Jeyamohan's Blog, page 2276

October 27, 2011

கலாப்ரியா-வண்ணதாசன் கடிதம்

அன்புமிக்க ஜெயமோகன்,


வணக்கம்.


இந்த தினத்தை உங்களின் " தேர் திரும்பும் கணங்கள்" வாசிப்பின் வழி துவங்க வாய்த்தது.


எவ்வளவு அனுபவிப்பு, எத்தனை உண்மை உங்களுடைய ஒவ்வொருவரியிலும், சொல்லிலும். மனசார எழுதியிருக்கிறீர்கள். இப்போது நான்அடைந்திருக்கும் நெகிழ்வை எப்போதாவது மட்டுமே அடைய முடியும்.

நீங்கள் தொடர்ந்து கோபாலுக்கு, அவனுடைய கவிதைகளையும் இந்தக்கட்டுரைகளையும் முன்வைத்துச் செய்திருப்பவை, ஒருவகையில் சற்றுத்தொய்ந்தே இருக்கிற அவனுடைய மனதின் நொய்மையைச் சமன் செய்து மேலும் செயல்பட வைக்கும், வைத்திருப்பதை நான் தனிப்பட அறிகிறேன்.


இது ஒரு பெரிய காரியம். வெளியில் இருக்கும் யாரும் அறிய ஒண்ணாதது. தேவதேவன் என்கிற ஆளுமையை. லௌகீகத்தின் புழுதியில் சரிந்துவிட அனுமதிக்காமல், நீங்கள், அவருடைய கவிதைகளின் வழி அவரை ஏந்தி, நிமிர வைத்ததும் இப்படித்தான். இப்படி வேறு சில நல்ல படைப்பாளிகளுக்கும் உங்களின் காருண்யம் கிடைத்திருக்கலாம். பெரியவர் ஆ.மாதவனுக்குக் கிடைத்த உங்களின் தொடல் இதன் இன்னொரு வகைதான்.

பூமணிக்கு ஏதோ இப்படிச் செய்யப் போகிறீர்கள் போல. தொடர்பில் இருப்பதாகச் சொன்னார்.


எழுதி மட்டுமல்ல, எழுதுவதற்கு அப்பாலும் இப்படிச் சில நுட்பமான செயல்பாடுகளுக்கு உங்கள் வாழ்விலிருந்து உங்களைத் தேர்ந்து தெளிந்து கொண்டீர்கள். எப்போதுமே இறந்த காலங்கள் மரியாதைக்குரியவை எனத்தோன்றும் எனக்கு. இப்போது உங்கள் ஞாபகத்துடன் யோசித்தால் அவை மகத்தானவை எனவும் படுகிறது.


நல்லா இருங்க ஜெயமோகன்.


குடும்பத்தினர்க்கு அன்புடன்,

சி.க.

[வண்ணதாசன்]


அன்புள்ள வண்ணதாசன் அவர்களுக்கு,


எழுத்தாளர்களில் இருவகை உண்டு. கருத்துக்களைச் சொல்லி வாதாடி நிறுவக்கூடியவர்கள். புனைவுகளை மட்டும் எழுதக்கூடியவர்கள். என் தலைமுறையில் நான் முதல்வகை,யுவன் இரண்டாம்வகை. இதெல்லாம் அவரவர் மனநிலை சார்ந்தது.


முதல்வகை எழுத்தாளர்களுக்கு சற்றே அதிகமான பொதுவாசிப்பும் கவனமும் கிடைக்கும். சுந்தர ராமசாமிக்கு அது இருந்தது. எனக்கும். இந்த வகையில் கவனம் பெற்ற எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களை கவனப்படுத்த, கௌரவிக்க இயன்ற வரை முயலவேண்டும் என்பதே என் எண்ணம். அது ஒரு இலக்கியக் கடமை. அதையே செய்துவருகிறேன்.


நான் முதன்மையாக ஒரு நல்ல வாசகன், ரசிகன். இதுநாள்வரை அந்த சுயத்தை இழக்கவில்லை. இருபதாண்டுகளுக்கும் மேலாக உங்கள் ஆக்கங்களைப் பின்தொடர்ந்து வருபவன், என்னைக் கவர்ந்த எல்லாக் கதைகளுக்கும் எதிர்வினை ஆற்றியிருக்கிறேன் இல்லையா?


இது ஒரு வகை வழிபாட்டுணர்வுதான். எனக்கு கலாப்ரியா மீது இருப்பதும் அதுவே. எனக்கு என் சொந்தக் கதைகளும் கட்டுரைகளும் நினைவில்லை. உங்கள் கதையை அல்லது கலாப்ரியா கவிதையை அல்லது சுகுமாரன் கவிதையை மறக்கமாட்டேன். இந்த வழிபாட்டுணர்வு மிக இயல்பான ஒன்று என்றுதான் நினைக்கிறேன். இதுவே என்னைக் கலைஞனாக வைத்திருக்கிறது. நான் ஈடுபட்டிருக்கும் கலைமீதான வழிபாட்டுணர்வு என்றும் சொல்லலாம்


இந்த லௌகீக வாழ்க்கையில் அறிவுப்பிடுங்கலில் கலை என்ற ஒரு மென்மையான பகுதியைப் பாதுகாத்துக்கொள்ள இதெல்லாம் தேவையாகிறது. கலாப்ரியாவின் கதைகளில் சில இடங்கள் மிக நுட்பமானவை. கதவைக்கூடத் தட்டாமல் வீட்டுக்குள் வரும் கிராமப்பெரிசுகள் மாதிரி சர்வசகஜமாக அவை நமக்குள் நுழைந்துவிடுகின்றன


அவர் நாவல் எழுதுவதாகச் சொன்னார். அது மிக முக்கியமான நாவலாக அமையுமென நினைக்கிறேன்


வணக்கங்களுடன்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2011 11:30

ஆசிரியர்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் முதல்வராக 1953 வாக்கில் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் பணியாற்றினார். தமிழின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான சீனிவாசராகவன்,எஸ்.வையாபுரிப்பிள்ளை டி.கெ.சிதம்பரநாத முதலியார் போன்றவர்களின் நெருக்கமான நண்பர். ஆங்கிலப் பேராசிரியர். மரபுக்கவிஞர். கம்பராமாயணத்திலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும் பேரறிஞர்.திருநெல்வேலியில் இருந்து கம்பராமாயணம் பிழைநீக்கப்பட்டு செம்பதிப்பாக வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தவர்.


[image error]


அன்று புகழ்பெற்று வந்த இளம்துறவியான சித்பவானந்தரை ஒரு கூட்டத்துக்காக அ.சீனிவாச ராகவன் அழைத்திருந்தார். சித்பவானந்தர் உள்ளே நுழையும்போது பையன்கள் வேறு ஒருபையனின் விகடத்தைக் கேட்டு பயங்கரமாகச் சிரித்தார்கள். ஆனால் அ.சீனிவாச ராகவன் அது எளிய காவி உடையில் கரிய சிறிய உடலுடன் வந்த சுவாமி சித்பவானந்தரைக் கண்டு சிரித்தது என எடுத்துக்கொண்டார். அவர் முகம் சிவந்துவிட்டது.


சித்பவானந்தர் சென்ற பின் அ.சீனிவாச ராகவன் கடும் சினத்துடன் மாணவர்களிடம் வந்தார். 'நான் என்ன வேடிக்கைமனிதரையா அழைத்துவந்தேன். இந்த நாட்டுக்கு மிகச்சிறந்த கல்விப்பணி ஆற்றக்கூடிய ஒருவரைத்தானே கூட்டிவந்தேன்? விருந்தினரை உபசரிக்க வேண்டாம், அவமதிக்காமல் இருக்கக் கூடாதா? இதுவா நான் காட்டிய அன்புக்கு நீங்கள் காட்டிய மரியாதை?' என்று கண்களில் நீர் மல்கக் கேட்டார்.


அன்று இறுதிவருடம் முடித்து பிரிந்துசெல்லும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் அட் ஹோம் என்னும் விருந்து இருந்தது. 'சான்றோரை அவமதித்த பண்பாடற்ற உங்களுக்கு அட் ஹோம் விருந்து வேறு வாழுதோ' என்று அ.சீனிவாச ராகவன் சீறினார். மாணவர்களில் தலைவராக இருந்த நடராஜன் பதில் சொல்லமுனைந்தும் அதைக்கேட்க அ.சீனிவாச ராகவன் தயாராகவில்லை.


'உங்களுக்கு அட் ஹோம் விருந்து வேறு வாழுதோ' என்று அ.சீனிவாச ராகவன் கேட்டது மாணவர்களின் உள்ளத்தைப் புண்படுத்தியது. ஆகவே அந்த விருந்தைப் புறக்கணிப்பது என்று மாணவர்கள் நடராஜன் தலைமையில் முடிவெடுத்தார்கள். மற்ற ஆசிரியர்களுக்கு விஷயம் தெரியவில்லை. அவர்கள் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள். மாணவர்கள் விருந்தைப் புறக்கணிப்பது தெரிந்து ஆசிரியர்கள் சமாதானம் செய்தார்கள். மாணவர்கள் விஷயத்தைச் சொன்னதும் அவர்கள் அ.சீனிவாச ராகவனுக்குச் சொன்னார்கள்.


கோபம் கொள்வதற்குப் பதிலாகப் பெரும் வேதனையுடன் அவர்களை நோக்கி வந்தார் அ.சீனிவாச ராகவன். 'நான் கூப்பிடுகிறேன். வந்து சாப்பிடுங்கள்' என்று அவர் அழைத்தார். மாணவர்கள் கண்கலங்கி அழுதுவிட்டார்கள். அவரே மாணவர்களை விருந்துமேஜையில் அமரச்செய்து உணவு பரிமாறினார். அதைப்பார்த்த மற்ற ஆசிரியர்களும் பரிமாறினார்கள்.


வீடுதிரும்பும்போது எல்லா மாணவர்களும் அழுதுகொண்டிருந்தார்கள். அ.சீனிவாச ராகவனிடம் மன்னிப்புக் கேட்பதென்று முடிவாகியது. ஆனால் எப்படிக் கேட்பது. ஒரு கடிதம் எழுதிவிடலாமென நடராஜன்  முடிவெடுத்தார். நடராஜன் எழுதிய நீளமான மன்னிப்புக் கடிதத்தில் எல்லா மாணவர்களும் கையெழுத்திட்டார்கள். அதை சேர்ந்துபோய் அ.சீனிவாச ராகவனிடம் கொடுத்தார்கள்.


அ.சீனிவாச ராகவன் அவருக்கே உரிய வெண்கலக் குரலில் 'அதை இன்னுமா மறக்கலை? கசப்பை அப்பவே மறந்திடணும்' என்றார். 'மனச்சுமை எல்லாம் நீங்கணும்..போய்ப் பரீட்சைக்குப்படிங்க' என்று அனுப்பினார். மறுநாள் எல்லாரையும் வரிசையாகத் தன் அறைக்குள் அழைத்துத் தேர்வறை நுழைவுச்சீட்டைக் கொடுத்தார் அ.சீனிவாச ராகவன். கடைசியில் நடராஜனை அழைத்தார். கட்டாயப்படுத்தி அமரச் சொன்னார்.


'நீதான் எல்லாப் பிள்ளைகளையும் விருந்தைப் புறக்கணிக்கச் சொன்னாய்…நீ உன் அப்பாவிடம் ஒரு தப்பு செய்தால் என்ன செய்வாய்? ஊர் உலகைக்கூட்டி முச்சந்தியில் வைத்தா மன்னிப்புக் கேட்பாய்? தனியாக வந்து அல்லவா மன்னிப்பு கேட்கவேண்டும்?' என்று சிரித்துக்கொண்டு சொல்லி 'நன்றாகப் படி…நன்றாகத் தேர்வு எழுது…இந்தா என் நினைவாக இதை வைத்துக்கொள்' என்று அந்தக் கடிதத்தைத் திருப்பிக்கொடுத்தார்


அரைநூற்றாண்டாக அந்த நினைவுச்சின்னத்தைப் பேணிவந்திருக்கிறார் நடராஜன். அந்த நிகழ்ச்சியும் கடிதமும் திண்டுக்கல்லில் இருந்து வெளிவரும் குறி என்ற சிற்றிதழில் வெளியாகியிருக்கின்றன. அன்பே ஓர் உருவாய் வந்த அருமைத்தந்தை அ.சீனிவாச ராகவன் அவர்களுக்கு..' என்று ஆரம்பிக்கும் அக்கடிதத்தை வாசிக்கும்போது நெகிழ்ச்சி அடைந்தேன்.


அதன் கீழே உள்ள பெயர்கள் எஸ்.நடராஜன், கல்யாணசாமி, நிக்கோலஸ் கோமஸ்,சண்முக வேலாயுதம், கெர்னேஸ் மச்சடோ, சா.காளியப்பன், ஆல்பர்ட் கோயில்ராஜ், மைக்கல் ரொசாரியோ,ஆர்தர் ஜேம்ஸ்,சீனிவாசன், சத்தியசிங் தனராஜ் என நீளும் மாணவர் பட்டிலின் கையெழுத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாணவர்கள் அனைவரின் நெஞ்சிலும் எப்படிப் பூத்திருப்பார் அ.சீனிவாச ராகவன். அவர்களின் வாழ்நாளெல்லாம் எப்படி உள்ளிருந்து வழிகாட்டியிருப்பார்!


[குறி மாத இதழ்.MKM Complex, Classic Agency, Vadamadurai Road, Vedasandur, Dindigul St 624710


www.issuu.com/kurimagazine. kurimagazine@gmail.com ]


இணைப்பு



அ.சீ.ரா- தினமணி கட்டுரை


தொடர்புடைய பதிவுகள்

சித்பவானந்தர்-கடிதம்
சித்பவானந்தர்-ஒருகடிதம்
சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2011 11:30

October 26, 2011

இரு இளைஞர் கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு,


நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வயது 24. இங்கே சாப்பிடுவதற்கு விடுதி மெஸ். மெஸ்ஸில் சில பணியாளர்கள் என் ஒத்த வயதுடையவர்கள், அல்லது சற்றுச் சிறியவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல).இதனால் என்னால் சிலசமயம், சாப்பிடவே முடிவதில்லை. அவர்களைக் கண்டுவருத்தப்பட்டுக்கொண்டிருப்பேன். ஆனால் தாழ்வாகக் கருதியதில்லை. ஏனோகுறுகுறுவென்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல், முதியபணியாளர்களைக் கண்டாலும் மனம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.இதற்கு முன்னால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன்.அலுவகத்துக்குள் நுழையும் முன்னர், பைகளைச் சோதனை செய்ய இரண்டுபேர்நின்றுகொண்டிருப்பார்கள். சிலசமயம் 35 வயது மதிக்கத்தக்க பெண்கள்இருப்பார்கள். அவர்களைக் கண்டாலும், வருத்தப்பட்டுக்கொண்டிருப்பேன். இதைஎப்படிப் போக்குவது, அல்லது இப்படியே இருப்பதுதான் சரியா ?


நன்றி

விஜய்.


அன்புள்ள விஜய்


மிக இளமையில் எழக்கூடிய சஞ்சலங்கள் இவை.


என்னுடைய நோக்கில் இவற்றைப் 'போக்கிக்'கொள்வது உங்களை முதிர்ந்த மனிதனாக ஆக்கும். லௌகீக வாழ்க்கையில் வெற்றியைக்கூட அடையச்செய்யும். ஆனால் அவற்றைக் கூர்ந்து கவனித்து அந்த சஞ்சலம் ஏன் வருகிறது என அறியமுயல்வதன்மூலமே நீங்கள் உங்கள் அகத்தைக் கண்டடையமுடியும் என்பேன்.அதுவே ஆன்மீகத்தின் வழி.


ஜெ


வணக்கம் ஜெ,


உங்களுடைய வெப்சைட் மிகவும் அறிவுபூர்வமாகவும் புத்திகூர்மையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது, உங்களுக்கு வந்த பல வாழ்த்து மடல்களில் இதுவும் ஒன்று என்றாலும் இதனுடைய முக்கியத்துவங்கள்

1 நான் இப்போது தான் முதல் முறையாக வாழ்வில் ஒரு வாழ்த்து மடல் அனுப்புகிறேன், அதுவும் தமிழில் டைப் செய்து

2 தமிழ் எழுத்தாளர்கள் ப்ளாக் பிளஸ் வெப்சைட் களில் உங்களுடையது தான் தலை சிறந்ததாகவும் அடிக்கடி அப்டேட் செய்யபடுவதாகவும் இருக்கிறது,

3 மேலும் உங்களுடைய வாசகர்கள் எழுதும் முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்களையும் மடல்களையும் உங்களுடைய வெப்சைட் இல் எழுதி அவர்களையும் ஊக்குவிக்கிறீர்கள்,

4 அதுமட்டுமில்லாமல் உங்களுடைய முக்கிய பணியான எழுத்தைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள் , தலை வணங்குகிறேன் .


நானும் ஒரு எழுத்தாளாராக விரும்புகிறேன் . ஒரு தலைசிறந்த எழுத்தாளனாக விரும்புகிறேன், ஆம். புத்தகத்துக்கான விஷயங்கள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் அது என்னுள்ளே இருந்து வெடித்து வெளியே வர மிக ஆர்வமாக இருக்கிறது. ஆனால் என்னுடைய தமிழ் – அது, பாமரனுக்குப் புரியும்படியும் அதே சமயம் படித்தவனுக்கும் ஏற்றாற்போல் இருக்கவேண்டுமே அதை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் உங்களிடம் கேட்கிறேன்.மேலும் இந்தப் புத்தக உலகில் நீங்கள்தான் என்னுடைய குரு. ஆதலால் வெட்கமின்றிக் கேட்கிறேன், ஆசீர்வாதத்துடன் அறிவுரையும் உங்கள் கருத்தையும் பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.


கிருஷ்ண பிரசாத்


அன்புள்ள கிருஷ்ணபிரசாத்


இன்னொரு இளம் வாசகரின் கடிதம்.


நீங்கள் எழுத்தாளராக ஆக விரும்புவதற்கு வாழ்த்துக்கள். சிறந்த எழுத்தாளராக நீங்கள் ஆகவேண்டுமென வாழ்த்துகிறேன்.


உங்கள் எழுத்துக்கள் எப்படி முக்கியமானதாக ஆக முடியும்? நீங்கள் தமிழில், உலகில் இதுவரை இல்லாத ஒரு எழுத்தை அளிக்கும்போதுதான் இல்லையா? அப்போதுதான் உங்களுக்கு எனத் தனியடையாளம் உருவாகிறது. உங்கள் எழுத்து வேறு எதற்கும் சமம் அல்ல அது தனி என்ற நிலை வருகிறது. நீங்கள் எழுதியே ஆகவேண்டும் என்ற நிலை பிறக்கிறது


அதை எப்படி அடைவது? நீங்கள் இதுவரை என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் புதியதாக எழுதமுடியும். அதற்கு நீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். இதுவரையிலான தமிழ் இலக்கிய மரபையும் உலக இலக்கியப்போக்கையும் அறிந்திருக்கவேண்டும். வாசிக்காவிட்டால் பிறர் எழுதித் தாண்டிச்சென்றவற்றையே எழுதிக்கொண்டிருப்பீர்கள் இல்லையா?


ஆகவே வாசியுங்கள். எப்படி வாசிப்பது? வழிகாட்டியாக நிறைய நூல்கள் தமிழில் உள்ளன. என்னுடைய 'நவீன தமிழிலக்கிய அறிமுகம்' [கிழக்கு பதிப்பகம்] ஒரு முக்கியமான வழிகாட்டி நூல். அதேபோல மேற்குச்சாளரம், கண்ணீரைப் பின் தொடர்தல் போன்ற பலநூல்கள் உள்ளன. அவை நூல்களை வாசிப்பதற்கான வழியை காட்டும். எஸ்.ராமகிருஷ்ணன் கதாவிலாசம்,நம் காலத்து நாவல்கள், விழித்திருப்பவனின் இரவு போன்ற பலமுக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். உலக இலக்கியத்தின் சாளரங்கள் அவை.


எழுத்தாளன் வாசிக்கவேண்டும் என்று சொல்வது இலக்கியத்தின் வடிவத்தைத் தெரிந்துகொள்வதற்காகவும்தான். எந்தக் கலையும் அதன் வடிவம் வழியாக வளர்ந்துகொண்டே செல்கிறது. அந்த வளர்ச்சியை முன்னெடுத்தால்தான் இலக்கியவாதியால் எதையாவது சாதிக்கமுடியும்.


நான் எழுதும்கலை [தமிழினி] என்ற நூலை எழுதியிருக்கிறேன். அது எழுத்தின் வடிவங்களை அறிமுகம்செய்யும்.


வாசியுங்கள், அது எழுதுவதற்கான முதல்படி.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

வாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்
உலக இலக்கியச்சிமிழ்
கண்ணீரைப் பின் தொடர்தல்:கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2011 11:30

சுரதா

கவிஞர் சுரதாவை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். 1992ல், வாணியம்பாடி கலைக்கல்லூரியில் ஒரு தமிழ்விழாவுக்காக பேசச்சென்றிருந்தேன். எங்கள் பேச்சு முடிந்ததும் கவியரங்கம், அதில் சுரதா பேசுவதாக இருந்தது. நாங்கள் சென்றதுமே சுரதா வந்து கல்லூரி அறையில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். சென்றுபார்க்கலாமென உடனிருந்தவர்கள் சொன்னார்கள்.



எனக்கு சுரதா மீது கவிஞராக எந்தவிதமான நல்லெண்ணமும் இல்லை.பாரதிக்கு இருநூறாண்டுக்காலம் முந்தைய அழகியல் கொண்ட கவிதைகள். ஒரு கட்சிக்கொள்கை போல ஏற்றுக்கொண்ட முற்போக்கு நம்பிக்கைகள். அந்தவகை நம்பிக்கைகளுக்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று எனக்கு தெரியும். அவை முழுக்கமுழுக்க மேடைக்கானவை. தனிவாழ்க்கையில் அவற்றை எவ்வகையிலும் அதைச்சொல்பவர்களும் கேட்பவர்களும் பொருட்படுத்துவதில்லை. 'நல்ல' திராவிட இயக்கத்தவரின் உதாரணமான சுரதா அவ்வகையிலேகூட பொருட்படுத்தத் தக்கவரல்ல என்பதே என் எண்ணம்.


சுரதா கல்லூரியின் ஆய்வுகூடம் போன்ற எதிலோ இருந்தார். ஒரு சாதாரண ஜிப்பா அணிந்து வேட்டியை காலிடுக்கில் சுருட்டிவைத்துக்கொண்டு காலை இரும்பு நாற்காலியில் தூக்கி வைத்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். கூடநாலைந்துபேர் இருந்தார்கள். நாங்கள் உள்ளே சென்றதும் எங்களை அறிமுகம்செய்துவைத்தார்கள். சுரதா என்னைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அவர் கேட்ட முதல் கேள்வியே 'தம்பி என்ன சாதி?' என்பதுதான்.


அவர் மட்டுமல்ல கணிசமான பழைய திராவிட இயக்கத்தவர் அந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள் என எனக்குத்தெரியும். நான் பிராமணனா தலித்தா என்பதுதான் அந்தக்கேள்வியின் சாராம்சம். இரண்டில் எதுவாக இருந்தாலும் என்னிடம் ஜாக்ரதையாகப் பேசவேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் வட்டாரம் சார்ந்து குணவேறுபாடுகளை கணித்தும் வைத்திருப்பார்கள். நான் சொன்னேன். 'மலையாளத்தானா?' என்றார் ஆர்வமில்லாமல்.


நாகர்கோயில் என்றதுமே சுந்தர ராமசாமி நினைவுக்கு வந்தது அவருக்கு. 'அய்யிரு என்னையப்பத்தி சொல்லியிருக்காரு தெரியுமில்ல…' என்றார். சுபமங்களாவில் வந்த பேட்டியில் சுந்தர ராமசாமி சுரதாவை குறிப்பிட்டிருந்தார். சுரதா பெருமை பொங்க 'என்னையப்பத்தி நல்லாத்தான் சொல்லியிருக்காரு…அய்யமாரு அதையெல்லாம் உத்து கவனிப்பானுக… அன்னிக்கும் இன்னிக்கும் அவனுகதானே வாசிக்கிறது…நம்மாளுக எவன் வாசிக்கிறான்?' என்றார்.


'நீங்க சினிமாலே வேலைபார்த்தீங்கல்ல?' என்று கேட்டேன். 'ஆமாமா…நெறைய பாட்டு வசனம் எளுதினேன்.அந்தக்காலத்திலே ஒண்ணும் மதிப்பு மரியாதை கிடையாது. நாம எளுதுறத அவனவன் தன் பேருக்கு போட்டுக்குவான்…சும்மா அடைப்பக்காரன் வேலை…தம்பி சர்க்கார் உத்யோகமா?' என்றார். 'ஆமாம்' என்றேன். 'விட்டிராதீங்க…எலக்கியத்த நம்பி சோறு திங்க முடியாது' மீண்டும் நாகர்கோயில். நாஞ்சில்நாடனைப்பற்றி கேட்டார். 'நாடாக்கமாரெல்லாம்கூட இப்ப எளுதுகானுக' அவர் நாடார் இல்லை வேளாளர் என்றேன். 'அப்டியா சொல்லுறீங்க?'


சுரதா எனக்கு ஒரு கிராமத்து கிழவராக தெரிய ஆரம்பித்தார். பல எழுத்தாளர்களைப்பற்றிய வம்புகள் வந்துசென்றன. எல்லாரையும் சாதியாலேயே சுட்டிச் சொன்னார். தற்செயலாக பேச்சு செந்தமிழ்ச்செல்வி இதழைப்பற்றி திரும்பியது. அதன்பின்னர் அவர் தகவல்களாக பொழிய ஆரம்பித்தார். செந்தமிழ்ச்செல்வியின் எல்லா இதழ்களும் தன்னிடமிருக்கின்றன என்று சொன்னார். 'அதிலே தமிழர் திருமணம் பத்தி ஒரு டிஸ்கஷன் ஓடிச்சு தம்பி.நீங்க அவசியம் படிக்கணும்…கதையெல்லாம் எளுதிறீக'


மேலும் அரைமணிநேரத்தில் அவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். 'நாப்பத்தஞ்சு வருச தமிழ் வரலாறே கைவசம் இருக்கு…வந்து பாருங்க…எளவு எல்லாமே செல்லரிச்சு போயிருக்கு. எவன் படிக்கிறான்…ஒருத்தனுக்கும், இண்ட்ரெஸ்ட் இல்ல. எவனாவது அய்யமாரு வந்து வாசிச்சாத்தான் உண்டு…' அவர் திராவிட இயக்கத்தின் பேசுபொருட்கள் எல்லாம் மறைந்துவிட்டன என்ற துயரம் கொண்டிருந்தார். 'எனக்கு திராவிட இயக்கம் பத்தி ஒண்ணும் நல்ல அபிப்பிராயம் கெடையாது' என்றேன். 'நம்ம கவிதை வாசிப்பீங்களோ' 'வாசிச்சிருக்கேன்…வெறும் வார்த்தைகளா இருக்கு…ரொம்ப பழைய கவிதை…'


'இருக்கலாம்…அதுக்கென்ன?' என்றார். எனக்கு அந்த சகஜமான இயல்பு ஆச்சரியமளித்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. 'நீங்க புதுக்கவிதை எளுதுறீங்க போல' என்றார். 'இல்ல நான் கவிதையெல்லாம் எழுதறதில்லை' 'இப்பதான் பலபேரு கெளம்பி என்னமோ கிறுக்கிறானுங்ங்களே க.நா.சுப்ரமணியம்னு ஒரு அய்யிரு..கையெல்லாம்கூட வீங்கியிருக்கும்…பாத்திருக்கேன்..அவருகூட நெறய கவிதைமாதிரி எளுதுவாரு… சரி எல்லாம் வரட்டும்..' அவர் அப்போதுதான் எனக்கு பிடித்தமானவராக ஆனார். அவருக்கு இந்த ஆட்டத்திற்கு அப்பால் செல்லும் விரிவு உள்ளூர இருந்தது.


'பளைய கவிதைன்னு சொன்னீங்க தம்பி…பளசுன்னு தெரிஞ்சுதான் எளுதினது…அதுக்குண்டான தேவைய நீங்க புரிஞ்சுகிடணும்….எதுக்கு பளையமாதிரி எளுதினோம்? ஏன்னாக்க நமக்குன்னு ஒரு மரபு இருக்கு. ஒலகத்திலே ஒண்ணோ ரெண்டோ மொழிக்காரனுக்குத்தான் அந்த மரபு இருக்கு…அந்தமரப நாம விட்டுட்டோம்னா அப்றம் நாம யாரு? சரி கேக்குறேன், இந்த மரப விட்டா பின்ன நமக்கு எளுத என்ன இருக்கு? வெள்ளைக்காரன் விமானத்த கண்டுபிடிச்சான். அத கொண்டுபோயி குண்டு போட்டு ஊரையெல்லாம் இடிச்சான்…அவனுக்கு எளுதறதுக்கு என்னென்னமோ இருக்கு. நாம என்ன மயித்த எளுதிர முடியும்? புளிச்சதண்ணிய குடிச்சுட்டு தெருவில வெளிக்குபோற சனங்க நாம…நாம அப்டி என்னத்த எளுதிருவோம்? உங்க சுந்தர ராமசாமி என்ன மயித்த எளுதிட்டார்? நான் கேட்டேன்னு போயி கேளுங்க'


கரகர தொண்டையில் கோபமே இல்லாமல் சாதாரணமாக பேசிக்கொண்டே சென்றார். 'நம்மகிட்ட இருக்கிறது மரபு மட்டும்தான். அவ்ளவு பெரிய மரபு. மொதல்ல அங்க இருந்து ஒரு தொடர்ச்சிய உண்டு பண்ணுவோம்னு நினைச்சோம். பாரதிய எடுத்துக்கிட்டீங்கன்னா அந்த அய்யிருக்கு இந்த மரபு என்னான்னு தெரியும். ஆனா அவருக்கு வேதம் முக்கியம். வேதமுடைய தமிழ்நாடுங்கிறான். அது அவன் சாதிப்புத்தி. அவன் எல்லாத்தையும் விட்டுட்டு சொம்மா கீர்த்தனையா பாடி வச்சுட்டான். நாம அப்டி விட்டிர முடியாதுல்ல? நமக்கு மரபு இருக்குல்ல? அதனால அங்க ஆரம்பிச்சோம்…அத உடைச்சுகிட்டு புதிசா ஒண்ணு வந்தா வரட்டும்னு நினைச்சோம்…எங்களுக்கும் புதுக்கவிதைன்னு நாலு வார்த்தய பொட்லமா மடிக்க தெரியாதா என்ன? ஆனா செய்யல்ல. மரப படிச்சு, மொழிய படிச்,சு புதிசா அதை உருவாக்கணும்னு நினைச்சோம்…


'நாங்க தோத்துட்டோம்னு சொல்றீங்க… அது எங்களுக்கே தெரியாதா என்ன? இந்தா வாறானுக , கவியரங்க கவிதைன்னு என்னமோ எளவையெல்லாம் கொண்டாந்து வாசிக்கிறானுக… ஒருபய ஒண்ணும் வாசிக்கிறதில்லை. எல்லாம் வேலையத்த பொளைப்பா போச்சு இப்ப…அதுக்காக நாங்க செய்தது இல்லேண்ணு ஆயிடுமா என்ன? எல்லாம் இங்கதான் இருக்கும்… அந்தக்காலத்திலே சுத்திவச்ச மண்சட்டிய எல்லாம் தோண்டி எடுக்கானுக. அதை மாதிரி இதையும் எடுக்கட்டுமே. இப்ப என்ன குறைஞ்சுபோச்சு? மண்ணு இருக்கே அது எல்லாத்தையும் வச்சுகிடும்… தமிழ் மண்ணுல என்னெனமோ இருக்கு தம்பி…இதுவும் இருந்துட்டு போவுது'


எனக்கு பேசுவதற்கு அழைப்பு. நான் பேசி முடிந்து வந்தபோதும் கவிஞர் அதே இடத்தில் அப்படியே இருந்தார். 'வாங்கதம்பி பேசியாச்சா? என்னத்தை பேசினிங்க? சனங்களுக்கு ஒண்ணும் புரியறதில்ல. தமிழ் வாழ்க்கை அது பாட்டுல எங்கியோ இருக்கு. நீங்கள்லாம் எங்கியோ என்னமோ பேசிட்டிருக்கீங்க…ஒக்காருங்க…நீங்க அய்யிரோட ஆளா இருந்தாலும் பழசெல்லாம் படிக்கிறீங்க. ரொம்பநாள் கழிச்சு செந்தமிழ்ச்செல்விபத்தி எங்கிட்ட கேக்கிற முத சின்னப்பையன் நீங்கன்னு வைங்க….நேரம் கிடைக்கிறப்ப வீட்டுக்கு வாங்க…ஆற அமர எல்லாத்தையும் காட்டுறேன். பிடிச்சிருந்தா நம்ம வீட்டிலே வேணுங்கிறமாதிரி தங்கிக்கூட எல்லாத்தையும் படிங்க…


'என்னென்னமோ இருக்கு தம்பி…ஏகப்பட்டது பேசியிருக்காங்க. பேசிப்பேசி உண்டுபண்ணி எடுத்திருக்காங்க…ஒண்ணுமே இல்லியே. தமிழனுக்கு திருவோடு மட்டும்ல இருந்தது… எல்லாம் பேசி பேசி கண்டுபிடிச்சு வச்சதுதானே? இப்பகூட நமக்கு நம்மளப்பத்தி ஒண்ணும் தெரியாது….பெரிசா புறநாநூறு புடலங்கான்னு பேசிட்டிருக்கோம்….ஒருத்தனுக்கு ஒரு மயிரும் தெரியாது…. இப்ப கேக்கிறேன். சங்கப்பாட்டிலே ஆதன்னு ஒரு சொல்லு வருதே அதுக்கு என்ன அர்த்தம்?'


'அவங்க ஒரு அரசகுலம் இல்ல?' என்றேன். சிரித்து 'சரிதான் கவனிச்சிருக்கீங்க…ஆனா ஆராய்ச்சி பண்ணல…ஆனா கவனிச்சதே பெரிய விசயம்…சங்கப்பாட்ட கூர்ந்து படிக்கிறீங்க பாருங்க அதுவே பெரிய விஷயம்… ஆதன்னா ஒரு தனி இனமா இருந்திருக்கலாம்னு தோணுது. ஆதன்கிற அடைமொழியோட நெறைய பேரு இருந்திருக்காங்க. நல்லாதனார் மாதிரி கவிஞனுங்க…பல அரசர்கள்…அவனுங்க யாரு…ஆதன்னாக்க ஒரு பேரு மட்டும்னு சொல்லிட முடியாது…ஆதர்கள் வெளிய இருந்து வந்தவனுகளா இல்ல இங்க இருந்த பழங்குடிகளா? ஆதன்னா தந்தைன்னு அர்த்தமுண்டு. அப்ப அவனுக ரொம்ப முக்கியமான ஒரு சின்ன குடி… பின்னாடி பெருங்குடி மன்னனுங்க அவனுங்கள அழிச்சிருக்கணும்….எல்லாம் போட்டு நோண்டி பாத்தா தெரியும்…இப்ப எவனுக்கு அக்கற? கொஞ்சம் குறிப்பு வச்சிருக்கேன்…வாங்க எல்லாத்தையும் காட்டுறேன்'


'அய்யா கவியரங்கு ஆரம்பமாகிவிட்டது…' என ஒருவர். 'தமிழிலே பேசணுமானா தமிழிலே பேசு..அதென்ன ஆரம்பம்…' என முனகியபடி எழுந்து ஜிப்பாவை தலைவழியாக கழட்டினார். பளபளவென இன்னொரு ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கொண்டார். ஒரு சின்னப்பொட்டலத்தை திறந்து பவுடர் எடுத்து போட்டுக்கொண்டார். அது அங்கே இருந்த போரிக் பவுடரோ என்னவோ என நான் பதைப்படைந்தேன். தலையை சீவியபின் 'கிளம்பலாமா தம்பி? கவியரங்க கவிஞர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா?' என செந்தமிழ் பேசி கிளம்பிச்சென்றார்.


அதன்பின் நான் அவரைப்பார்க்கவில்லை. சென்னையில் அவரது சிலையை தாண்டிச்செல்லும்போது ஒருமுறை நண்பரிடம் சொன்னேன் பளபளா ஜிப்பா மாட்டி பௌடர் போட்ட சுரதாவுக்குத்தான் அந்த சிலை வைக்கப்பட்டிருக்கிறது என.




திண்ணையில் வே.சபாநாயகம் சுரதா பற்றி எழுதிய குறிப்பு




சுரதா-பெருமாள் முருகனின் அஞ்சலி


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2011 11:30

October 25, 2011

பாண்டிச்சேரியில் பேசுகிறேன்

தலித் நூல்வரிசை அறிமுகக் கூட்டம்


இடம் : புதுவை தமிழ்ச்சங்கம், வள்ளலார் சாலை, புதுச்சேரி -1


நாள் 30- 10-2011


நேரம்: மாலை 530


பங்கேற்போர்


பேரா: மார்க்ஸ் [புதுவை பல்கலைக்கழகம்]


பேரா: ராஜ் கௌதமன்


பேரா :ஸ்டாலின் ராஜாங்கம்


ஜெயமோகன்


அமைப்பு 'எழுத்து'பிரசுரம்

அயோத்திதாசர் ஆய்வு மையம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2011 11:30

இலக்கியக்கோட்பாடுகள்

[மறுபிரசுரம்] இலக்கியக் கோட்பாடு என்பது இலக்கியத்தை எப்படி எழுதுவது, எப்படி வாசிப்பது என்று அதை எழுதுபவர்கள் மற்றும் வாசிப்பவர்கள் அல்லாத மூன்றாம் தரப்பினரால் கூறப்படும் உறுதியான கருத்துநிலைபாடு .


[image error]


இலக்கியத்தைப்பற்றி யோசிக்கும்போது கருத்துக்கள் தோன்றுகின்றன. பிற்பாடு இவை கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும் ஆகின்றன. ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அதை கொள்கை என்கிறார்கள். சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு இருக்கும் என்றால் அது கோட்பாடு. இலக்கியக்கருத்தைக்கொண்டு இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியும், கொள்கையைக் கொண்டு அதைச் சொன்னவரை புரிந்துகொள்ள முடியும், கோட்பாட்டைக் கொண்டு கோட்பாட்டினை புரிந்துகொள்ள முடியும் என்பதே இவற்றின் பயன்பாடு.


கோட்பாடுகளை பொதுவாக மேலைக்கோட்பாடு கீழைக்கோட்பாடு என்று இரண்டாகப்பிரிப்பார்கள். மேலே இருப்பது மேல் என்பது 'மிஷனரி பொசிஷன்' என்று பிற்கால ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டது. ஆகவே மேலைக்கோட்பாடு கருவுருவாக்கம் கொண்டதாகவும் கீழைக்கோட்பாடு கருச்சுமப்பதாகவும் காணப்படுகிறது. ஏராளமாக உற்பத்தி செய்து அவற்றை இயன்ற இடமெல்லாம் பரப்பி அவை என்னாகின்றன என்று தெரிந்துகொள்ள முயலாமல் மேலே செல்வது மேலைக்கோட்பாட்டின் உயிரியல் இயல்பு. எல்லாக்கோட்பாடுகளையும் தனக்குப்பின்னால் ஓடவிட்டு முந்திவருவதை ஏற்று பூட்டிக்கொண்டு விழிபிதுங்குவது கீழைக்கோட்பாட்டின் உயிரியல்பு.


ஒரு உற்சாகத்தில் மேலைக்கோட்பாடு விளையாடியதன் விளைவை கையில் ஏந்தி அவர்களின் வாசலில் கண்ணீருடன் சென்று நின்று கீழைக்கோட்பாடு நிற்கும்போது 'மூஞ்சிய பாத்தா என்னோடது மாதிரியே இல்லியே' என்று மேலைக்கோட்பாடு கதவைச் சாத்திக்கொள்வதும் அடிக்கடி நிகழ்கிறது. கீழை நாட்டு பல்கலைகளில் அனாதைக்கோட்பாடுகள் அலைந்து திரியும் நிலை இதனால் உருவாகிறது. சிலசமயம் ஒரு தாலாட்டுப் பாடலின் அடிப்படையில் அவை ஒன்றை ஒன்று ஆரத்தழுவி 'அண்ணா! தம்பீ!' என்று மெய்சிலிர்ப்பதும் உண்டு. நிறைய கீழைக்கோட்பாடுகளின் கழுத்தில் உச்சகட்டத்தில் திறந்து பார்க்கவேண்டிய டாலர்கள் தொங்குவதும் சாதாரணம்.


மேலைக்கோட்பாட்டின் முக்கியமான தொடக்கம் என்று அரிஸ்டாடில் என்ற அறிஞர் உருவாக்கிய கதார்ஸிஸ் என்பதைக் குறிப்பிடுவது பள்ளிப்பாட வழக்கம். 'அரிசித்தட்டிலி' என்ற செந்தமிழ்ச் சொல்லின் மரூஉவே அப்பெயரென்றும் கதார்ஸிஸ் என்பது கதையுரசல் என்ற தீந்தமிழ் சொல்லே என்றும் அறிஞர் வேதநேயர் சொல்வதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இலக்கியப்படைப்பில் ஒன்றி கதறி அழும் வாசகர்கள் அதன் மூலம் அப்படைப்பை வாசித்ததையும் சேர்த்து அனைத்துப் பாவங்களையும் களைந்து தூய்மை அடைவதே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. ஏராளமாக வாசிப்பவர்கள் அதிக தூய்மை அடைந்து அடைந்து ஒரு கட்டத்தில் அழுக்குகளுக்காக வெளியே தேடியலைய ஆரம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.


இதை முன்னுணர்ந்தே அரிஸ்டாட்டிலின் முன்னோடியான பிளேட்டோ [பாளையத்தான் என்ற தூயதமிழ்ச் சொல்லின் மரூ, பார்க்க செந்தமிழ் சொல்முறிப்பகராதி] இலக்கியம் முதலிய கலைகளை அவற்றை ரசிக்கும் உணர்ச்சியே இல்லாத தத்துவஞானிகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். பிற்பாடு மத அறிஞர்களும் அதன் பின்னர் அரசியல் அறிஞர்களும் அதன்பின்னர் புரட்சிக்காரர்களும் இக்கருத்தையே முன்னெடுத்தார்கள். இன்று கோட்பாட்டாளர்கள் அதை கடைப்பிடிக்கிறார்கள்.


நல்ல கலை என்பது உள்ளடக்கத்தில் தத்துவத்தைக் கொண்டிருக்கும். தத்துவத்தை கேட்பவர்கள் உடனடியாக அதை மறுக்கிறார்கள். ஆகவே கலைக்குள் தத்துவத்தை பேரீச்சையில் கொட்டையைப்போல உள்ளே வைத்து கொடுக்க வேண்டும் என்பது ரோமாபுரியின் உதித்த ஹெலனிஸ்டிக் அழகியல். கொட்டையை பக்குவமாக துப்பிவிட்டு பேரீச்சையைச் சாப்பிடுவதே நுண்ணிய ரசனை எனப்படுகிறது. சதையை துப்பிவிட்டு கொட்டையை மெல்வது கலையிலக்கிய விமரிசனம். கொட்டையின் அடிப்படையில் பேரீச்சையை மதிப்பிடுவதன் மூலமே மேலதிக இலக்கியக் கலைக்கோட்பாடுகள் உருவாகின்றன. அவற்றில் இருந்து தந்திரமாக தப்புவதற்கான முயற்சியின்மூலம் கலையிலக்கியங்கள் புதிய அழகியலைக் கண்டுபிடிக்கின்றன. இந்த முரணியக்கம் இலக்கியச்செயல்பாட்டின் அடிப்படை விதியாகும். இந்த முரணியக்கத்தை இலக்கியவாதிகள் விமர்சகர்களை கண்டதும் ஓடிப்போய் கட்டிப்பிடித்து நலம்விசாரித்துவிட்டு திரும்பும்போது கெட்டவார்த்தையை வாய்க்குள் முணுமுணுக்கும் பரவலான வழக்கத்தில் இருந்து அறியலாம்.


உயர்ந்தகலை என்பது உயர்ந்த மனிதர்களை படைக்கும் என்று நம்பிய மேலைக்கோட்பாடு கூடவே அக்கலைஞர்கள் கீழ்மையானவர்கள் என்று வகுத்தது. இவ்வாறாக கீழ்மையானவர்கள் கீழ்மையானவர்களாக ஆக எண்ணுபவர்களை மேன்மைப்படுத்தும் பொருட்டு உருவாக்குவதே கலை என்ற வரையறை உருவாகியது. இது மத்தியகாலகட்ட கலைக்கோட்பாடு என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் கலைக்கு இரு பக்கமும் இருவகை மக்கள் உருவானார்கள். ஒருசாரார் கீழே இருந்துகொண்டு அதை மேலே தூக்குகிறார்கள் இன்னொருசாரார் மேலே இருந்துகொண்டு அதை கீழே குனிந்து தூக்குகிறார்கள். முதல்வகையினர் படைப்பாளிகள், கலை அவர்களின் தலைக்குமேலே உள்ளது. இரண்டாம் வகையினர் ரசிகர்கள், கலை அவர்களின் காலுக்கு கீழே உள்ளது. பிந்தையவர்கள் முந்தையவர்களுக்கு பணம் அளித்து புரக்க கடமைப்பட்டவர்கள் என்பது மத்தியகால நம்பிக்கை. உணர்ச்சிமீதூறும்போது கையுறைகளை கழற்றி கலைஞர்கள் மேல் வீசும் வழக்கம் இக்காலகட்டத்தில் உருவானது, அக்காலத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.


மத்திய காலகட்ட கலைக்கோட்பாடு கலைஞர்களை மூன்று வகையாக பிரிக்கிறது. ஜிப்சிகள் ,ஜிப்ஸிகளைப்போன்றவர்கள், கிட்டத்தட்ட ஜிப்ஸிகளைப் போன்றவர்கள். முறையே இவர்கள் கீழ்த்தரக் கலைஞர்கள், நடுத்தரக் கலைஞர்கள், உயர்தரக்கலைஞர்கள் என்று பிரிக்கப்பட்டார்கள். கீழ்த்தரக்கலைஞர்கள் பிரபுக்களின் இல்லங்களில் மதுவிருந்துகளில் உயர்தர பரிசுகள் பெற்றுக்கொண்டு ஆடுவார்கள். நடுத்தரக் கலைஞர்கள் மக்கள்கூடும் சந்திப்புகளில் சில்லறைகள் விட்டெறியப்பட்டு நடிப்பார்கள். உயர்தரக் கலைஞர்கள் ஆளில்லாத தேவாலயங்களில் பியானோவை இசைத்து தங்களுக்குள் பாடிக்கொள்வார்கள். அவர்களுக்காக பாதிரிகள் பிரார்த்தனை செய்வார்கள். அவர்கள் எழுதுவது காவியம் என்றும் பாடுவது செவ்வியல் இசை என்றும் அவர்கள் பாடுவதைக்கேட்டு பாடத்தெரியாத பாதிரிகள் பாடுவது காஸ்பல் இசை என்றும் சொல்லப்பட்டது. நல்ல கலை என்பது தூக்கத்துக்கோ துக்கத்துக்கோ இட்டுச்செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.


நவீனகாலக் கலைக்கோட்பாட்டை உருவாக்கியவர் என்று ஜான் ரஸ்கின் சொல்லபடுகிறார். இவர் நவீன ஓவியர்களைப்பற்றி ஒரு மிகக்கனமான நூலை எழுதினார். அதில் அவர்கள் கலைஞர்களை பொறுக்கிகள் அல்லது நாடோடிகள் என்று சொல்லி அவமதிக்கும் மத்தியகால வழக்கத்தை மிகமிகக் கடுமையாகக் கண்டிக்கிறார். அவர்களை கிறுக்கர்கள் என்று சொல்வதே முறை என்று நிறுவுகிறார். இந்நூல் அத்தனை பெரியதாகையால் அதை வாசிக்காத அனைவருமே அதை நம்பும் நிலை ஏற்பட்டது. விளைவாக கலைஞர்களும் கிறுக்கர்களாக ஆகவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு ஆளானார்கள். அவர்கள் மிதமிஞ்சி மதுவருந்திவிட்டு முச்சந்திச் சண்டைகளில் ஈடுபடுவது காது முதலிய உறுப்புகளை வெட்டி காதலிகளுக்கு அனுப்புவது சிபிலிஸ் நோய் பெறுவது போன்ற வழக்கங்கள் உருவாயின.


இந்தக்காலகட்டத்தில் கலைஞர்கள் தங்களை கிறுக்காக காட்டிக்கொள்ளும் பொருட்டு விசித்திரமான செயல்களைச் செய்துகொண்டே போக அவர்களை பின்தொடர்து செல்லும் தத்துவ ஆசிரியர்களும் இலக்கிய விமர்சகர்களும் அவற்றுக்கு உளவியல் விளக்கமும் குறியியல் விளக்கமும் கொடுத்து அவற்றை கிறுக்கல்லாமல் ஆக்கிக்கொண்டே போகும் வழக்கம் பிறந்தது. ஆகவே புதிய புதிய கிறுக்குகளுக்காக கலைஞர்கள் தேட ஆரம்பித்தார்கள். சால்வடேர் தாலி என்பவர் மீசைக்கு நவச்சாரம் போட்டுக்கொண்டார். அந்தோனின் ஆர்ட்டாட் என்பவர் என்பவர்ஆணுறை என்பது ஒருவகை ஆடையே என்று கண்டு பிடித்தார்.அவற்றை கலைஞர்களின் அன்றாடப்பழக்கமே என விமர்சகர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் பிறரை துணுக்குற வைப்பது நீடித்தது.


பொதுவாக ஒரு கலைஞரின் படைப்பூக்க கிறுக்குத்தனத்தை அவரைப் பார்க்கவருபவர்களும் சாதாரணமாகச் செய்ய ஆரம்பிக்கும்போது அது முடிவுக்கு வருகிறது. இந்த முரணியக்கம் மூலம் கலை முன்னகர்ந்தது. வான்காவின் காதுக்கு மொழியியல் விளக்கம் அளிக்கப்பட்டது, அதுவே காதுமையமொழியியல் என்று பிற்கால பாடநூல்களில் இடம்பெற்றது. மாப்பசானின் சி·பிலிசுக்கு அளிக்கப்பட்ட குறியியல் விளக்கம் ஆச்சரியமாக அமெரிக்கச் சமூகநலத்துறையில் 'பாத்துப்போடு' [Play safe ] என்ற கோட்பாடாக மாறி சுவரொட்டிகளில்கூட இடம்பெற்றது.


கலைஞர்களை உளப்பகுப்பு செய்யும் முறை அதைத்தொடர்ந்து உருவாகியது. சிக்மண்ட் ·ப்ராய்ட் என்பவர் மனநோயாளிகளை சாய்வுப்படுக்கையில் படுக்கவைத்து இருட்டில் அமர்ந்து கேள்விகள் கேட்டு அவர்களை வசியம் செய்தபோது அவர்கள் பல நாவல்களில் தாங்கள் வாசித்த கதைகளின் சாயலில் தாங்கள் புனைந்த பலான கதைகள் மூலம் அவரை திருப்பி வசியம் செய்தார்கள். அந்த முறையே உளப்பகுப்புமுறை என்று சொல்லப்படுகிறது. சிக்மண்ட் ·ப்ராய்ட் நோயாளிகள் பேசுவது இலக்கியம்போல இருப்பதனால் இலக்கியம் என்பதும் ஒரு நோயே என்ற கோட்பாட்டை வகுத்தளித்தார். இதனடிப்படையில் இலக்கியப்படைப்புகளை வாசித்து விரிவாக நோய் நிர்ணயம் செய்து அதற்கு மருந்துகளை பரிந்துரைப்பதே உளப்பகுப்பு இலக்கிய விமரிசனக் கோட்பாடு என்று சொல்லப்பட்டது.


இக்கோட்பாட்டின்படி எல்லா மானுடச்செயல்பாடுகளும் காமத்துக்காகவே செய்யப்படுகின்றன. காமத்தில் நேரடியாக ஈடுபட வாய்ப்பில்லாதவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, பியானோ வாசிப்பது, அரசியல்கிளர்ச்சிகளில் ஈடுபடுவது , உளப்பகுப்பாய்வு செய்வது போன்ற மாற்று முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இலக்கியமும் அத்தகையதேயாகும். இந்தக்கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியவடிவங்கள் தீர்மானிக்கப்பட்டன. ஒரே ஒரு உச்சம் இருப்பதனால் சிறுகதை ஆண்தன்மை கொண்டது என்றும் நாவல் பல உச்சங்களுக்கு வாய்ப்புள்ள பெண்மைவடிவம் என்றும் ஆய்வாளர் வகுத்தமை குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதை சிட்டுக்குருவித்தன்மை கொண்டது என்றும் மரபுக்கவிதை நாய்த்தன்மை கொண்டது என்றும் மேலதிக விளக்கங்கள் இவர்களால் அளிக்கப்பட்டன.


·ப்ராய்டின் நண்பர் சி.ஜி.யுங் என்பவர் ஆழ்படிமம் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். உலகத்தில் உள்ள அத்தனை பேரும் அவர்களின் பாட்டி சொன்ன கதைகளையே திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் அடிப்படை. அவ்விஷயம் யுங்குக்கு அவரது பாட்டியால் சொல்லிக்கொடுக்கப்பட்டது. எல்லா கதைகளையும் சுருக்கி சுருக்கி பாட்டிக்கதைகளாக ஆக்க முடியும், எல்லா பாட்டிக்கதைகளையும் பாட்டிகளாக ஆக்க முடியும், எல்லா பாட்டிகளையும் ஒரே பாட்டியாக ஆக்க முடியும், அந்த பாட்டியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அவர் நிறுவினார். அந்தப்பாட்டி முன்னரே செத்துப்போய்விட்டாள் என்பதனால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இலக்கியத்தை அதன் பாட்டுக்கு விட்டுவிடலாம் என்பதே அவரது நம்பிக்கை. ·ப்ராய்ட் யுங் இருவரும் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார்கள். ·ப்ராய்ட் எழுதிய நூல்கள் தெளிவாக புரியக்கூடியவை. யுங் எழுதிய நூல்களை வாசித்தபின் ·ப்ராய்ட் புரியாமலாகிவிடுவார் என்பதனால் அவர்கள் இருவரையும் சேர்த்தே வாசிப்பது கல்வித்துறை மரபு.


புரட்சியிலக்கியம் என்பது இதற்குச் சமகாலத்தில் உருவாகி வந்த ஒன்று. ஜெர்மனிய யூதரான கார்ல் மார்க்ஸ் அவரது நண்பர் ·ப்ரடரிக் எங்கல்சுடன் இணைந்து மூலதனம் என்ற மாபெரும் நூலை எழுதினார். இதன்படி அவர் ஒட்டுமொத்த சமூகத்தையும் மூன்றாக பிரித்தார். அடக்கி ஆளும் முதலாளிகள், சுரண்டப்படும் தொழிலாளிகள், நடுவே மாட்டிக்கொண்டு முதலாளிக்குமுன் தொழிலாளிகளாகவும் தொழிலாளிக்கு முன் முதலாளியாகவும் தோற்றமளிக்கும் நடுத்தரவர்க்கம். இந்தப் பிரிவினையை மார்க்ஸ் அவரது குடும்பத்திலேயே கண்டடைந்தார். மார்க்ஸ் குடும்பத்தின் முதலாளி. அவரால் பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்ட வேலைக்காரி ஹெலன் டெமுத் உழைக்கும் வர்க்கம். இருவரையும் சமாதானப்படுத்திய ஜென்னி மார்க்ஸ் நடுவர்க்கம். மார்க்ஸ் நோயுற்றபோது அதிகாரம் ஜென்னியின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. அதுவரை மார்க்சுக்கு சேவைசெய்த ஹெலன் டெமுத் ஜென்னிக்குச் சேவைசெய்யலானார்.


இந்தப்பிரிவினை அக்காலத்து ஐரோப்பியக்குடும்பங்கள் அனைத்திலும் இருந்தமையால் எளிமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு பிரபலம் அடைந்தது. இதை இலக்கியத்தில் அப்படியே போட்டுப்பார்க்கலாமென்று பலர் முயன்றபோது முற்போக்கு இலக்கியம் உருவாகித்து. முற்போக்கு இலக்கியம் தொழிலாளிகள் புரட்சி செய்து முதாலாளியை ஒழித்துவிட்டு அதிகாரத்தை புரலட்டேரியன்கள் எனப்படும் நடுவர்க்கத்தினரிடம் பணிவுடன் ஒப்படைப்பதைப்பற்றி பேசுவதாகும். இதை பெரும்பாலும் நடுவர்க்கத்தவரே எழுதி அவர்களே வாசித்து இன்புற்று அவர்களே விமர்சனக்கோட்பாடுகளையும் உருவாக்கிக்கொண்டார்கள்.


சோவியத் ருஷ்யாவில் இருவகையான ஆட்சிக்கோட்பாடுகள் இருந்தன. போருக்குப்போகும் சிப்பாய்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று ஜார் மன்னர் சொன்னார். அரசாங்கம் கிடைக்கும் என்று லெனின் சொன்னார். இரண்டுமே படைவீரர்களுக்கு தெரியாதவை என்பதனால் பாதிப்பேர் சொர்க்கத்தையும் மீதிப்பேர் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் முறையே வெண்படை செம்படை என்று சொல்லப்பட்டார்கள். செம்படை வென்று கம்யூனிச அரசை உருவாக்கியது. வெண்படையினருக்கு நரகமும் செம்படையினருக்கு சைபீரியாவும் அளிக்கப்பட்டது.


செம்படை அரசின் தலைவராக இருந்தவர் ஸ்டாலின். இவருக்கு எழுதப்படிக்க தெரியாதென்பதனால் பிறர் இவருக்காக எழுதினார்கள். ஆகவே இவர் தத்துவ ஞானியாக ஆகி இலக்கியக்கோட்பாடுகளை உருவாக்க ஆரம்பித்தார். இக்கோட்பாடுகளில் முக்கியமானது சோஷலிச யதார்த்தம் என்பதாகும். அதில் உள்ள சோஷலிசத்தை யதார்த்தமும் யதார்த்த்தை சோஷலிசமும் சமன் செய்வதனால் அதன் முரணியக்கம் செவ்வனே நிகழ்கிறது என்று ஸ்டாலின் கருதினார். சோஷலிசத்தை ஏற்காதவர்கள் சைபீரியா என்ற யதார்த்ததை ஏற்கவேண்டும் என்ற கருத்து அவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சோஷலிசத்தை ஏற்றுக்கொண்டவரக்ள் யதார்த்தத்தை அதன் அடிப்படையில் உருவாக்கவேண்டும். சோஷலிச யதார்த்தம் கெட்டி அட்டையுள்ள மலிவுவிலை நூல்கள் மூலம் சோஷலிசம் இல்லாமல் யதார்த்தம் மட்டுமே இருந்த நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நாடுகளில் இது 'மொழிபெயர்ப்புயதார்த்தவாதம்' என்றும் சொல்லப்பட்டது. 'மலிவுவிலையதார்த்தவாதம்' என்ற பெயர் அவதூறாளர்களால் சொல்லபப்ட்டது


இக்காலகட்டத்தில் மார்ட்டின் ஹைடெக்கர் என்ற பலவீனமான கணவர் மனிதனின் ஆகப்பெரிய பிரச்சினை 'ஏன்?' என்று மௌனமாகக் தனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதே என்று கண்டுபிடித்தார். பதில் இல்லாத அளவில் அந்த கேள்வியைக் கேட்கும்போது ஏண்டா கேட்டோம் என்றாகிற நிலையை அவர் இருத்தலியல் பறதி [ஆங்ஸ்ட்] என்று குறிப்பிட்டார். உயிரோடு இருக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. அது இருத்தலியல் கேள்வி என்று சொல்லப்படுகிறது. இருக்கிறேனா இல்லையா என்ற கேள்வி அதற்கு அடுத்த நிலை. இது இருத்தலியல் பதிலின்மை எனப்படுகிறது. இருந்தாரா இல்லையா என்ற கேள்வி ஆயுள்காப்பீட்டூழியர்களால் பின்னர் எழுப்பப்படுகிறது. இது இருத்தலியல் சமன் என்று சொல்லப்படுகிறது. மூன்றும் கலந்ததே இருத்தலியல்.


இருத்தலியல் என்பது இருப்பை அர்த்தமற்றதாக்குகிறது என்றவர் ஜீன் பால் சார்த்ர். ஆகவே படுத்தலே சிறந்தது. இருத்தலியலின் சிக்கலே தனிமை தான். ஆகவே சேர்ந்து படுப்பது அதற்கு தீர்வு. இதற்காக அவர் சீமோன் த பூவா என்ற பெண்மணியுடனும் அவர் தேடிக்கொடுத்த அவரது மாணவிகளுடனும் அதை செய்து பார்த்தார். இவ்வனுபவங்களை 'வாந்தி' என்றபேரில் தத்துவக்குறிப்புகளாக எழுதிவைத்தார். மனிதனின் சிக்கலை துளை என்ற தத்துவக்கட்டுரையில் அலசும் சார்த்ர் துளையை அடைத்தல் என்பதே ஒட்டுமொத்த மானுடவாழ்க்கையின் குறியீடு என்று சொல்கிறார். மரணம் ஒரு பெரிய துளை. இலக்கியம் அதைவிட பெரிய துளை, அதை இலக்கிய விமர்சனம் என்ற கார்க்கை வைத்தே அடைக்க முடியும்.


ஆகவே சார்தர் இருத்தலும் இன்மையும் என்ற நூலை முடிந்தவரை சிக்கலாக பிரம்மாண்டமாக எழுதி அதை எவரும் படிக்கமுடியாதபடிச் செய்தபின், அதில் உள்ள கருத்துக்களைச் சுருக்கமாகச் சொல்லி அவற்றை அந்நூலை வாசிக்காமல் மறுக்கமுடியாத நிலையை உருவாக்கி சிந்தனைத்துறையில் வெற்றி பெற்றார். மனிதன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு புண்ணாக்கும் இல்லை என்ற ஆழமான கருத்தை அதில் அவர் சொல்லியிருந்தார். அந்தக்கருத்தை ஏற்றுக்கொண்டு இருக்கிறேனா, இல்லை இல்லையா, அல்லது இல்லாமலிருக்கிறேனா என்றெல்லாம் கொள்கைக்குழப்பம் அடையும் கதாபாத்திரங்களை கா·ப்கா , காம்யூ போன்ற எழுத்தாளர்கள் எழுதினார்கள். அவற்றை வாசித்து வாசித்தோமா, இல்லை வாசிக்காமலேயே இருந்தோமா , இல்லை வாசிக்காமல் இல்லாமலிருந்தோமா என்ற சந்தேகத்தை உலகமெங்கணும் உள்ள வாசகர்கள் அடைந்தார்கள். இதை இருத்தலிய அலை என்ற கோட்பாட்டுக்கொந்தளிப்பாக குறிப்பிடுகிறார்கள்.


இருத்தலியல் எளிதாக கீழைநாடுகளில் புரிந்துகொள்ளப்பட்டது. பொதுவாக நடுவயது முற்போக்குப் பிராமணர்கள் இதை அடைந்தார்கள் என வரலாறு பதிவுசெய்கிறது. சிறுவயதில் பூணூல் போட மறுக்கையில் அவர்கள் மார்க்சியர்களாக ஆகிறார்கள். திரும்பப் போடுவதா வேண்டாமா என்ற குழப்பம் அவர்களை நடுவயதில் இருத்தலியலாளர்களாக ஆக்குகிறது. 'சரிதான் கழுதை' பையனுக்கு பூணூல் போட முடிவெடுக்கும்போது பின்நவீனத்துவர்களாக ஆகிறார்கள். பிராமணரல்லாதவர்களில் இது வேறுவகையில் செயல்படுகிறது. மதுக்கடையில் இரண்டு வலிது தாண்டப்படுகையில் அவர்களுக்கு இருத்தலியல் சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆனால் சிறுநீர் கழித்தல் மூலம் அவர்கள் இருப்புணர்வை வலுவாக அடைகிறார்கள். ஆகவே அவரக்ளில் இது நீடிப்பதில்லை.


பூவாத்தாள் இரண்டாவது பாலினம் என்ற புத்தகத்தை எழுதினார். அந்நூலை உலகமெங்கும் ஆண்கள் வாசித்து கிளர்ச்சி அடைந்தார்கள். பெண்விடுதலை பேசும் பெண் இன்னமும் கவற்சியானவள் என்று ஆண்கள் கருத ஆரம்பித்ததும் உலகமெங்கும் பெண்களிடையே அந்த மோஸ்தர் காட்டுத்தீ போல பரவியது. பெண்விடுதலைச் சட்டைகள், பெண்விடுதலைக் காதணிகள், பெண்விடுதலை உதட்டுச்சாயங்கள் ,பெண்விடுதலை உயர்குதிக்காலணிகள் பிரபலமடைந்தன. பெண்கள் நாலாதிசையிலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். இது பெண்ணிலக்கியம் என்று சொல்லப்பட்டது. பெண்விடுதலையை ஏற்றுக்கொண்ட இலட்சியத்தோழனை கணவனாக ஏற்றுக்கொண்டபின் காதலனைப்பற்றி கவிதைகள் எழுதுவது பெண்ணிலக்கியத்தின் மையக்கருப்பொருளாகும். அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.


சோவியத் ருஷ்யாவில் கல் உடைப்பவர்கள் கல்லூரிக்கும் கல்லூரி ஆசிரியர்கள் கல்லுடைக்கவும் செல்லக்கூடிய நிலை உருவாகியது. இதை கல்லாசார புரட்சி என்று சொன்னார்கள். கல்லுடைப்பதற்குச் சென்ற சில பேராசிரியர்கள் கல்லை உடைக்க கல்லின் அமைப்பை முக்கியமாக கருதவேண்டும் என்று கண்டறிந்து கோட்பாட்டை உருவாக்கினார்கள். அவர்கள் திரும்பவும் கல்லூரிக்கு வந்தபோது அந்தக்கோட்பாட்டை சொல்லுடைக்க பயன்படுத்திக்கொண்டார்கள். மிகயீல் பக்தின் என்ற பேராசிரியர் மிகவும் பக்தியுடன் உருவாக்கிய இக்கோட்பாடு பின்னர் பலவகைகளில் வளர்ந்து அமைப்பியல் என்று பெயர்பெற்றது. பிரெஞ்சுக்காரர்களுக்கு பின்பக்கம் மிகவும் பிடிக்கும் என்று பாலியலாளர் ஹாவ்லக் எல்லிஸ் சான்றுரைத்திருக்கிறார். ஆகவே அவர்கள் பின்அமைப்புவாதத்தை வளர்த்தெடுத்தார்கள். இதை தெரிதா என்ற அறிஞர் முதலில் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.


பூவாத்தாள் காலத்தில் பெண்கள் முன்பக்கம் விடுதலைபெறுவது அவர்களில் பலவகையான புதிய அசைவுகளை உருவாக்கி விடுதலையுணர்வை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது சமூகத்திலும் பலவகையான சலனங்களை உருவாக்கியது. இந்த வழக்கம் உலகமெங்கும் பரவியதனால் பெண்களில் வளர்ச்சி துரிதப்பட்டது. இந்தவகையான வளர்ச்சியை விரும்பாத ஆண்கள் கச்சிதமான வடிவத்துக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். எந்த ஒரு கலைப்படைப்பும் உரிய கட்டுக்குள் மூச்சுத்திணறியபடி இருக்கவேண்டும் என்று இவர்கள் வாதிட்டார்கள். வடிவத்தால் கட்டுப்படுத்தப்படாத கட்டற்ற அழகியல் என்பது சரிவுக்கு இடம்கொடுக்கும் என்றார்கள் . இந்த முரணியக்கம் மூலம் உருவான சிந்தனைச் சுழற்சியே நவீனத்துவம் என்று சொல்லப்பட்டது. வழக்கம்போல இதற்கு பிரெஞ்சுக்காரர்கள் உருவாக்கிய அடுத்தகட்ட வளர்ச்சி பின்நவீனத்துவம் என்று சொல்லப்பட்டது.


எழுத்தாளனுக்குள் உடுருவி ஆராய்ச்சி செய்வதற்கு எப்போதுமே மேலைத்தத்துவக் கோட்பாடு விழைந்திருக்கிறது. உளவியல் விமரிசனங்கள் அவற்றின் எல்லைகளை அடைந்தபோது மேலே செல்ல வழியில்லாமல் தவித்த ஆய்வாளர்கள் எழுத்தாளனை விட அவன் சடலம் இன்னும் நுட்பமாக ஆய்வுக்கு உதவுகிறது என்று கண்டடைந்தார்கள். குறைந்தபட்சம் அது எதிர்வினையாற்றுவதில்லை. ஆகவே எழுத்தாளன் இறந்துவிட்டான் என்று ரோலான் பார்த் என்ற அறிஞர் சொன்னார். ஆமாம் இறந்துவிட்டான் என்று மற்ற விமர்சகர்களும் சொன்னார்கள். எழுத்தாளர்கள் விமர்சகர்களை மறுப்பது பண்பாடல்ல என்பதனால் அவர்களும் அதை ஒத்துக்கொண்டார்கள். இதன் பின் எழுத்தாளர்கள் விமர்சகர்களுக்கு சுயவிலாசமிட்ட தபால் உறையை அனுப்பி தங்களைப்பற்றி தெரிந்துகொள்ளும் வழக்கம் பிறந்தது.


இந்த கருத்துநிலையை ழாக் தெரிதா படைப்புக்குள் மேலெடுத்தார். படைப்பை வாசகன் தன் இஷ்டத்துக்கு வாசிக்கலாமென்று அவர் கண்டுபிடித்தார். வாசிக்கும்போதுதான் படைப்பு உருவாகிறது. வாசித்து முடித்ததும் அது இல்லாமலாகி குறிப்புகள் மட்டும் எஞ்சுகின்றன. அவை உடனே கட்டுரைகளாக ஆகி, கோட்பாடுகளாக பிரிந்து, நூல்களாக வளர்ந்து, மானியங்களாக உருவம் பெற்று வங்கிகளுக்குச் சென்று சேர்கின்றன. இச்செயல்பாட்டை அவர் வாசிப்புமையவாதம் என்று சொன்னார். தெரிதாவில் இருந்து முன்னகர்ந்த கிரீன்பிளாட் என்பவர் வாசிப்பதற்கு நூலே தேவையில்லை வாசிப்பவனின் செயல்களை வைத்தே நூல்களை நாம் கற்பனைசெய்துகொள்ளலாம் என்றார். இது வாசக எதிர்வினைக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது.


இந்தகாலகட்டத்தில் பின்நவீனத்துவர்களுக்கும் மார்க்சியர்களுக்கும் இடையே சண்டை உக்கிரமாக நடந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மார்க்ஸியர்கள் கடவுள் இல்லாமல் தட்டுத்தடுமாறிய காலகட்டத்தில் லெனின் வரலாறு என்ற கடவுளைக் கண்டுபிடித்தார். ஸ்டாலின் வரலாற்றின் மைந்தர் என்று அழைக்கப்பட்டார். 'வரலாறு தன் ஒரே பேறான புதல்வனை மண்ணுக்கு அனுப்பி இவ்வாறாக மனித குலம் மீது கருணை கூர்ந்தது' என்று மார்க்சிய வாய்ப்பாடு சொல்வதை நினைவுகூரலாம். சிறைக்கு அனுப்பப்பட வாய்ப்பிருந்தபோது ·பிடல் காஸ்ட்ரோ என்ற புனிதர் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்று ஆற்றிய உக்கிரமான பிரார்த்தனை இன்றும் மெய்சிலிர்ப்புடன் அவர்களால் சொல்லப்படுகிறது. நிகழ்ந்தது நிகழ்வது நிகழப்போவது எல்லாமே வரலாற்றின் லீலைகள் என்று சொல்லப்பட்டது


பின்நவீனத்துவர்கள் இதை வரலாற்றுவாதம் என்று சொல்லி மறுத்தார்கள். வரலாறு என்று ஒன்று இல்லை, அது வரலாற்றின் பூசாரிகள் காசு தண்டல்செய்வதற்காக கண்டுபிடித்தது என்றார்கள். 'அடப்பாவி, வரலாற்றையா சொல்கிறாய், நாக்கு அழுகிப்போகாதா?' என்று மார்க்சியர்கள் வசைபாடினார்கள். நாற்பத்தேழாயிரத்துச் சொச்சம் நூல்கள் வழியாக இந்த உரையாடல் நடைபெற்றது. கடைசியில் வரலாற்றுவாதம் பேசிய மார்க்சியர்களில் சிலர் புலம்பெயர்ந்த யாழ்ப்பாண வேளாளர் சிலரை டிம் ஹார்ட்டன் காபி கடையில் சந்தித்து உரையாடும்போது கந்தபுராணம் பற்றி அறியநேர்ந்தது. சூரபத்மனும் முருகனுடைய தோற்றமே என்ற யாழ்ப்பாணிகளின் கூற்று புதிய திறப்பாக அமைந்தது. வரலாற்றை மறுக்கும் வாதங்களும் வரலாற்றின் விளையாட்டே என்று வாதிட்டார்கள். இது திருவிளையாடல்கோட்பாடு என்றும் புதுவரலாற்றுவாதம் என்றும் சொல்லப்பட்டது.


விளைவாக பின்நவீனத்துவம் இரண்டாகப் பிளக்கப்பட்டு வரலாற்றின் ஆயுதமும் கொடியுமாக ஆக்கப்பட்டது. மார்க்ஸியப்பின்நவீனத்துவம் அல்லது பின்நவீனத்துவ மார்க்சியம் அல்லது பின்மார்க்ஸியநவீனத்துவம் உருவாகி அது மேலும் நூல்களாக வளர ஆரம்பித்தது. இலக்கியக்கோட்பாட்டின் விதிகளில் ஒன்று குழப்பம் மிகும்தோறும் அதிக கோட்பாடுகள் உருவாகும் என்பதே. ஆகவே இந்த இணைப்பின் விளைவாக விளிம்புநிலைவாதம், பின்காலனியவாதம், கீழையியம் என்றெல்லாம் மேலும் மேலும் கோட்பாடுகள் வர ஆரம்பித்தன. கோட்பாடுகளின் சுமை தாங்காமல் இலக்கியத்தின் கிளைகள் ஒடிய ஆரம்பித்தபோது கோட்பாடுகளை கட்டுப்படுத்தும் புதிய கோட்பாடுகள் உருவாகி வந்தன. ஒருகட்டத்தில் கோட்பாடுகளின் போக்குவரத்து ஸ்தம்பித்து எங்கும் ஆரன் ஒலிகள் மட்டும் நிறைந்தது.


இந்நிலையை ஆராய்ந்த சென்னை அய்யரான ராமச்சந்திரன் என்பவர் இதற்கு முன்னுதாரணம் ஏதேனும் உள்ளதா என்று இந்திய மரபை கவனித்தார். பன்னிரண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழகச் சூழலில் அத்வைதம் விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அத்வைதாதுவைதம், அத்தைவிசிஷ்டம், விசிஷ்டதுவைதம், துவைதவிசிஷ்டம், துவையலத்வைதம் ,அத்வைதவிஷிஷ்டம் என்றெல்லாம் கொள்கைகளும் அக்கொள்கைகளுக்கு உரைகளும் அந்த உரைகளுக்கு உரைகளும் அந்த உவ்வுரைகளுக்கு சொல்லடைவுகளும் அச்சொல்லடைவுகளுக்கு அகராதிகளும் அந்த அகராதிகளுக்கு தோத்திரங்களும் அந்த தோத்திரங்களுக்கு மறு விளக்கங்களும் உருவான நிலை இருந்ததை கண்டடைந்தார். இதை அவரது தாத்தா ஒட்டுமொத்தமாக பகவான்லீலை என்று வரையறுத்திருந்தார்.


ராமச்சந்திரன் அதை ஆங்கிலத்தில் மூளையின் லீலைகள் என்று விளக்கி ·பாண்டம்ஸ் அ·ப் பிரெயின் என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அழகியல் என்பது மூளையின் சிக்கலே என்று அவர் சொன்னது அக்கணமே ஒரு கோட்பாடாக ஆன விந்தையைக் கண்டு மனமுடைந்து அவர் உளப்பகுப்பாளரிடம் சென்று மல்லாந்தபோது அவர் 'கோட்பாடுகளை ஒன்றும் செய்ய முடியாது. கோட்பாடுகளை எதிர்ப்பவர்கள் கோட்பாடுகளை உருவாக்குபவராக ஆவார். உலகில் உள்ள அத்தனை கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளை எதிர்த்தவர்களே' என்ற கோட்பாட்டை சொல்லி மருந்து எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகிறது

தொடர்புடைய பதிவுகள்

கவிதை,கடிதங்கள்
சாதனைக்கவிதைபற்றி
அசோகவனம் – விமர்சனம்
கடிதங்கள் – அசோகவனம்
அசோகவனம்
பரிந்துரை
மோவாயிசம், தாவாயிசம்-கடிதங்கள்
மோவாயிசம்
பரிபாஷை பரவிய நிமிடங்கள்!!!
கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2011 11:30

October 24, 2011

பாரதி மகாகவியே

என்னிடம் பல நண்பர்கள் கடிதம் மூலம் ஒரு வினாவைக் கேட்டார்கள். பாரதி மகாகவியா என வாதித்த தரப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என. ஜடாயு, மரபின்மைந்தன், எம்.டி.முத்துக்குமாரசாமி மூவருமே தங்கள் தரப்பைத் தீவிரமாக எடுத்துச்சொன்னார்கள் என்றும், இந்த விவாதம் தீவிரமாக முன்னகர அவர்கள் காரணம் என்றும் சொன்னேன். இதை நான் விவாதமாகவே பார்க்கிறேன், முடிவுகட்டலாக அல்ல. ஆகவே விவாதத்தின் வலுவான எல்லாத் தரப்புக்குமே இணையான மதிப்புதான்.


சரி, அந்த எதிர்விவாதங்களில் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்டார்கள். இல்லை, விவாதத்தின் மையத்தை நோக்கி வந்த எதிர்வாதங்கள் மிகவும் குறைவே என்று நான் பதிலளித்தேன். இது விவாதம் மட்டுமே என்று நீங்கள் கருதினால் பாரதி மகாகவியே என நீங்களே வாதிட்டு எழுதமுடியுமா என்றார்கள்.


ஆர்வமூட்டும் வினா. என்னுடைய தரப்புக்கு எதிராக நானே என்னென்ன குறைபாடுகளைச் சொல்லலாம்? நானே உணரக்கூடியவை, உலகளாவிய விவாதத் தளத்தில் எப்போதும் திரும்பத்திரும்ப முன்வைக்கப்படக்க்கூடியவை. அவற்றைத் தொகுத்துமுன்வைப்பது ஒருவகையில் மேலும் விவாதம் முன்னகருமென்றால் உதவியாக இருக்குமென்ற எண்ணம் ஏற்பட்டது.


பாரதி மகாகவி என்ற தரப்பை எடுத்திருந்தால் நான் இவ்வாறு வாதிடுவேன்.


 



மகாகவி என்ற அளவுகோல்


உலகஇலக்கியம் என்ற கருதுகோள் பதினேழாம்நூற்றாண்டில் மெல்லமெல்ல உருவான பின்னணியைத்தான் நாம் முதலில் பார்க்கவேண்டும். காலனியாதிக்கம் மூலம் உலகமெங்கும் ஐரோப்பியமொழிகள் சென்று சேர்ந்தன. அம்மொழியின் அறிஞர்களால் உலகமொழிகளின் இலக்கியங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு அம்மொழிகளை அடைந்தன. அவ்வாறு உலகஇலக்கியம் என்ற கருதுகோள் உருவாகியது. அதிலுள்ள மானுடம்தழுவிய இலட்சியவாதத்தை நாம் மறுக்கமுடியாது. உலகம் , மானுடம் போன்ற சொற்களை நடைமுறை உண்மைகளாக ஆக்கிய அந்தத் தொகுப்புப்பார்வையையும் நாம் நிராகரிக்கமுடியாது.


ஆனால் இந்நிகழ்வு அந்த இலட்சியவாதத்தால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல. அந்த மொழியாக்கங்களை நிகழ்த்திய பிரக்ஞையைக் கட்டுப்படுத்திய சில கூறுகளையும் கணக்கில்கொண்டாகவேண்டும். அவ்வாறுதான் ஐரோப்பியமொழிகளுக்குச் சென்றுசேர்ந்த அந்த உலக இலக்கியம் உண்மையில் என்ன என்ற வினாவுக்கு நாம் சென்றுசேர முடியும்.


ஒன்று, ஐரோப்பிய மொழிகளின் மொழிக்கட்டுமானம். உலகமொழிகள் ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய மொழிக்கட்டுமானமும் குறிப்புணர்த்தும் இயல்பும் கொண்டவை. அவற்றில் பலமொழிகளுக்கு ஐரோப்பிய மொழிகளின் மொழிக்கட்டுமானம் மற்றும் குறிப்புணர்த்தும் இயல்புடன் மிகப்பெரிய இடைவெளி உண்டு. அந்த இடைவெளி மொழியாக்கங்களில் வகித்த பங்கு மிக முக்கியமானது


உதாரணமாக சீன, ஜப்பானிய மொழிகளின் இயங்குமுறையே வேறு. ஒரு சொல்லை எந்த எழுத்தால் எழுதுகிறோம் என்பதை ஒட்டி அந்தச் சொல்லின் அர்த்தம் மாறுபடும் இயல்பு அம்மொழிகளுக்குண்டு. எழுத்துக்களின் இணைப்புகளை அமைப்பதிலும் எந்த ஐரோப்பிய மொழியிலும் இல்லாத தனித்தன்மைகள் உண்டு. ஆகவே அந்த மொழிகளில் இருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள் அவற்றின் ஐரோப்பிய வடிவங்கள் மட்டுமே. ஓர் ஆக்கம் ஐரோப்பிய மொழிக்கட்டுமானத்துக்குள் நுழைந்ததுமே அடிப்படையான ஓர் திரிபை அடைந்துவிடுகிறது. சாராம்சமான ஒன்றை இழந்துவிடுகிறது. ஜப்பானிய ஜென் கவிதைகளின் மொழியாக்கங்களுக்குள் உள்ள பிரமிப்பூட்டும் வேறுபாடு அதையே சுட்டுகிறது.


இரண்டாவதாக ஐரோப்பிய வாசிப்பு முறை. வாசிப்பு என்பது எப்போதுமே முன்நிபந்தனைகள் கொண்டது. ஓர் ஐரோப்பிய வாசகர் ஐரோப்பிய இலக்கியச் சொற்களனில் நின்றுகொண்டுதான் எந்த அன்னிய இலக்கியத்தையும் வாசிக்கிறார்.அவருக்கு அந்த சொற்களனில் எது அர்த்தப்படுகிறதோ அதையே அவர் எடுத்துக்கொள்கிறார். சொற்கள் கூட ஐரோப்பிய சொற்களனில் வேறு அர்த்தம் அளிக்கக்கூடும். அரபு, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் நுட்பமான பலபொருள் அளிக்கக்கூடியவை.


இந்திய ,அரேபிய நூல்களை ஐரோப்பிய மொழிகளுக்குக் கொண்டுசெல்லும்போது கூட இந்த அம்சம் ஆழமான மாற்றங்களை உருவாக்குகிறது. உமர் கய்யாமின் ருபாயத் மொழியாக்கம் இதற்காக எப்போதுமே சுட்டிக்காட்டப்படுகிறது. மூலத்தில் உள்ள களியாட்டமென்பது ஒரு சூபி தளத்தில் நிகழும்போது ஃபிட்ஜெரால்டின் மொழியாக்கத்தில் அது உலகியல் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது. வேதங்களுக்கான ஆர்.டி.எச்.கிரிஃபித்தின் அற்புதமான மொழியாக்கம் ஓர் ஐரோப்பிய வேதத்தையே உருவாக்கியது என்று அரவிந்தர் சொல்லியிருக்கிறார்.


ஆகவே ஐரோப்பியச் சூழலில் வந்து சேர்ந்த உலக இலக்கியம் என்பது அங்கே ஏற்கனவே இருந்த இலக்கியக்களத்தின் விரிவாக்கமாகவே அமைந்தது. அது உலக இலக்கியம் அல்ல. அது உலகளாவிய கவிக்கூறுகளைக் கொண்டு விரிவாக்கம்செய்யப்பட்ட ஐரோப்பிய இலக்கியமே. அந்தத் தளத்தில் காளிதாசனும் உமர்கய்யாமும் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதையே அவர்கள் ஆராய்கிறார்கள். இது உலகின் எந்த மொழிக்கும் பொருந்தும். எங்கும் உலக இலக்கியம் சென்று சேர்வதில்லை. ஆகவே உலக இலக்கியமென்பது ஒரு வகையான இலட்சிய உருவாக்கமே ஒழிய யதார்த்தம் அல்ல.


மேலும் உலக இலக்கியம் என இன்று சொல்லப்படுபவை கூட மிகமிக எல்லைக்குட்பட்டவையே. ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று கவனத்தைக் கவர்ந்த நாடுகளின் இலக்கியங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது அந்த உருவகம். அந்த எல்லைக்குள்தான் உலக இலக்கியமென்றால் என்ன என்று வகுக்கப்பட்டுள்ளது. உண்மையில் உலகம் அதற்கு வெளியேதான் விரிந்து கிடக்கிறது. இன்னும் உலகஇலக்கியம் என்ற வட்டத்துக்குள் வராத பேரிலக்கியங்கள் பல மொழிகளில் இருக்கலாம். இன்னும் உலக கவனத்துக்கே வராத ஆப்ரிக்காவில், தென்னாசியாவில், அரேபியாவில் எங்கெல்லாம் உலக இலக்கியத்தின் என்னென்ன வகைகள் பரவிக்கிடக்கின்றன என்று நமக்கு தெரியாது.


பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும்தான் உண்மையில் உலகைக் கண்டடையவேண்டுமென்ற ஆசை ஐரோப்பாவில் இருந்தது. அப்போதுதான் உலக இலக்கியம் மீதான ஆர்வமும் தேடலும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டு உலக ஆதிக்கத்துக்கான கனவு மேலோங்கிய காலகட்டம். இன்று ஐரோப்பாவுக்கோ உலகில் வேறெந்த நாட்டுக்குமோ உலகை உண்மையில் அறிய, உலக இலக்கிய உருவகத்தை தொடர்ந்து ஆக்கபூர்வமாக மாற்றியமைக்க ஆர்வமே இல்லை.


இன்று உலக இலக்கிய உருவகம் என்பது உலகநாடுகளின் அதிகாரச் சமநிலைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. எந்த நாடு ஆதிக்கச்சதுரங்கத்தில் முன்னால் காய்நகர்த்துகிறதோ அதன் இலக்கியம், பண்பாடு மீது கவனம் படிகிறது. சீன இலக்கியமும் சீன சினிமாவும் உலகளாவ கவனம் பெறுகின்றன. அரசியல்காரணங்களால் செய்திகளில் அடிபடும் நாடுகள் கவனிக்கப்படக்கூடும். தன் பண்பாட்டுத் தனித்தன்மையால் ஒரு நாடு கவனம்பெறும் காலம் முடிந்துவிட்டது. போரிலும் பட்டினியிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்தொழிந்தாலும் உலகம் கவனிப்பதில்லை.


பத்தொன்பதாம் நூற்றாண்டு தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆரம்பநிலையில் இருந்த காலகட்டம். அன்று செய்யப்பட்ட மொழியாக்கங்களும் அன்று அடையப்பட்ட புரிதல்களும் மிகமிக எல்லைக்குட்பட்டவை. தகவல்தொடர்பின் யுகமான இன்று எவருக்கும் உலகப்பண்பாட்டை உண்மையில் அறிய ஆர்வமில்லை. அதாவது பண்பாடு சார்ந்த ஓர் உலகப்புரிதல் உருவான ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. உலக இலக்கியம் உருவான தொடக்கப்புள்ளியிலேயே உறைந்து விட்டது. சென்ற ஐம்பதாண்டுகளாக உலகின் கவனத்தைப்பெற்ற பேரிலக்கியப்படைப்பு என ஏதுமில்லை என்பதே ஆதாரம்.


அந்த ஆரம்பகாலகட்டத்தில் அன்றைய ஐரோப்பிய இலக்கியவாதிகள் அவர்களிடமிருந்த அளவுகோல்களுடன் ஒத்துப்போகும் ஆக்கங்களை உலகமெங்கும் இருந்து கொண்டுவந்து உலக இலக்கிய உருவகமொன்றை உருவாக்கினார்கள். அந்த உலக இலக்கியம் வழியாக உருவாக்கப்பட்ட அளவுகோல்கள் இன்றும் செல்லுபடியாகுமென எப்படிச் சொல்லமுடியும்? அதன்பின் அவ்வளவுகோல்கள் எப்போதாவது விரிவான மறுபரிசீலனைக்கு ஆளாகியிருக்கின்றனவா?


உலகில் ஒன்றுடன் ஒன்று உரையாடிய பகுதிகளின் பண்பாடுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டது உலக இலக்கியம் என்ற கருதுகோள். அவற்றுக்கிடையே ஒரு பொதுச்சொற்களன் உருவானது இயல்பே. உரையாடும்தன்மை அவற்றுக்கிடையே உள்ளது என்பதனால்தான் அது சாத்தியமானது. அவ்வாறு உரையாடும்தன்மையே இல்லாத பண்பாடுகள் இந்த அளவுகோலில் கணக்கிலெடுக்கப்பட்டனவா? அவற்றின் இலக்கியங்கள் இங்கே என்ன மதிப்பு பெறும்?


உதாரணமாக, இன்று பெருங்காப்பியங்கள் என உலகஇலக்கியத் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துமே முழுக்கமுழுக்க எழுத்துவடிவுக்குள் நின்று தொடர்புறுத்தக்கூடியவை. டிவைன் காமெடியானாலும் சரி, கம்பராமாயணமானாலும் சரி. ஆனால் ஆப்ரிக்காவில் ஒரு பெருங்காப்பியம் முழுக்கமுழுக்க வாய்மொழிவடிவில் இருக்கிறதெனக் கொள்வோம். அது இந்த அளவுகோல்களுக்குள் சிக்குமா? அந்தப் பெருங்காப்பியம் ஒரு நிகழ்த்துகலையாகவே நடத்தப்படமுடியும் என்றும், முகமூடிகள் சிலைகள் போன்ற பல்வேறு குறியீடுகள் மூலம் மூன்றாவது ஒரு அர்த்த தளமும் அதற்கு உண்டு என்றும் கொள்வோம். ஒவ்வொரு கணமும் அது புதியதாகவே நிகழும் என்றும் கொள்வோம். அதை எப்படி விர்ஜிலின் காவியத்துடன் ஒப்பிடுவது?


ஆகவே , உலக இலக்கியமென்பது ஒரு எல்லைக்குள் ஒரு காலகட்டத்துக்குள் நிற்கும் ஒன்றாகவே இன்றும் உள்ளது. சொல்லப்போனால் இன்னும் அது உருவாக்கப்படவே இல்லை. அப்படியென்றால் அவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட அளவுகோல்களுக்கு என்ன மதிப்பு?


மகாகவி என்ற இன்றைய அளவுகோல் அவ்வாறு உருவாக்கப்பட்டது. சென்ற முந்நூறாண்டுகளில் ஐரோப்பாவை மையமாக்கி உருவாக்கப்பட்ட மைய இலக்கியப்போக்குடன் உரையாடும் படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகளை ஒருவரோடொருவர் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டது அது. அவற்றை உலக அளவுகோலாகக் கொள்ளமுடியாது. மகாகவி என்ற சொல்லுடன் உலக அளவில் இணைக்கப்படும் எல்லா அளவீடுகளும் மிகமிக எல்லைக்குட்பட்டவை.


இந்த வாதங்களையே இந்திய இலக்கியம் என்ற தளத்துக்கும் போடுவேன். இந்திய இலக்கியமென்பது சில இந்தியாவளாவிய மதிப்பீடுகளால் உருவாக்கப்பட்டது. இந்திய மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லப்படும் காலகட்டத்தில் சில இந்தியா தழுவிய மதிப்பீடுகள் முன்னிறுத்தப்பட்டன. வைதீக,பக்தி மரபு ஒன்று. ஐரோப்பாவை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு நவீன மரபு இன்னொன்று. பெரிதும் வட்டாரத்தன்மைகொண்ட நாட்டார்மரபு மூன்றாவது. இவற்றுடன் உரையாடும் நூல்களே மொழியாக்கம்செய்யப்பட்டன. அவை வழியாகவே எல்லா மொழிகளிலும் இந்தியஇலக்கியம் உருவாகியது. அங்கே உருவாக்கப்பட்ட அளவுகோல்கள் மிக எல்லைக்குட்பட்டவை


ஆகவே மகாகவி என ஒருவரை பொதுவாக வரையறைசெய்வது மிகச் சிறிய ஒரு வட்டத்தை மட்டும் கணக்கில்கொண்டுதான் நிகழமுடியும். அதற்கு இன்று அளிக்கப்படும் அர்த்தங்களை மறுபரிசீலனைசெய்தாகவேண்டும். விரிவாக்கியாகவேண்டும்



பாரதியின் தனித்துவம்


மேலே கூறப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பாரதியை மதிப்பிட்டு மகாகவி அல்ல என்று கூறுவது எல்லைக்குட்பட்ட வாசிப்பே. உலக இலக்கியம் என்றும் இந்திய இலக்கியம் என்றும் வட்டமிடப்பட்ட எல்லைக்கு வெளியே பெருங்கவிஞர்கள் இருக்கக் கூடும். இன்னும் கூட கவனிக்கப்படாத கவிஞர்கள் இருக்கலாம். இந்திய இலக்கியம் என்ற அந்த வட்டத்தை இறுதியாக எவரும் வகுத்துவிடவில்லை என்பதனால் பாரதி மீது இறுதியான மதிப்பீடுகளையும் போட்டுவிடமுடியாது.


ஒருகவிஞன் நின்றுபேசும் பண்பாட்டுக்களம் அவனை அர்த்தப்படுத்திக்கொள்ள முக்கியமானது. அந்தப்பண்பாட்டுக்களத்துக்கு இடமே இல்லாத வேறு பண்பாட்டுக்களத்தில் அவனைக் கொண்டுசெல்லும்போது அவனுடைய கவித்துவத்தின் திட்டவட்டமான தளங்கள் பல மறைந்துவிடுகின்றன. அதன்பின்னரும் எஞ்சுவது அவனுடைய அகம் வெளிப்படும் விதம் மட்டுமே. அவன் ஆளுமை மட்டுமே. அந்நிலையின் அவன் கவிதையில் அவன் என்னவாக எஞ்சுகிறான் என்பதைக்கொண்டே அவனை மதிப்பிடவேண்டும்.


இந்தியாவின் எந்த நவகவிஞர்களுக்கும் பாரதி நின்று பேசிய பண்பாட்டுத்தளம் இல்லை. தமிழ் பிரம்மாண்டமான ஒரு மரபிலக்கியப்பின்னணி கொண்ட தொல்மொழி. 'வானமளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி' .அதன் செவ்விலக்கியப் பாரம்பரியம் மகத்தானது. அவ்வாறு செவ்விலக்கியப் பாரம்பரியம் வலுவாக இருந்தமையாலேயே தமிழின் நாட்டார் பாரம்பரியமும் அதே அளவுக்கு வீச்சுடன் இருந்தது. இந்த இரு கடந்தகால விரிவுடன் வந்து நவீனகாலகட்டத்தை மோதியது தமிழ். பிறமொழிகளில் நிகழ்ந்த மோதலைப் படகுகளின் மோதல் என்றால் இதைக் கப்பலின் மோதல் என்று சொல்லவேண்டும். அந்த மோதலின் புள்ளியில் நிகழ்ந்தவன் பாரதி.


தாகூரோ,ஆசானோ, குவெம்புவோ பாரதிக்கு நிகரான ஒரு பண்பாட்டுக் களத்தை எதிர்கொள்ளவில்லை. ஒருவேளை சம்ஸ்கிருதத்தில் அல்லது பாலியில் ஒரு நவீனகவிஞன் வந்திருந்தால் அவனுடன் மட்டுமே பாரதியை ஒப்பிட்டுப்பார்க்க முடியும். பாரதியை நாம் இந்தியத் தளத்திற்குக் கொண்டுசென்று நிறுத்தும்போது இந்த அம்சத்தை அங்குள்ள வாசிப்புக்குக் கொண்டு சென்றதில்லை. பாரதியை உலகக் கவிஞர்களுடன் ஒப்பிடும்போதுகூட அரபுக் கவிஞர்கள் அல்லது சீனக் கவிஞர்கள் மட்டுமே உலக இலக்கியத்தில் சந்திக்கூடிய ஒரு சூழலை அவன் கையாண்டான் என்பதை கவனிக்கவேண்டும்


இந்த இரு தொல்மரபுகளை பாரதி எப்படி எதிர்கொண்டான் , அவற்றை எப்படி நவீனத்துவத்துடன் இணைத்தான் என்பதே அவனைப் பெருங்கவிஞனாக்குகிறது. அவன் உருவாக்கியது ஒரு பெரிய நவீன இலக்கியச் சொற்களனை. அந்தச் சொற்களனின் உருவாக்கத்தில் அவனுடைய ஒவ்வொரு கவிதைக்கும் பங்களிப்புண்டு. அவனுடைய ஒட்டுமொத்தமான படைப்புலகையும் ஒரே பெரும்படைப்பாக எடுத்துக்கொண்டு அவனை மதிப்பிடவேண்டும்.


அந்த படைப்புருவாக்கத்தில் அவனுடைய ஏற்பு மட்டுமல்ல நிராகரிப்பும் மிக முக்கியமானது. அவை ஒவ்வொன்றும் தமிழ்ப்பண்பாட்டின் அடுத்த காலகட்டத்தை உருவாக்குவதற்கான திருப்புமுனைகளாக அமைந்திருக்கின்றன. இத்தனை பிரம்மாண்டமான ஒரு மரபிலக்கியத்தின் வாரிசான பாரதி, அவற்றை கற்றுத் தேர்ந்திருந்த பண்டிதனாகிய பாரதி, இத்தனை எளிய கவியுலகை உருவாக்கியதே முதல் பெரும் அற்புதம். பிரம்மாண்டமான ஆலயக்கதவின் வெண்கலக்கீல் ஓசையே இல்லாமல் வெண்ணைபோலக் கதவைச்சுழற்றுவதைப்போல பாரதியில் தமிழ் மரபின் திசைமாற்றம் நிகழ்ந்தது.


உதாரணமாக, நம்முடைய பிரம்மாண்டமான செவ்விலக்கிய மரபு அடைமொழிகளை, வர்ணனைகளைக்கொண்டே பேசிப்பழகியது. மிகையின் உச்சத்தைக் கம்பனில் தொட்டது. எளிய நேரடியான கவிமொழியை பாரதி தேர்வு செய்தது தமிழின் திருப்புமுனை. உ.வே.சாமிநாதய்யர் போன்ற பாரதியின் சமகாலத்துத் தமிழறிஞர்கள் அனேகமாக அனைவருமே பாரதியை நிராகரித்திருப்பதையே நாம் காண்கிறோம். தன் கவிதையைத் தன் ஆன்மாவாகவே கொண்ட கவிஞனே சமகாலத்தை மீறி எழமுடியும்


கம்பனைத் தமிழ் பெருமரபின் முதல்கவிஞனாகக் கண்ட பாரதி கம்பனின் கவிதை அழகியலை முழுமையாகவே துறந்ததென்பது எளிய விஷயமல்ல. . தமிழில் பாரதி ஒரு பெருங்காவியத்தை எழுதவில்லை என்பது மட்டும் அல்ல அத்தகைய காவியமே தேவையில்லை என்ற முடிவை எடுத்ததுகூட முக்கியமானது. பாஞ்சாலி சபதம் முன்னுரையில் தன் எண்ணத்தைத் தெளிவாகவே முன்வைக்கும் பாரதி பாஞ்சாலி சபதத்தைக் கம்பராமாயணத்துக்கு நிகரான நவீன கால மாற்று என்று எண்ணியிருந்தார் என்றே கொள்ளமுடிகிறது.


பாஞ்சாலிசபதம் உட்படத் தன் கவிதைகளில் கம்பனுக்கு நேர் மாறாக எல்லா அலங்காரங்களையும் துறந்த , இயல்பையே அழகாகக் கொண்ட ஒரு மொழியை பாரதி உருவாக்குகிறான். கம்பன் எழுதிய பின் பாரதி வரை ஏறத்தாழ ஆயிரம் வருடம் கம்பனின் அழகியலே தமிழ்க்கவிதையில் நீடித்தது என்பதை நாம் பார்க்கவேண்டும். இன்றும்கூடக் காளிதாசனின் அழகியலை சம்ஸ்கிருத கவிதை தாண்டவில்லை என்பதையும் சேர்த்து சிந்திக்கவேண்டும்.


பிற இந்தியக் கவிஞர்கள் நாட்டார் அம்சங்களை எப்படிக் கவிதையில் எடுத்தாண்டார்கள்? அவர்களின் மரபே நாட்டார் மரபுக்கு மிக நெருக்கமானதுதான். உதாரணமாக இந்தியமொழிகளில் எதிலும் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் நடுவே தமிழில் உள்ளதுபோன்ற பெரும் இடைவெளி இல்லை. வங்காளியிலும் கன்னடத்திலும் நாட்டார் பாடல்களுக்கும் செவ்வியல்பாடல்களுக்கும் பெரிய வேறுபாட்டைக் கண்டுபிடிக்கமுடியாது. தமிழில் அப்படி அல்ல. அவை முற்றிலும் வெவ்வேறு அழகியல்கொண்ட இரு பெருக்கெடுப்புகள்.


அவற்றை பாரதி இணைத்த விதமே நவீனத்தமிழை உருவாக்கியது. நாட்டார் மரபிலிருந்து பாரதி எதை எடுத்துக்கொண்டான் என்பதை கவனிக்கவேண்டும்.நம் நாட்டார் மரபில் உள்ள முக்கியமான அம்சங்கள் மூன்று. 1. உணர்ச்சிகளையும் செய்திகளையும் நீட்டி நீட்டி வளர்த்திச்செல்லும் போக்கு 2. தாளக்கட்டு 3 . அலங்காரம் தவிர்த்தவையும் அனுபவத்திலிருந்து நேரடியாக வந்தவையுமான மிக எளிய படிமங்கள். பாரதி நாட்டார் மரபில் இருந்து எடுத்துக்கொண்டது அவற்றின் சரளத்தன்மையை மட்டுமே.


அதாவது இரண்டாயிரம் வருடத்து பேரிலக்கிய மரபு எதை இழந்திருந்ததோ அதை பாரதி நாட்டார் மரபிலிருந்து எடுத்துக்கொண்டான். கருவில், கூறல்முறையில் எல்லாம் செவ்வியல் ஓங்கிய ஒருநவீன காவியத்தில்


'பூமி யதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப்


பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.


சாமி தருமன் புவிக்கே -என்று

சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்!


என நாட்டார்பாடலின் சரளமான வேகம் நிகழ்ந்திருப்பதையே பாரதியின் அபாரமான தனித்தன்மையாகக் கொள்ளவேண்டும். புரிசை கண்ணப்ப தம்புரான் இந்த வரிகளை நாட்டார்கலையான தெருக்கூத்தில் திரும்பக் கோண்டுசென்று சாதாரணமாகப் பயன்படுத்தமுடிகிறது என்பதே முக்கியமானது.


அதேபோல ஐரோப்பிய நவீனத்துவத்தை எப்படி பாரதி எதிர்கொண்டான் என்பதும் அவனை மதிப்பிடுவதற்கு மிக முக்கியமானது. ஐரோப்பிய நவீனத்துவத்தை இந்தியர் இருவகையிலேயே எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒன்று பழம்பெருமைபேசி. இன்னொன்று பழமையைத் தூக்கிவீசி நவீனத்துவம் நோக்கிப்பாய்ந்து சென்று. 'பழமை பழமை என்று பாவனை பேசலின்றி பழமை இருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்?' என இரு தரப்புக்குமே பதில் சொல்கிறான் பாரதி.


மரபின் மிகச்சிறந்த பகுதியைக்கொண்டு நவீனத்துவத்தின் மிகச்சிறந்த பகுதியை எதிர்கொள்வதே பாரதியின் வழியாக இருந்தது. மிகச்சிறந்த உதாரணம் வசனகவிதைகள். வால்ட் விட்மனை உபநிடதங்களின் மொழியால் எதிர்கொண்டு இரண்டுக்கும் அப்பாலுள்ள ஒரு எல்லையை தீண்ட எழுகிறான். ஆங்கில plain poetry வடிவின் சாத்தியங்களை தொடும் குயில்பாட்டு நவீன வேதாந்த உள்ளடக்கம் கொண்ட ஒரு நீண்ட நாடகீயத்தன்னுரையை கையாள்கிறது.


பாரதியின் ஒட்டுமொத்தக் கவியுலகையும் இந்த மூன்று பெரும்மரபுகளையும் அவன் எங்கெங்கு எப்படியெல்லாம் இணைக்கிறான், எவற்றை விலக்குகிறான் எவற்றை எடுத்துக்கொள்கிறான் என்ற கோணத்தில் விரிவாகவே வாசிக்கவேண்டும். அனேகமாக ஒவ்வொரு கவிதையிலும் அந்த ஊடுபாவுகளின் பின்னல் நிகழ்ந்திருக்கிறது. ஆகவே அவனுடைய ஒட்டுமொத்தகவிதைப்படலமே முக்கியமானது


பாரதியைப் பிற இந்தியக் கவிஞர்களுடன் ஒப்பிடுவதென்றால் இவ்வாறு ஒட்டுமொத்தமாக, அவன் நின்றுபேசிய சூழல் குறித்த விரிவான விளக்கத்துடன், எடுத்துக்கொண்டுதான் செய்யவேண்டும். அவ்வாறு இந்தியச் சூழலில் ஒரு ஆய்வோ ஒப்பீடோ நிகழ்ந்ததில்லை. அதைச்செய்யும் அளவு ஆற்றலுடன் பாரதியை எவரும் இந்தியச்சூழலில், எந்த மொழி வழியாகவும், எடுத்துச்சென்றதில்லை. அர்த்தமற்ற உதிரி மொழியாக்கங்கள் வழியாகவே பாரதியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.



பாரதியின் வேதாந்தம்


பாரதியின் வேதாந்தம் இந்தியச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த நவவேதாந்தத்தில் இருந்து முளைவிட்டதேயாகும். அவன் அந்த மரபுடன் நேரடியான உரையாடலில் இருந்தான். ஆனால் அந்த வேதாந்தத்தின் எதிரொலி அல்ல பாரதி. அதன் மறுபடைப்பாளி. அதிலிருந்து எதை பாரதி பெற்றுக்கொண்டான், எதை எதனுடன் இணைத்துக்கொண்டான் என்ற பார்வை இந்தியா அதன் பிரம்மாண்டமான மெய்யியல் மரபை எதிர்கொள்வது எப்படி என வழிகாட்டுவதாகும். மெய்யியலில் பாரதியின் பங்களிப்பு அதுவே.


இந்திய வேதாந்தம் அத்வைதத்தின் எழுச்சியுடன் தூய தத்துவநிலையாக ஆகியது. தர்க்கத்தை தன் முழுமுற்றான ஆயுதமாகக் கொண்டது. இந்திய சிந்தனை மரபின் உச்சத்தில் இன்றும் சங்கர அத்வைதம் அதன் வெல்லமுடியாத தத்துவ வல்லமையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அது ஒரு விசித்திரமான கலவை. சிகரநுனிவரை கறாரான தர்க்கம் மூலம் சென்று உச்சியில் அபாரமான கவித்துவத்தால் கடைசிமுரண்பாட்டைத் தாண்டிசெல்கிறது. அதன் கவித்துவத்தை அது உபநிடதங்களில் இருந்து எடுத்துக்கொண்டது. தர்க்கத்தை பௌத்ததில் இருந்து.


எந்த ஒரு முழுமையான தர்க்கத்தையும்போல அத்வைதமும் இறுகித்தேங்கியது. அடுத்த ஆயிரம் வருடத்தில் அதை உடைக்க மாபெரும் முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் அத்வைதத்துடன் சேவையையும் பக்தியையும் சமர்ப்பணத்தையும் கலந்துகொண்டது. மத்வர், வல்லபர், நிம்பார்க்கர் என அந்த முயற்சி நீடித்துக்கொண்டே சென்றது.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் அத்வைத வேதாந்தம் கொண்ட மாற்றம் இந்தியச்சூழலில் மிக ஆச்சரியமான ஒன்று. அது மானுடசமத்துவத்துக்கான குரல்களுடன் தன்னை அடையாளம் கண்டுகொண்டது. உலகமே மாயை என்ற சலனமற்ற நிலையில் இருந்து மானுட உரிமைகளுக்கான போராட்ட சித்தாந்தமாக உருமாற்றம் கொண்டது. ராஜா ராம் மோகன் ராய், ராமகிருஷ்ணர், விவாகானந்தர், நாராயணகுரு, அரவிந்தர் போன்றவர்களை நாம் அறிவோம். அய்யா வைகுண்டர், அய்யன்காளி போன்ற ஏராளமான அத்வைதிகளை நாமறியமாட்டோம்.


நாடெங்கும் தீண்டாமைக்கு எதிராகப் போராடக்கூடிய அத்வைதிகளான துறவிகள் உருவாகி வந்தனர். சென்னையிலும் பிற ஊர்களிலும் இருந்த அத்வைதசபைகளே ஆரம்பகால தலித் விடுதலைக்கான கருத்துக்களை உருவாக்கின. வேறெந்த இந்திய சிந்தனைமரபையும் விட அத்வைதமே இவ்வகையில் நவீன அரசியல் முகத்தைப்பெற்றது. வேதாந்தத்தின் சாரமாக அதுவரை இருந்துவந்த மாயாவாதம் உடல்மறுப்புவாதமாக விளக்கப்பட்டு அச்சமின்மைக்கான காரணமாக மறுவடிவம் பெற்றது. இதம் [இது] என்ற புள்ளியில் தொடங்கும் அத்வைத விவாதங்கள் அனைத்துக்கும் 'இங்கே இப்போதே' என்பதுதான் முதல்புள்ளி என விளக்கம் அளிக்கப்பட்டது.


இதையொட்டி நிகழ்ந்த தீவிரமான பலதள விவாதங்களின் ஒட்டுமொத்த விளைவையே நவவேதாந்த அலை என நாம் இன்று சொல்கிறோம். பாரதியின் பாடல்களில் இந்த நவவேதாந்த எழுச்சியின் தடங்களை நாம் காணலாம். ஆனால் அந்த அலையை பாரதி எவ்வாறு எடுத்துக்கொண்டார் என்பது முக்கியமானது.


நவவேதாந்தம் விவேகானந்தர் போன்றவர்களில் மானுடசமத்துவத்திற்கான போர்க்குரலாகவே ஒலித்தது. பலசமயம் அடித்தள மக்களில் இருந்து வந்த ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. பாரதி ஏற்கனவே அறச்சீற்றத்தைத் தன் கவியியல்பாகக் கொண்டவன். ஆனால் போர்க்குணம் கொண்ட அத்வைதத்தின் ஆசாரியனாகிய அரவிந்தருடன் நெருக்கமாக இருந்த பாரதி, போர்க்குணம் கொண்ட அத்வைதத்தை பாரதிக்கும் உபதேசித்த நிவேதிதாவை தன் ஞானகுருவாகவே கொள்ளும் பாரதி அந்த போர்க்குணம் கொண்ட அத்வைதத்தைக் கவித்துவமான அகவய தரிசனமாக மாற்றிக் கட்டமைக்கிறான். அதில் காதலையும் பக்தியையும் இணைக்கிறான். அந்தப்பயணமே அவனைக் கண்ணன்பாடல்களை நோக்கிக் கொண்டுசெல்கிறது.


அதை வ.வே.சு.அய்யர் அவரது கண்ணன்பாடலுக்கான முன்னுரையிலேயே சுட்டிக்காட்டுகிறார். 'சுற்றிநில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்' என 'அட்சரலட்சம் பெறும் பாடல்களை' எழுதிய பாரதி கண்ணன் பாடல்களை எழுதியதிலுள்ள முரண்பாட்டை மென்மையாகச் சொல்கிறார். அது பெரிய முரண்பாடுதான். அதை பாரதியேகூட விளக்கியிருக்கமுடியாது. ஆனால் கவித்துவம் எப்போதும் அத்தகைய முரண்பாடுகள் வழியாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.


அதாவது அத்வைதம் அதன் நடைமுறைவீரியம் கொண்ட சமத்துவ தரிசனத்தில் இருந்து பாரதியால் விசிஷ்டாத்வைதத்தின் காதலுக்கும் களியாட்டத்துக்கும் சமர்ப்பணத்துக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. தமிழகத்தின் இரு பெரும் மெய்யியல் தரிசனங்கள் இப்படி பாரதியில் அர்த்தபூர்வமான ஒரு கலவையை அடைகின்றன. பல கோணங்களில் கூர்ந்து நோக்கவேண்டிய அம்சம் இது.


'மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதோ' என்று எம்பி எழும் வேகத்துக்கும் 'தூண்டில்புழுவினைப்போல் வெளியே சுடர் விளக்கினைப்போல்' துடித்து துவளும் நிலைக்கும் நடுவேயான ஊசலாட்டத்தில்தான் பாரதியின் கவிதைக்கான இடத்தை வாசகன் கண்டுகொள்ளவேண்டும். ஒவ்வொரு பாடலாக எடுத்துக்கொண்டு இந்த ஊசலாட்டத்தை அல்லது நடனத்தை விளக்க முடியும். பாரதியின் மெய்யியல் இன்னது, இன்ன கவிதையில் உள்ளது என ஒருபோதும் விமர்சகன் சொல்லலாகாது. அது ஒட்டுமொத்தமாக எல்லாக் கவிதையிலும் நிறைந்திருப்பதும் ஒவ்வொரு கவிதையிலும் புதியதாக நிகழ்வதுமாகும்.


இந்த ஊசலாட்டம் தமிழ்ப்பண்பாட்டின் எல்லாத் தளங்களிலும் ஏதோ வகையில் காணக்கிடைப்பது. சைவத்தில் வைணவத்தில். ஒருபக்கம் தர்க்கமும்,வேகமும் கொண்ட எழுச்சி. மறுபக்கம் கனவும் தாபமும் நெகிழ்வும் கொண்ட தளும்பல். தமிழ்ப் புதுக்கவிதையில்கூட இந்த இரு சரடுகளும் உள்ளன. இந்த இரு நிலைகளுமே ஒரே கவிஞனில் ஊடுபாவாக ஓடுவது மிக அபூர்வமாகவே நிகழ்ந்துள்ளது. நம்மாழ்வார் சிறந்த உதாரணம். பாரதியின் கவிதையின் 'ஷுரஸ்யதாரா' அது.


பாரதியின் ஒரு தனிக்கவிதையை எடுத்துக்கொண்டால்கூட ஒரு வரியில் எழுச்சியின் வேகமும் மறுவரியிலேயே நெகிழ்ச்சியின் பின்வாங்குதலும் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையின் அல்லது உணர்ச்சிநிலையின் பிரதிநிதியாக ஒலிக்காது தமிழ்ப்பண்பாட்டின் சமகால வெளிப்பாடாகத் தன்னை முழுக்க ஒப்புக்கொடுத்ததன் விளைவு அது. எரியும் தீ போலத் தன் அகம் அதுவாகவே நடமிட அனுமதித்ததனால் அடையப்பெற்றது. 'எங்கள் வேள்விக்கூடம் மீது ஏறுதே தீ' என்ற வெறியும் 'மது நமக்கு மதுநமக்கு' என கொண்டாடும் களிப்பும் அந்தரங்கமான ஒரு தளத்தில் சந்தித்துக்கொள்வதே பாரதியின் மெய்யியல்.


தன் மெய்யியல்மரபை ஒரு வெறும் சிந்தனையோட்டமாக வைத்துக்கொள்ள மறுத்ததே பாரதியின் ஆன்மீகம் எனலாம். எது உண்மையோ அது அன்றாட எதார்த்தமாகவும் வரவேண்டுமென்ற வேகம் அது. 'உண்மை நின்றிடவேண்டும்' என்ற பிரார்த்தனை. அந்த உண்மைக்கான தேடலே ஒவ்வொன்றாக நீக்கி நீக்கிச் செல்லச்செய்கிறது, எதுவுமற்ற இடம் வரை. அந்த நிலையின் முடிவற்ற இருளையும் அடிபதறல்களையும் காட்டும் கவிதைகளே 'மழை' 'பிழைத்த தென்னந்தோப்பு' போன்றவை. மொழி என்ற வடிவில் அவன் தன் கையில் வைத்திருக்கும் அகத்தின் மெல்லிய தீபம் மட்டுமே வழிகாட்டுகிறது.


அந்த இருளும் ஒளியும் பின்னிப்பிணைந்த பிற்காலக் கவிதைகளில் மேலோட்டமான பார்வையில் நம்பிக்கையும் நம்பிக்கையிழப்புமாக ஊடாடிச்செல்கின்றன. அவற்றை அவன் கவிதைகளின் ஒட்டுமொத்த வடிவமாகிய காவியத்தின் முடிவுப்பகுதியாக வாசிக்கமுடியும்


பாரதியின் கவிதைகளில் ஓடும் இந்த எழுச்சியையும் பரவலையும் மானசீகமாகப் பின்னிக்கொண்டு அவர் கவிதைகளை வாசிக்கும் ஒருவர் அடையும் பாரதியைத் தனிக்கவிதைகளாக மொழியாக்கத்தில் வாசிக்கும் ஒருவர் அடையக்கூடுமெனச் சொல்லமுடியாது. அந்தவகையில் தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையான நரம்புப்பின்னலால் ஆனவை பாரதியின் கவிதைகள் என்பதை இந்திய அளவில், உலக அளவில் இன்றுவரை எவரும் கொண்டு செல்லவில்லை.



பாரதியும் கம்பனும்


மலையை ஆற்றை அதை மட்டும்கொண்டு மதிப்பிடலாகும். தீயை அது எரியும் பொருளையும் கருத்தில்கொண்டே மதிப்பிடமுடியும். ஒரு செவ்வியல்போக்கின் உச்சியில் நிகழும் பெருங்கவிஞர்கள் மானுட இயல்பின் அடிப்படையான விஷயங்களைப்பற்றி ஒட்டுமொத்த நோக்கை முன்வைக்கக்கூடும். அவர்கள் அதற்காக ஒத்திசைவுள்ள பெரும்படைப்புகளை உருவாக்கலாம். ஆனால் வரலாற்றின் ஒரு திருப்புமுனைப்புள்ளியில் நிகழும் கவிஞனுக்கு அப்படி உச்சிகளைப் பற்றி மட்டுமே பேசும் வாய்ப்பு இல்லை. அவன் அனைத்தையும் பற்றிப் பேசியாகவேண்டும்.


ஆனால் அவனுடைய படைப்புகளின் ஒவ்வொரு புள்ளியிலும் அவன் அந்த வரலாற்று மாறுதல்கணத்தின் வெம்மையைத் தொட்டுக் காட்டியிருந்தானென்றால் அவனும் ஓர் உச்சநிலையைத்தான் சாதித்திருக்கிறான். அதாவது அவனுடைய காவியம் சிதறிக்கிடக்கிறது. அதை வாசகன் ஒன்றாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அவன் எதன்மேல் எரிந்தான் என்பதை கருத்தில்கொண்டு அவனை மதிப்பிடவேண்டும்


ஆகவே கம்பனுக்கும் பாரதிக்கும் இடையே ஒப்புமையே இல்லை. அவர்களின் கவிதையியல்புகளே வேறு. கம்பனை நாம் ஒரே காவியம் மூலம் முழுமையாக அறிகிறோம். பாரதியை அவன் நிகழ்ந்த தனித்தனிக்கவிதைகள் மூலமே அறிகிறோம். ஒன்றாகத் தொகுத்துப்பார்க்க நம்மிடம் இருப்பது அவை நிகழ்ந்த காலகட்டமே. ஆகவே பாரதியை பாரதிக்குரிய அளவுகோலால்தான் மதிப்பிடவேண்டும். அந்த அளவுகோல்கள் தமிழில் உருவாக்கப்படவில்லை.


பாரதி மகாகவியா?


மகாகவி என்ற அடையாளம் தெளிவாக வரையறைசெய்யப்பட்ட எல்லைகளுக்குள் நின்று செய்யப்படுவது. அந்த வரையறை சமகாலத்தன்மை கொண்டதும் முழுமையானதும் அல்ல. இன்றும் உலகின் எத்தனையோ முக்கியமான கவிஞர்களை வெளியே நிறுத்தக்கூடியதாக அந்த வரையறை அமையக்கூடும். பாரதியின் கவிதைகள் எதிர்கொண்டு பேசும் சூழலை, அதன் மூலம் பாரதி உருவாக்கிய அழகியலைக் கருத்தில்கொண்ட ஒருவர் பாரதி மகாகவி என்று சொல்லலாம். இன்னமும் மையப்பெரும்போக்கால் அடையாளம் காணப்படாத மகாகவிகளில் ஒருவர் அவர் என அவர் சொல்லக்கூடும்.


அப்ப

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2011 12:51

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன்.


உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி


இந்தியமொழிகளின் சென்றகால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் மொழியாக்கம் என்ற கருதுகோளே இங்கே இல்லை என்று தெரிகிறது. ஐரோப்பியர் தொடர்புக்கு முன்னால் ஒரு நூலை வரிக்குவரி மொழிபெயர்த்த எந்த நூலும் நம்மிடமில்லை. வேதங்கள் , கீதை, பிரம்மசூத்திரம் போன்ற முதனூல்கள்கூட மொழிபெயர்க்கப்பட்டதில்லை. நமக்கிருப்பது மறு ஆக்கங்கள்தான், கம்பராமாயணம்போலவோ பெருங்கதை போலவோ போலவோ. இலக்கியம் மட்டுமல்ல ஆகமங்கள், இலக்கணங்கள் போன்றவைகூட இங்கே மறுஆக்கமே செய்யப்பட்டுள்ளன.


ஆனால் பதினாறாம்நூற்றாண்டு வாக்கில் கீதை மட்டும் தமிழில் ஏறத்தாழ வரிக்குவரி மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளதாக பொ.வேல்சாமி குறிப்பிட்டார். அந்த மொழியாக்கம் பற்றி அறிஞர்கள் அதிகமாகப் பொருட்படுத்தியதில்லை என்றார். நான் அந்நூலைப் பார்த்ததில்லை.


இன்னொரு வகையிலும் உலகில் மொழிபெயர்ப்பு நடந்துள்ளது. திபெத்திய மொழி மொழிபெயர்ப்பையே முக்கியமான இலக்கியச் செயல்பாடாகக் கொண்டிருந்தது. பௌத்த மூலநூல்கள் மொழியாக்கம்செய்யப்பட்டு திபெத்திய மதக்கல்விச்சாலைகளில் பேணப்பட்டன. அவை வெளியே தெரியவந்ததே இருபதாம்நூற்றாண்டில்தான்


உண்மையில், மூலத்தை மொழியாக்கம் செய்யலாமென்ற பரவலான எண்ணம் உலகளாவிய தளத்தில் பைபிள் மொழியாக்கங்கள் வழியாகவே உருவானது. அராமிக் மொழியிலிருந்து கிரேக்கத்துக்கும் பின் கிரேக்கமொழியில் இருந்து ஐரோப்பிய மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யப்பட்ட பைபிள் வரிக்குவரி மொழியாக்கம் என்பதன் மிகச்சிறந்த உதாரணம். அது எம்மொழிக்கும் எந்த ஊருக்கும் உரிய மூலநூலாகக் கருதப்பட்டமையால் அப்படி சொல்லுக்குச்சொல் மொழியாக்கம் வலியுறுத்தப்பட்டது.


பதினாறாம்நூற்றாண்டு முதல் மதப்பிரச்சாரகர்களால் பைபிள் உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. அந்தமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரப்பப்பட்டது. அவ்வாறாக மொழியாக்கம் என்ற உலகளாவிய பண்பாட்டுச்செயல்பாடு ஆரம்பித்தது. அது பின்னர் உலகமெங்குமிருந்து இலக்கியத்தை ஐரோப்பிய மொழிகளுக்குத் திரும்பக்கொண்டுவரவும் வழியமைத்தது. பதினேழாம்நூற்றாண்டில் காலனியாதிக்கத்தின் மொழிகளாகிய ஆங்கில, பிரெஞ்சு,ஜெர்மனி, ஸ்பானிஷ் மொழிகளில் உலகின் முக்கியமான இலக்கியமூலநூல்கள் மொழியாக்கம்செய்யப்பட்டுவந்தன.


அப்போதுதான் அதுவரை உலக இலக்கியத்தில் இல்லாமலிருந்த ஒன்றை அறிஞர்கள் கண்டனர். ஒரு மொழியில் உலகின் பேரிலக்கியங்களெல்லாம் வாசிக்கக்கிடைத்தன. இலக்கியவடிவில் உலகம் கண்முன் வந்து கிடந்தது. அது உருவாக்கிய மன எழுச்சிதான் இலக்கிய சிந்தனையில் சென்ற பத்து நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மகத்தான ஒரு விஷயம். ஜெர்மனிய கவிஞரும் அழகியலாளருமான கதே அதை 'உலகஇலக்கியம்' என்று அழைத்தார்.


அன்றுவரை ஒரு வாசகனுக்கு இலக்கியம் என்றால் அவனுடைய மொழி அவனுக்கு அளிப்பதே. பெரும்பாலான பண்பாடுகளில் அறிஞர்கள் இன்னொரு செவ்வியல்மொழியையும் கூடவே கற்றிருப்பது வழக்கம். ஐரோப்பாவுக்கு லத்தீனும் கிரேக்கமும் அந்த இடத்தில் இருந்தன. அந்த செவ்வியல்மொழி வழியாகத் தங்கள் பண்பாடுகளுக்குப் பொதுவாக அமைந்த சென்றகாலப்பண்பாட்டை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனால் தங்கள் மொழிகளைத்தாண்டி ஒரு பொது அழகியலை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருப்பதில்லை.


அப்படி ஒரு பொது அழகியலை உருவாக்கிக்கொள்ளாமல் பேசமுடியாதபடி புதியதாக உருவாகிவந்த உலக இலக்கியம் அவர்களை அறைகூவியது. ஷேக்ஸ்பியரும் காளிதாசனும் தாந்தேயும் கதேயும் புஷ்கினும் எல்லாம் அர்த்தமளிக்கும் ஒரு பொதுவாசிப்புத்தளம் அம்மொழிகளில் உருவாகியது. அந்த பொதுவாசிப்புத்தளத்தின் அழகியலையும் மதிப்பீடுகளையும் உருவாக்கிக்கொள்வதற்கான பெருவிவாதம் ஆரம்பித்தது. அன்றுவரை இருந்த எல்லா மதிப்பீடுகளும் கொள்கைகளும் அந்த பொதுத்தளத்தில் வைத்து பரிசீலிக்கப்பட்டன. விக்டோரியன் யுகத்து பிரிட்டிஷ் இலக்கியக்களம் அந்த விவாதத்தாலேயே முன்னெடுக்கப்பட்டது. நாம் இன்று இலக்கிய அழகியல் சார்ந்து பேசும் பெரும்பாலான கலைச்சொற்களும் கருதுகோள்களும் அப்போது உருவாகி உலகமெங்கும் சென்று சேர்ந்தவைதான்.


இவ்வாறு உலக இலக்கியம் என்ற அந்த கருத்துருவம் உருவாகி அதற்காக உலகளாவிய அழகியல்மதிப்பீடுகள் உருவானபோதுதான் உலகளாவிய பேரிலக்கியவாதிகள் எவர் என்ற வினா எழுந்தது. அல்லது கூல்ரிட்ஜ் சொல்வதுபோல உலகளாவிய பேரிலக்கியவாதிகள் யார் என்ற விவாதம் வழியாகவே உலகளாவிய இலக்கிய மதிப்பீடுகள் உருவாயின. 'யார் மகாகவி' என்ற விவாதம் அதன் விளைவே. Great Poet என்ற சொல்லாட்சி பற்றி உலக இலக்கிய விமர்சனத்தில் விவாதிக்க்கப்பட்ட அளவுக்கு வேறெதுவும் விவாதிக்கப்பட்டதில்லை.


விளைவாக விமர்சகர்களால் உலகமகாகவிகளின் பட்டியல்கள் போடப்பட்டன. அவற்றின்மேல் விவாதம் நிகழ்ந்தது. மேலும் திருத்தப்பட்ட பட்டியல்கள். மெல்லமெல்ல அப்பட்டியல்களில் நீக்கவே முடியாத சிலர் இருப்பது உறுதிப்பட்டது. அதன் விளிம்புகளைப்பற்றி மட்டுமே எப்போதும் விவாதம் நிகழமுடியும் என்ற நிலை வந்தது அவதானிக்கப்பட்டது. அரவிந்தரும் வ.வே.சு.அய்யரும் எல்லாம் அப்படி ஒரு பட்டியலைப்போட்டு விவாதித்திருக்கிறார்கள் என்பதைக்காணலாம்.


இன்றும் அப்பட்டியல் வளர்கிறது., விவாதம் நீடிக்கிறது. சமீபகாலமாக சீனப்பெருங்கவிஞர்கள் பலர் உள்ளே வந்துகொண்டிருப்பதை காணலாம். உலகம் தன்னை இந்த விவாதம் மூலமே திரட்டிக்கொண்டிருக்கிறது. உலக இலக்கியங்கள் எல்லாம் இந்தப் பொதுப்புள்ளியில் சந்தித்து உரையாடி தங்கள் இடத்தைக் கண்டடைகின்றன எனலாம்


இந்த விவாதத்துக்கான தேவை என்ன என்று கேட்கலாம். உடனடியான பதில் இப்படி ஒரு ஒப்பீட்டையும் தரவரிசையையும் உருவாக்கிக்கொள்ளாமல் வாசிப்பது மனிதமனத்துக்குச் சாத்தியமே அல்ல என்பதுதான். அதுதான் மனித ரசனையின் இயல்பான வழி, எந்த விஷயத்திலும். மதிப்பிடுவதென்பதே ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு மதிப்பிடுவதுதான். ஒப்பிடவும் மதிப்பிடவும் மாட்டேன் என்பது விவாதத்துக்கான ஒரு பாவனை மட்டுமே.


மெய்யியல் தளத்தில் பார்த்தால் ஐரோப்பிய மொழிகளில் உலகஇலக்கியம் உருவான அந்தக் காலகட்டத்தில்தான் உலகம் என்று நாம் இன்று சொல்லும் யதார்த்தம் உருவாகி வந்தது. அதுவரை அது ஒரு தத்துவார்த்த உருவகம் மட்டுமே. கப்பல்பயணங்கள் வழியாக உலகமெங்கும் ஐரோப்பியர் செல்ல ஆரம்பித்து, உலக வரைபடங்கள் அச்சாகி வர ஆரம்பித்து, உலகம் முழுக்க இருந்து பல்வேறு மக்களையும் நாடுகளையும் பற்றிய செய்திகள் வந்து குவிய ஆரம்பித்து மெல்லமெல்ல உலகம் என்ற சொல் நடைமுறை அர்த்தம் கொள்ள ஆரம்பித்தது.


அவ்வாறு உலகமென்ற அகஉருவகம் உருவாவதற்கு உலகஇலக்கியம் சார்ந்த பண்பாட்டுவிவாதங்கள் உதவியிருக்கின்றன. ஒரு பெருங்கவிஞன் தன் பண்பாட்டின் சாராம்சத்தையே தன்னுடன் கொண்டு வருகிறான். இன்றுள்ள பண்பாடு சார்ந்த உலக உருவகமே உலகப்பெருங்கவிஞர்கள் தங்களுக்குள் உரையாடி உருவாக்கிக்கொண்டதுதான் என்றுகூடச் சொல்லலாம்.


அவ்வாறு உலகம் என்ற ஒன்றை உருவகிக்கும்போது எல்லா அடையாளங்களையும் எல்லா மதிப்பீடுகளையும் உலகம் முழுமைக்குமாக யோசித்துப்பார்க்கவேண்டியிருந்தது. தங்கள் அறங்களையும் விழுமியங்களையும் உலகம் முழுமைக்குமாக ஆக்கிக்கொள்ள ஐரோப்பியருக்கு இருநூறாண்டுகள் தேவைப்பட்டன என்பார்கள். ஷேக்ஸ்பியர் முக்கியமான கவிஞர் என்று நினைக்கும் ஒருவர் அந்த மதிப்பீட்டுக்கு இந்தியாவில் என்ன அர்த்தம் சீனாவில் என்ன பெறுமானம் என யோசிக்காமலிருக்க முடியாது என்னும் நிலை உருவானது.


இந்த விவாதத்தின் விளைவாகவே அறமதிப்பீடுகளும் அழகியல் மதிப்பீடுகளும் மானுடத்தளத்துக்கு கொண்டு சென்று விவாதிக்கப்பட்டன. அந்தப்பார்வையே நாம் இன்று காணும் உலகத்தை உருவாக்கி நமக்களித்தது என்றால் மிகையல்ல. ஷேக்ஸ்பியரையும் தாந்தேயையும் நாம் நம்முடைய கவிஞர்களாக இன்று சாதாரணமாக உள்வாங்கிக் கொள்கிறோம். நம் அன்றாடவிவாதங்களில் அவர்கள் வந்துசெல்கிறார்கள். பண்பாட்டுத்தளத்தில் உலகமனிதன் என்ற கருதுகோள் உருவாகி வலுப்பெற்றது அந்தப் பெருவிவாதம் மூலமே. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான இலட்சியவாதங்கள் எல்லாமே அந்த உலகம் உலகமனிதன் என்ற கருதுகோளை ஒட்டி உருவானவையே.


ஆம், உலக ஆதிக்கம் என்ற கருதுகோளும் அப்போது உருவானதுதான். ஆனால் அதற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள எல்லா எதிர்ப்புக்குரல்களும் உலகளாவிய பார்வையால், உலகமனிதன் என்ற கருதுகோளால் கட்டமைக்கப்பட்டவைதான்.


ஆகவே உலகமகாகவி என்ற சொல்லாட்சி என்பது வெறுமே ஓர் இலக்கியவிவாதப்பொருள் மட்டும் அல்ல. அது உலகப்பண்பாட்டைத் தொகுத்துக்கொள்வதற்காக ,சாராம்சப்படுத்திக்கொள்வதற்காக, ஒவ்வொருவரும் தன்னை அந்த உலகப்பண்பாட்டில் ஓர் அங்கமாக உணர்வதற்காக செய்யும் ஒரு முயற்சி. அது மானுடவரலாற்றின் பெரும் இலட்சியவாதங்களில் ஒன்று


உலகப்பெருங்கவிஞன் ஒருவனை வாசிக்க நாம் அவன் முன் உலகக்குடிமகனாக நிற்கவேண்டியிருக்கிறது. அல்லது அவனை நாம் வாசிக்கையில் அவன் நம்மை உலகக்குடிமகனாக மாற்றுகிறான். நம்முடைய மொழி, பண்பாடு, இனம் சார்ந்த அடையாளங்களை விட்டு விலகி மானுடத்தன்மையுடன் நின்று அவனை நாம் அறிகிறோம். அந்த இலட்சியப்புள்ளியை வாசிப்பின் உச்சமாக எடுத்துக்கொண்டு எல்லா மதிப்பீடுகளையும் அந்த இடம் நோக்கிக் கொண்டுசெல்ல முயல்கின்றது ''மகாகவி யார்?'' என்ற விவாதம்.


நூறுவருடங்களாக மகாகவி யார் என உலக இலக்கியத்தில் நிகழ்ந்த விவாதம் அதன் பொது அளவுகோல்களை ஒருவாறாக உருவாக்கிக்கொண்டிருக்கிறதென்றே சொல்லலாம். ஒருவன் தன்னை உலகமனிதனாக நிறுத்திக்கொண்டு வாசிக்கக்கூடிய அந்தத் தளத்தில் எவர் பெருங்கவிஞர் என்று அர்த்தப்படுகிறாரோ அவரே உலகமகாகவி. அந்தக்கவிதையுலகம் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் குறிகள், குறியீடுகள், குறிப்புகள் வழியாக நம்மிடம் உரையாடுவதாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட பண்பாட்டுப்புலத்தை நாம் கொஞ்சம் பழகிக்கொள்ளாமல் அவனுள் நுழையமுடியாமல் போகலாம். ஆனால் அவன் நமக்களிப்பது ஒரு மானுட அனுபவத்தை.


ஆகவே அவனை அளவிடும் மதிப்பீடுகள் எல்லாமே அந்த மானுடத்தன்மை சார்ந்தவையாகவே இருக்கமுடியும். அக்கவியுலகம் எந்தப்பண்பாட்டில், எந்த சிறு வட்டத்தில் உருவானதாக இருந்தாலும் உலகின் எந்தமூலையிலும் வாழக்கூடிய ஒரு மனிதனின் அந்தரங்கமான மானுட அம்சம் ஒன்றுடன் உரையாடக்கூடியதாகவே அது இருக்கும் என்பது அந்த மதிப்பீடுகளில் முக்கியமானது. எது மிக பிராந்தியத்தன்மை கொண்டதோ அதுவே உலகளாவியது என்று சொல்லப்படுவது அதுதான். ஒரு வாசகன் தன்னை ஒரு வெறும்மனிதனாக உணரும்தளத்தில் அந்தக்கவியுலககைத் தன்னுடையதாக உணர முடியும். அதன் நுட்பங்களைத் தன் அகத்தால் உள்வாங்கிக்கொள்ளமுடியும்.


இரண்டாவதாக, ஒரு பெருங்கவிஞனின் அகம் ஒருபோதும் வாழ்க்கையின் ஒருபுள்ளியில் குவிவதாக இருக்காது. வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் அளவுக்கு வாழ்க்கையில் இருந்து விலகியும் வாழ்க்கையின் எல்லா நுட்பங்களையும் பார்க்குமளவுக்கு வாழ்க்கையுடன் நெருக்கமாகவும் பெருங்கவிஞன் இருப்பான் என்று சொல்லலாம். அவன் தன் வாழ்க்கையைப் பாடினாலும் சரி, தன் சமூகத்தின் வாழ்க்கையைப்பாடினாலும் சரி, அது மானுட வாழ்க்கையைப்பற்றியதாக ஆகிவிட்டிருக்கும். அது வாழ்க்கையின் துளிகளையும் அலைகளையும் அல்ல வாழ்க்கையையே காட்டக்கூடியதாக இருக்கும்.


மூன்றாவதாக, ஒரு பெருங்கவிஞனின் படைப்பு ஒரு பண்பாட்டின் சாரமாக அமைந்திருக்கும். அந்தப்பண்பாட்டை முழுமையாகப் பிரதிபலிக்கும். உலகளாவிய மானுடப்பண்பாட்டில் அந்தக் குறிப்பிட்ட பண்பாட்டின் தூலவடிவமாக அந்தக் கவியுலகை வைக்கமுடியும்.


இந்தமூன்று இயல்புகளும்தான் எப்போதுமே ஒரு கவிஞனை உலகப்பெருங்கவிஞனாகக் கொள்வதற்கான அளவுகோல்களாகக் கொள்ளப்படுகின்றன என்பதை சென்ற இருநூறாண்டுக்கால இலக்கியவிமர்சன மரபை வாசிக்கும் எவரும் உணர முடியும்.


இந்த அளவுகோல்களுக்குப்பின்னால் உள்ளது பண்பாடுகளை, மொழிகளை, கால இட வேறுபாடுகளைக் கடந்து மானுடம் ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் இலட்சியவாதம். மானுடம் என்ற ஒன்றை அந்தரங்கத்தில் உணர்வதன் எழுச்சி. அதை வெளியே படைப்புகளில் தேடும் வாசகனின் தாகம். அதுவே இந்த அளவுகோல்களை உருவாக்கி நிலைநாட்டியிருக்கிறது. அந்த அளவுகோல் எழுதப்பட்டும் படாமலும் ஒரு விவாதமையப்புள்ளி வடிவில் உலகஇலக்கிய வாசிப்பில் இருந்துகொண்டே இருக்கிறது. அது இருப்பதனால்தான் சென்ற இருபதாண்டுக்காலத்தில் து ஃபு போன்ற சீனப்பெருங்கவிஞர்கள் மொழியாக்கம்மூலம் வெளிப்படும்போது மிக இயல்பாக அவர்கள் உலகப்பெருங்கவிஞர்களின் இடத்தில் சென்றமர்கிறார்கள்.


சென்ற சில மாதங்களாக நான் க.சுப்ரமணியம் மொழியாக்கத்தில் தாந்தேயின் விண்ணோர் பாட்டு [டிவைன் காமெடி] வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப்பெருங்காவியத்துக்கும் எனக்கும் பொதுவாக ஏதுமில்லை. இது ஒரு கத்தோலிக்கக் காவியம். மூலமொழியில் இருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வந்தது. இது பேசும் பண்பாடும் வாழ்க்கைமுறையும் எனக்கு முற்றிலும் அன்னியமானது. இதன் தகவல்களை விக்கிபீடியாவில் பார்த்துப்பார்த்து நான் வாசிக்கிறேன். ஆனால் இது என்னைப் பெருங்கடல் அலை போல உள்ளே கொண்டுசெல்கிறது.


இதன் எளிய உரைவடிவை முன்னர் வாசித்திருக்கிறேன். முழுமையாகக் காவியவடிவம் அளிக்கும் அனுபவத்தை ஒரு மனிதன் மானுடனாக உருமாறுதல் என்றே சொல்வேன். நான் கம்பராமாயணத்தில், ரகுவம்சத்தில், அறிந்த அனுபவமும் இதுவே. மொத்த வாழ்க்கையையும் வாழ்க்கைக்குமேல் நின்று பார்க்கும் சஞ்சயப் பார்வையை நான் பெறுகிறேன். நான் இந்த விவாதத்தில் சொல்வதென்ன என்பது ஏதேனும் வகையில் காவிய அனுபவத்தை அறிந்த ஒருவரால் மட்டுமே உள்வாங்கிக்கொள்ளமுடியும். நான் உத்தேசிப்பதும் அவர்களை மட்டுமே.


உலகஇலக்கியம் என்ற ஒன்று ஐரோப்பிய மொழிகளில் உருவானபின் அதன் பிரதிபலிப்பு உலகமெங்கும் சென்றது. தமிழ் போன்ற மொழிகளில் உலகஇலக்கியம் ஆங்கிலம் மூலமே ஆரம்பத்தில் அறியப்பட்டது. அதன்பின் மெல்லமெல்லப் பேரிலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம்செய்யப்பட்டன. அந்த வேகம் ஆரம்பித்த காலகட்டத்தில்தான் 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் , கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று பாரதி பாடினான். இன்று உலகப்பேரிலக்கியங்களில் கணிசமான பகுதியைத் தமிழிலும் வாசிக்கலாம். ஆங்கிலத்தில் வாசிக்கும் வழக்கமில்லாத பல தமிழ்வாசகர்கள் தமிழ் மூலமே அப்படி உலகஇலக்கிய அடித்தளம் சார்ந்த தெளிவுடன் இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.


இவ்வாறு உலக இலக்கியம் தமிழில் கிடைக்கும்போது ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் என்ன நடந்ததோ அதுவே இங்கும் நடக்கவேண்டும். நாம் நம் பெரும்படைப்பாளிகளை அந்த உலக இலக்கியப்பரப்பில் வைத்துப் பரிசீலிப்போம். அவர்களின் இடத்தை மதிப்பிடுவோம். அதைச் செய்யாமல் இருந்தால் நாம் வாசிக்கவில்லை என்றே பொருள். அப்படிச்செய்தால் நம் கவிஞர்களின் இடம் குன்றிவிடுமென நாம் அஞ்சினோமென்றால் 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்' சொல்லிக்கொண்டிருக்கிறோம்.


இங்கே இலக்கிய விமர்சனம் என ஒன்று ஆரம்பித்த தொடக்கப்புள்ளியிலேயே வ.வே.சு.அய்யர் கம்பனை உலகஇலக்கியப்பரப்பில் வைத்துப்பார்க்க ஆரம்பிப்பதை நாம் காணலாம். அதுவே விமர்சனத்தின் இயல்பு. அதன்பின் இத்தனை வருடங்களில் கம்பனுடன் உலக இலக்கியப்பெருங்கவிஞர்கள் அனைவருமே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள்.


இந்திய தேசிய எழுச்சியை ஒட்டி இந்திய மொழிப் படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்க ஆரம்பித்தன. அவையே இந்திய இலக்கியம் என்ற ஒரு வடிவத்தை உருவகம்செய்யவைத்தன. தொடர்ந்து இந்தியமொழிகளிடையே மொழியாக்கங்கள் ஆரம்பித்தன. இந்தியப்பெருங்கவிஞர்களின் ஆக்கங்கள் சுதந்திரத்துக்கு முன்னரே தமிழாக்கம்செய்யப்பட்டுவிட்டன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இவ்வாறு இந்திய இலக்கியம் என்ற ஒன்று உருவாகி வந்தது.


இயல்பாகவே நம்முடைய இலக்கியங்களை நாம் அந்த இந்தியஇலக்கியங்களுடன் ஒப்பிட்டு வாசிக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய இலக்கிய மதிப்பீடுகளுக்கு இந்திய இலக்கியச் சூழலில் என்ன பெறுமதி என்று பரிசீலிக்க ஆரம்பிக்கிறோம். எப்படி உலகளாவிய இலக்கிய மதிப்பீடுகள் உருவானதோ அவ்வாறு இந்திய அளவில் இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்கிறோம். கம்பனையும் காளிதாசனையும் ஒப்பிடுகிறோம். பாரதியையும் தாகூரையும் ஒப்பிடுகிறோம். இது மிக இயல்பான இலக்கியச்செயல்பாடு. அந்தப் பெரும்பரப்பில் ஒவ்வொருவரையும் எங்கே நிறுத்துகிறோம் என்பதே இந்திய இலக்கியம் என்ற ஒன்றை நாம் நம் மனதில் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளம்.


இந்த உருவகம் ஒரு தொடர்ச்சியான பொது இலக்கியவிவாதம் மூலமே முன்னெடுக்கப்படுகிறது. கல்வித்துறையில் ஒப்பிலக்கிய ஆய்வுகள் மூலம் பலநூறு ஒப்பீடுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு அப்பால் இந்திய இலக்கியமேதைகளை அவர்களின் தனி இயல்புகளைக் கணக்கில்கொண்டு ஒரு பொதுவாசகத் தளத்தில் நிறுத்தி செய்யப்படும் மதிப்பீடுகளும் விவாதங்களும் நிகழ்ந்தபடியே உள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக க.நா.சு எழுதியிருக்கிறார்.


இன்றுவரை அந்தச்செயல்பாடு நிகழ்ந்தபடியே இருக்கிறது. அதன் வழியாகவே இந்திய இலக்கியத்தில் சில மேதைகள் மேலெழுந்து வந்தார்கள். தாராசங்கர் பானர்ஜியும் ,விபூதிபூஷன் பானர்ஜியும், சிவராம காரந்தும், குர்அதுலைன் ஹைதரும் எல்லாம் இந்திய இலக்கிய மேதைகளாக நம்மால் அறியப்படுவது அப்படித்தான். இந்தப் படைப்புகளை நாம் எப்படி வாசிக்கிறோம்? ஒரு வங்க நிலம் நாம் அறியாததாக இருக்கலாம். வங்காளத்தின் சாதியடுக்கு, சமூக வழக்கங்கள் எதுவுமே நமக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஒரு வாசகனாக நாம் இந்த ஆக்கங்கள் முன் நிற்கும்போது அந்த எல்லைகளைத் தாண்டி அந்த ஆக்கங்களுக்குள் செல்ல நம்மால் முடிகிறது.


இவ்வாறு உலக அளவில், இந்திய அளவில் இலக்கிய அளவீடுகள் உருவாகி வருகின்றன. அந்த அளவுகோல்களைக்கொண்டுதான் நானும் இந்த விவாதத்தை நடத்துகிறேன். மகாகவி என்ற சொல்லை நான் பொருள்கொள்வது இந்த விரிந்த விவாதக்களத்தில் வைத்துத்தான்.


மகாகவி என்ற சொல்லானது அன்றைய பிரிட்டிஷ் இலக்கிய விவாதத்தில் இருந்த great poet என்ற சொல்லின் தமிழாக்கமாக இங்கே கையாளப்பட்டது. அச்சொல்லை அப்படி உலக இலக்கியம் சார்ந்த இலக்கிய அளவீடுகளுடன் கையாள்வதை ஆரம்பித்து வைத்தவர் வ.வே.சு.அய்யர். அதை ஒட்டித்தான் வ.ரா பாரதி உலகமகாகவி என்று சொன்னார். உலகின் மகாகவிகளாக வ.வே.சு.அய்யர் முதலியோர் முன்வைத்த எந்த ஒரு கவிஞருக்கும் நிகரானவர் அல்லது மேலானவர் பாரதி என்று வ.ரா சொன்னார். அதையொட்டித்தான் பாரதி மகாகவியா என்ற விவாதம் ஆரம்பித்தது. அந்த விவாதத்தின் நீட்சியாகவே அவரை மகாகவி பாரதி என்று போட ஆரம்பித்தார்கள். பட்டங்களில் நமக்குள்ள மோகம் காரணமாக அந்த அடைமொழி இன்றிச் சொல்வதே அபச்சாரம் என்ற மனநிலை வந்துவிட்டது.


எந்த இலக்கியவிமர்சகனையும்போல எனக்கும் பொதுவாகச் சொல்லப்படுவதில் முழுநம்பிக்கை இல்லை. என் மதிப்பீடுகளை நான் என் வாசிப்பில், நான் செயல்படும் விவாதக்களத்தில் வைத்தே கூறமுடியும். அவ்வாறு கூறும்போது பாரதியை எங்கே வைக்கிறேன் என்னும் வினா எழுந்தது. பாரதி மகாகவி என்பது ஒரு பொத்தாம்பொது சொல்லாட்சியாக ஆகிவிட்டிருந்தது. ஒருவர்கூட மகாகவி என்பதற்கான வரையறையைச் சொல்ல முயல்வதில்லை. இந்த விவாதத்திலும்கூட என்பதை கவனிக்கலாம்.


நான் அந்தச் சொல்லை வரையறை செய்துகொள்ள முதலில் முயல்கிறேன். மகாகவி அதாவது great poet என்றால் என்ன? எந்தச் சூழலில், எந்த பின்னணியில்? விமர்சகனாக அதைத்தான் நான் கேட்டுக்கொள்ளவேண்டும். வ.ரா போன்றவர்கள் சொன்னது உலக இலக்கிய பின்னணியில். அந்தப்பின்னணியில் ஒருவரை மகாகவி என்று சொல்வதற்கான அளவுகோல்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதன்படி பாரதியை மகாகவி என்று சொல்ல முடியாது. அங்கே நாம் பாரதியை தாந்தே, விர்ஜில், ஷேக்ஸ்பியர், கதே, து ஃபு, காளிதாசன் என ஒப்பிடுகிறோம்.


இந்திய இலக்கியச் சூழலில்? இங்கேயும் அந்த அளவுகோல்களைக் கொஞ்சம் இந்திய அளவுக்கு மாற்றித்தான் நாம் பயன்படுத்தவேண்டும். மொழி,பண்பாட்டுச்சூழல், அரசியல்பின்னணி, சமூகப்பின்னணி அனைத்தையும் மீறி ஓர் இந்தியன் அந்தப்படைப்பின் முன் வாசகனாக நின்று கவிதையின் உயிரை உணரமுடியவேண்டும். வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் வெளிப்படும் தன்மை கொண்டிருக்கவேண்டும். தமிழ்ப்பண்பாட்டின் பிரதிநிதியாக இந்தியப் பண்பாட்டுச்சூழலில் நிற்கும் தன்மை கொண்டிருக்கவேண்டும்.


இங்கே நாம் பாரதியை தாகூருடன் ஒப்பிடுகிறோம். தாகூரின் படைப்புலகம் அதன் பிரம்மாண்டமான பன்மைத்தன்மையுடன் மேலே சொன்ன எல்லா அம்சங்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆகவே அவரை ஓர் நவீன இந்திய மகாகவி என்று சொல்லலாம். பாரதியைச் சொல்லமுடியாது. இதுவே என் மதிப்பீடு.


கடைசியாக, சென்ற நூறாண்டுகளில் நாம் நம் செவ்வியல் மரபை மறுகண்டுபிடிப்பு செய்திருக்கிறோம். அவற்றைப்பற்றி அழகியல் சார்ந்து அறவியல் சார்ந்தும் நீண்ட விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த விவாதத்தின் விளைவாக அவற்றின் தரவரிசை ஒன்று இலக்கியவாசகரிடம் உருவாகி உள்ளது. அந்த மரபில் பாரதியை வைத்துப்பார்க்கிறோம். அந்தப் பேரிலக்கியப்பின்னணியில் பாரதியின் மதிப்பென்ன என்று பார்க்கிறோம். ஏற்கனவே சொன்ன அதே மூன்று அடிப்படை மதிப்பீடுகள்தான். அதுவே கம்பனை உலகப்பெரும் கவிஞர்களில் ஒருவராக நமக்குக் காட்டுகிறது. பாரதியை சிறிதாக்குகிறது.


ஆனால் பாரதியை சென்ற முந்நூறாண்டுகளில் தமிழ் கண்ட முதற்கவிஞன் என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கிய முன்னோடி என்றும் தமிழ் உரைநடையின் முன்னோடிகளில் முதன்மையானவர் என்றும் நினைக்கிறேன். பாரதியின் கவித்துவத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட நான் முயலமாட்டேன். இன்று வரை தமிழில் எழுதும் எந்த ஒரு கவிஞனையும் பாரதியுடன் ஒப்பிட்டே மதிப்பிடுவேன். இவற்றை எல்லாம் முதல் பத்தியிலேயே சொன்னபின்னர்தான் இந்த விவாதத்தையே ஆரம்பித்தேன்.


இந்த விவாதமே நான் முன்னரே சொன்னது போல பாரதியின் படைப்புகளை இந்தியச்சூழலில் உலகக்கவிச்சூழலில் வைத்துப்பார்ப்பதன் மூலமாக நம்முடைய கவிதைபற்றிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதற்காகவே. இவ்வாறு ஒரு கவிஞனைத் திட்டவட்டமாக உலக, இந்தியப் பின்னணியில் வைத்து விவாதிக்காமல் நம்மால் நம் அளவுகோல்களை வகுத்துக்கொள்ளமுடியாது. மறு பரிசீலனைசெய்யவும் முடியாது.


பாரதி பற்றிய மதிப்பீடு மட்டுமல்ல, எந்த ஒரு இலக்கிய மதிப்பீடும் எப்போதுமே விவாதநிலையில்தான் உள்ளது, இருக்கவேண்டும். ஷேக்ஸ்பியர் மகாகவியா என்ற விவாதம் கூட அதற்கான புதிய வாதங்களுடன் சொல்லப்பட்டால் முக்கியமானதேயாகும்.




விவாதத்தின் மையம்


மகாகவி என்ற பட்டம் முதன்மையைக் குறிக்கிறது. பிற கவிஞர்களிடமிருந்து பாரதி கொண்டுள்ள முதன்மையைச் சுட்டவே அச்சொல் இன்றுவரை கையாளப்பட்டுள்ளது. தமிழில் எழுபதாண்டுக்காலமாக முன்வைக்கப்படும் இந்தப்பார்வை சுட்டுவதுபோல உலக, இந்திய இலக்கியச்சூழலில் பாரதியை ஒரு மகாகவி என்று சொல்லமுடியுமா என்ற வினாவுடன் ஆரம்பித்தது இந்த விவாதம்.


அவ்வாறு சொல்லமுடியாதென்பது என் மதிப்பீடு என்ற என் தரப்பை நான் முன்வைத்தேன். ஏற்கனவே சொன்ன மூன்று அளவுகோல்களையே நான் கையாண்டேன். பாரதியின் கவிதைகளில் பெரும்பாலானவை அவை நின்று பேசிய காலகட்டத்தைத் தாண்டி அதே கவித்துவ வீச்சுடன் நிலைகொள்ள முடியாதவையாக உள்ளன என்பதே என் முதல் பதிவு. அவை அரசியல், சமூகவியல் தளங்களைச் சார்ந்து நேரடியாகப்பேசுபவை. வேகம் காரணமாக மட்டுமே கவித்துவத்தை அடைபவை. அத்தகைய கருத்துக்களை அதேபோன்ற வேகத்துடன் சொன்ன கவிஞர்கள் அக்காலகட்டத்தில் பிற இந்தியமொழிகளிலும் உருவானார்கள். அவை பாரதிக்கு உலக அளவில் அல்லது இந்திய அளவில் தனித்தன்மை எதையும் அளிக்கவில்லை.


இரண்டாவதாக, பாரதியின் பாடல்களில் கணிசமானவை மரபார்ந்த தோத்திரப்பாடல்கள். தமிழின் நீண்ட பக்தியிலக்கிய மரபு உருவாக்கிய பக்திமனநிலையின் வெளிப்பாடுகள். நவீன இந்தியச்சூழலில் உருவாகிவந்த ஆழ்நிலை இறையுணர்வு வெளிப்பட்ட பாடல்கள் மிகவும் குறைவு. அவரது வேதாந்தப்பாடல்களில் உள்ள வேதாந்த தரிசனம் என்பது இந்திய நவவேதாந்த அலையின் ஒரு பகுதியாகவே ஒலிக்கிறது. அவரது தனித்துவம் கொண்ட குரலாக அல்ல.


இவை எதையும் பாரதியின் கவித்துவத்தை மறுக்க்கும்பொருட்டு நான் சொல்லவில்லை. மாறாக உலக இலக்கியச் சூழலில், இந்திய இலக்கியச் சூழலில், அவரை ஒரு மகாகவி என்ற அடையாளத்துடன் நிறுவ அவை போதுமானவை அல்ல என்ற அர்த்தத்திலேயே சொன்னேன்.


பாரதியின் கவித்துவம் அவரது அந்தரங்கமான குரல் ஒலிக்கும் சிலகவிதைகளிலேயே உச்சமாக வெளிப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன். அக்கவிதைகளில் பாரதி ஒரு அரசியல் பிரச்சாரகராகவோ அல்லது சமூகசீர்திருத்தவாதியாகவோ மரபார்ந்த மதநம்பிக்கையாளனாகவோ வெளிப்படவில்லை. அவரது அந்தரங்கத்தின் பித்தின் தாண்டவமும் சஞ்சலமும் அமைதியும் பதிவாகியுள்ளன. அவற்றையே பாரதியின் மிகச்சிறந்த கவிதைகளாக எண்ணுவேன் என்றேன். ஆனால் அத்தகைய கவிதைகள் மிகமிகக் குறைவே. இது என் மதிப்பீடு மட்டுமல்ல, சென்ற முக்கால்நூற்றாண்டாக தமிழ் இலக்கிய விமர்சனத் தளத்தில் சொல்லப்பட்டுவரும் கருத்தும்கூட.


இதற்கு மறுதரப்புகளாகச் சொல்லப்பட்டவை இந்தக் கூற்றுகளை எந்த அளவுக்கு அர்த்தபூர்வமாக மறுதலிக்கின்றன என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதுவரை சொல்லப்பட்டவற்றில் பாரதியின் சமூகசீர்திருத்த , அரசியல் போராட்டக் கவிதைகளை முன்வைத்து எவரும் வாதாடவில்லை. அவையே எண்ணிக்கையில் அதிகம். எஞ்சியவை அவரது ஆன்மீகக் கவிதைகளே. அவற்றில் உள்ள தோத்திரப்பாடல்களில் அவனுக்கிருந்த நேரடி இறையனுபவம் வெளிப்பட்டுள்ளது, அது தமிழின் பக்திப்பெருமரபில் இருந்ததை விட வேறானது, புதியது என்பது ஒரு வாதம்.


பாரதியின் கவிதைகள் தமிழில் ஒரு நவீன அகம்நோக்கிய குரலைக் கட்டமைக்கின்றன என்பது இன்னொரு வாதம். அந்த அகம்நோக்கிய குரல் ஆத்மார்த்தமானது. அன்றைய யதார்த்தங்களால் தீவிரமாக பாதிப்பு கொண்டது. அது தமிழின் நிகழ்த்துகலைத்தன்மையுடன் வெளிப்பட்டிருப்பதனால் அதை மொழியாக்கம்செய்து இன்னொரு மொழியில் வாசித்து மதிப்பிட முடியாது. ஆகவே தமிழுக்குள், இன்றைக்கு, பாரதி மகாகவிதான். இது இன்னொரு தரப்பு.


நான் முன்வைக்கும் வாதங்களை இவை எங்கே எதிர்கொள்கின்றன, மறுக்கின்றன என வாசகர்கள் சிந்தித்துப்பார்க்கலாம். இந்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் பாரதியை உலகஇலக்கிய தளத்திலும் இந்தியச்சூழலிலும் தமிழ்ப்பெருமரபின் பின்னணியிலும் மகாகவி என முடிவு கட்டுவாரென்றால் அது அவரது வாசிப்பு.


நான் வாசகர்களிடம் கோருவது ஒரு மறுபரிசீலனையை.அந்த மறுபரிசீலனையை அவர்கள் தமிழில் இன்று கிடைக்கும் உலக இலக்கியங்களை வாசிப்பதனூடாக, தமிழ் மரபின் பேரிலக்கியங்களை வாசிப்பதனூடாக நிகழ்த்திக்கொள்ளலாம்

தொடர்புடைய பதிவுகள்

பாரதி மகாகவியே
பாரதி விவாதம் – 1- களம்-காலம்
பாரதி விவாதம்-7 – கநாசு
பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
பாரதி-கடிதங்கள்
பாரதி விவாதம் 4 – தாகூர்
பாரதியின் இன்றைய மதிப்பு
நன்றி, முத்துக்குமாரசாமி
பாரதி-கடிதங்கள்
பாரதி-கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2011 12:37

நன்றி, முத்துக்குமாரசாமி

அன்புள்ள எம்.டி.எம்,


மன்னிக்கவும், நிறைய தவித்துப்போய்விட்டீர்கள். இரண்டுநாட்களாக இங்கே ஒருநாளுக்கு இரண்டுமணிநேரம் கூட மின்சாரம் இல்லை. மின்சாரம் அலைபாய்ந்து என்னுடைய கணினி மடிக்கணினி இரண்டுக்குமே மின்னேற்றி பழுதாகிவிட்டது. பணம்செலவுசெய்து வாங்கி எழுதுகிறேன்.


நீங்கள் நாகர்கோயில்காரர் என்று இப்போதுதான் தெரிகிறது. முன்னரே ஊகித்திருக்கவேண்டும்.


நீங்கள் சொன்னது சரிதான். உங்கள் பதிலில் நான் சொன்னவற்றுக்கான பதில் ஏதும் இல்லை. பாரதியின் மெய்யியல் சாரம் என்ன என்று விவாதிப்பதாக இருந்தால் நான் அதைத் தனியாகச் செய்திருப்பேன். பாரதி ஒரு நல்ல கவிஞரா, பாரதி கவிதைகள் எப்படிப்பட்டவை என்பதெல்லாம் நம் விவாதமாக இருக்கவில்லை.


உலக அளவில், இந்திய அளவில், தமிழ் மரபில் பிற கவிஞர்கள் மீது பாரதிக்கு இருக்கும் முதன்மையைச் சுட்டுவதற்காக மகாகவி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. எந்த அளவுக்கு அந்தப் பட்டம் செல்லுபடியாகும் என்பதுதான் என்னுடைய விவாதம். பாரதி ஆத்மார்த்தமான கவிஞர், மெய்யியல்சார்ந்த பரிதவிப்பை அல்லது கொந்தளிப்பைக் கவிதையாக்கியவர் என்பது அதற்கான பதில் என எனக்குப் படவில்லை.


நான் பேசிக்கொண்டிருந்தது மகாகவி என்கிற ஒட்டுமொத்த ஒப்பீட்டு அடையாளம் பற்றி. நீங்கள் பேசிக்கொண்டிருப்பது பாரதியின் தனியடையாளம் பற்றி.


எலியட்டையும் பாரதியையும் நீங்கள் ஒப்பிட்டிருந்தீர்கள். எந்த ஒரு நல்லகவிஞனையும் இன்னொரு கவிஞனுடன் ஒப்பிடலாமென்ற அளவில் அது ஏற்கத்தக்கதே. எலியட்டின் குரலும் அழகியலும் முற்றிலும் வேறுவகையானவை. எலியட் தன் முன் வந்துவிழுந்த உலகஇலக்கியத்தில் இருந்து உடைசல்களைப் பொறுக்கி உடைந்துகிடக்கும் தன்னுடைய அகஉலகத்தை அமைக்கிறார். பாரதி தன் முன்மரபின் நீட்சியாக நிலைகொள்கிறார்.


நீங்கள் சொல்லும் இந்தக்கவிதையைவிடத் தீவிரமாகவே இந்த அகம்நோக்கிய கொந்தளிப்பாகவும் அமைதலாகவும் ஆகும் கவிதைகள் என்றே நான் மழை, பிழைத்த தென்னந்தோப்பு போன்ற கவிதைகளைச் சுட்டியிருந்தேன். என்னுடைய விவாதம் பாரதி ஆத்மார்த்தமான அக எழுச்சி கைகூடிய கவிதைகளை எழுதினாரா இல்லையா என்பதே அல்ல. நான் பாரதியின் கனலை அறியும் பல கவிதைகள் உள்ளன.


நான் சொல்லிக்கொண்டிருந்தது மகாகவி என்ற முதன்மைப்பட்டத்தைப்பற்றி. அது பாரதியின் பெருவாரியான பிரச்சாரக்கவிதைகளுக்கும் தோத்திரப்பாடல்களுக்கும் அளிக்கும் மிகையான அடையாளத்தைப்பற்றி. இன்றைய வாசிப்பில் பாரதியை ஒரு யதார்த்த தளத்தில் நிறுத்திப் பேசுவதைப்பற்றி.


பாரதியின் மெய்யியலைப்பற்றி என்றால் அவரது கவிதைகளை ஒட்டி நான் பேச இன்னும் எவ்வளவோ தூரம் உள்ளது. இந்த விவாதத்தின் தொடக்கத்தையே பாரதி தமிழ்நவீனத்துவத்தின் தொடக்கமாக, உரைநடையின் முதற்புள்ளியாக அவரது சாதனைகளை எல்லாம் முன்வைத்துவிட்டுத்தான் பேச ஆரம்பித்தேன். உங்களுக்கு ஸ்க்ரீன்ஷாட் எடுத்தளிக்கப்பட்ட பக்கங்களிலும் அதையே பேசியிருக்கிறேன். பாரதிக்கு முன் நான் பெருங்கவிஞர் என நினைப்பவர் எட்டு நூற்றாண்டுக்கு முன்னாலிருப்பவர் என்பதை மறக்கவேண்டியதில்லை.


இருபதாண்டுகளுக்கும் மேலாக என் தர்க்கத்தாலும் உள்ளுணர்வாலும் எனக்கு மரபிலிருந்து வந்துசேர்ந்த மெய்யியலை இன்மைவரை உடைத்து அதன் அடியற்ற இருளைத்தாண்டிச் சென்றுகொண்டிருப்பதை என் ஆக்கங்களை வாசிக்கும் வாசகன் அறியக்கூடும். எங்காவது நான் என் அகத்தை உறுதிப்படுத்திக்கொண்டேனென்றால் எழுதுவதை நிறுத்திவிடுவேன். அது நிகழக்கூடுமென விழைகிறேன்.


ஆகவேதான் எளிமையான வரையறைகளை விளக்கங்களை நான் தர்க்கத்தால் தாண்டிச்செல்கிறேன். முப்பால்மணி எழுதி நீங்கள் கொடுத்திருக்கும் பகுதி அப்படிப்பட்டது. அன்று மாயாவாதத்தைத் தாண்டிச்சென்ற இந்திய நவவேதாந்த அலை என ஒன்றிருந்தது என்பதையே அறியாமல் அந்த மாற்றம் பாரதியில் மட்டும் நிகழ்ந்தது என்று எழுதியிருக்கிறார். அப்படி எழுதும் தமிழாசிரியர்மரபு ஒன்று உண்டு.


பாரதி அதற்கப்பால் அடைந்தது, அவரது கவிதைகளில் வெளிப்படுவது, வேறொன்று. அது யோகி அறியும் இருளும் கவிஞன் அறியும் மொழியின் மெல்லிய ஒளியும் கலந்த ஒரு சிறு பாதை. அந்தப் பருவத்திலேயே பாரதி அவரது மகத்தான கவிதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அவரது மிகச்சிறந்த வாசகனாக நான் தேடுவது அத்தகைய கவிதைகளையே.


என்னுடைய இன்று என்பதில் நேற்று இல்லை என்பதை நீங்கள் அறியமுடியாது. ஆகவேதான் நீங்கள் அதை வரலாறு வரலாறு என்கிறீர்கள். வரலாறு எனக்கு ஒரு நொடியின் பக்கவாட்டு விரிவே. இன்று இங்கே எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னி நிகழ்ந்துகொண்டிருக்கிறது.


இந்த அகால நொடியில் என் சடைமீது கம்பனும் கதேயும் தாந்தேயும் காளிதாசனும் வியாசனும் என்று நூறு ஆகாயகங்கைகள் கொட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நடுவே பாரதி என்னவாகிறான் என்றுதான் நான் பார்க்கிறேன்.


மீண்டும் ஒருமுறை சந்திப்போம். ஒரு கோப்பை டீ முடிவுறுவதேயில்லை என்பதும் ஜென் மொழிதான்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
எலியட்-எம்டிஎம்-எதிர்வினை
ரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
பாரதி மகாகவியே
மகாகவி விவாதம்
பாரதி-கடிதங்கள்
பாரதி-கடிதங்கள்
ரசனை விமர்சனத்தின் கலைச்சொற்கள்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
ரசனை விமர்சனமும் ஜனநாயகமும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2011 12:33

பாரதி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

பாரதி பற்றிய விவாதங்கள், எனக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எதிர் வினைகள்.


எனக்குள் உள்ள ஒரு சில கோட்பாடுகளை நிறுவிக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாகவே இது அமைந்தது என்றால் மிகையாகாது.


எந்த ஒரு கலைஞனோ, சமூக சேவகனோ, அரசியல் வாதியோ… இவர்களைப் பற்றிய வழிபாட்டு முறை ஒருபோதும் நம்மை அடுத்த களத்திற்குக் கொண்டு செல்ல உதவப்போவதில்லை. அவர்களின் குறைகளும் நமக்குப் புரியவேண்டும்/உணரவேண்டும். இது மென்மேலும் நம்முடைய சமூகம் முன்னேற வழி வகுக்கும்.


நம் மக்களின் (குறிப்பாக தமிழர்கள்) மனநிலையில் இரு வகையான மனிதர்கள் மட்டுமே வாழ்கிறார்கள் என்ற மாயை உள்ளது. ஒரு வகையினர் கடவுளைப் போன்றவர்கள். குறைகளே இல்லாதவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். தவறே இழைக்காதவர்கள். மற்றொரு வகையினர் சாத்தானைப் போன்றவர்கள், கொடுமைகள் மட்டுமே செய்பவர்கள், குறைகள்/குற்றங்கள் மட்டுமே செய்பவர்கள். இந்த மனநிலைதான் நம்முடைய பிரச்சனை.


ஒரு நல்ல நடிகன், சமூக அக்கறை உடையவனாக, அடுத்தவர்களுக்கு நல்லது செய்பவனாக, ஏழைகளின் பங்காளிகளாகக் கருதுவது. அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்பா அவன் படத்தை நான் பார்க்க மாட்டேன்! என்று சொல்வது. இவை எல்லாமே பாரதி விசயத்திலும் எனக்கு இந்த விவாதம் மூலம் தெரிகிறது.


பாரதியை நிறை குறைகளோடு ரசிக்கலாம் (ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. ஒரு கலைஞனுக்கு அது தேவையும் அல்ல). பாடல் எழுதுபவர், கவித்துவம் உள்ளவர், உரைநடை ஆசிரியர், இன்ன பிற துறைகளிலும் வல்லவனாக இருப்பது அவசியம் இல்லை. நான் சொல்ல வருவது அதைப் பற்றிய மனத்தடை தேவை இல்லை என்பதுதான். "ஆமாம்பா எனக்கு பாரதியை இந்த இடத்தில பிடிக்கும். இந்த இடத்தில பிடிக்காது அல்லது இன்னொருவர் அந்த இடத்தில பாரதியை விடப் பெரியவர்" என்று சொல்ல இத்தகைய வழிபாட்டு முறையே தடையாக உள்ளது.


என்னைப் பொறுத்தவரை இவ்வகையான உரையாடல்கள் (முழுவதும் நான் உணர முடியாவிட்டாலும்) கருத்தில் வைத்து கொள்ள உதவும். எதைக் கொண்டு அளவிடுவது என்ற புரிதலுக்கும் உதவும். இந்த உரையாடல்கள் பாரதியின் பெருமையைக் குறைக்கும் என்ற எண்ணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. பாரதியின் வீச்சு அதிகமாக உள்ள இடங்களை நன்கு ரசிக்க வைக்க இவ்வகையான உரையாடல்கள் மிக்க அவசியம் என்றே கருதுகிறேன்.


இவற்றைப் படிக்கும் சராசரி (என் போன்ற) வாசகர்கள் கம்பராமாயணம் படிக்க ஒரு துளி காரணமாக அமையலாம். அதன் மூலம் பாரதியை அளவிடத் துணியலாம். இவைகளே அவற்றின் வெற்றியாக நான் கருதுகிறேன்.


**********************************************************

உங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை :) :) : தயவு செய்து இனிமேல் அங்கதக் கட்டுரைகள் எழுதும்போது இது அங்கதம் என்று தெளிவாகக் குறிப்பிடவும். நம் மக்கள் இன்னும் சிவாஜி பற்றிய கட்டுரைகளையும் பாரதி கட்டுரைகளும் குழப்பி அடிக்கிறார்கள். :) .

************************************************************


நானும் நல்ல தமிழ் சூழலில் (?) வளர்ந்ததால் சினிமா பற்றி எனக்கு இருக்கும் புரிதல் மற்ற துறைகளை விட சற்று அதிகம் (அதாவது மற்ற கலைத்துறையை காட்டிலும் சினிமா என்ற கலை வடிவம் தொடர்பாக நிறைய — இதைத்தவிர வேறு ஏதாவது பேசுவோமா என்ன?? — பேசியதால் வந்தது…!!


சிவாஜி பற்றிய அந்த எதிர் வினைகளும் அப்படித்தான்!!..

இதுவும் கிட்டத்தட்ட அதே வழிபாட்டு மனோநிலைதான். சிவாஜியின் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வதில் என்ன பங்கம் வந்து விட போகிறது.? நான் சிவாஜி பற்றி அவர் ரசிகர்களிடம் பேசும்போது எப்போதுமே சொல்வது உண்டு. மிருதங்க சக்கரவர்த்தி, முதல் மரியாதை இந்தப் படங்களில் எந்தப் படத்தில் சிவாஜி நடிப்பு பிடிக்கும்?. பதில் எப்போதும் நான் எதிர்பார்ப்பது போலதான் வரும். நான் சிவாஜியை அதோடு மதிப்பிட முடியும். குறைத்தும் அல்ல கூட்டியும் அல்ல. உள்ளது உள்ளபடி பார்த்தால் சிவாஜியின் வீச்சை அவரின் சில படங்களின் மூலம் கண்டு கொள்ள முடியும். இப்படி இல்லமால் "இல்ல பாஸ்..சிவாஜி எப்போதுமே நல்லா நடிப்பாரு…அவர் நடிப்புக்குக் கடவுள்.." என்பது போன்ற பேச்சுக்கள் சிவாஜியை மட்டுமல்ல, அந்தக் கலையையும் சேர்த்து குறைத்து மதிப்பதற்கு சமம். சிவாஜியின் நடிப்பைப் பல படங்களில் பார்த்து ரசிக்கும் என்னால், அவரின் பாடல் காட்சி நடிப்பின்போது டி எம் எஸ் காசையும் சேர்த்து இவருக்கே கொடுதிருப்பான்களோ என்று கிண்டலும் செய்ய முடியும். அவ்வகையான மதிப்பீடுகள்தான் நம்மை நடிப்பின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று திடமாக நம்புகிறேன். இவை இல்லாமல் இருப்பது…நம்முடைய அளவீடுகளையும் பாதிக்கும்.


தேவை இல்லாமல் பேசுகிறேனோ?.. சரி.. நான் சொல்ல நினைத்தது இதுதான்..! வழிபாட்டு மனோநிலை நமக்கு பயனளிக்கப் போவதில்லை. அவை இல்லாமால் அவர்தம் படைப்பின் தரத்தை முன்னிறுத்துவது இந்த வழிபாட்டு முறையை விட பாரதியை நீண்ட காலம் நம்மிடையே நீடித்து வாழ வைக்கும்!!


மிக்க அன்புடன்,

காளிராஜ்


அன்புள்ள காளிராஜ்


விமர்சனம் என்பது உடைப்பதும் நிறுவுவதும் அல்ல. அது நம் ரசனையை நாமே கூர் தீட்டிக்கொள்வது. நாம் தேங்கிவிடாமல் நம்மை நாமே தொடர்ந்து மறுபரிசீலனைசெய்வது. திறனாய்வு இல்லா மொழியில் இலக்கியம் அழியும்


பாரதியை விடுங்கள், வைரமுத்துவை விமர்சித்தபோதுகூட எனக்கு வசைகள்தான் வந்தன. நம் சூழலில் இலக்கியவிமர்சனம் என ஒன்று இருப்பதே ஜனங்களுக்கு தெரியாது


ஜெ


அன்புள்ள ஜெயமோகன்,

உண்மைதான்!!.

என் பார்வையில் இவைகள் இலக்கியம், கலை சார்ந்த புறவயங்களின் மீது மட்டும் அல்ல. தன் மீதான சுய விமர்சனமும் நம் மக்களுக்குத் தாங்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.


இதை நான் என் அடிப்படையைத் தகர்க்கும் அளவிற்கு உணர்ந்தது ஏழாம் உலகம் படித்த போதுதான். ஒரு இடத்தில பண்டாரத்தின் மனைவி 'நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை' என்று சொல்வதாக ஒரு வசனம் வரும். இது நான் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் விஷயம். முதலில் அதைப் படிக்கும்போது அடிப்பாவி என்றுதான் தோன்றியது. ஆனால் யோசிக்கும்போது ஒரு உண்மை விளங்கியது. நாம் அனைவருமே ஒரு விதத்தில் தனக்கு நல்லவனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பார்க்காத (அல்லது பார்க்க விரும்பாத) ஒரு கோணத்தில் நாம் செய்து இவ்வகையான கெடுதல்களை செய்து கொண்டுதான் இருக்கிறோம். தனக்கு நல்லவனாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அளவுகோல்களை நம்மை பாதிக்காதவாறு நாமே நிறுவிக் கொள்கிறோம். கசாப்புக் கடைக்காரன் ஆட்டை வெட்டுவது தவறாகத் தெரிவதில்லை. பணக்கார இளைஞன் துப்பாகியால் அதை செய்வதாக சினிமாவில் காட்டும்போது வில்லனாகச் சித்தரித்து உணர்த்த முடிகிறது.


இந்தத் தளைகளைத் தாண்டி உள்ளது உள்ளபடி நாம் செய்வதை நமக்கு நாமே விமர்சனம் செய்து கொள்ளவேண்டியது நம்முடைய வாழ்விற்கும், அடுத்த நிலைக்கும் நல்லது. பெரும்பாலோனோர் அவ்வாறு செய்வதில்லை (செய்வது கிட்டத்தட்ட தற்கொலை போல என்பதும் எனக்கு புரிகிறது). முயற்சிப்பது ஒரு அளவிற்காவது மீதமுள்ள வாழ்வை அர்த்தமுடன் கழிக்க உதவும்.


இது போன்ற தன்னைத் தானே விமர்சிக்காத மனநிலைதான், தான் விரும்பும் (அல்லது அப்படி பிம்பம் கட்டபட்டிருக்கும்) ஒரு மனிதனை விமர்சிக்கும்போது எதிர்வினை செய்கிறது. அந்த விமர்சனத்தில் உள்ள உண்மைகளை அறிய உழைப்பு தேவைப்படுகிறது (உங்கள் நவீன இலக்கியம் ஓர் அறிமுகம் புத்தகத்தில் கூறியது போல). அதை செலவழிக்க பெரும்பாலோனோர் விரும்ப வில்லை.


என்னைப் பொறுத்தவரை என்னால் முழுமையாக நீங்கள் சொல்லும்தளத்தில் வைத்து பாரதியை உணர முடியவில்லை. ஆனால் அந்த விமர்சனங்களின் மேல் உள்ள நம்பிக்கை, எனக்கும் ஒரு நாள் இவைகள் புரியும் என்ற எண்ணத்தை அளிக்கிறது. இந்த நம்பிக்கை ஜெயமோகன் மேல் நான் கொண்ட தனிப்பட்ட நம்பிக்கை அல்ல (நம்பிக்கை இல்லை என்ற அர்த்தம இல்லை. :) . அது வேறு). நீங்கள் சொல்லும் அந்த குறியீடுகளும், மன விரிவு, ஆகியவற்றை என்னால் நாவல்களில் உணர முடிகிறது என்பதால் ஏற்பட்டதுதான். வாசிக்கும் பழக்கம் தொடர்ந்து ஏற்பட்டால் நீங்கள் பாரதி குறித்து சொல்வனவும் புரியக்கூடும்.


இந்தக் கடிதம் எழுதியதற்கு காரணம் அது குறித்த எதிர் வினைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புதான். ஆரோக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சில கடிதங்கள், தனிப்பட்ட காழ்ப்பை உமிழ்வதைப் படிக்க நெருடலாக இருந்தது. இந்த மனநிலை எனக்கும் நீங்கள் பெரியாரைப் பற்றி எழுதியதை முதல் முறை படித்தபோது உணர்ந்தேன். தொடர்ந்து வாசித்தபோது பெரியாரை நான் எந்த விசயத்தில் மதிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது. அந்த பிம்பம் உடைபட்டது உண்மைதான். ஆனால் அது இன்னும் முழுதாகப் பெரியாரின் ஆளுமையை ஒரு சில விசயங்களில் உணர்த்தியது (குறிப்பாக – பெரியார் காலத்தின் கட்டாயம் என்ற சொற்றொடர்).

அது போன்றே பாரதி விசயத்தில் நேரம் வரும்போது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.


பதிலுக்கு நன்றி!!


அன்புடன்,

காளிராஜ்


Hi Jeyamohan,

Sorry to write in English. Really the discussion about Bharathiyar is going in a thoughtful and healthy manner rather than some nonsense emotional answers that were given. I am just silently on the back of it studying same matters twice or thrice and understanding the things about Bharathiyar. I studied almost all of the bharathiyar poems and most of them are straight forward (Some exceptionals are there). It wont make the reader to think beyond certain limit. I started Kambar's kamba ramayanam almost a year back and really it takes us to think beyond and even it needs your imagination or your inner bliss to understand the poets of kambar.

Once again am thanking you for starting this blog as am getting closer to both Kambar and Bharathiyar by started reading them again. I am moving to second platform from Prose like poetry of Bharathiyar to Poetic Kambar. I had taken the Kambaramayanam from the Upper self and started reading.

Thanks for showing the seeds to read the Kambar and Bharathiyar. Continue your discussion as will be still close to both the legends by reading it.


with thanks

Panneer Selvam.


அன்புள்ள பன்னீர்செல்வம்


நான் உத்தேசிப்பது ஒரு சலனத்தை


இலக்கியத்தில் எந்தச் சலனமும் நல்லதுதான். இன்று பாடப்புத்தகத்துக்கு அப்பால் கவிதை ரசனை வளராதவர்களே மிகப் பெரும்பாலானவர்கள். காரணம் நம் சூழலில் உள்ள பிம்பங்கள்


ஒரு ஆயிரம்பேர் கவிதையின் முகங்களைப்பற்றிய தெளிவுக்கு வந்தால் நல்லதுதானே


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

பாரதி மகாகவியே
மகாகவி விவாதம்
நன்றி, முத்துக்குமாரசாமி
பாரதி-கடிதங்கள்
எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
ரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்
பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?
பாரதி விவாதம்-7 – கநாசு
பாரதி -கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2011 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.