Jeyamohan's Blog, page 2278
October 20, 2011
ரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
அன்புள்ள எம்.டி.எம்,
நீங்கள் எனக்களிக்க விரும்பும் தோற்றத்தைப்பார்த்தால் என்னை 'மகாகவி' பாரதியாராக ஆக்க நினைப்பதுபோல உள்ளது. ஆனால் கைகால்கள் கட்டிப் பக்கவாட்டில் கிடத்தப்பட்டு, கிடுக்கிப்பிடியால் கதறக்கதறக் கட்டுடைக்கப்பட்டு, decanonioze செய்யப்பட்டமையால் எந்தவித முதன்மையிடமும் இல்லாமல் சும்மா ஒரு இதுக்காக மகாகவி பட்டத்தைச் சுமந்துகொண்டிருக்கும் பாரதி. அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆகவே கண்களில் அந்தப் பேதமையை மட்டும் நீக்கி விடுங்கள். மற்றபடி மீசை வளர்த்துக்கொள்கிறேன்.
diachronic அணுகுமுறைதான் என்னுடையதென நான் முன்னரே சொல்லிவிட்டேன். இலக்கியப்பிரதியை, வாசிப்பை வரலாற்றில் வைத்துப்பார்ப்பது ரசனை விமர்சனத்தின் முக்கியமான ஒரு வழிமுறை. ஏனெனில் வரலாற்றையும் முதற்பேரிலக்கியத்தையும் பிரிக்கமுடியாது. வரலாற்றுத்தன்மை [historicity ] அல்லது வரலாற்றுவாதம் [ Historicism] வழியாகவே முதற்பேரிலக்கியம் உருவாக்கப்பட முடியும். ஆகவே ஆனந்தவர்தனன் அல்லது அரிஸ்டாடில் எல்லாரையும் உள்ளிட்டே நான் பேசுவேன். அதற்கு கொஞ்சம் விரிவான சித்திரத்தையும் அளித்தாகவேண்டும். நீங்களே கூட ரசனைவிமர்சனத்தை வரலாற்றில்வைத்துப்பார்க்க தொல்காப்பியத்தில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது இல்லையா? அதற்காக நீங்கள் எலியட் பற்றிப் பேசுவதற்குப் போட்டியாக நான் காளிதாசனை ஆரம்பிக்கமாட்டேன், பயப்படாதீர்கள்.
ஆனால் வரலாற்றை நேற்றைய யதார்த்தம் என்றில்லாமல் இன்று நாம் கட்டமைக்கும் தேர்வுகளால் ஆனது அது என்றெல்லாம் விவாதிக்க ரசனைவிமர்சனத்தில் இடமிருக்கிறது. வரலாற்றைப் புனைவுக்குள் ஒரு மொழிபாக மட்டுமே அணுக அதற்குள் வாய்ப்புள்ளது.
synchronic அணுகுமுறை எனக்கு எதற்கு? நான் கொண்டுள்ள ரசனைவிமர்சனம் அந்தச்செயல்பாட்டை வாசகனின் அகத்துக்குள் நிகழும் அந்தரங்கமான நிகழ்வு என்று மட்டுமே சொல்லும். அதைப் புறவயமாக நிகழ்த்தவோ விளக்கவோ முடியாது. சமகாலத்தின் சொற்களனில் பல்லாயிரம் அர்த்தப்படுத்தலின் சாத்தியங்களின் வழியாக நிகழும் அதில் ஏதேனும் ஒரு புள்ளியை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கே ஒரு வாசிப்பை நிகழ்த்தி அந்தப் பிரதியை synchronic அணுகுமுறைக்கு ஆளாக்கிவிட்டோம் என்று சொல்வது வெறும் தர்க்கப்பயிற்சி மட்டுமே. அதன்மூலம் வாசிப்பின் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன. வறட்டு விவாதமாக, உயிரற்ற குறியியல் பகுப்பாய்வாக வாசிப்பு ஆகிறது. ஆகவே அதை நீங்கள்தான் செய்யவேண்டும்.
என் அணுகுமுறை என்பது வாசிப்பில் புறவயமாக எதையெல்லாம் விவாதிக்கமுடியுமோ அவற்றை மட்டுமே விவாதித்துவிட்டு வாசிப்பை முழுக்கமுழுக்க வாசகனுக்கே விட்டுவிடுவது என்பதை முன்னரே சொல்லிவிட்டேன். உங்கள் கட்டுடைப்புவாசிப்புக்கும் அதற்குமுள்ள முக்கியமான வேறுபாடே அதுதான். 'வாசிப்பை ஜனநாயகப்படுத்தி வாசிப்பின் அனுபவம் எப்படி அமைப்பாக்கம் பெறுகிறது என்று பார்க்கச் சொல்லும்' உங்கள் கட்டுடைப்பு விமர்சனம் கட்டுடைப்பாளனாகிய விமர்சகனை இலக்கியப்படைப்பின் மேல் ஓர் அதிகார சக்தியாக அமரச்செய்கிறது. [பிரதி, படைப்பு என்ற இரு சொற்களையும் கவனமாகவே அர்த்ததுடன் பயன்படுத்தியிருக்கிறேன்] வாசகனின் வாசிப்பு நிகழும்புள்ளியில் சுத்தியல் கடப்பாரையுடன் அவன் அமர்ந்திருக்கிறான். வாசகனின் வாசிப்பை அவன் வடிவமைக்க முயல்கிறான். அது சாத்தியமல்ல என்று காணும்போது கூடுமானவரை திரிக்கமுயன்று வெற்றி பெறுகிறான்.
ரசனை விமர்சனம் என்பது அதன் மிகத்தீவிரநிலையில்கூட ஒரு சிபாரிசு மட்டுமே. இன்னின்ன விஷயங்களைக் கருத்தில்கொண்டு வாசி என்று அது வாசகனுக்குச் சொல்கிறது. 'நான் ஒடைச்சுக்காட்டுவேனாம் அப்றமா நீ வாசிப்பியாம்' என்று சொல்வதில்லை. உலக இலக்கிய வரலாற்றிலேயே விமர்சகன் இலக்கியப்படைப்பு மீது அதிகபட்ச அதிகாரத்தைச் செலுத்தியது கட்டுடைப்புவிமர்சன மரபில்தான் என்பதுதான் யதார்த்தம். நடுக்காலகட்டத்தில் மதஅமைப்புகள் இலக்கியப்படைப்புகளை உடைத்துப்பகுத்து மதஅவமதிப்பைத் தேடிச் செய்த வன்முறைக்கு நிகரானது அது. அது ஜனநாயகம் அல்ல. இலக்கியமென்ற செயல்பாடு மீது கல்வித்துறை செய்யும் ஆக்ரமிப்பு, அத்துமீறல் மட்டுமே. கட்டுடைப்புவிமர்சனம் மீது இலக்கியவாதியும் நுண்ணுணர்வுள்ள விமர்சகனும் கொண்டுள்ள ஆழ்ந்த அவமரியாதைக்கான காரணமும் அதுவே.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ரசனை விமர்சனமும் ஜனநாயகமும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
ரசனைவிமர்சனத்தின் வழி- எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு
எம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு
பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?
பாரதி விவாதம்-7 – கநாசு
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
2011 ஆம் வருடத்துக்கான 'விஷ்ணுபுரம்' விருது மூத்த எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்படுகிறது.
பூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி முப்பதாண்டுகளாக எழுதிவருகிறார். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள் போன்ற நாவல்கள் தமிழ்ச்சூழலில் பெரிதும் பேசப்பட்டவை. பிறகு தமிழின் இயல்புவாத எழுத்தில் ஒரு முன்னுதாரணப் படைப்பு என்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. அழகிரிப்பகடை தமிழிலக்கியத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று. பூமணியின் ஐந்துநாவல்களும் ஒரே தொகுதியாக பொன்னி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன
1985ல் கிரியா ராஜேந்திர சோழனின் எட்டு கதைகள், பூமணியின் ரீதி என இரு தொகுதிகளை வெளியிட்டது. அவ்வருடங்களில் தமிழில் அதிகம் பேசப்பட்ட இலக்கிய நிகழ்வாக அது இருந்தது. இப்போது பூமணியின் எல்லா சிறுகதைகளும் அம்பாரம் என்ற தலைப்பில் ஒரே தொகுதியாக வெளிவந்துள்ளன.
இப்போது பூமணி அஞ்ஞாடி என்ற பெரியநாவலை எழுதி முடித்திருக்கிறார். க்ரியா வெளியீடாக இவ்வருடம் அந்நாவல் வரவிருக்கிறது. 1500 பக்கம் கொண்ட ஆக்கம் இது.
பூமணி கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத் தயாரிப்பு. நாசர், ராதிகா நடிக்க தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் வந்த இந்தப்படம் தமிழக அரசு விருதுபெற்றது.
பூமணி சென்னையில் கூட்டுறவு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுக் கோயில்பட்டியில் வசிக்கிறார். இந்த விருதை ஒட்டிக் கோயில்பட்டி சென்று பூமணி பற்றி விரிவான ஒரு நேர்காணல் எடுத்தேன். அந்த நேர்காணலை ஒட்டி ஒரு நூல் எழுதப்படும். அது விருதுவிழாவில் வெளியிடப்ப்படும்.
விருது வழங்கப்படும் தகவலை பூமணிக்கு நெருக்கமானவர்களான எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோருக்குத் தெரிவித்தேன். பூமணி பற்றிய நூலுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதுகிறார். எஸ்.ராமகிருஷ்ணன் , யுவன் சந்திரசேகர் இருவரும் விழாவில் கலந்துகொண்டு பூமணிக்கு வாழ்த்துரை வழங்க இசைந்திருக்கிறார்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக தேவதச்சன் கலந்துகொள்வார்
தமிழிலக்கியத்தின் மையங்களில் ஒன்றாகக் கோயில்பட்டி அரைநூற்றாண்டாக இருந்து வருகிறது. கோயில்பட்டியை சுற்றிய கிராமங்களில் இருந்து எழுத்தாளர்கள் உருவாகி ஒருவரோடொருவர் விவாதித்து தீவிர இலக்கியத்துக்கு பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். முதல் தலைமுறையில் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் இருவரையும் குறிப்பிடலாம்.
இரண்டாம் தலைமுறையில் தேவதச்சன், பூமணி , ச.தமிழ்ச்செல்வன்,வித்யாஷங்கர் நால்வரும் முக்கியமானவர்கள். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன்,உதயசங்கர், அப்பாஸ் போன்றவர்கள் மூன்றாம் தலைமுறை. ஒரு சிறுநகரை ஒட்டி இவ்வாறு அறுபடாது ஒரு சரடு நீள்வது ஆச்சரியமூட்டுவது.
பூமணிக்கு வழங்கப்படும் இந்த விருது கோயில்பட்டியின் இலக்கிய இயக்கத்தை வாசகர்களாக நாங்கள் அடையாளம் கண்டு செய்த மரியாதை என்று நினைக்கிறேன்.
அடித்தள மக்களின் வாழ்க்கையை அறக்கவலைகள் இல்லாமல், அரசியல் கோணம் இல்லாமல், நேரடியான இயல்புவாத அழகியலுடன் சொல்லும் முக்கியமான ஆக்கங்கள் பூமணியுடையவை பூமணி என்ற இலக்கிய முன்னோடிக்கு வணக்கம்.
பூக்கும் கருவேலம், பூமணியின் புனைவுலகம்
பூமணியின் கதை களை வாசிக்க
பூமணியின் நாவல்கள் ஒரு வாசகப்பார்வை
தொடர்புடைய பதிவுகள்
விஷ்ணுபுரம் விருது, விழா
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்
ரசனை விமர்சனமும் ஜனநாயகமும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு
அன்புள்ள எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்களுக்கு,
உங்கள் கட்டுரை வாசித்தேன். கொஞ்சம்கொஞ்சமாக நாம் ஒரு தெளிவை நோக்கி வந்துகொண்டிருக்கிறோம்- அல்லது நான்.
பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் நீங்கள் பாரதிமகாகவி என்று சொல்லவில்லை என்பதில் மகிழ்ச்சி. மிகவும் பயந்துகொண்டிருந்தேன். எதிர்அறம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியாது. அதைப்பற்றி நிறைய பேசுகிறார்கள். உங்களிடம்தான் கேட்பதாக இருந்தேன்.
உங்கள் அணுகுமுறையில் தரவேற்றுமையும் அளவுகோலும் இல்லை என்று அறிந்தேன். பாரதியும் பாரதிதாசனும் வா.மு.சேதுராமனும் அப்துல்ரகுமானும் உங்கள் ஆய்வகத்தில் சமம்தான் என்பதை நானும் சொல்லியிருந்தேனே. பாரதி மகாகவி என்று நீங்கள் சொன்னபோது என்னது பின்நவீனத்துவர்களும் முதற்பேரிலக்கிய மரபை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற பீதி ஏற்பட்டது. சிவாஜி படத்தில் கதாநாயகி சிம்மக்குரலில் பேச ஆரம்பித்தால் அவர் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்.
நான் மகாகவி என்ற சொல் மூலம் உத்தேசித்தது, உங்களுக்குக் கடிதமெழுதிய நூற்றுச்சொச்சம் அப்பாவிகளும் நினைத்தது, மகாகவி என்ற சொல் பிற கவிஞர்களை விட பாரதிக்கு இருக்கும் முதன்மை இடத்தைக் குறிக்கிறது என்றுதான். பாரதி மகாகவி என்பதன் மூலம் நீங்கள் பாரதிக்கு எந்தவிதமான முதன்மை இடமும் அளிக்கவில்லை என்று அறிந்ததில் தெளிவடைந்தேன். ஆக , அதிலும் நம்மிடம் எந்த முரண்பாடும் இல்லை.
ஆகவே நாம் அடிப்படைப்பிரச்சினையை மட்டுமே பேசவேண்டிய இடத்தை அடைந்துவிட்டோம். அதாவது ரசனைவிமர்சன மரபை ஒட்டுமொத்தமாக நீங்கள் நிராகரிக்க விரும்புகிறீர்கள். மூலப்பெரும்படைப்புக்ளாக எவற்றையுமே நிலைநிறுத்த விரும்புவதில்லை. அப்படி நிலைநிறுத்தும் 'கருத்தியல்யந்திரங்களை'க் கண்டுபிடித்து அவற்றின் அதிகாரப்பாத்திரத்தைக் கட்டுடைக்க முயல்கிறீர்கள். நல்லது, பின்நவீனத்துவம் செய்துவருவது அதைத்தான். நடுவே சம்பந்தமே இல்லாமல் மகாகவி என்ற சொல் வழியாக நீங்களும் canon ஐ உருவாக்குகிறீர்கள் என நான் நினைத்ததே பிரச்சினை.
'canonization தனிப்பட்ட விமர்சகனால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. ரசனை விமர்சகன் செயல்படும் காலகட்டத்திலுள்ள ஆதிக்க நிறுவனங்கள், அரசு, மத நிறுவனங்கள், சமூக ஏற்றதாழ்வுகள், சமூக அமைப்பினை புனிதமாக மாற்றி காப்பாற்றுகின்ற கருத்தியல் எந்திரங்கள்,போட்டி அமைப்புக்கள் எல்லாம் இணைந்தே பேரிலக்கியம் என்று ஒரு சிலவற்றை உச்சத்தில் வைக்கின்றன. ஜெயமோகன் பாரதிக்கு மகாகவி அந்தஸ்தை தர மறுத்து முன் வைக்கும் ரசனை விமர்சனமும் அவர் முன்னிறுத்துகிற அளவுகோல்களும் எந்த கருத்தியல் எந்திரங்களின் ( ideological apparatus) வழி கட்டமைக்கப்படுகின்றன என்று வாசகர்கள் பார்க்கவேண்டும்.'என்கிறீர்கள்.
எல்லா விவாதங்களிலும் பின்நவீனத்துவர் ரசனைவிமர்சனம் நோக்கிச் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுதான் இது. சமீபத்தில் இரு தருணங்களில் இருவேறு சிந்தனையாளர்களை நோக்கி ஏறக்குறைய இதே சொற்களில் விமர்சனம் சொல்லப்பட்டதை வாசித்தேன். ஸ்டீபன் கிங்குக்கு விருது வழங்கப்பட்டதைக் கண்டித்த ஹரால்ட் ப்ளூம் மீது. முதலியத்தின் சமீபகால நெருக்கடி பற்றி ஆக்ஸ்போர்டில் ஓர் உரைநிகழ்த்திய எரிக் ஹாப்ஸ்பாம் மீது. தேடினால் அவர்கள் சொன்ன பதிலை அப்படியேகூட எடுத்துவிடலாம். நானே சொந்தமாகச் சொல்ல முயல்கிறேன்.
முதற்பேரிலக்கியமரபைக் கட்டமைப்பதில் அரசு,மதம்,சமூக அடுக்கதிகாரம், சமூகத்தின் ஆசாரநம்பிக்கைகள் எல்லாமே இணைந்துதான் செயல்படுகின்றன என்பதை நான் மறுப்பதில்லை. எல்லா விமர்சனமும் அதிகார விருப்புறுதியின் வெளிப்பாடுதான் என்றே எப்போதும் சொல்லிவருகிறேன். தனிப்பட்ட விமர்சகனின் செயல்பாடாக நாம் அவற்றைப்பார்க்கிறோம். ஆனால் அவன் கடலில் காற்றால் எழுப்பப்படும் அலைமீது வரும் படகில் நிற்கும் மனிதனைப்போலத்தான். அவனுக்குப்பின்னால் பிரம்மாண்டமான பல அதிகார விசைகள் உள்ளன. அதையும் நான் மறுக்கவில்லை.
ஆனால் இது ஒற்றைப்படையானது என்பதை மட்டும்தான் உறுதியாக மறுக்கிறேன். இது அடக்குமுறை மூலமோ மேலாதிக்கம் மூலமோ தன்னிச்சையாக நிகழ்த்தப்படுவது அல்ல. இது எப்போதுமே ஓர் பிரம்மாண்டமான சிக்கலான விவாதம் மூலம்தான் நடத்தப்படுகிறது. தொடர்ந்து இடமாற்றம்செய்யப்படும் சமரசப்புள்ளியாகவே முதற்பேரிலக்கிய மரபு காணக்கிடைக்கிறது. ரசனை விமர்சகன் முதற்பேரிலக்கியத்தை உருவாக்கி நிலைநாட்டுபவன் என்ற வரி அவனை சரியாக மதிப்பிடுவதல்ல. அவன் அதை உடைத்து மறு உருவாக்கம் செய்பவனாகவே இருக்கிறான். முதற்பேரிலக்கியத்தை மறுவரையறை செய்யாத ரசனைவிமர்சகனே கிடையாது.
உதாரணங்களையே முன்வைத்துப்பேசுவோம். சங்க இலக்கியம் என்ற முதற்பேரிலக்கியத் தொகை எப்படி உருவாகியிருக்கும்? நாமறிந்தவரையில் அது எந்த அடக்குமுறையாலும் ஒற்றைப்படையாக உருவாக்கப்படவில்லை. ஒரு பெரிய விவாதம் நிகழ்ந்திருப்பதை நாம் அதிலேயே காணமுடிகிறது. தூலமாகவே அத்தகைய விவாதசபைகள் பல இருந்திருப்பதைப்பற்றி அறிகிறோம். பெருங்குடி மன்னர்கள் சிறுகுடிமன்னர்களை வென்று அழித்து பேரரசுகள் உருவாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தொகுக்கப்பட்ட சங்கநூல்களில் சிறுகுடி மன்னர்களின் வரலாறும் அக்குடிகளின் குரல்களும் இணையாகவே பதிவாகியிருக்கின்றன.
முப்பெரும் மன்னர்கள் உச்ச அதிகாரத்தை அடைந்தபின் எழுதப்பட்ட ஐம்பெரும்காப்பியங்களில் முதலிரு காப்பியங்களுமே குடிமக்கள் காப்பியங்கள். குடிமைஅறங்களை அரசதிகாரத்துக்கு மேலாக, அரசதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விசையாக முன்வைக்கக்கூடியவை. அவை நம்முடைய முதற்பேரிலக்கியங்களில் முக்கியமான இடம்பெறுகின்றன, இன்றளவும். சாதியை தொல்காப்பியம் இலக்கணமாக்குகிறது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ' என்று சொல்லும் நூல் முதற்பேரிலக்கியத்தில் முதலிடம் பெறுவதாகவும் வரமுடிகிறது.
அதாவது அரச,சமூக அதிகாரங்களின் நேரடியான கருவியாக நீங்கள் சொல்லும் கருத்தியல் இயந்திரம் செயல்படுகிறது என்று சொல்வது எளிமைப்படுத்தல். இது ஏற்கனவே மார்க்ஸியர் முன்வைத்த பொருளியல் அடித்தளம் சார்ந்த குறுக்கல்வாதத்தின் இன்னொரு முகம் மட்டுமே. ஒட்டுமொத்த கலையிலக்கியமே ஆதிக்கவர்க்கத்தால் ஆதிக்கத்தை நிலைநாட்டி செயல்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட கருத்தியல்கருவி மட்டுமே என்று அவர்கள் சொன்னதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு? அந்த இயந்திரவாதத்தையா நீங்கள் வேறு சொற்களில் முன்வைக்கிறீர்கள்?
இத்தகைய சிறுமைப்படுத்தல்களை இலக்கியத்தின் உள்ளியக்கங்களை ஒருபோதும் அறியமுடியாத கோட்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இலக்கிய வாசகன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.இலக்கியப்படைப்பின் வழிகள் கரவுகளும் மர்மங்களும் கொண்டவை. இலக்கியம் ஒற்றைப்படையாக பேசுவதில்லை, முரணியக்கம் நிறைந்த ஒரு வடிவத்தை முன்வைக்கிறது. இலக்கியம் யதார்த்தமும் கனவும், எதிர்ப்பும் சமரசமும், ஆதிக்கமும் ஆதிக்க எதிர்ப்பும் ஊடுபாவாக ஓடும் ஒரு பெரிய மொழிவெளி என்றே நான் காண்கிறேன்.நல்ல வாசகன் அதன் எல்லா தளங்களுடனும் தொடர்புகொண்டுதான் அதை வாசித்துக்கொண்டிருக்கிறான்.
ஆகவே எந்த பேரிலக்கியஆக்கத்தையும் ஒரு காலகட்டத்தின், ஒரு வர்க்கத்தின், ஒரு மேலாதிக்கத்தின் ஒற்றைப்படையான குரல் என்று முத்திரையிடுவதை ஓர் அவமதிப்பாகவே நான் கொள்வேன். கண்டிப்பாக அதில் மேலாதிக்கத்தின் குரல் இருக்கும். கூடவே அதை எதிர்க்கும் குரல்கலும் முயங்கியிருக்கும் .மீறிச்செல்லும் குரலும் ஒலிக்கும். தமிழகத்தின் தீவிரமான சாதிய அடுக்கதிகாரத்தை உருவாக்கிய சோழப்பேரரசின் மேலாதிக்க கருத்தியலின் வெளிப்பாடாக கம்பராமாணத்தை வாசிக்கலாம். கூடவே 'குகனொடும் ஐவரானோம்' என ஒலிக்கும் மானுடசமத்துவத்துக்கான அறத்தின் குரலாகவும் வாசிக்கலாம். குகப்படலத்திலும் வாலிவதைப்படலத்திலும் எல்லாம் ஒலிக்கும் அடித்தள மக்களின் குரல்கள் நிறைந்த நூலாகவும் வாசிக்கலாம்.
இப்படித்தான் முதற்பேரிலக்கியங்களும். அவையும் ஒற்றைப்படையானவை அல்ல. ஒரேதரப்பால் திரட்டப்பட்டு ஒற்றைப்படையாக சமூகமீது சுமத்தப்பட்டவையும் அல்ல. தமிழின் முதற்பேரிலக்கியத்தொகையில் வைதீகக்கருத்தியலும் அவைதீக கருத்தியலும் முரண்பட்டு இயங்குவதைக் காணலாம். அப்படி ஏராளமான உள்முரண்களால் அது அமைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தின் அதிகார மையத்தையே நான் ஒரு சமரசப்புள்ளியாகத்தான் பார்க்கிறேன், மேலாதிக்க மையமாக அல்ல. முதற்பேரிலக்கியத்தொகை சமூக அதிகாரத்துடன் கொள்ளும் முரணியக்கமாக உருவாகிவந்தது என்னும்போது அது கண்டிப்பாக ஆதிக்க அதிகாரத்தின் ஒற்றைக்குரல் அல்ல.
அத்துடன், ஏற்கனவே சொன்னதுபோல முதற்பேரிலக்கியத்தொகை இடைவிடாமல் மறுபரிசீலனைக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மையம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் முதற்பேரிலக்கியத்தொகையில் வைதிகநூல்கள் எல்லாமே பின்னகர்ந்து அவைதிகநூல்கள் மேலே வந்திருப்பதைக் காணலாம். அது மிக முற்போக்கான ஒரு நகர்வென்றே நான் நினைக்கிறேன். ஆகவே முதற்பேரிலக்கியத்தைக் கட்டுவதென்பதை வெறுமே ஆதிக்க கருத்தியல் யந்திரத்தின் செயல்பாடு என குறுக்கிக்கொள்ளவேண்டாம்.
ஒரு ரசனைவிமர்சகனாக என்னுடைய செயல்பாட்டை ஏற்கனவே இருக்கும் முதற்பேரிலக்கியத்தை வலியுறுத்துவது என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களோ என ஐயமாக இருக்கிறது.நேர்மாறாக பண்டைய இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் முதற்பேரிலக்கியத்தொகையை மறுகட்டமைப்பு செய்யவே நான் முயல்கிறேன். அதையே எந்த ரசனைவிமர்சகனும் செய்வான் என நினைக்கிறேன். ரசனை விமர்சனம் உருவாக்கும் விவாதம் முதற்பேரிலக்கியத்தின் மையத்தை நகர்த்துவதாகவே அமையும்.
அந்த மாற்றமானது ஆதிக்கக்கருத்தியலின் நேரடி விளைவாக மட்டுமே இருக்கமுடியும் என நீங்கள் சொன்னால் நான் அதை வலுவாகவே மறுப்பேன். நேர்மாறாக அதை இன்றுள்ள எல்லா சமூகக்கூறுகளுக்கும் பங்களிப்புள்ளதாக, இன்னும் ஜனநாயகத்தன்மை கொண்டதாக மாற்றும் செயல்பாடாகவே அதை நான் நிகழ்த்தி வருகிறேன். என்னுடைய எழுத்தில் நீங்கள் அதை காணலாம்.
உதாரணமாக சமீபத்தில் அயோத்திதாசர் பற்றி நான் எழுதிய கட்டுரை. அது தமிழ் நவீனசிந்தனைக்கான முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்க முயல்கிறது. அதற்கான விவாதம் ஒன்றை தொடங்கி வைக்கிறது. இன்று கவனத்துக்கு வந்துள்ள அயோத்திதாசரின் சிந்தனைகளையும் உள்ளடக்கி மூலப்பேரிலக்கியத்தொகையை மாற்றியமைக்கும் முயற்சிதான் அது. அது ஆதிக்கக்கருத்தியல்இயந்திரத்தால் உருவாக்கப்படுவதுமட்டுமே என்று சொல்லமாட்டீர்களென நினைக்கிறேன்.
அந்த உருவகம் அப்படியே என்னால் நிறுவப்படுவது சாத்தியமே அல்ல என நான் அறிவேன். என் கருத்து ஒரு விவாதத்தளத்தில் சென்று நிற்கும். அங்கே பலகாலமாக விவாதம் நிகழும். அது சமூக அதிகாரத்தின் சமநிலையால், கருத்தியல் அதிகாரத்தின் சமநிலையால் மெல்லமெல்ல ஒரு பொதுவான புள்ளியைக் கண்டடையும். அயோத்திதாசரை அது மேலே கொண்டுசெல்லலாம் கீழேயும் இறக்கலாம். ஆனால் அவரையும் உள்ளிட்ட ஒரு மூலநூல்தொகையை உருவாக்கும். இப்படித்தான் ரசனைவிமர்சனம் செயல்படுகிறது. ஆம், அது ஆதிக்கத்தை நிலைநாட்டும் செயல்பாடல்ல. அது ஒரு பிரம்மாண்டமான ஜனநாயகச் செயல்பாடு.
அந்தவகையிலேயே பாரதி பற்றிய விவாதத்தையும் நான் முன்னெடுக்கிறேன். பாரதி மகாகவி என்று நிறுவி மூலநூல்தொகையில் அவரது இடத்தை உச்சிக்குக் கொண்டுசென்ற 'கருத்தியல்யந்திரம்' என்ன என்பதை, அது செயல்பட நேர்ந்த வரலாற்றுச்சூழலை மிக விரிவாகவே நான் பேசுகிறேன் என்பதை நீங்கள் காணலாம். இப்போது அந்த மறுபரிசீலனையை ஆவேசமும் கண்ணீருமாக எதிர்ப்பவர்களுக்குப் பின்னால் உள்ள 'கருத்தியல் யந்திரத்தையும்' நீங்கள் அறிவீர்கள்.
நீங்கள் பாரதியின் கவிதையை அவருடைய ஆளுமைசார்ந்த, தமிழ்மரபு சார்ந்த தனித்தன்மைகளால் மட்டுமே விவரித்து அவரை திருவுரு ஆக்க முயல்கையில் நான் அவரது கவித்துவத்தையும் அவரது சிந்தனைகளையும் தேசமளாவிய, உலகளாவிய ஒரு பிரம்மாண்டமான ஒரு பண்பாட்டு உரையாடலின் விளைவாக காண்பதை வாசகர்கள் நம் விவாதங்களில் இருந்து அறிய முடியும். என்னுடையதே ஜனநாயகபூர்வமான இலக்கிய செயல்பாடு என அவர்கள் உணரவும் கூடும்
நான் பாரதி பற்றி தீர்ப்பளிக்கவில்லை எம்.டி.எம். நான் அதை முன்னரே சொல்லிக்கொண்டுதானே பேச ஆரம்பித்தேன்? நான் பாரதியை மகாகவி என நிறுவிய canonization இன் கருத்தியலை வரலாற்றுபூர்வமாக அடையாளம் காண முயல்கிறேன். ரசனை விமர்சனத்திற்குரிய வழிமுறைகளைக்கொண்டு அந்த canon ஐ மறுபரிசீலனை செய்கிறேன். அது ஆதிக்கக்கருத்தியலின் செயல்பாடல்ல, அதற்கு நேர் எதிரான ஜனநாயகச் செயல்பாடு. அந்த செயல்பாடு எல்லா canon மீதும் நிகழவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் அமைப்புவாதியாக, பின்நவீனத்துவராக பதில் சொல்லியிருந்தால் பாரதியை மகாகவி என நிறுவிய கருத்தியல் யந்திரத்தைத்தான் முதலில் சுட்டிக்காட்டியிருப்பீர்கள். அதற்கு எதிரான விவாதம் என்பது பல்வேறு பல பண்பாட்டுக்குரல்களையும் கருத்தில்கொண்டு மூலநூல்தொகையின் மையத்தை இடம் மாற்றும் செயல்தான் என்று சொல்லியிருப்பீர்கள். அது ஒரு பண்பாட்டுச்சூழலில் நிகழும் ஜனநாயகச் செயல்பாடே என்பதை எடுத்துக்காட்டியிருப்பீர்கள்.
என்னுடைய ரசனை விமர்சனம் அதிகார உள்ளடக்கம் கொண்டதா என்றால் ஆம் என்றே நான் சொல்வேன். இங்குள்ள கருத்தியலதிகாரத்தில் என்னுடைய தரப்பையும் ஒரு விசையாக செலுத்தி என் சார்பான ஒரு மாற்றத்தை நிகழ்த்தவே நான் எழுதுகிறேன். அதன் நோக்கம் என்ன என்பதை அதன் விளைவுகளைக்கொண்டு மதிப்பிடுங்கள் என வாசகர்களிடம் நானும் கோருகிறேன். அது எப்போதுமே இறந்தகாலத்தின் மதிப்பீடுகளை நவீன ஜனநாயக அடிப்படைகளுக்கு ஏற்ப மறுவரையறை செய்வதாகவே இருக்கும் என சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் என்னுடைய ரசனை விமர்சனம் மட்டுமல்ல உங்களுடைய அமைப்புவாத கட்டுடைப்பு விமர்சனமும்கூட கருத்தியல்யந்திரங்களால் கட்டமைக்கப்படுவதுதான். அதிகார உள்ளடக்கம் கொண்டதுதான். அது வெறுமே உடைப்பதில்லை, உடைப்பதனூடாக சிலவற்றை கட்டமைக்கவும் செய்கிறது. இன்றைய இந்தியச்சூழலில் உங்களைப்போன்றவர்களின் கட்டுடைப்புவிமர்சனத்தின் கருத்தியல்யந்திரம் எது, அதன் நோக்கமும் செயல்பாடும் என்னென்ன என பிறிதொருமுறை பேசுகிறேன்.
ஜெ
[நான் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். ரசனை விமர்சனத்தின் கலைச்சொல் பயன்பாடு பற்றி நாளை எழுதுகிறேன்]
தொடர்புடைய பதிவுகள்
ரசனைவிமர்சனத்தின் வழி- எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு
எம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு
கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ,
நலமா ? நீங்கள், "நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்" நூலில் கூறிய, "ஆங்கில வழி கல்விகற்று, இன்டர்நெட் மூலம், இலக்கியத்தைக் கண்டடயும் நான்காவது வகையை"ச்சார்ந்த ஒரு
இளைய வாசகன். நண்பர் ஒருவர் உங்களுடைய "கன்னி நிலம்" கதையை அனுப்பினார். காதலை இவ்வளவு தீவிரத்துடன் இதற்குமுன் நான் படித்ததில்லை. உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வலைத்தளத்தை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.
"நான் ஒரு அறிவாளி, ஒருவர் எழுதி எனக்குப் புரியாதா?" என்ற அகந்தை எனக்கு இருந்தது. நீங்கள் எழுதிய விஷ்ணுபுரம், இந்து மரபின் ஆறு தரிசனம், பின் தொடரும்
நிழலின் குரல், நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கொடும்பாளூர் கண்ணகி ஆகியவற்றை வாங்கினேன். [ நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன். சமீபத்தில் விடுமுறைக்கு
சென்னை வந்தேன். ஹிக்கின் பாதம்ஸ் சென்று உங்கள் புத்தகங்களைக் கேட்டால் "அவருதுலாம் இங்க இல்லைங்க" என்றார் ஒருவர்.]
விஷ்ணுபுரத்தை ஒருமுறை படித்துவிட்டு ஒரு பெரும் அயர்ச்சி ஏற்பட்டது. [தர்க்க விவாதப் பகுதிகள், கவிதைகள், ஆகிவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு என் வாசிப்பு அனுபவம் இல்லை என்ற ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன்]. மேலும், நான் சிறு வயதில் இருந்து நம்பிய பல விஷயங்களில் எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.யோசித்து, யோசித்து, எனக்கு மூளை குழம்ப ஆரம்பித்தது. seriously, I was confused. [இப்ப கொஞ்சம் பரவாயில்லை ].
உங்கள் மூலமாக நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாகி உள்ளது. இதற்குமுன் விகடன், சுஜாதா என்ற அளவுக்கு தமிழில் இருந்த என் வாசிப்பு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருகிறது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
நன்றி,
விசு.
அன்புள்ள விசு
ஒரு புதிய கலைவடிவுக்குள் ஒரு புதிய அறிவுத்துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒருவருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக்கொண்டபொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது.அதைவிட அது போடக்கூடிய விரிவான கோலம். முன்னும்பின்னும் கதை பின்னிச்செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு வாசித்தால் பெரியவிஷயம் அல்ல.
தொடர்ந்து விவாதிப்போம்
ஜெ
அன்புள்ள ஜெ,
நலமா? கூந்தல் சிறுகதைத் தொகுப்பில் 'சிலந்தி வலையின் மையம்' வாசிக்கும் போதே மனதை என்னவோ செய்தது. வாசித்த பின்னும், நானே அறிய முடியாத படி, உள்ளுக்குள் ஏதோவொரு தந்தியைத் தொட்டு மீட்டிய வண்ணமே இருக்கிறது, மிக நெருக்கமான இந்த உணர்வு.
அன்புடன்,
வள்ளியப்பன்.
–
அன்புள்ள வள்ளியப்பன்
நன்றி
அந்தக்கதையைக் குறைவானபேர்களே சொல்லியிருக்கிறார்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்
கதைகளின் வழி
சிற்பச்செய்திகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
பின் தொடரும் நிழலின் குரல் பற்றி
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
கடிதங்கள்
கடிதங்கள்.
கடிதங்கள்
ரசனைவிமர்சனத்தின் வழி- எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு
அன்புள்ள எம்.டி.எம்,
உங்கள் கட்டுரை கண்டேன்
நீங்கள் பேச ஆரம்பித்தபோது என்னை உங்கள் வசதிப்படி , சிந்தனைத்துறை சாராத மொழியில், முதலில் வகுத்துக்கொண்டீர்கள். நான் என்னுடைய கட்டுரையில் செய்திருப்பது உங்களுடைய அந்த வரையறைப்படி என் எழுத்துக்கள் அமைந்திருக்கவில்லை என்பதை நிலைநாட்டுவதையே. அதை ஆரம்பத்திலேயே செய்யாவிட்டால் நீங்கள் அந்த திசையிலேயே என்னை உறுதிப்படுத்தி, அதன் மேல் விமர்சனங்களைக் கட்டமைத்து, முடிக்கமுடியும். அதன்மூலம் எனக்கு எந்தப் பயனும் இல்லை. நான் இங்கே பேசிக்கொண்டிருப்பதே இந்த விவாதம் மூலம் உங்களிடமிருந்து ஒரு சரியான, கறாரான எதிர்விமர்சனத்தை சிந்தனைத்துறை மொழியில் பெற்றுக்கொள்வதற்காகத்தான். அது எனக்கு இப்போது மிகவும் தேவைப்படுகிறது.
நீங்கள் போகிறபோக்கில் எனக்களித்த ஒவ்வொரு முத்திரையையும் என்னுடைய எழுத்துக்களை எடுத்துக்காட்டிக்கொண்டு திட்டவட்டமாக மறுப்பதையே நான் செய்திருக்கிறேன். நீங்கள் அவற்றை ஒற்றைவரிகளில் சொல்லலாம். நான் அதேபோல ஒற்றை வரியில் 'அதெல்லாமில்லை' என்று சொல்ல முடியாது. என் அணுகுமுறையை விளக்கியாகவேண்டும்.
உங்கள் சொற்களையே பாருங்கள். 1.காலாவதியான ரசனைவிமர்சனத்தை முன்வைப்பவர். 2. சந்தைப்பொருளியலுக்கு ஆதரவான விமர்சனத்தைக் கட்டமைக்கிறவர் 3. இந்திய தேசியத்தை ஒற்றைப்படையாக உருவகிப்பவர். அதனடிப்படையில் எல்லாவற்றையும் ஒற்றைப்படையாக்குபவர் 4. பன்மைச்சமூகத்தில் ஒற்றைப்படையான இறுதி மதிப்பீடுகளைக் கட்டமைத்து வன்முறையை செலுத்துபவர். 5 கழிசடை சினிமா என்ற வணிகதளத்தில் செயல்படுபவர் 6 . பகவத்கீதை போன்ற பழைமைவாத நூல்களை முன்வைப்பவர் 7 . நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம்தட்டுபவர். 8.வலதுசாரி
இவை ஒவ்வொன்றையும் நான் மறுத்திருக்கிறேன். அதுதான் எனது அக் கட்டுரையின் நோக்கம். விவாதத்தின் தொடக்கத்திலேயே அதை நான் செய்தாகவேண்டும் இல்லையா? அக்கட்டுரையில் 1. நான் முன்வைக்கும் ரசனைவிமர்சனம் எப்படி எப்போதுமே விமர்சனமரபின் இன்றியமையாத மைய ஓட்டமாக உள்ளது என்கிறேன். 2. அது எப்படி சந்தைப்பொருளியலுக்கு எதிரானது என்கிறேன். 3. நான் முன்வைக்கும் இந்தியதேசிய உருவகம் என்பது பன்மைத்தன்மையைக் கொண்டது என்றும் இறந்தகாலப்புனிதங்களில் இருந்து உருவாக்கிக்கொண்ட ஒற்றைத்தேசியம் அல்ல என்றும் சொல்கிறேன். 4. இந்தியாவின் பன்மைத்தன்மையை அங்கீகரித்து அதன் மையத்தில் நிகழும் தொடர்விவாதத்தின் ஒருபகுதியாகவே பேசுகிறேன், ஒற்றைப்படையாக்கத்தை எதிர்க்கிறேன் என விளக்குகிறேன். 5. நான் செயல்படும் சினிமா கழிசடை சினிமா அல்ல,தமிழில் உருவாகிவரும் மாற்று சினிமா என்கிறேன் . 6. பகவத்கீதையை நான் சம்பிரதாயமான மதநூலாக விளகவில்லை, அதன்மீதான விளிம்புநிலை வாசிப்பின் ஒரு பகுதியாக எழுதுகிறேன் என்று காட்டுகிறேன் . 7.நவீனத்துவத்தின் குரல்களை மட்டம்தட்டவில்லை, அவற்றை உள்வாங்கிக்கொள்ள முயல்கிறேன். அதுவே என் விவாதத்தின் அடிப்படை என்கிறேன் 8. வலதுசாரி என்ற எளிய முத்திரை எனக்குச் செல்லுபடியாகாது. அப்படி ஒரு நிலைப்பாடெல்லாம் எனக்குக் கிடையாது என்கிறேன்
இதற்காகவே என் பொதுநோக்கை விரிவாகப் பேசுகிறேன். நீங்கள் உருவாக்கும் இருமையைச் சுட்டிக்காட்டுகிறேன். அந்த இருமையை நீங்கள் செய்யவில்லை, அல்லது கைவிட்டுவிட்டீர்கள் என்றால் அதுதான் எனக்கும் தேவை. உங்களுடையது ஒரு மாற்றுப்பார்வைதான் என்றால் அதில் எனக்கு மறுப்பே இல்லை.
இதெல்லாமே நீங்கள் தமிழ்ச்சூழலில் எப்போதும் ஒலிக்கும் அந்த ரெடிமேட் பதில்களைச் சொல்லவேண்டாம் என்பதற்காக. அவற்றை நான் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் அந்த முத்திரைகளுக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தமில்லை. என் அணுகுமுறைக்கு எல்லைகளும் போதாமைகளும் இருக்குமென்றால் அதன் தளங்களே வேறு. நீங்கள் அங்கே வந்து என் தரப்பை ஆக்கபூர்வமாக மறுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அது அல்லாதவற்றை மறுத்துக் களத்தைக் குறிப்பானதாக ஆக்குகிறேன், அவ்வளவுதான். மற்றபடி நானே என்னைப்பற்றி எதையும் கட்டமைக்கவில்லை. எதையும் உரிமைகொண்டாடவுமில்லை.
அந்த மதிப்பீடுகளைப் போகிறபோக்கில் வைத்த நீங்கள் அவற்றுக்கான என் மறுப்புகளை மறுக்காதநிலையில் என் தரப்பை ஏற்றுக்கொண்டதாகவே எடுத்துக்கொள்கிறேன். ஆகவே சந்தைப்பொருளியலுக்கு ஆதரவான, இந்திய ஒற்றைத்தேசியத்தை நிலைநாட்டும் நோக்கு கொண்ட, மரபார்ந்த பார்வையில் ஒற்றைப்படை அதிகாரத்தைக் கட்டமைக்கும் விமர்சகனுக்கான பதிலை எனக்கு சொல்லவேண்டாம். என் உண்மையான தரப்பை எதிர்கொள்ளுங்கள்.
ஐந்தும் ஆறும் ஏழும் குற்றச்சாட்டுகளை உங்களைப்பற்றி நீங்களே சொல்லிக்கொண்டது என்கிறீர்கள். நல்லது, நீங்கள் நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம்தட்டுபவர் என நீங்கள் நினைக்கலாம்.நான் அப்படி நினைக்கவில்லை.நீங்கள் நவீனச்சிந்தனைகளை அறிந்து முன்வைப்பவர். ஆகவேதான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஒருவழியாக நீங்கள் உண்மையிலேயே நான் எதிர்பார்த்த மறுதரப்பு விவாதங்களுக்குள் வந்துவிட்டீர்கள். கொஞ்சம் நீளமாக எழுதினாலும் அதை சாதித்ததில் எனக்கு நிறைவுதான்
*
இனி நீங்கள் வைக்கும் விமர்சனம். நான் பாரதியை 'demystify செய்யும் நோக்கம் எனக்கில்லை' என்றே அக்கட்டுரையில் தெளிவாகச் சொல்கிறேன். அவரது கவித்துவ உள்ளடக்கத்தை எவ்வகையிலும் மறுக்கவோ உடைக்கவோ நான் முனையவில்லை. கட்டுடைப்பு என் விமர்சனமுறையும் அல்ல. எங்கும் எப்போதும் நான் demystification, கட்டுடைப்பு போன்றவற்றைச் செய்வதாகச் சொல்லிக்கொண்டதே இல்லை. அந்த வழிமுறைகளுக்கு நேர் எதிரானவன் என்றே சொல்லிக்கொள்வேன்.
சொல்லப்போனால், ரசனை விமர்சனத்தின் வழியே mystify செய்வதுதான். இலக்கியப்படைப்பை மேலும் மேலும் நுட்பங்களும் ஆழங்களும் கொண்டதாகக் கண்டடைவதன் மூலம் ரசனைவாசிப்பு படைப்பை இன்னும் மர்மங்களும் பூடகங்களும் கொண்டதாகவே கட்டமைக்கிறது. நான் பாரதியை விமர்சனம் செய்தேனென்றால் அவரை வைதிகமரபுக்கும், சித்தர்மரபுக்கும், மேலைநாட்டு ஜனநாயகமரபுக்கும் நடுவே உள்ள ஒரு புள்ளியில் நிறுத்தி முடிந்தவரை மர்மத்தின் செறிவை ஏற்றித்தான் காட்டுவேன். பாரதி பற்றிய கட்டுரையில் குமரகுருபரர் பாடல் ஒன்றைப்பற்றி எழுதியிருக்கிறேன். அப்பாடல் கட்டுடைக்கப்படவில்லை, மேலும் செறிவேற்றப்பட்டுள்ளது. பாரதியின் மழை போன்ற கவிதைகளை நான் அக்கட்டுரைகளில் கட்டுடைக்கவில்லை புதிரவிழ்ப்பும் செய்யவில்லை. இன்னும் புதிரானவையாக ஆக்குகிறேன்.
நீங்கள் சொல்வது போல பாரதியில் உள்ள ' metaphysical claims-ஐயும், பரிபூரண உண்மை (ultimate truth) என்று கூறப்படுவதையும் அணுக்கவாசிப்பின் மூலம் கட்டவிழ்ப்பதை செய்யவேண்டுமெ'ன்றால் அதை நீங்கள்தான் செய்யவேண்டும். அது உங்கள் விமர்சனத்தின் வழிமுறை. அதன்மூலம் நீங்கள் என்ன அடைகிறீர்கள் ,எதைக் காட்டுகிறீர்கள் என நான் கவனித்துக்கொள்வேன்; அவ்வளவுதான்.
ஒரு படைப்பு குறிகளாலான கட்டமைப்பு என்றோ அல்லது சொற்களனில் மொழிக்குறிகள் கொள்ளும் தொடர் அர்த்தஉருவாக்கம் என்றோ எடுத்துக்கொண்டால்தான் கட்டுடைப்பு வழிமுறைக்கு செல்லமுடியும். நான் அதை ஏற்பதில்லை. அது கோட்பாட்டு ரீதியான எளிமைப்படுத்தல் என்றே நினைக்கிறேன். ரசனை விமர்சனம் படைப்பு-வாசிப்பு இரண்டையும் அந்தரங்கமான செயல்பாடாகவே எடுத்துக்கொள்வது வழக்கம். ஆகவேதான் படைப்பு, ஆக்கம் போன்ற சொற்களைக் கையாள்கிறேன். வாசிப்பு என்ற செயலை அப்படிப் புறவயமாக நிகழ்த்தவோ ஒரு புள்ளியில் நிறுத்தி அலசி விவாதிக்கவோ முடியாது என்றே நினைக்கிறேன்.
நவீன ரசனை விமர்சனத்தின் வழிகள் வேறு. முந்நூறாண்டுகளுக்கும் மேலாகப் பல தளங்களாக அது வளர்ந்து வந்துள்ளது. உங்கள் மொழியியல் அணுகுமுறைகளுடன் விவாதித்துக்கொண்டு இன்றும் உலகமெங்கும் வலுவாகவே நீடிக்கிறது. அது இயல்பான முதல் வழிமுறை என்பதனால் எப்போதும் இருந்துகொண்டுமிருக்கும்.
ரசனைவிமர்சனம் வாசிப்பை மிக அந்தரங்கமாக நிகழும் ஒன்றாகவே கொள்கிறது. அதைப் புறவயமாக விவரிக்க, விவாதிக்க முடியாது என நம்புகிறது. ஆகவே அது அந்த படைப்பை வாசித்த வாசகனிடம் மட்டும் பேசமுயல்கிறது. வாசிப்பு என்ற அகநிகழ்வைப் பகிர்ந்துகொள்ள அது சில வழிமுறைகளைக் கண்டுகொண்டுள்ளது. அதில் முக்கியமானது அந்த மொழி, பண்பாட்டுச்சூழலில் முதற்பேரிலக்கியத்தொகை [canon] ஒன்றை உருவாக்கிக் கொள்வது. அது எல்லா வாசகர்களுக்கும் பொதுவானது. அந்தப் பேரிலக்கியத்தொகையை முன்வைத்து அந்தரங்க ரசனையின் அடிப்படைகளைப் புறவயமாக விவாதிக்கமுயல்வதும், அதனுடன் படைப்புகளை ஒப்பிடுவதும் அதன் பாணி.
ரசனை விமர்சனம் படைப்புக்கு அர்த்தமளிக்கும் புறக்காரணிகள் என நினைப்பவற்றை மட்டுமே விவாதிக்கிறது. 1. அப்படைப்பு உருவான வரலாற்று, பண்பாட்டுச் சூழல். 2.அப்படைப்பாளியின் தனிவாழ்க்கைக்கும் படைப்புக்குமான உறவு. 3. அப்படைப்பின் மொழி, வடிவம் 4. அப்படைப்பு பிறபடைப்புகளுடன் கொண்டுள்ள உறவு . அதன்பின் வாசிப்பை வாசகனிடமே விட்டுவிடுகிறது. 'இவ்வளவையும் கணக்கில்கொண்டபின் நீயே வாசித்துப்பார்' என்பதே அதன் அணுகுமுறை. வாசகன் அந்த சுட்டு மூலம் இன்னொரு வாசிப்பை நிகழ்த்த முடியும் என்றால் விமர்சனம் சொல்வதைப் புரிந்துகொள்வான்.
பாரதியைப்பற்றிய என் விமர்சனமும் இவ்வழிகளிலேயே அமைந்திருந்தது என்பதை நீங்கள் காணலாம். அவை பெரும்பாலும் எனக்குச் சொல்லப்பட்டவற்றுக்கான பதில்கள். பாரதியின் ஆன்மீக நோக்கு அவனுக்கே உரிய தனிப்பட்ட சாதனை என்பதே மையமான வாதமாக இருந்தது. அதற்குப் பதிலாக அந்த ஆன்மீகநோக்கு தமிழின் மரபிலும் அன்றைய நவவேதாந்த எழுச்சியிலும் இருந்து உருவானது என்று வரலாற்றுப்பின்புலத்தைச் சுட்டுகிறேன். பாரதியின் கவிதைகளின் அழகியலை மதிப்பிட்டு அவற்றில் பெரும்பாலானவை சம்பிரதாயமானவை, பெரும்பாலும் அப்பட்டமான குரல்கொண்ட பிரச்சாரக்கவிதைகள் என்று சுட்டுகிறேன். அவரது கவிதைகளில் எவை முக்கியமானவை, அவை எவ்வளவு என சுட்டிக்காட்டுகிறேன். எங்கும் ரசனைவிமர்சனம் செய்வது அதையே.
இன்னும்கூட தெளிவாகச் சொல்கிறேனே. நீங்கள் சொல்லும் பாரதியின் மீபொருண்மை சாரத்தையும் இறுதிஉண்மை என்ற கூற்றையும் எதையும் நான் மறுக்கவில்லை. ஆகவே உடைக்கவும் நினைக்கவில்லை. ரசனை விமர்சனம் அவற்றைக் கவிதைக்குள் நிகழும் பாவனைகள் என்றே எடுத்துக்கொள்ளும். கருத்துக்கள் படைப்பின் சாராம்சமல்ல, படைப்பு உருவாக்கும் வாசிப்பனுபவம் கருத்துக்களைச் சார்ந்ததும் அல்ல. அவை அழகியலுடன் வெளிப்பாடுகொண்டிருந்தால் எனக்குப் போதுமானது. நான் அவை நவீன அழகியலுடன் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படவில்லை என்பதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன். அதை வாசகன் அவனுடைய வாசிப்பு வழியாகப் புரிந்துகொள்ளச்செய்ய முயல்கிறேன்.
தமிழ் விமர்சனத்தின் தொடக்கக் கட்டுரையிலேயே வ.வே.சு அய்யர் அதைத்தான் செய்திருக்கிறார். பாரதியின் கண்ணன் பாடல்களை அவற்றின் வரலாற்றுச்சூழலில் பொருத்துகிறார், அவற்றை ஆழ்வார்களுடனும் அஷ்டபதியுடனும் இணைத்துப்பார்க்கிறார். அவற்றின் வடிவ ஒழுங்கைச் சுட்டிக்காட்டுகிறார். அவற்றின் சிறந்த வரிகளை உதாரணம் காட்டுகிறார். அதன்பின் வாசித்துப்பாருங்கள் என விட்டுவிடுகிறார். க.நா.சு ,சுந்தர ராமசாமி வரை செய்தது அதையே.
நான் அதில் என்ன சேர்த்திருக்கிறேன் என்றால் அமெரிக்க புதுத்திறனாய்வின் textual criticism வழிமுறையைத்தான். அதாவது படைப்பை மீளமீளக் கூர்ந்து வாசித்து அதை வைத்து விவாதிப்பது. படைப்பைக் கூர்ந்து வாசிக்கும் ரசனை விமர்சனம் அதன் எல்லா சொற்களையும் எல்லாக் குறியீடுகளையும் கணக்கில் கொள்ள முயல்கிறது. ஒன்றில் நிலைக்கும் தன்னிச்சையான கவனம் காரணமாக இன்னொன்று விடப்பட்டுவிடக்கூடாது என நினைக்கிறது. சாத்தியமான எல்லா வாசிப்புகளையும் நிகழ்த்திக்கொள்கிறது. அதற்காக விவாதிக்கிறது. கம்பனையும் பாரதியையும் சு.வேணுகோபாலையும் நான் வாசிப்பது அவ்வகையிலேயே.
அத்துடன் கூடவே ஒரு தனி வழிமுறையும் ரசனைவிமர்சனத்துக்கு உண்டு. அசாதாரண வாசிப்புகளை நிகழ்த்திப்பார்ப்பதும் தன்னிச்சையான வாசிப்புக்கு இடமளிப்பதும். அதை ஹரால்ட் ப்ளூம் குறிப்பிடும் பிறழ்வாசிப்பு என்று சொல்லலாம்.
ஆகவே என்னுடைய விமர்சனமுறையை நான் உங்கள் விமர்சனமுறைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சொல்லவேண்டாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் என் ரசனைவிமர்சனமுறையைத் தவறான கட்டுடைப்புவிமர்சன முறை என்கிறீர்கள். பனியனை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அது தப்பாகத் தைக்கப்பட்ட ஜட்டி என்று சொல்வதைப்போல.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
எம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு
எம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
இரண்டாவது பதிவுகளில் ஜெயமோகனின் வழக்கமான சமநிலை (equillibrium)காணப்படவில்லை. அவர் கருத்தை விட்டு ஆளைத் தாக்குவதாகத்தான் எனக்குத்தெரிகிறது. உதாரணத்துக்கு ஒன்று – "கூடவே பகவத் கீதைபற்றி. நான் பகவத்கீதைபற்றி என்ன எழுதியிருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாது. அதுஅவருக்குக் கடினம் என்றால் வாய்திறக்காமலிருக்கும் நிதானமும் இல்லை.போகிறபோக்கில் ஒரு வரி. இதைச்சொல்ல எதற்குப் பின்நவீனத்துவ ஃபார்முலா?நெல்லையப்பர் தேரடியில் எம்.டி.முத்துக்குமாரசாமி சின்னவயசில் கேட்ட திகபேச்சாளரே போதுமே. பின் நவீனத்துவமே ஆனாலும் நமக்கு கோட் சூட் போட்ட தி.க குஞ்சுதான் அமையுமா என்ன?"
ஜெயமோகன் தளம்தானா என்று ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துவிட்டது."எம்டிஎம்மின் விமர்சன தளம்" பதிவு முழுவதும் இந்த மாதிரி தொனியில் நிறையஇருக்கிறது. சாதாரணமாக ஜெயமோகன் தன ஸ்டைலில் விவாதிக்கும் பதிவாகத்தெரியவில்லை, ஒரு ஆங்காரமும் கோபமும் பத்திக்குப் பத்தி தெரிகிறது.
வழக்கமாக தரவுகளைக் கொடுப்பவர் ஜெயமோகன். இந்த முறை எதையும் காணவில்லை.இந்தப் பதிவு பாரதியாரைப் பற்றி எம்டிஎம் மறுத்ததைத் தாண்டி எம்டிஎம்சொன்ன பல கருத்துகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் என்ன சொன்னார் என்றுதான்தெரியவில்லை. போன மேற்கோளையே எடுத்துக் கொள்ளுங்கள். பகவத் கீதை பற்றி எம்டிஎம் என்ன அப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டார்? அவரது பாரதியார்பதிவில் நிச்சயமாக எதுவும் இல்லை. "நாம்தான் பகவத் கீதையைப்படித்துக்கொண்டு, வியாபார கழிசடை சினிமாவிற்குக் கதை எழுதிக்கொண்டு,நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம் தட்டிக்கொண்டுஉட்கார்ந்திருக்கிறோமே நாம் எப்படி மயிலை வேணு மூலமாக குணங்குடிமஸ்தானின் பாடல்கள் எதிர்க்கலாச்சாரத்தன்மை பெற்றன என்றுஅறியப்போகிறோம்?" இது மட்டும்தானா?
அது இந்தப் பதிவில் -http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_08.html -
இடம் பெறும் ஒரு வரி. இதை உங்களைத்தான் குறிப்பிட்டு சொன்னதாக எடுத்துக்கொள்வது எப்படி? ஒரு வேளை எம்டிஎம்முக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்புகாரணமாக உள்குத்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் புரிந்து
கொண்டிருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் நீங்கள் benefit of doubtகொடுப்பீர்கள், நேரடியாக சொல்லாததைப் பொருட்படுத்தாமல் புறம் தள்ளுவீர்கள்என்பதுதான் என் அனுபவம். (நேரடியாகத் திட்டினாலே புறம் தள்ளுவதைப் பல முறைபார்த்திருக்கிறேன்.) இது over-reaction ஆகத் தெரிகிறது. இந்தப் பதிவு பாரதியார் மறுப்புக்கு முன்னால் எழுதப்பட்டது என்பதைக் கவனித்தீர்களாதெரியவில்லை.
மிகவும் வியப்பளித்தது எம் டி எம் விலகினார் என்று வருத்தம் தெரிவித்தபதிவுதான். அப்படி நான் இணையத்தில் எதையும் படிக்கவில்லை. சரிதெரிந்தவர்கள், ஃபோனில் பேசி இருப்பார்கள், ஈமெயில், எஸ்எம்எஸ் ஏதாவது
அனுப்பி இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். இன்று எம்டிஎம் நான் விலகினேனா, எப்போது என்று கேட்டு எழுதி இருக்கிறார்
ஆர்வி
அன்புள்ள ஆர்வி,
இந்த விவாதத்தை நீங்கள் எந்த அளவுக்குப் பின்தொடர்கிறீர்கள் என்று தெரியவில்லை. எப்படியானாலும் நீங்கள் நினைப்பதைவிட இதன் உள்ளுறைகள் அதிகம்.
சிந்தனைத்தளத்தில் செயல்படும் ஒருவன் எதிர்த்தரப்பை கவனமாகவே தேர்வுசெய்யவேண்டும். என்னைப்பற்றி இணையத்திலும் இதழ்களிலும் பக்கம்பக்கமாக என்னென்னவோ எழுதப்பட்டுள்ளன. வசைகள் அவதூறுகள் கொஞ்சம் எதிர்விமர்சனங்கள். பெரும்பாலானவற்றை நான் வாசிப்பதே இல்லை. வாசிக்கும் விமர்சனங்களில் இருந்துகூட எதிர்வினையாற்றத் தக்க ஒருவரைக் கண்டுகொள்ளவில்லை.
எம்.டி.முத்துக்குமாரசாமியை நானேதான் தேர்வுசெய்தேன். அதற்கான காரணங்களையும் சொல்கிறேன். அவர் என்ன சொல்கிறாரோ அந்தத் தளத்தில் தமிழில் அவர் ஒரு முதன்மை அறிஞர். தனக்கென ஒரு மொழிநடை கொண்டவர். நினைப்பதைச் சொல்ல மொழித்திறன் அமையாத ஒருவர் எதையும் யோசிப்பதே இல்லை, பிரதிபலிக்கத்தான் செய்கிறார் என்பது என் எண்ணம். முக்கியமானது, அவரால் புனைவிலக்கியத்தின் உள்ளோட்டங்களைப் புரிந்துகொள்ளமுடியும். அவர் தொடர்ந்து எழுதினாரென்றால் கவிதையும் அங்கதமும் சந்திக்கும் ஒரு புள்ளியைத் தொடக்கூடியவர்- ப.சிங்காரம் போல. இன்று நம்மில் பலர் பின்நவீனத்துவப் பகடி என நினைத்துக்கொண்டிருக்கும் குப்பைகளை ஒதுக்க ஒரு முகாந்திரமாக அமையும் படைப்புகளை அவரால் அளிக்கமுடியும் என நினைக்கிறேன்.
நம்மூரில் கோட்பாடு பேசுபவர்கள் கொஞ்சம்கூட உணர்ந்துகொள்ளாத விஷயம் படைப்பியக்கம். அவர்களுக்குக் கருத்துக்கள்தான் இலக்கியப்படைப்பு. ஒரு துண்டுப்பிரசுரத்துக்கும் கவிதைக்கும் வேறுபாடுண்டு என்பதை அ.மார்க்ஸ் புரிந்துகொண்டிருப்பதற்கான தடயம் இதுவரை அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறதா? அரிசிச்சோறுதான் உலகிலேயே சிறந்த உணவு என நம்புகிறவன் கோதுமையை விரும்பிச்சாப்பிடுவதாகக் கனவுகண்டு புரியாமல் திகைப்பதுபோன்ற சிக்கல்கள் கொண்டது புனைவெழுத்து. அதை இவர்களுக்கு விரித்துரைக்க முடியாது. எம்.டி.முத்துக்குமாரசாமியின் நாடகங்களை வைத்து அவரால் அதைப் புரிந்துகொள்ளமுடியும் என நான் நினைக்கிறேன்.
இத்தனை வருடம் சிந்தித்து எழுதி வந்த இந்தப்பரிணாமத்தில் என்னை நானே மதிப்பிட்டுக்கொள்ள, என் எழுத்துக்களை மறுபரிசீலனை செய்ய எனக்கு ஒரு மறுதரப்பு தேவையாகிறது. ஆகவேதான் இந்த விவாதத்தை நடத்துகிறேன். அவரை மாற்றவோ வெல்லவோ அல்ல. நான் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கும் ரசனை விமர்சன மரபும் சரி அவர் கொண்டிருக்கும் மொழியியல் ஆய்வுமரபும் சரி முற்றிலும் மாறுபட்ட இரு தளங்களைச் சேர்ந்தவை. அவற்றுக்கிடையேயான விவாதம் எங்குமே முடிவுக்கும் வந்ததில்லை.
இந்த விவாதத்தை ஆரம்பிக்கும்போது முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருந்தன. தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக என் மீது சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. என் கருத்துக்கள், படைப்புக்கள் எவற்றையுமே பொருட்படுத்தாமல் என்னைத் தங்களுக்கு வசதியான எதிரியாகக் கட்டமைத்துக்கொள்ளும் நோக்குடன் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் அவை. அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதனால் அவற்றுடன் விவாதிப்பதில் எனக்கு பயனேதும் இல்லை.
அந்தச் சித்தரிப்புகளின் நாசூக்கான வடிவத்தையே எம்.டி.முத்துக்குமாரசாமி அவரது குறிப்புகளில் சொல்லியிருந்தார். உதாரணமாக, இந்தியதேசியம் பற்றிய அவரது வரி. இந்தியதேசியம், சந்தைப்பொருளியல், ரசனைவிமர்சனம் மூன்றையும் ஒரேசொற்றொடரில் ஏற்றி அவர் சொன்னதன் அடிப்படையான தர்க்கப்பிழையை சாதாரணமாக சிந்திக்கும் எவரும் அறியமுடியும். நான் அதைத் தெளிவாக உடைத்துத் தனித்தனி வாதங்களாக ஆக்கி பதில் சொல்கிறேன்.
அதில் உள்ள உட்குறிப்பு ஆபத்தானது. நான் இந்தியதேசியத்தை முன்வைக்கிறேன், இந்தியதேசியம் இறந்தகாலபுனிதங்களில் கட்டமைக்கப்பட்டது, இறந்தகாலம் இந்து அடிப்படைவாதத்தால் ஆனது, ஆகவே நான் இந்து அடிப்படைவாதி, இந்து அடிப்படைவாதத்தை இலக்கிய அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன் , அதனடிப்படையில் எல்லாப் பிற பண்பாட்டுக்கூறுகளையும் அழிக்கநினைக்கிறேன் — இவ்வாறு இதைக் கட்டி எழுப்பிக்கொண்டே சென்று 'அடப்பாவி குஜராத்திலே பச்சப்புள்ளைய கொன்னவன்தானே நீயி? ' என்ற வகையில் முடிக்கமுடியும். தீராநதி விவாதத்தில் இதை இப்படியே அ.மார்க்ஸ் செய்ததை நினைவூட்டுகிறேன். இந்தியதேசிய உருவகம் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்ட முற்போக்கான ஒன்றாக இருக்கமுடியும் என்றோ இந்துமரபுக்குள் எதிர்ப்போக்குகள் உண்டு என்றோ அ.மார்க்ஸிடம் சொல்லிப் புரியவைக்கமுடியுமா என்ன?
இங்கே, அந்தவகையான எல்லா சம்பந்தமில்லாத முத்திரைகளையும் விவாதங்களையும் முதலிலேயே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆகவேதான் ஒன்றுவிடாமல் அனைத்துக்கும் விளக்கம் அளித்து விவாதக்களத்தைக் குறிப்பாக ஆக்கினேன். அது திட்டவட்டமாக நிறுவப்படவேண்டும் என்பதற்காகவே அழுத்தியும் வேகமாகவும் சொன்னேன். அதில் கோபம் ஏதும் இல்லை. கோபம் இருந்தால் அது எம்.டி.முத்துக்குமாரசாமி மீதும் இல்லை. என்னுடைய மொத்த சிந்தனையையே சல்லிசாக ஆக்குபவர்கள்மீதுதான்.
தனிப்பட்டமுறையில் தாக்குதல்கள் எதையும் நிகழ்த்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஃபோர்ட் ஃபவுண்டேஷன் பற்றிய குறிப்பு தனிப்பட்ட தாக்குதல் அல்ல. எம்.டி.முத்துக்குமாரசாமி இன்ஃபோசிஸில் வேலைபார்த்திருந்தால் அது வேறு விஷயம். ஃபோர்டு ஃபவுண்டேஷன் உலகம் முழுக்க ஒரு கருத்தியலைப் பரப்பக்கூடிய நோக்கம் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. ஏகாதிபத்திய அரசியல் உள்ளுறை கொண்டது. இந்தியாவிலும் பர்மாவிலும் பிரிவினைக் கருத்தியல்களுக்குப்பின்னால் அதன் நிதியுதவித்திட்டங்கள் உள்ளன. நாட்டார்கலை, பழங்குடிப்பண்பாடு மீதான அதன் ஆர்வம் உள்நோக்கம் கொண்டது
சமீபத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அருந்ததிராய் வைத்த முதன்மைக்குற்றச்சாட்டே அவர் ஃபோர்டு பவுண்டேஷனுடன் தொடர்புள்ளவர் என்பதுதான் என்பதை நினைவுகூர்வீர்கள். அவரால் அதை நிரூபிக்க முடியவில்லை. மக்சசே விருது அளிக்கும் நிறுவனத்திற்கு ஃபோர்டு ஃபவுண்டேஷன் உதவியிருக்கிறது என்று மட்டுமே சொல்லமுடிந்தது. அவர் அதை நிரூபித்திருந்தால் அது கண்டிப்பாகப் பெரிய குற்றம்தான்
எம்.டி.முத்துக்குமாரசாமி ஃபோர்டு பவுண்டேஷனில் வெறுமே வேலைபார்க்கவில்லை. அதன் ஆலோசகராக அதன் பணிகளைத் திட்டமிட்டு நடத்தியவர், அதன் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவர். அந்நிலையில் இது ஒரு கருத்துக்களின் ethics சார்ந்த பிரச்சினையாக ஆகிவிடுகிறது. இலக்கியம்பற்றி, அமைப்புவாதம் பற்றி அவர் பேசுவதில் அதற்கு இடமில்லை . ஆனால் இந்தியதேசியம் பற்றிய இறுதிக்கூற்றாக ஒன்றை ஒருவர் பொதுவெளியில் முன்வைக்கும்போது அவரது அந்தப்பின்னணி முக்கியமானது.
காலையில் நான் எழுந்ததுமே எம்.டி.முத்துக்குமாரசாமி விவாதத்தில் இருந்து விலகிவிட்டார் என்ற வகையில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள். உண்மையில் எனக்கு அது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் விவாதத்தின் மூலம் பயனடையப்போவது நான்தான் என நான் அறிவேன். ஃபோர்டு ஃபவுண்டேஷன் பற்றிய கூற்றை அவர் தற்காத்து வாதிடுவார் என நினைத்தேன். ஏனென்றால் அது ஒரு முக்கியமான விவாதப்பொருள். வருத்தப்பட்டு விலகுவாரென நினைக்கவில்லை. ஆகவேதான் என் விளக்கத்தை அளித்தேன்
இந்த விவாதத்தை வறண்ட மொழியில் வெறும் கோட்பாட்டு விமர்சனமாக ஆக்க விரும்பவில்லை. அப்படியென்றால் தமிழவனை அல்லவா தேர்வுசெய்திருப்பேன். நக்கலும் கேலியுமாகவே எம்.டி.முத்துக்குமாரசாமி என்னைப்பற்றி எழுத ஆரம்பித்தார் . அதுவே அவரது இயல்பு. அவ்வாறு எழுதும்போதே அவர் எம்.டி.எம். அதையே நானும் தொடர்ந்தேன். இத்தகைய விவாதங்களில் அதுவும் உலகமெங்கும் உள்ள வழக்கம்தான். கடைசியில் நல்ல நாலைந்து சொற்றொடர்களை இருவரும் உருவாக்கியிருந்தால் சரி.
இப்போது எம்.டி.முத்துக்குமாரசாமி நான் விவாதிக்கநினைக்கும் புள்ளிக்கே வந்துவிட்டார். அது மகிழ்ச்சிதான் அளிக்கிறது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ரசனைவிமர்சனத்தின் வழி- எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு
October 19, 2011
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் பாரதி மகாகவியே என எம்.டி.முத்துக்குமாரசாமி அறிவித்திருப்பது பற்றி என்னுடைய எதிர்வினை. முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லியிருப்பது தவறு நான் சொல்வது சரி என்றுகூட நான் சொல்ல வரவில்லை. எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லியிருப்பது பாரதி விவாதத்தில் தீர்ப்பு. நான் சொல்லியிருப்பது விவாதத்துக்கான ஒரு தரப்பு என்றே வைத்துக்கொள்வோம். ஆகவே எம்.டி.முத்துக்குமாரசாமி மீது நான் வன்முறையைச் செலுத்துகிறேன் என்று அவர் சொல்லாமலிருக்கவேண்டும்.
எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதியை நாம் மகாகவி என்று சொல்லி மகிழலாம் என்கிறார். இதேபோல பாவேந்தர் பாரதிதாசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிக்கோ அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து போன்ற பட்டங்ளையும் அங்கீகரித்து 'சொல்லிக்கொள்ளலாம், தப்பில்லை' என்று அவர் சொல்வாரென்றால் எனக்கு மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை. பின் நவீனத்துவ அணுமுறைப்படி இவர்கள் நடுவே வேறுபாடு காண்பது, தரவரிசை செய்வது எல்லாமே தவறு என அவர் சொல்லக்கூடும். அந்நிலையில் அவருக்கு கடிதமெழுதி பாரதிக்காக கண்ணீர்விட்டு ஏங்கிய அந்த 292 பேரும்தான் அவருடன் பேசவேண்டும்.
இல்லை, அவர் ஒரு தரவேற்றுமை காண்கிறார், அதற்கான அளவுகோலை வைத்திருக்கிறார், அதனடிப்படையில்தான் பாரதியை மகாகவி என்கிறார் என்றால் அந்த உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என்று தயவுசெய்து சொல்லக்கூடாது.பாரதியை மகாகவி அல்ல என்று சொல்பவரும் அதேபோல தரவேற்றுமை காணலாம் , அதற்கான அளவுகோலை கொண்டிருக்கலாம், அது அவரது வன்முறை போக்கு அல்ல அவரும் நல்லவர்தான் என்று அவர் தயவுசெய்து ஒத்துக்கொள்ளவேண்டும்.
இனி எம்.டி.முத்துக்குமாரசாமி உருவாக்கும் வாதங்கள். 'காற்றை தூலமான பொருளாக, ஆளாக உருவகித்து விளிக்கும்போதே அந்த வரி ஒரு நிகழ்த்துதன்மையை இரண்டே வார்த்தைகளில் அடைந்துவிடுகிறதுசங்க அக இலக்கியங்களிலிருந்து கவிதைக்கு ஒரு நிகழ்த்துதன்மையைத் தருகிற மரபின் நவீன நீட்சி இது' என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி. ஆகவேதான் பாரதியார் கவிதைகள் மொழியாக்கம்செய்யமுடியாத தன்மையுடன் இருக்கின்றனவாம்.
இந்த அம்சம் வேறு எந்த இந்தியக்கவிதையிலும் இல்லையா என்ன? அவை மொழியாக்கம் செய்யப்படவோ பொருள்கொள்ளப்படவோ இல்லையா? எவ்வளவு சாதாரணமாக ஒரு ஒரு பொதுமைப்படுத்தல் நிகழ்ந்து முடிகிறது இங்கே.
இந்தியமொழிகளின் கவிதைமரபு எப்போதுமே நிகழ்த்துகலைகளுடன் இணைந்தே இருந்தது. பிற்கால சம்ஸ்கிருத மகாகாவிய இயக்கம்தான் நிகழ்த்துகலைகளை விட்டு விலகி வந்த குறிப்பிட்த்தக்க இலக்கிய அலை. அதன் உறைந்த நிலைக்குக் காரணம் அதுவே என சம்ஸ்கிருத திறனாய்வாளர் சொல்வதுண்டு. நான் வாசித்தவரை வங்க, கன்னட கவிதைகள் எப்போதும் நிகழ்த்துகலைகளின் பகுதிகளாகவே இருந்துள்ளன. தாகூரும் குவெம்புவும் இசைநாடகங்களை அதிகமாக எழுதியவர்கள்.
பாரதியில் இருந்த அந்த நிகழ்த்துகலைத்தன்மை காரணமாக அது இந்திய அளவில் தொடர்புறுத்தப்படாது போயிற்று என்பதெல்லாம் என்னவகை வாசிப்பு என்றே தெரியவில்லை. மாறாக ஒரு சிறு நிகழ்த்துகலைக்கூறு இருந்தால்கூட சட்டென்று அக்கவிதை தொடர்புறுத்தலை நிகழ்த்துவதையே நாம் எந்த இந்தியமொழியிலும் காண்கிறோம்.
பாரதியின் இந்தவகை வசனக்கவிதைகள்தான் அவரது கவிதைகளிலேயே தமிழ்மொழிசார்ந்த தனித்தன்மைக்கு வெளியே செல்லக்கூடியவை. ஒரு பக்கம் அன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றிருந்த வால்ட் விட்மன் கவிதைகளின் நேரடிச்சாயல் கொண்டவையாக இருந்தன. இன்னொரு பக்கம் அன்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த வேதசூக்தங்கள் உபநிடத சூத்திரங்களின் பாணியால் பாதிப்படைந்தவையாக இருந்தன
பருப்பொருளை முன்னிலைப்படுத்திப் பேசும் பாரதியின் வசனகவிதைப்பாணி சாமவேதத்தின் ஆக்னேய காண்டத்தில் அக்னியை முன்னிலைப்படுத்தி அழைக்கும் பாடல்களின் அதே தொனி கொண்டது. அந்த வேதசூக்தங்கள் கூட ஒருவகையில் நிகழ்த்துக்கலைத்தன்மையுடன் [நடிப்பு, உச்சரிப்பு,சைகைகள்] பாடப்பட்டு வந்தவையே. காற்றை முன்னிலைபப்டுத்தி அழைக்கும் வேதவரிகளை பாரதியே கட்டுரைகளிலும் அந்த வசனகவிதையிலும் மேற்கோள்காட்டியிருக்கிறார்.
சரி, இந்த நிகழ்த்துகலை அம்சம் தமிழ் சங்கப்பாடல்களுக்கு மட்டுமே உரியது, இந்தியாவிலோ உலகிலோ எங்குமே இல்லாதது என்றே வைத்துக்கொள்வோம். சங்க அழகியலே பிராகிருதத்தில் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது என்ற உண்மை மிச்சம் கிடக்கிறது. கதாசப்தசதியின் பாடல்கள் சங்க இலக்கியத்தின் திணை,துறை வரையறைக்குக்கூட அடங்குபவை. ஆந்திரநாட்டு அகநாநூறு என்றே தமிழில் அவை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. [ முனைவர் மதிவாணன்] சங்க அழகியல் இந்தியாவின் எந்த மொழியிலும் ஏதேனும் வகையில் சென்றடைந்து வலுவான செல்வாக்கைச் செலுத்தியிருக்கும்.
இன்னொருபக்கம் நம் பக்தி இயக்க கவிதைகளின் அழகியல் புஷ்டிமார்க்கம் வழியாக எல்லா இந்திய மொழிகளிலும் சென்று ஆழமான பாதிப்பை செலுத்தியது. பத்து நூற்றாண்டுக்காலம் நீண்டு நின்ற ஒரு அலை அது. ஆந்திரத்தில் நம்மாழ்வார், ஆண்டாள் கவிதைகளை அப்படியே நம்மால் கேட்க முடியும். ஒரு வங்க பவுலுக்கும் நம் பக்தி இயக்கப்பாடல்களுக்கும் நிகழ்த்துகலைத்தன்மை அல்லது மனநிலையில் வேறுபாடே காணமுடியாது.
தமிழின் சுவர்களுக்குள் மட்டுமே அடங்கி, தமிழுக்கு வெளியே இந்திய இலக்கிய வாசகர்களால் அடையாளம் காணவே முடியாத தனித்தன்மை என ஏதும் இல்லை. ஏனென்றால் ஐந்து நூற்றாண்டுக்காலம் வடக்கிலிருந்து பௌத்தமும் சமணமும் இங்கே வந்து நிறைந்தன. பத்து நூற்றாண்டுக்காலம் பக்தி இயக்கம் இங்கிருந்து வடக்கே சென்று நிறைந்தது. இந்த பரிமாற்றம் நடந்துகொண்டே இருந்திருக்கிறது. இதன்வழியாக கொஞ்சம்கூட வெளியே செல்லாத ஏதோ ஒரு மர்மமான தனித்தன்மை -அது நிகழ்த்துகலைத்தன்மை!- சங்கமரபில் இருந்து பக்தி இயக்கம் வழியாக பாரதியில் வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி.
சரி, அப்படியே வைத்துக்கொண்டாலும் எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வதைப்பார்த்தால் அந்த ஒரே ஒரு அம்சம் அல்லாமல் பாரதியிடம் விசேஷமாக எதுவுமே இல்லை. அதை அறியாவிட்டால் ஒருவருக்கு பாரதி கவிஞனே இல்லை. இதுதான் சென்ற அரைநூற்றாண்டில் பாரதி மேல் வைக்கப்பட்ட மிகப்பெரிய வசை.
பாரதியின் வசன கவிதைகள் ஏற்கனவே இந்திய அளவில் இருந்துவந்த ஒரு விரிவான கவிதைக்கான சொற்களனில்தான் சென்று சேர்கின்றன. அவற்றின் ஐரோப்பிய அம்சமும் வைதிக அம்சமும் கவிதையை பொருள்கொண்டு ரசிக்கும் பொதுவான இந்திய பண்பாட்டு-மொழிப்புலனுக்கு எளிதில் தொட்டுணரக்கூடியவையாகவே உள்ளன.
ஆம், எந்தக்கவிதையிலும் ஓர் அம்சம் மொழியாக்கத்தில் விடப்படும். பழைய வரையறையைச் சொல்லவேண்டுமென்றால் 'முழுக்க மொழிபெயர்க்கப்பட சாத்தியமானதும் முழுக்க மொழிபெயர்க்கப்பட சாத்தியமற்றதும் நல்ல கவிதை அல்ல'. நல்ல கவிதை வாசகன் அந்த விடப்படும் அம்சத்தை கருத்தில்கொண்டே கவிதையை வாசிப்பான். அதை அவனால் உய்த்துணர்ந்து வந்தடைந்துவிடவும் முடியும்.அப்படித்தான் நாம் பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பிய கவிதையையும் பத்தாம்நூற்றாண்டு சீனக்கவிதையையும் வாசிக்கிறோம்.
பாரதி கவிதைகளைவிட நிகழ்த்துகலை அம்சம் கொண்டவையும், பாரதியில் இருந்த நவீனக்கூறு சற்றும் இல்லாதவையுமான சங்கப்பாடல்களையும் ஆழ்வார் பாடல்களையும் ஏ.கெ.ராமானுஜன் மொழியாக்கத்தில் வாசித்தவர்கள் அந்த கவிதைகளை வந்தடைய முடிந்தது. அவற்றை சர்வதேச கவிதையரங்குகளில் முற்றிலும் அன்னியமான பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் ரசிப்பதை நான் கண்டிருக்கிறேன். அவற்றைத்தான் பாரதிக்கு முன்னோடிகளாக எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்கிறார்.
மரபான தமிழ் பக்தி கவிதைகளில் உள்ள இறைவனை முன்னிறுத்தி வேண்டிக்கொள்ளும் முறை பாரதியில் தனக்குத்தானே வேண்டிக்கொள்ளும் போக்காக மாறியிருப்பதை சுட்டி அது ஒரு மகத்தான தருணம் என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி. அது நல்ல கவிதை என அவர் நினைத்தால் அது வேறு. ஆனால் 'தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவ குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்ற மகத்தான தருணமது' என்கிறார் அவர்.
தமிழ் இலக்கியவரலாற்றிலேயே தன் அகம் நோக்கி பேசும் கவித்துவக் குரலே இல்லையா என்ன? திருமூலரில் இருந்து வள்ளலார் வரை? அகம் என்பதை பாரதி தமிழில் கட்டமைத்தார் என்று சொல்லும் வரியை நினைத்துக்கொண்டு நெடுநேரம் அமர்ந்துவிட்டேன்.
பாரதியின் காலகட்டத்தில்தான் தமிழனின் நவீன சுயம் உருவாகிவந்தது எனலாம். அதில் அவரது பங்களிப்பு முக்கியமானது என்பதுதான் என் எண்ணம். அதை சொல்லியே இந்த விவாதத்தை ஆரம்பித்தேன். அந்த நவீன சுயம் வெளிப்படும் பல வரிகளை நாம் காணலாம். ஆனால் அது முழுக்க முழுக்க அவருடைய கவிதையின் சிருஷ்டி என்று சொல்வதை கொஞ்சம் அதிகமாகவே எம்புதல் என்றுதான் சொல்வேன்.
மேலும் ஒன்று, பாரதியின் அந்த வரிகள் எழுதப்பட்டபோது பிரம்மசமாஜம் ஒரு நிறுவனமாக வலுப்பெற்றுவிட்டிருந்தது. பாரதி அதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தான். பிரம்மசமாஜம் உருவற்ற அகவய வடிவமான கடவுளை உருவகம் செய்து அதை வழிபட்டது. பிரம்மசமாஜத்தின் பாடல்கள் பலவற்றில் கடவுள் இல்லாமல் தன் அகத்துடன் பேசிக்கொள்ளும் இதற்கிணையான வேண்டுதல்கள் பல உள்ளன. அந்த மனநிலையை நான் அன்று இந்தியா முழுக்க உருவாகிவந்த ஆழ்நிலைசுயம் என்ற கருத்தின் ஒரு வெளிப்பாடாகவே காண்கிறேன்
நான் பார்ப்பதற்கும் எம்.டி.முத்துக்குமார்சாமி பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? நான் பாரதியில் உள்ள தனித்தன்மைகளை ஐரோப்பியமரபு, வைதீகஞானமரபு, தமிழ் அழகியல் மரபு, அன்று உருவாகிவந்த நவீன இந்திய மறுமலர்ச்சி போக்கு ஆகியவற்றின் பாதிப்புகளால் உருவானவை என்று காண்கிறேன். எம்.டி.முத்துக்குமார்சாமி அவை தமிழ் மரபில் இருந்து மட்டுமே உருவானவை என்றும் ஆகவே பிற இந்தியச்சூழல்களுடன் அது உரையாடவே முடியாது என்றும் நிறுவ முயல்கிறார்.
கடைசியாக எம்.டி.முத்துக்குமார்சாமி சொல்வது பாரதி நாட்டார்மரபை நவீன வடிவங்களுக்குள் உள்வாங்குகிறார் என்பது. எல்லா இந்திய மொழிகளிலும் பாரதிக்குச் சமானமான காலகட்டத்தில் கவிஞர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். குவெம்பு,ஆசான், தாகூர் எல்லாருமே. உதாரணமாக தாகூர் பவுல் போன்ற வங்க நாட்டார்பாடல்களையும் வங்காள நாட்டார் இசைநாடக மரபான ஜாத்ராவின் வடிவத்தையும் நவீனகவிதையால் மறு ஆக்கம் செய்வதை சுட்டிக்காட்டலாம்.
இதற்கு ஒரு வரலாற்றுக்காரணம் உண்டு. இந்தியாவெங்கும் பதினெட்டாம் நூற்றாண்டு முதலே செவ்வியல் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சியால் நிலப்பிரபுத்துவ அமைப்பு அழிக்கப்பட்டு செவ்வியல்கலைகளை பேணுபவர்கள் அழிந்ததே காரணம். அதன்பின்னர் செவ்வியலின் தேங்கிப்போன சிறுசிறு வடிவங்களே நீடித்தன. நம் சிற்றிலக்கியங்கள் போலஆனால் நாட்டாரிலக்கியம் அதே வீச்சுடன் நீடித்தது
சிறிதுகாலம் கழித்து பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய நவீனக்கல்வியால் ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகி வந்தது. ஜனநாயக யுகத்தின் தொடக்கம் நிகழ்ந்தது. அப்போது உருவானவர்கள் பாரதி தாகூர் போன்ற நவகவிஞர்கள். அவர்கள் அந்த படித்த நடுத்தரவர்க்கத்தை நோக்கி பேசியவர்கள். ஒருபக்கம் அவர்கள் நவீனத்துவத்தை கொண்டுவந்தார்கள். இன்னொருபக்கம் அவர்கள் மரபை திருப்பி எழுப்ப முயன்றார்கள். தேங்கிப்போன செவ்வியலை விட உயிர்துடிப்புள்ள நாட்டார் மரபு அவர்களுக்கு அதிக ஈர்ப்புடையதாக இருந்தது.
மேலும் இந்த புதிய ஜனநாயக யுகத்தில் கவிதை பெருவாரியான மக்களிடம் பேசவேண்டியிருந்தது. பயிற்சி பெற்ற ஒரு வட்டத்துடன் அல்ல. அதற்கு ஜனநாயக விழுமியங்களை முன்வைக்கவேண்டிய கடமை இருந்தது. அதற்கு அக்கவிதை நாட்டாரியலை உள்வாங்கியதாக இருப்பதே உவப்பானது. அவை எல்லாமே அச்சுக்காக எழுதப்பட்ட அந்தரங்க வாசிப்புக்கு உகந்த context free modern forms தான். நிகழ்த்துகலை அம்சம் , நாட்டார் அம்சம் அவற்றில் ஒரு அன்றைய பொதுவாச்கர் எளிதில் அடையாளம் காணும் ஒரு நுண்அழகியல் கூறாக உருமாற்றம் அடைந்தது. பாரதி செய்ததும் அதுவே.
ஆனால் பாரதியின் பெரும்பாலான கவிதைகளில் நாட்டார் அழகியல் மறு ஆக்கம்செய்யப்படவே இல்லை என்பதே உண்மை. கோபாலகிருஷ்ண பாரதியின் 'மாடுதின்னும் புலையா உனக்கு மார்கழி திருநாளோ?'என்ற பாடலுக்கும் பாரதி அதை மறு ஆக்கம் செய்த 'தொண்டு செய்யும் அடிமை – உனக்குச் சுதந்திர நினைவோடா?' என்ற பாடலுக்கும் என்ன அழகியல் வேறுபாடு உள்ளது? போலி மிகப்பெரும்பாலான பாடல்களை சம்பிரதாயமான கீர்த்தனை வடிவிலேயே பாரதி எழுதியிருக்கிறார். விதிவிலக்கானவை சிலவே. அவை சிறந்த கவிதைகள் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை.
என் பார்வையில் தமிழ் நவீனத்துவத்தின் தெளிவான ஒரு தொடக்கப்புள்ளி என பாரதியைச் சொல்லலாம். அவரே அந்த வரிசையில் முதன்மையானவர் என்றும் சொல்வேன். ஆனால் அது அவரது சிருஷ்டி மட்டுமே என்பது இலக்கியவரலாற்று நோக்கே அல்ல. நவீனத்துவத்தின் தொடக்கத்தை இந்த பின்நவீனத்துவர்களை காட்டிலும் நவீனத்துவரான க.நா.சுவே தெளிவாக விவாதித்திருக்கிறார். க.நா.சு முன்வைக்கும் முன்னோடிகள் பலர்.
மரபான மதத்தில் இருந்து நவீன ஆழ்நிலை ஆன்மீகம் ஒன்றை உருவாக்கி அதற்கான நவீன ஜனநாயகத்தன்மை கொண்ட கவிமொழியையும் உருவாக்கிய வள்ளலார் முக்கியமான முன்னோடி என்கிறார் க.நா.சு. பாரதியின் கவிமொழியளவுக்கே ப்ல வகையிலும் நவீனமான கவிமொழியை வள்ளலார் பல கவிதைகளில் அடைந்திருப்பதை காணலாம். மரபான மதக்கூறுகளை உதறி நவீனஆன்மீகத்தை முன்வைத்தது, நாட்டார் பண்புகளை உள்வாங்கி நவீனக் கவிமொழியை அமைத்தது என பாரதிக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரங்களில் பெரும்பகுதியை வள்ளலாருக்கும் கொடுக்கலாம்.
பாரதியை இன்று இவ்வாறு மிகையாக தூக்கி கொண்டு முன்னே நிறுத்தும்ப்போது மௌனமாக வள்ளலார் கீழே இறக்கப்படுகிறார். இந்தவகையான ஒற்றைப்படையாக்கப் போக்குகளை, இதிலுள்ள அதிகார உருவாக்கத்தை எதிர்த்தே பின்நவீனத்துவ அணுகுமுறை மேற்கே உருவானது. எம்.டி.முத்துக்குமார்சாமி போன்றோரால் எனக்களிக்கப்பட்டுள்ள அடையாளத்தைக்கொண்டு பார்த்தால் எம்.டி.முத்துக்குமார்சாமி சொன்னதையெல்லாம் நான் சொல்ல நான் இப்போது சொல்பவற்றை எம்.டி.முத்துக்குமார்சாமி சொல்லியிருக்கவேண்டும். எப்படி இது இப்படி தலைகீழாக ஆனது தெரியவில்லை.
நாட்டார் அழகியலை செறிவான நவீன கலையனுபவத்துக்கு அருகே கொண்டு வந்த கோபாலகிருஷ்ணபாரதியையும் க.நா.சு தமிழ் நவீனத்துவத்தின் சிற்பிகளில் ஒருவராக குறிப்பிடுகிறார். ராஜம் அய்யர், அ.மாதவையா வ.வெ.சு அய்யர் ஆகியோரின் பங்களிப்பையும் இணைத்துக்கொண்டு ஒரு கூட்டான அறிவியக்கமாகவே அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பேன்.
இது இலக்கியத்தளத்தில் மட்டுமே. அரசியலையும் உள்ளிட்ட தளத்தில் என்றால் சிங்காரவேலரையும் , அயோத்திதாசரையும் உள்ளடக்கியே நாம் தமிழின் நவீனத்துவத்தைப்பற்றி பேசமுடியும். அதுதான் நான் சொல்லவரும் விவாததன்மை கொண்ட மதிப்பீடு. எம்.டி.முத்துக்குமாரசாமி பாணி பின்நவீனத்துவ நோக்கில் பாரதியில் தமிழ் நவீனத்துவம் பிறந்த அந்த சரியான பிரசவநேரத்தை கண்டுபிடித்து ஜாதகம் எழுதுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பின் நவீன அணுகுமுறையில் அதற்கு சந்துவழி இருப்பதாகவும் நான் கேள்விப்பட்டதில்லை.
ஆயினும் பாரதியை தமிழ் நவீனத்துவத்தின் படைப்பாளி என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவரைப்போன்ற ஒரு கவிஞனிலேயே அந்த திருப்பம் படைப்பெழுச்சியுடன் நிகழ்கிறது. அதுவே தீவிரமான முன்னுதாரணமாக ஆகிறது. அவர் தமிழ் உரைநடையின் சிற்பி என்பதிலும் தயக்கமில்லை. அவரில்தான் அது உச்சம் கொண்டது.
இக்காரணத்தால் பாரதி மகாகவி என்றால் கன்னடர்களுக்கு குவெம்பு மகாகவி. மலையாளிகளுக்கு ஆசானும் வள்ளத்தோளும் மகாகவிகள். இந்தியில் மகாவீர் பிரசாத் திவிவேதி அவர்களுக்கு மகாகவி. அப்படி அவர்களின் பாடநூல்கள் சொல்லவும் செய்கின்றன. கெ.எம்.ஜார்ஜ் தொகுத்த இந்திய ஒப்பிலக்கிய தொகைநூல்களில் எம்.டி.முத்துக்குமார்சாமி பாரதிக்கு அளிக்கும் இதே சாதனைப்பட்டியல் இந்த கவிஞர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்படித்தான் எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதியையும் சொல்கிறார் என்றால் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
நான் முன்வைக்கும் அளவுகோல்கள் வேறு. பாரதி மிகச்சிறந்த கவிதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறான் என்றே நானும் கொள்கிறேன். நான் பேசிக்கொண்டிருப்பது க.நா.சு முன்வைத்த அளவுகோலைக்கொண்டு. கவிதை என்ற அளவிலேயே நம்முடன் பேசக்கூடிய படைப்புகளைப்பற்றி. ஷேக்ஸ்பியரும் கதேயும் வேர்ட்ஸ்வெர்த்தும் கம்பனும் காளிதாசனும் நம்மை எங்கே தொடுகிறார்களோ அங்கே சென்று தொடும் கவிதைகளைப்பற்றி. அத்தகைய கவிதைகளை பாரதி மிகக்குறைவாகவே அடையமுடிந்திருக்கிறது, அவரை ஒரு மகாகவி என்று வகுக்க அவை போதாது என்பதே என்னுடைய தரப்பு
பாரதியை மகாகவி என்றும் யுககவி என்றும் வகுத்து எப்போதைக்குமாக வகுக்கும் போக்கு நல்லதல்ல. அதன் வழியாக நாம் பாரதியின் கவித்துவம் மீது நம் நுண்ணிய ரசனையை செலுத்த முடியாமலாகிறது. பாரதிக்கு முந்தைய கவிதைகளை அணுக அது தடையாகிறது. பாரதிக்குப்பின் உருவாகி வந்த நவகவிதையின் அழகியலே நமக்குப் பிடிகிடைக்காமலும் போகிறது. அவ்வடையாளங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ச்சியாக மறுபரிசீலனைசெய்துகொள்வதன் வழியாகவே இலக்கிய மதிப்பீடுகள் உயிர்ப்புடன் இருக்கமுடியும். இலக்கிய மதிப்பீடு எதுவும் எப்போதும் ஒரு விவாதநிலையிலேயே இருக்கும், இருக்கவேண்டும் என்று எப்போதும் சொல்வதை இப்போதும் சொல்கிறேன்
இந்த அளவீடுகளை தரவரிசையை ஏன் உருவாக்குகிறேன்? ஏன் உருவானவற்றை மறுபரிசீலனை செய்கிறேன்? எம்.டி.முத்துக்குமார்சாமி சொல்வதுபோல இது தீர்ப்போ சுயவலியுறுத்தலோ அல்ல. ரசனை விமர்சனம் எப்போதுமே முதற்பேரிலக்கிய மரபு [canon] ஒன்றை நிறுவிக்கொண்டுதான் பேசும். அதுவே அதன் வழிமுறை. அந்த முதற்பேரிலக்கிய மரபிலிருந்துதான் அது தன் அளவுகோல்களை உருவாக்கிக் கொள்ளும். ஒப்பிடுவதன் மூலமே அது தன் தரமதிப்பீடுகளை உருவாக்கும்
முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்கும்போது ஒவ்வொரு படைப்பாளியையும் அவருக்கான இடத்தில் அமரச்செய்துதான் அந்த அமைப்பை உருவாக்க முடியும். வள்ளுவன்போல் கம்பன்போல் இளங்கோவைப்போல் என பாரதி செய்தது அதையே. நான் முன்வைத்த அந்த இடவரையறைகள் என்னுடையவை அல்ல, தமிழில் தொடர்ந்து நிகழ்ந்துவந்த ரசனைசார்ந்த விமர்சன மரபின் நீட்சியாகவே நான் பேசுகிரேன் என்பதை தெளிவாகச் சொல்லியே நான் ஆரம்பித்தேன்
கபிலனும் வள்ளுவனும் ஔவையும் கம்பனும் கொண்ட ஒரு முதற்பேரிலக்கிய தொகையை உருவாக்கும்போது அதில் பாரதி எங்கே வருகிறார் என்பதே இந்த விவாதத்துக்கான அடிப்படைக் கேள்வி. தாகூரும் குவெம்புவும் ஆசானும் மிர்சாகாலிப்பும் காளிதாசனும் பவபூதியும் கொண்ட ஒரு முதற்பேரிலக்கியத்தொகையை உருவாக்கும்போது பாரதி எங்கே வருகிறார் என்பது அடுத்த வினா. ஷேக்ஸ்பியரும் கதேயும் தாந்தேயும் து ஃபுவும் அடங்கிய முதற்பேரிலக்கிய தொகையில் எங்கே வருகிறார் என்பது அடுத்த வினா.
இந்தச் செயல்பாட்டை ரசனை விமர்சனம் ஓயாது செய்துகொண்டிருக்க வேண்டும். உலகமெங்கும் ரசனைவிமர்சனத்தின் வழியே அதுதான். ஹரால்ட் ப்ளூமோ ஃப்ராங் கெர்மோடோ ஷேக்ஸ்பியரை மையமாகக்கொண்ட ஒரு முதற்பேரிலக்கியதொகையை நிறுவுவது அதற்காகவே. வ.வெ.சு அய்யரும், தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், வையாபுரிப்பிள்ளையும், ரா.ஸ்ரீ.தேசிகனும்,க.நா.சுவும் செய்தது அதையே. ஒரு தனி விமர்சகனின் விசித்திரமான அகங்கார வெளிப்பாடு அல்ல அது. அது ரசனை விமர்சனத்தின் அடிப்படைச் செயல்பாடு. நாளை இன்னொரு விமர்சகன் இதை முன்னெடுப்பான்.
சமகாலத்து பிற கவிஞர்களிடமிருந்து பாரதியை முதல்பெரும் கவிஞனாக மேலே தூக்கி நிலைநிறுத்தியது வ.வெ.சு.அய்யரில் ஆரம்பிக்கும் ரசனை விமர்சனம்தான். எந்த அமைப்புவாத அலசலும் அல்ல. அவர்கள் கம்பனை முதன்மையாகக் கொண்ட முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்கி அதனடிப்படையிலேயே அதைச் செய்தார்கள். அதே அளவுகோலின்படித்தான் இன்னும்பெரிய ஒரு முதல்பேரிலக்கியத்தொகையின் பின்னணியில் பாரதியை மறுவரையறை செய்ய நேர்கிறது.
அதாவது எந்த ரசனைவிமர்சனம் பாரதி மகாகவி என்றதோ அதே ரசனை விமர்சனம்தான் அப்படி சொல்லமுடியுமா என்ற ஐயத்தை எழுப்பி விவாதிக்கிறது. மகாகவி என்று வகுக்கும்போது அது செல்லுபடியாகக்கூடியதும் ஐயப்படும்போது அர்த்தமற்றதுமாக ஆகுமா என்ன?
ரசனை விமர்சனத்தின் வழி முதற்பேரிலக்கியத்தொகையை வரையறைசெய்து நிலைநாட்டுவது என்பதனாலேயே அதனுள் நிகழும் எல்லா சலனங்களும் அந்த முதற்பேரிலக்கிய உருவகத்தை மாற்றுவதற்கானவையாகவே அமைய முடியும். முதற்பேரிலக்கியம் என்பது புனிதமான மதநூல் அல்ல. அப்படி நம்ப ஆரம்பிக்கையில் ரசனை தேக்கமுறுகிறது. எல்லா முதல்பேரிலக்கியங்களும் அழகியல்நோக்கில் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யப்பட்டபடியே இருக்கவேண்டும். அரசியல்,சமூகவியல் நோக்கில் அவை தொடர்ந்து மறுபரிசீலனைசெய்யப்படவேண்டும்.
நம் சூழலில் எப்போதுமே அந்த மறுபரிசீலனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் கந்தபுராணம் ஒரு மாபெரும் முதல்பேரிலக்கியம். இன்று அந்த இடத்தில் அது இல்லை. கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் என சொல்லும்போதே பாரதி அன்று அவர்களுக்கும் மேலான இடத்தில் இருந்த மாணிக்கவாசகரை இறக்கி விடுகிறான். கம்பராமாயணம் மீது நடந்த விவாதங்களை இன்று குறள்மேல் நடக்கும் எதிர்விவாதங்களை எல்லாமே நான் இவ்வகையில்தான் அணுகுகிறேன்.
ரசனை விமர்சனத்தில் எந்த ஒரு விமர்சகனின் பங்களிப்பும் ஏதோ ஒருவகையில் முதற்பேரிலக்கியத்தின் அமைப்பில் உருவாக்கும் மாற்றமாகவே இருக்கும். அதன் வழியாக தரவரிசையில் அவன் செய்யும் மாறுதலாகவே நிகழும். அதன் வழியாகவே அவன் இலக்கியவாசிப்பில் ஒரு வழியை திறக்கிறான்.எனக்கும் பாரதி எழுச்சியை ஊட்டும் கவியே. ஆனால் இந்த விவாதம் வழியாக நான் முன்வைப்பது இன்னும் விரிவான இலக்கிய அணுகுமுறையை. உருவாக்க நினைப்பது இன்னும் கூரிய ரசனையை.
எம்.டி.முத்துக்குமாரசாமி, அறிமுகம்
[எம்.டி.முத்துக்குமார்சாமி நெல்லையைச் சேர்ந்தவர். இலக்கியத்திலும் தத்துவத்திலும் முதுகலை பட்டம் பெற்றவர். பாரதக்கூத்து -குறியியல் ஆய்வு என்ற தலைப்பில் நாட்டாரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் நாட்டாரியல் பேராசிரியராக பணியாற்றினார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் நியூடெல்லி அலுவலகத்தில் நாட்டாரியல் ஆலோசகராக பணியாற்றினார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் தேசிய அளவிலான நாட்டாரியல் வளார்ச்சி திட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
1997 ல் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் முழுமையான நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் செண்டர் என்ற அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர்களில் ஒருவர். தொடக்கம் முதல் அதன் செயல்அறங்காவலராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். எம்.டி.முத்துக்குமாரசாமி அடிப்படையில் இலக்கிய விமர்சகர், அமைப்புவாத ஆய்வாளர். சில்வியா என்றபேரில் கதைகள் எழுதியிருக்கிறார். பிரம்மனைத்தேடி என்ற பேரில் தொகுதியாக வெளிவந்துள்ளது. அவரது நவீன நாடகம் காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்து ஒரு முன்னோடி முயற்சியாக பெரிதும் பாராட்டப்பட்டது]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 18, 2011
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…
அன்புள்ள எம்.டி.எம்
உங்கள் விலகல் வருத்தமளிக்கிறது.
நான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கவில்லை, எப்படி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என் கருத்துக்களுக்கான பின்னணி என நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப்போலவே நானும் நினைக்கிறேன். அதையும் கருத்தில்கொண்டு ஆராய்கிறேன்,அவ்வளவுதான்
என்னைப்பொறுத்தவரை தனிவாழ்க்கை,கருத்துக்கள் என வேறுபாடு ஏதும் இல்லை. ஆனால் பிறரது அந்தரங்கவாழ்க்கையை நான் அளவுகோலாகக் கொள்வதில்லை. உங்கள் அந்தரங்க வாழ்க்கைக்குள் எவ்வகையிலும் நான் நுழையவே இல்லை என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.
ரசனை விமர்சனம் இறந்தகாலத்தில் மேலாதிக்கத்தை உருவ்க்கியதுதான் என நானும் அறிவேன். அதை மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறேன். ஆனால் அந்த மேலாதிக்கத்துடன் விவாதிப்பதற்கான வெளி அதில் எப்போதும் உள்ளது என்பதே என் எண்ணம். ஒரு நூற்றாண்டுக்குள் ரசனைவிமர்சனம் முன்வைக்கும் canon மாறிவிடுவதை அதற்கு ஆதாரமாக கொள்வேன். எப்படிக் கந்தபுராணம் மூலப்பெரும்படைப்பு என்ற நிலையில் இருந்து விலகியது, எப்படி மதநூல்களின் இடம் கீழிறங்கியது என நாம் கண்டுகொண்டிருக்கிறோம்
அத்தகைய மேலாதிக்கத்தை எந்த அறிவுச்செயல்பாடும் எப்போதும் உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறது. ரசனை விமர்சனம் எப்போதுமே diachronic அணுகுமுறையையே கொண்டிருக்கிறது. வேறுவழியில்லை ஏனென்றால் அது canon னை உருவாக்கி நிலைநாட்டியாகவேண்டும். பின்நவீனத்துவ முறை synchronic முறையைக் கைக்கொள்ளலாம். ஏனென்றால் அது எதிர்நிலை மட்டுமே எடுத்தால்போதும். கலைத்தாலே போதும்.
இரு அணுகுமுறைகளுமே தங்களுக்கான எல்லைகளும் வரையறைகளும் கொண்டவை என்பதே என் எண்ணம். இரண்டும் ஒன்றை ஒன்று நிரப்பக்கூடும். நீங்கள் என் அணுகுமுறையை மறுக்கலாம். ஆனால் அதைப் பிற்பட்டது, காலாவதியானது என முத்திரைகுத்துவதை என்னால் ஏற்க முடியாது. அது அதிகாரச்செயல் உங்கள் முறை அதிகாரமற்றது என்பதையும் ஏற்கமுடியாது. இதுவே என் தரப்பு.
நீங்கள் எழுதுவது எதையும் தொடர்ந்து வாசித்து வருபவன். இனிமேலும் வாசிப்பேன். சொல்லப்போனால் சில்வியா மீண்டு வரவேண்டுமென விழைபவர்களில் ஒருவன்.
நீங்கள் நிறுத்திக்கொள்வதனால் நானும் நிறுத்திக்கொள்கிறேன். நாம் பரஸ்பர புரிதலுடன் பிறகெங்காவது விவாதிக்க முடியலாம். ஆனால் நீங்கள் என் படைப்புகளை வாசிக்கவேண்டும் விமர்சிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கிய ஆக்கத்துக்கும் கருத்துக்களுக்கும் உள்ள ஊடாட்டத்தின் மர்மங்களையும் தற்செயல்களையும் புரிந்துகொள்ளாத கோட்பாட்டு வாசிப்புகளால் எப்போதுமே சோர்ந்திருக்கிறேன். அதுவே உங்களிடம் என்னை எதிர்பார்க்கச் செய்கிறது.
என்னுடைய புனைவெழுத்து எதையும் நான் எடுத்து முன்செல்வதில்லை. ஒன்றை எழுதியதுமே அதை உதறி முன்செல்பவனாகவே இருந்திருக்கிறேன். அபுனைவு எழுத்துக்களையும் மறுபரிசீலனைசெய்கிறேன். அதற்காக உங்கள் எழுத்துக்களை கவனிக்கிறேன்.
இலக்கியக் கொள்கைகளைப் பொறுத்தவரை ஓர் எழுத்தாளன் செல்லக்கூடிய எல்லை ஒன்று உள்ளது. அதைச் சொல்லியே நான் ஆரம்பிக்கிறேன். நீங்கள் வாசிப்பதுபோல மூலநூல்களை முழுமையாக வாசிக்க முடியாது, கூடாது. அந்த எல்லைக்குள் நின்றே நான் பேசுகிறேன், நிபுணனாக அல்ல. ஆகவேதான் இந்த விவாத்திலேயே உங்களிடமிருந்து தெரிந்துகொள்பவனாக என்னை முன்வைத்தேன்
நவீனத்தமிழின் முக்கியமான சிந்தனையாளன் எனநான் நினைக்கும் ஒருவர் நீங்கள். நீங்கள் புண்பட நான் காரணமாகியிருந்தால் மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன். நான் உங்கள்வரிகளால் புண்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் – நாம் பற்றிய உங்கள் விளக்கங்களுக்கு முன்னரேகூட. அந்தத் தெளிவுபடுத்தலால் உங்கள் வாசகர்கள் புரிதலை அடைந்திருப்பார்கள்.
உங்கள் விலகல் உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்
எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு
கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
சென்ற வாரம் தொழில் நிமித்தம் சீனா சென்றிருந்தேன். குறிப்பாக ஷாங்காய் மற்றும் பீஜிங் நகரங்கள். எனக்கு சாதாரணமாகவே சீனாவின் கட்டுப்பாடு மிக பிடிக்கும். ஒரு பத்து பதினைந்து வருடங்களில் இரு நகரங்களை இப்படி மாற்ற முடியும் என்பதற்கு இவ்விரு நகரங்களும் ஒரு எடுத்துக்காட்டு. நகர அமைப்பு அதற்கான உள்கட்டமைப்புகள் சாலைகளின் மேன்மை வாகன நடமாட்டத்தில் ஒரு கட்டுப்பாடு ,பொது இடங்களில் மக்கள் நடத்தையில் ஒரு ஒழுக்கம். ஆனால் சாதாரண மக்கள் சீன கலாச்சாரத்திலிருந்து நகர்ந்து விட்டதாகத்தான் நான் பார்கிறேன். இந்த நகரங்களில் தனி மனித சுதந்திரம் ஓரளவு உள்ளது. நமக்கு வேண்டியது(!) கிடைகிறது. நம் நாட்டை ஒத்துப் பார்க்கையில பல வகையில் மேன்மை அடைந்திருக்கிறார்கள்.
அன்புடன்,
வே. விஜயகிருஷ்ணன்
அன்புள்ள விஜயகிருஷ்ணன்
மிகத்தாமதமான பதில். மின்னஞ்சல் எங்கோ சென்று மாட்டிக்கொண்டது
சீனாவைப்பற்றிய இருவேறு பிம்பங்கள் அளிக்கப்படுகின்றன. சீனாவின் பெரும்பாலான தொழில்பேட்டைகளும் குடியிருப்புநகரங்களும் பார்வையாளர் அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே மிகப்பெரிய அளவில் அரசாங்க அடிமைமுறையே நிலவுகிறது என்கிறார்கள். மக்கள் இடம்பெயர்வது முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
அந்த நிழலான இடங்களில் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது, இந்த வளர்ச்சியின் பயன் அவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்ற புரிதல் இல்லாமல் நாம் பார்க்க அனுமதிக்கப்படும் நகரங்களை வைத்து ஒரு முடிவுக்கு வருவது சரியா என்று தெரியவில்லை. வளர்ச்சி என்பது அநீதியின் மேல் கட்டப்பட்டது என்றால் அது சரியல்ல.
சீனாவில் என்ன நிகழ்கிறது என்பதைப் பெரும்பாலும் குறைவான கூலியில் மானுட உழைப்பைப் பயன்படுத்தும் அவர்களின் உற்பத்திமுறையில் இருந்தே ஊகிக்க முடியும். உழைப்பாளர்களின் வாழ்க்கைத்தரம் மேலே சென்றால் கூலியும் மேலே சென்றாகவேண்டும். அது பொருளின் விலையைக் கூட்டும். அவ்வாறு கூடினால் சீனா இன்றைப்போல உலகப்போட்டிக்கு சல்லிசான விலைக்குப் பொருளைக்கொண்டுவந்து கொட்டமுடியாது.
ஜெ
மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார் அவர்களுக்கு .,
தங்கள் நலம் அறிய ஆவல்.நேற்று அசோகமித்திரன் சிறுகதை தொகுப்பில் இருந்து "விரல்" சிறுகதையைப் படித்தேன். இதுவரை மும்முறை இன்னும் வேறு தொடரும் என்று நினைக்கிறேன். அது காட்டும் காட்சியில் இருந்து விடு பட முடியவில்லை சார் இதில் வரும் ராமசாமியின் மீது ஆழமான பரிவு, (சரியான வார்த்தையா என்று தெரிய வில்லை ) ஒவ்வொரு தடவை முடித்தும் சில கணங்களுக்கு சோர்வு நீடித்தபடி செல்கிறது. ஏன் என்று தொகுக்கும்போது எனக்கு எப்போவோ படித்த அண்ணாச்சி ராஜமார்த்தாண்டனுக்கு நீங்கள் எழுதிய அண்ணாச்சி தொகுப்பு ஒரு முக்கிய காரணம் என்று படுகிறது. அவரைப் பற்றித் தகவல் ரீதியா பெரிதும் ஏதும் இப்போது நினைவில் இல்லை. ஆனால் இந்தச் சிறுகதையைப் படிக்கும் போது மீண்டும் மீண்டும் அவரே மனதில் வந்து போகிறார். ஏன் என்று தெரியவில்லை. மீண்டும் அண்ணாச்சி தொகுப்பைப் படிக்க வேண்டும்
தினேஷ் நல்லசிவம்
அன்புள்ள தினேஷ்
இந்தக்கதையின் கதாபாத்திரம் ஜி.நாகராஜன் என்று நினைக்கிறேன். எழுதமுடியவில்லை என்ற அந்தப் புலம்பல்தான் கதை. ஆனால் அவர் ஒன்றுமே எழுதுவதில்லை என்ற குறிப்பும் கதையில் உள்ளது. கதவிடுக்கில் பட்டு நசுங்கிப்போய் எழுதமுடியாமலானது விரல் மட்டுமல்ல. ஆன்மாவின் ஏதோ ஒரு உறுப்பும்கூடத்தான்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
நகுலனும் சில்லறைப்பூசல்களும்
அசோகமித்திரன் பேட்டி
அசோகமித்திரன் என்னைப்பற்றி…
அசோகமித்திரனுக்கு சாரல் விருது
மாவோயிச வன்முறை 4
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2
கடைத்தெருவை கதையாக்குதல்…
அசோகமித்திரனின் 'பிரயாணம்'
கடிதங்கள்
அசோகமித்திரன்
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சனத்துக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு குழப்பம் எஞ்சுகிறது. அவரது இன்றைய கருத்துக்களைப் பழைய கருத்துக்களின் வளர்ச்சி அல்லது நீட்சியாக எடுத்துக்கொள்ளலாமா இல்லை புத்தம்புதியதாகப் பிறந்துவிட்டாரா என்பதுதான் அது. எதற்கு வம்பு என்று இப்போதுள்ள எம்.டி.முத்துக்குமாரசாமியையே எடுத்துக்கொண்டு பேசுகிறேன்
முதலில் அவர் என்னுடைய விமர்சனத்தை நிராகரிக்கும் பொருட்டு எழுதியவற்றை அவரைப் புரிந்துகொள்ள அளவுகோலாக எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைப்படுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை என்று சொல்லும் எம்.டி.முத்துக்குமாரசாமி அதற்கு அளிக்கும் காரணங்களைப் பார்த்து தாமிரவருணி கால்நூற்றாண்டாக குளமாகவே தேங்கி விட்டதா என்ற பிரமிப்பையே அடைந்தேன்.
ரசனை விமர்சனம்
எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்கிறார் 'ரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டுவருகிற விமர்சன முறையாகும். தரம் வாய்ந்த பொருள் அதிகமதிப்பீடு உடையது அதிக எண்ணிக்கையில் அது உற்பத்தி செய்யப்படவேண்டும் அதன் தர நிர்ணயம் ரசனையை அறிந்த நிபுணர்களுக்குத்தான் சாத்தியம் ஆகிய மதிப்பீடுகள் சந்தை விதிகளில்லாமல் வேறு என்ன?'
நான் அறிந்தவரை தமிழில் ரசனைவிமர்சனம் என்பது இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வருடக்காலமாக செயல்பட்டு வருகிறது. உலகமெங்கும் இலக்கியம் உருவான நாள் முதலே அதுவும் உள்ளது. ஏனென்றால் அது மிக இயல்பானது. அவற்றின் வெளிப்பாட்டு முறை மட்டுமே காலந்தோறும் மாறிக்கோண்டிருக்கிறது.
இலக்கியப்படைப்புகள் முதன்மையாக ரசிப்பதற்காகவே எழுதப்படுகின்றன. அதை நயம்பாராட்டல் என்றும் ஆஸ்வாதனம் என்றும் நாம் சொல்லிவந்திருக்கிறோம். ரசித்தபின் ரசனையைப் பகிர்ந்துகொள்வதும், அந்த ரசனையின் அடிப்படையில் படைப்புகளை வரிசைப்படுத்துவதும், அவ்வரிசையைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதும் இலக்கியத்தில் எங்கும் எப்போதும் தன்னிச்சையாக நடந்துவருகின்ற விஷயங்கள். ஒவ்வொருநாளும் இலக்கியவாசகன் இதை அவனையறியாமலேயே செய்துவருகிறான். அதை எழுத்தில் செய்வதே ரசனைவிமர்சனம்.
அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று நாளை இந்தியாவின் சர்வாதிகாரியாக எம்.டி.முத்துக்குமாரசாமி ஆகும்போது ஆணையிட்டாலும் ரகசியமாக அதைச்செய்துகொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அதுவே இலக்கியத்தின் அடிப்படையான வழிமுறை.
அவ்வாறு ரசனை நிகழ்ந்து அது பரிமாறப்பட்டு அதன் விளைவாக உருவாகும் பொதுவிவாதங்கள் மூலமே சில ஆக்கங்கள் மேலே எழுந்து வருகின்றன. அப்படித்தான் சில படைப்புகள் பேரிலக்கியங்கள் என்றும் சில படைப்பாளிகள் பெரும்படைப்பாளிகள் என்றும் சொல்லப்படுகிறார்கள். இந்தத் தரவேறுபாட்டைச் சுட்டிக்காட்டவே மகாகவி போன்ற பட்டங்கள் சூட்டப்படுகின்றன, கடிதங்கள் முகவரி தவறாமல் சென்றுசேர்வதற்காக அல்ல.
அப்படித்தான் பல்லாயிரம் பாடல்களில் இருந்து சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. அப்படித்தான் கபிலனும் பரணனும் ஔவையும் அவர்களில் முதன்மை பெற்றார்கள். வள்ளுவன் தமிழ்ப்புலவர்களில் தலைமகனாக ஆனான். எம்.டி.முத்துக்குமாரசாமியின் மகாகவியே கூட 'வள்ளுவன் போல் கம்பனைப்போல் இளங்கோவைப்போல்' என துல்லியமாக தரவரிசையையே நிகழ்த்துகிறான்.
இல்லை பழைய தமிழ்ப்பின்னவீனத்துவ பொன்வரியின் அடிப்படையில் [சரோஜாதேவி எழுத்து =சுரா எழுத்து] எல்லாமே படைப்புதான், நல்ல படைப்பு என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறார் என்றால் இலக்கியமே தேவையில்லை. தொலைபேசிப் பெயர்ப்பட்டியலே போதும்.நிறைய வேண்டும் என்றால் வாக்காளர் பட்டியலைத் தாசில்தார் ஆபீஸில் கேட்டு வாங்கலாம்.
தமிழில் இலக்கிய ரசனை நோக்கும் அதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தலும் அதைக்கொண்டு தொகுப்புமுறையும் உருவான காலகட்டத்தில் நவீன சந்தைப்பொருளாதாரம் உருவாகவில்லை என்றே நான் நம்புகிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உமணர்கள் உப்புவிற்பதற்காக கூடியதைத்தான் சந்தை என்கிறாரா என்று தெரியவில்லை.
ரசனை விமர்சனம் என்பது விமர்சகன் தன்னை ஓர் இலக்கிய ஆக்கத்தின் சிறந்த ரசிகனாக நிறுத்திக்கொள்வது மட்டுமே. தன் ரசனையை அவன் விவரிக்கிறான், சிபாரிசு செய்கிறான். இன்றும் உலகமெங்கும் எழுதப்படும் இலக்கிய விமர்சனங்களில் தொண்ணூறு சதவீதம் இத்தகைய விமர்சனங்களே. ரசனை விமர்சனமே ஒரு சூழலில் வெளிவரும் படைப்புகளில் சிலவற்றை மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. அது இல்லாமல் இலக்கிய இயக்கமே நிகழமுடியாது
அவ்வாறு ரசனை விமர்சனம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆக்கங்களை மேலதிக ஆய்வுக்கு உள்ளாக்குவதற்காகவே பிற விமர்சன முறைகள் உள்ளன. பெரும்பாலும் அவை இலக்கியத்தை இலக்கியமல்லாத பிறதுறைகளின் கோட்பாடுகளை அல்லது விதிகளைக் கொண்டு ஆராய்வதாக இருக்கும். மெய்யியலை அரசியலை, மொழியியலை, குறியியலை, வரலாற்றை, நரம்பியலை. அவை பல திறப்புகளை அளிக்கும். இலக்கியத்தை சமூகத்தின் அறிவார்ந்த பொதுவிவாதத்தின் தளத்துடன் தொடர்பாடச்செய்யும்.
நான் இந்த விமர்சனத்தை ஓர் அடையாளத்துக்காகக் கோட்பாட்டு விமர்சனம் என்று சொல்கிறேன். கோட்பாடுகளின் அடிப்படையில் அல்லது கோட்பாட்டை உருவாக்கும் நோக்குடன் இவை நிகழ்த்தப்படுகின்றன என்பதனால். பெரும்பாலும் இவை கல்வித்துறை சார்ந்தவையாக இருந்தாலும் கல்வித்துறை விமர்சனம் எனத் தனியாக இன்னொன்றை வகுத்துக்கொள்கிறேன். அது இலக்கிய ஆக்கங்களைத் தகவல்ரீதியாகப் பகுப்பாய்வு செய்வதும் அடையாளப்படுத்துவதும் தொகுத்துக்கொள்வதுமாகும்.
இந்த மூன்றுவகை விமர்சனங்களைப்பற்றியும் நான் என் எண்ணங்களை மிக விரிவாக ஏற்கனவே என்னுடைய ஏழு விமர்சனநூல்களின் பொது முன்னுரையில் எழுதியிருக்கிறேன்.இந்த மூன்று வகை விமர்சனங்களுமே தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன. ஆனால் ரசனை விமர்சனம் மட்டுமே படைப்பின் இலக்கியத்தன்மையை முதன்மைப்படுத்துகிறது. ஏனென்றால் அது தன்னை இலக்கியப்படைப்பின் வாசகனின் இடத்தில் வைத்துக்கொள்கிறது.
ஆகவேதான்நவீன இலக்கியம் உருவானதுமே நவீன ரசனைவிமர்சனமும் உருவாகி வந்துவிட்டது. பிரிட்டிஷ் இலக்கிய விமர்சன மரபே அதன் விளைநிலம். பின்னர் அமெரிக்க புதுத்திறனாய்வாளர்களின் விமர்சனம் அதை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றது.
என்றும் எப்போதும் ரசனை விமர்சனத்தை வழிமுறையாகக் கொண்டவர்களே விமர்சனத்தின் மையப்புள்ளியாக இருப்பார்கள். அவர்கள் நிராகரிக்கப்படலாம். விமர்சிக்கப்படலாம். ஆனால் மையத்தை விட்டு விலகுவதில்லை. அவர்களே இலக்கியச்சூழலின் பொது அளவுகோல்களை நிலைநிறுத்துகிறார்கள். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லலாம்– கூல்ரிட்ஜ்,எஸ்ராபவுண்ட்,எலியட், விம்சாட் ஜூனியர் வழியாக இன்றைய ஹரால்ட் ப்ளூம் வரை.
எம்.டி.முத்துக்குமாரசாமி அவரது புனிதமான பின்நவீனத்துவ, பின்காலனித்துவ நோக்கில் ரசனை விமர்சனத்தை நிராகரிக்கலாம். அது அவரது தரப்பு. ஆனால் ரசனை விமர்சனம் காலாவதியானது, செல்லுபடியாகாதது , பழசு, அவரிடமிருப்பது புதிசு என்றெல்லாம் எண்பதுகளின் எளிய இருமைப்பிம்பங்களை இன்று கட்டமைக்க முடியாது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
ஒரு ரசனை பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது எப்படி பொது அளவுகோல்கள் உருவாக முடியும்? அந்த பொதுவெளியில் ஏற்கனவே வாசிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு பொதுவாக ஏற்கப்பட்டுள்ள முந்தைய பெரும்படைப்புகளையே அளவுகோல்களுக்கான ஆதாரங்களாகக் கொள்ளமுடியும். ஓர் இலக்கியச்சூழலின் பேரிலக்கியமரபே [ canon ] அந்த அளவுகோலை அமைக்கிறது. ப்ளூம் அப்படி ஒரு ஐரோப்பியப் பேரிலக்கியமரபைச் சுட்டியே தன் அளவுகோல்களை உருவாக்குகிறார். அதுவே ஒரே வழி.
இங்கும் அப்படித்தான். நீலகேசி ஏன் பெருங்காப்பியம் இல்லை? சிலப்பதிகாரத்துடன் ஒப்பிடப்படுவதனால்தான். மணிமேகலை சிலப்பதிகாரத்துடன் ஒப்பிடப்படுவதனாலேயே கவித்துவச்சுவை ஒருபடி குறைந்தது எனப்படுகிறது. இதுவே ரசனை விமர்சனத்தின் வழி. ரசனை விமர்சகன் மாபெரும் வாசகன் என்பதே அவன் தகுதி. அவனுடைய அளவுகோல்களை அவனுடைய விரிந்த வாசிப்பே உருவாக்குகிறது. அவன் பொதுவெளியில் நம்பத்தகுந்த இலக்கிய வாசகன், அவ்வளவே.
மேலதிகமாக ஒரு தகுதி உண்டு. எஸ்ரா பவுண்ட் சொல்வதுபோல சொந்தமாக ஒரு நல்ல படைப்பாவது எழுதியிருந்தான் என்றால் அந்த விமர்சகனின் தகுதி உறுதியாகிறது. அவனால் இலக்கிய ஆக்கத்தின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முடியும் , அந்த செயல்பாட்டுக்கு வெளியே அவன் இல்லை என்பதற்கான ஆதாரம் அது. இந்த அம்சமே க.நா.சுவையும் சுந்தர ராமசாமியையும் வெங்கட் சாமிநாதனை விட ஒருபடி மேலே நிறுத்துகிறது.
தமிழில் கண்ணெதிரே வரலாறு உதாரணமாக உள்ளது. இங்கே என்றுமே கோட்பாட்டு விமர்சகர்களும் கல்வித்துறை விமர்சகர்களும் வண்டி வண்டியாக எழுதித்தள்ளியிருக்கிறார்கள். ஆனால் எம்.டி.முத்துக்குமாரசாமி உட்பட எவருமே எந்தத் தகுதியான படைப்பையும் படைப்பாளியையும் அடையாளம் காட்டியதில்லை. கூடுமானவரை தப்பான படைப்புகளையே சுட்டிக்காட்டி அவர்கள் காலாவதியானதும் கைவிட்டுவிடுவதே அவர்களின் வழக்கம். செ.கணேசலிங்கன் அல்லது கெ.டானியல் மாதிரி.
காரணம் இந்த கோட்பாட்டாளர்களால் கல்வித்துறையாளார்களால் இலக்கியத்தைத் தங்கள் சொந்த ரசனை அளவில் வாசிக்கவே முடியாது என்பதே. அவர்களுக்கு ஓடும் செம்பொன்னும் ஒன்றுதான். இலக்கியத்தை அடையாளம் காண்பதை க.நா.சுவும் சுந்தர ராமசாமியுமே செய்திருக்கிறார்கள். தங்களுக்குச் சாதகமானவர்களைக்கூட இவர்கள் சொன்னபின்னரே கோட்பாட்டாளர்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். ஜி.நாகராஜனைக்கூட சுந்தர ராமசாமி அடையாளம் காட்டியபிறகே நம்முடைய பின்நவீனத்துவர்களால் எடுத்துக்கொள்ளமுடிந்தது.
இங்கே நம் அமைப்புவாத பின் அமைப்புவாத விமர்சகர்களும் செய்யும் பிழை இங்கேதான். மிக எளிய விஷயம். மொழியியல் சார்ந்த அணுகுமுறையில் எல்லா எழுத்தும் மொழியில் உள்ள பிரதிகள் [text] மட்டுமே. மொழியில் உருவான கட்டுமானங்கள் அல்லது தொடரும் நிகழ்வுகள். அவை எப்படி அர்த்த உருவாக்கம் செய்கின்றன என்று மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். அதை விரிவாகப் பகுத்தாராய்கிறார்கள். இது ஓர் உடற்கூறியலாளர் மனித உடலைப் பார்ப்பதற்கு சமம்.
இவர்கள் அதுவே இன்றைக்குரிய மோஸ்தர் என எடுத்துக்கொள்கிறார்கள். மொழியியலாளரின் கோணத்தில் இலக்கியத்தை ஆராய்வதற்குரிய துறைசார் படிப்பு இல்லாத நிலையில் அதை அப்படியே வெந்தும் வேகாததுமாகத் தூக்கிக்கொண்டு பொது வெளிக்கு வருகிறார்கள். அன்றாட அரசியலை மனம்போனபோக்கில் அதனுடன் கலந்துகொள்கிறார்கள். 'இதுவே லேட்டஸ்ட்' என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். உடலை உடற்கூறியல் நோக்கில் அணுக துறைசார்அறிஞனுக்கு உரிமை உண்டு. அதைப் பார்த்துவிட்டு இனிமேல் மனிதர்களை எல்லாரும் அப்படித்தான் பார்க்கவேண்டும், கட்டின பெண்டாட்டியைக்கூட, அதுதான் பேஷன் என்று ஒரு ஆசாமி சொன்னால் அவனை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம்?
இங்கே உண்மையில் மொழியியல் சார்ந்த அமைப்புவாத-பின் அமைப்புவாத விமர்சனம் வந்திருந்தால் எவ்வளவோ புதிய திறப்புகள் நிகழ்ந்திருக்கும். நம் நவீன இலக்கியம் சென்ற ஒரு நூற்றாண்டின் எப்படி நவீன புனைவுவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என அவர்கள் காட்டியிருக்கமுடியும். நம் கவிதைகள் எப்படி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சொல்லின் அர்த்தநுண்மையை மாற்றிக்கொண்டே செல்கின்றன என்று காட்டியிருக்கமுடியும். ஆனால் அதற்கு மொழியிலும் மொழிசுட்டும் பண்பாட்டிலும் ஆழமான கவனமும், துறைசார்ந்த பயிற்சியும் ,அனைத்துக்கும் மேலாகத் தன் ஆய்வுத்தளத்தின் எல்லைகளைப்பற்றிய அடக்கமும் தேவை.
இங்கே இதையெல்லாம் பேசியவர்கள் இன்றுவரை ஒரு சிறு புது அவதானிப்பைக்கூட செய்ததில்லை. வெறுமே கலைச்சொற்களைப் போட்டு சுழற்றுவதன்மூலம் அர்த்தமற்ற அதிகாரத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளைத்தவிர. எம்.டி.முத்துக்குமாரசாமி அதையே மீண்டும் வந்து செய்துகொண்டிருக்கிறார் . மிக எளிய விஷயங்களைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. மாறாகத் தன் கோட்பாட்டுக்கு ஏற்பத் திரித்துக்கொண்டு பழகிப்போன வாய்ப்பாடுகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்
ரசனை விமர்சனமும் சந்தைப்பொருளியலும்
மேலே சொன்ன வரியையே பார்க்கலாம். தரம்வாய்ந்த இலக்கியம் அதிகமாக உற்பத்தி பண்ணப்படவேண்டுமென எவர் சொன்னது? நேர் மாறாகத் தரமான இலக்கியம் அதிக அளவில் சாத்தியமே அல்ல என்றுதான் எந்த ரசனையாளனும் சொல்வான். இலக்கியம் ஒரு சமூகத்தின் கனவு. அது நிகழ்வதே ஒழிய உற்பத்தி செய்யக்கூடியதல்ல என்றே அவன் சொல்வான். அந்தக் கனவை அதன் எல்லா நுட்பங்களுடனும் அறிவதைத்தான் அவன் முன்வைப்பான். அதற்கு வாசகன் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பான். அதற்காக ரசனையைத் தீட்டிக்கொள்ளவேண்டும் என்பான். அது சந்தைப்பொருளியலின் சராசரித்தனத்துக்கு நேர் எதிரானது.
நம் காலகட்டத்தின் மிகப்பெரிய ரசனைவிமர்சகனாகிய ஹரால்ட் புளூம் பலநூறு பக்கங்களில் சந்தைப்பொருளியலின் விதிகள் இலக்கியத்தில் செயல்படுவதை எதிர்த்து எழுதியிருக்கிறார். இன்று சந்தையே சிந்தனைத்தளத்தையும் இலக்கியத்தையும் கட்டுப்படுத்துகிறது. சந்தை பேரளவில் உற்பத்தி இல்லாமல், தொடர்ச்சியாக நீடிக்கும் லாபம் இல்லாமல் நீடிக்கமுடியாது. ஆகவே அது ஒருபோதும் ரசனையும் கவனமும் உடைய சிறுபான்மையினருக்கான எழுத்துக்களை ஆதரிப்பதில்லை.
சந்தைப்பொருளியலில் அனைவருக்கும் உரிய சராசரிகள் பேரளவில் உற்பத்தி செய்யப்பட்டு, உற்பத்தியாளர்களால் பெரும் விளம்பரங்கள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. அதன் பொருட்டு அதற்கான ரசனையும் கட்டமைக்கப்படுகிறது. அதையே ப்ளூம் நம் காலகட்டத்தின் சீரழிவு என்கிறார்.
உண்மையில் எதிர்அறம், பிறழ்வு என்ற பேரில் இங்கே பேசப்படும் பேச்சுகளில் பெரும்பகுதி இந்த எழுத்துக்களுக்கான சந்தையால் உருவாக்கப்படுவது. பதிப்பாளர்களாலும் அவர்களுடைய கட்டுரையாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்பபடுவது. இவ்வகை எழுத்துக்களை வாசிக்க வாசகத்தகுதி தேவையில்லை, எவருக்கும் புரியும் எளிய உணர்ச்சிகளின் மிகைவடிவங்களாக இவை உள்ளன. ஆகவே இவை பிரம்மாண்டமாக உற்பத்தி செய்யமுடியும். விற்கமுடியும். நிகர விளைவாக நுட்பம், ஆழம் எல்லாம் தோற்கடிக்கப்படுகின்றன
ஜோஸ் சரமாகோவை வாசிக்க அது சுட்டும் குறியீட்டுத்தளம் பரிச்சயமாகியிருக்கவேண்டும். ஸ்டீபன் கிங்கை வாசிக்க எந்த அடிப்படைத்தகுதியும் தேவை இல்லை. ஆகவே சரமகோவை சந்தைப்பொருளியல் புறக்கணிக்கிறது. ஸ்டீபன் கிங்கை முன்னிறுத்துகிறது. அவரை நிலைநாட்டுவதற்கான கொள்கைகளைக் கட்டமைக்கிறது. அதற்காகவே இங்கே எதிர்அறம் என்றும் பிறழ்வு என்றும் வசீகரமான லேபில்கள் ஒட்டப்படுகிறது என்கிறார் புளூம்.
அதாவது இங்கே இன்று பரப்பபடும் சந்தைப்பொருளியலின் அழகியலையும் கொள்கைகளையும் எதிரொலிப்பவர் எம்.டி.முத்துக்குமாரசாமி. ஏனென்றால் அவை ஓங்கி ஒலிக்கின்றன. அமெரிக்காவில் பிரபலமாக இருப்பதை அப்படியே தழுவியாகவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருக்கிறது. ஆகப்புதியவர்களாக காட்டிக்கொள்ளாவிட்டால் இவர்களால் நீடிக்க முடியாது. சொந்தமாகச் சொல்ல ஏதுமற்ற நிலையில் இவர்களுக்கு புதியதைச் சொல்லும் இன்னொருவனால் தாண்டிச்செல்லமுடியாதபடி தன்னைக் காட்டிக்கொள்ளும் கட்டாயம் இருக்கிறது.
ஆனால் அவரே சந்தைப்பொருளியலின் பிரம்மாண்டமான வன்முறைக்கு எதிராக நிலைகொள்ளும், போராடும், ரசனை விமர்சனத்தை சந்தைப்பொருளியலின் சிருஷ்டி என்று முத்திரைகுத்துகிறார்.
பன்மையும் விவாதமும்
'பல மொழிகள், பல பண்பாடுகள், பல இனக்குழுக்கள், பல சாதிகள், பல வர்க்கங்கள் என்றுள்ள பன்மைச் சமூகத்தில் ஒற்றை அளவீடு ஒன்றை நிறுவி அந்த அளவீட்டின்படியே அத்தனை விதமான பண்பாட்டு முறைமைகள் இலக்கிய வெளிப்பாடுகள் அனைத்தும் இயங்கவேண்டும் என்று வலியுறுத்துவது கொடூரமான வன்முறையாகும்' என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி மீண்டும்.
அதே வரியை நான் சொல்கிறேன். பல மொழிகள், பல பண்பாடுகள், பல இனக்குழுக்கள், பல சாதிகள், பல வர்க்கங்கள் என்றுள்ள பன்மைச் சமூகத்தில் ஒற்றை அளவீடு ஒன்றை நிறுவி அந்த அளவீட்டின்படியே பாரதி மகாகவியே என ஆணித்தரமாக அடித்துச்சொல்லி , அதன்மீதான விவாதமே கூடாது என வாதிட்டு, அதற்கு எதிரான கருத்துள்ளவர்களை நக்கலடிக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமியின் பார்வைதானே உண்மையில் கொடூரமான வன்முறை? அயோத்திதாசர் முதல் வே.மதிமாறன் வரை பாரதியை நிராகரிப்பவர்களின் நான்கு தலைமுறைமீதான அடக்குமுறைதானே அது? ஒப்புநோக்க நான் அல்லவா இன்னும் ஜனநாயகரீதியாக எல்லாக் குரல்களையும் கணக்கில் கொண்டு ஒரு விவாதத்துக்குத் தயாராக இருக்கிறேன்?
இந்த மாபெரும் பன்மைத்தேசத்தை இதன் மொழிகள், பண்பாடுகள், இனக்குழுக்கள், சாதிகள், வர்க்கங்கள் அனைத்துடனும் பார்க்கக்கூடியவனாகவே நான் இருக்கிறேன்.ஆகவேதான் இங்கே எல்லாவற்றைப்பற்றியும் ஒரு தொடர்விவாதம் நிகழ்ந்தாகவேண்டுமென நினைக்கிறேன். எதையும் முழுமுற்றாக நிறுவிக் கொலுவில் வைத்துவிடவேண்டாமென எண்ணுகிறேன். பாரதியைப்பற்றிய விவாதமும் அப்படியே முன்வைக்கப்பட்டது.
பாரதி பற்றிய விவாதத்தின் தொடக்கத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன். பாரதியை மட்டுமே கருத்தில் கொண்ட விவாதமல்ல அது என. அயோத்திதாசரில் ஆரம்பித்து பாரதிக்கு எதிரானவர்களையும் கருத்தில்கொண்டு, விவாதத்தின் மூலம் உறுதியாக நிலைநாட்டப்பட்டுவிட்ட ஒன்றை மறுபரிசீலனைசெய்யும் முயற்சி அது. அவ்வாறு எல்லாவற்றையும் தொடர்ந்து விவாதத்தில் வைத்திருப்பதையே நான் சொல்லிவருகிறேன்.
இந்த தேசத்தின் பன்மைத்தன்மை காரணமாகவே இங்கே ஒரு கூட்டான பெரும் விவாதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. முற்றிலும் மாறுபட்ட தரப்புகள் மோதி விவாதித்து சமரசப்புள்ளியைக் கண்டடைவதையே நாம் இந்திய மெய்யியலில், இந்திய வரலாற்றில், இந்திய இலக்கியத்தில் தொடக்கப்புள்ளிமுதல் கண்டுவருகிறோம். அவ்வாறான விவாதத்துக்கான பொதுத்தர்க்கமுறை இங்கே உருவாகி இரண்டாயிரத்தைநூறு வருடம் தாண்டிவிட்டிருக்கிறது.
தமிழில் நமக்குக் கிடைக்கும் இலக்கணங்கள், அவற்றின் அடிப்படையிலான தொகைகள் எல்லாமே இந்தப் பொதுவிவாதத்தையே காட்டுகின்றன. புதிய தரப்புகள் உள்ளே வரும்தோறும் இலக்கணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. தொடர்ந்த விவாதம் மூலம் மையஓட்டம் ஒன்று திரட்டப்பட்டு வளர்ந்து உருமாறி வந்துகொண்டிருக்கிறது
மெய்யியல், மதம், இலக்கியம் என எல்லாத் தளத்திலும் மையத்தின் அதிகாரம்,உறுதியான அமைப்பு இரண்டுக்கும் எதிராக வலுவாகப் பேசிவருபவனாகவே நான் இருந்திருக்கிறேன். எந்த ஒரு விஷயத்தையும் பிரம்மாண்டமான ஒரு விவாதக்களனில் வைத்து மட்டுமே பார்க்கிறேன். எதையுமே நிறுவப்பட்டுவிட்ட ஒரு கருத்தாக சொல்வதில்லை. அப்படி அல்லாமல் முழுமுற்றாக , எப்போதுமுள்ளதாகச் சொல்லப்படும் எந்தத் தரப்பையும் நிராகரித்து எழுதிவருகிறேன். நான் ஆன்மீகம்,சமூகம், மதம் பற்றி எழுதிய எந்தக்கட்டுரையிலும் இதை காணலாம். இந்தக் கோணத்தில் என்னளவுக்கு எழுதிய எவருமே தமிழில் இல்லை.
இது நான் ஏற்றுக்கொண்ட நாராயணகுருவின் சிந்தனை மரபின் அணுகுமுறை. சமன்வயம் [இணைவுநோக்கு] யோகாத்மவாதம் [ முரணியக்கம்] என அதை நாராயணகுருவே வகுத்திருக்கிறார். என்னுடைய எல்லாச் சொற்களும் அந்த வழிமுறைகளைக் கொண்டவைதான். தமிழில் எழுதும் வேறெந்த எழுத்தாளரைவிடவும் பின்நவீனத்துவ அணுகுமுறைக்கு நெருக்கமானது எனது பார்வை.
எப்படிப்பார்த்தாலும் இரண்டாயிரம் பக்கம் அளவுக்கு இதைப்பற்றி எழுதியிருப்பேன். அதற்குப்பின்னரும் எம்.டி.முத்துக்குமாரசாமி முன்வைக்கும் இந்த ஒற்றைவரிக்கு விளக்கம் அளிக்கவேண்டியிருக்கிறது. இதையும் சலிக்காமல் செய்துகொண்டிருக்கிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி மீண்டும் இதையே சொல்வார் என்றும் எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் இப்போது ஒரு கருத்துநிலை எடுத்திருக்கிறார். அதற்கு எதிராக என்னைக் கட்டமைக்காமல் அவருக்குப் பேசத்தெரியாயது.
நான் என்னுடைய தரப்பை ஒருபோதும் எந்தவிதப் பின்னணி அதிகாரத்தாலும் நிலைநாட்டுவதில்லை என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதுதான் உண்மை என்று சொல்வதில்லை. இதுதான் மரபில் உள்ள ஒரே வழி என்று சொல்வதில்லை. இதுவே ஆகப்புதியது என்றும் சொல்வதில்லை. எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வது போல மாற்றுத்தரப்பை முத்திரைகுத்தி என் தரப்பைப் புனிதப்படுத்துவது என் வழிமுறை அல்ல. நான் சொல்லும் கருத்து இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய கூட்டு விவாதத்தில் ஒரு குரலாக ஒலிக்கவேண்டும், பரிசீலிக்கப்படவேண்டும் என்பதே என் எண்ணம்
என் கருத்துக்களை என்னுடைய படைப்புத்தளம் சார்ந்து, வாசிப்பு சார்ந்து முடிந்தவரை தர்க்கபூர்வமாக முன்வைக்கிறேன். அவற்றுக்கு விரிவான வரலாற்றுப்பின்புலம் அளிக்க முயல்கிறேன்.நான் அவற்றை நம்புவதனால் அவற்றை தீவிரமாகவே பதிவுசெய்கிறேன். வாதாடுகிறேன். இதற்கான உரிமை எனக்கு உள்ளது. இந்தக்கருத்துக்கு மாறானவர்களை நான் வசைபாடியிருந்தால், அவர்களைத் தர்க்கத்தில் இருந்து வெளியேதள்ள முயன்றிருந்தால், அவர்களின் மாற்றுக்கருத்துக்கான உரிமையை மறுத்திருந்தால் அது வன்முறை. நேற்று அதைச் செய்தவர், இன்று செய்பவர் எம்.டி.முத்துக்குமாரசாமி. நான் ஒருபோதும் செய்ததில்லை. எப்போதுமே எக்கருத்தையுமே ஒரு விவாதப்புள்ளி மட்டுமே என்று மட்டுமே சொல்கிறேன்.
ஆம், அதில் அதிகார நோக்கு உண்டு. எந்தக்கருத்தும் எந்நிலையிலும் அதிகாரத்தின் ஒரு துளிதான். எந்தக்கருத்தும் அதிகாரத்தின் விருப்புறுதியாலேயே பொதுத்தளத்தில் முன்வைக்கப்படுகிறது. மோதி முரண்பட்டுத் தன் இடத்தைக் கண்டுகொள்கிறது. அது ஒரு அரிச்சுவடிப்பாடம். எம்.டி.முத்துக்குமாரசாமி நான் சொல்வது அதிகாரம் என்றும் அவர் சொல்வது அதிகார விதைநீக்கம் செய்யபட்ட கருத்து என்றும் நினைப்பாரென்றால் அவர் இன்னும்கொஞ்சம் வாசிக்கவேண்டும்.
தேசியமும் அரசியல்சரிநிலைகளும்
கடைசியாக எம்.டி.முத்துக்குமாரசாமி எங்கே வந்து சேர்கிறார் என்று பார்ப்போம். என்னுடைய இலக்கிய மதிப்பீடுகள் வன்முறையானவை, ஒற்றைப்படையானவை என்றெல்லாம் சொல்வதற்கு ஆதாரமாக எம்.டி.முத்துக்குமாரசாமி சுட்டிக்காட்டுவது 'உலகளாவிய அளவைகளோடு உறவுடைய ஒற்றை இந்தியா என்ற அரசியல் கருத்தினை நேரடியாகவோ மறைமுகமாகவோ முன் வைப்பவை' என்பதே.
அதாவது இலக்கியத்தில் ஒருவர் கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால் அவர் ஒற்றை இந்தியா என்ற கருத்தை ஏற்றுக்கொண்டவராக இருக்கக் கூடாது. ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் வன்முறையாளர். ஏற்றுக்கொள்ளாத எம்.டி.முத்துக்குமாரசாமி ஜனநாயகவாதி, பின்நவீனத்துவர்.
உள்ளே வந்ததுமே எம்.டி.முத்துக்குமாரசாமி கட்டமைத்த இருமை பின்நவீனத்துவம்X ரசனைவிமர்சனம். அதற்குள் அவர் உள்ளடக்கியிருக்கும் உண்மையான இருமை இது. இந்தியதேசியம் X தேசியமறுப்பு. இனி இந்த சட்டகத்தில் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டே செல்லலாம். யாரெல்லாம் இந்திய தேசியத்தை முன்வைக்கிறார்களோ அவர்களெல்லாருமே ரசனை விமர்சகர்கள். இலக்கியத்தைப்பற்றிப் பேசத் தகுதி இல்லாத வன்முறையாளர்கள். இந்திய தேசியத்தை எதிர்ப்பவர்கள் பின்நவீனத்துவ சாத்வீகர்கள்.
கஷ்டகாலம் என்றுதான் சொல்லவேண்டும். பின்நவீனத்துவம் என்ற பேரில் எதையெல்லாம் காணவேண்டியிருக்கிறது! பேராசிரியர்களுக்கு இந்த எல்லையைத் தாண்டவே முடியாதா என்ன? முடியும். ஆனால் எல்லாப் பேராசிரியர்களையும்போல எம்.டி.முத்துக்குமாரசாமியும் நிதியாதாரங்கள் இல்லாமல் சிந்திக்கமுடியாதவர் என்பதே சிக்கல்.
அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேஷனின் நேரடி நிதியுதவியால் நடத்தப்பெறும் அமைப்பு ஒன்றில், அவர்களின் தேவைக்காக இந்திய நாட்டாரியல் கலைகளைத் தொகுக்கவும் நாட்டார்கலைகளை அவர்களுக்கேற்பக் கட்டமைக்கவும் பெரும் பணம்செலவிடும் மையப்பொறுப்பில் இருப்பவர் எம்.டி.முத்துக்குமாரசாமி. ஒற்றை இந்தியா என்ற கருத்துக்கு எதிராக செயல்படவேண்டியது அவரது அலுவலகப்பணி. அதை அவர் செய்வதில் ஒருவகையில் பிழையும் இல்லை. ஆனால் தமிழில் இலக்கியம் பற்றிச் சிந்திப்பதற்கான முன்நிபந்தனையாக அவர் அதை ஆக்குவார் என்றால் அதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்.
கடைசியாக எம்.டி.முத்துக்குமாரசாமி வந்து சேர்கிறார். 'ஒற்றை இந்திய தேசம் என்பதை வலியுறுத்திப் பேசுவதைத் தவிர வேறெதையும் அரசியல் பொருத்தப்பாடு (political correctness) உடைய கருத்தாக்கம் என்று சொல்ல முடியுமா? தொடர்ந்து ஒற்றை இந்திய தேசம் என்பதையே வலியுறுத்திப் பேசி வரும் ஜெயமோகன் பின் எப்படி சார்த்தர் முதற்கொண்டு இந்திய இடதுசாரிகள்,தமிழ் பின் நவீன எழுத்தாளர்கள் எல்லொரும் அரசியல் பொருத்தப்பாட்டினை மீறி எதுவும் பேசுவதில்லை என்கிறார்?'
நான் இந்திய தேசியம் என எதை நினைக்கிறேன் என்பதை எப்படியும் இருபத்தைந்து முறையாவது விளக்கியிருப்பேன். நான் சொல்லும் தேசியம் என்பது கடந்த காலத்தில் உருவம் கொண்டு எப்போதைக்குமான நிபந்தனையாக நம் மீது இருக்கும் ஒன்று அல்ல. அதாவது இந்தியா எப்போதும் ஒரே தேசமாக இருக்கிறது என்றும் ஆகவே நாளையும் அது அப்படியே இருந்தாகவேண்டும் என்று அல்ல. இந்திய தேசியத்துக்கு அப்படி எந்த புனிதத்தையும் நான் ஏற்றவில்லை.
இந்த தேசம் ஒரே அரசியல்தேசியமாக நீடிக்கவேண்டும் என்று நான் விரும்புவதற்கான காரணம் இதன் சமகால அரசியல்,பண்பாட்டுத்தேவைதான். இது ஒரே தேசமாக நீடிக்கவேண்டிய கட்டாயம் இருப்பது இறந்த காலத்தில் அல்ல, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும்தான். இந்த நாடுமுழுக்க நான் கிராமம்கிராமமாக சுற்றியலைந்துகொண்டே இருக்கிறேன். எல்லாவிதமான பன்மைத்தன்மைக்கும் இடமளிக்கக்கூடிய நெகிழ்வான ஒரு ஒற்றைத்தேசிய அமைப்பாக மட்டுமே இந்த நாடு இருக்கமுடியும் என்பது என்னுடைய புரிதல்.
அதற்கான காரணங்களை விரிவாகவே விளக்கியிருக்கிறேன். ஒன்று, இந்திய நிலப்பரப்பில் பல்லாயிரம் வருடங்களாக மக்கள் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் பஞ்சங்கள் அந்தப் பரிமாற்றத்தைப் பலமடங்காக்கின. நவீன இந்தியாவின் தொழில்மயமாக்கல் இன்னும் விரைவுபடுத்தியது. இந்தியாவின் எப்பகுதியிலும் ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே இன அடையாளம் கொண்ட மக்கள் மட்டும் வாழவில்லை. எந்த அடையாளத்தை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்டப் பாதிவரை மக்கள்தொகை சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.
இங்கே பேசப்படும் பிராந்திய தேசியங்கள் எல்லாமே மதம்,இனம், மொழி அடையாளம் மூலம் தேசியங்களைக் கட்டமைப்பவை. அவை தங்கள் மக்களில் பாதிப்பேரைப் பிறர் ஆகக் கட்டமைப்பவை. தமிழ்த் தேசியம் முந்நூறாண்டுகளாக இங்கே வாழும் தெலுங்கர்களையும் கன்னடர்களையும் அன்னியராக்குகிறது.கன்னடதேசியம் நூறாண்டுகளாக அங்கே வாழும் தமிழர்களையும் தெலுங்கர்களையும் அன்னியமாக்குகிறது.
ஆகவே இந்தியதேசியம் உடைந்து பிராந்திய தேசியங்கள் உருவாகுமென்றால் அதன்மூலம் கோடிக்கணக்கான அகதிகளை, மனித வரலாற்றின் மிகப்பெரிய வன்முறையை, மட்டுமே நம்மால் உருவாக்கமுடியும். ஒரு பிரிவினையின் குருதி இன்னமும் இங்கே காயவில்லை
நவீன இந்தியதேசியம் என்பது படிப்படியாக நீண்ட பொதுவிவாதம் மூலம் கட்டமைக்கப்பட்டது. காந்தியால், அம்பேத்காரால் முழுமையாக்கப்பட்டது. நேருவால் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகின் பிற தேசியங்களுடன் ஒப்பிடுகையில் மிகநெகிழ்வான அனைத்து மக்கள்குழுக்களுக்கும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் இடத்தையும் அளிக்கக்கூடிய தேசியமாகவே அது உள்ளது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக அப்படியே அது நீடிக்கிறது.இந்திய அளவில் நவீனச்சிந்தனைகளை முன்வைப்பவர்களில் பலர் இந்த எண்ணம் கொண்டவர்களே. எம்.டி.முத்துக்குமாரசாமி ஊழியம் செய்யும் அமெரிக்கா ஒரு நாடாக நீடிக்கமுடியும் என்றால் இந்தியாவாலும் முடியும்.
இந்திய தேசியத்துக்கு எதிரான பிற தேசிய உருவகங்கள் எல்லாமே குறுகலான இன,மத,மொழி நோக்கில் உருவானவை. வெறுப்பையும் நிராகரிப்பையும் வழிமுறையாகக் கொண்டவை. ஆகவே நான் இந்திய தேசியத்தையே இன்றுள்ள ஒரே வழியாகக் காண்கிறேன். அதை ஆதரிக்கிறேன். இன்னும் இன்னும் நெகிழ்வான ஒன்றாக இதை ஆக்கிக்கொள்வதன்மூலம் நாம் வளரமுடியும் என நினைக்கிறேன். பின் நவீனத்துவ சிந்தனை கொண்ட ஒருவர் ஒருபோதும் நம் உபதேசியங்களின் இனவாதத்தையும் மொழிவாதத்தையும் ஏற்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
இந்திய தேசிய உருவகத்தின் விவாதக்காலம் ஒரு நூறாண்டுக்கு நீடித்த ஒன்று. அதில் எல்லாத் தரப்புகளும் பேசப்பட்டிருக்கின்றன. முட்டி மோதித் தங்கள் பங்கைப் பெற்றிருக்கின்றன. அப்படி ஒரு மாபெரும் விவாதம் மூலம் தேசிய பொதுஉருவகம் நிகழாத நாடுகள் நம்மைச்சுற்றி உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் பர்மா. உள்நாட்டுப்போரால் அதை ஒடுக்கவந்த சர்வாதிகாரத்தால் நொடித்துப் பட்டினிவெளியாக இருக்கிறது அந்நாடு.
இந்தியாவின் சமூக அமைப்பு என்பதை ஆப்ரிக்காவுடன் ஒப்பிடலாம். உபதேசியங்களை இனக்குழுமுரண்பாடுகளை மதப்பிரச்சினைகளை சமரசம்செய்துகொள்ளாத ஆப்ரிக்க நாடுகள் இன்று எப்படி இருக்கின்றன என்று எவருக்கும் தெரியும். உலகமெங்கும் உபதேசியப் பிரச்சினைகளைத் தூண்டி உள்நாட்டுப்போர்களாக ஆக்கி ஆயுதவணிகமும் மூலப்பொருள் கொள்ளையும் செய்வதில் அமெரிக்காவை மையமாக்கிய ஏகாதிபத்தியத்துக்கு உள்ள பங்கும் அதில் ஃபோர்டு நிறுவனம் வகிக்கும் பாத்திரமும் என்ன என்று அறிந்தவர்களுக்கு எம்.டி.முத்துக்குமாரசாமி வேறுநிலைப
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
