேன். அவை அன்று நான் உங்களிடம் எல்லாவற்றையும் விவாதிக்க விரும்பியதன் விளைவு. தனிப்பட்ட எல்லாக் கடிதங்களிலும் உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புபவன் நிலையிலேயே நின்று எழுதியிருக்கிறேன்.


டார்க்தீனியம்கதை பற்றி நீங்கள் சொன்னவற்றுக்கு என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் மேலாண்மை பொன்னுச்சாமியே போதுமே என்று மட்டுமே பதில் சொல்லியிருந்தேன்.


என்னுடைய அணுகுமுறை எப்போதுமே எதிலுமே முழுத்தீவிரத்துடன் இறங்குவது. ஆகவே நீங்கள் சொல்வதை முழுக்க உடைப்பதற்கே நான் முழுமூச்சுடன் முயல்வேன். ஆனால், நீங்கள் என்னை உடைக்க முடிந்தால் அது எனக்கு நல்லதே என்றும் நினைப்பேன். ஏனென்றால் எப்போதுமே விவாதங்களில் நம்பிக்கை கொண்டவன், அதுவே முன்னகரும் வழி என நினைப்பவன், என்னுடன் விவாதித்த எவரையுமே எனக்குக் கற்பித்தவர்களாக நினைப்பவன். உங்களையும் அந்த இடத்திலேயே வைத்திருக்கிறேன்.


இச்சூழலில் நான் எழுத வந்து இருபத்தைந்தாண்டுகளாகிறது. இதற்குள் எறத்தாழ எல்லாரையுமே மதிப்பிட்டு வைத்திருக்கிறேன். சுயமாக ஏதாவது சொல்வதற்கு இருக்கக்கூடிய, இலக்கிய ஆக்கங்களின் தன்னிச்சைத்தன்மையையும் உள்ளோட்டங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய, ஒருவரிடம் மட்டுமே நான் விவாதிக்கமுடியும். ஆகவேதான் இந்தக்கட்டுரை


என்னை இந்த விஷயத்தில் உங்களிடம் கற்றுக்கொள்வதற்காக உங்களிடம் மோதும் ஒருவராகவே எடுத்துக்கொள்ளுங்கள். மொழி எப்போதுமே சிக்கலானது. படைப்பாளியின் மொழி வர்மாணியின் கை போல. நினைக்காத இடங்களில் நரம்புகளைத் தீண்டிவிடலாம். அதற்காக முன்னரே மன்னிப்புக் கோருகிறேன். அவை உங்கள் மேல் மதிப்பில்லாமல் எழுதப்பட்டவை அல்ல.


நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். குறைந்தது இலக்கியம் பற்றிப் பேச இலக்கிய ஆக்கங்களைப் படித்திருக்கவேண்டும் என்பதையாவது நம்மவர்கள் புரிந்துகொள்ளட்டும் உங்கள் வழியாக


ஜெ


அன்புள்ள ஜெயமோகன்:


மௌனி பற்றி அந்த வரியைக் கூறியது வேறொரு நண்பர். அந்தத்தகவலை சரி செய்யும் பொருட்டு என் கடிதத்தை என் தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.


எந்தக் கருத்தையும் முடிந்த முடிபாகப் பிடித்துத் தொங்கி எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. நீங்கள் சொல்வது சரியென்று பட்டால் அதை ஒத்துக்கொண்டு மேலே செல்வதற்கு, கற்றுக்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். நீங்கள் நான் தொடர்ந்து எழுதவேண்டும் என்று விரும்புவதற்கு நன்றி.


அன்புடன்,

எம்.டி.எம்

தொடர்புடைய பதிவுகள்

எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2011 20:30

எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு

முதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை.


அதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய மனிதாபிமானமும் கசிவும் மட்டுமே இலக்கியத்தின் உச்சகட்ட சாத்தியங்கள் என்பதை உடைத்த அலை என தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், க.பூரணசந்திரன், பிரேம்-ரமேஷ் போன்றவர்கள் உருவாக்கிய அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் அறிமுகங்களைச் சொல்லலாம். அவர்களின் அந்தப்பங்களிப்பை நான் எப்போதுமே மதித்துவந்திருக்கிறேன். முன்னோடியான தமிழவனுக்கு ஒரு நூலையும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். பின்னாளில் பிரேமுடன் நான் நடத்திய விரிவான தனிப்பட்ட விவாதங்கள் எனக்கு பெரிதும் உதவியிருக்கின்றன.


ஆனால் இந்த அலையை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவனாகவே நான் உருவானேன். பொதுவான சிந்தனைத்தளத்தில் இவர்களின் பங்களிப்பு அளவுக்கே இவர்கள் உருவாக்கிய தடையும் முக்கியமானது. இவர்கள் மீதான என் பொதுவான விமர்சனங்களை இரு புள்ளிகளாகத் தொகுத்துச் சொல்கிறேன்


ஒன்று, இவர்கள் முன்வைத்த மேலைச்சிந்தனைகளை அவை விளைந்த பிரம்மாண்டமான விவாதச்சூழலில் இருந்து துண்டித்து எடுத்து உதிரிச்சிந்தனைகளாக இங்கே முன்வைத்தார்கள். அவற்றை நிறுவப்பட்ட கோட்பாடுகளைப்போலக் கையில் வைத்து வாதாடினார்கள். அதாவது மர்ஃபி ரேடியோவுக்குப் பதிலாக டிரான்ஸிஸ்டர் வந்துவிட்டதைச் சொல்வதுபோல.


குறிப்பாக தமிழவன் எல்லா மேடைகளிலும் அவர் அறிமுகப்படுத்திய அமைப்பியல் சிந்தனைகளைவிடக் காலத்தால் முந்தைய எந்தச் சிந்தனையையும் 'இந்தமாதிரி பாடாவதி சிந்தனைகள்…' என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போதுகூட அவர் அந்தத் தோரணையில்தான் பேசிக்கொண்டிருக்கிறார். .'இதுதான் இப்போதைய லேட்டஸ்ட் சிந்தனை. இது அங்கே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சொல்லும் சிந்தனைகள் எல்லாம் காலாவதியானவை' –இதுவே இவர்கள் பொதுவாகக் கருத்துக்களை முன்வைத்த முறை. இந்த எளிமையான இருமை [binary] இல்லாமல் இவர்களால் பேசமுடிவதில்லை.


ஆனால் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் ஒட்டுமொத்தமாகவே நிரூபணவாதத்துக்கு எதிரானவை என்பதும், அவற்றுக்கு எதிரான சிந்தனைகளுடன் இணைத்து விவாதிப்பதன் மூலமே அவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், அவை எப்போதுமே ஒரு பெரிய விவாதக்களனிலேயே பொருள் அளிக்கின்றன என்றும், இவர்கள் புரிந்துகொண்டதற்கு நேர் எதிரான கோணத்திலேயே இவற்றை அணுகவேண்டும் என்றும் நானறிந்தது இவர்கள் கூண்டோடு 'காலாவதி'யான பிறகுதான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பின்நவீனத்துவமே இந்தவகையான இருமைகளை முழுமுற்றாகக் கட்டமைப்பதற்கு எதிரானது.


இந்தக் குழப்பங்களுக்கு என்ன காரணம் என்றால் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் எல்லாமே மொழியியல் என்ற விரிவான அறிவுப்புலத்துக்குள் நிகழ்ந்தவை. இவர்கள் எவரும் முறையாக மொழியியலைக் கற்றவர்களல்ல. ஆகவே உதிரி நூல்களை வாசித்துத் தனித்தனிக் கருத்துக்களாக எடுத்துக்கொண்டு அவற்றைத் தங்களுக்குப்புரிந்த வகையில் ஒருவகை இலக்கியத் தோற்றங்கள் போல முன்வைத்தனர். இவர்கள் சொன்னதை அரைவேக்காட்டுத்தனமாகப் புரிந்துகொண்டு பலர் எம்பிக்குதித்தனர். ஒரு கட்டத்தில் அது இலக்கியத்துக்கே எதிரான ஒரு அசட்டு இயக்கமாக இங்கே உருவம் கொண்டது.


இரு உதாரணங்களைச் சொல்லலாம். ரோலான் பார்த் 'ஆசிரியனின் மரணம்' என்று ஒரு கட்டுரை எழுதினார். இலக்கிய ஆசிரியனை ஓர் தனிஆளுமையாக அணுகாமல் பண்பாட்டுக்களனில் மொழிக்களனில் நிகழும் ஒரு வெளிப்பாட்டுப்புள்ளியாக அணுகும் கட்டுரை அது. அதாவது அது இலக்கிய ஆசிரியனை இன்னும் பிரம்மாண்டமானவனாக ஆக்குகிறது. ஆனால் தமிழில் 'இனிமேல் இலக்கிய ஆசிரியன் என எவரும் இல்லை. எழுத்து மட்டும் ஆசிரியன் என்ற அடையாளமே இல்லாமல் நிற்கும்' என்று இது இவர்களால் முன்வைக்கப்பட்டது.


ஆச்சரியமாகவே இருக்கிறது இப்போது. அன்று இதை நம்பிப் பெயர் போடாமல்கூட சிலர் எழுத ஆரம்பித்தார்கள். விவாதத்தில் ஓர் எழுத்தாளனைப் பெயர்சுட்டினால் 'எழுத்தாளன் பேரை சொல்லாதீங்க. அந்த மாதிரி அணுகுமுறையெல்லாம் அழிஞ்சுபோய்ப் பத்து வருஷமாச்சு' என்று சொன்னார்கள். அதாவது வண்ணநிலவன் கதைகள் என்று எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் அது தப்பு , வண்ணநிலவன் என்ற ஒருவரே கிடையாது என்றார்கள். வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தரராமசாமி என்றெல்லாம் எழுத்துக்களைப் பிரிக்கக்கூடாது என்றார்கள்.


இதாவது பரவாயில்லை. மொழியியல்தளத்தில் எந்த ஒரு எழுத்தாக்கமும் ஒரு பிரதி [text] தான். அந்த பிரதி எப்படி எச்சூழலில் அர்த்த உருவாக்கம் நிகழ்த்துகிறது என ஆராய்வதே அவர்களின் வேலை. உண்மையில் அது விட்கென்ஸ்டீன் காலம் முதலே உள்ள முறை. ஆனால் அந்த அணுகுமுறையை அப்படியே ஓர் இலக்கியவிமர்சன அணுகுமுறையாகப் புரிந்துகொண்டு எழுத்துக்கள் நடுவே குணவேறுபாடே இல்லை என்று இங்கே முன்வைத்தார்கள். இலக்கியத்தில் தரவேற்றுமை இல்லை என்று வாதிட்டார்கள். 'சுந்தர ராமசாமி எழுத்தும் சரோஜாதேவி எழுத்தும் ஒன்றுதான்' என்ற அரிய பொன்மொழி பிறந்தது.


இரண்டாவதாக, இவர்களின் இந்த அலை தமிழில் உருவான எந்த இலக்கியப்படைப்பையும் மேலதிக நுண்வாசிப்பு எதற்கும் உட்படுத்துவதாக இருக்கவில்லை என்பதுதான்.ஒரு படைப்பை வாசித்து அதில் வெளிப்படையாக ஒலிக்கும் குரல்களை மட்டுமே கொண்டு வழக்கமாக சூழலில் புழங்கும் அரசியல் அர்த்தங்களைக் கட்டமைப்பதற்கு அப்பால் அவர்களால் எதையுமே சாதிக்கமுடியவில்லை. அது அரைநூற்றாண்டாக நம் கல்விச்சூழலில் நிகழ்ந்துவரும் 'திரண்டபொருள் காணும்' பொழிப்புரை நோக்குதான். கலைச்சொற்களை மட்டுமே மாற்றிக்கொண்டார்கள்.


சிறந்த உதாரணம் என்றால் நகுலன் படைப்புகளுக்கு எம்.டி.முத்துக்குமாரசாமிஎழுதிய விமர்சனம். நகுலனை எழுதத்தெரியாமல் குழப்பிய ஒரு பார்ப்பனஎழுத்தாளர் என்ற அளவிலேயே எம்.டி.எம் மதிப்பிட்டிருந்தார். இன்று அக்கட்டுரையை வாசிப்பவர்கள் நல்ல நகைச்சுவைக்கட்டுரையை எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதமுடியும் என நம்பக்கூடும்.


அல்லது குறியீட்டு வாசிப்பு. அதற்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் உதாரணம். என்னுடைய டார்த்தீனியம் கதையில் கரியசெடி ஒன்று ஒரு குடும்பத்தை அழிக்கிறது. அந்தக் கரியசெடி தலித்துக்களைக் குறிக்கிறது என்றும் அந்தக்கதை பாரதிய ஜனதாவின் கொள்கையை முன்வைக்கிறது என்றும் ஒரு வாசிப்பை முன்வைத்திருந்தார் எம்.டி.முத்துக்குமாரசாமி. அதைச்சொல்ல மேலாண்மை பொன்னுச்சாமியே போதும் என்பதை மட்டுமே நான் எதிர்வினையாகப் பதிவு செய்தேன்.


அல்லது உளவியல் விமர்சனம். அதற்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் உதாரணம். மௌனியைப்பற்றிப் பேசும்போது 'நல்ல செவப்பா ஒரு பார்ப்பாரக்குட்டிய கொண்டு போய் அந்தாள்கூட ஒரு வாரத்துக்கு விட்டிருந்தா அவரு கதை எழுதாம இருந்திருப்பாரு' என்றார் குற்றாலம் பதிவுகள் பட்டறையில். 'மௌனியின் மொழி மானுட அறத்தைக் கையாள அறவே திராணியற்றது' என்ற தன் மதிப்பீட்டுக்கு அவரது கடுமையான விமர்சனக் கட்டுரையில் எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லும் காரணம், அவர் 'போலும்' என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிக்கிறார், ஆகவே திட்டவட்டமாக எதையும் சொல்ல மறுக்கிறார் என்பது.


இந்த விமர்சனங்களைக் கண்டு அன்று நானெல்லாம் உண்மையிலேயே பீதியடைந்துவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக்கூட ஓர் சிந்தனை அலை மேற்கே உருவாகுமா என்ன என்ற கலக்கம் அது. ஆகவே எனக்கு இச்சிந்தனைகளைப் புரிந்துகொள்ளும்படி விளக்கும் மொழியியலாளர்களை தேடி ஓடினேன். மலையாளக் கவிஞர் கெ.சச்சிதானந்தன், கன்னட விமர்சகர் டி.ஆர்.நாகராஜ் ஆகியோரை சந்தித்து விரிவாக உரையாடினேன். அந்த உரையாடல்கள் பேட்டிகளாகக் காலச்சுவடு இதழில் வெளியாயின. அவற்றுக்கு அதன்பின் சிலவருடங்கள் தொடர்ந்து வெளிவந்த எதிர்வினைகளைப்பார்த்தால் அவை தமிழ்ச்சூழலில் உருவாக்கிய தெளிவின் மதிப்பு என்ன என்று புரிந்துகொள்ளமுடியும்.


அதன்பின்னரே நான் நித்ய சைதன்ய யதியை சந்தித்தேன். நித்யா எனக்கு அளித்த ஆலோசனைகள் என்னை மிக எளிதாகத் தெளிவை நோக்கிக் கொண்டுசென்றன. அவர் சொன்ன முதல் விஷயம், நான் புத்தம்புதுச் சிந்தனைகளாக இவர்களிடமிருந்து அறிந்து கொண்டிருந்தவை புதியவையே அல்ல, கால்நூற்றாண்டு பழையவை. புதிய சிந்தனை அலை என்பது நரம்பியல் சார்ந்து எழுந்துவந்து கொண்டிருந்தது. நித்யா எனக்கு ஆலிவர் சாக்ஸின் நூல்களை அறிமுகம்செய்தார்.


இரண்டாவதாக, இத்தகைய சிந்தனைகளை ஒரு பெரிய விவாதக்களத்தில் வைத்து ஆராய எனக்குக் கற்றுத்தந்தார். விட்கென்ஸ்டைனை அறியாமல் தெரிதாவை வாசிப்பதைப்போல அபத்தம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு புனைவெழுத்தாளனாகிய நான் அந்த சிந்தனைக்களத்தின் மூலநூல்களை முழுக்க வாசிப்பதென்பது தற்கொலை என்றார் நித்யா. அதைசெய்ய வேண்டியவர்கள் பேராசிரியர்கள். நான் அச்சிந்தனைகளை நவீன வாசகனுக்காகத் தொகுத்து எழுதப்பட்ட ரீடர் வகை நூல்கள் மூலம் கற்றுக்கொண்டேன். அந்த விவாதச்சூழலில் ஒவ்வொரு கருத்தும் எங்கே இருக்கிறது என்ற வரைபடத்தை மட்டும் உருவாக்கிக்கொண்டேன்.


அந்த வாசிப்புக்கு நித்யா எனக்களித்த வழிகாட்டு நெறிகளில் முக்கியமானது நேர் எதிரான சிந்தனைகளையும் சேர்த்து வாசிப்பது. பெக்கி காம்ப் எழுதிய தெரிதா ரீடர் என்ற நூலை வாசிக்கையில் எரிக் ஹாப்ஸ்பாமின் மார்க்ஸியநோக்கிலான வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுதியையும் வாசிக்கும்படி சொன்னார். அவை நடுவே மேலோட்டமாகப் பார்த்தால் தொடர்பே இல்லை. ஆனால் அவை இணைந்து எனக்கான ஒரு விவாதக்களனை உருவாக்கி அளித்தன.


கடைசியாக நித்யா சொன்னது, நான் எல்லாச் சிந்தனைகளையும் என்னுடைய புனைவுவாசிப்பு, புனைவுப்படைப்பு தளத்தில் நின்றபடியே மதிப்பிட வேண்டும் என்று. அதுதான் என்னுடைய காலடிநிலம்..சிந்தனைகள் வளர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும். அவற்றை நான் பரிசீலிப்பதற்கான என்னுடைய அளவுகோல்களை நான் உருவாக்கிக்கொள்ளவேண்டிய தளம் அதுவே. அவ்வாறு உருவாக்கிக் கொள்ளும் சொந்தக் கருத்துக்களுக்கு மட்டுமே ஏதாவது மதிப்பு உள்ளது என்றார் நித்யா. அக்காலகட்டத்தில் குருகுலத்தில் இருந்த மொழியியலாளர் பீட்டர் ஓபன்ஹைமர், கல்வியியலாளர் பீட்டர் மொரெஸ், ஸ்ட்ராஸ் போன்றவர்களுடனான என்னுடைய உரையாடல்கள் பெரிதும் உதவின


ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சிந்தனைகளின் பெரும் விவாதக்களனில் எல்லா கருத்துக்களுமே மறுக்கப்படுகின்றன. எல்லாமே விரிவாக்கம்செய்யப்படுகின்றன. பழைய புதிய, சிந்தனை என்று ஏதுமில்லை. ஒரு தத்துவப் பேராசிரியராக முப்பதாண்டுக்காலத்தில் நித்யா ஹெகலும்,நீட்சேயும் காலாவதியானவர்கள் என்று சொல்லப்படுவதைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறார். அவர்கள் பின்நவீனத்துவ சூழலில் திரும்பி வருவதையும் அவர் காணநேர்ந்தது.


ஆகவே ஒரு சிந்தனை பழையது, ஒரு சிந்தனை புதியது என்பதற்கெல்லாம் ஒரு தனிமதிப்பும் இல்லை. ஒரு சிந்தனையை அது புதியது,சமகாலத்தது என்பதற்காகப் பரபரப்புடன் ஏற்றுக்கொள்ளுவதே சிந்தனைத்தளத்தில் உள்ள முக்கியமான கத்துக்குட்டித்தனம்.


இந்த விவாதக்களத்தில் இருவகையினர் செயல்படுகிறார்கள். முதல்வகையினர் தன்னுடைய சொந்த வாசிப்பு,படைப்பு,வாழ்க்கை அனுபவங்களில் இருந்து சுயமாகக் கருத்துக்களை உருவாக்கி சூழலுடன் விவாதித்து முன்வைப்பவர்கள். அவர்கள் நவீனமானவர்களாக, எங்கும் செல்லுபடியாகக்கூடியவர்களாக இருக்கவேண்டியதில்லை. அவர்கள் சூழலில் உள்ள எல்லாவற்றையும் தெரிந்துகொண்டிருக்கவேண்டியதில்லை. அசலாக என்ன எழுதியிருக்கிறார்கள், சொல்கிறார்கள் என்பது மட்டுமே முக்கியமானது. அந்தக் கருத்து எதுவானாலும்.


தனிப்பட்ட கருத்துநிலைகளுக்கு நிரந்தர மதிப்பேதும் இல்லை என்பதே என் எண்ணம். எந்த மாபெரும் தத்துவசிந்தனையாளனும் மானுடசிந்தனையின் பெருக்கெடுப்பில் ஒரு சின்னத் துளிதான். மானுடம் பற்றிய,இயற்கை பற்றிய,பிரபஞ்சம் பற்றிய ஒருசில அவதானிப்புகளை மட்டுமே அவன் அளிக்கிறான். அவை உண்மைகள் அல்ல. உண்மையின் பகுதிகள் என வேண்டுமானால் சொல்லலாம். அதிலும் அறிவியல் அல்லாத தத்துவம் இலக்கியம் போன்ற துறைகளில் எல்லாக் கருத்துக்களும் ஒரு கோணத்தை மட்டுமே முன்வைக்கமுடியும்.


ஒருமுறை குற்றாலம் பதிவுகள் சந்திப்பில் நான் ஒரு அவதானிப்பைச் சொன்னதும் ஒருவர் 'இது யார் சொன்னது?' என்று கேட்டார் 'ஜெயமோகன் சொன்னது' என்று நான் பதில் சொன்னேன். ஒரு இலக்கிய ஆசிரியனாக நான் வாழும் காலம் சார்ந்து சமூக வரலாறு, இலக்கியம், மெய்யியல் பற்றி நான் சில அவதானிப்புகளை முன்வைக்கமுடியும் என்றும் அவை பண்பாட்டுவிவாதத்தின் பெருவெளியில் முக்கியமானவை என்றும்தான் நான் நினைக்கிறேன்.


இரண்டாம் வகையினர் சூழலில் இருந்து கருத்துக்களைக் கற்று அவற்றைத் தொகுத்துச் சொல்பவர்கள், பிறருக்குக் கற்பிப்பவர்கள். இரண்டாம் வகையினரைப் பேராசிரியர்கள் என்று ஒரு வசதிக்காகச் சொல்லலாம். அவர்கள் எப்போதும் கிடைப்பதில் புதியதாக உள்ளதை நோக்கிச் செல்பவர்கள். ஒன்றைப் பற்றியதுமே பழையதை விட்டுவிடுபவர்கள். தாங்கள் அறியும் ஒன்றைப் பரிசீலிக்கும் அளவுகோல்கள் ஏதும் இவர்களிடம் இருப்பதில்லை. அந்த அளவுகோல்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஓர் அந்தரங்க தளமும் இவர்களிடம் இருப்பதில்லை. வாசிப்பவற்றை அவற்றில் உள்ள தர்க்கங்களைக்கொண்டே மதிப்பிடுவது இவர்களின் பாணி.


தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், க.பூரணசந்திரன்,நோயல் இருதயராஜ் என ஒரு நீண்ட பட்டியலை இரண்டாம்வகையினராக நாம் போட முடியும். இவர்களுக்கு ஒரு பங்களிப்பு உள்ளது. ஏதேனும் அறிவுத்துறை சார்ந்து முழுமையாக ஈடுபட்டுக் கற்று சிந்தனைகளைத் தங்கள் சூழலில் அறிமுகம் செய்வது முதன்மையானது. அச்சிந்தனைகளை விவாதச்சூழலில் முன்வைத்து விவாதிப்பதன் மூலம் அச்சூழலில் இயல்பாக எழுந்துவரும் சிந்தனைகளை உலகளாவிய விவாதப்பொதுத்தளத்துடன் உரையாடச்செய்வது அடுத்தபடியாக.


தமிழவன் எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றவர்கள் அவ்வாறு சிந்தனைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று நாம் உருவாக்கும் வாதங்களுக்கான அடிப்படைகளை அதன் வழியாக கட்டமைத்துள்ளார்கள். அவர்கள் மீதான என் மதிப்புக்கு காரணம் அதுவே.


ஆனால் இந்த பேராசிரியர்கள் அங்கே நிற்பதில்லை. இதை நான் முன்பும் பலமுறை எழுதியிருக்கிறேன். தெருக்கூத்து பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் தெருக்கூத்துமேதை புரிசை கண்ணப்பத் தம்புரானை ஒரு அறிவில்லா கிராமத்தானாக நடத்தும் சூழல் நம்முடையது. ஆங்கிலம் மூலம் ஒன்றைத் தெரிந்துகொள்வதனாலேயே அவர் பிறரை விட ஒருபடிமேல் என்று நினைத்துக்கொள்வது. நம்முடைய காலனியாதிக்க வாழ்க்கையின் மனநிலை.


ஆகவே இங்கே பேராசிரியர்கள் எப்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் எல்லைக்குட்பட்ட வாசிப்பறிவை அறிவுச்சூழலில் ஒரு மொட்டை அதிகாரத்தை நிறுவிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அது மேலே சொன்னதுபோல 'இது புச்சு, நான் இத வச்சிருக்கேன், உங்கிட்ட இது இல்லியே' என்ற வகையிலேயே எப்போதும் அமைகிறது. அந்த அதிகாரத்தை இலக்கியப்படைப்பாளி ஒருபோதும் ஒரு பொருட்டாகநினைப்பதில்லை.


உதாரணமாக இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் இலக்கியவாதி எதை எப்படி எழுதவேண்டும் என்று வகுக்க முயன்றிருக்கிறார்கள். நாகார்ஜுனன் போன்றவர்கள் எழுதிக்காட்டக்கூட செய்திருக்கிறார்கள். யதார்த்தவாதம் செத்துவிட்டது, இனிமேல் எல்லா எழுத்தாளர்களும் ஃபாண்டசி மட்டும்தான் எழுதவேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. வெளியே எங்காவது போய்ச் சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள், ஆனால் இது உண்மை. அவற்றை நம்பி எழுதியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உண்மையான படைப்பூக்கத்துடன் வந்தவர்கள் தன்னிச்சையாக எழுதினார்கள். சூழலை மாற்றி அமைத்தார்கள்குறிப்பாக தலித் எழுத்தாளர்கள்.


தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் மேலைச்சூழலில் இவர்கள் முன்வைத்த சிந்தனைகள் உடனே மறுக்கப்படுகின்றன. மேலதிக சிந்தனைகள் வருகின்றன. இவர்களுக்கு அச்சிந்தனைகள் மீது சுயமான திறப்பு ஏதுமில்லை என்பதனால் இவர்கள் திகைக்கிறார்கள். கையிலிருப்பதை அப்படியே கைவிட்டுவிட்டுப் புதியதைப் பொறுக்கிக்கொள்கிறார்கள். 'இதுதான் இப்ப புதிசு'என்கிறார்கள். இதை இலக்கியவாதி செய்யமுடியாது. அவனுக்கு ஒரு வாழ்க்கை, ஒரு சுயமான அறிதல்புலம் இருக்கிறது. அங்கே ஒரு சிந்தனை ஊடுருவியாகவேண்டும். அதை அது விளக்கவேண்டும். அவன் ஏற்போ மறுப்போ அங்கேதான் நிகழமுடியும். ஆகவே அவன் இவர்களைப் பொருட்டாக நினைப்பதில்லை.


எம்.டி.முத்துக்குமாரசாமியையே எடுத்துக்கொள்வோம். எண்பதுகளில் மிகயீல் பக்தின், ரோலான்பார்த் ஆகியோரின் உருவவாதத்தையும் அமைப்புவாதத்தை முன்வைப்பவராக அவர் திகழ்ந்தார். மிகச்சில வருடங்களிலேயே நாகார்ஜுனன் முன்வைத்த பின்அமைப்புவாதம் வந்தது. எம்.டி.முத்துக்குமாரசாமி பின்னகர்ந்தார். இன்னும் சில வருடங்களில் பிரேம் வந்து நாகார்ஜுனனைத் தாண்டி உன்னதமாக்கலை [Sublimation] உள்ளடக்கியதும் அதிகாரத்தைப் பேசுபொருளாகக் கொண்டதுமான பின்நவீனத்துவ சிந்தனைகளை முன்வைத்தார். ஓர் அடையாளத்துக்காக வேண்டுமென்றால் முறையே பார்த்,தெரிதா, ஃபூக்கோ ஆகியோரை இந்தப்போக்குகளின் மையங்கள் என்று சொல்லலாம். பிரேம் பின்னர் அந்த கோட்பாடுகளில் இருந்து விலகித் தன் புனைவுலகை மட்டுமே முன்வைத்து பேச ஆரம்பித்தார்.


இப்போது எம்.டி.முத்துக்குமாரசாமி பின்னைகாலனித்துவம், பின்னைநவீனத்துவம் என்று இன்றைய சொல்லாட்சிகளுடன் மீண்டும் கிளம்பி வந்திருக்கிறார். பழைய கருத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அதே தோரணையும் அதே பாவனையுமாக இருக்கிறார். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் அவர் கொண்டிருந்த அதே உள்ளடக்கமும் பொழிப்புரையும் கண்டுபிடிக்கும் கல்வித்துறை வாசிப்பு, அதே சில்லறை அரசியல்கருத்துக்களை உருவி எடுத்துவைக்கும் போக்கு.


'ஜெயமோகன் என்ற நண்பரைத் தாண்டி அவர் கையாளும் ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைப்படுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை' என்று என்னை வரையறுக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமி 'நான் சார்ந்திருக்கும் விமர்சன முறைமை பின்னை காலனீய, பின் நவீனத்துவ முறைமையாகும்' என்று தன்னை முன்வைக்கிறார். அதாவது உள்ளே வந்ததுமே செய்வது அந்த இருமையைக் கட்டமைப்பதைத்தான். இதைக்கொண்டு இலக்கியவிவாதங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சிகளைச் செய்வார்.இது லீவுக்குவரும் பட்டாளத்தான் கிராமத்துக்கு ரைஃபிளுடன் நுழைவதுபோல ஓர் அப்பாவித்தனமான கித்தாய்ப்பு.


ஆனால் அதன் பின் இருப்பது அறிவுலகின் மீது கடன்வாங்கிய சொற்களைக்கொண்டு ஓர் போலி அதிகாரத்தைக் கட்டமைக்கும் நப்பாசை மட்டுமே. என்னுடைய அணுகுமுறையின் பயன் அல்லது பயனின்மை வேறுவிஷயம். ஆனால் அவை என்னுடையவை. என்னுடைய வேர்நிலத்தை என்னுடைய மொழிப்பரப்பை என்னுடைய பண்பாட்டைக் கிண்டி நட்டு நான் முளைக்க வைத்தவை. உலக சிந்தனைகளுடன் உரையாடி நான் வளர்த்துக்கொண்டவை. சொற்களை அவற்றின் வேருடன் புரிந்துகொள்ள என்னால் முடியும்.


மீண்டும் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான என் மதிப்பைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். பிற எவரைவிடவும் எம்.டி.முத்துக்குமாரசாமி சிந்தனைத்துறையில் செயல்படுவதற்கு இன்றியமையாத முக்கியமான சில தனித்தன்மைகள் கொண்டவர். ஒன்று, அவரால் வாசித்தவற்றைப் புரிந்துகொள்ள முடியும். இரண்டு, அவருக்கென ஒரு நடை உள்ளது. தெளிவும் நுட்பமும் கூடிவரும் நடை . நம்முடைய பேராசிரியர்களில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அடுத்ததாக அவரது நடையே சிறந்தது.. ஓர் எழுத்தாளனாக நான் தனக்கென நடை அமையாத ஒருவரைப் பொருட்படுத்த மாட்டேன். கருத்துக்கள் வரும்போகும், கட்டக்கடைசியில் மொழிக்கு அளிக்கும் பங்களிப்பே எஞ்சுகிறதென்றுகூட நான் நினைப்பதுண்டு. கடைசியாக, எந்த விவாதத்தின் இறுதியிலும் இதெல்லாமே ஒட்டுமொத்தமாக ஒரு மாபெரும் விளையாட்டு மட்டுமே என உணர்ந்து சிரிக்கக்கூடிய நிதானமும் அவரிடமிருப்பதை நான் முன்பு உணர்ந்திருக்கிறேன்.


தமிழில் முறையான வாசிப்பும் பின்புலமும் இல்லாமல் கோட்பாடுகளாகவும் வம்புகளாகவும் எழுதிக்குவிக்கும் பலர் இப்போதும் இருக்கிறார்கள். எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம் போன்றவர்கள் போட்டுவிட்டுப்போன புழுக்கைகளை உலர வைத்துக் கோலி விளையாடுபவர்கள் அவர்கள். அவர்களுக்கு இங்கே ஒரு இடமும் இல்லை. ஆகவேதான் எம்.டி.முத்துக்குமாரசாமி உள்ளே நுழைந்ததும் அவர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள். அவர்களை மீறி நின்று நம் சூழலுக்கு முக்கியமான சில பங்களிப்புகளை எம்.டி.முத்துக்குமாரசாமி ஆற்றமுடியும்.


ஆனால் லேபில்களைக்கொண்டு மேட்டிமைத்தனம் காட்டிய அந்தக் காலகட்டம் மாறிவிட்டதென எம்.டி.முத்துக்குமாரசாமி புரிந்துகொள்வார் என நினைக்கிறேன். நிறைய மழை பெய்து தாமிரவருணியில் நிறைய தண்ணீர் ஓடிவிட்டது. அவரது இக்கட்டுரைகளில் எம்.டி.முத்துக்குமாரசாமி செய்திருக்கும் சில்லறை முத்திரைகுத்தல்கள், திரிபுகள், முதிராத சிந்தனைகளைத் தாண்டி இன்னும் கொஞ்சம் இலக்கியத்தை கவனிக்க, அதன் நுட்பமான ஊடுபாவுகளை, விளையாட்டை உணர அவர் மெனக்கெட வேண்டுமென அவரது நண்பர் என்ற முறையிலும் தமிழ்ச்சூழலுக்கு அவரது பங்களிப்பு தேவை என நினைப்பவன் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன்.


அவரது பாரதி பற்றிய கருத்துக்களுக்கு என் பதில் நாளை

தொடர்புடைய பதிவுகள்

மார்க்ஸ்,ஹெகல்,முஜீப்
நாகார்ஜுனன் கூட்டம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2011 11:30

நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்

கம்பார்ட்மெண்ட் முழுக்க நிலக்கடலை தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்கு பீலியும், தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொறுத்துக் கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம்.


டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி 'கண்டக்டர் தம்பி… திர்னெலி எப்பொ வரும்' எனக் கடுப்பைக் கிளப்பி இருப்பார்.


செல்வேந்திரன் எழுதிய நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல பதிவு. இயல்பான நகைச்சுவை.

தொடர்புடைய பதிவுகள்

யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்
பெற்றியாரைப் பேணிக் கொளல்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2011 11:30

October 16, 2011

பூமணிக்கு 2011 ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது

நண்பர்களுக்கு,


2011 ஆம் வருடத்துக்கான 'விஷ்ணுபுரம்' விருது மூத்த எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்படுகிறது.


பூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி முப்பதாண்டுகளாக எழுதிவருகிறார். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள் போன்ற நாவல்கள் தமிழ்ச்சூழலில் பெரிதும் பேசப்பட்டவை. பிறகு தமிழின் இயல்புவாத எழுத்தில் ஒரு முன்னுதாரணப் படைப்பு என்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. அழகிரிப்பகடை தமிழிலக்கியத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று. பூமணியின் ஐந்துநாவல்களும் ஒரே தொகுதியாக பொன்னி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன



1985ல் கிரியா ராஜேந்திர சோழனின் எட்டு கதைகள், பூமணியின் ரீதி என இரு தொகுதிகளை வெளியிட்டது. அவ்வருடங்களில் தமிழில் அதிகம் பேசப்பட்ட இலக்கிய நிகழ்வாக அது இருந்தது. இப்போது பூமணியின் எல்லா சிறுகதைகளும் அம்பாரம் என்ற தலைப்பில் ஒரே தொகுதியாக வெளிவந்துள்ளன.


இப்போது பூமணி அஞ்ஞாடி என்ற பெரியநாவலை எழுதி முடித்திருக்கிறார். க்ரியா வெளியீடாக இவ்வருடம் அந்நாவல் வரவிருக்கிறது. 1500 பக்கம் கொண்ட ஆக்கம் இது.


பூமணி கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத் தயாரிப்பு. நாசர், ராதிகா நடிக்க தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் வந்த இந்தப்படம் தமிழக அரசு விருதுபெற்றது.


பூமணி சென்னையில் கூட்டுறவு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுக் கோயில்பட்டியில் வசிக்கிறார். இந்த விருதை ஒட்டிக் கோயில்பட்டி சென்று பூமணி பற்றி விரிவான ஒரு நேர்காணல் எடுத்தேன். அந்த நேர்காணலை ஒட்டி ஒரு நூல் எழுதப்படும். அது விருதுவிழாவில் வெளியிடப்ப்படும்.


விருது வழங்கப்படும் தகவலை பூமணிக்கு நெருக்கமானவர்களான எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோருக்குத் தெரிவித்தேன். பூமணி பற்றிய நூலுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதுகிறார். எஸ்.ராமகிருஷ்ணன் , யுவன் சந்திரசேகர் இருவரும் விழாவில் கலந்துகொண்டு பூமணிக்கு வாழ்த்துரை வழங்க இசைந்திருக்கிறார்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக தேவதச்சன் கலந்துகொள்வார்


தமிழிலக்கியத்தின் மையங்களில் ஒன்றாகக் கோயில்பட்டி அரைநூற்றாண்டாக இருந்து வருகிறது. கோயில்பட்டியை சுற்றிய கிராமங்களில் இருந்து எழுத்தாளர்கள் உருவாகி ஒருவரோடொருவர் விவாதித்து தீவிர இலக்கியத்துக்கு பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். முதல் தலைமுறையில் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் இருவரையும் குறிப்பிடலாம்.


இரண்டாம் தலைமுறையில் தேவதச்சன், பூமணி , ச.தமிழ்ச்செல்வன்,வித்யாஷங்கர் நால்வரும் முக்கியமானவர்கள். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன்,உதயசங்கர், அப்பாஸ் போன்றவர்கள் மூன்றாம் தலைமுறை. ஒரு சிறுநகரை ஒட்டி இவ்வாறு அறுபடாது ஒரு சரடு நீள்வது ஆச்சரியமூட்டுவது.


பூமணிக்கு வழங்கப்படும் இந்த விருது கோயில்பட்டியின் இலக்கிய இயக்கத்தை வாசகர்களாக நாங்கள் அடையாளம் கண்டு செய்த மரியாதை என்று நினைக்கிறேன்.


அடித்தள மக்களின் வாழ்க்கையை அறக்கவலைகள் இல்லாமல், அரசியல் கோணம் இல்லாமல், நேரடியான இயல்புவாத அழகியலுடன் சொல்லும் முக்கியமான ஆக்கங்கள் பூமணியுடையவை பூமணி என்ற இலக்கிய முன்னோடிக்கு வணக்கம்.


பூக்கும் கருவேலம், பூமணியின் புனைவுலகம்

பூமணியின் கதை களை வாசிக்க


பூமணியின் நாவல்கள் ஒரு வாசகப்பார்வை

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விருது, விழா
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2011 11:33

யார் இந்து?-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி.

உண்மைதான். என்னுடைய குலதெய்வம் என்னுடைய சொந்த ஊரில் இல்லை. எந்த தலைமுறையில் நாங்கள் புலம்பெயர்ந்தோம் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த வழிபாடு மட்டும் இன்னும் நீடிக்கிறது. இரு வருடங்களுக்கு ஒரு முறை அறுபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் அந்தக் கோவிலுக்குச் செல்வோம். அங்கு நான் விசாரித்த வரை அவர்கள் சொன்னது இதைத்தான். "கருப்பசாமி பல தலைமுறைகளுக்கு முன் ஊர் காவலுக்கு நேர்ந்து விடப்பட்ட மனிதன்தான். (அநேகமாக குலுக்கல் முறையில்?). அவனுக்கு ஊர் சார்பில் உணவு, உறைவிடம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. காலபோக்கில் நான் ஏன் மற்றவர்களுக்காக என்னுடைய வாழ்கையை தியாகம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தவுடன் அவர் வாழ்ந்த இடங்கள் கோவிலாக மாறிவிட்டன. எனக்குப் புரிந்தவகையில் அது இவ்வளவுதான். மேலும் அங்கு இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வழிபாடு நடப்பதாலும், நாங்கள் புலம் பெயர்ந்து வாழ்வதாலும், அங்கிருந்து பிடி மண் எடுத்து கொண்டு வந்து எங்கள் ஊருக்கு அருகில் (திருத்தங்கல்) ஒரு கருப்பசாமி கோவில் கட்டியதாக எங்கள் ஊரில் சொல்லக்கேட்டதுண்டு. ஆச்சர்யம் என்னவென்றால், எங்கள் அந்த மூல குலதெய்வம் கோவிலில் பலி கிடையாது, ஆனால் திருத்தங்கலில் உண்டு.


உண்மைதான்! தீபம் ஏற்றுவது (பச்சை தண்ணீரில் விளக்கேறிவாதாக நம்பிக்கையும் கூட), விபூதி பூசுவதும் இங்கும், அங்கும் உண்டு. உங்கள் விளக்கத்தின் படி என்னுடைய புரிதலில் இந்த கருப்பசாமி (நாங்கள் வணங்கும்) குடும்பவழிபாடு என்பதாக மட்டுமே இருக்கிறது. இதை உள்ளீடு செய்யும்போதுதான் என் முந்தைய கடிதத்தில் உள்ள இன்னொரு அபத்தமும் தெரிகிறது. இந்த மாதிரி வழிபாடும் கிட்டத்தட்ட நீர்த்தார் கடன் செய்வது போலத்தான் இல்லையா?..


நீங்கள் கூறியபடி ஒரு சமூகம் முன்னேறினால் அந்த சிறுதெய்வ வழிபாடு நகர்ந்து பெருவடிவமாக மாற்றியிருக்கும். பஞ்சத்திலும், கல்வி இல்லாமையாலும் அவை அப்படியே நீடித்து வந்து இருக்கின்றன என்றே எனக்கும் தோன்றுகிறது.


நான் முன்கூறிய கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்ல முடியும். சைவர்கள், வைணவர்களும் இதே கேள்வியைக் கேட்க முடியும். உண்மைதான்! இது முழுக்க முழுக்க இந்து மதத்தை வரையறை செய்ய செய்யப்படும் முயற்சியும், அதில் ஏற்படும் குழப்பங்களும்தான்.


உங்கள் பதிலை ஒட்டுமொத்தமாக நான் இப்படி புரிந்து கொள்கிறேன். "இந்து என்பது வேறு மதமாகக் கருத வாய்ப்பு இல்லை. வேறு மதம் என்பதை எந்த நோக்கிலும் நம்மால் வரையறுக்க முடியாது. ஏனென்றால் இவை எல்லாம் சேர்ந்ததுதான் இந்து மதம் – சிவனும், கருப்பனும், சுடலைமாடனும் ஏனைய தெய்வ வழிபாடு அனைத்தும் இணைந்ததுதான் இந்து மதம்".


இந்து மதம் எப்போதும் இணைவதைப் பற்றி வலியுறுத்துவதில்லை. அது காலப்போக்கில் நடந்து வரும் பரிணாம மாற்றம் போலவே நிகழ்கிறது. சிவ வழிபாட்டு முறையும், விஷ்ணு வழிபாட்டு முறையிலுமே அந்த வேறுபாடுகள் உள்ளன (இன்னும் சொல்லப்போனால் நான் சொல்லியிருப்பதை விட அதிகமாக..இல்லையா?..). இவைகளே இந்து மதமாக ஆகியிருக்கும்போது இந்த சிறு வழிபாடு முறைகள் அதன் கூறுகளாக இருப்பதால் அவைகளும் அந்தக் கடலின் துளிகள்தாம்!


நாட்டார் தெய்வங்கள் பற்றி இன்னும் படிக்க வேண்டும். படிக்கிறேன்.


மீண்டும் உங்கள் நேரத்திற்கு நன்றி!


அன்புடன்,

காளிராஜ்


அன்புள்ள காளிராஜ்,


உங்கள் குலதெய்வம், நாட்டார் தெய்வங்களைப்பற்றி அறிய அ.கா.பெருமாள் அவர்களின் நூல்களை வாசியுங்கள். தெய்வங்கள் முளைக்கும் நிலம், தமிழக நாட்டுப்புறக்கலைகள், தோல்பாவைநிழல்கூத்து முதலிய நூல்கள் ஒரு நல்ல தொடக்கமாக அமையக்கூடும்


இணையத்தில் கிடைக்கும் நாட்டுப்புறக்கதைகள் பல உள்ளன. அகா பெருமாள் விக்கி மூலம்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

சிற்பச்செய்திகள்
தறி-ஒருகடிதம்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
ஹிந்து பைபிள்
அ.கா.பெருமாள்
சுசீந்திரம்
அ.கா.பெருமாள் விழா:கடிதங்கள்
அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி
அ.கா.பெருமாள் கருத்தரங்கு, உரிய முன்பதற்றங்கள்
அ.கா.பெருமாள் அறுபது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2011 11:30

நம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]

கொல்லையை சுற்றிவந்தபடி தினமும் செய்யும் வேலையைத்தான் பாயக்கா அன்றும் மேற்கொண்டாள். முதிர்ந்த முந்திரிக்கொட்டைகளைப் பறித்தாள்; பிடிமானமின்றித் துவளும் முல்லைக்கொடியை நீவிக் கொடிப்பந்தலில் படரவிட்டாள்; மண்ணில் உதிர்ந்த நாவற்பழங்களைப் பொறுக்கினாள்; வெந்நீர் அடுப்புக்காய் மரப்பட்டைகளை செத்திக் கட்டினாள். வீட்டுக்குள் நுழையும் முன்பு வேலியைஒட்டி சற்று நின்றாள். ரெண்டு வீடு தள்ளி  வித்தியாசமான ஆடையணிந்த ஒரு கிழவி வராண்டாவில் அமர்ந்திருப்பதாய் பாயக்காவுக்குப் பட்டது.அது சங்கரனின் அம்மா கமலக்காவாக இருக்குமோ? ஆனால் ஏனிப்படி எதையோ அணிந்திருக்கிறாள்?



அந்தவழியே வந்து கொண்டிருந்தவனைப் பாயக்கா அழைத்தாள் "வெங்கா! நீ வெங்கா தானே? அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பது யாரு?"


"யாருன்னு நிச்சயமா தெரியலை! கமலக்கா போலத்தான் இருக்கு"


இந்த மூத்தக்கிழவிக்கு என்னதான் ஆயிற்று என்று வியந்தபடியே திரும்பி வீட்டுக்குள் நடந்தாள். பார்த்ததை நினைக்கநினைக்க அவளுக்கு ஆவல் கழுத்தை நெட்டித் தள்ளியது. அதைத் தெரிந்து கொள்ளாமல் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. கதவை இழுத்து மூடியபடி சங்கரன் வீட்டை நோக்கி விரைந்தாள்.


அது கமலக்கா தான். கண்ணைக் குத்தும் பெரிய பூக்கள் தெறித்த நைட்டியை அணிந்திருந்தாள். இதை லலிதா அணிந்திருந்ததை முன்பே பாயக்கா பார்த்திருந்தாள். பாயக்காவிடமிருந்து சிரிப்பு வெடித்துக் கிளம்பியது. அந்த சிரிப்பு வார்த்தைகளாய்க் கரைந்து 'இது என்ன கூத்து?'என்று கேள்வியானது. 'இது என் தலைவிதி' என்பதுபோல் கமலாக்கா தலையில் அடித்துக் கொண்டாள். பாயக்காவுக்கு மேலே பேச வார்த்தையின்றித் தொண்டை அடைத்தது. அவர்கள் பேச்சை மோப்பம் பிடித்ததுபோல் லலிதா வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.


"இதென்னடி உன் மாமியாருக்கு மாட்டிவிட்டிருக்கே? மாறுவேடப் போட்டியா?" வாயிற்படிகளில் ஏறியபடி பாயக்கா கேட்டாள்.


"இல்லக்கா! புடவையை சுத்திவிட்டா தடுக்கி விழுறாங்க. பக்கத்துலயே நானிருந்து அதைக் கட்டிவிட வேண்டியிருக்கு. பாத்ரூம் போனாங்கன்னா புடவையெல்லாம் ஈரமாக்கிடுறாங்க. அதான் அவங்களுக்கு இந்த நைட்டி சௌகரியமா இருக்கும்னு.….."


"எனக்குப் புடவை ஒண்ணும் பிரச்னையாயில்லை. இந்தக் கூத்தெல்லாம் என்னை அவமானப்படுத்தத்தான். சாகறதுக்குள்ளே இதுமாதிரி இன்னும் என்னென்னவெல்லாம் நான் அனுபவிக்கணுமோ?"என்றாள் கமலக்கா.


"அவளுக்கு பிடிக்காததை ஏன் அவள்மேல் திணிக்கிறே? அவளுக்குப் புடவை கட்டிவிடறது உனக்குக் கஷ்டமா இருந்தா என் கிட்ட கொண்டு வா. நான் கட்டி விடுறேன்" என்றாள் பாயக்கா.


பாயக்கா சொன்னது கொஞ்சம் கூட லலிதாவிற்குப் பிடிக்கவில்லை. "அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. இதுலே நீங்க ஒண்ணும் மூக்கை நுழைக்க வேண்டாம்.அவங்கவங்க வேலையைப் பார்த்துக்கட்டும்". லலிதாவின் குரல் உயர்ந்தது.


வீட்டுக்குத் திரும்பிய பாயக்காவிற்கு மனம் சோர்ந்து வருத்தம் மேலிட்டது. குளிப்பதற்கு அடுப்புமூட்டி வெந்நீர் சுடவைக்கும் போதும் லலிதாவின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டன. கமலக்கா மீது இரக்கம் பொங்கியது.. பாவம் கமலக்கா! முன்பு அவள் தனியாக இருந்தபோது பிள்ளை குறித்த ஆவலும்,பேச்சுமாய் சந்தோஷமாய்த்தான் இருந்தாள். பணிஓய்வு பெற்று சங்கரன் தன் அம்மாவைப் பார்த்துக் கொள்வதாய்த் தன் மனைவியுடன் இங்கு  வந்த  பிறகுதான் கமலக்காவிற்குப் போதாதகாலம் ஆரம்பித்தது.


இந்த லலிதாதான் எப்படி மாமியார்க்கிழவியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாள்?அவளுக்குத் தலைக்கனம் அதிகம் என்று பாயக்கா நினைத்தாள். மற்றவர்களும் அப்படித்தான் சொன்னார்கள். அதையே பாயக்கா சொன்னபோது அவர்கள் கண்டனம் செய்தார்கள். அந்த கிராமத்து விவகாரங்களில் அவள் தலையிடக் கூடாது என்றார்கள். ஆனால் பாயக்காவுக்கோ தன்மீது எந்தத் தவறும் இருப்பதாய்த் தோன்றவில்லை.பிறர் தப்பு செய்தால் அதை எடுத்து சொல்லக்கூடாதா என்ன? வீண்வம்பு பேசிப் பிறர் குடிகெடுப்பவள் அல்ல பாயக்கா. ஆனால் இப்போதெல்லாம் தனக்கு யார்யாரோ புத்திமதி சொல்கிறார்கள் என்று தேங்காய்நாரை வெந்நீர் அடுப்பில் இட்டபடி பெருமூச்செறிந்தாள். அந்த ஹெராவதி கிராமத்தில் ஒரு புது வகையான வாழ்க்கைமுறை உருவாகி வருவதாயும்,அதில் தன் பங்கு ஏதும் இல்லாதது போலும் ஒரு இனம்புரியா உணர்வு பாயக்காவுக்கு ஏற்பட்டது.


பள்ளிக்கூட வாத்தியார் வெங்கடேசனுக்கு மனைவியாய் அவள் இந்த ஹெராவதியில் கால் பதித்தபோது அவளுக்கு பதினைந்து வயது இருக்குமா? வெங்கடேசன் பாயக்காவை விட பன்னிரண்டு வயது மூத்தவன். அவள் வாழவந்த வீட்டில் அவளுடைய மாமனார், மாமியார், இளமையிலேயே விதவையாகிவிட்ட மாமனாரின் சகோதரி பிரயாகி ஆகியோரும் இருந்தனர். சடங்குகள், ஸம்ப்ரதாயங்கள், சாளக்ராமங்கள்,பூஜை, மடி ஆசாரம் என்று இருந்த அந்த குடும்பத்திற்கு ஈடுகொடுத்துப் பாயக்காவும் வளைய வந்தாள்.


வெங்கடேசனோ கொள்கைப் பிடிப்புள்ளவன். தூய கதராடையை எப்போதும் அணிந்தே இருப்பவன். ஹெராவதியின் ஜனங்கள் அவன் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். அவன் வார்த்தை அவர்களுக்கு வேதவாக்கு..


வெங்கடேசன் பாயக்காவிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தான். மணமான மூன்றாம் வருடம் அவர்களுக்கு ஸ்ரீபதி பிறந்தான்.. அந்தக் குழந்தையின் மழலையைக் கேட்கும் முன்னரே பாயக்காவின் மாமியார் இறந்து போனாள். பிரயாகியும் பின்னோடே போய்ச் சேர்ந்தாள். பூஜை,மடி என்றிருந்த அவள் மாமனாரோ மூப்பெய்தி, ஹோட்டலிலெல்லாம் சாப்பிட்டபடி வீதிகளில் மனம் போன போக்கில் திரிய ஆரம்பித்தார். வெங்கடேசன் தன் தந்தையை அவர்போக்கிலே விட்டான்.பாயக்காவையும் அவ்வாறே செய்யச் சொன்னான். ஒரு நாள் அவள் மாமனார் கோவில் அருகிலேயே உயிரையும் விட்டார்.


தனக்கேயான குடும்பம் துவங்குகிறது என்று பாயக்கா நினைக்கத் துவங்குமுன்னரே திடீரென அந்த நினைப்பில் மண் விழுந்தது. அப்போது ஸ்ரீபதிக்குப் பத்து வயதிருக்கும். ஒரு நாள்கூட நோய்நொடி என்று படுக்காத வெங்கடேசன், பாயக்காவின் இதயம் நொறுக்கி இறந்து போனான். வாழ்க்கைச்சக்கரம் வெகுவேகமாய் சுழல ஆரம்பித்து விட்டதாய்ப் பாயக்கா உணர ஆரம்பித்தாள்.


விதியின் விளயாட்டை ஏற்றுக் கொண்ட பாயக்காவின் எண்ணமெல்லாம் ஸ்ரீபதி பற்றியும், அவன் எதிர்காலம் குறித்தும் மட்டுமே சுற்றிவந்தது. அவளின் மாமனார் எப்போதும் சொல்லிவந்த குடும்பகௌரவத்தைக் காக்கும் பெரும் பொறுப்பு அவள் தோள்களில் விழுந்ததாய் உணர்ந்து வாழ ஆரம்பித்தாள்.


அவளுடைய தகப்பனார் குழந்தையும் அவளும் தன்னோடு வந்துவிடும்படி அழைத்தபோது, விதவையாகி அண்ணன் வீடுவந்து வாழ்ந்த பிரயாகியின் சோகம் நினைவில் ஆடியது.நல்லதோ கெட்டதோ, இங்கேயே இருந்து விடுகிறேன் என்று தங்கிவிட்டாள்.


தன் மகனோடு ஒரு அவுட் ஹவுசுக்குக் குடிபெயர்ந்தாள். பென்ஷன் கிடைத்ததால் வயிற்றுப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. போதாததிற்கு, தென்னை மரங்களும், காய்கறி பயிரிட கையளவு நிலமும் இருந்தது. மரணம் அவளை ஸ்ரீபதியிடமிருந்து பிரித்து விடும் என்று உணர்ந்ததைப் போல் ஸ்ரீபதி மேல் அதிக அன்பைப் பொழிந்து அவனை இறுக்காமல் வாழத் தலைப்பட்டாள். அவன்மேல் காட்டும் பாசம் அவன் சுதந்திரத்திற்குத் தடையாய் இருக்கலாகாது என்று கவனமாய் இருந்தாள்.


ஸ்ரீபதி அப்படியே அவன் தகப்பனைக் கொண்டு இருந்தான். அவன் வளர்ந்து வருகிறான் என்றுகூட பாயக்கா உணர்ந்தாளில்லை. தான் ஏதோ அந்த இடத்தைச் சார்ந்தவன் அல்ல என்பது போலேதான் ஸ்ரீபதியும் வளர்ந்தான். கஷ்டப்பட்டுப் படித்தான். சைக்கிளில் கும்ட்டா வரைசென்று கல்லூரியிலும் படித்தான்.அத்தனை தேர்வுகளிலும் வெற்றிபெற்று, பம்பாய் போய்ச் சேர்ந்தான்.


ஹெராவதியில் பாயக்கா தனித்துப் போனாள். மணப்பெண்ணாய் வாழ்க்கைப் பட்டு இத்தனை நாள் வாழ்ந்தபிறகு, அவளுக்குத் தன் வாழ்க்கை வேறு, மற்றவர்கள் வாழ்க்கை வேறு என்று பாகுபாடே இல்லாமல்தான் போயிற்று. அவள் கவனத்துக்கு வராமல் எதுவும் அங்கிருந்த குடும்பங்களில் நிகழ்ந்தது இல்லை.


ஏதோ ஒரு வகையில் எல்லோருக்குமே அவள் உதவியாக இருந்தாள். பால்கார ரங்கப்பாவை எந்த முகாந்திரமும் இல்லாமல் போலீஸ் பிடித்துச் சென்றபோது, பாயக்கா  பெருமுயற்சி செய்து அவனை மீட்டு வந்தாள். அந்த முயற்சியில் அவளுடன் கோர்ட்டுக்கு வர மறுத்த வக்கீல் ரமேஷைப் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள், "பணம் ஒன்று தானா நீ படித்த சட்டத்தின் குறிக்கோள்? இங்கே அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஒருவனுக்காக உதவாமல் இங்கேயே வக்கீல் தொழில் செய்ய உனக்கு வெட்கமாக இல்லை?" என்று பொரிந்தாள். ரமேஷ் அவளுடன் கோர்ட்டுக்குச் சென்றான். பாயக்காவின் ஜாமீனுடன் ரங்கப்பா விடுவிக்கப்பட்டான். போலீசுக்கு அவன் நிரபராதி என்று தெரிந்தவுடன் அந்த கேஸ் ஒருவாறாக மூடப்பட்டது. உள்ளூர் விவகாரங்களில் மூக்கை நுழைத்தாலும், பாயக்கா இல்லாவிட்டால் ரங்கப்பா வெளியே வந்திருக்க முடியாதுதான் என்று அரைமனத்தோடு உள்ளூர்வாசிகள் ஒப்புக் கொண்டார்கள். யார் வீட்டில் அப்பளம் இட்டாலும் அங்கு உதவ பாயக்கா தானாகப் போவாள். இந்த கிராமத்தில் எது நடந்தாலும் முழு மனதோடு தன்னை ஈடுபடுத்திக் கொள்வாள். பாயக்கா மட்டும் இல்லாவிட்டால், ஹெராவதியின் சாலைகள் எப்போது கடைசியாய் தார்பூச்சைப் பார்த்தன என்று யாரும் சொல்லியிருக்க முடியாது. அவள் திடசித்தத்தைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியம் மேலிடும்.


ஹெராவதி கிராமம், கும்த்தா நகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டு, அங்கு தேர்தல் நடக்கும் என்று தெரிந்தவுடன் நாலைந்து பேர் வேட்பாளர்களாய் அறிவித்துக் கொண்டார்கள். அனைவரின் ஆதரவோடு பாலப்பாதான் வேட்பாளராய்த் தேர்வு செய்யப்பட்டான். ஆனால் அதற்கு முன்பு, ஹெராவதிக்கு இணைப்பு சாலை போடுவது பற்றியும்,தெருவிளக்குகள் போடுவது பற்றியும் பாலப்பா உறுதி அளிக்க வேண்டும் என்றே பாயக்கா விடாமல் நிர்ப்பந்தித்தாள். தேர்வுபெறும் ஆவலில், பாலப்பாவும் பூலோகத்தையே வாக்குறுதியாய் அளிக்கவும் செய்தான். எல்லாவற்றையும் பார்க்கும்போது பாலக்காவே தேர்தலில் நின்றிருக்கலாம் என்று அனைவரும் அவளைக் கேலியும் செய்தனர்.


ஆறுமாதங்களாயிற்று… புது ரோடு பற்றிய சத்தத்தையே காணோம். ஹெராவதி முனிசிபாலிட்டியில் சேர்ந்தபின்னும் ஒரு துரும்புகூடக் கிள்ளிப் போடப்படவில்லை. பாயக்கா இதுபற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள். எல்லோருமாய்ச் சேர்ந்து ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று நினைத்தாள்.


"ஓ! பாயக்கா! அதது நடக்கும் போது நடக்கட்டுமே? எதற்கு ரோடு ரோடு என்று அடித்துக் கொள்கிறாய்? அதைப் போட்டால் எங்கு போகப் போகிறாய்.?" என்றார்கள்.


ஆனால் பாயக்கா லேசில் விட்டுவிடுவாளா என்ன? ஒரு நாள் வழியில் பாலப்பாவைப் பிடித்துக் கொண்டு சண்டைக்கே போய்விட்டாள்.


"நான் என்ன செய்யட்டும் பாயக்கா? என்று இறைஞ்சினான்." நான் ஒரு தனி மனுஷன். எதைச் செய்ய முடியும்?"


"ஏன்? நாங்களெல்லாம் உன்கூட இல்லையா?"தொடர்ந்தாள்." நாங்க என்ன செய்யணும் சொல்லு? நாங்களெல்லாம் ஊர்வலமாய் வந்து உண்ணாவிரதம் இருக்கவா? உன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டியது தானே? உன்னைத் தேர்ந்தெடுத்தபோது பெரிசாக நீ வாய்ப்பந்தல் போடவில்லை?"


பாவம் பாலப்பா! முனிசிபாலிட்டி சேர்மனிடம் சென்று ஒப்பாரி வைப்பது தவிர்த்து அத்தனையும் செய்தான். பாயக்கா அவனைக் கிடுக்கிப்பிடி பிடித்த போது இன்னொன்றும் சொல்லியிருந்தாள்."உங்கள் அலுவகத்தில் இருந்து யாரும் இங்கே காலை வைத்தால் கொதிக்கிற நீரைத் தலையில் ஊற்றுவேன் ஞாபகம் வச்சிக்கோ". அது வெறும் பூச்சாண்டிக்காகத்தானா அல்லது அதுபோல் ஏதும் திட்டமும் பாயக்கா வைத்திருந்தாளா என்று யாருக்கும் தெரியாது. விரைவிலேயே வரிவசூலுக்கு ஹெராவதிக்கு யாரும் சென்றால், அவர்கள் மேல் கொதிநீரை ஊற்றப் போகிறார்கள் என்ற வதந்தியும் தீயாய்ப் பரவிவிட்டது. முனிசிபாலிட்டி சேர்மன் சில ஊர்ப்பெரியவர்களுடன் கலந்தாலோசித்தார். அதன்பின் அவர்கள் பாயக்காவைப் பார்க்க வந்தார்கள்..


அவளிடம், "கூடிய விரைவில் ரோடு போடப்படும். அவர்களின் அரசியலில் வீணாகப் போய் மாட்டிக் கொள்ளாதே பாயக்கா!" என்றார்கள்.


பாயக்காவின் கோபம் மேற்கூரையைத் தொட்டது.


"இது அரசியல் என்றால் எனக்கொன்றும் கவலை இல்லை. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாவிட்டால் அவன் வெளியேறட்டுமே? நான் இன்னும் போவதற்கு ஒரேஒரு இடம் தான் இருக்கிறது. அங்கு போவதற்கு எனக்கு இந்த ரோடு  தேவையில்லை. பாலப்பாவினால் ஏதும் இயலாவிட்டால் அவன் பொதுவில் வந்து மன்னிப்புக் கேட்கட்டும். இதை அரசியல் என்று நீங்களெல்லாம் சொன்னீர்களானால்… நானும் அதில் இருக்கிறேன். ஆனால்.. சொல்லுங்க.. உங்களில் ஒருத்தர் கூட அவன் செய்தது தப்பு என்று யோசிக்க வில்லையா?"


பாயக்காவுக்கு புத்திசொல்ல வந்தவர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினார்கள். விரைவிலேயே அனைவரும் பாலா அவர்களையெல்லாம் பொய்வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றி விட்டதாய்ப் பேச ஆரம்பித்தார்கள். ஒருவாறாக ஹெராவதிக்கு அந்தத் தார்சாலையும் வந்தே விட்டது.ஆனாலும் பாயக்காவின் நடைமுறைகளில் ஏதொரு மாற்றமும் இல்லை.


இரண்டே இரண்டு தருணங்களில் மட்டுமே பாயக்கா ஹேமாவதியிலிருந்து வெளியே சென்றிருக்கிறாள். முதல்முறை சென்றது ஊர்க்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த காசியாத்திரையின் போது. காசிக்குச் செல்பவர்கள் இறைவனுக்குக் காணிக்கையாகத் தனக்குப் பிடித்தமான ஒன்றை விட்டுவிட வேண்டும் என அவளுக்கு சொன்னபோது,பாகற்காயை இனி உயிருள்ளவரை தொடமாட்டேன் என்று அதை விட்டாள்.பாகற்காய்பொடி என்றால் அவளுக்கு உயிர். அடுத்து கமலக்காவின் முறைவந்தபோது அவள் விட்டதோ கத்தரிக்காய் என்றபோது அனைவரும் பெரிதாய் சிரித்தார்கள். கமலக்காவிற்கு கத்தரிக்காய் சுத்தமாய்ப் பிடிக்காது என்பது ஊரறிந்த ரகசியம்!


"இந்த யாத்திரைக்கு அர்த்தம் என்ன தெரியுமா உனக்கு?" எப்போதும் போல் தலையில் அடித்தாற்போல் கேட்டாள் பாயக்கா. "ஆசைகளின் அந்திமம்"


பாயக்கா சொன்னபின் கமலாக்கா கூடுதலாய்ப் பாகற்காயையும் விட்டாள். இதுபற்றி மறுபடியும் பேசவில்லை பாயக்கா. கமலக்காவோ பாகல் வளர்த்துப் பிறர்க்கு அதைத் தந்தாலும், வேறெதையாவது விட்டிருக்கலாம் என்று அவ்வப்போது நினைத்து மருகுவதும் உண்டு.


இரண்டாம்முறை பாயக்கா ஊரைவிட்டுப் போனது பம்பாய்க்கு.அதுவும் ஸ்ரீபதிக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகள் கழித்து.


அவன் கல்யாணத்தில் கொஞ்சமா பிரசிச்சினைகள்? ஸ்ரீபதி பம்பாயிலேயே வேலைபார்க்கும் பெண்தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றான். பாயக்காவும் விடாமல் யார்யாருக்கோ கடிதங்களாய் எழுதி ஒரு பெண்ணையும் பிடித்து விட்டாள். ஸ்ரீபதிக்கு மனைவியாய் வாய்த்த சவிதா ஒரு ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். வீட்டில் எந்தவொரு நல்ல காரியமும் நடக்கவில்லை என்பதால் அவன் திருமணம் ஹெராவதியில்தான் நடக்கவேண்டும் என்று பிடிவாதமாய் அதை அங்கு நடத்தினாள்.


மகனின் திருமணத்திற்குப் பிறகு பாயக்காவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல்தான் இருந்தது. அவள் ஆசையாய் வளர்த்த இரண்டு பசுக்களுமே ஏதோநோய் வந்து செத்துப்போனபின்னர்தான், அவளையும் அந்த வீட்டையும் பிணைத்திருந்த சூட்சமமான கொடி அறுந்தாற்போல் அவளுக்குப் பட்டது. மகனோடு கொஞ்ச நாள் இருந்துவர முடிவெடுத்தாள். ஸ்ரீபதி பம்பாயிலிருதே அங்குவந்து அவளை அழைத்துச் சென்றான்.


ஆனால் பம்பாயிலிருந்த இரண்டு மாதங்களும் தன் கைகால்கள் கட்டப் பட்டிருப்பதாய்ப் பாயக்கா உணர்ந்தாள்.ஸ்ரீபதியின் ஏழுவயது மகள் ராஷ்மி இருந்தும் கூட அவளுக்குப் பொழுதுபோகாமல் சலிப்பாய் இருந்தது. ஒரு பத்து மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இருந்தது ஸ்ரீபதியின் மூன்றுரூம் பிளாட். அங்கு எல்லாமே மூடிய கதவுகளுக்கு உள்ளேயே நிகழ்ந்தன. யாரேனும் உள்ளே வருவதற்கோ அல்லது வெளியே போவதற்கோ மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்பட்டன. அவள் மருமகளோ காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து,உடுத்தி,டிபன்பாக்ஸ் கட்டிக் கொண்டு, அரைத்தூக்கத்திலிருக்கும் ராஷ்மியை எழுப்பி,குளிப்பாட்டி அவளையும் இழுத்துக் கொண்டு ஏழுமணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி விடுவாள்.மாலையில் பள்ளிக்கு அருகிலேயே இருந்த நண்பரின் வீட்டில் ராஷ்மி காத்திருப்பதும்,ஸ்ரீபதி அலுவலகம் விட்டு வரும்போது குழந்தையைக் கூட்டி வருவதும் வாடிக்கையாயிற்று. காலையில் பிடிக்கத் தவறிய மின்சார ரயில் பற்றியோ, பஸ்ஸில் நெரியும் கூட்டம் பற்றியோ முறையீடுகளும் புலம்பல்களும் அவர்களுடனே வீட்டுக்குள் நுழைவதும் சகஜமாயிற்று. ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தின் முட்களில் அல்லவா வாழ்க்கை இங்கே கட்டுண்டு கிடக்கிறது? பகல்,மாலை என்று அளந்தபடி நகரும் வாழ்க்கை; நாளின்அலுவல்களை மணிகளின், நிமிடங்களின் கணக்காய், அரை நிமிடத்தில் தவறவிட்ட ரயில்பஸ் பட்டியலாய் இயந்திரகதியாய் மாறி வினாடி முள்ளாகப் படபடத்து நகர்கிறதே!


பாயக்காவுக்கு பம்பாய் வாழ்க்கை மந்தமாய் இருந்தது.. எப்போதோ அத்திபூத்தாற்போல் அக்கம்பக்கம் வசிப்பவரின் சிறு புன்னகை,ஓரிரு வார்தைகள் தவிர உலகத்தோடு அவளுக்கு தொடர்பற்றுப் போனதுபோல் இருந்தது. ஒருமுறை பாயக்கா வெளியில் வந்தபோது, அவர்களின் தளத்தில் இருந்த ஐந்து பிளாட்டுகளில் மூன்றில் பூட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. எதிரிலிருந்த பிளாட்டின் கதவு அப்போது திறக்க, எதிர்பார்ப்புடன் பாயக்கா திரும்பினாள். அவள் வாயைத் திறப்பதற்கு முன், வெளிப்பட்ட பெண்மணி மீண்டும் உள்சென்று சடாரென்று கதவை மூடிக்கொண்டாள்.


பம்பாய் போன புதிதில் எதிர்வீட்டுக் குழந்தைகள், பூட்டிய கதவின் வெளியில் காத்திருப்பதைக் கண்ணுற்றாள்.அவர்களை உள்ளே அழைத்துத் தின்பதற்கு சிற்றுண்டியும் கொடுத்தாள். அவர்கள் ஏதோ விளையாட்டில் மூழ்கிப் போனார்கள். அவர்களின் பெற்றோர்கள் வீடுதிரும்பியவுடன் குழந்தைகளைத் தேடி திமிலோகப்பட்டது. ஸ்ரீபதி வந்தபிறகுதான் குழந்தைகள் அங்கிருப்பது தெரியவந்து அவர்களை இழுத்துக் கொண்டு போனார்கள்.அந்தப் பெற்றோர்களுக்கும் ஸ்ரீபதிக்கும் என்ன விவாதம் நடந்ததோ தெரிய வில்லை, ஸ்ரீபதி பாயக்காவைப் பார்த்துக் கத்த ஆரம்பித்து விட்டான்.


"நீ யாரம்மா அவர்கள் வீட்டு விஷயத்தில் தலையிட? அந்தக் குழந்தைகள் வாசலில் காத்திருந்தால் உனக்கென்ன,இல்லை ரோடில் நின்றால் உனக்கென்ன? இந்த பம்பாயில் யாரும் யாருடைய உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை தெரிஞ்சுக்கோ. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்."


பாயக்காவுக்கு ராஷ்மியுடன் அமர்ந்து பேசக்கூட இயலவில்லை. வீட்டுக்கு அவள் திரும்பியவுடனே வீட்டுப்பாடம் முடிக்கவேண்டியிருந்தது. சாப்பிட்டவுடன் அவள் படுத்தால்தான் காலையில் நேரத்துக்கு எழுந்திருக்க முடியும். மிஞ்சுவது ஞாயிற்றுக்கிழமை ஒன்றுதான். அன்றும் யார் வீட்டுக்காவது செல்வது வழக்கமாய் இருந்தது. தாங்கள் செல்லும் முன் அவர்கள் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்வதில் ஸ்ரீபதி உறுதியாய் இருந்தான். நாம் போகும் சமயம் அவர்கள் வேறேங்காவது போய் விட்டால்? அந்த சந்திப்பெல்லாம் உப்புப் பெறாத சந்திப்புகளே. ஆனால் அதற்காக அவன் மெனக்கெடுவது அதிகம்தான். பாயக்காவிற்கு வெறுத்துப் போயிற்று. ஹெராவதிக்காக ஏங்க ஆரம்பித்தாள். தன் குடும்பம், தன் பிள்ளைகள், அவர்களின் வீட்டுப் பாடம், ஞாயிற்றுக்கிழமை பொழுதைக் கழிப்பது தவிர இந்த பம்பாய் வாசிகளுக்கு வேறொன்றிலும் நாட்டமில்லை.


இனி என்றும் ஹேராவதியை விட்டு வெளியே போவதில்லை என்ற முடிவுடனே பாயக்கா ஊர் திரும்பினாள்.கடைசி காலத்தில் மகனுடன் வாழ வேண்டும் என்ற கனவை இனியும் அவள் காண்பதாய் இல்லை. புதிதாய் இரண்டு பசுமாடுகள் வாங்கினாள். தன் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினாள்.


ஆனால் ஹெராவதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன.டாக்டர் கோபாலின் மூத்தமகன் தன் பங்கை விற்க முற்பட்ட போதுதான், அவர் வீட்டில் நடந்த பாகப்பிரிவினை பற்றிய சங்கதி வெளிப்பட்டது. இன்னுமொரு உயர்ந்த குடும்பம் கலைந்து போனது பாயக்காவுக்கு மிகுந்த வேதனை அளித்தது. டாக்டரின் குடும்பமும், அவளின் குடும்பமும்தான் எவ்வளவு அன்னியோன்னியமாக இருந்தன? அந்த கிராமத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதோ, ஈடுகொடுப்பதோ அவளுக்கு வேதனையான விஷயமாய் இருந்தது.ஒரே குடும்பமாய் எண்ணியும் வாழ்ந்தும் வந்த ஹைராவதி தானா இது? இனி அது இல்லை. அவளுக்குச் சொந்தமாய் இருந்த அந்த மண்ணே அன்னியமாய்த்  தோன்ற ஆரம்பித்தது.


பகல் உணவு முடித்து வெளியே வந்தவள், கமலக்காவை சங்கரன் வீட்டு வராண்டாவில் பார்த்தாள்.பாயக்காவை வருமாறு அவள் கையசைத்துக் கூப்பிட்டாள். கமலக்கா ஏதோ உதவிக்காகக் கூப்பிடுகிறாள் என்றே புரிந்து கொண்ட பாயக்கா, முன்னம் நடந்த சம்பவம் நினைவிலாட சற்று தயங்கியே சென்றாள். கமலக்கா குமட்டலுடன் ஒக்களிக்க ஆரம்பித்தாள். சங்கரனும் லலிதாவும் ஏதோ கலியாணத்திற்காக கும்ட்டாவுக்குப் போயிருந்தார்கள்.


பாயக்கா கமலக்காவை உள்ளே கூட்டிச் சென்றாள்.


"பாயக்கா!" தேம்பத் தொடங்கினாள்." எனக்குக் கத்தரிக்காய் ஆகாது என்று தெரிந்தும், கத்தரிக்காய் சாம்பாரை எனக்குப் போட்டுவிட்டுப் போனாள். வேறு ஏதும் இல்லை என்பதால் நானும் கொஞ்சம் சாப்பிட்டுத் தொலைத்தேன். வாந்தியெடுத்தே செத்துப்போய் விடுவேன் போலிருக்கிறது. இந்த வாழ்க்கை போதும் போதும் என்றாகி விட்டது எனக்கு. நேற்றிலிருந்து மீண்டும் இந்த நைட்டி வேஷம். இதை உடுத்திக் கொண்டு நடமாடவே அவமானமாய் இருக்கிறது. நாளெல்லாம் உள்ளேயே  உட்கார்ந்து வெறுத்துப் போனதால் இன்று வெளியே வந்தேன். போவோர் வருவோர் எல்லோரும் என்னைப் பார்த்துக் கெக்கலி கொட்டி சிரிப்பது போலவே இருக்கிறது." இந்த வேதனையை அவள் வெளிப்படுத்தியபோது அவள் கண்கள் குளம் கட்டியிருந்தன.


லலிதா ஒரு ராட்சசி தான்.  ஆனால் இந்த சங்கரனுக்கு என்ன கேடு வந்தது? பாயக்கா ஒரு கணம் யோசித்தாள். "கமலக்கா என்னோடு என் வீட்டுக்குக் கிளம்பு. உன்னை இனி நான் பார்த்துக் கொள்கிறேன்."


கமலக்கா இதற்காகக் காத்திருந்ததுபோல், "சரி! என் இரண்டு பெட்டியையும் உள்ளேயிருந்து எடுத்து வா" என்றபடி எழுந்தாள்.கமலக்காவின் துணிகளை எடுத்துக்கொண்டு பாயக்கா தன் வீட்டுக்குத் திரும்பினாள். கமலக்கா போட்டிருந்த நைட்டியைக் களைந்து புடவையைக் கட்டிவிட்டாள்.  கமலக்கா வீட்டுக்கு மீண்டும் சென்று அவளின் பொக்கிஷமான இரண்டு கனத்த பெட்டிகளையும் சுமந்து வந்தாள். பக்கத்து வீட்டு ரமேஷை சங்கரன் திரும்பும் வரையில் காவலுக்கு ஏற்பாடு செய்தாள்.


சங்கரனும் லலிதாவும் திரும்பிவந்து ரமேஷ் காவலுக்கு இருப்பதைப் பார்த்தவுடன், கமலக்காவிற்கு ஏதோ சுகவீனம் ஏற்பட்டு பாயக்கா கூட்டிப் போயிருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தார்கள். உடனே பாயக்கா வீட்டுக்கு விரைந்தவர்களை 'இன்னமும் உயிரோடுதான் இருக்கிறாள்' என்ற பாயக்காவின் குரல் நிறுத்தியது. பாயக்கா சங்கரனை ஒரு வார்த்தை பேச விடவில்லை. "உன்னால் உன்னுடைய அம்மாவை சரியாய்ப் பார்த்துக் கொள்ள முடியாவிட்டால் அதற்கு நாங்கள் இருக்கிறோம். அவளுக்குக் கத்தரிக்காய் ஆகாது என்று இந்த ஊருக்கே தெரியும். உன் பெண்டாட்டி ஒருத்திக்குத்தான் அது தெரியாது போலிருக்கிறது. அதுதான் கத்தரிக்காயை அவள் தொண்டையில் அடைத்து வாயிலெடுக்க வைக்கிறாள். சொல்லு. நீ ஒரு பிள்ளையா இல்லை ராட்சசனா? போதாதிற்கு இந்த வயதுக்கு மேல் அவளுக்கு நைட்டியும் கைட்டியும் வேறு மாட்டி விடுகிறீர்கள்.அவளை ஒரு பொம்மை என்று நினைத்தீர்களா?இதற்குப் பேசாமல் அவள் கழுத்தை இறுக்கிக் கொன்று விடலாமே?"


சங்கரன் பதில் சொல்லத் தடுமாறினான். லலிதாவோ பிரச்னையெல்லாம் கமலக்காவால் தான் என்று ஏதோ முனகினாள்.


பாயக்கா அவள் சொன்னது எதையும் ஏற்கவில்லை. கமலக்கா ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நடப்பதைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.


சங்கரனுக்குப் பெற்றவளுடைய மௌனம் மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. விஷயம் இவ்வளவு தூரத்திற்கு வந்து விடும் என்று அவன் நினைக்கவில்லை. 'உடனே தன்னுடன் வராவிட்டால்,இனி என்றும் அவளை ஏற்க மாட்டேன்' என்று  கமலாக்காவை மிரட்டத் தொடங்கினான். ஆனாலும் அவள் மௌனமாய் இருந்தாள்.


கடுகடுப்பாக வீட்டிற்குத் திரும்பினான்.


ஏதோ சொல்ல வாயெடுத்த கமலக்காவின் கண்கள் கண்ணீரால் குளம் கட்டின.


பாயக்கா உடனே அவள் வாயை அடைத்தாள்." இப்போது ஏதும் நீ சொல்ல வேண்டாம். நான் சொல்வது நடக்கும் பாரு. உன் புத்திர ரத்தினம் திரும்பவும் வருவான் பாரேன்."


அவள் சொன்னது போலவே சங்கரன் திரும்பவும் வந்தான், இன்னும் சில பெரியவர்களையும் கூட்டிக் கொண்டு. ஹெராவதியில் செய்தி பரவ ரொம்ப நேரம் ஆகாது. சிலபேர் நடப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு வந்தனர்.


"உங்களுடைய பிள்ளைகள் இவ்வாறு நடந்து கொண்டால் நீங்களெல்லாம் என்னய்யா செய்வீர்கள்" என்று வந்தவர்களை பாயக்கா கேட்டபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள். பாயக்கா விடுவதாய் இல்லை.


போலீசைக் கூட்டி வருவதாய் சங்கரன் மிரட்டினான்.


"போ! போய்க் கூட்டி வா! கேஸ் முடியும் வரை கமலக்கா உயிருடன் இருந்தால் நீ அவளைக் கூட்டிப் போகலாம்." என்று பாயக்கா வெடித்தாள்.


"நீ எதற்குக் கவலைப் படவேண்டும்? நீ எதற்கு என் அம்மாவை உன்னுடன் கூட்டி வந்தாய் என்று எனக்குத்தெரியும். அது அவளிடம் இருக்கும் தங்கத்துக்காகத்தான். அவள்மேல் உனக்கிருக்கும் பிரியம் எனக்குத் தெரியாதா என்ன?" என்றபடி பாயக்காவை சங்கரன் நிந்தித்தான்.


பாயக்காவின் கோபம் உச்சியை அடைந்தது. "இவளுக்காக நான் எதற்குக் கவலைப்படுறேன்னு உனக்குத் தெரியணும்.. அவ்வளவு தானே? அது  ஏன்னா,உனக்குப் பெத்தவளை ஒழுங்காய்ப் பார்த்துக்கத் தெரியலே… தங்கத்தைப் பற்றி சொல்றே. நாளை சாக இருக்கிறவங்களுக்கு தங்கத்தைப் பற்றி என்ன ஆசை இருக்க முடியும்? அவள் அதைக் கொடுப்பதாயிருந்தால், அத்தனையையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போ.அவளை இங்கே என்னுடன் இருக்கச் சொல்லி நானொண்ணும் கட்டாயப்படுத்தலே. விருப்பமிருந்தா அவளையே கேட்டுக்கோ. வந்தாளென்றால் தாராளமாய்க் கூட்டிப் போ!"


உள்ளே கமலக்கா தேம்பிக் கொண்டிருந்தாள்.


"அவன் சொன்னதைக் கேட்டாயில்லையா? உனக்குப் போக விருப்பமில்லை என்று சொல்லி விடு. நானாச்சு உன்னைப் பார்த்துக்கொள்ள. அவனுக்கு உன்னை விட உன் தங்கத்தின் மேல்தான் குறி. உனக்கு விருப்பமிருந்தா அவற்றையெல்லாம் அவனிடம் கழற்றிக்கொடுத்து விடு. எதைப் பார்த்து உனக்கு பயம்? சாப்பாட்டுக்காக அவனை நீ எதிர்பார்க்க வேண்டாம். அதை அவன் புரிந்து கொள்ளட்டும். பெற்றோரைப் பார்த்துக் கொள்ளாவிட்டால் என்னாகும் என்று மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும். அவர்கள் மாறா விட்டால், அவர்களை வீட்டைவிட்டு வெளியே தள்ளு. வீடு உன்பேரில்தானே இருக்கிறது? எதற்காக இப்படி உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாய்?"


வீட்டுக்கு வெளியில் நின்ற கூட்டம், மகனின் கோபம், பாயக்காவின் நிர்பந்தம் எல்லாம் சேர்ந்து கமலக்காவைக் குழப்பமான உணர்ச்சிக்குத் தள்ளியது. சற்று முன் அவள் காட்டிய தைரியம் மெல்லக் கரைந்து விட்டது. கண்ணையும் மூக்கையும் துடைத்தவாறே கமலக்கா தேம்பினாள். "இல்லை பாயக்கா! இதையெல்லாம் என்னால் தாங்க முடியவில்லை.என்னைத் தனியே விடு பாயக்கா….கடைசியில் பார்க்கப் போனால் அவன் என் ரத்தமும் சதையும் தானே? அவர்கள் என்னைக் கொடுமைப்படுத்தினால் படுத்திவிட்டுப் போகட்டும்… அவர்கள் ஊற்றும் கஞ்சியைக் குடித்து வாழ்ந்துவிட்டுப் போகிறேன்… என்னை விட்டுவிடு பாயக்கா."


வெளியே இருந்தவர்கள் கமலக்கா வெளியே வருவதற்குக் காத்திருந்தார்கள்.


 


 


(நம்ம படிகே நாவு .. கன்னட சிறுகதை.


தமிழாக்கம்: மோகன்ஜி, ஹைதராபாத் (mohanji.ab@gmail.com)

தொடர்புடைய பதிவுகள்

விவேக் கடிதங்கள்
ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]
ஜாமீன் சாஹேப்-2
ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1
சுதீரின் அம்மா-விவேக் ஷன்பேக்
சில்லறை-கடிதங்கள்
சில்லறை-கடிதம்
சில்லறை [கன்னடச் சிறுகதை]
விவேக் ஷன்பேக் சிறுகதை- 4
விவேக் ஷன்பேக் சிறுகதை 3

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2011 11:30

October 15, 2011

தினமணி-சுரா-வினவு

இன்றைக்கு தினமணியிலே உன்னுடைய கருத்தை வாசித்தேன். நீ என்ன இலக்கியச்சண்டியரா? கல்கி, சுஜாதா , பாலா, பாரதியார் என்று ஒவ்வொருத்தரையாக நீ வசைபாடுவதை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாது. சுந்தர ராமசாமியை அற்பன் என்று சொல்ல நீ யார்? நீ அற்பனுக்கு அற்பன். உன்னைப்போன்ற அற்பனை கூடவே வைத்திருந்து சோறு போட்டதுதான் சுந்தர ராமசாமி செய்த தப்பு. சோறுபோட்ட கையை கடித்த நாய் நீ. சுந்தர ராமசாமி அவருக்காக எழுதினார் என்றால் நீ என்ன உன் அம்மாவின் கூத்தியாளுக்காகவா எழுதினாய்? நாக்கை அடக்காவிட்டால் அடக்க வைக்கவேண்டியிருக்கும்


வைத்தியநாதன்


திரு வைத்தியநாதன்,


நன்றி


தினமணி கட்டுரையில் உள்ள அந்த வரி என்னுடையது அல்ல. ஒரு நண்பர் தேடி அனுப்பியிருந்தார்


சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த எழுத்தாளர், அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


இந்த வரி வினவு தளத்தில் என்னையும் சுந்தர ராமசாமியையும் சேர்த்து வசைபாடி எழுதப்பட்ட கட்டுரையின் முகப்பில் வினவு சிந்தனையாளர்களின் கருத்தாக அளிக்கப்பட்டது.


அதன் தலைப்பு சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் ! . ஆகவே அந்த வரிகளை நான் சுந்தர ராமசாமியைப்பற்றி சொன்னதாக எடுத்துக்கொண்டு கட்டுரையாளர் எழுதிவிட்டார்


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2011 21:54

சுரா- தினமணி

இன்றைய தினமணியில் சுந்தர ராமசாமி பற்றி ஒரு கட்டுரை உள்ளது. யாரோ ஒரு முதிரா ஆய்வாளர் எழுதியது என நினைக்கிறேன். அந்தக்கட்டுரையில் சுந்தர ராமசாமி பற்றி நான் சொன்னதாக ஒரு வரி வருகிறது. வாசித்து ஒரு கணம் அரண்டு போய்விட்டேன். அது என் வரி அல்ல. நான் எங்கும் முன்வைத்த கருத்தும் அல்ல. எதையோ அசட்டுத்தனமாக எழுதி என்னுடைய மேற்கோளாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.


இதை என்ன செய்வது? தினமணிக்கு மறுப்பு தெரிவிக்கலாம். சிலசமயம் அவர்கள் அதை பிரசுரிக்கலாம், ஆனால் எத்தனைபேர் கவனிப்பார்கள் என சொல்லமுடியாது. இந்தக்குறிப்பு ஓர் அரைவேக்காட்டால் எழுதப்பட்டது என்னும்போது இன்னும் அரைவேக்காடுகளுக்கு இந்த கட்டுரையே புரியும், பிடிக்கும். இதைத்தான் அவர்கள் இன்னும் மேற்கோள்காட்டுவார்கள். இது சென்றுகொண்டே இருக்கும். இதற்கு நான் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்


தமிழில் எழுதுவதற்கு நாம் கொடுக்கவேண்டிய விலை இது


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2011 20:12

கதைகளின் வழி

அன்பின் ஜெயமோகன்.

வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது. யானை டாக்டர் ஒன்று மட்டுமே அதில் எனக்குப் பிடித்திருந்தது.


மன்னிக்கவும்.. நான் இப்போது சொல்ல வந்ததே வேறு. உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் கொண்டிருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று என நண்பர்கள் சொன்னதால் வாங்கினேன். முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை நெருக்கமாக உணர முடியுமா என்கிற அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது. அடுத்த அடி,ஜகன்மித்யை. அதில் வரும் பெரியவரும் போதியில் வரும் குருவும் வேறு வேறு வேறான ஆள் என என்னால் நம்ப முடியவில்லை.


வாழ்வின் முடிவில்லாத் துயரத்தை, தாங்கள் தொலைத்த நாட்களைப் பேசும் மனிதர்கள். சிவமயம், வனம், வீடு என குறுக்கு வெட்டாகப் படித்தபடி லங்கா தகனத்துக்கு வந்து சேர்ந்தேன். ஒரு கதையைப் படிக்கும்போது மனிதனுக்கு பீதி உண்டாகும் எனச் சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன் ஆனால் இப்போது நம்புகிறேன். ஒரு குரங்கினைப் போல ஆசான் தாவியபடி வந்து கொண்டிருந்தார் என்கிற கடைசி வரி இன்னமும் எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கதையை வளர்த்துப்போய்.. ஆசானின் மாற்றத்தை வாசிப்பவனுக்குக் கடத்தி, என்ன நடக்கப் போகிறது என்பதற்கான கண்ணிகளை மட்டும் ஆங்காங்கே கொடுத்துக் கடைசியில் ஒரு திறந்த முடிவாகக் கதை முடிந்தபோது ஆவென்றிருந்தது.


படித்து முடித்தவுடன் என் நண்பரொருவருக்கு நான் அலைபேசியில் சொன்னது "******** என்னமா எழுதி இருக்கான், இவனைக் கொல்லணும்டா.. இப்படி ஒரே ஒரு கதை ஒருத்தன் எழுதிட்டான்னா போதும்டா அவன் வாழ்க்கைக்கும்" என்பதுதான்.சத்தியமாக முடியவில்லை சார். அற்புதமான , ஒரு அரசனின் வருகையைத் தெரிவிக்கும் கதை. இந்த ஒரு கதை போதும் மொத்தத் தொகுப்புக்கும். படித்து முடித்தவுடன் உங்களிடம் பேசவேண்டுமென்றுதான் எண்ணினேன். ஆனால் என்ன உளறுவேனென்று எனக்கே தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.


தொகுப்பு முழுதுமே வெவ்வேறு தளங்களில் இயங்கும் கதைகள். இவற்றை இருபது வருடத்துக்கு முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்பதுதான் நம்பமுடியவில்லை. இது சார்ந்து இன்னொரு கேள்வியையும் முன்வைக்க விரும்புகிறேன். ஜெமோவின் முதல் தொகுப்பில் படுகை, லங்கா தகனம் என்று சொல்ல முடிகிறது. காலங்கள் கடந்து இன்றைக்கும் என்னால் அவற்றோடு தொடர்பு கொள்ள முடிகிறது. எஸ்ராவின் முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் பற்றி சொல்ல வேண்டுமா.. என்னால் தண்டவாளம் கதையைச் சொல்ல முடியும். கோணங்கிக்கு மதினிமாரும் கருப்பு ரயிலும்.


ஆனால் கடந்த பத்து வருடங்களாகத் தமிழ்ச் சிறுகதைச் சூழலில் இது மாதிரியான காத்திரமான வருகைகள் ஏன் நிகழவில்லை? கடந்த ஆறேழு வருடங்களாகத் தொடர்ச்சியாக சிறுகதைகள் வாசித்து வருகிறேன். ஆனால் இது போன்றதொரு உணர்வை இன்றைய கதைகள் தருவதில்லையே? கவிதைகளைப் பொறுத்தவரையில் நம்மிடையே புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சிறுகதையில் அப்படி ஏதும் நிகழ்ந்து உள்ளதா? குமார் அம்பாயிரத்தின் ஒருசில கதைகள் எனக்கு மிகப் பிடித்து இருந்தன. ஆனால் அதுபோலத் தொடர்ந்து பெயர் சொல்லும்படியான சிறுகதைகள் ஏன் வரவில்லை? அப்படி வந்திருப்பின் அவை ஏன் பேசப்படவில்லை? ஒரு வாசகனாக என்னுடைய எளிய சந்தேகங்களைக் கேட்டிருக்கிறேன்.இது பற்றி விரிவாகப் பேசுவீர்கள் என நம்புகிறேன்.


பிரியமுடன்,

கார்த்திகைப்பாண்டியன்


சு.வேணுகோபால்


[சு வேணுகோபால்]


அன்புள்ள கார்த்திகைப்பாண்டியன்,


உங்கள் கடிதத்தைத் தாமதமாக வாசித்தேன். நடுவே இருபதுநாட்கள் ஊரில் இல்லை.


கதைகளைப்பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்துகொண்டேன். கதைகளை நாம் எங்கே எப்படி தொடர்புகொள்கிறோம் என்பதில் நம்முடைய ரசனை மற்றும் கருத்தியலின் தரப்பும் உள்ளது. உங்கள் கருத்துக்கள் என் கதைகளுடன் நீங்கள் கொண்ட தொடர்புப்புள்ளிகளைக் காட்டுகின்றன.


செல்பேசியை அதிர்வில் போட்டிருந்தால் அழைப்பு வரும்போது அது தன் அதிர்வினாலேயே இடம் மாறுவதைப் பார்க்கிறோம். கதை எழுதும்போதும் இது நிகழ்கிறது. ஒரு கதையை நாம் எழுதும்போது அந்தக்கதையின் உணர்வுநிலையாலும் கருத்துநிலையாலும் நாம் மாறுகிறோம். [வளர்கிறோம் என்று உறுதியாகச் சொல்லத்தோன்றவில்லை] கதையின் வழியாக நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். கதையின் வழியாக நாம் புதிதாக உடைத்து வார்க்கப்படுகிறோம். ஆகவே ஒரு கதை எழுதியபின் அந்த இடத்துக்குத் திரும்பிப்போக முடிவதேயில்லை.


நான் ஆரம்பத்தில் எழுதிய திசைகளின்நடுவே,படுகை,போதி,லங்காதகனம் போன்றகதைகள் விஷ்ணுபுரத்துக்கு முன்னால் எழுதியவை. அன்றைய கதைச்சூழலில் ஒரு வாழ்க்கைத்தருணத்தைச் சுருக்கமான சொற்களில் சொல்லிவிடுவதே நல்ல கதை என்ற எண்ணம் இருந்தது. நான் அந்த இலக்கணத்தை ஏற்கவில்லை. எனக்கிருந்த சஞ்சலங்களை தேடல்களை முழுமையாகவே சிறுகதைகளில் கொண்டுவர முயற்சி செய்தேன்.அந்த விரிவான வடிவமும், வளர்ந்துசெல்லும் உணர்ச்சிநிலைகளும் அவ்வாறு உருவானவையே.


ஆனால் விஷ்ணுபுரம் அந்த அத்தனை உணர்ச்சிநிலைகளையும் மிகமிக விரிவாகப் பேசிவிட்டது. மானுடத்தேடலின், தவிப்பின், கையறுநிலையின், ஏறத்தாழ எல்லா முகங்களும் அதில் உள்ளன. கலையின் அழகும் மூர்க்கமும் அதில் உள்ளது. அதன் பின் திசைகளின் நடுவே அல்லது லங்காதகனத்தை எழுதவேண்டியதில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது. விஷ்ணுபுரம் எத்தனையோ லங்காதகனத்துக்குச் சமம்.


விஷ்ணுபுரம் பெற்ற பெரும் வரவேற்புக்குப்பின்னால் இன்னொரு விஷ்ணுபுரம் எழுதாமலிருந்தமைக்கான காரணமும் இதுவே. அந்தப் பகுதியை உணர்ச்சிரீதியாக, தத்துவ ரீதியாகக் கடந்து வந்துவிட்டேன். விடைகளால் அல்ல. அழகியல்சார்ந்து.


மேலும் எழுதும்போது அன்று உருவான ஆழமான நம்பிக்கையிழப்பே என் சிக்கலாக இருந்தது. கருத்துக்களின் மேல், அமைப்புகளின் மேல். ருஷ்யாவின் உடைவும், ராஜீவ் கொலை மூலம் ஈழ விடுதலைப்போர் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையுமாக மிகப்பெரிய ஒரு மனச்சோர்வின் காலகட்டம் அது. ஆகவேதான் பின்தொடரும் நிழலின் குரல்.


நாவல்கள் எழுதும் காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதும் தூண்டுதல் பெருமளவுக்குக் குறைகிறது. எழுதினாலும் நாவலில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சார்ந்தே அவை அமைகின்றன. பின்தொடரும்நிழலின் குரல் காலகட்டக் கதைகள் பெரும்பாலும் கோட்பாடுகளை எங்கோ சென்று சந்திப்பதாகவே இருந்தன. வரலாற்றைச் சார்ந்தவையாக இருந்தன. அந்தப்பயணமே ஒரு நிகர்வரலாறாகவும் நிகர்தொன்மவெளியாகவும் அமைந்த கொற்றவைக்குக் கொண்டுசேர்த்தது.


கொற்றவையே நான் இன்று வரை எழுதியவற்றின் உச்சம் என நினைக்கிறேன். அது உருவாக்கும் அர்த்தவெளியை வாங்கிக்கொண்ட வாசகர்கள் மிகக் குறைவு. அது இந்திய வரலாற்றையும் தொன்மங்களையும் எப்படி மறுஆக்கம் செய்து மீண்டும் மறுஆக்கம் செய்கிறது என்று புரிந்துகொள்ள ஏற்கனவே அவற்றைப்பற்றிய ஒரு புரிதல் உள்ள வாசகன் தேவை.


எஸ்.செந்தில்குமார்


[எஸ்.செந்தில்குமார்]


கொற்றவைக்குப் பின்னர் நான் எழுதிய கதைகள் எல்லாமே ஒரு நீண்ட தேடலின் முடிவில் ஒரு கட்டத்தில் மெல்லிய நிறைவொன்றைக் கண்டுகொண்டபின் எழுதியவை. புனைவுமூலம் வாழ்க்கையை அல்லது மானுடமனத்தை அள்ளி எடுப்பதை ஒரு விளையாட்டாக நினைத்து எழுதியவை. எனக்குநானே ரசித்துக்கொள்ளும் பொருட்டு எழுதியவை. அதுவரை இலக்கியம் என்பதற்கு நான் வைத்திருந்த எல்லா இலக்கணங்களையும் நானே கலைத்துக்கொண்டேன். எல்லாமே கதைதான் என்று எண்ணிக்கொண்டு எல்லா வகைக் கதைகளையும் எழுத ஆரம்பித்தேன்.


பேய்க்கதைகள், அறிவியல்கதைகள், வரலாற்றுக் கற்பனைக் கதைகள் என எல்லா வடிவிலும் இந்தத் தருணத்தில் எழுதிப்பார்த்திருக்கிறேன். ஒரு யதார்த்தக்கதை எந்த நிலையிலும் சென்று தொட முடியாத ஒரு மானுடநிலையை ஒரு பேய்க்கதை அதன் வடிவம் காரணமாகவே தொட்டுவிடமுடியும் என்று தெரிந்துகொண்டேன். அன்றாடவாழ்க்கையில் ஒருபோதும் கைக்குச் சிக்காத ஒரு படிமத்தை ஓர் அறிவியல்கதை எளிதில் அளித்துவிடும் என அறிந்தேன். அனுபவங்களைக் கதைபோலவும் கதைகளை அறிக்கைகள் போலவும் எழுதினேன். இந்த எல்லாவகைகளிலும் முக்கியமான கதைகள் உள்ளன என்றே நினைக்கிறேன். ஊமைச்செந்நாய், மத்தகம் எல்லாம் இந்தக்காலகட்டத்து ஆக்கங்கள்.


இந்த வரிசையில்தான் அறம் கதைகள் வருகின்றன. அவை இதுவரை என் கதைகள் எதிலும் இல்லாத அளவுக்கு எளிமைகொண்டவை. நேரடியானவை, அப்பட்டமானவை. அதன் அழகியல் அது. உணர்ச்சிகளின் மன எழுச்சிகளின் தீவிரத்தால் மட்டுமே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் கதைகள் அவை. அவை என் பரிணாமத்தில் முக்கியமானவை.என்னைப்பொறுத்தவரை ஒரு படைப்பை எழுதும்போது எனக்கும் அதற்குமான இடைவெளி இல்லாமலாகும் நிலை உருவானதா இல்லையா என்பது மட்டுமே அளவுகோல். அது நிகழ்ந்துவிட்டால் அது கலை. அது அழகியல்ரீதியாக, சமூக ரீதியாக முக்கியமானது. அறம் கதைகளில் அது நிகழ்ந்தது.


இன்றுவரை நம் நவீன இலக்கியம் கொண்டுள்ள இலக்கணங்களை வைத்து அறம் வரிசைக் கதைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பொதுவாக வாசகர்களும் விமர்சகர்களும் சமகால அழகியல் மற்றும் கருத்தியல்களை வைத்தே புதியவற்றை மதிப்பிடுகிறார்கள். புதியவை அவற்றுக்கே உரிய புதிய அழகியலைக் கோருகின்றன. பூடகமாகச் சொல்லுதல், தொட்டுவிட்டு விட்டுவிடுதல், படிமத்தை மட்டும் விட்டுவைத்தல் போன்ற சில அழகியல் இலக்கணங்களைச் சமகாலச் சிறுகதை கொண்டிருக்கிறது. அறம் வரிசைக் கதைகள் அவற்றை வீசி விட்டு நேரடியாகப் பேசுகின்றன. அவை தேர்ந்துகொண்ட வடிவம் அது, அவ்வளவே.


எண்பதுகளின் இறுதியில் லங்காதகனம் வெளிவந்தபோது அன்றைய விமர்சகர்களுக்கு அது பிடிபடவில்லை. 'கதையாக இருக்கிறது' என்ற விமர்சனமே அன்று பெரிதாக எழுந்தது. காரணம் கதை இல்லாமல் நிகழ்ச்சியாக எழுதுவதே அன்றைய பாணி. சுருக்கமாக நான்குபக்கம் எழுதுவதே மரபு. சுந்தர ராமசாமி 'ரொம்பவும் நீளமான கதை. சுருக்கியிருக்கலாம்' என்று மட்டும் கருத்து சொன்னார். அந்தகதைக்குப்பின் பிறந்து வந்த வாசகர்களிடமே அது பெரும் வரவேற்பை, புதிய வாசிப்புசாத்தியங்களைப் பெற்றது.


[image error]


[இலட்சுமணப்பெருமாள்]


இன்று அறம் கதைகள் பேசும் பேசுபொருளை வைத்து அவற்றை விவாதிப்பதையே எல்லா வாசகர்களும் செய்கிறார்கள். அந்தக்கதைகள் முன்வைக்கும் இலட்சியவாதம் நோக்கி உணர்ச்சிகரமாகச் சென்றுசேர்வது வாசிப்பின் முதல்தளத்தில் இயல்பானதே. ஆனால் ஒரு விமர்சகனாக நல்ல வாசகன் கவனிக்கவேண்டிய தளம் அங்கே நின்றுவிடுவது அல்ல.எளிமையான கதைகளே என்றும் விமர்சகர்களை ஏமாற்றி வந்துள்ளன. அறிவால் உடைத்துப் பின் பொறுக்கவேண்டிய கதைகள் மிக இலகுவாக அவர்களைச் சென்றடைகின்றன


இலட்சியவாதத்தை நோக்கி ஒரு சமகால மனம் கொள்ளும் எழுச்சியைப் பதிவுசெய்யும் அறம் கதைகள் அதேசமயம் அவற்றுக்கு உருவாக்கும் வாழ்க்கைச்சட்டகமும், மையத்துக்கு எதிர்நிலைகளும்தான் நல்ல வாசகன் மேலதிகமாகக் கவனிக்கவேண்டியவை. அவை அக்கதைகளை வேறுதிசைகளில் திறக்கக்கூடியவை. நானே அவற்றை மெய்ப்பு திருத்தும்போது ஒரு விமர்சகனாக வாசிக்கையில் வேறு அர்த்தங்களை நோக்கியே சென்றேன். அத்தகைய ஒரு தேர்ந்த வாசிப்பு எதிர்காலத்தில் அக்கதைகள்மேல் நல்ல திறனாய்வாளர்களால் நிகழ்த்தப்படுமென நினைக்கிறேன்.


எழுத்தாளனாக ஒரு குறிப்பிட்ட வகையான கதைவடிவுக்குள் ஏன் செல்கிறோம், ஏன் அதிலிருந்து வெளியேறுகிறோம் என்பதெல்லாம் நம்மால் எளிதில் சொல்லப்படத்தக்கவை அல்ல. நாம் அவற்றைக்கொண்டு நம்மை உருவாக்கிக்கொண்டு கண்டறிந்துகொண்டு மேலே சென்றுகொண்டே இருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


என்னுடைய புனைவுலகம் சீரான ஒற்றைப்படைத்தன்மை கொண்டது அல்ல. மிகமிகச் சிக்கலான இடங்கள், என்னாலேயே விளக்கிக்கொள்ள முடியாத இடங்கள் உள்ளன. மிக நேரடியாக சொல்லப்பட்டவையும் உள்ளன. எல்லாவகையான கதைசொல்லல் முறைகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் வாசித்து ஒரு பெரிய வரைபடத்தை உருவாக்கிக்கொண்டு என்னை மதிப்பிடும் விமர்சகர்களை வாசகர்களை நான் எதிர்காலத்திலேயே பெறமுடியும் என நம்புகிறேன்.


*


சென்ற பத்து வருடங்களில் கூட நல்ல கதைகள் வந்தபடியேதான் உள்ளன. தமிழில் எல்லாக் காலகட்டத்திலும் நல்ல கதைகள் வந்துகொண்டுள்ளன. சிலசமயம் ஒரு பத்தாண்டுக்கு தொடர்ச்சியாக நல்ல கதைகள் வெளிவரும். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் நல்ல எழுத்தாளர்கள் அறிமுகமாகும் காலகட்டம் அது என்ற விடைகிடைக்கும். அவர்கள் இன்னும் விரிவான புனைவுச்சவால்களை ஏற்கும்போது, நாவல்களை நோக்கிச் செல்லும்போது, சிறுகதைகள் குறைகின்றன.


தமிழில் வெவ்வேறு தளத்தில் நல்ல சிறுகதைகள் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் 'வெண்ணிலை' [தமிழினி பதிப்பகம்] என்ற தொகுதியைப்பற்றி அடிக்கடி பேசியிருக்கிறேன். அதிலுள்ள எல்லாக் கதைகளுமே புதிதாகப் பிரசுரமானவை. பல முக்கியமான கதைகள் அவற்றில் உள்ளன. லட்சுமணப்பெருமாள் கதைகள் [வம்சி புக்ஸ்] முக்கியமான ஒரு தொகுப்பு. அக்கதைகளைப்பற்றியும் எழுதியிருக்கிறேன். எஸ்.செந்தில்குமார் தொகுப்புகளில் பல நல்ல கதைகள் உள்ளன.


ஆனால் பொதுவாகச் சொன்னால் சிறுகதைகளின் வீச்சு குறைந்துள்ளது என்றும் சொல்லலாம். நான் எல்லாக் கதைகளையும் வாசிக்கிறேன். எனக்கு முக்கியமாகப் படும் கதைகளைச் சுட்டிக்காட்டுகிறேன். பெரும்பாலும் கதைகள் ஏமாற்றத்தையே அளிக்கின்றன. அடுத்த தலைமுறை எழுத்துக்களைப்பற்றி எதிர்மறையாக ஏதும் சொல்லவேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இன்னும்சொல்லப்போனால், சமகால இலக்கியவாதிகளை விமர்சனமே செய்யவேண்டாமென்ற மனநிலைகொண்டிருக்கிறேன்.


ஏமாற்றத்தை அளிக்கும் கதைகள் இரு வகை. எந்த அனுபவவெம்மையும் இல்லாமல் மொழியையை வைத்து எதையாவது செய்ய முயல்வது. ஒரு நல்ல மொழிவிளையாட்டை நிகழ்த்திக்கொள்ளும் மொழிப்பயிற்சியோ, அதற்கான பின்புல வாசிப்போ இல்லாத நிலையில் இவை வெற்றுச்சொற்களாக சலிப்பை அளிக்கின்றன. இரண்டாவதாக, உயிர்மை போன்ற இதழ்கள் பாலியல் அதிர்ச்சியை அளிக்கும் ஆக்கங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக அவ்வகை எழுத்தை எழுதுவது. அவையும் வெறும் மனப்பயிற்சிகளாகவே எஞ்சுகின்றன. பாலியல்அம்சம் எங்கே மானுட அகம் சார்ந்ததாக மானுட இருப்பின் ஒரு சிக்கலாக ஆகிறதோ அங்கேதான் அதற்கு இலக்கிய முக்கியத்துவம் வருகிறது.


தொடர்ந்து நம் இதழ்களில் வெளிவரும் கதைகள் அளிக்கும் சலிப்பு காரணமாக பெரும்பாலான வாசகர்கள் கதைகளையே வாசிப்பதில்லை என்பதைப் பலமுறை வாசகர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு கதையை யாராவது சுட்டியதும்தான் உடனே சென்று அதை வாசிக்கிறார்கள். அதாவது தேர்வை வேறு யாரோ செய்யவேண்டியிருக்கிறது. ஆகவே நல்ல கதைகள்கூடக் கவனத்தைவிட்டு காணாமலாகியிருக்கலாம்.


புதிய கதைகளைப்பற்றிப் புதிய விமர்சகர்கள் தொடர்ந்து விரிவாகப் பேசி ஒரு விவாதத்தை முன்னெடுக்கலாம். நீங்களே கூட


அன்புடன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்
ஏழாம் உலகம்-கடிதம்
சிற்பச்செய்திகள்
மணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
கடிதங்கள்
கடிதம்
அச்சு ஊடகங்கள், கடிதம்
கடிதங்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2011 11:30

கடிதங்கள்

ஜெ,


நான் உங்கள் எழுத்துக்களை விரும்பும் ஒரு வாசகன்.


எனக்குத் தமிழிலக்கியங்களை (சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பிறகு சங்க இலக்கியம்) உரைகளின் உதவியின்றி சொந்தமாகப் படித்தறிய விருப்பம். இதைச் செய்ய எந்தத் தமிழ் அகராதி சரியாக இருக்கும் என்று தெரிவித்தால் உதவியாக இருக்கும். என்னிடம் கதிரைவேற்பிள்ளையின் அகராதியும், சந்தியா பதிப்பகத்தின் தமிழிலக்கிய அகராதியும் உள்ளது. இவையிரண்டும் போதவில்லை. (பல சொற்களுக்கு இவற்றில் இடமில்லை).


இந்த விஷயத்தை உங்களிடம் கேட்பது அசட்டுத்தனமாக இருந்தால் மன்னிக்கவும்.


அன்புடன்

சந்திரசேகர்


அன்புள்ள சந்திரசேகர்


பெரும்பாலான சொற்களுக்கு இந்த அகராதியிலேயே சொற்கள் இருக்கும். மிக அபூர்வமாக வடமொழி திசைச்சொற்கள் போன்றவை காணப்படாது. கம்பராமாயணம் வாசிக்கும்போது அந்தக் குறையை உணர முடியும்


அதற்கு எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி [லெக்ஸிகன் ] உதவிகரமானது. சென்னைப் பல்கலை வெளியீடு.


இது இணையத்திலேயே உள்ளது

http://www.tamilkalanjiyam.com/dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary.html


ஜெ


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


அதைத் தேர்வுசெய்ததில் நேருவுக்குப் பெரும் பங்குண்டு என்பார்கள். அவரது இந்திய தரிசனத்தின் ஆழத்தை அது காட்டுகிறது.


http://www.jeyamohan.in/?p=661


ஒரு கிராம விவசாயி எப்படி சப்பாத்தி தட்டுவான் என கடைசிவரைக்கும் தெரியாமலேயே அவர் இந்தியாவை ஆண்டார்.


http://www.jeyamohan.in/?p=4087


இரண்டில் எது சரி? அல்லது நடுவில் என் புரிதலில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டதா?


நன்றிகள்.


அன்புடன்,

இரா.வசந்தகுமார்.


அன்புள்ள வசந்தகுமார்


இதில் முரண்பாடு ஏதுமில்லை


நேரு இந்தியாவைப் புத்தகங்கள் மூலம் அறிந்தவர். ஒரு நல்ல பேராசிரியரைப்போல. இந்தியாவின் ஞானத்தின் சாரம் அவரது நூல்களில் உண்டு. மதநோக்குகளால் குறைவுபடுத்தப்படாத ஒரு இந்திய வரலாற்றுத்தரிசனத்தை அவரால் அடையமுடிந்தது


ஆனால் நேரு இந்தியாவெங்கும் பயணம் செய்தவரல்ல, காந்தியைப்போல. இந்தியாவின் கிராமிய வாழ்க்கையை, அடித்தள மக்களின் வாழ்க்கையை அவர் அறியவேஇல்லை. ஆகவே முழுக்கமுழுக்க மையத்தில் இருந்து கீழே இறங்கிச்செல்லும் ஒரு அதிகார அமைப்பை அவர் கற்பனை செய்தார். நல்லெண்ணம் கொண்ட அதிகாரத்தால் இந்தியாவை வலுக்கட்டாயமாக சீர்திருத்திவிடலாமென நினைத்தார்


நேரு மட்டுமல்ல நேரு யுகத்தின் பிறரும் அந்த மனநிலை கொண்ட படிப்பாளிகளே. அம்பேத்கர், லோகியா, மகாலானோபிஸ் போன்ற அனைவருமே. அவர்களால் காந்தி கண்ட இந்திய யதார்த்தத்தை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை


ஜெ


திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்கள் வலைத் தளத்தில் ஓவியர் எம்.எப்.ஹுசைன் பற்றி படித்தேன். நேற்று அவர் இறந்து விட்டார் என்று செய்தி கேட்ட பொழுது உங்களுடைய அந்தக் கட்டுரை ஞாபகம் வந்தது. ஊடகங்களில் வெறும் கிளர்ச்சிக்காக அவரைப் பற்றிப் பத்துப் படங்களுடன் துணுக்குகள் போடுகிறார்கள். அதிலும் மறக்காமல் இரண்டு படங்களில் அவருக்கு மாதுரி தீட்சித் பிடிக்கும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒன்றில் கூட அவரை நாட்டை விட்டு வெளியேறும் படி நிர்ப்பந்தத்தை உண்டாக்கியது பற்றி ஒரு தீவிர விவாதமோ அல்லது விமர்சனமோ எழுதப்படவில்லை.

தெஹல்கா மட்டும் அவரிடம் 2008 எடுக்கப்பட்ட ஒரு பேட்டியை பிரசுரித்திருக்கிறார்கள். மிகவும் சிறிய பேட்டி என்றாலும் அவர் வார்த்தைகளில் படைப்புகளைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் கேட்பதற்கு மிகப் புதிதாக இருந்தது.


அவரின் சுயசரிதையான "பந்தர்பூரின் ஒரு சிறுவன்" தமிழில் கிடைக்கிறதா? நீங்கள் வாசித்து இருக்கிறீர்களா?


என்றும் அன்புடன்,

முத்துகிருஷ்ணன்.

தொடர்புடைய பதிவுகள்

சிலைகள்
பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?
பாரதியின் இன்றைய மதிப்பு
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2011 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.